சண்டை நிறுத்தத்தை நீட்டிக்க ஆப்கன் தலிபான்கள் மறுப்பு

ஆப்கானிஸ்தானில் 3 நாளாக அமலில் இருந்த சண்டை நிறுத்ததை மேலும் நீட்டிக்க, தலிபான் பயங்கரவாதிகள் மறுத்துவிட்டனர்.
சண்டை நிறுத்தத்தின்போது ஆப்கனின் நாங்கர்ஹர் மாகாணம், பாடி கோட் பகுதிக்கு வந்த ராணுவ வாகனத்தை கையில் துப்பாக்கிகளுடன் ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கும் தலிபான் பயங்கரவாதிகள்.
சண்டை நிறுத்தத்தின்போது ஆப்கனின் நாங்கர்ஹர் மாகாணம், பாடி கோட் பகுதிக்கு வந்த ராணுவ வாகனத்தை கையில் துப்பாக்கிகளுடன் ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கும் தலிபான் பயங்கரவாதிகள்.

ஆப்கானிஸ்தானில் 3 நாளாக அமலில் இருந்த சண்டை நிறுத்ததை மேலும் நீட்டிக்க, தலிபான் பயங்கரவாதிகள் மறுத்துவிட்டனர்.
மேலும், அரசுப் படைகள் மீதான தாக்குதல்கள் தொடரும் என்றும் அந்த அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
இதையடுத்து, தலிபான்களுடன் ஆப்கன் அரசு சமரசம் மேற்கொள்ள செய்து வரும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு ஆப்கன் அரசு அறிவித்திருந்த சண்டை நிறுத்ததை ஏற்று, அரசுப் படைகள் மீதான தாக்குதலை 3 நாள்களுக்கு நிறுத்தி வைப்பதாக தலிபான் பயங்கரவாதிகள் கடந்த சனிக்கிழமை அறிவித்தனர்.
கடந்த 2001-ஆம் ஆண்டின் அமெரிக்கப் படையெடுப்புக்குப் பிறகு, ரமலானையொட்டி ஆப்கன் அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட முதல் சண்டை நிறுத்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஈத்-அல்-ஃபிதர் தினமான சனிக்கிழமை, ஆயுதங்கள் இல்லாமல் தலைநகர் காபூலுக்குள் நுழைந்த ஏராளமான தலிபான் பயங்கரவாதிகள், அங்கு பாதுகாப்புப் படையினரை கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
காபூல் மட்டுமின்றி, ஆப்கனின் பல்வேறு பகுதிகளிலும், தலிபான்களும், பாதுகாப்புப் படையினரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன், அந்தக் காட்சிகளை கைப்படமும் (செல்ஃபி) எடுத்துக் கொண்டனர்.
இதையடுத்து, அரசுக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான இணக்க சூழல் தொடரும் எனவும், இரு தரப்புக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று நாட்டில் அமைதி திரும்புவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், தலிபான்களுடனான சண்டை நிறுத்தத்தை மேலும் 9 நாள்களுக்கு நீட்டிக்கப்போவதாக ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கனி சனிக்கிழமை அறிவித்தார்.
எனினும், அதனை ஏற்க தலிபான் பயங்கரவாதிகள் மறுத்துவிட்டனர். இதுகுறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபீஹுல்லா முஜாஹித் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:
ஆப்கன் அரசுடனான சண்டை நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது.
அதற்குப் பிறகு, ஆப்கன் அரசுப் படைகளுக்கு எதிரான எங்களது தாக்குதல் நடவடிக்கைகள் தொடரும்.
ரமலானையொட்டி அறிவிக்கப்பட்ட சண்டை நிறுத்தத்தை மேலும் நீடிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்றார் அவர்.
மேலும், பாதுகாப்புப் படையினருடன் ஈத்-அல்-ஃபிதர் பண்டிகையைக் கொண்டாட தலிபான் உறுப்பினர்களை தாங்கள்தான் அனுப்பி வைத்ததாகவும் அவர் ஒப்புக் கொண்டார்.
ஆப்கன் உள்நாட்டுச் சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை குறித்து தலிபான் பயங்கரவாத அமைப்பினர் அவ்வப்போது தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தினாலும், ஆப்கன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
ஆப்கன் விவகாரம் குறித்து அமெரிக்காவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் ஆப்கானிஸ்தானை விட்டு முழுமையாக விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தற்கொலைத் தாக்குதல்கள்: 50 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் சண்டை நிறுத்தம் அமலில் இருந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆப்கன் படையினர் மற்றும் தலிபான்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் 50 பேர் உயிரிழந்தனர்.
முதலாவதாக, கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நாங்கர்ஹர் பகுதியில் ஈத்-அல்-ஃபிதர் பண்டிகையையொட்டி ஆப்கன் படையினரும், தலிபான் பயங்கரவாதிகளும் கூட்டாகப் பங்கேற்ற தொழுகைக் கூட்டத்தில் சனிக்கிழமை மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 36 பேர் உயிரிழந்தனர்; 65 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர்.
இந்த நிலையில், அந்த மாகாணத் தலைநகர் ஜலாலாபாதில் ரமலான் விடுமுறை தினத்தையொட்ட்டி தலிபான்கள், உள்ளூர் பெரியவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கூடியிருந்த கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட மற்றொரு தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.
தலிபான்களுடன் ஆப்கன் அரசு சண்டை நிறுத்தம் அறிவித்தாலும், ஐ.எஸ். உள்ளிட்ட பிற பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com