பேச்சுவார்த்தையை ரத்து செய்தது வட கொரியாதான்!

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ மற்றும் வட கொரிய உயரதிகாரிகளிடையே இந்த வாரம் நடக்கவிருந்த பேச்சுவார்த்தை ரத்தானதற்கு வட கொரியாதான் காரணம் என்று
பேச்சுவார்த்தையை ரத்து செய்தது வட கொரியாதான்!

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ மற்றும் வட கொரிய உயரதிகாரிகளிடையே இந்த வாரம் நடக்கவிருந்த பேச்சுவார்த்தை ரத்தானதற்கு வட கொரியாதான் காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
 இதுகுறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி கூறியதாவது:
 வட கொரியாவுடனான எங்களது பேச்சுவார்த்தைகளில், பெரிய அளவிலான எந்தப் பிரச்னையும் இல்லை. இந்த வாரம் நடைபெறுவதாக இருந்த வட கொரிய அதிகாரிகளுடனான பேச்சுவார்த்த ரத்தானது குறித்து அரசு வட்டாரங்களில் விசாரித்தேன்.
 அப்போது, அந்தப் பேச்சுவார்த்தைக்கு வட கொரியா தயாராக இல்லாத காரணத்தால்தான் அது ரத்து செய்யப்பட்டதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது.
 வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமைச்சர் பாம்பேயோ எப்போதும் தயாராக உள்ளார். டிரம்ப் தலைமையிலான அரசும் இத்தகைய பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்றார் அவர்.
 தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளை வட கொரியா கடந்த ஆண்டின் இறுதிவரை தொடர்ந்து நடத்தி வந்தது.
 இதனால், வட கொரியாவுக்கும், அமெரிக்க-தென் கொரிய கூட்டணிக்கும் இடையே கடும் பதற்றம் நிலவி வந்தது. இந்தச் சூழலில், தென் கொரியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் வட கொரியா பங்கேற்றதைத் தொடர்ந்து, இரு கொரிய நாடுகளுக்கும் இடையே பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் ஏற்பட்டது.
 அதன் தொடர்ச்சியாக, வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோரிடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்புகள் இரண்டு முறை நடைபெற்றது.
 இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பையும் கிம் ஜோங்-உன் சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
 அப்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்குவது உள்ளிட்ட 4 அம்ச தீர்மானத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
 எனினும், அந்த ஒப்பந்த அம்சங்ககளை நிறைவேற்றுவதில் வட கொரியா முனைப்பு காட்டவில்லை என்று அமெரிக்காவும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா மிரட்டல் பாணியை கையாள்வதாக வட கொரியாவும் ஒன்றின் மீது ஒன்று குற்றம் சாட்டி வந்ததால், இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்து வருகிறது. இந்தச் சூழலில், இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோவுக்கும், வட கொரிய உயரதிகாரிகளுக்கும் இந்த வாரம் நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்பட்டது.
 இதற்கு அமெரிக்காவே காரணம் என்று வட கொரியா கூறிய நிலையில், ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com