இந்தியா, ரஷியா நட்புறவில் வாஜ்பாய் கனவு நிறைவேறியுள்ளது: பிரதமர் நரேந்திர மோடி

இந்தியா மற்றும் ரஷியா நட்புறவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கனவு நிறைவேறியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்தியா, ரஷியா நட்புறவில் வாஜ்பாய் கனவு நிறைவேறியுள்ளது: பிரதமர் நரேந்திர மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக திங்கள்கிழமை ரஷியா சென்றார். அங்கு சோச்சி நகரில் ரஷிய பிரதமர் விளாதிமீர் புதினை சந்தித்தார். அதுமட்டுமல்லாமல் சோச்சி நகரில் ரஷிய அதிபரைச் சந்தித்த முதல் இந்தியப் பிரதமர் ஆவார். அப்போது ரஷிய அதிபராக 4-ஆவது முறையாக புதின் பொறுப்பேற்றதற்கும், ஜூலை மாதம் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கும் வாழ்த்துகளும், பாராட்டுதல்களையும் தெரிவித்தார். மேலும் இந்த சந்திப்பின் போது இருநாடுகளின் உறவு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அதில், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால், இந்தியா மற்றும் ரஷியாவின் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம். ஆஃப்கானிஸ்தான், சிரியா நாடுகளின் நிலவரம், பயங்கரவாத அச்சுறுத்தல், விரைவில் நடக்கவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு மற்றும் பிரிக்ஸ் அமைப்பு மாநாடு ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள தடையால், இந்தியா-ரஷியா இடையே பாதுகாப்புத் துறையில் நிலவும் ஒத்துழைப்பில் பாதிப்பு ஏற்பட சாத்தியமிருப்பதாக கூறப்படுவது குறித்தும், இந்தியா-ரஷியா இடையேயான அணுசக்தி ஒத்துழைப்பை 3-ஆவது நாட்டுக்கு விரிவுப்படுத்துவது, கொரிய தீபகற்பத்தில் நிலவும் சூழ்நிலை உள்ளிட்டவை குறித்தும் விவாதித்துள்ளனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

இந்தியா, ரஷியா இடையே நீண்டகாலமாக நட்புறவு நீடித்து வருகிறது. இந்த சந்திப்புக்கு என்னை அழைத்தமைக்கு நன்றி. இதன்மூலம் இருநாடுகளின் உறவில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. 2017-ல் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் நடந்த சர்வதேச பொருளாதார மாநாட்டுக்கு இந்தியாவுக்கு ரஷியா அழைப்பு விடுத்தமைக்கு மிக்க நன்றி. அதுபோல ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இணையவும் ரஷியா உதவியுள்ளது. 

இந்திய பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது, ரஷிய அதிபராக விளாதிமீர் புதின் பொறுப்பேற்ற நிலையில் சந்தித்தார். அப்போது இருநாடுகளின் சக்திவாய்ந்த ஜனநாகம் மற்றும் கலாச்சாரம் தொடர்பாக விளாதிமீர் புதின் கூறியிருந்தது இந்தியர்களால் இன்றளவும் நினைவுகூறப்படுகிறது.

அப்போது உலகளவில் ரஷியா சக்திவாய்ந்த நாடாக மாற்றமடைந்து ஆதிக்கம் செலுத்தும் என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியதை நான் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். மேலும், இந்தியா மற்றும் ரஷியா இடையிலான நட்புறவு வலுப்பெற வேண்டும் என்ற வாஜ்பாய் கனவு தற்போது நிறைவேறியுள்ளது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com