திறன்மிக்க வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே ஹெச்1பி விசா: விதிகளை மாற்றியமைக்க அமெரிக்கா திட்டம்

திறன்மிக்க வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே ஹெச்1பி விசா வழங்குவதை உறுதிபடுத்தும் வகையில் குடியுரிமை நடைமுறையில் சில திருத்தங்களை மேற்கொள்ள அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

திறன்மிக்க வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே ஹெச்1பி விசா வழங்குவதை உறுதிபடுத்தும் வகையில் குடியுரிமை நடைமுறையில் சில திருத்தங்களை மேற்கொள்ள அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தொழில்நுட்பப் படிப்புகளில் முனைவர் பட்டம் பெற்ற வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்குவதில் முன்னுரிமை அளிக்க டிரம்ப் நிர்வாகம் விரும்புவதாகவும் தெரிகிறது.
 இந்தத் தகவலை அமெரிக்க அரசின் தலைமையகமான வெள்ளை மாளிகையின் கொள்கை ஒருங்கிணைப்பு துறை துணைத் தலைவர் கிரிஸ் லிட்டெல் உறுபடுத்தியுள்ளார்.
 அமெரிக்க வங்கிகள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக மையங்கள், பயண ஏற்பாட்டு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் தகவல் - தொழில்நுட்பம் சார்ந்த பணிகள் ஒப்பந்த அடிப்படையில் வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன. அதன்படி குறிப்பிட்ட காலத்துக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் அப்பணிகளை அமெரிக்காவில் இருந்து மேற்கொள்கின்றன. அவ்வாறு ஒப்பந்த அடிப்படையில் தகவல் - தொழில்நுட்பப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களில் 70 சதவீதம் இந்தியாவைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
 இதன் மூலம், லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு அமெரிக்காவில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. அவர்கள் அனைவரும் ஹெச்1பி விசா பெற்று அதன் வாயிலாக அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். பெரும்பாலும் அத்தகைய விசாவை சம்பந்தப்பட்ட இந்திய நிறுவனங்களே தங்களது ஊழியர்களுக்கு பெற்றுத் தருகின்றன.
 இந்நிலையில், அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு ஹெச்1பி விசா நடைமுறையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும், அமெரிக்கர்களுக்கு பலனளிக்கும் வகையில் அது மாற்றியமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
 இதற்கு இந்தியா அதிருப்தி வெளிப்படுத்தியது. பல்வேறு தருணங்களில் அமெரிக்க ஆட்சியாளர்களுடன் இதுதொடர்பாக மத்திய அரசு பேச்சுவார்த்தையும் நடத்தியது.
 இதனால் அந்தக் கட்டுப்பாடுகள் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
 ஆனால், அதற்கு மாறாக ஹெச்1பி விசாவுக்கான புதிய கொள்கைகளுக்கு அமெரிக்க அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தது. அது உடனடியாக அமலுக்கு வந்ததை அடுத்து விசா பெறும் விதிகள் கடுமையாக்கப்பட்டன.
 இந்த நிலையில், அதில் மேலும் சில திருத்தங்களை மேற்கொள்ள அதிபர் டிரம்ப் விரும்புவதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக கிரிஸ் லிட்டெல் வாஷிங்டனில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கூறியதாவது:
 ஒப்பந்த அடிப்படையில் சில பணிகளை பிற நாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கும்போது திறன் குறைந்த ஊழியர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். இது மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்த விவகாரம் குறித்து பல்வேறு தருணங்களில் அதிபர் டிரம்ப் வெளிப்படையாகவே பேசியிருக்கிறார். படித்த திறன்மிக்க வெளிநாட்டவர்கள் மட்டுமே அமெரிக்காவில் தங்கி பணியாற்ற வேண்டும் என்பதை உறுதிபடுத்தப் போவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
 அதன் அடிப்படையில் குடியேற்ற விதிகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. திறன்வாய்ந்த பட்டதாரிகளுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் அவற்றை மேற்கொள்ள அமெரிக்க அரசு திட்டமிட்டு வருகிறது.
 இதுதொடர்பான புதிய கொள்கைகளையும், திட்டங்களையும், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு (யுஎஸ்சிஐஎஸ்) அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியிட வாய்ப்புள்ளது என்றார் அவர்.
 இதனிடையே, ஹெச்1பி விசா வழங்குவதற்கு தடங்கல் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் யுஎஸ்சிஐஎஸ் அமைப்பு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தகவல் - தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பான "கம்ப்பீட் அமெரிக்கா' குற்றம்சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் விதிகளுக்கு புறம்பாக அந்த அமைப்பு செயல்படுவதாகவும் புகார் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com