சீனாவில் கிம் ஜோங்-உன் 3-ஆவது முறையாக சுற்றுப் பயணம்: சிங்கப்பூர் பேச்சுவார்த்தை குறித்து ஜின்பிங்குடன் ஆலோசனை

வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் மூன்றாவது முறையாக செவ்வாய்க்கிழமை சீனா வந்தடைந்தார்.
ஷி ஜின்பிங்குடன் கிம் ஜோங்-உன்.
ஷி ஜின்பிங்குடன் கிம் ஜோங்-உன்.

வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் மூன்றாவது முறையாக செவ்வாய்க்கிழமை சீனா வந்தடைந்தார்.
அங்கு இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அவர், சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் கடந்த 12-ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து சீன அதிபர் ஷி ஜின்பிங்கிடம் எடுத்துரைத்தார்.
இதுகுறித்து, சீன அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனமும், சிசிடிவி' தொலைக்காட்சியும் தெரிவித்ததாவது:
கொரிய அதிபர் கிம், சீனாவில் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
அவரை அரசு தலைமையகத்தில் அதிபர் ஷி ஜின்பிங் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சீன - வட கொரிய நல்லுறவைப் பாதுகாப்பதற்கும், வலுப்படுத்துவதற்கும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
மேலும், கொரிய தீபகற்பத்திலும், அதன் மூலம் இந்த உலகிலும் அமைதி மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்தச் செய்யும் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லவும் இருவரும் உறுதிபூண்டனர்.
கொரிய தீபகற்பத்தின் நிலைத்தன்மையைப் பாதுகாப்பதில் சீனா அளித்துவரும் பங்களிப்புக்கு அதிபர் கிம் ஜோங்-உன் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
அமெரிக்காவும், வட கொரியாவும் சிங்கப்பூரில் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் சிறப்பாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தை அதிபர் ஷி ஜின்பிங் வெளிப்படுத்தினார் என்று சீன அரசு ஊடகங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங், கிம் ஜோங்கின் வருகை குறித்த உரிய தகவல்களை, தேவைப்படும் நேரத்தில் சீன அரசு தெரிவிக்கும் என்று கூறினார்.
ஏற்கெனவே, சீன அதிபரை கிம் ஜோங்-உன் இரண்டாவது முறையாக சந்தித்துப் பேசிய பிறகுதான் சிங்கப்பூர் பேச்சுவார்த்தை குறித்த கெடுபிடியான நிலைப்பாட்டை கிம் எடுத்தார் என்று டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தச் சூழலில், தற்போது மீண்டும் கிம்-ஜின்பிங் சந்திப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கிம் ஜோங்கின் இந்த சுற்றுப் பயணம், அமெரிக்காவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி அணு ஆயுதங்களைக் கைவிடும் வட கொரியாவின் நடவடிக்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகம் இருக்கும் என்பதை பறைசாற்றுவதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளை வட கொரியா கடந்த ஆண்டின் இறுதிவரை தொடர்ந்து நடத்தி வந்தது.
இதற்குப் பதிலடியாக, வட கொரியா மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதனால், வட கொரியாவுக்கும், அமெரிக்க-தென் கொரிய கூட்டணிக்கும் இடையே கடும் பதற்றம் நிலவி வந்தது.
இந்தச் சூழலில், தென் கொரியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஒலிம்பிக் துவக்க விழாவுக்கு தனது சகோதரி கிம் யோ-ஜோங்கை வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் அனுப்பி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து இரு கொரிய நாடுகளுக்கும் இடையே பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் ஏற்பட்ட நிலையில், கிம் ஜோங்-உன், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோரிடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்கச் சந்திப்பு கடந்த ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதி நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் வட கொரிய அதிபர் கிம் ஜோங்கின் சந்திப்பு சிங்கப்பூரில் இந்த் மாதம் 12-ஆம் தேதி நடைபெற்றது.
அப்போது, அமெரிக்கா - வட கொரியா இடையே புதிய நட்புறவை ஏற்படுத்துவது, கொரிய தீபகற்பத்தில் நிரந்தர அமைதி, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்குவது, போர் கைதிகளைப் பரிமாறிக் கொள்வது ஆகிய 4 அம்ச தீர்மானத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com