வெனிசூலா: சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலில் மடூரோ வெற்றி

வெனிசூலாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் நிக்கோலஸ் மடூரோ மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வெற்றியை ஆதரவாளர்களுடன் கொண்டாடும் நிக்கோலஸ் மடூரோ.
தேர்தல் வெற்றியை ஆதரவாளர்களுடன் கொண்டாடும் நிக்கோலஸ் மடூரோ.

வெனிசூலாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் நிக்கோலஸ் மடூரோ மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தங்கள் புறக்கணிப்பை மீறி நடைபெற்ற இந்தத் தேர்தல் சட்டவிரோதமானது என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து அந்த நாட்டு தேசிய தேர்தல் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில், 92 சதவீத வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.
அந்க வாக்கு எண்ணிக்கையின்படி, அதிபர் நிக்கோலஸ் மடூரோவுக்கு 68 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இதையடுத்து, அவருக்கு அடுத்த நிலையில் உள்ள ஹென்றி ஃபால்கனைவிட 40-க்கும் மேற்பட்ட புள்ளிகள் பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளார் என்று அந்த வாரியம் குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து, தலைநகர் கராகஸின் ஒரு சில இடங்களில் மடூரோவின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
எனினும், இந்த வெற்றி முறைகேடாகப் பெறப்பட்டது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இதுகுறித்து மடூரோவுக்கு அடுத்த நிலையில் உள்ள ஹென்றி ஃபால்கன் கூறுகையில், வறுமை நிலையில் உள்ள வாக்காளர்களிடமிருந்து அதிபர் நிக்கோலஸ் மடூரோ தந்திரமாக வாக்குகளை விலை கொடுத்து வாங்கியததாகக் கூற்றம் சாட்டினார். மேலும், முறைகேடாக வாக்குகளைப் பெற்று மடூரோ பெற்றுள்ள வெற்றி சட்டவிரோதமானது என்றும் அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் ஹென்றியின் கருத்துக்கு, தேர்தலில் 3-ஆவது இடத்தைப் பிடித்த ஜேவியர் பெர்டூச்சி ஆதரவு தெரிவித்துள்ளார்.
எனினும், முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்தால்தான் மடூரோ வெற்றி பெற்றதாகவும், இதுவரை இல்லாத அளவுக்கு வாக்குப் பதிவு விகிதமும் 46 சதவீதமாக இருந்ததற்கும் அதுதான் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
அதுமட்டுமின்றி, இந்தத் தேர்தல் முடிவுகளை ரத்து செய்துவிட்டு மறுதேர்தல் நடத்தாவிட்டால், வெனிசூலாவில் ஏற்கெனவே நீடித்து வரும் அரசியல் பதற்றம் ஆபத்தான அளவை எட்டும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
அண்மைக் காலமாக வெனி
சூலாவில் ஏற்பட்டு வரும் பொருளாதாரப் பின்னடைவுக்கு அதிபர் மடூரோவின் நடவடிக்கைகள்தான் காரணம் என்று கூறி வரும் அந்த நாட்டு எதிர்கட்சிகள், அவரை பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தன.
இந்த நிலையில், இந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் நடத்த வேண்டிய அதிபர் தேர்தலை முன்கூட்டி மே மாதமே நடத்த அவர் முடிவு செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்தன.
இந்த நிலையில், முக்கிய எதிர்க்கட்சிகள் பங்குபெறாமலே, அதிபர் தேர்தல் திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com