ஜப்பானில் 25 ஆண்டுகளில் இல்லாத பெரும் புயல்: 200 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கிய 'ஜெபி'

ஜப்பான் நாட்டில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் புயல் செவ்வாய்கிழமை தாக்கியது. இந்த புயலுக்கு 'ஜெபி' என்று பெயரிடப்பட்டுள்ளது. 
ஜப்பானில் 25 ஆண்டுகளில் இல்லாத பெரும் புயல்: 200 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கிய 'ஜெபி'

ஜப்பான் நாட்டில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் புயல் செவ்வாய்கிழமை தாக்கியது. இதனால் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. இந்த புயலுக்கு 'ஜெபி' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த புயல் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு கன மழை மற்றும் பலத்த சூறைக்காற்று தொடரும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

முன்னதாக ஜப்பானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள டோகுஷிமா பகுதியில் செவ்வாய்கிழமை மதியம் 12 மணிக்கு புயல் ஏற்பட்டது. பின்னர் 2 மணியளவில் கோபே நகரத்தில் மீண்டும் தாக்கியது. தற்போது ஆனன் நகரத்தில் இப்புயலானது மையம் கொண்டுள்ளது. இந்த புயலின் தாக்கம் மையம் கொண்ட இடத்தில் இருந்து நகரத் தொடங்கியதால் புதன்கிழமை இரவு முதல் குறையும் என்று தெரிவிக்கப்பட்டது.  

இந்த ஜெபி புயல் மணிக்கு 217 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கி வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. கடல் பகுதியை நோக்கி புயல் நகர்ந்து வருகிறது. இருப்பினும் அதன்பிறகு மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் 500 மில்லிமீட்டர் அளவில் கனமழை மற்றும் சூறைக்காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டது. 

இதையடுத்து உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்குச் செல்லும் 800 விமானங்களும் உடனடியாக ரத்து செய்யப்பட்டன. நிப்பான் மற்றும் ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் 600 விமானங்களை ரத்து செய்தது. சாலைகள் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. 

ஒஸாகா, க்யோட்டோ, நாரா, ஹியோகோ, காகாவா, எஹிமி, வகயாமா, ஜிஃபூ, ஐசூ ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் என்று சுமார் 10 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அனைவரையும் பாதுகாப்பாக இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக ஜப்பான் அரசு செய்தித்தொடர்பாளர் யோஷிஹிடே சுகா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com