மலேசியா: நஜீபுக்கு ஊழல் தடுப்பு ஆணையம் சம்மன்

மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் ஆட்சிக் காலத்தின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் குறித்த விசாரணைக்காக, வரும் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராகுமாறு அவருக்கு அந்த நாட்டு ஊழல் தடுப்பு

மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் ஆட்சிக் காலத்தின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் குறித்த விசாரணைக்காக, வரும் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராகுமாறு அவருக்கு அந்த நாட்டு ஊழல் தடுப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மலேசிய அரசு செய்தி நிறுவனமான பெர்னாமா சனிக்கிழமை கூறியதாவது:
"1 மலேசியா மேம்பாட்டு நிறுவன ஊழல்' தொடர்பான விசாரணைக்காக, வரும் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராகுமாறு முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக்குக்கு உழல் தடுப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய நிலையில், அந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் குறித்த விவரங்களை நஜீபிடம் விசாரிப்பதற்காக இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2018 மே மாதம் 10-ஆம் தேதி வரை மலேசியாவின் பிரதமராக பொறுப்பு வகித்து வந்த நஜீப் ரஸாக், தனது ஆட்சிக் காலத்தின்போது நாட்டில் தொழில் பெருக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும், அந்நிய நேரடி முதலீடுகளை கவர்வதற்காகவும் "1 மலேசியா மேம்பாட்டு நிறுவனம்' (1எம்டிபி) என்ற அமைப்பைத் தொடங்கினார்.
அரசுக்குச் சொந்தமான அந்த நிறுவனத்தின் நிர்வாகத்தையும் அவரே கவனித்து வந்தார். இந்த நிலையில், 1எம்டிபி நிறுவனத்துக்கு செலுத்தப்பட்ட 267 கோடி மலேசிய ரிங்கிட் (சுமார் ரூ.4,150 கோடி) பிரதமர் நஜீபின் சொந்த வங்கிக் கணக்குக்கு முறைகேடாக மாற்றப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இந்தக் குற்றச்சாட்டை நஜீப் மறுத்தாலும், அவர் பதவி விலகக் கோரி முன்னாள் பிரதமரும், நஜீபின் முன்னாள் அரசியல் சகாவுமான மகாதிர் முகமது உள்ளிட்டோர் வலியுறுத்தி வந்தனர்.
இந்தச் சூழலில், இந்த மாதம் 9-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் நஜீப் ரஸாக் தலைமையிலான பாரிஸன் நேஷனல் கூட்டணி தோல்வியடைந்தது.
சுதந்திரம் பெற்றது முதல் அந்த நாட்டை தொடர்ந்து 61 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த அந்தக் கூட்டணி, தற்பதுதான் முதல் முறையாக தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தத் தேர்தலில், பகதான் ஹரப்பன் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றியடைந்தது. அதையடுத்து, நஷீதை எதிர்த்து பிரசாரம் செய்த முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது (92) புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அத்துடன், தேர்தலில் தனக்கு ஆதரவு அளித்த பகதான் ஹரப்பன் கூட்டணியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான அன்வர் இப்ராஹிமையும் மகாதிர் சிறையிலிருந்து விடுவித்தார்.
பாலியல் குற்றச்சாட்டு காரணமாக நஜீப் ஆட்சிக் காலத்தின்போது சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்வருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதையடுத்து அவர் கடந்த புதன்கிழமை விடுவிக்கப்பட்டார்.
இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு அன்வர் இப்ராஹிமுக்கு பிரதமர் பதவியை மகாதிர் முகமது விட்டுத் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஊழல் புகார் தொடர்பாக முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் இல்லத்தில் போலீஸார் கடந்த புதன்கிழமை நள்ளிரவு அதிரடி சோதனை நடத்தினர்.
கோலாலம்பூரிலுள்ள நஜீப் ரஸாக்கின் இல்லத்திலும், அவருக்குச் சொந்தமான மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பிலும் சோதனை நடத்தி, கைப் பைகள் உள்ளிட்ட பொருள்களை போலீஸார் எடுத்துச் சென்றனர்.
அந்தக் கைப் பைகளிலிருந்து ஏராளமான அளவில் பண நோட்டுகளும், விலையுயர்ந்த ஆபரணங்கள், கைக்கடிகாரங்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
இந்தச் சூழலில், 1எம்டிபி ஊழல் தொடர்பான விசாரணைக்கு நஜீப் நேரில் அழைக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே, ஊழல் வழக்கிலிருந்து அவர் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக, மலேசியாவை விட்டு வெளியேற அவருக்கு தடை விதிக்கப்பட்டது 
நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com