பிரிட்டன் இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் மறைவு

பிரிட்டனைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் உடல் நலக் குறைவு காரணமாக புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 76. 
பிரிட்டன் இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் மறைவு

பிரிட்டனைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் உடல் நலக் குறைவு காரணமாக புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 76. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் அருகே உள்ள இல்லத்தில் அவரது உயிர் பிரிந்ததாக அவரது மகன்கள் தெரிவித்துள்ளனர். ஹாக்கிங்குக்கு மூன்று மகன்களும், மூன்று பேரன்களும் உள்ளனர். 
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அடுத்து கோட்பாட்டு இயற்பியலில் தலைசிறந்த விஞ்ஞானியாக அறியப்பட்ட ஸ்டீஃபன் ஹாக்கிங், கருந்துளைகள், சார்புக் கோட்பாடு, அண்டவியல் ஆகியவை தொடர்பான ஆய்வுகளில் முக்கியப் பங்காற்றினார்.
தன்னம்பிக்கை நாயகன்: கோட்பாட்டு இயற்பியல் துறையில் தலைசிறந்து விளங்கிய அவர், 21 வயதில் நரம்பு பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் அமர்ந்தே செயல்பட முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். பின்னர் உடல் உறுப்புகள் செயலிழந்தாலும், அயராத மனஉறுதி காரணமாக சிறந்த விஞ்ஞானியாக பரிணமித்தார். இதனால், விஞ்ஞானியாக மட்டுமல்லாமல் தன்னம்பிக்கை நாயகனாகவும் சர்வதேச அளவில் அவர் அறியப்பட்டார்.
பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு நகரில் பிறந்த அவர் சிறுவயதில் கல்வியில் சிறந்து விளங்கவில்லை என்றாலும், கையில் கிடைக்கும் பொருள்களை ஆய்வு செய்வதிலும், அதில் இருந்து புதிய கருவியை உருவாக்குவதிலும் வல்லவராக இருந்தார். 1963-ஆம் ஆண்டு ஹாக்கிங் 21 வயதை எட்டியபோது, அவருக்கு நரம்பியக்க நோய் இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள், அவர்அதிக நாள் முழு உடல் நலத்துடன் உயிர் வாழ வாய்ப்பு இல்லை என்றும் கணித்தனர்.
நோயுடன் போராட்டம்: எனினும், மருத்துவ அறிக்கையைப் புறந்தள்ளிய ஹாக்கிங், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து, ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்குப் பிறகு கோட்பாட்டு இயற்பியலில் தலைசிறந்த விஞ்ஞானி என்ற பெயரைப் பெற்றார். எனினும், அவரைத் தாக்கிய நோய் ஒவ்வொரு உடல் உறுப்பாக முடக்கத் தொடங்கியது. சாப்பிடுவது, குளிப்பது, உடைமாற்றுவது என அனைத்துக்கும் மற்றவர்கள் உதவியை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது. சக்கர நாற்காலியில் அமர்ந்தாலும், இயற்பியல், அண்டவியல் ஆய்வின் மீதான அவரது ஆர்வம் மட்டும் நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே சென்றது. பேச முடியாத நிலை ஏற்பட்ட போது 'எலெக்ட்ரானிக் வாய்ஸ்' இயந்திரம் மூலம் மற்றவர்களுடன் உரையாடினார். பிற்காலத்தில் அவருக்காக அதிநவீன கணினி ஒன்று அவரது மாணவர்களின் உதவியுடன் சக்கர நாற்காலியில் பொருத்தப்பட்டது. இதன் மூலம் அனைவருடனும் அவர் எளிதில் தொடர்பு கொண்டார். தனது ஆய்வுகளையும் தொடர்ந்தார்.

தமிழிலும் மொழிபெயர்ப்பு


கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியராகவும், சிறந்த எழுத்தாளராகவும் அவர் விளங்கினார். அண்டவியல், அணுக்கட்டமைப்பு தொடர்பான 'எ பிரிஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்' என்ற தலைப்பில் ஹாக்கிங் 1988-ஆம் ஆண்டு எழுதிய புத்தகம் மிகவும் பிரபலமானது. அவரது இந்த சிறந்த படைப்பு, 'காலம்: ஒரு வரலாற்றுச் சுருக்கம்' என்ற பெயரில் தமிழிலும், வேறு பல மொழிகளில், மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. விற்பனையில் இப்புத்தகம் கின்னஸ் சாதனை படைத்தது. சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் இயற்பியலையும், அண்டவியலையும் எளிமையாக விளக்கியதே இப்புத்தகத்தின் வெற்றி ரகசியம்.
'தி யுனிவர்ஸ் இன் நட்ஷெல்', 'பிளாக் ஹோல்ஸ் அண்ட் பேபி யுனிவர்ஸ்' என்பது உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார். இயற்பியல் மாணவர்களுக்கு இப்புத்தகங்கள் அனைத்தும் சிறந்த வழிகாட்டியாக விளங்குகின்றன.

இந்தியர்களுக்கு புகழாரம்
கடந்த 2001-ஆம் ஆண்டு ஸ்டீஃபன் ஹாக்கிங் முதல்முறையாக இந்தியாவுக்கு வந்தார். அப்போது 16 நாள்கள் நமது நாட்டில் தங்கியிருந்த அவர், மும்பையில் நடைபெற்ற சர்வதேச இயற்பியல் கருத்தரங்கம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பேசினார். தில்லியில் அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனைச் சந்தித்த ஹாக்கிங், 'இந்தியர்கள் கணிதத்திலும், இயற்பியலிலும் சிறந்தவர்கள்' என்று அவரிடம் தெரிவித்தார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிக உயரிய 'பிரசிடென்ஷியல்' பதக்கத்தை ஹாக்கிங்குக்கு அணிவித்து கெளரவித்த அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.
கடந்த 2009-ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிக உயரிய 'பிரசிடென்ஷியல்' பதக்கத்தை ஹாக்கிங்குக்கு அணிவித்து கெளரவித்த அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.

விருதுகள், திரைப்படம்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் விருது, அடிப்படை இயற்பியல் விருது, அமெரிக்காவின் மிக உயரிய பிரசிடென்ஷியல் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள ஹாக்கிங், நோபல் பரிசை அடைவதற்கு முன்பு காலம் அவரை அழைத்துக் கொண்டது. ஐன்ஸ்டீனின் பிறந்த தினத்தில் ஹாக்கிங் மறைந்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு ஹாக்கிங் வாழ்க்கையை மையமாகக் கொண்டு 'தி தியரி ஆஃப் எவ்ரிதிங்' என்ற திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படத்தில் ஹாக்கிங்காக நடித்த எட்வர்ட் ரெட்மைனிக்கு ஆஸ்கர் விருது அளிக்கப்பட்டது.

பேராசிரியர் ஸ்டீஃபன் ஹாக்கிங் மிகச்சிறந்த விஞ்ஞானி மற்றும் கல்வியாளர். பல கோடி மக்களுக்கு முன்னுதாரணமாக இருந்த அவரது இழப்பு பெரும் சோகத்தை அளிக்கிறது. அவரது பணிகள் அறிவியல் துறையை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் சென்றது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
- பிரதமர் மோடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com