இலங்கை நாடாளுமன்றத்தை நடத்த சிறப்புக் குழு: அரசியல் கட்சிகள் முடிவு

இலங்கையில் அரசியல் குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தை வழிநடத்துவதற்கு சிறப்புக் குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு இலங்கை அரசியல் கட்சிகள் அனைத்தும்
இலங்கை நாடாளுமன்றத்தை நடத்த சிறப்புக் குழு: அரசியல் கட்சிகள் முடிவு

இலங்கையில் அரசியல் குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தை வழிநடத்துவதற்கு சிறப்புக் குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு இலங்கை அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒப்புதல் அளித்துள்ளன.
அதன்படி விரைவில் அக்குழு அமைக்கப்படலாம் என்றும், அதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இடம்பெறலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜபட்ச பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் கீழ் இரு முறை குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், அந்த முடிவை ஏற்க அதிபர் சிறீசேனோவும், ராஜபட்சவும் மறுத்துவிட்டனர். மாறாக, வாக்குச் சீட்டு முறையிலோ அல்லது மின்னணு வாக்கு முறையிலோ வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் இதுதொடர்பாக திங்கள்கிழமை ஆலோசித்தன. அதில் சில முடிவுகளை அக்கட்சிகள் எடுத்ததாகத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து அந்நாட்டின் நாடாளுமன்றம், துணைத் தலைவர் அனந்த குமாரசிறீ தலைமையில் கூடியது. 
கடந்த வாரத்தில் கடுமையான களேபரமும், அமளியும் அவையில் அரங்கேறியதால், அத்தகைய நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க திங்கள்கிழமை பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.
நாடாளுமன்ற அலுவல்களை நடத்துவதற்கு சிறப்புக் குழுவை அமைப்பது தொடர்பாக அப்போது விவாதிக்கப்பட்டது. அதன் மீதான விவாதத்தில் பங்கேற்ற ராஜபட்ச அணி எம்.பி. மனோ கணேசன், "அவையில் தங்களுக்கே பெரும்பான்மை இருப்பதால் சிறப்புக் குழுவில் தங்களது கட்சியினரே அதிக அளவில் இடம்பெற வேண்டும்' என்றார்.
அதன் பிறகு பேசிய மக்கள் விடுதலை முன்னணி எம்.பி. அனுரா குமார திசநாயக, "ஆளும் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியபோது அவர்களது தரப்பைச் சேர்ந்தவர்கள் எப்படி அதிக எண்ணிக்கையில் சிறப்புக் குழுவில் இடம்பெற முடியும்?' என்று கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தை வரும் 23-ஆம் தேதி வரை துணைத் தலைவர் ஒத்திவைத்தார்.
முன்னதாக, அவையில் ராஜபட்ச பெரும்பான்மையை நிரூபிக்காததால், அவருக்கு எந்தவிதமான நிதியும் ஒதுக்கீடு செய்யக் கூடாது என வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.க்கள் சிறப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர். அதன் மீதான விவாதம் அடுத்த கூட்டத்தில் நடைபெறும் எனத் தெரிகிறது.
நாடாளுமன்றத் தலைவர் எச்சரிக்கை: இதனிடையே, கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக நாடாளுமன்றத் தலைவர் கரு. ஜெயசூர்யா எச்சரித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட எம்.பி.க்களிடம் இதுதொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை வாயிலாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி தரப்புக்கும், ரணில் தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. 
நாடாளுமன்றத் தலைவரின் இருக்கை ஆக்கிரமிக்கப்பட்டது. மிளகாய்ப் பொடி வீசப்பட்டதாலும், நாற்காலிகள் உடைக்கப்பட்டதாலும் நாடாளுமன்றமே கலவர பூமியாகக் காட்சியளித்தது. இதையடுத்து நாடாளுமன்றத்துக்குள் போலீஸாரை வரவழைத்த கரு. ஜெயசூர்யா நிலைமையைக் கட்டுப்படுத்த உத்தரவிட்டது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com