ரோஹிங்கயா விவகாரத்தை இன்னும் சிறப்பாகக் கையாண்டிருக்கலாம்: ஆங் சான் சூகி ஒப்புதல்

மியான்மரில் ரோஹிங்கயா விவகாரம் இன்னும் சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கலாம் என்று அந்த நாட்டு அரசின் தலைவர் ஆங் சான் சூகி ஒப்புக்கொண்டுள்ளார்.
மியான்மர் தலைநகர் ஹனோயில் வியாழக்கிழமை நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில், பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் ஆங் சான் சூகி.
மியான்மர் தலைநகர் ஹனோயில் வியாழக்கிழமை நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில், பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் ஆங் சான் சூகி.


மியான்மரில் ரோஹிங்கயா விவகாரம் இன்னும் சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கலாம் என்று அந்த நாட்டு அரசின் தலைவர் ஆங் சான் சூகி ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து, தலைநகர் ஹனோயில் வியாழக்கிழமை நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில், பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
மியான்மரில், ரோஹிங்கயா படையினருக்கு எதிராக ராணுவம் நடவடிக்கை மேற்கொண்ட விவகாரம் இன்னும் சிறப்பாக கையாளப்பட்டிருக்கலாம் என்றே கருதுகிறேன்.
இதுதொடர்பான தெளிவான சிந்தனை எதுவும் இல்லாவிட்டாலும், ஏதோ ஒரு வகையில் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருப்பதற்கான வழிவகைகள் இருக்கும் என்பது எனது எண்ணம்.
எனினும், ரோஹிங்கயாக்கள் விவகாரத்தை ஒருதலைப்பட்சமாக அணுகக் கூடாது. இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரது நியாயங்களையும் செவிமடுக்க வேண்டும்.
மியான்மரின் சட்டதிட்டங்களை அனைவரும் மதித்து நடக்க வேண்டும். இதில் விதிவிலக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை.
வன்முறை காரணமாக வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள அகதிகளை மீண்டும் ஏற்பதற்கு தயாராகி வருகிறோம்.
எனினும், இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கிடையே எழும் வேறுபாடுகளால் ரோஹிங்கயா அகதிகள் திரும்ப வருவதில் இழுபறி நீடித்து வருகிறது என்றார் அவர்.
பெளத்த மதத்தினரை பெரும்பான்மையாகக் கொண்ட மியான்மரில், லட்சக் கணக்கான ரோஹிங்கயா முஸ்லிம் இன மக்கள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர்.
வங்க மொழி பேசி வரும் அவர்கள், ராக்கைன் மாகாணத்தில் பல தலைமுறைகளாக வசித்து வந்தாலும், அவர்கள் வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறிவர்களாகவே கருதப்பட்டு வருகின்றனர்.
கடந்த 1982-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி, ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது. 
2014-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில்கூட ரோஹிங்கயா முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டனர்.
இத்தகைய சூழலில், தங்களது உரிமைகளுக்காக ரோஹிங்கயா முஸ்லிம்களில் சிலர் மியான்மர் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடத் தொடங்கினர். 
மொழி மற்றும் மத உணர்வு காரணமாக, ரோஹிங்கயா விடுதலைப் படையினருக்கு வங்கதேசம் ஆதரவு அளித்து வருவதாக மியான்மர் அரசு குற்றம் சாட்டி வருகிறது.
இந்தச் சூழலில், 30-க்கும் மேற்பட்ட காவல் சாவடிகளில் ரோஹிங்கயா விடுதலைப் படையினர் கடந்த ஆண்டு நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்களில் 71 பேர் உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி ராக்கைன் மாகாணத்தில் ராணுவம் தனது தாக்குதல் நடவடிக்கையைத் தொடங்கியது.
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் ரோஹிங்கயா விடுதலைப் படையினருக்கு எதிராக மட்டுமே அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக மியான்மர் ராணுவம் தெரிவித்தாலும், அது கனக் கச்சிதமான இன அழிப்பு' நடவடிக்கை என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்தது.
அந்த நடவடிக்கைகளில் 400 பேர் உயிரிழந்ததாக மியான்மர் அரசு கூறியது. எனினும், இதில் 730 சிறுவர்கள் உள்பட 6,700 ரோஹிங்கயா இனத்தவர்கள் பலியானதாக எல்லைகள் அற்ற மருத்துவர்கள்' அமைப்பு தெரிவித்தது. 
செய்தியாளர்களுக்கு சிறைத் தண்டனை நியாயமே'


மியான்மரில் வேவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு ராய்ட்டர்ஸ்' செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது நியாயமானது என்று ஆங் சான் சூகி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அந்த இரு செய்தியாளர்களுக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு, அந்தக் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட பிறகே தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மியான்மரில் ராய்ட்டர்' நிறுவனத்துக்காகப் பணியாற்றும் வா லோன் (32), கியா சோ வூ (28) ஆகிய இருவரும் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர். மியான்மரின் ரகசியப் பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிராகச் செயல்பட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. 
இதற்கு, சர்வதேச அளவில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மியாமன்ரில் சிறுபான்மை ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து செய்திகள் வெளியிடப்படுவதைத் தடுப்பதற்காக இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில், அந்த இருவருக்கும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் கடந்த 3-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com