குடிநீர் பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள்: முன்னணி பிராண்டுகளும் தப்பவில்லை

உலகின் மிக முக்கிய நாடுகளில் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் குடிநீர் பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள் இருக்கின்றன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
குடிநீர் பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள்: முன்னணி பிராண்டுகளும் தப்பவில்லை

மியாமி: உலகின் மிக முக்கிய நாடுகளில் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் குடிநீர் பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள் இருக்கின்றன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

குடிநீர் பாட்டில்கள் தயாரிப்பு, பாட்டில்களில் குடிநீரை நிரப்பி அதனை மூடும் பணிகளின் போது பிளாஸ்டிக் துகள்கள் குடிநீரில் கலப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

உலகின் 9 முக்கிய நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில், உலகம் முழுவதும் பிளாஸ்டிக் துகள் கலந்த குடிநீரே விநியோகிக்கப்படுவதாக நியூயார்க் பல்கலையைச் சேர்ந்த மைக்ரோபிளாஸ்டிக் ஆய்வாளர் ஷெர்ரி மாஸோன் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பிரேசில், சீனா, இந்தியா, இந்தோனேசியா, கென்யா, லெபனான், மெக்ஸிகோ, தாய்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் விற்பனையாகும் குடிநீர் பாட்டில்கள் இந்த  ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில் 93 சதவீத குடிநீர் பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள் இருந்துள்ளன. இவற்றில் ஆக்வா, ஆக்வாஃபினா, தஸானி, ஏவியன், நெஸ்லே ப்யூர் லைஃப் மற்றும் சான் பெல்லெக்ரினோ ஆகிய குடிநீர் பாட்டில்களும் தப்பவில்லை.

நைலான், பாலீதீன், பாலிப்ரோப்லைன் ஆகிய துகள்கள் குடிநீரில் இருந்துள்ளன. இவை, குடிநீர் பாட்டில் மூடிகள் செய்ய பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஆகும்.

இதுமட்டுமல்லாமல், குடிநீர் நிரப்ப தயாராகும் குடிநீர் பாட்டில்களிலும், சுத்திகரிக்கப்படும் குடிநீரிலும், குடிநீர் பாட்டிலை மூடும் பணியின் போதும் பிளாஸ்டிக் துகள்கள் குடிநீரில் கலப்பதை இந்த ஆய்வு உறுதி செய்கிறது.

ஒரு குடிநீர் பாட்டிலில் அதிகபட்சமாக 10 ஆயிரம் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக ஒரு பகீர் தகவலும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுபோன்ற பிளாஸ்டிக் துகள்கள் கலந்த குடிநீரை குடிப்பதன் மூலம், மனிதனுக்கு புற்றுநோய் முதல் வெள்ளை அணுக்கள் குறைவு வரை பல நோய்கள் தாக்கும் அபாயம் இருப்பதாகவும் ஆய்வாளர் மாஸோன் கூறுகிறார்.

எனவே, பிளாஸ்டிக் பாட்டில் குடிநீர் என்பதை கடந்தகாலம் என்ற நிலைக்கு தள்ளும் அவசர காலத்தில் நாம் இருக்கிறோம் என்பதை உணரும் நேரம் வந்துவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com