சிரியாவில் சுட்டு வீழ்த்தப்பட்டது ரஷிய ராணுவ விமானம்: இஸ்ரேல் மீது ரஷியா குற்றச்சாட்டு

சிரியாவில் ரஷியாவுக்குச் சொந்தமான ராணுவ கண்காணிப்பு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில், அதிலிருந்த 15 பேர் உயிரிழந்தனர்
இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் அவிக்டார் லைபர்மேனுடன் ரஷிய பாதுகாப்பு துறை அமைச்சர் செர்கெய் ஷோய்கு.
இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் அவிக்டார் லைபர்மேனுடன் ரஷிய பாதுகாப்பு துறை அமைச்சர் செர்கெய் ஷோய்கு.


சிரியாவில் ரஷியாவுக்குச் சொந்தமான ராணுவ கண்காணிப்பு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில், அதிலிருந்த 15 பேர் உயிரிழந்தனர்.
சிரியா அரசுப் படையின் ஏவுகணையால் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தாலும், இந்தச் சம்பவத்துக்கு இஸ்ரேல் விமானங்களின் செயல்பாடே காரணம் என்று ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து ரஷியப் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் இகோர் கொனஷென்கோவ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிரியாவையொட்டிய மத்தியதரைக் கடல் வான் பகுதியில் பறந்து கொண்டிருந்த ரஷியாவின் இல்-20' ரக கண்காணிப்பு விமானம் திங்கள்கிழமை சுட்டு வீழ்த்தப்பட்டது.
சிரியாவின் வான் பாதுகாப்புத் தளவாடத்திலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை மூலம், அந்த விமானம் வீழ்த்தப்பட்டது.
இதனால், மத்தியதரைக் கடலில் அந்த விமானம் விழுந்து நொறுங்கி, அதில் இருந்த 15 பேரும் உயிரிழந்தனர். சிரியாவில் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த இஸ்ரேல் விமானங்களுக்கும், சிரியா வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் இடையே சிக்கிக் கொண்ட காரணத்தினாலேயே ரஷிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
ரஷியக் கண்காணிப்பு விமானத்தை ஒரு கேடயமாகப் பயன்படுத்தி, இஸ்ரேல் விமானங்கள் செயல்பட்டன.
அந்தப் பகுதிகளில் நடவடிக்கை மேற்கொள்வது குறித்த முன்னறிவிப்பை குறித்த நேரத்தில் இஸ்ரேல் விமானங்கள் மேற்கொள்ளவில்லை. தங்களது தாக்குதல் நடவடிக்கை குறித்து ஒரு நிமிடத்துக்கு முன்னர்தான் இஸ்ரேல் விமானங்கள் எச்சரிக்கை விடுத்தன. அதற்குள் அந்தப் பகுதியிலிருந்து விலகிச் செல்ல ரஷியக் கண்காணிப்பு விமானத்துக்கு நேரம் இருக்கவில்லை.
எனவே, இஸ்ரேல் விமானங்களைக் குறிவைத்த சிரியா ஏவுகணை, தவறுதலாக ரஷிய விமானத்தை வீழ்த்தின.
விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட கடல் பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் அவர்.
சம்பவம் நடந்த மத்தியதரைக் கடல் பகுதியில் விமானத்தின் பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், சில பாகங்களும், உடல்களும் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல்தான் முழு பொறுப்பு': இதற்கிடையே, ரஷிய கண்காணிப்பு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு இஸ்ரேல்தான் முழு பொறுப்பு என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் அவிக்டார் லைபர்மேனிடம் ரஷியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கெய் ஷோய்கு கூறியதாக ரஷிய அரசுத் தொலைக்காட்சி தெரிவித்தது.
ரஷியாவின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து கருத்து கூற, இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சகமும், வெளியுறவுத் துறை அமைச்சகமும் மறுத்துவிட்டது.

கரணம்தப்பினால்...


சிரியாவைச் சுற்றியுள்ள வான் பகுதியில் செயல்பட்டு வரும் தங்களது விமானங்களுக்கிடையே, தவறான புரிதல் காரணமாக மோதல் வந்து விடக் கூடாது என்பதில் ரஷியாவும், இஸ்ரேலும் மிகக் கவனமாக செயல்பட்டு வருகின்றன.
இதற்காகவே இரு நாடுகளுக்கும் இடையே தனி தொலைபேசித் தொடர்பு பல ஆண்டுகளாகவே செயல்பாட்டில் உள்ளது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளின் ஒருங்கமைப்பு வெற்றிகரமாகச் செயல்படுவது குறித்து இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் பல முறை பாராட்டிப் பேசியுள்ளனர்.
சிரியாவைப் பொருத்தவரை, அந்த நாட்டில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா நீண்ட காலம் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது. இந்த நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டில் அதிபர் அல்-அஸாதின் படைகளுக்கு ஆதரவாக ரஷியாவும் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது.
மேலும், சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள துருக்கியக் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக, துருக்கியும் அந்தப் பகுதியில் தனது படையினரை நிறுத்தியுள்ளதுடன், அந்தப் படையினருக்கு ஆதரவாக தனது விமானங்களையும் ஈடுபடுத்தி வருகிறது.
இஸ்ரேலைப் பொருத்தவரை அது சிரியா விவகாரத்தில் அஸ்-அஸாதுக்கோ, கிளர்ச்சியாளர்கள் அல்லது பயங்கரவாதிகளுக்கோ ஆதரவான நிலையை எடுக்காமல் நடுநிலை வகிக்கிறது. 
எனினும், சிரியாவில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக ஈரான் படைகள் செயல்படுவதை இஸ்ரேல் மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறது.
அதன் காரணமாக, சிரியாவிலுள்ள ஈரான் நிலைகள் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல் நடத்தி வருகிறது.
இவ்வாறு வெவ்வேறு காரணங்களுக்காக அமெரிக்கா, ரஷியா, இஸ்ரேல், துருக்கி போன்ற பல்வேறு நாடுகளின் விமானங்கள் செயல்பட்டு வருவதால், சிரியா வான் பகுதி கரணம் தப்பினால் கூட பெரிய இழப்புகளையும், மோதல்களையும் ஏற்படுத்தக் கூடிய அபாயம் நிறைந்த பகுதியாக விளங்கி வருகிறது.
தற்போது ரஷிய ராணுவ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது, அந்த அபாயத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com