அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் டில்லர்ஸன் நீக்கம்: டிரம்ப் அதிரடி

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸனை அவரது பதவியிலிருந்து அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக நீக்கியுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் டில்லர்ஸன் நீக்கம்: டிரம்ப் அதிரடி

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸனை அவரது பதவியிலிருந்து அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக நீக்கியுள்ளார்.
அவருக்கு பதிலாக, தற்போது அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான சிஐஏ-வின் இயக்குநராகப் பொறுப்பு வகிக்கும் மைக் போம்பியோ புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள சுட்டுரை (டுவிட்டர்) பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தற்போது சிஐஏ இயக்குநராக உள்ள மைக் போம்பியோ, இனி நாட்டின் வெளியுறவுத் துறை அதிபராகப் பொறுப்பு வகிப்பார். வெளியுறவுத் துறை அமைச்சராக அவர் மிகச் சிறந்த முறையில் செயல்படுவார் என்று தனது சுட்டுரை (டுவிட்டர்) பதிவில் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமன்றி, சிஐஏ-வின் துணை இயக்குநராகப் பொறுப்பு வகித்து வரும் கினா ஹாஸ்பெல், அந்த அமைப்பின் இயக்குநராக நியமிக்கப்படுவதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க மத்தியப் புலனாய்வு அமைப்பின் தலைமைப் பதவியை ஒரு பெண் ஏற்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ரெக்ஸ் டில்லர்ஸன், தனது பணியை பாதியிலேயே முடித்துக் கொண்டு அவசரமாக அமெரிக்கா திரும்பினார்.
தனது பணி தொடர்பாக அலுவலகத்தில் நேரடியாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் அமெரிக்கா திரும்புவதாக அவர் காரணம் கூறினார்.
65 வயதாகும் எக்ஸான் மொபில் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயலதிகாரியான ரெக்ஸ் டில்லர்ஸன், அண்மைக் காலமாக வட கொரியா, ரஷியா, ஈரான் உள்ளிட்ட பல்வேறு வெளிவிகாரங்களில் டிரம்ப்புடன் கருத்து மோதலில் ஈடுபட்டு வந்தார்.
அவரது நீக்கம் குறித்து டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'ஈரான் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் டில்லர்ஸனுடன் கருத்து வேறுபாடு நிலவுவதால் நானே சுயமாக முடிவெடுத்து அவரை பதவியிலிருந்து நீக்கியுள்ளேன்.
நீண்டகாலமாவே எங்களுக்குள் ஒற்றுமை நிலவி வந்தாலும், சில விவாகரங்கள் குறித்து பேசும்போது எங்களுக்கும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. என்னைப் பொருத்தவரை ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் மிக மோசமானதாகும். ஆனால், டில்லர்ஸன் அதை ஏற்கவில்லை. அந்த ஒப்பந்தத்தை நீக்க வேண்டும், அல்லது மாறுதல் செய்ய வேண்டும் என்பது என் நிலைப்பாடு. ஆனால், டில்லர்ஸனின் சிந்தனைகள் வேறு மாதிரி இருக்கின்றன. ஆனால், மைக் போம்பியோவைப் பொருத்தவரை அவரது சிந்தனைகளும், எனது சிந்தனைகளும் ஒன்றாக உள்ளன. எனவே, நாங்கள் இணைந்து பணியாற்றுவது சிறந்த பலன்களைத் தரும் என்று கருதுகிறேன் என்றார் அவர்.
அரசியல் அனுபவம் இல்லாத டில்லர்ஸன், அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சராக டொனால்ட் டிரம்ப்பால் கடந்த ஆண்டின் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி நியமிக்கப்பட்டார். எனினும், கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் பதவி விலகவிருப்பதாக பல முறை தகவல்கள் வெளியாகின. இதனை கடந்த அக்டோபர் மாதம் செய்தியாளர்களை அழைத்து அவர் மறுத்தார்.
இதற்கிடையே, தம்மை வெளியுறவுத் துறை அமைச்சராக நியமித்தமைக்காக மைக் போம்பியோவும், முதல் பெண் சிஐஏ இயக்குநராக நியமித்ததற்காக கினா ஹாஸ்பெல்லும் டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com