இந்தியாவின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தி விட்டோம்: பாகிஸ்தான்

இந்தியாவுக்குச் சொந்தமான ஆளில்லா உளவு விமானத்தை சுட்டுவீழ்த்தி விட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்குச் சொந்தமான ஆளில்லா உளவு விமானத்தை சுட்டுவீழ்த்தி விட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் உள்ள சிரிகோட் செக்டாரில் அத்துமீறி பாகிஸ்தான் பகுதிக்குள் இந்தியாவின் ஆளில்லா உளவு விமானம் பறந்தது. இதை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுவீழ்த்தி விட்டது.
அந்த விமானத்தின் பாகங்களையும் பாகிஸ்தான் ராணுவம் கைப்பற்றி விட்டது.
இதுபோல், இந்தியாவின் ஆளில்லா உளவு விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுவீழ்த்துவது, இந்த ஆண்டில் இது 4ஆவது முறையாகும் என்று அந்த அறிவிப்பில் பாகிஸ்தான் ராணுவம் குறிப்பிட்டுள்ளது.
எனினும், பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை இந்திய ராணுவமோ அல்லது இந்திய அரசோ இதுவரை உறுதி செய்யவில்லை.
எல்லையில் அத்துமீறி தாக்குதல்: இதனிடையே, ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்மு, ரஜௌரி மாவட்டங்களில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதி நெடுகிலும் பாகிஸ்தான் படையினர் புதன்கிழமை அத்துமீறி சிறிய ரக பீரங்கிகள் மூலம் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதற்கு அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இந்தத் தாக்குதலில், இந்திய தரப்பில் யாரும் காயமடையவோ அல்லது உயிரிழக்கவோ இல்லை.
ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் ராணுவம் அதிக அளவில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். 
இதில், இருதரப்பிலும் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். இதனால், இரு நாடுகளின் எல்லையிலும் தொடர்ந்து பதற்றம் அதிகரித்தபடி உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com