இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா அதிரடி

முடக்கப்பட்டிருந்த இலங்கை நாடாளுமன்றம் வரும் 14-ஆம் தேதி கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிபர் சிறீசேனா வெள்ளிக்கிழமை இரவு, நாடாளுமன்றத்தை திடீரென கலைத்து உத்தரவிட்டார்.

முடக்கப்பட்டிருந்த இலங்கை நாடாளுமன்றம் வரும் 14-ஆம் தேதி கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிபர் சிறீசேனா வெள்ளிக்கிழமை இரவு, நாடாளுமன்றத்தை திடீரென கலைத்து உத்தரவிட்டார். அதற்கான அறிவிக்கையில் அவர் கையெழுத்திட்டுள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 அதிபரின் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்திருப்பதாக இலங்கை அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இதன் மூலம் 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் இரண்டாண்டுகளுக்கு முன்பே முடிவுக்கு வந்துள்ளது.
 அவையில் பெரும்பான்மையை நிரூபிக்க பிரதமர் ராஜபட்சவுக்கு போதிய பலம் இல்லாததால்தான் இந்த முடிவை அதிபர் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 முன்னதாக, இந்தக் கருத்தை ராஜபட்சவுக்கு நெருக்கமானவரும், நாடாளுமன்ற எம்.பி.யுமான கெஹெலியா ராம்பெக்வெல்லாவும் உறுதிபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 இலங்கை அரசியலில் அனுதினமும் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், அவற்றில் உச்சமாக தற்போது நாடாளுமன்றமே கலைக்கப்பட்டிருப்பது உலக நாடுகளின் மொத்த கவனத்தையும் ஈர்க்கும் நிகழ்வாக அமைந்துள்ளது.
 இதனிடையே, சிறீசேனாவின் முடிவை எதிர்த்து ரணில் விக்ரமசிங்க தரப்பு நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதால் அதற்கான சாத்தியக் கூறுகள் உடனடியாக இல்லை என அந்நாட்டு அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
 இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவுக்கும், அதிபர் சிறீசேனாவுக்கும் அண்மைக் காலமாக கடுமையான கருத்து மோதல் இருந்து வந்தது. அதன் விளைவாக, பிரதமர் பதவியில் இருந்து ரணிலை நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் ராஜபட்சவை அப்பதவியில் நியமித்தார் சிறீசேனா. மேலும், நாடாளுமன்றத்தை நவம்பர் 16-ஆம் தேதி வரை முடக்கி வைக்கவும் அவர் உத்தரவிட்டார்.
 இந்த நடவடிக்கை, இலங்கை அரசியல் களத்தில் உச்சகட்ட குழப்பத்துக்கு வழிவகுத்தது. அதன் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம் ராஜபட்சவுக்கு ஏற்பட்டது. மறுபுறம் ரணில் தரப்பில் அதிபரின் முடிவுக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தப்பட்டது. மேலும், தாம் பிரதமராகவே நீடிப்பதாக ரணில் அறிவித்தார்.
 இதில், நிதர்சனம் என்னவெனில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்குத் தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை ரணிலின் கட்சிக்கும் இல்லை; ராஜபட்ச கட்சிக்கும் இல்லை.
 இதனால், உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கான குதிரை பேரங்கள் மிகத் தீவிரமாக நடைபெற்றன. அணி மாறிய எம்.பி.க்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தார் ராஜபட்ச. தனக்கு ஆதரவளிக்கும் ரணில் கட்சி எம்.பி.க்கள் அனைவருக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்படும் என ராஜபட்ச உத்தரவாதம் அளித்ததாகவும் தெரிகிறது. அதன் தொடர்ச்சியாக சிலர் கட்சி தாவி ஆதரவு கொடுத்தனர்.
 இருந்தபோதிலும், பெரும்பான்மைக்குப் போதிய பலம் ராஜபட்சவுக்கு கிடைக்கவில்லை. இதற்கு நடுவே, நாடாளுமன்றம் நவம்பர் 14-ஆம் தேதி கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அன்றைய தினமே ராஜபட்ச மீதான நம்பிக்கை வாக்கெடுப்பும் நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகின.
 அவ்வாறு வாக்கெடுப்பு நடக்கும்பட்சத்தில் ராஜபட்ச தோல்வியைத் தழுவுவது உறுதி எனக் கூறப்பட்டது. அத்தகைய நிலை ஏற்பட்டால், அது, சிறீசேனாவுக்கும், ராஜபட்சவுக்கும் பல்வேறு எதிர் விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
 அதைக் கருத்தில் கொண்டே இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்க தற்போது சிறீசேனா உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பதிலாக பொதுத் தேர்தலைச் சந்திப்பதுதான் சமயோஜித நடவடிக்கையாக இருக்கும் என சிறீசேனா தரப்பு கருதுவதாகத் தெரிகிறது. ஏனெனில், அண்மையில் அந்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ராஜபட்ச அணியினர் அளப்பரிய வெற்றியைப் பதிவு செய்தனர். இது, ஆளும் கூட்டணி அரசு மீது மக்கள் கொண்டிருக்கும் அதிருப்தியின் வெளிப்பாடாகவும், அந்நாட்டில் மீண்டும் ராஜபட்ச தலைமையில் ஆட்சியமைவதற்கான முன்னோட்டமாகவும் பார்க்கப்பட்டது.
 இந்தச் சூழலில்தான் அரசியல் அரங்கில் பரம எதிரிகளாக வலம் வந்த சிறீசேனாவும், ராஜபட்சவும் அண்மைக் காலமாக கரம் கோத்து செயல்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகவே அவர்கள் இருவரும் தேர்தலைச் சந்திக்க முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. கலைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் 2020 ஆகஸ்ட் வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 ஜனவரி 5-இல் பொதுத் தேர்தல்
 இலங்கையில் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு வெளியிடப்பட்ட அரசிதழில் இதுதொடர்பாக குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய நவம்பர் 19-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஜனவரி 5-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அந்த மாதம் 17-ஆம் தேதி புதிதாக அமையவுள்ள நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெறும் என்று அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com