டிரம்ப்பைச் சந்திக்க கிம் ஜோங்-உன் எப்போதும் தயார்: வட கொரியா

வட கொரிய அதிபர் கிம் ஜோங்குடன் சிங்கப்பூரில் நடைபெறுவதாக இருந்த சந்திப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்திருந்தாலும்,
கிம் ஜோங்குடனான சந்திப்பை ரத்து செய்த டிரம்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தென் கொரிய தலைநகர் சியோலில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அந்த நாட்டு மக்கள்.
கிம் ஜோங்குடனான சந்திப்பை ரத்து செய்த டிரம்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தென் கொரிய தலைநகர் சியோலில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அந்த நாட்டு மக்கள்.

வட கொரிய அதிபர் கிம் ஜோங்குடன் சிங்கப்பூரில் நடைபெறுவதாக இருந்த சந்திப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்திருந்தாலும், டிரம்ப்பை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க கிம் தயாராக இருப்பதாக வட கொரியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வட கொரிய வெளியுறவுத் துறை இணையமைச்சர் கிம் கீ-க்வான் கூறியதாவது:
சிங்கப்பூரில் வரும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி அதிபர் கிம் ஜோங்குடன் நடைபெறுவதாக இருந்த சந்திப்பை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
டிரம்ப்பின் எதிர்பாராத இந்த முடிவு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
இருந்தாலும், பேச்சுவார்த்தைக்கான எங்களது கதவு திறந்தே உள்ளது. டிரம்ப் நினைத்தால் அதிபர் கிம் ஜோங்குடன் எப்போது வேண்டுமானாலும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றார் அவர்.
கடந்த ஆண்டின் இறுதிவரை சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ஏவுகணைச் சோதனைகளையும், அணு குண்டு சோதனைகளையும்வடகொரியா தொடர்ந்து நடத்தி வந்தது.
இதற்குப் பதிலடியாக, ஐ.நா. அமைப்பும், அமெரிக்காவும், வட கொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதனால், வட கொரியாவுக்கும், அமெரிக்க-தென் கொரிய நாடுகளுக்கும் இடையே கடும் பதற்றம் நிலவி வந்தது.
இந்தச் சூழலில், தென் கொரியாவில் மார்ச் மாதம் நடைபெற்ற ஒலிம்பிக் துவக்க விழாவுக்கு தனது தங்கை கிம் யோ-ஜோங்கை வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் அனுப்பி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து இரு கொரிய நாடுகளுக்கும் இடையே பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் ஏற்பட்ட நிலையில், கிம் ஜோங்-உன், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோரிடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்கச் சந்திப்பு கடந்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் வட கொரிய அதிபர் கிம் ஜோங்கின் சந்திப்பு சிங்கப்பூரில் ஜூன் 12-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், லிபியாவில் நடந்ததைப் போல் வட கொரியா அனைத்து அணு ஆயுதங்களையும் ஒப்படைத்தால் மட்டுமே அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டன் கூறியதாக தகவல்கள் வெளியாகின.
இதனால் அதிருப்தியடைந்த வட கொரியா, அணு ஆயுத ஒழிப்பு விவகாரத்தில் அமெரிக்கா தன்னிச்சையாக நடந்து கொண்டால் டிரம்ப்-கிம் இடையிலான பேச்சுவர்த்தை ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'திட்டமிட்டபடி அதிபர் கிம் ஜோங்குடனான சந்திப்பு நடைபெறாவிட்டால், அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்று வட கொரியாவை டிரம்ப் சூசகமாக எச்சரித்தார்.
லிபியாவைப் பொருத்தவரை, அந்த நாட்டு சர்வாதிகாரி கடாஃபியை வீழ்த்த நினைத்ததால் அவரை வீழ்த்தியதாகவும், ஆனால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் மேற்கொண்டால், வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் தலைமைக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும் அவர் கூறினார்.
மேலும், தென் கொரியாவைப் போலவே, வட கொரியாவும் மிகச் சிறந்த பொருளாதார நிலைமையை அடையும்; அதற்கு அமெரிக்கா பக்கபலமாக இருக்கும் என்று டிரம்ப் கூறினார்.
இதற்கிடையே, வட கொரியா கடுமையாக எதிர்த்து வரும் வருடாந்திர கூட்டு போர் ஒத்திகையை அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா மேற்கொண்டது.
இதனால் அதிருப்தியடைந்த வட கொரியா, டிரம்ப்-கிம் சந்திப்பு குறித்து விவாதிப்பதற்காக நடைபெறவிருந்த வட-தென் கொரிய அதிகாரிகள் கூட்டத்தை கடந்த வாரம் ரத்து செய்தது.
மேலும், கூட்டுப் போர் ஒத்திகை மூலம் வட கொரியாவுக்கு அமெரிக்காவும், தென் கொரியாவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும், இந்தப் போக்கு தொடர்ந்தால் டிரம்ப்புடனான சந்திப்பை கிம் ஜோங்-உன் ரத்து செய்வார் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்தச் சூழலில், சிங்கப்பூரில் நடைபெறுவதாக இருந்த கிம் ஜோங்குடனான சந்திப்பை ரத்து செய்வதாக, அவருக்கு வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தைக்கு முன்னர் அமெரிக்காவுடன் சுமூகச் சூழலை ஏற்படுத்துவதற்காக, ஏற்கெனவே அறிவித்திருந்தபடி சர்வதேச செய்தியாளர்கள் முன்னிலையில் தனது அணு ஆயுத சோதனை மையத்தை வட கொரியா வெடி வைத்துத் தகர்த்த சில மணி நேரத்தில் இந்த அதிர்ச்சிகரமான கடிதத்தை டிரம்ப் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com