ரஷிய அதிபர் தேர்தலில் விளாதிமீர் புதின் அபார வெற்றி

ரஷியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் விளாதிமீர் புதின் இதுவரை இல்லாத அதிக வாக்கு விகிதத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ரஷிய அதிபர் தேர்தலில் விளாதிமீர் புதின் அபார வெற்றி

ரஷியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் விளாதிமீர் புதின் இதுவரை இல்லாத அதிக வாக்கு விகிதத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இதையடுத்து, நாட்டின் தலைமைப் பொறுப்பை அவர் மேலும் 6 ஆண்டுகளுக்கு வகிக்கவிருக்கிறார்.
ரஷியாவில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 18) நடைபெற்றது. தற்போதைய தேர்தலில், அதிபர் விளாதிமீர் புதின் உட்பட எட்டுபேர் இந்தத் தேர்தலில் போட்டியிட்டனர். எனினும், புதினுக்கு கடுமையான நெருக்கடியைக் தருவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அலெக்ஸி நவால்னி சட்ட பிரச்னை காரணமாக இத்தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது. இதையடுத்து, பலத்த எதிர்ப்பு எதுவும் இன்றி இத்தேர்தலில் புதின் களமிறங்கியுள்ள நிலையில், 70 சதவீத பெரும்பான்மை ஆதரவுடன் புதின் மீண்டும் ரஷிய அதிபராக தேர்வு செய்யப்படுவார் என ஊடகங்கள் கருத்துக் கணிப்பை வெளியிட்டிருந்தன.
எனினும், வாக்குக் கணிப்புகளையும் தாண்டி, ரஷிய வரலாற்றில் இல்லாத அளவுக்கு 76.66 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 
இதன் மூலம், ஏற்கெனவே 20-க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக ரஷியாவை ஆண்டு வரும் புதினின் தலைமைப் பதவி, மேலும் 6 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனினும், சீனாவின் ஷீ ஜின்பிங்கைப் போல் ஆயுள்காலம் முழுவதும் ரஷியாவை ஆளும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்போவதில்லை என்று புதின் ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு: இதற்கிடையே, வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில் ரஷிய அரசு பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
தேர்தல் முறைகேடுகள் மூலம் புதின் ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளதாக மேற்கத்திய ஊடகங்களும் தெரிவித்து வருகின்றன.
எனினும், ரஷிய முன்னாள் உளவாளி மீது நச்சுத் தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாக புதின் மீது பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருவதும், ரஷிய அரசுக்கு எதிராக பிரிட்டன் எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகளுமே புதினுக்கு மக்கள் ஆதரவைப் பெருக்கியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வாழ்த்து


ரஷிய அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதினுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தார். புதினின் புதிய தலைமையில் இந்திய - ரஷிய உறவு மேலும் வலுப்பெறும் என்று அப்போது அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com