கருகிக் கிடக்கும் வங்கதேச விமானத்துக்கு அருகே, திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை புறப்படும் மற்றொரு விமானம்.
கருகிக் கிடக்கும் வங்கதேச விமானத்துக்கு அருகே, திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை புறப்படும் மற்றொரு விமானம்.

நேபாள விமான விபத்து: தரையிறங்குவதில் ஏற்பட்ட குழப்பம் காரணமா?: அதிகாரிகள் தீவிர விசாரணை

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் திங்கள்கிழமை ஏற்பட்ட விமான விபத்துக்கு, விமானம் தரையிறங்குவதில் ஏற்பட்ட குழப்பம் காரணமா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் திங்கள்கிழமை ஏற்பட்ட விமான விபத்துக்கு, விமானம் தரையிறங்குவதில் ஏற்பட்ட குழப்பம் காரணமா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து காத்மாண்டுவிலுள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தின் பொது மேலாளர் ராஜ் குமார் சேத்ரி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளான யுஎஸ்-வங்க ஏர்லைன்ஸ் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதனை நாங்கள் பாதுகாப்பாக வைத்துள்ளோம் என்றார் அவர்.
விபத்துக்கு முன்னதாக பதிவு செய்யப்பட்டுள்ள விமானிக்கும், விமான நிலையக் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கும் இடையிலான உரையாடல்கள் மூலம், விமானத்தைத் தரையிறக்குவதில் இரு தரப்பினருக்கும் இடையே மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டது தெரியவருவதாகக் கூறப்படுகிறது.
20-ஆம் எண் ஓடுபாதையில் விமானத்தைத் தரையிறக்க வேண்டாம் எனவும், அந்த தளத்தில் மற்றொரு விமானம் தரையிறங்குவதால் வானத்தில் தொடர்ந்து வட்டமிடுமாறும் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் எச்சரிக்கை விடுத்தது அந்த உரையாடல் பதிவின் மூலம் தெரிய வந்துள்ளது.
எனினும், சிறிது நேரம் கழித்து, 2-ஆம் ஓடுதபாதையில் தரையிறங்க விருப்பமா? 20-ஆம் ஓடுபாதையில் தரையிறங்க விருப்பமா? என்று கட்டுப்பாட்டு அறை அதிகாரி விமானியிடம் கேட்பதும், அதற்கு 20-ஆம் ஓடுபாதையில் தரையிறங்க விரும்புவதாக விமானி தெரிவிப்பதும் ஒலிப் பதிவில் இடம் பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஓடுபாதை தெளிவாகத் தெரிகிறதா என்ற கேள்விக்கு, 'இல்லை' என்று விமானி பதிலளிக்கிறார். உடனடியாக வலது புறமாகத் திரும்பச் சொல்லி கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பிக்கவே, 'தற்போது ஓடுபாதை தெரிகிறது' என்று விமானி கூறுகிறார்.
பிறகு, '2-ஆம் எண் ஓடுபாதையில் தரையிறங்கத் தயார்' என்று விமானி அறிவிக்கிறார். எனினும், அவருக்கு 20-ஆம் எண் ஓடுபாதையில் தரையிறங்கவே அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்தக் குழப்பங்களுக்கு இடையே விமானம் தரையில் மோதி தீப்பிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்துக்கு விமானியின் கவனக் குறைவே காரணம் என்று விமான நிலைய அதிகாரிகளும், விமான நிலைய அதிகாரிகளின் தவறே விபத்தை ஏற்படுத்தியதாக யுஎஸ்-வங்க ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகளும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
தரையிறங்குவதில் ஏற்பட்ட குழப்பமே விபத்துக்கான முக்கிய காரணம் என்று நம்பப்படும் நிலையிலும், விமான செயல்பாட்டில் ஏதேனும் குறைபாடு இருந்ததா என்பது குறித்து ஆய்வு செய்ய, விபத்துக்குள்ளான விமானத்தின் தயாரிப்பளரான கனடா நாட்டு பம்பார்டியர் நிறுவனம் தங்களது நிபுணர்களை நேபாளம் அனுப்பியுள்ளது.
இந்த விபத்து குறித்து விசாரிக்க, 6 நபர்களை அடங்கிய விசாரணைக் குழுவை நேபாள அரசு நியமித்துள்ளது.
வங்கதேசத்தைச் சேர்ந்த யுஎஸ்-வங்க ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பம்பார்டியர் டேஷ் 8 க்யூ400 ரக பயணிகள் விமானம், 67 பயணிகள் மற்றும் 4 விமானப் பணியாளர்களுடன் காத்மாண்டு நகர சர்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை தரையிறங்கியபோது, அந்த விமானம் எதிர்பாராத விதமாக ஓடுபாதையைவிட்டு விலகி அருகிலுள்ள கால்பந்து மைதானத்தில் மோதி தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் 49 பேர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com