பயங்கரவாதத்தை "நல்லது', "கெட்டது' என பாகுபடுத்துவது தீவிரமான அச்சுறுத்தல்: வெங்கய்ய நாயுடு

பயங்கரவாதத்தை "நல்லது', "கெட்டது' என பாகுபடுத்துவது தீவிரமான அச்சுறுத்தல் என்றும், ஒருங்கிணைந்த சர்வதேச நடவடிக்கையின் மூலமாக அந்த அச்சுறுத்தலை தோற்கடிக்க இயலும் எனவும்
பயங்கரவாதத்தை "நல்லது', "கெட்டது' என பாகுபடுத்துவது தீவிரமான அச்சுறுத்தல்: வெங்கய்ய நாயுடு

பயங்கரவாதத்தை "நல்லது', "கெட்டது' என பாகுபடுத்துவது தீவிரமான அச்சுறுத்தல் என்றும், ஒருங்கிணைந்த சர்வதேச நடவடிக்கையின் மூலமாக அந்த அச்சுறுத்தலை தோற்கடிக்க இயலும் எனவும் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
 செர்பியா சென்றுள்ள வெங்கய்ய நாயுடு, அந்நாட்டு அதிபர் அலெக்ஸாண்டர் வியூசிச் உடனான சந்திப்புக்குப் பிறகு, இவ்வாறு கூறினார். முன்னதாக, இரு தலைவர்கள் சந்திப்பின்போது, தாவர பாதுகாப்பு மற்றும் வான்போக்குவரத்து சேவைகள் ஆகிய துறைகளில் இந்தியா-செர்பியா ஒத்துழைப்பு நல்குவது தொடர்பான இரு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
 மத்திய ஐரோப்பிய நாடான செர்பியாவுக்கு வெள்ளிக்கிழமை சென்றடைந்த வெங்கய்ய நாயுடுவுக்கு, அங்குள்ள அரண்மனையில் அலெக்ஸாண்டர் வரவேற்பளித்தார். பின்னர், இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர்.
 அப்போது தாவரங்களை பாதுகாத்தல் (நோய்கள் மற்றும் பூச்சிகளிடம் இருந்து) மற்றும் வான்போக்குவரத்து சேவை ஆகிய துறைகளில் ஒத்துழைப்பது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
 இதனிடையே, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் கூறப்பட்டிருந்ததாவது:
 குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு-செர்பிய அதிபர் அலெக்ஸாண்டர் வியூசிச் ஆகியோர் தலைமையிலான குழுக்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. உணவு உற்பத்தி, வேளாண்மை, மருந்துகள், பாதுகாப்பு, சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்பது குறித்து அப்போது கலந்தாலோசிக்கப்பட்டது.
 அத்துடன், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தகத் தொடர்புகளை வலுப்படுத்துவது தொடர்பான வழிமுறைகள் குறித்து இரு தலைவர்களும் கலந்தாலோசித்தனர் என்று அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது.
 இதனிடையே, செர்பிய அதிபருடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
 இன்றைய உலகில் பயங்கரவாதமானது "நல்லது', "கெட்டது' என பாகுபடுத்தப்படுகிறது. இது மிகத் தீவிரமான அச்சுறுத்தலாகும். ஒருங்கிணைந்த சர்வதேச நடவடிக்கையின் மூலமாக அந்த அச்சுறுத்தலை தோற்கடிக்க இயலும். அதற்கென, கடந்த 1996-ஆம் ஆண்டு இந்தியாவால் கொண்டுவரப்பட்ட சர்வதேச பயங்கரவாத தடுப்பு தீர்மான வரைவை இறுதி செய்வது விரைவுபடுத்தப்பட வேண்டும்.
 பொது மருந்துகள் உற்பத்தியில் இந்தியா உலகளவில் முக்கியப் பங்கு வகிக்கிறது. புதிய அறிவுசார் சொத்து காப்புரிமை (ஐபிஆர்) கொள்கையின் மூலமாக, உலகிலேயே மிகப்பெரிய மருந்து உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக உருவெடுக்கும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளது. யோகா, ஆயுர்வேதம், ஹோமியோபதி உள்ளிட்ட இந்திய கலாசாரங்கள் மீதான செர்பியாவின் ஆர்வத்தை பாராட்டுகிறோம்.
 வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. "இந்தியாவில் தயாரிப்போம்', "பொலிவுறு நகரங்கள்' "டிஜிட்டல் இந்தியா' ஆகிய திட்டங்கள் மூலமாக செர்பிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்று வெங்கய்ய நாயுடு பேசினார்.
 முன்னதாக, வெங்கய்ய நாயுடுவுக்கு வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியின்போது, இந்தியா-செர்பியா இடையேயான ராஜ்ஜீய உறவுகள் 70 ஆண்டுகளை எட்டியது நினைவுகூரப்பட்டது. அப்போது, இந்தியாவின் சுவாமி விவேகானந்தர், செர்பியாவின் ஆராய்ச்சியாளர் நிகோலா டெஸ்லா ஆகியோரின் அஞ்சல் தலை ஒன்றாக வெளியிடப்படும் என்று செர்பிய அதிபர் அலெக்ஸாண்டர் வியூசிச் கூறினார்.
 வரவேற்பு நிகழ்ச்சியை அடுத்து பெல்கிரேடில் வசிக்கும் இந்திய சமூகத்தினரை சந்தித்து உரையாடிய வெங்கய்ய நாயுடு, இந்தியாவின் வளர்ச்சியில் அங்கம் வகிக்குமாறு அவர்களுக்கு வலியுறுத்தினார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com