Dinamani - திரை விமரிசனம் - https://www.dinamani.com/cinema/movie-reviews/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3225229 சினிமா திரை விமரிசனம் பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம் சுரேஷ் கண்ணன் Saturday, August 31, 2019 11:20 AM +0530  

பிராந்திய, தேச எல்லையைத் தாண்டி சர்வதேச சந்தையைக் குறிவைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இன்னொரு பிரம்மாண்ட திரைப்படம் இது. ஆனால், ஒரு மோசமான வீடியோ கேமின் இடையே சிக்கிக் கொண்ட உணர்வைத் தரும் இந்தத் திரைப்படத்தை 350 கோடியில் உருவான குப்பை எனலாம்.

பணத்தை வாரி இறைப்பதினால் மட்டுமே ஒரு நல்ல திரைப்படம் உருவாகி விடாது. அழுத்தமான கதையும் சுவாரசியமான திரைக்கதையும்தான் எந்நாளும் ராஜா என்கிற அதிமுக்கியமான விஷயத்தை இந்த மோசமான ஆக்கமும் உறுதி செய்கிறது.

‘பாகுபலி’யின் அட்டகாசமான வெற்றிக்குப் பிறகு இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமிருந்தது. ஆனால் அத்தனையையும் ஒரே அடியால் கீழே வீழ்த்தி விட்டார் இயக்குநர் சுஜீத். இந்த வகையில் ஹீரோவை விட இவரே பலசாலி எனலாம்.

ஷங்கர், ராஜ்மெளலி போன்றவர்கள் எத்தனை புத்திசாலிகள் என்பதையும் இந்தத் திரைப்படம் மெய்ப்பிக்கிறது.

*

சர்வதேச அளவில் இயங்கும் ஒரு மாஃபியா குழுவின் தலைவர் ராய் (ஜாக்கி ஷெஃராப்). பாதுகாப்பு கருதி தன் தொழிலைச் சட்டப்பூர்வமானதாக மாற்றுவதற்காக இந்தியா வருகிறார். அமைச்சரை மிரட்டிக் கையெழுத்து வாங்குகிறார். ஆனால் ஒரு கார் விபத்தின் வழியாகக் கொல்லப்படுகிறார்.

ராயின் தலைமைப்பதவியில் அமர இதர கேங்க்ஸ்டர்கள் இடையே அதிகாரப் போட்டி நடக்கிறது. ராயின் மகன் (அருண்குமார்) வாரிசாக நுழைய இந்த மோதல் இன்னமும் சூடு பிடிக்கிறது. கொள்ளையர்களின் பெரும் நிதி ஒரு பாதுகாப்புப் பெட்டகத்தில் சிக்கிக் கொள்கிறது. அதை வெளியே எடுக்க ‘பிளாக் பாக்ஸ்’ வேண்டும். அதைக் கைப்பற்றுவதற்கான சதித்திட்டங்களும் நடக்கின்றன.

இன்னொரு புறம் வேறொரு விஷயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டத்தின் வழியாக மும்பையில் பெருங்கொள்ளை ஒன்று நிகழ்கிறது. இதைக் கண்டுபிடிப்பதற்காக அண்டர்கவர் காவல்துறை அதிகாரியான அசோக் (பிரபாஸ்) நியமிக்கப்படுகிறார்.

இந்தப் பாதைகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலந்து பயணிப்பதே இதன் திரைக்கதை. இதில் அசலான காவல்அதிகாரி , திருடன், வாரிசு யார் என்பதையும் இடையே கலந்து கட்டி அடிக்கிறார்கள். வாய்ப்பாடு ஒப்பிக்கும் சிறுவன் போல கடகடவென்று ‘வாய்ஸ் ஓவரில்’ ஆரம்பிக்கும் துவக்கம் முதற்கொண்டு படம் நெடுக என்ன நடக்கிறதென்றே பெரும்பாலும் புரியவில்லை.

பண்டிகை சமயத்தில் தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் முட்டி வலியுடன் மாட்டிக் கொண்ட அவஸ்தை. அத்தனை பாத்திரங்கள். அத்தனை நெரிசல்.

*

நல்ல உயரமும் திடகாத்திரமுமாக இருக்கிறார் பிரபாஸ். இவர் ஐந்து பேரை அடித்துத் துவம்சம் செய்கிறார் என்றால் கூட நம்பலாம். ஆனால் குக்கரில் ஐந்து விசில் வருவதற்குள் ஐநூறு கிங்கிரர்களை அநாவசியமாக அடித்து வீழ்த்துவதெல்லாம் காதில் பூச்சுற்றல். சாகசமெல்லாம் சரி. ஆனால் பிரபாஸின் முகத்தில் நடிப்பு என்பது பெரும்பாலும் வராமல் பிடிவாதம் பிடிக்கிறது.

ஹிந்தி வடிவமும் இருக்கிறது என்கிற காரணத்தினால் ஷ்ரத்தா கபூரை நாயகியாகப் போட்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. ஆந்திராவின் கோங்குரா சட்டினியையும் ரசகுல்லாவையும் ஒன்றாகக் கலந்தது போல் நாயகன் – நாயகி சேர்க்கை ஒட்டவேயில்லை.

நீல் நிதின் முகேஷ், சங்க்கி பாண்டே, முரளி சர்மா, மந்திரா பேடி, மகேஷ் மஞ்ச்ரேக்கர், டினு ஆனந்த், வெண்ணிலா கிஷோர் என்று இந்திய மேப்பில் தற்செயலாக கை வைத்து தேர்ந்தெடுத்தது போல ஏராளமான பாத்திரங்கள். ஆனால் ஒருவரும் மனத்தில் நிற்கவில்லை. அட்டகாசமான தோற்றத்தில் வரும் அருண் விஜய்யும் காவல்துறை அதிகாரியாக வரும் பிரகாஷ் பெலவாடியும் மட்டுமே சற்று தனித்துத் தெரிகிறார்கள்.

ஒவ்வொரு பிரேமிலும் ஆடம்பரம் தெறிக்கிறது. விலையுயர்ந்த ஆடைகள், குளிர்க்கண்ணாடிகள், கச்சிதமாக இருக்கும் சிக்கன உடை வசீகர அழகிகள், வாயில் புகையும் சுருட்டு, அந்தரத்தில் பறந்து சிதறும் கார்கள், அட்டகாசமான செட்கள் (சாபு சிரிலுக்கு ஒரு சபாஷ்) என்று எல்லாவற்றிலும் பணக்காரத்தனம். சாகசக் காட்சிகள் முதற்கொண்டு பல இடங்களில் நுட்பம் ஏராளமாக இறைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், ஆடம்பரமான உணவில் உப்பு இல்லாதது போல சுவாரசியமான திரைக்கதை என்கிற ஆதாரமான வஸ்து இதில் இல்லாததால் அனைத்துமே வீண்.

ஹாலிவுட் முதற்கொண்டு உலகெங்கும் தயாரிக்கப்படும் சாகசத் திரைப்படங்களைக் கவனித்தால் கதை என்பது ஒரு துளியாக இருக்கும். உதாரணத்திற்கு, கடத்தப்பட்ட தன் மகளை மீட்கப் புறப்படும் ராணுவ அதிகாரி என்பது போல. ஆனால் அதைப் பரபரப்பான திரைக்கதையின் மூலம் வளர்த்தெடுப்பார்கள். நாயகன் மீளவே முடியாதோ என்கிற அளவில் சிக்கல்கள், சவால்கள், திகைப்புகள் அவற்றில் அமைந்திருக்கும். நாயகன்தான் இறுதியில் வெல்வான் என்பது நமக்குத் தெரிந்தாலும் அந்த நேரத்தின் சூழ்நிலையில் நாமும் ஆட்படுவோம். பாத்திரங்களுக்கும் பார்வையாளர்களுக்கும் உணர்ச்சிகரமான பிணைப்பையும் இதில் உருவாக்கி விடுவார்கள். அவன் வெற்றி பெற வேண்டுமே என்று பார்வையாளர்களின் மனதில் ஒரு தவிப்பும் ஆவலும் உருவாகி விடும்.

இந்த அடிப்படையான விஷயங்கள் அனைத்துமே இந்தத் திரைப்படத்தில் இல்லை. யாருக்கோ, என்னவோ நடக்கிறது என்பது போல் ஒட்ட முடியாமல் அமர்ந்திருக்க வேண்டியிருக்கிறது.  மழை போல் பொழியும் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இடையில் நாயகன் ரொமான்ஸ் செய்யும்போது கொலைவெறி ஏறுகிறது.

பாடல்கள் ஒன்றும் தேறவில்லை. அசந்தர்ப்பமான இடங்களில் வந்து கடுப்பேற்றுகிறது. ஆறுதலாக பின்னணி இசையில் ஜிப்ரான் மிரட்டியிருக்கிறார்.

ஒரு காட்சியில் பாராசூட்டைத் தூக்கிக் கடாசி விட்டு ஆபத்தான முறையில் பள்ளத்தாக்கை நோக்கிப் பாய்கிறார் நாயகன். ஏறத்தாழ தற்கொலை முயற்சிக்கு நிகரான சாகசம். எனக்கென்னமோ அந்த இடத்தில் தயாரிப்பாளர்தான் நினைவிற்கு வந்தார். நாயகன் மீண்டு விடுகிறான். ஆனால் தயாரிப்பாளரின் நிலைமைதான் என்னவாகுமோ?

‘ஆஹா.. ஓஹோ..’ என்று எதிர்பார்க்கப்பட்ட ‘சாஹோ’வில் வெற்று பிரம்மாண்டத்தைத் தவிர வேறு ஒன்றுமேயில்லை என்பதுதான் உண்மை.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/31/w600X390/saaho_poster1xx.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2019/aug/31/saaho-movie-review-3225229.html
3218360 சினிமா திரை விமரிசனம் அக்‌ஷய் குமார் நடித்த மிஷன் மங்கள்: திரை விமரிசனம் ஷிலாஜித் மித்ரா Wednesday, August 21, 2019 01:05 PM +0530  

இயக்குநர் ஜெகன் சக்தியின் மிஷன் மங்கள், அடிப்படையில் விண்வெளி ஆய்வு பற்றிய ஒரு படம். இந்த அழகான படம், பணியிடம் தொடர்பான சுவாரசியங்களையும் அவ்வப்போது வெளிப்படுத்துகிறது. ஆனால் இது யாருக்கான படம் என்பதுதான் கேள்வியே: அக்‌ஷய் குமாரின் விண்வெளி சாகசங்களை எதிர்பார்த்து வருவோரை முழுமையாகத் திருப்திப்படுத்தவும் இல்லை; ஒரு முழுமையான வரலாற்று ஆவணப்படத்தை எதிர்பார்த்து வருவோரை இன்னும் ஏமாற்றுகிறது. (இதில் நாசாவில் சேரத்துடிக்கும் ஒரு விஞ்ஞானியின் குடும்பப்பெயராக 'காந்தி'யை  தேர்ந்தெடுத்திருப்பது, "இந்தியாவை விட்டு வெளியேறு" என்னும் நகைச்சுவைக்குப் பயன்படுத்த மட்டுமே). எனினும் பரிச்சயமான கதைக்களத்தால் துவண்டு, பெயரளவில், முழுமையடையாத கதாபாத்திரங்களோடு இணைந்துகொண்டால் ஓரிரு ஆச்சரியங்கள் காத்திருக்கும்.

படத்தின் இரண்டாவது பாதியில் ஒரு காட்சி. ராக்கெட் அறிவியலுக்கும் அந்தக் காட்சிக்கும் ஏணி வைத்தால்கூட ஒட்டாது என்றாலும் படத்தோடு சேர்த்து என்னைக் கட்டிபோட்ட காட்சி அது என்று சொல்லலாம். சிடுசிடு கணவராக, கெளரவ வேடத்தில் வரும் சஞ்சய் கபூர், தாரா ஷிண்டேவிடம் (வித்யா பாலன்) "அதெல்லாம் அந்தக் காலம்" என்பார். அதற்கு முந்தைய காட்சியில்தான், டிஸ்கோ பார்ட்டிகளில் ஈடுபாடுடைய தன் மகளைக் குஷிப்படுத்த, அவரின் 1995 ஹிட் படமான ராஜாவில் வரும் 'அகியான் மிலாவூன்  கபி' பாடலுக்கு ஆடியிருப்பார். ஆவலுடன் தலையசைத்து அவர் சொல்லும் இந்தச் சாதாரண காட்சி தான், மகத்தான விஷயங்களைப் பற்றிக் கூறும் இந்தப் படத்தில் என் மனத்தைத் தொட்ட காட்சி. 

ஒரு முக்கியத் திட்டம் தோல்வியடையும்போது, இஸ்ரோ-வின் மூத்த விஞ்ஞானியான அக்‌ஷய் குமார் அதற்குப் பொறுப்பேற்றுக்கொள்கிறார். அதற்குத் தண்டனையாக, சாதிக்க முடியாத ‘செவ்வாய் விண்கலத் திட்டம்’ அவருக்கு வழங்கப்படுகிறது. இதன்மூலம் அவரே பதவியிலிருந்து விலகிக்கொள்வார் என. வித்யா பாலனும் அவருடைய பழைய தவறுக்காக அக்‌ஷய் குமாரின் குழுவுடன் இணைகிறார். இருவரும் இணைந்து அவர்களுக்கான அணியைத் திரட்டி, உலகின் திறமைமிக்க பட்ஜெட் செயற்கைக்கோளைச் செவ்வாய்க்கு அனுப்ப முடிவெடுக்கிறார்கள். நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை இந்தியாவை ஏளனப்படுத்தும், இனவெறி கொண்ட கார்ட்டூன் வெளியிடுவதை முன்பே காண்பித்து இந்தத் திட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்கள். "எல்லாவற்றுக்கும் நாசாவையே எதிர்பார்த்திருக்க முடியாது, இந்தியாவிலேயே தயாரிக்கும் நேரம் வந்துவிட்டது" என்று பெருமிதமாக நாட்டுப்பற்றுடன் அறிவிக்கிறார் அக்‌ஷய் குமார். 

இன்றைய அரசாங்கத்தை நினைவுப்படுத்தும் அந்த முழக்கத்தை மட்டும் மறந்துவிட்டால், மற்றபடி மிஷன் மங்கள் கதையைத் தனித்துவமாய் உருவாக்க, நேர்மையாக முயன்றிருக்கிறார்கள். நகைச்சுவையான கதாபாத்திர அறிமுகங்களாலேயே இவை ஓரளவு நிறைவேறியுள்ளன. வழிகாட்டும் நிபுணருக்கு வண்டி ஓட்டத் திரியாது, கட்டமைப்புப் பொறியாளர் மிக வயதானவர், பேலோடு வடிவமைப்பாளர் கன்னித்தன்மையுடையவர். ஒரு முஸ்லிம் விஞ்ஞானியாக வீடு கிடைக்காமல் திண்டாடும் கீர்த்தி குல்ஹரி மற்றும் திருமணம் முடித்த பெண்ணாக இருப்பதாலேயே, பிள்ளை பெற்றுக்கொள்ள அழுத்தம் கொடுக்கப்படும் நித்யா மேனன் என இவர்களின் பின்புலன்கள் மூலக்கதையை வலுவாக்கினாலும் கிளைக்கதைகளாகவே கருதப்படுகின்றன. மிகப்பெரிய விஞ்ஞானக் களம் கையில் இருக்கையில் தனிப்பட்ட நபர்களின் சமூகப் போராட்டங்களை முக்கியப்படுத்தவேண்டிய அவசியமில்லைதான். விண்கலத் திட்டத்தின் வெற்றி அவற்றைப் பின்னுக்குத் தள்ளிவிடும் என எண்ணியிருக்கலாம். 

முதலில் ஜெகன் அனைத்தையும் எளிமைப்படுத்திவிடுகிறார். எங்கே இதுவும் புரியாமல் போய்விடுமோ என்று அஞ்சி அதை மேலும் எளிமைப்படுத்துகிறார். ஐன்ஸ்டீன் எப்படியும் கண்டுக்கொள்ளப்போவதில்லை. சிக்கலான வழிமுறைகள் கூட சமையல் குறிப்புகளின் உதவியோடு எளிமையாக எடுத்துரைக்கப்படுகிறது. மனையியல் ஏமாற்றுவித்தை ஆரம்பத்தில் வேடிக்கையாக இருந்தாலும், பின்னர் தொய்வுறுகிறது. 100 நிமிடங்கள் கழிந்தபின்னும், நாம் மசாலா தோசையும், தயிர் சாதத்தைப் பற்றியும் தான் பேசிக்கொண்டிருக்கிறோம். பெங்களூரு மெட்ரோவில் நடக்கும் சண்டைக் காட்சிகளைப் பெண்களே கையாள்கிறார்கள். அக்‌ஷய் பின்புறத்தில் தாக்கப்படுகிறார். அமெரிக்க நகைச்சுவை நடிகரும் தொலைக்காட்சித் தொகுப்பாளரும் விசித்திரமான பில் மஹரைப் பின்பற்றி, அதன் மூலம் ஒரு கார்ட்டூன் வில்லனாக நம்மை வசீகரித்திருக்கிறார் தாலிப் தாஹில்.

விண்கலப் புறப்பாட்டிற்கான ஆயத்தங்கள் படிப்படியாகவும், சூடுபிடிக்காமல் இருந்த போதும், இறுதித் தருணத்தில் இயக்குநர் விரைவுபடுத்துகிறார். சுமார் ஒரு வருடப்பயணத்தை, கடைசி நிமிடப் பாய்ச்சலில் நெருக்கிப் பிழிந்திருக்கிறார்கள். ஆம், கிராஃபிக்ஸ் காட்சிகள் இருக்கின்றன. ஆனால் பெரிதாக என்னைக் கவரவில்லை. இசையமைப்பாளர் அமித் த்ரிவேதி இறுதிக் காட்சிகளில் கூட இந்தியத் தாளங்களையே பயன்படுத்தியது, இப்படத்தோடு ஒட்டவில்லை. படத்தின் மையம் விண்வெளி என்றாலும்  நம்மை அசத்தும் காட்சிகள்  பூமியில்தான் நிகழ்கின்றன. என்னென்னவோ ஸ்விட்சுகளை இயக்கியபடி உச்சக்கட்ட பரபரப்பில் ராகேஷும் அவர் குழுவினரும் பிறப்பிக்கும் உத்தரவுகள் ஓர் உதாரணம். வீடியோ கேம்ஸ் விளையாடும் தோற்றத்தை ஏற்படுத்தாமல், நிஜமாகவே ஏதோ நடந்துகொண்டிருக்கிறது என்னும் திக்திக் உணர்வை ஏற்படுத்தும்படி நடிப்பது சவாலானது. அதை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

இந்திய விண்வெளிச் சாதனையாளர்களான விக்ரம் சாராபாய், சதீஷ் தவான், அப்துல் கலாம் போன்றோருக்கு மரியாதை செலுத்தும் தொகுப்பும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது. பின்பு ஹாலிவுட் இஸ்ரோவிடம் எப்படி தோற்றதென்பதை, ஒரு பிரபலக் குரல் நமக்கு எடுத்துரைக்கிறது. மொத்தத்தில் மிஷன் மங்கள் படம், உள்ளத்தின் அடியாழத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள ஒரு மரியாதைக்குரிய படம், ஆனால் சில இடங்களில் அதன் கதாநாயகர்களை அடையாளம் காண்பிக்கப் போராடுகிறது. அப்படிக் குறிப்பிட யாரும் இல்லை என்பது பதிலாக இருப்பின், அந்தப் பதில் விண்வெளியில் தொலைந்ததாகவே இருக்கும்.

தமிழில்: வினுலா

]]>
Mission Mangal review, Akshay Kumar, Vidya Balan, Jagan Shakti https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/21/w600X390/mission_mangal1xx.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2019/aug/21/mission-mangal-review-3218360.html
3210244 சினிமா திரை விமரிசனம் அஜித்தின் நேர்கொண்ட பார்வை: திரை விமரிசனம் சுரேஷ் கண்ணன் Friday, August 9, 2019 11:05 AM +0530  

பெண்களின் மீதான பாலியல் துன்புறுத்தல்களும் வன்முறைகளும் தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலில் அவர்களின் ஆதாரமான உரிமைகளையும் சுயமரியாதையையும் வலியுறுத்தும் திரைப்படம். 2016-ல் வெளியான பிங்க் என்கிற ஹிந்தித் திரைப்படத்தின் மறுஆக்கம்.

தமிழில் சில வணிக அம்சங்களை இணைத்திருந்தாலும் மூலத் திரைப்படத்தின் மையத்தைச் சிதைக்காமல் கடத்தியிருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத். (சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கியவர்).

*

ஓர் இசைக்கச்சேரியோடு படம் துவங்குகிறது. நடனமாடி விட்டுத் திரும்பும் மீரா கிருஷ்ணனையும் (ஷ்ரத்தா ஸ்ரீநாத்) அவரது தோழிகளையும் சில ஆண் நண்பர்கள் விருந்திற்கு அழைக்கிறார்கள். பிறகு, ஆண்களில் ஒருவனுக்குத் தலையில் ரத்தம் வழிந்து நண்பர்களால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் காட்சியும், பெண்கள் பதற்றத்துடனும் அச்சத்துடனும் வீடு திரும்பும் காட்சியும் அடுத்தடுத்து காட்டப்படுகின்றன. 

நட்பு காரணமாக ஆண்கள் அழைத்த விருந்திற்குச் சென்ற பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். அதில் ஒருவனை மீரா கிருஷ்ணன் பாட்டிலால் தலையில் தாக்கி விட்டுச் சென்று விடுகிறார். அடிபட்டவன் செல்வாக்குள்ள பின்னணியைச் சேர்ந்தவன். எனவே பெண்கள் பல்வேறு மிரட்டல்களால் அச்சுறுத்தப்படுகிறார்கள். இவர்களின் புகாரைக் காவல்துறை அலட்சியமாக கையாள்கிறது.

கொலை முயற்சி மற்றும் பாலியல் குற்றத்திற்காக மீரா கிருஷ்ணன் கைது செய்யப்படுகிறார். சாதாரணப் பின்னணியைக் கொண்ட அந்தப் பெண்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இவர்கள் குடியிருக்கும் அதே பகுதியில் உள்ளவர் பரத் சுப்பிரமணியம் (அஜித் குமார்). சில தனிப்பட்ட காரணங்களால் வழக்கறிஞர் பணியிலிருந்து நெடுங்காலமாக விலகியிருக்கும் இவர், இந்த வழக்கை எடுத்துக் கொள்கிறார்.

சாட்சியங்களும் சூழல்களும் பெண்களுக்கு எதிராக மிக வலுவாக இருக்கும் நிலையில் அந்தப் பெண்களுக்கு என்னவானது, வழக்கறிஞர் அவர்களை மீட்டாரா என்பதெல்லாம் பரபரப்பான நீதிமன்றக் காட்சிகளின் வழியாகப் பதிவாகியுள்ளன.

*

ஒரு முன்னணி நாயகனுக்குடைய அத்தனை வணிக அம்சங்களையும் தன்னுடைய படங்களில் வைத்திருந்தாலும் ‘பெண்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டியவர்கள்’ என்கிற செய்தியை தொடர்ந்து சொல்வதில் ஆர்வமுள்ளவர் அஜித். ‘பெண்கள் இப்போதுதான் படிக்க வெளியே வருகிறார்கள். அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்’ என்கிற செய்தி ‘வேதாளம்’ திரைப்படத்தின் இறுதியில் சொல்லப்பட்டிருக்கும். இந்தப் படத்தில் அந்தச் செய்தி பிரதானமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஒரு ‘மாஸ்’ ஹீரோவிற்கான காட்சியோ, களமோ இல்லாவிட்டாலும் இந்தத் திரைப்படம் சொல்லும் ஆதாரமான செய்திக்காகவே இதில் நடிக்கத் துணிந்த அஜித் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர். அவர் நடித்திருப்பதால்தான் இந்தத் திரைப்படம் பரவலான கவனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. இதன் மையம், இளைய தலைமுறைக்குக் குறிப்பாக இளைஞர்களுக்கு உணர்த்தப்பட வேண்டியது மிக அவசியம்.

ஒரு நடுத்தரவயது வழக்கறிஞர் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார் அஜித். பொதுநல வழக்குகளைக் கையாண்டு கொண்டிருந்த இவர், அந்தக் காரணத்தினாலேயே தன் கர்ப்பிணி மனைவியை இழக்க நேர்கிறது. அது சார்ந்த குற்றவுணர்வினால் மன அழுத்தத்திற்கு ஆளாகி, மருந்துகளின் பிடியில் இருந்தாலும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்கிற ஆவேசத்தோடு அப்பாவிப் பெண்களுக்கு ஆதரவாக செயல்படும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

மூன்று பெண்களில் ஒருவராக ‘பிக்பாஸ்’ புகழ் அபிராமி சிறப்பாக நடித்துள்ளார். மூலத் திரைப்படத்தில் நடித்த ஆண்ட்ரியா இதிலும் தன் அபாரமான பங்களிப்பைத் தந்துள்ளார். அப்பாவித்தனமான முகத்தோடு பதற்றத்தையும் கண்ணீரையும் வெளிப்படுத்துவோடு, நீதிமன்றத்தில் சொற்களால் அவமானப்படுத்தப்படும்போது குறுக்கீடு செய்வதில் பளிச்சிடுகிறார்.

நீதிமன்றத்தில் படபடவென பொழிந்து தள்ளும் அரசு வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே. சற்று மிகையாக நடித்தது போல் தெரிந்தாலும் சம்பந்தப்பட்ட காட்சிகள் சுவாரசியமாக அமைவதற்கு உறுதுணையாக அமைந்துள்ளார். குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டாலும் அஜித்தின் வாதத்திறமையைக் கண்டு ‘உங்களின் நல்ல நோக்கங்கள் நிறைவேற என் வாழ்த்துகள்’ என்கிற தன் பாணியில் கடைசியில் கைகொடுத்து விடைபெறுகிறார் பாண்டே.

அஜித்தின் மனைவியாக வித்யா பாலன் பிளாஷ்பேக்கில் வந்து போகிறார். ஆதிக் ரவிச்சந்திரன், ஜூனியர் பாலையா, டெல்லி கணேஷ் போன்ற துணை நடிகர்களை ஆங்காங்கே காண முடிகிறது.

அஜித்தின் சாகசக் காட்சிகள், நீதிமன்றக் காட்சிகள், இசை நிகழ்ச்சி போன்றவற்றில் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவின் உழைப்பைக் காண முடிகிறது. குறிப்பாக நீதிமன்றக்காட்சிகளின் பின்னணி நம்பகத்தன்மையோடு இருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை அவசியமான அளவிற்கான பரபரப்போடு இருந்தது. பாடல்கள் அத்தனை கவரவில்லை. உமாதேவி எழுதிய ‘வானில் இருள்’ தனித்துக் கவனிக்க வைக்கிறது.

அஜித் ரசிகர்கள் ஏமாற்றமடைந்து விடக்கூடாது என்பதற்காக சில சாகசக் காட்சிகளும் உறுத்தாத பஞ்ச் வசனங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அதற்காக அஜித் பார்த்த மாத்திரத்திலேயே மருத்துவமனை ஊழியர் மிரண்டு ஓடுவதெல்லாம் மிகை. படம் சொல்ல வரும் செய்திக்காக இது போன்ற திணிப்புகளை மன்னிக்கலாம்.

ஹிந்தி வடிவத்தின் கச்சிதமான திரைக்கதை, நம்பகத்தன்மை போன்றவற்றோடு ஒப்பிடும் போது தமிழ் வடிவத்தில் ஆங்காங்கே அலைபாய்கிற விபத்து நிகழ்ந்திருந்தாலும் படத்தின் ஆதாரமான செய்தியைப் பார்வையாளர்களுக்கு வலுவாகக் கடத்தியிருப்பதில் இயக்குநர் வினோத் வெற்றி பெறுகிறார்.

பொதுவாக இம்மாதிரியான கோர்ட் டிராமாக்களில் பாதிக்கப்பட்ட பெண்ணை ஒன்றும் தெரியாத அப்பாவியாக, அபலைப் பெண்ணாக சித்தரித்திருப்பார்கள். அப்போதுதான் பார்வையாளர்களின் முழு அனுதாபம் அந்தப் பாத்திரத்திற்குக் கிடைக்கும். வில்லன்களின் கீழ்மைகளையும் மிகைப்படுத்திக் காண்பிக்க முடியும்.

ஆனால் இந்தத் திரைப்படத்தில் வரும் பெண்கள், குடிப்பவர்களாக, பார்ட்டிக்குச் செல்பவர்களாக, திருமணம் ஆனவருடன் தொடர்பு வைத்திருப்பவராகக் காட்டப்படுகிறார்கள். எனில் பொதுப்புத்தியுள்ள பார்வையாளர்களுக்கு என்ன தோன்றும்? ‘நைட் பார்ட்டிக்குப் போய் குடிக்கற பொண்ணு மேல ஒருத்தன் கைபோடத்தான் செய்வான். அதுல என்ன தப்பு, அவங்க ஏன் அந்த டைம்ல அங்க போகணும்?!’ என்பது போன்ற கேள்விகள்தான் எழும். (திரையரங்கில் சில பார்வையாளர்களின் எதிர்வினைகளும் நமட்டுச்சிரிப்புகளும் இப்படித்தான் அமைந்திருந்தன). இந்தத் திரைப்படம் தாண்டும் மிகப் பெரிய சவாலே இதுதான். ஆண்களைப் போலவே மது அருந்தவும், விருந்துகளுக்குச் செல்லவும், ஆண் நண்பர்களுடன் பழகவும் பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு. ஆண்களுக்கு இது சார்ந்த சுதந்திரம் சமூகத்தில் தன்னிச்சையாக அமைந்திருக்கும் போது பெண்களுக்கு மட்டும் ஏன் மறுக்கப்படுகிறது, தவறாகப் பார்க்கப்டுகிறது, என்பன போன்ற பல கேள்விகளை இத்திரைப்படம் முன்வைக்கிறது.

தன்னுடன் ஓர் ஆண் உறவு கொள்வதற்கான உரிமையை  பெண்கள்தான் வழங்க வேண்டும். பரஸ்பர விருப்பத்தோடுதான் அது நிகழ வேண்டும் ஆணாதிக்க மனோபாவத்தோடும் உடல் வலிமையோடும் தானாக எடுத்துக் கொள்ளும் உரிமை ஆணுக்குக் கிடையவே கிடையாது. அது பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் சரி, மனைவியாகவே இருந்தாலும் சரி, அவர் ‘விருப்பமில்லை’ என்று சொன்னால் ஆண் விலகுவதுதான் முறையானது. கம்பியின் மேல் நடக்கும் வித்தை போன்று இந்தச் செய்தியை மிகக் கவனமாகவும் அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறது இந்தத் திரைப்படம்.

பெண்களின் இயல்பான சமிக்ஞைகளைக் கூடப் பாலியல் அழைப்பாகவும் காதலாகவும் கருதிக் கொண்டு பின்தொடர்ந்து துன்புறுத்தல்களைத் தரும் ஆண்களுக்கு மிகச் சரியான செய்தி இந்தத் திரைப்படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு உறுதுணையாக இருந்த அஜித்துக்கும் இயக்குநர் வினோத்திற்கும் பாராட்டு. ‘இந்தப் பொண்ணுங்க சைக்காலஜி இருக்கே.. அவங்க வேணாம்-னு சொன்னா.. வேணும்-னுதான் அர்த்தம்’ என்பது போல பல அபத்தமான கண்டுபிடிப்புகளும் முன்தீர்மானங்களும் ஆண்களிடம் இருக்கின்றன. ‘அப்படியெல்லாம் அல்ல, ஒரு பெண் NO என்று சொன்னால் அதற்கு NO என்று மட்டுமே பொருள்.' என்கிற செய்தியை அழுத்தம் திருத்தமாக நெற்றியில் அடித்தாற் போல் செல்கிறது இந்தத் திரைப்படம். 

]]>
ajith, remake, Pink, Nerkonda Paarvai Review https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/9/w600X390/nerkonda_paarvai_new1_review1.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2019/aug/09/nerkonda-paarvai-review-3210244.html
3197864 சினிமா திரை விமரிசனம் தி லயன் கிங் - திரை விமர்சனம்! கார்த்திகா வாசுதேவன் Monday, July 22, 2019 04:23 PM +0530  

90’ஸ் கிட்ஸின் ஃபேவரிட் மூவி என்று படத்திற்கான பில்ட் அப் எகிறிக் கொண்டிருந்ததைக் கண்டு கொஞ்சம் காண்டாகத்தான் இருந்தது. நேற்று மதுரவாயல் ஏ ஜி எஸ்ஸில் லயன் கிங் பார்த்து முடிக்கும் வரை அந்த காண்டு குறையவே இல்லை. நாங்கள்லாம் 80’ஸ் கிட்ஸ். எங்களுக்கு சிண்ட்ரெல்லா, ஸ்னோ ஒயிட், ரபேஞ்சல், மோக்லி தான் தெரியும். லயன் கிங் மேல எல்லாம் அவ்ளோ இண்ட்ரெஸ்ட் இல்ல பேபி என்று மகள்களிடம் சொல்லும் போது இருவரும் முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்று விட்டார்கள். ஆனால், நேற்று படம் பார்க்கும் போது பார்க்கனுமே, அவர்களைக் காட்டிலும் லயன் கிங்கை நான் தான் ரொம்பவும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவர்கள் 2டி அனிமேஷனாகவே இரண்டு, மூன்று முறைகள் படத்தைப் பார்த்து விட்டதால் கதை தெரிந்த கதையாகி விட்டது. ஆனபோதும் படத்தின் சி ஜி வேலைகளை மிக ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சில நேரங்களில் 3டி கிளாஸுக்கு வெகு நெருக்கமாக கையயருகில் சிறகடித்த பட்டாம்பூச்சிகளையும், சிம்பாவின் ரோமத்தையும், குட்டிக் குட்டிப் பறவைகளையும் பிடிக்க கைகளை அனிச்சையாக உயர்த்திக் கொண்டிருந்தோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சிம்பா, அதன் சித்தப்பா ஸ்காரின் பேச்சை நம்பி மீண்டும் கழுதைப் புலிகளிடம் வசமாக மாட்டிக் கொள்ளச் செல்கையில் பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்தவர் உணர்ச்சிவசப்பட்டு, ‘எல்லாம் இந்த குட்டிச் சனியனால் தான் வந்தது’ , என்று அறச்சீற்றம் கொண்ட போது ’களுக்’ என்று சிரிப்பு வந்தது. ஆஹா, இந்தப் படத்தில் குழந்தைகளை விட குழந்தைகளாக தங்களை உணரும் பெரியவர்கள் தான் ரொம்பவும் மூழ்கி விட்டார்கள் என்று.

தி லயன் கிங்கில் இருந்து ராஜமெளலி பாகுபலிக்காக உருவிய காட்சிகள் லிஸ்ட்...

படம் பார்க்கச் செல்வதற்கு முன்பே, அதைப் பற்றி அலுவலகத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது, கொலீக் ஒருவர் சொன்னார், பாகுபலி பார்த்துட்டீங்க இல்ல... அதே தான். லயன் கிங்ல இருந்து நிறைய சீன்ஸ் உருவித்தான் பாகுபலியே எடுத்தாங்க. என்று. அப்போது ஃபேண்டஸி மூவி ப்ரியையான எனக்கு கொஞ்சம் கோபம் வந்தது. அட, ராஜமெளலியாவது லயன் கிங்கில் இருந்து சீன் உருவுவதாவது என்று!? ஆனால், யெஸ் பாஸ்... ஜக்கண்ணா, லயன்கிங்கில் இருந்து நிறைய சீன்களை உருவியிருக்கிறார் என்று நேற்று படம் பார்க்கும் போது உணர முடிந்தது.

எந்தெந்த காட்சிகள் என்றால்,  இளவரசன் சிம்பா பிறந்ததும், சிம்பன்ஸி மந்திரி அதை மலை முகட்டில் ஏந்திப் பிடித்து வனத்தில் இருக்கும் பிற விலங்குகள் அனைத்திற்குமாக... அரசனின் வாரிசை ஏந்திப் பிடித்து அறிமுகப்படுத்தும் போது சிவகாமி தேவி, அமரேந்திர பாகுபலி கொல்லப்பட்டதும் உப்பரிகையில் நின்று கொண்டு கைக்குழந்தை மகேந்திர பாகுபலியை அடுத்த அரசனாக நாட்டு மக்களுக்கு அறிவிக்கும் காட்சி  ஸ்பஷ்டமாக கண் முன் வந்தது.

அடுத்து சித்தப்பாவின் நயவஞ்சகத்தை நம்பிக் காணாமல் போகும் சிம்பாவின் ரோமம் பல ஆண்டுகள் கழித்துக் காற்றில் பறந்து வந்து எங்கெங்கோ சுற்றியலைந்து முடிவில் சிம்பன்ஸியின் கையில் சிக்கும் காட்சி அவந்திகாவின் முகமூடி அருவி நீரில் வழிந்து வந்து சிவுவின் கைகளில் சிக்கிய காட்சியை நினைவூட்டியது.

அடுத்து தந்தையின் மரணத்திற்கு தான் தான் காரணம் என்றெண்ணி மருகிக் கொண்டிருக்கும் சிம்பாவுக்கு வாழ்வின் மீதே பற்றில்லாமல் போக பூம்பாவுடனும், டுமானுடனும் தானொரு சிங்கம் என்பதையே உணராமல் பூச்சி, புழுக்களைத் தின்று வாழ்ந்து கொண்டிருக்கிறது. அந்தச் சமயத்தில் புழுக்களைத் தின்று வாழ்ந்தாலும் நாளை நீ காட்டை ஆளும் ராஜாவாகப் பிறந்தவன் என்பதை உணர்த்துவதற்காக சிம்பன்ஸி, சிம்பாவை காடு முழுவதுமாகச் சுற்றிக் கொண்டு அழைத்துச் சென்று ‘நான் யார்?’ எனும் கேள்விக்கு ஆற்று நீரில் முகம் காணச் செய்து சிம்பாவுக்கு அதன் லட்சியத்தை உணர்த்துமிடம் சத்தியமாக பாகுபலியின் வேறொரு உணர்வில் அவந்திகாவுக்கு அழகுணர்ச்சி எழச்செய்யும் படியாக பாகுபலியில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

உச்சகட்டமாக அந்தக் காட்டெருமை சேஸிங் சீன். அம்மாடியோவ்... இது அப்பட்டமான காப்பியே தான்.

இப்படி லயன் கிங் தான் பாகுபலி, பாகுபலி தான் லயன்கிங் என்று தோன்றும் படியாக படத்தில் பல காட்சிகள் இரண்டுக்குமாக ஒத்துப் போயிருந்தன. சரி நாம் என்ன இரண்டு படங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கவா தியேட்டருக்கு வந்தோம் என்று அந்த நினைப்பை புறம்தள்ளி விட்டு படத்தை காட்சிகளுடன் முழுமையாக ஒன்றிப் போய் ரசித்துப் பார்த்தால் நிச்சயமாக தி லயன் கிங் நம்மை நமது குழந்தைப் பருவத்திற்கே அழைத்துச் சென்று விடுகிறார் என்பது உண்மை.

சரி, இனி கதைக்கு வருவோம். 

முஃபாசா சிங்கம் காட்டுராஜா. காட்டில் சிங்கங்களின் எண்ணிக்கை எப்போதுமே குறைவாகத்தான் இருக்கனும் போல. முஃபாசாவின் கூட்டத்தில் இரண்டே இரண்டு ஆண்சிங்கங்கள் மட்டுமே இருப்பதாகப் படத்தில் காட்டப்படுகிறது. முஃபாசாவின் தம்பியின் பெயர் ஸ்கார். அது மிகப் பொல்லாததாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. அண்ணன் முஃபாசா நன்மையின் திருவுரு என்றால் தம்பி ஸ்கார் தீமை எண்ணங்களின் கூடாரம். முதலில் அண்ணன் மேல் பொறாமை கொள்கிறான். அடுத்து புதிதாகப் பிறந்த அண்ணன் மகனைக் கொலை செய்ய சதா திட்டம் தீட்டிக் கொண்டே இருக்கிறான். இது போதுமே இவர்களின் குணவிசேஷம் பற்றி அறிய.

தி லயன் கிங்குக்கு தமிழில் குரல் கொடுத்த பிரபல நடிகர், நடிகைகள்!

இதில் முஃபாசாவுக்கு தமிழில் குரல் கொடுத்திருப்பது ரவிஷங்கர். வேட்டைக்காரன் படத்தில் வாடா, வாடா என்று விஜயைப் பார்த்து கதறுவாரே அவரே தான். இதில் லயன் கிங்குக்காக அமர்த்தலான குரலில் அசத்துகிறார். ஸ்கார் சிங்கத்துக்கு குரல் கொடுத்திருப்பது அர்விந்த் சாமி. செம பாஸ். அரவிந்த் சாமியின் குரலில் விட்டால் ஸ்கார் ஹீரோ ஆகிவிடும் போல. அத்தனை பாந்தமாகப் பொருந்தியிருக்கிறது குரல். பூம்பாவுக்கு ரோபோ சங்கர். செம...செம. மனோபாலா ஜாஸூவுக்கு குரல் கொடுத்திருக்கிறார். கன கச்சிதப் பொருத்தம். சிம்பாவுக்கு சித்தார்த், நாலாவுக்கு ஐஸ்வர்யா ராஜேஷின் குரல் நன்றாகவே பொருந்துகிறது. கழுதைப்புலிகளின் தலைவிக்கு குரல் கொடுத்திருப்பது யார்? அறிமுகமான குரலாகத்தான் தெரிகிறது. எனக்கு அந்த குரலைக் கேட்கையில் சின்னத்திரை நடிகை தேவிப்ரியா குரல் போன்றிருந்தது. அசலாகக் குரல் கொடுத்தது யாரென்று தெரியாவிட்டாலும் அந்தக் குரல் தேர்வும் கச்சிதமாகவே இருந்தது. 

பும்பா ரோபோ சங்கரையும், டிமோன் சிங்கம்புலியும் சான்ஸே இல்லை. கலக்கிட்டிங்க போங்க.

உங்க ‘ஹகுனா மட்டாட்டா’ சாங்  செம கிளாஸ் ப்ரோ என்று கொஞ்சத் தோன்றுகிறது அந்த குட்டிக் குட்டி மிருகங்களை. ஹகுனா மட்டாட்டா என்பது கிழக்கு ஆப்ரிக்காவைச் சார்ந்த ஸ்வாஹிலி மொழி வார்த்தையாம். அர்த்தம் கொள்கையே இல்லாமல் விட்டேற்றியாக வாழ்வதை வாழ்நாள் கொள்கையாக வரித்துக் கொள்வது என்று லயன் கிங்கில் சொல்லப்படுகிறது இன்னும் சிம்பிளாகச் சொல்வதென்றால் பிரச்னை இன்றி வாழ்வதற்குப் பெயர் தான் ‘ஹகுனா மட்டாட்டா’

தி லயன் கிங் படக்குழுவினர்...

வால்ட் டிஸ்னி தயாரிப்பில் ‘தி லயன் கிங்’ முதன்முறையாக 1994 ஆம் ஆண்டு அனிமேஷன் திரைப்படமாக வெளிவந்தது. படத்திற்கான பட்ஜெட் 45 மில்லியன் யு எஸ் டாலர். ஆனால் அது அன்றைய தேதிக்கு வசூலித்துக் கொடுத்த தொகையோ 968 மில்லியன் யு எஸ் டாலர். வசூல்ரீதியாகச் சாதனை படைத்த லயன் கிங்கை மறுபடியும் இப்போது இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்காக 3டி திரைப்படமாக வெளியிட்டிருக்கிறார்கள். படம் வெளிவந்த முதல்நாளே இந்தியாவில் 18 கோடி ரூபாய் வசூலித்ததாகத் தகவல்.

 • படத்தின் ஒளிப்பதிவாளர் Caleb Deschanel.
 • மொத்த நேரம்: 118 நிமிடங்கள். (அதனால் தான் படம் சீக்கிரம் முடிந்து விட்டதான எஃபெக்ட்)
 • அமெரிக்கப்படமான தி லயன் கிங்கின் இன்றைய பட்ஜெட் 260 மில்லியன் யு எஸ் டாலர்கள். இதுவரை படம் வசூலித்திருக்கும் தொகை 531 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
 • வெளியீடு: ஹாலிவுட்டில் ஜுலை 9, 2019 அன்றும் அமெரிக்க முதல் இதர உலக நாடுகள் அனைத்திலும் ஜூலை 19, 2019 அன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
 •  
 • படத்திற்கான இசை Hans Zimmer.

எல்லாக் குழந்தைகளும் லயன் கிங் பாடல்களை மனப்பாடம் செய்யாக் குறையாகப் பாடித்திரிவதைக் கண்டாலே உங்களுக்குத்தெரிந்திருக்க வேண்டும். படத்தின் இசைக்கோர்ப்பு தூள் என்று. அதிலும் இந்த ஸ்கார் சிங்கம், கழுதைப்புலிகளை ப்ரெய்ன் வாஷ் செய்ய பாடலொன்றைப் பாடுமே அது சூப்பர்ப் பாஸ்.படத்திற்கான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் வேலைகளை 1994 ஆம் ஆண்டு லயன் கிங் படத்தில் வேலை செய்த அதே மூவிங் பிக்ஸர்ஸ் கம்பெனி நிறுவனத்தார் செய்து கொடுத்திருக்கிறார்கள். படத்தின் இயக்குனர் ஜான் பாவ்ரீ. தி ஜங்கிள் புக், அயர்ன் மேன் 1 & 2 போன்றவை இவருடைய முந்தைய வெற்றிப்படங்கள். இவர் ஒரு இயக்குனர் மட்டுமல்ல, தான் இயக்கிய படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

படத்தைப் பற்றிப் பேசுவதென்றால் இப்படி நாள் முழுக்கப் பேச விஷயமிருக்கிறது. ஆனால், போதும் நான் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். கட்டுரையை வாசிக்க வாய்த்தவர்கள் மறக்காமல் லயன் கிங் படத்தை தியேட்டருக்குச் சென்று பார்த்து விட்டு உங்களது அனுபவத்தைப் பகிருங்கள்.

‘இந்தப் படம் எனக்கு ஏன் ரொம்பப் பிடிச்சிருக்குன்னா?’ என்று ஆரம்பித்து நீங்கள் பகிரப்போகும் கதையில் ஒளிந்திருக்கிறது மனதின் அடியாழத்தில் ஒளிந்திருக்கும் உங்களது பால்யகாலம்.

முஃபாஸா, சிம்பா, நாலா, பும்பா, டிமோன், ஸாரா, மாண்டிரில் குரங்கு, ஜாஸு எல்லோருமே பாஸிட்டிவ் எனர்ஜி ஊட்டி நம்மை காஸ்மிக் மண்டலத்தில் சிறகு விரித்துப் பறக்க வைத்து விடுகிறார்கள். 

ஸ்கார் பற்றிச் சொல்வதென்றால் யூ ராக்கிங் மேன். ஆனால் ராஜாவாகத் தேர்ந்தெடுத்த பாதை தான் தவறு. சூழ்ச்சிக்கார சகோதரனான ஸ்கார் மலையுச்சியில் தன் அண்ணன் எப்படிச் செத்தாரோ அப்படியே தானும் சாவது வினை விதைத்தவன் வினையறுப்பான் கதையே!

படத்தில் எனக்கு ரொம்பப் பிடித்த காட்சிகள் என்றால்;

 • சிம்பா தன் அப்பாவைப் போலவே கர்ஜிக்க முயலும்போதெல்லாம் பூனைக்குட்டியின் கத்தலாக அதை தாழ்வுணர்ச்சி கொள்ள வைக்கும் குட்டிக் கர்ஜனை சீன்.
 • முஃபாஸா இறந்து விட்ட சோகத்தை மேலும் கனமாக்கும் வண்ணம் இறந்த தன் தந்தையின் உடலோடு உடல் உரசிக்கொண்டு படுத்துக் கண்மூடி உருகும் சிம்பா.
 • பாலைவனத்தில் பினந்தின்னிக் கழுகுகள் வட்டமிடும் போது, என்னை அப்படியே விட்டிருக்கலாம் நீங்க என்று பும்பாவிடம் புலம்பும் சிம்பா.
 • தன் தந்தையின் காலடித் தடத்தில் தன் குட்டிக் கால்களைப் பதிக்கையில் ’ராஜாவாக’ தான் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம் என்பதைப் போல சிம்பா பார்க்கும் ஒரு பர்வை!
 • தந்தையுடன் அந்தி நேரத்து வானத்தை அண்ணாந்து பார்த்து நட்சத்திரக் கதை கேட்கும் சிம்பா.

இப்படி படம் முழுக்க தந்தை, மகன் பாசப்பிணைப்பு அதிகம்.

இவர்களுடன் இவர்களது சகபாடிகளான ஜாஸு, பும்பா, டிமோன், மாண்ட்ரில் குரங்கு இவற்றுடனான உறவுப் பிணைப்பும் அசாத்தியமானது,

படத்தின் வெற்றிக்குக் காரணம் இத்தனையும் சேர்ந்தது தான்.

சரி கடைசியில் என்ன கிடைத்தது? ‘நல்லவன் வாழ்வான், கெட்டவன் சாவான்’ எனும் ஒரு வரி நீதிக்கதை தான்.

ஆயினும் அந்த ஒரு வரி நீதியை அவர்கள் எப்படிச் சித்தரித்திருக்கிறார்கள்? என்பதில் விஸ்வரூபமெடுத்துச் சிரிக்கின்றன படத்திற்கான விஷுவல் டிரீட்டுகள்.

‘தி லயன் கிங்’ குழந்தைகளுக்கான படம் மட்டுமல்ல, குடும்பத்தோடு கண்டு களிக்க வேண்டிய படமும் கூட!

தி லயன் கிங் திரைப்பட விமர்சனத்தை காணொலியாகக் காண விரும்புபவர்கள் தினமணி யூடியூப் சேனலில்  காணலாம்.

 

படம் பார்க்க 3 டி கண்ணாடி ஒன்று தருகிறார்கள். மறக்காமல் அதை திருப்பி அளித்து விட்டு வந்து விடுங்கள் :)

 

]]>
The Lion King movie review, THE LION KING 3D MOVIE, தி லயன் கிங் - விமர்சனம் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/22/w600X390/2.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2019/jul/22/the-lion-king---movie-review-by-karthiga-vasudevan-3197864.html
3196533 சினிமா திரை விமரிசனம் விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’: திரை விமரிசனம் சுரேஷ் கண்ணன் Saturday, July 20, 2019 04:15 PM +0530  

அபத்தமான தேய்வழக்குகளையும்  எரிச்சலூட்டும் கோணங்கித்தனங்களையும் உதறிவிட்டு ஹாலிவுட்டின் கச்சிதமான பாணியில் தமிழ் சினிமா நகர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஆங்கிலம் உள்ளிட்ட இதர மொழிகளில் உருவாகும் சிறந்த திரைப்படங்களைப் பார்த்து வளரும் இளைய தலைமுறை புதிதான, சுவாரசியமான கதைக்களங்களைத் தேடுகிறது. இந்தச் சூழலை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார் இயக்குநர் ராஜேஷ் செல்வா. இதன் குறியீடாக ‘கடாரம் கொண்டான்’அமைந்திருக்கிறது.

இதற்கான பாதையை ‘குருதிப்புனல்’ போன்ற முந்தைய முயற்சிகளின் மூலம் கமல் ஏற்கெனவே அமைத்திருக்கிறார். ‘தூங்காவனம்’ இதைப் போன்று இன்னொரு முன் முயற்சி. அவரது தயாரிப்பில் ‘கடாரம் கொண்டானாக’ இது தொடர்கிறது.

தூங்காவனத்தைப் (Nuit Blanche) போலவே ‘கடாரம் கொண்டானும்’ ஒரு பிரெஞ்சு திரைப்படத்தின் ரீமேக்தான். A bout portant என்கிற 2010-ல் வெளியான பிரெஞ்சு மொழித் திரைப்படத்தின் மறு ஆக்கம் இது.

ஹாலிவுட்டின் கச்சிதமான பாணியைத் தமிழுக்காகக் கொண்டு வந்ததற்காகப் பாராட்டலாம். அதே சமயத்தில் அது எந்த மொழித் திரைப்படமாக இருந்தாலும் அடிப்படையில் சுவாரசியமாகவும் நம்பகத்தன்மையுடனும் இருக்க வேண்டும். வெறும் ஸ்டைலாகப் படமாக்கப்பட்டால் உபயோகமில்லை.

இந்த நோக்கில் முதல் பாதியில் ஓரளவிற்காவது கவனத்தை தக்க வைக்கும் ‘கடாரம் கொண்டான்’, இரண்டாம் பாதியில் முழுக்கவே பொறுமையைச் சோதிக்கிறது.

*

மலேசியாவில் புதிதாகக் குடியேறும் இளம் மருத்துவராக வாசு (அபி ஹாசன்), தன் காதல் மனைவி ஆதிரா (அக்ஷரா ஹாசன்) கருவுற்றிருப்பதால் மகிழ்ச்சியடைகிறார். தம்பதியினர் தங்களின் குழந்தையைப் பற்றிய கனவுகளில் மூழ்குகிறார்கள்.

இந்த நிலையில் அடையாளம் தெரியாத ஒரு நபர் (விக்ரம்) சாலை விபத்தில் சிக்கி, சுயநினைவை இழந்து உயிருக்குப் போராடும் நிலையில் வாசு பணிபுரியும் மருத்துவனையில் அனுமதிக்கப்படுகிறார். சில மர்ம நபர்கள் வாசுவின் கர்ப்பிணி மனைவியைக் கடத்திச் செல்கிறார்கள். ‘மருத்துவமனையில் இருக்கும் அந்த ஆசாமியை வெளியே கொண்டு வா. உன் மனைவியை உயிரோடு விட்டுவிடுகிறோம்’ என்று வாசுவிற்கு மிரட்டல் விடுகிறார்கள். இன்னொரு பக்கம், கேகே என்று பூடகமாக அடையாளம் காணப்படும் அந்த மர்ம ஆசாமியைக் கொல்லவும் சதி நடக்கிறது.

மருத்துவமனையில் இருக்கும் மர்ம ஆசாமி யார், அவரை ஏன் சிலர் விடுவிக்கவும் கொல்லவும் நினைக்கிறார்கள், வாசுவிற்கும் அவனது மனைவிக்கும் என்னவானது என்பதையெல்லாம் பரபரப்பான காட்சிகளின் வழியாகச் சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

*
திரைக்கதை எத்தனை சுமாராக இருந்தாலும் ஒரு கதாபாத்திரத்திற்காகத் தன்னை வருத்திக் கொள்வதிலும் அதற்காக மெனக்கெடுவதிலும் விக்ரம் நூறு சதவீத உழைப்பைத் தருபவர். இதிலும் அப்படியே. வித்தியாசமான சிகையலங்காரம், பிரம்மாண்டமான உடல் அமைப்பு, முகத்தின் தையல், உடம்பின் டாட்டூக்கள், புகையும் சுருட்டு என்று அசர வைக்கும் தோற்றத்தில் வருகிறார். ஆனால் விக்ரமின் இந்த உழைப்பை இயக்குநர் முழுமையாகவும் சிறப்பாகவும் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது.

வாசுவாக, நாசரின் மகன் அபி ஹாசன். முதல் படம் என்று சொல்லவே முடியாத அளவிற்கு மிக இயல்பாக நடித்திருக்கிறார். துப்பாக்கியைப் பிடித்துக்கொண்டு நடுங்கிக்கொண்டே இவர் விக்ரமை மிரட்டும் காட்சிகளில் தன் அசட்டுத்துணிச்சலையும் இயலாமையையும் நன்றாகப் பிரதிபலித்திருக்கிறார்.

ஆதிராவாக அக்ஷரா. படத்தின் தயாரிப்பு கமல் என்பதால் வலுக்கட்டாயமாக இணைத்தது போல் இருக்கிறது. என்றாலும் கணவனின் மீது மெல்லிய கோபத்தைக் காட்டுவதிலும் கிளைமாக்ஸ் போராட்டத்திலும் நன்கு நடித்திருக்கிறார். கணவன்-மனைவி இருவருக்கும் இடையிலான உறவு நன்றாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

கமலின் தயாரிப்பு என்னும் போது அதில் நடிகர்களின் தேர்வு எப்போதுமே சிறப்பாக இருக்கும். இதிலும் அப்படியே. சில நிமிடங்கள் வந்தாலும் கம்பீரமான காவல்துறை அதிகாரியாக வருகிறார் மலையாள நடிகை லீனா. வில்லனாக வரும் விகாஸ் தனது தோற்றத்திலேயே மிரட்டுகிறார். ‘டெர்மினேட்டர்’ வில்லனுக்கு பெண் வேடம் அணிந்தது போல் கச்சிதமான உடலமைப்புடன் வரும் இளம் காவல் அதிகாரி வரை பாத்திரங்கள் அத்தனை சிறப்பாக அமைந்திருக்கின்றன.

இந்தத் திரைப்படத்தின் பெரிய பலங்களுள் ஒன்று ஜிப்ரானின் பின்னணி இசை. பாடல்கள் அத்தனை கவராவிட்டாலும் அட்டகாசமான பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார். அதிலும் விக்ரம் தோன்றும் போதெல்லாம் வரும் ஒரு பிரத்யேகமான இசை தனித்துக் கவர்கிறது. போலவே ஸ்ரீனிவாஸ் ஆர் குப்தாவின் ஒளிப்பதிவில் அசாதாரணமான உழைப்பு தெரிகிறது. துரத்தல் காட்சிகளையெல்லாம் ஹாலிவுட் பாணியில் படம் பிடித்திருக்கிறார்கள். இரண்டே மணி நேரத்தில் முடியும்படியாகச் கச்சிதமாக தொகுத்திருக்கிறார் எடிட்டர் கே.எல். ப்ரவீன்.

இந்தத் திரைப்படத்தின் சிறப்பம்சங்களாக சிலவற்றைச் சொல்லலாம். விக்ரமின் பின்னணி பெரும்பாலும் பூடகமாகவே சொல்லப்படுகிறது. ஒருவகையில் இதுவே இந்த திரைக்கதையின் பலமும் பலவீனமும். ஓரிடத்தில் ‘டபுள் ஏஜெண்ட்’ என்கிறார்கள். அவர் நல்லவரா, கெட்டவரா என்பதை பார்வையாளர்களின் யூகத்திற்கே விட்டிருப்பதும் ஒருவகை சுவாரசியம்தான். ஆனால் இதற்காகவே சிலர் குழம்பலாம். எந்த நிலையில் நின்று படம் பார்ப்பது என்று தத்தளிக்கலாம்.

இதைப் போலவே விக்ரமின் சாகசத்தையும் மிதமாக அமைத்திருக்கிறார்கள். தடாலடி வேலையெல்லாம் இல்லை. அலட்டிக் கொள்ளாமல் தன் கம்பீரத்தைக் காட்டியிருக்கிறார் விக்ரம்.

சாகசம் செய்யும் பாத்திரத்திற்கும் அவருடன் பயணிக்கும் அப்பாவி பாத்திரத்திற்கும் வலுக்கட்டாயமாக ஒரு சென்ட்டிமென்ட்டை உருவாக்கி விடுவார்கள். இதுதான் பொதுவான வழக்கம். ஆனால் இந்த விஷயம் இந்தத் திரைப்படத்தில் அடக்கி வாசிக்கப்பட்டிருக்கிறது. சிக்கித் தவிக்கும் அப்பாவி இளைஞன் அபி ஹாசனை சில சமயங்களில்  ‘அம்போ’ வென்று விட்டு விட்டுச் சென்று விடுகிறார் விக்ரம்.

காவல்துறையும் மாஃபியாவும் பின்னிப் பிணைந்து யார் எந்த கோஷ்டியில் இருக்கிறார்கள் என்றே கண்டுபிடிக்க முடியாத அளவிற்குக் காவல்துறை கெட்டுப் போயிருக்கும் பின்னணியை நன்குச் சித்தரித்திருக்கிறார்கள்.

ஆனால், ஓர் இளம் மருத்துவர் இத்தனை சாகசங்களை செய்யத் துணிவாரா என்பது முதல் பல கேள்விகள் துவக்கத்திலேயே தோன்றி விடுவதால் இது தொடர்பான நம்பகத்தன்மையற்ற காட்சிகளை எவ்விதப் பிணைப்புமில்லாமல் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரு கட்டத்தில் காவல்துறையிடம் தஞ்சம் அடைகிற சூழல் அமைந்தாலும் அதைக் கைவிட்டு அபி ஹாசன் ஓடுவதில் நம்பகத்தன்மையே இல்லை.

அதிலும் கிளைமாக்சில் காட்டப்படும் போலீஸ் ஹெட்குவார்ட்டர்ஸ் சந்தைக்கடை போலவே இருக்கிறது. இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு பிரேமிலும் குறைந்தது பத்து பேராவது இருக்கிறார்கள். ஒரு நெரிசலான ‘பப்’பில் ஏறத்தாழ முழுத் திரைப்படமும் நிகழும் தூங்காவனம் எடுத்த ஹேங்க்ஓவரில் இருந்து ராஜேஷ் செல்வா இன்னமும் வெளியே வரவில்லையோ என்று தோன்றுகிறது.

யார் எதற்காக ஒடுகிறார்கள் என்பது சுருக்கமாகச் சொல்லப்பட்டு விட்டாலும் இவற்றின் பின்னணி தெளிவாகவும் கோர்வையாகவும் இல்லை. திரைக்கதையின் பலவீனம் நம்மை சோர்வுறச் செய்கிறது.

விக்ரம் பெரும்பான்மையான சமயங்களில் தோற்கும் அணியில் இருக்கும் மிகச் சிறந்த வீரராக இருக்கிறார். இந்தத் துரதிர்ஷ்டம் ‘கடாரம் கொண்டானிலும்’ அவரைத் துரத்துகிறது. 

 

 

]]>
Movie review, Tamil Cinema News, Kadaram Kondan, kadaram kondan review, Kadaram Kondan Movie Review, Kadaram Kondan first reviews https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/20/w600X390/kadaramkondanreview.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2019/jul/20/kadaram-kondan-movie-review-3196533.html
3195549 சினிமா திரை விமரிசனம் விமர்சனம்: தோழர் வெங்கடேசன் - சிந்திக்கவும் வைக்கும் சினிமா இது...! - ஜி. அசோக் Friday, July 19, 2019 05:55 PM +0530  

இந்தியாவின் அரசியல், நீதிபரிபாலன பகட்டு பளபளப்புகளுக்குப் பின் பல் இளிக்கும் அவலங்களை வெளிச்சம் போட்டு  காட்டுகிறது "தோழர் வெங்கடேசன்.'

!படத்தில்... பதவியைத் தக்க வைக்கத் தகிடுதத்தம் செய்யும் அரசியல்வாதிகள் இல்லை. ஆனால், காட்சிக்கு காட்சி, வசனத்துக்கு வசனம் சுளீர் அரசியல் பேசுகிறான் இந்த "தோழர் வெங்கடேசன்'!

காஞ்சிபுரத்தில் சோடா தயாரித்து கடைக்குக் கடை போடுகிறவர் ஹரிசங்கர். அங்கேயே தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தும் பெண் மோனிகா சின்னகொட்லா. இந்த இரண்டு பேருக்கும் காதல். அவர்களுக்குள் நிரம்பி கிடப்பது எல்லாமே அன்பு, நேசம். 

அப்போது திடீரென்று ஒரு விபத்து. அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழக்க,  விபத்தில் சிக்கி இரண்டு கைகளையும் இழக்கிறார் ஹரிசங்கர். 

அரசுப் பேருந்துகளுக்கு இன்சூரன்ஸ் கிடையாது என்பதால், நஷ்ட ஈடு வாங்குவதற்குள் அவர்களின் வாழ்க்கையே சூனியமாகிறது. வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் அரசுப் பேருந்தை ஜப்தி செய்து அதை பாதிக்கப்பட்ட அவர்களிடம்  ஒப்படைக்கிறது. அந்தப் பேருந்தை வைத்துக் கொண்டு அவர்கள் படும் பாடுகள், அந்த எளிமையான காதல் எல்லாமும்தான் கதை.

வழக்கின் இழுத்தடிப்பு, அதன் விளைவு என்ன, ஹரிசங்கரின் போராட்டங்கள் என்ன தாக்கத்தை உண்டாக்குகின்றன போன்ற தொடர் சம்பவங்களை மனதில் ஆதங்கமும் ஆவேசமுமாகப் பதியச் செய்கிறது படம்!

சினிமா எனும் அதிகவனம் ஈர்க்கும் பொதுத்தளத்தில், அந்தப் பொதுத் தளத்தின் மனசாட்சியையே சாட்டையால் விளாசியிருக்கிறது கதையின் கரு.
காவல் நிலையத்தில் ""என் பஸ்ஸ காணலே சார்...'' என படத்தின் நாயகன் அறிமுகமாவது முதல், கொதிகொதிக்கும் கிளைமாக்ஸ் வரை... படத்தின் எந்தவொரு இடத்திலும் சினிமா சாயல் இல்லை. "அபத்தங்களைக் கொண்டாடி' பழகிய சினிமாவில் இது புது பாட்டை. இயக்குநர் மகா சிவனுக்கு நமது கை குலுக்கல்.

சட்டத்தின் மேல் இருக்கிற நம்பிக்கை அற்று போகும் அளவுக்கு, கதையின் சாராம்சம் இருப்பது பார்ப்பவர்களுக்கு அச்சம் கொடுக்கும். இன்னும் எத்தனை காலம்தான் எதற்கும் ஆகாத இந்த சட்டங்களை வைத்துக் கொண்டு அல்லாடப் போகிறது என கேள்வி கேட்கத் தோன்றும்.  நேர்மை ஜெயிக்குமா... என்று தெரியாது. ஆனால், நியாயம் கண்டிப்பாக உலகத்துக்குப் புரியும். நேர்மை நமக்கே புரிய கொஞ்ச நேரம் பிடிக்கும். அந்த நேரத்திற்குள் நடப்பதை ஒரு படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர்.  அப்பாவித்தனம், பரிதாபம் மிதக்க வெகுளியாக வாழ்ந்திருக்கிறார் ஹரிசங்கர். எளியவனைப் பிரதிபலிக்கும்போது ஒரு நடிப்பும்,  கைகளை இழந்த பாவனையில், அதற்கென ஒரு நடிப்பும் என்று மிளிர்கிறார். இயலாமையின் கரைகளில் நின்று கொண்டு ஆவேசம் காட்டும்போதெல்லாம்... அற்புதம்!

மோனிகா... அத்தனை இயல்பான உடல் மொழி. வசன உச்சரிப்பு, காதல் சுமக்கும் கண்கள், துணிச்சல் தருணங்கள் என கலங்கடிக்கிறார். 

கதை ஓட்டத்துக்கு பக்கபலமாக கைத்தட்டல் அள்ளுகிறது வேதா செல்வத்தின் கேமரா. காஞ்சி நகரத்துக்குள் உலா வருவதைக் காண்பிப்பதிலும், ஹரிசங்கரின் வீட்டின் ஒவ்வொரு சதுர அடியைக் காண்பித்ததிலும் கனகச்சிதம். ""எனது உயிரைப் பார்க்கிறேன்....''  பாடலில் காதல் சோகம் கடத்துகிறது சகிஸ்னாவின் இசை. 

 ஒரு தேசம் அதன் எளிய மனிதர்களை அனுசரிக்க முடியாததுதான் இங்கே பிரச்னை. சுதந்திரத்துக்கும் கனவுக்கும் இடையில் சிக்கிக் கொண்டு திண்டாடும் எளியவர்கள் எத்தனை பேர். ஒரு கட்டத்தில் நிராகரிப்புகளும், புறக்கணிப்புகளும் மலிந்து விட்ட இந்த சமூகத்தின் மேல் எளியவர்களுக்கு கோபம் வருகிற இயல்பை,  நிகழ்கால அநீதிகளை, அபத்தங்களை போகிற இடமெல்லாம் சுட்டி, குட்டிக் காட்டுகிறது படம்.

கேளிக்கை கொண்டாட்டங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த சினிமா சேராது. அதே சமயம் மனதைத் தைக்கும், உணர்வுகளை உருக்கும் காட்சிகள்..  போதவில்லையே!

ஆங்காங்கே தத்துவம் பேசும் அரசியல் - அதிகார மையங்களை சகட்டுமேனிக்கு போகிற போக்கில் சவட்டியெடுக்கும் கதையில், அது தொடர்பான பளீர் வசனங்கள் இல்லாதது பெரும் குறை. படம் முழுக்க இருக்கும் எதிர்மறை தொனியையும் தவிர்த்திருக்கலாம். 

போலீஸ் காவல், நீதிமன்ற அறிவுறுத்தல், அதிகாரத் தாக்குதல் என நித்தம் நித்தம் கடக்கும் போராட்ட களங்களை வெறும் செய்திகளாக கடந்து சிரிக்கும் மக்களிடம்... இதற்கெல்லாம் யார் பொறுப்பு என்று சிந்திக்க வைக்கிறான் இந்த "தோழர் வெங்கடேசன்.'!

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/19/w600X390/mvoie.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2019/jul/19/விமர்சனம்-தோழர்-வெங்கடேசன்---சிந்திக்கவும்-வைக்கும்-சினிமா-இது-3195549.html
3183148 சினிமா திரை விமரிசனம் ஹவுஸ் ஓனர்: விமர்சனம் ஜி. அசோக் Tuesday, July 2, 2019 02:56 PM +0530
சென்னைப் பெருவெள்ளத்தின் ஒரு துளி கோர முகம் இந்த ஹவுஸ் ஓனர்!
 கிஷோர், ஸ்ரீரஞ்சனி இருவரும் தனியே வாழும் தம்பதி. ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற கிஷோருக்கு அல்ஸைமர் நோய் பாதிப்பு. காதல், கல்யாணம் என கடந்த கால நினைவுகளில் மட்டுமே திளைக்கிற மனிதர்.  மனைவியின் அன்பையும், பாச பரிதவிப்பையும் புரிந்துகொள்ள முடியாத சூழல். தற்போது என்ன நடக்கிறது... கூடவே இருப்பது யார்... என்றே தெரியாத அளவுக்கு நோயின் தாக்குதல்.

 2015-ஆம் ஆண்டு சென்னைவாசிகளை அச்சுறுத்திய அந்தப் பெருவெள்ளத்தின் ஒரு நாள்... உதிரமாய், கண்ணீராய் வாழ்க்கையை மாற்றிவிட்ட அந்த நாளில் வீட்டுக்குள் இருந்து வெளியேற முடியாத, கிஷோர் - ஸ்ரீரஞ்சனி தம்பதிக்கு நடந்தது என்ன என்பதை முதுகுத் தண்டு ஜில்லிட விளக்குகிறது கதை.

  பேய், அமானுஷ்யம் என எதுவும் இல்லாமல், தண்ணீர்த் துளிகள் மூலமாகவே த்ரில் கூட்டும் திரைக்கதை அமைத்து அழுத்த முத்திரை பதிக்கிறார் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன். மிக இயல்பாக கிஷோர் - ஸ்ரீரஞ்சனி காதல், கல்யாண நினைவுகளும்  அடுத்த நொடி என்ன நடக்கும் என்கிற சஸ்பென்ஸ் முடிச்சுமாக முதல்பாதி அசத்துகிறது.  ஏதோ நடக்க இருக்கும் போது எல்லாம்  குறிப்பு உணர்த்த வரும் பாம்பு  ப்ளஸ் தண்ணீர் காம்பினேஷன் ஐடியா... அபாரம்!
 கிருஷ்ணா சேகர் டி.எஸ். ஒளிப்பதிவில் திரையில் விரியும் காட்சிகள்தான் படத்தின் முதல் ஹீரோ.  அன்பை, அவஸ்தையை, பிரியத்தை, பிரிவை, நினைவை அள்ளி அள்ளி இறைத்தபடி பெய்கிற மழையைப் படம் பிடித்த விதத்தில் அத்தனை ஈரம்.

இமையில் பட்டுத் தெறிக்கும் ஒரு துளியைப் போல, ஜன்னலில் நடனமாடும் குல்மொஹரைப் போல, அறை எல்லாம் தீற்றிக் கொள்ளும் சேற்றைப் போல, வெளியே எட்டிப் பார்த்தால் கொஞ்ச நேரத்தில் தலையில் சொட்டும் ஈரம் போல, குடையில் கொஞ்சம் பள்ளம் பறித்து முட்டியை நனைக்கும் நீரைப் போல திரையில் எங்கெங்கும் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கிறது கேமரா கோணங்கள். 


நைச்சியமாக நழுவுவதும் ஆக்ரோஷமாகப் பாய்வதுமாக ஒரு கதாபாத்திரமாகவே மாறி பரவசப்படுத்தி திகிலூட்டி மிரட்டுகிறது மழைக் காட்சிகள். காதல் மயக்கமும், ராணுவ புன்னகையுமாக கிஷோர் அட்டகாசப்படுத்துகிறார். ராணுவ அதிகாரியின் விறைப்பில் அட்டகாசமான உடல்மொழி வேறுபாடுகள். அன்பு, கருணை, ஈரம், காதல் என காட்சிக்கு காட்சி  ததும்பி நிற்கிறார்.

எந்த பிரமிப்பும், ஏக்கமும் இல்லை. யார் குறித்த அச்சமும் இல்லை. மழையா... எங்கே...? என அப்பாவியாகக் கேட்கும் போதெல்லாம், கிஷோரின் அறியாமை கோபத்தை வரவழைக்கிறது. டி.வி.யில் வானிலை அறிவிப்பாளரைப் பார்த்து இவன் என்ன சொல்றான்... மழை எங்கே...? என கடக்கும்போது, கிஷோரின் பதற்றம் நமக்கும் உதறலைக் கொடுக்கிறது. மழைக் காலத்துக்கான உணவை கோடையில் சுமந்து திரியும் எறும்பைப் போல், கடந்த கால காதலை, அன்பை, நேசத்தை சுமந்து திரியும் கிஷோரின் கண்களில் அத்தனை ஏக்கம். 

கண்களிலேயே காதலை சுமக்கும் ஸ்ரீரஞ்சனிக்கு மைல்கல் சினிமா இது. ராதாவா... அப்ப நான் யாரு...? என இயல்பாக கணவனை கடக்கும் ஸ்ரீரஞ்சனி, அதே இயல்புடன் நடிக்கவும் செய்கிறார். பெரு வெள்ளத்தை கடக்க முடியாத பெண்ணாக, அவர் காட்டும் பாவனைகள் அத்தனை அபாரம்.

காதல், கல்யாணம் என கிஷோர் - ஸ்ரீரஞ்சனியின்  முந்தைய பாதிகளில் பசங்க கிஷோர் - லவ்லின். புது மணப்பெண் எனத் தோன்றும் ஃபிரேம்களில் எல்லாம் கச்சிதக் கவிதை புதுமுகம் லவ்லின். டிவியில் ஒளிபரப்பாகும் மழைச் செய்திகளை கடக்கும் போதெல்லாம், நமக்கும் அந்த பெருவெள்ளத்தின் ஞாபகங்கள் வந்து போவது க்ளாஸ்.

 ஜிப்ரானின் பின்னணி இசை அவ்வளவு நேர்த்தி. படத்துக்கு எக்ஸ்ட்ரா டெரர் ஏற்றுகிறது. கண் எதிரே வானத்தில் நூல் பிடித்த மாதிரி மழை நெருங்கி வருவதைக் காட்டுவதில் இசைக்கத் தொடங்கி, வீட்டுக்குள் சொட சொடவென நமக்கு முன்னும் பின்னும் கொட்டிச் சூழும் மழையை மௌனத்தால் சூழ்கிறது ஜிப்ரானின் இசை.

கிறுகிறுவென்று திகில் கூட்டும் திரைக்கதை இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே சுணங்கி அடங்கிப் போவதுதான் ஏமாற்றம். பெரும் துயரம் நடக்க போகிறது என்று கதை தடதடக்கும் போதெல்லாம் காதல் ஃப்ளாஷ்பேக்கை ரொம்ம்ம்பவே நிதானமாக சொல்கிறார்கள். மழை நீர் சூழ்கிறது என்ற உண்மை தெரிந்தவுடனேயே படம் முடிந்துவிடுகிறதே!  

நேர்த்தியான கதை சொல்லும் பாணியால் தமிழ் சினிமாவின் நம்பிக்கை பெண் இயக்குநர்கள் பட்டியலில் இடம் பிடிக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்!

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/2/w600X390/houseowner.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2019/jul/02/ஹவுஸ்-ஓனர்-விமர்சனம்-3183148.html
3181140 சினிமா திரை விமரிசனம் விஜய் சேதுபதியின் ‘சிந்துபாத்’ - திரை விமரிசனம் சுரேஷ் கண்ணன் Friday, June 28, 2019 10:55 AM +0530  

‘கன்னித்தீவு’ கதை பற்றி நமக்குத் தெரியும். இளவரசி லைலாவிற்காக மந்திரவாதி மூசாவைத் தேடி தளபதி சிந்துபாத் மேற்கொள்ளும் நீண்ட பயணமும் அதிலுள்ள சாகசங்களும்தான் அந்தக் கதை.

அப்படியொரு கதையை நவீன வடிவில் தந்திருக்கிறார் அருண்குமார். நாளிதழில் வெளிவந்துக் கொண்டிருக்கும் கதை எப்போது முடியும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் இந்த திரைப்படமோ ‘எப்போது முடியும்’ என்கிற சலிப்பை உருவாக்குகிறது.

‘பண்ணையாரும் பத்மினியும்’ என்கிற இயல்பான திரைப்படத்தையும், ‘சேதுபதி’ என்கிற சகித்துக் கொள்ளக்கூடிய மசாலா திரைப்படத்தையும் தந்த இயக்குநர் அருண்குமார், அவ்விரு படங்களையும் கலந்து தரும் விபரீத முயற்சியை இதில் முயன்றிருக்கிறார். ஆனால் கலவை சரியாக அமையவில்லை என்றே சொல்ல வேண்டும்.  

*

தென்காசியில் பிக்பாக்கெட் திருடனாக இருப்பவர் விஜய் சேதுபதி. அவருடைய தம்பி மாதிரி இருப்பவன் சூர்யா. (விஜய்சேதுபதியின் மகன் – இதில் அறிமுகம்). வழக்கமான ஹீரோ போல, கண்ணில் தென்படும் அஞ்சலியைப் பார்த்த கணத்திலிருந்தே காதலிக்கத் துவங்குகிறார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதிக்குக் காது கேட்பதில் சிறிது குறைபாடு. மற்றவர்கள் ஆட்சேபிக்கும்படி சத்தமாக பேசும் பழக்கம் உள்ளவர் அஞ்சலி. இந்த எதிர்முரண் அவர்களை இணைக்கிறது. திருமணத்தில் சில இடைஞ்சல்கள் ஏற்படுவதால் ‘திடீர்’ திருமணம் செய்கிறார் விஜய் சேதுபதி.

மலேசியாவில் ரப்பர் தோட்டத் தொழிலாளியாகப் பணிபுரிந்து கொண்டிருப்பவர் அஞ்சலி. கொத்தடிமை மாதிரி அங்கு உழைப்பை உறிஞ்சுகிறார்கள். அவர் விடுமுறையில் தென்காசிக்கு வந்திருக்கும் போதுதான் இந்தக் காதலும் திடீர் திருமணமும் நிகழ்கிறது. “ஊருக்குப் போய் பணத்தை வாங்கி விட்டு திரும்ப வருகிறேன்” என்று மலேசியா செல்கிறார் அஞ்சலி. ஆனால் திரும்பவில்லை. அவர் ஒரு பயங்கரமான சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பதை விஜய் சேதுபதி அறிகிறார்.

அஞ்சலியை மீட்பதற்காக விஜய் சேதுபதி மேற்கொள்ளும் பயணமும் சாகசங்களும்தான் மீதிப்படம்.

*

விஜய்சேதுபதி வழக்கம் போல் தன் பிரத்யேகப் பாணியில் அநாயசமாக நடித்திருக்கிறார். அனைத்தையும் அலட்சியமாகவும் நக்கலாகவும் அணுகும் பாணி. இது இன்னமும் சலித்துப் போகாததால் மக்கள் ரசிக்கிறார்கள். ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ ஆர்யா மாதிரி முகத்தை விநோதமான கோணத்தில் வைத்துக் கொண்டு அவர் அஞ்சலியை சைட் அடிப்பது ரசிக்க வைக்கிறது.

விஜய் சேதுபதியின் உடன்பிறவா தம்பி மாதிரியான பாத்திரத்தில் அறிமுகமாகியிருக்கிறார் சூர்யா விஜய் சேதுபதி. முதல் படத்திலேயே ‘பாஸ் மார்க்’ வாங்கியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். தந்தையைப் போலவே இயல்பான நடிப்பு. ‘சினிமாத்தனமான’ முந்திரிக்கொட்டை சிறுவனாக இவர் பாத்திரத்தை சித்தரிக்காததற்காக இயக்குநருக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆனால் சிலபல இடங்களில் என்ன மாதிரியான எதிர்வினையைத் தருவது என்று புரியாமல் இவர் குழம்பி நிற்பது தெரிகிறது.

‘எங்கேயும் எப்போதும்’ திரைப்படத்தில் வரும் துடுக்குத்தனமான இளம்பெண் பாத்திரத்தை இதிலும் தொடர்கிறார் அஞ்சலி. என்றாலும் ரசிக்க முடிகிறது. விஜய் சேதுபதியை முதலில் பிடிக்காமல் துரத்தியடிப்பது, பிறகு காதலில் வீழ்வது, சிக்கலில் மாட்டிக் கொண்ட பிறகு ஏற்படும் பரிதவிப்பு என்று தன் பங்களிப்பைச் சரியாகத் தந்திருக்கிறார்.

விஜய் சேதுபதியும் சூர்யாவும் மாறி மாறி அள்ளி விடும் பொய்களை நம்பி ஏமாறும் அப்பாவி ‘மாமா’ பாத்திரத்தில் ரசிக்க வைக்கிறார் ஜார்ஜ் மரியான். அதிலும், ‘என் மூஞ்சைப் பார்த்து ராஜஸ்தான் –ன்னு நம்பினே பாரு” என்று சூர்யா இவரைக் கலாய்ப்பது ரகளையான நகைச்சுவை.

விவேக் பிரசன்னாவின் பாத்திரம் எதற்கென்றே தெரியவில்லை. பட்டுப்புடவையின் சரிகை மாதிரி ஓரமாக வந்து போகிறார். லிங்கா வழக்கமான வில்லத்தனம். புதிதாக ஒன்றுமில்லை.

காஸ்மெட்டிக் உலகின் கள்ளச்சந்தைக்காக மனிதர்களின் தோல் சட்டவிரோதமாக கடத்தப்படுகிறது. படத்தின் இந்த ஆதாரமான விஷயத்தைத் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டுச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர். நிலப்பரப்பின் பின்னணி எது என்பது பல சமயங்களில் குழப்புகிறது. தென்தமிழகம் என்று டைட்டில் போடுகிறார்கள். இரண்டாம் பாகத்தில் அது மலேசியாவா, தாய்லாந்தா, கம்போடியாவா என்று தலையைச் சுற்றுகிறது.

இயல்பாகப் பயணிக்கும் முதல் பாதியை ஓரளவிற்குச் சகித்துக் கொள்ள முடிகிறது. ஆனால் நம்பகத்தன்மையும் சுவாரசியமும் அற்ற இரண்டாம் பாதியில் அஞ்சலிக்குப் பதிலாக நாம்தான் சிக்கலில் மாட்டிக் கொண்டோமோ என்று அயர்ச்சி ஏற்படுகிறது.

அந்நிய தேசத்தில் நிகழும் அத்தனை பெரிய மாஃபியா கும்பலை எதிர்த்து தனிநபர் செய்யும் சாகசங்கள் நம்பும்படியாக இல்லை. அதிலும் ஒரு கட்டத்தில் காவல்துறை உதவி செய்வதாகக் கூறும் போது அதையும் மறுத்து விடுகிறார் நாயகன்.

இத்தனை நம்பகத்தன்மையற்ற காட்சிகளுக்கு இடையில் சில இடங்களில் இயல்புத்தன்மை எட்டிப் பார்ப்பது ஆச்சரியம். வில்லனும் அவரது ஆட்களும் துரத்தும் போது மலையுச்சியில் மாட்டிக் கொள்கிறார்கள் விஜய் சேதுபதியும் சூர்யாவும். ‘ஓட முடியலை. சுடப் போறாங்க’ என்று மூச்சு வாங்கச் சொல்கிறான் சூர்யா. அதற்கு மேல் எங்கே ஓடுவது என்கிற களைப்பில் விஜய் சேதுபதி சொல்கிறார். ‘சுட்டா செத்துப் போயிடலாம்டா.. ஓடு’. ஒரு வணிகத் திரைப்படத்தின் சாகச நாயகன், தன் இயலாமையை யதார்த்தத்துடன் ஏற்றுக் கொள்ளும் காட்சி அது.

விஜய் சேதுபதியின் காதுகேளாக் குறைபாடே அவருக்குச் சில சமயங்களில் பலமாக இருப்பதை உணர்த்த முயன்றிருக்கிறார் இயக்குநர். ஆனால் அந்த விஷயம் சரியாகப் பதிவாகவில்லை. ஒரு கட்டடத்தின் உச்சியிலிருந்து இன்னொரு கட்டடத்திற்கு சூர்யாவை தாவச் சொல்லும் காட்சியும் விஜய் சேபதி அதற்குத் தரும் பயிற்சியும் அதன் பதைபதைப்பும் நன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

**

படத்தின் பலங்களுள் ஒன்று ஒளிப்பதிவு. தென்காசியின் நிதானமான பின்னணியாகட்டும், தாய்லாந்து சாகசங்களின் பரபரப்பாகட்டும், தனது கடுமையான உழைப்பைத் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன். யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் ஒன்றும் தேறவில்லை. ஆனால் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். எடிட்டர் ரூபன் இன்னமும் சீராகச் செயல்பட்டு படத்தை ஒழுங்குப் படுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

படத்தின் இறுதி டைட்டிலில் Apocalypto உள்ளிட்ட சில ஹாலிவுட் படங்களுக்கு நன்றி சொல்லியிருக்கிறார்கள். அநாவசியம். அவற்றின் சுவாரசியங்களுக்கும் இதற்கும் தொடர்பேயில்லை.

படத்தில் வரும் கதாபாத்திரத்தின்படி விஜய் சேதுபதிக்குக் காது கேட்பதில் குறைபாடு இருக்கிறது. ஆனால் அவசியமான விஷயங்கள் சரியாகக் கேட்கும். அவர் இந்தத் திரைப்படத்தின் கதையையும் சரியாகக் காது கொடுத்துக் கேட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. விஜய் சேதுபதியின் திரைப்பட வரிசையில் வைரங்கள் சமயங்களில் தோன்றுகின்றன. ‘சிந்துபாத்’ போன்ற கவரிங் நகைகளும் வருகின்றன.

]]>
Sindhubaadh movie review https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/6/28/w600X390/Sindhubaadh_Movie_Stills_4xx.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2019/jun/28/sindhubaadh-movie-review-3181140.html
3162957 சினிமா திரை விமரிசனம் செல்வராகவனின் ‘என்ஜிகே’ - திரை விமரிசனம் சுரேஷ் கண்ணன் Saturday, June 1, 2019 11:06 AM +0530  

‘படித்த இளைஞர்கள் அரசியலுக்குள் வரவேண்டும்’ என்கிற செய்தி மணிரத்னத்தின் ‘ஆய்த எழுத்து’ திரைப்படத்தின் வழியாகச் சொல்லப்பட்டது. ஆனால், கல்வி கற்றவர்கள் அரசியலுக்குள் நுழைந்தால் அது சுத்தமாகி விடும் என்பதும் ஒருவகையான சுகமான கற்பனைதான். கல்வியறிவு இல்லாதவர்களும் அரசியல் அதிகாரத்திற்குள் நுழைய முடியும் என்பதே ஜனநாயகத்தின் பெருமைகளுள் ஒன்று. படித்தவனோ, படிக்காதவனோ, தன் தேசம் குறித்த உண்மையான அக்கறை, நேர்மை, பொதுநலன் போன்ற அடிப்படையான விஷயங்களே ஒரு நல்ல அரசியல்வாதிக்குத் தேவை.

மணிரத்னம் சொன்ன அதே விஷயத்தை தன்னுடைய பார்வையில் சொல்ல முயன்றிருக்கிறார் செல்வராகவன். ஆனால் இது ‘செல்வராகவனின்’ படமாக அமையவில்லை என்பதுதான் துரதிர்ஷ்டம்.

ஒருவகையில் இந்தத் திரைப்படத்தை ‘புதுப்பேட்டை’யின் இன்னொரு வடிவம் எனலாம். விளிம்புநிலைச் சமூகத்தில் வாழும் ஒரு சிறுவன், சூழல் காரணமாக குற்றங்களில் வீழ்ந்து எப்படி ஒரு அரசியல்வாதியாக முன்னகர்கிறான் என்பதை அந்தத் திரைப்படம் திறமையாக விவரித்தது. என்ஜிகே-ல் நிகழ்வது வேறு. படித்த, சமூக உணர்வுள்ள ஓர் இளைஞன் அரசியல் அதிகாரத்தின் வழியாகப் பொதுச்சேவையை நிகழ்த்த விரும்புகிறான். அவனுடைய பயணம் எவ்வாறாக இருக்கிறது என்பதை இந்தத் திரைப்படம் விவரிக்கிறது. இதில் சொல்லப்பட்டிருக்கும் சில ஆதாரமான விஷயங்கள் பார்வையாளர்களுக்குச் சென்று சேரப்பட வேண்டியவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தெளிவற்ற திரைக்கதை, வெகுஜன சமரச இடையூறுகள் போன்ற காரணங்களால் இந்தத் திரைப்படம் நிறையவே தடுமாறுகிறது.

*

ஸ்ரீவில்லிப்புத்தூரில் இயற்கை விவசாயம் செய்பவர் நந்த கோபாலன் குமரன் (என்ஜிகே). இவர் செய்யும் உண்மையான சமூகசேவை காரணமாகத் தொகுதியில் நன்மதிப்பைப் பெற்றிருக்கிறார். ஆனால் இவருடைய நேர்மையான அணுகுமுறையால் அரசு அதிகாரிகளை நெருங்கக்கூட முடிவதில்லை. அவசியமான உரிமைகளைக் கூட கேட்டுப் பெற முடியவில்லை. ஆனால் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் இதை ஒரு நொடியில் சாதித்து விடுகிறார்கள். ‘நாங்கள் வாழ்நாள் முழுவதும் போராடுகிற விஷயத்தை அவர்கள் சுண்டுவிரலால் செய்து விட்டுப் போகிறார்கள்’ என்று இவர் மனம் புழுங்க நேர்கிறது.

அரசியல் அதிகாரத்தைப் பெறுவதின் மூலமே பொதுமக்களுக்கான நன்மையை செய்ய முடியும் என்கிற முடிவுடன் அரசியலுக்குள் இறங்குகிறார் குமரன். ஆனால், உள்ளூர் எம்.எல்.ஏ-விடம் எடுபிடியாக இருக்க வேண்டிய நடைமுறை அவமானங்கள் துரத்துகின்றன. எம்.எல்.ஏ-வின் கழிப்பறையைச் சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகள் குமரனின் சுயமரியாதையை தட்டி எழுப்புகின்றன.

ஆனால், ‘சத்திரியனாக இருப்பதை விடவும் சாணக்கியனாக இருப்போம்’ என்கிற தெளிவுடன் அரசியல் அல்லக்கையாகவே பாவனை செய்கிறார் குமரன். இதன் மூலம் எம்.எல்.ஏவின் அபிமானத்தைப் பெற முடிகிறது. இந்தப் பயணம், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய இருவருக்கான பகைமைப் புள்ளியில் சென்று இவரை நிறுத்துகிறது.

பிறகு குமரனுக்கு என்னானது, அவரது இலக்கை எட்ட முடிந்ததா என்பதை மீதமுள்ள காட்சிகள் விவரிக்கின்றன.

*

வருடங்கள் கடக்க கடக்க சூர்யா இளமையாகிக் கொண்டே போகிறார். தன்னுடைய உடலை மிகக் கச்சிதமாகப் பராமரிக்கிறார். நடிப்பதற்கான சந்தர்ப்பங்களையும் அவர் பெரிதும் வீணாக்கவில்லை. சுயமரியாதையுள்ள இளைஞன், அரசியல் அல்லக்கை, அதிகாரத்தை நோக்கி நகரும் மூர்க்கமான அரசியல்வாதி போன்ற பிம்பங்களை அவர் அநாயசமாக வெளிப்படுத்துவது நன்று. ஆனால் கோர்வையற்ற திரைக்கதை காரணமாக இவரது உழைப்பு வீணாகியிருக்கிறது.  இவரின் நோக்கம் என்ன என்பது தெளிவாகப் பதிவு செய்யப்படவில்லை.

குமரனின் மனைவி ‘கீதா குமாரி’யாக சாய் பல்லவி. கணவனை நுட்பமாகச் சந்தேகப்படுவதைத் தவிர வேறொன்றையும் இவர் பெரிதாகச் செய்வதில்லை. இயக்குநர் கற்றுத்தந்த ‘வித்தியாசமான’ நடிப்பை அப்படியே பின்பற்றியிருக்கிறார்.

அரசியல் கட்சிகளின் வியூகங்களை வடிவமைக்கும் ‘கார்ப்பரேட்’ அழகி ‘வானதி’யாக ரகுல் ப்ரீத் சிங். தனது அலட்டலான தோற்றத்திலும் நடிப்பிலும் கவர்கிறார். ஆனால் இவர் நாயகனிடம் காதலில் விழுவது தேய்வழக்கு சினிமாவின் அடையாளம்.

சற்று மிகையான நடிப்பைக் கொட்டினாலும் ஒரு சராசரியான அம்மாவின் பாத்திரத்தை சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார் உமா பத்மநாபன். ‘நிழல்கள்’ ரவி, ‘தலைவாசல்’ விஜய், வேல ராமமூர்த்தி போன்ற நடிகர்கள் ஓரமாக வந்து போகிறார்கள். தளர்ந்து போயிருக்கும் ஒரு அடிமட்டத்து அரசியல்வாதியின் சித்திரத்தை திறமையாக வெளிப்படுத்தியிருக்கிறார் பாலாசிங்.

இளவரசு இயல்பாக நடிக்கக்கூடிய திறமையான நடிகர்தான். ஆனால் அவரைச் சாதாரண பாத்திரங்களில் தொடர்ந்து பார்த்திருப்பதாலோ என்னமோ, அதிகார மமதையில் திளைக்கும் அலட்டலான சட்டமன்ற உறுப்பினராக காண்பது நெருடலாக இருக்கிறது. கன்னடத் திரைப்படங்களில் அதிகமாக நடிக்கும் தேவராஜ் முதலமைச்சராகவும் பொன்வண்ணன் எதிர்க்கட்சித் தலைவராகவும் வந்து போகிறார்கள். உயிரை விடும் பரிதாப நண்பனாக ராஜ்குமார்.

தந்தை இறந்தவுடன் தங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய அரசுப் பணிக்காகக் கூட ஆறுமாதங்களுக்கும் மேல் போராட வேண்டிய அவலமான சூழல் சிலருக்கு ஏற்படுகிறது. ஆனால் உள்ளூர் கவுன்சிலர் ஒரே நிமிடத்தில் இந்த விஷயத்தை முடிக்கிறார். நாயகன் செய்யும் இயற்கை விவசாயத்தை நிறுத்தச் சொல்லி மாஃபியா கும்பல் மிரட்டுகிறது. ஆனால் உள்ளூர் எம்.எல்.ஏ விடம் சரண் அடைந்தவுடன் ஒரே தொலைப்பேசி அழைப்பில் அது நின்று போகிறது.

அடிமட்ட நிலையில் இருந்து முதலமைச்சர் என்கிற உயர்பதவி வரை ‘அரசியல் அதிகாரம்’ என்பது எத்தனை செல்வாக்கானது என்பது இது போன்ற காட்சிகளின் வழியாக மிகத் திறமையாக நிறுவப்படுகிறது. சிப்பாய்கள், தளபதிகள், குறுநில மன்னர்கள், மாமன்னர்கள், பேரரசர்கள் என்று இந்த அதிகாரப் படிநிலைக்களுக்கேற்ப ஒவ்வொருவரும் செல்வத்திலும் அதிகார மமதையிலும் கொழிக்கிறார்கள். தங்களின் ஆதாயத்திற்காக எதையும் செய்ய அவர்கள் தயங்குவதில்லை.

உள்ளூரில் குறுநில மன்னராக உலவும் சட்டமன்ற உறுப்பினர், தனது கட்சியின் தலைமை அலுவலகத்திற்குக் கோயிலுக்குச் செல்லும் பக்தன் போல பயபக்தியுடனும் பணிவுடனும் செல்வது இந்த அதிகாரப் படிநிலையின் நடைமுறை யதார்த்த்தை உணர்த்தும் காட்சிகளாக அமைந்திருக்கின்றன.  

தங்களின் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக எவ்வித கீழ்மையிலும் இறங்கத் தயாராக இருக்கும் இந்த அரசியல்வாதிகள், எதிரிகளின் நடமாட்டத்தையும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களை ஒழித்துக் கட்டுவதற்கான சந்தர்ப்பங்களுக்காக காத்துக் கொண்டேயிருக்கிறார்கள். அல்லது அவற்றை கச்சிதமாக உருவாக்குகிறார்கள். அரசு அதிகாரிகள், காவல்துறை, உளவுத்துறை என்று பெரும்பான்மையான அரசு இயந்திரமும் ஆளுங்கட்சியின் ஏவல் அடிமைகளாக இருக்கும் அவலங்கள் இந்தத் திரைப்படத்தில் சரியாக வெளிப்பட்டிருக்கின்றன.

பொதுவில் நாம் காணும் அரசியல்வாதிகளின் இன்னொரு பக்க பிம்பங்களை அம்பலப்படுத்துவதில் செல்வராகவன் வென்றிருக்கிறார். ‘உன் கட்சில யார் வளர்ந்தாலும் உனக்குப் பிடிக்காதே. என்னையும் அப்படித்தானே போட்டுத்தள்ளப் பார்த்தே?!’ என்று முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் பேசிக் கொள்வது போன்ற காட்சிகளின் வழியாக கடந்த கால தமிழக அரசியல் சம்பவங்கள் உரித்தெடுக்கப்பட்டிருக்கின்றன. ‘மெயின் ரோட்டுக்கு வந்துடும்மா’ என்கிற சமகால அரசியல் கூட அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

அரசியல் என்பது தேச சேவை என்கிற காலமெல்லாம் எப்போதோ மலையேறி போய் விட்டது. இன்று அது மிகப்பெரிய வணிகம். சில கோடிகளை முதலீடு செய்து பல கோடிகளை அள்ளும் தொழில். மக்களுக்குத் தேவையான விஷயங்களை செய்யாமலிருப்பது மட்டுமல்ல, கார்ப்பரேட் கம்பெனிகளுடனான மறைமுக ஒப்பந்தங்களின் மூலம் பொதுச்சமூகத்திற்கு ஆபத்து ஏற்படுத்தும் விஷயங்களும் திரைமறைவில் கனஜோராக நிகழ்கின்றன. தேசத்தையே நோயாக்கும் சீழ்பிடித்த வணிகமாக அரசியல் எவ்வாறு மாறிப் போயிருக்கிறது என்பதை இது தொடர்பான காட்சிகள் வெளிப்படுத்துகின்றன.

இப்படி, சமகால அரசியல் அவலங்கள் குறித்து பல நுட்பமான விஷயங்களைத் திறமையாகக் கட்டமைத்திருக்கும் செல்வராகவன், இதை ஒரு முழுமையான அரசியல் சினிமாவாக உருவாக்குவதில் நிறையவே தடுமாறியிருக்கிறார். பாடல்களும் அநாவசியமான காட்சிளும் இடையூறை ஏற்படுத்துகின்றன. திரைக்கதையிலும் நிறைய குளறுபடிகள். பல உதிரியான முனைகள் நிறைவை எட்டாமல் அந்தரத்தில் நிற்கின்றன.

தன்னுடைய வழக்கமான பாணியைக் கறாராகக் கடைப்பிடிக்க முடியாமலும் வெகுஜன சினிமாவின் வழக்கமான அம்சங்களுக்கு இசைந்திருப்பதற்குமான இடைவெளியில் செல்வராகவன் தத்தளித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் உருவாக்கியிருந்த சில முந்தைய திரைப்படங்களின் வெளியீடுகள் தாமதமாகிக் கொண்டிருப்பதால், அது சார்ந்த மன உளைச்சலில் இந்த சமசரங்களுக்கு செல்வராகவன் பலியாகி விட்டாரா என்கிற வருத்தமும் ஏற்படுகிறது.

*

செல்வராகவன் + யுவன் கூட்டணி என்றால் அதில் பாடல்கள் உத்தரவாதமாக சிறப்பாக அமைந்திருக்கும். ஆனால் இந்த மாயம் இதில் நிகழவில்லை. நாயகனின் சவடால் பாடல்கள் வெறுப்பையே தருகின்றன. ஆனால் இந்த இழப்பை பின்னணி இசையின் மூலம் ஈடுகட்டி விடுகிறார் யுவன். சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு அவசியமான பங்களிப்பைத் தந்திருக்கிறது.

என்ஜிகே-ன் டிரைய்லர் பார்க்கும்போதே அதில் செல்வராகவனின் வாசனையை உணர முடியவில்லை. மாறாக, முருகதாஸ், அட்லி வகையறாக்களின் பாணியே எதிரொலித்தது. திரைப்படமும் இதை உண்மையாக்கியிருக்கிறது. இது செல்வராகவனின் பிரத்யேகத் திரைப்படமாக நிகழாத துரதிர்ஷ்டம் ஒருபுறம் இருந்தாலும் இதில் சொல்லப்பட்டிருக்கும் சில ஆதாரமான அரசியல் விஷயங்களுக்காக எளிதில் நிராகரிக்க முடியாததாகவும் இருக்கிறது.

]]>
selvaraghavan, Suriya, NGK Movie Review https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/6/1/w600X390/ngk_new66.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2019/jun/01/ngk-movie-review-3162957.html
3150313 சினிமா திரை விமரிசனம் விஷாலின் ‘அயோக்யா’ - திரை விமர்சனம் சுரேஷ் கண்ணன் Sunday, May 12, 2019 11:27 AM +0530
தெலுங்கு வெகுசன சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பூரி ஜெகன்னாத். பெயரிலேயே ‘பூரி’ இருப்பதாலோ என்னமோ, இவர் இயக்கும் படங்கள் அனைத்துமே ‘மசாலா’தான். ஆனால் அவை வழக்கமான, தேய்வழக்கு பாணியாக இருக்காது. திரைக்கதையை வித்தியாசமாகவும் சுவாரசியமாகவும் நகர்த்திச் செல்லும் விதமானது, பூரி ஜெகன்னாத்திற்கு ஏராளமான வெற்றிகளை மட்டுமல்லாது பாராட்டுக்களையும் அள்ளித் தந்திருக்கிறது. வெகுசன சினிமாதான் என்றாலும் பிரதான கதாபாத்திரங்களை நுட்பமாக இவர் வடிவமைக்கும் விதத்திற்காக ‘டைனமிக் டைரக்டர்’ என்கிற அடைமொழியை இவர் பெற்றுள்ளார். 

பூரி ஜெகன்னாத் இயக்கியதில் பெரும் வணிக வெற்றியைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்று ‘டெம்ப்பர்’. 2015-ல் வெளியானது. இவரின் வழக்கமான திறமையில் அமைந்த திரைக்கதையும், ஜூனியர் என்.டி.ஆரின் ரகளையான நடிப்பும் இந்தப் படத்தை ‘பிளாக்பஸ்டர்’ வெற்றியாக்கியது. வம்சியின் எழுத்துத்திறமைக்கும் இந்த வெற்றியில் கணிசமான பங்குண்டு. 

இந்த திரைப்படம்தான் இப்போது தமிழில் ‘அயோக்யா’ என்கிற பெயரில் உருவாகியுள்ளது. அறிமுக இயக்குநரான வெங்கட் மோகன், அசல் வடிவத்தை மிகச் சிறப்பாக நகலெடுத்துள்ளார். ஆனால் ‘ஈயடிச்சான் காப்பியாக’ நின்று விடாமல் கிளைமாக்ஸை துணிச்சலாக மாற்றியுள்ளார். ஒரு வெகுசன சினிமாவின் வழக்கமான போக்கிற்கு எதிரான கிளைமாக்ஸ் அது. படத்தின் மையத்திற்கு பொருந்திப் போவதோடு நம்பகத்தன்மையையும் இந்த கிளைமாக்ஸ் மாற்றம் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த முடிவு வெற்றியைத் தேடி தருமா, இல்லையா என்பதை ரசிகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். 

ஒரு கேடுகெட்ட காவல்அதிகாரி ஓர் உணர்ச்சிகரமான திருப்பத்திற்குப் பிறகு நல்ல அதிகாரியாக உருமாறுவதுதான் இதன் ஒரு வரி கதை. எதிர்மறைக் குணங்களை உடைய நாயகன் நேர்மறையாக மாறுகிற கதைகள் இதுவரையான இந்தியச் சினிமாவில் ஏராளமாக உருவாகியுள்ளன. ஆனால் இந்த திரைப்படத்தை வித்தியாசப்படுத்திக் காட்டுவது இதன் சுவாரசியமான திரைக்கதைதான். 

சினிமாவின் வழக்கமான இலக்கணங்களுள் ஒன்றின் படி, இந்த திரைப்படத்தின் நாயகன் யாருமில்லாத அநாதை. சிறுவன் கர்ணணுக்கு பெரும் பணக்காரன் ஆக வேண்டுமென்கிற ஆசை இளம் வயதிலேயே உருவாகிறது. அதற்கான சிறந்த வழி ‘காவல் அதிகாரியாக’ ஆவது என்பதை கண்டுபிடிக்கிறான். குறுக்குவழிகளின் மூலம் அந்த இடத்தை அடைகிறான். பணத்திற்காக எந்த அநீதியையும் செய்யும் பொறுக்கியாக வளர்கிறான். புராணக்கதையில் இருந்த கர்ணன் மற்றவர்களுக்கு அள்ளித் தருபவன். ஆனால் இவனோ மற்றவர்களிடம் இருந்து பிடுங்குகிறவனாக இருக்கிறான்.  

ஆனால் ஒரு சம்பவம் கர்ணனை தலைகீழாக புரட்டிப் போடுகிறது. எந்தவொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் அடிப்படையான நேர்மையுணர்வு அவனுக்குள் விழித்துக் கொள்கிறது. ஒரு நல்ல காவல் அதிகாரியாக மாறி சம்பந்தப்பட்ட அநீதியை இழைத்தவர்களை சட்டத்தின் வழியாக பழிவாங்கப் புறப்படுகிறான். இந்தப் பயணத்தில் அவன் தன்னையே இழக்க வேண்டிய சூழலும் அமைகிறது. 

அப்படி அவன் அடைந்த சிக்கலும் சூழலும் என்ன? அதிலிருந்து அவன் மீண்டானா என்பதை விறுவிறுப்பான இறுதிப்பகுதி சொல்கிறது. 

ஜூனியர் என்.டி.ஆர் திறமையாகக் கையாண்ட பாத்திரத்தில் ஏறத்தாழ கச்சிதமாகப் பொருந்துகிறார் விஷால். இவருடைய  உயரமும் வேகமும் அநாயசமான நடிப்பும் அந்தப் பாத்திரத்திற்கு நிறைய நியாயம் செய்திருக்கின்றன. ஆனால் அசலோடு ஒப்பிடும் போது விஷாலின் நடிப்பு ஜூனியராகத்தான் அமைந்திருக்கிறது. அது மட்டுமல்லாது ஜூனியர் என்.டி.ஆரின் உடல்மொழியையே விஷால் பெரிதும் நகலெடுத்திருக்கிறார். அசல் வடிவத்தைப் பார்த்திருப்பவர்களுக்கு இது சலிப்பூட்டலாம். விஷாலின் பாத்திரம் மட்டுமல்ல, இறுதிக்காட்சியைத் தவிர ஒட்டுமொத்த திரைப்படமுமே அசல் வடிவத்தை விசுவாசமாகப் பின்பற்றியிருக்கிறது. 

அசலில் பிரகாஷ்ராஜ் ஏற்றிருந்த வில்லன் பாத்திரத்தில் பார்த்திபன் நடித்திருக்கிறார். தன்னுடைய பிரத்யேகமான பாணியையும் நக்கலையும் பார்த்திபன் கலந்திருப்பது சுவாரசியம். இன்னமும் சுதந்திரமாக விட்டிருந்தால் இந்தப் பாத்திரம் மேலதிகமாக கவர்ந்திருக்கும். 

இந்த திரைப்படத்தின் முக்கியமான பாத்திரங்களுள் ஒன்றை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஏற்றிருக்கிறார். நேர்மைக்கும் நேர்மையின்மைக்குமான தத்தளிப்பு, இவருடைய பாத்திரத்தின் மூலமாகத்தான் பொங்கி வழிகிறது. விஷாலுக்கும் இவருக்கும் நிகழும் காரசாரமான உரையாடல்கள் பட்டாசு ரகம். தன்னுடைய பங்களிப்பை நிறைவாகச் செய்திருக்கிறார் ரவிக்குமார். 

நாயகி ராசி கன்னாவிற்கு வழக்கமான நாயகிகள் செய்வதைத் தவிர சிறப்பாக வேறு ஒன்றுமில்லை. சிறிய பாத்திரம்தான் என்றாலும் பூஜா தேவரியா நன்றாக நடித்திருக்கிறார். யோகிபாபு, சோனியா அகர்வால் போன்றோர் தோன்றி மறைகிறார்கள். இரண்டே காட்சியில் வந்திருந்தாலும் எம்.எஸ்.பாஸ்கர் உணர்ச்சிகரமான நடிப்பில் கவர்கிறார். 

கார்த்திக்கின் ஒளிப்பதிவு இந்த திரைப்படத்தின் கவரக்கூடிய அம்சங்களுள் ஒன்றாக இருக்கிறது. ராம் – லஷ்மணின் சண்டை வடிவமைப்பு சிறப்பாக கைகூடியுள்ளது. விறுவிறுப்பான திரைக்கதைக்கு பாடல்கள் இடையூறாக அமைந்திருக்கின்றன. இசையமைப்பாளர் சி.எஸ்.சாம், தான் உருவாக்கிய பாடல்களால் ரசிகர்களைக் கவர முடியவில்லையென்றாலும் பரபரப்பான பின்னணி இசையில் தன் அபாரமான திறமையைக் காட்டியிருக்கிறார். 

அசல் வடிவத்தில் இருந்த சில லாஜிக் பிழைகளைக் களைய முயன்றுள்ளார் இயக்குநர் வெங்கட் மோகன். முன்னரே குறிப்பிட்டபடி கிளைமாக்ஸையும் அசல் வடிவத்தில் இருந்து முற்றிலுமாக மாற்றியமைத்துள்ளது வரவேற்கத்தக்க விஷயம். ஆனால் இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துமா என்று தெரியவில்லை. 

‘தாமதமாக கிடைக்கும் நீதி, அநீதிக்கு சமமானது’ என்றொரு சொற்றொடர் உண்டு. மிகக் கொடூரமான குற்றங்களைச் செய்பவர்கள் சட்டத்தில் உள்ள ஓட்டைகளின் வழியாக விசாரணைகளை இயன்ற வரை தாமதப்படுத்துகிறார்கள். சாட்சியங்களை அழிக்கிறார்கள். பிறகு எளிதாக வெளியே வந்துவிடுகிறார்கள். 

அவ்வாறின்றி சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஒரு கொடூரமான குற்றவாளி அடையாளம் காணப்பட்டால் தாமதம் ஏதுமின்றி அவனுக்கு தூக்குத் தண்டனை தரப்பட வேண்டும் என்கிற பொதுப்புத்தி சார்ந்த உணர்ச்சிகரமான சிந்தனையை இந்த திரைப்படம் மிக அழுத்தமாக வலியுறுத்துகிறது. 

முன்னேறிய நாடுகள் பல மரண தண்டனையை நீக்கியுள்ளன. ‘மரண தண்டனை வேண்டுமா, கூடாதா’ என்கிற விவாதம் பல்லாண்டுகளாக நிகழ்ந்த வண்ணம் உள்ளது. ஆனால் ‘இன்ஸ்டன்ட் காஃபி’ போல ‘உடனடி தூக்குத்தண்டனையை’ வழங்க வேண்டும் என்கிற ஆபத்தான செய்தியை இந்த திரைப்படம் வலியுறுத்துகிறது. 

மிக மிக அரிய வழக்குகளில் மட்டுமே மரணதண்டனை வழங்கப்படும். அதுவும் பல்வேறு கட்ட நீதி விசாரணைகளுக்குப் பிறகே நிகழும். தவறுதலாக கூட ஒரு நிரபராதியின் உயிர் பறிபோய் விடக்கூடாது என்பதற்காகவே அரசியல் அமைப்பில் இத்தனை விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

ஆனால் இவற்றையெல்லாம் இந்த திரைப்படம் கருத்தில் கொள்ளாமல் உணர்ச்சிகரமான மையத்திலேயே சுழல்கிறது. இது தொடர்பான காட்சிகள் நம்பகத்தன்மையில்லாமல் அமைந்துள்ளன. இந்தியாவை உலுக்கிய டெல்லி நிர்பயா கொடூரம், சமீபத்திய பொள்ளாச்சி பாலியல் விவகாரம் போன்றவற்றின் பின்னணிகள் இதற்காக தொட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.  

காவல் அதிகாரியின் பாத்திரம் என்றாலும் அதற்குரிய சீருடையில் விஷால் ஒரு காட்சியில் கூட தோன்றுவதில்லை. அவர் ‘உண்மையான’ காவல் அதிகாரியாக செயல்படவில்லை என்பதற்கான அடையாளமாக இதை எடுத்துக் கொள்ளலாம். இப்படிப்பட்ட மெனக்கெடலை படத்தின் ஆதாரமான விஷயத்திற்கும் எடுத்துக் கொண்டிருந்தால் ‘அயோக்யா’ ஒரு யோக்கியமான திரைப்படமாக அமைந்திருக்கும்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/5/12/w600X390/ayogya.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2019/may/12/விஷாலின்-அயோக்யா---திரை-விமர்சனம்-3150313.html
3145582 சினிமா திரை விமரிசனம் உணர்தல் குறும்படம்..! ராணுவ வீரரை இழந்த குடும்பத்தினருக்கு சமர்ப்பணம் மணிகண்டன் தியாகராஜன் Saturday, May 4, 2019 12:31 PM +0530  

கணவர் முரளி ராணுவ வீரர். நாட்டுக்காக இன்னுயிரைத் தந்தவர். அவரது மனைவி லில்லி. ஆசிரியராகப் பணிபுரிந்துவரும் லில்லிக்கு கணவரின் இழப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தற்கொலை செய்துகொள்ளலாம் என்று பாலில் விஷத்தை கலந்து வைத்துக் கொண்டு செய்வதறியாது குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்.

அவர் உயிரை மாய்த்துக் கொண்டாரா? அல்லது வாழ்வில் பிறப்பும், இறப்பும் தவிர்க்க முடியாதது என்ற உண்மையை உணர்ந்து அந்த மன அழுத்தமான சூழலில் இருந்து மீண்டு வருகிறாரா? என்பதே குறும்படத்தின் கதை.

யூ-டியூப் தளத்தின் வருகையாலும், அதிக விலை கொண்ட உயர் ரக செல்ஃபோன்களில் அதிக தரத்துடன் விடியோ எடுக்கும் வசதி இருப்பதாலும் யார் வேண்டுமென்றாலும் குறும்படங்களையும், விடியோ தொகுப்புகளையும் எடுக்கும் நிலை இன்று வந்துவிட்டது. 

அதனால், குறும்படங்களின் தரமும் குறைந்து வருகிறது. பெயருக்கு எடுத்து பதிவேற்றம் செய்யப்பட்டுவரும் பல குறும்படங்களுக்கு மத்தியில் சிறப்பான ஒரு குறும்படத்தை இயக்கி இருக்கிறார் கோவை இளைஞர் பாலாஜி எஸ்பிஆர்.

இந்தப் படத்தில் தொழில்நுட்ப ரீதியாக சிறப்பான கூட்டணியுடன் களம் இறங்கி நேர்த்தியான ஒரு படத்தை இவர் தந்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனனின் மைன்ட்ஸ்கிரீன் நிறுவனத்தில் ஒளிப்பதிவைக் கற்றுத் தேர்ந்த கார்த்திகேயன் சந்திரசேகர், சேத்தன், லஷ்மி பிரியா ஆகியோர் நடிப்பில் உருவாக்கப்பட்டு நெட்ஃபிளிக்ஸில் வெளியான ரிவிலேஷன்ஸ் திரைப்படத்தில் இசையமைப்பாளராக பணிபுரிந்த ஷமந்த் நாக் ஆகியோர் இந்தக் குறும்படத்தில் பணிபுரிந்திருக்கின்றனர்.

மிகச்சிறப்பான பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்தை வேறொரு பரிமாணத்தைத் தருகிறது. மிக மெதுவாக நகரும் இந்தப் படத்தை ஒட்டுமொத்த தன் தோளில் சுமந்திருக்கிறார் நடிகை அஞ்சலி ராவ்.

அச்சம் என்பது மடமையடா படத்தில் நடிகர் சிலம்பரசனின் தங்கையாக வருபவர்தான் இந்த அஞ்சலி ராவ். ‘காலிங் பெல்’ சப்தம் கேட்டு அதிர்ச்சி அடைவது, குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் தருணத்தை வெளிப்படுத்தும் காட்சி, சிறுவன் அணிந்திருக்கும் டீ-ஷர்டில் கணவரின் பெயரான முரளி என்றிருப்பதை பார்த்து வாழ்வின் அர்த்தத்தை உணரும் இடம் என நடிப்பில் முத்திரை பதிந்திருக்கிறார் அஞ்சலி ராவ். தமிழ் சினிமா இவரைப் போன்ற திறமைசாலிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒலி வடிவமைப்பைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். படம் தொடங்கும்போதே இடி இடிக்கும் சப்தமும், மழை பொழிதல், கதவுகளை திறப்பது, நாற்காலி நகர்த்தும் சப்தம் உள்பட பார்வையாளர்களுக்கு உண்மைத்தன்மையைக் கடத்துவதில் ஒலி வடிவமைப்பாளர் ராஜேஷ் சசீந்திரன் மிக முக்கியப் பங்கு வகித்திருக்கிறார்.  

அஸ்வினின் படத்தொகுப்பும் கேமரா ஷாட்களை அழகாக தொகுத்திருக்கிறது.

ஒரு சிறிய சம்பவத்தை கொண்டு நேர்த்தியாக ஒரு கதையை 10 நிமிடங்களில் சொல்லி முடிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி எஸ்பிஆர்.

உணர்தல் பெயரில் விரிசல் ஏற்பட்டது போன்று டைட்டில் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், கணவரை இழந்த மனைவியின் மனநிலையை உணர்த்துவதற்காக குறியீடாக வீட்டின் கண்ணாடி ஜன்னலும் உடைந்திருக்கும் காட்சி காண்பிக்கப்படும். இது, இயக்குநர் காட்சி மொழியைக் கையாளும் திறமையைப் பரைசாற்றும் காட்சியாக அமைந்துள்ளது.

கவலைகள் அனைத்தும் மழையில் கரைந்துபோகட்டும் என்பது போன்று படத்தின் இறுதிக்காட்சியை மழையுடன் முடித்திருப்பது சிறப்பு.

இந்தக் குறும்படம் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான உணர்வைக் கடத்தும் என்பதில் சந்தேகமில்லை.

இயக்குநர் பாலாஜி எஸ்பிஆரை தொடர்பு கொண்டு குறும்படம் குறித்து பேசினேன். அப்போது அவர் பேசியதாவது,

‘பொறியியல் முடித்துவிட்டு சினிமா மீது இருந்த காதலால் குறும்படங்களை இயக்கத் தொடங்கினேன். சவாரி உள்பட சில குறும்படங்களை இதற்கு முன்பு இயக்கியிருக்கிறேன். இந்தக் குறும்படம் நண்பர்களின் கூட்டு முயற்சியால் சாத்தியமானது. படத்தில் பணிபுரிந்த அனைவரும் இந்தக் குறும்படத்தை உருவாக்குவதற்கு பெரிதும் உதவியாக இருந்தனர். பல குறும்பட விழாக்களில் உணர்தல் பங்கெடுத்து பரிசுகளை பெற்று வருகிறது. எனது படக் குழுவினருக்கே அனைத்து பாராட்டுகளையும் சமர்ப்பிக்கிறேன். அடுத்ததாக ஒரு கதையை உருவாக்கி வருகிறேன்’ என்று  கூறிய பாலாஜிக்கு திரைத் துறையில் தடம் பதிக்க வாழ்த்துகள். 
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/5/4/w600X390/Poster_Landscape.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2019/may/04/உணர்தல்-குறும்படம்-ராணுவ-வீரரை-இழந்த-குடும்பத்தினருக்கு-சமர்ப்பணம்-3145582.html
3140577 சினிமா திரை விமரிசனம் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் - திரை விமரிசனம் அசோசியேட் பிரஸ் Saturday, April 27, 2019 03:12 PM +0530  

மார்வெல் உலகத்தைத் திருப்திப்படுத்துவதென்பது ஒரு சிக்கலான காரியம். ஒருபக்கம், மிகுந்திருக்கும் எதிர்பார்ப்பில் இந்தப் படத்தை பற்றிய வெளியீட்டுக்கு முந்தைய துண்டுத் தகவல்களும் வந்து குவிகின்றன.  ஆனால் படம் வெளிவரும் சமயத்தில், இதன் தீவிர ரசிகர்கள் ஒருவித தியான நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள். படத்தின் முக்கியக்கட்டத் தகவல்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ளாமலிருக்க, சமூகவலைத்தளங்களிலிருந்து தங்களை விலக்கி, படம் வெளிவரும்வரை அமைதி காக்கிறார்கள். முற்றிலும் அறிந்து கொள்ளவும், எதையுமே அறிந்து கொள்ளாதிருக்கவும் - இந்த இரண்டிற்குமான மயக்க நிலையே இது, என்றும் முடிவடைவதில்லை. எந்தவொரு மார்வெல் படத்தின் முடிவும் இறுதிப் பெயர்ப் பட்டியலுக்குப் பிறகு நிலைப்பதில்லை. 

இப்படிப்பட்ட ரசிகர்கள் இந்த விமரிசனத்தைப் படிக்க மாட்டார்கள். ஆனால், ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ இவர்களுக்கு மனநிறைவைத் தருவதோடு, ஓய்வுக்கான நேரத்தையும் தருமென்று நினைக்கிறேன். இந்தக் கடைசிப் பாகம், இதற்கு முந்தைய பாகமான 300 மில்லியன் டாலரை ஈட்டிய, 156 நிமிட ‘இன்ஃபினிடி வார்’ படத்தின் அவிழ்க்கப்படாத முடிச்சுகளை மட்டுமல்ல, 2008-ல் துவங்கிய ‘அயர்ன் மேன்’-லிருந்து வெளிவந்த 22 மார்வெல் படங்களையும் ஒருசேர இணைக்கிறது.

ஆண்டனி மற்றும் ஜோ ரூசோவின் ‘எண்ட்கேம்’ - நகைச்சுவை, ஆன்மா, செண்டிமெண்ட் என அனைத்திலும் தாராளமாக விருந்தளித்து ஆச்சரியப்பட வைப்பதோடு, மார்வெல் உலகின் பத்தாண்டுக் கால ஆதிக்கத்தை நினைவூட்டுகிறது. முழு வேகத்தில் இயங்கும் இந்த மார்வெலின் இயந்திரம், கற்பனை உலகின் கட்டுக்கதைகளில்  முழு ஆதிக்கம் செலுத்தி, அதன் கற்பனைப் பிரபஞ்சப்பெருவெளியில் முன்னெப்போதையும் விட அதிகமான உணர்வுகளை வெளிக்கொணர்கிறது.

மார்வெல் உலகத்தைத் தொடங்கிய ராபர்ட் டோனி ஜூனியரின் கதாபாத்திரமான டோனி ஸ்டார்க் (‘அயர்ன் மேன்’) தான் இந்த எண்ட்கேமையும் தொடங்கி, முக்கிய வேடத்தில் வலம் வருகிறார். ‘எண்ட்கேம்’ கதையின் அடிப்படை அம்சங்களைக் கூறுவது முட்டாள்தனமாகும். இருப்பினும், சக்திகளின் மேல் நாட்டங்கொண்ட தானோஸ் (ஜோஷ் ப்ரொலின்) உணர்ச்சிவசப்பட்டு செய்யும் செயலுக்குப் பிறகு சில காலங்கள் கழித்துத்தான் இந்தக் கதை நடைபெறுகிறது என்று கூறுவது சரியாக இருக்கும். ‘இன்ஃபினிடி வார்’ பாகத்தின் இறுதியில், 6 சக்திவாய்ந்த கற்களையும் பெற்றுவிடும் தானோஸ், அதைக்கொண்டு பூமியின் பாதி உயிரினங்களையும், சூப்பர் ஹீரோக்களையும் ஒரு நொடியில் அழித்து விடுகிறான்.

பூமியில் மீதமிருக்கும் உயிரினங்கள் - கூடுதல் பார்க்கிங் இடங்களையும், கூட்டமில்லா நடைபாதைகளையும் அனுபவிக்காமல், துக்க நிலையிலேயே காலத்தைக் கழிக்கிறார்கள். மீதமுள்ள சூப்பர் ஹீரோக்களும் தோல்வியின் அவமானத்தால் தடுமாறி, ஒருவன் கோபக்கார வஞ்சகனாகவும், இன்னொருவன் பீர் தொப்பையனாகவும் மாறுகிறார்கள்.

எண்ட்கேம் படத்துக்குக் கொடுக்கப்பட்ட அதிமுக்கியத்துவத்தால் சிலர் வெறுப்படைந்தாலும் படம் அதற்கான கனமான, அச்சுறுத்தும் மற்றும் நகைச்சுவையான அம்சங்களைக் கொண்ட திரைக்கதையைக் கொண்டுள்ளது. அதோடு கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் ஸ்டீபன் மெக்ஃபீலியின் திரைக்கதையைக் கொண்டு, சூப்பர் ஹீரோக்களுக்குப் புதிய இணைகளையும் சாத்தியமில்லாத சூழல்களையும் தந்துள்ளார்கள் இயக்குநர்கள் ரூசோஸ்.

இது படத்திற்கு ஏகப்பட்ட கதாபாத்திரங்களைக் கொடுத்துள்ளது, பல முன்ணனி நகைச்சுவை நடிகர்களும் திரையில் வலம் வருகிறார்கள். டோனி ஜூனியர் இதற்குத் தலைமை தாங்கினாலும், முக்கிய வேடத்தில் பவுல் ரூட் (ஆண்ட் மேன்), வழக்கமான வேடங்களில் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் (தோர்) மற்றும் மார்க் ருஃபல்லோ (ஹல்க்) ஆகியோர் வலம் வருகிறார்கள். என்னதான் மார்வெல் உலகம் பாலினச் சமத்துவத்தில் முன்னேறியிருந்தாலும் (ப்ரி லார்சனின் சமீபத்திய படமான ‘காப்டன் மார்வெல்’ சிறிய, முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்), இன்னும் சில ஜாலியான நடிகைகளைக் கொண்டிருக்கலாம். மாயா ருடோல்ஃபை விண்மீன் மண்டலத்தின் ராணியாக்குவீர்களா?

இந்த நகைச்சுவைக் கும்பலில் குறைந்தபட்சம் மூன்று பேர் சூப்பர் ஹீரோக்களாக மதிப்பு பெறுகிறார்கள். எப்போதாவதுதான் நிறைய ஹீரோக்கள் ஒரு படத்தில் தோன்றுகிறார்கள். சொல்லும்படியாக - கிரிஸ் எவான்ஸின் கேப்டன் அமெரிக்கா, ஸ்கார்லெட் ஜுவான்சனின் பிளாக் விடோ, டான் சீயாடிலின் வார் மெஷின், பிராட்லி கூப்பரின் ராக்கெட் போன்ற படங்கள். இருப்பினும், படத்தின் தாராளமான நீளத்தினால் கதை, கதாபாத்திரங்களை விரைவாகவும், எளிதாகவும் கையாள்கிறார்கள் ரூசோஸ்.

இந்த மாய வித்தையில், மார்வெல் உலகின் அனைத்துத் தொனிகளும் சிறிய அளவிலாவது இருக்கிறது. ‘அயர்ன் மேனின்’ பகடிக்குணம், எளிதில் உணர்ச்சிவசப்பட்டு, கும்மாளமடிக்கும் ‘கார்டியன்ஸ் ஆஃப் காலக்ஸி’, ‘தோரின்’ வரலாற்றின் சிறிய பகுதி, ‘பிளாக் பாந்தரின்’ முழக்கமும் கூட. இவை எல்லாவற்றையும் விட, ’எண்ட்கேம்’ ஒரு சுவாரசியமான, பாரம்பரிய காமிக்ஸ் புத்தகத்தின் திருப்பங்களையும் மாற்றங்களையும் கொண்டுள்ளது.

இப்படத்தின் முக்கிய வேறுபாடு என்னவெனில், கெட்டவர்களுக்கு மார்வெல் உலகில் சாவு நிச்சயம் என்கிற நிலையில், முடிவுநிலை நோக்கி நகர்கிறது உலகம்.  ‘எண்ட்கேம்’ அதன் கண்ணீர் மல்கும் பிரியாவிடைகளுக்காகப் பெரும்பாலும் நினைவுகூரப்படும். சொல்லப்போனால், யார்தான் தன் சொந்த மறைவிற்கு அழைப்பு விடுப்பார்கள்? ஆனால், அவெஞ்சர்ஸ் படங்களில் உள்ள மெல்லிய, நேர்மையான பிரியாவிடைகள் ஒன்றை உணர்த்துகின்றது - அடிப்படையில் அவை குடும்பங்களைக் குறிப்பவை. எண்ட்கேமில் தோன்றும் மகள்கள், அப்பாக்கள், மகன்கள், சகோதரர்கள் மற்றும் ஜோடிகளின் மூலம் இது மிகத் தெளிவாகிறது. இது போன்ற உறவுகளின் மூலம் கட்டப்பட்டிருக்கும் இந்த மாய ராஜ்யம், நம் உலகத்தை விட ஒற்றுமையானது.

இதர பிரியாவிடைகள் நியாயமான துயரம் நிறைந்தவை. மறைந்த ஸ்டான் லீ தன் கடைசிக் கௌரவ வேடத்தில் சிறப்பாகத் தோன்றியிருக்கிறார். லீயின் அன்னப்பாடல் - எண்ட்கேம் மூலம் முடிவுறும் இந்தச் சகாப்தத்தை உறுதி செய்கிறது. இந்த அத்தியாயத்தின் மூலம் முடிவுக்கு வரும் மார்வெல் உலகம், அதிக நாட்கள் இப்படியே நீடிக்க வாய்ப்பில்லை. மார்வெல், இந்தப் படங்களின் மூலம் என்ன உருவாக்கியுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள சில காலம் ஆகும் என நினைக்கிறேன்.  மோசமான அம்சமாக, இவையனைத்தும் ஒரு பெருங்கூட்டத்தைப் பார்க்க வைப்பதற்காக உருவாக்கப்பட்ட, வேற்றுரு விலங்குகள். சிறப்பான அம்சமாக, இவை பிரம்மாண்டமான, மெகா அளவில் உருவாக்கப்பட்ட ஹாலிவுட் ஆச்சர்யங்கள். இவற்றில் ‘எண்ட்கேம்’, இரண்டாம் பகுதியை ஒட்டியுள்ளது என்று கூறுவது அதனை ரசிப்பதற்கு இடையூறாக இருக்காது என்றே நம்புகிறேன்.

தமிழில்: வினுலா

]]>
Avengers Endgame https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/4/26/w600X390/avengers_end_game112xx.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2019/apr/26/avengers-endgame-movie-review-3140577.html
3123890 சினிமா திரை விமரிசனம் தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ திரை விமரிசனம் சுரேஷ் கண்ணன் Monday, April 1, 2019 02:31 PM +0530  

காமம், கடவுள் நம்பிக்கை, ஆண்-பெண் உறவுச்சிக்கல், பாலின அடையாளக் குழப்பம், இருப்பு (existence) போன்ற மானுடக்குலத்தின் ஆதாரமான சில பிரச்னைகளைப் பற்றி எள்ளலும் தீவிரமும் கலந்த அவல நகைச்சுவையுடன் மூன்று மணி நேரத்திற்கு உரையாட முடியுமா? ஆம் என்று நிரூபித்திருக்கிறது, சூப்பர் டீலக்ஸ் திரைப்படம்.

இந்தத் திரைப்படத்தில் பிரதானமாக நான்கு கதைகள் பயணிக்கின்றன. கூடவே சில துணைக் கதைகளும். ஒன்றுக்கொன்று பெரிதாக அதிகம் சம்பந்தமில்லை. அரிதாக சில புள்ளிகளில் மட்டுமே இணைகிறது. 

இயற்கையால் கட்டமைக்கப்பட்ட விதிகளால் பிரபஞ்சத்தின் தன்னிச்சையான இயக்கம் எத்தனையோ நூற்றாண்டுகளாக தொடர்ந்து  இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதன் மிகச் சிறிய பரிமாணத்தை மட்டும் உணர முயலும் மனித குலம் அதைக் கொண்டு பல கற்பிதங்களை உருவாக்கிக் கொள்கிறது. தற்செயலான விளைவுகளுக்கு காரணங்களை ஏற்படுத்திக் கொள்கிறது. கடவுள், மதம் என்று பல்வேறு நம்பிக்கைகளாக இவை உருக்கொள்கின்றன. மானிடத்தின் இந்த ஆதாரமான நம்பிக்கைகளை எள்ளலான சிரிப்புடன் அசைத்துப் பார்க்க முயல்கிறது, இந்த திரைப்படம். 

சில வருடங்களுக்குப் பிறகு வீடு திரும்பும் தந்தையைக் காண மிக மிக ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறான் ஒரு சிறுவன். அவனுடைய தாயும் கூட. அவனின் குடும்பமும் கூட. ஆனால் வருபவனைக் கண்டு அனைவரும் அதிரச்சியடைகிறார்கள். ஏன்?

அடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள தன்னுடைய மகனை அலறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு தூக்கிச் செல்கிறார் ஒரு தாய். செல்லும் வழியில் கண் விழித்துப் பார்க்கும் மகன், தாயை நோக்கி ஓர் ஆபாச வசையை வீசுகிறான். ஏன்?

வாழ்க்கையில் வெறுப்புற்று தற்கொலை செய்து கொள்ள செல்கிறான் ஒருவன். ஆயிரக்கணக்கானவர்களை சாகடித்த சுனாமி அலை அவனை மட்டும் காப்பாற்றுகிறது. இதனால் தான் கண்டுபிடித்த கடவுளின் மீது அதிநம்பிக்கையோடு அசைக்க முடியாத விசுவாசத்தைக் கொள்கிறான். எனினும் சந்தேக அலை ஒரமாக அவனுள் அடித்துக் கொண்டே இருக்கிறது. ஏன்?

மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்த ஓர் இளம் தம்பதியினர், ஒரு சடலத்தை வைத்துக் கொண்டு ஊர் முழுக்கச் சுற்றுகின்றனர். அவர்களிடையே இருந்த மனவிலகல்களும் புழுக்கமும் தீர அந்த விநோதமான பயணம் காரணமாக இருக்கிறது. எப்படி?

நான்கு விடலை இளைஞர்கள் தங்களின் வயதுக்கேயுரிய விவகாரமான தேடலில் ஈடுபட்டு பல்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள். ஏன்?

ஒரு சிக்கலான நூற்கண்டின் வெவ்வேறு நுனிகள் மெல்ல மெல்ல அவிழ்கின்றன. இறுதி முடிச்சு முற்றிலும் எதிர்பாராததொரு தத்துவக் கோணத்தில் இணைக்கப்படுகிறது. மனிதத்தின் விகாரங்களும் புனிதங்களும் நம்பிக்கைகளின் அபத்தங்களும் இந்தப் பயணங்களில் பல்வேறு வழியாக வெளிப்படுகின்றன. 

தியாகராஜன் குமாரராஜாவின் முதல் திரைப்படமான ‘ஆரண்ய காண்டம்’ வெளிவந்து ஏறத்தாழ எட்டு ஆண்டுகளாகிறது. ஆனால் அவரின் அடுத்த திரைப்படத்திற்கான ஆவல் இன்னமும் கூட ரசிகர்களிடம் குறையாமல் இருந்தது. இது வேறெந்த தமிழ் இயக்குநருக்கும் நிகழாத ஒரு சாதனை எனலாம். அந்தளவிற்கான அழுத்தமான தடத்தை முதல் திரைப்படம் உருவாக்கியிருந்தது. அந்த ஆவலை ‘சூப்பர் டீலக்ஸின்’ மூலம் சேதமடையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர். 

இந்தத் திரைப்படத்தில் எவருக்கும் பிரதான பாத்திரமில்லை. அனைவருமே சிறுசிறு பாத்திரங்கள்தான். ஆனால் பல முன்னணி நடிகர்கள் இந்தப் படத்தில் ஆர்வமாக வந்து பணி புரிந்திருக்கிறார்கள். திரைக்கதையின் மீதும் இயக்குநரின் மீதும் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை இதன் வழியாக உணர முடிகிறது. 

விஜய் சேதுபதியை நினைத்தால் மிக ஆச்சரியமாக இருக்கிறது. சாதாரண துணை நடிகராக இருந்து சமகாலத்தின் நாயகனாக முன்னேறியவர் அவர். பொதுவாக எந்தவொரு முன்னணி நடிகரும் தங்களின் ஊதப்பட்ட பிம்பத்தை தானே கலைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள். ஆனால் தன் பிம்பத்தை தானே கலைத்துக் கொள்ளும் விளையாட்டில் தொடர்ந்து ஈடுபடுகிறார் விஜய்சேதுபதி. இந்த திரைப்படத்தில் எந்தவொரு இடத்திலும் அவரைக் காண முடியவில்லை. ஷில்பா என்னும் திருநங்கையாகவும் மாணிக்கம் என்கிற பாசமிகு தந்தையாகவும் மாறி மாறி அவர் காட்டும் ஜாலங்கள் வியக்கவும் பிரமிக்கவும் வைக்கின்றன. 

இந்த திரைப்படத்தின் இன்னொரு பிரம்மாண்ட ஆச்சரியம் சமந்தா. விஜய் சேதுபதியைப் போலவே துணிச்சலானதொரு பாத்திரத்தை ஏற்றிருக்கிறார். சந்தர்ப்ப சூழல் ரணமாக இல்லற துரோகத்தில் இவர் வீழ்கிறார். தன் சறுக்கலை ஒப்புக் கொண்ட பிறகும் குத்திக் காட்டிக் கொண்டேயிருக்கும் ஆணாதிக்க மனோபாவமுள்ள கணவனை இவர் கையாளும் விதம் அத்தனை அழகு. 

ஏறத்தாழ சமந்தாவிற்கு ஈடான பாத்திரத்தை ஃபஹத் பாசில் ஏற்றிருக்கிறார். ஒரு சராசரியான கணவனின் அற்பத்தனத்தையும் கோழைத்தனத்தையும் மிக அநாயசமாக வெளிக் கொணர்ந்திருக்கிறார். ‘சமூகம் சரியில்லை’ என்று பல்வேறு புரட்சிகர வசனங்களை பேசிக் கொண்டேயிருக்கும் இவர், ஓர் அசந்தர்ப்பமான சூழலில் தன் மனைவியையே இன்னொருவருக்கு விட்டுத்தரும் அற்பமான பேரத்தை அச்சத்துடன் ஏற்கிறார். சராசரிகளின் இரட்டை மனநிலையையும் கோழைத்தனங்களையும் இந்தப் பாத்திரம் கச்சிதமாக வெளிப்படுத்துகிறது. 

பகவதி பெருமாள் என்கிற பக்ஸின் பாத்திரம் எதிர்பாராத ஆச்சரியத்துடன் அமைந்திருக்கிறது. மனவிகாரமும் காமப்பித்தும் கொண்ட ஒரு bisexual ஆசாமியை அதன் கொடூரம் குறையாமல் வெளிப்படுத்தியிருக்கிறார். நகைச்சுவை நடிகராக அறியப்பட்டவரின் இன்னொரு பரிமாணத்தைக் காண சுவாரசியமாக இருக்கிறது. 

ஒரு தீவிரமான மதவிசுவாசியின் மூர்க்கத்தனத்தையும் மனத்தத்தளிப்பையும் மிக அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் மிஷ்கின். ‘பையன் உயிரைக் காப்பாத்த பணம் கேட்டேன். கடவுள் தரலை. சிலையை உடைச்சேன். உள்ளே வைரம் இருக்கு. இதை நான் எப்படி எடுத்துக்கறது’ என்று இவர் குழம்பும் காட்சி அற்புதமானது. இதற்கு ரம்யா கிருஷ்ணன் அளிக்கும் பதில் அதனினும் அற்புதம். பாலியல் திரைப்பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன் ஏற்றிருக்கும் பாத்திரம் துணிச்சலானது. அது குறித்து மகனிடம் விளக்கம் அளிக்கும் காட்சி அபாரமானது. இந்தப் பாத்திரத்தை அதிக கொச்சையின்றி கையாண்டிருக்கும் இயக்குநருக்கு ஒரு பிரத்யேகமான பாராட்டு. 

எந்தவொரு நண்பர்கள் குழுவிலும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள் இருப்பார்கள். அப்படியொரு சுவாரசியமான நண்பர் குழு இதில் இருக்கிறது. நான்கு விடலை வயதினர். ‘மேட்டருக்காக’ எப்போதும் அலையும் காஜி என்கிற பட்டப்பெயர் கொண்ட இளைஞன் தன் பிரத்யேகமான நடிப்பினால் கவர்கிறான். செருப்படி வாங்கி விட்டு கம்பீரமாக நகரும் காட்சி சுவாரசியமானது.  ‘முட்டை பப்ஸ்’ இளைஞனின் வெள்ளந்தித்தனமும் கவர்கிறது. (‘மேட்டர் படம் இருக்கா மேடம்?’) 

விஜய் சேதுபதியின் மகனாக (அப்படியொரு கற்பிதம்!) ‘ராசுக்குட்டி’ என்னும் பாத்திரத்தில் நடித்திருக்கும் அஷ்வந்த்தின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. தந்தைமையின் மீதான ஏக்கத்தை விதம் விதமாக வெளிப்படுத்தி தீர்க்கிறான் இந்தச் சிறுவன். காயத்ரியின் அடக்கமான நடிப்பினுள் ஆழம் அதிகம். புடவை மாற்றும் விஜய் சேதுபதியை விநோதமான முகபாவத்துடன் இவர் காண்கிற ஒரு காட்சியே நல்ல உதாரணம். 

இது தவிர, ஒரு கீழ்நடுத்தர வர்க்கக் குடும்பத்திலுள்ள கிழவிகள், உறவினர்கள், அசந்தர்ப்பமாக உளறும் கிழவர், உயரம் குறைந்த சொந்தக்காரர், ஆட்டோ டிரைவர், உதவி செய்யும் பக்கத்து வீட்டு புஷ்டியான பெண்மணி, சிடி விற்கும் பெண்மணி என்று ஒவ்வொரு சிறு பாத்திரமும் மிக கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மிக குறிப்பாக மிஷ்கினின் உதவி விசுவாசியாக வருபவரின் நடிப்பு தனித்துக் கவர்கிறது. 

**

தியாகராஜன் குமாரராஜாவின் திரைப்படம் என்றாலே யுவன் சங்கர் ராஜாவிற்கு பிரத்யேகமான மனநிலை வாய்த்து விடுகிறது போல. பல காட்சிகளை அர்த்தமுள்ள மெளனங்களால் நிரப்பியிருக்கிறவர், அவசியமான இடங்களில் இதயத் துடிப்பு போன்ற பதற்றமான இசையைக் கொண்டு மனம் உதற வைத்திருக்கிறார். சில இடங்களில் துள்ளலான இசை பின்னியெடுக்கிறது. 

ஆரண்ய காண்டத்திற்கு ஒளிப்பதிவு செய்த பி.எஸ்.வினோத்தோடு நீரவ் ஷாவும் இதில் இணைந்திருக்கிறார். ஒவ்வொரு கதைக்கும் தனித்தனியான ஒளியமைப்புகள் கையாளப்பட்டிருக்கின்றன. ஆனால் உறுத்தாமல் ஒன்றிணைந்திருக்கின்றன. சத்யராஜ் நடராஜனின் எடிட்டிங், சாவசாசமான தருணங்களை சேதமுறாமல் ஒன்றிணைத்திருக்கிறது. இறுதிப் பகுதியை மட்டும் சற்று கவனித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். 

எண்பதுகளில் வெளி வந்த தமிழ், இந்தி திரையிசைப் பாடல்களின் மீது இயக்குநருக்குள்ள மோகம், முந்தையை திரைப்படத்தைப் போலவே இதிலும் வெளிப்படுகிறது. பொருத்தமான இடங்களில் இந்தப் பாடல்கள் ஒலித்து பின்னணியின் சுவாரசியத்தைக் கூட்டுகின்றன. காரை பெயர்ந்த அழுக்கான சுவர்கள், குறுகலான சந்துகள், ஒளியும் இருளும் கச்சிதமாக கை கோர்க்கும் வீடுகள், அவற்றில் நிரம்பியிருக்கும் பொருட்கள் என்று இவர் தேர்ந்தெடுக்கும் பின்னணிகளும் பிரதேசங்களும் அத்தனை பிரத்யேகமானதாக இருக்கின்றன. நாம் அன்றாடம் பார்க்கும் இடங்களை முற்றிலும் இன்னொரு பரிமாணத்தில் காட்டுகிறார் இயக்குநர். 

இந்த திரைப்படத்தின் இன்னொரு சிறந்த தொழில்நுட்பம் என்பது ஒலி வடிவமைப்பு. அந்தந்த இடங்களின் பொருத்தமான சப்தங்கள் துல்லியமாக  வெளிப்படுகின்றன. ஒரு பாத்திரம் பேசி முடித்த பிறகு அடுத்த வசனம் என்கிற சம்பிரதாயங்கள் மீறப்பட்டு, வெவ்வேறு மூலைகளில் இருந்து உரையாடப்படும் வசனங்கள் குழப்பமில்லாமல் ஒலிக்கின்றன. 

**
ஆரண்ய காண்டத்தைப் போலவே இந்த திரைப்படத்தின் பாத்திரங்களின் பெயர்களும் அந்தந்த குணாதிசயங்களுக்கேற்ப பொருத்தமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை ஆய்வு செய்வதே சுவாரசியமானதாக இருக்கிறது. அற்புதம் என்னும் பெயருடைய ஒரு மத போதகர், விசுவாசத்திற்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் அல்லாடுகிறார். அதே சமயத்தில் அவருடைய உதவியாளர் நம்பிக்கையை பிடிவாதமாக இழக்காமலிருக்கிறார் அவருடைய பெயர் ‘ராமசாமி’ என்பது சுவாரசிய முரண். இப்படியே ஷில்பா, பெர்லின், வேம்பு போன்ற பாத்திரங்களின் பெயர்களையும் ஆராய்ந்து பார்க்கலாம். அனைத்தையும் இணைக்கும் ‘லீலா’ என்கிற ரம்யா கிருஷ்ணனின் பெயர் இவற்றில் முக்கியமானது. 

இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கமும் உயிர் சுழற்சியும் காமம் என்னும் ஆதாரமான உந்துதலின் வழியாக அழுத்தமாக பிணைக்கப்பட்டிருக்கிறது. இந்த நான்கு கதைகளின் ஆதாரத்திலும் காமம் என்பது ஆதாரமாக இழையோடுவதைக் கவனிக்கலாம். முன்னாள் காதலனுக்கு கருணையை காமத்தின் வழியாக வெளிப்படுத்தும் ஒருத்தி எதிர்கொள்ளும் சிக்கல், காமத்திற்கான தேடலை நோக்கி ஓடிக் கொண்டேயிருக்கும் விடலை இளைஞர்கள், காமத்தின் வடிகாலுக்கான சித்திரங்களில் தோன்றும் நடுத்தர வயது பெண்மணி, பாலின அடையாளக் குழப்பத்தில் தவிக்கும் நபர், மனைவி பாலியல் நடிகை என்பதை அறிந்து தற்கொலை செய்யச் சென்றவன் மத விசுவாசியாக மாறுவது என்று அனைத்துச் சிக்கல்களும் பிரச்னைகளும் காமத்தை அடிநாதமாகக் கொண்டு பயணிக்கின்றன. 

நாம் அன்றாடம் காணும் உலகங்களின் வழியாக பயணிக்கும் இதன் திரைக்கதை சட்டென்று ஓர் அறிபுனைவிற்குள் ஓர் ஏலியனின் வழியாக நுழைவதும் இருப்பின் புதிர்களை, ரகசியங்களை அவிழ்க்க முயல்வதும் சுவாரசியமானதாக இருக்கிறது. 

இது வயது வந்தோர்க்கான திரைப்படம். சில விவகாரமான வசனங்கள், குறிப்புகள், நகைச்சுவைகள் போன்ற சுவாரசியங்களின் மூலம் அழுத்தமான பல விஷயங்களை உணர்த்தவும் நிறுவவும் முயல்கிறது. ஃபக் என்ற எழுத்தைக் கொண்ட பனியனை அணிந்திருக்கும் சிறுவன் தலைகீழாக தொங்குவது, அதன் ஆங்கில வார்த்தையை பொருள் தெரியாமல் கத்தித் திரியும் ஒரு சிறுவன், சமந்தாவின் கண்டனத்தால் மிரள்வது, அதே வார்த்தையை கோபத்தில் கணவன் சொல்லும் போது சமந்தா தடுக்கத் தெரியாமல் தவிப்பது போன்ற சித்தரிப்புகளை மனப்பக்குவமும் முதிர்ச்சியும் உள்ளவர்கள் ரசிக்கலாம். கலாசார நம்பிக்கைவாதிகள் அதிர்ச்சியும் நெருடலும் கொள்ளக் கூடும்.  என்றாலும் ‘போடுதல்’ என்னும் கொச்சையான பிரயோகம் பல இடங்களில் வருவது மிகையானதாக இருக்கிறது. 

‘டார்க் ஹியூமர்’ என்னும் அவல நகைச்சுவையைக் கையாள்வது அத்தனை சுலபமானதில்லை. இதே இயக்குநர்தான் ‘ஆரண்ய காண்டத்தின்’ மூலம் அந்த வகைமையை தமிழ் சினிமாவில் கச்சிதமாக துவங்கி வைத்தார். (கமலின் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ இதற்கான முன்னோடி என்றாலும்). அதன் பிறகு நலன் குமாரசாமி போன்றவர்கள் சில அற்புத கணங்களை சித்தரித்தாலும், மறுபடியும் தியாகராஜன் குமாரராஜாவேதான் இந்த வகைமையை மீண்டுமொரு முறை கச்சிதமாகத் தொடர்ந்திருக்கிறார். ‘பெரிய பத்தினி. இவ…கரண்ட் ‘வா’ன்னு சொன்னவுடன் வந்துடும்’ என்கிற காட்சி ஒரு சிறந்த உதாரணம். 

ஒரு பார்வையாளனின் கோணத்தில் என்னால் இந்தப் படத்தில் சில குறைகளையும் போதாமைகளையும் உணர முடிகிறது. ஆரண்ய காண்டத்தைப் போலவே இதிலும் நிலவெளிகளின் கலாசார முரண்கள் நெருடலை ஏற்படுத்துகின்றன. சம்பவங்கள் நிகழ்கின்ற காலக்கட்டத்தையும் இடங்களையும் அரசியல் சுவரொட்டி, செல்போன் போன்ற பின்னணிகளின் மூலம் யூகிக்க முடிகிறது என்றாலும் இவற்றில் ஒருவிதமான மயக்கத்தையும் பூடகத்தையும் தொடர்ந்து கையாள்கிறார் இயக்குநர். தனக்கான பிரத்யேக உலகத்தை இவ்வாறு திட்டமிட்டு படைப்பதுதான் அவரது நோக்கம் என்றால் அதில் வெற்றி பெறுகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இவற்றிலுள்ள நடைமுறை சார்ந்த முரண்களையும் களைய முயன்றால் முழுமையை நோக்கி இன்னமும் நகர முடியும். 

பல அற்புதமான நுண்விவரங்களால் காட்சிகளின் நம்பகத்தன்மையை அதன் கூர்மைக்கு இட்டுச் செல்கிறார் இயக்குநர். இவை ஒருபுறம் நிகழ்ந்தாலும் அவற்றின் ஆதாரத்திலேயே சந்தேகம் தோன்றுவதால் நுண்விவரங்களால் கட்டப்பட்ட சுவர் சரியும் ஆபத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. உதாரணத்திற்கு, ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும், தொழில்முறை கொலைகாரர்கள் போல் பிணத்தை அப்புறப்படுத்த முயல்வது முரணாக இருக்கிறது. 

சுஜாதாவின் சிறுகதையொன்று நினைவிற்கு வருகிறது. பெரும் பணத்தைக் கொண்ட பெட்டியொன்று ஒரு கீழ்நடுத்தர வர்க்க குடும்பம் வசிக்கும் ஒண்டுக் குடித்தன வாசலில் கேட்பார் இல்லாமல் கிடக்கும். அதைக் கண்டு கணவனும் மனைவியும் பதறிப் போவார்கள். பல்வேறு விதமாக பேசி குழம்பித் தவிப்பார்கள். கடைசியில் அதைக் காவல் நிலையத்தில் ஒப்படைக்க கிளம்புவான் கணவன். ஆனால் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல ஆட்டோவிற்கு காசு இருக்காது. ‘பக்கத்து வீட்டில் கடன் வாங்கி வருகிறேன்’ என்று கிளம்புவாள் மனைவி. இந்த சுவாரசியமான முரணை அழகாக சித்தரித்திருப்பார் சுஜாதா.

இதுதான் நடுத்தர வர்க்கத்தின் மனோபாவம். அவர்களால் குற்றங்களின் சாகசங்களில் எளிதில் விழ முடியாது. அவர்களின் மனச்சாட்சி அதற்கு அனுமதிக்காது. இது போன்ற நம்பகத்தன்மைகளை இயக்குநர் பரிசீலித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. 

ஆனால் – செய்தித்தாள்களில் நாம் வாசிக்கும் குற்றச் செய்திகள் இதன் இன்னொரு விதமான திடுக்கிடும் பரிமாணங்களை நமக்கு அம்பலப்படுத்துகின்றன. இதே சராசரிகள்தான் நம்ப முடியாத குற்றங்களை மிக அநாயசமாக நிகழ்த்துகிறார்கள்.  இந்த அரிய உதாரணங்களால்தான் இயக்குநர் சித்தரிக்கும் உலகம் நிரம்பியிருக்கிறது என்று ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டியதுதான். 

இந்த நான்கு தனித்தனியான திரைக்கதைகளை, தியாகராஜன் குமாரராஜா, மிஷ்கின், நலன் குமாரசாமி மற்றும் நீலன் கே சேகர் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். (மத விசுவாசியின் பகுதியை மிஷ்கின்தான் எழுதியிருப்பார் என்பது எளிதான யூகம்) இவற்றின் தேவையற்ற பகுதிகளை உதறி விட்டு அவற்றின் மையத்தை மட்டும் சுவாரசியமான காட்சிகளின் வழியாக விவரித்திருக்கிறார் இயக்குநர். இவற்றின் அத்தனை நுனிகளையும் தத்துவ விசாரணையின் வழியாக இணைத்திருப்பது சிறப்பு. ஆனால், ஒரு சராசரி மனிதனின் பல அடிப்படையான எளிய நம்பிக்கைகளை பகுத்தறிவு விசாரணையின் மூலம் களைந்து விட்டால், அவன் எதைப் பற்றிக் கொண்டு தன் சிக்கலான உலகத்தில் வாழ்வான் என்கிற கேள்வியும் எழுகிறது. 

சமீபத்தில் வெளியாகியிருக்கும் மிக முக்கியமான திரைப்படம் இது. ஒரு தடவைக்கு மேல் பார்க்கவும் அவற்றைக் கொண்டு யோசிப்பதற்கான உத்வேகத்தையும் தரும் படைப்பு. ஒரு மலினமான பாலியல் திரைப்படத்தின் முன்னோட்டத்தின் வழியாக இந்தத் தத்துவ விசாரணைகளை இயக்குநர் நிகழ்த்தியிருப்பதுதான் உண்மையிலேயே மிகப் பெரிய அவல நகைச்சுவை.

]]>
Movie review, Super Deluxe, சூப்பர் டீலக்ஸ், திரை விமர்சனம் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/4/1/w600X390/super_deluxe_new_mb.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2019/mar/30/movie-review-super-deluxe-3123890.html
3123237 சினிமா திரை விமரிசனம் நயன்தாராவின் ‘ஐரா’: திரை விமரிசனம் சுரேஷ் கண்ணன் Friday, March 29, 2019 10:39 AM +0530  

தமிழ் சினிமாவில், பேய்ப்படங்களின் அலை ஓய்ந்து விட்டதே என்று மகிழ்ந்து கொண்டிருந்த வேளையில் புதிதாக ஒன்று கிளம்பியிருக்கிறது. ஆனால் இது சமர்த்தான பேய். எல்கேஜி குழந்தையைக் கூட பயமுறுத்தவில்லை. எண்பதுகளில் வெளிவந்திருந்தால் ஒருவேளை கவனத்தைக் கவர்ந்திருக்குமோ, என்னமோ!

‘ஐரா’, மிக மிக சுமாரான முயற்சி. ஆனால் இந்தக் கதையின் அடிப்படையை இன்னமும் நிறைய மெனக்கெட்டு உருப்படியான திரைக்கதையாக வளர்த்தெடுத்திருந்தால் சுவாரசியமான ‘சினிமா’வாக ஆகியிருக்கும். ஆனால் அது நிகழவில்லை

கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் பார்வையாளர்களுடன் உணர்ச்சிகரமாகவும் அழுத்தமாகவும் பிணைக்காவிட்டால் எப்படிப்பட்ட மெலோடிராமாவும் திகிலும் கேலிக்கூத்தாக ஆகிவிடும் என்பதற்கு நயன்தாரா முதல்முதலாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் இந்தத் திரைப்படமும் ஒர் உதாரணம்.

*

சென்னையில் ஒரு பத்திரிகையாளராகப் பணிபுரிபவர் யமுனா (நயன்தாரா). தன்னுடைய வழக்கமான பணியில் சலிப்புற்று ‘யூடியூப் சானல்’ துவங்கலாம் என்று அவர் சொல்கிற ஆலோசனை நிர்வாகத்தால் நிராகரிக்கப்படுகிறது. இதற்கிடையில் அவருடைய திருமணத்திற்காகப் பெற்றோர் வற்புறுத்துகிறார்கள்.

இதனால் வெறுப்புறும் யமுனா, பொள்ளாச்சியில் உள்ள தன் பாட்டி வீட்டுக்குச் செல்கிறார். பேய் தோன்றுவது போன்ற செயற்கையான காட்சிகளை உருவாக்கி ‘யூடியூபில்’ வெளியிட்டு அதில் வெற்றியும் பெறுகிறார். ஆனால் அந்த வீட்டில் உண்மையாகவே பேய் இருப்பதற்கான அடையாளங்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன.

இதற்கிடையில், சென்னையில் இருக்கும் அமுதன் (கலையரசன்) என்பவர், ஒரே மாதிரியாக நிகழும் சில விநோதமான மரணச் செய்திகளை அறிகிறார். அந்த வரிசையில் அடுத்துக் கொல்லப்படவிருக்கிறவர் யமுனா என்பதை அறிகிறார்.

அந்த மரணங்கள் ஏன் நிகழ்கின்றன, அப்பாவியான யமுனா அந்த வரிசையில் எப்படிச் சேர்ந்தார் என்பதையெல்லாம் இன்னொரு நயன்தாராவின் (பவானி) மூலம் இரண்டாவது பகுதியில் விவரித்திருக்கிறார்கள்.

*

படத்தின் முற்பாதியில் ‘பயமுறுத்துகிறேன் பேர்வழி’ என்று நம்மைப் படுத்தியெடுத்திருக்கிறார் இயக்குநர். அனைத்துமே பல அபத்தமான பேய்ப்படங்களில் பார்த்த தேய்வழக்கு உத்திகள். இரண்டாம் பகுதியில் ‘கருப்பு’ நயன்தாரா அறிமுகமானவுடன் சுவாரசியமாக இருக்குமோ என்று நிமிர்ந்து உட்கார்ந்தால், அதில் எழுபதுகளின் திரைப்படங்களைப் போல அழுது பிழிய வைக்கும் செயற்கையான சோகக்காட்சிகள்!

அதற்குப் பிறகு.. ‘சாரே.. என்டே காதலி உங்களுக்கு மனைவியாயிட்டு வரும். ஆனா உங்க மனைவி எனக்கு காதலியாயிட்டு வராது’ என்கிற மாதிரி இழுவையான, குழப்பமான கிளைமாக்ஸ்.

யமுனாவாக வழக்கமான நயன்தாரா. வயதின் களைப்பு முகத்தில் தெரிகிறது. இன்னொரு நயன்தாராவான ‘பவானி’தான் சிறப்பு. ‘அழகான முகத்தைக் கோரமாக்கிக் கொண்டு நடிக்க முன்வருபவன்தான் சிறந்த நடிகன்’ என்று கமல்ஹாசனைப் பற்றிய ஒரு கருத்தை சொன்னார் சிவாஜி கணேசன். இந்த நோக்கில், நயன்தாராவின் இந்தத் துணிச்சலையும் முயற்சியையும் நிச்சயம் பாராட்டலாம். பவானி என்கிற இந்தப் பாத்திரத்திற்கு தன்னால் இயன்ற நியாயத்தை செய்ய முயன்றிருக்கிறார். ஆனால் வலுவான காட்சியமைப்புகள் இல்லாததால் அனைத்தும் வீண். போலவே கலையரசனும் தன் பங்கைச் சிறப்பாகத் தர முயன்றிருக்கிறார்.

யோகி பாபுவின் எரிச்சலூட்டும் காமெடி எடுபடவில்லை. தான் உயிராக கருதும் பாட்டியை, யோகிபாபு அத்தனை மலினமாகக் கிண்டலடிப்பதையெல்லாம் நயன்தாரா எளிதாக எடுத்துக்கொள்வது அப்பட்டமான சினிமாத்தனம். குலப்புள்ளி லீலா, ஜெயப்பிரகாஷ், மீரா கிருஷ்ணன் போன்ற நடிகர்கள் வந்து போகிறார்கள்.

சுதர்சனின் ஒளிப்பதிவு தரமாக இருக்கிறது. பொள்ளாச்சியின் அழகையும், இருட்டு பங்களாவின் திகிலையும் திறமையாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். பிளாஷ்பேக் பகுதியை கருப்பு –வெள்ளையிலேயே சித்தரித்த விதம் அழகு.

கே.எஸ்.சுந்தரமூர்த்தி, ஒரு கவனிக்கத்தக்க இசையமைப்பாளராக மலர்வார் என்பதை உறுதிப்படுத்தும்விதமாக பாடல்கள் அமைந்திருக்கின்றன. அதிலும் ‘மேகதூதம்’ பாடலின் இனிமையும் வரிகளின் அற்புதமும் அத்தனை அழகு. செண்டை மேளம் மற்றும் வயலின் இசையைக் கலந்து திகிலூட்ட முயன்றிருக்கிறார். ஆனால் பெரும்பாலான காட்சிகளில் பின்னணி இசை ஒலித்துக் கொண்டேயிருப்பது எரிச்சல்.

‘லஷ்மி, மா’ ஆகிய இரண்டு குறும்படங்களின் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றவர் கே.எம். சர்ஜூன். ‘எச்சரிக்கை, இது மனிதர்கள் நடமாடும் இடம்’ என்கிற திரில்லர் திரைப்படத்தையும் ஏற்கெனவே இயக்கியிருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தில், காட்சிகளை அழகியலுடன் உருவாக்குவதில் இவரது  திறமை பளிச்சிடுகிறது. ஆனால் அழுத்தமான திரைக்கதை, சுவாரசியமான நுண்விவரங்கள், உணர்ச்சிகரமாக கதை சொல்லும் திறமை போன்றவற்றில் மிகவும் பின்தங்கியிருக்கிறார்.

‘ரன் லோலா ரன்’ என்கிற ஜெர்மன் திரைப்படத்தின் மையத்தை இதில் இணைத்திருக்கும் விதம் சுவாரசியம். சில விநாடிகளின் தாமதத்தில் பல நிகழ்வுகள் எவ்வாறு மாறுகின்றன என்பதைத் தர்க்கத்தோடு இணைத்திருக்கிறார். ஆனால் பல காட்சிகள் நம்பகத்தன்மையோடு அமையாததால் திரைப்படத்தோடு ஒன்ற முடியவில்லை.

‘ஐரா’ என்பது ஐராவதம் என்கிற யானையாம். பழிவாங்குதலில் இதன் ஞாபகசக்தி அதிகம் என்றெல்லாம் தலைப்பிற்காக அத்தனை மெனக்கெட்டவர்கள், கதை மற்றும் திரைக்கதைக்காகவும் அப்படியே உழைத்திருக்கலாம். பார்வையாளர்களின் ஞாபகத்திலிருந்து உடனே மறையக்கூடிய திரைப்படமாக ‘ஐரா’ ஆகியிருப்பது துரதிர்ஷ்டம். 

]]>
nayanthara, Airaa movie review https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/3/29/w600X390/airaa_nayan1222xx11.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2019/mar/29/airaa-movie-review-3123237.html
3107898 சினிமா திரை விமரிசனம் ஒரு கொலையின் வழித்தடம் தேடும் அருண் விஜய்யின் "தடம்"   கார்த்திகேயன் வெங்கட்ராமன் Tuesday, March 5, 2019 06:00 PM +0530  

வழக்கமாக நாளிதழ்களில் நாம் வாசிக்க நேருகின்ற ஏதாவது ஒரு செய்தி நம்மை 'அட' போட வைக்கும். கொஞ்சம் அக்கறை காட்டி படித்து விட்டு கடந்து விடுவோம். ஆனால் ஒரு படைப்பாளி அதனை வாசிக்க நேரும்போது, அவர் மனம் அதனைக் கற்பனை வழியாக வெவ்வேறு வண்ணங்கள் சேர்த்து ஒரு பெரிய கேன்வாஸில் வரைந்து விடும். அப்படி இயக்குநர் மகிழ் திருமேனி திரையில் விட்டுச் சென்றுள்ளதே இந்தத் "தடம்".

இத்தகைய த்ரில்லர் வகை படங்களை இயக்குவதில் மகிழ் திருமேனி தனக்கென ஒரு தனி பணியினை கையாண்டு வருகிறார். இந்த படமும் அதற்கு விதிவிலக்கு அல்ல!

இத்தகைய வகை படங்களை திரையில் சென்று பார்க்க விரும்புபவர்களின் ஆர்வத்தை குலைக்காத வண்ணம் விரிவான கதையோ, ஸ்பாய்லர்களோ நான் இங்கு சொல்லப் போவதில்லை. :-)

ஒரு கொலை நடக்கிறது. அதை இவர்கள் செய்திருக்கலாம் என இருவர் மீது சந்தேகம் எழும்புகிறது. இருவர் மீதான சந்தேக முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்ந்து வர, இறுதியில் யார் அதனைச் செய்திருப்பார்கள் என்ற விறுவிறுப்பான முடிவை நோக்கி விரைவதே தடத்தின் கதை..!

இந்த கதையை தனது அருமையான திரைக்கதை, parallel and zigzag narrative, intriguing characters மற்றும் ஏன் இப்படி நடக்கிறது என கேள்வி எழுப்பும் வகையிலான காட்சியமைப்புகள் மூலம் சுவராசியமானதொரு காட்சி அனுபவமாக மாற்றியுள்ளார் மகிழ் திருமேனி!

அருண் விஜய்,  தன்யா ஹோப், ஸ்ம்ருதி வெங்கட், பெப்ஸி விஜயன் என கதாபாத்திரங்கள் அனைவருமே படத்தில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். இத்தகைய படங்களுக்கு உங்களை சீட்டின் நுனியில் இருக்க வைக்கும் sleek editing என்பது ரொம்பவே முக்கியம். அது இந்தப்படத்தில் குறையின்றி நிறைவேறியுள்ளது.

படத்தின் துவக்கத்தில் வரும் அருண் விஜய் - அறிமுக நாயகி தன்யா ஹோப் தொடர்பான காதல் காட்சிகள் இளமை ததும்பும் குறும்பு. அதேபோல மற்றொரு நாயகியான ஸ்ம்ருதி வெங்கட்டின் காட்சிகளில் இயல்பும் அழகும் நிரம்பியிருக்கும். இத்தகைய படங்களில் காதல் காட்சிகள் வைப்பது கொஞ்சம் சவாலான விஷயம்தான். இயக்குநர் அதை திறமையாகக் கையாண்டுள்ளார். 

இவர்களுக்கு மாறாக கொலைக் குற்ற  விசாரணையின் காவல்துறை துணை ஆய்வாளராக வரும் வித்யாவின் நடிப்பு வேறொரு வகையில் சிறப்பு.  

கண்டிப்பாக தியேட்டருக்குச் சென்றே பார்க்கலாம். அதுவரை உங்கள் ஆர்வத்தைக் கெடுக்கும் எந்த வகையிலான ஸ்பாய்லர் விமர்சனங்களையும் படிக்க வேண்டாம்.

படத்தின் ஒபனிங் சீன்தான் ஸ்னீக் பீக்காகவும் வந்துள்ளது. பார்த்து ரசிக்கலாம்

லிங்க்: 
https://youtu.be/wxqPm7yu1Y0

எனவே.... தடம்......வலுவாக பதிந்துள்ளது!   

]]>
kollywood, movie, yogi babu, thadam, arun vijay, makizh thirumeni, thriller, tanya hope, fefsi vijayan https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/3/5/w600X390/ThadamMovieReview.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2019/mar/05/ஒரு-கொலையின்-வழித்தடம்-தேடும்-அருண்-விஜய்யின்-தடம்-3107898.html
3100858 சினிமா திரை விமரிசனம் செழியனின் ‘டு லெட்’ - திரை விமரிசனம் சுரேஷ் கண்ணன் Friday, February 22, 2019 11:35 AM +0530  

எளிய வர்க்கத்தினர், ஒரு பெருநகரத்திற்குள் வாடகைக்காக வீடு தேடுவது என்பது ஏறத்தாழ காட்டிற்குள் வேட்டையாடச் செல்லும் அனுபவத்திற்கு இணையானது. இரை கண்ணில் தென்படாமலேயே சில நாட்கள் கழியக்கூடும். தென்பட்டவுடன் மூச்சிறைக்க ஓடி பல தோல்விகளுக்குப் பிறகு இறுதியாக ஒன்றைத் துரத்திப் பிடித்து அடைவதென்பது அசுர சாதனைதான். ஆனால் இதிலுள்ள வித்தியாசம் என்னவெனில், மான்கள் ஓடி சிங்கத்தை வேட்டையாட முயல்வது போன்ற, கற்பனைக்கும் எட்டாத விசித்திரமான கதையாக அந்த அனுபவம் இருக்கும்.

வாடகை வீட்டின் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டவர்களால்தான் அவற்றின் பிரத்யேகச் சிக்கல்களை அழுத்தமாக உணர முடியும். அப்படியொரு கசப்பான அனுபவத்தை தனது அபாரமான, இயல்பான திரைமொழியின் மூலம் பார்வையாளர்களுக்குக் கச்சிதமாக கடத்தியிருக்கிறது, ‘டு லெட்’ திரைப்படம்.

ஒவ்வொரு மனிதனுக்கும் உருவாகக்கூடிய அடிப்படையான கனவுகளுள் ஒன்று, ‘எப்பாடு பட்டாவது ஒரு சொந்த வீட்டை அடைய வேண்டும்’ என்பது. ஏறத்தாழ ஒருவரின் முழு ஆயுளையும் பலியாகக் கேட்கக்கூடிய கனவு அது. அப்படி எட்டிய ஒரு கனவு, எப்படி நிராசையாக முடிகிறது என்பதை யதார்த்தமான காட்சிகளுடன் பதிவு செய்தது ‘பாலுமகேந்திரா’வின் வீடு திரைப்படம். வீடு தேடும் படலத்தைத் தொடர்ந்து, தனக்கான சிறு கூட்டை கட்டிப் பார்க்க முயலும் ஒரு கீழ்நடுத்தர வர்க்கத்தினரின் கனவுகளையும் பிரச்னைகளையும் விவரிக்கும் போக்கில் இரண்டாம் அடுக்கிற்கு நகர்ந்தது அந்தத் திரைப்படம். ஆனால் வீடு தேடும் படலத்திலேயே இன்னமும் சொல்லப்பட வேண்டிய எத்தனையோ பிரச்னைகள் இருக்கின்றன என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது ‘டு லெட்’.

மனிதனின் பிரதான கனவுகளுள் ஒன்றான வீடு என்பதை ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற்கு மட்டுமான பிரச்னையாகச் சுருக்கிப் பார்க்கமுடியாது. இதுவொரு சர்வதேச பிரச்னை. உலகமயமாக்கலுக்குப் பிறகு இந்தச் சிக்கல்களின் பரிமாணங்கள்  வெவ்வேறு வடிவங்களில் கூர்மையடைந்திருக்கின்றன. எனவேதான் இந்தத் திரைப்படம், சர்வதேசப் பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றதோடு தேசிய விருது உள்பட பல சர்வதேச விருதுகளையும் அங்கீகாரங்களையும் அடைந்திருக்கிறது.

இந்த திரைப்படத்தைப் பார்க்கும் பெரும்பாலோனோர் தங்களையும் இந்த அனுபவங்களுக்குள்ளாக பொருத்திப் பார்க்க முடியும். இதைத் திரைப்படம் என்பதை விடவும் ஓர் அசலான வாழ்க்கையின் துண்டு எனலாம். நம்மை நாமே திரையில் பார்ப்பதைப் போன்ற மிக மிக இயல்பான காட்சிகள். நாடகத்தனங்களை முற்றிலும் நிராகரிக்கும் திரைக்கதை. ஒரு யதார்த்தமான கீழ்நடுத்தர வர்க்கக் குடும்பம். அவர்களின் துயரமான, மகிழ்ச்சியான, உளைச்சலான தருணங்கள் என அனைத்தும் மிக நேர்த்தியாக அடுக்கப்பட்டிருக்கின்றன.


*

தன்னுடைய சினிமா கனவுகளுடன், உதவி இயக்குநராகப் பணியாற்றும் இளங்கோ (சந்தோஷ் நம்பிராஜன்), அவருடைய மனைவியாக, ஒரு சராசரியான குடும்பத்தலைவியாக அமுதா (ஷீலா ராஜ்குமார்), இவர்களுடைய மகன் சித்தார்த் (தருண்). ஒரு சிறிய, அழகான கூடு இந்தக் குடும்பம். ‘வெளில கூட்டிப் போயிட்டு வந்ததுக்கு தாங்க்ஸ்’ என்று வெட்கப் புன்னகையுடன் மனைவி சொல்லும் நன்றியோடு இவர்களின் ஒரு அன்றாட நாள் முடியப் போகும் தருணம் அது. ஆனால் அந்த இரவு அவர்களுக்கு சந்தோஷமாக முடியவில்லை. “வீட்டைக் காலி செய்யுங்கள்” என்கிற உத்தரவு அதன் வீட்டு உரிமையாளர் பெண்மணியிடமிருந்து (ஆதிரா பாண்டியலஷ்மி) வருகிறது.

இவர்களின் உறக்கமும் நிம்மதியும் கலைகிறது. ஒரு மாதம் கெடு. வீடு தேடுகிறார்கள். தேடுகிறார்கள். தேடிக்கொண்டேயிருக்கிறார்கள். எத்தனை விதமான அனுபவங்கள்! கண்டடைந்தார்களா என்பதை நோக்கி இறுதிப்பகுதி நகர்கிறது.


*

இந்தத் திரைப்படத்தில் காட்சிகளின் பின்னணிகளில் பல அருமையான நுண்விவரங்கள் பதிவாகியிருக்கின்றன. ஆச்சரியம் என்னவெனில், இயக்குநர் எதையும் வலிந்து சொல்வதில்லை. பார்வையாளர்களின் மூளையில் திணிப்பதில்லை. ‘பார்வையாளர்களின் நுண்ணுணர்வையும் புத்திசாலித்தனத்தையும் நம்பும் இயக்குநர்’ என்பதே அத்தனை மகிழ்ச்சியானதாக இருக்கிறது. வெவ்வேறு மதங்களைச் சார்ந்த கலப்பு திருமணம், அவை சார்ந்த சிக்கல்கள், வீட்டு உரிமையாளருடன் இருக்கின்ற முன் உரசல்கள், கசப்புகள் என்று எதுவுமே நேரடியாகச் சொல்லப்படுவதில்லை. காட்சிகள் நகர்கிற போக்கில் நாமாகப் பலவற்றை உணர முடிகிறது. போலவே எவ்வித இரக்கத்தையும் பரிதாபத்தையும் பார்வையாளர்களிடமிருந்து இந்தத் திரைப்படம் கோருவதில்லை என்பது முக்கியமான விஷயம்.

இதன் சிறப்பான அம்சங்களுள் ஒன்று, ஒளிப்பதிவு. எவ்விதச் சமரசங்களும் இல்லாமல் இயற்கை ஒளியிலேயே முழு சினிமாவையும் செழியன் பதிவு செய்திருக்கிறார் என்று தோன்றுகிறது. அத்தனை அபாரமான காட்சிகள்! ஒண்டுக்குடித்தன வீடுகளின் கும்மிருட்டுச் சந்துகள், வெளிச்சமும் காற்றும் போதாத புழுக்கமான அறைகள், பாழடைந்த சமையல் அறை, மின்தடை ஏற்பட்ட இரவின் மெழுகுவர்த்தி வெளிச்சம் என்று ஒரு கீழ்நடுத்தர வர்க்கத்தினரின் வீட்டின் பின்னணியை அசலாகப் பதிவு செய்திருக்கிறார்.

பின்னணி இசை பயன்படுத்தப்படாத இரண்டாவது தமிழ்த் திரைப்படம் இது. (முதலாவது ‘நடுநிசி நாய்கள்’). இதன் திரைக்கதைக்கு அது தேவைப்படவில்லை என்று உணர்ந்திருக்கிற இயக்குநரின் நம்பிக்கை ஆச்சரியப்படுத்துகிறது. இயற்கையான சப்தங்களே பின்னணி இசையாக துணை நிற்கின்றன. அடக்கமான ஒலியுடன் ரீங்காரமிடும் ரேடியோ, அதிலிருந்து வழிந்து கொண்டேயிருக்கும் எம்.எஸ்.வி, இளையராஜா பாடல்கள், மின்விசிறி மெல்ல சுழலும் ஓசை, திடுக்கிட வைக்கும் அழைப்பு மணியின் சத்தம் என்று இந்தத் திரைப்படத்தின் அபாரமான விஷயங்களுள் ஒன்றாக ஒலிப்பதிவைச் சொல்லலாம். காதருகே கொசு பறந்து போகும் ஒலி கூட மிகத் துல்லியமாகப் பதிவாகியிருந்தது.

சந்தோஷும் ஷீலாவும் இணைந்து இந்தத் திரைப்படத்தை பிரமாதமாக்கியிருக்கிறார்கள். ஓர் இளம் தம்பதியினருக்கான கூடலும் ஊடலும் மிக இயல்பாகப் பதிவாகியிருக்கின்றன. நான்காம் வகுப்பு படிக்கும் மகனின் எதிர்காலத்தைப் பற்றி பேசும் காட்சியில் ஓர் இயல்பான குடும்பத்தலைவியின் சித்திரத்தை ஷீலா கொண்டுவந்து விடுகிறார். பொறுக்க முடியாததொரு கணத்தில் வீட்டு ஓனரம்மாவை எதிர்த்துப் பேசும் காட்சியில் ஒரு சராசரி ஆணின் மனோபாவம் சந்தோஷின் வழியாக வந்து விழுகிறது. புதுமுகங்களைப் பிரதான பாத்திரங்களாக உலவ விட்டிருப்பது இந்தத் திரைப்படத்தின் பலங்களுள் ஒன்று.

பொதுவாக இந்திய சினிமாக்களில் குழந்தை நடிகர்கள் பொருத்தமாகப் பயன்படுத்தப்படுவதில்லை. வயதுக்கு மீறிய பேச்சு, மிகையான உடல்மொழி, துறுதுறுவென சுற்றுவது போன்றவையே குழந்தைகளுக்கான சிறந்த நடிப்பாகக் கருதப்படுகிறது. மிக அரிதாகவே இயல்பான குழந்தைகள் சினிமாவில் வருகிறார்கள். தருண் அப்படியொரு சிறுவன். காரில் பயணிக்கும் ஒரு பணக்காரச் சிறுமியின் முக சேஷ்டைகளைக் கண்டு மென் கோபத்துடன் தன் முகத்தை திருப்பிக் கொள்வதும், பிறகு குழந்தைகளுக்கே இருக்கக்கூடிய களங்கமின்மையுடன் அவளைத் திரும்பிப் பார்த்துச் சிரிப்பதும் என... அந்த ஒரு காட்சியே போதும், குழந்தை நடிகர்களை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்று பாடம் கற்பிக்கிறார் இயக்குநர்.

பெரியவர்களின் உலகத்தின் நிகழும் சிக்கல்கள், ஓர் இளம் மனதை எவ்வாறெல்லாம் பாதிக்கின்றன என்பதை மிக நுட்பமான காட்சிகள் விவரிக்கின்றன. தான் வரைந்த வீட்டின் ஓவியத்தில் TOLET என்கிற வார்த்தையைப் புதிதாகச் சேர்க்கிறான் சிறுவன். ‘வாங்க.. சார்... இதுதான் கிச்சன் பாருங்க…’ என்று அவனுடைய விளையாட்டில் கூட வீடு தேடும் படலத்தின் துயரங்கள் தன்னிச்சையாகப் படர்கின்றன. சுவற்றில் தான் வரைந்த படங்களையும் ஆசையாக ஒட்டிய ஸ்டிக்கர்களையும் அந்தக் குழந்தையே பிய்த்தெடுப்பதான சூழல் எத்தனை பெரிய கொடுமை! அந்தச் சுவர் ஓவியங்களை வீடியோவில் பதிவு செய்து கொள்ளும் தந்தைமையின் பேரன்பு நெகிழ வைக்கிறது.

வீட்டுக்காரம்மாவாக நடித்திருக்கும் ஆதிராவின் பங்களிப்பு முக்கியமானது. ஆனால் அதில் சற்று நாடகத்தனம் ஊடுருவியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். அவரின் அடக்கமான கணவராக எழுத்தாளரும் ஆவணப்பட இயக்குநருமான ரவி சுப்பிரமணியன், வெறுமனே சில காட்சிகளில் வந்து போகிறார். ஆனால் அவற்றிலும் என்னவொரு இயல்பு! என்னவொரு நேர்த்தி! இயக்குநரை மறுபடி மறுபடி வியக்கத் தோன்றுகிறது. வீடு தேடிப் பிடித்து தருபவராக வரும் அருள் எழிலன். சில காட்சிகளில் மட்டும் வந்தாலும் மிக இயல்பான, லாகவமான நடிப்பைத் தந்திருக்கிறார். சாதிய மனங்கள் எத்தனை வலுவானவை என்பது அந்தக் காட்சியின் உரையாடலில் போகிற போக்கில் அழுத்தமாகக் காட்டப்படுகிறது.

ஒரு காட்சி. ‘இவங்க காலி பண்ணிட்டப்புறம் நீங்க வரலாம்” என்கிறார்கள் ஒரு வீட்டில். இளங்கோவும் அமுதாவும் ஜன்னலின் வழியாக எட்டிப் பார்க்கிறார்கள். ஒரு முதிய தம்பதி. வயதான கணவருக்கு மனைவி உணவு ஊட்டிக்கொண்டிருக்கிறார். இவர்களின் அப்போதைய தலை போகிற பிரச்னையே ஒரு வீட்டைப் பிடிப்பதுதான். ஆனால் இதைப் பார்த்ததும் எதுவும் பேசாமல் நகர்ந்து விடுகிறார்கள். இப்படிச் சீட்டுக்கட்டுகள் மாதிரி பல நுட்பமான காட்சிகளை அழுத்தமும் திணிப்பும் தராமல் இயல்பாக உலவ வைத்திருக்கிறார் செழியன்.

இருட்டின் நடுவே மெழுகுவர்த்தியின் வெளிச்சம் போல, மனிதர்கள் எல்லோரும் கெட்டவர்கள் இல்லை என்கிற நேர்மறையான விஷயமும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ‘எதுனா பிரச்சினைன்னா கேளுங்க இளங்கோ’ என்று காசோலையைக் கிழித்துத் தந்த படி சொல்லும் விளம்பரப்பட இயக்குநர் (எம்.கே.மணி) ‘நடிக்கறவங்க கிட்ட நாட்டையே ஒப்படைக்கறாங்க.. ஆனா சினிமாக்காரனுக்கு வீடு கிடைக்காது” என்கிற பகடியுடன் அவ்வப்போது ஆறுதலான வார்த்தைகளைப் பகிரும் தோழர் என்று சில பாத்திரங்கள் நம்பிக்கை வெளிச்சத்தை உருவாக்குகின்றன.

ஐ.டி துறையில் ஏற்படும் திடீர் வீக்கம், எப்படி எளிய வர்க்கத்து மனிதர்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கிறது என்கிற நில அரசியலும் இந்தத் திரைப்படத்தில் உறுத்தாதவாறு இணைக்கப்பட்டிருக்கிறது. உணவுப்பழக்கம் கூட ஒரு வீடு வாடகைக்கு கிடைப்பதற்குத் தடையாக இருக்கும் என்கிற அவல நகைச்சுவையும் பதிவாகியிருக்கிறது.

கணிசமான வாடகையைத் தருவதற்குத் தயாராக இருந்தாலும் இஸ்லாமிய சமூகத்தினருக்கு வீடு கிடைப்பதில் உள்ள சிக்கல், எடிட் செய்யப்பட்ட ஒரு வார்த்தையில் பளிச்சென விளங்குகிறது. இதைப் போலவே திருநங்கைகள் உள்ளிட்ட விளிம்புநிலை சமூகத்தினர், மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட குடும்பம், செல்லப் பிராணிகளை வளர்ப்போர் போன்றவர்களுக்கும் வாடகைக்கு வீடு கிடைப்பது அத்தனை எளிதான விஷயம் அல்ல. இந்த விஷயங்கள் இந்த திரைப்படத்தில் நேரடியாகச் சொல்லப்படாவிட்டாலும் நூற்கண்டின் சிக்கல்கள் போல நாமாகப் பலவற்றை உணர்ந்து கொள்வதற்கான நுனிகளை இந்தத் திரைப்படம் அடையாளம் காட்டுகிறது.

பின்னணி இசை இல்லாத சிறப்பு அம்சத்தைப் போன்று, ஒன்றரை மணி நேரத்திலேயே இந்த திரைப்படம் முடிந்து விடுவதும் நன்று. வீடு தேடுவது என்கிற மையத்தைத் தாண்டி அநாவசியமான காட்சிகள், திணிப்புகள் என்று எதுவுமில்லை.

ஆனால் சில பிசிறுகளும் இல்லாமல் இல்லை. ஏன் இந்தத் திரைப்படம் இத்தனை இறுக்கமானதாக, பதற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது என்பது புரியவில்லை. வாடகைக்கு வீடு தேடுவது என்பது ஒரு சராசரி நபரின் லெளகீக வாழ்வின் பல சிக்கல்களுள் ஒன்று. அதை இன்னமும் இயல்பான காட்சிகளின் பின்னணியில் சொல்லியிருக்கலாம். இளம் தம்பதியினரின் மெல்லிய கொண்டாட்டங்களும் ஆங்காங்கே இருக்கிறதுதான். ஆனால் பதற்றமும் இறுக்கமும் ஒரு பெரிய போர்வையைப் போல இந்த திரைப்படத்தைச் சூழ்ந்து கொண்டு அநாவசியமான துயர பிம்பத்தை ஏற்படுத்துகின்றன.

ஒரு காட்சி. புதிய குடித்தனக்காரர்கள் வந்து பார்க்கவேண்டும் என்பதற்காக இளங்கோவின் வீட்டுச்சாவியை, வீட்டின் சொந்தக்கார அம்மணி வாங்கி வைத்துக் கொள்கிறார். ஆனால் அமுதா தன் மகனுடன் வீடு திரும்பும்போது வீட்டம்மணி குடும்பத்துடன் வெளியே போயிருக்கிறார். எனவே தன் வீட்டின் வெளியே பரிதாபமாக அமர்ந்திருக்கிறார் அமுதா. வீட்டு உரிமையாளர் ஆட்டோவில் திரும்புகிறார். அவர்களின் வீட்டுப் பெண் இவர்களிடம் வந்து மெளனமாக சாவியைத் தந்துவிட்டுச் செல்கிறார். நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாவது ஏன் எவருமே எந்தவொரு ஆறுதல் வார்த்தையும் சொல்வதில்லை என்று ஆச்சரியமாக இருக்கிறது. ஏன் அப்படியொரு இறுக்கம்?

போலவே இறுதிக்காட்சியில், ஒரு திடுக்கிடும் தகவலை இளங்கோ சொல்லும் போது, ஏன் அமுதா நாடகத்தனமாக உறைந்த நிலையில் இருக்கிறார் என்பதும் புரியவில்லை. வீட்டின் உரிமையாளர்கள், வீடு பார்க்க வருபவர்கள் உள்ளே வரும் போது, குடியிருப்பவர்கள் ஏதோ தவறு செய்து விட்டதைப் போன்று கூனிக்குறுகி நிற்க வேண்டிய அவசியமும் இல்லை. இவையெல்லாம் புறந்தள்ளக்கூடிய மெல்லிய பிசிறுகளாகத் தெரிந்தாலும், இவற்றையும் கடந்திருந்தால் ‘டு லெட்’ அதன் முழுமையை நோக்கி நகர்ந்திருக்கிருக்கும் என்று தோன்றுகிறது. அதேபோல, பொருத்தமானது தான் என்றாலும், ஆங்கிலத் தலைப்பை தவிர்த்திருக்கலாமோ?

*

வாடகை வீட்டில் இருப்பவர்கள், வீடு தேடி அலைந்தவர்கள், அப்படி அலைந்து அரும்பாடு பட்டு சொந்த வீட்டை அடைந்தவர்கள் என்று பலரும் தங்களின் துயரங்களை மீள்நினைவு செய்து கொள்வதற்கான ஒரு வடிகாலாக இந்தத் திரைப்படம் அமைந்திருக்கிறது. ஆனால் முன்னர் வாடகை வீட்டின் சிரமங்களை அனுபவித்தவர்கள், வீட்டின் உரிமையாளர்களாக மாறிய பிறகு, அதற்கான முகமூடிகளை அணிந்து கொள்வது விசித்திரமான முரண்.

வெகுஜனத் திரைப்படங்களின் சம்பிரதாயங்கள், அதன் கோணங்கித்தனங்கள், வணிகச் சமரசங்கள் என்று எதுவும் இல்லாமல் ஓர் அற்புதமான சினிமாவை உருவாக்கியிருக்கும் செழியனை எத்தனை பாராட்டினாலும் தகும். அவரே இந்தத் திரைப்படத்தைத் தயாரித்திருப்பதால்தான் இது சாத்தியமாகியிருக்கிறது. ஆனால் இது போன்ற திரைப்படங்களின் வரவேற்பும், அங்கீகாரமும் பல புதிய இயக்குநர்களுக்கு நம்பிக்கை வெளிச்சத்தை தரும். அதன் முன்னோடிகளில் ஒருவராக மாறியிருக்கும் செழியனுக்குப் பாராட்டு.

தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு ‘டு லெட்’ ஒரு மகத்தான அனுபவத்தைத் தந்துள்ளது.

]]>
Movie review, To Let https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/2/22/w600X390/to_let_movie23xx.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2019/feb/22/to-let-movie-review-3100858.html
3097720 சினிமா திரை விமரிசனம் கனவு இப்படியும் வருமா? மாறுபட்ட கதையம்சம் கொண்ட குறும்படம்! மணிகண்டன் தியாகராஜன் Wednesday, February 20, 2019 04:08 PM +0530 நாம் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்போது வரும் கனவுகளில் கூட பல வகை உண்டு என்றால் நம்ப முடிகிறதா? ஒருவர் காணும் கனவின் தொடர்ச்சி மற்றவர்களுக்கும் வர வாய்ப்புள்ளது என்று சொல்கிறது நான்காம் விதி குறும்படம். அனு சத்யா என்ற இளம்பெண் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

ஒரு இளம்பெண் பிறந்த தினத்துக்காக தந்தையிடம் ஆசி பெறுவதிலிருந்து தொடங்குகிறது குறும்படம். பார்த்தால், அதுவொரு கனவு!

இந்தக் கனவு ஒரு புகைப்படக் கலைஞருக்கு வருகிறது. இதன் தொடர்ச்சி, ஒரு திருநங்கைக்கும், தொலைக்காட்சி நிருபருக்கும், பிறவியிலேயே பார்வையிழந்தவருக்கும் வருகிறது.

தனக்கு வந்த கனவு குறித்து முகநூலில் விளக்கம் கேட்கும் இளைஞரை அழைக்கிறார் மனோதத்துவவியல் நிபுணராக நடித்திருக்கும் ராம்ஜி (எவ்வளவு நாள் ஆயிற்று ராம்ஜியை திரையில் பார்த்து). படத்தில் ராம்ஜி கூறுவது போல், இந்தக் கனவை கண்ட நபர்கள் அனைவரையும் விதி ஒருங்கிணைக்கிறது.

அவர்களுக்கு வந்த கனவு என்ன? அந்தக் கனவால் நேரவிருக்கும் ஒரு அசம்பாவித சம்பவத்தை அவர்கள் தடுத்து நிறுத்துகிறார்களா? என்பதே குறும்படத்தின் முடிவு. சிறந்த திரைக்கதை மற்றும் வசனங்கள் ஆகியவற்றால் மட்டுமே இந்தக் கதையை ரசிகர்களுக்குப் புரிய வைக்க முடியும். அதை சிறப்பாக செய்திருக்கிறார் அனு சத்யா.

ராம்ஜியுடன் இயக்குநர் அனு சத்யா

குமரேஷின் படத் தொகுப்பு கதையைப் புரிய வைப்பதற்குத் துணை புரிகிறது. கதைக்குத் தேவையான கோணங்களைத் தருகிறார் ஒளிப்பதிவாளர் சுபாஷ் மணியன். பொறியாளன் படத்தின் இசை அமைப்பாளரான எம்.எஸ்.ஜோன்ஸ் இந்தப் படத்துக்கு இசை மூலம் உயிர் கொடுத்திருக்கிறார்.

இந்தப் படத்தின் பிரதான கதாபாத்திரங்களின் பெயர்களின் (தீபக், ருத்ரா, ஈஷ்வர், ஆல்பர்ட், மங்கை) முதல் எழுத்துகளை ஒன்றிணைத்தால் Dream என்று முடியும்.

இந்தப் படத்தை இயக்குநர்கள் ராஜு முருகன், வேல்ராஜ், அருண்ராஜா காமராஜ், நடிகை அமலா பால் உள்ளிட்டோர் டுவிட்டரில் ஷேர் செய்து வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர். ராம்ஜி உள்பட அனைத்து கதாபாத்திரங்களும் கதைக்குத் தேவையான கச்சிதமான தேர்வு. ஒரு தலை காதலை ஏற்க மறுக்கும் பெண்ணை கொலை செய்வதையும், அந்தப் பெண்ணை ஆயுதங்கள் கொண்டு தாக்குவதையும் கடுமையாக இந்தப் படத்தின் வழியே எதிர்க்கிறார் இயக்குநர் அனு சத்யா.

படம் பற்றி அவர் கூறுகையில், ‘இன்செப்சன் படத்தை இயக்கிய கிறிஸ்டோஃபர் நோலன் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர். கனவு தொடர்பாக அவர் எடுத்திருந்த அந்தப் படம் எனக்கு பிடிக்கும். கனவை அடிப்படையாக வைத்து ஒரு குறும்படம் இயக்க வேண்டும் என்று எண்ணினேன். அதன்படி நான்காம் விதி கதையை உருவாக்கினேன்.

இந்தப் படத்தை சத்யம் திரையரங்கில் திரையிட்டோம். இயக்குநரும், நடிகருமான பார்த்திபன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், இயக்குநர் மித்ரன் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

காதல் என்ற பெயரால் நடைபெறும் வன்முறைகளுக்கு எதிராக இந்தப் படத்தை எடுக்க நினைத்தேன்’ என்று கூறிய அனு சத்யாவுக்கு வெள்ளித்திரையில் விரைவில் தடம் பதிக்க வாழ்த்துகள்!

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/2/17/w600X390/nangamvidhi.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2019/feb/17/கனவு-இப்படியும்-வருமா-மாறுபட்ட-கதையம்சம்-கொண்ட-குறும்படம்-3097720.html
3096447 சினிமா திரை விமரிசனம் கார்த்தியின் ‘தேவ்’ - திரை விமரிசனம் சுரேஷ் கண்ணன் Friday, February 15, 2019 11:21 AM +0530  

காதலர் தினத்தன்று வெளியாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் காதலும் இல்லை, கத்தரிக்காயும் இல்லை. அறிமுக இயக்குநரான ரஜத் ரவிஷங்கருக்குக் காட்சிகளை மிக அழகான பின்னணிகளில் ரசனையுடன் வைக்கத் தெரிந்திருக்கிறது. ஆனால் உணர்ச்சிகரமாக கதை சொல்லத் தெரியவில்லை.

கதாபாத்திரங்கள் அடையும் உணர்ச்சிகள் பார்வையாளனுக்கும் கடத்தப்பட வேண்டும் என்பது ஒரு படைப்பின் அடிப்படையான விதி. ஆனால் இந்தத் திரைப்படத்தில் அது பெரும்பான்மையாக இல்லாததால் பல காட்சிகள் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் மேம்போக்காகக் கடந்து சலிப்பை ஏற்படுத்துகின்றன.

*

வசதியான குடும்பத்தில் பிறந்த கார்த்திக்கு (தேவ்) சாகசப் பயணங்கள் புரிவதில் அதிக விருப்பம். சராசரித்தனங்களில் இருந்து விலகி, இலக்கற்ற வாழ்க்கைதான் அவருடைய தேர்வு.  தன்னுடைய இளம் பருவத்து நண்பர்களான விக்கி  மற்றும் அம்ருதாவைத் தன்னுடனேயே வைத்துக்கொள்ளப் பிரியப்படுகிறார். ஆனால் தாழ்வுமனப்பான்மையுள்ள விக்னேஷிற்கு ஒரு சராசரியான உலகில் ‘செட்டில்’ ஆவதுதான் லட்சியம். கார்த்திக்குக்கு ஒரு காதலை அறிமுகப்படுத்திவிட்டால் தன்னை விட்டுவிடுவான் என்று அதற்காக முயல்கிறார்.

இணையத்தில் தேடும்போது தற்செயலாக ரகுல் ப்ரீத் சிங்கின்  (மேக்னா) புகைப்படம் கிடைக்கிறது. அவள் ஒரு பன்னாட்டு நிறுவனத்தை நடத்தி வருபவர். சினிமாவின் விதிப்படி, புகைப்படத்தில் அவரைக் கண்ட கணத்திலேயே கார்த்தியும் காதலில் விழுகிறார். அவரைத் துரத்தித் துரத்தி தன் காதலை கண்ணியமாகத் தெரிவிக்க முயல்கிறார். ஆனால், தன்னுடைய இளம் வயதில் தந்தையின் கொடுமைகளைப் பார்த்து வளர்ந்த ரகுல் ப்ரீத் சிங்கிற்க்கு ஆண்கள் என்றாலே அச்சமாகவும் ஒவ்வாமையாகவும் இருக்கிறது. எனவே கார்த்தியை முதலில் புறக்கணிக்கிறார். என்றாலும் அவருடைய கண்ணியமான அணுகுமுறை காரணமாக மெல்ல காதலில் விழுகிறார்.

தந்தையால் வளர்க்கப்பட்டவர் கார்த்தி.  ரகுல் ப்ரீத் சிங்கோ தாயால் வளர்க்கப்பட்டவர். சராசரிகள் புழங்கும் உலகை வெறுத்து எவ்வித இலக்கும் இல்லாமல் சாகசப் பயணங்கள் செய்ய விரும்புபவர் கார்த்தி. ஆனால் ரகுல் ப்ரீத் சிங்,  தன் தொழிலில் இன்னமும் மேலே பறக்க விரும்புகிறவர். இப்படி எதிரெதிர் முரண்கள் அவர்களுக்குள் இருந்தாலும் பரஸ்பரப் புரிதலுடன் காதலைத் தொடர்கிறார்கள்.

ஆனால், சிக்கல் இல்லாமல் எந்த உறவாவது நீடிக்க முடியுமா? புரிதலின்மையும்  பிரிவும் இவர்களின் உறவிலும் ஏற்படுகின்றன. அதன் தீர்வை நோக்கி நகர்கிறது படத்தின் இறுதிக்காட்சிகள்.

*

ஏறத்தாழ அனைத்துக் காட்சிகளிலும் கார்த்தி வசீகரமாக இருக்கிறார். துள்ளலாக இயங்குகிறார். நடனக்காட்சிகளிலும் குறை சொல்ல முடியாது. காதலியின் பிரிவை எண்ணி உருகும் காட்சியில் சற்றுக் கலங்க வைக்கிறார். எனவே கார்த்திக் தன்னுடைய பங்களிப்பை அர்ப்பணிப்புடனும் முழுமையாகவும் தந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். இயக்குநரால் இதைச் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளத் தெரியவில்லை.

இதைப்போலவே கச்சிதமாகச் செதுக்கி வைக்கப்பட்ட கொழுக்கட்டை போல வளப்பமாக இருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். சில காட்சிகளில் நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார். வழக்கமான பொம்மை நாயகியாக அல்லாமல், இவருக்கென்று தனி குணாதிசயங்கள், சொந்தக்காலில் நிற்கும் பின்னணி போன்றவற்றோடு இந்தப் பாத்திரத்தை வடிவமைத்திருப்பதற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.

நகைச்சுவை என்ற பெயரில் விக்னேஷ் பெரும்பாலும் எரிச்சலூட்டுகிறார். அம்ருதாவின் நடிப்பு பரவாயில்லை. பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்ற மூத்த நடிகர்கள் அதிக வாய்ப்பு அளிக்கப்படாமல் சம்பிரதாயமான பாத்திரங்களாக வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்தின் இன்னொரு நாயகன் என்று ஒளிப்பதிவாளர் ஆர். வேல்ராஜை நிச்சயம் குறிப்பிட்டாக வேண்டும். பல்வேறு நாடுகளிலுள்ள பல்வேறு நகரங்களில் இதன் திரைக்கதை பயணிப்பதால் அதனதன் பின்னணிகள் மிக வசீகரமாகவும் அழகியல் உணர்வுடனும் பதிவாக்கப்பட்டுள்ளன. பால்வீதி, சூரிய உதயம் போன்றவற்றைத் தாண்டி எவரெஸ்ட் சிகரத்தின் அழகும் அங்கு நிகழும் சாகசமும் பிரமிப்பூட்டும் வகையில் படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன. என்றாலும், ‘இத்தனை அடி உயரத்தில் இருக்கிறோம்’ என்று காட்டப்படும்போது காட்சிகளின் தொடர்பற்ற தன்மை காரணமாக அதில் எவ்வித ஈடுபாடும் வரவில்லை. கார்த்திக் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் இடையில் வளரும் காதல் தொடர்பான சில காட்சிகள் மற்றும் சம்பவங்கள் இனிமையாகவும் ரசனையாகவும் அமைந்திருக்கின்றன.  இருவருக்கிடையேயான ‘வேதியியல்’ சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது.

திரைக்கதையே அடிப்படையில் பலவீனமாக இருக்கும் போது ஒரு படத்தொகுப்பாளரால் என்னதான் செய்து விட முடியும்? என்றாலும் ரூபன் இயன்ற அளவிற்குக் காட்சிகளின் லயம் குறையாமல் ஒன்றிணைத்திருக்கிறார். சண்டைக்காட்சிகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் (அன்பறிவ்) செயற்கையாகத் திணிக்கப்பட்டிருப்பதால் சலிப்பை உருவாக்குகின்றன.

‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான’ கதையாக, ஹாரிஜ் ஜெயராஜின் இசை, பியானோ தேய்ந்து மெளத் ஆர்கனாக மாறிக் கொண்டிருக்கிறது. ‘முன்பே கேட்டிருக்கிறோமே அல்லது எங்கேயோ கேட்டிருக்கிறோமே’ என்கிற உணர்வு அவரது சமீபத்திய பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் தோன்றுகிறது. ‘அணங்கே.. சிணுங்கலாமா!’ பாடல் மட்டும் கவனத்தைக் கவர்கிறது. அட்டகாசமான பின்னணி இசையின் மூலம் இந்தக் குறையை சமன் செய்திருக்கிறார் ஹாரிஸ்.

வெவ்வேறு பின்னணி, இலக்கு, ரசனை போன்றவை இருந்தாலும் காதல் என்கிற உணர்வு கார்த்திக்கையும் ரகுல் ப்ரீத் சிங்கையும் ஒன்றிணைக்கிறது. அது நிறைவேறிய பிறகு அவர்கள் முன்னகரும் பாதைகளின் தேர்வும் அவர்களுக்கு இடையேயுள்ள அகங்காரமும் அந்தக் காதலில் சிக்கலைத் தோற்றுவிக்கிறது. இந்த மெல்லிய இழையை வைத்துக்கொண்டும் ஒரு சுவாரசியமான திரைப்படத்தைத் தர முடியும். ஆனால் ஆழமின்றியும் உணர்ச்சிகரமில்லாமலும் நகரும் விதத்தில் ‘தேவ்’ மிகவும் பின்தங்கி சலிப்பை ஏற்படுத்துகிறது. இந்தத் தடையைத் தாண்டியிருந்தால் ‘தேவ்’, சிறந்த காதல் திரைப்படங்களின் வரிசையில் இணைந்திருக்கக்கூடும்.  
 

]]>
Karthi, Dev review https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/2/15/w600X390/dev_new99.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2019/feb/15/dev-review-3096447.html
3088086 சினிமா திரை விமரிசனம் ராமின் ‘பேரன்பு’ - திரை விமரிசனம் சுரேஷ் கண்ணன் Saturday, February 2, 2019 11:08 AM +0530  

தமிழ் சினிமாவை ஓரடி முன்னே நகர்த்திச் செல்லும் பிடிவாதமும் நுண்ணுணர்வும் உள்ள அரிதான இயக்குநர்கள் எப்போதும் இருந்துகொண்டே இருப்பார்கள். சமகாலத்தில் இயக்குநர் ராமை அதில் பிரதானமாகச் சொல்லலாம். அவருடைய சமீபத்திய திரைப்படமான ‘பேரன்பு’ இதைக் கூடுதலாக நிரூபிக்கிறது.

மானுட வாழ்க்கை என்பது அன்பு என்கிற அடிப்படையான உணர்வில் பயணிக்கப்பட வேண்டியது. அதில் பேரன்பைக் கொட்டுவதற்கு சில அரிதான மனிதர்கள் இருப்பார்கள். அப்படியொரு மனிதனையும், மூளை முடக்குவாத குறைபாடுள்ள அவருடைய மகளையும் பற்றிய திரைப்படம் இது.

சராசரி மனிதர்கள் அதிகம் அறிந்திராத ஒரு சிக்கலான உலகத்தை உணர்வுபூர்வமாகவும், இயல்பான நெகிழ்ச்சியுடனும், சமயங்களில் கருணையற்ற இரக்கத்துடனும் திறந்து காட்டுகிறார் ராம். இதனூடே கண்திறக்கும் வெவ்வேறு சிறு சிறு உலகங்கள் இந்தப் பயணத்தை அபாரமான அனுபவமாக்கியிருக்கின்றன.

ராமின் திரைப்படங்களின் மீது ஒரு பொதுவான குற்றச்சாட்டு உண்டு. உலகமயமாக்கம், மொழி அரசியல், பெண்ணியம் என்று பல அரசியல்களை ஒரே திரைக்கதையில் கலந்து கொட்டுகிறார் என்பதுதான் அது. நம்முடைய தினசரி வாழ்க்கை என்பது நாம் அறிந்திராத, கற்பனை செய்தும் பார்த்திராத பல்வேறு அரசியல்களால் இயக்கப்படுவதுதான் என்கிற நிதர்சனத்தை அறிந்தவர்களால் அந்தக் கலவையின் அவசியத்தை புரிந்து கொள்ள முடியும். ஆனால் அப்படியான அரசியல் பிரக்ஞை இல்லாமல் சலிப்படைபவர்களின் புகார்தான் மேலே குறிப்பிடப்பட்டது. ஆனால், ‘பேரன்பு’ திரைப்படத்தில் அப்படியான புகார் கூட எழவிடாமல் ஓர் அமைதியான நதி போல அழகாகப் பயணிக்கும் அலைபாயாத திரைக்கதையை உருவாக்கியுள்ளார் ராம்.

இயற்கை என்பது அழகானது, இயற்கை என்பது ஆபத்தானது என்பன போன்ற தலைப்புகளில் பல அத்தியாயங்களாக விரிகிறது இந்த திரைப்படம். ‘என் வாழ்க்கையைப் பாருங்கள், நீங்கள் எத்தனை ஆசிர்வதிக்கப்பட்டவர் என்பதை உணர முடியும். அதற்காகத்தான் இந்தக் கதையை சொல்கிறேன்’ என்று முன்னுரையில் அமுதவன் (மம்முட்டி) சொல்வது எத்தனை உண்மையானது என்பதைப் படம் முழுவதும் முகத்தில் அறையும் காட்சிகள் நிரூபித்துக் கொண்டேயிருக்கின்றன.

*

மலையால் சூழப்பட்ட பிரதேசம் அது. எவருடனோ கோபித்துக்கொண்டு நிற்பது போல தன்னந்தனிமையாய் ஒரு வீடு. நடுத்தர வயது மனிதர் ஒருவரும் (மம்மூட்டி), பதின்ம வயதில் உள்ள, மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட அவருடைய ‘பாப்பா’வும் (சாதனா) மட்டுமே அந்த வீட்டின் உறுப்பினர்கள். ஏன் அவர்கள் இத்தனை தனிமையில் வசிக்க வேண்டும்? சுற்றியுள்ள சமூகம்தான் அவர்களை அள்ளி வந்து இங்குப் போட்டிருக்கிறது என்பது மெல்ல மெல்ல துலங்குகிறது.  

மம்மூட்டியின் வாய்ஸ் ஓவர் மற்றும் துண்டு துண்டான காட்சிகள் வழியாக முன்கதையை சுருக்கமாகச் சொல்லி முடித்து விடுகிறார் ராம். அந்தத் துண்டு காட்சிகள் கூட தேவையில்லை. சமகாலப் பார்வையாளர்களை இன்னமும் சற்று அதிகமாகவே இயக்குநர் நம்பலாம்.

‘இப்படியொரு பெண் பிறந்தாளே!’ என்கிற காரணத்திற்காகவே நீண்ட காலம் விலகியிருந்த தந்தைக்கு, மகளின் பிரியத்தையும் அங்கீகாரத்தையும் இப்போது அடைய வேண்டிய கட்டாயம். சுற்றியுள்ள இயற்கையும் அதன் மெளனமும் அவருக்குப் பல விஷயங்களைக் கற்றுத்தருகிறது. மெல்ல மகளின் அன்பைப் பெறுகிறார். அதற்குள் வேறு சில சிக்கல்கள் தோன்றுகின்றன.

தாய் பூனை தன் குட்டியைக் கவனமாக கவ்விக்கொண்டு செல்வதைப் போல தன் மகளுடன் பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்கிறார் மம்மூட்டி. அகச்சிக்கல்களும் புறச்சிக்கல்களும் எல்லாப்பக்கமும் நின்று தொடர்ந்து அழுத்தும்  உணர்ச்சிகரமான உச்சத்தில்  ஒரு விபரீதமான முடிவை எடுக்கிறார். பிறகு, உணர்வுபூர்வமான மற்றும் நேர்மறையான காட்சியுடன் படம் நிறைவடைகிறது. 

எல்லோரையும் போல சராசரித்தனங்களைக் கொண்ட மம்மூட்டி, எப்படி உலகையே நேசிக்கும் பேரன்பானவனாக உருமாறுகிறான் என்பதைக் கவித்துவமான தருணங்களால் விவரித்துச் சொல்கிறது, ‘பேரன்பு’.

*

‘அமுதவன்’ என்கிற பாத்திரத்திற்கு மம்மூட்டியை விட்டால் வேறு தேர்வு இல்லை என்று சொல்வது தேய்வழக்குப் பாராட்டாக முடிந்துவிடும். இயல்பாக நடிக்கக்கூடிய எந்தவொரு நல்ல நடிகரும் எதிர்கொள்ளக்கூடிய பாத்திரம்தான். ஆனால் பிரச்னை என்னவெனில், மம்மூட்டியின் அசாதாரணமான நடிப்பைப் பார்த்த பிறகு வேறு எவரையும் அதில் யோசிக்க முடிவதில்லை. ‘என்னடே’ என்பது போல் மம்மூட்டியின் முகத்தில் எப்போதுமே மெல்லிய, நிரந்தரமான சலிப்பு இருக்கும். அந்தத் தோரணை இந்தப் பாத்திரத்திற்கு வெகுவாக உதவியிருக்கிறது.

தன் மகளை நீண்ட காலம் பிரிந்திருந்தோமே என்கிற குற்றவுணர்வில் அவளுடைய அன்பை அடையும் தேர்வில் மெல்ல மெல்ல வெற்றி பெற்றாலும், பாலினப்பாகுபாடு ஒரு விநோதமான சுவராக வந்து குறுக்கே நிற்கிறது. ஒற்றை பெற்றோர் (Single Parent) எதிர்கொள்ளும் பல நடைமுறைச் சிக்கல்களை அவர் கடக்க வேண்டியிருக்கிறது.

அதிலும் மூளைமுடக்குவாதம் என்னும் பிரச்னையுடைய மகளை, ஒரு தகப்பனாக அவர் பராமரிப்பதில் பிரத்யேகமான சிக்கல்கள் வருகின்றன. படுக்கையறையில் இருக்கும் ரத்தக்கறையைக் கண்டு, தன் மகள் வயதுக்கு வந்து விட்டதை அறியும் மம்முட்டி ‘ஐயோ.. இப்போது என்ன செய்வேன்!’ என்பதான வேதனை முகத்தில் தெரிய மறுகுவதாகட்டும், தொலைக்காட்சியில் தெரியும் பிரபல நடிகரின் பிம்பத்தின் மீது காதலுணர்ச்சியுடன் மகள் முத்தமிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு மறைவாக நின்று கலங்குவதாகட்டும், இப்படிப் பல காட்சிகளில் தனது இயல்பான நடிப்பின் மூலம் அந்தப் பாத்திரத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கிறார். ஒரு பெண்ணிடம் அறைபடுவது முதல், பல காட்சிகளில் முன்னணி நடிகர் என்கிற பந்தா துளிகூட இல்லாமல் கீழிறிங்கி நடித்திருக்கும் அர்ப்பணிப்பு உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது. தன் மகளை நெருங்கும் எந்தவொரு ஆணையும் சந்தேகக்கண்ணுடன் பார்க்கும் ஒரு தகப்பனின் இயல்பான சித்திரத்தைக் கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார்.

வாய், கை, மற்றும் கால்களை விநோதமான திசைகளில் கோணிக்கொண்டுப் பிதற்றும் மொழியில் எதிர்வினையாற்றுபவராகப் படம் முழுவதும் வரும் சாதனா, பிரத்தியேகமாகப் பாராட்டப்பட வேண்டியவர். ‘Life feels good’ என்கிற போலந்து நாட்டுத் திரைப்படம் ஒன்று 2013-ல் வெளிவந்தது. பெருமூளை வாதத்தினால் (Cerebral palsy) பாதிக்கப்பட்டிருக்கும் ஓர் இளைஞனின் தோரணைகளை Dawid Ogrodnik என்கிற நடிகர் படம் முழுவதும் மிக அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார். படத்தின் நிறைவுக்காட்சியில் அவர் இயல்பாகத் தோன்றுவதைப் பார்த்த பிறகு ‘இவரா.. அப்படி நடித்தார்?!’ என்கிற பிரமிப்பும் ஆச்சரியமும் தோன்றும். அதற்கு நிகரான நடிப்பை சாதனா தந்துள்ளார். இவரைப் பற்றிய பின்னணி விவரங்கள் அறியாதவர்கள், ‘உண்மையாகவே குறைபாடுள்ள பெண்ணை நடிக்க வைத்துள்ளார்கள் போல’ என்று எண்ணக்கூடும். அத்தனை தேர்ச்சியான, விருதுகளை வெல்லக்கூடிய நடிப்பு.

நடிகை அஞ்சலி சில காட்சிகளில் வருகிறார். துரோகம் செய்த குற்றவுணர்விலும், அதை மெளனத்துடன் கடக்கும் மம்மூட்டியின் பெருந்தன்மையை தாங்க முடியாமலும் ‘நாங்க எதுக்காக அப்படி செஞ்சோம்-னு கேட்டுட்டாவது போங்கய்யா’ என்று கண்ணீர் மல்கும் காட்சியும், அதற்கு மம்மூட்டி அளிக்கும் அசாதாரணமான பதிலும் அற்புதமான காட்சியாகப் பதிவாகியுள்ளது.

படத்தில் இன்னொரு அஞ்சலியும் இருக்கிறார். ‘மீரா’ என்கிற திருநங்கை பாத்திரத்தில் நடித்துள்ள அஞ்சலி அமீர் உண்மையாகவே மாற்றுப்பாலினத்தைச் சேர்ந்தவர்தான். மலையாள ரியாலிட்டி ஷோக்களில் தோன்றி தொலைக்காட்சிப் புகழை அடைந்தவரை, மம்மூட்டியே தேடி அழைத்து நடிக்க வைத்திருக்கிறார். ‘கார் கண்ணாடியை திறந்து விடுங்க’ என்று வெளிக்காற்றைப் புத்துணர்ச்சியுடன் ரசித்துக் கொண்டு வரும் காட்சி முதல், மம்மூட்டி அழைத்ததும் கேரளப் பாரம்பரிய உடையோடும் கண்களில் பொங்கி வழியும் கனவுகளோடும் வருவது வரை பல காட்சிகளில் அற்புதமாக நடித்துள்ளார்.

‘உங்க பையனை ஹோம்ல அடிக்கறாங்க’ என்று மம்மூட்டி எச்சரிக்கை தரும் போது, ‘அடிச்சா அடிச்சிட்டுப் போறாங்க சார்.. வெளில அவன் பல பேர் கிட்ட உதை வாங்கறத விட இது மேல்’ என்று கையாலாகாத விரக்தியில் சொல்லும் ‘பூ’ ராமு, அந்தச் சிறிய காட்சியிலேயே நம்மைக் கலங்கடித்து விடுகிறார்.

விடுதிக்காப்பாளராக சண்முகராஜா, ஆர்வக்கோளாறு ஆசாமியாக லிவிங்ஸ்டன், சிறப்புக் குழந்தைகளுக்கான நடைமுறைச் சாத்தியங்களை வழிகாட்டும் மருத்துவராக சமுத்திரக்கனி என்று பல சிறிய பாத்திரங்கள் தங்களின் இயல்பான பங்களிப்பினால் இந்தத் திரைப்படத்தை அற்புதமாக நிறைத்திருக்கிறார்கள்.

*

இந்த திரைப்படத்தின் பெரும்பான்மையான பலம் என்று ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரைக் குறிப்பிடலாம். மலைப்பிரதேசத்தில் இயற்கையின் கவித்துவமான மெளனத்தையும் அதன் நுண்ணிய அசைவுகளையும் சிறப்பாகப் பதிவு செய்திருக்கும் கேமரா, நகரத்திற்கு இடம் பெயர்ந்தவுடன் அதன் பரபரப்பையும் நள்ளிரவின் தன்மைகளையும் மிக இயல்பாகக் கைப்பற்றியிருக்கிறது. இன்னொரு பலம், யுவன் சங்கர் ராஜா. சில இடங்களில் அநாவசியமான குறுக்கீடை ஏற்படுத்துகிறதோ என்கிற நெருடலை ஏற்படுத்தினாலும், பல இடங்களில் பின்னணி இசை காட்சிகளின் தன்மைக்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. இது போன்ற திரைப்படங்களுக்குப் பாடல்கள் தேவையில்லை என்று தோன்றுகிறது.

சிறப்புக் குழந்தைகளை துவக்க நிலையிலேயே கண்டறிவது முதல் அவர்களுக்கான பிரத்தியேக வசதிகள், பள்ளிகள் போன்றவை மேலை நாடுகளில் உள்ளன. ஆனால் இந்தியா போன்ற தேசங்களில் இவை சார்ந்த விழிப்புணர்வு குறைவு. ‘இந்த உலகம் சராசரியான மனிதர்களுக்கு மட்டுமானதல்ல, சில பிரத்யேகமான சிக்கல்களை உடைய மனிதர்களுக்குமானது, அவர்களும் இயற்கையின் ஒரு பகுதியே’ என்கிற செய்தியைக் கவித்துவமான காட்சிகளால் உணரச் செய்கிறது இந்தத் திரைப்படம்.

‘பேரன்பு’ – காண்பதற்காக அல்ல, உணரப்பட வேண்டியதொரு படைப்பு.

]]>
Peranbu Movie Review https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/2/2/w600X390/Peranbu_1.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2019/feb/02/peranbu-movie-review-3088086.html
3088083 சினிமா திரை விமரிசனம் ராஜீவ் மேனனின் ‘சர்வம் தாளமயம்’ - திரை விமரிசனம் சுரேஷ் கண்ணன் Saturday, February 2, 2019 10:46 AM +0530  

விலங்குகளின் தோலின் மூலம் மிருதங்கத்தை உருவாக்கும் சமூகத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன், மிருதங்க வித்வானாக உயர ஆசைப்படுவதைப் பற்றிய திரைப்படம் இது. கர்நாடக இசைத் துறை என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஆக்கிரமிப்பில் இருப்பதை, அந்த இசை எளிதில் அணுகப்படாத புனிதப் பொருளாக ஆக்கி வைக்கப்பட்டிருக்கும் அரசியலை, ஆவேசமான குரலில் அல்லாமல் இயல்பான உரையாடலில் முன்வைக்கும் இந்தப் படம், திறமையும் விடாமுயற்சியும் கொண்ட எவனொருவனும், இந்தக் கதவுகளை எப்படி உதைத்து திறக்க முடியும் என்கிற எதிர் அரசியலையும் இயல்பாகப் பேசுகிறது.

*

ஜி.வி.பிரகாஷ் (பீட்டர் ஜான்சன்) விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த இளைஞன். அவனுடைய தந்தையான குமரவேல் (ஜான்சன்) மிருதங்க வாத்தியத்தைத் தயாரிப்பவர். கல்வியில் நாட்டமில்லாமலும் எவ்வித இலக்கும் இல்லாமலும் விஜய் ரசிகனாக சுற்றிக் கொண்டிருக்கும் பீட்டர், ஒரு தற்செயலான கணத்தில் மிருதங்க வித்வானான நெடுமுடி வேணுவின் (வேம்பு ஐயர்) அசாதாரண திறமையைக் கண்டு வியந்து போகிறான். அன்றிலிருந்து அவனுடைய வாழ்க்கை திசை மாறுகிறது. அவரைப் போன்றே தானும் ஒரு வித்வானாகி, கர்நாடக இசைக் கச்சேரியில் வாசிக்கவேண்டும் என்கிற லட்சியத்தை மேற்கொள்கிறான். ஆனால் அது அத்தனை எளிதான பாதையாக அமையவில்லை.

சாதி என்னும் அரசியல், பிரம்மாண்டமான சுவராக குறுக்கே வந்து நிற்கிறது. கூடவே வர்க்க அரசியலும். எனவே அவன் பல்வேறுவிதமாக அலைக்கழிக்கப்படுகிறான். என்றாலும் விடாமுயற்சியினாலும் குரு பக்தியினாலும் தன் இலக்கை எவ்வாறு அவன் அடைகிறான் என்பதை உணர்ச்சிகரமான காட்சிகளின் மூலம் விவரிக்கிறது இந்தத் திரைப்படம்.

சேரிப்பகுதியைச் சேர்ந்த இளைஞன் பாத்திரத்தில் வெகு அநாயசமாகப் பொருந்திப் போகிறார் ஜி.வி.பிரகாஷ். ‘நாச்சியார்’ திரைப்படத்திற்குப் பிறகு நடிக்கக் கிடைத்த வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். ‘நான் உலகத்திலேயே நம்பர் ஒன் மிருதங்க வித்வானாக வரணும் சார்’ என்று அப்பாவித்தனமாக முறையிடுவதில் துவங்கி ‘உன்னால வேணா வாசிக்க முடியாம போகலாம். நான் ஜெயிச்சுக்காட்டுவேன்’ என்று தந்தையிடம் ஆத்திரத்துடன் எகிறுவது வரை பல இடங்களில் தன் இயல்பான நடிப்பின் மூலம் கவர்கிறார்.

நெடும் அனுபவமும் அசாதாரண திறமையும் கொண்ட ஒரு நடிகரால், ஒரு திரைப்படத்தை எத்தனை உயரத்திற்குக் கொண்டு செல்லமுடியும் என்பதற்கான சிறந்த உதாரணம் நெடுமுடி வேணு. உயர்வு மனப்பான்மையும் பாரம்பரிய இசைப் பாணியின் மீது அசைக்க முடியாத பக்தியும் கொண்ட ஒரு மிருதங்க வித்வானைத் தன் அற்புதமான உடல்மொழியின் மூலம் கச்சிதமாக வெளிப்படுத்திவிடுகிறார். மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஒரு காட்சியில், ஒரு கணத்தில் தன் தாளத்தைத் தானே ரசித்து உள்ளே ஆழ்ந்து போய், பின்பு விழித்துக்கொள்ளும் அந்த ஒரு காட்சி போதும், வேணுவின் அசாத்தியமான நடிப்பிற்கு உதாரணம் சொல்ல. சாதியப் பிடிப்பு கொண்டிருப்பவரைப் போல ஆரம்பத்தில் தோன்றினாலும், கற்றுக்கொள்ளும் தீவிரமான ஆர்வமுள்ள இளைஞனை இவர் அரவணைத்துக்கொள்ளும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

‘நம்ம மாதிரி ஆளுங்கல்லாம் இந்தச் சின்ன வாழ்க்கையை அப்படியே ரசிச்சு வாழ்ந்துட்டு போயிடணும். மேல போறதுக்கு எல்லாம் ஆசைப்படக்கூடாது’ என்று எளிய சமூகத்தைச் சார்ந்தவர்களின் அப்பாவிப் பிரதிநிதியாகத் தன் பங்களிப்பைச் சிறப்பாகத் தந்திருக்கிறார் குமரவேல்.

ஜி.வி.பிரகாஷின் காதலியாக அபர்ணா பாலமுரளி. (‘மகேஷிண்டே பிரதிகாரம்’ என்னும் மலையாளப் படத்தில் தன் இயல்பான தோற்றத்திலும் நடிப்பிலும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர்). இவருக்கு அதிகக் காட்சிகளில் தோன்ற வாய்ப்பில்லாவிட்டாலும் ‘நீ ஏன் குருவைத் தேடறே.. இயற்கையிலேயே எல்லாத் தாளமும் இருக்கு” என்று தன்னையே ஒப்படைத்து ஜி.வி.பிரகாஷை ஊக்கப்படுத்தும் காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார்.

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு வினீத். வேம்பு ஐயரின் பிரதான சிஷ்யராக வரும் இவர், ஜி.வி.பிரகாஷின் மீது பொறாமை கொள்வதும் குருவை எதிர்த்து அரசியல் செய்வதும் என எதிர்மறையான பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவரது தங்கையாக நடித்திருக்கும் திவ்யதர்ஷிணியின் (டிடி) மூலம் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் உள்ள வணிகத் தந்திரங்கள் அம்பலப்படுத்தப்படுகின்றன. சிக்கில் குருசரண், உன்னி கிருஷ்ணன், சீனிவாஸ், கார்த்திக் என்று பல இசைப் பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் தோன்றி காட்சிகளின் நம்பகத்தன்மைக்கு உறுதுணையாக நின்றிருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷின் நண்பராக நடித்திருக்கும் பாடகர் சுமேஷ் நாராயணனும் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷின் ஆர்வத்தைக் கணவரிடம் எடுத்துச் சொல்லி அவருடைய மனத்தை மாற்றும் காட்சியில் சாந்தா தனஞ்செயன் அற்புதமாக நடித்துள்ளார்.

இசையை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தின் பெரிய பலம் ஏ.ஆர்.ரஹ்மான். ரசிகர் மன்ற இளைஞர்கள் ஆடும் குத்துப்பாடலாக இருந்தாலும் சரி, ‘மாயா.. மாயா’ என்கிற மெல்லிசைப் பாடலாக இருந்தாலும் சரி, தனது வசீகரமான இசையின் மூலம் கவர்ந்து விடுகிறார். இந்தியாவிலுள்ள அனைத்து கலாசார இசைகளையும் ஒரு பாடலில் கொண்டு வந்து கேரளத்தின் செண்டை மேளத்துடன் நிறைவு செய்யும் ‘சர்வம் தாளமயம்’ பாடல் ஓர் அபாரமான அனுபவத்தைத் தருகிறது. ‘எப்போ வரும் எங்க காலம்’ என்ற பாடலில் எளிய சமூகத்தின் ஏக்கம் அழுத்தமாக வெளிப்படுகிறது. ரவி யாதவின் நேர்த்தியான ஒளிப்பதிவும் ஆண்டனியின் அற்புதமான எடிட்டிங்கும் படத்திற்கு மேலதிக சுவையைத் தந்திருக்கின்றன.

‘மின்சாரக் கனவு’, ‘கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கியிருக்கும் ராஜீவ் மேனன், ஏறத்தாழ பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநராக மறுபடியும் திரும்பியிருக்கிறார். ஒரு லட்சியவாத இளைஞனுக்குச் சாதியோ, வர்க்கமோ என எதுவும் தடையாக இருக்கமுடியாது, தனது தொடர்ந்த உழைப்பின் மூலம் எந்த இலக்கையும் அவன் எட்ட முடியும் என்கிற செய்தியை உறுத்தாத சாதிய அரசியலின் பின்னணியில் சொல்லியிருப்பதின் மூலம் ஒரு முக்கியமான ஆக்கத்தைத் தந்திருக்கிறார். ஏகலைவன், நந்தனார் போன்ற பிம்பங்களின் சாயல்கள் பிரதான பாத்திரத்திற்கு உகந்த வண்ணத்தைத் தருகின்றன.

ஆனால் படத்தில் சில பிசிறுகளும் இல்லாமல் இல்லை. மிகக் கச்சிதமாக நகரும் திரைப்படத்தின் முற்பாதி, அதன் பிறகு ஜி.வி.பிரகாஷைப் போலவே எங்கெங்கோ அலைபாய்கிறது. சினிமா, தொலைக்காட்சி போன்ற எளிய, தற்காலிக புகழ் வடிவங்களின் மீது நாட்டமின்மையும் ஒவ்வாமையும் கொண்டிருக்கும் நெடுமுடி வேணு, இறுதிக்காட்சியில் தன் சிஷ்யன் அதில் வெற்றி பெற ஆர்வம் காட்டுவது பெரிய முரணாக இருக்கிறது. ரியாலிட்டி ஷோ தொடர்பான காட்சிகள் படத்தின் இயல்பைக் கெடுப்பதாக உள்ளன. குறிப்பிட்ட பாரம்பரிய இசையின் மீது பக்தியும் விசுவாசமும் கொண்ட ஓர் இசைக்கலைஞன், காலத்தின் போக்கில் அதில் வந்து இணையும் இதர பாணிகளையும் புதுமைகளையும் இறுதியில் ஏற்றுக் கொள்வது மூத்த இசைக்கலைஞர்களுக்கு முன்னுதாரணமான செய்தியாக இருக்கிறது.

திரைக்கதையில் நிகழ்ந்திருக்கும் சில அலைபாய்தல்களையும் தேவையற்ற திணிப்புகளையும் தவிர்த்திருந்தால், ராஜீவ் மேனனின் முந்தைய திரைப்படங்களைப் போலவே இதுவும் ஒரு கச்சிதமான படைப்பாகியிருக்கும். என்றாலும் ‘உண்மையான திறமைக்கும் விடாமுயற்சிக்கும் முன்னால் எதுவும் தடையாக நிற்க முடியாது’ என்கிற ஆதாரமான செய்தியை சொன்ன விதத்தில் மிகவும் கவர்கிறது ‘சர்வம் தாள மயம்’.

]]>
Sarvam Thaala Mayam https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/2/2/w600X390/sarvam_thaalamayam_new9_5.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2019/feb/02/sarvam-thaala-mayam-movie-review-3088083.html
3075095 சினிமா திரை விமரிசனம் அஜித் போல இல்லாமல் பத்து வருடங்களுக்குப் பிறகும் அதே தோற்றத்துடன் இருக்கும் நயன்தாரா: ‘விஸ்வாசம்’ விமரிசனம் ஆஷாமீரா ஐயப்பன் Friday, January 11, 2019 06:07 PM +0530  

விஸ்வாசம் படத்தை அதிகாலை ஒரு மணிக்கு FDFS காட்சியில் பார்த்தேன். ‘தல'யைத் திரையில் காண்பதற்கு முன்பே, ஆரவாரமான ரசிகர் கூட்டம் தனது கொண்டாட்டங்களை ஆரம்பித்துவிட்டது. கண்கொள்ளாக் காட்சி அது. நான் எத்தனையோ படங்களை FDFS காட்சியில் பார்த்துள்ளேன். ஆனால், ‘யாராவது ஒழுங்கா விமரிசனம் கொடுக்கலை... செஞ்சுருவேன்" என்று எந்தப் படத்தின் ஆரம்பத்திலும் பார்வையாளர்களில் ஒருவர் கத்தியபடி எச்சரிக்கை செய்ததில்லை. அஜித்தின் ரசிகர்கள் அவர் மீது வைத்துள்ள விஸ்வாசத்தையே தெளிவாகப் படத்தலைப்பாக வைத்துள்ளார்கள். 

தங்களுடைய நான்காவது கூட்டணிக்கு, மிகக் கவனமாக,  ஓர் எளிமையான கதையைத் தேர்ந்தெடுத்து, வணிக விஷயங்களைச் சரியாகப் பின்பற்றியுள்ளார் இயக்குநர் சிவா. சரியான இடைவெளியில் பாடல்களையும் சண்டைக் காட்சிகளையும் அமைத்து, படத்தில் தொய்வு ஏற்படாதபடிப் பார்த்துக்கொண்டுள்ளார். பிரமாண்டமான அறிமுகக் காட்சிக்குப் பிறகு, அதாவது அக்காட்சியில் தூக்குதுரை அப்படியே சுழன்று வந்து வணக்கம் வைக்கிறார், ‘கோயில் திருவிழாக்கள் சமுதாயத்துக்கு எந்தளவுக்கு அவசியம்’ என்பதை ஒரு நீண்ட வசனத்துடன் கூறுகிறார். ‘திருவிழாக்கள் தெய்வீக உணர்வை ஒற்றுமையுடன் வெளிப்படுத்தும் இடங்கள், புலம்பெயர்ந்தவர்கள் கூடு திரும்ப ஒரு காரணி’ என்கிறார். விஸ்வாசம் படத்தைத் திருவிழா என்றுதான் விளம்பரம் செய்தார்கள். இதை வைத்துப் பார்க்கும்போது அவருடைய விஸ்வாசமான ரசிகர்கள் திரையரங்கில் நடனமாடுவது குறித்துத்தான் அவர் வசனம் பேசியிருக்கக்கூடும். 

அதற்காக அஜித் ரசிகரல்லாத பார்வையாளர்களுக்குப் படத்தில் ஒன்றுமில்லை என்று அர்த்தமில்லை. சொல்லப் போனால், இங்குதான் சிவா நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். இறுக்கமில்லாத, இயல்பான ஒரு அஜித்தை நமக்குத் தந்திருக்கிறார்.  அடாவடியான ஆளான தூக்குதுரையின் வெள்ளந்தியான குணமும் குறும்பும் அவருடைய வசீகரத்துக்குப் புத்துணர்ச்சி தருகின்றன. வெகுகாலத்திற்குப் பிறகு, குறும்பான காட்சிகளால் திரையில் கொண்டாட்டமாக வெளிப்படுகிறார் அஜித். இமானின் பாடல்கள் என்னைப்  பெரிதாக ஈர்க்கவில்லையென்றாலும், அஜித் அப்பாடல்களுக்கு எவ்வித தயக்கமும் இன்றி ஆடுவதைப் பார்ப்பதே ஒரு விருந்து. படத்துக்காக அஜித் பெரிதாக மெனக்கெட்டிருப்பது நன்குத் தெரிவதோடு அவருடைய பிரகாசமான முகமும் பலமடங்கு வெளிப்பட்டுள்ளது. 

படத்தின் அடுத்த ஆச்சரியம் நயன்தாரா. இதற்குமுன் இவர் கதாநாயகியாக நடித்த மசாலா படமான ‘வேலைக்காரனில்’ அவருடைய லேடி சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்குரிய நியாயம் செய்யப்படவில்லை. ஆனால், இங்கு தூக்குதுரையின் கிராமத்திற்கு வரும் வலுவான மனோதிடம் கொண்ட, தன்னியல்புடைய மருத்துவர் கதாபாத்திரத்தில் அற்புதமாகத் தொடக்கம் அவருக்கு அமைந்துள்ளது. தூக்குதுரையைக் கவர ஊரிலுள்ள அனைவரும் வரிசைக்கட்டி நிற்கும்போது இவர் மட்டும் அவர் மீது ஆர்வம் இல்லாமல் தனித்து நிற்கிறார். தூக்குதுரைக்கு அவர்மீது ஆர்வம்தான் என்றாலும், தன் தகுதிக்கு மீறியவர் என்பதையும் உணர்ந்துள்ளார். இதனால் ஒரு நயமான ரொமான்ஸுக்கு அடித்தளமிட்டுள்ளார் சிவா. அந்தக் காதல் நீங்கள் கணிக்கும் ஒவ்வொரு திருப்பங்களிலும் சற்று மாற்றுப் பாதையிலேயே பயணிக்கிறது. இப்படியாக இடைவேளை வரை சென்ற படம் அதற்குப் பிறகு சறுக்க ஆரம்பிக்கிறது.

இயக்குநர் மிகவும் பிரயத்தனப்பட்டுக் கட்டமைத்த காதல் கதையும் அதன் அடுத்தக்கட்டங்களும் கதையில் புதிதாக ஒரு வில்லனை நுழைப்பதற்காகப் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. ஒரு சிறந்த வில்லன் பாத்திரம், கதாநாயகனுடன்  'தத்துவார்த்தமாக மாறுபடும் இரட்டையர்' போல இருக்கவேண்டும். அதாவது கதாநாயகனைப் போன்றே நோக்கங்கள் உடையவனாகவும் ஆனால் சூழ்நிலைகளால் இருவரும் எதிரெதிர் திசையில் பயணிப்பவர்களாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் படம் பார்ப்பவர்கள் எந்தப் பக்கம் சாய்வதென்று குழம்புவார்கள்.  சிவா இந்த விஷயத்தைக் கையில் எடுத்திருக்கிறார். ஆனால், வில்லனுக்காக அவர் அமைத்திருக்கும் ஒருவரிக் கதையில் வில்லனின் பழிவாங்கும் நோக்கமே தவறாக உள்ளது. ஆக, இந்தக் கதாபாத்திரம் இன்னும் சில சண்டைக்காட்சிகளுக்கான சந்தர்ப்பங்களை மட்டும் ஏற்படுத்தி, படத்தைத் தர்க்கமே இல்லாத செண்டிமெண்ட் களத்திற்குள் தள்ளி, இதுவரையில்லாத நாடகத்தனமான கிளைமாக்ஸை அமைத்துவிடுகிறது. 

தூக்குதுரைக்கும் நிரஞ்சனாவிற்கும் இடையேயான முரண்பாடுகள் பற்றி இன்னும் அதிகமாகச் சொல்லியிருக்கவேண்டும் என விரும்புகிறேன். ஆனால் ஆரம்பத்தில் பெரிதான எதிர்பார்ப்புடன் காண்பிக்கப்படும் நிரஞ்சனா பாத்திரம், பிறகு படத்தில் அவ்வப்போது மட்டும் தலைக்காட்டுவதுபோல புறக்கணிக்கப்பட்டுள்ளது. அவர் ஏகப்பட்ட நிறுவனங்களை நிர்வகிப்பவராகக் காண்பிக்கப்பட்டாலும், தன் கணவர் தாக்கப்படும்போது அவருக்கு உதவ ஒரு வழியும் யோசிக்காமல்  இருக்கிறார். ஆனால், ‘லூசு கதாநாயகிகள் சூழ்’ தமிழ் சினிமாவை வைத்துப் பார்க்கும்போது, கதாநாயகி ஒரு வேலையில் இருப்பதாகக்  (அரை மனத்துடன்தான் செய்திருக்கிறார்கள் என்றாலும்) காண்பித்திருப்பதே பெரிய முன்னேற்றம்தான். நயன்தாரா சினிமாவில் வெவ்வேறு பாணிகளை முயற்சிப்பதில்லை என்கிற குறையை யாரும் சொல்ல முடியாது என்றாலும், அவர் தன்னுடைய தோற்றத்தில் மாற்றங்களை முயற்சிக்கவேண்டும் என்று அடிக்கடி விரும்புவேன். அப்படிச்  சொன்னாலும், படத்தில் பத்து வருடங்களுக்குப் பிறகும், தூக்குதுரையின் தோற்றதிற்கு வயதாகி இருந்தாலும் நிரஞ்சனா மட்டும் அதே தோற்றத்துடன் இருப்பது மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. அட, கதாநாயகர்கள் மட்டும் ஏன் எல்லாவற்றையும் அனுபவிக்கவேண்டும்! 

இந்த எதிர்பார்ப்பு இருக்கிறதே அது மிகவும் வேடிக்கையானது.  நாம் என்னதான் தவிர்க்க முயன்றாலும் அது நம் மண்டைக்குள் ஊடுருவி,  சிலவற்றின்  மீதான நமது புரிதலைப் பெரிதாகப் பாதிக்கத்தான் செய்யும்.  மேலும், அந்த எதிர்பார்ப்பே, நீங்கள் அவ்வப்போது இனிய அதிர்வுக்கு ஆளானாலும் கூட, படத்திற்குச் சாதகமான பக்கமே தராசின் முள்ளைச் சாய்க்கும். மேலும் நல்லவேளையாக, என்னுடைய கொடுங்கனவுகளை நனவாக்கி விடாத விஸ்வாசம் ஒரு ஆச்சர்யமே!

தமிழில்: ப்ரியா கதிரவன்

]]>
ajith, Director Siva, Viswasam Review https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/1/11/w600X390/viswasam_nayanthara_new1xx.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2019/jan/11/viswasam-review-a-sprightly-ajith-saves-this-festival-3075095.html
3075057 சினிமா திரை விமரிசனம் அஜித்தின் ‘விஸ்வாசம்’ - திரை விமரிசனம் சுரேஷ் கண்ணன் Friday, January 11, 2019 12:33 PM +0530  

சாகசம் + சென்ட்டிமென்ட் என்பது சினிமாவின் அரதப்பழசான கலவை. இந்தக் கலவையையும் அஜித்தையும் வைத்து தொடர்ச்சியாகத் திரைப்படங்களை உருவாக்கிக் கொண்டிருப்பவர் இயக்குநர் சிவா. வீரத்தில் சகோதரர்கள், வேதாளத்தில் தங்கை, விவேகத்தில் மனைவி என்று சென்ட்டிமென்டைப் பிழிந்தவர், ‘விஸ்வாசத்தில்’ தந்தை – மகள் சென்ட்டிமென்டைக் கையில் எடுத்திருக்கிறார். (எனில் மீதிமிருப்பது ‘அப்பா’ சென்ட்டிமென்ட்தான். ‘விநாயகம்’ என்று  கதைக்குத் தொடர்பில்லாத தலைப்போடு அதுவும் அடுத்து வரலாம்).

இப்படித் தேய்வழக்கான திரைக்கதைகளில் தொடர்ந்து நடித்தும் அஜித்தின் வணிகச்சந்தையும் ரசிக வரவேற்பும் எப்படி ஏறுமுகமாகவே இருக்கின்றன என்பது தமிழ்ச் சமூகத்தின் புரியாத விந்தைகளுள் ஒன்று.

*
கொடுவிளார்பட்டி என்கிற கிராமத்தில் ‘திருவிழா நடக்கலாமா, கூடாதா’ என்கிற பழம் பஞ்சாயத்துடன் படம் துவங்குகிறது. அந்த ஊரின் பெருந்தலையான ‘தூக்குதுரை’ (அஜித்) மாவட்ட ஆட்சியரிடம் பேசி திருவிழாவை நடத்தி வைக்கிறார். திருவிழாச் சடங்கின்போது உறவினர்கள் குடும்பம் சகிதமாகக் கலந்துகொள்ள, தன்னந்தனியாக நிற்கும் அஜித்தின் மீது மற்றவர்கள் பரிதாபப்படுகின்றனர். அவர் தன் மனைவி நிரஞ்சனாவை (நயன்தாரா) விட்டுப் பிரிந்திருப்பது தெரியவருகிறது. ‘மும்பையிலிருக்கும் மனைவியைத் திருவிழாவிற்கு அழைத்து வா’ என்று உருக்கமாக வேண்டுகோள் வைக்கிறார்கள். அதை ஏற்று அங்குச் செல்கிறார் அஜித். மும்பையில் அவருடைய மகளின் மீது கொலை முயற்சித் தாக்குதல்கள் நடக்கின்றன.

அஜித் ஏன் தன் மனைவியைப் பிரிந்தார், மகளுக்கு யாரால் ஆபத்து வருகிறது, அதை அவர் எப்படி முறியடிக்கிறார் போன்ற தகவல்களை அறிந்துகொள்ள மீதமுள்ள திரைப்படத்தை நீங்கள் பார்த்தாகவேண்டும்.

*
அஜித் வயதான தோற்றத்தில் இளமையாக இருக்கிறார். (எப்படி என்றெல்லாம் கேட்கக்கூடாது!) முரட்டுக் கிராமத்தானாக இவர் செய்யும் அலப்பறைகள் பரவாயில்லை. ஆக்ஷன் காட்சிகள் பொருத்தமாகவும் மிரட்டலாகவும் அற்புதமான வடிவமைப்புடனும் அமைந்திருக்கின்றன. தனக்குப் பிரியமானவர்களுக்குத் தெரியாமல் சண்டை போட்டு அவர்களைக் காப்பாற்றும் விஷயங்கள் இதிலும் தொடர்கின்றன.

சென்டிமென்ட் காட்சிகளில் சமயங்களில் அஜித் நெகிழ வைக்கிறார். ஆனால் அவருக்கு வராமல் அடம்பிடிக்கும் இரண்டு விஷயங்கள் நடனமும் நகைச்சுவையும். ஆரம்பக் காட்சிகளில் அவர் நகைச்சுவைக்கு முயலும்போது, தூக்குதுரை, ‘பழைய ஜோக்’ தங்கதுரையாகி விடுகிறார். முன்பாதியில் ரோபோ ஷங்கர், தம்பி ராமையா, யோகி பாபுவும் பிற்பாதியில் விவேக்கும் சிரிக்க வைக்க முயன்று எரிச்சலூட்டுகிறார்கள்.

நயன்தாரா ஆரம்பக்காட்சிகளில் நன்றாக துடைத்து வைத்த தங்கக் குத்துவிளக்கு மாதிரி மின்னுகிறார். ‘உன்னால் என் குழந்தைக்கு ஆபத்து வரக்கூடாது’ என்கிற காரணத்தைச் சொல்லி அஜித்தை நிராகரிக்கும் காட்சிகளில் நடிக்கவும் செய்திருக்கிறார். மகள் ஸ்வேதாக அனிகா நடித்திருக்கிறார். ஜெகபதி பாபு பலவீனமான வில்லன்.

இமானின் இசையில் குத்துப் பாட்டுக்களை எளிதில் நிராகரித்து விடலாம். ஆனால் விஸ்வாசத்தின் விசேஷமான அம்சமாக நீடிக்கப் போவது - ராம்ராஜ் வேட்டியின் விளம்பரத் தூதுவர் போல வரும் அஜித்தோ அல்லது கண்ணைப் பறிக்கும் நயனதாராவோ இல்லை, ‘கண்ணான கண்ணே’ என்கிற அபாரமான பாடல். இமானுக்கும் இது புரிந்திருக்கிறது. எனவேதான் பல இடங்களில் அதைப் பின்னணி இசையாகப் போட்டு அசத்தியிருக்கிறார்.

இமானின் இந்த நல்ல மெட்டு, தாமரையின் அற்புதமான வரிகள் (புதைமணலின் நடுவே / புதைந்திடவே இருந்தேன்... / குறுநகையை எறிந்தே / மீட்டாய் என்னை..!) அசத்தலான பாவத்துடன் பாடியிருக்கும் சித் ஸ்ரீராம்.. என இந்தக் கூட்டணி ஜெயித்திருக்கிறது. இந்த வருடத்தின் முதல் சூப்பர் ஹிட் மெலடி.

ஒளிப்பதிவாளர் வெற்றியின் உழைப்பு ஆக்ஷன் காட்சிகளில் கூடுதல் சிறப்புடன் அமைந்திருக்கிறது. துவக்கத்தில் வரும் சலிப்பூட்டும் காட்சிகளால் படம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளத் தடுமாறுகிறது. (இயக்குநரின் வழிகாட்டுதலோடு) எடிட்டர் ரூபன் நினைத்திருந்தால் காட்சிகளை மாற்றியமைத்து துவக்கக் காட்சிகளின் சலிப்பைப் போக்கியிருக்கலாம்.

*

‘வெற்றி மட்டுமே முக்கியம்’ என்று பெற்றோர்கள் இளம் தலைமுறையினருக்கு நெருக்கடியும் அழுத்தமும் தரக்கூடாது என்கிற ஆதாரமான செய்தியை சொல்ல முயன்றிருக்கும் திரைப்படம் இது. இதைத் தெரிந்து கொள்வதற்குள் பல மனஅழுத்தங்களையும் நெருடிக்கடிகளையும் நாம் தாண்டி வர வேண்டியிருக்கிறது.

]]>
Viswasam https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/1/11/w600X390/Viswasam_pongal22.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2019/jan/11/viswasam-movie-review-3075057.html
3074436 சினிமா திரை விமரிசனம் ரஜினியின் ‘பேட்ட’ - திரை விமரிசனம் சுரேஷ் கண்ணன் Thursday, January 10, 2019 05:41 PM +0530  

பழைய ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை மீட்டெடுத்துக் கொண்டுவந்து அவருடைய ரசிகர்களுக்குப் பிரத்யேக உற்சாகத்தை தந்திருக்கிறது ‘பேட்ட’. தனது வயதுக்கேற்ற திரைப்படங்களில் ரஜினி நடிக்க வேண்டும் என்று பரவலாக எழுந்த விமரிசனங்களையொட்டி ‘கபாலி, காலா’ போன்ற திரைப்படங்களில் அவ்வாறே நடித்தார் ரஜினி. ஆனால் அவற்றில் பேசப்பட்ட அரசியல் பின்னணி காரணத்தினாலேயோ என்னவோ, ரஜினி ரசிகர்களும் சரி, பொதுவான வெகுஜன ரசிகர்களும் சரி, அவற்றைப் பரவலாக ரசிக்கவில்லை. தங்களின் பழைய ரஜினியைப் பார்க்க வேண்டுமென்று விரும்பினார்கள்.

அந்த ஆவலை மிக கச்சிதமாகப் பூர்த்தி செய்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். அவரே ஒரு தீவிரமான ரஜினி ரசிகர் என்பதால் அவர்களின் மனநிலையை உணர்ந்து ஒவ்வொரு காட்சியையும் திட்டமிட்டுப் பார்த்துப் பார்த்து அலங்கரித்திருக்கிறார். இந்த வகையில் அவரது நோக்கம் வெற்றிதான்.

ஆனால், ரஜினிக்காக உருவாக்கிய திரைப்படம் என்பதால் இயக்குநரின் தனித்தன்மை பெரும்பாலும் தொலைந்து போயிருக்கிறது. இயக்குநரின் அடையாளத்திற்காகவும் இந்தத் திரைப்படத்தைப் பொதுவான ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். அவர்களின் ஆவலை கார்த்திக் சுப்புராஜ் நிறைவேற்றத் தவறியது துரதிர்ஷ்டமானது.

*

மலைப்பிரதேசத்தில் உள்ள ஒரு கல்லூரி. ராகிங் கொடுமைகள் சகஜமாக நடக்கின்றன. அங்குப் படிக்கும் பாபி சிம்ஹாவினால் மாணவர்களுக்குக் கொடுமைகள் நடக்கின்றன. அவரது தந்தையான ‘ஆடுகளம்’ நரேன் அங்குப் பெரிய ரெளடி என்பதால் தட்டிக் கேட்க எவருமில்லை. புதிதாக வரும் விடுதி வார்டனான ரஜினி அவர்களின் கொட்டத்தை ஒடுக்குகிறார். ரெளடியின் ஆள்கள் ரஜினியைத் தாக்க வருகிறார்கள்.

இதையொட்டியே படம் நகரும் போல என்று கொட்டாவி விட்டுக் கொண்டு சலிப்பாக அமர்ந்து கொண்டிருக்கும்போது ஒரு திருப்பம். வந்தவர்கள் ரெளடியின் ஆள்கள் அல்ல. வடமாநிலத்திலிருந்து வந்திருக்கும் வேறு ரெளடிகள். அவர்களின் குறி, ஒரு குறிப்பிட்ட மாணவனின் (சனத் ரெட்டி) மீது இருக்கிறது. அவனுக்குக் காவலாக இருந்து காப்பாற்றுகிறார் ரஜினி. ‘நான் யார்.. ஏன் இவர்கள் என்னைக் கொல்ல வந்தார்கள், நீங்கள் யார்?’ என்றெல்லாம் குழப்பத்தோடு கேட்கிறான் அவன்.

இதற்குப் பதில் சொல்லும் விதமாக, இருபது வருடங்களுக்கும் மேலாக தொடரும் ஒரு பகை, அது தொடர்பான பழிவாங்கல், பின்னணி மற்றும் காரணங்களோடு  விரிகிறது இரண்டாம் பகுதி.

இதுவும் கொட்டாவிச் சமாசாரம்தான் என்றாலும் கார்த்திக் சுப்புராஜின் விறுவிறுப்பான திரைக்கதை ஒரளவிற்குக் காப்பாற்றியிருக்கிறது. 

*

படம் முழுக்க ரஜினியின் ஆதிக்கம்தான். துள்ளலான, புத்துணர்ச்சியான, ஸ்டைலான ரஜினியைப் பார்க்க முடிகிறது. ‘ரெண்டு மொட்டை, ரெண்டு மீசை, நாலு ஸ்கூல் பசங்க’ என்பது முதல் இதுவரையான திரைப்படங்களில் இருந்து ரஜினியின் பல பிரபலமான வசனங்கள், தோரணைகள். சண்டைக் காட்சிகள் போன்றவற்றை ஆங்காங்கே தூவுவதின் மூலம் பழைய நினைவுகளைக் கிளப்பி ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறார் இயக்குநர். ஆங்காங்கே அரசியல் வாசனையுடன் கூடிய வசனங்களும் வருகின்றன. (இன்னுமா?)

த்ரிஷா ஓரமாக வந்து போகிறார். சிம்ரனுக்கு ஒரு காட்சியாவது கிடைத்தது அதிர்ஷ்டம். விஜய் சேதுபதி தன் இயல்பான நடிப்பைக் கையாள முயற்சித்தாலும் ரஜினி படம் என்பதால் அடக்கி வாசித்திருக்கிறார். நவாஸூதின் சித்திக்கை இன்னமும் பயன்படுத்தியிருக்கலாம். என்றாலும் பழிவாங்கிய திருப்தியில் மகிழ்ச்சியடையும் ஒரு சிறிய காட்சியில், தான் எத்தனை இயல்பான, மகத்தான நடிகன் என்பதை நிரூபித்திருக்கிறார்.

மணிகண்டன் ஆசாரி போன்ற திறமைசாலிகளையெல்லாம் அடியாள் போல வீணடித்திருப்பது அநீதி. சசிகுமார், இயக்குநர் மகேந்திரன், குரு சோமசுந்தரம், மேகா ஆகாஷ், மாளவிகா மோகனன், ராமதாஸ் போன்றோர் ஆங்காங்கே வந்து போகிறார்கள். எவருமே சரியாகப் பயன்படுத்தப்படவில்லை.

அனிருத்தின் பாடல்களும் சரி, அட்டகாசமான பின்னணி இசையும் சரி, இந்தத் திரைப்படத்தில் ரகளையாகப் பின்னிப் பிணைந்துள்ளது. சர்ச் மற்றும் விடுதியின் இருளுக்குள் நிகழும் சண்டைக்காட்சி உள்ளிட்ட பல காட்சிகளில் ஒளிப்பதிவாளர் திருவின் உழைப்பும் அழகியலும் பிரமிக்க வைக்கின்றன. 

முதற்பாதி வேகமாக நகர்ந்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்போது, இரண்டாம் பகுதி சலிப்பை ஏற்படுத்துகிறது. அதுவரை பொத்தி வைத்த ரகசியம் உடைந்து நாயகன், யாரை பழிவாங்கப் போகிறார் என்பது தெரிந்துவிடும்போது வேறு வழியில்லாமல் வந்த கடமைக்காக அமர்ந்திருக்க வேண்டியிருக்கிறது.

உத்தரப் பிரதேசப் பின்னணி, காதலர் தின ஜோடிகளைத் தாலி கட்டித் திருமணம் செய்யச் சொல்லி தொந்தரவு தருவது, கொண்டாட்ட விடுதிக்குள் நுழைந்துத் தாக்குவது, ஆன்ட்டி இந்தியன் என்று திட்டுவது போன்ற சங்பரிவார் அட்டகாசங்கள் காட்சிப்படுத்தப்பட்டாலும் படத்தின் போக்கிற்கு எவ்வகையிலும் உதவவில்லை.

படத்தின் இறுதியில் விஜய் சேதுபதியின் பாத்திரம் தொடர்பாக ஒரு திருப்பம் வருகிறது. ‘அவல நகைச்சுவை’ பாணியில் அமைந்த அந்தத் திருப்பம் போன்று படம் முழுவதிலும் ஆச்சர்யங்கள் நிகழ்ந்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். இயக்குநரின் பெயரும் காப்பாற்றப்பட்டிருக்கும். ‘Open ended plot’ என்பது ஹாலிவுட் ரசிகர்களுக்குப் பழக்கம். இது தமிழிலும் வருவது வரவேற்கத்தக்கதுதான். ஆனால்  நிறைவின்மையையும் குழப்பத்தையும் பலர் உணரலாம். (படத்தின் இரண்டாம் பாகம் வருவதற்கான ஆபத்து சார்ந்த சமிக்ஞையாகவும் இருக்கலாம்).

கார்த்திக் சுப்புராஜ், ரஜினி ரசிகர்களைத் திருப்திப்படுத்த பெரிதும் பாடுபட்டிருக்கிறார். அது நிறைவேறினாலும் ‘புதிய மொந்தையில் பழைய கள்’ என்பதாக அது முடிந்திருப்பது துரதிர்ஷ்டம். தன் தனித்தன்மையைப் பலி கொடுத்து ரஜினிக்கான திருவிழாவைக் கொண்டாடியிருக்கிறார்.

‘பேட்ட’ – சிறப்பான சம்பவம்தான். ஆனால் தரமான சம்பவமில்லை.

]]>
Rajinikanth, Karthik Subbaraj, Petta Movie Review https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/1/10/w600X390/pettaREVIEW.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2019/jan/10/petta-movie-review-3074436.html
3073199 சினிமா திரை விமரிசனம் கணவர்களை கேள்வி கேட்கும் 'தி மாஸ்குலினிட்டி' குறும்படம் மணிகண்டன் தியாகராஜன் Tuesday, January 8, 2019 02:48 PM +0530  

மும்பையில் நடைபெற்ற கலா-சம்ருதி சர்வதேச குறும்பட விழாவில் தி மாஸ்குனினிட்டி குறும்படம் பங்கேற்றது. இந்தப் படத்தை இயக்கிய எக்ஸ்.ஆர்.ஜான், விமர்சன ரீதியில் (கிரிட்டிக் அவார்டு) சிறந்த இயக்குநருக்கான விருதை பெற்றார்.

மாஸ்குலினிட்டி என்றால் ஆண்பால் என்ற அர்த்தம் கொள்ளலாம். 7 நிமிடங்களுக்குள் முடிந்த விடும் இந்தப் படம் கணவர்களை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது.

படத்தின் கதை என்ன. கணவன், மனைவி. மனைவிக்கு குழந்தை இல்லை. மருமகளிடம்தான் குறை இருக்கிறது என்று சந்தேகிக்கும் மாமியார். மருமகள் சோதனைக்காக மருத்துவமனைக்கு ஏறி இறங்குகிறார். ஆனால், அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை தெரிந்துகொள்ளும் மனைவி, அதை கணவரைத் தவிர யாரிடமும் சொல்லாமல் மறைக்கிறார். ஆனால், கணவர் தனக்கு தான் பிரச்னை என்று சொல்ல வேண்டும் என்று விரும்புகிறார்.

தனக்குதான் பிரச்னை என்று கணவருக்கும் தெரியும். ஆனால், அதை அவர் வெளிப்படையாக தனது குடும்பத்தினரிடம் தெரிவிக்க முன்வருகிறாரா? இல்லையா? என்பதே குறும்படத்தின் கதை.

மிக நேர்த்தியாக இந்தக் கதை விவரிக்கப்பட்டிருக்கிறது. கதைப்படி, மனைவி கதாபாத்திரத்தில் குறும்பட உலகில் வலம்வரும் அபிராமி ஐயர், இரும்புத்திரை படத்தில் வங்கி லோன் கொடுத்து ஏமாற்றும் பேர்வழியாக நடித்த அப்துல் செளகத் அலி கணவர் கதாபாத்திரத்திலும் மிகையற்ற நடிப்பை வழங்கியிருக்கின்றனர்.

மாமியார் கதாபாத்திரத்தில் கவண் படத்தில் பவானி கதாபாத்திரத்தில் நடித்த பிரியதர்ஷினி ராஜ்குமார் நடத்திருக்கிறார்.

பொதுவாக இந்தச் சமூகத்தில் குழந்தப்பேறு இல்லாமல் போனால், பெண்ணையே குறை கூறும் போக்கும், அவர்களை வேறு பெயர்களில் அழைத்து மனதை கஷ்டப்படுத்தும் நபர்களும் இருந்துதான் வருகிறார்கள்.

அப்படிப்பட்ட நபர்களை நோக்கியும், தங்களுக்கு பிரச்னை இருக்கிறது என்பதை வெளிப்படையாக ஆண் ஏன் சொல்லக் கூடாது என்றும் இந்தப் படம் கேள்வி எழுப்புகிறது.

படத்தின் இயக்குநர் ஜானுடன் பேசியபோது, “இந்தப் படத்தை உருவாக்க தயாரிப்பாளர் நவீண் மாதவன் உறுதுணையாக இருந்தார். அவர் இல்லையென்றால் இந்தப் படம் கிடையாது. எனது குழுவினரும் மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். அனைவருக்கு நன்றி. சில விளம்பரப் படங்களில்

உதவி இயக்குநராகப் பணிபுரிந்திருக்கிறேன். வெள்ளித்திரையில் களம் காண கதையை உருவாக்கி வருகிறேன்’’ என்றார்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/1/8/w600X390/the_masculinity_2.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2019/jan/08/கணவர்களை-கேள்வி-கேட்கும்-தி-மாஸ்குலினிட்டி-குறும்படம்-3073199.html
3020235 சினிமா திரை விமரிசனம் தேவதாசி கதையை பதிவு செய்த பெண் இயக்குநர்! மணிகண்டன் தியாகராஜன் Sunday, October 14, 2018 01:54 PM +0530  

தேவதாசியின் கதைகளில் ஒரு சிறு துளியை பதிவு செய்யும் முயற்சிதான் நித்யசுமங்கலி குறும்படம். தேவதாசிகள் கதை பெரும்பாலும் தவிர்க்கப்பட்டே வருகிறது. ஆனால், அவர்களின் வாழ்க்கையையும் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பெங்களூரைச் சேர்ந்த தமிழரான இளம்பெண் லட்சுமி பூஜா

இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

நித்யசுமங்கலி பெயரே இந்தக் கதைக்கு அழுத்தத்தை கொடுக்கிறது.

சரி கதைக்கு வருவோம். 100 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு தேவதாசியின் கதையை ஆவணப்படமாக பதிவு செய்யும் நோக்கத்தில் ஆவணப் பட இயக்குநர் ஒருவர் நண்பரை அழைத்துக் கொண்டு தேவதாசி வசித்த இடத்துக்குச் செல்கிறார். அவருடன்,  தொல்லியல் துறை ஆராய்ச்சியாளரான இளம்பெண் ஒருவரும் உடன் செல்கிறார்.

அந்தக் கிராமத்தில் தேவதாசி வாழ்ந்த இல்லத்துக்கு அவர்கள் மூவரும் செல்ல, தொல்லியல் துறை ஆராய்ச்சியாளருக்கு ஏதோ ஓர் இனம் புரியாத உணர்வு ஏற்படுகிறது. தன்னை யாரோ கொலை செய்வது போல் கனவு கண்டதாக உடன் வந்தவர்களிடம் கூறுகிறார். பின்னர், அந்த ஊரில் இருக்கும் மனோதத்துவ மருத்துவரிடம் சென்று தனக்கு ஏன் இதுபோன்ற கனவு வருகிறது என ஆராய முயற்சி செய்கிறார்.

அதன்மூலம், அவரது முன்ஜென்மத்துக்கு கதை பயணிக்கிறது. அதில், அவர்கள் தேடிவந்த தேவதாசியின் கதை விரிகிறது.

அது என்ன கதை, தேவதாசிக்கு என்ன நடந்த்து என்பதே இந்தக் குறும்படம். தேவதாசிக்கு நேரும் முடிவு நமக்கெல்லாம் அதிர்ச்சியை அளிக்கும்.

முந்தைய கால வாழ்க்கையை மிகவும் அழகாக காட்சிப் படுத்தியிருக்கிறார் இயக்குநர் லட்சுமி பூஜா.   தேவதாசி பாத்திரத்தில் ஜான்வி ஜோதி சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக அவர் ஒரு காட்சியில் நவரச முகபாவனைகளை வெளிப்படுத்தும் இடம் அவர் திறமையான நடிகை என்பதை வெளிப்படுத்துகிறது.

மன்னராக வரும் சந்துருவும் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். இதர கதாபாத்திரங்களின் நடிப்பில் செயற்கைத்தனம் வெளிப்படுவதை தவிர்க்க இயலவில்லை. அனைத்து கதாபாத்திரங்கள் மீது இயக்குநர் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

இருப்பினும், தான் சொல்ல வந்த கதையை மிகவும் அழகாக பார்வையாளர்களுக்கு கடத்திய விதத்தில் லட்சுமி பூஜா சிறந்த இயக்குநராக மனதில் பதிகிறார்.

படத்தொகுப்பும், ஒளிப்பதிவும் சிறப்பு. இயக்குநரின் எண்ணத்துக்கு கேமரா கண்கள் வழியாக அழான காட்சிகளை பதிவு செய்திருக்கிறார் ஜோசஃப் ராய்.

பின்னணி இசை படத்துக்கு உயிர். இசையமைப்பாளர் கீர்த்தி வாசனுக்கும், வசனங்களை எழுதியிருக்கும் ஏ.பி.ராஜாவுக்கும் வாழ்த்துகள். வசனங்கள் ரசிக்க வைக்கின்றன.

இயக்குநர் லட்சுமி பூஜாவை தொடர்புகொண்டு பேசினேன். யாரிடமும் உதவி இயக்குநராக பணிபுரியாமல் சினிமா மீது இருந்த ஆர்வத்தில் இந்தப் படத்தை உருவாக்கியதாகத் தெரிவித்தார்.

பள்ளிப் படிப்புக்கு பிறகு நுண்கலை கல்வியில் தேர்ச்சி பெற்றுள்ள லட்சுமி பூஜாவுக்கு கலை துறையின் மீது ஆர்வம் பிறந்ததில் ஆச்சரியமில்லை.

மும்பையில் நடைபெற்ற குறும்பட விழா ஒன்றில் இந்தப் படத்தை திரையிட்ட லட்சுமி பூஜாவுக்கு சிறந்த இயக்குநருக்கான விருது கிடைத்திருக்கிறது.

இந்தப் படத்துக்கு சமூக வலைதளங்களில் பரவலான ஆதரவு கிடைத்தாலும், சில எதிர்ப்புகளையும் இவர் சம்பாதித்து இருக்கிறார்.

இதுகுறித்தும், படத்தை உருவாக்கிய விதம் குறித்தும் லட்சுமி பூஜா கூறியதாவது:

 இந்தப் படத்துக்கு சில எதிர்மறையான விமர்சனங்கள் வந்தன. இருப்பினும், நான் பதிவு செய்ய நினைத்ததை சரியாக செய்திருக்கிறேன் என்ற மன திருப்தி எனக்கு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் எனது தாயார் அன்னபூரணி. எனக்கு ஆதரவு தந்துவரும் தந்தை புருஷோத்தமுக்கும் இந்தத் தருணத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். மூன்று தினங்களில் படப்பிடிப்பை முடித்தாலும், படத்தொகுப்பு, டப்பிங், விஷுவல் எஃபக்ட்ஸ் போன்றவற்றை செய்ய சில மாதங்கள் ஆகிவிட்டன.

நண்பர்கள் செல்வ குமார், பிரவீண் ஆகியோருக்கும், இந்தப் படத்தை உருவாக்க உதவிய அனைவருக்கும் எனது நன்றிகள் என்று கூறிய அவரிடம் எதிர்கால திட்டம் குறித்து கேட்டேன்.

விரைவில் தமிழ் திரையுலகில் தடம்பதிக்க வேண்டும் என்பதே லட்சியம் என்றும் அடுத்த படத்துக்கான கதை உருவாக்கப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன் என்றும் கூறினார்.

பல நல்ல படங்களை உருவாக்க அவருக்கு வாழ்த்துகள்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/14/w600X390/IMG-20181013-WA0007.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2018/oct/14/தேவதாசி-கதையை-பதிவு-செய்த-பெண்-இயக்குநர்-3020235.html
3003595 சினிமா திரை விமரிசனம் 'மை'-பெண்களின் வலி: பெண் கலைஞர்களை பயன்படுத்தி குறும்படம்! மணிகண்டன் தியாகராஜன் Thursday, September 20, 2018 01:21 AM +0530  

மை குறும்படம் யூ-டியூப் தளத்தில் காணக் கிடைத்தது. இந்தப் படத்தின் தொடக்கம் சிறுமியிடம் இருந்து தொடங்குகிறது.

சிறுவர்கள் மகிழ்ச்சியாக ஒரு பூங்காவில் விளையாடுகிறார்கள். அங்கே ஒரு சிறுமி விளையாட முடியாமல் ஏங்கித் தவிக்கிறாள். அந்த ஏக்கம் நிறைந்த கண்களிலிருந்து விரிகிறது படத்தின் தலைப்பு. பாரதியாரின் கண்களில் மை என்ற எழுத்தை வடிவமைத்தது கவனத்தை ஈர்த்ததுடன், படத்துடன் ஒன்றிணைய வைத்தது.

அடுத்த காட்சியில் இளைஞர் ஒருவர் பெண் பார்க்க வருகிறார். இளம்பெண்ணும், அந்த இளைஞரும் தனியாக சந்தித்து பேசுகின்றனர். உங்கள் புகைப்படத்தை பார்த்ததும் பிடித்துப் போனது, அதனால் நேரில் பார்த்து பேசிவிட்டு போகலாம் என்று வந்தேன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

அதேநேரத்தில் ஒரு விளம்பரப் படம் நிறுவனம் காட்டப்படுகிறது. பல மாடல் அழகிகளை பார்த்து இதுபோன்ற மாடல்தான் இந்தப் பொருளின் விளம்பரத்துக்கு தேவை என்கிறார் ஒரு வர்த்தகர். இதையும், பெண் பார்க்கும் நிகழ்வையும் மறைமுகமாக இயக்குநர் கேலி செய்திருக்கிறார்.

அந்த இளைஞர் அந்தப் பெண்ணிடம் சில கேள்விகளைக் கேட்கிறார். அவர் எதிர்பார்ப்புகளையும் சொல்கிறார்.

இருவரின் உரையாடல்களுக்கும் தொடர்புடைய வகையில் திருமணமான பெண்கள் எப்படி வாழ்கிறார்கள், கல்லூரி பெண் எதிர்கொள்ளும் சவால்கள் என சில விஷயங்களை காட்சிப் படுத்தியிருக்கிறார் இயக்குநர் நற்றமிழன் விக்னேஷ்.

ஒரு கட்டத்தில் அந்த இளைஞர் கேட்கும் கேள்வியால் அதிர்ச்சி அடையும் அந்தப் பெண் என்ன செய்கிறாள் என்பதே படத்தின் முடிவு.

படம் முடிந்தவுடன் இயக்குநரின் கவிதை பின்குரலில் ஒலிக்கப்படுகிறது. நிமிர்வாய் தோழி…! அடக்கம் வேறு.. அடங்குதல் வேறு..! என்ற அந்தக் கவிதை அற்புதம்.  வசனங்களும் சிறப்பாக இருக்கிறது.

இந்தப் படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் சிறப்பாக நடத்திருக்கிறார்கள்.

பெண்மையைப் போற்றும் இந்தப் படத்தில் பெண் கலைஞர்களும் பணியாற்றி இருக்கிறார்கள். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் மரியா செல்வி. சிறப்பான காட்சிகளை கேமரா கண்கள் வாயிலாக பதிவு செய்திருக்கிறார்.

பின்னணி இசையும் அருமை. இசைக் கலைஞரும் பெண்தான்.

துபையில் இந்தப் படத்தை உருவாக்கிய நற்றமிழனை தொடர்பு கொண்டு பேசினேன்.

“பிஎஸ்சி விஸ்காம் படித்து முடித்துவிட்டு துபையில் பணிபுரிந்து வருகிறேன். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பது என் கனவு. எனது பூர்விகம் திருநெல்வேலி. யாழ் இனிது குழல் இனிது உள்பட இதுவரை 3 குறும்படங்களை இயக்கி இருக்கிறேன். மை படத்தில் இசை, கேமரா ஆகியவற்றுக்கு பெண் கலைஞர்களையே பயன்படுத்தினேன். சிறுமி முதல் திருமணமான பெண்கள் வரை எதிர்கொள்ளும் சில பிரச்னைகளை படத்தில் அலச நினைத்தேன். மையின் நிறம் கறுப்பு. பெண்களின் வலியை அதாவது, இருண்ட பக்கங்களை இந்தப் படத்தின் கதையில் சொல்லாம் என்று முடிவு செய்ததால் மை என்று பெயர் சூட்டினேன். இந்தப் படத்தை பார்த்துவிட்டு சமூக வலைதளங்களில் பலர் பாராட்டினர். அடுத்த குறும்படத்துக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்” என்று கூறிய நற்றமிழனுக்கு மேலும் பல நல்ல படங்களை இயக்க வேண்டும் என்று வாழ்த்தினேன். இந்த படத்தின் குழுவினருக்கும் வாழ்த்துகள்.

யூ-டியூப் தளத்தில்  https://www.youtube.com/watch?v=eGxEBj7nXvI என்ற லிங்கில் படம் காணக் கிடைக்கிறது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/19/w600X390/mai_short_film_1.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2018/sep/19/மை-பெண்களின்-வலி-பெண்-கலைஞர்களை-பயன்படுத்தி-குறும்படம்-3003595.html
3000210 சினிமா திரை விமரிசனம் சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ - சினிமா விமரிசனம் சுரேஷ் கண்ணன் Friday, September 14, 2018 12:23 PM +0530  

இயக்குநர் பொன்ராம், சிவா மனசுல சக்தி, பாஸ் (எ) பாஸ்கரன் போன்ற படங்களை இயக்கிய ராஜேஷிடம் இணை இயக்குநராக இருந்தவர். நகர்ப்புறப் பின்னணியில் ராஜேஷ் செய்ததை, கிராமம் அல்லது சிறுநகரத்தின் பின்னணியில் பொன்ராம் செய்வார். வித்தியாசம் அவ்வளவே. பொறுப்பற்ற முறையில் தன் நண்பனுடன் சுற்றிக் கொண்டிருக்கும் நாயகன், தான் விரும்பும் பெண்ணை அடையும் முயற்சியில் சில சிக்கல்களைச் சந்திப்பான். அவற்றை வென்று எவ்வாறு தன் துணையை அடைகிறான் என்பதுதான் இதன் அடிப்படையான வடிவம். ஒருவகையில் இது தமிழ் சினிமாவின் அரதப்பழசான வடிவமும் கூட.

தன் குடும்பப் பின்னணியைப் பற்றி அறிந்தவுடன் ‘டானாக’ மாறும் விஜய்சேதுபதியை சமீபத்தில் பார்த்தோம். ‘சீமராஜா’விலும் ஏறத்தாழ அப்படியொரு நாயகன்.

இந்திய விடுதலைக்குப் பிறகு ஜமீன்தார், சமஸ்தானங்களின் ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு அவர்களின் அதிகாரங்களும் சொத்துக்களும் பறிக்கப்பட்டன. எஞ்சிய சொத்துக்களையும் மிஞ்சிய புகழையும் வைத்துக்கொண்டு காலத்தை ஓட்ட வேண்டிய கட்டாயத்திற்குள் அவர்கள் தள்ளப்பட்டார்கள். அவ்வாறான சில வாரிசுகள் இன்னமும் கூட மீதமுள்ள ராஜவிசுவாசத்துடன் உள்ளூர் மக்களால் மதிக்கப்படுகிறார்கள். அப்படியொரு காலி பெருங்காய டப்பாதான் ‘சீமராஜா’.

**

புளியம்பட்டிக்கும் சிங்கம்பட்டிக்கும் உள்ள பகைமையுடன் திரைப்படம் ஆரம்பிக்கிறது. அலெக்ஸ், டெலக்ஸ் என்ற பெயருடைய இரட்டைக் குதிரைகள் பூட்டப்பட்ட சாரட்டு வண்டியில் உலா வரும் சிவகார்த்திகேயன், சிங்கம்பட்டியில் செல்வாக்கு மிக்கவர். கையெடுத்து கும்பிடாமல், ‘நல்லாயிருக்கீங்களா ராஜா’ என்று எவராவது கையை உயர்த்தி வாழ்த்தினால் பணத்தை அள்ளி இறைப்பவர் (சுயமரியாதையை வலியுறுத்துகிறாராம்). ஜில், ஜங், ஜக் என்று மூவரை மனைவியாக வைத்திருக்கும் சூரி. இவருடைய கணக்குப் பிள்ளை. (இவருடைய ‘சிக்ஸ் பேக்’ காமெடியாகவே முடிந்து விட்டது) சீனியர் ராஜாவான நெப்போலியனுக்கு சிவகார்த்திகேயனின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் பிடிப்பதில்லை என்றாலும் மகன் மீது பாசம் மிக்கவர்.

கறிக்கடை நடத்தி வரும் கண்ணன், (லால்), தனது மனைவியை ஒதுக்கிவிட்டு சந்தையில் காய்கறி விற்கும் காளீஸ்வரியை (சிம்ரன்) மணம் புரிந்தவுடன் அதிர்ஷ்டம் கொட்டுகிறது. விவசாயிகளை மிரட்டி நிலங்களைப் பறித்து அவற்றில் காற்றாலைகளை அமைக்கும் வணிகத்தில் கொடி கட்டிப் பறக்கிறார். என்றாலும் மக்களிடம் ‘ராஜா’விற்குக் கிடைக்கும் மரியாதை தனக்குக் கிடைப்பதில்லையே என்று மனம் குமைகிறார்.

புளியம்பட்டியில் உள்ள பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியையாகப் பணிபுரியும் சுதந்திரா தேவியைக் (சமந்தா) கண்டவுடன் காதல் கொள்கிறார் சிவகார்த்திகேயன். அவரை மணம் புரிவதில் சில சிக்கல்கள் ஏற்படுகின்றன. காற்றாடி கண்ணனுடன் மோதல் ஏற்படுகிறது. அதன் மூலம் தன்னுடைய ஜமீனின் புகழ்மிக்க வரலாற்றின் பின்னணியை அறிந்து கொள்ளும் சிவகார்த்திகேயன், விவசாய நிலங்களைப் பறிக்க முயலும் எதிரியின் சதியை முறியடித்து காதலியைக் கைப்பற்றுவதுதான் ‘சீமராஜா’.

**

பொன்ராமின் முந்தைய திரைப்படங்களான, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ‘ரஜினி முருகன்’ ஆகிய திரைப்படங்களின் ‘போகிற போக்கிலான’ நகைச்சுவையை மட்டுமே எதிர்பார்த்துச் செல்பவர்கள் ஏமாற்றமடையலாம். அந்த அம்சங்களும் ‘சீமராஜா’வில் இருக்கிறதுதான் என்றாலும் சிவகார்த்திகேயனை ‘சாகச நாயகனாக’ உயர்த்தும் முயற்சியில் பொன்ராம் ஈடுபட்டதால் நகைச்சுவை அம்சங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. ‘அடுத்த வீட்டுப் பையன்” என்று சிவகார்த்திகேயனுக்கு இருக்கிற பிம்பம் அதிகம் சேதம் ஆகாமல் கவனமாக இந்த முயற்சியை நகர்த்தியிருக்கும் பொன்ராமிற்குப் பாராட்டு. சிவகார்த்திகேயனின் ‘ஆக்‌ஷன்’ காட்சிகள் நன்றாக எடுபட்டிருக்கின்றன. சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கும் ‘அனல் அரசு’ இதை திறமையாகச் சாதித்திருக்கிறார்.

‘பொறுப்பில்லாத இளைய ராஜா’ என்கிற சித்திரத்திற்குள் நன்றாகப் பொருந்தியிருக்கிறார் சிவகார்த்திகேயன். முதல் பாதியில் சூரியுடன் இணைந்து இவர் செய்யும் கலாட்டாக்களில் வழக்கமான அம்சங்கள் இருக்கின்றன. பிறகு ஃப்ளாஷ்பேக்கில் 14-ம் நூற்றாண்டிற்குள் கதை நுழையும்போது ‘கடம்பவேல் ராஜாவாக’ சீரியஸ் முகம் காட்டுகிறார். ஆனால் இரண்டும் ஒன்றுக்கொன்று பொருந்தாமல் முரணாகிவிடுவது அவல நகைச்சுவை. வளர்ப்பு நாயைச் சிறுத்தையாக ஒப்பனை செய்து ஏமாற்ற முயலும் கொடூர நகைச்சுவைக் காட்சி ஒன்றும் இத்திரைப்படத்தில் வருகிறது.

ஃப்ளாஷ்பேக் காட்சிகள் சிறிது நேரமே வந்தாலும் அந்த சரித்திரப் பின்னணிக்காக மிகவும் மெனக்கெட்டிருக்கிறார்கள். கலை இயக்குநர் முத்துராஜின் அபாரமான உழைப்பு தெரிகிறது. அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக்காபூரை எதிர்த்து கடம்பவேல் ராஜா வீரத்துடன் போரிடுவதாலேயே அவர் இதைப் பாராட்டி அந்தப் பிரதேசத்தைக் கைப்பற்றாமல் திரும்பிச் செல்வதெல்லாம் வரலாற்று நகைச்சுவை. (‘பத்மாவதி’ திரைப்படத்தின் பாதிப்பு தெரிகிறது).

சுதந்திராதேவியாக சமந்தா மிக வசீகரமாக இருக்கிறார். இவருடைய தோற்றத்தாலும் திறமையான நடிப்பாலும் பல காட்சிகள் கண்ணுக்கு குளுமையாக இருக்கின்றன. இவர் சிலம்பம் சுற்றும் காட்சியில் நாயகனுக்கு ஈடான கைத்தட்டல்கள் கிடைக்கிறது. இத்தனை வீரமான ஒரு பெண்ணை வழக்கமான நாயகிகளைப் போலவே கையாண்டிருக்கும் இயக்குநர் கடைசியில் ஆறுதலாக ஒரேயொரு காட்சியில் மட்டும் வீரத்தைப் பயன்படுத்த வைக்கிறார்.

‘நீலாம்பரி” ‘சொர்ணாக்கா’ போன்ற வில்லிகளின் வரிசையில் சிம்ரனை உருவாக்கப் படாத பாடு பட்டிருக்கிறார் இயக்குநர். ஆனால் சிங்கத்தைப் போன்று கத்த முயன்று தோற்கும் பூனையின் பரிதாபக் கதையாகி விட்டது. சிம்ரனின் வில்லத்தனம் எடுபடவில்லை. மொட்டை ராஜேந்திரன், கீர்த்தி சுரேஷ் போன்றவர்கள் ஆங்காங்கே தென்படுகிறார்கள். நெப்போலியன் இன்னமும் சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

பாலசுப்பிரமணியனின் அபாரமான ஒளிப்பதிவில் பெரும்பாலான காட்சிகள் குளுமையாக இருக்கின்றன. குறிப்பாக பாடல் காட்சிகளில் அதிக உழைப்பைச் செலுத்தியிருக்கிறார். இமானின் ரகளையான பின்னணி இசை இத்திரைப்படத்தின் பலங்களில் ஒன்றாக சொல்லலாம். குறிப்பாக சரித்திரப் பின்னணியுடன் கூடிய காட்சிகளில் சிறப்பாக இசையமைத்து ரசிக்க வைத்திருக்கிறார். பாடல்கள் கேட்க இனிமையாக இருக்கிறதுதான் என்றாலும் மைனா, கும்கியின் போதையிலிருந்து இவர் இன்னமும் வெளியே வரவேயில்லை.

அசட்டுத்தனமான நகைச்சுவைகளுக்கு இடையே புதைந்து போன தமிழ்ப் பண்பாட்டுப் பெருமைகளையும் நினைவுப்படுத்த முயன்றிருக்கிறார் இயக்குநர். தமிழக மன்னர்களின் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ‘வளரி’ என்கிற ஆயுதம்தான் பின்னர் பூமராங் ஆக மாறிய கதையும் உணர்ச்சிகரமாகச் சொல்லப்படுகிறது. (சிங்கம்பட்டி ஜமீனின்  வரலாற்றுப் பின்புலத்தை உணர்ச்சியுடன் விவரிக்கும் காட்சியில் மு.ராமசாமி நன்றாக நடித்துள்ளார். ஆனால் இதர காட்சிகளில் ‘தொட்டித்தாத்தா’ என்கிற அபத்த நகைச்சுவையுடன் இவரை வீணடித்துள்ளார்கள்).

வெறும் நகைச்சுவைத் திரைப்படமாக கடந்து விடாமல் சில தீவிரமான விஷயங்களையும் இதில் கலக்க முயன்றுள்ளார் இயக்குநர். இந்த முயற்சிக்காக இவரைப் பாராட்டலாம் என்றாலும் இந்தக் கலவை சரியாக இணையாமல் போயிருக்கிறது. ஒரு பக்கம் முந்தைய திரைப்படங்களின் சாயலைக் கைவிட முடியாமலும், இன்னொரு பக்கம் தீவிரமான அம்சங்களை இணைக்க விரும்பியும் தடுமாறியிருக்கிறார் இயக்குநர். ஜமீன்தார், தமிழக வரலாறு, பண்பாட்டுப் பெருமை, விவசாயிகளின் மீதான திடீர் அக்கறை என்று பல கோணங்களில் இஷ்டம் போல் தாவுகிறது திரைக்கதை. ‘எஜமான் காலடி மண்ணைத் தொட்டு கும்பிட வேணும்’ என்பது போல நிலப்பிரபுத்துவத்தின் பெருமையை நிலைநாட்டும் ஆபத்தும் இதில் கலந்திருக்கிறது. சில முன்னணி நாயகர்களின் முந்தைய திரைப்படங்களின் சாயல்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆங்காங்கே சில தடுமாற்றங்கள் இருந்தாலும் ஆரம்பம் முதல் இறுதி வரை சுவாரசியமாகப் பயணிப்பதில் ‘சீமராஜா’ வெற்றி பெற்றிருக்கிறது எனலாம். ஒரு சராசரித் தமிழ்த் திரைப்படமான ‘சீமராஜா’, சற்றுக் கூடுதல் கவனத்துடன் திட்டமிடப்பட்டிருந்தால் குறிப்பிடத்தக்கப் படமாக மாறியிருக்கக்கூடும்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/14/w600X390/seemaraja_siva11111xx.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2018/sep/14/seema-raja-review-3000210.html
2934989 சினிமா திரை விமரிசனம் ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம் சுரேஷ் கண்ணன் Thursday, June 7, 2018 05:59 PM +0530  

அடித்தட்டு மக்கள், தங்களின் அடிப்படை உரிமைகளை அதிகாரத்தின் கைகளிலிருந்து மீட்பதற்குப் போராட்டத்தைத் தவிர வேறு வழியேயில்லை என்கிற அரசியல் செய்தியை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது, ரஞ்சித்தின் ‘காலா’ திரைப்படம். ‘நிலம் எங்கள் உரிமை’ என்கிற ஆதாரமான செய்தி பல்வேறு இடங்களில் தொடர்ந்து நினைவூட்டப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. ஆனால் இது சார்ந்த தீர்வு எந்த வகையான போராட்டத்தில் கிடைக்கும் என்பது தடுமாற்றத்துடன் சொல்லப்பட்டிருக்கிறது.

எதிர்ப்பதற்காகவும் தற்காத்துக் கொள்வதற்காகவும் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் வன்முறையை வன்முறையால் எதிர்கொள்வது அவசியம்தான் என்றாலும், நிலையான தீர்வுகளுக்கு மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு பரவுவதே சரியான வழி என்பதை ‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் மூலம் சொன்ன இரஞ்சித், ‘காலா’வில் பல குழப்பமான செய்திகளை விட்டுச் சென்றிருக்கிறார்.

காலாவின் மகனான லெனின் ஜனநாயகப் போராட்டங்களின் மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயல்கிறார். ஆனால் அவரின் வழிமுறைகள் கோமாளியாக்கப்படும் சூழலில் அதிகாரத்தின் மூர்க்கத்தை எதிர்க்கவும் கட்டுப்படுத்தவும் ரஜினியின் ரவுடியிஸம்தான் இறுதி வரை கைகொடுக்கிறது. இதன் மூலம் இரஞ்சித் உணர்த்த வரும் செய்தி என்ன?

**

மும்பை, தாராவியில் உள்ள அடித்தட்டு மக்களின் காப்பாளன் ‘காலா’ என்கிற கரிகாலன். அங்குள்ள மக்களுக்கு ‘வீடு கட்டித் தருகிறேன்’ என்று சில கட்டுமான நிறுவனங்கள் கிளம்புகின்றன. இந்தத் திட்டத்தின் பின்னால் அந்த ஊரின் பிரபல அரசியல்வாதியான ஹரிதாதா இருக்கிறார். தாராவி பகுதியின் முன்னாள் காப்பாளராக இருந்தவரும், காலாவின் தந்தையுமான ‘வேங்கையன்’ கொல்லப்படுவதற்கு இந்த ஹரிதான் காரணம். ஹரியின் சூழ்ச்சியை உணரும் கரிகாலன், வீட்டுத் திட்டம் நிறைவேற்றப்படாமலும், அதன் மூலம் பாமர மக்கள் ஏமாறாமல் இருக்கவும் அரணாக நிற்கிறார். இதன் மூலம் அவர் பல தனிப்பட்ட இழப்புகளை எதிர்கொள்ள நேர்கிறது.

எதிரிகளைக் காலா வீழ்த்தினாரா, வீழ்ந்தாரா என்பதைப் படத்தின் பிற்பகுதியில் வரும் பரபரப்பான காட்சிகள் விவரிக்கின்றன.

**

மிகையான ஒப்பனையுடன் இளம்பெண்களிடம் ‘டூயட்’ பாடும் அபத்தங்களில் இருந்து விடுபட்டுத் தன் வயதிற்கு ஏற்ற பாத்திரங்களை ரஜினி ஏற்கத் துவங்கியிருப்பது மகிழ்ச்சி. இது தொடர வேண்டும். ‘காலா’வாகப் பெரும்பான்மையான இடங்களில் ரஜினி தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். ஆனால் சில காட்சிகளில் வழக்கமான ஹீரோயிஸம் உயர்ந்து நிற்பது நெருடலாகவும் அபத்தமாகவும் இருக்கின்றன. அறுபது வயதிற்கு மேற்பட்ட ஒருவர், பத்து பதினைந்து மூர்க்கர்களைத் தூக்கிப் போட்டுப் பந்தாடும் காட்சிகள் ரஜினி மற்றும் வெகுஜன ரசிகர்களுக்காகச் செய்யப்பட்ட சமரசமாகி நிற்கின்றன. எனவே இது ரஜினி சினிமாவாக அல்லாமலும் இரஞ்சித்தின் சினிமாவாக இல்லாமலும் இரண்டுங்கெட்டான்தனமாக ஆகியுள்ளது. 

இழந்த காதலின் தேடல் மற்றும் ஏக்கம் என்கிற படிமம் இரஞ்சித்தின் படங்களில் தொடர்ந்து காணப்படுகின்றன. தொலைந்து போன மனைவியை ‘கபாலி’யில் தேடித் தவித்த ரஜினி, ‘காலா’வில் தன் பழைய காதலியைக் கண்டு உருகுகிறார்; மருகுகிறார். இது தொடர்பான காட்சிகள் இயல்பாகவும் நெகிழ்ச்சியாகவும் பதிவாகியிருக்கின்றன. இரஞ்சித்தால் நல்லதொரு ‘ரொமாண்ட்டிக்’ சினிமாவைத் தர முடியும் என்பதை இவை உறுதிப்படுத்துகின்றன.

ரஜினியின் பழைய காதலி ‘ஜெரீனா’வாக ஹியூமா குரேஷி இயல்பாக நடித்திருக்கிறார். இருவரும் உணவகம் ஒன்றில் அமர்ந்து பேசும் காட்சி சிறப்பானது. தங்களின் ‘மலரும் நினைவுகளைப்’ பரவசத்துடன் நினைவுகூர்வது முதற்கொண்டுச் சட்டென்று சுதாரித்துக்கொண்டு அவர்கள் சமகாலத்திற்குள் வந்து விழுவது வரை அந்தக் காட்சி அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ரஜினியின் மனைவி ‘செல்வி’யாக நடித்திருக்கும் ஈஸ்வரி ராவின் நடிப்பு பிரத்யேகமாகச் சொல்லப்பட வேண்டியது. ‘தே.. இப்படி வந்து உக்காரு. திருஷ்டி சுத்திப் போடணும்’ என்று ஏக வசனத்தில் கணவரைத் தொடர்ந்து கலாட்டா செய்து கொண்டேயிருந்தாலும் அடியாழத்தில் உள்ள அவரின் அன்பும் காதலும் பல காட்சிகளில் அற்புதமாகப் பிரதிபலித்திருக்கின்றன. பழைய காதலியை சந்தித்துவிட்டு ரகசிய உற்சாகத்துடன் வரும் ரஜினியிடம் ‘தின்னவேலில பத்தாப்பு படிக்கும்போது என்னையும் நெறய பசங்க விரட்டிட்டு இருந்தாங்க.. அதில ஒருத்தன் என்னையே சுத்தி சுத்தி வந்தான். நானும் ஒரு எட்டு ஊருக்குப் போய் அவன் எப்படியிருக்கான்னு பாத்திட்டு வந்துடறேன்’ என்று கோபத்தை வெளிக்காட்டும் காட்சி நகைச்சுவைக் கலாட்டா.

எதிர்நாயகனாக நானா படேகர். அதிகார மமதையும் அகங்காரமும் தளும்பி வழியும் அரசியல்வாதியின் பாத்திரத்தை அற்புத இயல்புடன் கையாண்டிருக்கிறார். எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக வில்லத்தனத்தைக் காட்டியிருக்கிறார். ‘உன்னைத்தான் கொல்ல நினைச்சேன். உன் மனைவியும் மகனும் இறந்துட்டாங்க. மன்னிச்சுடு’ என்று ரஜினியிடம் சொல்வது போன்ற காட்சிகளில் அசத்தியிருக்கிறார். ரஜினியின் மச்சானாகவும் வலதுகையாகவும் வரும் சமுத்திரக்கனியின் நடிப்பும் குறிப்பிடத்தக்கது. ரஜினியின் மகன் ‘லெனின்’ ஆக நடித்திருக்கும் மணிகண்டனின் பங்களிப்பு சிறப்பானது.

*

பார்வையாளர்கள் எரிச்சலடையும்படி பாடல்களைச் செயற்கையாகத் திணிக்காமல் சரியான சந்தர்ப்பங்களில் உபயோகிக்கும் இரஞ்சித்தின் திறமை ‘காலா’விலும் தொடர்கிறது. பொருத்தமான இடங்களில் பாடல்கள் அளவோடு ஒலிக்கின்றன. படவெளியீட்டிற்கு முன்னால் ‘பாடல்களை’ இரைச்சலாக உணர்ந்தவர்கள் கூட திருப்தியடையும்படி இருக்கின்றன பாடல் காட்சிகள். இரஞ்சித் முன்மொழியும் அரசியல், பாடல் வரிகளில் கச்சிதமாகப் பிரதிபலிக்கின்றன. காட்சிகளின் பரபரப்பிற்கு சந்தோஷ் நாராயணின் அபாரமான பின்னணி இசை உறுதுணையாக நின்றிருக்கிறது. வசனங்கள் இயல்பாகவும் சமயங்களில் அரசியல் அனல் தெறிப்புடனும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இந்துத்துவக் கருத்தியல்களின் பின்புலத்தில் வலதுசாரிக் கட்சிகள், அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் ஆவேசமாக முன்னகரும் சமகாலச் சூழலின் ஒரு சரியான காலக்கட்டத்தில் ஓர் எதிர்ப்பாயுதமாக ‘காலா’ நின்றிருக்கிறது எனலாம். ராமன்xராவணன் என்கிற கருத்துருவாக்கம் அரசியல் பொருளில் கச்சிதமாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. வெட்டுப்பட வெட்டுப்பட ராவணனின் தலை முளைத்துக் கொண்டேயிருப்பதைப் போல அரசியல் போராளிகள் தொடர்ந்து தோன்றிக் கொண்டேயிருப்பார்கள் என்கிற செய்தியும் அழுத்தமாக சொல்லப்படுகிறது.

அடித்தட்டு மக்களின் போராட்ட வழி, வன்முறையை வன்முறையால் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டேயிருப்பதின் வழியிலா அல்லது கல்வியறிவு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளைப் பெற்று அதிகாரத்தைக் கைப்பற்றுவதின் வழியிலா என்கிற தீர்வை அழுத்தமாக முன்வைப்பதில் படம் தடுமாறியிருக்கிறது. சில இழப்புகளுக்குப் பிறகு ‘போதும். அடிதடியெல்லாம் என் காலத்தோட போகட்டும்’ என்று ரஜினி உணர்ச்சியுடன் சொல்லும் வசனம், அதற்குப் பிறகான காட்சிகளின் வழி நிரூபிக்கப்படவில்லை.

ரஜினியின் ‘சூப்பர் ஸ்டார்’ என்கிற பிம்பம் உடைந்து பல இடங்களில் அவர் இயல்பான மனிதராகவே உலா வருவது மகிழ்ச்சி. ஆனால் அந்தப் பிம்பம் முழுமையாக உடையவில்லை என்பதுதான் சோகம். அதனால் இது ரஜினியின் சினிமாவா அல்லது இரஞ்சித்தின் சினிமாவா என்கிற குழப்பத்தைப் படத்தின் பிற்பகுதியின் காட்சிகள் உணர்த்துகின்றன. முன்னணி நாயகர்களால் விழுங்கப்படுவதற்கு முன்னால் ரஞ்சித் உடனே வெளிவர வேண்டும் என்பதைத்தான் ‘காலா’ நிரூபிக்கிறது.

ரஜினியின் கலைப்பயணத்தில் ‘காலா’ ஒரு சிறந்த முயற்சி. இரஞ்சித்தின் பயணத்தின் அது நிகழவில்லை என்பதுதான் முரண்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/7/w600X390/kaala_new7171.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2018/jun/07/kaala-movie-review-2934989.html
2865294 சினிமா திரை விமரிசனம் பாலா இயக்கியுள்ள ‘நாச்சியார்’- சினிமா விமரிசனம் சுரேஷ் கண்ணன் Saturday, February 17, 2018 12:23 PM +0530  


இதுவரையிலான பாலாவின் திரைப்படங்களையொட்டி, பொதுவாக இருவகையான பார்வையாளர்கள் வட்டம் உருவாகியிருப்பதைக் காணமுடிகிறது. அவருடைய படங்களில் சித்தரிக்கப்படும் விளிம்புநிலைச் சமூகம், இருண்மை, வன்முறை போன்றவற்றின் மீதான அச்சமும் ஒவ்வாமையும் கொண்ட பார்வையாளர்கள் ஒருபுறம். இந்தப் பிரத்யேக காரணங்களுக்காகவே கொண்டாடும் பார்வையாளர்கள் இன்னொருபுறம்.

பாலாவின் சமீபத்திய திரைப்படமான ‘நாச்சியாரிலும்’ அவருடைய பிரத்யேகமான பாணியும் சாயலும் உண்டு என்றாலும் இந்த இரு தரப்புப் பார்வையாளர்களையும் கவரும் வண்ணம், தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு ஒரு சமநிலையை அவர் கடைப்பிடித்திருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்கள் வரிசையில் நிராகரிக்க முடியாத படைப்பாளி என்கிற தகுதியை இத்திரைப்படத்தின் மூலம் அவர் மேலும் அழுத்தமாக்கியிருக்கிறார். இதன் சாட்சியமாக ‘நாச்சியார்’ அமைந்திருக்கிறது.

நடிகர்களின் ஆதிக்கமும் இடையூறும் மிகுந்திருக்கும் சூழலில் ‘சினிமா’ என்பது இயக்குநரின் ஊடகம் என்பதைத் தொடர்ந்து நிரூபிக்கும் படைப்பாளிகளின் வரிசையில் பாலா உறுதியாக நிற்பது சிறப்பு. அதுவரை அறியப்பட்ட ஒரு நடிகரின் பிம்பத்தைத் தனது பாணியில் முற்றிலும் வேறுவகையில் வார்த்தெடுக்கும் அவரது திறமை, இந்தத் திரைப்படத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் வழியாக நீண்டிருப்பது மிக சுவாரசியமானது. அதிலும் ஜோதிகாவின் அதிரடியான மறுவருகை இத்திரைப்படத்தின் மிக முக்கியமான, சுவாரசியமான அம்சங்களில் ஒன்று. 

**

எளிய சமூகத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண்ணையும் (இவானா) ஒரு பையனையும் (ஜி.வி.பிரகாஷ்) காவல்துறை துரத்திப் பிடிக்கும் பரபரப்பான காட்சிகளோடு படம் துவங்குகிறது. இன்னமும் பதினெட்டு வயது நிரம்பாத பெண்ணை, அந்தப் பையன் வன்கலவி செய்து விட்டான் என்பது வழக்கு.

நாச்சியார் ஐபிஎஸ் (ஜோதிகா) நேர்மையான, துணிச்சலான காவல்துறை அதிகாரி. உண்மையை வரவழைப்பதற்காக அவர் எடுக்கும் அதிரடியான அணுகுமுறைகளின் மீது துறை சார்ந்த புகார்கள் உண்டு. ஆனால் அவருடைய இன்னொரு பக்கம் மென்மையானது. நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பெண்ணை அவர் மெல்ல விசாரிக்கிறார். ‘இருவரின் ஒப்புதலோடும்தான் உறவு நிகழ்ந்தது, அவன் அப்பாவி’ என்று கண்ணீர் மல்குகிறாள் இளம்பெண்.

இது சார்ந்து தொடரும் விசாரணையில் ‘பையன் குற்றவாளியல்ல’ என்றொரு சிக்கலான கோணம் புலப்படுகிறது. எனில் ‘உண்மையான குற்றவாளி யார்” என்கிற கேள்விக்கான பதிலைத் தேடி நாச்சியார் பயணிக்கும் காட்சிகளோடு படம் தொடர்கிறது. இதில் பல தடைகளை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பாலாவின் திரைப்படங்களின் வழக்கமாக வெளிப்படும் வன்முறையாக அல்லாமல் மென்மையும் நுண்ணுணர்வாக அமைந்திருக்கும் உச்சக்காட்சி சிறப்பானது.

*

இத்திரைப்படத்தின் பிரதான சுவாரசியம் ‘ஜோதிகா’தான். திரைப்படத்தின் தலைப்பு தன்னுடைய பாத்திரத்தின் பெயரில் அமைந்திருப்பதற்கான முழு நியாயத்தையும் அவர் வழங்கியிருக்கிறார். இவர் தோன்றும் முதற்காட்சி துவங்கி படம் முழுமையும் முற்றிலும் வேறுவகையிலான உடல்மொழியையும் தோரணையையும் ஜோதிகா கடைப்பிடித்திருப்பது ரசிக்க வைக்கிறது. இதுவரையான பாத்திரங்களின் மூலம் அவருக்கு உருவாகியிருக்கும் ‘குழந்தைத்தனமான’ பிம்பத்தை தூள்தூளாக்கியிருக்கிறார். அதிரடியான காவல்துறை அதிகாரி என்கிற முகம் ஒருபுறமும், அந்தக் கம்பீரம் துளியும் குறையாத, அன்பான இல்லத்தரசி என்கிற முகம் இன்னொருபுறமுமாக அசத்தியிருக்கிறார். ஒரு காவல்துறை அதிகாரியின் மிடுக்கு அவருக்குக் கைகூடியிருந்தாலும் அதிலொரு மெலிதான செயற்கைத்தனம் கலந்திருப்பதையும் காண முடிகிறது.

ஜி.வி. பிரகாஷ் ‘நடிக்கத்’ துவங்கியிருக்கும் முதல் திரைப்படம் இதுதான். ‘காத்து’ என்கிற காத்தவராயனாக, ஒரு வளரிளம் சிறுவனின் உடல்மொழியையும் அதன் தன்மையும் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். தன்னுடைய காதலியைக் காணத் துடிக்கும் உருக்கம் ஒருபுறமும், மிகையின்றி அமைந்த இளமைக் குறும்புகள் இன்னொரு புறமும் எனத் தன் பங்களிப்பை நிறைவாக செய்துள்ளார்.

புதுவரவான இவானாவிற்கு நல்ல வடிவான, தமிழ் சாயல் நிறைந்திருக்கும் லட்சணமான முகம். அப்பாவித்தனம் இன்னமும் மாறதிருக்கும் இவரும் ஜி.வி.பிரகாஷைப் போலவே இயக்குநரால் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். தன்னைத் துரத்தும் பையனைச் செல்லக் கோபத்துடன் விரட்டுவதும், பிறகு அவனைக் காணத்துடிக்கும் தவிப்பையும் குறைவில்லாமல் வழங்கியிருக்கிறார்.

ஜோதிகாவின் சக காவல்துறை அதிகாரியாக ராக்லைன் வெங்கடேஷ் அபாரமாக நடித்துள்ளார். ஆதாரமான நேர்மைக்கும் காவல்துறையில் உள்ள நடைமுறை ஊழல்களுக்கும் இடையேயான தத்தளிப்பை நன்றாக வெளிக்காட்டியுள்ளார். பணத்தின் மூலம் குற்றங்கள் மூடி மறைக்கப்படும் அவலத்தையும் உயர்மட்ட அதிகாரிகள் இவற்றிற்கு உடந்தையாக நிற்கும் கொடுமையையும் இவர் விளக்கும் காட்சி சிறப்பானது. இதுதவிர ஜி.வி.பிரகாஷின் பாட்டி, முதலாளி, கூர்நோக்கு மையத்தின் காவல்காரர், அங்குள்ள சிறுவர்கள், காவல்துறை உயர்அதிகாரிகள் என ஒவ்வொரு சிறிய பாத்திரமும் கவனமாக பயன்படுத்தப்பட்டுள்ளன.

காவல்துறையிலுள்ள ஊழல்கள் ஒருபுறம் சித்தரிக்கப்பட்டாலும், இன்னொரு புறம், நேர்மையான காவல்அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அத்துறையின் நடைமுறைச்சிக்கல்கள் போன்றவை சமநிலையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வயதுக்கு வராதவர்கள் தொடர்பான வழக்கு என்பதால் ஊடகங்கள் அறியாமல் ரகசிய விசாரணையை மேற்கொள்ளச் சொல்கிறார் ஜோதிகா. இதனால் தனிப்பட்ட சில இழப்புகளையும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லாததால் மகளின் கோபத்தையும், ‘இளம் மனங்களில் தவறான நம்பிக்கையை விதைக்காதே’ என்று சூசகமாக உபதேசிக்கும் கணவனையும்.

விசாரணைக்கு வந்த ஒரு பெரியவரை திருப்பியனுப்ப ஆட்டோ செலவிற்குக் காசில்லாமல் ஒரு காவல்துறை பணியாளர் தடுமாறும் காட்சி சிரிப்பை வரவழைத்தாலும் அங்குள்ள நடைமுறைப் பிரச்னைகளையும் நம்மால் உணர முடிகிறது.

பெரும்பாலும் பயங்கரவாதிகளாகவே இஸ்லாமிய சமூகம்  தமிழ் சினிமாவில் சித்தரிக்கப்படும் அபத்தமான சூழலில் இதில் வரும் ஒரு திருமணக்காட்சியும், ஒரு பந்தா பேர்வழியால் எளிய மக்கள் பிரியாணி பெற முடியாமல் தடுக்கப்படும்போது, அவர் தண்டிக்கப்படும் காட்சியும், நடைமுறையில் நாம் அன்றாடம் காணும் மதநல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

திரைப்படத்தின் முதற்பாதி பிரகாஷ் மற்றும் இவானாவின் காதல் காட்சிகள் மூலம் சுவாரசியமாக நகரும்போது, இரண்டாம் பாதி ஜோதிகாவின் அதிரடி விசாரணைக் காட்சிகளின் மூலம் பரபரப்பாகச் செல்கிறது. ஆங்கிலத் திரைப்படங்களைப் போன்று இந்தப்படத்தின் நீளம் சுமார் தொன்னூறு நிமிடங்கள் என்பதால் தேவையற்ற காட்சிகள் இன்றி ரத்தினச் சுருக்கமாக படம் முடிந்து விடுகிறது. இனி தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு இதுவொரு நல்ல முன்னுதாரணமாக இருக்கலாம்.

**

‘இன்று காலை பொழுது விடிந்தது’ என்கிற வாக்கியம் எத்தனை சம்பிரதாயமாக இருக்குமோ, அப்படித்தான் இருக்கும் ‘ராஜாவின் பின்னணி இசை சிறப்பாக இருந்தது’ என்று சொல்வதுவும். காட்சிகளின் தன்மைக்கேற்ப இசை மிகப் பொருத்தமாகவே ஒலிக்கிறது. ஆனால் பாலா படங்களுக்கு என ராஜா வழங்கும் கூடுதல் சிறப்பு ஏதுமில்லை என்பது ஏமாற்றம் தரும் விஷயங்களுள் ஒன்று. படத்தின் ஒரே ‘மாண்டேஜ்’ பாடலும் ரசிக்கும்படி உள்ளது.

ஈஸ்வரின் ஒளிப்பதிவு அபாரம். துவக்கக் காட்சியின் துரத்தல்களை ஹெலிகாம் கோணத்திலும் சாலைப் பயணத்தின் வழியாகவும் விறுவிறுப்பாக்கியிருப்பது ஓர் உதாரணம். படத்தின் பிற்பாதியில் திரைக்கதை, ஆங்காங்கே தொடர்பற்றுப் பயணிப்பது நெருடல்.

பொதுவாக பாலாவின் திரைப்படங்களில் சட்டம், நீதி, காவல், மதம் போன்ற நிறுவனங்கள் மீதான நையாண்டியும் பகடியும் பல காட்சிகளில் தென்படும். இத்திரைப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல. “நமக்கு கஷ்டம் கொடுத்தாதானே சாமிக்கு போரடிக்காம இருக்கும். ஒரு சாமி மன்னிக்கச் சொல்லுது, இன்னொரு சாமி தண்டிக்கச் சொல்லுது. எதைக் கேக்கறது. நாமே புதுசா ஒரு சாமியை உருவாக்கினாத்தான் சரிவரும்” என்பது முதற்கொண்டு, நீதிமன்றத்தில் உளறிக் கொட்டும் அரசு வழக்கறிஞரின் சமூகம் குறித்து நீதிபதி கேட்க, ‘அப்பா வடகலை, அம்மா தென்கலை” என்று அவர் பதில் சொல்வது போன்ற ரகளையான நகைச்சுவை வசனங்கள் படம் முழுக்க சுவாரசியத்தைக் கூட்டுகின்றன.

‘எளியோரை வலியோர் வாட்டினால் வலியோரைத் தெய்வம் வாட்டும்’ என்கிறது திருக்குறள். தெய்வம் மனித ரூபத்தில் வரும் என்பது பாலாவின் நம்பிக்கை. இது தொடர்பான காட்சிகளை ‘நந்தா’ திரைப்படத்திலும் நாம் முன்பே பார்த்திருக்கிறோம். ‘மேலே இருந்து தனியா குதிச்சு வருமா” என்று சூர்யாவிற்கு உபதேசிப்பார் ராஜ்கிரண். நீதி, சட்டம் என்று சமூகத்தின் பெரும்பாலான நிறுவனங்கள், செல்வாக்கான குற்றவாளிகளுக்குச் சாதகமாக இயங்கும்போது எளிய மக்களுக்கான நீதியை எவரால் தர முடியும் என்கிற கேள்வியைப் படம் மிக அழுத்தமாக முன்வைக்கிறது.

 

சமூகத்தின் பார்வையில் அது சட்டப்பூர்வமற்றதாகத் தெரிந்தாலும் இம்மாதிரியான குற்றங்களைச் செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். அதற்கான அவதாரங்கள் சமூகத்திலிருந்தே உருவாவார்கள். இந்து மத நம்பிக்கையின் படி, அரக்கர்களைக் கொன்றொழிக்கும் பெண் தெய்வங்களின் வழிமுறையும் இதுவே. அப்படியொரு அவதாரமாக சித்தரிக்கப்பட்டுள்ளார் ‘நாச்சியார்’.

வயதுக்கு வராதவர்களின் இடையே நிகழும் பாலுறவை பாலா நியாயப்படுத்த முனைகிறாரா? காவல்துறை அதிகாரிகளே தங்களின் கைகளில் சட்டத்தை எடுத்துக் கொள்ளலாமா என்பது முதற்கொண்டு இத்திரைப்படம் குறித்து கேட்க நமக்கு ஆயிரம் கேள்விகள் உண்டு. ஆனால் எளியோர்களின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படும்போது அவர்களைக் காக்கப் புறப்படும் மனித தெய்வங்களின் வழிமுறைகளைக் கேள்வி கேட்கும் தகுதி நமக்கிருக்கிறதா என்கிற பதிலை மிக அழுத்தமாக முன்வைக்கிறது இந்தத் திரைப்படம்.

பாலா படங்களின் வழக்கமான தாக்கமும் அழுத்தமும் இத்திரைப்படத்தில் சற்று மட்டுப்பட்டிருந்தாலும் அவருடைய மிகச்சிறந்த படங்களில் ‘நாச்சியார்’ முன்னணி இடத்தைப் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

]]>
Naachiyaar, Director Bala, Jyothika, GV Prakash, Ivana, Review https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/17/w600X390/Nachiyar_new1_17.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2018/feb/17/jyothika-bala-film-naachiyaar-2865294.html
2861001 சினிமா திரை விமரிசனம் மிஷ்கினின் ‘சவரக்கத்தி’ – சினிமா விமரிசனம் சுரேஷ் கண்ணன் Saturday, February 10, 2018 01:55 PM +0530 உலகம் முழுவதும் வெவ்வேறு வகைமைகளில், வண்ணங்களில் நகைச்சுவை திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. ஆனால் தமிழ் சினிமாவில் மட்டும் ‘இதுதான் நகைச்சுவை’ என்று முத்திரை குத்தப்பட்ட சில தேய்வழக்கு விஷயங்கள் நெடுங்காலமாக நீடிக்கின்றன. இந்த அபத்த மரபைக் கலைத்துக் கொண்டு அரிதாக சில முயற்சிகள் வெளிவரும். அதிலும், உலக சினிமாக்களின் பரிச்சயம் மிகுந்து வரும் சமகாலத்தில் தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர்களிடமிருந்து அவ்வாறான முயற்சிகள் தொடர்ந்து வெளிப்படுகின்றன. சிறந்த உதாரணம், தியாகராஜன் குமாரராஜாவின் ‘ஆரண்ய காண்டம்’.

இந்த வரிசையில் புதுநிறத்தைச் சேர்க்கும் விதமாக வெளிவந்திருக்கும் ‘அவல நகைச்சுவை’ திரைப்படம் ‘சவரக்கத்தி’. மிஷ்கினின் எழுத்திலும் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை அவரது சகோதரர் ஆதித்யா இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் தனித்தனியாக சிறந்த பல விஷயங்கள் உள்ளன. ஆனால் ஒட்டுமொத்த பார்வையில் நிறைவைத் தராத, மொண்ணையான முயற்சியாக இது அமைந்தது துரதிர்ஷ்டமானது. 

**

பழம்பெருமை பேசித் திரியும் பிச்சைமூர்த்திக்கு (ராம்) அவரது வாயே பிரதான எதிரி. ‘தவளையும் தன் வாயால் கெடும்’ எனும் பழமொழக்கு மிகச்சிறந்த உதாரணம் பிச்சை. நிறைமாத கர்ப்பிணியாக உள்ள, காது கேளாத மனைவியும் (பூர்ணா), மகனும் மகளும் இவருக்கு உண்டு. இவர்களின் பயணம் ஒருபுறம்.

பரோலில் வெளியே வந்திருக்கும் ரவுடியான மங்கேஸ்வரன் (அ) மங்கா (மிஷ்கின்) அன்றைய நாளின் மாலைக்குள் காவல்துறையிடம் தன்னை ஒப்படைத்துக் கொள்ள வேண்டும். இன்னமும் மூன்று வருடங்களால் அவரால் வெளியுலகத்தைப் பார்க்க முடியாது. தன்னுடைய ஆட்களுடன் மங்கா செய்யும் பயணம் ஒருபுறம்.

தன்னுடைய மைத்துனனான  ரகு, எதிர்ப்பிற்குப் பயந்து தன் காதலியை ரகசியமாக திருமணம் செய்து கொள்ளப் போகும் தகவல் பிச்சைக்கு கிடைக்கிறது. தன்னுடைய குடும்பத்துடன் வேண்டாவெறுப்பாக இந்த எதிர்பாராத திருமணத்திற்கு கிளம்பும் பிச்சை, உதார் விடும் தன்னுடைய குணாதிசயத்திற்கு ஏற்ப செல்லும் வழியில் ஏற்படும் ஒரு சில்லறைத் தகராறில் ரவுடி மங்காவின் பகையைச் சம்பாதிக்கிறான். 

ஏற்கெனவே சிறைக்குத் திரும்பும் எரிச்சலில் உள்ள மங்கா இதனால் கோபத்தின் உச்சிக்கே செல்கிறான். எப்படியாவது தேடி பிச்சையைக் கொல்வது என சபதம் எடுக்கிறான். ஆத்திரக் கிறுக்கனாக அவன் முடிவெடுத்து விட்டால் எவராலும் தடுக்க முடியாது. எனவே தன் ஆட்களுடன் பிச்சையைத் தேடிக் கிளம்புகிறான். 

வாய்ச்சவடால் உள்ளவன்தான் என்றாலும் அப்பாவியான பிச்சை இவனிடமிருந்து தப்பித்தானா, கர்ப்பிணி மனைவி உள்ளிட்ட இவர்களின் குடும்பம் என்னவானது என்கிற அலைச்சலின் ஒருநாள் பயணமே ‘சவரக்கத்தி’ 

**

ரவுடியிடமிருந்து உயிருக்காக மன்றாடும் கதாபாத்திரத்தின் பெயர் ‘பிச்சை’. ஜப்பானிய கலாசாரத்தின் மீது பிரியமுள்ள மிஷ்கினின் பாத்திரத்தின் பெயர் ‘மங்கா’. ஜப்பானிய வரைகதையின் வடிவம் ‘மங்கா’ என்று குறிக்கப்படுவது ஓர் உபதகவல். இப்படி பல நுட்பமான, நுண்மைகளுடன் அமைந்த காட்சிகள் சுவாரசியமாக விரிகின்றன. 

ஒரு கோழையைப் போல படம் முழுவதும் ஓடி ஒளிந்து கொண்டேயிருக்கும் பிச்சை, வாய் பேச முடியாத ஒரு தேநீர்க்கடை மாஸ்டரிடம் உபதேசத்தைப் பெறும் போது துணிச்சல் கொள்கிறான். அந்தக் கடையின் பெயர் ‘பொய்யாமொழி தேநீர் நிலையம்’. தன் குடும்பத்தை மீட்பதற்காக அவன் வேகமாகச் செல்ல ஒரு வாகனம் தேவைப்படுகிறது. வாடகை சைக்கிள் கடையை அணுகுகிறான். அறிமுகமில்லாத இவனுக்கு வண்டி தர கடைக்காரர் மறுக்கிறார். பிறகு ஏதோவோர் அறவுணர்வு கடைக்காரரை உந்த சைக்கிள் தர சம்மதிக்கிறார். அந்தக் கடையின் பெயர் ‘ பரிசுத்தம் மிதிவண்டி நிலையம்’ இப்படியாக பாத்திரங்களும், காட்சிகளின் பின்னணி விவரங்கள் ஒவ்வொன்றும் இந்த திரைப்படத்தில் மிக கவனமாக உருவாக்கப்பட்டுள்ளதை ஒருபுறம் ரசிக்க முடிகிறது. 

பிச்சையை பழிவாங்க செல்வதா, அல்லது அன்றைய தினத்தை நிம்மதியாக கழித்து விட்டு சிறைக்குத் திரும்புவதா என்கிற கட்டாயம் மங்காவிற்கு ஏற்படுகிறது. நாணயத்தைச் சுண்டி ‘பூவா,தலையா’ போடுகிறான். ஒரு நாணயத்தின் பக்கம் ஒருவனின் வாழ்க்கையையே தீர்மானிக்கும் கமலின் ‘ஆளவந்தான்’ நந்து பாத்திரம் போல, ஒரு நாணயம்தான் பிச்சையின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. படம் முழுவதும் இப்படியான அபத்த நகைச்சுவை தருணங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால், அவற்றில் அரிதான சிலவற்றைத் தவிர பெரும்பாலானவற்றில் அழுத்தமோ, சுவாரசியமோ இல்லாததால் வெறுமனே கடந்து போகின்றன. 

மங்காவிடம் பிச்சை மாட்டும் போதெல்லாம் ஏதோவோர் குருட்டு அதிர்ஷ்டத்தால் தப்பிச் செல்கிறான். இது மங்காவை இன்னமும் கடுப்பேற்றுகிறது. பிச்சையின் குடும்பத்தின் மூலம் அவனைப் பிடிக்கும் வாய்ப்பு வரும் போது மங்கா சொல்கிறான். ‘இல்லை. நீ ஓடு. நான் உன்னைத் துரத்திப் பிடிக்கிறேன்’. இதுவொரு முக்கியமான காட்சி. அவனுடைய அகங்காரம் விழிக்கும் காட்சிகளுள் ஒன்று அது. ஆனால் அதற்கு மாறாக மீண்டும் குடும்பத்தைக் காட்டி மிரட்டுவதின் மூலம் பிச்சையை வரவழைப்பது சுவாரசியமான முரண். 

**

மிஷ்கினின் பாத்திரம் மிக கச்சிதமாக செதுக்கப்பட்டுள்ளது. தன் சுயநலத்திற்காக எவரையும் அழிக்கும் குணாதிசயம் உள்ளவன். தனக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்யும் தன்னுடைய தாய்மாமனையே எதிர்ப்பவன். ஓர் அற்ப விவகாரத்திற்காக அப்பாவி ஒருவனின் உயிரை எடுப்பதற்காக படம் முழுவதும் பேய் போல் அலைகிறான். ஆனால் அவனுக்குள்ளும் நுண்ணுணர்வும் கருணையும் ஒட்டிக் கொண்டிருப்பது மறைமுகமாகச் சுட்டப்படுகிறது. ‘நாலு பேர் பார்க்க கக்கூஸ் போயிருக்கியா?” என்று சிறை வாழ்க்கையின் கொடுமையைப் பற்றி தாய்மாமனிடம் சொல்லும் போது அவனுக்குள் இருக்கும் மானவுணர்வை நாம் அறிய முடிகிறது. படம் முழுவதும் இந்த மனோபாவத்தை விடாமல் கடைப்பிடித்திருக்கும் மிஷ்கினின் பங்களிப்பு அபாரமானதாக உள்ளது. 

வெட்டி வீறாப்பிற்கும் கோழைத்தனத்திற்கும் இடையிலான தத்தளிப்பை ராம் சிறப்பாகவே கையாண்டுள்ளார். காது கேளாக்குறையுள்ள மனைவியிடம் எரிந்து விழுவது, மங்காவிடம் உயிர்ப்பிச்சை கேட்டுவிட்டு சமயோசிதமாக தப்பிப்பது, தன் தந்தையின் புகைப்படத்தை கிழித்துப் போடும் இன்ஸ்பெக்டரை துணிச்சலாக பழிவாங்குவது (என்னவொரு அற்புதமான காட்சி!) என்று பல காட்சிகளில் பிச்சைமூர்த்தியாகவே வாழ்ந்துள்ளார் ராம். ஆனால் அவருடைய மிகையான உடல்மொழியும் கூச்சலும் சில சமயங்களில் நெருடலை ஏற்படுத்துகிறது. ராம் மட்டுமல்ல, ஏறத்தாழ அனைத்து பிரதான பாத்திரங்களுமே மிகையாகவே இயங்குவது நம்பகத்தன்மையை பெருமளவு சிதைக்கிறது. 

ஒரு நிறைமாத கர்ப்பிணியின் உடல்மொழியை மிகச்சரியாக வெளிப்படுத்தியுள்ளார் பூர்ணா. தன் கணவன் வீரன் என்று அப்பாவித்தனமாக நம்புவதும், அதே சமயம் ஒரு வழக்கமான மனைவியாக அவனை மட்டம் தட்டிக் கொண்டேயிருப்பதும், அசந்தர்ப்பமான சமயங்களில் பழமொழியைச் சொல்லி விட்டு நாக்கைத் துருத்துவதும் என ரசிக்க வைத்திருக்கிறார். ஆனால் இவருடைய பாத்திரத்திற்கு இன்னமும் கூட முக்கியத்துவம் தரப்பட்டிருக்கலாம். தன் கணவரைப் போலவே இவரும் வெட்டி வீறாப்புடன் சிக்கலில் மாட்டிக் கொள்வது போன்ற காட்சிகள் செயற்கையாகத் தோன்றுகின்றன. 

‘ஏதோ தப்பா தெரியுது.. வேண்டாம்டா’ என்று மங்காவின் மனச்சாட்சி போல எச்சரித்துக் கொண்டேயிருக்கும் தாய்மாமன், பாராட்டு பெறுவதற்காக முதலில் ஆலோசனை சொல்லி விட்டு பிறகு அவதிப்படும் மங்காவின் அடியாள், ‘அலெக்சாண்டருக்கே பஞ்சாயத்து சொன்ன குடும்பம்டா நம்மளுது’ என்று வீராப்புடன் கிளம்பி அடிவாங்கி தவழ்ந்து வரும் பிச்சையின் தாய்மாமன், வில்லங்கமான உடல்பாகத்தில் தாக்கப்பட்டு அந்த அவஸ்தையோடு படம் முழுக்க வரும் இன்னொரு அடியாள், மங்காவின் நகல் போலவே எல்லாவற்றிற்கும் ஆத்திரப்படும் இளைஞன், ‘அடி தாங்கல முதலாளி’ என்று கதறும் பிச்சையின் உதவியாள், உலகின் தத்துவச் சிக்கல்களை உரக்க விவாதித்தபடி வரும் மனநலம் குன்றிய நபர் (ஷாஜி) என்று ஒவ்வொரு சிறிய பாத்திரமும் சுவாரசியமாகவும் கவனமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. 

தன் தலையில் கொட்டி கொட்டி முடிவெட்டிய பிச்சையை ‘இன்னிக்கு நீ என்ன பாடுபடப் போற பாரு’ என சாபம் கொடுக்கிறான் ஒரு சிறுவன். தன்னை ஆபாசமாக வெறித்துப் பார்த்து விட்டு தன் கணவன் தர்மஅடி வாங்குவதற்கு காரணமாக இருக்கும் மங்காவை ‘நீ நல்லாவே இருக்க மாட்டே’ என சாபம் விடுகிறாள் ஓர் இளம் குடும்பப்பெண். இந்த இருவரின் சாபங்களும் மங்காவையும் பிச்சையையும் அன்றைய நாள் முழுக்க துரத்துகின்றன. 

**

இந்த திரைப்படத்தின் இருபெரும் பலங்கள் என்று ஒளிப்பதிவையும் பின்னணி இசையையும் சொல்லலாம். ஒருநாளின் காலையில் துவங்கி அன்று மாலைக்குள் நிகழும் திரைக்கதை என்பதால் அதுசார்ந்த ஒழுங்கையும் ஒத்திசைவையும் வெளிச்சத்தையும் மிக கவனமாக பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் வெங்கட்ராமன். நத்தை நகர்ந்து செல்லும் காட்சி முதல் பல காட்சிகளின் அழகியலும் வண்ணமும் மனதை ஈர்க்கிறது. 

‘என்னதான் ராக்கெட் விழுந்தாலும் நம்ம குண்டியை கைவெச்சுதான் கழுவ வேண்டியிருக்கு’ என்கிற முணுமுணுப்பு வசனம் போன்று பல காட்சிகளில் மென்நகைச்சுவை வெடிகளும் பகடிகளும் இருக்கின்றன. 

‘அண்ணாந்து பார்’ பாடல் முதற்கொண்டு காட்சிகளின் பின்னணிக்கேற்ப அற்புதமாக ஒலிக்கும் இசை வரை அரோல் கரோலியின் ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறக்கிறது. வயலின் இசையும் காற்று வாத்தியங்களின் அற்புதமும் படம் முழுக்க மாயாஜாலம் புரிகின்றன. தமிழச்சி தங்கபாண்டியனின் பாடல் அர்த்தம் பொதிந்ததாக உள்ளது. 

பூனை, எலி விளையாட்டு போல கொலைவெறியுடன் துரத்தும் ஒரு முட்டாள்தனமான கோபக்காரன், அவனிடமிருந்து உயிர்தப்ப அலையும் ஒரு புத்திசாலி கோழையின் கதை சினிமாவிற்கு புதிதானது அல்ல. பல சிறிய கூறுகளுடன் இந்தக் கதையை சுவாரசியப்படுத்தியுள்ள ‘சவரக்கத்தி’, ஒட்டுமொத்த கவனத்தில் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. மிஷ்கினின் எழுத்து என்பதால் அது தொடர்பான சாயல்கள் சில இருந்தாலும், தன்னுடைய தனித்தன்மையை இயக்குநர் ஆதித்யா பதிவு செய்துள்ளது பாராட்டத்தக்கது. 

திரைக்கதை இன்னமும் சுவாரசியமாகவும் அழுத்தமாகவும் உருவாக்கப்பட்டிருந்தால் ‘சவரக்கத்தி’யின் கூர்மையை உணர்ந்திருக்க முடியும். அவை அமையப் பெறாததால் ஒரு மொண்ணைக் கத்தியினால் அறுபடும் வேதனையைப் படம் முழுவதும் உணர வேண்டியிருந்தது துரதிர்ஷ்டமானது.  

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/10/w600X390/review.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2018/feb/10/மிஷ்கினின்-சவரக்கத்தி-ndash-சினிமா-விமரிசனம்-2861001.html
2810456 சினிமா திரை விமரிசனம் கார்த்தி நடித்துள்ள ‘தீரன் அதிகாரம் ஒன்று’ – சினிமா விமரிசனம் சுரேஷ் கண்ணன் Saturday, November 18, 2017 10:59 AM +0530  

‘நள்ளிரவில் வீடு புகுந்து கொலை, கொள்ளை, கற்பழிப்பு. வடமாநில கொள்ளையர்களின் அட்டகாசம். கொள்ளையர்களைப் பிடிக்க தமிழகக் காவல்துறையின் தனிப்படை வடமாநிலங்களுக்கு விரைந்துள்ளது’ என்பன போன்ற செய்திகளை ஊடகங்களில் நிறைய கவனித்திருப்போம். இது போன்ற தனிப்படைகள் எவ்வாறு இயங்குகின்றன, கொள்ளையர்களின் சமூகவியல் பின்னணி என்ன ஆகிய விவரங்களின் துல்லியத்துடன், பரபரப்பாக நகரும் திரைப்படம் இது.

கலாசார வேறுபாடுகள், பல்வேறு நடைமுறைச்சிக்கல்கள் இருக்கும் அயல் மாநிலங்களில் தமிழகக் காவல்துறையின் தனிப்படை அதிகாரிகள் எவ்வாறெல்லாம் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள், அந்தச் சிரமங்களுக்கிடையில் குற்றவாளிகளைத் தேடிக் கண்டடைகிறார்கள் என்பதை ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியின் பார்வையிலிருந்து நேர்த்தியான திரைக்கதையின் மூலம் விவரித்திருக்கிறார்கள். நாம் பெரிதும் அறிந்திராத குற்றவுலகின் பின்னணியை அபாரமான திரைக்கதையின் மூலம் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் வினோத்.

**

சென்னையின் புறநகர் பகுதிகளில் தனியாக அமைந்துள்ள வீடுகளைக் குறிவைத்து அடையாளம் தெரியாத முகமூடிக் கொள்ளையர்கள் தாக்கும் கொடூரமான காட்சிகளுடன் படம் துவங்குகிறது. சாட்சியம் எதுவும் இருக்கக்கூடாது என்கிற கவனத்துடன் பெண்கள், குழந்தைகள் என்று வீட்டில் உள்ள அனைவரையும் ஒரே அடியில் கொல்வது இவர்களின் பாணி.

காவல்துறைக் கண்காணிப்பாளராகப் பணியில் இணையும் தீரன் திருமாறன் மிக நேர்மையான அதிகாரி. அதனாலேயே பல இடங்களுக்குத் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்படுகிறார். அவர் பணிபுரியும் இடங்களில் கொள்ளையர்களின் அட்டகாசம் நிகழ்கிறது. ஆனால் எத்தனை முயன்றும் அவர்களைப் பற்றி ஒரு துப்பு கூடக் கிடைப்பதில்லை. அலட்சிய மனோபாவத்துடன் இயங்கும் மேலதிகாரிகள் தீரனுக்குப் போதிய ஒத்துழைப்பு தருவதில்லை.

சாதாரண பொதுமக்கள் சாகும்போது அலட்சியமாக இருக்கும் அரசும், அதிகார வர்க்கமும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கொள்ளையர்களால் சாகடிக்கப்படும்போது பதறிக்கொண்டு தேடுதல் நடவடிக்கைகளை முடுக்குகிறது. தீரன் தலைமையில் தனிப்படையொன்று வடமாநிலங்களுக்கு விரைகிறது.

ஆனால் இந்தத் தேடுதல் படலம் அத்தனை எளிதாக இருப்பதில்லை. கொள்ளையர்களைப் பற்றிய அடிப்படை விவரம் கிடைப்பதற்கே பல மாதங்கள் ஆகின்றன. ஏறத்தாழ இந்தியா முழுவதும் நிகழும் இந்தப் பயணத்தை மிகுந்த நம்பகத்தன்மையோடும் பரபரப்பான திரைக்கதையோடும் விவரித்திருக்கிறார் இயக்குநர்.

**

இத்திரைப்படத்துக்காக கார்த்தி தந்திருக்கும் உழைப்பு மிகப் பெரியது. மிடுக்கான தோற்றமும் கம்பீரமான உடல்மொழியும் என ஓர் உண்மையான காவல்அதிகாரியின் தோற்றத்தைக் கச்சிதமாகக் கொண்டு வந்திருக்கிறார். இதற்கு மறுபுறம் காதலின் நெகிழ்ச்சியையும் அது சார்ந்த உருக்கத்தையும் நன்றாக வெளிப்படுத்தியுள்ளார். கார்த்தியின் கலைப்பயணத்தில் இத்திரைப்படம் ஒரு முக்கியமான பதிவாக இருக்கும்.

கார்த்தியின் காதலி மற்றும் மனைவியாக ரகுல் ப்ரீத் சிங். நன்றாக நடித்துள்ளார். போஸ் வெங்கட் உள்ளிட்ட பல நடிகர்கள் தங்களின் சிறப்பான பங்களிப்பைத் தந்துள்ளார்கள். கொள்ளைக்கூட்டத் தலைவனாக வரும் அபிமன்யு சிங்கின் தோற்றமும் நடிப்பும் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு நம்பகத்தன்மையை உண்டாக்குகிறது.

இருக்கையின் நுனிக்கு வரவழைக்கும் பரபரப்பான திரைக்கதைக்குத் தடைக்கற்களாக இருப்பவை பாடல்களும், காதல் காட்சிகளும். வேகமாக நகர்ந்துகொண்டிருக்கும் காட்சிகளுக்கு இடையில் இடையூறாக அமைந்து பொறுமையைச் சோதிக்கின்றன. செயற்கையான திணிப்புகளாக இருக்கும் இது போன்ற அசட்டுச் சம்பிரதாயங்களைப் பிடிவாதமாகக் கடைப்பிடிக்கும் பாணியைத் தமிழ் இயக்குநர்கள் எப்போது கைவிடுவார்களோ என்று தெரியவில்லை.

ஜிப்ரானின் அபாரமான இசையில் அமைந்துள்ள பாடல்கள், தனியாக கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும் படத்தின் வேகத்திற்குத் தடையாக அமைந்திருந்திருப்பது துரதிர்ஷ்டம். ஆனால் தனது அற்புதமான பின்னணி இசையால் காட்சிகளின் பரபரப்பிற்கு அழுத்தம் கூட்டி இதைச் சமன் செய்திருக்கிறார் ஜிப்ரான்.

ஒளிப்பதிவு (சத்யன் சூர்யன்), எடிட்டிங் (சிவநந்தீஸ்வரன்), கலை (கதிர்), சண்டை வடிவமைப்பு (திலீப் சுப்பராயன்) என்று  தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே இயக்குநரின் அசாதாரணமான உழைப்பிற்குத் துணை நின்றிருக்கிறார்கள்.

**

அதிமுக சட்டமன்ற உறுப்பினர், சுதர்சனம் உள்ளிட்ட பல கொலைகளுக்கும் கொள்ளைகளுக்கும் காரணமாக இருந்த உத்தரபிரதேசத்தைச் சார்ந்த ‘பவாரியா’ கொள்ளையர்கள் குழுவைப் பிடிப்பதற்காக, 2005-ம் ஆண்டு தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது. அப்போதைய ஐ.ஜி, எஸ்.ஆர்.ஜாங்கிட் தலைமையில் அமைந்த இந்தத் தனிப்படை மிகத்திறமையாகச் செயல்பட்டு கொள்ளையர்களின் குழுவைத் தேடியது. சில என்கவுண்ட்டர்கள் நடந்தன. விசாரணைகளுக்குப் பிறகு சிலருக்குத் தூக்குத்தண்டனை கிடைத்தது.

இது சார்ந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இதன் திரைக்கதை மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. ஓர் உயர்நிலை காவல்அதிகாரிக்கு இருக்க வேண்டிய நுண்ணறிவு, மனவுறுதி, விடாப்பிடியான தேடுதல் வேட்டை மனோபாவம், அப்பாவி மக்களை காக்க வேண்டிய பொறுப்பு என்பன போன்ற பல விஷயங்கள் தீரன் பாத்திரத்தின் மூலமாக நிறுவப்பட்டுள்ளன. கொள்ளையர்களின் பின்னணியைப் பற்றி அறிந்து கொள்வதற்காக பல நூல்களை, குற்றத் தரவுகளை சலிப்பின்றி வாசிக்கிறார் தீரன்.

2000-ம் ஆண்டின் பின்னணியில் நிகழும் புனைவு என்பதால் அந்தக் காலக்கட்டம் சார்ந்த அடையாளங்கள் கலை இயக்குநரால் திறமையாக உருவாக்கப்பட்டுள்ளன. ரூ. 501 ரிலையன்ஸ் கைப்பேசி,
அப்போதைய பிரதமர் வாஜ்பாய் உருவம் தாங்கிய பேனர் என்று பல நுணுக்கமான விஷயங்கள் காட்சிகளின் பின்னணியில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.

கொள்ளையர்களின் கொடூரத்தனங்களைச் சித்தரிப்பதோடு நின்றுவிடாமல் அவர்களைப் பற்றிய வரலாறு, சமூகவியல் பின்னணி போன்றவை அனிமேஷன் வடிவில் சுருக்கமாக விளக்கப்பட்டிருப்பது இயக்குநரின் தேடுதலையும் பொறுப்பையும் சுட்டிக் காட்டுகின்றன. மன்னர் காலக்கட்டத்தில் போர் வீரர்களாக இருந்தவர்கள், தங்கள் பெருமையை இழந்தவுடன் ஆதிக்கச்சாதியினரால் புறக்கணிக்கப்பட்டு, சுதந்திரத்திற்குப் பிறகான நாகரிக உலகாலும் நிராகரிக்கப்பட்டு வேட்டைச் சமூகமாக மாறுவதும் பிறகு அவற்றிலும் தடை ஏற்படும்போது கொள்ளைக்காரர்களாக உருமாறியிருப்பதான வரலாற்றுக் காரணங்கள் பொருத்தமான இடத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

மையநீரோட்டச் சமூகத்தினரால் அழுத்தப்படும் எளிய சமூகங்கள், பல்வேறு அவமானங்கள், நிராகரிப்பிற்குப் பிறகு குற்றங்களில் ஈடுபடும் பின்னணியைப் பதிவு செய்திருப்பது நன்று.

**

காவல் துறையில் அளிக்கப்படும் பயிற்சிகள், திரைப்படம் மூலமாக மட்டும் நாம் அறிந்திருக்கும் நடைமுறைகளின் போலித்தனம், ஒவ்வொரு கொள்ளைக் குழுவிற்குமான பிரத்யேகப் பாணிகளில் உள்ள வித்தியாசம் போன்ற நுட்பமான தகவல்கள் படம் முழுவதும் நிறைந்திருக்கின்றன.

ஆனால் இத்தனை உழைப்பைச் செலுத்தியிருக்கும் இயக்குநர், தமிழ் சினிமாவின் சில சம்பிரதாயங்களைக் கைவிட்டிருந்தால் படத்தின் தரம் இன்னமும் மேம்பட்டிருக்கும். நாயகனின் சாகசத்தை நிலைநாட்டும் காட்சிகள், பொருத்தமற்ற இடங்களில் இணைக்கப்பட்டிருக்கும் பாடல்கள் போன்றவற்றைத் தவிர்த்து மேலதிக நம்பகத்தன்மையையும் யதார்த்தத்தையும் கூட்டியிருக்கலாம். ராம்கோபால் வர்மா, அனுராக் காஷ்யப் போன்ற இயக்குநர்களின் தரத்தை எட்டியிருக்கக்கூடிய வாய்ப்பை இதுபோன்ற அபத்தமான காரணங்களால் தவறவிட்டிருக்கிறார் வினோத்.

காவல்துறை அதிகாரிகளுக்கு ஏற்படும் தனிப்பட்ட இழப்புகள், குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக அவர்கள் எடுத்துக் கொள்ளும் பல்வேறு சிரமங்கள், அதற்குப் பிறகும் மேலதிகாரிகள் தரும் அழுத்தங்கள், எதிர்கொள்ள வேண்டிய அவமானங்கள், மனித உரிமை ஆணையத்தின் விசாரணைகள், பதவி அரசியலினால் நேர்மையான அதிகாரிகள் அடையும் பின்னடைவுகள் போன்றவை இத்திரைப்படத்தில் வலுவாக
சித்தரிக்கப்பட்டுள்ளன.

‘கெட்டவர்களிடமிருந்து நல்லவர்களைக் காக்காமல் கெட்டவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்து கொண்டிருக்கிறோம்” என்று தீரன் பேசுவது, ‘உங்க ஊர்ல இருநூறு ரூபாய் கொடுத்தால் லாரி டிரைவர்களை விட்டு விடுவார்கள், உங்க போலீஸ்காரங்ககிட்ட துப்பாக்கியும் இருக்காது’ என்று விசாரணையின் போது வடஇந்திய கொள்ளையன்  தரும் வாக்குமூலம்.

இது போன்ற வசனங்களின் மூலம் காவல்துறையில் உள்ள நடைமுறை அவலங்களையும் திரைப்படம் சிறப்பாகப் பதிவு செய்கிறது.

ஊழலும் நேர்மையற்றதனமும் புரையோடிப் போயிருக்கும் அரசு நிறுவனங்களில் விதிவிலக்காக, மிக அரிதாக உள்ள நேர்மையான அதிகாரிகளின் மூலமாகவே அந்த அமைப்புகளின் மீதான நம்பிக்கை
பொதுச் சமூகத்திற்கு எஞ்சியிருக்கிறது. தம்முடைய அதிகாரத்தையும் பொறுப்பையும் சரியாக உணர்ந்திருக்கும் தீரன் போன்ற காவல்அதிகாரிகளினால்தான் சமூகம் தன்னைப் பாதுகாப்பாக உணர்கிறது.

அப்படியொரு அடையாளத்தைச் சரியாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் வினோத் பாராட்டப்பட வேண்டியவர். தீரன் போன்ற நேர்மையான அதிகாரிகள் காலத்தால் ஒதுக்கப்பட்டு நிராரிக்கப்படும் நடைமுறைக் கசப்பையும் இத்திரைப்படம் இறுதிக்காட்சியின் மூலம் பதிவு செய்திருக்கிறது. ஆனால் காவல்துறையின் பார்வையிலிருந்து மட்டும் அணுகாமல் எதிர்தரப்புக் கோணங்களையும் படத்தில் இணைத்திருந்தால் இது சமன்நிலையை எட்டியிருக்கும்.

நேர்மையான காவல்துறை அதிகாரிகளுக்கு ‘தீரன் – அதிகாரம் ஒன்று’ பெருமையையும் அங்கீகாரத்தையும் தந்திருக்கிறது.

]]>
Theeran Adhigaaram Ondru https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/18/w600X390/theeran_review.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2017/nov/18/theeran-adhigaaram-ondru-movie-review-2810456.html
2805927 சினிமா திரை விமரிசனம் நயன்தாராவின் ‘அறம்’ – சினிமா விமரிசனம் சுரேஷ் கண்ணன் Saturday, November 11, 2017 11:18 AM +0530  

சமூகப் பிரச்னைகளைப் பற்றி உரையாடும் திரைப்படங்களைப் பொதுவாக இரண்டு வகைகளில் பிரிக்கலாம். வியாபார நோக்கத்தோடு அது சார்ந்த அம்சங்களைப் பிரதானமாகக் கொண்டு சமூகச் சிக்கல்களைப் பாவனையாக ‘கத்தி(ப்)’ பேசும் திரைப்படங்கள் ஒருவகை. அவற்றை உண்மையான தீவிரத்துடனும் நேர்மையுடனும் அணுகும் திரைப்படங்கள் இன்னொருவகை.

இதில் ‘அறம்’ இரண்டாவது வகையில் சிறப்பாக உருவாகியிருக்கிறது. பிரசார நெடி இல்லாமல், சலிப்பூட்டாமல் பரபரப்பான திரைக்கதையுடன் இத்திரைப்படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநர் கோபி நயினாரின் சமூகவுணர்வை நிச்சயம் பாராட்டவேண்டும். பிரதான பாத்திரத்தில் நடித்த நயன்தாரா மற்றும் தயாரிப்பாளர்கள் தந்திருக்கும் ஆதரவும் பாராட்டத்தக்கது.

ஆழ்துளைக் கிணறுக்காகப் போடப்படும் குழியில் ஒரு கிராமத்துச் சிறுமி விழுந்து விடுகிறாள். இந்த விபத்துதான் படத்தின் மையம். இதையொட்டி நீர் அரசியல், அதிகார அரசியல், ஊழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இத்திரைப்படம் தீவிரமாக உரையாடுகிறது.

**

நேர்மையான மாவட்ட ஆட்சியரான மதிவதனி (நயன்தாரா) ஒரு சிக்கலைத் தீர்க்க சர்ச்சையான முடிவை எடுத்ததற்காகத் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுகிறார். இதுகுறித்த விசாரணையின்போது தன்னுடைய மேலதிகாரியிடம் மதிவதனி விளக்கம் அளிக்கும் காட்சியோடு படம் துவங்குகிறது. அந்த விளக்கத்தின் வழியாகச் சம்பந்தப்பட்ட பின்னணிக் காட்சிகள் விரிகின்றன.

இந்திய விண்வெளி ஆய்வு மையம் அமைந்திருக்கும் ஸ்ரீஹரிகோட்டாவின் பக்கத்தில் அமைந்திருக்கும் எல்லையோரத் தமிழ்நாட்டுக் கிராமம், காட்டூர். (ராக்கெட் விடும் இந்த இடத்தின் பின்னணி எதற்காகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறித்த அரசியல் படத்தில் பேசப்படுகிறது.)

தண்ணீர் பஞ்சம் காரணமாகப் போராட்டத்தில் ஈடுபடும் கிராமத்து மக்களுக்கு உதவ தானே களத்தில் இறங்குகிறார் மாவட்ட ஆட்சியர். அதன் ஊடே இன்னொரு சிக்கலைப் பற்றிய தகவல் அவருக்கு வருகிறது. ஆழ்துளைக் கிணற்றிற்காகப் போடப்பட்ட குழியில் ஒரு சிறுமி விழுந்த சம்பவம். இது தொடர்பாக கீழ்நிலை அதிகாரிகளுக்கு ஆணைகள் பிறப்பித்துக்கொண்டே சம்பவ இடத்திற்கு அவர் விரைகிறார்.

உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் சிறுமியின் உயிரைக் காப்பாற்றியாக வேண்டிய தவிப்பு ஒருபுறம், ஆவேசமடைந்திருக்கும் கிராம மக்களின் கோபம் இன்னொருபுறம், பெற்றோர்களின் பதற்றம், அழுகை. இதற்கு நடுவில் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என்று மேலிட அதிகாரங்கள் தரும் இடைஞ்சல்கள், அழுத்தங்கள் என்று அனைத்தையும் சமாளித்து மாவட்ட ஆட்சியர், சிறுமியைக் காப்பாற்றினாரா என்பதைப் பரபரப்பும் விறுவிறுப்புமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

‘அரசுக்கு எதிராக ஏன் செயல்படுகிறீர்கள்?” என்கிற மேலதிகாரியின் கேள்விக்கு ‘மக்கள்தான் அரசாங்கம் என்று நான் நம்புகிறேன்’ என்று அழுத்தம் திருத்தமான பதிலுடன் நயன்தாரா அறிமுகமாகும் இடத்திலேயே படம் களைகட்டிவிடுகிறது. உறுத்தாத நிறத்துடன் கூடிய பருத்திப் புடவையில் கனக்கச்சிதமான கம்பீரத்துடன் தோற்றமளிக்கிறார் நயன்தாரா.

சாமானிய மக்களின் ஆதாரமானப் பிரச்னைகளை அரசு இயந்திரமானது மாற்றாந்தாய் மனோபாவத்துடனும் அலட்சியத்துடனும் அணுகுவதைப் பற்றிய அரசியலை இந்தத் திரைப்படம் துல்லியமான வசனங்கள் மற்றும் காட்சிகளுடன் பதிவு செய்கிறது.

பல கோடி ரூபாய் செலவு செய்து மண்ணிலிருந்து விண்ணில் பாயும் ராக்கெட் வசதிகள் இருக்கும் இதே தேசத்தில், அதற்கு நேர்எதிராக மண்ணுக்குள் அமிழ்ந்திருக்கும் ஓர் ஏழைச்சிறுமியின் பிரச்னை தொடர்பான அடிப்படை வசதிகள் கூட இல்லாதிருக்கும் முரண் படத்தில் தொடர்ந்து சுட்டிக்காட்டப்படுகிறது. (ஆனால் ராக்கெட் தொழில்நுட்பத்தால் பல ஆதாரமான அறிவியல் உபயோகங்களும் இருக்கின்றன. இயக்குநர் இதைத் தொடர்ந்து எதிர்மறையாகச் சித்தரித்திருக்கத் தேவையில்லை.)

துவக்கக்காட்சிகளில் கிராமத்துச் சிறுமியின் குடும்பம் மிக இயல்பான காட்சிகளுடன் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஒப்பனையில்லாத எளிய முகங்களைத் திரையில் பார்க்கவே அத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது. நீர் தாகத்துடன் இருப்பவனிடம் ‘கூல்டிரிங்க்ஸ் சாப்பிடறீங்களா’ எனப்படும் உபசாரம், நூறு நாள் வேலைத் திட்டத்திற்குச் செல்லும் பெண்கள் பிளாஸ்டிக் உறையில் தேநீர் வாங்கித் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்ளும் காட்சி, மருத்துச் செலவிற்கு அஞ்சி மருந்துக் கடையில் வைத்தியம் தேடும் கிராமத்து அறியாமை, அதற்கு நேர்எதிராக பிறந்த நாள் கேக்கிற்குச் செலவு செய்யும் நாகரிக மோகம் என்று பல சமூக முரண்கள் உறுத்தாத இயல்புடன் காட்சிகளில் சித்தரிக்கப்படுகின்றன.

பலஅடிகள் ஆழமுள்ள குறுகிய குழியில் சிறுமி சிக்கிக் கொள்வதும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மீட்புக்குழு செயல்படுவதும்தான் இத்திரைப்படத்தின் மையம். ஆனால் இதன் ஊடாக அதிகார அரசியல் முதற்கொண்டு பல விஷயங்கள் பதிவு செய்யப்படுகின்றன. மீட்புக் காட்சிகள் மிகுந்த நம்பகத்தன்மையுடனும் பரபரப்புடனும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்தச் சிறுமி காப்பாற்றப்பட வேண்டுமே என்கிற பதற்றத்தைப் பார்வையாளனுக்கு வலிமையாகக் கடத்தும் வகையாகத் திறமையான சித்தரிப்புகள்.

மீட்பு முயற்சிகள் ஒவ்வொன்றாகத் தோல்வியுறும்போதும் மனஉறுதியுடனும் நம்பிக்கையுடனும் செயல்படுகிறார் மாவட்ட ஆட்சியர். சிறுமி மீட்கப்படாத கோபத்தில் கிராமத்து மக்கள் ஆவேசமாக எதிர்ப்பு தெரிவிக்கும்போது, காவல்துறை அவர்களை அடக்க முயல்கிறது. ஆனால், மக்களின் அறியாமையின் மீது ஆட்சியர் ஒருபோதும் கோபமோ வருத்தமோ கொள்வதில்லை. ‘மக்களுக்குப் புரிய வைப்பது நமது கடமை’ என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துகிறார். இதற்காக தானே களத்தில் இறங்கி மக்களிடம் நேரடியாக உரையாட முயல்கிறார். மக்களின் தேவைக்காகத்தான் அரசு என்கிற ஆதாரமான விஷயம் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

**

சமூகப் பிரச்னைகளைப் பற்றி அடிப்படையான அக்கறையுடன் உரையாடும் திரைப்படம் என்பதைத் தாண்டி ‘அறம்’ ஒரு பெண் மையத் திரைப்படம் என்பதும் கூடுதல் சிறப்பு. வெகுஜன நடிகை என்கிற கவர்ச்சியான பிம்பத்தைத் துறந்து, இந்தப் படைப்பின் மீது நம்பிக்கை வைத்து தம்மை ஒப்புக்கொடுத்த நயன்தாராவின் துணிச்சலை மனமாரப் பாராட்டலாம்.

பல திரைப்படங்களில் ரெளடியாக, அடியாளாக வந்திருக்கும் ராமச்சந்திரன் துரைராஜ் இதில் சிறுமியின் பாசமிகுத் தந்தையாக நடித்து நம்மை உருக வைத்துள்ளார். சிறுமியின் உயிர் தன் கண்ணெதிரேயே மெல்ல விலகிக் கொண்டிருப்பதைக் கண்டு பதற்றமுடன் மயக்கமடையும் தாயாக நடித்திருக்கும் சுனுலட்சுமியின் நடிப்பும் அபாரம். ‘காக்கா முட்டை’ திரைப்படத்தில் நடித்திருந்த சிறுவர்களான விக்னேஷ் மற்றும் ரமேஷின் இயல்பான நடிப்பும் சுவாரசியம் கூட்டுகிறது. கிட்டி, விநோதினி, வேல ராமமூர்த்தி, தொலைக்காட்சி நடிகர் பழனி பட்டாளம் உள்ளிட்ட பல நடிகர்கள் தங்களின் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

ஜிப்ரானின் பின்னணி இசையும் பாடல்களும் காட்சிகளின் பரபரப்பு, உருக்கம் போன்றவற்றிற்கு அழுத்தமான துணையாக நிற்கின்றன. இத்தகையதொரு திரைப்படத்தில் சண்டை வடிவமைப்பாளருக்கு என்ன வேலை இருக்க முடியும் என்று தோன்றலாம். மீட்புக்காட்சிகளின் நம்பகத்தன்மைக்கு பீட்டர் ஹெயின் அற்புதமாக உழைத்திருக்கிறார். சிறுமி குழிக்குள் இருக்கும் காட்சி, மீட்புக் காட்சிகள் உள்ளிட்டவற்றிற்கு ஓம் பிரகாஷின் அசாதாரணமான ஒளிப்பதிவு துணை நின்றிருக்கிறது.

சகாயம், ககன் தீப் சிங் பேடி போன்ற அரிதான, நேர்மையான மாவட்ட ஆட்சியர்களை மதிவதனியின் பாத்திரம் நினைவுபடுத்துகிறது. மக்களுக்குச் சேவையாற்றவேண்டும் என்கிற உண்மையான கனவுடன் வருபவர்கள், அதிகார அரசியல், ஊழல் அமைப்பு, சக ஊழியர்களின் எரிச்சல் போன்ற பல தடைச்சுவர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இது சார்ந்த கசப்புகள் படத்தில் நேர்மையாகப் பதிவாகியிருக்கின்றன. தன்னுடைய பதவியைத் துறந்துவிட்டு அதிகார அரசியலின் மூலம் மக்களுக்குச் சேவையாற்ற மதிவதனி முடிவு செய்யும் குறிப்போடு படம் நிறைகிறது. ஆனால் அந்தப் பயணம் மட்டும் அத்தனை எளிதாக இருக்குமா என்ன?

சமூகவுணர்வுடன் ஒரு நேர்மையான திரைப்படத்தைத் தர வேண்டும் என்கிற இயக்குநரின் ‘அறம்’ படம் முழுவதிலும் நேர்மையாகப் பதிவாகியிருக்கிறது. மக்களும் அதே நேர்மையுடன் இத்திரைப்படத்தை ஆதரிக்கவேண்டும். 

]]>
nayanthara, Aramm movie review https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/13/w600X390/Aramm-6.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2017/nov/11/aramm-movie-review-2805927.html
2756292 சினிமா திரை விமரிசனம் ராணா டகுபதியின் ‘நானே ராஜா, நானே மந்திரி’ திரைப்பட விமர்சனம்! சரோஜினி Wednesday, August 16, 2017 06:37 PM +0530  

பாகுபலிக்கு முன்பு ராணாவைத் தமிழ் ரசிகர்களுக்கு அத்தனை பரிச்சயமில்லை. ஆனால் இந்தப் படத்தின் ஓபனிங் சீனில் பிரேக் பிடிக்காத வண்டியில் ராணாவைக் கண்டதும் எழுந்த பலத்த விசில் சத்தத்தில் இப்போது தமிழிலும் கணிசமான அளவில் ரசிகர்கள் இருக்கிறார்களெனத் தெரிந்தது. 

இத்திரைப்படத்தில் ராணாவுக்கு (ஜோகேந்தர்) வட்டிக்கு விடும் தொழில். தன் பெயரில் மனைவியின் பெயரையும் இணைத்து ராதா ஜோகேந்தர் எனச் சொல்லும் அளவுக்கு மனைவியான ராதா மீது அளவில்லாத நேசம் கொண்டவர். திருமணமாகி மூன்று வருடங்களாகியும் குழந்தை பாக்கியம் இல்லாத இத்தம்பதிக்கு ஒரு வழியாக அந்த பாக்கியம் கிடைக்கும் போது உள்ளூர் நாட்டாமை மனைவியால் நேரக்கூடிய ஒரு அராஜகத்தின் மிச்சம் தான் இத்திரைப்படத்தின் முக்கால்வாசிக் கதை. மிச்சமிருக்கும் கால்வாசித் திரைப்படத்தில் ஜோகேந்தர், ராதாவோடு காதல் செய்கிறார்.

முதலில் தன் மனைவியின் ஆசைக்காக ஊர்த்தலைவராகத் தேர்தலில் போட்டியிடுகிறார் ஜோகேந்திரா. அரசியல் தான் தொட்டால் ஒட்டிக் கொள்ளும் மசிக்கரியாயிற்றே... அப்படியே ஊர்த்தலைவரில் இருந்து ஸ்டார்ட் ஆகும் பிரேக் பிடிக்காத வண்டி அப்புறம் அங்கே, இங்கே முட்டிக் கொண்டு நில்லாமல் நேஷனல் பெர்மிட் லாரி போல இலக்கை துல்லியமாகக் கண்டுபிடித்து தன் வழியில் குறுக்கிடும் அத்தனை பேருக்கும் கபால மோட்சம் அளித்து முதல்வர் பதவியை நோக்கி சடுதியில் நகர்கிறது. இடையில் தேவிகா ராணியாக காத்ரின் தெரஸா. டி.வி சேனல் அதிபரின் மகளாக வரும் காத்ரின், தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்தை அருமையாக ஈடு செய்திருக்கிறார். ஆனால் இந்த ‘மெட்ராஸ்’ கலைச்செல்வியை டோலிவுட் ஏன் ஊறுகாய் போல் பாவிக்க வேண்டும்? பொண்ணுக்கு ஹோம்லி ரோலும் ஷூட்டாகும் பாஸ். அடுத்த முறை ட்ரை பண்ணிப் பாருங்க.

கோயில் கொடிமரத்தில் முதலில் விளக்கேற்றும் உரிமை ஊர்த்தலைவரின் மனைவிக்குத் தான் உண்டு என்று ஆணவம் கொண்டு ஒரு பெண் கதாபாத்திரம், ஜோகேந்தரின் மனைவிக்கு ஈடு செய்ய முடியாத ஒரு கொடுமையைச் செய்து விடுகிறது. அந்தக் கொடுமைக்குப் பழி தீர்ப்பதற்காகத் தான் ஜோகேந்திரா அரசியலில் இறங்குகிறார். முதலில் ஊர்த்தலைவராகும் ஜோகேந்திரா, எம்எல்ஏ வின் தகாத ஆசை மற்றும் வற்புறுத்தலை காரணம் காட்டி அவரைக் கொன்று விட்டு, தான் எம்எல்ஏ ஆகிறார்.

அப்புறமும் வண்டியில் பிரேக் இல்லாததோடு வாழ்க்கையிலும் பிரேக் போட ஆளில்லாததால் எம்எல்ஏவிலிருந்து மினிஸ்டராக, அதிலும் ஹோம் மினிஸ்டர் ஆக ஆசைப்படுகிறார். ஹே... நேற்று மதியம் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தவர்களை எல்லாம் ஹோம் மினிஸ்டர் ஆக்க முடியாது ஜோகி வேண்டுமென்றால் கல்ச்சுரல் மினிஸ்டர் ஆக்குகிறோம் என கட்சித் தலைமை முடிவெடுக்க, ஒரு வழியாக ராதா ஜோகேந்தர் கல்ச்சுரல் மினிஸ்டர் ஆகிறார். 

ஒரு சாமானியன், தன் மனைவிக்கு நேர்ந்த அவலத்துக்குப் பழிவாங்குவதற்காக அரசியலில் இப்படி விஸ்வரூபமெடுத்தால்... அட அரசியல்வாதிகளை விடுங்கள் நம் மீடியாக்களால் சும்மா இருக்க முடியுமா? அந்த இடத்தில் தான் ஃபாரின் சிகரெட்டுடன் என்ட்ரி ஆகிறார் தேவிகா ராணியாக காத்ரின். மீடியாவின் உயர் மட்டத்துப் பெண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று முத்திரை குத்தப்படும் அளவுக்கு நிலைமை சென்று விட்டது கொஞ்சம் கோராமையாகத் தான் இருக்கிறது. கல்ச்சுரல் மினிஸ்டர் ஜோகேந்திரா எப்படி அந்த உயரத்துக்குச் சென்றார் என்று ஆராய வரும் தேவிகா ராணி... படு மட்டமான ரசனையாக தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ய வரும் ஆணான ஜோகேந்திராவின் மீது காதல் மீதூற கசிந்துருகி அந்தக் காதலின் பேராலேயே அவருக்கு எதிரியாகவும் ஆவதாகச் செல்கிறது கதை.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஜோகேந்திரா முதலமைச்சராக ஆசைப்படுகிறார். அதற்கு டி.வி சேனல் அதிபர் மகளான தேவிகா, சோஷியல் மீடியாவின் துணை கொண்டு உதவ முன் வருகிறார். மனைவியை நேசிக்கும் ஆண் பிரஸ்டீஜை வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க ரேஞ்சில் மனைவிக்காக முதல்வர் பதவி அடைய விரும்பும் ஜோகேந்திரா தன்னை மக்கள் முன் மார்க்கெட்டிங் செய்து கொள்ள தேவிகாவின் உறவை ஏற்றுக் கொள்கிறார்.

இந்த இடத்தில் இயக்குனரிடம் ஒரு கேள்வி கேட்டாக வேண்டும்...

‘டைரக்டர் சார்... அதெப்படி இப்படி எல்லாம் காட்சிகள் வைக்க முடிகிறது? அடடே... மெய் சிலிர்க்கச் செய்கிறது அந்தக் காட்சியமைப்பு! . தன்னை பலாத்காரம் செய்ய வரும் ஒரு ஆணை, பத்திரிக்கையாளராக உயர் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண்ணால் எப்படிக் காதலிக்க முடியும்? என்று புரியவில்லை. 

இப்போது ராதா என்ன செய்து கொண்டிருக்கிறார் என்கிறீர்களா?

அவர் வழக்கம் போல நமது அரசியல் தலைவர்களின் மனைவிகள் என்னவெல்லாம் செய்வது வழக்கமோ... அதையே அட்சரம் பிசகாமல் செய்து கொண்டிருப்பதாகக் காட்சிகள் செல்கின்றன.

ராதா அன்னதானம் செய்கிறார். கோயில் பிச்சைக்காரர்களுக்கு ரூபாய் நோட்டுக்களை பிச்சை போடுகிறார், தன்னை நாடி வரும் ஏழைகளுக்கும், தானே தேடிச் செல்லும் ஏழைகளுக்கும் வகை, தொகையில்லாமல் உதவுகிறார். ஒரு பக்கம் கணவர் ஜோகேந்திரா அரசியலைக் காரணம் காட்டி செய்து கொண்டிருக்கும் அராஜகங்களுக்கு எல்லாம் மறுபக்கம் மனைவியாக ராதா படம் முழுக்கப் பரிகாரம் தேடிக் கொண்டே இருக்கிறார். 

 • முடிவில் ராதாவின் பரிகாரம் வென்றதா?
 • ஜோகேந்திரா முதலமைச்சர் ஆனாரா?
 • தேவிகாவின் முறையற்ற காதல் கை கூடியதா? 
 • இந்த பொலிட்டிகல் ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படத்தை வைத்து இயக்குனரும், ஹீரோவும் மக்களாகிய நமக்கு சொல்ல விரும்பிய சேதி என்ன? 

என்பது போன்ற இத்யாதி... இத்யாதி கேள்விகளுக்கு எல்லாம் அப்பாவி ரசிக சிகாமணிகளே நீங்கள் வெள்ளித்திரையில் விடை தேடிக் கொள்ளுங்கள்.

காஸ்டியூம்ஸ்...

காஜல் அகர்வால் விதம் விதமான புடவைகளில் செம கியூட் ஹோம்லி லுக்! காத்ரின் கூட தனது ஹை புரொஃபைல் லுக்கில் அணிந்து வரும் ஆடைகள் அனைத்துமே நச் ரகம்!

ராணாவின் கேஷுவலான வேஷ்டி கட்டும் ஸ்டைல் பட்டையைக் கிளப்பினாலும் நடுவில் சில காட்சிகளில் சபாரி மாதிரியான சில உடைகளில் வருகிறார். அது வயதான தோற்றமளிக்கிறது. 

காஸ்டிங்...

அந்நியோன்யமான மனைவியாக ராதா கதாபாத்திரத்தில் காஜல் அகர்வாலிடம் அழகு கொஞ்சுகிறது. தேவிகா ராணியாக காத்ரினும் ஓக்கே.

சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் நவ்தீப், காமெடியன் பித்ரி சதி, வார்டனாக வரும் ரெட்டி, ஊர்த்தலைவரின் மனைவியாக வரும் பெண், என அவரவர் தங்களுக்குக் கொடுக்கப் பட்ட வேலையை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

வில்லன் அசுதோஷ் ராணா பயமுறுத்துவதற்குப் பதிலாக கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் மிக்ஸர் தின்று கொண்டிருப்பவர் போல அத்தனை மந்தமாக சிவனே என்று காரியமாற்றுவது அவரை காமெடி வில்லனாகக் காட்டி விட்டார்களோ இத்திரைப்படத்தில் என்றொரு யோசனையைக் கிளறுகிறார்.

ஒளிப்பதிவு...

வெங்கட் சி.திலீப்பின் கேமரா பாடல்காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளிலும் மாயஜாலம் செய்திருக்கிறது.

பாடல்கள்...

 • பாடல்களைப் பொறுத்தவரை சந்தமெல்லாம் நீயே, நீயே... சுவாசமெல்லாம் நீயே... நீயே! பாடல், படம் முடிந்து தியேட்டரை விட்டு வெளியே வந்த பின்னும் கூட இன்னும் காதோடு ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஷ்ரேயா கோஷலின் குரலில் ஐஸ்கிரீம் வழிந்தோடாத குறை! அத்தனை குளுமை அந்தப் பாடல்.
 • ஜோகேந்திரா... ஜோகேந்திரா நீ வாழ்க ஜோகேந்திரா, 
 • விஜய் ஜேசுதாஸின் குரலில் ராதம்மா, ராதம்மா ராவே ராதம்மா பாடல்கள் ராணாவுக்கான மாஸ் ரெஸ்பான்ஸை கூட்டக் கூடும். இந்தப் பாடலில் வரும் பெண் குரல் நடிகை திவ்யா ஸ்பந்தனாவுடையதாம். (குத்து ரம்யான்னு சொன்னா தான் தமிழ் ரசிகர்களுக்குப் புரியும்) செம வாய்ஸ் திவ்யா.
 • ஷ்ராவணியின் கனமான பேஸ் வாய்ஸில் சுமங்கலியாக நீ சென்று விட்டாயம்மா,பாடல் சற்றே மனதை அசைத்து கண் கலங்கச் செய்கிறது.

பாடல்களைப் பொறுத்தவரை எதுவுமே சோடையில்லை.

பாடல் காட்சிகளில் சப்பாத்திக்கு மாவு  பிசைவது, கண்ணைக் கட்டி அழைத்துச் சென்று நிற்க வைத்து நகைகள் அணிவிப்பது, ரொமான்ஸ் என்ற பெயரில் குளிக்கும் போது சோப் போட்டு விடுவது மாதிரியான காட்சிகள் எல்லாம் முன்பே சில திரைப்படங்களில் பார்த்த உணர்வைத் தருகின்றன. ரொமான்ஸ் காட்சிகளில் இயக்குனர்களுக்கு கொஞ்சம் கற்பனை வறட்சியாகி விட்டது போல! அதனால் தான் இப்படி எங்கிருந்தாவது உருவ வேண்டியதாகி விடுகிறது.

படத்தில் புதிதாகக் காணக் கிடைத்த ஒரே ஒரு விஷயம் குண்டடி பட்டுப் பிய்ந்து போன காதுக்குப் பதிலாக ராணா தங்கத்தில் செய்து மாட்டி இருக்கும் மேற்காது ஒன்று மட்டுமே! சத்தியமாக அது மட்டும் தான் இந்தப் படத்தில் புதுசு. மற்றதெல்லாம் புது மொந்தையில் ஊற்றிய பழங்கஞ்சி!

சண்டைக்காட்சிகள்...

படத்தில் பெரிதாக சண்டைக்காட்சிகள் என்று ஒன்றும் மனதில் பதியவில்லை. பாலத்தின் மீது குண்டு வெடித்து மனைவி காயங்களுடன் மூர்ச்சையாகிக் கிடக்க கீழே விழத் தயாராக ஊசலாடிக் கொண்டிருக்கும் காரிலிருந்து தன் மனைவியைக் காப்பாற்ற ஜோகேந்திரா முயற்சிக்கையில் வரும் சண்டைக்காட்சி ஓரளவுக்கு மனதில் நிற்கிறது. பாகுபலியில் காட்டெருமை, இதில் காரா?! என்ற உணர்வெழுந்தாலும் திரையில் காட்சி அருமையாகத் திட்டமிடப்பட்டிருந்தது தெரிந்தது.

கிளைமாக்ஸ்...

யூகிக்கக் கூடிய கிளைமாக்ஸ் தான் என்றாலும், இப்படி ஒரு திரைப்படத்துக்கு அதைத் தாண்டி வேறு எந்த விதமான கிளைமாக்ஸையுமே திட்டமிட முடியாது என்பதால் படம் சுபம்.

இத்திரைப்படத்தின் இயக்குனர் தமிழ், தெலுங்கில் வெற்றி நடை போட்ட சூப்பர் ஹிட் திரைப்படமான ‘ஜெயம்’ படத்தை இயக்கிய தேஜா. வழக்கமான தனது கொஞ்சம் காதல், கொஞ்சம் சென்டிமென்ட், கொஞ்சம் சண்டை, கொஞ்சம் காமெடி காக்டெயிலில் இம்முறையும் தெலுங்கைப் பொறுத்தவரை படத்துக்கு மாஸ் வெற்றியே! தமிழ் ரசிகர்கள் சில லாஜிக் ஓட்டைகளை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். படம் மலையாளத்திலும் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. சேட்டன்கள் இப்படத்திற்கு என்ன ரிசல்ட் தருவார்கள் எனப் பொறுத்திருந்து தான் காண வேண்டும். இந்தியிலும் கூட படம் டப் செய்யப்பட்டிருக்கிறதாம். இந்தியில் ராணாவுக்கு செல்வாக்கு உண்டு என்கின்றன பாலிவுட் பட்ஷிகள்.

படத்தின் ‘பஞ்ச்’ டயலாக்குகள்...

அது போக படத்தின் பஞ்ச் டயலாக்குகள் குறித்தும் பேசியாக வேண்டும். முழுப்படமுமே பஞ்ச் டயலாக்குகளை நம்பித்தான் எடுக்கப் பட்டிருக்கிறதோ! என்ற வகையில் மரண மாஸாக நெஞ்சில் இல்லை... இல்லை ஸ்ட்ரெயிட்டாக பின்மூளைக்குள் குத்தி ஆங்கர் போட்டு நிற்கின்றன சூப்பர்... டூப்பர் ‘பஞ்ச்’ கள்.

 • ‘கணக்குப் போட்டு அடித்தால் ஐந்தே வருடங்களில் நான் ஆவேன் சி. எம்.
 • பாம்புக்குப் புற்று வேண்டுமென்றால் எறும்பு எதற்கடா கஷ்டப்பட வேண்டும்? 
 • நான் எப்போது சாக வேண்டும் என்பதை நானே முடிவு செய்வது மட்டுமல்ல, நீ எப்போது சாக வேண்டுமென்பதையும் நானே முடிவு செய்வேன்.
 • ஆயிரம் பேரை ரிஸார்ட்டில் தங்க வைத்தால் நாளைக்குள் நானும் ஆவேன் சி.எம்’  

என்பது மாதிரியான ‘பஞ்ச்’கள்  எல்லாம் தமிழில் கேட்கையில் கொஞ்சம் சுவாரஸ்யமற்றுத் தோன்றினாலும் தெலுங்கில் கேட்கையில் மேலே சொன்ன எபெக்ட் இருந்தது நிஜம்!

கிளைமாக்ஸில் இயக்குனர் தேஜாவும், ராணாவும் உறுதிப்படுத்த விரும்புவது ஒரே ஒரு விஷயத்தைத் தான்... தங்களை ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த மக்களை மதிக்காத, மக்களுக்கு அநீதி இழைக்கத் தயங்காத அரசியல்வாதிகளை எல்லாம் மொத்தமாகக் குண்டு வைத்து கூண்டோடு அழித்துவிடுவதே நல்ல அரசியல் முகிழ்ப்பதற்கான ஒரே வழி என்கிறார்கள்.

ஐயோடா... இதெல்லாம் சாத்தியமா? அதைச் சொன்ன தைரியத்துக்காக இருவரையும் பாராட்டலாம். ஆந்திர அரசியல்வாதிகள் இதைக் கண்டுகொள்ளவில்லையா? அல்லது ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொண்டார்களா எனத் தெரியவில்லை. 

பாடல்கள் மற்றும் பஞ்ச் டயலாக்குகள், காரைக்குடி, நகரத்தார் தெருக்களையும் வீடுகளையும் லட்டு போல கேமிராவில் அள்ளித் தந்த ஒளிப்பதிவுக்காகவும், ராணா, காஜல், காத்ரினின் இயல்பான நடிப்புக்காகவும் ஒருமுறை பார்க்கலாம்

]]>
ராணா டகுபதி, RANA DAGUBATTI, tollywood, டோலிவுட், nene raju nene mantri movie review, நானே ராஜா நானே மந்திரி திரைப்பட விமர்சனம் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/16/w600X390/nene-raju-story_647_062317015234.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2017/aug/16/rana-dagubattis-nene-raju-nene-mantri-movie-review-2756292.html
2754660 சினிமா திரை விமரிசனம் இயக்குநர் ராமின் 'தரமணி': சினிமா விமரிசனம் சுரேஷ் கண்ணன் Sunday, August 13, 2017 09:32 AM +0530  

எச்சரிக்கை: மிகையாக இருந்தாலும் முதல் வரியிலேயே தெளிவுபடுத்தி விடுகிறேன். இந்தத் திரைப்படம் ‘முதிர்ச்சியான பார்வையாளர்களுக்கானது’. ஒருவேளை வழக்கமான தமிழ் சினிமாவை எதிர்பார்த்து செல்பவர்கள் கடுமையான அதிர்ச்சியை அடைவதற்கான சாத்தியம் அதிகம். ‘இது இயக்குநர் ராமின் திரைப்படம்’ என்கிற அறிதலுடன், முன்கூட்டிய மனநிலையுடன் செல்கிறவர்கள் கூட அந்தப் பட்டியலில் இடம் பெறுவதற்கான சாத்தியமுண்டு.

இந்தத் திரைப்படத்தின் உள்ளடக்கம், காட்சிகள், வசனங்கள் என்று எல்லாவற்றிலும் கடுமையான சமூக விமரிசனங்களும், அவல நகைச்சுவையும், மரபு மீறலும், கலாசார அதிர்ச்சியும், இயக்குநரின் குரலும் நிறைந்திருக்கின்றன. 

இதுவரை வெளிவந்த தமிழ் சினிமாக்களில் ‘The most matured cinema’ என்று இயக்குநர் ருத்ரைய்யா இயக்கிய ‘அவள் அப்படித்தான்’ திரைப்படத்தை முன்நிறுத்த விரும்புகிறேன். ஆனால் அந்தத் திரைப்படத்தை விடவும் பல நூறு அடிகள் தாண்டிச் சென்றிருக்கிறது, ராமின் ‘தரமணி’

நிற்க, உடனே ‘இது ஏதோ ஒலக சினிமா’ போல இருக்கு’ என்று ஒதுங்கிக் கொள்ளவும் தேவையில்லை. ராமின் திரைமொழி ‘பெஸ்டிவல் பாணியில்’ இருந்தாலும் அவர் பேசியிருக்கும் விஷயம் மிக அடிப்படையானது; எளிமையானது. எனவே அடிப்படை மனித உணர்வுள்ள எந்தவொரு சராசரி நபருக்கும் இந்தத் திரைப்படம் நிச்சயமாகப் புரியும். அதற்கான பொறுமையும் நுண்ணுணர்வும்தான் தேவை. 

சரி, விமரிசனத்துக்குள் செல்வோம். 

**

ஆண் x பெண் உறவு சார்ந்த சிக்கல் என்பது மேற்பரப்பில் எளிமையானதாகத் தோன்றினாலும் அதனுள் ஆயிரக்கணக்கான இழைகள் உள்ளுறையாக, ரகசியமாக பின்னிப் பிணைந்திருக்கின்றன. தனிநபர்களின் அகச்சிக்கல்கள்தான் குடும்ப வன்முறைகளுக்கு காரணமாக இருக்கின்றன. பெரும்பாலான சமூகக் குற்றங்களுக்கு குடும்ப வன்முறையே காரணமாக இருக்கிறது. இப்படி ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்திருக்கும் நம்முடைய வாழ்வியல் இயங்குமுறையின் சிக்கல்களை நேர்த்தியான திரைக்கதையின் மூலம் பதிவு செய்திருக்கிறார் ராம்.

ஆணுக்கும் பெண்ணுக்குமான சிக்கலின் வரலாறு பல நூற்றாண்டுகளைக் கடந்தது. ஆதாமின் முதல் ஆப்பிள் கதைக்கு முன்னால் இருந்தே இந்தச் சிக்கல் இருந்திருப்பதற்கான வாய்ப்பு உண்டு. 

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் தோன்றும் இனக்கவர்ச்சி, காதல், காமம் என்று அனைத்துக்கும் காரணம் இயற்கையின் தொடர் சுழற்சிதான். இதற்காகவே அத்தனை நாடகங்களும். ஓர் உயிரில் இருந்து இன்னொரு உயிர் உருவாவது. இயற்கையின் இந்தத் தொடர் நாடகம், ஏறத்தாழ எல்லா உயிரினங்களுக்குள்ளும் பல்லாயிரக்கணக்கான வருடங்களாகத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. 

காமம்தான் இதற்கான அடிப்படை உந்துவிசை என்றாலும் இந்த நாடகத்தின் பிரதிபலிப்பாக அதன் மேற்பரப்பில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே எவ்வாறான காட்சிகள் எல்லாம் நிகழ்ந்து விடுகின்றன?

அகங்கார மோதல்கள், பரஸ்பர ஈர்ப்புகள், அதற்கான வேடங்கள், காதல், அதனுள் மறைந்திருக்கும் காமம், அவை சார்ந்த பாசாங்குகள், நிறைவேறாத ஏக்கங்கள், பெருமூச்சுகள், அகம், புறம் சார்ந்து உருவாகும் வன்முறைகள், பாலியல் சீண்டல்கள், குற்றங்கள், குடும்ப வன்முறை, வன்மங்கள், கொலைகள், தற்கொலைகள், இறந்து போகும் மனங்கள், மரத்துப் போகும் உணர்வுகள் என்று பல்லாயிரக்கணக்கான உணர்ச்சிகளின் விளையாட்டுக்களம் இது. 

இந்தக் களத்தின் பின்னணியில்தான் தன் நாடகத்தை நிகழ்த்துகிறார் ராம். ‘ஒரு பையன், ஒரு பொண்ணு கிட்ட ‘ஐ லவ் யூ’ சொன்னா என்னவெல்லாம் நடக்கும்? என்கிற இயக்குநரின் குரலும், அதைத் தொடர்ந்து வரும் காட்சிகளும் ஒரு சிறிய உதாரணம். 

**

காதலில் தோற்றுப் போகும்  ஓர் இளைஞன். திருமண வாழ்க்கையில் தோற்றுப் போகும் ஒரு பெண். மழைநாள் ஒன்று தற்செயலாக அவர்கள் இருவரையும் சந்திக்க வைக்கிறது. எழுத்தாளர் ஆதவனின் சிறுகதையில் வரும் பாத்திரங்கள் போல அகங்கார மோதலில் அந்தக் காட்சி தொடங்குகிறது. ஒருவரையொருவர் மெல்லப் பிறாண்டிக் கொள்கிறார்கள். அதிலிருந்து ஒழுகும் குருதியை ருசிக்கிறார்கள். மிக முதிர்ச்சியான உரையாடல் அவர்களுக்குள் நிகழ்கிறது. 

பரஸ்பரம் தங்களைப் பற்றிய அறிமுகம் கிடைத்தவுடன் தாங்கள் இருவரும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் என்கிற எண்ணமும் பிரியமும் உருவாகிறது. 

காதலியால் பாதிக்கப்பட்ட இளைஞன், கணவனால் பாதிக்கப்பட்ட பெண். பாதிக்கப்பட்ட இருவர் இணைந்து அவர்களுக்குள் இனிமேலும் பாதிப்பு வராத ஒரு பயணத்தை உருவாக்க முடியுமா?. ஆம் என்று தோன்றலாம். இல்லை. ஆணுக்கும் பெண்ணுக்குமான சில ஆதாரமான குணாதிசயங்கள் அவர்களை அப்படி வாழ அனுமதிக்காது. 

அவர்களுக்குள் நிகழும் குரூர விளையாட்டை கருணையேயின்றி ரத்தமும் சதையுமாக நம் கண் முன் நிறுத்துகிறார் இயக்குநர் ராம். 

**

படத்தின் முதல் பிரேம் தொடங்கி கடைசி வரைக்கும் இயக்குநரின் கொடி பறக்கிறது. ஆம். ‘இது முழுக்க முழுக்க இயக்குநரின் கட்டுப்பாட்டில் உள்ள திரைப்படம்’ என்று தைரியமாகச் சொல்லலாம். முன்னணி நாயகர்களுக்கேற்ப பல சமரசங்களைச் செய்யும் பிழைப்புவாத இயக்குநர்களுக்கு மத்தியில் தாம் உருவாக்க விரும்பும் படைப்புக்காக எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் காத்திருக்க முனையும் ராமின் பிடிவாதமும் கலைஞனுக்கான திமிரும் ரசிக்க வைப்பவை. 

ஆட்சேபகரமான சில காட்சிகளை நீக்கினால் ‘யூ’ சான்றிதழ் பெற்று வரிவிலக்கு ஆதாயம் கிடைக்கக்கூடிய சூழலை கைவிட்டு ‘அந்தக் காட்சிகளை நீக்க முடியாது, அவைதான் இத்திரைப்படத்தின் அடித்தளம்’ என்கிற நோக்கில் பிடிவாதமாக ‘ஏ’ சான்றிதழ் பெற்ற நேர்மை பாராட்டத்தக்கது. 

ஆனால், இயக்குநரின் திரைப்படம் என்பதற்காக நாயகனின் உடல்மொழி முதற்கொண்டு படம்நெடுக ஒலித்துக் கொண்டேயிருக்கும் ‘வாய்ஸ்ஓவர்’ வரை இயக்குநரே பல இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது நியாயமா? (சரி, இந்த பஞ்சாயத்துக்குப் பின்னால் வருவோம்). 

இந்தியா – இலங்கை கிரிக்கெட் போட்டிக்கும், இராமேஸ்வரத்தில் உள்ள சில மீனவப் பெண்கள் மழை வருவதற்காகப் பிரார்த்தனை செய்வதற்கும் என்ன சம்பந்தம்? மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் உள்ள சம்பந்தம்தான். ஆம், எது புரிகிறதோ, அதை எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறது இயக்குநரின் பின்னணிக்குரல். 

இங்கு கிரிக்கெட் என்பது விளையாட்டு மட்டுமல்ல. அதுவொரு மதம். சர்வதேசப் பிரச்னைகளுடன் தொடர்புடையது. கேயாஸ் தியரி போல, மைதானத்தில் அடிக்கப்படும் ஒரு சிக்ஸர் எவருடைய உயிரையோ பறிக்கும் சக்தி வாய்ந்தது. ஏனென்பது படத்தைப் பார்த்தால் புரியும். 

ஆண், பெண்ணுக்கான உறவுச்சிக்கல்தான் இத்திரைப்படத்தின் மையம் என்றாலும் படம் நெடுக இம்மாதிரியான சமூக அரசியல் தொடர்பான பிரச்னைகள், ‘சுளீர்” கேள்விகள், அதிலுள்ள இருண்மை நகைச்சுவை என்று பார்வையாளர்களைத் தொடர்ந்து காலணியால் அடித்துக் கொண்டேயிருக்கிறார் இயக்குநர். 

பார்வையாளர்களுக்கு நிச்சயம் வலிக்கும். ஆனால் சந்தோஷமான வலி. சினிமா எனும் வலிமையான ஊடகத்தைப் போதை மருந்து போல பயன்படுத்தி அரசியல் சுரணையற்ற ஒரு சமூகத்தை வளர்த்துக்கொண்டிருக்கும் சினிமாக்காரர்களின் மத்தியில் இப்படிச் சமூகவுணர்வுடன் ஓர் உயிர்ப்புள்ள இயக்குநர் இருக்கிறார் என்பதே மகிழ்ச்சியாக இருக்கிறது. 

நாயகனுக்கும் நாயகிக்குமான பிரச்னைகளை விவரித்துக்கொண்டே செல்லும் இயக்குநர், ஓரிடத்தில் ‘Pause’ பட்டனை அழுத்தி விட்டு, ‘இத்தனை நேரம் இதை கவனித்துக் கொண்டிருந்தீர்களே, ஏரிகளை அழித்து உருவாகியிருக்கும் இந்தக் கட்டடங்களைப் பற்றி யோசித்தீர்களா?’ என்று ‘நச்’சென்று ஒரு கேள்வி கேட்கிறார். படம் முழுக்க இது போல் நிறைய கேள்விகள், கிண்டல்கள். மிக கூர்மையான வசனங்கள். 

**

படத்தின் தலைப்பான ‘தரமணி’ என்பது அற்புதமான குறியீடு. தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த பன்னாட்டு நிறுவனங்கள், பணியாளர்கள் அதிகமுள்ள பகுதி. உலகமயமாக்கலின் துல்லியமான அடையாளம். 

ஐ.டி துறை என்பது பிரத்யேகமான கலாசாரத்தைக் கொண்டது. எப்போது வேண்டுமானாலும் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளக்கூடிய பணிப் பாதுகாப்பின்மை சூழல், வழக்கத்துக்கு மாறான இரவு நேரப் பணி, முந்தைய தலைமுறையால் கனவு கூட காண முடியாத ஊதியம், அது தரும் செளகரியங்கள், இடைஞ்சல்கள், பாலியல் சீண்டல்களைச் சகித்துக்கொள்ளவேண்டிய அவலம் (பெண்களுக்கு), சமூகவுணர்வு அற்ற அரசியல் நீக்கம் செய்யப்பட்ட கும்பல் ஒருபுறம். அந்தக் கும்பலில் இருந்து கொண்டே தன்னால் இயன்ற சமூகப் பணிகளை செய்யும் உணர்வாளர்கள் என்று விநோதமான கலவை.

எளிய சமூகத்தின் பல்வேறு கனவுகளைக் கலைத்துக்கொண்டு அவர்களின் உழைப்பையும் குருதியையும் உயிரையும் உறிஞ்சிக் கொண்டுதான் நகரமயமாக்கல் எனும் ‘நரகல்மயமாக்கல்’ உருவாகிறது. ஆலயத்தை உருவாக்குவதற்காக பல்வேறு அடிமைகள் உயிரிழந்த அதே ஆதிக்காலத்துக் கதை நவீன உலகத்திலும் தொடர்கிறது. வறுமையிலிருந்து தப்பிக்க பெருநகரத்துக்குள் வந்து விழும் அந்நிய மாநிலத்தைச் சோந்த ஏழைப் பணியாளனின் சடலம், குருதி கொப்பளிக்க எவரும் கவனிப்பாரின்றி அநாதைப் பிணமாகச் சாலையோரத்தில் கிடக்கிறது. தொலைதூரத்தில் உள்ள பல்லடுக்குக் கட்டடம் பின்னணியில் மங்கலாகத் தெரிகிறது. இப்படி அர்த்தம் பொதிந்த பல காட்சிகள் படம் பூராவும் வந்து கொண்டேயிருக்கின்றன.  

ஆனால் இத்திரைப்படம் ஐ.டி. பணியாளர்களைப் பற்றியது அல்ல. அப்படியொரு விநோதமான கலாசாரத்தின் பின்னணியில் பணிபுரிபவள் அல்தியா (ஆண்ட்ரியா). ஆங்கிலோ இந்தியச் சமூகத்தைச் சார்ந்தவளாக இருப்பதாலும், கணவனைப் பிரிந்து வாழ்பவள் என்பதாலும் மிகக் குறிப்பாக அழகாக இருப்பதாலும் உடல் சார்ந்த தொடர்புக்கு எளிதில் கிடைப்பாள் என்று உயர் அதிகாரியால் எண்ணப்படுபவள். ஆனால் தன் மீது வீசப்படும் பாலியல் சீண்டல்களை சாதுர்யமாகவும் துணிச்சலாகவும் எதிர்கொள்ளத் தயங்காதவள் அவள். கணவன் தன்னிடம் மறைத்த பாலியல் அடையாளத்தை, அதன் சிக்கலை கருணையுடன் மன்னிக்கத் தெரிந்தவள். (தற்பால் சேர்க்கையை காட்சி வடிவத்திலும் கண்ணியமாகவும் கையாண்ட முதல் திரைப்படமாக ‘தரமணி’ இருக்கக்கூடும்). 

ஓர் ஆணினால் ஏமாற்றப்பட்டு, தாயால் வசைபாடப்பட்டு தன் மகனுடன் தனிமையில் அலையும் அல்தியாவுக்கு, நேர்மையான ஒரு இளைஞனைப் பார்த்ததும் சலனம் ஏற்படுகிறது. அவன் நல்லவனாக இருக்கக்கூடும் என்கிற எண்ணம் உருவாகிறது. ஒரு பெண்ணால் பாதிக்கப்பட்ட அவனுடைய துயரத்தைத் தன் காதலின் மூலம் துடைக்க முடியும் என நம்புகிறார். 

**

ஒரு பொண்ணு, ஒரு பையன் கிட்ட காதலில் விழுந்தால் என்னவாகும்?

நாயகன், நாயகி என்று இந்தத் திரைப்படத்தில் எவருமில்லை. என்றாலும் சம்பிரதாயத்துக்காகச் சொல்லவேண்டுமென்றால் வசந்த் ரவி, இந்த படைப்பின் நாயகன். ஒரே திரைப்படத்தோடு ஓய்ந்து போன ‘காதல் ஓவியம்’ கண்ணனை நினைவுப்படுத்துகிறார். ஆனால் உடல்மொழி, உச்சரிப்பு என்று எல்லாவற்றிலும் இயக்குநர் ராமே தெரிகிறார். இது ராமின் திரைப்படங்களில் உள்ள வழக்கமான குறை. ஒரு திரைப்படம் இயக்குநரின் கட்டுப்பாட்டில் இருக்கலாம், அதற்காகப் பாத்திரங்களும் இயக்குநரின் தோரணையை நகலெடுப்பது அவசியமா? முதல் படம் என்று தெரியாத அளவுக்கு வசந்த் ரவி அபாரமாக நடித்திருக்கிறார். 

தனக்குக் காதலை தந்த ஆண்ட்ரியாவிடம் வழக்கமான ஆணின் நிலவுடமை மனோபாவத்தோடு ‘அவன் கூட படுத்தியா..’ என்று கேட்ட குரூரத்தைப் பிற்பாதியில் வேறொரு இடத்தில் உணர்ந்து மனம் கலங்கும் காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார். 

மக்களிடம் அறிமுகமே இல்லாத நடிகரை உபயோகப்படுத்துவது இயக்குநரின் துணிச்சல் என்பது ஒருபுறம் இருந்தாலும் இந்தப் பாத்திரத்துக்கு முன்னணி நாயகர்கள் மட்டுமல்ல, இரண்டாவது, மூன்றாவது நிலையில் உள்ள நடிகர்கள் கூட நடிக்க ஒப்புக் கொள்ள மாட்டார்கள். பாத்திரத்தின் தன்மை அப்படி. அழகம்பெருமாள் தன் பாத்திரத்தைத் திறம்பட கையாண்டிருக்கிறார். இறுதிக்காட்சியில் நாயகனின் மீது கோபப்பட்டு விட்டு பின்பு அதே காரணத்துக்காக நன்றியும் சொல்வது மிக நுட்பமான காட்சி. 

படத்தில் வரும் சிறு சிறு பாத்திரங்களும் அபாரமாக நடித்திருக்கின்றன. கதாபாத்திரத் தேர்வில் இயக்குநர் எத்தனை கவனமாக இருந்திருக்கிறார் என்பதற்கான உதாரணம் ஒன்று சொல்லலாம். ஆண்ட்ரியாவின் கணவன் பாத்திரத்துக்குச் சுருள்முடி. அதேபோல் சுருள்முடியுள்ள பையனைத் தேடி நடிக்க வைத்திருக்கிறார்கள். குடும்ப வன்முறைக்குப் பலியாகும் இளம்தலைமுறையின் பிரதிநிதியாக அந்தச் சிறுவன் அற்புதமாக நடித்திருக்கிறான். 

**

இந்தத் திரைப்படத்தின் காட்சிகளை, வசனங்களைச் சிலாகித்துக் கொண்டே போனால் விமரிசனம் நூறு பக்கங்களுக்கு மேல் நீளும். எனவே பலவற்றைச் சொல்லாமல் விடுகிறேன். காட்சிகளின் பின்னணிகளில் எங்கெல்லாம் புறா. மழை, ரயில் போன்ற குறியீடுகள் வருகின்றன என்பதைக் கவனிப்பதும் புரிந்து கொள்ள முயல்வதும் பார்வையாளனுக்குச் சுவாரசியமான அனுபவம்.
 
படத்தின் தலைப்பும் காட்சிகளும் ரயில்நிலையத்தோடு தொடர்புடையவை என்பதால் அது சார்ந்த சத்தத்தோடு தொடங்குகிற யுவனின் பின்னணி இசையின் ரகளை படம் பூராவும் தொடர்கிறது. காட்சிகளில் உள்ள நையாண்டிதனத்தை இசையும் பிரதிபலிக்கிறது. ஆனால் பல இடங்களில் திணிக்கப்பட்ட உணர்வைத் தரும் வகையில் இசை ஒலித்துக் கொண்டேயிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். (இயக்குநர் End credits-ல் In the mood for love போன்ற திரைப்படங்களையெல்லாம் குறிப்பிட்டிருக்கிறாரே, யுவன். அதற்கு நியாயம் செய்ய வேண்டாமா).

இந்தத் திரைப்படத்துக்குப் பாடல்களே தேவையில்லை என்று தோன்றுகிறது. என்றாலும் நாயகன் மனம் திரும்பி அது சார்ந்த துயரத்தின் ஊடே நாகூருக்குப் பயணமாகும்போது ஒலிக்கிற ‘பாவங்களை சேர்த்துக் கொண்டு’ என்கிற பாடல் மனதை உருக்க வைக்கிறது. மக்கள் சமூகத்தின் பல்வேறு இயல்பான முகங்களும் காட்சிகளும் இதில் பொருத்தமாக இணைக்கப்பட்டுள்ளன. 

‘நாய்ல என்ன கெட்ட நாய், நல்ல நாய்... ஆண்கள் எல்லோரும் நாய்கள்தான். அப்பப்ப பிஸ்கெட் போட்டா போதும்’ என்பது போன்ற வசனங்கள் ஆண்கள் குறித்து எள்ளலான மதிப்பீடுகளை வைத்திருக்கிற பெண்களின் அகவுலகைச் சித்தரிக்கிறது. 

தன் உடல் பலத்தால் பெண்களை அடக்கி விட முடியும் என்கிற உயர்வுமனப்பான்மையுடன் ஆணுலகம் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நடக்கிறது. அவ்வாறல்ல, ஒரு பெண்ணின் மனத்துக்குள் பயணிப்பதும் அவளுடைய அன்பைப் பெறுவதும் அத்தனை எளிதானதல்ல என்பதைப் பல காட்சிகள் உணர்த்துகின்றன. ஆண்களின் போலியான அதிகாரத்துக்குப் பெண் எந்நாளும் பயப்படுவதில்லை. ‘உனக்குத் துப்பாக்கி சுடத் தெரியாது. அதனால நானே சுட்டுக்கறேன்’ என்று காவல்துறை அதிகாரியின் மனைவி சொல்வதில் உள்ள கோபமும் சீண்டலும் எத்தனை ஆண்களுக்குப் புரிந்திருக்கும்?. இந்தத் திரைப்படத்தின் பல காட்சிகளை ஆண்கள் புரிந்து கொள்வார்களா, ஜீரணிப்பார்களா என்று சந்தேகமாக இருக்கிறது. 

நிறைவேறாத காமம், அது சார்ந்த ஏக்கங்கள் நவீன நுட்ப வசதிகளோடு எப்படியெல்லாம் பரவுகின்றன என்கிற சமூகத்தின் அழுகல்தன்மை பல காட்சிகளில் வெளிப்படுகிறது. ‘நான் சாப்பிட்ட நரகலை இந்த ஊருக்கும் தர நினைக்கிறேன்’ என்று பெண்களைப் பழிவாங்க முயல்கிற நாயகன் இறுதியில் ஒரு பெண்ணிடம்தான் சரணடைகிறான். 

தான் திருடிய பணத்தை மனச்சாட்சியின் உறுத்தலுடன் அந்தக் குடும்பத்துக்கு இறுதியில் நாயகன் திருப்பித்தருவதையும் பணமதிப்பிழப்பு என்கிற அதிகார முடிவு எளிய மக்களை அல்லல்பட வைக்கும் குரூரத்தையும் அங்கதப்பாணியில் இணைத்து இயக்குநர் கிண்டலடித்திருப்பது அபாரம். 

‘வாய்ஸ்ஓவர்’ உத்தி என்பது முறையாகப் பயன்படுத்தினால் ரசிக்கத்தக்கதுதான்... ஆனால் இதுவே ஓவராக போனால் எப்படி? கலவியின்போது பக்கத்தில் நின்று ஒருவர் குறிப்புகள் கொடுத்துக் கொண்டிருந்தால் அது நன்றாகவா இருக்கும்?

தனது திரைக்கதையின் மையத்தோடு சமூகத்தின் பல்வேறு பிரச்னைகளையும் சிறுசிறு இழைகளாக நெய்வது ராமின் பலம். ஆனால் சமயங்களில் இதுவே பலவீனமாக மாறுகிறது. இது போன்ற குறுக்கீடுகளால் படம் எதைப் பற்றி பேசுகிறது என்பது குறித்து பார்வையாளன் குழம்பிப் போக வாய்ப்புண்டு. 

ஆனால் இந்தத் திரைப்படத்தில் ராமின் குறுக்கீடுகள் பல சமயங்களில் அபாரமாகவே இருக்கின்றன. அதற்கான விளக்கத்தை படத்தின் கடைசி வரியில் இயக்குநர் தந்திருப்பது சுவாரசியம். 

**

தரமணி – பெண்ணியத் திரைப்படமல்ல. இரு பாலினத்தவரின் பிரச்னைகளையும் இணைத்தே பேசுகிறது. அதிகப் பிரச்னைகளை எதிர்கொள்கிறவர்கள் பெண்கள் என்பதால் அவர்கள் தொடர்பான காட்சிகளின் கனம் அதிகமிருப்பது இயல்பே. 

ஒரு பெண்ணை உடல்பலத்தாலோ, அதிகாரத்தாலோ ஓர் ஆண் எப்போதும் வெல்ல முடியாது. பெண்களின் மனத்தில் தங்களைப் பற்றிய பிம்பம் என்னவாக இருக்கிறது என்பதை ஆண்கள் அறிய நேர்ந்தால் நிச்சயம் அதிர்ச்சி அடைவார்கள். பரஸ்பர அன்பின் மூலம் புரிதலின் மூலமுமே ஆண் – பெண் உலகம் அதிகச் சிக்கல்கள் இன்றி இயங்க முடியும் என்கிற போதனையை மிக நேர்த்தியான திரைக்கதையுடனும் காட்சிகளின் அழகியலுடன் விவரிக்கிறது தரமணி.

]]>
Director Ram, Taramani Movie Review https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/8/w600X390/taramani891xx.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2017/aug/13/taramani-movie-review-2754660.html
2754184 சினிமா திரை விமரிசனம் தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி' 2 - சினிமா விமரிசனம் சுரேஷ் கண்ணன் Saturday, August 12, 2017 12:52 PM +0530  

ஹாலிவுட் பாணி போல, ஒரு வெற்றிகரமான திரைப்படத்தின் அடுத்தப் பாகம் (sequel) தமிழில் உருவாவது மிக அரிது. அம்மாதிரியான வழக்கமும் கலாசாரமும் இங்குப் பெரிதும் இல்லை.. ‘சில காலம் கழித்தும் கூட பார்வையாளர்கள் முதல் பாகத்தை நினைவுவைத்துக்கொண்டு பார்ப்பார்களா’ என்று இயக்குநர்கள் தயங்குகிறார்களோ என்னவோ.

இரண்டாம் பாகமாக அல்லது அடுத்தடுத்தப் பாகங்களாக வெளிவந்த திரைப்படங்களே தமிழில் குறைவுதான். அவையும் பொதுவாக இங்கு வெற்றியடைவதில்லை. பாகுபலி, சென்னை 28, சிங்கம் போன்றவை மட்டுமே விதிவிலக்கு. தமிழின் ஒரே முந்தையப் பாகத் (prequel) திரைப்படமாகக் கருதப்படும் பில்லா – 2 கூட தோல்விதான். எந்திரன், விஸ்வரூபம் ஆகிய தொடர்ச்சிகளின் வெற்றியை இனிதான் பார்க்கவேண்டும்.

இது மட்டுமல்லாமல் சீக்குவல் வகைத் திரைப்படங்கள் இங்குப் பொருத்தமான காரணங்களோடு, அதன் சரியான தொடர்ச்சித் தன்மைகளோடு தீவிரமான போக்கில் உருவாக்கப்படுகிறதா என்பதைக் கவனிக்கவேண்டும். இந்த வகையில் பாகுபலி மட்டுமே முந்தைய பாகத்தோடு அதிகம் பிரிக்க முடியாத வகையிலான திரைக்கதையோடு உருவாகியிருந்தது.

மற்றதெல்லாம் முதல் பாகத்தின் தற்செயலான, பிரம்மாண்டமான வணிக வெற்றியைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்கிற பேராசையில் பிறகு உருவாக்கப்பட்ட தனித்தனித் துண்டுகள் மட்டுமே. தனியாகப் பார்த்தாலும் பார்வையாளர்களுக்குப் புரிய வேண்டும் என்கிற கவனத்தோடு எடுக்கப்பட்டவை. விஐபி 2-ம் அப்படியொரு தனிப்படமே. ஆனால் அப்படித் தெரியாத அளவுக்கு முந்தைய பாகத்தின் அடையாளத் தொடர்ச்சிகளைக் கவனத்துடன் பயன்படுத்தியிருக்கும் மெனக்கிடலுக்காக இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த்தைப் பாராட்டலாம்.

**

வேலையில்லா பட்டதாரி -2 ஐ  பார்ப்பதற்கு முன் முதல் பாகத்தைப் பற்றிச் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

ரகுவரன் கட்டடப் பொறியியல் பட்டதாரி. அதிகச் சம்பளத்துக்காக ஏதோவொரு பணியில் ஈடுபடுவதை விட தான் கற்ற துறையில் சாதிக்க வேண்டும் என்கிற கனவு உள்ளவன். ஆனால் அவனது நேர்மை ஒரு தடையாக இருக்கிறது. எனவே ‘தண்டச்சோறு’ என்று தகப்பனால் அடிக்கடித் திட்டப்படுகிறான். இடையில் ஒரு காதல். அசந்தர்ப்பமான தருணத்தில் அவனுடைய அன்புத்தாயின் மரணம் நிகழ்கிறது. தான்தான் அதற்குக் காரணம் என்கிற குற்றவுணர்வில் இருக்கிறான்.

அவனது தாயின் மரணத்தின் மூலமாக அவனுக்கொரு நல்ல காலம் பிறக்கிறது. அவனுடைய விருப்பப்படியே கட்டட பொறியியல் நிறுவனத்தில் பணிக்குச் சேர்கிறான். லாபமில்லாத நோக்கோடு ஏழைகளுக்கான வீடுகள் கட்டித்தரும் திட்டம் ஒன்றை ஆசையோடு ஏற்கிறான்.

ஆனால் வணிகத்தையே பிரதான நோக்கமாகக் கொண்ட ஒரு பலமான போட்டி நிறுவனம் குறுக்கே வருகிறது. அந்த நிறுவன உரிமையாளரின் மகன் எப்படியாவது இந்தத் திட்டத்தைக் கைப்பற்றி தந்தையிடம் நல்ல பெயர் வாங்க நினைக்கிறான். எனவே ரகுவரனுக்குப் பல வழிகளில் இடைஞ்சல் தருகிறான். அந்தச் சிக்கல்களை வென்று நாயகன் எப்படித் தன் லட்சியத்தை அடைகிறான் என்பதோடு முதல் பாகம் நிறைவடைகிறது.

பொறியியல் படித்த மாணவர்கள் எவ்வாறு சம்பந்தமில்லாத துறைகளில் வேலை செய்ய நேர்கிறது, பணியில்லாமல் வீட்டில் இருக்கும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் மனச்சிக்கல்கள் ஆகியவற்றை வெகுஜனத் திரைப்படத்துக்கான ஜனரஞ்சகமான காட்சிகளுடன் பயணிக்கும் அந்தத் திரைப்படம் கடைசிப்பகுதியில் நாயகத்தன்மையை நிலைநாட்டுவதோடு நிறைகிறது.

**

இனி, இரண்டாவது பாகம்.

தான் பணியாற்றும் நிறுவனத்தில் திறமையுள்ள கட்டடக் கலைஞனாக இருக்கிறான் ரகுவரன் (தனுஷ்). கட்டடத் துறையில் தென்னிந்தியாவிலேயே புகழ் பெற்ற நிறுவனம், வசுந்தரா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ். அதன் உரிமையாளர் வசுந்தரா (கஜோல்).  இளம் வயதிலேயே தந்தையை இழந்து பல போராட்டங்களுக்குப் பிறகு இந்த பிரம்மாண்ட வெற்றியை அடைந்தவர். கட்டடத் துறையில் சிறந்த சாதனை புரிந்தவர்களுக்கான விருது வழங்கப்படுகிறது. வசுந்தராவின் நிறுவனமே ஏறத்தாழ அனைத்து விருதுகளையும் வாங்குகிறது. துறையில் சிறந்து விளங்குபவர்கள், தன் நிறுவனத்தின் பணியாளர்களாக இருக்கவேண்டும் என்கிற பிடிவாதத்தை உடையவர் வசுந்தரா.

ஒரேயொரு விருது மட்டும் ராகவனுக்குச் செல்கிறது. ஆச்சரியமடையும் வசுந்தரா அவனைத் தன்னுடைய நிறுவனத்துக்கு வளைத்துப் போட முயல்கிறார். ஆனால் தன் நிறுவனத்தின் மீது விசுவாசமுள்ள ரகுவரன், வசுந்தராவின் ஆணவமான தோரணையை தன்மானத்தோடு எதிர்கொள்கிறான்.

இங்கு ஆரம்பமாகிறது ரகுவரனுக்கும் வசுந்தராவுக்குமான பகை. வசுந்தரா தொடர்ந்து தரும் பல்வேறுவிதமான தொல்லைகளை ராகவன் எப்படி வெல்கிறான் என்பது இதன் திரைக்கதை.

**

தனுஷைப் பற்றி பார்ப்பதற்கு முன் அதை விடவும் முக்கியமான கஜோலைப் பற்றி பார்த்து விடுவோம். அம்மணி எப்படி இளமையை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. அழகுசுந்தரம் (விவேக்) உள்ளிட்ட சிலர் இவரை வியப்புடன் ‘சைட்’ அடிப்பதில் ஆச்சரியமேயில்லை. ‘பாஸிகர்’ காலத்திலேயே உறைந்து விட்டாரோ என்கிற பிரமை.

ஒரு நாயகனுக்கு நிகரான அறிமுகக்காட்சி இவருக்குத் தரப்படுகிறது. ஏறத்தாழ தனுஷுக்கு ஈடான முக்கியத்துவம். அட்டகாசமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் என்ன பிரச்னையென்றால் இந்தப் பாத்திரத்துக்கு என தனித்தன்மை எதுவுமில்லை. படையப்பா நீலாம்பரி, மன்னன் விஜயசாந்தி போன்ற அதே மாதிரியான பாத்திர வடிவமைப்பு. செல்வாக்கான, பணத்திமிர் பிடித்த பெண். தான் நினைத்ததை அடைய விரும்பும் பிடிவாதம். ஆனால் படத்தின் கடைசிப்பகுதியில் இவருடைய கதாபாத்திரம் எதிர்திசைக்கு மாறும்போது இவர் தரும் முகபாவங்கள் அற்புதம். இத்திரைப்படத்தின் புத்துணர்ச்சியான அடையாளத்துக்குக் காரணம் கஜோலாக இருப்பார்.

தனுஷைப் பற்றி என்ன சொல்ல? அதேதான். கஜோலைப் போலவேதான் இவருடைய இளமையையும் வியக்க வேண்டியிருக்கிறது. எளிமையான பின்னணி சார்ந்த நாயகன் செய்ய வேண்டிய அத்தனை சாகசங்களையும் செய்கிறார். இவர் அடித்தால் பத்து பேர் வீழ்வார்கள் என்று நம்பும்படி காட்சிகளை உருவாக்கிய சண்டை வடிவமைப்பாளருக்குப் பாராட்டு. சில காட்சிகளில் ரஜினியை நகலெடுப்பது போன்ற பிரமை.

முதலாளிக்குப் பக்கத்தில் உதவியாளராக வரும் ஒரு சாதாரண பாத்திரம் தோன்றும்போது அரங்கமே அதிரும் என்றால் அது ஆச்சரியம்தானே?. ஆம். ‘பிக் பாஸ்’ புகழ் ரைஸா, கஜோலின் உதவியாளராக படம் முழுவதும் வருகிறார். 

முந்தைய பாகத்தின் ‘கடுகடு’வில் இருந்து வேறுபட்ட பாத்திர வடிவமைப்பு சமுத்திரக்கனிக்கு. சில காட்சிகளில் நெகிழ வைக்கிறார். விவேக் சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். தனுஷின் மனைவியாக அமலா பால். சிடுசிடு குடும்பத்தலைவியாக அந்த வீட்டையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் துறுதுறுப்பு கவர்கிறது. தனுஷைச் சந்தேகப்படும் காட்சிகளில் மிகையான நடிப்பு என்றாலும் ரசிக்க முடிகிறது. ஆனால் இது சம்பந்தப்பட்ட காட்சிகள் ‘பீம்சிங்’ திரைப்பட டிராமா மாதிரியே இருக்கிறது.


**
ஒரு வெகுஜன திரைப்பட இயக்குநராக, செளந்தர்யா திறம்பட தயாராகி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். முந்தைய பாகத்தின் வடிவமைப்பை அடித்தளமாகக் கொண்டு அதன் முக்கியமான அடையாளங்களை அழுத்தமாகப் பற்றிக் கொண்டு புது வடிவத்தைச் சிறப்பாகவே உருவாக்கியிருக்கிறார். வழக்கமான தமிழ் சினிமா காட்சிகள் என்றாலும் சலிப்பூட்டாமல் வேகமாக நகரும் திரைக்கதை.

தனுஷின் தம்பி முதற்கொண்டு முந்தைய பாகத்தின் பெரும்பாலான கதாபாத்திரங்களையும், தனுஷின் மோஃபா வண்டியையும் அப்படியே பயன்படுத்தியிருப்பது சிறப்பு. தனுஷ் பணிபுரியும் கட்டட நிறுவன உரிமையாளரின் மகள் பாத்திரத்துக்கான நடிகர் மட்டுமே மாறியிருக்கிறார்.

இந்தப் பாகத்துக்காகப் புது நாயகியை உள்ளே கொண்டு வந்து டூயட் பாடுவது போல் எல்லாம்  திரைக்கதை அமைக்காத இயக்குநரின் துணிச்சலைப் பாராட்டலாம்.

முந்தைய பாகத்தில் இறந்து போன சரண்யாவை இதன் திரைக்கதையில் கொண்டு வந்திருக்கும் புத்திசாலித்தனம் ரசிக்க வைக்கிறது.

முந்தைய பாகத்துக்காக அனிருத் உருவாக்கிய பின்னணி இசையே இந்தத்திரைப்படத்தின் பரபரப்புக்கு பெரும்பாலும் உதவுகிறது. இரண்டாவது பாகத்தின் இசையமைப்பாளரான ஷான் ரோல்டனால் இதைக் கடக்க முடியவில்லை. பாடல்கள் பெரிதும் கவரவில்லை. சமீர் தாஹிரின் ஒளிப்பதிவு காட்சிகளின் பிரம்மாண்டத்தை சரியாகக் கைப்பற்றியிருக்கிறது.

**

வெகுஜனத் திரைப்படம்தான் என்றாலும் சில காட்சிகளில் தர்க்கம் சரியாகக் கூடிவரவில்லை. வசுந்தராவுக்கும் ரகுவரனுக்கும் ஏற்படும் பகைமைதான் இந்தத் திரைப்படத்தின் மையம். ஆனால் அது அழுத்தமாக உருவாக்கப்படவில்லை. தன்னுடைய தொழிலில் எத்தனையோ எதிரிகளைப் பார்த்து வளர்ந்த வசுந்தரா, தனுஷின் பணி நியமன நிராகரிப்பை அத்தனை தீவிரமாகவா எடுத்துக்கொள்வார்?

தன்னை விடவும் சிறிய நிறுவனத்தின் ஆர்டர்களைக் கைப்பற்ற கோடிக்கணக்கான நிதியை வணிகர்கள் இழப்பார்கள் என்பதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம். சென்னையில் நிகழ்ந்த வெள்ளத்தில் வசுந்தராவின் அத்தனை பிரம்மாண்டக் கட்டடத்தில் தண்ணீர் புகுந்துவிட்டது, எவருமே இருக்க மாட்டார்கள் என்பதெல்லாம் நிச்சயம் பூச்சுற்றல். இப்படி லாஜிக் இல்லாமல் நிறைய காட்சிகள் நகர்கின்றன.

மிஸ்டர் பாரத், உழைப்பாளி, என்று பல ரஜினி படங்களின் திரைக்கதை வாசனை பலமாக அடிக்கிறது. (கதை – வசனம்: தனுஷ்).

படத்தின் இறுதிப்பகுதி சற்று நீளமாக அமைந்து சலிப்பை ஏற்படுத்தினாலும் கூடவே சுவாரசியமாகவும் இருக்கிறது. வெள்ளம் காரணமாக கட்டடத்தின் உள்ளே மாட்டிக் கொள்ளும் தனுஷூம் கஜோலும் ஒருவரையொருவர் பரஸ்பரம் புரிந்து கொள்ளும் காட்சிகள் சிறப்பு.

வழக்கமான தமிழ் சினிமாக்கள் போல அதிரடியான கிளைமாக்ஸ் சண்டையுடன் ‘சுபம்’ போடாமல் எதிர்நாயகியின் மனமாற்றத்துடன் படத்தை நேர்மறையாகவும் இயல்பாகவும் முடித்திருப்பது வித்தியாசம். இதற்காக இயக்குநரைப் பாராட்டத் தோன்றினாலும் ஏதோவொரு நிறைவின்மையுடன், திரைப்படம் சட்டென்று முடிந்து விட்டது போன்ற உணர்வும் ஏற்படுகிறது.

ஒரு வெகுஜனத் திரைப்படமாக விஐபி2 தேறுகிறது என்றாலும் முந்தைய பாகத்தில் இருந்த சுவாரசியம் காணாமல் போகிறது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த ஒப்பீட்டைத் தவிர்க்க முடியாது. சீக்குவல் வகைத் திரைப்படங்களுக்குப் பொதுவாக ஏற்படும் விபத்து இது.

]]>
Velaiilla Pattadhari 2,Velaiilla Pattadhari 2 Movie review,Velaiilla Pattadhari 2 Movie,வேலையில்லா பட்டதாரி 2 ,வேலையில்லா பட்டதாரி 2 சினிமா விமரிசனம்,வேலையில்லா பட்டதாரி 2 படம் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/12/w600X390/vip_kajol.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2017/aug/12/velaiilla-pattadhari-2-review-2754184.html
2742206 சினிமா திரை விமரிசனம் விஜய் சேதுபதி - மாதவன் நடித்துள்ள 'விக்ரம் வேதா': சினிமா விமரிசனம் சுரேஷ் கண்ணன் Saturday, July 22, 2017 11:05 AM +0530  

பிளாக் காமெடி எனப்படும் அவல நகைச்சுவைத் திரைப்படங்கள் தமிழில் உருவாவதற்கான முன்னோடிகள் என்று இயக்குநர் புஷ்கர் - காயத்ரி தம்பதியினரைச் சொல்ல முடியும். 'ஓரம் போ' மற்றும் 'வ' ஆகிய திரைப்படங்களின் மூலம் இதற்கான பாதையை அவர்கள் தமிழில் திறந்து வைத்தனர். ஏறத்தாழ ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களது மறுவருகை 'விக்ரம் வேதா'வின் மூலம் அதிரடியாகவும் சுவாரசியமாகவும் அமைந்துள்ளது. 'பூனை - எலி விளையாட்டு' என்கிற கருத்தாக்கத்தை மையமாகக் கொண்டிருந்தாலும் தங்களின் அபாரமான திரைக்கதையினால் இந்தத் திரைப்படத்தைச் சுவாரசியமான அனுபவமாக்கியுள்ளார்கள். ஒவ்வொரு சட்டகத்திலும் அவர்களின் கடுமையான உழைப்பும் புத்திசாலித்தனமும் பிரதிபலிக்கின்றன. சில பிசிறுகள் இருக்கிறதென்றாலும் தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க படைப்புகளில் ஒன்றாக 'விக்ரம் வேதா' ஆகியிருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

விக்கிரமாதித்தன் கதை என்கிற தொன்மையான கதையாடலை, ஆடு, புலி ஆட்டத்தின் விளையாட்டுப் பாணியில் கலந்து நவீனமாக வார்த்து எடுத்த இயக்குநர்களின் திறமையை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பார்வையாளர்களின் புத்திசாலித்தனங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அவர்களின் நுண்ணறிவையும் மதிப்பது போல் படத்தை உருவாக்கியுள்ளார்கள். 

**

விக்ரம் (மாதவன்) ஒரு நேர்மையான, திறமையான காவல் அதிகாரி. என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டும் கூட. வேதா (விஜய் சேதுபதி) என்கிற முக்கியமான ரெளடியைப் பிடிப்பதற்காக விக்ரமின் குழு பல ஆண்டுகளாக முயல்கிறது. இதற்கான ஒரு சாகச நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடும்போது வேதாவின் முக்கியமான சில அடியாள்கள் கொல்லப்படுகிறார்கள். யாரென்று தெரியாத ஓர் அப்பாவியின் சடலமும் இதில் கிடக்கிறது. போகிற போக்கில் காட்டப்படும் இதுதான் இந்தக்கதையின் வலுவான முடிச்சு.

எவர் கண்ணிலும் படாமல் திறமையுடன் மறைந்து வாழும் வேதா, தன் ஆள்களின் சாவுக்கு வந்து சென்றதாகத் தகவல் கிடைக்கிறது. தன் திறமைக்கு விடப்பட்ட சவாலாக இதை உணரும் விக்ரம், காவல்துறையின் படைபலத்துடன் வேதாவைக் கைது செய்ய ஆவேசமாக புறப்படுகிறார். ஆனால் ஓர் அதிர்ச்சி திருப்பமாக, வேதாவே காவல்துறையிடம் வந்து சரண் அடைகிறார். பல வருடங்களாக காவல்துறைக்குப் போக்குக் காட்டிக்கொண்டிருந்த வேதா, ஏன் தன்னிச்சையாக வந்து சரணடையவேண்டும்?

இந்தக் குழப்பமான கேள்வி பிரம்மாண்டமாக விக்ரமின் முன் நிற்கிறது. இதற்கான விடையைத் தேடி புறப்படுகிறார். இதற்குப் பின்னால் பல துணைக்கதைகளும் அதிரடியான திருப்பங்களும் ஒளிந்துள்ளன. ஒரு முழு வட்டம் போல புறப்பட்ட இடத்துக்கே விக்ரம் வந்து சேரும் அந்த உச்சக்காட்சி அற்புதமான கதைப்பின்னலைக் கொண்டிருக்கிறது.


***

நம்பிக்கையான துப்பு ஒன்றின் மூலம் வேதாவின் அடியாள்களை என்கவுண்ட்டரில் கொல்வதற்காகச் செயல்படும் முதல் காட்சிக் கோர்வையிலேயே மாதவன் நம்மை அபாரமாக ஈர்த்துவிடுகிறார். தன்னம்பிக்கை பொங்கி வழியும் அவருடைய உடல்மொழியும் அற்புதமான நடிப்பும் அசலான காவல்துறை அதிகாரியாக நிலைநிறுத்துகிறது. காதல் காட்சிகளிலும் இயல்பாக நடித்து 'அலைபாயுதே' தருணங்களை மீட்டிருக்கிறார். தன்னுடைய சக அதிகாரியின் மரணச் செய்தியை அவரது மனைவியிடம் கண்ணீர் வழியும் துயரத்துடன் வசனமில்லாமலே சொல்லியிருக்கும் காட்சி அபாரம்.

எலியைப் பிடிப்பதற்காகப் பொறிக்குள் வடை வைப்பார்கள். ஆனால் ஓர் எலியே கையில் வடையுடன் பொறியை நோக்கி வந்துகொண்டிருந்தால் எப்படியிருக்கும்? இப்படியொரு ரகளையான அறிமுகத்துடன் விஜய் சேதுபதியின் நுழைவு. வெறித்தனமான கூச்சலில் அதிர்கிறது அரங்கம்.

விஜய் சேதுபதி, வழக்கம்போல் தனது அநாயசமான நடிப்பினாலும் வசன உச்சரிப்புகளினாலும் கவர்கிறார். இந்தப் பாணி இன்னமும் சலிப்படைய வைக்கவில்லை என்றாலும் வருங்காலத் திரைப்படங்களில் இதுகுறித்து கவனமாக இருக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கிறது. மாதவன் என்கிற இன்னொரு வலுவான பிம்பம், இந்தத் திரைப்படத்தில் இருந்தாலும், திரைக்கதையின் மீது நம்பிக்கை வைத்து தன்னம்பிக்கையுடன் இந்தத் திரைப்படத்தில் அவர் பங்கேற்றிருப்பது வரவேற்புக்கு உரியது.

கன்னடத் திரைப்படமான 'யூ டர்னில்' தனது அற்புதமான நடிப்பின் மூலம் கவனத்தைக் கவர்ந்த 'ஷ்ரத்தா ஸ்ரீநாத்' இதிலும் ஈர்க்கிறார். கணவனுக்காகத் தனது வழக்கறிஞர் பணியை விட்டுத்தராத அவரது பிடிவாதம் ரசிக்க வைக்கிறது. தனித்தன்மையுடன் கூடிய பெண் பாத்திரத்தை வடிவமைத்த இயக்குநர்களுக்குப் பாராட்டு. கணவன் - மனைவி பணிபுரியும் துறைகள் ஒரே இடத்தில் வந்து முட்டும்போது அதன் மூலம் தம்பதியினருக்கு இடையே ஏற்படும் சிக்கல்களையும் முரண்களையும் நுட்பமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். (இத்திரைப்படத்தின் இயக்குநர்களும் தம்பதியினர்தான் என்பதை இங்கு நினைவுகூர்வது சுவாரசியமான பொருத்தம்).

***

இரு நாயகர்களின் திரைப்படம் என்றாலும் இருவருக்குமே ரகளையான சமவாய்ப்பு இருப்பது போன்ற திரைக்கதையை உருவாக்கியிருக்கும் இயக்குநர்கள் கவனிக்க வைக்கிறார்கள்.

'இவன் ஏன் தானாக வந்து சரணடைந்தான்? என்று ரகசியமாக மாதவன் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும் போது 'ஒரு கதை சொல்லட்டுமா சார்?' என்று விஜய்சேதுபதி அதற்கான பின்னணியை பூடகத்துடன் தொடங்குவது ரகளையான காட்சி. ஒவ்வொரு முறை கைதாகிற போதும் அவர் மாதவனைக் குழப்பிவிட்டுத் தப்பிப்பது சுவாரசியம்.

பழுதடைந்திருக்கும் மாதவனின் புல்லட் அதற்கான உதிரி பாகங்களோடு மெல்ல மெல்ல ஒன்று சேர்ந்து முழுமையாகும்போது, இந்தச் சம்பவத்துக்குப் பின் உள்ள பல மர்மங்களுக்கான உண்மைகளும் விடைகளும் முழுமையை நோக்கி நகர்வது திரைக்கதையின் வடிவமைப்பின் திறமைக்கு ஒரு நல்ல உதாரணம்.

கெளதம் மேனனின் வசனத்தை நினைவுப்படுத்தினாலும் 'கெட்டதுக்கும் நல்லதுக்கும் இடையில் ஒரு மெல்லிய கோடு இருக்கு. கோட்டுக்கு இந்தப்பக்கம் நான், அந்தப்பக்கம் நீ' என்று மாதவன் சொல்வது வெறும் வசனமாக இல்லாமல் காட்சிகளின் வழியாகவும் இடம் பெறுவது சுவாரசியம். உண்மை என்பது கருப்பு - வெள்ளையால் ஆனது அல்ல, அது பல பரிமாணங்களும் பக்கங்களும் உள்ள பிரமிடு வடிவம் போன்றது' என்கிற அடிப்படையை விஜய் சேதுபதி, மாதவனுக்கு உணர்த்தும் காட்சியமைப்புகள் அற்புதம்.

தாம் கடந்து சென்ற சம்பவங்களின் ஒவ்வொரு நுண்ணிய விஷயங்களை நினைவு கூர்வதின் மூலம் இந்த வழக்கின் சிக்கலான பின்னணிகளை ஒன்று சேர்த்து மாதவன் புரிந்து கொள்ள முயலும் காட்சிகளும் அதற்கான திட்டமிடலும் சிறப்பானவை.

'பூனைக்கும்தான் வால் இருக்கு, எலிக்கும்தான் வால் இருக்கு. ரெண்டும் ஒண்ணாயிடுமா?' என்பது போன்ற புத்திசாலித்தனமான வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. 'போலீஸ்காரனா இருந்து ஹீரோவாறது ரொம்ப ஈஸி சார். என்னை மாதிரி ஆளுங்க ஹீரோ ஆவறதுதான் ரொம்பக் கஷ்டம்' என்று விஜய் சேதுபதி சொல்வது போன்ற வசனங்கள் பார்வையாளர்களின் கைத்தட்டலைப் பெறுகின்றன. 'முட்டை உடைஞ்சு போச்சுன்னா அதுக்காக வருத்தப்படறதை விட உடனே ஆம்லேட் போட்டு சாப்பிடறதுதான் புத்திசாலித்தனம்' என்பது போன்ற குறும்பான வசனங்களும் ரசிக்க வைக்கின்றன.

உண்மை என்பது கருப்பு - வெள்ளையானதல்ல என்பதை போஸ்டர்கள் முதல் பல விஷயங்களில் கவனித்துச் செயல்படுத்தியிருக்கும் இயக்குநர்களின் திட்டமிடல் பாராட்ட வைக்கிறது.

***

மாதவன், விஜய் சேதுபதி ஆகியோரின் குழுக்களில் உள்ள ஒவ்வொரு சிறுபாத்திரங்களும் அதற்கான தனித்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. குறிப்பாக விஜய் சேதுபதியுடன் தொடக்கம் முதலே பயணிக்கும் அவனது சகோதரன் புள்ளி, அவனது தோழி சந்திரா, தலைவனாகும் கனவுடன் காத்திருக்கும் சங்கின் பிரதான அடியாள் ரவி என்று பல பாத்திரங்கள் சுவாரசியமான கலவையுடன் அமைந்துள்ளன. சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் வரலட்சுமி சரத்குமார், கதிர், பிரேம், ராஜ்குமார் (நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்) போன்றவர்களின் பங்களிப்பு சிறப்பாக அமைந்துள்ளது. இடது கையால் உணவு சாப்பிட்டுக் கொண்டே, வேதாவின் பிம்பத்தை 'ஆங்....' என்று வடசென்னையின் பிரத்யேமான பாணியில் வரலட்சுமி சிலாகிப்பது ரகளையான காட்சி. 'சேட்டாவாக' வரும் ஹரீஷ் பரேடி பிரத்யேகமாக கவனிக்க வைக்கிறார்.

கடப்பதே தெரியாமல் முதற்பாதி பரபரப்பாக முடியும் போது, அதற்கு ஈடுகொடுக்காமல் இரண்டாம் பகுதி பின்னணிக் கதைகளுடன் நகர்வது சற்று இழுவையாக உள்ளது.. என்றாலும் உச்சக்காட்சியில் அனைத்து புள்ளிகளையும் புத்திசாலித்தனமாக இணைத்திருப்பதின் மூலம் நிமர்ந்து அமர வைத்திருக்கிறார்கள். 'டசக்கு டசக்கு' என்கிற பாடல், வடசென்னைக் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் கலாட்டாவாக இருந்தாலும் தவறான இடத்தில் அமர்ந்து சலிப்பை ஏற்படுத்துகிறது. அப்பாவித்தனமாக அறிமுகமாகும் ஓர் இளம் காவல்அதிகாரி, பின்வரும் காட்சிகளில் திடுக்கிடும் வகையில் எதிர்பாராத விதமாக செயல்படுவார் என்பது வழக்கமான கிளிஷே என்பது இயக்குநர்களுக்குத் தெரியாதா?

தீயவர்களை அழித்த நிம்மதியுடன் குற்றவுணர்வின்றித் தூங்கும் மாதவன், மிகத் திறமையான காவல்அதிகாரியாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் வகையில், தன்னுடைய சக பணியாளர்களின் நேர்மையின்மையைக் கவனிக்காமலிருக்கும் அளவுக்காக கடிவாளம் அணிந்திருப்பார் போன்ற பல சந்தேகங்கள் சில காட்சிகளில் எழுகின்றன. போலவே விஜய் சேதுபதியும் தன்னுடைய சகாக்களின் துரோகங்களை யூகிக்காமல் இருப்பது.

ஒரு கார்ப்பரேட் நிறுவன அதிபருக்கு ஆஜராகும் தோரணையுடன் வேதாவின் சார்பில் வழக்கறிஞர்கள் வருகிறார்கள். அது சார்ந்த பின்னணியோ, நம்பகத்தன்மையோ காட்சிகளில் அமையவில்லை. 'அவரவர்களுக்கான சுதந்தரத்துடன் தத்தம் துறைகளின் பணிகளில் செயல்பட வேண்டும்' என்று கோரும் மாதவனின் மனைவி, காவல்துறை அதிகாரி என்கிற காரணத்துடன் தம்மை மாதவன் பின்தொடர்ந்ததற்காக ஏன் அத்தனை கோபப்படுகிறார் என்கிற முரணில் பாத்திரத்தின் வடிவமைப்பு சிதைந்து போகிறது. அத்தனை புத்திசாலித்தனமான அதிகாரியான மாதவன், ரெளடியான விஜய் சேதுபதி எழுப்பும் விநோதமான கேள்விகளால் குழம்பி நிற்பதும் வீழ்வதும் சற்று செயற்கை. வடசென்னை கலாச்சாரத்தை நன்றாகப் புரிந்து வைத்திருக்கும் இயக்குநர்களான புஷ்கர் - காயத்ரி, தமிழ் சினிமாவின் வழக்கப்படி அதைக் குற்றவாளிகளின் ஒட்டுமொத்தக் கூடாரமாகச் சித்தரிப்பது ஏமாற்றம் மட்டுமல்ல, எரிச்சலும் கூட.

என்றாலும் தங்களின் அற்புதமான கதையாடலின் மூலம் இந்தக் குறைகளையெல்லாம் மறந்து திரைப்படத்தை ரசிக்க வைத்திருப்பது இயக்குநர்களின் திறமைக்குச் சான்று. சிறப்பான திரைக்கதை அமைவதற்காகப் பல மாதங்களை இயக்குநர்கள் பொறுமையுடனும் கவனத்துடன் செலவழித்திருக்கிறார்கள் என்பது இளம் இயக்குநர்களுக்கான பாடம்.

சாமின் இசையில் பாடல்கள் புத்துணர்ச்சியுடன் அமைந்திருக்கின்றன. குறிப்பாக 'தனனதனனனா..' என்று அதிரடியாக வரும் கருப்பொருள் இசை படத்தின் முதுகெலும்புகளில் ஒன்று. பல காட்சிகளில் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. வித்தியாசமான, இயல்பான பின்னணி நிறங்களின் மூலம் ஒளிப்பதிவாளர் வினோத் கவனிக்க வைக்கிறார். தனது நேர்த்தியான எடிட்டிங்கின் மூலம் சுவாரசியமாக கதை சொல்லியிருக்கிறார் எடிட்டர் ரிச்சர்ட் கெவின்.

***

எது உண்மை, எது தர்மம் போன்ற பல தத்துவார்த்தமான கேள்விகளையும் விசாரணைகளையும் இத்திரைப்படம் முன்வைக்கிறது. குற்றத்தில் ஈடுபடுவர்களும் சரி, அதைத் தடுப்பதற்கான பொறுப்பில் உள்ளவர்களும் சரி, ஒரு நுண்ணிய கோட்டுக்கு இடையில் நிற்கிறார்கள். பின்னவர்கள் கோட்டைத் தாண்டி அநீதியின் பக்கத்தில் விழுவதற்கான வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் அதிகம் உள்ளன. எனில் இரு தரப்பும் சமம்தானே, என்ன வித்தியாசம் என்கிற ஆழமான முரணை இந்த திரைப்படம் கேள்வி கேட்கிறது.

ஒருவகையில் குற்றவாளிகளின் பின்னணிகளை விடவும், காவல்துறையின் மோசடிகளை, அதிலுள்ள அழுகல்களைப் பற்றி இத்திரைப்படம் பேசுகிறது. குற்றத்தைத் தடுப்பவர்களே, குற்றத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கும்போது குற்றங்கள் எப்படிக் குறையும்? எனில் குற்றவாளிகளின் உலகுக்கும் காவல்துறைக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன என்பன போன்ற சங்கடமான கேள்விகள் கிளம்புகின்றன.

தமிழ் சினிமாவின் சமீபத்திய வரவுகளில் அடிக்கோடிட்டுக் கவனிக்கப்பட வேண்டிய திரைப்படம் 'விக்ரம் வேதா'.

]]>
Vikram Vedha Review,Vikram Vedha Movie Review,Cinema News,விக்ரம் வேதா விமர்சனம்,விக்ரம் வேதா திரைப்பட விமர்சனம்,சினிமா செய்திகள் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/22/w600X390/vikram_vedha166.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2017/jul/22/vikram-vedha-review-2742206.html
2726534 சினிமா திரை விமரிசனம் ஜெயம் ரவியின் வனமகன்: சினிமா விமரிசனம் சுரேஷ் கண்ணன் Saturday, June 24, 2017 03:17 PM +0530  

வெகுஜன ரசனையின் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் இணக்கமாக, கல்லா மட்டும் பிரதானமான நோக்கத்துடன்  'தாம் எடுப்பது பொழுதுபோக்கு மசாலாத் திரைப்படம்' என்கிற வெளிப்படைத்தனத்துடன் திரைப்படங்களை உருவாக்கும் இயக்குநர்கள் ஒருபக்கம். எஸ்.பி.முத்துராமன், பேரரசு, கே.எஸ்.ரவிக்குமார் போன்றவர்களை உதாரணமாகச் சொல்லலாம்.

ஆனால் ஒரு சமூகப் பிரச்னையை உரையாடுவதான பாவனையுடன் அதை ஊறுகாயாக மட்டுமே பயன்படுத்தும் வணிக இயக்குநர்கள் இன்னொரு பக்கம். மணிரத்னம், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் போன்றவர்கள் உதாரணம். ஒருபுறம் வெளிநாட்டு குளிர்பான பிராண்டுக்கான விளம்பரத்தில் நடித்துவிட்டு, அதே நடிகர் இன்னொருபுறம் விவசாயிகளின் பிரச்னைகளை திரையில் தீவிரமாகப் பேசுவதாக பாவனை செய்யும் வணிக மாய்மாலங்களே இங்கு அதிகம்.

இயக்குநர் விஜய் இயக்கியிருக்கும் 'வனமகன்' இதில் இரண்டாம் வகையாகத் திகழ்கிறது. வனத்தின் பழங்குடிகளைக் காவல்துறையின் அராஜக வன்முறையுடன் அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு இயற்கை வளங்களைச் சுரண்டி கோடிக்கணக்கில் லாபம் பார்க்கும் கார்ப்பரேட் நிறுவனங்களைப் பற்றிப் பேசுவதாகப் பாவனை செய்யும் 'வனமகன்' பழங்குடிகளின் பிரச்னைகளின் மையத்தைப் பற்றி துளி கூட அக்கறை கொள்ளவில்லை. அதைத் தவிர்த்து தமிழ் சினிமாவின் வழக்கமான வணிக அபத்தங்களே இதில் பெரும்பாலும் நிறைந்திருக்கின்றன.

***

'வனமகன்' திரைப்படம் எதைப் பற்றியது?

ஒரு தீவின் பழங்குடி மக்கள் காவல்துறையால் மிருகங்களைப் போல பிடிபடுவதோடு படம் தொடங்குகிறது. மனச்சாட்சியுள்ள காவலர் ஒருவரின் மூலம் ஜெயம் ரவி மட்டும் தப்பிக்கிறார். கார்ப்பரேட் நிறுவன முதலாளியான நாயகி  (சாயிஷா), நண்பர்களுடன் அந்தத் தீவுக்கு உல்லாசப் பயணம் வருகிறார். அவருடைய வாகனத்தில் மோதி மயங்கிச் சரியும் ஜெயம் ரவியை, சட்டத்துக்குப் பயந்து எவரும் அறியாமல் சென்னைக்குக் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்து விட்டு ஓடி விடுகிறார். அவருடைய வீட்டுக்கே ஜெயம் ரவி வருவதான சூழல் அமைகிறது.

நவீன நாகரிகங்களின் சாயல் துளிகூட படாத பழங்குடி மனிதன், நாகரிகச் சூழலுக்குள் பொருந்த மிகவும் சிரமப்படுகிறான். முதலில் அவனுடைய முரட்டுத்தனத்தைக் கண்டு அஞ்சும் நாயகி, பிறகு அவனுடைய நல்லியல்புகளால் கவரப்படுகிறாள். தன்னுடைய உதவியாளனாக வைத்துக்கொள்கிறார்.

ஒருபக்கம், காணாமற்போன ஜெயம்ரவியை வனக்காவலர்கள் ஆவேசமாக தேடிக் கொண்டிருக்கிறார்கள். காவலர்களால் சாகடிக்கப்பட்ட பழங்குடி மனிதர்கள் தவிர இதர நபர்கள் தீவின் வேறொரு பக்கம் ஆதரவு இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். விபத்தின் காரணமாக ஜெயம் ரவிக்குத் தன்னைப் பற்றிய நினைவுகள் பெரிதும் வருவதில்லை.

இந்தச் சூழலில் ஜெயம் ரவி மறுபடியும் வனத்துக்குள் செல்லும் நிலைமை உருவாகிறது. நாயகியும் அவனுடன் செல்கிறார்.

ஜெயம் ரவிக்கும் சாயிஷாவுக்கும் வனத்துக்குள் என்ன ஆகிறது, அவர்களை பெரும்படையுடன் துரத்திச் செல்லும் வனக்காவலர்களிடமிருந்து தப்பித்தார்களா, இதரப் பழங்குடிகள், மற்றும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களின் நிலைமை என்ன, என்பதையெல்லாம் பரபரப்பாகச் சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

***

நூற்றாண்டுகளைக் கடந்தாலும் இன்னமும் நவீன உலகின் நஞ்சுகள் கலக்காத, நாகரிகத்தின் தடங்களே படாத மனிதர்களின் கதை என்கிற நாசரின் குரலுடன் படம் தொடங்கும்போது நமக்கு எதிர்பார்ப்பு  உண்டாகிறது. வனக்காவலர்களால் வலைவீசிப் பிடிக்கப்பட்டிருக்கும் மனிதர்களின் பரிதாபக் குரல்கள் ஒலிக்கின்றன. பழங்குடி மனிதர்களாக இருந்தாலும் அவர்கள் தமிழில் பேசும் நகைச்சுவையைத் தவிர்த்துவிட்டு அவர்களுக்கான பிரத்யேக மொழியில் உரையாடும்போது நமக்கு ஆவல் இன்னமும் அதிகமாகி 'அட பரவாயில்லையே' என்று நிமிர்ந்து உட்கார்கிறோம்.

ஆனால் சில நிமிடங்களிலேயே 'இது வழக்கமான தமிழ் சினிமாதான்' என்று அந்த ஆவலின் மீது ஒரு லாரி தண்ணீரை ஊற்றி அணைத்துவிடுகிறார் இயக்குநர். பழங்குடி மனிதன் நகரத்தின் சூழலில் படும் பாடுகளை வேடிக்கைப் பொருள் போல காட்டுகிறார். சமகால நாகரிகமே அப்படியொரு பழமையில் இருந்துதான் பரிணமித்து வந்தது என்பதை மறந்துவிட்ட தமிழ்ப் பார்வையாளர்கள், அந்தப் பழங்குடி மனிதனின் வேடிக்கைகளைக் கண்டு சிரித்து மகிழ்கிறார்கள். இவ்வாறான குரங்கு வித்தைகள் படம் பூராவும் நிறைந்திருக்கின்றன.

சிலபல சாகசங்களுக்குப் பிறகு பழங்குடி மனிதர்களின் நலன் கருதி நாயகியே வனத்தை விட்டு வெளியே வந்து காவலர்களிடம் தம்மை ஒப்படைத்துக் கொள்கிறார். தான் எந்த நிறுவனத்துக்கு முதலாளியாக இருக்கிறோம் என்பதுகூட தெரியாத புத்திசாலியான அவர், 'தன்னுடைய நிறுவனம்தான் வனநிலங்களைக் கைப்பற்றியிருக்கிறது' என்பதை இறுதியில் அறிந்தவுடன் பழங்குடி மனிதர்களின் காவலனாகவும் ஜெயம் ரவியின் காதலியாகவும் நிற்கிற நாடகத்தனத்தோடு படம் நிறைவடைகிறது.

***

கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசின் கூட்டுக்கொள்ளையோடு வனமக்களின் மீது நிகழ்த்தும் யுத்தம் பற்றி உரையாடும் திரைப்படம் என்கிற பாவனையை மட்டும் கருணையோடு மன்னித்துவிட்டு, 'இது தமிழ் சினிமா' என்கிற பிரக்ஞையோடு பார்த்தால் இத்திரைப்படத்தில் சில சுவாரசியங்கள் தட்டுப்படத்தான் செய்கின்றன.

நாயகன் ஜெயம் ரவிக்கு இந்தத் திரைப்படத்தில் வசனங்களே இல்லை. அதுவொரு குறையாக தெரியாதபடிக்கு முழுப்படத்தையும் சுவாரசியமாக நகர்த்த முயன்றிருக்கும் திரைக்கதைக்கு ஒரு பாராட்டை தெரிவித்துவிடலாம். போலவே பழங்குடி மனிதர்களை, சினிமாத்தனமாக தமிழ் பேச வைக்காமலிருந்த புதுமையையும் பாராட்டலாம்.

நாகரிகம் என்கிற பெயரில் இயற்கையை விட்டு நாம் எவ்வளவு தூரம் நகர்ந்துவந்துவிட்டோம் என்பதைப் பழங்குடி மனிதர்களோடு ஒப்பிட்டு நாமே உணரும் வகையில் பல காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. சினிமாத்தனம்தான் என்றாலும் இயக்குநரின் கைவண்ணம் வெளிப்படும் இடங்கள் ரசிக்க வைக்கின்றன. ஏஸியைக் கைவிட்டு விட்டு, இயற்கைக் காற்றை நாடும் நாயகனை, நாயகியும் பின்பற்றுவது சுவாரசியம்.

அதுவரை நாயகியின் கையைப்பிடித்து ஓடிக்கொண்டிருந்த நாயகன், வனப்பகுதிக்குள் நுழைந்தவுடன் தன்னுடைய பழைய வாசனையை உணர்ந்து நாயகியின் கையைப் பற்றிக்கொண்டு ஓடும் அந்த தருணம் நன்றாக இருந்தது. போலவே நாயகனின் நற்செயல்களை, அவனுடைய தோளைத் தடவிக் கொடுப்பதின் மூலம் பாராட்டுகிறாள் நாயகி. இறுதிக்காட்சியில் அவள் பழங்குடிகளுக்கு ஆதரவாக பேசும் போது, ஜெயம் ரவியின் தன்னுடைய கற்றலின் மூலம் அவளைத் தடவித் தரும் காட்சியும் 'அட' போடவைக்கிறது.

***

இதுபோன்ற சில அரிதான வசீகரங்களைத் தவிர படம் முழுவதும் செயற்கைத்தனம் நிறைந்துள்ளது. ஜெயம் ரவியால் காப்பாற்றப்பட்ட புலி, அவர் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்ளும்போது வந்து தப்பிக்க வைப்பதெல்லாம் சின்னப்பா தேவர் காலத்திலேயே முடிந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். பழங்குடி மனிதர்களை விலங்குகளைப் பழக்குவதுபோல்தான் கையாள வேண்டியிருக்கும் என்பதும் தொலைக்காட்சியில் வரும் புலியைக்கூட நிஜம் என்று நம்பி அவர்கள் வில்லெடுத்து அடிப்பார்கள் என்பதெல்லாம் பொதுப்புத்தி சார்ந்த வேடிக்கை மனோபாவம்தான்.

உணர்ச்சிகளை நன்றாக வெளிப்படுத்தி நடிக்கவேண்டிய காட்சி என்றாலும்கூட ஜெயம்ரவியின் முகபாவங்களும் நடிப்பும் பொதுவாக ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். இதில் பழங்குடி மனிதனாக அதிக உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல், இறுக்கமாக நடிக்க வேண்டியிருப்பதால் தன்னுடைய 'இயல்பான' நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே சொல்லலாம்.

நாயகி சயீஷா தமிழ் சினிமாவுக்குப் புதுவரவு. இந்தி நடிகர் திலீப்குமார் குடும்பத்தின் வாரிசு. அழகாக இருக்கிறார். நடிக்கவும் முயன்றிருக்கிறார் என்பது ஆறுதல். வனத்துக்குள் எத்தனை கிலோமீட்டர்கள் சுற்றினாலும் எப்படி ஒப்பனை கலையாமல் இருக்கிறார் என்கிற ரகசியம் மட்டும் புரியவில்லை.

ஹாரிஸ் ஜெயராஜின் ஐம்பதாவது திரைப்படமாம். அதிநவீனமான, சொந்த ரிக்கார்டிங் ஸ்டுடியோவில் இழைத்து இழைத்து உருவாக்கினாலும் பாடல்கள் அதே வழக்கமான பாணியில்தான் உருவாகியிருக்கின்றன. 'எம்மா.. ஏ அழகம்மா' பாடல் மட்டுமே கேட்கும்படியாக உள்ளது. எல்லாப் பாடல்களுமே திரைக்கதையின் அசந்தர்ப்பமான நேரத்தில் நுழைந்து எரிச்சல்படுத்துகின்றன. ஒளிப்பதிவாளர் திருவின் உழைப்பில் அந்தமான் தீவு, நாயகியின் நவீன வீடு, அலுவலகம் என்று எல்லாமே பணக்காரத்தனமாக தோன்றுகின்றன.

ஏறத்தாழ, கமல்ஹாசனின் 'குணா' திரைப்படத்தின் திரைக்கதையை மாற்றி மசாலா அதிகம் தூவி உருவாக்கப்பட்ட முயற்சியாக 'வனமகன்' தோற்றமளிக்கிறது. ஆனால் அதிலிருந்த கலைத்தன்மையோ மெனக்கெடலோ துளிகூட இல்லை. 'அபிராமி.. அபிராமி' என்று குணா அரற்ற, 'காவ்யா..காவ்யா..' என்று ஜெயம் ரவி குழறுவது மட்டுமே ஒற்றுமை.

அந்நிய திரைக்கதைகளைச் சாமர்த்தியமாக நகலெடுத்து உள்ளூர் வாசனையோடு தந்துவிடுபவர் என்கிற பொதுவான குற்றச்சாட்டு இயக்குநர் விஜய் மீது உண்டு. இந்த சினிமாவும் அப்படியே பல 'டார்ஜான்' வகைத் திரைப்படங்களின் மோசமான நகலாகத் தோற்றமளிக்கிறது. பழங்குடி மக்களின் பிரச்னையைப் பேசுவது என்பதெல்லாம் ஒரு பாவனையாகவே எஞ்சியிருக்கிறது. இயக்குநர் தம்முடைய வேடத்தைக் கலைத்துவிட்டு நேரடி மசாலாத் திரைப்படங்களாவே இனி இயக்கத் தொடங்கலாம். 'வனமகன்' போன்ற இரண்டும் கெட்டான் திரைப்படங்களாவது வெளிவராமல் இருக்கும்.

]]>
Vanamagan, Movie review https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/24/w600X390/vanamagan23.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2017/jun/24/vanamagan-movie-review-2726534.html
2726044 சினிமா திரை விமரிசனம் சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’: சினிமா விமரிசனம்! சுரேஷ் கண்ணன் Saturday, June 24, 2017 02:53 PM +0530  

சிம்பு அடிப்படையில் திறமையான நடிகர். ஒருவகையில் தண்ணீரைப் போன்றவர். பாத்திரத்துக்கேற்ப நீர் தன்னை மாற்றிக் கொள்ளும் அல்லவா, அதுபோல. ஆனால் சிம்புவின் பயணத்தில் பெரும்பாலும் சாக்கடை நீராக ஓடுகிறது என்பதுதான் பரிதாபம். அவர் நல்ல இயக்குநரிடம் தன்னை ஒப்படைத்துக்கொண்டால் 'விண்ணைத் தாண்டி வருவாயா' போன்ற அற்புதங்கள் அடிக்கடி நிகழக்கூடும். ஆனால் 'அ அ அ' போன்ற அபத்தங்களே அதிகம் நிகழ சிம்புவேதான் காரணம் என்று தோன்றுகிறது. கமல்ஹாசன் தன்னை கமல்ஹாசனாக நினைத்துக் கொள்வதில் கூட ஒருவகை நியாயமிருக்கிறது. ஆனால் சிம்பு தன்னை கமலாக ஒருவேளை நினைத்துக்கொண்டிருந்தால் அதைவிடவும் கொடுமை ஒன்று இருக்கவேமுடியாது.

எத்தனை முயன்றும் இந்தப் படத்தையும் அதன் தலைப்பையும் தொடர்புப்படுத்தி எதையும் யோசிக்கவோ கண்டுபிடிக்கவோ இயலவில்லை. விளங்காத மர்மமாக இருக்கிறது. தமிழின் மோசமான திரைக்கதைகளை வரிசைப்படுத்தினால் இந்த திரைப்படத்துக்கு முதல் வரிசையில் இடம் தரலாம். இதில் பாகம்-2 வேறு வரப்போகிற செய்தியை அறியும்போது, சிம்பு வேண்டுமானால் அசராதவராக, அடங்காதவராக இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டு ஜனங்கள் அத்தனை அன்பானவர்கள் இல்லை! 

**

அ அ அ திரைப்படத்தின் கதை என்ன?

கஸ்தூரி தன்னை கவர்ச்சியாக சித்தரித்துக்கொண்டு ஒரு கெட்டவனை மயக்கி சுட்டு வீழ்த்தும் மிகையுடன் தொடங்குகிறது திரைப்படம். அவர் துபாயில் காவல்துறை அதிகாரியாம். துபாயைக் கலக்கிய ஒரு டானை வலைவீசி தேடுகிறார்கள். அவனுடைய நண்பன் ஒருவனின் வாக்குமூலம் வழியாக பழைய கதை மதுரையில் இருந்து விரிகிறது. எண்பதுகளின் காலக்கட்டமாம்.

மதுரை மைக்கேல் என்பவனைச் சிறையிலிருந்து விடுவிக்க எல்லாக் கைதிகளும் இணைகிறார்கள். டி.ராஜேந்தரின் மினியேச்சர் மாதிரி இருக்கும் சிம்புவின் அறிமுகக் காட்சி. கைதிகள் மனித கோபுரம் அமைத்து நிற்க, பீடியை வலித்துக்கொண்டே அவர்களின் மீது ஏறி அநாயசமாகச் சிறையிலிருந்துத் தப்பிக்கிறார். மற்ற கைதிகள் எவருக்கும் தப்பிக்கும் நோக்கமில்லை. நியாயமான கைதிகள் போல.

எதற்காக தப்பிக்கிறார்? அதற்கு இன்னொரு ஃப்ளாஷ்பேக்.

மதுரை மைக்கேல், ஒரு ரவுடி. செல்வாக்குள்ள நபரிடம் அடியாளாக இருக்கிறார். வெட்டுவது, குத்துவது போன்ற பணிகளை நேர்மையாகச் செய்து முடிக்கிறார். ஸ்ரேயாவிடம் தன் காதலை வற்புறுத்திக் கொண்டேயிருக்கிறார். ஸ்ரேயாவின் தந்தையான ஒய்.ஜி.மகேந்திரன் உயிருக்காகப் போராடும் சமயத்தில், 'காதலை ஏற்றுக் கொண்டால் காப்பாற்றுகிறேன்' என்கிறார். ஒரு சிக்கலான நகைச்சுவை சந்தர்ப்பத்தில் தாலியும் கட்டி விடுகிறார். 'இந்த வாழ்க்கை உனக்கு வேண்டாம், நாம் துபாய்க்குச் சென்று பிழைக்கலாம்' என்று திடீர் மனைவி உபதேசம் தர கிளம்பும் சமயத்தில் செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்க இறுதியாக ஒரு 'சம்பவம்' செய்ய நேர்கிறது. அந்தச் சம்பவம் அசம்பாவிதமாக முடிய, சிறைக்குப் போகிறார்.

அங்கிருந்து தப்பிப்பதுதான் முதல் காட்சி. ஸ்ரேயாவின் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. அவரைக் கடத்திக் கைப்பற்றும் நோக்கத்துடன் சென்றவர், திடீரென்று மனம் மாறி 'எங்கிருந்தாலும் வாழ்க' என்று கண்கலங்கி விட்டு பாண்டிச்சேரிக்குச் செல்கிறார்.

சில வருடங்கள் கடக்கின்றன.

பிற்பாதியில் அஸ்வின் தாத்தா என்றொருவரை சென்னையில் காட்டுகிறார்கள். அவர்தான் முன்னாளில் மதுரை மைக்கேலாக அறியப்பட்டவர். வருஷங்கள் பல ஓடி விட்டதால் வேறு வழியில்லாமல் தாத்தாவாகி விட்டார். ஆனால் இளமையான தாத்தா. முதியோர் இல்லத்தை பராமரிக்கும் தமன்னாவைப் பார்த்து காதல் உருவாகிறது. 'பவர் பாண்டி'யாகி விடுகிறார்.

தமன்னா தன்னைக் காதலிப்பதாக இவர் நினைத்துக் கொண்டிருக்கும்போது இறுதிக் காட்சியில் தமன்னா தன் காதலரை அறிமுகப்படுத்துகிறார். அது இளமையான சிம்பு. அவர் பெயர் திக்கு சிவா. திக்கிப் பேசுவதால் அந்தப் பெயராம்.

'இதுவரைக்கும் நல்லவனா இருந்துட்டேன். இனிமே நான் கெட்டவன்' என்று சிம்பு தாத்தா இருமிக்கொண்டே ஆவேசப்பட்டு 'திக்கு் சிவாவைக் கடத்துவதோடு படம் நிறைவடைகிறது. அதாவது இதுதான் முதல் பாகமாம்.

மதுரை மைக்கேலுக்கும், சென்னை அஸ்வின் தாத்தாவுக்கும் இடைப்பட்ட காலத்தில் என்ன நிகழ்ந்தது, அவர் எப்படி துபாய்க்குச் சென்று அகில உலக காவல்துறையே வலைவீசித் தேடுமளவுக்குப் பெரிய டானாக மாறினார் என்பதையும், அஸ்வின் தாத்தாவுக்கும் திக்கு சிவாவுக்கும் தமன்னாவை முன்னிட்டு நிகழும் போட்டியையும் இரண்டாம் பாகத்தில் சொல்வார்களாக இருக்கும்.


***

இப்படியொரு மகா அசட்டுத்தனமான திரைக்கதையை சிம்பு எப்படி ஒப்புக் கொண்டார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. எந்தவொரு இடத்திலும் சுவாரசியம் என்பது மருந்துக்கும் இல்லை. இந்த சினிமாவை எவருமே spoof செய்யமுடியாது. ஏனென்றால் இது தன்னைத்தானே அப்படித்தான் செய்துகொள்கிறது. 'இது ஏதோ அறியாத்தனமான விளையாட்டு போல, இதோ சரியான திசைக்கு சென்று விடுவார்கள்' என்று ஒவ்வொரு காட்சியிலும் காத்திருந்தால் ஒட்டுமொத்த திரைப்படமுமே அந்த துயரப்பாதையில் பயணித்து நம்மை 'அம்போ'வென்று ஏமாற்றிச் செல்கிறது.

இதன் திரைக்கதைக்காகத்தான் சிம்பு, மினி டி.ஆர் போல தன்னை உருமாற்றிக் கொண்டார் என்றால் அதை விட பைத்தியக்காரத்தனம் வேறொன்றுமே இருக்கமுடியாது. தலை வழிய டோப்பா முடி வைத்துக்கொண்டால் அது எண்பதுகளின் காலக்கட்டம் என்று எவரோ தவறாகச் சொல்லிவிட்டார்கள் போல.

ஒய்.ஜி. மகேந்திரன் அடிக்கடி மின்விபத்தில் சிக்கிச் சரிந்து விடுகிறாராம். வாய் வழியே ஊதி அவரைக் காப்பாற்றுகிறார்களாம். இப்படியொரு அபத்தமான விஷயத்தை வைத்துக்கொண்டு ஆபாச விளையாட்டை தொடர்ச்சியாக விளையாடுகிறார்கள். படமெங்கும் நிறைய இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாச சைகைகள் போன்றவை எரிச்சலையும் முகச்சுளிப்பையும் உண்டாக்குகின்றன.

தனுஷ் இயக்கிய 'பவர் பாண்டி' பாத்திரத்தை கிண்டலடிக்கவேண்டும் என்று முடிவு செய்து விட்டார்களோ, என்னமோ.. அஸ்வின் தாத்தாவின் செய்கைகள் ஒவ்வொன்றுமே கொடுமையாகத் தோன்றுகிறது. 'இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே..'' என்று ஆரம்பித்து நிறைய அபத்தமான உபதேசங்கள், அபிப்ராயங்கள் வழிந்துகொண்டே இருக்கின்றன. சிம்புவின் தனிப்பட்ட ஆளுமை தொடர்பான வசனங்கள் தொடர்பேயில்லாமல் படத்துக்குள் வந்து கொண்டேயிருக்கின்றன.

கோவை சரளா வேறு தம் பங்குக்கு 'நடிகன்' திரைப்படத்து மனோரமா கெட்டப்பைப் போட்டுக்கொண்டு வந்து எரிச்சலை அதிகப்படுத்துகிறார். மொட்டை ராஜேந்திரன் மற்றும் விடிவி கணேஷின் நகைச்சுவைகள் வேறுவகையான கொடுமை ரகம். மதுரை மைக்கேலின் முதலாளி, கிராமத்து நாடகங்களில் 'சிவாஜி' வேடமிட்டு வருடக்கணக்காக நடித்தவர் போலிருக்கிறது. சிவாஜியின் கொடுமையான நகல் போல தோன்றுகிறார்.

மொட்டை ராஜேந்திரனும் கோவை சரளாவும் 'தள்ளிப் போகாதே' பாடலை வதம் செய்யும் காட்சிக்கு மட்டுமே வேறு வழியில்லாமல் அரங்கம் இறுக்கம் தளர்ந்து சற்றாவது சிரிக்கிறது.

பொதுவாக சிம்புவின் படங்கள் ஒருமாதிரியான அபத்தத்துடன் அமைந்தாலும் யுவன்சங்கர் ராஜா தன்னுடைய அபாரமான பாடல்களால் ஓரளவு தப்பிக்க வைப்பார். ஆனால் இந்த திரைப்படத்தில் அவரும் சிம்புவுடன் இணைந்து சோதித்த துயரத்தை எங்கே சொல்வது என்றே தெரியவில்லை.

பாகம் -2  வரப்போகிற செய்தியை இறுதியில் காண்பித்து ரசிகர்களை எரிச்சலின் உச்சிக்கே கொண்டு செல்கிறார்கள்.

அ அ அ - அபத்தம், அசிங்கம், அய்யோ!

]]>
review, simbu, Tamannaah, Anbanavan Asaradhavan Adangadhavan https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/23/w600X390/aaa453431.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2017/jun/23/anbanavan-asaradhavan-adangadhavan-review-simbu-tamannaah-2726044.html
2693218 சினிமா திரை விமரிசனம் ராஜமெளலியின் பாகுபலி 2: சினிமா விமரிசனம் சுரேஷ் கண்ணன் Saturday, April 29, 2017 10:41 AM +0530  

தெலுங்கு சினிமாவின் மீது எனக்கிருந்த ஒவ்வாமைகளையும் முன்தீர்மான வெறுப்புகளையும் உடைத்தெறிந்த முக்கியமான காரணங்களுள் ஒருவர் ராஜமெளலி. இந்திய சினிமாவின் மிகச் சிறந்த கதைசொல்லிகளுள் ஒருவர். ஈயைப் பிரதானமாக வைத்து ஒரு சாகசப் படத்தை உருவாக்கி அதை வெற்றியும் பெறவைத்ததைச் சிறந்த உதாரணமாகச் சொல்ல முடியும். இன்னமும் ஒரு படி அல்ல, பல படிகள் முன்னே நகர்ந்து பாகுபலி எனும் பிரம்மாண்டமான காவிய முயற்சியைத் தொடங்கி அதன் முதல்பகுதியை வெற்றிகரமாகக் கடந்தும்விட்டார்.

பொதுவாகத் தொடர்ச்சியான திரைப்படங்கள் திட்டமிடப்படும்போது முதல்பாகத்தின் தொடர்ச்சியாகவே இரண்டாம் பாகம் அமையும். இதனால் பார்வையாளர்களால் கதையை யூகிக்க முடியாததோடு எதிர்பார்ப்பும் அதிகமிருக்கும். இதை அப்படியே தலைகீழாக்கியிருக்கிறார் ராஜமெளலி. காலவரிசைப்படி முதல் பாகம், இரண்டாம் பாகத்தின் பெரும்பாலான காட்சிகளால் நிறைந்திருக்கிறது. எனவே கடந்தகாலக் காட்சிகளை பாகுபலி-2 படத்தில்தான் இயக்குநர் சொல்லப் போகிறார். இதிலுள்ள ஆபத்து என்னவெனில் முதல் பாகத்தின் போக்கை வைத்து  இரண்டாம் பாகத்தைப் பெரும்பாலான பார்வையாளர்களால் எளிதில் யூகிக்க முடியும். அதற்கான தடயங்கள் பாகம் -1ல் வெளிப்படையாகவே இருந்தன.

ஆனால் இந்தத் தடையை தனது திறமையான திரைக்கதையின் மூலமும் சுவாரசியமான கதையாடல் மூலமும் வியக்கவைக்கும் நுட்பங்களின் வழியான காட்சிகளின் மூலமும் வெற்றிகரமாகத் தாண்டியிருக்கிறார் ராஜமெளலி. மட்டுமல்லாமல் நம்முடைய சில யூகங்களைப் பொய்யாக்கி விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறார்.

பாகம் ஒன்றைப் போலவே இரண்டாம் பாகமும் ஒரு மகத்தான அனுபவம். இதுவரையிலான இந்தியத் திரை வரலாற்றிலேயே அதிகப் பொருட்செலவில் உருவாகியிருக்கும் திரைப்படம் எனும்போது அதன் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கும். சிறிய சறுக்கல் கூட பெரிய ஆபத்தைச் செய்துவிடும். இந்தச் சோதனையைச் சாதனையாக மாற்றியது ராஜமெளலியின் அசாதாரணமான திறமை எனச் சொல்லலாம். சினிமா எனும் ஊடகத்தின் மீதும் கதை சொல்வதின் மீதும் இப்படியொரு ஆவேசமான பிரியமும் அர்ப்பணிப்பும் இருந்தால்தான் பாகுபலி போன்ற பிரம்மாண்டமான காவிய முயற்சிகள் சாத்தியம்.

பணம் இருப்பவர் எவர் வேண்டுமானாலும் கோடிகளை இறைத்து பிரம்மாண்டமான படைப்புகளைப் பெருமைக்காக உருவாக்கமுடியும். ஆனால் ஆதாரமான சுவாரசியம் அதில் இருக்கவேண்டும். கடினமான உழைப்பும் கலையார்வமும் திட்டமிடலும் தேவை. இந்த நோக்கில் பெரும்பாலான பார்வையாளர்களின் ஆர்வத்தை உத்தரவாதமாகப் பூர்த்தி செய்கிறது - பாகுபலி 2.

***

முதல் பாகத்தில் என்ன நடந்ததென்று சுருக்கமாக பார்த்து விடுவோம்.

ராஜ மாதாவான சிவகாமி தனது உயிர்போகும் சூழலில் ஒரு குழந்தையைத் தலையில் ஏந்தியபடி நீரில் மூழ்குகிறார். குழந்தை காப்பாற்றப்பட்டு பழங்குடிகளால் வளர்க்கப்படுகிறது. தனது பின்னணியைப் பற்றி அறியாத அந்தச் சிறுவனுக்கு மலையின் உச்சியைப் பற்றிய ஆர்வம் உள்ளுணர்வில் எதிரொலித்துக் கொண்டேயிருக்கிறது. காதல் தரும் உத்வேகம் காரணமாக எப்படியோ சென்றுவிடுகிறான்.

மகிழ்மதி எனும் பேரரசை அடைகிறான். பல்லாளதேவாவின் அரசாங்கத்தை எதிர்த்து ரகசியமாக இயங்கும் புரட்சிக் கூட்டத்தையும் தனது காதலி அவந்திகாவையும் சந்திக்கிறான். தேவசேனா எனும் மகாராணி அரண்மனை வெளியில் பல வருடமாகச் சிறை வைக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறிகிறான். தன் காதலிக்கு வாக்கு தந்தபடி பல சாகசங்களுக்குப் பிறகு தேவசேனாவை மீட்டு வருகிறான்.

ராஜவிசுவாசியான அடிமை கட்டப்பாவின் மூலம் தனது தாய்தான் தேவசேனா என்பதும் தான் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவன் என்பதையும் அறிகிறான். அவனது தந்தையான அமரேந்திர பாகுபலி பற்றிய பின்னணியையும் பெருமையையும் அறிகிறான். வீரம் மற்றும் விவேகத்தின் மூலம் மகிழ்மதி பிரதேசத்தின் வருங்கால அரசனாக முடிசூடப்படவிருந்த அமரேந்திர பாகுபலி துரோகத்தால் கொல்லப்பட்ட அதிர்ச்சியான செய்தியோடும் அதன் ரகசியத்தோடும் முதற்பாகம் நிறைகிறது.

அமரேந்திர பாகுபலி மற்றும் தேவசேனாவின் பின்னணி என்ன? ராஜவிசுவாசியான அடிமை கட்டப்பா ஏன் தான் தூக்கி வளர்த்த பிள்ளையைக் கொல்லவேண்டும்? இந்த துரோகங்களுக்குப் பின்னணியில் உள்ளவர்கள் யார்? பல்லாளதேவாவின் பிடியில் சிக்கியிருக்கும் மகிழ்மதி தேசத்தை இளைய பாகுபலி எப்படி மீட்டான் என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கான பதிலை பாகம் இரண்டில் சுவாரசியமான திரைக்கதையின் மூலம் சொல்லி அசத்தியிருக்கிறார் ராஜமெளலி. பல உணர்ச்சிகரமான தருணங்களும் அனல் பறக்கும் காட்சிகளும் இந்தப் படைப்பின் காண்பனுவத்தை உன்னதமாக்கியிருக்கின்றன.

***

பாகம் இரண்டில் என்ன நடக்கிறது? தொடக்கப் பகுதியை மட்டும் பார்ப்போம்.

ராஜ மாதா சிவகாமியால் முடிவு செய்யப்பட்டபடி அமரேந்திர பாகுபலிக்கு முடிசூட்டப்பட திட்டமிடப்படுகிறது. அதற்கு முன் மக்களைப் பற்றி அறிவதற்காக திக்விஜயத்துக்கு பாகுபலியை அனுப்புகிறாள் சிவகாமி. கட்டப்பாவுடன் பயணம் மேற்கொள்கிறான் பாகுபலி. குந்தள தேசம் எனும் சிற்றரசுக்குச் செல்லும்போது அதன் இளவரசியான தேவசேனாவின் வீரத்தையும் அழகையும் கண்டு பிரமிக்கிறான். தன்னைப் பற்றிய விவரங்களை மறைத்துக்கொண்டு அங்கு உதவியாளனாகச் சேர்கிறான்.

ஒற்றர்களின் மூலம் இந்த விஷயங்கள் பல்லாளதேவாவுக்குச் செல்கின்றன. தேவசேனாவின் சித்திரத்தைப் பார்த்தவுடன் அவளுடைய அழகைக் கண்டு பல்லாளதேவா திகைத்துப் போகிறான். ஆட்சியைத்தான் பிடிக்க முடியவில்லை, இவளையாவது கைப்பற்றவேண்டும் என்கிற தீர்மானம் அவனுக்குள் பிறக்கிறது. இதன்மூலம் தனது போட்டியாளனான அமரேந்திர பாகுபலியின் காதலையும் பிரிக்க முடியும் என்கிற குரூரமும் தோன்றுகிறது. தனது தந்தையுடன் இணைந்து இதற்கான சூழ்ச்சியை ஆரம்பிக்கிறான்.

தேவசேனாவின் ஓவியத்தைத் தற்செயலாகப் பார்த்ததாகவும் அவளை மணம் புரிய ஆசைப்படுவதாகவும் தனது தாயாரான சிவகாமியிடம் தெரிவிக்கிறான். அதிகாரத்தை தர முடியாத அவனுக்கு இதையாவது தந்து சமன் செய்யலாமே என்கிற பாசத்துடன் சிவகாமியும் முன்பின் யோசிக்காமல் இதற்காக வாக்கு தந்துவிடுகிறாள். இங்குத் தொடங்குகிற சிக்கல்களும் சதிகளும் அமரேந்திர பாகுபலிக்குப் பதிலாக பல்லாளதேவா அரசனாக அமரும் வரை போகிறது.

மகிழ்மதியின் பேரரசுக்கு ஏன் அமரேந்திர பாகுபலியால் அரசனாக முடியவில்லை, விசுவாசியான கட்டப்பா, பாகுபலியைக் கொல்லுமளவுக்கான நெருக்கடி ஏன் ஏற்பட்டது, பல்லாளதேவாவின் அட்டகாசங்களுக்கான முடிவு என்ன போன்ற விவரங்கள் விறுவிறுப்பான காட்சிகளின் மூலம் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் இடைவேளைக்கு முன்பிருந்த சுவாரசியம் பிற்பகுதியில் சற்று தொய்வடைந்திருக்கிறது. போலவே உச்சக்காட்சியும் அத்தனை சுவாரசியத்தைத் தரவில்லை. மிக நீளமான சண்டைக்காட்சியால் அலுப்படைய வைக்கிறது.

***

பாகம் -2ன் பிரதானமான சிறப்புகளுள் அதன் அற்புதமான திரைக்கதையைத் தாண்டி இன்னொரு வசீகரமான, முக்கியமான காரணம் அனுஷ்கா. முதற்பாகத்திலேயே பாகுபலியின் பெரும்பாலான கதாபாத்திரங்களை நாம் கண்டு விட்டோம். காணாமல் இருந்தது தேவசேனா பற்றிய பகுதியையும் பின்னணியையும் மட்டுமே.

முதற்பாகத்தில் சிறைபிடிக்கப்பட்ட முதிய, அலங்கோலமான தோற்றத்தில் அனுஷ்கா சித்தரிக்கப்பட்டிருந்ததால் பெரும்பாலான ரசிகர்கள் ஏமாற்றமடைந்திருப்பார்கள். ஆனால் வட்டியும் முதலுமாக அதை ஈடு செய்யும் வகையில் பேரழகின் சித்திரமாக அவர் இரண்டாம் பாகத்தில் காட்டப்பட்டிருப்பது நிறைவைத் தருகிறது. ஆனால் வெறுமனே அழகுப் பதுமையாக அல்லாமல் ஓர் இளவரசிக்கான கம்பீரத்துடனும் சுயமரியாதையும் வீரமும் உள்ள பெண்ணாகவும் இந்தப் பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருப்பது அதிசிறப்பு.

தன்னுடைய காதலனே அழைத்தாலும் 'கைதியாக ஒரு நிமிடம் கூட இருக்கமாட்டேன்' என்று தன்மானத்துடன் மறுப்பது, ராஜமாதா சிவகாமியின் அநீதியைத் துணிச்சலாகத் தட்டிக் கேட்பது, தன்னிடம் தவறு செய்ய முயல்பவனின் விரல்களைத் துண்டிப்பது, இதற்கான விசாரணையை அரச சபையில் கம்பீரமாக எதிர்கொள்வது, தன் கணவனுக்கு இழைக்கப்படும் அவமானங்களைச் சகித்துக் கொள்ள முடியாமல் 'இந்த ராஜ்ஜியம் எனக்குப் பரிசாக வேண்டும். உங்களால் தர முடியுமா?'  என்று தன் கணவனுக்கு உத்வேகம் தருவது போன்ற காட்சிகள் அதிரடியான சுவாரசியத்துடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஒரு சாகச நாயகனுக்கு ஈடான அறிமுகக் காட்சியை அனுஷ்காவுக்கு இயக்குநர் வழங்கியிருப்பது ரசிக்கவைக்கிறது.

மன்னர் காலத்து வீரமிகு இளவரசிகள் இப்படித்தான் இருந்திருப்பார்களோ என்கிற வியப்பான யூகத்தை அனுஷ்காவின் திறமையான பங்களிப்பு ஏற்படுத்துகிறது. அனுஷ்காவின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல், பாகுபலி.

இதைப் போலவே அமரேந்திர பாகுபலியின் பாத்திரமும் உன்னதமான நாயகத்தனத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 'உனது தன்மானத்துக்கு இழுக்கு வராமல் கடைசி வரை பாதுகாப்பேன்' என்று தேவசேனாவுக்குத் தந்த வாக்கை எந்த நிலையிலும் தவறாமல் இருப்பது, அரச சபையில் தன் மனைவிக்கு இழைக்கப்படும் அநீதியைக் கம்பீரத்துடன் முறியடிப்பது, ராஜமாதாவின் எந்தவொரு ஆணையையும் தலையால் தாங்குவது, அதற்காக அதிகாரத்தையும் உயிரையும் இழப்பது, சாகும் நிலையிலும் தாய்ப்பாசம் காட்டுவது, பாகுபலியின் சாகசங்கள், அதற்கான அவன் திட்டமிடும் பிரமிக்க வைக்கும் போர் தந்திரங்கள் என்று ஓர் அசலான நாயகச் சித்திரம். பிரபாஸ் தன்னுடைய பங்களிப்பைச் சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறார். திடகாத்திரமான அவருடைய உடலின் வடிவமைப்பு அவர் நிகழ்த்தும் சாகசங்களுக்கான நம்பகத்தன்மையை அளிக்கிறது.

அனைத்துப் புள்ளிகளையும் இணைக்கும் ஓர் அற்புதமான அடிமைப் பாத்திரம் கட்டப்பா. இதற்கான நீதியை தன்னுடைய உழைப்பாலும் நடிப்புத்திறனாலும் வழங்கியிருக்கிறார் சத்யராஜ். சுற்றி நடக்கும் ராஜ அநீதிகளை தடுக்க முடியாமல் தன்னுடைய அடிமைநிலை கட்டுப்படுத்தும் தத்தளிப்புகளை திறமையுடன் வெளிப்படுத்தியிருக்கிறார். அமரேந்திர பாகுபலிக்கும் இவருக்குமான நட்பும் பாசமும் நெகிழ்ச்சியான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளன. பாகுபலியைக் கொல்லவேண்டிய நெருக்கடியும் சூழலும் காவிய துயரத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. பாகுபலிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக தன் அடிமைநிலையை மீறி பொங்கியெழுந்து ராஜமாதா சிவகாமியுடன் இவர் நிகழ்த்தும் ஆவேசமான உரையாடல் அபாரம்.

ராஜமாதா சிவகாமியாக ரம்யா கிருஷ்ணன். இந்தப் பாகத்திலும் தனது கம்பீரமான நடிப்பைத் தொடர்கிறார். பிள்ளைப் பாசத்தால் பல்லாளதேவாவுக்கு வாக்கு தருவதும் தன் உத்தரவை மீறும் பாகுபலியைத் தண்டிப்பதும் பிறகு பாசத்தில் தடுமாறுவதும் உண்மையை அறிந்தவுடன் தீரமான முடிவு எடுப்பதும் எனப் பல காட்சிகளில் அசத்தியிருக்கிறார். தன்னுடைய அதுவரையான தவறுகளை சமன் செய்யும் உத்தேசத்துடன் அப்போதுதான் பிறந்த குழந்தையான 'மகேந்திர பாகுபலியை' உயர்த்தி வருங்கால அரசனாக மக்களுக்கு அறிமுகப்படுத்தும் காட்சியில் நமக்கு மெய்சிலிர்ப்பது உண்மை.

மகாபாரத சகுனி போல சதிகளின், நயவஞ்சகங்களின் அடையாளமாகத் தன் நடிப்பைத் திறம்பட கையாண்டுள்ளார் நாசர். ஊனத்தின் காரணமாக தன்னால் மன்னனாக முடியாத கொதிப்பையும், அதை ஈடுசெய்யும் வகையில் தன் மகனை அதிகாரத்தில் அமர்த்த அவர் செய்யும் அநீதிகளும் என சிறப்பான எதிர்மறை பாத்திரம்.

பல்லாளதேவனாக ராணா டகுபதி. முதற்பாகத்தில் பிரபாஸுக்கு ஈடாக சித்தரிக்கப்பட்டிருந்த பாத்திரம் இதில் சற்று சோகையாகத்தான் உள்ளது. என்றாலும் உச்சக்காட்சியில் இளைய பாகுபலியுடன் மோதும் வீரம் பிரமிக்க வைக்கிறது. தன் விருப்பப்படி அதிகாரத்தில் அமர்ந்தாலும் மக்களின் ஆதரவு பாகுபலியின் பக்கமே இருக்கிறது என்பதைக் குமைச்சலுடன் உணரும் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். தமன்னாவுக்கு இதில் அதிகம் வேலையில்லை.


***

ஒரு குழந்தையின் விழிவிரிந்த கண்களுடனும் திறந்த மனதுடனும் தம்மை ஒப்புக் கொடுத்து விடுவதுதான் திறமையாக உருவாக்கப்பட்ட ஒரு ஃபேண்டஸி திரைப்படத்தைக் கச்சிதமாக ரசிப்பதற்கான அடிப்படை. இந்த நிலையில் அமர்ந்து பாகுபலியின் இரண்டாம் பாகத்தை உத்தரவாதமாக ரசிக்க முடியும். இதன் விறுவிறுப்பான திரைக்கதையும், ராஜ்மெளலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத் எழுதிய அபாரமான கதையும் இந்த அனுபவத்தை உறுதியாகத் தருகின்றன.

திரையரங்கில் பார்வையாளர்களின் ஆரவாரமான வரவேற்பை கண்டு வியந்தேன். ஒரு மொழி மாற்ற திரைப்படத்துடன் இத்தனை உணர்ச்சிகரமாக ஒன்றிவிட முடியுமா என்று திகைப்பாகவே இருந்தது. முதற்பாகத்தை தெளிவாக நினைவில் கொண்டு அதன் தொடர்புக் காட்சிகளை உடனே புரிந்து கொண்டு ஆரவாரம் செய்வதும், காட்சிகளின் உணர்ச்சிகரமான சூழலுடன் ஒன்றி ரசிப்பதும் என ஒரு வித்தியாசமான அனுபவம். தாம் உருவாக்கும் காட்சிகளின் உணர்ச்சிகளைப் பார்வையாளர்களுடன் அழுத்தமாகப் பிணைத்து விட்டால் அது உறுதியாக வெற்றி பெறும் என்பது மறுபடியும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பார்வையாளர்களை மகிழ்மதி பேரரசின் பிரஜைகளாக உணரச் செய்தது இயக்குநர் ராஜமெளலிக்குக் கிடைத்த வெற்றி. துணைப் பாத்திரங்கள் முதற்கொண்டு போர் சாகசங்கள் வரை ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாகத் திட்டமிட்டிருக்கிறார்.

ஹாலிவுட் திரைப்படங்களுக்குச் சவால்விடும்படியான வரைகலை நுட்பங்கள், செதுக்கி மேம்படுத்தப்பட்ட மாய்மாலங்கள், திறமையான ஒளிப்பதிவின் பிரமிப்பு, சாகசக் காட்சிகளின் வடிவமைப்பு, அவற்றைத் திறமையாகச் செயல்படுத்திய பாகுபலி குழுவின் அசாதாரணமான உழைப்பு, இதற்கும் மேலாக இத்தனை விஷயங்களையும் அருமையாக ஒருங்கிணைப்பு செய்த இயக்குநரின் திட்டமிடல் என்று பல விஷயங்கள் கவர்கின்றன.

காட்சிகளின் பிரம்மாண்டத்துக்கு ஏற்ப பின்னணி இசையும் மிரட்டலாக உருவாக்கப்பட்டுள்ளது. மொழி மாற்றம் செய்யப்பட்ட திரைப்படம் என்கிற வாசனை பாடல்களில் பலமாகவே அடிக்கிறது. ஆனால் வசனங்களில் இந்த விபத்து பெருமளவு தவிர்க்கப்பட்டிருப்பது ஆறுதல். (தமிழ் வசனம்: மதன் கார்க்கி) தன்னை எதிர்த்துப் பேசும் தேவசேனாவைக் கண்டு திகைக்கும் சிவகாமி, பிறகு தற்பெருமையுடன் 'இந்த மண்ணின் மருமகளுக்கு சற்று அகந்தை இருப்பதுதான் அழகு' எனக் கூறுவது சுவாரசியம். இதுபோல் பல கவித்துவமான வசனங்கள் ரசிக்கவைக்கின்றன.

சில குறைகளும் இல்லாமல் இல்லை. புத்திக்கூர்மையும் சாதுர்யமும் கொண்ட ராஜமாதா எவ்வாறு தன்னைச் சுற்றி நிகழும் சதிகளையும் பொய்களையும் எளிதில் நம்பி விடுகிறார் என்பது தர்க்கத்துக்கு ஏற்படையதாக இல்லை. போலவே தான் பாசத்துடன் வளர்த்த அமரேந்திர பாகுபலியைக் கொல்ல கட்டப்பா எப்படி ஒப்புக்கொள்கிறார், பின்பு ஏன் கொதிக்கிறார் என்பதில் நம்பகத்தன்மை வலுவாக இல்லை. இதுபோன்ற பிசிறுகளை இன்னமும் திறமையாகச் சீர்செய்திருக்கலாம். படத்தின் முற்பகுதியில் இருந்த விறுவிறுப்பும் சுவாரசியமும் பிற்பகுதியில் தொய்வடைந்திருக்கிறது.

பாகுபலி 1-ல் இருந்த உச்சக்காட்சி சிறப்பானது. அதில் வரும் போர்க்களக்காட்சி அதற்குப் பெருமை சேர்த்த விஷயம். அப்படியொரு விறுவிறுப்பான உச்சக்காட்சி இதிலும் வரும் என ஆவலாக அமர்ந்திருக்கும்போது அதை ஈடுசெய்வது போல் காட்சிகள் இருந்தாலும் சற்று ஏமாற்றமே. அதேசமயம், குந்தள தேசத்தைத் தாக்க வரும் வீரர்களை, அமரேந்திர பாகுபலி தேவசேனாவுடன் இணைந்து எதிர்கொள்ளும் காட்சியும் ஆயிரக்கணக்கான வீரர்களைக் கட்டுப்படுத்துவதற்காக மாடுகளை வைத்து அமைக்கும் போர் தந்திரமும் சுவாரசியமானது.

மொத்தத்தில் ஒரு மகத்தான காவிய அனுபவத்தை தருகிறது பாகுபலி -2. இதன் மூன்றாம் பாகமும் இருந்திருக்கக்கூடாதா என்கிற ஏக்கத்தை வரழைக்கிறது. கதை சொல்லும் முறையிலும் சரி, நுட்பங்களைப் பயன்படுத்தும் பிரம்மாண்டத்திலும் சரி, இந்திய வெகுஜன சினிமாவின் பாதையில் தனது அசாதாரண உழைப்பால் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது பாகுபலி குழு.

ராஜமெளலி எனும் திறமையான கதைசொல்லியின் பயணம் மென்மேலும் தொடரட்டும்.

]]>
Baahubali 2,Baahubali 2 Movie,Baahubali 2 Review,பாகுபலி 2 திரைப்படம்,பாகுபலி 2 திரை விமர்சனம்,பாகுபலி 2 https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/29/w600X390/baahubali2-1111xx_main1.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2017/apr/29/baahubali-2-the-conclusion-review-2693218.html
2684954 சினிமா திரை விமரிசனம் தனுஷ் இயக்கியுள்ள 'ப. பாண்டி': சினிமா விமரிசனம் சுரேஷ் கண்ணன் Saturday, April 15, 2017 03:18 PM +0530  

'இந்த மூஞ்சில்லாம் நடிக்க வந்துடுச்சு' என்று தொடக்கக் காலத்தில் கிண்டலடிக்கப்பட்ட தனுஷ், தற்போது இந்தியாவிலுள்ள சிறந்த நடிகர்களில் ஒருவராக அறியப்படுகிறார். இதன் பின்னாலுள்ள அவருடைய அசாதாரணமான உழைப்பும் தேடலும் பிரமிக்கத்தக்கவை. ஒருபுறம் அப்பட்டமான வணிகத் திரைப்படங்களில் நடித்தாலும் இன்னொரு பக்கம் 'ஆடுகளம்' போன்ற சிறந்த முயற்சிகளிலும் ஈடுபட அவர் தயங்குவதில்லை.

இதுதவிர,  'விசாரணை' 'காக்கா முட்டை' போன்ற படைப்புகளின் தயாரிப்பாளராக தமிழில் மாற்று ரசனை உருவாவதற்கும் காரணமாக இருக்கிறார். பிரபலமாகி விட்டால் தன்னிச்சையாக வந்துசேரும் அல்லது சேர்த்துக்கொள்ளப்படும் பெருமைகளைப் போல 'பாடகர், பாடலாசிரியர்' போன்ற அவரின் இதர தகுதிகளை ஒரு புன்னகையுடன் சாய்ஸில் விட்டுவிடலாம்.

இப்போது 'இயக்குநர்' அவதாரம். 'பவர் பாண்டி' என்று முதலில் தலைப்பிடப்பட்டு பின்பு வரிவிலக்குக்காக வழக்கம்போல் கடைசி நேரத்தில் தமிழ் ஒப்பனை செய்யப்பட்ட 'ப.பாண்டி'.

ஒரு முன்னணி நடிகராக இருந்தாலும் தான் இயக்கும் முதல் திரைப்படத்தின் நாயகனாகத் தன்னைப் பிரதானமாகத் திணித்துக்கொள்ளாமல் ஒரு முதிய பாத்திரத்தை வைத்து திரைக்கதை அமைத்த தனுஷின் (மற்றும் சுப்ரமணியம் சிவா) செயல் பாராட்டுக்குரியது. 

ஓர் இயக்குநராக இந்தப் புதிய அவதாரத்தில் தனுஷ் வெற்றி பெற்றிருக்கிறாரா என்றால் ஆம். ஒரு ஜனரஞ்சகமான சினிமாவில் என்னென்ன கலவைகள் இருக்கவேண்டும் என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் அந்தச் சமரசங்களே இந்த முயற்சியை ஒரு சிறந்த திரைப்படமாக ஆக்கவிடாமல் தடுத்திருக்கின்றன என்பதையும் கவனிக்கவேண்டும்.

எழுபதுகளில் வந்த பீம்சிங்கின் குடும்பச் சித்திரத்தை அல்லது தொலைக்காட்சித் தொடரைப் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற சலிப்பான காட்சிகள் நிறைய இருக்கின்றன. இவற்றுக்கு இடையே சில அபாரமான கவிதைத் தருணங்கள் இருக்கின்றன. இதற்காக தனுஷ் வரும் பிளாஷ் பேக் காட்சிகள் உள்பட, பெரும்பாலான படத்தின் சுமையைச் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.


***

படத்தின் மையம் என்ன?

குடும்பம் என்பதின் ஆதாரமான அடித்தளங்களுள் ஒன்று 'தியாகம். சற்று கவனித்துப் பார்த்தால் சமகாலத் தலைமுறை, அடுத்தத் தலைமுறையின் வளர்ச்சிக்காகவே பெரும்பாலும் உழைத்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சுழற்சி இந்தியக் குடும்பங்களில் நெடுங்காலமாக நீடித்துக்கொண்டிருக்கும் சமாசாரம்.

எனில் சமகால மனிதர்கள் அதிலும் குறிப்பாக முதியவர்கள் தனக்காக வாழ்கிறார்களா, அப்படி வாழ இந்தச் சமூகம் அனுமதிக்கிறதா என்கிற ஆதாரமான கேள்வியை இந்தத் திரைப்படம் எழுப்புகிறது.

ஒரு குறிப்பிட்ட வயதைக் கடந்துவிட்டால் அவர்கள் 'பெரிசு'களாகக் கருதப்பட்டு ஒதுக்கப்பட்டு விடுகிறார்கள். அதுவரையான பல விஷயங்களை, விருப்பங்களைத் தியாகம் செய்துவிட்டு வயதானவர்களுக்கான உலகில் ஒதுங்கியிருந்து அடக்கமாக வாழ்ந்தாக வேண்டும். உதாரணமாக ஒரு முதியவர் ஜீன்ஸ் அணிந்தால் 'இந்த வயசுல இது தேவையா' என்கிற கிண்டலுக்கு எளிதாக ஆட்படுவார்.

'மற்றவர்களுக்காக அமைந்தாலும்கூட இறுதிவரைக்கும் உனக்கான வாழ்க்கையை வாழத் தயங்காதே' என்கிற செய்தியை அழுத்தமாகப் பதிவு செய்கிறது 'ப.பாண்டி'

பாரதிராஜா உருவாக்கிய 'அந்தி மந்தாரை'யில் மெலோடிராமாவாகப் பிழியப் பிழியச் சொல்லப்பட்ட 'முதியோர் காதல்' எனும் விஷயத்தை வெகுஜன சினிமாவுக்கேயுரிய ஜனரஞ்சகமான விஷயங்களுடன் சொல்கிறது.


***

தமிழ் சினிமாவில் பிரபலமான  ஃபைட் மாஸ்டராக இருந்து ஓய்வு பெற்றவர் ராஜ்கிரண். மனைவியை இழந்தவர். தனது ஒரே மகன் பிரசன்னாவுடன் வசதியாகத் தங்கியிருக்கிறார். அன்பான மருமகள் மற்றும் பிரியமான பேரக்குழந்தைகள். பெரிதாகப் பிரச்னை ஒன்றுமில்லை என்றாலும் தன் வாழ்நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருந்து செயல்பட்டவருக்கு ஓய்வாக அமர்வது நிறைவைத் தருவதில்லை.

தன்னிடம் இயல்பாக உள்ள குணாதிசயத்தின்படி அக்கம்பக்கத்தில் உள்ள அநீதிகளைத் தட்டிக்கேட்கிறார். இதனால் வரும் பிரச்னைகளின் காரணமாக மகனுக்கும் தந்தைக்கும் இடையே உரசல்கள் ஏற்படுகின்றன. ஒருகட்டத்தில் இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ராஜ்கிரண் வீட்டைவிட்டுக் கிளம்பிவிடுகிறார். இலக்கு ஏதுமின்றித் தொடங்கும் அந்தப் பயணத்தின் இடையில் அவர் செல்லவேண்டிய திசையும் சந்திக்கவேண்டிய நபரையும் பற்றிய காரணங்கள் உருவாகின்றன. பல வருடங்களுக்கு முன்பு துளிர்ப்பதற்கு முன்பே வெட்டுப்பட்ட உறவு அது.

அந்த உறவு என்ன? ராஜ்கிரண் தன் தேடலை அடைந்தாரா? தன் குடும்ப உறுப்பினர்களுடன் மீண்டும் வந்து இணைந்தாரா என்பதைப் பிற்பாதி காட்சிகள் விவரிக்கின்றன. குறிப்பாக இதன் கடைசிப்பகுதி கவிதையான தருணங்களால் நிரம்பியிருக்கின்றன.


***

தைக்கப்பட்ட சட்டை போல ராஜ்கிரணுக்காகவே உருவாக்கப்பட்ட திரைக்கதை. 'பவர் பாண்டி' என்கிற பாத்திரம் அவருக்கு அத்தனை கச்சிதமாகப் பொருத்தப்பட்டிருக்கிறது. அவர் ஃபைட் மாஸ்டர் என்பதும் நிஜத்தில் அவர் அடித்தால்கூட இரண்டு பேர் சரிந்து விழுவார்கள் என்பதைக் கூட நம்பி விடலாம். அத்தனை திடகாத்திரமான உருவம். ஆனால் அவர் அடித்தவுடன் எதிராளிகள் இரண்டாக மடிந்து அப்படியே உறைந்து நிற்பதெல்லாம் சினிமா நகைச்சுவை. போலவே அவர் நடனமாடும் மென்கொடுமைகளையெல்லாம்வேறு சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

மகனால் திட்டப்படும்போதெல்லாம் குழந்தை போல தலையைக் குனிந்துகொண்டு விழிப்பதும் ஒரு கட்டத்தில் இதைப் பொறுக்கமுடியாமல் குடிபோதையில் மகனிடம் சண்டை போடுவதும் என... ராஜ்கிரணின் இதுவரையான பயணத்தில் ஒரு முக்கியமான திரைப்படம். ஓய்வு பெற்ற பிறகு எந்தப் பணியிலும் நிறைவுறாமல், தான் அதுவரை அத்தனை ஆண்டுகளாக செய்த சண்டை வடிவமைப்புக்கு மறுபடியும் திரும்பச் சென்று அங்குக் கிடைக்கும் பாராட்டில் மனநிறைவும் நெகிழ்ச்சியும் அடையும் காட்சி முக்கியமானது. திரைப்படத்தின் பிற்பாதியில் ரொமான்ஸ் காட்சிகளில் தவிப்பதும், தேடி மீட்டெடுத்த பழைய காதலில் தடுமாறுவதும் என .. இன்னொரு ஜாலியான, சுவாரசியமான பரிமாணம்.

இந்தப் பாத்திரத்தை ராஜ்கிரண் அவருக்குண்டான எல்லையில் திறம்படவே கையாண்டிருக்கிறார்தான் என்றாலும் நாசர், பிரகாஷ்ராஜ் போன்ற நடிப்பு விற்பன்னர்கள் ஒருவேளை நடித்திருந்தால் இந்தப் பாத்திரம் இன்னமும் மெருகேறியிருக்குமே என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஆனால் இதன் எதிர்முனையில் ரேவதி தானொரு அபாரமான நடிகை என்பதை நிரூபிக்கிறார். இவர் வருவது திரைப்படத்தின் ஏறத்தாழ நிறைவுப்பகுதி என்றாலும் பெரும்பாலானவை அற்புதமான தருணங்கள். உண்மையில் இங்குதான் படத்தின் மையமே தொடங்குகிறது. இந்தக் காட்சிகளை நீட்டித்திருந்தால் படம் இன்னமும் சிறப்பு பெற்றிருக்கும். ரேவதி ஏற்றிருப்பது பெரும்பாலான சீனியர் நடிகைகள் ஒருவேளை ஏற்கத் தயங்கும் பாத்திரம். ஆனால் இந்த உறவை மலினமாகவோ நகைச்சுவையாகவோ ஆக்காமல் கண்ணியமான மதிப்புடன் உருவாக்கியிருப்பதில் இயக்குநர் தனுஷ் வெற்றி பெறுகிறார். தன் கடந்த கால காதலைப் பற்றி மகளிடம் வெட்கத்துடன் கூறிவிட்டு அது இயல்பாக ஏற்கப்பட்ட நிலையில் அவர் மெலிதாக நடனமாடும் காட்சி அபாரமானது.

ராஜ்கிரணின் இளமை வடிவமாக தனுஷ் வரும் பிளாஷ்பேக் காட்சிகள் ஓரளவுக்காவது சுவாரசியமாகச் சென்றுகொண்டிருக்கும் திரைக்கதையில் தடையாக அமைந்து சலிப்பூட்டுகிறது. தனுஷ் வளர்ந்த பிறகு ராஜ்கிரண் போல இருப்பார் என்றால், அவரைத் தன் மகன் எனக் கோரி வழக்குப் போட்டிருக்கும் அந்த முதிய தம்பதியினர் கூட நம்பமாட்டார்கள். தனுஷின் இளமைக்காலக் காதலியாக மடோனா. பழைய காலத்துப் பாணியிலான ஆடை வடிவமைப்பு இவருக்குச் சற்றும் பொருந்தாமல் நகைச்சுவையாக தோற்றமளிக்க வைக்கிறது. வழக்கமான பிளாஷ்பேக்தான் என்றாலும் 'ஆடுகளம்' தனுஷ் வெளிப்பட்டு சில காட்சிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

முதியவர்கள் மீது ஏற்படும் நவீன காலத்து இளைஞனுக்கு ஏற்படும் எரிச்சலை இயல்பான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் பிரசன்னா. தன் தந்தை வீட்டில் இல்லாத வெறுமையைப் பிறகு உணர்ந்து மனம் திருந்தி வருவதும், 'வீட்டுக்கு வந்துடுங்க' என்று தந்தையின் காலைப்பிடித்து அழுவதும் என தன் பங்களிப்பைச் சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறார். குழந்தைகளின் நடிப்பும் இயல்பாக அமைந்துள்ளன.

பக்கத்து வீட்டு இளைஞனாக வருபவனின் நடிப்பு மிக இயல்பு. வெவ்வேறு தலைமுறையைச் சார்ந்தவர்களுக்குள் வெளிப்படும் உரையாடல்கள் சிறப்பாகவும் சுவாரசியமாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரான டிடி (தேவதர்ஷிணி) ஒரெயொரு காட்சியில் வந்திருந்தாலும் தன்னுடைய பங்கைச் சிறப்பாக செய்துள்ளார். தன் தாயான ரேவதியுடன் அவர் உரையாடும் அந்தக் காட்சிதான் படத்தின் ஆதாரமான செய்தியே.

ஸீன் ரோல்டனின் இசை புத்துணர்ச்சியாக உள்ளது. ஆனால் பாடல்கள் ஹிட் ஆகி நிலைக்குமா என்பது சந்தேகமே. பின்னணி இசையும் காட்சிகளுடன் ஒத்திசைவாக அமைந்திருக்கிறது. ஒளிப்பதிவு வேல்ராஜ். ராஜ்கிரண் புல்லட்டில் பயணிக்கும் காட்சிகள் சிரத்தையாகவும் பிரமிக்கத்தக்கதாகவும் பதிவாகியுள்ளன. 

திரைப்படத்தின் நேரம் இரண்டு மணி நேரம்தான் என்றாலும் இன்னமும் கூட சுருக்கப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. இந்தத் திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் பழைய காலப்பாணியில் நாடகத்தனமாகவும் சலிப்புறும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளன. மிகமிக ஆறுதலாக இருப்பது படத்தின் நிறைவுப்பகுதியும் இதன் ஆதாரமான செய்தியும்தான். எந்த தரப்புக்கும் சங்கடம் அளிக்காத முதிர்ச்சியான கிளைமாக்ஸ். ராஜ்கிரணின் பைக்கின் பின்னால் ரேவதி ஏறிச் சென்று விடக்கூடாதா என்று பார்வையாளர்களான நமக்கே தோன்றினாலும்கூட கட்டுப்பாட்டுடன் முடித்திருப்பது ஒரு சமரசம்தான் என்றாலும் இருவரும் பிறகு இணைவார்கள் என்கிற செய்தியுடன் நிறைவு செய்திருப்பது அற்புதம்.

சினிமா வியாபாரி தனுஷை விடவும் 'கலைஞன்' தனுஷ் வெளிப்படுவது இது போன்ற காட்சிகளில்தான். வருங்காலத்தில் மிகச் சிறப்பான ஒரு திரைப்படத்தை தனுஷால் இயக்கிவிடமுடியும் என்கிற ஆறுதலான தடயத்தை இவை அளிக்கின்றன.

]]>
Pa Pandi, dhanush, rajkiran, madonna https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/15/w600X390/power_paandi919191.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2017/apr/15/pa-pandi-review-dhanush-rajkiran-madonna-2684954.html
2681113 சினிமா திரை விமரிசனம் மணி ரத்னத்தின் 'காற்று வெளியிடை': சினிமா விமரிசனம் சுரேஷ் கண்ணன் Saturday, April 8, 2017 02:11 PM +0530  

ஆண் x பெண் உறவுச் சிக்கலின் வயது என்பது வருடங்களால் கூட அல்ல, யுகங்களால் ஆனது. ஆதாம் - ஏவாள் என்கிற முதற்புள்ளியிலிருந்து இந்த உறவைப் பற்றி நெடுங்காலமாக விதம்விதமாக நாம் உரையாடிக் கொண்டிருந்தாலும் இன்னமும் கூட விளங்கிக் கொள்ள முடியாமலிருக்கும் தன்மையைக் கொண்டது. ஒருபுறம் இந்த விநோதம்தான் இதன் வசீகரமே. எத்தனையோ படைப்பாளிகள் இந்த உறவின் முரண்களைப் பற்றி விதம் விதமாகப் பேசித் தீர்த்துவிட்டார்கள்.

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களுள் ஒருவரான மணிரத்னமும் இதற்கு விதிவிலக்கல்ல. முதல் திரைப்படமான 'பல்லவி அனுபல்லவி'யில் இருந்து தனது பிரத்யேக பாணியில் இதைப் பற்றி நிறைய பேசியிருக்கிறார். 'மெளனராகம்', 'உயிரே', 'அலைபாயுதே' 'ராவணன்' 'கடல்' போன்ற திரைப்படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். மதம், தீவிரவாதம், வன்முறை என்று வெவ்வேறு பின்னணிகளில் இந்த விஷயம் அவரது திரைப்படங்களில் பேசப்பட்டிருக்கிறது.

மணிரத்னத்தின் சமீபத்திய திரைப்படமான 'காற்று வெளியிடை’யும் இந்த வரிசையில் வைத்து பார்க்கக்கூடியதுதான். ஒருவகையில் இது அவருடைய முந்தைய திரைப்படமான 'ஓ காதல் கண்மணி'யின் தொடர்ச்சி போலவே அமைந்திருக்கிறது. 


***

இந்திய விமானப் படையில் பணிபுரியும் வருண் என்கிற இளைஞன், 1999-ல் நிகழ்ந்த கார்கில் போரின் போது பாகிஸ்தான் எல்லையில் வீழ்த்தப்பட்டு பிடிபடுகிறான். போர்க் கைதிகளுக்கு அளிக்கப்பட வேண்டிய அடிப்படையான உரிமையையும் மதிப்பையும் வலியுறுத்தி உருவாக்கப்பட்ட ஜெனிவா உடன்படிக்கையின் அம்சங்களை பெரும்பாலான ராணுவங்கள் காற்றில் பறக்க விடுகின்றன. ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்படும் வருண் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகிறான். அங்கிருந்து உயிருடன் வெளியே செல்வோமோ என்கிற அவநம்பிக்கையின் இருள் அவனைச் சூழ்ந்திருக்கும் நிலைமையில் இருக்கும் ஒரே சிறிய வெளி்ச்சம் அவனுடைய காதல் மட்டுமே. அந்த நினைவுகளைப் பற்றிக் கொண்டு நம்பிக்கையின் நுனியில் தன் துயரத்தைக் கடக்க முயல்கிறான்.

தான் பலமுறை அவமானப்படுத்திய காதலியின் முகத்தை ஒருமுறையாவது பார்த்து விட முடியாதா என்பதே அவனுடைய இறுதி ஆசை. ஆணாதிக்க உணர்வு உள்ள முரடனாகவும் சுயநலம் மிக்கனாகவும் இருந்த அவனைக் காதலின் பிரிவும் உயிர் மீதான ஆசையும் உருமாற்றியிருக்கிறது. காதலுணர்வின் உன்னதம் அவனை மனம் திரும்பவும் பண்படுத்தவும் செய்திருக்கிறது.

அவன் சிறையில் இருந்து தப்பிக்க முயலும் காட்சிகளை ஒருபுறமும் கடந்த கால நினைவுகளை இன்னொருபுறமுமாக விவரிக்கும் திரைக்கதையோடு இந்த திரைப்படம் பயணிக்கிறது.

***

தீவிரவாதம், வன்முறை, மதம், அரசியல் போன்ற பின்னணிகளில் காதல் என்கிற விஷயத்தை முகப்பில் வைத்து திரைக்கதையை உருவாக்குவது மணிரத்னத்தின் வழக்கமான பாணி. 'ரோஜா'வுக்குப்பிறகு அவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் இந்த வார்ப்புருவில்தான் அமைந்து வருகின்றன. இந்த வகையில் அமைந்த முந்தைய திரைப்படங்களில் சமூகப் பிரச்னைகள் ஒருபுறமும் காதல் சார்ந்த விளையாட்டுக்களும் சிக்கல்களும் இன்னொரு புறமுமாக பயணித்துக்கொண்டிருக்கும். ஆனால் 'காற்று வெளியிடை'யில்' ஆண்xபெண் உறவின் சிக்கலே மிகப் பிரதானமாக உரையாடப்பட்டிருக்கிறது. இந்தத் தன்மையே இந்தத் திரைப்படத்துக்குப் புதுவிதமான நிறத்தையும் ருசியையும் தந்திருக்கிறது.

ஆனால் இந்தத் திரைப்படத்துக்கு கார்கில் போரின் குறிப்பான பின்னணி ஏன் என்பது புரியவில்லை. 'கார்கில் போர்வீரர்களுக்கு சமர்ப்பணம்' என்று திரைப்படத்துக்கு முன் ஒளிர்கிற வரி தொடர்பேயில்லாத அபத்தம். ஏனெனில் இந்தத் திரைப்படம் பிரதானமாகக் காதலைப் பற்றித்தான் பேசுகிறது. இதர விஷயங்கள் எல்லாம் ஒரு பாவனையே. நாயகன் தன்னுடைய உடல் மீதான வலிமையின் சுயபெருமிதத்தில் உலாவுகிற முரட்டுத்தனமானவன் என்றால் அது சார்ந்த ஏதோவொரு பணியொன்றில் ஈடுபட்டிருப்பவனாக அவனைச் சித்தரித்திருந்தாலே போதும். அது ராணுவ வீரனாகவே இருந்தாலும் ஏன் குறிப்பாக 1999-ன் காலக்கட்டம் என்பது திரைக்கதையுடன் அழுத்தமாகப் பொருந்தவில்லை. படைப்புக்கு ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதற்காகச் செய்யப்பட்ட ஏற்பாடு என்பதாகத்தான் இதைப் புரிந்துகொண்டு சமாதானம் அடைய வேண்டியிருக்கிறது.

ஆண்மையின் பெருமிதத்துடனும் தன்னலத் திமிருடனும் வாழ்கிற ஒரு போர்வீரன். அவனால் தூண்டப்பட்டுக் காதலில் வந்து வீழ்கிறவள், மருத்துவராக இருக்கிறாள். தன்மானம் உள்ளவள். எதிரிகளின் உயிரை அழிக்கும் பணியுள்ளவனுக்கும் அதைப் போராடிக் காக்கும் உன்னதமான சேவையில் உள்ளவருக்கும் நிகழ்கிற காதல். அழித்தல் x காத்தல் என்கிற முரணியக்கத்தின் மீது நிகழ்கிற இந்தப் பயணம் எப்படிச் சிக்கல் இல்லாமல் இருக்கும்?

தன்னுடைய மையத்தை நோக்கி மிகச் சோம்பலாக நீந்திக் கரையேறுகிற திரைக்கதை. இதனால் சில காட்சிகள் சலிப்பை உண்டாக்கத்தான் செய்கின்றன. ஆனால் இதன் இடையே சில பல அபாரமான கணங்களும் தருணங்களும் உள்ளன. அவையே இந்தத் திரைப்படத்துக்கு ஒரு பிரத்யேகமான மதிப்பை அளிக்கின்றன. இதை அற்புதமாகக் கையாண்ட மணிரத்னத்தின் நிதானமும் முதிர்ச்சியும்  வியப்படைய வைக்கின்றன. 

ஆனால் மணிரத்னம் திரைப்படங்களுக்கேயுரிய பொதுவான சிக்கல்களும் இருக்கின்றன.

தனது 'ரோஜா' திரைப்படத்தில் இருந்து 'தமிழ் சினிமா' இயக்குநர் என்கிற நிலையில் இருந்து இந்தி(ய) சினிமா இயக்குநராகப் பதவி உயர்வு பெற்ற தற்செயலான விபத்து மணிரத்னத்துக்கு அங்கீகார ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பல பெருமிதங்களையும் ஆதாயங்களையும் அளித்திருக்கலாம். ஆனால் அங்கிருந்துதான் அவருடைய சறுக்கல் தொடங்கி விட்டதை அவர் உணர்ந்திருக்கிறாரா என்று தெரியவில்லை. பன்மைத்துவ கலாசாரத்தின் மீது அமைந்திருக்கும் இந்தியா போன்ற தேசத்தில் எல்லாப் பிராந்தியங்களுக்கும் சென்று சேரும்படியான வணிகப்பண்டமாக அவர் தனது திரைப்படங்களைக்  கலாசாரக் கலவையுடனும் குழப்பத்துடனும் உருவாக்கத் தொடங்கியதில் இருந்து அவருடைய திரைப்படங்களில் இருந்த ஆன்மாவும் உயிர்ப்பும் கழன்று போய்விட்டதைக் கவனிக்கலாம்.

பாரதியாரின் கவிதைகளை மனப்பாடமாக உச்சரிக்கிற பிள்ளைமார் குடும்பத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞனின் இதர குடும்ப உறுப்பினர்கள் இவனுக்குத் தொடர்பேயின்றி விளம்பரப் படங்களில் வருகிறவர்களைப் போல இருக்கிறார்கள். மணிரத்னம் படங்களில் இருக்கும் இது போன்ற பொதுவான சிக்கலும் பிளாஸ்டிக் தன்மையும் தமிழக மனங்களுக்கு அந்நியமாக இருக்கின்றன. பல்வேறு கலாசாரங்களுக்கான பொதுத்தன்மையை ஒரு திரைப்படத்தில் இணைக்கும் முயற்சியால் ஏற்படும் விபத்து இது. தனது தேசியப் பாதையில் இருந்து திரும்பி மணிரத்னம் இடையில் உருவாக்கிய 'அலைபாயுதே' நமக்கு எத்தனை நெருக்கமாக அமைந்தது என்பதைக் கவனிக்கலாம். காஷ்மீர் பின்னணியில் இயங்கும் இந்தத் திரைப்படத்தில் எதிர்ப்படும் எந்தவொரு நபரும் தமிழ் பேசுவது மாதிரியான செயற்கைத்தனங்கள் படத்தின் நம்பகத்தன்மையைக் கேலியாக்குகின்றன.

பிரதான பாத்திரங்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையேயான உணர்ச்சிகளின் பிணைப்பு வலுவாக நிறுவப்படாமலிருப்பதும் இந்தத் திரைப்படத்துக்கு ஒரு பின்னடவை ஏற்படுத்துகிறது.


***

கார்த்தி அடுத்த வருடத்துக்கான தேசிய விருதைப் பெறக்கூடும். அத்தனை அபாரமான நடிப்பு. ஆணாதிக்கமும் தன்முனைப்பும் மிகுந்திருக்கிற அதே சமயத்தில் கவிமனத்தின் மென்மையும் சிறிது கலந்திருக்கிற பாத்திரத்தின் சிக்கலான தன்மையைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். பருத்தி வீரனுக்குப் பிறகு அவருடைய பங்களிப்பு மிக அபாரமாக வெளிப்பட்டிருக்கிற படமாக காற்று வெளியிடையைச் சொல்லலாம். முற்றிலும் வேறு பரிமாணம். புதிதாக வேறொரு நபரை பார்ப்பது போல இருக்கிறது. மணிரத்னம் கார்த்தியை ஒரு புதிய சித்திரமாகத் தீட்டி உருமாற்றிவிட்டார். 

மூக்கு நுனியும் காது மடல்களும் சிவந்திருக்கிற அதிதி ராவ் ஹைதரியின் புறத்தோற்றத்தை தமிழக மனங்கள் அந்நியமாக உணரக்கூடும். ஆனால் கார்த்திக்குக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார். சில காட்சிகளில் அவரை முந்திச் செல்கிறார். அதிதி அடிப்படையில் நாட்டியக் கலைஞர் என்பதால் கண்களும் முகபாவங்களும் அற்புதமாக உரையாடுகின்றன. ஆர்.ஜே.பாலாஜி, ருக்மணி, டெல்லி கணேஷ், லலிதா போன்றவர்கள் படத்தின் இடையே வந்து செல்கிறார்கள். லொட லொட பாலாஜியை அடக்கி வாசிக்க வைத்ததை மணியின் சாதனையாகச் சொல்லலாம்.

வழக்கம் போல் மணிரத்னத்தின் தொழில்நுட்பக் கூட்டணி அபாரமாகப் பங்காற்றியிருக்கிறது. ஒளிப்பதிவாளர் ரவிவர்மனைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். படத்தின் தொடக்கத்தில் சித்தரிக்கப்படும் போர்க்காட்சிகள், ஸ்பீல்பெர்க்கின் போர்த் திரைப்படங்களின் துல்லியத்தை நினைவுப்படுத்துகின்றன. காஷ்மீர், ஆஃப்கானிஸ்தான் போன்ற பிரதேசங்களின் நிலவெளிக்காட்சிகள் அபாரமாகப் பதிவாகியிருக்கின்றன. காதைக் கிழித்துக்கொண்டு பறக்கும் விமானங்களின் ஒலிகளை அவற்றின் சிறப்பான வடிவமைப்புத் தன்மையை அரங்கத்தில்தான் கச்சிதமாக உணர முடியும். துக்கிணியூண்டு செல்போனில் இவற்றைப் பார்ப்பதை விடவும் அநீதி வேறெதுவும் இருக்கமுடியாது.

மணிரத்னம் + ரஹ்மான் கூட்டணியின் வழக்கமான வசீகரம் இதிலும் சாத்தியமாகியிருக்கிறது. பாடல்கள் ஏற்கெனவே பிரபலமாகிவிட்டன. சமீபத்திய வழக்கம் போல் இந்தப் பாடல்களின் ஒரு பகுதியை மட்டுமே உபயோகித்துக் கொண்டிருக்கிறார் மணிரத்னம். இது திரைக்கதைக்கு நியாயம் செய்யும் விஷயம்தான் என்றாலும் ரஹ்மானின் அசாதாரணமான உழைப்பை விரயம் செய்வது அநியாயம். தமிழ் சினிமாவில் பாடல்களை முற்றிலுமாகக் கைவிடுவது என்கிற விஷயத்தில் மணிரத்னம் ஒரு முன்னோடியாக இருந்து காண்பிக்கலாம். பாடல்களின் இசை வடிவங்களே பெரும்பாலான காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கின்றன. ரஹ்மானின் இசைப்பள்ளி மாணவர்களான Qutub-E-Kripa பின்னணி இசைக்கு உடன் பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். சாகசக் காட்சிகளில் ஒலிக்கும் துள்ளலான இசை அவற்றுக்கு வேறொரு நிறத்தை அளிக்கிறது. படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் சில சலிப்பான தருணங்களைத் தியாகம் செய்து இன்னமும் கறாராகச் செயல்பட்டிருக்கலாம்.

**

மெளனராகம் திரைப்படத்தில் இருந்தே பதிவுத் திருமண ஏற்பாட்டுக்கு மணிரத்னத்தின் நாயகர்களால் வரமுடியாமல் போவது, திருமணத்துக்கு முன்பான உறவு, கருவுறுதல், காதல் பிரிவின் மீதான துயரம் போன்ற பொதுத்தன்மைகள் இந்தத் திரைப்படத்திலும் நீடித்தாலும் அவருடைய இதுவரையான படைப்புலகத்திலிருந்து சற்று வித்தியாசப்பட்டு மேலெழுந்து நிற்கும் திரைப்படமாக 'காற்று வெளியிடை'யைச் சொல்ல முடியும். இதர விஷயங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு அல்லது ஒரு பாவனையாக உபயோகப்படுத்தப்பட்டு இதன் திரைக்கதையில் ஆண்xபெண் உறவுச்சிக்கலுக்கே பிரதானம் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்தத் திரைப்படம் எந்தத் திசையில் நகர்கிறது என்கிற குழப்பத்தையும் சலிப்பையும் பார்வையாளர்களுக்கு அளித்துக்கொண்டிருக்கும்போது வரும் ஒரு காட்சியின் மூலம் பிடி கிடைக்கிறது. பனிப்பிரதேசத்தில் இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டிருக்கும்போது 'சிறிது நேரத்தில் பனிமழை தொடங்கிவிடும். அது ஆபத்தானது' என்கிறான் நாயகன். அதன் நடைமுறைச் சிக்கலை அவன் அறிவான். ஆனால் குழந்தைத்தனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நாயகி 'இன்னும் சிறிது நேரம்' என்று அடம்பிடிக்கிறாள். எனவே வலுக்கட்டாயமாக அவளைத் தள்ளிச் செல்ல முயல்கிறான். திகைப்புறும் நாயகி 'நான் வரலைன்னா என்ன செய்வீங்க?' என்கிறாள். 'அடித்தாவது இழுத்துச் செல்வேன்' என்கிறான். தன்மான உணர்வு உசுப்பப்படும் நாயகி 'ஆம்பளைன்னா என்ன வேணா செய்வீங்களா?" என்று வர மறுக்கிறாள். கோபம் தணியும் நாயகன் 'உனக்கு ஏதாவது ஆயிடுமோன்னு பயமா இருந்தது. அதான்' என்கிறான்.

இப்படியான அகங்காரச்சிக்கல்களும் மோதல்களும் நிகழும் காட்சிகள் மிகுந்த நுண்ணுணர்வுத்தன்மையோடும் இயல்பாகவும் உருவாகியிருக்கின்றன. நாயகனின் ஆளுமை எதனால் இப்படிச் சிக்கலாக அமைந்திருக்கிறது என்பதை அவனுடைய குடும்ப உறுப்பினர்களுக்கிடையே நிகழும் சிறிய மோதலில், குறிப்பாக ஆணாதிக்கம் நிறைந்திருக்கும் அவனுடைய தந்தையைக் காண்பிக்கும் சுருக்கமான காட்சியிலேயே உணர்த்தியிருப்பது சிறப்பு.

இன்னொரு காட்சி. போர்ச் சூழல் பற்றி ராணுவப் படையின் ஆண்கள் உரையாடிக் கொண்டிருக்கும்போது அதில் தலையிடும் நாயகியை அடக்கும் நாயகன், பின்பு மனம் வருந்தி அவளை மீட்டுக்கொண்டு சென்று நண்பர்களிடம் மறுபடியும் ஆண் என்கிற பெருமிதத்தைக் காட்டும் காட்சியையும் உதாரணமாகச் சொல்லலாம்.

இப்படிஸ் சட்சட்டென்று மாறும் அவனுடைய கோணல் புத்தி மனம் திரும்பி பெண்ணிடமும் குடும்பம் என்கிற நிறுவனத்திடமும் இறுதியில் சரணாகதி அடையும் அந்த உருமாற்றக் காட்சிகள் படத்தின் பிற்பகுதியில் அபாரமாகப் பதிவாகியிருக்கின்றன. பாகிஸ்தான் சிறையிலிருந்து தப்பிக்கும் நம்பகத்தன்மையற்ற காட்சிகளை புன்னகையோடும் சில சலிப்பான காட்சிகளை தியாக மனப்பான்மையோடும்  ஒதுக்கிவிட்டு இந்த மையத்தை கவனமாகப் பற்றிக் கொண்டால் 'காற்று வெளியிடை'யை நிச்சயம் ரசிக்கமுடியும்.

சக்தியில்லையேல் சிவமில்லை.

]]>
Mani Ratnam, review, Kaatru Veliyidai https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/8/w600X390/kaatru781.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2017/apr/08/மணி-ரத்னத்தின்-காற்று-வெளியிடை-சினிமா-விமரிசனம்-2681113.html
2643129 சினிமா திரை விமரிசனம் ஜெயம் ரவி - அரவிந்த் சாமி நடித்த 'போகன்'  - சினிமா விமரிசனம் சுரேஷ் கண்ணன் Friday, February 3, 2017 02:46 PM +0530  

இந்த விமரிசனத்தின் தலைப்பு, அரவிந்த் சாமியின் 'போகன்' என்று அமைந்திருந்தாலும் பொருத்தமே. நாயகர்களின் பாத்திரப் பெயர்களை திரைப்படங்களுக்குத் தலைப்பாகச் சூட்டுவது பொதுவான வழக்கம். எதிர்நாயகனின் பெயரைச் சூட்டுவதாக இருந்தால் 'ஹீரோவே' அந்தப் பாத்திரத்தை ஏற்றிருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. 

அப்படியல்லாமல் ஓர் எதிர்நாயகனின் பாத்திரப் பெயரைப் படத்தின் தலைப்பாக வைத்திருப்பதில் வித்தியாசப்பட்டு நிற்கிறது 'போகன்'. படமும் அதைப் போலவே வித்தியாசமானதா என்றால் சற்று தயக்கத்துடன் தலையை ஆட்டி வைக்கலாம்.

'ஆள் மாறாட்டம்' என்கிற விஷயத்தை வைத்துக்கொண்டு பூனை - எலி வேட்டையை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் நிறைய உள்ளன. குறிப்பாக ஒரே மாதிரியான தோற்றத்தில் உள்ள இரட்டையர்களைக் கொண்டு பல சுவாரசியமான திரைக்கதைகள் உள்ளன. எஸ்.ஜே.சூர்யாவின் 'வாலி' ஒரு நல்ல உதாரணம்.

போகனில் என்ன வித்தியாசம்? 

ஆய கலைகள் அறுபத்து நான்கில் ஐம்பத்தி இரண்டாவது கலையாக சொல்லப்படுவது 'பரகாய பிரவேசம்'. சித்தர்களின் விளையாட்டுக்களில் ஒன்று. 'கூடு விட்டு கூடுபாயும்' இந்தக் கலையை அடிப்படையாகக் கொண்டு தமிழில் நிறைய தொன்மக்கதைகள் உள்ளன. 1997-ல் வெளிவந்த Face/off என்னும் திரைக்கதையின் மீது இந்த தொன்மத்தின் வர்ணத்தை அடித்து மறைக்க முயன்ற  இயக்குநரின் 'சித்து விளையாட்டே' 'போகன்'.


**

ஆதித்யா (அரவிந்த் சாமி)  ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர். ராஜாக்களின் சொகுசுகளைச் சுதந்தர அரசு பறித்துக்கொள்வதால் இவரின் தந்தை மீதமுள்ள சொத்துக்களை அனுபவித்து தீர்த்து விடுகிறார். போண்டியாகி விடும் மகன், தந்தையைப் போலவே வாழ்க்கையை மது, மாது என கொண்டாட்டமாக கழிக்க நினைக்கிறான். எனவே பல்வேறு திருட்டுக்களில் ஈடுபடுகிறான். பிறகு ஓலைச்சுவடி மூலம் தற்செயலாக கிடைத்த ஓர் அரிய சக்தியைப் பயன்படுத்துகிறான். அதன்படி, நடுத்தர வர்க்கச் சமூகம் சிட்பண்டில் தாமாக வந்து ஏமாறுவதைப் போலவே பணத்தைக் கையாள்பவர்கள் அத்தனை பணத்தையும் தாமாகக்கொண்டு வந்து இவருடைய வண்டியில் கொண்டுவந்து வைத்துவிட்டு பொத்தென்று மல்லாக்காக விழுந்து சரிகிறார்கள்.

இப்படிப் பணத்தைக் கொட்டிவிட்டு விழுபவர்களில் வங்கி மேலாளரும் ஒருவர். பணத்தைத் திருடியதாக அவர் மீது பழி விழுகிறது. அவரின் மகன்தான் உதவி கமிஷனரான விக்ரம் (ஜெயம் ரவி). தன் தந்தையின் மீதான களங்கத்தைத் துடைக்க இந்தக் குற்றங்களைப் பற்றி விசாரணை செய்வதின் மூலம் போகனை அடையாளம் காண்கிறான். சாமர்த்தியமாக அவனை ஏமாற்றி கைது செய்கிறான். . பதிலுக்கு போகன் தன்னிடமுள்ள பிரத்யேகமான சக்தியைப் பயன்படுத்தி விக்ரமைப் பழிவாங்க முயல்கிறான். இருவரும் எதிரெதிர் நிலைகளுக்குச் சென்று விடுகிறார்கள். அதாவது ஜெயம் ரவியின் உடலில் அரவிந்த் சாமியின் ஆளுமை புகுந்து விடுகிறது. அவரின் உடலில் இருக்கும் ஜெயம் ரவி சிறையில் தவிக்கிறான். 

பிறகு நிகழும் சடுகுடு ஆட்டங்களை சற்று விறுவிறுப்பாக சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் லக்ஷ்மண். ஆனால் ஒரு நிலையில் இது சலிப்பான விளையாட்டாகி 'எப்போதடா முடியும்' என்று நமக்குள் ஒரு கோப ஆவி வந்து புகுந்து கொள்கிற அளவுக்கு நீள்கிறது. 

**

ஜெயம் ரவி கம்பீரமாகவும் அழகாகவும் இருக்கிறார். இடைவேளைக்குப் பிறகு போகனின் குணாதிசயங்கள் அவருக்குள் புகுந்து கொள்ளும் வித்தியாசமான தோரணைகளை நன்றாகவே கையாள்கிறார். போலவே போகனை ஏமாற்றி கைது செய்யும் காட்சிகளிலும் அவர் நடிப்பு நன்றாக உள்ளது. 

நாயகனுக்கும் எதிர்நாயகனுக்கும் சமமான வாய்ப்பு உள்ள திரைக்கதை. எனவே ஜெயம் ரவியை விடவும் சில இடங்களில் அரவிந்த் சாமியின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கிறது. ஜெயம் ரவியும் அவரது போலீஸ் கூட்டணியும் தனியறையில் அடைத்து வைத்து விசாரிக்கும்போது அவர்களை அநாயசமாக கையாளும் காட்சிகளில் 'அடடே' சாமியாகியிருக்கிறார். போதை மருந்தின் உற்சாகத்தில் தமிழ் சினிமாவின் பாடல்களுக்கு காருக்குள் அமர்ந்தபடியே அவர் நடனமாடுவது ரகளையான காட்சி. 

நாயகி ஹன்சிகாவின் நடிப்பு தொடக்க காட்சிகளில் நன்றாகவே அமைந்துள்ளது. ஆனால் நாயகிகளால் எதையும் சுயமாக சிந்திக்க முடியாது என்கிற வழக்கமான தன்மையை இத்திரைப்படமும் கொண்டிருக்கிறது. ஆங்கிலப்படத்தின் நாயகி, தன்கூட குடும்பம் நடத்துவது தன் கணவன் அல்ல என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்கிறாள். ஆனால் இதில் வழக்கமான 'நாயகித்தனத்துக்காகவும்'  கவர்ச்சிக்காகவுமே அந்தப் பாத்திரம் சித்தரிக்கப்படுவது சோர்வூட்டுகிறது. 

**

இமானின் ரகளையான இசையில் பாடல்கள் ஏற்கெனவே வெற்றியடைந்து விட்டன. குறிப்பாக 'செந்தூரா' பாடலில் தாமரையின் கவித்துவமான வரிகள் வசீகரமாக அமைந்துள்ளன. போலவே போகனின் பாத்திர வடிவமைப்பை சரியாக உணர்த்தும் வகையில் 'காதல் என்பது நேர செலவு, காமம் ஒன்றே உண்மைத் துறவு' என்பது போன்ற மதன் கார்க்கியின் வரிகளும் அபாரம். 

நாயகன் x எதிர்நாயகன் என்கிற கருத்தை மையமாகக் கொண்ட 'டமாலு டுமீலு' திரைக்கதைக்கு பொருந்தாதாக இருந்தாலும் கேட்பதற்கு உற்சாகமளிக்கிறது. இமானின் பின்னணி இசையும் பல இடங்களில் அதிரடியாக அமைந்துள்ளது. சில இடங்களில் ஆங்கிலப்படங்களை நினைவூட்டும் திறமையான ஒளிப்பதிவு. படத்தொகுப்பாளர் ஆன்டனி இன்னமும் கூட சிக்கனமாக செயல்பட்டிருக்கலாம் என தோன்ற வைக்குமளவுக்கு சில இழுவையான காட்சிகள்.

**

இந்த திரைப்படத்துக்காக, எதிர்நாயகன் பாத்திரத்துக்கு முதலில் விஜய்சேதுபதியை நடிக்க வைக்க முயன்று அது இயலாமல் போன செய்தி ஒன்றைக் கவனித்தேன். அது சாத்தியமடைந்திருந்தால் இத்திரைப்படம் நிச்சயமாக வேறு வண்ணத்தில், சுவாரசியத்தில் இன்னமும் மேம்பட்டிருக்கும். அரவிந்த் சாமியின் நடிப்பு நன்றாக இருந்திருந்தாலும்கூட 'தனியொருவன்' கூட்டணியே இதிலும் தொடர்வதால் அது சார்ந்த சலிப்பு தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. 

'கூடுவிட்டு கூடு பாயும் கலையை' தன் திரைக்கதைக்காக யோசித்திருக்கும் இயக்குநரைப் பாராட்டலாம் என்றாலும் அந்தச் சாத்தியத்தை அவர் குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே பயன்படுத்தியிருப்பது  ஏமாற்றத்தை தருகிறது. 'இந்தச் சக்தியை வைத்துக்கொண்டு நான் என்னவெல்லாம் செய்திருப்பேன் தெரியுமா?' என்று நாசர் ஒரு காட்சியில் சொல்லும்போது 'ஆமாப்பா' என்று நமக்கே தோன்றுகிறது. இயக்குநருக்குத் தோன்றவில்லை.

இறுதிப்பகுதியில் எப்படிப் பயணிப்பது என்று தெரியாமல் அலைமோதும் திரைக்கதை, இரண்டாம் பாகமும் தொடர்வதற்கான சமிக்ஞையுடன் நிறையும்போது  நம்முடைய கூட்டுக்குள் திகில் பாய்ந்து வெளியேறுகிறது.

வித்தியாசமான பின்னணியைக் கொண்டிருக்கும் திரைக்கதைதான் என்றாலும் அதன் பெரும்பாலான சாத்தியங்களைப் பயன்படுத்தியிருந்தால் போகன் இன்னமும் வசீகரமானவனாக அமைந்திருப்பான்.

]]>
போகன், Bogan https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/3/w600X390/bogan11.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2017/feb/03/ஜெயம்-ரவி---அரவிந்த்-சாமி-நடித்த-போகன்----சினிமா-விமரிசனம்-2643129.html
2579156 சினிமா திரை விமரிசனம் சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’: நகைச்சுவைப் போராட்டம்! சுரேஷ் கண்ணன் Wednesday, October 12, 2016 11:30 AM +0530  

பெண்கள் நடிக்க முன்வரத் துணியாத காலக்கட்டத்தில் ஆண் நடிகர்களே பெண் வேடத்தையும் கையாண்டார்கள். தெருக்கூத்து, நாடகம் போன்றவற்றில் இந்த வழக்கம் இருந்தது நமக்குத் தெரியும். 'ஸ்திரிபார்ட்' என்று அழைக்கப்படும் இந்த வேடத்தை சிவாஜி கணேசன் முதற்கொண்டு பல பழைய நடிகர்கள் நடித்திருக்கின்றனர். எதிர் பாலினமான  பெண் வேடத்தில் நடிக்கத் துணிவதென்பது ஒவ்வொரு ஆண் நடிகனுக்கும் மிகப் பெரிய சவால். ஆனால் இதை எள்ளி நகையாடுகிறவர்களும் பாலியல் நோக்கி கொச்சையாக கிண்டலடிப்பவர்களும் உண்டு. ரஜினிகாந்த் முதற்கொண்டு தமிழ் சினிமாவின் ஒவ்வொரு முன்னணி நடிகரும் தங்கள் திரைப்படங்களின் சில காட்சிகளில் பெண் வேடத்தில் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக நகைச்சுவை நடிகர்கள் இதை நிறைய கையாண்டிருக்கிறார்கள். இவை பெரும்பாலும் அசட்டு நகைச்சுவை அடிப்படையிலேதான் அமைந்திருக்கும். தீவிரமான பாத்திரப்படைப்பாக அமைந்திருக்காது. 

ஒரு கதாநாயகன், பெரும்பாலான காட்சிகளில் பெண் வேடமிட்டு நடித்த திரைப்படங்களாக கமல்ஹாசனின் 'அவ்வை சண்முகி' மற்றும் பிரசாந்தின் 'ஆணழகன்' போன்றவற்றைக் குறிப்பிடலாம். மூன்றாம் பாலினத்தவர்களாக பிரகாஷ்ராஜ் (அப்பு), சரத்குமார் (காஞ்சனா 2) போன்றவர்கள் நடித்திருக்கிறார்கள். பாரதிராஜாவின் பொம்மலாட்டம் திரைப்படத்தில் நடிகையாக இருக்கும் இளம்பெண், உண்மையில் பெண்ணல்ல என்பது இறுதியில் வெளிப்படுவது போல அதன் திரைக்கதை அமைந்திருக்கும். சமீபத்தில் வந்த இருமுகன் வரை Cross dressing பாத்திர வடிவமைப்பில் தோராயமாக இந்த உதாரணங்களைச் சொல்லலாம். 

***

தமிழ் சினிமாவில் ஆண் நடிகர்கள், பெண் பாத்திரங்களில் நடிக்கும்போது அதில் பெரும்பாலும் நிகழும் ஒரு முரணைப் பற்றி திருநங்கை ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். 'பெண் பாத்திரங்களில் நடிக்கும் ஆண்கள், ஏன் பெண்களைப் போல நடிக்க முயலாமல், திருநங்கைகளைப் போல தங்களின் உடல்மொழியை அமைத்துக் கொள்கிறார்கள்?' என்பதே அந்தக் கருத்து. இது மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்று எனக்குத் தோன்றுகிறது. காவல்துறை அதிகாரி உள்ளிட்ட வேறு எவ்வித பாத்திரமென்றாலும் அதற்காக தங்களின் உடலை வருத்தியும் மெனக்கெட்டும் உருமாற்றிக் கொள்ளும் நாயகர்கள், பெண் வேடத்தில் நடிப்பதென்றால் மட்டும் அதை மிக எளிதாக, தன்னிச்சையாக திருநங்கையின் உடல்மொழியாக மாற்றிக் கொள்ளும் அபத்தத்தை அவர் சரியாக சுட்டிக் காட்டியிருந்தார். இது மட்டுமன்றி, அவ்வாறான உடல்மொழியை ஆபாசமான கொனஷ்டைகளாகக் கையாளும் முறையற்ற போக்கும் கூட மிக அதிகம். 

இந்த நோக்கில் மிக முக்கியமான விதிவிலக்காக, ஒரு நடுத்தர வயது பிராமணப் பெண் பாத்திரத்தை அதன் நளினத்தோடு வெளிப்படுத்தியதில் கமல்ஹாசன் வித்தியாசப்பட்டிருந்தார். 'அவ்வை சண்முகியின்' படப்பிடிப்புத் தளத்திலேயே இவரை அடையாளம் தெரியாத அளவுக்கு இவரது ஒப்பனை சிறப்பாக அமைந்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதிலும் கூட மேற்குறிப்பிட்ட ஆபாச கொனஷ்டைகள் இல்லாமில்லை. 

ஆண்  நடிகர், ஒரு பெண் பாத்திரத்தை மிக தீவிரமாக கையாளும் ஒரு திரைக்கதையை, நடிப்பைப் பற்றி இயக்குநர்களும் நடிகர்களும் ஏன் யோசிக்கக்கூடாது என்று தோன்றுகிறது. 

**

இந்த வரிசையில் சமீபத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம், சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்திருக்கும் 'ரெமோ'. எல்லா மசாலா திரைக்கதைகளும் சலிக்க சலிக்க சொல்லி முடிக்கப்பட்டிருக்கும் சமகால சூழலில், தங்கள் திரைப்படத்தின் மீது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் திரையரங்குக்கு வரச் செய்வதற்காகவும் பல்வேறு கிம்மிக்ஸ் குட்டிக்கரணங்களை இயக்குநர்களும் நடிகர்களும் செய்ய வேண்டியிருக்கிறது. திரைக்கதைக்கு தேவையேயில்லாமல் வித்தியாசமான வேடங்கள் அல்லது அவ்வாறான வித்தியாசமான தோற்றங்களைத் தீர்மானித்து விட்டு பிறகு அதற்காக வலிந்து உருவாக்கப்பட்ட திரைக்கதைகள் என்று பல விபத்துகள் தமிழ்த் திரை வெளியில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

'ரெமோ' திரைப்படத்தில், திரைக்கதை கோரும்படியாக, அதற்கு அவசியமாக சிவகார்த்திகேயனின் 'பெண் வேடம்' அமைந்திருப்பது சற்று ஆறுதலாக இருக்கிறது. ஆனால் இந்த திரைப்படத்திலும் ஆபாச கொனஷ்டைகள் இருப்பதை இயக்குநரால் தவிர்க்க முடியவில்லை. பெண் வேடத்தில் இருக்கும் ஆணை, அடையாளம் தெரியாமல் காமுறும் இதர ஆண்களின் அபத்தங்கள், 'நகைச்சுவை' என்ற பெயரில்  அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைத் தாண்டி, அவ்வை சண்முகியின் கமல்ஹாசனைப் போலவே, சிவகார்த்திகேயனும் பெண் உடல்மொழியின் நளினத்தை சில காட்சிகளில் சற்று தீவிரமாக பின்பற்ற முயன்றிருப்பதும் ஒப்பனை முதற்கொண்டு உடல்மொழி வரையான மெனக்கிடலும்  பாராட்டப்பட வேண்டியது. இத்திரைப்படத்தின் USP என்று இந்தப் பாத்திரத்தை மட்டுமே சொல்ல முடியும். சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் வணிகச் சந்தையைத் தாண்டி பார்வையாளர்களை ஈர்க்கும் முக்கியமான அம்சம் இந்த 'பெண்  வேட' கதாபாத்திரமே.

***

எந்தவித வேலை வெட்டியிலும் ஈடுபாடின்றி இருக்கும் இளைஞன் எஸ்கே. (சிவகார்த்திகேயனின் சுருக்கம்). புகழ்பெற்ற நடிகனாக  வேண்டும் என்பதே அவனது கனவும் லட்சியமும். பெண்களைப் பார்த்து பேசுவது அவனுடைய பலவீனம். இதனாலேயே நடிப்பு வாய்ப்பு கிடைப்பதில் தடை ஏற்படுகிறது. அதுவரை காதல் என்கிற உணர்வே வராத அவனுக்கு காவ்யா (கீர்த்தி சுரேஷ்) என்கிற இளம் பெண்ணைப் பார்த்தவுடன் காதல் ஏற்படுகிறது. தன் மனதினுள் ஏற்படும் இந்த தீவிரமான மாற்றத்தை உணரும் அவன், அதை வெளிப்படுத்துவதற்காக செல்லும் நாள், அந்தப் பெண்ணின் நிச்சயதார்த்த நாளாக அமைந்து விடுகிறது. மனமுடைந்து போகும் அவன் தன் நடிப்பு கனவையாவது அடைவோம் என்று தீர்மானிக்கிறான். ஒரு திரைப்பட வாய்ப்புக்காக 'நர்ஸ்' வேடத்துக்கு மெனக்கெட்டு தன்னை ஒரு பெண் போல் ஒப்பனை செய்து கொள்கிறான். ஆனால் அந்த நோக்கம் நிறைவேறுவதில்லை என்றாலும், தான் விரும்பிய இளம் பெண் தன்னிடம் வந்து உரையாடும் சந்தர்ப்பம் தற்செயலாக அமைகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தன் காதலை நிறைவேற்றிக் கொள்ள முடியாதா என்று அவன் செய்யும் நகைச்சுவைப் போராட்டங்களே 'ரெமோ'.

ஒரு சாகச நாயகனுக்கும் நகைச்சுவை நடிகனுக்கும் இடைப்பட்ட புள்ளிதான் சிவகார்த்திகேயனின் இடம். அவர் அதை சரியாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ற திரைக்கதைகளைத் தொடர்ந்து தேர்வு செய்வதால்தான் முன்னணி நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். குழந்தைகளுக்குப் பிடிக்கும் நாயகர்களின் திரைப்படங்கள் குறைந்தபட்ச வெற்றிக்கு உத்தரவாதம் என்கிற கணக்கு உண்டு. கூடுதலாக இளம் பெண்களுக்கும் பிடித்தமான நடிகராக உள்ளார் சிகே. ரெமோவும் அவருக்குக் கச்சிதமாகப் பொருந்தும் திரைக்கதை. வழக்கமான 'வெட்டி இளைஞன்' வேடம், நர்ஸ் வேடம் என்று இரண்டிலுமே நன்றாக நடித்திருக்கிறார். ஆங்காங்கே சலிப்பை ஏற்படுத்தினாலும் ஒட்டுமொத்த நோக்கில் ஒரு சராசரியான கேளிக்கை திரைப்படத்தின் தேவையை இந்தத் திரைப்படம் பூர்த்தி செய்கிறது. அதற்கு மேல் இத்திரைப்படத்தில் எதையும் எதிர்பார்க்க முடியாது; எதிர்பார்க்கவும் கூடாது. 

சில இடங்களில் 'குஷி' ஜோதிகாவை நினைவுப்படுத்தினாலும், நடிப்பு தேவைப்படும் இடங்கள் கீர்த்தி சுரேஷுக்கு அமைந்திருக்கிறது. அதைச் சரியாகவே நிறைவேற்றியிருக்கிறார். நிச்சயிக்கப்பட்ட மணமகனுக்கும் காதலனுக்கும் இடையிலான தேர்வில் ஏற்படும் குழப்பத்தை, மனச்சிக்கலை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். சதீஷின் நகைச்சுவை வசனங்கள் நிறைய இடங்களில் வரவேற்பைப் பெறுகின்றன. பெண் வேடமிட்ட சிகேவைச் சுற்றி சுற்றி வரும் யோகி பாபுவின் நகைச்சுவையின் வடிவமைப்பு சற்று எரிச்சலூட்டுவதாக இருந்தாலும் சிரிப்பைத் தவிர்க்க முடியவில்லை. 'ஆடி போயி ஆவணி வந்தா டாப்பா வருவான்' எனும் வசனத்தில் புகழ்பெற்ற சரண்யா இதில் எதிர்மறையாக 'உருப்படவே மாட்டேடா' என்று தன் மகனை சபித்துக் கொண்டேயிருக்கிறார். ஆனால் அதே மாதிரியான நடிப்பு சலிப்பைத் தருகிறது. 

***

நவீன சினிமாவின் ஒளிப்பதிவில் ஓர் அழகியல் புரட்சியையே ஏற்படுத்தியவர் பி.சி. ஸ்ரீராம். தொடக்க கால திரைப்படங்களில் அவரது இருப்பை பார்வையாளர்களுக்கு நினைவுப்படுத்திக் கொண்டேயிருப்பார். ஆனால் ஒரு நல்ல படைப்பில் எந்தவொரு நுட்ப அம்சமும் அதன் திரைக்கதைக்கு துணையாகத்தான் நிற்க வேண்டுமே ஒழிய, துருத்திக் கொண்டு நிற்கக்கூடாது. இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் என்பது படம் பார்க்கும் போது நினைவுக்கு வரவில்லை. அந்த அளவுக்குக் காட்சிகள் மிக இயல்பாகவும், காதல் அடிப்படையிலான திரைக்கதை என்பதால் வண்ணமயமான அழகோடு அமைந்திருந்தன. இதில் பணியாற்றியவர் ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி என்பதால்தான் ஒலி வடிவமைப்பு என்கிற விஷயத்தையெல்லாம் நாம் சம்பிரதாயமாகப் பாராட்டுகிறோம். இதைப் போன்ற பல நுட்பக்கலைஞர்களின் உழைப்பை நாம் அறிவதில்லை. 

பொதுவாக அனிருத்தின் பாடல்களில் இரைச்சல் அதிகமாக இருந்தாலும் காதல் தொடர்பான மெல்லிசைப் பாடல்கள் வசீகரமாக அமையும். அதிலும் சிவகார்த்திகேயன் கூட்டணி என்றால் நிச்சயம் நல்லதொரு மெலடியை எதிர்பார்க்கலாம். ஆனால் அந்த மாயம் எதுவும் இத்திரைப்படத்தில் சாத்தியமாகவில்லை. எல்லோமே இரைச்சல். பின்னணி இசையும். 

எப்பாடு பட்டேனும் தன் காதலைப் பெற்று விடுவதற்காக ஓர் இளைஞன் செய்யும் நகைச்சுவையை அதன் சாத்தியமான எல்லைக்குள் சுவாரசியமாகவே உருவாக்க முயன்றுள்ளார் இயக்குநர் பாக்யராஜ் கண்ணன். காதலுக்காக அத்தனை சிரமங்களை எதிர்கொள்ளும் அந்த இளைஞன், தான் விரும்பிய பெண் முதன்முறையாக தன்னிடம் காதலைச் சொல்லும் போது பெண் வேடத்தில் இருக்க வேண்டிய அபத்த துயரமான சூழல் போன்று சில விஷயங்கள் இத்திரைப்படத்தில் நன்றாக அமைந்துள்ளன. போலவே பெண் வேடத்தைக் கலைக்க வேண்டிய சூழல் நாடகத்தனமானதாக இருந்தாலும் பொருத்தமான தொடர்ச்சியோடு அமைந்துள்ளது. 

ஆனால் இளைஞனின் காதல் போராட்டத்தை மட்டுமே மையப்படுத்தியதில் இதர பல விஷயங்களில் கோட்டை விட்டிருக்கிறார். எவ்விதப் பயிற்சியும் இல்லாத இளைஞன் எவ்வாறு மருத்துவனையில் பெண் செவிலியாகப் பணிபுரிய முடியும் உள்ளிட்ட நிறைய தர்க்கப் பிழைகள் மலிந்திருக்கின்றன. இதை நியாயப்படுத்தும்படியான காட்சிகளை, வசனங்களை இணைத்திருக்கலாம். போலவே ஒரு பெண்ணைத் துரத்தி துரத்தி காதலைச் சம்பாதிப்பது அல்லது பிடுங்குவது போன்ற நாயகர்களின் தேய்வழக்கு காட்சியமைப்புகளை இயக்குநர்கள் கைவிடலாம். இவை இளைஞர்களுக்கு மோசமான முன்னுதாரணமாக அமையும் ஆபத்தை சமூக உணர்வோடும் சிந்திக்கலாம். ஓர் ஆண் தனது கம்பீரத்தால், நல்லியல்பால் காதலை அடைவது போன்ற நல்ல உதாரணங்களை முன்வைக்கலாம். காதலைப் பற்றிய சரியான புரிதலோடு அமைந்த திரைக்கதைகளை உருவாக்கலாம். தன்னுடைய காதல் தோல்விக்கு பெண்கள் மீது பழியைப் போட்டு புலம்பும் அபத்தங்களைத் தவிர்க்கலாம். அந்த வகையில் இத்திரைப்படத்தில் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய விஷயங்கள், உதாரணங்கள் இருக்கின்றன. ஆனால் இவை நகைச்சுவைப் பூச்சோடு வெளிப்பட்டிருப்பதால் புன்னகையோடு கடக்க வேண்டியிருக்கிறது. பாறாங்கல்லைத் தலைமேல் தூக்கி மிரட்டி காதலைக் கேட்கும் 'சேது' மாதிரியான வன்முறைக் காதலுக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் புரிந்து கொள்ளப்பட வேண்டியது. 

**

பல வருடங்களுக்கு முன்பு படித்த ஒரு பாரசீக கவிதையின் ஒரு வரியின் கருத்து மட்டும் மங்கலாக நினைவில் இருக்கிறது. தன் காதலியின் அருகாமையில் எப்போதுமே இருக்கவேண்டும் என்கிற தீரா ஆசையில் ஓர் இளம் கவிஞன் சொல்கிறான். 'நான் உன் சகோதரனாக பிறந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே. ஊராரின் பார்வைக்கு அஞ்சாமல் உன் வீட்டில், உன் அருகாமையிலேயே இருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்குமே' 

காதலின் பித்து உள்ளுக்குள் நிறைந்திருக்கும் நிலையில், காதலின் பிரிவுத் துயரத்தில், உறவுகளின் பொருள் கூட அவனுக்கு  உறைப்பதில்லை. கலாசாரக் காவலர்கள் ஒருவேளை அறச்சீற்றத்துடன் இதை எதிர்த்தாலும், மனம் முழுக்க காதல் நிறைந்திருப்பவர்களால்தான் இந்த நோக்கில் அந்தக் கவிதை வரியின் உள்ளார்ந்த தன்மையை புரிந்து கொள்ள முடியும். இதில் வரும் இளைஞனும் அம்மாதிரியான ஒரு பித்து நிலையில் பெண் ஒப்பனையுடன் குறுக்கு வழியில் தன் காதலை நிறைவேற்றிக் கொள்வதை தவிர வேறெந்த வன்முறையையும் செய்யவில்லை. 

ஆனால் இத்திரைப்படம் குறித்தான சில எதிர்விமரிசனங்கள், அதீதமான தொனியில் ஒலிக்கும் கண்டனங்களைக் கண்டேன்.

பொறுக்கி நாயகர்கள் தங்களின் காதலைப் பிடுங்கிக் கொள்ளும் பெருமிதத்தோடும் அது நிறைவேறாத பட்சத்தில் அதற்கும் பெண்களையே குறைசொல்லி 'அடிடா அவளை' என்று வன்முறை விதைகளைப் பரப்பும் திரைப்படங்களை கண்டிப்பது தேவையானதே. ஆனால் இந்த சாகசத்தோடு நின்றுவிடும் ஆபத்தான படங்களைப் பிரதானமாகக் கண்டிப்பதை விட்டு ஒரு நகைச்சுவை திரைப்படத்தில் அரசியல் சரிநிலைகளைக் கூர்மையாகக் கவனிப்பது வேடிக்கையானது. 

இத்திரைப்படத்திலும் அதுபோன்ற கருத்தியல் அடிப்படைக் காட்சிகள் அமைந்திருந்தாலும், இணைக்கோடாக அதை இயக்குநர் சமன் செய்திருக்கும் காட்சிகளையும் கவனிக்கவேண்டும். காதல் திருமணத்தில் ஏன் வெறுப்பு என்று நாயகன் கேட்பதற்கு காதல் விவகாரத்தில் ஆசிட் அடிக்கப்பட்டு மருத்துவனையில் இருக்கும் பெண்ணை ஆவேசமாக உதாரணம் காட்டுகிறாள் நாயகி. சரியான விஷயம். ஆனால் எல்லா ஆண்களுமே இம்மாதிரியான பொறுக்கித்தனங்களில் ஈடுபடுவதில்லை. உண்மையாகவே தன் காதலைப் புரிய வைக்கப் போராடும் இளைஞர்களும் இருக்கிறார்கள். அந்தத் தரப்பையும் பற்றி இத்திரைப்படம் உரையாடுகிறது. 

பெண் ஒப்பனையிட்டு நாயகன் காதலில் வெற்றி பெறுவதுடன் இத்திரைப்படம் நின்றுவிடவில்லை. அவன் செய்யும் தவறை நண்பர்கள் சுட்டிக் காட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். காதல் வேகத்தில் அவனுக்கு ஒன்றும் தோன்றுவதில்லை. ஆனால் காதல் நிறைவேறிய செய்தி அறிந்தவுடன் அதுவரையான தவறின் மீது குற்றவுணர்வு எழுகிறது. அதற்காக மனம் வருந்துகிறான். ஒரு சிக்கலான சந்தர்ப்பத்தில் தன் தவறை நாயகியிடம் ஒப்புக் கொள்கிறான். நாயகிக்கும் அவன் ஏமாற்றியது குறித்தான கடுமையான கோபம் இருக்கிறது. அது மெல்ல தணியும் காட்சிகளோடுதான் படம் நிறைகிறது. 

அதுவரை காதலுணர்வே தோன்றாதவன், உள்ளுணர்வு பலமாக உந்த ஒரு பெண்ணைப் பார்த்து காதலிக்கத் தொடங்கினாலும் அவள் நிச்சயிக்கப்பட்டவள் என்று தெரிந்ததும் மரபை மீற நினைக்காமல்  ஒதுங்கிப் போகிறான். ஆனால் அதற்குப் பிறகு நிகழும் சில சம்பவங்கள் அவனுக்குள் வேறு விதமான சமிக்ஞையை உணர்த்துகின்றன. இப்படியான திரைக்கதைப் பயணத்தை இயக்குநர் சரியாகவே கையாண்டிருக்கிறார். 'பையன்களை அழ விடறதே பொண்ணுங்க வேலை' என்று பெண்களைக் குற்றம் சொல்லும் வசனங்கள், இன்றைய பெரும்பான்மையான பார்வையாளர்களான முதிராத இளைஞர்களை திருப்தி செய்யும் நோக்கில் எழுதப்பட்டவை என்பது அரங்கில் ஒலிக்கும் பலத்த கைத்தட்டல்கள் மூலம் தெரிகிறது. இவற்றைத் தவிர்த்திருக்கலாம். 

பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களில் எத்தனை சதவிகிதம் மணமகளுடைய தேர்வின் பங்களிப்பும் மனப்பூர்வமான ஒப்புதலும் இருக்கிறது என்பது போன்ற கேள்விகளையும் இத்திரைப்படம் எழுப்புகிறது. எத்தனை கல்வி கற்ற பெண்ணாக இருந்தாலும் தன்னுடைய பெற்றோர்களின் தற்செயலான தேர்வை பாசத்துக்குக் கட்டுப்பட்டு கண்மூடித்தனமான ஒப்புக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமே பெரும்பாலான பெண்களுக்கு அமைகிறது. அவளின் ரசனை, விருப்பம், உள்ளார்ந்த தேர்வு, குழப்பம் ஆகியவை குறித்து அந்தப் பெண் உட்பட எவருமே யோசிக்கிறார்களா என்கிற கேள்வியையும் இத்திரைப்படம் எழுப்புகிறது. 

ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி 'ரெமோ' ஒரு சம்பிரதாயமான கேளிக்கைத் திரைப்படம். அதற்கு மேல் இதற்கு ஏதும் மதிப்பில்லை. என்னளவில் சில இடங்களில் அமைந்த சலிப்பைத் தவிர ஒட்டுமொத்தமாக, நகைச்சுவையின் மீதான ஒரு காதல் திரைப்படத்தை கண்ட அனுபவமே என்னுள் நிறைந்திருந்தது. 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/10/11/w600X390/Remo982_1.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2016/oct/11/2-2579156.html
2578192 சினிமா திரை விமரிசனம் விஜய் சேதுபதியின் ‘றெக்க’: சினிமா விமரிசனம் சுரேஷ் கண்ணன் Saturday, October 8, 2016 02:13 PM +0530  

இயல்பானதொரு திரைக்கதைக்குள் தம்முடைய எளிய நடிப்பை சிறப்பாக பொருத்திக் கொள்வதுதான் விஜய் சேதுபதியின் பொதுவான அடையாளமாக பெரும்பாலும் இதுவரை இருந்தது. அதுதான் அவருடைய மிகப் பெரிய பலமும் கூட. ஆனால் விக்ரமின் 'சாமி'  திரைப்படத்தை மோசமாக நகலெடுத்தது போல அமைந்த 'சேதுபதி'யில் அவரை காக்கி உடைக்குள் ஆக்‌ஷன் நாயகராகப் பார்த்தபோது சற்று திகிலாகத்தான் இருந்தது. மறுபடியும் அவர் தனக்கு இணக்கமான பாதைக்குத் திரும்பியபோது ஆசுவாசம் ஏற்பட்டது. தமிழ் சினிமாவுக்குள் பலகாலமாகப் பெருகி நிற்கும் 'அதிநாயகத்தன்மையை' உடைத்து சாமானிய நாயகர்களுக்கான சினிமாவாக ஆக்கிக்கொண்டிருப்பதில் விஜய் சேதுபதிக்கு ஒரு முக்கியமான பங்குண்டு.

2016-ம் வருடத்தில் இதுவரை வெளியாகியிருக்கும் அவரது ஐந்து திரைப்படங்களுமே பெரிய அளவில் பழுதில்லை. அவரது இதர இரு திரைப்படங்கள் அரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் அதே சமயத்திலேயே  மூன்றாவது திரைப்படமான 'றெக்க' வெளியாகியிருக்கிறது. சமகால தமிழ் சினிமா போக்கின் படி  வேறெந்த நாயகருக்கும் கிடைக்காத பெருமை இது. கடந்த கால நாயகர்களுக்கு மட்டுமே இது சாத்தியமான விஷயம் இது.  

'றெக்க'யின் மூலம் தமது சாமானிய முகத்திலிருந்து விலகி மறுபடியும் 'ஆக்ஷன் பார்முலாவில்' இறங்கத் துணிந்திருக்கிறார் விஜய் சேதுபதி. உலகமெங்கிலும் சாகச நாயகர்களுக்கான வரவேற்பு பொதுவாக அதிகமிருக்கும் சூழலில் இந்தப் பரிசோதனையில் அவர் ஈடுபட்டது பெரிய குற்றமில்லைதான். ஆனால் அதுவரை தமக்கு வெற்றியைத் தேடித் தந்துகொண்டிருந்த ஒரு பாதுகாப்பான குகையில் இருந்து இன்னொரு வடிவத்துக்கு மாற நினைக்கும்போது அதற்கான திட்டமும் முன்தயாரிப்பும் வலுவானதாகவும் சுவாரசியமானதாகவும்  இருக்க வேண்டும். அந்த மாற்றம் நியாயமானதுதான் என்று பார்வையாளர்களை ஒப்புக் கொள்ளச் செய்ய வேண்டும். அந்தளவுக்கான ஒரு திரைக்கதையை தேர்வு செய்திருக்க வேண்டும்.

விஜய்சேதுபதியின் இந்த மாற்றத்துக்கு 'றெக்க' உதவிகரமாக இருந்ததா என்றால் துரதிர்ஷ்டமாக இல்லை என்றுதான் சொல்லியிருக்கிறது. தேய்வழக்கு மசாலா திரைக்கதையை 'கொக்கு தலையில் வெண்ணைய் வைத்து பிடித்த கதையாக' அசுவாரசியமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ரத்தின சிவா.


***

தமிழ் சினிமாவின் நாயகர்களுக்கு என்றே பிரத்யேகமாக உள்ள விநோதமான நோய்களுள்  ஒன்று, 'றெக்க' நாயகனான சிவாவிற்கும் இருக்கிறது. காதலர்களின் திருமணத்தில் தடையேற்பட்டால் அதில் நுழைந்து அவர்களை இணைத்து வைப்பது. இதற்கு முன்னர் விஜய், சசிகுமார் போன்றவர்களுக்கும் இந்த நோய் இருந்ததை நினைவுகூரலாம். இந்த வகையில் இத்திரைப்படத்தில் முக்கியமான வித்தியாசத்தை இயக்குநர் யோசித்திருக்கிறார். ஆம்.  எண்பது வயது முதியவர்களுக்கான  'சதாபிஷேக திருமணத்தில்' ஏற்படும் தடையையும் முறியடித்து அவர்களின் திருமணத்தை  நாயகனான விஜய்சேதுபதி நடத்தி வைக்கிறார். நகைச்சுவையெல்லாம் இல்லை. சீரியஸான காட்சிதான்.

சமூகநீதியின் அடிப்படையில் இயங்கும் இந்த  நோய்க்கூறுத் தன்மையின் வழக்கத்தின்படி வில்லனுக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் மணப்பெண்ணையும்  நாயகன் சிவா கடத்தி வந்து விட, வில்லன் பழிவாங்குவதற்காக நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறான். இந்த நிலையில் நாயகனின் தங்கைக்குத் திருமணம் நிச்சயமாகிறது. இதை அறிந்து கொள்ளும் வில்லன், திருமணத்தில் இடையூறு ஏற்படுத்த முயல, நாயகர்களுக்கு இருக்கும் இன்னொரு அடிப்படைத் தகுதியான பாசமிகு அண்ணனாக செயல்படுகிறான் சிவா. 'உனக்காக நான் என்ன செய்ய வேண்டுமானாலும் செய்கிறேன்' என்று  வில்லனிடம் வாக்குறுதி தருகிறான்.

'நான் சொல்லும் பெண்ணைக் கடத்தி வர வேண்டும்' என்கிறான் வில்லன். அது வில்லனின் பகையாளி ஒருவனுக்காக நிச்சயிக்கப்பட்டிருக்கும் மணப்பெண். இதன் மூலம் நாயகனைச் சிக்கலில் தள்ளி விட்டு பழிவாங்கலாம், தனது பகையாளியையும் பழிவாங்கி விடலாம் என்பது வில்லனின் திட்டம். ஒரு கல்லில் இரண்டு Mangoes. 

ஏற்கெனவே  இருக்கும் இந்த மங்கூஸ் வில்லனோடு, நாயகனுக்கு கூடுதலாக மேலும் இரண்டு பயங்கர வில்லன்களின் பகைமையையும் எதிர்கொள்ள வேண்டிய சவால் அமைகிறது. 

***

தனது தங்கையின் திருமணம் எவ்வித சிக்கலும் இல்லாமல் நடைபெற, சில மணி நேரங்களுக்குள் தம்மிடம் தரப்பட்டிருக்கும் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சிக்கலான சூழல் நாயகனுக்கு. 

ஒரு கச்சிதமான ஆக்ஷன் மசாலா திரைக்கதையின் அடிப்படையான கட்டுமானத்துக்குள் அமைந்ததுதான். பரபரவென்று நகர்த்தியிருக்க  வேண்டிய திரைக்கதையை 'அதுல பார்த்தீங்கன்னா' என்று விகே ராமசாமி, சாவகாசமாக இழுத்து வசனம் பேசுவாரே, அப்படிக் கொட்டாவி வரும்படி, நம்பகத்தன்மை என்பது துளியுமில்லாமல் இழுத்திருக்கிறார்கள்.

'கில்லி' திரைப்படத்தின் சில தீற்றல்களை இயக்குநர் பின்பற்றியுள்ளதாக ஒரு தகவல் உள்ளது. 'சாமி' படத்தின் மோசமான நகலாக 'சேதுபதி' அமைந்ததைப் போல 'கில்லி'யின் அபத்தமான நகலாக  'றெக்க' முறிந்து போனதுதான் பரிதாபம்.

அது சாகசத் திரைப்படமாக இருந்தாலும் சரி, வேறு வகைமையில் அமைந்த திரைப்படமாக இருந்தாலும் சரி, பாத்திரத்தின் உணர்வுகளோடும் சிக்கல்களோடும் பார்வையாளர்கள் ஒத்திசைவுடன் இணையவேண்டும். பிரதான பாத்திரம் எதிர்கொள்ளும் சிக்கலை தன்னுடைய சிக்கலாக உணர வேண்டும். அவ்வாறான பிணைப்பை முதலிலேயே நிறுவும் திரைக்கதைதான் பெரும்பாலும் வெற்றி பெறும். இந்த மாயத்தை நிகழ்த்தாமல் எவ்வித பிரம்மாண்டமான நுட்பத்தைக் கொட்டினாலும் அது எடுபடாது. 'றெக்க'யில் நிகழ்ந்திருக்கும் பரிதாபமான தோல்வி இதுதான்.

தனது பால்ய கால தோழியான 'மாலா அக்காவை' பல வருடம் கழித்து ஒரு சிக்கலான நேரத்தில் லிஃப்ட் ஒன்றினுள் நாயகன் சந்திப்பதாக ஒரு காட்சி வருகிறது. பார்வையாளன் சற்று நெகிழ்வுபூர்வமாக உணரும் காட்சி இது ஒன்று மட்டுமாகத்தான் இருக்கும். இதுவும் நாடகீயத்தனம் கொண்டதுதான் என்றாலும் இதர மொண்ணைத் தனமான காட்சிகளோடு ஒப்பிடும்போது 'இரு கோடுகள் '  தத்துவம் போன்று இது சிறந்ததாக தோன்றி விடுவதில் ஆச்சரியமொன்றும் இல்லை.


***

"ஒரு அட்வைஸ் சொல்றேன், கேக்கறியா.. பில்டப்பை குறைச்சுட்டு நேரா மேட்டருக்கு வா'.. என்று ஒரு காட்சியில் வில்லனிடம் நாயகன் சொல்வதாக ஒரு வசனம் வருகிறது. இதை இயக்குநர் தமக்கே நிறைய முறை சொல்லிப் பார்த்துக் கொண்டிருக்கலாம். அந்த அளவுக்கு வில்லன்கள் குறித்தான மிகையான சித்திரங்கள் முதலில் சொல்லப்படுகின்றன. நாயகன் கடத்தவிருக்கும் பெண்ணின் தந்தை, மதுரையில் எத்தனை பெரிய அரசியல்வாதி  என்பதும் அவர் வீட்டு வாசலில் காலை வைத்தாலே வெட்டிவிடுவார்கள் என்றெல்லாம் மிரட்டலாக சொல்லப்படுகிறது. ஆனால் நாயகன் அங்கே செல்லும்போது வீட்டு வாசலில் வாட்ச்மேன் கூட இருப்பதில்லை. 

ஆனால் நாயகியுடன் கிளம்பும்போது மட்டும் எங்கிருந்தோ வந்த சுமார் நூறு  அடியாட்கள் நாயகனைத் துரத்துகிறார்கள். 'சர்ஜிக்கல் தாக்குதல்' மூலம் அவன் ஒவ்வொருவராக வீழ்த்திக்கொண்டே முன்னகர்கிறான். அந்தப் பகுதியில் மின்தடை உள்ள நேரத்தை முன்னே அறிந்துகொண்டு அதன் மூலம் அவன் தப்பிப்பதை நாம் சமயோசித சாகசம் என்று எடுத்துக் கொள்வதா, அல்லது  நகைச்சுவை என்று பார்ப்பதா என்று நீண்ட நேரம் குழம்ப வேண்டியிருக்கிறது. மட்டுமல்லாது, மின்மிகை மாநிலம் என்று அரசு தரப்பில் சொல்லப்படும் தமிழகத்தில் 'மின்தடை'யுள்ளதாக ஒரு காட்சியில் சித்தரிப்பதின்  மூலம் இத்திரைப்படத்தை ஓர் அரசியல் விமரிசனப் பிரதியாகவும் கருதலாம் என்று இதை வலிந்து பாராட்ட விரும்புபவர்கள் ஒரு காரணம் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

உலகத்தில் உள்ள அத்தனை ராணுவமும் வந்தாலும் அதை எதிர்கொள்ளக்கூடிய தன்னம்பிக்கையுடன் நாயகன் இருப்பதே, 'இது சினிமா, இது சினிமா' என்கிற செய்தியை நம் முகத்தில் அறைந்து சொல்லிபடியே இருக்கிறது. இந்தச் சிக்கல்களை சற்றாவது யதார்த்தத்துடன் எதிர்கொள்ளும் பரபரப்போ திட்டமோ என்று எதுவுமே அவனிடம் இருப்பதில்லை. பூனை - எலி போன்று புத்திசாலித்தனமாக நிகழ்ந்திருக்க வேண்டிய இந்த ஆட்டத்தை, செயற்கையான, மிகை சாகச சித்தரிப்புகளின்  மூலம் 'எப்படியும் நாயகன்தானே ஜெயிக்கப் போகிறான்' என்று விட்டேத்தியான சோர்வை பார்வையாளர்களிடம் ஏற்படுத்தி விடுகிறார் இயக்குநர்.

இதில் ஆறுதலாக இருக்கிற ஒரேயொரு விஷயம் என்னவெனில், நாயகனின் சண்டைக்காட்சிகள் மசாலா திரைப்படங்களுக்கு இணையானதாக இருந்தாலும், இதர காட்சிகளின் வசனங்களில், உடல்மொழியில் விஜய்சேதுபதி தன்னுடைய இயல்பான நடிப்பை பெருமளவில் விட்டுத்தராமல் இருப்பதுதான். 'பஞ்ச் டயலாக் பேச மாட்டேன். பஞ்சு மாதிரி பேசுவேன்' என்று ஒரு காட்சியில் அவர் சொல்வதை  பெரும்பாலும் பிடிவாதமாக பின்பற்றுவது மட்டுமே இந்தச் சத்தங்களுக்கு இடையில் சற்று ஆறுதல்.

***

அதேதான். சமீபகால தமிழ் சினிமாவின் நாயகிகளைப் போலவே இதன் நாயகியும் புத்தி பேதலித்த மாதிரியே செயற்படுகிறார். பின்னர் வரும் காட்சிகளின் மூலம் இயக்குநர் மொண்ணையாக சமாதானம் சொல்ல முயன்றாலும், நாயகனைப் பார்த்தவுடனேயே அவன் மீது உலகளவுக்கு நம்பிக்கை வைத்து ஓர் இளம்பெண் கிளம்பி விடுவதும் காதலிக்கத் தொடங்கிவிடுவதும் அத்தனை அசட்டுத்தனமான சித்தரிப்புகளாக இருக்கின்றன. 

ஹீரோக்கள் ஆதிக்கம் செய்யும் தமிழ் சினிமாவில் நாயகிகளுக்கான இடம் அவர்களுக்கான இளமைப் பொலிவில் மட்டுமே அமைந்திருப்பது ஒருவகையில் துரதிர்ஷ்டம்தான். லஷ்மி மேனன், தனது முந்தைய திரைப்படங்களின் தோற்றத்தில் இருந்த  வசீகரத்தைப் பெருமளவு இழந்திருக்கிறார். விவேக் ஒரு திரைப்படத்தின் நகைச்சுவைக்காட்சியில் தன் உடம்பெங்கும் காற்று ஏற்றிக் கொண்டு தோற்றமளிப்பது போல இவர் ஆகிவிட்டிருப்பதைக் காண நெருடலாக இருக்கிறது. 

நாயகியைப் போலவே அவரது அம்மா, பாட்டி, வில்லன்கள், நாயகனின் தந்தை என்று ஏறத்தாழ எல்லோருமே புத்தி பேதலித்தவர்கள் போலவே இருக்கிறார்கள். 

நாயகன் ஏன் காதலர்களை இணைத்து வைப்பதில் இத்தனை ஆர்வம் காட்டுகிறான் என்பதற்கு ஒரு கொடுமையான பிளாஷ்பேக் வருகிறது. அசோகன், நம்பியார் காலத்து பிளாஷ்பேக். அதிலும் வில்லன் துரத்திக் கொண்டிருக்கும் ஓர் அசந்தர்ப்பமான சூழலில் நிதானமாக இதைச் சொல்லிக் கொண்டிருக்கிறான்.

நாயகன் இளம் வயதில் தன்னுடைய ஆசிரியையிடம் காதலைச் சொல்ல முற்படுவதாக வேறு சில காட்சிகள் வருகின்றன.. இளைஞர்களை கெடுத்தது போதாதென்று 'பாக்யராஜ்தனமான' சிறுவர்களைச் சித்தரிப்பதின் மூலம் அவர்களையும் தமிழ் சினிமா இயக்குநர்கள் பாழ்படுத்தி விடுவார்கள் போலிருக்கிறது. 'திருநாள்' என்கிற காவியத்தில் வரும் ஒரு முத்தக்காட்சி இதிலும் வந்து விடுமோ என்று கூட பயந்து கொண்டிருந்தேன். நல்ல வேளையாக, அந்த விபத்தெல்லாம் நடக்காமல் 'லவ்' என்பது 'அன்பு' என்று சிறுவன் தாமதமாகப் புரிந்து கொள்வதால் நாம் தப்பிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. 

மற்ற சாதாரண பாத்திரங்கள் மனப்பிறழ்வுடன் அலைந்து கொண்டிருக்கும்போது, திறமையான நடிகரான கிஷோரை 'பைத்தியக்கார' பாத்திரத்தில் நடிக்க வைத்து அழகு பார்த்திருக்கிறார் இயக்குநர். இதன் மூலம் கிஷோரின் திறமை பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டதுதான் மிச்சம். 'மாலா அக்காவாக' நடிப்பவர் சற்று தேவலை. ஆனால் இவரை தொலைக்காட்சி சீரியல்கள் விரைவில் தத்தெடுத்துக் கொள்ளும். அத்தனை டிராமா. நகைச்சுவை செய்ய வாய்ப்பில்லாமல் ஓரமாக நிற்க வேண்டிய அவலம் சதீஷுக்கு.

***

'கும்கி' என்கிற ரெடிமேட் மாவில் இன்னமும் பிடிவாதமாக வடை சுட்டுக் கொண்டிருக்கிறார் டி.இமான். வேக தாளயிசைப் பாடலாக 'விர்ரு விர்ரு' என்று வரும் பாடலைக் கேட்டாலே நமக்கு 'சுர்'ரென்று கோபம் வருகிறது. 'டால்பி' நுட்பத்தில் இவருடைய பின்னணி இசையின் அலறலைக் கேட்க கேட்க நமக்கு 'றெக்க' முளைத்து வெளியில் பறந்து விட்டால் கூட தேவலை என்றாகி விடுகிறது. அசந்தர்ப்பமான நேரத்தில் தடைக்கற்களாக  வரும் 'டூயட்'கள் எரிச்சலையூட்டுகின்றன. 

ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், சண்டைக்காட்சி அமைப்பாளர்கள் உள்ளிட்ட சில நுட்பக் கலைஞர்களின் உழைப்பெல்லாம் அபாரம்தான். ஆனால் அத்தனை உழைப்பும் எதற்காக பயன்படுகிறது என்பதில்தான் அதன் பொருள் அர்த்தமாகிறது. 

விஜய் சேதுபதி தன்னுடைய அடுத்தடுத்த பயணத்தை சுயபரிசீலனையோடும் தெளிவான திட்டங்களோடும் தீர்மானிக்க வேண்டிய எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறது 'றெக்க'. அவரது தொடர்ச்சியான, வெற்றிகரமான மைல் கல்களில் ஒரு தடைக்கல்லாக நிற்கும் ஆபத்தைக் கொண்டிருக்கிறது இத்திரைப்படம்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/10/8/w600X390/rekka2.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2016/oct/08/1-2578192.html
2557415 சினிமா திரை விமரிசனம் ‘தர்மதுரை' விமரிசனம்: விஜய் சேதுபதியின் ராஜ்ஜியம்!  சுரேஷ் கண்ணன் DIN Saturday, August 20, 2016 03:46 PM +0530 இயக்குநர் சீனு ராமசாமியின் நான்காவது திரைப்படம். இதற்கு முன்னர் வெளிவந்த ரஜினியின் ஒரு வணிகமசாலா திரைப்படத்தின் தலைப்பை நினைவுப்படுத்தும் ஒரே நெருடலைத் தவிர வேறு எந்த மசாலாத்தனமும் இதில் இல்லாதது பாராட்டுக்குரியது. வருங்கால முதல்வர் கனவுடன் பஞ்ச் டயலாக் பேசி சிரிக்க வைக்கும் ஆக்‌ஷன் நாயகன், டாஸ்மாக் பார் குத்துப் பாட்டு, வெளிநாட்டு டூயட், இயற்பியல் விதிகளை மீறி டாட்டா சுமோ ஜீப்புகள் வானத்தில் பறக்கும் சண்டைக் காட்சிகள், கவர்ச்சி நடனங்கள் என்று அபத்த ஜோடனைகள் எதுவுமில்லாமல் ஓர் எளிய, இயல்பான திரைப்படத்தைத் தந்து தன் குருவான பாலுமகேந்திராவின் பெயரைத் தொடர்ந்து காப்பாற்றும் விதத்தை இதிலும் கச்சிதமாகப் பின்பற்றியிருக்கிறார் சீனு ராமசாமி.

பெரும்பாலும் நெய்தல் நிலவெளிக் காட்சிகளின் பின்னணி, சிறுநகரத்து அல்லது கிராமத்து எளிய மனிதர்கள், எவ்வித முகச்சுளிப்பையும் ஏற்படுத்தாத இயல்பான, நெகிழவைக்கும் திரைக்கதை, பொருத்தமான நடிகர்கள், உணர்ச்சிகரமான சம்பவங்கள், இனிமையான இசை, சிறந்த ஒளிப்பதிவு போன்றவற்றின் கலவையை வைத்து தம் திரைப்படங்களை உருவாக்குவது சீனு ராமசாமியின் பாணி. இந்தத் திரைப்படத்திலும் அதே வசீகரமான முறையைப் பின்பற்றி ஒரு நல்ல திரைப்படத்தை தந்திருக்கிறார். ஆனால் இதிலுள்ள திரைக்கதை கோளாறுகளையும் குழப்பங்களையும் தேய்வழக்கு நாடகத்தனங்களையும் மீறி இதுவொரு ஃபீல் குட் திரைப்படமாக மிளிர்வதற்காக இயக்குநரைப் பாராட்டியாகவேண்டும்.

சிறுகதைகள் போல பல்வேறு இழைகள், நபர்கள், சம்பவங்கள் என அடுத்தடுத்து பயணிக்கும் திரைக்கதைதான் என்றாலும் இத்திரைப்படத்தை ஒரு சுவாரசியமான அனுபவமாக்கியிருப்பதற்கு முக்கியமான காரணம் விஜய் சேதுபதி. ஏறத்தாழ முழு திரைப்படத்தையும் அவர்தான் தாங்குகிறார் என்றாலும் கூட மிகையில்லை. புகழும் வெற்றியும் பெற்ற நடிகர்களின் பாணியைத் தெரிந்தோ அல்லது தன்னிச்சையாகவோ நகலெடுப்பது பொதுவாக இளம் நடிகர்களின் வழக்கமாக இருக்கும். அவ்வாறில்லாமல் தனக்கென்று ஒரு பிரத்தியேகமான இயல்பான நடிப்பை கையாள்வதில் விஜய் சேதுபதி தொடர்ந்து கவர்கிறார்.

அவரது நடிப்பை தோராயமாக எப்படி வர்ணிக்கலாம் என்றால், நீங்கள் வீட்டிலிருந்து புறப்படும்போது பள்ளிக்குச் செல்லும் பக்கத்து வீட்டுச் சிறுமியைப் பார்க்கிறீர்கள். ‘ஹேய்... குட்டி, எப்படி இருக்கே... ஸ்கூலுக்குக் கிளம்பிட்டியா... குட்... குட்... பார்த்துப் போ... நல்லாப்படி... என்ன...?!’ என்று சொல்லும் இயல்பான தொனியை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். ஏறத்தாழ விஜய் சேதுபதி நடிப்பதில் உள்ள பொதுவான இயல்புதன்மையின் அழகு இப்படித்தான் இருக்கிறது. குறிப்பாக இத்திரைப்படத்தில் அவரின் நடிப்பு இன்னமும் கூட மெருகேறியிருக்கிறது எனலாம்.

'சுமார் மூஞ்சி குமாராக, துணை நடிகராக இருந்த தன்னை முதன்முதலில் நாயகனாக்கிய சீனு ராமசாமிக்குக் குருவணக்கம் செலுத்தும் விதத்தில் சில சச்சரவுகளையும் மீறி இதில் அவர் நடித்துத் தந்திருப்பது பாராட்டத்தக்கது. (ஆனால் - தர்மதுரை, உடம்பைக் குறை என்று சொல்ல வேண்டியிருக்கிறது!)

**
தர்மதுரை என்பவன் யார்?

தினமும் காலையில் எழுந்தவுடன் தவறாமல் தண்ணியடிப்பது, 'இவன்க உங்களை ஏமாத்திடுவாங்க. உஷாரா இருங்க' என்று சீட்டுத்தொழில் நடத்தும் தம் சகோதர்களைப் பற்றியே ஊர் மக்களிடம் போட்டுக் கொடுப்பது, சொந்த வீட்டிலேயே அலப்பறைகள் செய்வது, சகோதரர்கள் தம்மை அறையில் அடைத்து வைத்தாலும் விஜய் மல்லையா மாதிரி சாமர்த்தியமாக தப்பி அலப்பறையை வெளியில் தொடர்வது என்று தம் கிராமத்தில் ஒரு ரகளையான நபராக இருப்பவன் விஜய் சேதுபதி. இத்தனைக்கும் இவன் மருத்துவப் படிப்பு படித்தவன் வேறு.

சகோதரர்கள் இவனை எதிரியாகவும் மற்றவர்கள் பைத்தியக்காரனாகவும் பார்க்கும்போது அவனுக்கு ஆதரவாக இருக்கும் ஒரே ஜீவன், தமிழ் சினிமாவின் வழக்கம் போல அவனது தாயான ராதிகா மட்டுமே.

இவனுடைய தொல்லை தாங்காமல் அருமைச் சகோதரர்கள் ஒருநாள் இவனை 'ஏதாவது செய்து விடுவதற்காக' திட்டம் போட, 'எங்காவது போய் பொழச்சுக்கப்பா’ என்று அவனை சிறையிலிருந்து மீட்டு அனுப்புகிறார் ராதிகா. இரவில் கிளம்பும் விஜய் சேதுபதி, சகோதரர்கள் வைத்திருக்கும் சீட்டுப்பணத்தின் பையைத் தவறுதலாக எடுத்துக் கொண்டு கிளம்பி விடுகிறார்.
டாக்டருக்குப் படித்தும் ஏன் இப்படி அலப்பறையான குடிகாரர் ஆனார்? ஏன் சொந்த சகோதரர்களிடம் இப்படி பகைமை பாராட்டுகிறார்? இவற்றின் பின்னணி என்ன? தவறுதலாக எடுத்துப்போகும் லட்சக்கணக்கான சீட்டுப்பணம் என்னவாகிறது? அதை அவர் திருடி எடுத்துக்கொண்டு ஓடியதாக நினைத்து அவரைக் கொலைவெறியுடன் துரத்தும் சகோதரர்களிடமிருந்து தப்பித்தாரா என்பதைப் பின்னர் வரும் காட்சிகள் விவரிக்கின்றன.

***

தமது திரைப்படங்களில் பெண் கதாபாத்திரங்களை வலிமையாகவும் முக்கியத்துவம் தந்தும் சித்தரிக்கும் இயக்குநர்களில் சீனு ராமசாமியும் ஒருவர்.
அவ்வாறு இத்திரைப்படத்திலும் விஜய் சேதுபதியின் வாழ்வில் மூன்று பெண்கள் வருகிறார்கள். ஒன்றன் பின் ஒன்றாக இந்தச் சம்பவங்களை எவ்வித குழப்பமும் அல்லாத தெளிவான திரைக்கதையின் மூலம் அவற்றை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இதில் ஸ்ருஷ்டி டாங்கேவின் பகுதி அவசியமற்ற அளவில் சிறியது என்றாலும் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் தமன்னா வரும் பகுதிகள் அழுத்தமான காட்சிகளுடன் அமைந்துள்ளன.
மருத்துவக் கல்லூரியில் தம் கூட படிக்கும் மாணவியான ஸ்ருஷ்டி டாங்கே தம்மைக் காதலிப்பதாகச் சொல்லும்போது விஜய் சேதுபதி முதிர்ச்சியுடன் அதைச் சமாளிப்பது அருமை. தமன்னா இதில் நடிக்கிறார் என்றவுடன் அவர்தான் இதில் பிரதான நாயகியாக இருப்பாரோ என்கிற நம் எண்ணத்தில் வெற்றிகரமாக மண்ணள்ளிப் போடுகிறார் இயக்குநர்.

விஜய் சேதுபதிக்கும் தமன்னாவுக்கும் இருக்கிற பாலினப் பாகுபாடுகளைத் தாண்டிய இயல்பான நட்பு வெளிப்படுகிற காட்சிகள் எல்லாம் அருமையாகப் பதிவாகியிருக்கின்றன. கூட படிக்கும் மாணவி தம்மைப் பார்த்து ஒரு புன்னகை செய்துவிட்டாலே அவள் தம்மைக் காதலிக்கிறாள் என்று எண்ணிக்கொள்வதும் பிறகு அவ்வாறில்லை என்று தெரிய வந்தவுடன் கொலைவெறியாகி அவள் மீது ஆசிட் அடிப்பதும், அரிவாள் தூக்குவதுமாக இருக்கும் சமகால இளைஞர்களின் குணாதிசயத்தின் போக்குக்கு ஒருவித கற்றலைத் தரும் விதமாக ஆண் - பெண் நட்பு இத்தனை இயல்பாக சித்தரிக்கப்பட்டதற்கு இயக்குநரைப் பாராட்டவேண்டும்.

வாழ்க்கையில் பழைய விஷயங்களை மறக்கக்கூடாது என்கிற செய்தியை உலகத்துக்குச் சொல்வதற்காக தாம் எல்.கே.ஜி படிக்கும்போது போட்ட ஃபிராக்குகளை, நாயகியான பிறகும் பெரும்பாலான திரைப்படங்களில் அணிந்து வெறுமனே கவர்ச்சிப் பொம்மையாக இதுவரை வந்து கொண்டிருந்த தமன்னாவுக்குப் புடவையணிவித்து அவரை உருப்படியாக நடிக்க வைத்திருப்பதற்காக இயக்குநருக்கு சிறப்பான நன்றி. திரைப்படத்தின் பிற்பகுதியில், தோல்வியடைந்த தமன்னாவின் திருமண வாழ்க்கையை விஜய் சேதுபதியின் வருகை சரிசெய்வதும் இவரைக் கொடுமைப்படுத்தின கணவனைப் போட்டுப் புரட்டியெடுப்பதும் அரங்கில் பலத்த கைத்தட்டல் வரவழைத்த காட்சிகள்.

படிப்பு முடிந்து கிராமத்தில் மருத்துவராகப் பணிபுரியும் விஜய் சேதுபதி, மற்றவர்களுக்கு உதவி செய்யும் நல்லியல்புடன் இருக்கும் இளம் பெண்ணான ஐஸ்வர்யா ராஜேஷைச் சந்தித்த கணத்திலேயே மனத்தைப் பறிகொடுப்பதும், வழக்கமாக பெண்கள் ஆண்களைப் பாதுகாப்பாக அணுகுகிற முறையில் அவர் 'அண்ணா, அண்ணா' என்று அழைத்ததையும் ஒதுக்கி வீட்டுக்குப் பெண் கேட்டுச் செல்வதும் 'தெரியாம உங்களை அண்ணா -ன்னு கூப்பிட்டுட்டேன். நீங்க எனக்கு மாமா" என்று ஐஸ்வர்யா ராஜேஷ் வெட்கத்துடன் தன் காதலை ஒப்புக் கொள்வதும் ரசனையான காட்சிகள். இருவருமே பெரும்பாலும் பார்வைகளாலேயே தம் காதலை வெளிப்படுத்திக்கொள்வதும் இயல்பானதாக இருக்கிறது.

குறிப்பாக கிராமத்துக் கிழவிகளுக்கு விஜய் சேதுபதி மருத்துவம் பார்க்கும் சமயங்களில் அதைக் காதலும் பெருமையும் கலந்த பார்வையில் ஐஸ்வர்யா ராஜேஷ் கவனிக்கும் காட்சிகள் அருமை. இவ்வளவு பெரிய படிப்பு படித்த மாப்பிள்ளை தனக்குக் கிடைப்பாரா என்கிற சந்தேகம் அவருடைய கண்ணில் எப்போதுமே நிழலாடிக் கொண்டிருப்பதற்கு ஏற்ப இறுதியில் அவரது கனவு பொய்யாகிப் போவதும் அதனாலேயே விஜய் சேதுபதி குடியடிமை ஆவதுமான சோகங்கள் நிகழ்கின்றன. பெரிதும் ஒப்பனையற்ற தோற்றத்துடன் வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் கண்களில் வெளிப்படும் காதல் உணர்வின் போதை நமக்கும் பரவுகிறது.

இதில் வரும் துணைக் பாத்திரங்கள் கூட அத்தனை அருமையாக நடித்திருக்கின்றன. ராதிகா, சொல்லவே வேண்டாம். தன் மகனை வீட்டை விட்டு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை ரகசியமாகச் செய்துவிட்டு இரவில் அமைதியாகப் படுத்திருப்பதும், இறுதிக் காட்சியில் தன் மகன் ஒரு சிறுவனுக்கு மருத்துவம் பார்க்கும்போது தம் மகன் தரும் மருந்து கவரைப் பிரமிப்புடன் பிரசாதம் போல் வாங்கிக் கொள்வதும் என கலக்கியிருக்கிறார். சிறிது நேரமே வந்ததாலும் எளிய குடும்பத்தின் தகப்பனின் சித்திரத்தை எம்.எஸ்.பாஸ்கர் அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு கண்ணியமான மருத்துவப் பேராசிரியரின் பங்கை ராஜேஷ் அபாரமாக தந்திருக்கிறார். விஜய் சேதுபதியின் சகோதரர்கள் உள்ளிட்ட இதர துணைபாத்திரங்களும் கூட நன்றாகவே இயங்குகின்றன. வீட்டு மாப்பிள்ளையாக அமர்ந்திருக்கும் நபரின் நடிப்பு நகைச்சுவைக் கலாட்டா.
  
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு யுவன் சங்கர் ராஜாவின் இசை, எப்படியாவது ஹிட்டாக்கி விட வேண்டும் என்கிற ஆவேசமெல்லாம் எதுவுமில்லாமல் அவருடைய இசை திரைக்கதையின் இயல்புடன் பொருந்தியிருக்கிறது. குறிப்பாக பருத்திவீரன் பாணியில் வரும் 'மக்கா கலங்குதப்பா' பாடல் (மதிச்சியம் பாலாவின் குரல் ரகளை) உற்சாகமளிக்கிறது. விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இடையிலான காதல் உணர்வுகளைச் சித்தரிக்கும் 'ஆண்டிப்பட்டி' பாடலும் அருமை. இந்தப் பகுதியில் தேனி மாவட்டத்தின் நிலவெளிக்காட்சிகளின் அழகியலை எம்.சுகுமாரின் காமிரா வைட் ஆங்கிளில் கலையுணர்வுடன் பதிவாக்கியிருக்கிறது.

பொதுமக்களின் பணத்தில் கற்கப்படும் படிப்பான மருத்துவம், கிராமத்தின் எளிய மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்கிற செய்தியை அடிநாதமாக, பிரசார உறுத்தல் இல்லாமல் சொல்லியிருக்கும் இயக்குநருக்குப் பாராட்டு. திருநங்கைக்குப் பணியளிப்பது, 'பரோட்டா சாப்பிடாதே' என்று சிறுவனுக்கு மருத்துவர் விஜய் சேதுபதி அறிவுரை கூறுவது என ஆங்காங்கே சமூக உணர்வுகளைப் பிரதிபலிக்கும் காட்சிகளை இயல்பாக இணைத்திருப்பதும் வரவேற்கத்தக்கதே.

துவக்க காட்சியிலேயே ஒரு குடிகாரராக அறிமுகம் ஆகும்போது 'ஐயோ, இதிலும் விஜய்சேதுபதிக்கு வழக்கமான வேடமா' என்று நாம் சலித்துக் கொள்ள ஆரம்பிப்பதற்குள் படம் அங்கிருந்து நகர்வது சிறப்பு. என்றாலும் கூட கிராமத்தில் விஜய் சேதுபதி செய்யும் ரகளைகள் ரசிக்க வைப்பதாகவே இருக்கின்றன. மந்திரம் போட்டு தம்மைக் கட்டுப்படுத்தும் சிறுமியின் அன்புக்கு இணங்குவதும் அருமை.

அசந்தர்ப்பமான நேரத்திலும் கூட தன்னுடைய உடை குறித்தே கவலைப்படும் விஜய் சேதுபதியின் இளைய சகோதரன் பாத்திரம் முதற்கொண்டு ஒவ்வொன்றுமே சுவாரசியமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இதில் வரும் மனிதர்கள் பெரும்பாலும் நல்லவர்களாக, மெல்லுணர்வையும் அதன் பின்னான அன்பையும் நீதியையும் நமக்கு நினைவூட்டுபவர்களாக இருக்கிறார்கள். வன்முறையும் ஆபாசமும் தலைதூக்கி நிற்கும் திரைப்படங்களுக்கு இடையில் இது போன்ற மெல்லுணர்வுகளின் ஆதிக்கம் வெளிப்படும் திரைப்படங்கள் வணிகரீதியாகவும் வெற்றி பெறுவது சமூக நலத்துக்கு நல்லது.

***

'ஆரம்பம்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா ஃபினிஷிங் சரியில்லையேப்பா" என்பார் வடிவேலு ஒரு திரைப்படத்தில். சீனு ராமசாமியின் திரைக்கதையின் பிசிறுகள், அதிலுள்ள செயற்கையான நாடகத்தன்மைகள் இப்படித்தான் நம்மை உணர வைக்கின்றன. அவரது முந்தைய திரைப்படமான 'நீர்ப்பறவை'யிலும் இந்தப் பிரச்னையைக் கவனித்தேன். ஒரு வலுவான துவக்கத்தை தந்துவிட்டு பின்பு இலக்கற்று அலையும் திரைக்கதையினால் அது மனத்தில் அத்தனை ஒட்டாத படைப்பாகி விடுகிற ஆபத்தை அவர் கவனிக்கவேண்டும்.

இந்த திரைப்படத்திலும் அவ்வாறு பல கேள்விகள் கிளம்புகின்றன.

செல்போன் முதற்கொண்டு ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற நவீன தொடர்பு சாதனங்களின் மீது இயக்குநருக்கு தனிப்பட்ட வகையில் விமரிசனமோ, ஒவ்வாமையோ கூட இருக்கலாம். தவறில்லை. ஆனால் தம்முடைய திரைப்படங்களின் பாத்திரங்கள் கூட அதை உபயோகப்படுத்தாதவாறு பார்த்துக் கொள்வது கொஞ்சம் ஓவர். இதுவொன்றும் தாமஸ் ஆல்வா எடிசன் பிறப்பதற்கு முன்பிருந்த காலக்கட்டத்தில் நிகழும் படம் இல்லைதானே?

அந்தளவுக்கு இத்திரைப்படத்தில் சிக்கலான சூழலிலும் கூட தகவல் தொடர்பேயில்லாமல் மனிதர்கள் அலைகிறார்கள். மருத்துவக் கல்லூரியில் அத்தனை நெகிழ்வான நெருக்கத்துடன் பழகும் மாணவர்கள் பின்பு எவ்வித தொடர்புமே இல்லாமல் பிரிந்திருப்பது செயற்கை. பாசத்தைக் கொட்டி தன்னை உயிர்தப்ப அனுப்பிய தாயை, அத்தனை காலத்துக்கு விஜய்சேதுபதி ஒருமுறை கூட தொலைப்பேசியில் கூட அழைப்பதில்லை என்பதும் இயல்பாக இல்லை.

போலவே தன் பையிலுள்ள லட்சக்கணக்கான பணத்தை விஜய் சேதுபதி நீண்ட காலம் கழித்துதான் பார்க்கிறார் என்பதும் நம்பும்படியில்லை. பெயருக்குக் காதலைச் சொல்லி விட்டு பின்பு காணாமற் போகும் ஸ்ருஷ்டி டாங்கேவின் பாத்திரம் அவசியமேயில்லையே. பின் எதற்காக? ஒரு தாய்க்கு நிராகரிக்கப்பட்ட மகனின் மீது கூடுதலான பிரியம் எழும் என்பது நடைமுறை உண்மைதான் என்றாலும் மற்ற மகன்கள் சிக்கலில் மாட்டித் தவிக்கும்போது கூட ஒரு தாய் மெளனமாக இருப்பார் என்பதும் நம்பும்படியில்லை. இறுதிக் காட்சியும் ஒரு எதிர்மறையான தீவிரத்தை எதிர்பார்க்க வைப்பது போன்று நகர்ந்து சட்டென்று 'சுபம்' என்று முடிந்துவிடுகிறது.

வன்முறையும் ஆபாசமும் அல்லாமல் தன் திரைப்படங்களைத் தர வேண்டும் என்கிற சீனு ராமசாமியின் பிடிவாத சமூக உணர்வை ஒருபுறம் பாராட்டியாக வேண்டியது அவசியம்தான் என்றாலும் ஒரு சாதாரண பார்வையாளனுக்கு ஏற்படக்கூடிய நெருடல்கள் கூட உருவாகாதவாறு திரைக்கதைக்கு மெனக்கெடுவது அவசியமானது. தனது வரப்போகிற இன்னொரு திரைப்படத்தின் தலைப்பை, சம்பந்தமேயில்லையென்றாலும் சாமர்த்தியமாக இணைத்திருக்கும் புத்திசாலித்தனத்தை திரைக்கதையிலும் காண்பிக்கலாம். ஆனால் இத்தனை குறைகள் இருந்தாலும் கூட ஒரு நீரோடை போன்று இயல்பாக நகரும் திரைக்கதையின் சுவாரசியம் இந்தக் குறைகளைக் காப்பாற்றுகிறது.

தர்மதுரை - சீனு ராமசாமி மற்றும் விஜய் சேதுபதியின் கூட்டணியில் உருவான இயல்பான திரைப்படம். வாரஇறுதியில் குடும்பத்தோடு சென்று பார்க்கத் தகுதியான அருமையான படைப்பு. குறிப்பாக விஜய் சேதுபதியின் ரகளையான நடிப்பு ஒன்றுக்காகவே நம்பிச் செல்லலாம்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/20/w600X390/dharmadurai2.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2016/aug/20/தர்மதுரை-விமரிசனம்-விஜய்-சேதுபதியின்-ராஜ்ஜியம்-2557415.html
2556843 சினிமா திரை விமரிசனம் இயக்குநர் ராஜூ முருகனின் ‘ஜோக்கர்’! Friday, August 19, 2016 04:26 PM +0530  

குறைந்தபட்சம் 100 கோடி ரூபாய் டார்கெட் கொண்ட கமர்ஷியல் படங்களை எடுக்கவேண்டும் என்பதைவிடவும் நல்ல படங்களை இயக்கிக்காட்டவேண்டும் என்கிற எண்ணம் இயக்குநர் ராஜூமுருகனுக்கு உள்ளது. அவருடைய 2-வது படமும் அதே நோக்கத்தில் எடுக்கப்பட்டதே. ஓர் இளம் இயக்குநருக்கு இந்தச் சிந்தனை இருப்பது பாராட்டப்படவேண்டியது.

ஆனால் அரசியல்வாதிகளாலும் அதிகார வர்க்கத்தினாலும் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை வெளிப்படுத்த முயலும் இந்தப் படம், சுவாரசியமாகவும் வலுவான காட்சிகளுடனும் அமையாதது நம் துரதிர்ஷ்டம்.


வீட்டில் கழிப்பறை வசதி இருந்தால் தான் உன்னைக் கட்டிக்கொள்வேன் என்று காதலன் குரு சோமசுந்தரத்திடம் கட்டளையிடும் கதாநாயகி ரம்யா பாண்டியன், பிறகு மனம்மாறி திருமணம் செய்துகொள்கிறார். மத்திய அரசின் இலவசக் கழிப்பறை திட்டத்தின் வழியாக கழிப்பறை வசதி பெற முயற்சி செய்கிறார் கதாநாயகன். ஆனால் அதில் ஏற்பட்ட ஊழலால் அவருடைய வாழ்க்கை திசைமாறுகிறது. மனைவி கோமாநிலைக்குத் தள்ளப்படுகிறார். இதனால் மனநலம் பாதிக்கப்படுகிறார் குரு. பிறகு தன்னை மக்கள் ஜனாதிபதியாக எண்ணிக்கொண்டு ஊரில் நடக்கும் அநியாயங்களைத் தட்டிக்கேட்கிறார். அதில் அவருக்கு வெற்றி கிடைத்ததா என்பதே மீதிக்கதை.


படத்தின் பெரிய பலம் - குரு சோமசுந்தரத்தின் பக்குவமான நடிப்பு. பிளாஷ்பேக்கில் காதலால் ரம்யாவைப் பின்தொடரும் காட்சிகளிலும் பிறகு மனைவிக்கு ஏற்பட்ட நிலையைப் பார்த்து பதறிப்போகும் காட்சியிலும் நடிகன்யா என்று உணரவைக்கிறார். விருதுகள் இவரைப் பின்தொடரட்டும். ஆரம்பக்கட்ட சோர்வான காட்சிகளுக்குப் பிறகு வருகிற பிளாஷ்பேக் காதல் காட்சிகள்தான் பெரிய ஆறுதல். அதில் புதுமுகம் ரம்யாவும் சிறப்பாக நடித்து குரு சோமசுந்தரத்துக்கு ஈடு கொடுத்துள்ளார். கதாநாயகனின் போராட்டங்களுக்குத் தோள் கொடுக்கும் மு. ராமசாமி, காயத்ரி கிருஷ்ணா ஆகியோரும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் குறையின்றி நடித்துள்ளார்கள். பவா செல்லத்துரை சில நிமிடங்களே வந்தாலும் மனத்தில் நிற்கிறார்.

செழியனின் ஒளிப்பதிவு விதவிதமான மனநிலையை உண்டாக்குகிறது. வறட்சியான கிராமத்திலிருந்து சட்டென்று பின்னோக்கிச் செல்லும் காட்சிகளில் கேமராவும் அழகாக கதை சொல்கிறது. இசை இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம்.

தன் வீட்டிலும் பள்ளியிலும் கழிப்பறை இல்லை என்பதால் கணவன் வீட்டிலாவது அவ்வசதி கட்டாயமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிற கதாநாயகியின் நிலைமை சமூக அவலத்தைத் தோலுரிக்கிறது. ஆனால் அவருடைய இந்த அடிப்படைத் தேவையே வாழ்க்கையைத் துண்டாக்குவது தாங்கமுடியாத சோகத்தை ஏற்படுத்துகிறது. பிளாஷ்பேக் காதல் காட்சிகளும் அதைத் தொடரும் கதாநாயகனின் பரிதவிப்பும் படத்தின் சிறப்பான பகுதிகள். இங்கு வெளிப்பட்ட இயக்குநரின் நிபுணத்துவம் பிற காட்சிகளில் முழுமையாக இல்லாதது பெரிய குறையாக அமைந்துவிடுகிறது.

சமகால அரசியல் நிலவரங்களைக் கேலியுடன் விமரிசிக்கும் வசனங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளிக்கிறார்கள். ஆனால் கதாநாயகன் எதற்காக தன்னை மக்கள் ஜனாதிபதியாக எண்ணுகிறார், மக்களும் அந்த மரியாதையை எதற்காக அவருக்கு அளிக்கிறார்கள் என்கிற ஆரம்பக்கட்ட கேள்விகளுக்கு பிறகு விடை தெரிந்தாலும்கூட கதாநாயகனின் துண்டுதுண்டான போராட்டங்கள் மீது ஈடுபாடு உண்டாகவில்லை. வசனங்களை கைத்தட்டி ரசிக்கமுடிவதோடு போராட்டங்கள் மீதான பிடிப்பு முடிவடைந்துவிடுகிறது. தன் சொந்தப் பிரச்னைக்காகவும் கதாநாயகன் நீதிமன்றம் படியேறுவதுகூட நம்மிடம் பாதிப்பை ஏற்படுத்தாது திரைக்கதையின் பெரிய பலவீனம். இறுதியில் நீண்ட வசனம் மூலம் யார் ஜோக்கர் என மக்களைச் சாடும் காட்சி அவசியமா?
இயக்குநரின் நல்ல நோக்கம் நல்ல சினிமாவாகவும் மாறியிருக்கவேண்டும். அரசியல்வாதிகளின் ஊழலைக் குறிவைத்து எடுக்கப்பட்ட பல படங்கள் சுவாரசியமாகவும் அமைந்து பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளன. அந்த நிலையை முழுமையாக அடைய ஜோக்கர் தவறிவிட்டது.

]]>
இயக்குநர் ராஜூ முருகன், ஜோக்கர், விமரிசனம் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/15/w600X390/joker.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2016/aug/15/இயக்குநர்-ராஜூ-முருகனின்-ஜோக்கர்-விமரிசனம்-2556843.html
2556847 சினிமா திரை விமரிசனம் பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி! DIN DIN Monday, August 15, 2016 09:49 AM +0530 மில்லினியம் பிறந்தபிறகு ஷங்கர், கே.எஸ். ரவிகுமார், சுரேஷ் கிருஷ்ணா, பி.வாசு ஆகியோரின் இயக்கத்தில் மட்டுமே திரும்பத் திரும்ப நடித்துவந்திருக்கிறார் ரஜினி (இடையில் மகளின் இயக்கத்தில் ஒரு கிராபிக்ஸ் படம்). அவர்கள் இயக்கிய படங்களுக்கும் பா. இரஞ்சித்தின் இந்த கபாலிக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு - நெகிழ வைக்கும் உணர்வுபூர்வமான காட்சிகள். அவைதான் கபாலி என்கிற பக்கா மசாலா படத்தை அதே வகையிலான இதர படங்களிலிருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது.

மனைவி உயிருடன் இருப்பதும் தெரியாதது மட்டுமல்ல, மகள் பிறந்ததே தெரியாமல் வாழ்கிற ரஜினி பிறகு உண்மைகளை அறிந்துகொண்டு அதன் வழியே செல்கிற ஒரு பாசப்போராட்டம்; தன்னை ஒவ்வொரு நொடியும் அழிக்கத் துடிக்கும் வில்லனுக்கு எதிரான தொடர்வன்முறைப் போராட்டம். இந்த இரு போராட்டங்களின் கலவையே கபாலி படம்.

மலேசியாவில் குடியேறிய தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடுகிற கபாலி நாளடைவில் டான் ஆகிறார். ஆனால், தமிழர்களை கூடவே வைத்துக்கொண்டு கலகம் செய்யும் சீன வில்லனை வாழ்நாள் முழுக்க எதிர்த்துப் போராடவேண்டிய நிலைமை. தமிழ் நண்டுகளின் சூழ்ச்சியால் பலவருடங்கள் சிறையில் கழிக்க நேர்கிறது. சிக்கல்களிலிருந்து மீண்டு வந்து வில்லனை ஒரு கை பார்க்கிறார்.

இது வழக்கமான ரஜினி படக் கதையாகத் தோன்றினாலும் கதை நடக்கிற களமும் பாசவலையில் அவரைப் பிண்ணுகிற மனைவி, மகள் தொடர்புடைய காட்சிகளும் மிகமுக்கியமாக குஷி உண்டாக்கும் ரஜினி நடிப்பும் ரசிகர்களுக்கு நிரம்ப மகிழ்ச்சியை அளித்துவிடுகின்றன. திரையரங்கில் நிசப்தத்தை உண்டுபண்ணும் அந்த இறுதிக்காட்சி ரஞ்சித் முத்திரை.

ரஜினி ரசிகர்களுக்கு இது நிச்சயம் கொண்டாட்டமான படம்தான். மாணவர்களுக்கு மத்தியில் தன்னுடைய பிளாஷ்பேக்கைச் சொல்கிற காட்சியிலும் பாண்டிச்சேரியில் ஏற்படுகிற அந்த நெகிழ்ச்சியான தருணமும், பலரும் ஏங்கும் ரஜினியின் நடிப்புத் திறமையை மீட்டுக்கொண்டு வருகிறது. பாராட்டுகள் இரஞ்சித்.

ராதிகா ஆப்தே, வழக்கமான வட இந்திய இறக்குமதி அல்ல. மிகப் பொருத்தமான தேர்வு. நடிப்பைக் கோரும் காட்சிகளைச் சிறப்பாக கையாண்டுள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளில் சாவடி அடிக்கும் தன்ஷிகாவுக்கு கபாலி நிச்சயம் ஒரு பெரிய திருப்புமுனை. படத்தில் சிரிப்பை ஏற்படுத்துவது தினேஷ் தான். வசனமே இல்லாமல் பரபரப்பான செய்கைகள் மூலமாக ரசிகர்களைக் குதூகலப்படுத்திவிடுகிறார். வில்லன் வேடத்தில் ஆரம்பித்து தினேஷ், கலையரசன், ரித்விகா என சின்னக் சின்னக் கதாபாத்திரங்கள் வரைக் கவனமாக நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ரஜினி படத்துக்கு அவசியமான உணர்ச்சியைக் கொந்தளிக்கச் செய்யும் இசை. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை, ஆக்‌ஷன் காட்சிகளை ஒருபடி மேலே உயர்த்தியிருக்கிறது. பலமுனைகளைத் தொட்டுச் செல்லும் காட்சிகளுக்குத் தொய்வு ஏற்படுத்தாத எடிட்டிங் (பிரவீன்). முரளியின் ஒளிப்பதிவில் ஆக்‌ஷன் காட்சிகள் பரபரவைக்க வைக்கின்றன. பிளாஷ்பேக் காட்சிகளில் வெளிப்படும் டோனும் மலேசிய கான்க்ரீட் அடுக்குகளை ஒளிவெள்ளத்தில் காண்பித்திருப்பதும் படத்துக்குத் தேவையான பிரமாண்டத்தை அளித்துள்ளன.
சிறையிலிருந்து வருகிற ரஜினி, கனக்கச்சிதமாகத் திட்டங்கள் போடுவதும், கூடவே மனைவிக்காக ஏங்குவதும்... சரியான திருப்பங்களுடன் படம் செல்ல உதவுகின்றன. ரஜினி  நடத்துகிற அந்தக் கருணை இல்லம் தொடர்புடைய காட்சிகளை இப்படியொரு மசாலா படத்தில் பார்ப்பது அரிது. இதுபோன்ற இடங்களில் பா.இரஞ்சித் திறமையாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்கிறார். இதனால் முதல் பாதியில் அப்படியொரு நிறைவு ஏற்படுகிறது. காந்தி-அம்பேத்கர், அடிமையாக வாழ்கிற தமிழன் என வசனங்களிலும் வழக்கமான இயக்குநர் டச்.

இடைவேளைக்குப் பிறகு பாண்டிச்சேரி காட்சிகளைத் தவிர மற்றதெல்லாம் வழக்கமான கரகர மசாலா. இங்குதான் பா.இரஞ்சித் ஏமாற்றம் அளித்துவிடுகிறார். படம் முழுக்க ரஜினியும் வில்லனும் சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அடியாட்களும் செத்துக்கொண்டே இருக்கிறார்கள். பாண்டிச்சேரியில் கூட ரத்தக்களறி நிற்கவில்லை. ஆனால் எங்குமே காவல்துறைக்கு வேலை இருப்பதில்லை என்பது திரைக்கதையின் பலவீனம்.

வில்லனின் தொழிலுக்குக் கட்டக்கடைசியில் தான் உலை வைக்கிறார் ரஜினி. ஆனால், ஆரம்பத்திலிருந்தே ரஜினியால் வில்லனின் போதை மருந்துக் கடத்தல் தொழில் பாதிக்கப்படுவது போல ஒரு தோற்றத்தைக் கொண்டுவருவது உறுத்துகிறது. ரஜினி - வில்லன் மோதலில் எந்தவொரு திருப்பமோ புது உத்திகளோ இல்லை. திரும்பத் திரும்பச் சுடுவதுதான் இரு தரப்பினரும் செய்கிற உருப்படியான வேலை. இடையில் ரஜினி ஆட்களைக் கைக்குள் போட வில்லன் கோஷ்டி நினைப்பதும் திரைக்கதைக்கு உதவவில்லை. திடீரென இறுதிக்காட்சியில் மலேசியாவில் வாழ்கிற தமிழ் இனத்தைக் கேவலமாகத் திட்டித் தீர்க்கிறார் வில்லன். அதற்கு ரஜினி கொடுக்கும் பதிலடி உற்சாகம் ஊட்டினாலும், இந்தக் கோணத்தில் இருவருக்கும் இடையேயான பகை அழுத்தமாக வெளிப்பட்டிருந்தால் மோதலுக்கான காரணமும் காட்சிகளும் வலுவாக இருந்திருக்கும். பதிலாக இரண்டு டான்கள் தொழிலை முன்வைத்து மோதிக்கொள்கிறார்கள் என்கிற தட்டையான காரணத்துடன் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனாலேயே இரண்டாம் பாதியில் முழுத் திருப்தி கிடைக்காமல் போய்விடுகிறது.

கபாலி - ரஞ்சித் ஸ்டைலில் ஒரு ரஜினி படம்.

]]>
ரஜினி, கபாலி, பா.இரஞ்சித், விமரிசனம் https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/15/w600X390/kabali323.jpg https://www.dinamani.com/cinema/movie-reviews/2016/aug/15/பா-இரஞ்சித்-இயக்கத்தில்-ரஜினி-நடித்த-கபாலி-2556847.html