இலங்கையில் நாடாளுமன்ற கலைப்பால் அரசியல் நெருக்கடி மேலும் அதிகரிக்கும்: அமெரிக்கா கவலை

இலங்கையில் நாடாளுமன்றத்தை கலைத்திருப்பதன் மூலம் அந்நாட்டில் அரசியல் நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என அமெரிக்கா கவலை


இலங்கையில் நாடாளுமன்றத்தை கலைத்திருப்பதன் மூலம் அந்நாட்டில் அரசியல் நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டு, புதிய பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதில் இருந்து இலங்கை அரசியலில் அனுதினமும் அதிரடி திருப்பங்களும், அரசியல் குழப்பமும் நீடித்து வந்த நிலையில், அவற்றில் உச்சமாக தற்போது நாடாளுமன்றமே கலைக்கப்பட்டிருப்பது உலக நாடுகளின் மொத்த கவனத்தையும் ஈர்க்கும் நிகழ்வாக அமைந்துள்ளது.

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவுக்கும், அதிபர் சிறீசேனாவுக்கும் அண்மைக் காலமாக கடுமையான கருத்து மோதல் இருந்து வந்தது. அதன் விளைவாக, அரசியல் அரங்கில் பரம எதிரிகளாக வலம் வந்த சிறீசேனாவும், ராஜபட்சவும் அண்மைக் காலமாக கரம் கோத்து பிரதமர் பதவியில் இருந்து ரணிலை நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் ராஜபட்சவை அப்பதவியில் நியமித்தார் சிறீசேனா. மேலும், நாடாளுமன்றத்தை நவம்பர் 16-ஆம் தேதி வரை முடக்கி வைக்கவும் அவர் உத்தரவிட்டார்.

பெரும்பான்மைக்குப் போதிய பலம் ராஜபட்சவுக்கு கிடைக்கவில்லை. இதற்கு நடுவே, நாடாளுமன்றம் நவம்பர் 14-ஆம் தேதி கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அன்றைய தினமே ராஜபட்ச மீதான நம்பிக்கை வாக்கெடுப்பும் நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகின.

 அவ்வாறு வாக்கெடுப்பு நடக்கும்பட்சத்தில் ராஜபட்ச தோல்வியைத் தழுவுவது உறுதி எனக் கூறப்பட்டது. அத்தகைய நிலை ஏற்பட்டால், அது, சிறீசேனாவுக்கும், ராஜபட்சவுக்கும் பல்வேறு எதிர் விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

 அதைக் கருத்தில் கொண்டே இலங்கை 2020 ஆகஸ்ட் வரை பதவிக் காலம் உள்ள நாடாளுமன்றத்தை கலைக்க தற்போது சிறீசேனா உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதால் அமெரிக்கா கவலை அடைந்துள்ளதாகவும், இந்த விவகாரம் அரசியல் நெருக்கடியை மேலும் அதிகரிக்கச் செய்யும் எனவும் தெரிவித்துள்ளது. 

 இலங்கையின் மிகச்சிறந்த கூட்டாளி நாடு என்ற அடிப்படையில், நாட்டின் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கு ஜனநாயக அமைப்புகள் மதிக்கப்படுவது அவசியம் என்று அமெரிக்கா கருதுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com