மும்பை தாக்குதல்: ஐ.நா. தடையை பாகிஸ்தான் அமல்படுத்த வேண்டும்

மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதிகளுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் விதிக்கப்பட்ட தடையை பாகிஸ்தான்

மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதிகளுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் விதிக்கப்பட்ட தடையை பாகிஸ்தான் அமல்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

மும்பையில் கடல்வழியாக ஊடுருவி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 160க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதில் அமெரிக்காவை சேர்ந்த 6 பேரும் அடங்குவர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-ஏ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த பயங்கரவாதிகளே காரணம் என்பது தெரிந்தது. 

அந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின்படி, மும்பை தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.

இந்நிலையில், மும்பை தாக்குதல் சம்பவத்தின் 10ஆவது ஆண்டு நினைவு தினம் இந்தியாவில் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் விதிக்கப்பட்ட தடையை பாகிஸ்தான் அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

மும்பை தாக்குதல் நடைபெற்று 10 ஆண்டுகளை கடந்துவிட்டன. ஆனால், அந்த தாக்குதலுக்கு திட்டமிட்ட நபர்கள், இதற்காக இன்னமும் தண்டிக்கப்படவில்லை. ஆதலால், இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து நாடுகளும், மும்பையில் அட்டூழியத்தில் ஈடுபட்ட லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதிகளுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்த தடையை அமல்படுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்துகிறது. குறிப்பாக, பாகிஸ்தான் இந்த தடையை அமல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறது. இத்தாக்குதலுக்கு காரணமான நபர்கள் நீதியின் முன்நிறுத்தப்படுவதை காண வேண்டும் என அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது.
மும்பை தாக்குதல் சம்பவத்தின் 10ஆவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படும் வேளையில், அமெரிக்க அரசு, அமெரிக்க மக்கள் சார்பில் இந்திய மக்களுக்கும், மும்பைவாசிகளுக்கும் எங்களது ஆதரவை தெரிவித்து கொள்கிறோம் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துப்பு கொடுத்தால் ரூ.35 கோடி வெகுமதி அறிவிப்பு: இதேபோல்,  மும்பை தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிய, நிதியுதவி செய்த, உறுதுணையாக இருந்தோரை கைது செய்யவோ அல்லது தண்டிக்கவோ உதவும் வகையில், அவர்கள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு சுமார் ரூ.35 கோடி (5 மில்லியன் டாலர்) வெகுமதி அளிக்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ்-ம் இருவாரங்களுக்கு முன்பு சந்தித்துப் பேசினர். அப்போது மும்பை தாக்குதல் குறித்து இருவரும் பேசியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதையடுத்து, அமெரிக்க அரசு வெகுமதி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பயங்கரவாதிகள் குறித்து தகவல் தெரிவிப்பதற்கு தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவையும் அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com