பேச்சுவார்த்தை: வட கொரியாவுக்கு டிரம்ப் மறைமுக எச்சரிக்கை

திட்டமிட்டபடி வட கொரிய அதிபர் கிம் ஜோங்குடனான சந்திப்பு நடைபெறாவிட்டால், அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட கொரியாவை டிரம்ப் சூசகமாக எச்சரித்துள்ளார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் டிரம்ப்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் டிரம்ப்.

திட்டமிட்டபடி வட கொரிய அதிபர் கிம் ஜோங்குடனான சந்திப்பு நடைபெறாவிட்டால், அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட கொரியாவை டிரம்ப் சூசகமாக எச்சரித்துள்ளார்.
வட கொரியாவின் அணு ஆயுத விலக்கல் முடிவுகளை அமெரிக்கா தன்னிச்சையாக மேற்கொண்டால், அதிபர் டிரம்ப் - கிம் ஜோங்-உன் இடையே சிங்கப்பூரில் வரும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி நடைபெறுவதாக இருக்கும் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படும் என்று வட கொரியா அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதுகுறித்த கேள்விகளுக்கு பதிலளித்து, அமெரிக்க அதிபர் மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் டிரம்ப் கூறியதாவது:
பேச்சுவார்த்தை விவகாரத்தில் என்ன நடக்கிறது என்று பொறுமையாகப் பார்ப்போம்.
இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தால் நடக்கட்டும். இல்லையென்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம்.
சீனா மீது குற்றச்சாட்டு: யாரும் எதிர்பாராத விதமாக வட கொரிய அதிபர் சீனா சென்று, அந்த நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை இரண்டாவது முறை சந்தித்த பிறகுதான் பேச்சுவார்த்தை குறித்த வட கொரியாவின் தொனியில் மாற்றம் ஏற்பட்டது.
அதற்குப் பிறகுதான் அந்த நாடு இந்த விவகாரத்தில் கெடுபிடியாகப் பேசுகிறது. உண்மையிலேயே இருவரும் என்ன பேசினார்கள் என்று தெரியாததால் சந்தேகத்தின் பலனை அவர்களுக்கே விட்டுவிடுகிறேன்.
அணு ஆயுதங்களைப் பொருத்தவரை லிபியாவிடம் நடந்து கொண்ட பாணியிலேயே வட கொரியாவிடமும் நடந்து கொள்ளும் திட்டம் அமெரிக்காவுக்கு இல்லை.
லிபியாவைப் பொருத்தவரை, அந்த நாட்டு சர்வாதிகாரி கடாஃபியை வீழ்த்த நினைத்தோம். அதனால் அங்கு சென்று அவரை வீழ்த்தினோம்.
ஆனால், வட கொரிய அதிபர் கிம் ஜோங்கின் நிலைமை வேறு. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் மேற்கொண்டால், அவரது தலைமைக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது.
முன்பைவிட வட கொரியா அதிக பாதுகாப்புடன் இருக்கும். தென் கொரியாவைப் போலவே, மிகச் சிறந்த பொருளாதார நிலைமையை அடையும். அதற்கு அமெரிக்கா பக்கபலமாக இருக்கும்.
ஆனால், அமெரிக்காவுடன் கிம் ஜோங்-உன் ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லையென்றால் லிபிய பாணியில் அந்த நாட்டின் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
எனினும், இருதரப்பு பேச்சுவார்த்தை குறித்து நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம். எங்களது சந்திப்பு நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.
கடந்த ஆண்டின் இறுதிவரை சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ஏவுகணைச் சோதனைகளையும், அணு குண்டு சோதனைகளையும் தொடர்ந்து வடகொரியா நடத்தி வந்தது.
இதற்குப் பதிலடியாக, ஐ.நா. அமைப்பும், அமெரிக்காவும், வட கொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதனால், வட கொரியாவுக்கும், அமெரிக்க-தென் கொரிய நாடுகளுக்கும் இடையே கடும் பதற்றம் நிலவி வந்தது.
இந்தச் சூழலில், தென் கொரியாவில் மார்ச் மாதம் நடைபெற்ற ஒலிம்பிக் துவக்க விழாவுக்கு தனது தங்கை கிம் யோ-ஜோங்கை வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் அனுப்பி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து இரு கொரிய நாடுகளுக்கும் இடையே பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் ஏற்பட்ட நிலையில், கிம் ஜோங்-உன், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோரிடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்கச் சந்திப்பு கடந்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் வட கொரிய அதிபர் கிம் ஜோங்கின் சந்திப்பு சிங்கப்பூரில் ஜூன் 12-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், லிபியாவில் நடந்ததைப் போல் வட கொரியா அனைத்து அணு ஆயுதங்களையும் ஒப்படைத்தால் மட்டுமே அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டன் கூறியதாக தகவல்கள் வெளியாகின.
இதனால் அதிருப்தியடைந்த வட கொரியா, அணு ஆயுத ஒழிப்பு விவகாரத்தில் அமெரிக்கா தன்னிச்சையாக நடந்து கொண்டால் டிரம்ப்-கிம் இடையிலான பேச்சுவர்த்தை ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com