ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி: இந்தியாவுக்கு விலக்கு அளித்தது ஏன்? டிரம்ப் விளக்கம்

இந்தியா உள்ளிட்ட 8 நாடுகள் தன்னிடம் உதவி வேண்டி கேட்டுக் கொண்டதாலும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று எண்ணியதாலும் ஈரானிடம் இருந்து
ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி: இந்தியாவுக்கு விலக்கு அளித்தது ஏன்? டிரம்ப் விளக்கம்

இந்தியா உள்ளிட்ட 8 நாடுகள் தன்னிடம் உதவி வேண்டி கேட்டுக் கொண்டதாலும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று எண்ணியதாலும் ஈரானிடம் இருந்து அந்த நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ள தற்காலிக விலக்கு அளித்தேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
 ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டுள்ள 8 நாடுகளின் பட்டியலை அமெரிக்கா கடந்த திங்கள்கிழமை வெளியிட்டது. அதில், இந்தியா, சீனா, ஜப்பான், இத்தாலி, கிரீஸ், தென் கொரியா, தைவான், துருக்கி ஆகிய நாடுகள் இடம் பெற்றிருந்தன. முன்னதாக, ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் முழுவீச்சில் அமலுக்கு வந்ததால் அந்நாட்டுடன் வர்த்தக நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்திக் கொள்ளுமாறும் அமெரிக்கா தெரிவித்தது.
 அந்த நிபந்தனையை இந்தியா ஏற்காதபோதிலும், அமெரிக்காவுடன் மோதல் போக்கை விரும்பவில்லை. இதையடுத்து, பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக, எண்ணெய் இறக்குமதியின் அவசியம் தொடர்பாக அமெரிக்க தரப்பிடம் இந்தியா எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிலையில், ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி மேற்கொள்ளலாம் என்று இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு அளித்தது.
 இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிரம்ப் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
 அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருந்தாலும், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ள சில நாடுகளுக்கு அனுமதி அளித்துள்ளேன். இந்த விஷயத்தில் தங்களுக்கு உதவுமாறு அந்த நாடுகள் என்னிடம் கேட்டுக் கொண்டன. எனவே, தற்காலிகமாக விலக்கு அளித்துள்ளேன். மேலும், இதன் மூலம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையையும் கட்டுக்குள் வைக்க முடியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com