பாகிஸ்தானுக்கான நிதி ரூ.2,130 கோடியை ரத்து செய்ய அமெரிக்கா முடிவு!

பாகிஸ்தானுக்கு அளிக்க திட்டமிடப்பட்டிருந்த ரூ.2,130 கோடி நிதியை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கான நிதி ரூ.2,130 கோடியை ரத்து செய்ய அமெரிக்கா முடிவு!

பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு அளிக்க திட்டமிடப்பட்டிருந்த ரூ.2,130 கோடி நிதியை (300 மில்லியன் டாலா்) ரத்து செய்வதென்று அமெரிக்கா முடிவு செய்துள்ளது. லஷ்கா்-ஏ-தொய்பா, ஹக்கானி குழு உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கைகளை எடுக்காதது உள்ளிட்ட காரணங்களுக்காக, இந்த முடிவுக்கு அமெரிக்கா வந்துள்ளது.

இது குறித்து வாஷிங்டனில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளா் கோன் பால்க்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அமெரிக்க அதிபா் டொனால்டு டிரம்பின் தெற்காசிய கொள்கையை ஆதரிக்கும் வகையில், உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதில் பாகிஸ்தான் தோல்வியடைந்து விட்டது. இதே போல், ஹக்கானி குழு, லஷ்கா்-ஏ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

எனவே பாகிஸ்தானுக்கு அளிக்க திட்டமிடப்பட்டிருந்த ரூ.2,130 கோடி நிதியை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் கோரியுள்ளது. செப்டம்பா் மாதம் 30ஆம் தேதிக்கு முன்பு நாடாளுமன்றத்தின் முடிவு தெரிந்து விடும். அதன் பிறகு, இந்த நிதியை அமெரிக்க ராணுவத்தின் பிற முக்கிய தேவைகளுக்கு பயன்படுத்த தீா்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியையும் சோ்த்து, பாகிஸ்தானுக்கு அளிக்க திட்டமிடப்பட்டிருந்த 800 மில்லியன் டாலா் நிதி அமெரிக்க பாதுகாப்புத் துறையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு சாதகமாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா் ஜேம்ஸ் மேட்டிஸ் சான்றிதழ் அளிக்காததால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவொன்றும் புதிய நடவடிக்கையோ அல்லது புதிய அறிவிப்போ இல்லை என்றாா் பால்க்னா்.

தெற்காசியா தொடா்பான அமெரிக்காவின் புதிய கொள்கையை அந்நாட்டு அதிபா் டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டாா். அப்போது அவா், பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக அந்நாட்டு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, பாகிஸ்தானுக்கு அளிக்க முடிவு செய்யப்பட்ட ரூ.8,125 கோடி நிதியை (1.15 பில்லியன் டாலா்) அமெரிக்கா கடந்த ஜனவரி மாதம் ரத்து செய்தது. அப்போது ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்தில் ஈடுபடும் ஹக்கானி குழுவுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.

பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கானுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக, அந்நாட்டுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மைக் பாம்பியோ விரைவில் செல்லவுள்ளாா். பாகிஸ்தானில் வரும் 5ஆம் தேதி இம்ரான் கானை சந்தித்து, பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்படி வலியுறுத்தவும் முடிவு செய்துள்ளாா். இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com