பிரான்ஸில் ரஃபேல் விமான தயாரிப்பை பார்வையிட்டார் நிர்மலா சீதாராமன்!

பிரான்ஸ் நாட்டில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரஃபேல் போர் விமானங்களைத் தயாரிக்கும் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துக்குச் சென்று பார்வையிட்டார்.
பிரான்ஸில் ரஃபேல் விமான தயாரிப்பை பார்வையிட்டார் நிர்மலா சீதாராமன்!

பிரான்ஸ் நாட்டில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரஃபேல் போர் விமானங்களைத் தயாரிக்கும் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துக்குச் சென்று பார்வையிட்டார்.
 போர் விமானங்களின் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து அப்போது அவர் கேட்டறிந்தார். நிர்மலா சீதாராமனுக்கு அதுதொடர்பான விளக்கங்களை அளித்த டஸால்ட் ஏவியேஷன் நிறுவன அதிகாரிகள், போர் விமான தயாரிப்புப் பணிகள் தற்போது எந்த நிலையில் உள்ளன? என்பது குறித்தும் விவரித்தனர்.
 அதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் ஆலையையும், முக்கியப் பகுதிகளையும் அவர் சுற்றிப் பார்த்தார். அவருடன் இந்திய - ரஷிய அதிகாரிகள் இருந்தனர். 3 நாள் அரசு முறைப் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள நிர்மலா சீதாராமன், வியாழக்கிழமை பாரிஸýக்கு சென்றடைந்தார். அதன் பின்னர் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் ஃப்ளோரன்ஸ் பார்லியை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இரு அமைச்சர்களும் விரிவாகக் கலந்துரையாடினர்.
 பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் இரு நாடுகளுக்கும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது அவற்றில் பிரதான அம்சமாக இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதைத் தவிர, சர்வதேச விவகாரங்களில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் நிர்மலா சீதாராமன் மற்றும் ஃப்ளோரன்ஸ் பார்லி ஆகியோர் விவாதித்தனர். அதேபோன்று ராணுவ நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு நல்குவது தொடர்பாகவும் இருவரும் ஆலோசித்தனர்.
 இந்த நிலையில், பாரிஸின் அர்ஜென்டியுல் நகரில் அமைந்துள்ள டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துக்கு வெள்ளிக்கிழமை சென்ற நிர்மலா சீதாராமன், இந்தியாவுக்காக தயாராகும் போர் விமானங்களின் வடிவமைப்புப் பணிகளை பார்வையிட்டார். அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அந்த விமானங்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட உள்ளன.
 பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடி செலவில் வாங்க மத்திய பாஜக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதனிடையே, அதில் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும் அதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனிடையே, ரஃபேல் விமானங்களின் உதிரி பாகங்கள் தயாரிப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானதும் விமர்சனங்களுக்கு வித்திட்டது.
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com