டிரம்ப் - கிம் வரலாற்று சந்திப்பு: கொரிய தீபகற்பத்தில் நிரந்தர அமைதி

கொரிய தீபகற்பத்தில் நிரந்தர அமைதியையும் வளர்ச்சியையும் ஏற்படுத்த, சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,
டிரம்ப் - கிம் வரலாற்று சந்திப்பு: கொரிய தீபகற்பத்தில் நிரந்தர அமைதி

கொரிய தீபகற்பத்தில் நிரந்தர அமைதியையும் வளர்ச்சியையும் ஏற்படுத்த, சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
சிங்கப்பூரின் சென்úஸாட்டா தீவிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் டிரம்ப்பும், கிம் ஜோங்கும் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர். இரு நாடுகளையும் சேர்ந்த அதிபர்கள் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பேச்சுவார்த்தையில், தனது அணு ஆயுதங்களைக் கைவிட வட கொரியாவும், அதற்குப் பதிலாக வட கொரியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்காவும் ஒப்புக் கொண்டன.
இதுகுறித்து, பேச்சுவார்த்தையின் முடிவில் டிரம்ப் - கிம் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 
அதிபர்கள் டிரம்ப் மற்றும் கிம் ஜோங்-உன் ஆகியோர் இடையிலான பேச்சுவார்த்தை விரிவானதாகவும், ஆழமானதாகவும் அமைந்திருந்தது.
அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே புதிய நட்புப் பாலத்தை ஏற்படுத்துவது குறித்து இருவரும் தங்களது கருத்துகளை அக்கறையுடன் பரிமாறிக்கொண்டனர்.
அணு ஆயுதங்கள் கைவிடப்படும்': வட கொரியாவுக்கு பாதுகாப்புக்கான உத்தரவாதம் அளிப்பது குறித்து அதிபர் டிரம்ப்பும், கொரிய தீபகற்பகத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்குவது குறித்து அதிபர் கிம் ஜோங்கும் தங்களது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர். 
போர் கைதிகள் மற்றும் சண்டையின்போது காணாமல் போனவர்களை பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளவும், இதுதொடர்பாக ஏற்கெனவே அடையாளம் காணப்பட்ட கைதிகளை உடனடியாக விடுவிப்பது குறித்தும் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டது.
கொரிய தீபகற்பத்திலும், அதன் மூலம் உலக அளவிலும் அமைதி மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்த இரு தலைவர்களும் கீழ்கண்ட 4 அம்ச திட்டங்களை செயல்படுத்த சம்மதித்துள்ளனர்.
1. அமெரிக்கா - வட கொரியா இடையே புதிய நட்புறவை ஏற்படுத்துவது
2. கொரிய தீபகற்பத்தில் நிரந்தர அமைதி, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது
3. கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியிடப்பட்ட வட - தென் கொரிய மாநாட்டுத் தீர்மானத்தின் அடிப்படையில் கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்குவது
4. போர் கைதிகளைப் பரிமாறிக் கொள்வது
இந்த அம்சங்கள் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோவுடன், வட கொரிய உயரதிகாரி அடுத்தக்கட்ட ஆலோசனை நடத்துவார்.
இதற்கான தேதி, இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்று அந்த கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளை வட கொரியா கடந்த ஆண்டின் இறுதிவரை தொடர்ந்து நடத்தி வந்தது.
இதற்குப் பதிலடியாக, வட கொரியா மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. 
இந்தச் சூழலில், தென் கொரியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஒலிம்பிக் துவக்க விழாவுக்கு தனது சகோதரி கிம் யோ-ஜோங்கை வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் அனுப்பி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து இரு கொரிய நாடுகளுக்கும் இடையே பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் ஏற்பட்ட நிலையில், கிம் ஜோங்-உன், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோரிடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்கச் சந்திப்பு கடந்த ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதி நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் வட கொரிய அதிபர் கிம் ஜோங்கின் சந்திப்பு தற்போது நடைபெற்றுள்ளது.

பழைய கசப்புகளை மறந்துவிடுவோம்'
கூட்டறிக்கையில் கையெழுத்திட்ட பிறகு, கிம் ஜோங்-உன் கூறியதாவது:
பழைய கசப்புகளை மறந்து, கடந்த காலத்தை கடந்து வர நாங்கள் முடிவு செய்துவிட்டோம்.
இந்த உலகம், மாபெரும் மாற்றத்தைச் சந்திக்கவிருக்கிறது என்றார் அவர்.
முன்னதாக டிரம்புடன் உரையாடுகையில், இந்தப் பேச்சுவார்த்தை அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லை. பழைய கசப்பான அனுபவங்கள் இதற்கு தடங்கல்களை ஏற்படுத்தின. ஆனால் இதையெல்லாம் கடந்து, தற்போது இந்த நிலையை அடைந்துள்ளோம்' என்று கிம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார தடைகள் தொடரும்'
பேச்சுவார்த்தை குறித்து செய்தியாளர்களிடம் டொனால்ட் டிரம்ப் கூறியதாவது:
வட கொரியாவுடன் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்க அமெரிக்கா தயாராக உள்ளது.
வட கொரியா தனது ஏவுகணை என்ஜின் சோதனை மையத்தை ஏற்கெனவே அழித்துவிட்டதாக கிம் ஜோங்-உன் என்னிடம் தெரிவித்தார். 
அணு ஆயுதங்களைக் கைவிடும் பணி கூடிய விரைவில் தொடங்கிவிடும். எனினும், தற்போதைய சூழலில் வட கொரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் தொடரும்.
வட கொரியா எதிர்த்து வரும் வருடாந்திர அமெரிக்க - தென் கொரிய கூட்டு ராணுவப் பயிற்சிகள், இனி மேற்கொள்ளப்படாது என்றார் டிரம்ப்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com