நாடு திரும்ப முஷாரஃப் பயப்படுவது ஏன்?: பாக். உச்ச நீதிமன்றம் கேள்வி

ராணுவத்தின் கமாண்டோவாக இருந்த பர்வேஸ் முஷாரஃப், தற்போது நாடு திரும்புவதற்கு பயப்படுவதா? என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

ராணுவத்தின் கமாண்டோவாக இருந்த பர்வேஸ் முஷாரஃப், தற்போது நாடு திரும்புவதற்கு பயப்படுவதா? என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
தேர்தலில் போட்டியிட முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாக, வியாழக்கிழமை (ஜூன் 14) மதியம் 2 மணிக்குள் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, ஜூன் 13-ஆம் தேதி, புதன்கிழமை நேரில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததது. ஆனால், அதன்படி முஷாரஃப் ஆஜராகவில்லை. இதையடுத்து, உச்ச நீதிமன்றம் அவரை கடுமையாக எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தில் கடந்த 1964-ஆம் ஆண்டு காமாண்டோவாக பணியில் சேர்ந்தவர் முஷாரஃப். பின்னர் ராணுவத்தின் தலைமை தளபதியாக உயர்ந்தார். அதன் பிறகு, 1999 முதல் 2008-ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானை ஆட்சி செய்தார். 
கடந்த 2007-இல் இவர் கொண்டு வந்த அவசரநிலைக்கு எதிராக 2009-இல் வழங்கப்பட்ட தீர்ப்பு ஒன்றை சுட்டிக்காட்டி, பாகிஸ்தானின் பெஷாவர் உயர் நீதிமன்றம் இவர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து கடந்த 2013-இல் தீர்ப்பளித்தது.
இதற்கு எதிராக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் முஷாரஃப் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, ஜூலை 25-ஆம் தேதி நடைபெறவுள்ள பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் போட்டியிட தம்மை அனுமதிக்க வேண்டும் என முஷாரஃப் விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
அதே சமயம், மேல்முறையீட்டு வழக்கு விசாரணை தொடர்பாக ஜூன் 13-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது.
இதனிடையே, முஷாரஃப் தேர்தலில் போட்டியிடுவதற்காக, அவர் தரப்பில் இருந்து இந்த வாரம் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், மேல்முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹிப் நிசார் தலைமையில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது முஷாரஃப் ஆஜராகவில்லை. அவர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், முஷாரஃப் நேரில் ஆஜராக வேண்டுமெனில் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார். 
இதையடுத்து தலைமை நீதிபதி நிசார் கூறியதாவது:
முஷாரஃபின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டது அல்ல உச்ச நீதிமன்றம். முஷாரஃப் நாடு திரும்பினால், அவருக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என ஏற்கெனவே கூறி விட்டோம். அதற்காக, எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
முஷாரஃப் காமாண்டோ என்றால், இங்கு திரும்பி வருவதன் மூலம் அதை நிரூபிக்க வேண்டும். அரசியல் தலைவரைப் போல சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது.
முஷாரஃபுக்கு ஏன் பாதுகாப்பு தேவைப்படுகிறது? அவர் எதைக் கண்டு அஞ்சுகிறார்? ஒரு காமாண்டோ பயப்படுவதாக சொல்லலாமா? தாம் மரணத்தை பலமுறை எதிர்கொண்டதாகவும், தமக்கு பயமே கிடையாது என்றும் கூறியவர்தானே முஷாரஃப்.
அரசமைப்பு, நாடு, சட்டம் மற்றும் நீதிமன்றங்கள் எல்லாவற்றையும் முஷாரஃப் எதிர்கொள்ள வேண்டும் என்றார் நிசார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com