ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை: முழுவீச்சில் அமலுக்கு வந்தது

ஈரான் மீதான அமெரிக்க பொருளாதாரத் தடை திங்கள்கிழமை முதல் மீண்டும் முழு வீச்சில் அமலுக்கு வந்ததாக
ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை: முழுவீச்சில் அமலுக்கு வந்தது


ஈரான் மீதான அமெரிக்க பொருளாதாரத் தடை திங்கள்கிழமை முதல் மீண்டும் முழு வீச்சில் அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இல்லாத மிகக் கடுமையான இந்தப் பொருளாதாரத் தடையால், அணு ஆயுதங்கள் தொடர்பான ஈரானின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்படும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் மட்டுமின்றி, பொருளாதார அமைப்புகள் மீதும் விதிக்கப்பட்டுள்ள தடைகள் திங்கள்கிழமை முதல் முழுமையாக அமல்படுத்தப்படும்.
இதன் மூலம், அமெரிக்க நிதிமைச்சகம் 600 ஈரானியர்கள் மற்றும் ஈரானிய நிறுவனங்கள் மீது தடை விதிக்கும்.
இந்தக் கடுமையான தடைகள் காரணமாக, ஈரான் அரசு தனது நிலைப்பாட்டை திருத்திக் கொள்ளும் என்று டிரம்ப் அரசு நம்புகிறது. 
அந்த நம்பிக்கை நிறைவேறும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு ஆகும் என்றார் அவர்.
தனது அணுசக்தித் திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரானும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளும் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டன.
ஒபாமா அதிபராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட கடுமையான முயற்சியின் பலனாக உருவான இந்த ஒப்பந்தம், ஈரானை அணு ஆயுதங்கள் தயாரிக்காமல் தடுப்பதற்கு போதுமானதாக இல்லை என்று டொனால்ட் டிரம்ப் விமர்சித்து வந்தார்.
இந்த நிலையில், அந்த ஒப்பந்தத்தைக் கைவிடுவதாக டிரம்ப் கடந்த மே மாதம் 8-ஆம் தேதி அறிவித்தார்.
இதற்கு, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பிற நாடுகளான ரஷியா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்தச் சூழலில், அந்த அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக விலக்கிக் கொள்ளப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள், மீண்டும் செயல்படுத்தப்படும் என்று டிரம்ப் அறிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த சில பொருளாதாரத் தடைகள் கடந்த செப்டம்பர் மாதம் 4-ஆம் தேதி அமலுக்கு வந்தன.
இந்தச் சூழலில், கச்சா எண்ணெய் ஏற்றுமதி உள்ளிட்ட அனைத்து பொருளாதாரத் தடைகளும் தற்போது முழு வீச்சில் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஈரானிடமிருந்து பெருமளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு, இந்தப் பொருளாதாரத் தடைகளை பின்பற்றுவதிலிருந்து சில சலுகைகளை அமெரிக்கா வழங்கியது.
எனினும், இந்தத் தடைகளால் ஈரான் பொருளாதாரத்துக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த கச்சா எண்ணெய்ச் சந்தை, வங்கி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இனிமேல்தான் தெரியவரும் என்று சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தடைகளைத் தாண்டுவோம்!
டெஹரான், நவ. 5: தங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளைத் தாண்டி வரப்போவதாக ஈரான் சவால் விடுத்துள்ளது.


இதுகுறித்து அந்த நாட்டு அதிபர் ஹஸன் ரெளஹானி தொலைக்காட்சியில் திங்கள்கிழமை ஆற்றிய உரையில் கூறியதாவது:
ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் சட்டவிரோதமானவை; நியாயமற்றவை.
அவை சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என்பதால், அவற்றை மிக கௌரவமாக நாம் கடந்து வருவோம் என்றார் அவர்.

தடை பலன் தருமா?: அமெரிக்க அமைச்சர் மழுப்பல்
ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை பின்பற்றுவதில் இந்தியா, சீனா, துருக்கி, ஈராக், இத்தாலி, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளதால் இந்தத் தடை எதிர்பார்த்த பலனைத் தருமா? என்று பாம்பேயோவிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.


எனினும், அந்தக் கேள்விக்கு நேரடியாக பதிலளிப்பதைத் தவிர்த்த பாம்பேயோ, இதுவரை எந்த அமெரிக்க அரசும் செய்யாத அளவுக்கு ஈரானின் கச்சா எண்ணெய் சந்தையை அதிக அளவில் முடக்கியுள்ளோம். அதனால் கிடைக்கும் பலனை பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com