ஜெர்மனி பிரதமராக மெர்க்கெல் 4-ஆவது முறையாகப் பதவியேற்பு

ஜெர்மனி பிரதமராக ஏஞ்சலா மெர்க்கெல் நான்காவது முறையாக பதவியேற்றார்.
4-ஆவது முறையாக பிரதமர் பதவியேற்கும் ஏஞ்சலா மெர்க்கெல்.
4-ஆவது முறையாக பிரதமர் பதவியேற்கும் ஏஞ்சலா மெர்க்கெல்.

ஜெர்மனி பிரதமராக ஏஞ்சலா மெர்க்கெல் நான்காவது முறையாக பதவியேற்றார்.
தேர்தலுக்குப் பின் ஏறத்தாழ 6 மாதங்கள் அரசியல் குழப்பம் நீடித்து வந்த சூழலில், நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மைக்குத் தேவையானதைவிட 9 வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பெற்று அவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜெர்மனி நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல், கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் 24-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் தலமையிலான கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் - கிறிஸ்துவ பொதுவுடமை யூனியன் கூட்டணி அதிகபட்சமாக 33 சதவீத வாக்குகளைப் பெற்று, நாடாளுமன்றத்தில் 246 இடங்களைக் கைப்பற்றியது.
பொதுவுடமை ஜனநாயகக் கட்சி, 153 இடங்களைக் கைப்பற்றி 
2-ஆவது இடத்தைப் பிடித்தது. ஜெர்மனியின் மாற்றத்துக்கான கட்சி 94 இடங்களுடன் 3-ஆவது இடத்தைப் பிடித்தது.
எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அடுத்த ஆட்சியை அமைப்பதற்காக ஏஞ்சலா மெர்க்கெலின் கட்சி இரண்டாவது இடத்தைக் கைப்பற்றிய பொதுவுடமை ஜனநாயகக் கட்சியுடன் தீவிர பேச்சுவார்த்தைக்குப் பின் மாபெரும் கூட்டணியை அமைத்தது.
இதையடுத்து, நாடாளுமன்றத்தில் அந்தக் கூட்டணியின் பலம் 399 உறுப்பினர்களாக அதிகரித்தது.
இந்தச் சூழலில், புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்ற கீழவையில் புதன்கிழமை நடைபெற்றது.
அந்த வாக்கெடுப்பில் 364 உறுப்பினர்கள் மெர்க்கெலுக்கு ஆதரவாகவும், 315 உறுப்பினர்களை அவரை எதிர்த்தும் வாக்களித்தனர். இதையடுத்து, அறுதிப் பெரும்பான்மைக்கு 9 வாக்குகள் அதிகமாகப் பெற்று நான்காவது முறையாக ஏஞ்சலா மெர்க்கெல் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ரகசியமாக நடைபெற்ற இந்த வாக்குப் பதிவில், ஏஞ்சலா மெர்க்கெல்லின் கட்சியைச் சேர்ந்த 35 எம்.பி.க்களே அவருக்கு எதிராக வாக்களித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது மெர்க்கெல்லின் கடினமான புதிய துவக்கத்தைப் பிரதிபலிப்பதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்தனர்.
வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் உள்ள அலுவலகத்தில் அவர் பதவிப் பிரமாணம் மேற்கொண்டார்.
ஐரோப்பிய கண்டத்தின் பொருளாதார சக்தியான ஜெர்மனியில், உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியா, இராக் போன்ற நாடுகளிலிருந்து வரும் லட்சக்கணக்கான அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பது குறித்த பிரச்னை கடந்த ஆண்டில் பூதாகரமாக வடிவெடுத்தது.
மனிதாபிமான அடிப்படையில் அதிக அகதிகளுக்குப் புகலிடம் அளிக்கும் மெர்க்கெலின் நிலைப்பாட்டுக்கு பொதுமக்களில் ஒரு சாராரிடையே எதிர்ப்பு எழுந்தது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எதிர்பாராத விதமாக மெர்க்கெலின் குடியேற்றக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த இடதுசாரிக் கட்சியான ஜெர்மனின் மாற்றத்துக்கான கட்சி, 94 இடங்களைக் கைப்பற்றியது.
இதனால், ஆளும் கட்சிக்கு போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டு அரசியல் நிச்சயமற்ற தன்மை நிலவி வந்தது. இந்தச் சூழலில்தான் இரண்டாவது பெரிய கட்சியுடன் கூட்டணி அமைத்து ஏஞ்சலா மெர்க்கெல் 4-ஆவது முறையாக மீண்டும் பிரதமராகியிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com