சிறைக் கைதிகளை பரஸ்பரம் ஒப்படைக்க பாகிஸ்தான் சம்மதம்

சிறைக் கைதிகளை பரஸ்பரம் ஒப்படைத்துக் கொள்ளலாம் என்ற இந்தியாவின் யோசனைக்கு பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளது.

சிறைக் கைதிகளை பரஸ்பரம் ஒப்படைத்துக் கொள்ளலாம் என்ற இந்தியாவின் யோசனைக்கு பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளின் எல்லையில் இருந்துவரும் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் முகமது ஃபைசல் இஸ்லாமாபாதில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை செய்த பிறகு, கைதிகளை பரஸ்பரம் ஒப்படைத்துக் கொள்ளலாம் என்ற இந்தியாவின் யோசனைக்கு வெளியுறவு அமைச்சர் கவாஜா ஆசிஃப் மனிதாபிமானத்தின் அடிப்படையில் ஒப்புதல் அளித்தார்.
மூன்று யோசனைகளை இந்திய அரசு முன்வைத்தது. முதலாவதாக பெண்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர், 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆகியோரை ஒப்படைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது யோசனையில், நீதிக் குழுவுக்கு புத்துயிர் அளிக்கலாம் என்றும் மூன்றாவது யோசனையில், இருநாட்டுச் சிறைகளிலிலும் தண்டனை பெற்று வருபவர்களில் மனநலம் பாதிக்கப்பட்டோரை பரஸ்பரம் ஒப்படைத்துக் கொள்வதற்காக மருத்துவக் குழுவை அனுப்பி பரிசோதிப்பது என்றும் தெரிவித்திருந்தது.
இந்த யோசனைகளுடன், 60 வயதைக் கடந்த கைதிகளையும், 18 வயதுக்கும் குறைவான கைதிகளையும் பரஸ்பரம் ஒப்படைத்துக் கொள்ளலாம் என்று கவாஜா ஆசிஃப் யோசனை முன்வைத்துள்ளார். 
எங்கள் தரப்பு யோசனைகளை இந்தியா ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறோம் என்று முகமது ஃபைசல் தெரிவித்தார். இந்த யோசனைகளை இந்தியா எப்போது பாகிஸ்தான் அரசுக்கு அனுப்பியது என்ற தகவல் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com