முகநூலில் தகவல் திருட்டு: மன்னிப்பு கோரினார் ஸகர்பெர்க்

முகநூலில் தகவல் திருட்டு: மன்னிப்பு கோரினார் ஸகர்பெர்க்

முகநூலில் இருந்து பயன்பாட்டாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதற்கு அதன் தலைவர் மார்க் ஸக்கர்பர்க் மன்னிப்பு கோரினார்.

முகநூலில் இருந்து பயன்பாட்டாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதற்கு அதன் தலைவர் மார்க் ஸக்கர்பர்க் மன்னிப்பு கோரினார். முகநூல் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்படாமல் இருப்பதற்கு தொழில்நுட்ப ரீதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய இருப்பதாகவும் அவர் கூறினார்.
 அமெரிக்காவில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், டிரம்பின் பிரசார நடவடிக்கைகளை, பிரிட்டனைச் சேர்ந்த "கேம்பிரிட்ஜ் அனலிடிகா' என்ற நிறுவனம் மேற்கொண்டது.
 அந்த நிறுவனம், முகநூல் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட விவரங்களைத் திருடி, அதன் மூலமாக, அவர்களின் விருப்பு, வெறுப்புகளை அறிந்து கொண்டு, அவற்றை டிரம்புக்குச் சாதகமாக தேர்தலில் பயன்படுத்திக் கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
 அலெக்ஸாண்டர் கோகன் என்ற ஆய்வாளர் உருவாக்கிக் கொடுத்த "செயலி' (ஆப்) மூலமாக, 5 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்களை அந்த நிறுவனம் திருடி, தேர்தலில் பயன்படுத்திக் கொண்டது தற்போது அம்பலமாகியுள்ளது. இந்த விவகாரம், சர்வதேச அளவில் கடந்த 2 தினங்களாகப் பரபரப்பாகப் பேசப்படுகிறது. முகநூலில் நம்பகத்தன்மை குறித்து பயன்பாட்டாளர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
 இந்த நிலையில், முகநூல் சமூக வலைப்பக்கத்தில் இருந்து தகவல்கள் திருடப்பட்டதற்கு மார்க் ஸக்கர்பர்க் மன்னிப்பு கோரினார். இதுதொடர்பாக, சி.என்.என். தொலைக்காட்சிக்கு அவர் வியாழக்கிழமை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
 நான் போதிய அனுபவமின்றி மிகச்சிறியவனாக இருந்தபோது, முகநூல் சமூக வலைதளத்தைத் தொடங்கினேன். இதனால், தொழில்நுட்ப ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் தவறுகளை செய்திருக்கிறேன். தவறான நபர்களை நம்பினேன்; தவறானவர்களை பணிக்கு அமர்த்தினேன்.
 இந்த நிலையில்தான், முகநூல் பக்கத்தில் இருந்து பயன்பாட்டாளர்களின் தகவல்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. முகநூல் வலைதளத்தில் நிகழ்ந்த தவறுக்கு நானே பொறுப்பேற்கிறேன். முகநூல் வலைதளத்தில் இருந்து தகவல்களைத் திருடுவதற்குப் பயன்படுத்தப்படும் செயலிகளை ஆராய்ந்து வருகிறோம். அவற்றில், சந்தேகப்படும்படியான நடவடிக்கைகள் கண்டறியப்பட்டால், அவற்றைத் தடுப்பதற்கு உரிய வழிமுறைகள் கையாளப்படும்.
 கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தை நம்பியிருந்திருக்கக் கூடாது. அந்தத் தவறை மீண்டும் செய்ய மாட்டேன். இது முகநூல், கேம்பிரிட்ஜ் அனலிடிகா, அலெக்ஸாண்டர் கோகன் ஆகிய மூன்று தரப்புக்கும் இடையே நடந்த நம்பிக்கை மீறலாகும்.
 அதுமட்டுமன்றி, முகநூல் நிறுவனத்துக்கும், பயன்பாட்டாளர்களுக்கும் இடையே நிகழ்ந்த நம்பிக்கை மீறலாகும்.
 எனவே, முகநூல் பக்கத்தில் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கும் வகையில், அடுத்த சில நாள்களில் பல மாற்றங்கள் செய்யப்படும்.
 இந்தியாவில் தேர்தல்: இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் அடுத்தடுத்து தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்த நிலையில், முகநூல் சமூக வலைதளத்தின் பாதுகாப்பு அம்சங்கள் பலப்படுத்தப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com