கிழக்கு ஜெருசலேம் மருத்துவமனைகளுக்கான நிதி உதவி நிறுத்தம்: டிரம்ப் அதிரடி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், கிழக்கு ஜெருசலேம் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் 2.5 கோடி டாலர் நிதி உதவியை ரத்து செய்வதாக சனிக்கிழமை அறிவித்தது.
கிழக்கு ஜெருசலேம் மருத்துவமனைகளுக்கான நிதி உதவி நிறுத்தம்: டிரம்ப் அதிரடி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், கிழக்கு ஜெருசலேம் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் 2.5 கோடி டாலர் நிதி உதவியை ரத்து செய்வதாக சனிக்கிழமை அறிவித்தது.
 இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 கிழக்கு ஜெருசலேம் பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு அமெரிக்கா சார்பில் வழங்கப்பட்ட நிதி உதவியை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை அமெரிக்க அதிபர் டிரம்ப் வழங்கியுள்ளார். புதிய முடிவின்படி நல திட்டத்தின் அடிப்படையில் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட 2.5 கோடி டாலர் நிதி உதவி இனி வழங்கப்படமாட்டாது. மாறாக அந்த நிதியை வேறு பகுதிகளில் உள்ள அதி முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. ஆனால் எந்தெந்த திட்டங்களுக்கு அந்த நிதியை பயன்படுத்துவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அமெரிக்காவின் இந்த செயலுக்கு பாலஸ்தீனம் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது: பாலஸ்தீனத்தை அரசியல் ரீதியில் மிரட்டி பணிய வைக்கும் முயற்சியாகவே அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என்றனர்.
 பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர் ஹனன் அஷ்ரவி கூறியதாவது: அமெரிக்காவின் இந்த மிரட்டல் போக்கு உறுதியற்ற தன்மைக்கும், கடும் தீங்கை விளைவிப்பதற்குமே வழிவகுக்கும். நிதி உதவி திடீரென நிறுத்தப்படுவதன் காரணமாக, மேற்கு கரை மற்றும் காஸா பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் அவரது குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படும். வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை அரசியல் ரீதியில் மிரட்டிப் பார்ப்பது மனித நாகரீகத்திற்கு எதிரான செயல் என்றார் அவர்.
 டெல் அவிவ் நகரிலிருந்த இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றுவதாக கடந்த மே மாதம் அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதற்கு பாலஸ்தீனர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பலை எழுந்தது. அப்போது முதலே பாலஸ்தீன-அமெரிக்க உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியது.
 அதன் தொடர்ச்சியா, அமெரிக்காவில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்போவதாக தெரிவித்து அதற்கேற்ற வகையில் பல அதிரடி நடவடிக்கைகளை டிரம்ப் எடுத்து வருகிறார். அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா-பாலஸ்தீனம் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவில் 20 கோடி டாலருக்கு அதிகமான நிதி உதவி குறைக்கப்பட்டது.
 அதற்கு அடுத்தபடியாக, பாலஸ்தீன அகதிகளுக்கு நிவாரண உதவிகளைச் செய்து வரும் ஐ.நா. பிரிவுக்கு அளிக்கப்பட்டு வந்த அனைத்து உதவிகளையும் நிறுத்துவதாக டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டது.
 அப்போது அதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹெதர் நாவெர்ட் கூறுகையில், பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. பிரிவு (யுஎன்ஆர்டபிள்யூஏ) அமைப்பிடமிருந்து உதவி பெறுவோர் வரைமுறையோ, முடிவோ இல்லாமல் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர். அந்த அமைப்பு செயல்படும் விதமோ, அது நிதியைக் கையாளும் விதமோ சரி செய்ய முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
 எனவே, யுன்ஆர்டபிள்யூஏ-வின் செயல்பாடுகளை நன்கு ஆய்வு செய்த பிறகே அந்த அமைப்புக்கு இனி உதவிகள் எதையும் வழங்கப்போவதில்லை என்ற முடிவுக்கு அமெரிக்க அரசு வந்துள்ளது.
 அந்த அமைப்பின் தோல்வியினால் அப்பாவி பாலஸ்தீனர்கள், குறிப்பாக பள்ளிக் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து அமெரிக்கா மிகுந்த கவலை கொண்டுள்ளது. யுஎன்ஆர்டபிள்யூஏ-வின் முக்கிய உறுப்பு நாடுகள், பிராந்திய நாடுகள், உதவியளிக்கும் நாடுகளும் அமைப்பில் சீர்திருத்தத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சியை மேற்கொள்ளவில்லை. பாலஸ்தீனச் சிறுவர்கள் எங்கு வசித்தாலும், அவர்களுக்கு பேரிடர் கால அடிப்படையில் உதவிகள் அளிக்கப்படுவதைவிட மிகச் சிறந்த முறையில் உதவிகள் அளிக்கப்பட வேண்டும். இதற்காக, அமைப்பின் உறுப்பு நாடுகள், உதவியளிக்கும் நாடுகளுடன் இணைந்து புதிய செயல் முறைகளையும், அணுகு முறைகளையும் உருவாக்க அமெரிக்கா பாடுபடும் என்று தெரிவித்திருந்தார்.
 பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. உதவி அமைப்புக்கு பெரும்பான்மை உதவிகளை அளித்து வந்த அமெரிக்கா, திடீரென உதவிகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது அந்த அமைப்பை சிக்கலில் தள்ளியுள்ளதாகக் கூறப்படுகிறது.
 இந்த சூழலில், தற்போது அமெரிக்கா, கிழக்கு ஜெருசலேம் மருத்துவமனைகளுக்கான நிதி உதவிகளையும் நிறுத்தியுள்ளது பாலஸ்தீன மக்களிடையே கவலையை அதிகரித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com