Dinamani - தத்துவ தரிசனம் - https://www.dinamani.com/junction/thaththuva-dharisanam/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2560509 சாளரம் தத்துவ தரிசனம் 47.  அடக்கு, ஆற்றல் பெறு பத்மன் Thursday, September 8, 2016 04:06 PM +0530
தாந்திரீக மார்க்கம் சக்தி வழிபாடு மூலம் வாழ்வில் நிறைவு பெற்று சிவத்தை அடைவதற்கான வழியைச் சொல்கிறது என்றால், சித்த மார்க்கம் யோகப் பயிற்சிகள் மூலம் தனக்குள் சிவனை அறிந்துகொண்டு, அட்டமகா சித்திகள் எனப்படும் அபார ஆற்றலைப் பெற்று முக்தி பெறுவதற்கான வழியைக் கூறுகிறது. சடங்குகளுக்கும் பூஜை, விரதம் உள்ளிட்ட வழிபாடுகளுக்கும் தந்திரம் முக்கியத்துவம் தருகிறதென்றால், சடங்குகளையும் மூடநம்பிக்கைகளையும் கண்டித்து, தியானத்தையும், யோக சாதனைகளையும் சித்த சம்பிரதாயம் வலியுறுத்துகிறது. தந்திரம் பாமர பொது மக்களுக்கான வழிமுறை என்றால், சித்த மார்க்கம் அறிவார்ந்த தனிமனித மேம்பாட்டுக்கான வழிமுறையாக விளங்குகிறது.

தலைமுடி சடைமயமாய், உடலெல்லாம் சாம்பலை (விபூதியை) அள்ளிப்பூசிக்கொண்டு, அரை நிர்வாணமாக அல்லது சில சமயங்களில் முழு நிர்வாணமாக அலைபவர்கள் தாந்திரீக மார்க்கிகளான காபாலிகர்கள். பார்வைக்கு அவர்களைப்போலவே இருப்பார்கள் சித்த சம்பிரதாயத்தினர். ஆனால் வழிமுறையில் இருவரும் நேர் எதிரானவர்கள். சித்த சம்பிரதாயத்தினருக்கு பாரதத்தின் வடபகுதியில் நாத சம்பிரதாயத்தினர் அல்லது நாத பந்திகள் என்றும் பெயர் உண்டு. சம்பிரதாயம்,  மார்க்கம், பந்த் ஆகிய சொற்களுக்கு கடைபிடிக்கப்படும் வழிமுறை என்று பொருள்.
பாசுபதம், லகுலீசம், காபாலிகம், காளாமுகம், கௌலம் என தாந்திரீகத் தொடர்புடைய சைவப் பிரிவுகள் அனேகம் உண்டு. ஆனால், பெரும்பாலும் சைவர்களான சித்த சம்பிரதாயத்தினர் யோக மார்க்கத்தையே முன்னிறுத்துகின்றனர். சித்தி என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு குறிப்பிட்ட ஆற்றல் நிலையை அடைவது என்று பொருள். அதன்படி தவம் அல்லது யோக வலிமையால் வியத்தகு ஆற்றல்களைப் பெற்றவர்கள் சித்தர்கள் ஆவர். தமிழில் சித்தம் என்பதற்கு சிந்தனை, எண்ணம் என்று பொருள். அதன்படி சித்தர்கள் எனப்படுவோர் தமது சிந்தனைகளை அடக்கி, ஒருநிலைப்படுத்தி, யோகப் பயிற்சிகள் மூலம் குறிப்பிட்ட ஆற்றல்களைப் பெற்றவர்கள் ஆவர். ஆக, தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் கூறப்படும் சித்தர் என்ற சொல்லுக்கான வேர்ச் சொற்களின் அர்த்தம் சற்று வேறாக இருந்தாலும், குறிக்கும் பொருள் ஒன்றுதான். தன்னை அறிந்து, அடக்கி, ஆற்றல் பெற்றவர்களே சித்தர்கள் ஆவர்.

சித்தர்களில் மிக முக்கியமானவர்கள் நாதர்கள் என்று வட மாநிலங்களில் அழைக்கப்படுகின்றனர். நாத் அதாவது நாதன் என்பதற்கு தலைவன், பாதுகாப்பவன்,  பராமரிப்பவன், வளர்ப்பவன், கணவன் என்று பல பொருள்கள் உண்டு. மனிதரிடமுள்ள ஆற்றலில் மேம்பட்டவர்கள் என்பதாலும் அந்த ஆற்றலை மேம்படுத்தும் வழிமுறைகளைப் பின்பற்றுவதாலும் சக்திபாதர்கள் என்றும் இவர்களுக்குப் பெயர் உண்டு. யோகி, முனி, தவசி என்றும் இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

சித்தர்களின் வழிமுறை மிக எளிமையானது. மிகவும் பொருள் பொதிந்த தத்துவங்களைக்கூட சாதாரண மக்களுக்குப் புரியும் வகையில் எடுத்துரைத்தார்கள். தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அல்லது ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, சித்தர்களில் யோக சூத்திரம் இயற்றிய  பதஞ்சலி தவிர மற்ற எவரும் சம்ஸ்கிருதத்தில் இலக்கியம் மொழியவில்லை. உள்ளூர் மக்களின் மொழியிலேயே தங்களது கருத்துகளையும், அறிவுரைகளையும் கூறினர். ஆன்மிகம் மட்டுமின்றி மருத்துவம், தற்காப்புக் கலை, ரசவாதம்  (ரசாயனம் அல்லது இன்றைய வேதியியலுக்கு முன்னோடியான அல்கெமி), பௌதீகம் (இயற்பியல்), வான சாஸ்திரம் (வானியல்), ஜோதிடம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளிலும் சித்தர்கள் திறமை பெற்றிருந்தனர். பெரும்பாலும் சித்தர்கள் குருவிடமிருந்து நேரடியாக உபதேசமும் கடுமையான சோதனைகளுக்குப் பிறகான பயிற்சிகளையும் பெற்ற பின்னரே, சித்த சம்பிரதாயத்தில் இணைக்கப்படுகின்றனர். ஆகையால் ஒரு வகையில் வட்டார மொழிகளில் மிகவும் எளிமையான கருத்துகளைக் கூறியுள்ள சித்தர்கள், மறு வகையில், வட்டார மொழியில் இருந்தாலும் புரிந்துகொள்ளக் கடினமான ரகசியக் குறியீடுகள் அடங்கிய மருத்துவ, ஜோதிட, அறிவியல், தற்காப்புக் கலை குறித்த குறிப்புகளைக் கொடுத்துள்ளனர். இவையெல்லாம் மனித குலத்துக்கு எந்த அளவுக்கு நன்மைகளைத் தருகின்றனவோ அந்த அளவுக்குத் தீமைகளும் தரக் கூடியவை என்பதால், நல்லவர்களிடம் அதுவும் கடுமையான பயிற்சி முறைகளுக்கு உகந்தவர்களிடம் மட்டுமே இது வழிவழியாய் சென்று சேர வேண்டும் என்பதில் அவர்கள் திடமாக இருந்ததால் ஒரு வகையான ஏற்பாடாக இவ்வாறான ரகசிய பரிபாஷைகளைக் கையாண்டுள்ளனர். சித்த மருத்துவம், ஆயுர்வேதம், வர்மக்கலை, நாடி சுத்தி, சில வகை ரசாயன ஆய்வுகள், இயற்கையை நேசித்தல் ஆகியவை சித்தர்களின் கொடைகள்.


 

சித்தர்களுக்கு சிவன்தான் ஆதி சித்தர், ஆதி யோகி, ஆதி நாதர். சிவனிடமிருந்து அவரது அணுக்கத் தொண்டரும் வாகனமாகச் சித்திரிக்கப்படுபவருமான நந்தி தேவர் யோக வித்தைகளை அறிந்துகொண்டு, அவற்றை சீடர்கள் மூலம் மக்களிடையே பரப்பியதாகக் கூறப்படுகிறது. வாகனம் என்பது ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்குச் செல்ல பயன்படுவது. இதே வாகனத்துக்கு வழிமுறை என்றும் பெயர் உண்டு. ஆதி நாதரும் ஆதி யோகியுமான சிவனின் முதல் சீடர் என்ற வகையில் யோகக் கலைக்கான வழிமுறையைப் படைத்தவர் என்பதால் நந்தி, சிவனின் வாகனமாக உருவகப்படுத்தப்பட்டிருக்கலாம். மகாபாரதத்தில் ஸ்ரீகிருஷ்ணர், பீஷ்மர் உள்ளிட்டோர் சிவபெருமானை யோகீஸ்வரன் என்றே விளித்துள்ளனர். சிவனிடமிருந்து பொதுமக்களுக்கு யோகக் கலை சென்றடைவதற்கான வாகனமாக நந்தி திகழ்கிறார். தன்னுள் சிவனைக் கண்டுகொண்டவர்கள் சித்தர்களாகவும், நாதர்களாகவும் போற்றப்படுகின்றனர்.

ஆதி நாதர், சித்தர், நந்தி ஆகிய இதே சொற்கள் ஏறத்தாழ இதே பொருளில் ஜைன (சமண) சம்பிரதாயத்தில் பயன்படுத்தப்படுகின்றன. நந்தி எனப்படும் காளைக்கு சம்ஸ்கிருதத்தில் ரிஷப எனவும் பெயர் உண்டு. வரலாற்றுப் பாடங்களில் மகாவீரர் ஜைன மதத்தை நிறுவியவராகக் கூறப்பட்டாலும், ஜைனம் மட்டுமின்றி ஹிந்து புராணங்களின் படியும் ஜைன மதத்தை ஸ்தாபித்தவர் ரிஷப தீர்த்தங்கரர். மகாவீரர், 24-ஆவது மற்றும் இறுதி தீர்த்தங்கரர். ஆகையால் ரிஷப தேவரை ஜைன மதத்தினர் ஆதி நாதர் என்று அழைக்கின்றனர். இவரது திருவுருவச் சிலைக்குக் கீழ் இவரைக் குறிக்கும் சின்னமாக ரிஷபம் எனப்படும் காளையே பொறிக்கப்படுகிறது. தியானத்துக்கும், யோகப் பயிற்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஜைனர்கள், உலகைப் படைத்து, காத்து, அழித்து மனிதர்களுக்கு முக்தியைக் கொடுக்கும் ஆண்டவன் என்ற கருத்தை மறுக்கின்றனர். அதேநேரத்தில் கடவுள் நிலைக்கு உயரும் மனிதர்களை சித்தர்கள் என்று ஜைனர்கள் தொழுகின்றனர். இந்தச் சித்தர்களுக்கு உருவம் கிடையாது. அவர்கள் சர்வ வல்லமை பொருந்தியவர்கள். பிறவாப் பெருநிலையை எய்தியவர்கள். சிவனை ஆதி நாதராகக் கூறும் சித்த சம்பிரதாயத்தினரும், சித்தர்கள் இதேபோன்ற அட்டமகா சித்திகளைப் பெற்று அமரத்துவம் அடைவதாகக் கூறுகின்றனர்.

இருப்பினும் ஜைன மதத்திலும் சித்த மார்க்கத்திலும் கூறப்படும் அட்ட மகாசித்திகள் சற்று வேறுபடுகின்றன. கடையிலா ஞானம் அதாவது முடிவில்லாத அறிவு (அனந்த ஞானம் அல்லது கேவல ஞானம் – கேவலம் என்பதற்கு அதுவின்றி வேறற்றது என்று பொருள்), கடையிலா காட்சி (அனந்த தர்சனம்), கடையிலா வீரியம் அதாவது எல்லையிலா ஆற்றல் (அனந்த வீர்யம்), கடையிலா இன்பம் (அனந்த சுகம்), நாமமின்மை (அக்ஷய ஸ்திதி), கோத்திரமின்மை (அகுருலகுத்வம் - அதாவது பெரியது சிறியது என்று பிரித்துக் கூறக்கூடிய தன்மை எதுவும் இல்லாதது), ஆயுள் இன்மை (சூட்சுமத்வம்), அழியா இயல்பு (க்ஷாயிக ஸம்யக்த்வம்) ஆகியவையே சித்தர் நிலையை எட்டுவோரின் எண்வகை ஆற்றல்கள் என்கின்றனர் ஜைனர்கள். ஆகையால் ஜைனர்களால் பிற்காலத்தில் கடவுளாகக் கருதி வழிபடப்படுகின்ற இந்தச் சித்தர்கள் எண்குணத்தார் என்று போற்றப்படுகின்றனர்.

சித்த மார்க்கமும் யோக மார்க்கமும் கூறும் அட்ட மகாசித்திகளை இப்போது காண்போம். அவை – அணிமா (அணுவின் அளவுக்குச் சுருங்குதல்), மஹிமா (பிரபஞ்சம் முழுமைக்கும் இணையாக விரிவடைதல்), லகிமா (மிகப் பெரிதாகக் காட்சியளித்தாலும் எடையற்றுப் போதல்), கரிமா (மிகச் சிறியதாகக் காட்சியளித்தாலும் மிகுந்த எடையுள்ளதாக ஆகுதல்), பிராப்தி (நினைத்ததை அடைதல்), பரகாயப்ரவேசம் (பிற உடலுக்குள் உட்புகுதல் அதாவது கூடுவிட்டுக் கூடுபாய்தல், இருந்த இடத்தில் இருந்தபடியே உலகின் எந்த மூலைக்கும் சென்று வருதல்), ஈசத்துவம் (ஈசனுக்கு அதாவது இறைவனுக்கு இணையான ஆற்றலைப் பெறுதல், இயற்கை மீதும் மூலப்பொருள்கள் மீதும் ஆதிக்கம் செலுத்துதல்), வசித்துவம் (தேவர்கள் உட்பட எவரையும் எதையும் வசியப்படுத்துதல், நினைத்த உருவத்தை எடுத்தல்) ஆகியவையே அந்த அட்டமகா சித்திகள்.

வேதத்தின் ஷட்தர்சனங்களில் (ஆறு தரிசனங்களில்) ஒன்றாகிய யோக மார்க்கம் குறித்து விளக்கமளிக்கும் யோக சூத்திரம் எழுதிய பதஞ்சலி இந்த அட்ட மகாசித்திகள் பற்றி விவரிக்கிறார். இந்த பதஞ்சலியும் தமிழகத்தின் 18 சித்தர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். இதேபோல் சிவனின் நேரடிச் சீடர்கள் என்று கூறப்படும் அகத்தியரும், நந்தி தேவரும் 18 சித்தர்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளனர். இவர்களில் பதஞ்சலியின் குருவாக நந்தி தேவர் கூறப்படுகிறார். மேலும், திருமூலர், சட்டைமுனி ஆகியோரும் நந்தி தேவரின் சீடர்கள் எனப்படுகின்றனர்.

 

 

சித்தர்களில் மிகவும் மூத்தவராக அகத்தியர் போற்றப்படுகிறார். இவர் 4 யுகங்களைக் கண்டவராகக் கூறப்பட்டாலும், சித்த புருஷராகவும் தமிழின் முதல் இலக்கண நூலான அகத்தியத்தை இயற்றியவராகவும் மதிக்கப்படும் அகத்தியர் கி.மு. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது. இவர் தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் வல்லமை பொருந்தியவர். சித்த வைத்தியம், நாடி சாஸ்திரம், ஜோதிடம் உள்ளிட்டவை குறித்த நூல்களையும் அகத்தியர் எழுதியதாக நம்பப்படுகிறது. அதேநேரத்தில், அகத்தியர் என்ற பெயரில் பல முனிவர்கள், புலவர்கள் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். போகர், திருவள்ளுவர் (சித்தர்), மச்சமுனி ஆகியோர் அகத்தியரின் சீடர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். இவர்களில் மச்சமுனிதான் வட மாநிலங்களில் பிரபலமாக உள்ள நாத சம்பிரதாயம் எனப்படும் சித்த சம்பிரதாயத்தைத் தோற்றுவித்த மச்சேந்திரநாதர் எனக் கூறப்படுகிறது. இவரின் முக்கிய சீடரும் நாத சம்பிரதாயத்தின் முக்கிய நாதராகவும் போற்றப்படும் கோரக்ஷநாதர் தமிழகத்தின் 18 சித்தர்களில் ஒருவரான கோரக்கர் என்று கருதப்படுகிறது.

18 தமிழ்ச் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டாலும், 18-க்கும் மேற்பட்ட சித்தர்கள் கூறப்படுகின்றனர். ஆகையால் 18 என்ற இந்த வகைப்பாடு ஒவ்வொரு தொகுப்பிலும் மாறுபடுகிறது. எனவே தமிழ்ச் சித்தர்கள் என்று சுட்டப்படுபவர்கள் அனைவரின் பெயரையும் இனி காண்போம். அகத்தியர், நந்தி தேவர், திருமந்திரம் இயற்றிய திருமூலர், பழனியில் நவபாஷாணத்தால் ஆன முருகன் சிலையை உருவாக்கிய போகர் (இவர் சீன தேசத்தில் இருந்து தமிழகம் வந்தவர் என்று ஒருசிலரும், தமிழ்நாட்டில் இருந்து சீனாவுக்குச் சென்று லாவோட்ஸு என்ற பெயரில் அங்கு யோகம், தத்துவம், மருத்துவக் கலையை வளர்த்தவர் என்று வேறு சில ஆய்வாளர்களும் கூறுகின்றனர்), நாத சம்பிரதாயத்தை உருவாக்கியவரும் ஹடயோகியும் திருப்பரங்குன்றத்தில் சமாதி அடைந்தவருமான மச்சேந்திர நாதர்  (மச்சமுனி), அவதூத கீதை இயற்றிய கோரக்ஷநாதர் எனப்படும் கோரக்கர், மருத்துவம்- யோகம்- தத்துவம் சார்ந்த 25-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ள கொங்கணவர், இலங்கையில் பிறந்து ஸ்ரீரங்கத்தில் சமாதி அடைந்த சட்டைமுனி (கயிலாய சட்டைமுனி, கம்பளி சட்டைமுனி, ரோமரிஷி என்றும் கூறுவர்), மருத்துவ நிபுணரும் மதுரையில் சமாதி அடைந்தவருமான சுந்தரானந்தர், மருத்துவம் மற்றும் மந்திர தந்திரக் கலையில் வல்லவரான ராமதேவர் (இவர் பரகாயப்ரவேசத்தின் மூலம் எகிப்து சென்று யாகோப் என்ற பெயரில் சில ஆண்டுகள் அங்கு வாழ்ந்து ஆன்மீகம் வளர்த்தவர் என்று கூறப்படுகிறது) ஆகியோர் 18 சித்தர்களில் அடங்குவர்.

குதம்பைச் சித்தர், தஞ்சை பெரிய கோவிலைக் கட்டுவித்தவராகக் கருதப்படும் சித்தர் கருவூரார், விஷ்ணுவின் அவதாரமாகப் போற்றப்படுபவரும் காயகல்ப சிகிச்சை நிபுணருமான இடைக்காடர், குண்டலினி யோகக் கலை வல்லுநரும் யோக சூத்திரம் இயற்றியவருமான பதஞ்சலி, வியாக்ரபாதர் எனப்படும் புலிப்பாணி சித்தர், திருவாரூரில் சமாதி அடைந்த கமலமுனி, வைத்தீஸ்வரன் கோவிலில் சமாதி அடைந்தவரும் மருத்துவம்- காயகல்பம்- ரஸவாதம் ஆகியவற்றில் நிபுணருமான தன்வந்திரி (இவரை விஷ்ணுவின் அவதாரம் என்றும் கூறுவர்), யோகக் கலை மற்றும் தத்துவத்தில் வித்தகரான பாம்பாட்டிச் சித்தர் ஆகியோரும் 18 சித்தர்களில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தவிர, வான்மீகர் (ராமாயணம் இயற்றிய வால்மீகியே இவர் என்றும் கூறுவர்), திருவள்ளுவர், கபிலர், அழுகணி சித்தர், அகப்பேய் சித்தர், புசுண்டர் எனப்படும் காகபுஜண்டர், புண்ணாக்கீசர், தேரையார், புலத்தியர் (புலஸ்தியர்), நாகார்ஜுனர், சென்னிமலை சித்தர், கஞ்சமலை சித்தர், கடுவெளி சித்தர், பட்டினத்தார், பத்திரகிரியார் (பர்த்ருஹரி என்னும் வட மாநில அரசனே இவர் என்பாரும் உண்டு), சிவவாக்கியர் ஆகியோரும் தமிழக சித்தர்களில் அடங்குவர்.

இவர்களில் சிவவாக்கியர் பிறக்கும்போதே சிவ சிவ என்று உச்சரித்துக்கொண்டே பிறந்ததால் சிவவாக்கியர் என்று பெயர் பெற்றதாகக் கூறுவர். இவரது பாடல்கள் சிவவாக்கியம் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. சைவராக இருந்தபோதிலும் சடங்கு சம்பிரதாயங்களையும் உருவ வழிபாட்டையும் இவர் கடுமையாக எதிர்த்ததால் சிவனை உருவத்திலும் லிங்கம் எனப்படும் அருவுருவத்திலும் (அருவ உருவம்) ஆராதிக்கும் சைவ சித்தாந்தவாதிகள் இவரை ஏற்பதில்லை. இவர் தியானத்தின் மூலமான உள்முக வழிபாட்டையே வலியுறுத்தினார். நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ என்பது இவரது பிரபலமான சிவவாக்கியம். மூடநம்பிக்கைகளையும், சாதிப் பாகுபாட்டையும், பிராமண மேலாதிக்கத்தையும் கடுமையாக எதிர்த்தவர் சிவவாக்கியர் (இவர் பிராமண குலத்தில் தோன்றியவர்). பேயாழ்வாரைச் சந்தித்த பின் இவர் வைணவராக மாறியதாகவும் அதன் பிறகு இவர் திருமழிசை ஆழ்வார் என்று அழைக்கப்பட்டதாகவும் சிலர் (குறிப்பாக வைணவர்கள்) கூறுகின்றனர். ஆனால், சிவவாக்கியர் மற்றும் திருமழிசை ஆழ்வார் இடையே பாக்கள் அமைந்துள்ள விதத்திலும், சில கருத்துகளிலும் ஒற்றுமை இருக்கின்றபோதிலும், சிவவாக்கியர் திருமழிசை ஆழ்வாரின் காலத்துக்கு முற்பட்டவர் என்பது ஒப்பாய்வில் தெரியவந்துள்ளதாக வரலாற்று, இலக்கிய ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வைணவரான திருமழிசை ஆழ்வார், புரட்சிகர சைவரான சிவவாக்கியரின் பாடல்களால் கவரப்பட்டு அவரைப் போலவே பாடல்கள் புனையத் தொடங்கியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வட மாநிலங்களில் மகாசித்த புருஷர்கள் நாதர்கள் என்று போற்றப்படுகின்றனர். இவர்களது வழிமுறை நாத சம்பிரதாயம் என்று அழைக்கப்படுகிறது. இதனை மச்சேந்திர நாதர் தோற்றுவித்த போதிலும் அவரது சீடராகக் கருதப்படும் கோரக்க நாதர் என்ற கோரக்ஷநாதரே இதனை அமைப்பு ரீதியில் கட்டமைத்தவர். சிவனின் அம்சமாகக் கருதப்படும் கோரக் நாத் வட மாநிலங்களில் மட்டுமின்றி கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் புலியில் வலம் வரும் முனிவர் உருவத்தில் வணங்கப்படுகிறார். மச்சேந்திர நாத், கோரக் நாத், ஜலந்தர் நாத், கனீஃப் நாத், கஹினி நாத் (கஜேந்திர நாத்), பர்தரி நாத் (பர்த்ருஹரி), ரேவண்ண நாத், சர்பதி நாத், நாக நாத் ஆகியோர் நவ நாதர்கள் எனப்படுகின்றனர். அதேநேரத்தில், பிரும்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரின் அம்சமாகவும் விஷ்ணுவின் அவதாரமாகவும் போற்றப்படும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தத்தாத்ரேயர்தான் நாத சம்பிரதாயத்தை உருவாக்கியவர் என்பது சிலரது கருத்து. அதன்படி நவ நாதர்களை நவ நாராயணர்கள் என்றும், அவர்களது வழிமுறையை அவதூத மார்க்கம் என்றும் அழைப்பதுண்டு. தமிழகத்தில் இயற்றப்பட்ட நூலான அபிதான சிந்தாமணியில் வேறு 9 பேர், நவ நாதர்களாகச் சுட்டப்படுகின்றனர். அவர்கள் – சத்யநாதர், சாதோகநாதர், ஆதிநாதர், அனாதிநாதர், வெகுளிநாதர், மாதங்கநாதர், மச்சேந்திரநாதர், கஜேந்திரநாதர், கோரக்கநாதர். பிகார் மாநிலத்தின் மைதிலி என்ற வட்டார மொழியில் இயற்றப்பட்ட கி.பி. 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வர்ணரத்னாகர என்ற நூல் 84 சித்தர்களைப் பட்டியலிடுகிறது. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹடயோக பிரதீபிகா என்ற நூலில் 32 சித்தர்கள் இடம்பெற்றுள்ளனர்.

முற்காலத்தில் யோக மார்க்கத்தில் சிறந்து விளங்கி யோகிகள் என்று அழைக்கப்பட்டவர்களே பிற்காலத்தில் சித்தர்கள் என்றும் நாதர்கள் என்றும் பெயர் பெற்றனர். வெறும் வழிபாட்டில் இவர்களுக்கு நம்பிக்கையில்லை. ஒழுக்கமான நெறிமுறைகள், யோகம், தியானம் ஆகிய வழிமுறைகள் மூலம் தனக்குள்ளே சிவனை, நாதனை, இறைவனைக் காணும் அனுபவத்தைப் பெறுவதே இவர்களது முனைப்பு. அவ்வாறான அனுபவத்தை ஒரு முறை கண்டுவிட்டால் போதாது, இடைவிடாத பயிற்சி மூலம் மனிதரில் இருந்து மேம்பட்ட அந்த இறை நிலையில் எப்போதும் ஒன்றியிருக்க வேண்டும் என்பதே இவர்களது இலக்கு. விழிப்பு (ஜாக்ரதா), கனவு (ஸ்வப்னம்), உறக்கம் (நித்ரா) ஆகிய மூன்று நிலைகளைத் தாண்டி, எவ்விதச் சலனமும் அற்ற அறிதுயில் (துரியம்) எனப்படும் நான்காவது நிலையில் நிலைகொள்வதே இவர்களது லட்சியம். நாத மார்க்கத்தில் இணைந்து ஒரு குறிப்பிட்ட பயிற்சி நிலையைக் கடந்தவர்கள், தங்களது செவிகளில் மிகப் பெரிய குண்டலத்தை அணிந்திருப்பர். குண்டலினி எனப்படும் உள்ளாற்றலை மேம்படுத்தியவர்கள் என்பதை உணர்த்தவே இந்தக் குண்டல அணிகலன். யோகீஸ்வரன் எனப்படும் சிவபெருமான், தனது செவிகளில் மகரக் குழைகளை அணிந்திருப்பதும், தோடுடைய செவியன் என்று புகழப்படுவதும் இத்தகு உருவகம் சார்ந்ததே.

உடலை இறைவன் வாழும் கோவிலாக சித்தர்கள் உணர்ந்தனர். ஆகையால் உடலாகிய கோவிலுக்கு உரிய திருப்பணிகள் அதாவது கட்டுப்பாடு, தியானம், யோகப் பயிற்சிகள் ஆகிய திருப்பணிகளைச் செய்து, உள்ளிருக்கும் இறையை உய்த்துணர்ந்து ஆராதித்தனர். உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றும் உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானுக்கு வாய்கோபுர வாசல் தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே என்றும் திருமூலர் பாடியிருப்பது இங்கே நோக்கத்தக்கது.

இவ்வாறு தன்னுள் இறைவனைக் கண்டுணர்ந்து அதில் திளைப்பவர், இந்த உலகில் வாழ்ந்துகொண்டிருந்தாலும் எந்த கர்மவினைகளுக்கும் ஆட்படாமல் ஸ்தித ப்ரக்ஞனாக (நிலை உணர்வினனாக) இருப்பதாக பகவத் கீதை கூறுகிறது. யோகயுக்தோ விஸுத்தாத்மா விஜிதாத்மா ஜிதேந்திரிய சர்வபூதாத்மபூதாத்மா குர்வன் அபி ந லிப்யதே என்று  பகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார். யோக நிலையில் அதாவது தனது ஆத்மனை பரமாத்மனோடு ஒன்றிய நிலையில் வைத்திருக்கும் யோகியின் ஆத்மா பரிசுத்தமடைகிறது, அத்தகு யோகி தனது புலன்களை வென்றடக்குகிறான், அனைத்து உயிரினங்களிலும் தன்னுள் வீற்றிருக்கும் ஆத்மாவே அவற்றுக்கெல்லாம் ஆத்மாவாக விளங்குவதை உணர்ந்துகொள்கிறான், அத்தகு யோகி செயல்படுவதுபோல் தோன்றினாலும் உண்மையில் எல்லா வினைகளில் இருந்தும் அவன் விடுபட்டவனாகிறான் என்பதே இதன் பொருள்.

சித்த மார்க்கத்தினர் பெரும்பாலும் சைவர்கள் என்ற போதிலும் வைணவம், சாக்தம், ஜைனம், பௌத்தம் ஆகிய மதங்களைச் சேர்ந்தவர்களும் சித்தர்களாக மதிக்கப்படுகின்றனர். உலகியல் பந்தத்தை அறவே துறந்த சித்தர்களை மட்டுமின்றி, மகா சித்திகளை அடைந்தபோதிலும் உலக மக்களின் நன்மைக்காக உலகியல் தொடர்பை வைத்திருக்கும் அர்ஹந்த் எனப்படும் அருகதர்களையும் ஜைனம் போற்றுகிறது. பௌத்தத்தில் அபார சக்தி படைத்தவர்களாகவும், மனிதர்களின் மேம்பாட்டுக்காக மீண்டும் மீண்டும் அவதரிப்பதாகவும் கூறப்படும் போதிசத்வர்கள், சித்தர்களை ஒத்தவர்களே. போதிசத்வர்கள் புத்தரின் அம்சங்களாக அல்லது அவதாரங்களாக மதிக்கப்படுகின்றனர்.

உண்மையில் சித்தர் அல்லது யோகி என்பவர், அனைத்து வித பேதங்களையும் கடந்த பரிபக்குவ நிலையை, மானுடத்தின் உன்னத நிலையை எட்டியவர்கள் ஆவர். இதனைத்தான் திருவள்ளுவர் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் என்று போற்றுகிறார். மனிதரும் தெய்வமாகலாம் என்பதே சித்தர்கள் காட்டும் வழிமுறை. அந்த உயர்நிலை வெவ்வேறு பெயர்களில் சுட்டப்பட்டாலும் உட்பொருள் ஒன்றுதான். இதனை, ராஜயோக சமாதீஸ்ச உன்மணீ மனோன்மணீ அமரத்வம் லயஸ்தத்வம் சூன்யாசூன்யம் பரம்பதம் அமனஸ்கம் ததாத்வைதம் நிராலம்பம் நிரஸ்ஜனம் ஜீவன்முக்தீஸ்ச சஹஜா துர்யா சேத்ஏக வாசகா என்று ஹடயோக பிரதீபிகா என்ற நூல் சிறப்பாக எடுத்துரைக்கிறது. இதன் பொருள் - ராஜயோகம், சமாதி நிலை, உன்மணீ, மனோன்மணீ, அமரத்துவம், லய தத்துவம் (இயற்கையில் அல்லது இறையில் ஒன்றுதல்), சூன்ய-அசூன்யம், பரமபதம், அமனஸ்கம், அத்வைதம் (இருமையற்ற நிலை), நிராலம்பம், நிரஸ்ஜனம், ஜீவன்முக்தி, சஹஜம், துரியம் என்று வெவ்வேறு சொற்களில் கூறப்படும் இவை அனைத்தும் ஒற்றை நிலையைக் குறிப்பதுவே.

இவ்வாறாக வேற்றுமையில் ஒற்றுமை என்ற மாபெரும் தத்துவத்தைப் பின்பற்றி, பாரதீய மெய்ஞானம் பல்கிக் கிளைத்தாலும் வேரில் ஒன்றுபட்டுத் திகழ்கிறது. இத்தகு உயர் பண்புக்கு மாபெரும் சோதனை, அயல்நாட்டு ஆக்கிரமிப்பின் மூலம் நேர்ந்தது. அப்போதும் பாரதீய மெய்ஞானத்தின் வேற்றுமையில் ஒற்றுமை, எதனையும் தள்ளிவிடாமல் அரவணைத்து சிறப்பானதை உள்வாங்கிக்கொள்ளுதல் ஆகிய குணங்களால் புதிய தத்துவங்கள் முளைத்தன. அவற்றில் முக்கியமானதும் உலகின் இளைய மதம் என்றும் புகழப்படுவதுமான சீக்கியம் குறித்து அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.

]]>
https://www.dinamani.com/junction/thaththuva-dharisanam/2016/sep/07/47 -அடக்கு-ஆற்றல்-பெறு-2560509.html