ஈரான், ரஷியாவுடனான இந்தியாவின் வர்த்தகத் தொடர்பை ஆய்வு செய்து வருகிறோம்: அமெரிக்கா

ஈரானுடனான எண்ணெய் வர்த்தகத்தை தொடரப் போவதாக இந்தியா முடிவு செய்திருக்கும் விவகாரத்தையும், ரஷியாவிடம் இருந்து அந்நாடு ஏவுகணைகளைக் கொள்முதல் செய்த விவகாரத்தையும்

ஈரானுடனான எண்ணெய் வர்த்தகத்தை தொடரப் போவதாக இந்தியா முடிவு செய்திருக்கும் விவகாரத்தையும், ரஷியாவிடம் இருந்து அந்நாடு ஏவுகணைகளைக் கொள்முதல் செய்த விவகாரத்தையும் மிகக் கவனமாக ஆய்வு செய்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹீத்தர் நெüவர்ட் தெரிவித்துள்ளார். இத்தகைய வர்த்தகத் தொடர்புகள் இந்தியாவுக்கு பயனளிக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
 அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து சர்வதேச அளவில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறார். அந்த வரிசையில் ரஷியா மீது அவரது தலைமையிலான அரசு அண்மையில் பொருளாதாரத் தடை விதித்தது.
 அதேபோன்று அணு ஆயுதங்களை வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டி ஈரான் மீதும் தடை விதித்தது. அவ்விரு நாடுகளுடனும் பிற நாடுகள் எந்த விதமான வர்த்தகத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் டிரம்ப் நிர்வாகம் அறிவுறுத்தியது. நவம்பர் 4-ஆம் தேதிக்குள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டது.
 இந்த நிலைப்பாட்டை தோழமை நாடுகளிடம் அமெரிக்கா வலியுறுத்தி வந்த நிலையில்தான் ரஷியாவுடனான ஏவுகணை கொள்முதல் ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டது. இது இந்திய - அமெரிக்க உறவில் சில சங்கடங்களை உருவாக்கக் கூடும் எனத் தெரிகிறது.
 இதற்கு நடுவே, ஈரானுடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்தையும் தொடர்ந்து மேற்கொள்ளப் போவதாக இந்தியா அறிவித்தது. இந்தியாவில் பெட்ரோலியத் தேவைகள் இருப்பதைக் கருத்தில் கொண்டு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவ்வாறு தெரிவித்தார்.
 இந்தச் சூழலில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த ஹீத்தர் நெüவர்டிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:
 ஈரானின் சட்ட விரோத நடவடிக்கைகளை உலக நாடுகள் அனைத்தும் உணர வேண்டும். கச்சா எண்ணெய் விற்பனை மூலம் அந்நாடு பெறும் வருமானம் எந்த விதமான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக, சமூக விரோத செயல்பாடுகளுக்கு அவை அளிக்கப்படுவதாகத் தெரிகிறது.
 அதன் அடிப்படையிலேயே ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. இது தொடர்பான விளக்கங்களையும், விவரங்களையும் தோழமை நாடுகளிடம் தெரிவித்து வருகிறோம். இந்தியாவைப் பொருத்தவரை கடந்த மாதம் நடைபெற்ற இரு நாட்டு அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையின்போதும் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
 ரஷியா மற்றும் ஈரானுடனான வர்த்தக நடவடிக்கைகளில் இந்தியா எடுத்திருக்கும் நிலைப்பாடு எந்த வகையில் பயனளிக்காது. அவற்றை மிகக் கவனமாக அமெரிக்கா ஆய்வுக்குட்படுத்தி வருகிறது என்றார் அவர்.
 இதனிடையே, ஈரான் விவகாரங்களுக்கான அமெரிக்க தூதர் இந்தியாவுக்கு விரைவில் வர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நவம்பர் 4-ஆம் தேதிக்குப் பிறகு ஈரானுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என்று இந்திய அரசிடம் நேரடியாக வலியுறுத்த அவர் வருகை தரவுள்ளதாகத் தெரிகிறது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com