பொருளாதார வளர்ச்சிக்கு பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தல்

நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது எனவும், பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராட நாடுகள் ஒத்துழைக்க வேண்டுமெனவும்
பொருளாதார வளர்ச்சிக்கு பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தல்

நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது எனவும், பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராட நாடுகள் ஒத்துழைக்க வேண்டுமெனவும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு(எஸ்.சி.ஓ.) நாடுகளுக்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.
 எஸ்.சி.ஓ. நாடுகளின் தலைவர்கள் இடையேயான கூட்டம், தஜிகிஸ்தான் நாட்டிலுள்ள துஷான்பி நகரில் வியாழக்கிழமை தொடங்கியது. அதில், இந்தியாவின் சார்பில் பங்கேற்றுள்ள சுஷ்மா பேசியதாவது:
 வணிகத்தொடர்பு: உலகமயமாக்கலின் மூலம் நாம் அனைவரும் பல்வேறு நலன்களைப் பெற்று வருகிறோம். எஸ்.சி.ஓ. நாடுகளுக்கிடையேயான வணிகத்தொடர்பை மேலும் அதிகரிக்க வேண்டும். இத்தொடர்பானது, உலக வர்த்தக நிறுவனத்தின் கொள்கைகளின் அடிப்படையில் அமைவது அவசியமாகும்.
 பயங்கரவாதத்துக்கு எதிராக ஒத்துழைப்பு: உலக அரங்கில் பயங்கரவாத நடவடிக்கைகள் எல்லை கடந்து வளர்ந்து கொண்டிருக்கின்றன. மேலும், நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இந்த விவகாரத்தில் பயங்கரவாதத்தை அழிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, அதற்கு எதிராகப் போராட அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
 பிராந்திய அமைதி: பிராந்திய அமைதிக்காக இந்தியா எப்பொழுதும் குரல் கொடுத்து வருகிறது. சமீபத்தில், அமைப்பிலுள்ள நாடுகள் அனைத்தும் இணைந்து, "அமைதி நடவடிக்கை 2018' யை வெற்றிகரமாக நடத்தி முடித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இது போன்ற நடவடிக்கைகளில், இந்தியா முதல் முறையாகப் பங்கேற்றது.
 அனைத்து நாட்டு ராணுவப்படைகளும் ஒன்றிணைந்து பணியாற்றியது மிகவும் பாராட்டுக்குரியதாகும். இது போன்ற பிராந்திய முயற்சிக்கான நடவடிக்கைகளில் அமைப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
 மேலும், உலக அமைதியை நிலைநாட்ட, ஆப்கானிஸ்தான் நாட்டுடன் எஸ்.சி.ஓ. அமைப்பு மேற்கொண்டுள்ள உடன்படிக்கை மிகவும் சிறப்புக்குரியதாகும். ஆப்கானிஸ்தான் நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு, அந்நாட்டுடன் இணைந்து பணியாற்ற இந்தியா மிகுந்த ஆர்வமாக உள்ளது.
 பிராந்திய தொடர்பு: எஸ்.சி.ஓ. நாடுகளுக்கிடையேயான தொடர்பை மேம்படுத்த இந்தியா உறுதி பூண்டுள்ளது. அதே வேளையில், அந்தப் பிராந்திய தொடர்பானது, தனிப்பட்ட நாடுகளின் இறையாண்மையைப் பாதிக்காத வகையிலும், பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்காத வகையிலும் அமைய வேண்டும்.
 மேலும், அத்தொடர்பானது ஆலோசனைகளின் அடிப்படையிலும், நம்பகத்தன்மையுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் அமைய வேண்டும்.
 அந்த வகையில், அமைப்பு நாடுகளின் ரயில்வே நிர்வாகத் தலைவர்களுக்கிடையே கடந்த மாதம், முதல் முறையாக நடைபெற்ற கூட்டமானது, பிராந்திய தொடர்புக்கான சிறந்த அடித்தளமாக அமைந்துள்ளது.
 பருவநிலை மாற்றம்: அதிகரித்து வரும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள, அமைப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக உள்ளது.
 மேலும், இந்தக் கூட்டமானது எஸ்.சி.ஓ. அமைப்பு நாடுகளின் குறிக்கோள்களைச் சரியான முறையில் செயல்படுத்த வழிவகை செய்துள்ளது என்று சுஷ்மா தெரிவித்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com