இலங்கை வகுப்புக் கலவரம் எதிரொலி: பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் சட்டம் - ஒழுங்கு அமைச்சர் பதவி பறிப்பு

இலங்கையின் கண்டி பகுதியில் பெளத்த மதத்தினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான வன்முறை தொடரும் நிலையில், சட்டம் - ஒழுங்கு துறையின் அமைச்சர் பதவியிலிருந்து பிரதமர் ரணில்
கண்டியில் தீவைத்துக் கொளுத்தப்பட்ட மரப் பட்டரை.
கண்டியில் தீவைத்துக் கொளுத்தப்பட்ட மரப் பட்டரை.

இலங்கையின் கண்டி பகுதியில் பெளத்த மதத்தினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான வன்முறை தொடரும் நிலையில், சட்டம் - ஒழுங்கு துறையின் அமைச்சர் பதவியிலிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா வியாழக்கிழமை நீக்கினார்.
அவருக்குப் பதிலாக, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ரஞ்சித் மத்தும பண்டார அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டார்.
சட்டம் - ஒழுங்கு துறை அமைச்சகப் பொறுப்பை ரணில் விக்ரமசிங்கே ஏற்று 11 நாள்களே ஆன நிலையில், கண்டியில் கடந்த திங்கள்கிழமை முதல் நடைபெற்று வரும் வகுப்புக் கலவரங்களை அடக்கத் தவறியாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் சிங்கள பெளத்த மதத்தினர் பெரும்பான்மையாகவும், முஸ்லிம்கள் சிறுபான்மையாகவும் வசித்து வரும் மாவட்டம் கண்டி.
இந்த மாவட்டத்தின் தெல்டினியா பகுதியில் முஸ்லிம்களால் கடந்த 22-ஆம் தேதி தாக்கப்பட்ட பெளத்த மதத்தைச் சேர்ந்த ஒருவர், மருத்துவமனையில் கடந்த 3-ஆம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து, கண்டி மாவட்டத்தில் பெளத்த மதத்தினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே கடந்த திங்கள்கிழமை கலவரம் வெடித்தது. அப்போது முஸ்லிம்களுக்கு சொந்தமான இடங்களில் புத்த மதத்தினர் புகுந்து சூறையாடினர். இந்தக் கலவரத்தில் 2 பேர் உயிரிழந்தனர். முஸ்லிம்களுக்குச் சொந்தமான மசூதிகள், வீடுகள், கடைகள் ஆகியவை சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து, அந்தப் பகுதியில் திங்கள்கிழமை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அங்கு ராணுவமும், அதிரடிப்படை வீரர்களும் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டனர்.
இந்நிலையில், கண்டி மாவட்டம் தெல்டினியா, பல்லிகலே பகுதியில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவரின் சடலம் தீயில் கருகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, செவ்வாய்க்கிழமை மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.
இந்தச் சூழலில், நிலமையைக் கட்டுப்படுத்துவதற்கு வசதியாக இலங்கையில் அடுத்த 10 நாள்களுக்கு நெருக்கடி நிலையை அதிபர் மைத்ரிபால சிறீசேனா செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
மேலும், கண்டியின் புறநகர்ப் பகுதியான மெனிக்ஹின்னாவில் செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றதையடுத்து, அந்தப் பகுதியில் மறு உத்தரவு வரும் வரை ஊரடங்கு அமல்படுத்த புதன்கிழமை உத்தரவிடப்பட்டது.
வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக கண்டியின் முக்கிய தேயிலைத் தோட்டங்கள், பெளத்த மையங்களுக்கு காவல்துறை அதிரடிப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.
முன்னதாக, கண்டி பகுதியில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு செவ்வாய்க்கிழமை காலை விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் ஏராளமான மசூதிகள், சிறுபான்மையினருக்குச் சொந்தமான வீடுகள் சிங்கள பெளத்த மதத்தினரால் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், சட்டம் - ஒழுங்கு துறை அமைச்சராக இருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு, அந்தப் பதவிக்கு மூத்த தலைவர் ரஞ்சித் மத்தும பண்டாரவை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா நியமித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com