ஆட்சி அதிகாரத்தை பிடிக்க ராஜபட்ச குடும்பத்தினர் முயற்சி

நாட்டு மக்களை தவறாக வழிநடத்தி, இலங்கையில் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்சவின் குடும்பத்தினர் முயற்சிப்பதாக அந்நாட்டு நிதியமைச்சர் மங்கள சமரவீரா குற்றம்சாட்டியுள்ளார்.
ஆட்சி அதிகாரத்தை பிடிக்க ராஜபட்ச குடும்பத்தினர் முயற்சி

நாட்டு மக்களை தவறாக வழிநடத்தி, இலங்கையில் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்சவின் குடும்பத்தினர் முயற்சிப்பதாக அந்நாட்டு நிதியமைச்சர் மங்கள சமரவீரா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
நமது நாட்டில் நியமனம் செய்யப்பட்ட அரசு அதிகாரிகளிலேயே மஹிந்த ராஜபட்சவின் சகோதரரான கோத்தபய ராஜபட்சதான் மிகப்பெரிய ஊழல்வாதியாகவும், அபாயகரமான அரசு அதிகாரியாகவும் கருதப்படுகிறார். அத்தகைய நபர், தனது அரசியல் மறுபிரவேசத்துக்குப் பிறகு, புதிதாய் பிறந்த குழந்தை போல செயல்படுகிறார்.
நீதிமன்றங்களில் தனக்கு எதிராக இருக்கும் வழக்குகளில், தாம் அப்பாவி என்பதை நிரூபிப்பதை விட்டுவிட்டு, தனக்கு முன்ஜாமீன் வாங்குவதற்காக வழக்குரைஞர்களை அவர் நியமித்துள்ளார்.
இதிலிருந்து, நாட்டு மக்களை தவறாக வழிநடத்தி, மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற மஹிந்த ராஜபட்ச குடும்பத்தினர் முயற்சிக்கின்றனர் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
இலங்கையில் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், பத்திரிகையாளர்கள் மாயமானதற்கும் கோத்தபய ராஜபட்சதான் காரணம். இதேபோல், பல்வேறு ஊழல்களிலும் அவர் ஈடுபட்டுள்ளார். மனித உரிமை மீறல்கள் விவகாரத்தில், சர்வதேச அரங்கில் இலங்கை தனிப்படவும் கோத்தபய ராஜபட்சதான் காரணம் என்று அந்த அறிக்கையில் இலங்கை நிதியமைச்சர் மங்கள சமரவீரா தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபராக மஹிந்த ராஜபட்ச இருந்தபோது, அவரது சகோதரர் கோத்தபய ராஜபட்ச, அரசு வட்டாரத்தில் அதிக செல்வாக்கு கொண்ட நபராக திகழ்ந்தார். வரும் 2020ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தலில் கோத்தபய ராஜபட்ச போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது இதை கோத்தபய ராஜபட்ச சூசகமாக தெரிவித்திருந்தார். இதேபோல், மஹிந்த ராஜபட்சவின் எஞ்சிய 2 சகோதரர்களான பஷில் ராஜபட்ச, சமல் ராஜபட்ச ஆகியோரின் பெயர்களும், அதிபர் பதவிக்கான தேர்தலில் அடிபடுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com