பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் பின்னடைவு: ரகுராம் ராஜன்

பண மதிப்பிழப்பு மற்றும் சரக்கு-சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) ஆகிய இரு நடவடிக்கைகளே, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் கடந்த ஆண்டு (2017) பின்னடைவு ஏற்பட்டதற்கு
பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் பின்னடைவு: ரகுராம் ராஜன்

பண மதிப்பிழப்பு மற்றும் சரக்கு-சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) ஆகிய இரு நடவடிக்கைகளே, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் கடந்த ஆண்டு (2017) பின்னடைவு ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
மேலும், தற்போது 7 சதவீதமாக இருக்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதமானது, தேசத்தின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியதாக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் பெர்க்லே நகரில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் "இந்தியாவின் எதிர்காலம்' என்ற தலைப்பில் அவர் உரையாற்றியதாவது:
கடந்த 2012 முதல் 2016 வரையிலான 4 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வேகமான வளர்ச்சியைக் கண்டது. ஆனால், அதன் பிறகு அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட "பண மதிப்பிழப்பு' மற்றும் "சரக்கு-சேவை வரி விதிப்பு' ஆகிய இரு நடவடிக்கைகள் இந்தியாவின் வளர்ச்சியில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தின.
உலக பொருளாதாரத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாக உள்ள இந்தியா, திறந்த நிலை பொருளாதாரத்தை கொண்டுள்ளது. அதனால், உலக பொருளாதாரம் வளர்ச்சியடைந்தால், இந்திய பொருளாதாரமும் அதிகமாக வளரும்.
ஆனால், 2017-ஆம் ஆண்டில் உலகளாவிய பொருளாதாரம் வளர்ந்து வந்த நிலையில், ஆச்சரியப்படும் வகையில் இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கையால் இந்தியா அந்த பின்னடைவைச் சந்தித்தது.
அவற்றின் தாக்கங்களில் இருந்து மீண்டு தற்போது வளர்ச்சிப் பாதையை நோக்கி இந்திய பொருளாதாரம் திரும்பியுள்ளது. எனினும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வானது, இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு நெருக்கடி ஏற்படுத்துவதாக உள்ளது. ஏனெனில், இந்தியா தனது எரிசக்தி தேவைகளுக்காக அதிகளவு எண்ணெயை இறக்குமதி செய்கிறது.
வளர்ச்சி வீதம் அதிகரிக்க வேண்டும்: கடந்த 25 ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம், ஆண்டுக்கு 7 சதவீதம் என்ற அளவில் இருந்து வருவது, மிக மிக பலம் வாய்ந்த வளர்ச்சியாகும்.
இதனால், இந்தியாவின் புதிய குறைந்தபட்ச பொருளாதார வளர்ச்சி வீதமானது, 3.5 சதவீதத்தில் இருந்து, 7 சதவீதமாக உயர்ந்துள்ளது. உண்மையில் இந்த 7 சதவீத வளர்ச்சியானது, இந்திய வேலைவாய்ப்பு சந்தையில், தேவையான அளவுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு போதுமானதாக இல்லை. அதை ஈடுகட்ட மாதம் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை இந்தியா உருவாக்க வேண்டும்.
எனவே, இந்தியா தனது பொருளாதார வளர்ச்சி வீதத்தின் அளவில் இத்துடன் திருப்தியடைந்து விடாமல், அதை இன்னும் அதிகரிக்க வேண்டும். பலம் வாய்ந்த வளர்ச்சியை அடையக் கூடிய ஆற்றலும், தகுதியும் இந்திய பொருளாதாரத்துக்கு உள்ளது.
தற்போதைய 7 சதவீத வளர்ச்சி வீதத்திலிருந்து சரிவைச் சந்தித்தால், தவறு செய்வதாக கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த வளர்ச்சி வீதத்திலேயே அடுத்த 10-15 ஆண்டுகளுக்கு பொருளாதாரம் வளர்ந்து வர வேண்டும்.
வாராக் கடன்: இந்தியாவில் வாராக் கடன் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டியது அத்தியாவசியமான ஒன்றாகும். அப்போது தான் வங்கிகள் தங்களை சரிவிலிருந்து மீட்டு, மீண்டும் சரியான பாதையில் பயணிக்க இயலும்.
வங்கிகளின் வாராக் கடன் பிரச்னையை பகுதியளவு தீர்ப்பதற்கே இந்தியாவுக்கு நீண்டகாலம் ஆகியுள்ளது. ஏனெனில், வாராக் கடன் பிரச்னையை கையாளுவதற்கு உகந்த உத்திகள் இந்திய வங்கித் துறையில் இல்லை.
வாராக் கடன் பிரச்னையிலிருந்து வங்கிகளை மீட்டெடுக்க திவால் சட்டம் ஒன்றே தீர்வாகாது. அந்தச் சவாலை எதிர்கொள்ள பல அணுகுமுறைகளை இந்தியா கையாள வேண்டும் என்று ரகுராம் ராஜன் பேசினார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் ரகுராம் ராஜன் இவ்வாறு கூறியுள்ளார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் 2 ஆண்டு நிறைவையொட்டி சமீபத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, அந்த நடவடிக்கையால் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்ததுடன், இந்தியா 5-ஆவது ஆண்டாக தனது பொருளாதார வளர்ச்சியை தக்க வைத்துள்ளதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மூன்று சிக்கல்கள்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு 3 பெரிய காரணிகள் சிக்கலை ஏற்படுத்துவதாக ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
• கட்டுமானத் துறையானது பொருளாதாரத்தின் தொடக்க நிலையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மோசமான அடிப்படை கட்டமைப்புகளை சீரமைத்தால்தான் வளர்ச்சி காண முடியும்.

• மின் உற்பத்தித் துறை முறையாகச் செயல்படுவதை உறுதி செய்ய குறுகியகால இலக்கு நிர்ணயிக்க வேண்டும். உற்பத்தி செய்யப்படும் மின்சாரமானது, தேவையுள்ள மக்களைச் சென்றடைகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

• வாராக் கடன், இந்திய வங்கித் துறையில் மிக முக்கியப் பிரச்னையாக உள்ளது. இதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும்.

"ஒரே இடத்தில் அதிகாரக் குவியல்'
இந்தியாவில் இருக்கும் பிரச்னைகளில் ஒன்று, அரசியல் முடிவுகள் மேற்கொள்ளும் அதிகாரமானது ஒரே மையத்தில் அளவுக்கதிகமாக குவிந்து கிடப்பதாகும் என்று ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஒரு நாட்டின் நிர்வாகத்தைப் பொருத்த வரையில், ஒரு அதிகார மையத்திலிருந்தே அனைத்து நடவடிக்கைகளையும், முடிவுகளையும் மேற்கொள்ள இயலாது. பணிச் சுமையை பலருடன் பகிர்ந்துகொள்ளும் வகையிலேயே இந்திய தேசம் இயங்கி வருகிறது.
ஆனால், இந்தியாவில் தற்போது இருக்கும் மத்திய அரசில், அதிகாரமானது ஒரே மையத்தில் அளவுக்கதிகமாக குவிந்து கிடக்கிறது. இதற்கு உதாரணமாக சமீபத்தில் இந்தியாவில் சர்தார் வல்லபபாய் படேல் சிலை திறக்கப்பட்டதை கூறலாம். அதுபோன்ற ஒரு திட்டத்துக்கு கூட பிரதமர் அலுவலகத்தின் அனுமதியைப் பெற வேண்டியிருந்தது.
பிரதமரின் ஒப்புதல் இல்லாமல் எவரும் முடிவெடுக்கத் தயாராக இல்லை. நாளொன்றுக்கு 18 மணி நேரம் உழைக்கக் கூடிய கடின உழைப்பாளியாக பிரதமர் உள்ளபோதும், இதுபோன்ற முடிவுகளில் தலையிடும் அளவுக்கு அவருக்கு நேரம் உள்ளது. இதேபோன்று, அவரின் தலையீடு அத்தியாவசியமாக இருக்கும் இதர விவகாரங்களிலும் அவர் விருப்பத்துடன் தலையிடுவாரா?
இது ஒரு பிரச்னை என்றால், பொதுத் துறையில் இருக்கும் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகார வர்க்கத்தினர் எந்தவொரு விவகாரத்திலும் ஒரு தொடக்கத்தை ஏற்படுத்த விருப்பமில்லாமல் இருப்பதும் இந்தியாவில் இருக்கும் மற்றொரு பிரச்னையாகும்.
இந்தியாவில் எப்போது ஊழல் தலையெடுத்ததோ, அப்போதே அதிகார வர்க்கம் பின்தங்கி விட்டது என்றும் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com