Dinamani - கோயில்கள் - https://www.dinamani.com/religion/religion-temples/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3113713 ஆன்மிகம் கோயில்கள் திருமண தடை நீக்கும் தைலாவரம் ஸ்ரீகல்யாண ஆஞ்சநேயர் திருக்கோயில் Friday, March 15, 2019 09:53 AM +0530
இது  மிகச் சிறப்பு வாய்ந்த ஒரு ஆலயம். கட்டை பிரம்மசாரியான ஆஞ்சநேயர் கல்யாண ஆஞ்சநேயர் ஆன கதை தெரிந்து கொள்வோமா?

வானிலே பறந்துசெல்லும் வல்லமை படைத்த அனுமன், அளப்பரிய ஆற்றல்கொண்ட சூரியதேவனிடம் கல்வி கற்க விரும்பினான். சூரிய பகவானும், அனுமன் வருங்காலத்தில் மக்களின் துன்பங்களைப் போக்கும் சக்தி கொண்டவன் என்பதையறிந்து, அனுமனை சீடனாக ஏற்றுக்கொண்டு ஒரு நிபந்தனையையும் விதித்தார்.

தனது தேரின் ஓட்டத்தை எக்காரணத்தைக் கொண்டும் ஒரு கணம்கூட நிறுத்த இயலாது என்றும், அனுமனது முகத்தைப் பார்த்துதான் தன்னால் உபதேசிக்க இயலும் என்றும் சொன்னார்.

அந்த நிபந்தனைக்கு உடன்பட்டு, சூரிய பகவானைப் பார்த்தபடி தேரின் ஓட்டத்திற்கேற்ப பின்புறமாக ஓடிக்கொண்டே கல்வி பயின்றான் அனுமன்.

தன் மாணவன் பின்னோக்கி ஓடி சிரமப்படுகிறானே என்று பரிதாபப்பட்டாலும், தன் தேரோட்டத்தை நிறுத்தினால் உலகமே ஸ்தம்பித்து கோடிக்கணக்கான உயிர்கள் துன்பப்படுமே என்ற கவலையும் சூரியன் மனதில் எழுந்தது.

ஒருசமயம்…கற்புக்கரசியான நளாயினியின் கணவன், ஒரு முனிவர் சொன்ன அறிவுரைகளைக் கேட்காமல் தாசி வீடு சென்று உல்லாசமாக இருந்தார். கோபம்கொண்ட முனிவர், “நாளை சூரியன் உதிக்கும்போது நீ காலமாகக் கடவாய்” என்று சபித்துவிட்டார்.

 

இதையறிந்த நளாயினி, சூரியன் உதித்தால்தானே என் கணவர் மரணமடைவார் என்று, “சூரிய பகவானே, நாளை நீ உதிக்காதே” என்று ஆகாயத்தைப் பார்த்துக் கட்டளையிட்டாள். பதிவிரதையின் கட்டளைக்குக் கட்டுப்பட்டார் சூரியன்.

ஓயாது ஓடிக்கொண்டிருந்த சூரிய ரதம் ஒரே ஒருநாள் நின்றது. பூலோகம் செயலற்றுப் போனது.

ஜீவன்கள் துன்பப்பட்டன. உடனே தேவர்கள், நளாயினியை சமாதானப்படுத்தினர். சாபம் கொடுத்த முனிவரும் தன் சாபத்தை மாற்றிக்கொண்டு கானகம் சென்றார்.

இவ்வாறு சூரியனின் ரதம் நின்றதும் பல நிகழ்வுகள் நடந்தன.

சூரியனின் தேரோட்டியான அருணன், வெகுநாட்களாக தேவலோகம் சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளைக் காண விருப்பம் கொண்டிருந்தான். இந்த ஒருநாள் விடுமுறையை அதற்குப் பயன்படுத்திக்கொள்ள எண்ணினான்.

அதே உருவத்தில் இந்திர லோகத்திற்கு சென்றால் அனுமதி கிடைக்காது என்பதை அறிந்திருந்த அருணன், அழகான அப்சரக்கன்னி வடிவெடுத்து இந்திரலோகம் சென்றான். அங்கே காவலர்கள் அவனைத் தடுத்தார்கள்.

“நான் மேனகையின் தோழியான அருணாதேவி. மேனகைக்கு ஒப்பனை செய்பவள். இன்று அவசரத்தில் சரியாக ஒப்பனை செய்யவில்லை. அதனால் முகம் களையிழந்துவிடும்” என்று காவலர்களைப் பார்த்து புன்னகைத்தாள் அருணாதேவி.

அவளது புன்னகையில் மயங்கிய காவலர்கள், “இவள் மேனகையைவிட மிக அழகாக இருக்கிறாளே’ என்று அவளது அழகை ரசித்தபடி உள்ளே செல்ல அனுமதித்தனர்.

அங்கே மேனகையின் நடனத்தை ரசித்துக்கொண்டிருந்த இந்திரன், சபையினுள்ளே வந்தமர்ந்த அருணாதேவியைக் கண்டு, அவள் அழகில் நிலை குலைந்தான்.

 

நடனம் முடிந்ததும் எல்லாரும் சென்றுவிட, அருணாதேவியைப் போக விடாமல் அவள் முன்வந்து நின்றான். பெண்களை வசப்படுத்தும் கலையில் நிபுணனான இந்திரன், அவளைக் கட்டியணைத்தான். அதன் விளைவாக அழகான குழந்தை ஒன்று பிறந்தது.

(தேவலோகத்தில் இனக்கவர்ச்சிக்குக் கட்டுப்பட்டால் பத்து மாத கர்ப்பம் இல்லை.)

“மேனகையின் நடனத்தைக் காணும் ஆவலில் இங்கே வந்தேன். உண்மையில் நான் பெண்ணல்ல. சூரிய தேவனின் தேரோட்டியான அருணன். அழகிய பெண் வடிவில் வந்தது இப்போது வினையாகிவிட்டது. நாளை மீண்டும் நான் ஆணாகி தேரோட்டும் பணியைத் தொடரவேண்டும். அப்போது இது தாயில்லாத குழந்தையாகிவிடுமே. என் செய்வேன்?” என்று வருந்தினான் பெண்ணாக இருந்த அருணன்.

அதற்கு இந்திரன், “கவலைப்படாதே அருணாதேவி. இந்தக் குழந்தையை அகல்யாதேவியிடம் ஒப்படைத்துவிடு. அவள் வளர்த்துக்கொள்வாள்” என்று ஆலோசனை கூறினான்.

அதன்படியே அகல்யாதேவியிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு அருணாதேவி மீண்டும் அருணனாக மாறி சூரியலோகம் வந்தடைந்தான்.

மறுநாள் தேர் ஓட்டுவதற்கு வந்தான் அருணன். அவன் முகத்தில் ஏதோ கவலை சூழ்ந்திருப்பதைக் கண்ட சூரிய பகவான், “எங்கே நேற்று முழுவதும் உன்னைக் காணவில்லை?” என்று கனிவுடன் கேட்டார்.

அருணன், வெட்கத்துடன் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் சொன்னான்.

“அப்படியா?” என்று வியந்த சூரியன், “நீ எடுத்த பெண் உருவத்தை நான் காணவேண்டுமே” என்று சொல்ல, வேறு வழியின்றி அருணன் மீண்டும் அருணாதேவியாக மாறினான்.

அவளது அழகில் மயங்கிய சூரியன் அருணாதேவியை நெருங்கி ஆலிங்கனம் செய்தார்.

இப்போது இன்னொரு குழந்தை அங்கே அழ ஆரம்பித்தது.

மீண்டும் ஆணாக மாறிய அருணன் சூரியனிடம், “தேவனே, இந்திரனும் நீங்களும் உணர்ச்சிவசப்பட்டதால், இப்பொழுது இரண்டு தாயில்லாத குழந்தைகள் அவதரித்துவிட்டன. இந்தக் குழந்தையையும் அகல்யா தேவியிடம் ஒப்படைத்துவிடுகிறேன்” என்று சொல்லி, அப்படியே ஒப்படைத்தான்.

கௌதம ரிஷியின் மனைவியான அகல்யா, இரு குழந்தைகளையும் வளர்த்துவந்தாள். இந்த நிலையில், அகல்யாதேவி தவம் மேற்கொள்ள விரும்பினாள்.

இந்திரனுக்கும் சூரியனுக்கும் மகனாக அவதரித்த பிள்ளைகளால் தன் மனைவியின் தவம் கெட்டுவிடக்கூடாது என்றெண்ணிய கௌதம ரிஷி, அதற்கு என்ன செய்வதென்று யோசித்தார்.

வனத்தில், குரங்கு முகமுடைய வனராஜன் ஒருவன் மகப்பேறுக்காக ஒற்றைக்காலில் நின்று நெடுங்காலம் தவம் செய்வதை அறிந்த கௌதம ரிஷி, அந்த இரு குழந்தைகளின் முகங்களையும் வானரவடிவத்தில் மாற்றி அவன்முன் சமர்ப்பித்தார். குழந்தைகள் அழும் குரலைக் கேட்டு தவம் கலைந்த வனராஜன், தன்னைப்போல முகம் கொண்ட இரு குழந்தைகளைக் கண்டு, இறைவன் கொடுத்த வரம் என்று அன்புடன் அரவணைத்து எடுத்துச் சென்றான்.

அந்த இரு குழந்தைகளும் கிஷ்கிந்தை என்ற கானகத்தில் வளர்ந்தன.

இந்திரனின் புதல்வன்தான் வாலி. சூரியனின் மகன்தான் சுக்ரீவன்.

ராமகாவியத்தில் இந்த இருவரும் சிறப்பான இடத்தைப் பெறுகிறார்கள்.

 

“அனுமனே! நீ என் மகன் சுக்ரீவனுக்கு என்றென்றும் துணையாக இருக்கவேண்டும். உன் ஞானம், பராக்கிரமம் அனைத்தும் அவனுக்கே பயன்படவேண்டும். இதுவே நான் எதிர்பார்க்கும் குருதட்சணை” என்று சூரியன் சொல்ல, அதை மனமார ஏற்றுக்கொண்டான் அனுமன்.

கல்வி, இசை, கலை, வேதங்கள் என அனைத்தையும் அனுமனுக்குக் கற்றுத்தந்தார் சூரியன்.

அனைத்தையும் கற்றுணர்ந்த அனுமன் “நவவியாகரண பண்டிதன்‘ என்ற பட்டமும் பெற விரும்பினான். ஆனால், ஒரு குறிப்பிட்ட வியாகரணத்தைக் கற்கவேண்டுமானால் குடும்பஸ்தனாக இருக்கவேண்டும் என்பது நியதி. ஆகவே, அனுமன் மணம் புரியவேண்டும்.

சூரியதேவன், நவவியாகரணத்தை முழுவதும் கற்றுக் கொடுக்க விரும்பினார். அதற்காக தன் மகள் சுவர்ச்சலாதேவியை தன் மாணவனுக்குத் திருமணம் முடித்துவைத்தார் என்கிறது சூரியபுராணம்.

பிரம்மச்சாரி என்று பெரும்பாலோர் போற்றும் அனுமனின் திருமணக்கோலத்தை, சென்னை- செங்கல்பட்டு சாலையில், தைலாவரம் என்னும் திருத்தலத்திலுள்ள ஸ்ரீகல்யாண ஆஞ்சனேயர் கோவிலில் தரிசிக்கலாம். இங்கு மூலவராக சுமார் எட்டடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீஜெயவீர ஆஞ்சனேயர் எழுந்தருளியுள்ளார். இதே கோவிலில் தனிச்சந்நிதியில் உற்சவராக சுவர்ச்சலாதேவியுடன் பத்மபீடத்தில் தரிசனம் தருகிறார் ஸ்ரீகல்யாண ஆஞ்சனேயர். நான்கு கரங்களுடன் சங்கு, சக்கரம் ஏந்திய திருக்கோலத்தில், சுவர்ச்சலா சமேத சதுர்புஜ சுபமங்களவரத ஆஞ்சனேயர் என்ற திருநாமத்தில் பக்தர்கள் வேண்டுவதை அளித்து மகிழ்விக்கிறார்.

ஆக, அனுமனுக்கு குருவான சூரியனே மாமனாராகவும் ஆனார் என்கிறது சூரியபுராணம்.

 

சென்னை தாம்பரத்தை அடுத்து, செங்கல்பட்டு செல்லும் சாலையில் உள்ளது கூடுவாஞ்சேரி. இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில், எஸ்.ஆர்.எம். கல்லூரி அருகில் உள்ளது ஸ்ரீகல்யாண ஆஞ்சநேயர் திருக்கோயில். கடந்த 99-ஆம் வருடம், சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலின் ஸ்தாபகரான ரமணி அண்ணாவால், மூலவரான ஸ்ரீஜெயவீர ஆஞ்சநேயரின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஆலயம் அமைக்கப்பட்டதாம்!

பிறகு, 2004-இல், ஸ்ரீகல்யாண ஆஞ்சநேயரின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தசகோடி ஸ்ரீராமநாம மணித்தூண், ஸ்ரீஜெயவீர ஆஞ்சநேய ஸ்வாமி ராமநாம ஜப மண்டபம் ஆகியவை அமைக்கப்பட்டு, ஸத்குரு ஸ்ரீநாமானந்தகிரி சுவாமி முன்னிலையில் ஸம்ப்ரோக்ஷணம் நடந்தது.

பத்மபீடத்தில் நின்ற திருக்கோலம்; இடது கையை இடுப்பில் வைத்திருக்க, வலது கையில் கதை வைத்த நிலையில் காட்சி தருகிறார் ஸ்ரீஜெயவீர ஆஞ்சநேயர். மூலவரான இவர் இந்தக் கோலத்தில் தரிசனம் தர... உற்ஸவர் சதுர்புஜங்களுடன் சங்கு, சக்கரம், கதையுடனும், அருகில் தன் தேவியும் சூரிய புத்திரியுமான ஸ்ரீஸூவர்ச்சலாதேவியுடனும் அற்புதமாகக் காட்சி தருகிறார்! இவரின் திருநாமம்... கல்யாண ஆஞ்சநேயர்!

 

சனிக்கிழமைகளில் சென்னை, தாம்பரம் முதலான பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து அனுமனை தரிசித்து வாழ்வில் வளம் பல பெறுகின்றனர் என்கிறார் அர்ச்சகர் முரளி இந்த ஆலயத்துக்கு வந்து ஸ்ரீஸூவர்ச்சலா தேவியுடன் காட்சி தரும் ஸ்ரீகல்யாண ஆஞ்சநேயருக்கு வடைமாலை சார்த்தி வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் கூட விரைவில் நடந்தேறி விடும் என்கிறார்கள் பக்தர்கள்!

ரகேஸ் TUT - 7904612352

]]>
https://www.dinamani.com/religion/religion-temples/2019/mar/14/திருமண-தடை-நீக்கும்-தைலாவரம்-ஸ்ரீகல்யாண-ஆஞ்சநேயர்-திருக்கோயில்-3113713.html
3081081 ஆன்மிகம் கோயில்கள் திருமழிசை ஆழ்வாரின் வரலாறு தெரியுமா உங்களுக்கு..?  பூ. சேஷாத்ரி Tuesday, January 22, 2019 01:01 PM +0530 பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய இவர் தை மாதம் மக நட்சத்திரத்தில் திருமாலின் ஆயுதங்களுள் ஒன்றான சக்கரத்தின் அம்சமாக சென்னையை அடுத்துள்ள திருமழிசை என்னும் ஊரில் அவதரித்தவர்.

இவரின் காலம் 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி அல்லது பிற்பகுதியாக இருக்கலாம் என கணிக்கிறார்கள்.

பார்க்கவர் என்னும் முனிவர் திருமழிசையில் யாகம் புரிகையில் அவர் மனைவியார் கருவுற்று பின் கை, கால் முதலிய உறுப்புகள் இல்லாத ஒரு பிண்டத்தைப் பெற்றெடுத்தார். தம்பதியர் மனம் தளர்ந்து அதனைப் பிரம்புத்தூற்றின் கீழ் விட்டுச் சென்றனர். ஆண்டவன் அருளால் அப்பிண்டம் எல்லா உறுப்புகளும் அமையப் பெற்ற ஓர் அழகிய ஆண் குழந்தையாகி அழத் தொடங்கியது. அப்போது அந்த வழியே வந்த மகப்பேறு இல்லாத தம்பதியரான பிரம்புத் தொழில் புரியும் திருவாளன் - பங்கயச்செல்வி, குழந்தையை கண்டெடுத்து வளர்க்க தீர்மானித்தனர். என்ன ஆச்சரியம், அக்குழந்தையை அவளே பெற்றாள் என்னும்படி அவள் மார்பில் பால் சுரந்தது. ஆயினும் அப்பாலை குழந்தை குடிக்க மறுத்தது. பலநாள் வரை பால் உண்ணாமல் இருந்தும் உடல் சிறிதும் வாடவில்லை. இவரின் புகழைக் கேள்வியுற்று அருகில் உள்ள சிற்றூரில் இருந்து வந்த வயதான தம்பதியர் அன்புமிக கொடுத்த பாலை உண்ண ஆரம்பித்தார். 

சிறிதுகாலம் இவ்வாறு செல்கையில் தமக்கு பால் கொண்டுவந்து தரும் இத்தம்பதிக்கு ஏதேனும் கைமாறு செய்யும் பொருட்டு ஒருநாள் தனக்கு கொடுத்த பாலில் மீதத்தை அவர்கள் சரிபாதி உண்ணுமாறு செய்தார். இதன் மூலம் இளமை மீண்ட அத்தம்பதிகளுக்கு பிறந்த ஆண் குழந்தையே பின்னாளில் கணிகண்ணன் எனும் பெயரில் திருமழிசை ஆழ்வாருக்கு சீடரானார்.

நான்முகன் திருவந்தாதி என்னும் நூறு வெண்பாக்கள் கொண்ட நூலையும் திருச்சந்த விருத்தம் என்னும் 120 விருத்தங்களைக் கொண்ட நூலையும் இயற்றியுள்ளார். இவை இவர் கும்பகோணத்தில் யோகத்தில் ஆழ்ந்திருக்கும் காலத்தில் யோகத்தின் பயனாக வெளிவந்தன. இவை நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் முறையே மூன்றாவதாயிரத்திலும், முதலாயிரத்திலும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவருடைய பிரபந்தங்கள் தான் முதன்முதலில் வேறு தெய்வங்களுக்கு மேலாக திருமாலை உயர்வாகச் சொல்லியவை. இவருக்கு முன்தோன்றியவர்கள் சமரசப்பான்மையுடன் சிவனையும் உயர்வாகச் சொல்லி இருக்கிறார்கள்.

இளமையிலேயே பரஞான முதிர்ச்சி பெற்றுப் பரமயோகியாக விளங்கியவர். உண்மைத் தத்துவம் என்னவென்று அறிய முயன்று சாக்கியம், சமணம், சைவம், நாத்திகம்(வேத மறுப்பு) உட்பட ஒவ்வொரு சமயமாகப் புகுந்து ஆராய்ந்தார். சைவசமயத்தைச் சார்ந்திருக்கும்போதுதான் திருமயிலையில் பேயாழ்வாரை ஆசிரியராகப் பெற்றார். பக்தியில் தலை சிறந்தவராக இவர் விளங்கியதால் பக்திசாரர் என பெயரைப் பெற்றார்.

திருவெஃகா தலத்தில் (காஞ்சிபுரம் என்னும் க்ஷேத்திரத்தில்) கணிகண்ணனோடு திருமழிசையார் சிறிதுகாலம் தங்கி, திருவெஃகாவில் குடிகொண்டுள்ள இறையாகிய யதோத்காரிக்கு கைங்கரியம் செய்துவரலானார்கள். அவ்வாறிருக்கையில் அவர்களின் குடிலை தினமும் தூய்மைசெய்துவரும் கைம்மாறு கருதாத வயது முதிர்ந்த பெண்ணையழைத்து ஆசியளிக்க விரும்பினார் ஆழ்வார். வேண்டுவன கேள் என ஆழ்வார் கேட்க, வயது முதிர்வால் ஏற்பட்ட இயலாமையையும் அதனால் தன்னுடைய சேவை முழுமையடையாமல் இருப்பதையும் கூற என்றும் இளமையாக இருக்கும்படி வரம் நல்கினார் ஆழ்வார்.

யவனமும், ஈடில்லா எழிலும் பெற்ற அப்பெண்ணை கச்சிப்பதியில் அரசுபுரிந்த பல்லவராயன் எனும் அரசன் விரும்பி மணம்புரிந்தான். பன்னாட்கள் கழிந்தும் மாறாத தன் மனையாளின் யவனத்தின் காரணம் வினவ, அப்பெண் ஆழ்வாரின் புகழை எடுத்துரைத்தாள். அரசன் ஆழ்வாரின் சீடரான கணிகண்ணனிடம் தன் விருப்பத்தை சொல்ல, ஆழ்வார் ஒருநாளும் அரசனின் இவ்வற்ப ஆசைக்கு அருளமாட்டார் என்று பதிலளிக்க, குறைந்தபட்சம் தன்னை ஏற்றிக் கவிதையாவது பாடுமாறு கணிகண்ணனை வேண்ட "அவர் நாராயணனையன்றி எந்த நரனையும் பாடேன்" எனக் கூறி திருமாலைப்பாடினார். கோபமுற்ற அரசன் கணிகண்ணனை நகரைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டான். யாவும் கேள்வியுற்ற அவருடைய குரவர் திருமழிசைப்பிரான், 'உம்முடன் நானும் வருவேன்' என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் கச்சிப்பதிக்கோவிலுக்குச்சென்று ஆண்டவனை நோக்கி,

கனிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டா - துணிவுடைய
செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப்பாய்சுருட்டிக்கொள்

என்று விண்ணப்பம் செய்தார். அப்பெருமானும் அப்படியே செய்து திருமழிசைப்பிரானைத் தொடர்ந்து சென்றார். இதை மறுநாள் அறிந்த அரசன் வருத்தமுற்று கணிகண்ணனைத் தேடிச்சென்று அவரையும் அவர் குரவரையும் கச்சிப்பதிக்குத் திரும்பும்படி வேண்டிக் கொண்டனர். கணிகண்ணன் திருமழிசைப் பிரானை வேண்ட அவரும் ஆண்டவனை நோக்கி

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் - துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்படுத்துக்கொள்.

என்று வேண்ட திருமகள்நாதனும் அவ்வண்ணமே செய்தான் என்பது வரலாறு. அவ்வாறு அவர்கள் ஒருநாள் தங்கியிருந்த இடம் ஓர் இரவு இருக்கை என்று அழைக்கப்பட்டு இன்று மருவி ஓரிக்கை என அழைக்கப்பட்டு வருகிறது.

இவருக்கு பக்திசாரர், உறையில் இடாதவர் - வாளினை உறையில் இடாத வீரன் எனும் பொருள்பட (இங்கு ஆழ்வாரின் நா வாள் எனப்படுகிறது), குடமூக்கிற் பகவர் -  யாப்பருங்கல விருத்திகாரர் குறிப்பது இவரையே என்றும் சொல்லப்படுகிறது, திருமழிசையார், திருமழிசைபிரான் என பல நாமங்கள் உண்டு.

திருமழிசை ஆழ்வாருடைய திருநட்சத்திரம் வரும் புதன்கிழமை 23.1.19 அன்று இரவு அவர் அவதரித்த இடத்தில் - தோட்டத்தில் - அவர் அவதரித்த சென்னையை அடுத்த திருமழிசையில் நாம சங்கீர்த்தன கோஷ்டிகள் புடைசூழ நாம சங்கீர்த்தனத்துடன் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

]]>
https://www.dinamani.com/religion/religion-temples/2019/jan/22/திருமழிசை-ஆழ்வாரின்-வரலாறு-தெரியுமா-உங்களுக்கு-3081081.html
2737 ஆன்மிகம் கோயில்கள் அம்மனுக்கு உகந்த ஆடி! டாக்டர் வெங்கடாசலம் Thursday, July 28, 2016 12:56 PM +0530 தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடி மாதத்திற்கென்று தனிச் சிறப்பு உண்டு. பெண் தெய்வங்களின் போற்றுதலுக்குரிய மாதமாக ஆடி மாதம் விளங்குகிறது.

அன்னை காமாட்சி தேவி, பரமசிவனை நோக்கித் தவமிருந்து, ஈசனை அடையும் பேறு பெற்ற மாதம் இம்மாதம்தான். தேவியின் திருவுருவங்களில் ஒன்றான வாராஹி தேவியைச் சிறப்பிக்கும் நோக்குடன் வாராஹி நவராத்திரி இம்மாதத்தில்தான் கொண்டாடப்படுகிறது. தைரியத்தையும், வெற்றியையும் அருள்பவள் வாராஹி தேவி.

ஆடி மாதத்தில் எல்லா மாரியம்மன் கோயில்களிலும் திருவிழாக்கள் விமர்சையாக நடைபெறும்.

ஆடி மாதம், வளர்பிறை, துவாதசி தொடங்கி, கார்த்திகை மாத வளர்பிறை, துவாதசி வரை துளசி அம்மனை வழிபட நீண்ட ஆயுளும், ஆரோக்யமும் கிடைக்கும். வளமான வாழ்க்கை அமையும்.

ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரம் ஆடிப்பூரம் என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பூமாதேவியை ஆண்டாளாக அவதாரம் செய்த தினம் ஆடிப்பூர நன்னாள். ஆடி மாதம் சூரியன், கடக ராசியான சந்திரன் வீட்டிலும், சந்திரன் சூரியனின் ராசியான சிம்மத்திலும் பரிவர்த்தனை பெற்றிருந்த சமயத்தில், நள வருடம், சுக்ல பட்சம், சதுர்த்தசி பூர நட்சத்திரம் கூடிய சனிக் கிழமையன்று துளசி மாடத்தினருகில் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவள் ஆண்டாள். கண்ணனையே காதலித்து ஸ்ரீரங்கத்தில் அவர் திருக்கரங்களைப் பற்றி திருமாலுடன் இரண்டறக் கலந்தவள்.

ஆடிப்பூரத் திருவிழா ஆண்டாள் அவதரித்த திருவில்லிப்புதூரிலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலும், மற்றும் பல திருமால் ஆலயங்களிலும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. உலக மாதாவாகிய பார்வதி தேவி ருதுவான தினமாகவும் இந்நாள் கருதப்படுகிறது. அன்னையை விரதமிருந்து தரிசித்தால் அஷ்டமா சித்திகளும் கைகூடும் உன்னத நாளிது.

ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி: இம்மாதத்தில் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் மிகவும் விசேஷமானவை. அன்றைய தினங்களில், இல்லத்தின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களைப் பாடுவார்கள். பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை நிவேதனம் செய்வார்கள். பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்கு ரவிக்கை, தாம்பூலம், வளையல், குங்குமச் சிமிழ், சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள் போன்றவற்றைக் கொடுத்து சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும்.

ஆடி வெள்ளியில் வரும் வரலட்சுமி விரதம் சிறப்பான மகாலட்சுமி பூஜையாகும். வீட்டிற்கு மகாலட்சுமியை வரவேற்று, பூஜை செய்து உபசரித்தால் மகாலட்மியின் அருட்கடாட்சம் கிடைக்கும். இந்தக் கிழமைகளில் ஆலயங்களில் குத்து விளக்கு பூஜை நடைபெறும். நாகதேவதைக்கு பால் தெளித்து விசேஷ பூஜை செய்வார்கள்.

ஆடி செவ்வாயன்று தலை குளித்து அம்மனை வழிபட திருமாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். இதுதவிர ஆடி செவ்வாயில் ஒளவையாருக்கு மேற்கொள்ளும் நோன்பு குறிப்பிடத் தக்கது. இந்த ஒளவை நோன்பை கடைபிடிப்பதால் விரைவில் திருமணம் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்.

]]>
https://www.dinamani.com/religion/religion-temples/2016/jul/28/அம்மனுக்கு-உகந்த-ஆடி-2737.html
2730 ஆன்மிகம் கோயில்கள் பெரிய நத்தம் துலுக்கானத்தம்மன் கோயிலில் தீமிதி விழா dn Thursday, July 28, 2016 12:27 PM +0530 கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரிய நத்தத்தில் உள்ள துலுக்கானத்தம்மன் கோயில் தீமிதி விழா அண்மையில் நடைபெற்றது.

பெரியநத்தம் துலுக்கானத்தம்மன் கோயிலில் ஆடி மாத தீமிதித் திருவிழாவையொட்டி, ஜூலை 15-ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து கடந்த 22-ஆம் தேதி, காப்புக் கட்டிய பக்தர்களின் கரக வீதி உலா நிகழ்வு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மகா கணபதி ஹோமம் நடைபெற்றது.
மாலையில் விரதம் இருந்த பக்தர்களுக்கு நாவேல் அணிவிக்கப்பட்டது. பின்னர் 150 பக்தர்கள் தீமிதித்தனர். இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அமர்ந்து அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
 

]]>
https://www.dinamani.com/religion/religion-temples/2016/jul/28/பெரிய-நத்தம்-துலுக்கானத்தம்மன்-கோயிலில்-தீமிதி-விழா-2730.html