நாடாளுமன்றம் கலைப்பு சரியான நடவடிக்கையே: இலங்கை அதிபர் சிறீசேனா

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சரியான நடவடிக்கையே என்று அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா கூறியுள்ளார்.
நாடாளுமன்றம் கலைப்பு சரியான நடவடிக்கையே: இலங்கை அதிபர் சிறீசேனா

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சரியான நடவடிக்கையே என்று அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா கூறியுள்ளார்.
 இலங்கை அரசியலில் தினந்தோறும் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தை அதிபர் சிறீசேனா கடந்த வெள்ளிக்கிழமை இரவு கலைத்தார். மேலும், பொதுத் தேர்தல், வரும் ஜனவரி 5-ஆம் தேதி நடைபெறும் என்று அவர் அறிவித்தார். அவரது நடவடிக்கையை எதிர்க்கட்சிகளும், பல்வேறு சமூக நல அமைப்பினரும் விமர்சித்தனர்.
 இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்தது ஏன் என சிறீசேனா ஞாயிற்றுக்கிழமை விளக்கம் அளித்தார்.
 அப்போது அவர் கூறியதாவது:
 நாடாளுமன்றத்தை வரும் 14-ஆம் தேதி கூட்டினால், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இரு தரப்பு எம்.பி.க்களுக்கு இடையே மிகப்பெரிய அளவில் மோதல் வெடிக்கும் என்றும், அதன் தொடர்ச்சியாக, பட்டி தொட்டியெங்கும் வன்முறை வெடிக்கும் என்றும் தகவல்கள் கிடைத்தன.
 மறுபுறம், அணி மாறுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோடிக்கணக்கில் பேரம் பேசப்படுவதாகத் தகவல் கிடைத்தது.
 இது என்னை மிகவும் வருத்தமடையச் செய்தது. மேலும், நாடாளுமன்றத் தலைவர் கரு ஜெயசூரியாவின் செயல்பாடுகள் என்னை அதிருப்தியடையச் செய்தன.
 நான் எனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ராஜபட்சவை பிரதமராக நியமித்ததை அங்கீகரிக்கப்போவதில்லை என்று கரு ஜெயசூரியா கூறினார்.
 அதன்பிறகு, பதற்றம் உருவாவதை முன்கூட்டியே தடுப்பதற்காக, இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு முடிவெடுத்தேன் என்று சிறீசேனா கூறினார்.
 முன்னதாக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை அதிபர் சிறீசேனா பறித்து விட்டார் என்று இலங்கை நாடாளுமன்றத் தலைவர் கரு ஜெயசூரியா குற்றம்சாட்டினார்.
 சிறீசேனாவின் செயல்பாடுகளுக்கு தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வரும்அவர், இதுதொடர்பாக, ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியாதவது:
 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை அதிபர் சிறீசேனா பறித்து விட்டார். அவர் பிறப்பிக்கும் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை அரசு அலுவலர்கள் யாரும் செயல்படுத்தக் கூடாது என்றார் கரு ஜெயசூரியா.
 அவரது குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது குறித்து சிறீசேனா கருத்து தெரிவித்துள்ளார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com