இராக்: தேர்தலில் சாதர் வெற்றி பெற்றதாக அறிவிப்பு

இராக்கில் கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளை ஷியா மதப் பிரிவு தலைவர் முக்தாதா அல்-சாதர் தலைமையிலான கூட்டணி கைப்பற்றியதாக அந்த நாட்டு தேர்தல் ஆணையம்

இராக்கில் கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளை ஷியா மதப் பிரிவு தலைவர் முக்தாதா அல்-சாதர் தலைமையிலான கூட்டணி கைப்பற்றியதாக அந்த நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த ஆணையம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இந்த முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கடந்த 12-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலின் ஒரு பகுதி முடிவுகள் இந்த வாரத் தொடக்கத்தில் வெளிவரத் தொடங்கினாலும், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து வாக்கு எண்ணிக்கை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்தச் சூழலில், முழுமையான தேர்தல் முடிவுகளை தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இராக்கில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்ட பிறகு, அந்த நாட்டின் நாடாளுமன்றத்துக்கு 
முதல் முறையாக இந்த மாதம் 12-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
அண்மைக் காலமாக பயங்கரவாதத் தாக்குதல்களின் எண்ணிக்கையும், தீவிரமும் வெகுவாகக் குறைந்துள்ள நிலையிலும், ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் இந்தத் தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்ததால், பலத்த பாதுகாப்புக்கிடையே இந்தத் தேர்தல் நடைபெற்றது.
அதிபர் ஹைதர் அல்-அபாதி, முன்னாள் அதிபர் நூரி அல்-மாலிக்கி, முன்னாள் ஷியா ஆயுதப் படையின் தலைவரான முக்தாதா அல்-சாதர் ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டனர். 
தனது ஆட்சியின் கீழ் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டதை சாதனையாகக் கூறி மக்களிடையே அல்-அபாதி ஆதரவு திரட்டினார். 
ஷியாக்களிடையே செல்வாக்கு பெற்ற அல்-சாதர், சீர்திருத்தங்களையும், ஊழல் ஒழிப்பையும் முன்வைத்து தேர்தலை எதிர்கொண்டார்.
இந்த நிலையில், அவரது தலைமையிலான கூட்டணி தேர்தலில் முன்னிலை வகிப்பதாக முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையின்போது தகவல்கள் வெளியாகின. அந்தத் தகவலை தற்போது தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com