மீண்டும் ஓர் நம்பிக்கை வாக்கெடுப்பு: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலங்கை அதிபர் சிறீசேனா வேண்டுகோள் 

மீண்டும் ஓர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா வேண்டுகோள் விடுத்துள்ளார். 
மீண்டும் ஓர் நம்பிக்கை வாக்கெடுப்பு: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலங்கை அதிபர் சிறீசேனா வேண்டுகோள் 

கொழும்பு: மீண்டும் ஓர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இலங்கை நாடாளுமன்றத்தில் முன்னெப்போதும் நிகழ்ந்திராத அளவுக்கு அரங்கேறிவரும் களேபரங்களால் அந்நாட்டின் ஜனநாயக சூழல் கவலைக்கிடமானது. பிரதமர் பதவியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் ராஜபட்சவை அப்பதவியில் சிறீசேனா நியமித்ததன் விளைவாகவே இத்தகைய நிகழ்வுகள் அங்கு நடைபெற்றன. 

அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும், நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் உத்தரவிட்டதும் புதிய பிரச்னைகளுக்கு வழிவகுத்தது. இதனிடையே, நாடாளுமன்ற கலைப்புக்கு இலங்கை உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததால், ராஜபட்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கடும் அமளிக்கு நடுவே அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இலங்கையில் பிரதமர் பதவியில் எவரும் இல்லை என்று நாடாளுமன்றத் தலைவர் கரு. ஜெயசூர்யா கடந்த வாரம் அறிவித்தார்.

அதன் பின்னர், அந்நாட்டு நாடாளுமன்றம் போர்க்களமானது. ஆளும் கட்சி தரப்புக்கும், ரணில் தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத் தலைவரின் இருக்கை ஆக்கிரமிக்கப்பட்டது. மிளகாய்ப் பொடி வீசப்பட்டதாலும், நாற்காலிகள் உடைக்கப்பட்டதாலும் அவையே கலவர பூமியாகக் காட்சியளித்தது. இதையடுத்து நாடாளுமன்றத்துக்குள் போலீஸாரை வரவழைத்த கரு. ஜெயசூர்யா நிலைமையைக் கட்டுப்படுத்த உத்தரவிட்டார். இத்தகைய சூழலில்தான் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அதிபர் சிறீசேனா அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை அக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.க்கள், அதிபரை நோக்கி பல்வேறு கேள்விகள் எழுப்பியதாகத் தெரிகிறது. ஆனால், அவை எதற்கும் சிறீசேனா முறையாக பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், அனைத்து கட்சிக் கூட்டம் தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் ஓர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கடந்த வாராம் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை நிராகரித்த சிறீசேனா, அந்த வாக்கெடுப்பின் போது சரியான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதால் அதை அரசியல் சட்ட விரோதம் என்று அறிவித்தார்.  

தற்போது அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பு என்பது தனிப்பட்ட முறையில் உறுப்பினர்களின் பெயரைச் சொல்லி வாக்குப்பதிவு அல்லது ஏதேனும் மின்ணணு எந்திரம் மூலம் வாக்குப்பதிவு ஆகிய முறைகளில் நடந்தால் மட்டுமே அதனை ஏற்றுக் கொண்டு முடிவெடுக்க இயலும். 

இதுதான் உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட முறையாகும்.          

இந்த அடிப்படையில்  மீண்டும் ஓர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com