சிறையிலிருந்து நவாஸ் ஷெரீஃப் விடுதலை

பனாமா ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அவரது மகள் மற்றும் மருமகனை விடுவிக்க இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம்
மகள் மரியமுடன் நவாஸ் ஷெரீஃப் (கோப்புப் படம்).
மகள் மரியமுடன் நவாஸ் ஷெரீஃப் (கோப்புப் படம்).


பனாமா ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அவரது மகள் மற்றும் மருமகனை விடுவிக்க இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. இந்த உத்தரவு வெளியான சில மணி நேரத்திலேயே மூவரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
நவாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இதுகுறித்து நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளதாவது:
சிறைத் தண்டனை குறித்து நவாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்கிறது.
மேலும், அந்த மனுவை முழுமையாக விசாரித்து முடிவெடுக்கப்படும் வரை, நவாஸ் ஷெரீஃப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் முகமது சஃப்தார் ஆகியோருக்கு ஊழல் தடுப்பு நீதிமன்றம் வழங்கிய சிறைத் தண்டனைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன.
எனவே, அவர்கள் மூவரையும் ரூ.5 லட்சம் பிணைத் தொகையின் பேரில் விடுவிக்கிறோம் என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நவாஸ், தனது கட்சியினரை சந்தித்தார். அப்போது, நான் எந்தத் தவறும் செய்யவில்லை. எனது மனசாட்சிப்படி நான் திருப்தியாக இருக்கிறேன்' என்று அவர் கூறியதாக கட்சியினர் தெரிவித்தனர். ராவல்பிண்டி அடியாலா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நவாஸ், மரியம், முகமது சஃப்தார் ஆகிய மூவரும் சிறப்பு விமானம் மூலம் லாகூர் செல்வதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 2015-ஆம் ஆண்டில் பனாமா ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது ஊழல் புகார் எழுந்தது. அவரும், அவரது குடும்பத்தினரும் முறைகேடாக சேர்த்த பணத்தை ரகசியமாக வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், நவாஸ் ஷெரீஃப் மீதான பனாமா ஆவணக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, அவரை தகுதி நீக்கம் செய்தது. அதையடுத்து, அவர் பிரதமர் பதவியிலிருந்தும், ஆளும் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் விலகினார்.
அதையடுத்து, பனாமா முறைகேடு தொடர்பாக பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது உறவினர்கள் மீது தனித் தனியாக 3 வழக்குகள் நடைபெற்று வந்தன.
அவற்றில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள அவென்ஃபீல்டு அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கியது தொடர்பான வழக்கில் நவாஸ் ஷெரீஃபுக்கு கடந்த ஜூலை மாதம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், அவரது மகள் மரியம் நவாஸுக்கு 7 ஆண்டுகளும், மருமகன் முகமது சஃப்தாருக்கு ஓராண்டும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அதையடுத்து, அந்த மூவரும் கைது செய்யப்பட்டு ராவல்பிண்டியிலுள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டர்.
இந்தச் சூழலில், நவாஸ், மரியம், சஃப்தார் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனையை எதிர்த்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்றுதான், தற்போது அந்த மூவரையும் விடுவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com