பாகிஸ்தான் புதிய அதிபராக பதவியேற்றார் ஆரிஃப் அல்வி

பாகிஸ்தானின் 13-ஆவது புதிய அதிபராக ஆளும் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியைச் சேர்ந்த ஆரிஃப் அல்வி (69) ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
பாகிஸ்தான் புதிய அதிபராக பதவியேற்றார் ஆரிஃப் அல்வி

பாகிஸ்தானின் 13-ஆவது புதிய அதிபராக ஆளும் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியைச் சேர்ந்த ஆரிஃப் அல்வி (69) ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
 பாகிஸ்தானுக்கான புதிய அதிபர் பதவியேற்பு விழா அதிபர் மாளிகையில் எளிமையான முறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி சாகிப் நிஸார் கலந்து கொண்டு ஆரிஃப் அல்விக்கு புதிய அதிபராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, அவர் அந்த நாட்டின் 13-ஆவது அதிபராக பதவி வகிக்க உள்ளார்.
 அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் இம்ரான் கான், ராணுவ தலைமை தளபதி கமர் ஜாவீத் பஜ்வா, அரசியல் தலைவர்கள், ராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 பிரபல பல் மருத்துவரான ஆரிஃப் அல்வி, ஆளும் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிட்டு தேர்வானதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் கடந்த புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
 பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படும் ஆரிஃப், கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே அதில் முக்கியப் பங்காற்றி வருகிறார். முன்னதாக, பாகிஸ்தான் அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 இதில், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி சார்பில் ஆரிஃப் அல்வி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் சார்பில் மெüலானா பாஸில் உர் ரஹ்மான், பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் அய்ஸாஸ் ஆஷன் ஆகியோருக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவியது.
 இதில், ஆரிஃப் அல்வி வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் பதிவான 430 வாக்குகளில், அல்விக்கு 212 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ரஹ்மானுக்கு 131 வாக்குகளும், ஆஷனுக்கு 81 வாக்குகளும் கிடைத்தன. 6 வாக்குகள் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com