Dinamani - நேரா யோசி - https://www.dinamani.com/junction/nera-yosi/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2908059 ஜங்ஷன் நேரா யோசி குவியத்தின் எதிரிகள் - 17. கண்முன் இல்லையெனில்… சுதாகர் கஸ்தூரி. Friday, October 5, 2018 10:56 AM +0530  

165, 67, 456, 635, 365, 296, 61, 86,969 - இந்த எண்களில் ஒரு ஒற்றுமை என்ன? அடுத்த பத்தியை உடனே படிக்காதீர்கள். ஒரு ஐந்து நிமிடம் மெனக்கெடுங்கள்.

முதலில், கொஞ்ச நேரம் அடுத்தடுத்த எண்களைக் கூட்டி, கழித்து, வகுத்து ஒரு பொதுப்படையைத் தேடியிருப்பீர்கள். அது இல்லாதபோது, ஒற்றைப்படையா, இரட்டைப்படையா என எண்களின் தன்மையைப் பார்த்திருப்பீர்கள். அதுவுமில்லாதபோது, எண்களை அப்படியே பார்த்து, இறுதியில் ‘ஆங்! எல்லா எண்களிலும் 6 என்ற எண் வருகிறது’ என்பீர்கள். சரியா?

இப்போது இந்த எண்களில் அதுபோல் முயலுங்கள்.

71, 63, 81, 55, 36, 567, 875, 910, 752

அனைத்தும் ப்ரதம எண்கள்? இல்லை. 81, 36 என்பது 9 மற்றும் 6-ஆல் வகுபடும். ஒற்றைப்படை? இல்லை…

ஒரேயொரு பொதுப்படை. எதிலும் 4 என்ற எண் வரவில்லை.

இது ஏன் கவனத்தில் வரவில்லை? என்னவெல்லாமோ யோசித்தோமே?

எது இருக்கிறதோ, அதைத்தான் நாம் அதிகம் கவனத்தில் கொள்கிறோம். அதில் உள்ள தருக்கத்தை அலசுகிறோம். கூட்டல், பெருக்கல், கழித்தல், வகுத்தல் எல்லாவற்றையும் போட்டு கலக்குவோம். இல்லாத ஒன்று கவனத்தில் வருவது கடினம். புலன்களுக்குப் புலப்படும் ஒன்று – சாதகமாகவோ, பாதகமாகவோ இருப்பினும் நம் கவனத்தில் வந்துவிடும். நமது இயக்கம் அதனைச் சார்ந்திருக்கும்.

ஆங்கிலத்தில் சொல்வார்கள் ‘கண் முன் இல்லாதது; கவனத்தில் வராது’ (Out of sight; out of mind). இதன் நீட்சி, கவனத்தில், ஏன் குவியத்திலும் உண்டு. ஒரு தகவல், கவனத்தில் வருமுன். அது சில வடிகட்டிகளைத் தாண்டி வரவேண்டி இருக்கிறது.

ஒரு பில் கட்ட வேண்டிய கால அவகாசம் முடிந்துவிட்டது என வைத்துக்கொள்வோம். இனி ஒரு வாரத்துக்குள் 5 சதவீத அபராதத்துடன் கட்ட வேண்டும். அது கடந்தால் 10 சதவீத அபராதம் எனக் கொள்வோம். எத்தனை பேர் 5 சதவீத அபராதத்துடன் கட்டுவார்கள் என நினைக்கிறீர்கள்?

35 சதவீதம் மட்டுமே முதல் அபராதத்துடன் கட்டுகிறார்கள் என்கிறது ஆய்வுகள். கடனட்டை (கிரெடிட் கார்டு) பணம் கட்டுவதில் மிக அதிகமாகத் தவறுவது முதல் அபராதத்தில்தான். அதன்பின் அவர்கள் அழைத்து, மிரட்டிய பிறகு கட்டும்போது, கிட்டத்தட்ட 7 சதவீதம் இரு மாதத்தில் அபராதமாகக் கட்டுகிறார்கள்.

இதன் காரணம், மனம் அந்த மறதியால் வந்த இழப்பு, அபராதம் என்ற வலியை மறக்க நினைக்கிறது. எனவே, கடனட்டைக்காரர்களின் எச்சரிக்கை கடிதம், குறுஞ்செய்தி போன்றவை பார்க்கப்பட்டாலும், நினைவில் நிற்காமல் போகிறது. ‘நான் பிசியா இருந்தேன்’ என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொள்கிறோம்.

நினைவில் வைப்பதில் இருக்கும் சிக்கல், அதன் உணர்வு தரும் வலி, மறந்துபோனோமே என்ற எரிச்சல், அமைக்டிலாவின் பதட்டம்… இதனை நினைவு வைக்க மூளை விரும்புவதில்லை. எனவே, நினைவிலிருந்து தாற்காலிகமாக அதனை உணர்வில் கொண்டு வருவதில்லை.

அந்த குறுஞ்செய்தி, கடிதங்கள் நம் புலன்களுக்குத் தட்டுப்படுமெனினும், நம்மால் அதனை உணர்வில் கொண்டுவரத் தோன்றாதது ஒரு புறம். கண்ணில், புலனில் படவில்லையெனில், அது நினைவில் வருவது மிகக் கடினம். எனவேதான், வங்கியிலிருந்து ஒரு கட்டணம் தானியங்கி நிலையில் சென்றுகொண்டிருந்தால், அது பல நிலைகளில் நல்லது. ஆனால், அதில் ஒரு தவறு ஏற்படுமானால், இழப்பு நமக்கு மிகப்பெரிய அளவில் இருக்கக்கூடும். பல கடனட்டை நிறுவனங்கள், இதனை மிகப் புத்திசாலித்தனமாகக் கையாளுகின்றன. நாம் விழிப்புடன் செலவு விவரத்தைச் சரிபார்த்துச் சொல்லவில்லையானால், பணம் போய்க்கொண்டே இருக்கும்.

சில ஆசிரியர்கள் குறித்த நேரத்தில், விடைத்தாள்களைத் திருத்தித் தருவதில்லை என்ற புகார் எழுந்தபோது, பல ஆசிரியர்கள், விடைத்தாள் கட்டுகளை கண்முன்னே வைத்திருந்தும் கவனத்தில்கொள்ளாது, தங்களது பிற வேலைகளைப் பார்ப்பதாக, ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் சொன்னார். சொன்ன தேதியில் விடைத்தாள்களைத் திருத்தித் தர வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பினும், அதன் முக்கியத்துவத்தை அறிந்திருப்பினும், கவனத்தில் அது பிசகுவதை கல்வியியலாளர்கள் அறிந்திருக்கிறார்கள். கண்முன்னே இருந்தும் ஏன் கவனத்தில் வரவில்லை. கண் அதனைக் காண்கிறது என்றாலும், அந்த புலன் வழிச் செய்தி, நினைவு மண்டலத்தை எட்டுவதில்லை. இது, கண்டும் காணாதிருத்தல் (seeing and not observing). விலக்குவது (avoidance) என்பதிலிருந்து இது வேறுபட்டது.

ப்ரையன் ட்ரேஸி, ‘Eat That Frog’ என்றொரு புத்தகத்தை எழுதினார். ‘காலையில் முதல் வேலையாக ஒரு தவளையை விழுங்கினால், அன்றைய தினத்தின் மிக மோசமான நிகழ்வை நாம் சந்தித்துவிட்டோம்; இனி எதுவும் சுலபமாக இருக்கும்’ என்ற பொருளில் வரும் சொற்றொடர் அது. சொல்ல வருவது, ‘மிகக்கடினமான வேலை எது என நினைக்கிறாயோ, அதனை முதலில் கையிலெடு; எளிதானவை எளிதில் முடிந்துவிடும்’ என்பதுதான். ‘நாம் ஒரு செயலைச் செய்யாமல் காலம் தாழ்த்துவதன் மிகப்பெரிய காரணம், அதன் கடினத்தன்மை குறித்தான நம் மனச்சோர்வு, தயக்கம் அல்லது பயம். இதனைத் துணிந்து தாண்டினால், பெருமளவில் வேலைகள் கைகூடும்’ என்கிறார்.

கால ஆளுமை குறித்த ஆய்வாளர்களில் சிலர் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. சிறிய வேலைகளைச் செய்து முடித்து, ‘முடித்துவிட்டேன்’ என்று அதனை எழுதி அடித்துவிடுவது, மூளைக்கு ‘செஞ்சுட்டேன் பார்’ என்பதான உற்சாகத்தை மூட்டுகிறது. தேவையான ஹார்மோன்கள் சுரந்து நம்மை ஊக்குவிக்கின்றது. எனவே, சிறிய செயல்களைப் பட்டியலிடுங்கள். அதனை செய்துமுடித்து, கண் முன்னே இருக்குமாறு பட்டியலில் அடித்து வையுங்கள் என்கிறார்கள், சில ஆலோசகர்கள். ஸ்டீபன் கோவே போன்றோர், ‘செயலைவிட, செயலின் திட்டம், முன்கூட்டியே தானாக இயங்குதல் போன்றவை முக்கியம்’ என்கிறார்கள். இதன் அடிப்படை, செயல் வலி தருமானதாக இருப்பினும், ஆர்வமும், அதன் எதிர்பார்ப்பும் மூளையில் இருப்பதால், நினைவிலிருந்து நழுவாது நிற்கும் என்பதான கருதுகோள்.

இதில், எது சரி என்று குழப்பிக்கொள்ள வேண்டாம். மிக அதிகமாக வேலைப்பளு இருப்பதாக நாம் மலைத்தால், முதலில் ஒரு காகிதத்தில் செய்ய வேண்டியதை எழுதுங்கள். அதன்பின் முக்கியம் என்பதன் அடிப்படையில் அவற்றை வரிசைப்படுத்துங்கள். (வேண்டுமென்றால், மறுபடி மற்றொரு காகிதத்தில் எழுதுவது சிறந்த்து. எழுத எழுத, வேலையினைப் பற்றிய கவலை குறையும் என்றொரு உளவியல் கருத்து உண்டு)

அவற்றில் நச்சு பிச்சு வேலைகளாக இருப்பவை அதிகமாக இருந்தால், அவற்றை முடிக்க முனைப்படுங்கள். நாலு வேலைகளே இருக்கின்றன. அதில் ஒன்று கடினமானது என்றால் அதனை முதலில் எடுத்துக்கொள்ளுங்கள். இது, ஒருவகை அனுபவத்தின் அடிப்படையில் வந்த வகைப்படுத்தல் முறை. எது, எவ்வளவு கடினம், ஏன் என்பது உங்களுக்கு மட்டுமே தெரியுமென்பதால், வகைப்படுத்துவதில் உங்கள் பங்கு மட்டுமே இருக்கிறது என்பதை நினைவில்கொள்ளவும்.

பெருமளவில், ப்ரையன் ட்ரேஸி கூறிய ‘பெரிய கடினமான வேலையை முதலில் செய்வது’ என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த மனப்பயிற்சியின் முக்கியப் பாடம், எதை நாம் கவனத்திலிருந்து மறைக்கிறோமோ, மறக்கிறோமோ, அதனை எத்தனை வலி தருமானதாக இருப்பினும், கடினமாக இருப்பினும், கவனத்தில் கொண்டுவருவதுதான். வெறுப்பான செயல்தான். இழப்பு, அதனினும் வெறுப்பூட்டும். எது தேவை? யோசிக்க வேண்டும் - நேராக.

(யோசிப்போம்)

]]>
யோசித்தல், கவனக் குறைவு, கவனம், தயக்கம், கால ஆளுமை, செயல் https://www.dinamani.com/junction/nera-yosi/2018/apr/28/குவியத்தின்-எதிரிகள்---17-கண்முன்-இல்லையெனில்-2908059.html
2987422 ஜங்ஷன் நேரா யோசி குவியத்தின் எதிரிகள் - 25. எதிரிகளிடம் இருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்! சுதாகர் கஸ்தூரி. Saturday, August 25, 2018 11:36 AM +0530  

நமது சிந்தனையில் இடையூறுகளாக, உள்ளிருந்தே சத்தமெழுப்பாமல் சிதைக்கிற எதிரிகளை இதுவரை பார்த்தோம். இவை மட்டும்தானா? நிச்சயமாக இல்லை. பழக்கம் சார் உளவியல், பரிமாற்ற பகுப்பாய்வினர், கானேமான்-ட்ரவெர்ஸ்கி போன்ற பலரும், திரிகின்ற நமது சிந்தனைப் பாய்ச்சலை எப்படி கவனித்திருக்கின்றனர் என்பது, இன்றுவரை வந்துகொண்டிருக்கும் ஆய்வுப் புத்தகங்களும், தனிமனித மேம்பாட்டு ஆய்வுகளின் முடிவுகளும் காட்டுகின்றன.

இதெல்லாம் எதிரிகள், எச்சரிக்கையாக இருங்கள் என்கிறீர்கள். இதை அறிவதால் மட்டுமே என் சிந்தனை உருப்பட்டுவிடுமா என்று கேட்கலாம். உருப்படலாம், படாமல் போகலாம். அது உங்களது தீவிர ஈடுபாட்டையும், முயற்சியையும் பொறுத்தது. ரோல்ஃப் டோப்லி, அறிதலில் இருக்கும் நூற்றுக்கும் மேலான பிழைகளைப் பட்டியலிட்டு, ‘இவற்றை அறிந்த எனக்கு இன்னும் இவையெல்லாம் இருக்கிறது. ஆனால், சிலவற்றை என் முயற்சியால் குறைத்திருக்கிறேன்’ என்கிறார்.

அந்த வகையில், வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இல்லாமல் இப் பகுதியில் வெளியான ஒவ்வொரு கட்டுரையையும் மெருகேற்றியிருக்கேன். இவற்றில் ஏதேனும் ஒன்றை, ஒரு கால அவகாசத்தில் எடுத்துக்கொண்டு, உணர்வோடு, சிந்தனையில் அந்த பிழை வரும்போது கண்டு மாற்றுவது என்று நீங்கள் முடிவெடுத்து, அதில் வெற்றி கண்டால், நிச்சயம் உங்களது தனிமனித, பொதுச்சமூக வாழ்வு பெருமடங்கு மெருகேறும் என்று என்னால் நிச்சயமாகக் கூறமுடியும்.

பல பிழைகளைக் கவனமாகத் தவிர்த்திருக்கிறேன். முக்கியமாக, காலம் தாழ்த்துவது (procrastination), கால ஆளுமையின்மை, தன்னம்பிக்கையின்மை, எதிர்மறை உணர்வுகள், வினைச்செயல்வகையின்மை எனக் குறிப்பிட்டு சிலவற்றைச் சொல்லலாம். இவை ஒவ்வொன்றும் பல புத்தகங்கள், பயிற்சி முகாம்களாக நீளும் என்பதும், நாலு பக்க அத்தியாயத்தில் இவற்றிலொன்றைக்கூட சுட்டிக்காட்டிவிட முடியாது என்பதால் தவிர்த்திருக்கிறேன்.

பிழைகள் அனைத்தும் ஒருவகையில் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஒன்றைத் தொட்டால், மற்றது அசையும். (நேர்மறைக் குணம் வளர்த்தல் என்பது பொறாமையைக் கட்டுப்படுத்தும்). நற்பழக்கப் பயிற்சி என்பது ஒட்டுமொத்த முன்னேற்றத்தை வளர்க்கும். ஒன்றோடொன்று தொடர்பில்லாதவையும் உண்டு. எது நமக்குத் தேவை என்பதைத் தெளிவாக அறிந்துகொண்டு, அதனைச் சுட்டும் மற்றொரு பிழையினைத் தவிர்க்க முயற்சிக்கலாம். இதற்கு இப்பிழைகள் குறித்து நல்ல புரிதலும், நமக்கு என்ன தேவை என்பதைக்குறித்த அறிதலும் மிக அவசியம்.

இதனைக் கண்டுபிடிக்க, குடும்பத்தில் ஒரு உறுப்பினரையோ, நண்பரையோ அணுகலாம். அவர்கள் உங்களது முயற்சியில் உதவ முன்வருபவராக இருக்க வேண்டும். ஓரிரு எதிர்மறை விமரிசனங்கள் போதும், உங்களை நத்தையெனச் சுருளவைக்க. எனவே, உங்களது பார்ட்னரை கவனமாகத் தேர்ந்தெடுங்கள். எதுவரை, எதனைச் சொல்லாம் என்பது அவர்களுடனான உங்களது நம்பகத்தன்மையைப் பொறுத்துது.

புதிதாக் கற்றுக்கொள்ளும் எதுவும் ஒரு உற்சாகத்தைத் தரும். அதனைப் பற்றிய உரையாடல்களை அடிக்கடி செய்துபார்க்கத் தோன்றும். பிறரது மனநிலையையும் சற்றே நினைத்துப் பாருங்கள். உங்கள் தீவிர உற்சாகம் அவர்களுக்கு இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. உங்கள் உற்சாகத்தை உங்களிடம் மட்டுமே எதிர்பாருங்கள்.

ஒரு செயற்படி முறையை இங்கே சற்றே விளக்கமாகக் காண்போம். இதன் செயற்படிகள்போல அப்படியே இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், ஆவணப்படுத்துதல் என்பது அவசியம்.

ஒரு வாட்ஸப் குழுமம், பேஸ்புக் நட்புக் குழு என உடனே தொடங்காதீர்கள். இது தனிமனித செதுக்கல் சமாசாரம்.  ஒரு குறிப்பிட்ட பண்பை ஒரு நாள் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் உங்களைப் பற்றிய அனுமானத்தை, ஒரு சாய்வுமின்றி ஒரு காகிதத்தில் எழுதுங்கள். பின் இரு நாட்கள் கழித்து அதனை மீள்பார்வை செய்யுங்கள். எத்தனை முறை திருத்துகிறீர்கள் என்பது, எந்த அளவு உண்மைக்கு அருகில் வந்திருக்கிறீர்கள் என்பதைக் குறிக்கிறது என்கிறார்கள் சோதனை உளவியல் வல்லுநர்கள். எழுதுதல் - மீள்பார்வை – எழுதுதல் – மீள்பார்வை என்ற சுழற்றி, சில நாட்களில் உங்களைப் பற்றிய ஒரு இணக்கமான, உண்மை அருகில் சென்றிருக்கும் தகவலைத் தரும். அதுகொண்டு, உங்கள் அடுத்தகட்ட இயக்கத்தைத் தீர்மானிக்கலாம்.

உதாரணமாக, பொறாமை என்ற குணத்தை எடுத்துக்கொள்வோம்.

முதற்படி - பொறாமை என்றால் என்ன? எனக்கு இருக்கிறதா? (ஸ்லைட்டா.. என்றால், எதில்?). யார் மீது இருந்தது? ஏன்?

இதன் காரணம் என்ன? அவருக்குக் கிடைக்காமல் இருந்திருந்தால் எனக்குக் கிடைத்திருக்குமா? அப்படியானால் அது போட்டியா? பொறாமையா? (இந்தக் கேள்வி நமக்கு ஒரு பெரும் தெளிவை ஏற்படுத்தும்). பொறாமை என்பது, எனக்குக் கிடைக்காமல் போகும் ஒன்றுடன் தொடர்பே இல்லாமல் இருந்தாலும், அது கிடைத்த ஒருவர் மீது ஏற்படும் (அடுத்த தெருவில்  இருக்கும் தொழிலதிபர் இரு கார்கள் வைத்திருப்பது). போட்டி என்பது எனக்குக் கிடைக்கும் சாத்தியம் இருக்கும்போது பிறருக்குக் கிடைப்பது   (நானும் சென்றிருந்த இண்டர்வியூவில் நண்பனுக்கு வேலை கிடைப்பது).

அடுத்த படிநிலை - இந்த உணர்வு எனக்குத் தேவைதானா? நான் பாதிக்கபட்டவனா? போன்ற கேள்விகள். இதனைத் தாண்டி எனக்கு கிடைக்கும் அடுத்த வெற்றி எது? அதற்கு என்ன செய்ய வேண்டும்?  எனக்குப் பொறாமை இல்லை எனக் காட்டிக்கொள்ள, ஒரு சிரிப்புடன், வெற்றிபெற்றவரை வாழ்த்துவது அவசியமா? விலகி நிற்பது நற்பழக்கமில்லையா?

இதனைக் குறித்து நான் எப்படி யோசிக்க வேண்டும்? பட்டியலிட்ட பிழைகளில் இது எங்கு வருகிறது?

அடுத்த செயல்நிலைப் படி என்ன? வல்லுநர்கள் சொல்வது போலத்தான் செயல்பட வேண்டுமா? எனக்கு இயல்பான இயக்கமென்ன? அதன் விளைவுகள் என்ன?

ஆவணப்படுத்தப்படுபவை பரம ரகசியமாக இருக்க வேண்டும் என்பதில்லை. புரிந்துகொள்பவர்களிடம் பகிர்தல் நல்லது. அடுத்த முறை, இதேபோன்ற நிகழ்வில், நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை நமது ஆவணமும், பகிர்ந்துகொண்டவர்களும் வழிநடத்தக்கூடும்.

ஒரு நேரம் – ஒரு படி நிலை – ஒரு பிழைத் திருத்தம். இது போதும். ஒரு வெற்றி உவகையை உண்டாக்கும். உவகையிலிருந்து உற்சாகமும், தன்னம்பிக்கையும் ஊற்றெடுக்கும். சில நாட்களில், சிந்தனையைக் கணநேர ஆய்வுக்குக் கொண்டுசெல்வது பழக்கமாகும். பழக்கமென்பது, மேலும் பிழைகளைத் தன்னம்பிக்கையுடன் எடுத்துத் திருத்த வழிகொடுக்கும்.  வாழ்க்கை முழுதும் இப்பிழைகளும் அதன் திருத்தங்களும் தொடர்ந்துகொண்டே இருக்கும். எந்த அளவு இந்த முயற்சியை ரசிக்கிறோம் என்பது, எந்த அளவு நல்வாழ்வை நாம் விழைகிறோம் என்பதன் அலகு.

வாழ்த்துகள். நன்றி.

]]>
குவியம், எதிரிகள், எச்சரிக்கை, சிந்தனை, தன்னம்பிக்கை, கவனம் https://www.dinamani.com/junction/nera-yosi/2018/aug/25/25-எதிரிகளிடம்-இருந்து-உங்களைக்-காத்துக்கொள்ளுங்கள்-2987422.html
2957873 ஜங்ஷன் நேரா யோசி குவியத்தின் எதிரிகள் - 24. சினிமா நட்சத்திரங்களின் தீபாவளிப் பேட்டிகள் சுதாகர் கஸ்தூரி. Saturday, July 14, 2018 12:00 AM +0530  

‘‘தீபாவளி, பொங்கல்னு வந்துடக் கூடாது. டிவில ஒரே சினிமாக்காரங்க பேட்டிதான் இருக்கும். ‘தமில்ல நல்லா நனிக்கு பேச்சு வர்து’ன்னு குழர்ற வடநாட்டு நட்சத்திரம்தான் பொங்கல் வாழ்த்து சொல்லுவா’’ என்றார் ஒரு நண்பர். கடலூர் - சென்னை நெடுஞ்சாலையில், உணவு விடுதி ஒன்றில் காரை நிறுத்திவிட்டு, ஆர்டர் கொடுத்த உணவுவரும்வரை பேசிக்கொண்டிருந்தோம்.

‘‘ஏன், அவங்க சொன்னா என்ன? சினிமாக்காரங்கன்னா மட்டும் ஏன் சார் உங்களுக்கு வெறுப்பு?’’ என்றார் மற்றொருவர். ‘‘இதை புகழடைந்தவர் மேலான காழ்ப்புணர்ச்சின்னு சொல்லுவாங்க. ஒருவிதப் பொறாமை, வெறுப்பு ஆத்திரத்தின் வெளிப்பாடு’’.

‘‘அந்தப் பொண்ணு மேல எனக்கென்ன பொறாமை இருக்கப்போவுது?’’ என்றார் முதலில் பேசியவர். ‘‘நிதானமா யோசிச்சுப் பாருங்க. என்ன விழாவா இருந்தாலும், சினிமாவில் புகழ் பெற்றவர் அல்லது சின்னத்திரை நட்சத்திரம். அவங்க வீட்டுல மட்டும்தான் தீபாவளியோ ரம்ஜானோ நடக்குதா? ஏன், வாழ்க்கையில போராடி வெற்றிபெற்று வந்த ஒரு விளையாட்டு வீர்ர்/வீராங்கனை அல்லது மாற்றுத்திறனாளி, ஒரு தொழிலதிபர்.. இவங்க எல்லாம் மக்களுக்கு முன்னுதாரணம் இல்லையா?’’

ஒரு துறையில் வெற்றிபெற்றவரைப் பல துறைகளிலும், அவரது சொந்த வாழ்விலும் வெற்றிபெற்றவராக நேரான நீட்டலுடன் பார்ப்பது, கடவுளர்களின் தலைக்குப் பின்னே காணப்படும் ஒளிவட்டம் போன்ற மாயை விளைவு. (Halo effect). இது நமது அனுமானப் பிழைகளில் ஒன்று. ஒரு துறை வெற்றி - புகழ், அவரை மேலே தூக்கி வைக்கிறது. பத்தாம் கிளாஸ்கூடப் படிக்காத, அரசியல்வாதியையோ / நடிகரையோ ஒரு பல்கலைக் கழகம் வரவேற்று படிப்பு பற்றிப் பேசச் சொல்வது ஜால்ரா அடிப்பது என்பது மட்டுமல்ல; இந்த ஒளிவட்ட விளைவின் தாக்கம்தான். இதில் சில விதிவிலக்குகள் உண்டு எனினும், வெட்டவெளிச்சமாகத் தெரியும் ஒவ்வாமைகள் பல.

திரையில் நல்ல தலைவனாக நடிப்பவர், நிஜவாழ்வில் அப்படி இருக்க சாத்தியமில்லை என்பது அனைவருக்கும் தெரிந்தே இருக்கிறது. இருந்தும், அப்படிப்பட்ட ஒருவர் அறிக்கை விடுகிறார் என்றால், ஏன் மக்கள் உணர்ச்சிக் கொந்தளிக்கிறார்கள்? இதில் படித்தவர்கள் கவனமாகத் தங்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் இருக்க, குழும சிந்தனையால் தூண்டப்பட்ட பலர் வெளிப்படையாகத் தங்கள் உணர்வை சமூக ஊடகங்களில் காட்டுவதைக் காண்கிறோம். இது ஹேலோ விளைவின் தாக்கத்தின் தீவிரத்தைக் காட்டுகிறது.

இதன் அடிப்படை, ‘‘ஒவ்வொரு விளைவுக்கும், ஒரு முகம் தேவைப்படுகிறது’’ என்கிறார்கள் ஆய்வாளர்கள். இன்றிலிருந்து நூறு வருடத்துக்கு முன்பே, எட்வர்ட் லீ தார்ன்டைக் (Edward Lee Thorndike) என்பவர், ஒரு பண்பில் கிடைக்கும் புகழின் தாக்கம், பிற பண்புகளில் ஏற்றப்படும் என்று, ஒளிவட்ட விளைவைக் காட்டினார். அழகான முகம் கொண்ட ஒருவர் சொன்னால், எந்த சோப்பையும் நாம் வாங்கிவிடுவோம் என்பதன் அடிப்படை அது. அவருக்கு அந்தச் சோப்பு பற்றி எதுவும் தெரிந்திருக்கத் தேவையே இல்லை.

எட்வர்ட் லீ தார்ன்டைக்

இந்த ஹேலோ விளைவு, எதிர்மறையாகவும் தாக்கத்தைத் தொடுக்கிறது. ஒரு பிரபலம் (அவர் அடிக்கடி விளம்பரத்தில் வருவதால் வந்த புகழ்), இதனை கண்கூடாகக் கண்டிருக்கிறேன். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் பிரபலமடைந்துகொண்டிருந்த, விலை மலிவான ஒரு சலவை சோப்பினைப் பயன்படுத்துவதால் கைகளில் தோல் உரிகிறது என்றும், புண்ணாகிறது என்றும் விளம்பரத்தில் காட்டுவார். இதனைப் பலரும் நம்பினார்கள். ‘இவ்வளவு மலிவான விலையில் ஒருத்தன் கொடுக்கிறான்னா, அதுல என்னமோ பிரச்னை இருக்கு’ என்பது மக்களின் மனத்தில் இருந்த ஒரு சந்தேகத்தை, அவரது முகம், கை விளம்பரத்தில் காட்டியது. இதனால் அந்த சலவை சோப்பினை நடுத்தர, உயர்மட்ட மக்கள் பயன்படுத்துவது குறைந்தது.

பரோடாவில் ஒரு மருந்து ஆய்வுச்சாலையின் தலைவரிடம் இதுபற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார் - ‘‘அந்தக் குற்றச்சாட்டு உண்மையல்ல. நீங்கள் குறீப்பிடும் சோப்புக்கரைசலை, ஆய்வகப் படிகள் கொண்டு பரிசோதித்தேன். முயலின் கண்ணில் இந்தக் கரைசலை விட்டுப் பார்த்து அதன் எதிர்விளைவைக் கவனித்தேன். ஒன்றும் பாதகமாக நடக்கவில்லை. இது மனிதர்களின் கைகளுக்குப் பாதகமானதல்ல’’.

எத்தனை பேருக்கு இந்த ஆய்வினைப் பற்றித் தெரியும்? அப்படியே தெரிந்தாலும், ஓரிருவர் ‘‘ஆமா, எனக்குக் கை எரிஞ்சது’’ என்றால், அதனை நம்பிவிடுவோம். இதில் இரு அனுமானப் பிழைகள். ஒன்று பிரபலத்தின் விளைவு; மற்றது, சமூக ஒத்திசைவுப் பிழை.

சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்க வாழ்வு பற்றி அறிய முயலும் ஒரு அல்ப ஆர்வமும், தனது அனுமான நீட்சியை உறுதிப்படுத்துவதற்கு அல்லது அதனை மறுதலிப்பதனைப் பதிவு செய்வதற்கே என்கிறார்கள் ஆய்வாளர்கள். தனது அபிமான நட்சத்திரத்தின் பன்முக வாழ்வு ஜொலிப்பதைக் கண்டு ஆனந்தப்படுபவர்கள் ஒரு ரகம் என்றால், அதன் தோல்விகளை மறைமுகமாக ஆனந்திப்பவர்கள் பிரபலங்களின் மீதான பொறாமையின் பிறழ்வைக் கொண்ட ரகம். எனவே, இரு வகையினருக்கும் பிரபலங்கள் குறித்த செய்திகள் தேவைப்படுகிறது. தொலைக்காட்சிச் சேனல்கள் இதனை நன்கறிந்தவை. எனவேதான், வடஇந்திய நடிகை ‘அனைவருக்கும் பொங்கேல் நல்வால்த்துக்கல்’ என்பதை ஆர்வத்துடன் கேட்க ஒரு கூட்டம் பொங்கலன்று டிவி முன் அமர்ந்திருக்கிறது.

இதனை எதிர்த்துக் கேட்பவர்களை, பிரபலங்கள் மீதான பொறாமைப் பிறழ்வு கொண்டவர்கள் என முத்திரை குத்திவிடுகிறோம். நண்பர் கேட்ட கேள்வி நியாயமானது. பிரபலம் தேவை என்றால், சினிமா தவிர்த்துப் பல துறைகளிலும் பிரபலமானவர்களைத் தொலைக்காட்சி சேனல்கள் காட்ட மறுக்கக் காரணம், சேனல்கள் விரும்புமளவு பெரிய அளவிலான மக்களை அந்நிகழ்ச்சிகள் சென்று சேராது, TRP rating சரியாக அமையாது என்ற அவர்களது தயக்கம்.

இதைப்பற்றி ஏன் பேசுகிறோம்? பிரபலம் என்றால் நம் மனத்துக்கு, நம் வகுப்பில் நன்கு படிக்கும் ஒரு பையனோ, பெண்ணாகவோ இருக்கலாம். அழகான முகம் கொண்ட, நன்கு பேசத் தெரிந்த ஒருவராக இருக்கலாம். அவரை முன்னுதாரணமாக வைத்து மனம் ஒளிவட்டத்தை அவர் தலையின் பின் சுழல விட்டுவிடுகிறது. இதன் விளைவு, ‘‘எனக்கு கணக்கு சரியா வராது. ஆனா, ரோஷிணி கம்ப்யூட்டர் எடுத்திருக்கா, ஸோ.. நானும்..’’ என்பதான தவறான முடிவுகள்.

நாம் எவரை நாயக/நாயகியாக எடுக்கிறோம் என்பது, சூழ்நிலைக்கும், அச்சூழலில் அவர்களது ஒரு பண்பு எடுப்பாகத் தெரிந்ததற்குமான தொடர்பு சார்ந்தது. தொடர்ந்து, அதுபோன்ற சூழலில் அப்பண்பு சிறந்து விளங்கினால், நாம் அதனைப் பிற சூழலுக்கும், பிற பண்புகளுக்கும் நீட்டிவிடும் சாத்தியம் இருப்பதால், ஒரு சூழலில் தீர்மானமான முடிவு எடுக்கும் முன்பு அதில் யார் யார் நமது மனத்தில் வந்து போகிறார்கள் என்பதைக் குறித்து நேராக யோசிப்பது நலம்.

(யோசிப்போம்)

]]>
halo effect, cinema personality, TRP rating, envy, பொறாமை, ஹேலோ விளைவு, சினிமா பிரபலம், அனுமானப் பிழை https://www.dinamani.com/junction/nera-yosi/2018/jul/14/குவியத்தின்-எதிரிகள்---24-சினிமா-நட்சத்திரங்களின்-தீபாவளிப்-பேட்டிகள்-2957873.html
2954489 ஜங்ஷன் நேரா யோசி குவியத்தின் எதிரிகள் - 23. எல்லையற்ற நற்பண்புகள் சுதாகர் கஸ்தூரி. Saturday, July 7, 2018 12:00 AM +0530  

திருநெல்வேலி – திருச்செந்தூர் வழிச்சாலையிலிருந்து விலகி 5 கி.மீ. தொலைவில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர் சாலமன். படிப்படியாக முன்னேறி, வங்கிக் கிளை மேலாளராகச் சிறுநகரமொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இறை நம்பிக்கையும், ஒழுக்க உணர்வும் மரபில் பெற்ற குடும்பம் அவரது.

மகள் பொறியியல் கல்லூரியில் படித்து, சென்னையில் ஹாஸ்டல் ஒன்றில் தங்கி வேலை பார்ப்பதைப் பெருமையும் நிறைவுமாகச் சொல்லிக்கொண்டிருந்தவருக்கு, அதிகாலையொன்றில் தொலைபேசி அழைப்பு வந்தது. “ரோஸலின் உங்க பொண்ணா? *** காவல் நிலையத்துலேர்ந்து பேசறோம்”.

அலறியடித்துக்கொண்டு அவர் சென்றபோது, மகள் இன்னும் சிலரோடு கைது செய்யப்பட்டிருப்பதை அறிந்தார். மது மற்றும் போதைப்பொருள் விநியோகிக்கப்பட்ட பார்ட்டி ஒன்றில் ரெய்டு செய்தபோது அவள் கைது செய்யப்பட்டதாகவும், ரத்தச் சோதனையில் அவள் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதாகவும் அறிக்கை சொன்னது.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சர்ச் செல்லும் பெண், இரவு பைபிள் வாசிக்கும் பெண், ஆண்களை ஏறெடுத்தும் பார்க்காத பெண், திடீரென எப்படி மாறினாள்?

மேலும் விசாரிக்க விசாரிக்கப் பல உண்மைகள் வெளிவந்தன. இரவு வெகுநேரம் கழித்து அறைக்கு வருவதை அறைத்தோழி ஒருமுறை சாலமனின் மனைவிக்குச் சொன்னதை அவர் சீரியஸாக எடுக்காதது, உடன் வேலை செய்யும் பெண்களோடு சேர்ந்து சிகரெட் பழக்கம் தொற்றியது, அது போதைப் பொருள் புகைப்பதாக மாறியது, யாரிடமும் சொல்லாமல் தேக்கடி சென்று இரு நாட்கள் தங்கி வந்தது...

சாலமைன் மலைத்துப்போனார். தன் மகளா இது? எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் சிபாரிஸில், பெங்களூரில் உளவியல் ஆலோசகராக இருக்கும் என் நண்பரைச் சந்தித்தார்கள். ஒரு மழைக்கால மாலையில், பெயர், இடம் மாற்றி, அந்த ஆலோசக நண்பர் பகிர்ந்துகொண்டதைத்தான் இங்கே வாசிக்கிறீர்கள்.

‘‘ரோசலின் மெல்ல மெல்லப் பேசத் தொடங்கினாள். சம்பாதிக்க ஆரம்பிச்சதும், திடீர்னு கை நிறையப் பணம். என்ன செய்யறதுன்னு தெரியாம திகைச்சுட்டேன்’’.

கவுன்ஸிலர் தொடர்ந்தார் “பொருளீட்டுவதற்குத் திறமை தேவை என்றால், அதைச் சேமிப்பதற்கும், செலவழிப்பதற்கும் அதிகத் திறமை தேவைப்படும். சேமிக்காமல் செலவு செய்வது வீண் என்பதுபோல், தேவைக்கேற்ப செலவு செய்யாமல், பயன் துய்க்காமல் சேமித்து வைப்பதும் வீணே. துரதிருஷ்டவசமாக நம்மில் பலருக்கு இதன் சமநிலை தெரிவதில்லை. வீண் செலவு செய்பவர்களும், கருமிகளுமாக எல்லைகளில் நிற்பவர்களே உதாரணமாகத் தெரிகிறார்கள்.

ரோஸலின், வேலை பார்க்கத் தொடங்குமுன் பத்தாயிரம் ரூபாய் மொத்தமாகத் தன் பையில் பார்த்ததில்லை. இதில் எதை வாங்கலாம்? எங்கு சேமிக்கலாம்? எதனை வாங்கக் கூடாது என்பதை சாலமனோ அவர் மனைவியோ சொல்லிக்கொடுக்கவில்லை. பயின்ற பள்ளி, கல்லூரி, நண்பர்கள் அனைவரும் படிப்பு, ஒழுக்கம், இறை என்று சொன்னார்களே தவிர, யதார்த்த வாழ்வு குறித்து ஒருவரும் பேசவில்லை”.

‘‘உனக்கு வேணுங்கறதை வாங்கிக்கோ” என்று அம்மா போனில் சொன்னதும், தான் விழித்து நின்றதாக கவுன்ஸிலரிடம் ரோஸலின் சொன்னாள். “என்ன வாங்கறதுன்னு அம்மா சொல்லவே இல்லையே? ஜீன்ஸ் வாங்குன்னு ஃப்ரெண்டு சொன்னா. மூன்று தோழிகளாகப் போனோம்” என்றாள் ரோஸி.

“ஜீன்ஸ் பிடிக்குமா உனக்கு?”

“இல்ல”, தயங்கினாள் ரோஸி. “நமக்கு ஒருத்தர் உதவி செய்வது, கர்த்தரின் செயல்னுதானே சொல்றோம்? எப்படி மறுக்கமுடியும்?”

‘‘அதில் ஒரு தோழி, அடுத்த வாரம் Smoking is cool என்றதையும் ரோஸி மறுக்கவில்லை. இவர்கள்தானே ட்ரெஸ் எடுக்க உதவினார்கள்? இவங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். பயப்பட ஒன்றுமில்லை. மெல்ல மெல்லத் தனக்கு புகழும், அடையாளமும் சேருவதாக உணர்ந்தாள் அவள். மெல்ல மெல்ல ஞாயிறு காலை சர்ச் என்பது போய், சனி இரவு பார்ட்டி என்பதாயிற்று.

தனது புது ஹேர்ஸ்டைலும், ஜீன்ஸ், டீஷர்ட், சக ஆண் நண்பர்களுடன் சுற்றும்போது அவர்கள் சொல்லும் புகழ் வார்த்தைகள் நிஜமான வாழ்வென அவள் நினைத்திருக்கையில், வெளிநாடு சென்றால் இப்படித்தான் வாழ்வார்கள் என்று புத்தியில் தோன்றிய நிலையில்தான், போலீஸ் ரெய்டு”.

‘‘யாரைக் குறை சொல்வீர்கள்?” என்றேன். “சாலமன்? அவர் மனைவி? ரோஸலின்? அவள் தோழியர்? அல்லது சூழல்?”

‘‘ரோஸலினின் இறந்தகால சூழலை விட்டுவிட்டீர்கள்” என்றார் கவுன்ஸிலர். “அது மிக முக்கியம். சரியான வேளைகளில், உலகம் இத்தகையது என்பதை அச்சூழல் காட்டவில்லை. நல்லது இது எனக்காட்டிய சூழல், தீயதை உறுதியுடன் மறுத்துச் சொல்வதும் நற்பண்பே எனக் காட்டவில்லை. தவறு அங்கிருந்து தொடங்கியது”.

‘‘எப்படி ஒரு இறை நம்பிக்கை கொண்ட குடும்பத்தையோ, ஒழுக்கம் போதித்த கல்விக்கூடங்களையோ குறை சொல்லமுடியும்?’’ என்றேன். “அவர்கள் நல்லதை எடுத்துச் சொன்னார்கள். தீயதைத் தவிர்க்கவும் சொன்னார்கள்”.

“அங்குதான் பிரச்னையே” என்றார் கவுன்ஸிலர். “தீயது என்பது, நாம் நல்லவராக இருந்தால் நம்மை அணுகாது என்று நினைத்திருப்பது முட்டாள்தனம். தீயவை என்பது நம் குறிக்கோளை, நமக்கு நல்லது செய்யும் மரபுவழிப் பழக்கங்களை, சடங்குகளை முறிப்பவை என்பதாகப் புதிது புதிதாக அடையாளம் கண்டுகொள்ள பயிற்சி கொடுக்க வேண்டும். பிரார்த்தனை செய்தால் சாத்தான் ஓடிவிடும் என்பது மட்டும் போதாது. தோழியின் செயலில் வருவது எனக்குச் சாத்தான் என்பதைப் புரிந்துகொள்ள அவள் மூளைக்குப் பயிற்சி கொடுக்கப்படவில்லை”.

கூடா நட்பு என்பதாக திருக்குறளில் ஒரு அதிகாரமே இருக்கிறது. நாம் மட்டும் நற்சிந்தனையில் இருந்தால் போதாது. நம்மைச் சூழ்ந்திருப்பவர்கள், நமது சூழல் அத்தகையதாக இல்லாவிட்டால், மெல்ல விலகிச் செல்வதே சிறந்தது. எங்கு நம் சிந்தனைக்கு ஏற்ப மக்கள், சூழல் இருக்கிறார்களோ அங்கு கலப்பது ஒன்றே நம்மைக் காக்கும், முன்னேற்றும் சத் சங்கம் என்பார்களே அதுபோல்.

மனிதன் சமூக விலங்கு. அவனது சிந்தனை செறிவடைய சமூக அங்கீகாரமும், அவன் மீதான அதன் செல்வாக்கும் அவசியம். தனது சிந்தனைகளுக்கு ஏற்ற சமூகத்தை அவன் நாடாவிட்டால், அவன் சார்ந்த சமூகம் அவனைத் தன் சிந்தனைக்குக் கொண்டுவரும். மறுதலித்து எதிர்த்து நிற்பது அத்தனை சாத்தியமானதல்ல.

குழும இயக்கம் என்ற மாறி, மிக வலிமையானது. இரு நண்பர்களின் தனித்தனிச் சிந்தனைகளின் கூட்டுக்கும், அவர்கள் கூட்டாக இயங்கும்போதான சிந்தனை தொகுப்புக்கும் வேறுபாடு கணிசமானது. அதிகமான உறுப்பினர்கள் என்றால், தொகையமைப்பின் இயக்கம் வேறாக இருக்கும். இதனால்தான் குழுவினருக்குப் பொதுவாக சில வரையறைகளைக் குழுக்கள் விதிக்கின்றன. குழுவைவிட விதிகளை மேலாக மதிக்கச் சொல்கின்றன. இந்தக் குழும இயக்க விதிகளில் இரையாவது, ரோஸலின் போன்ற சிறந்த தனிமனித ஒழுங்கு மட்டும் கொண்டு, குழும ஒழுங்கு அறியாதவர்கள்.

மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங்குக்கு அழைப்பவர்கள், எங்க மீட்டிங் நாளைக்குக் காலைல இந்த ஓட்டல்ல நடக்குது, வாங்க என்று சொல்வதைப் பார்த்திருப்பீர்கள். குழும அளவில் கவர்ச்சியும், செல்வாக்கும், இழுப்பும் மிக அதிகம். “நீங்க இன்னுமா சேரல?” என்று நாலு பேர் கேட்டால், நாம் தானாகவே காசோலையில் கையெழுத்துப் போட்டுவிடுவோம். மறுப்பது என்பது நாகரிகமல்ல என்ற ஒரு கருத்து மேலோங்கும்.

ரோஸியால், தோழி சிகரெட்டை நீட்டும்போது மறுக்க முடியாததற்குக் காரணம், குழுமத் தாக்கம், தோழியுடனான கடைப்பாடு மட்டுமல்ல; மறுப்பது நற்பழக்கமல்ல என்ற போலி நாகரிகச் சிந்தையை, எப்பொதும் நல்லவளாகவே இரு என்பதாகப் போதிக்கப்பட்டதன் நீட்சி. இதனை எப்போது வேரறுக்க வேண்டுமென்ற மனமுதிர்ச்சியை சாலமன் குடும்பத்தினரோ, அவரது சமூகமோ செய்யவில்லை.

கவுன்ஸிலர் வாட்சை பார்த்து, “போலாமா? இருட்டிருச்சு” என்றவர், ஏஸியை அணைத்துவிட்டுக் கிளம்ப எத்தனித்து சற்றே நின்றார். “எல்லாருக்கும் நல்லவராக எப்போதும் இருப்பது என்பதைப் போதித்த பெற்றோரும், கல்வி நிலையங்களும் குற்றவாளிகள்தாம். நான் ரோஸிலின் கேஸ்ல இத்தனை ஆழமா போனதுக்குக் காரணம்…” என்றவர் சற்று நிதானித்தார்.

“பதினைஞ்சு வருசம் முந்தி, பெங்களூரில் ஒரு பதின்ம வயதுப் பெண் கர்ப்பவதியானாள். செய்தி கேட்டு அதிர்ந்துபோய் பெற்றோரிடம் ஸ்கூல் டீச்சர் சொன்ன வார்த்தை இது - “அவ ரொம்ப நல்ல பெண்ணாச்சே? எதிர்த்தே பேசமாட்டா. அவ யாரையும் எதுக்கும் மறுத்துச் சொன்னதே இல்லை. அவ்வளவு நல்லவ”.

கேட்டுக்கொண்டிருந்த எனக்கு அன்றுதான் புரிந்தது. ரொம்ப நல்லவளாக இருந்ததால்தான் அப்பெண் இரையானாள் என்பது. நல்லவளாக இருப்பதற்கும், ரொம்ப நல்லவளாக இருப்பதற்குமான வேறுபாடு மிக அதிகம். இன்று நான் கவுன்ஸிலிங் செய்வதற்குக் காரணம், அன்று எங்க குடும்பத்துல நடந்த அந்தக் கருச்சிதைவுதான்”.

(யோசிப்போம்)

]]>
ஒழுக்கம், நற்சிந்தனை, நண்பர்கள், குறிக்கோள், discipline, personal skills, think, தனிமனிதச் சிந்தனை https://www.dinamani.com/junction/nera-yosi/2018/jul/07/குவியத்தின்-எதிரிகள்---23-எல்லையற்ற-நற்பண்புகள்-2954489.html
2950505 ஜங்ஷன் நேரா யோசி குவியத்தின் எதிரிகள் - 22. இப்ப நான் என்ன சொன்னேன்? சுதாகர் கஸ்தூரி. Saturday, June 30, 2018 12:13 PM +0530  

எத்தனையோ தடவை சொல்லியாச்சு; ஒரு முனைப்பா படிடா. பொறுப்போட இரு. படிச்சாத்தான் வாழ்க்கைன்னு. சொல்லும்போதெல்லாம், புரிஞ்ச மாதிரி தலையாட்டறான். கேள்வி கோட்டா, சரியா பதில் சொல்றான். ஆனா, படிக்கற நேரத்துல மொபைல்ல என்னமோ சாட், இன்ஸ்டாகிராம், டிவின்னு கவனம் சிதறுது. மார்க் வரலைன்னா, அப்ஸெட் ஆறான். இதே கதை திருப்பித் திருப்பி.. என்னிக்குப் புரியப்போகுதோ?

கணக்குல இவ வீக் கிடையாதுன்னு டீச்சரே சொல்றாங்க. ஒவ்வொரு ஸ்டெப்பா போட்டு, விளக்கினா புரியுதுங்கறா. அப்ப கேட்டா சரியா போடறா. ஆனா, கேள்வித்தாள்னு வந்துட்டா, சின்னச் சின்ன பிழைகள். கூட்டல், கழித்தல்ல கூடவா வரும்? மார்க் வரலைன்னு, ஒரே அழுகை..

பல வீடுகளில் கேட்கக்கூடியதுதான். ஏன், நாமே கேட்டிருப்போம். அது ஏன், புரிகிற ஒன்றை, சரியாகச் செய்ய வேண்டிய பொறுப்பு இருப்பதை உணர்கின்ற ஒன்றைச் செய்யும்போது தவறுகள் ஏற்படுகின்றன? பொறுப்பு என்ற உறுதி ஏன் கலைந்துபோகிறது?

செய்தியை உள்வாங்குதல் என்பதற்கும், உள்வாங்கியதைப் படிகளில் செய்து இயங்குவதற்கான உறுதி என்பதற்கும் உள்ள தொடர்பு பலவீனமாக இருப்பது இதன் முக்கியக் காரணம் என்கிறார்கள் பரிமாற்ற உளவியல் வல்லுநர்கள். Transaction Analysis என்பது பேரண்ட், அடல்ட், சைல்டு என்ற மூன்று நிலைகளில் நம் மனம் செயல்படுவதையும், அதன் குறுக்கான இடையாடல்கள், பரிமாற்றங்களின் தடைகளாக அமைவதையும் தெளிவாக விளக்குகிறது.

நமது பெரும் எதிர்பார்ப்பு என்னவென்றால், அடுத்தவர்கள் அடல்ட் நிலையிலிருந்து, நாம் சொல்லுவதைப் புரிந்துகொண்டு, இம்மி பிசகாது நடக்க வேண்டும். நான் சொல்வது மிகச் சரி.

இதுதான் குறுக்கான இடையாடல்களின் விபரீதம். எதிர்பார்ப்பு ஒன்றிருக்க, நிகழ்வுகளின் தாக்கம் ஏமாற்றத்தையும் கோபத்தையும் மன அழுத்தத்தையும் வரவழைக்கிறது.

பல பத்தாண்டுகளாக, இடையாடல் உளவியலாளர்கள் இந்த இடையாடல்களின் திறனை ஆராய்ந்து வருகின்றனர். நாம் தெளிவாகச் சொன்னாலும், கேட்பவருக்கு அது தெளிவாக விளங்கினாலும், இரு இடங்களில், இடையாடல்களின் வெற்றி வழுகிப்போகின்றன.

{pagination-pagination}

• கேட்பவரின் மனநிலை. அது பேரண்ட்டாகவோ, சைல்டு என்பதாகவோ இருக்குமானால், நாம் சொல்வதன் முழுத் தாக்கம் அவரது மனத்தில் ஏற்படுத்தாது.

கேட்பவர் சரியான மனநிலையில் இல்லாதிருக்கும்போது, என்னதான் அறிவுரை சொன்னாலும் அது உள்வாங்கப்படாது. அறிவுரை சொல்வோர் பேரண்ட் நிலையிலும், கேட்பவர் சைல்டு, அல்லது பேரண்ட் நிலையிலும் இருந்தால், செய்தி சரியாகச் சென்று சேருவதில்லை. உதாரணமாக, “நீ படிச்சாதான் வாழ்க்கை” என்று பேரண்ட் நிலையில் இருந்து ஒருவர் சொல்வதை, “அதான் தெரியுமே? எத்தனை தடவை சொல்லுவீங்க?” என்று கேட்பவர், பேரண்ட் நிலையில் இருந்தால் அதை மறுதலிக்கலாம். தவிர்ப்பை வெளிக்காட்டாமல், மவுனமாகத் தலையசைத்து நிற்கலாம். அல்லது “குமார் மாதிரி, என்னால் பேட்மிண்ட்டன் விளையாடி பெரிய ஆளாக வரமுடியும்பா” என்று தெருவில் விளையாடுவதை முக்கியமாகக் காட்டி, தனது குறைவான மதிப்பெண்களை நியாயப்படுத்த முயற்சிக்கலாம்.

அல்லது, “அய்யோ! இப்ப என்ன செய்யறது?” என்று பதறி, படுக்கையில் குப்புற விழுந்து அழுது கிடக்கலாம். வீட்டை விட்டு ஓடிப்போக எத்தனிக்கலாம். உணர்ச்சிப்பெருக்கில் விபரீதமான முடிவுகளை எடுக்க முயற்சிக்கலாம். கோபத்தில், ‘‘எனக்கு சாப்பாடு வேண்டாம்” என்று அறையின் கதவைச் சாத்திக்கொள்ளலாம். இது சைல்டு நிலையிலிருந்து வரும் எதிர்வினை.

இந்த இரண்டையும்தான் மேற்சொன்ன பாயிண்ட் சுட்டுகிறது. இரண்டு நிலையிலும், சொல்லப்படுவது சரியாகப் புரிந்துகொள்ளப்படுவதில்லை.

இதன்றி, “ஆமாப்பா. இந்த தடவை மார்க் குறைஞ்சிருச்சு. நல்லாதான் படிச்சேன். ஆனா, என்னமோ கவனம் சிதறுது. அல்லது சின்ன சின்ன மிஸ்டேக் வருது. என்ன செய்யலாம்? டென்ஷனா இருக்கு. படிச்சது மறந்துபோகுது” என்று தன் இடர்களைத் தெளிவாகச் சொல்லி, அதனைத் தீர்க்க படிகளை எடுக்க முயற்சிக்கலாம். இது அடல்ட் என்ற நிலையிலிருந்து வரும் எதிர்வினை. சிறுவர், சிறுமியரிடம் இதனை எதிர்பார்க்க முடியாது. ஏன், உணர்ச்சித் தாக்குதலில் இருக்கும் பெரியவர்களிடமுமே இதனை எதிர்பார்க்க முடியாது. பேசுபவர், சூழ்நிலையை அறிந்துகொண்டு அடிப்படையான இரு மாறிகளைக் கருத்தில் கொண்டு பேச்சைத் தொடங்குவதே நல்லது. இந்த இரு மாறிகள் – இடம் மற்றும் காலம்.

அறிவுறுத்தப்பட வேண்டியவரைத் தனியாக அழைத்துச் சென்று திறந்த வெளியில் உட்காரவைத்துப் பேசுவதை உளவியலாளர்கள் நல்லது என்று சொல்கின்றனர். டேனியல் கோல்மேன் தனது எமோஷனல் இண்டலிஜென்ஸ் புத்தகத்தில், “சீரிய சிந்தனைக்கு, சரியான சூழல், மரங்கள் நிறைந்த இடம்” என்கிறார். பூங்காக்களோ, கட்டடங்களோ அல்லது கடற்கரை போன்ற வெட்டவெளிகளைவிட, மரங்கள் அடர்ந்த பகுதி நல்லது என்பதன் அடிப்படை, நிகழ்வுகளின் பதிவின் அடிப்படையில் வந்த ஒன்று.

சமூக விதிகளை மதித்து நடக்கும் மனிதர்கள், இடையாடல்களில் உரசல் வருவதை, வாதம் எதிர்வாதம் வளர்வதைத் தவிர்க்க விருப்பம் கொள்பவர்கள். எனவே, அறிவுரை சொல்பவர் / பயிற்சிப்பவர் சொல்வதை எதிர்க்காமல், தனது எதிர்வினைகளை முன்வைக்க இரு உத்திகளைத்தான் அறியாமலேயே யன்படுத்துவார்கள். ஒன்று, கவனத்தைத் தவிர்ப்பது; இரண்டாவது, கேட்ட செய்திகளைத் தாற்காலிக நினைவிடத்தில் நிறுத்தி, அதனினிருந்தே எதிர்வினையாற்றுவது.

முதலாவது சூழ்நிலையில், எதிர்வினையின் முன், அவர்களுக்குள்ளே பேரண்ட்டுக்கும் அவர்களது சைல்டு நிலைக்கும் ஒரு உரையாடல் நிகழ்ந்துகொண்டிருக்கும். “அவர் சொல்வதைக் கவனிப்பதாகக் காட்டு. ஒரு சிரிப்பைத் தவழவிடு. அடிக்கடி ஆமோதிப்பதாகத் தலையாட்டு. ரைட்டு, ம், நீங்க சொன்னது சரி என்பதாக இடையிடையே சொல்லிக்கொண்டிரு” என்பதான கட்டளைகள், தனது பேரண்ட் நிலையிலிருந்து கிடைக்க, அவரது சைல்டு நிலை, நிலை பிசகாது சொன்னதைச் செய்து வரும். பெரும்பாலும், செய்தி உள்ளே புகாததால், “இப்ப என்ன சொன்னேன்?” என்று, கேள்விக்குத் தடுமாற்றமான, தவறான பதில் வரும்.

{pagination-pagination}

இரண்டாவது நிலை சற்றே வேறானது. இங்கும், சொல்பவரின் ஒரே திசையிலான பேச்சு கேட்பவரின் காதில் நுழைந்திருக்கும். கவனத்தில் நுழைந்திருக்காது. டெம்பரரி மெமரி என்ற கிடங்கில் கருத்து கிடக்கும். “இப்ப என்ன சொன்னேன்?” என்ற கேள்விக்குச் சரியான விடை, இந்த டெம்ப்பரி மெமரியிலிருந்து வருகிறது. பதில் சொல்பவர், சமூக ஆமோதிப்பைக் கருதி தான் கேட்ட செய்தி / அறிவுரைகளுக்கு ஏற்ப பதில் சொல்ல முற்படலாம். அந்த நேரத்தில், இயக்கிக் காட்டச் சொன்னாலும், நாம் சொன்ன மாதிரியே இயக்கங்களையும் அவர் அமைக்கலாம். ஆனால், அது உள்வாங்கப்பட்டு, பெருமூளையின் முற்பகுதியாலும், தருக்கம் மற்றும் உணர்ச்சிகளின் இருப்பிடங்களாலும் செயற்படுத்தப்படாதவரை, நாம் சொன்னதெல்லாம் வீண்.

இந்தச் சூழலில், பின்னூட்டம் கேட்பது, இயந்திரத்தனமான, ஆக்கநிலை அனிச்சைச் செயல் போன்ற ஆனால், சுய உணர்வுடன் செய்யப்படுகின்ற வினையாற்றலை எதிர்வினையாகப் பெறும். எதிர்வினையாற்றுபவரும் ஏமாற்றுவதற்காகச் செய்வதில்லை; கேட்பவருக்கும் இது சரியான எதிர்வினை என்பதில் சந்தேகம் வருவதில்லை.

இதனாலேயே, “இப்ப நான் என்ன சொன்னேன்?” என்ற வகையான கேள்விகளும், ‘‘இனிமே ஒழுங்கா படிப்பியா?” போன்ற கேள்விகளும் கொண்டுவரும் எதிர் வினைகளை நம்பி நாம் மேற்சென்றுவிட முடியாது. கேள்விகளைக் கேட்பவரும் இந்த நாடகத்தை அறிந்திருப்பினும், சாதகமான எதிர்வினை அவரை பொய்யான நம்பகத்தன்மைக்கு இழுத்துச் சென்றுவிடும்.

இடையாடலில் வெற்றி வழுகிப்போகும் இரண்டாவது காரணம் -

• கேட்பவர் உள்வாங்கியிருப்பினும், அதனைச் செயல்படுத்தத் தவறுதல்.

செய்தியின் தீவிரத்தையும் பொருளையும் உள்வாங்கியிருப்பினும், புரிதலுக்கும், செயல்பாட்டுக்குமான இடைவெளி பெரிதாக இருக்குமானால், செயல்பாட்டின் திட்டம், படிகள் மறைந்துபோகின்றன. இந்த இடைவெளியில் வர வேண்டியவை கீழ்க்காண்பவை.

தானே அமைக்கும் திட்டத்தின் படிகள், அவற்றைக் குறித்த மீள்பார்வை, நேர்மறையான விமரிசனங்கள் மூலம் கொண்டு வரப்படும் திருத்தங்கள், படிகள் மீதான இயக்கங்கள், இயக்கங்களின் முடிவு குறித்தான அலசல்கள்,

இந்த இரு காரணிகளும் செயல்பாட்டினைக் கொண்டுவராது இருப்பதன் காரணத்தை, ‘உள் நடக்கும் இடையாடல்கள்’ காரணம் என்கிறார் அமி ஜோர்க் ஹாரிஸ், தனது Staying OK என்ற புத்தகத்தில்.

நம்முள் நடக்கும் இந்த இடையாடல்கள், சொல்லப்படுவதைக் கவனத்தில் கொண்டுசெல்ல முடியாத அளவு அறுவையாக இருப்பதாலும், உள் வாங்கப்பட்ட செய்தி செயல்பாட்டுக்குக் கடினமாக இருப்பதாலும், செய்தியையும், செயல்பாட்டையும் தவிர்க்கும்விதமாக நம் கவனத்தை பேரண்ட், சைல்டு நிலைகளில், ‘‘இறந்தகாலத்தில் இதுபோன்ற வலிமிகு காலத்துக்குக் கொண்டுசெல்ல நம்முள்ளேயே இடையாடல்களை நடத்துகின்றன” என்கிறார், கைக்ககார்டு என்ற ஆய்வாளர்.

பேரண்ட் இந்நிலையில் வழிநடத்தும் விதம் - இன்று தோற்றிருக்கிறாயா? இதேபோல் முன்பொருமுறை தோற்றிருந்தாய். அன்று உன்னை நல்ல பிள்ளையாக நடக்கச்சொன்னது… தந்தை, தாய்.. டீச்சர், அவர் கையில் பிரம்பு இருந்தது. அடி.. வலிக்கும். எனவே கட்டுப்பட்டு நட, “ஆம், இனி படிக்கிறேன்” என்று சொல். தலையை ஆமோதிப்பதாக ஆட்டு.

சைல்டு நிலை நம்மை வழிநடத்துவது வேறு விதம் - இந்த ஒழுங்கு, செயல்பாடு வலி தரும். எனவே.. செயல்பாட்டைத் தவிர். எதிர்த்துப் பேசு, முரண்டு செய். கத்து. அழு.. அப்படியும் செயல்பட வேண்டியிருந்தால். மொபைலில் நண்பனுடன் அரட்டை அடி… இன்ஸ்டாகிராம் பார்…

செயல்பாட்டின் பலன் மகிழ்ச்சி தருவது, ஒரு மதிப்பைத் தருவது என்றிருந்தால், நமது சைல்டு நிலை, தவிர்க்கச் சொல்லாமல், செயலில் ஈடுபடத் தூண்டும். எனவேதான் செயல்பாட்டின் நிலைகளை முதலில் வரையறுத்து, அதில் ஒவ்வொரு படியையும் மறுபரிசீலனை செய்து, அதன் நிகழ்வை நேர்மறைப் பின்னூட்டம் கொண்டு ஊக்கப்படுத்துவது முக்கியம்.

“சொல்றது என் கடமை; சொல்லிட்டேன். இனிமே உன் பாடு” என்ற அறிவுரையால் எந்தப் பயனுமில்லை என்பதை பெற்றோர் / அறிவுறுத்துவோர் உணர வேண்டியது அவசியம். பாதிக்கப்பட்டவரின் செயல்பாட்டினை நேர்மறை விமரிசனம் செய்து உதவுவது, அவரைத் தன் எதிர்மறை பேரண்ட், சைல்டு நிலைகளிலிருந்து மீண்டு வர உதவும். எப்படி சொல்ல வேண்டுமென்பதை அறிவுறுத்துபவர்கள் நேராகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.

(யோசிப்போம்)

]]>
இடையாடல், எதிர்பார்ப்பு, உளவியல், பேரண்ட், சைல்ட், transparent analysis, parent, child https://www.dinamani.com/junction/nera-yosi/2018/jun/30/குவியத்தின்-எதிரிகள்---22-இப்ப-நான்-என்ன-சொன்னேன்-2950505.html
2940262 ஜங்ஷன் நேரா யோசி குவியத்தின் எதிரிகள் - 21. தோல்வியெனும் வெற்றிப்படி.. சுதாகர் கஸ்தூரி. Friday, June 15, 2018 12:04 PM +0530  

ஒரு போட்டியின் பரிசளிப்பு விழா. வென்றவர், தோற்றவர் யார் என்ற முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை. அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். வென்றவரின் பெயர் அறிவிக்கப்படுகிறது. மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போய், மேடையில் பரிசுடன் நிற்பவர் பேச முனைகிறார். எப்படிப் பேசுவார் என நினைக்கிறீர்கள்? முதலில் நன்றி நவிலல். ‘இதனை எதிர்பார்க்கவேயில்லை’ என்று சில நொடிகள். அதன்பின் சுதாரித்துக்கொண்டு, தன் குருநாதர், பெற்றோர், மனைவி, நண்பர்கள் என ஒரு வரிசை… மீண்டும் நன்றி நன்றி.

இப்போது, தோற்றவரிடம் கேட்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அவர் ஏமாற்றத்தைச் சமாளித்துக்கொண்டு, வெற்றிபெற்றவருக்கு வாழ்த்து, நல்ல போட்டி, நான் நல்லாத்தான் உழைச்சேன்… ஆனா… ‘தோல்விக்குக் காரணம்?’ என்று கேட்காமலேயே ஒரு பட்டியல் அடுக்குவார்.

கவனியுங்கள். இருவருமே எந்தப் பேச்சையும் தயார்செய்து வைக்கவில்லை. வைத்திருந்தாலும், அந்த நேரத்து அதிர்ச்சியில், தயார் செய்திருந்த உரை அனைத்தும் தளபாடமாக வருமென்ற ஒரு உத்திரவாதமும் இல்லை. காரணங்கள், வெற்றிபெற்றவருக்கு அத்தனை இயல்பாகச் சொல்ல வருவதில்லை. வெற்றிபெறாதவரின் கதையே வேறு.

எந்தப் போட்டியாளரும், தோற்ற பின்னான உரைக்குத் தயார் செய்வதில்லை. எனினும், தோல்வியின் காரணங்கள் யாரும் சொல்லாமலே, தயார் செய்யாமலே வருகிறது. இந்த முரணைப் பல ‘பழக்க உளவியலில்’ (Behavioural psychology) பலர் ஆராய்ந்திருக்கிறார்கள். முக்கியமாக, ‘மக்கள் ஏன் தோல்வியை விரும்புவதில்லை?’ என்ற கேள்வி, கடந்த 50 ஆண்டுகளாக ஆராயப்படுகிறது.

‘என்ன கேள்வி இது?’ என நாம் வியக்கலாம். தோல்வியை யார் விரும்புவார்கள்? வெற்றியல்லவா இலக்கு? அதனை அடைய முடியாத இயலாமையின் வெளிப்பாடு தோல்வி. வெற்றி என்பதே மகிழ்ச்சியைத் தரக்கூடியது. வாழ்வில் முன்னேற்றம், வெற்றியின் அடிப்படையில் அமைவது.

‘இல்லை’ என்கிறார்கள் உளவியல் வல்லுநர்களும், சமூகவியல் ஆய்வாளர்களும். விலங்கினங்கள், இரைதேடும் எதிரியிடமிருந்து தப்பியோடும் மற்றும், இனப்பெருக்கத்துக்கான முயற்சிகளில் முதலில் இருந்தே வெற்றி பெற்றிருக்குமானால், பரிணாம வளர்ச்சி சாத்தியமே இல்லை. ஓடுவதில் வேகமும், திடீரெனத் திரும்பும் லாகவமும் இல்லாத மான்கள் மரிக்கின்றன. எனவே, மான்கள் வேகமாக ஓடுவதற்கும், திரும்புவதற்கும் முயற்சி செய்துசெய்து, அவற்றின் கால்கள் வலுப்படுகின்றன. கற்கால மனிதன் தன் கைகளால் வேட்டையாட முடியாத நிலையில், கற்களை நாடினான். கூராக்கினான். மூளையைப் பயன்படுத்திக் கருவிகளைச் செய்துகொண்டான். இந்தப் பரிணாம வளர்ச்சி, தோல்வியால் வந்த வெற்றி.

வெற்றி என்பது கண நேரத்தில் முடிந்துவிடும் ஒரு நிகழ்வு. அற்ப நிமிட சந்தோஷம். அதோடு அடைய வேண்டிய இலக்கு குறித்த சிந்தனைகள், முயற்சிகள் நின்றுபோகின்றன. வெற்றி அதிகம் பயன்படுவதில்லை.

ஆனால், தோல்வி? ஊக்கமுடைய ஒருவனைக் கண நேரம் துவளவைக்கிறது. அதன்பின், இலக்கு அவனுக்கு மிக முக்கியமானதாக இருப்பின், மீண்டும் முயற்சிக்கவும், முயற்சியில் வலிமை சேர்க்கவும், புதிய உத்திகளைச் சிந்தனை செய்யவும் வாய்ப்பளிக்கிறது. தோற்றபின்னும் மீண்டும் மீண்டும் போராடுபவனுக்குக் கிடைக்கும் வெற்றி, புதிய பல வெற்றிகளுக்கு வழி வகுக்கிறது.

சத்ரபதி சிவாஜி பற்றி அறிந்திருப்போம். அவரது படையில், உடும்பு கொண்டு செங்குத்தான மலைகள், கோட்டைச் சுவர்கள் மீது ஏறுவதைப் பற்றிப் படித்திருப்போம். அதன் ஆரம்பம், இளமைக் காலத்தில் சாயத்ரி மலைப் பகுதிகளில், கடினமான பாறைகள் மீது ஏறிச்செல்ல முயன்றபோது கிட்டிய தோல்விகள். தோல்விகளின் மூலம் கிடைத்த படிப்பினை, ‘மேலேறிச் சென்றதும் போரிடக் கூடாது; படை முழுதும் வருவதற்கு ஏற்பாடாகக் கயிற்றினைக் கீழே செலுத்த வேண்டும். பெரிய வாள்களை முதலிலேயே கொண்டுசெல்லக் கூடாது. ஏறுவதற்கு வசதியாக உடும்புகளைப் பயிற்றுவிக்க வேண்டும்’ என்பதாக அமைந்தது. இது, குழுவின் ஒற்றுமைக்கும் அடிகோலியது. சிவாஜியுடன் இருந்த போர்வீரர்கள் கடுமையான பயிற்சியினால் ஒல்லியாக, எளிதில் வேகமாக இயங்கக்கூடியவர்களாக இருந்தனர். இது, தோல்விகள் தந்த படிப்பினை. அதன்பின் வந்த பல வெற்றிகளுக்கு, ஆரம்பத்தில் கிடைத்த தோல்விகளே அடிப்படை.

இது இன்றும் பயன்படக்கூடிய ஒன்று. ஒரு துறையில் கடுமையாக உழைப்பது பல துறைகளில் வெற்றியைச் சேர்க்கும். 2018-ம் வருட மஹாராஷ்டிர உயர்நிலைப் பள்ளித் தேர்வினை நடத்தியவர் போர்டின் தலைவி திருமதி சகுந்தலா காலே. இவர், 14-வது வயதில் வறுமை காரணமாகத் திருமணம் செய்துகொடுக்கப்பட்டார். அதிகம் படிப்பறிவு அல்லாத கிராமச் சூழல். வீட்டு வேலைகளுக்குப் பின் படிப்பதை வழக்கமாகக் கொண்டார். டீச்சராகச் சேர்ந்தபின்னும், மாநில க்ளாஸ் 2 அலுவலர் வேலைக்குத் தயாராக முயன்றார். ஒரு புத்தகமோ, வழிகாட்டியோ இல்லாத நிலையில், ரேடியோ செய்திகளை மட்டுமே கேட்டுக் கேட்டுத் தன் பொது அறிவைப் பெருக்கினார். அவர் சொல்கிறார், ‘எதுவும் நமக்குச் சாதகமாக இல்லாத வேளையில், எல்லாம் நமக்கு எதிராகவே இருக்கும் வேளையில், எதிர்த்துப் போரிடத் தோன்றும் சக்தி உள்ளிருந்து கிடைக்கும்’.

சகுந்தலா காலே

சைமன் ரெனால்டு என்ற ஆஸ்திரேலியர், பல்துறைகளில் முன்னடத்திச் செல்பவர்களுக்குப் பயிற்சி அளிப்பவர் (Leadership Coach). விளையாட்டில் வெற்றி பெற்றவர்களைவிட தோல்வியடைந்தவர்களை மீண்டும் ஊக்குவிப்பது கடினம். விளையாட்டில் பயிற்சியளிக்கும் தலைவர்கள், தோல்வியடைந்தவர்களை மீண்டும் பயிற்சிக்கு அழைக்க படாத பாடு படவேண்டி இருந்தது. அந்தச் சிக்கலோடு போராடுபவர்களைப் பயிற்சி செய்விக்கும்போது, அவருக்கு இந்தக் கேள்வி தோன்றியது - ‘ஏன் மக்கள் தோல்வியடைகிறார்கள்?’ அதனை ஆராய்ந்து, பயனுள்ள புத்தகம் எழுதினார். Why People Fail என்ற அப்புத்தகம், இதுவரை அதிகம் பிரபலமடையாவிட்டாலும், காரணிகள் பற்றிய யதார்த்தமான எழுத்து எனப் பாராட்டப்படுகிறது.

கேள்வி காலம் காலமாகக் கேட்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் பதில், இம்முறை தொகுக்கப்பட்ட விதம் வித்தியாசமாக இருந்தது. சைமன் 16 காரணிகளைச் சொல்கிறார். அதோடும், பல ஆய்வாளர்கள் புத்தகங்களில் இருந்தும் அடிப்படையாக சில காரணங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. அவற்றில் முக்கியமானவை - புறக்காரணிகள் மீதான புகார் சுமத்தல், தன் மீதான கழிவிரக்கம், தன் குற்றத்தைப் பாராது விடுதல் / அதனை நியாயப்படுத்துதல்.

‘எனது தோல்விக்குக் காரணம் பிறரது தவறுகள். எனது கட்டுப்பாட்டில் இல்லாத இயற்கைக் காரணங்கள். விதி..’ என அடுக்கிக்கொண்டே போகிறோம். ஆனால், நானும், எனது தவறான சிந்தனையும், செயல்பாடும் காரணமாக இருக்குமெனச் சிந்திக்கத் தவறிவிடுகிறோம்.

தோல்விதான் பிற வெற்றிகளை, மாற்றங்களைக் கொடுக்கிறது என்றால், உலகில் பலரும் பெருவெற்றி பெற்றிருக்க வேண்டும். போட்டியில் ஒரு வெற்றி வீரனுடன், தோல்வியடைந்தவர்கள் பலர் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் வெற்றிபெறுகிறார்கள் என்றால், உலகம் இந்நேரம் பலமடங்கு நன்றாக இருக்க வேண்டும். ஏன் இல்லை?

எல்லாம் கிடைத்தவர்கள் முயற்சி செய்யத் தூண்டுதல் இல்லாதிருக்கும்போது, இல்லாதோர், தடையால் இறுகி, வலிமை பெறுகிறார்கள். வெற்றிக்கான முயற்சியில் வரும் தோல்விகள், அவர்களை வலிமை கொண்டவர்களாக, விற்பன்னர்களாக ஆக்குகின்றன. ஆனால், இல்லாதோர் அனைவரும் வெற்றிகொண்டு முன்னேறிவிடுவதில்லை. ஏன்?

தோல்வியடைந்தவர்கள் எல்லோருக்கும் வெற்றியடைய வேண்டிய மனப்பாங்கு இருப்பதில்லை. தோல்வி இருவரைத் தாக்குகிறது என்றால், ஒருவர் துவண்டு, தன் சக்தியைச் சிதற அடித்து மேலும் தோல்வியடைந்து, விலகிச் செல்லலாம். மற்றவர், தோல்வியை ஆராய்ந்து, எதில் நான் தவறு செய்திருக்கிறேன்? எனது காரணிகள் என்ன? என்று பட்டியலிட்டு, என்ன செய்தால் இத்தவறுகளைத் திருத்த முடியும் என்பதை உறுதி செய்யலாம்.

ஆனால், அவரும் தனது திட்டத்தை விடாமுயற்சியுடன் மீண்டும் மீண்டும் செயலாக்கி, பல படிகளில் மீண்டும் ஆராய்ந்து தவறுகளைத் திருத்தி, வெற்றி மனப்பான்மையுடன் செயலாற்றாவிட்டால், தோல்வி மீண்டும் நிச்சயம். எனவே, வெற்றி வேண்டுமெனில் மூன்று இயக்கப்படிகளைச் செய்தல் அவசியம். 1. தோல்விக்கான உண்மையான காரணங்களைக் கண்டுபிடித்தல். 2. அவற்றைத் தவிர்க்கச் செய்ய வேண்டிய படிமுறைகளை வகுத்தல். 3. படிமுறைகளை விடாமுயற்சியுடன், ஊக்கத்துடன் செய்து பார்த்துத் திருத்துதல்.

தோல்விக்காகச் சொல்லப்படும் காரணங்கள், புகார்களை ஒத்திருக்கும். அவற்றை மிகக் கவனமாக ஆராய்ந்து விலக்கிப் பட்டியலிட்டு, திருத்தங்களைக் கொண்டுவந்து, ஊக்கத்துடன் செயலாற்றுவதற்கு நேர்மறைச் சிந்தையுடன் நேராக யோசிக்க வேண்டும்.

(யோசிப்போம்)

]]>
psychology, விடாமுயற்சி, உத்வேகம், வெற்றியாளர், தோல்வியாளர், சைக்காலஜி, motivation, winner, loser, why people fail https://www.dinamani.com/junction/nera-yosi/2018/jun/16/குவியத்தின்-எதிரிகள்---21-தோல்வியெனும்-வெற்றிப்படி-2940262.html
2934277 ஜங்ஷன் நேரா யோசி குவியத்தின் எதிரிகள் - 20. போலிச் செய்திகள் சுதாகர் கஸ்தூரி. Saturday, June 9, 2018 12:00 AM +0530  

ரோல்ஃப் டோப்லி, தனது புத்தகத்தில் ‘தெளிவாக யோசிக்க வேண்டுமென்றால், செய்தித்தாள்களை, செய்திச் சேனல்களைப் புறக்கணியுங்கள்” என்கிறார். இதில் சமூக வலைத்தளங்களும் அடங்கும். எதனைப் பார்க்க வேண்டும், நம்ப வேண்டுமென்பதில் அதிக முதிர்ச்சி பலருக்கு இல்லை என்பது அவரது கணிப்பு.

ரோல்ஃப் டோப்லி

இது ஒரு செருக்கினால் வந்த சொற்களல்ல என்பது கவனித்துப் பார்த்தால் விளங்கும். பல காரணங்கள் நம்மை ஒரு செய்தியை நம்ப வைக்கின்றன. அதில் முதன்மையானது, நாம் முன்னமே கண்ட உறுதிப்படுத்தும் பிழை. நாம் நம்பும் ஒன்றினை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையான செய்தியை நம் கவனம் சட்டென ஈர்த்துக்கொள்கிறது. அதனை மீண்டும் அசைபோட வைக்கிறது. எனவே, ஒரு தலைவனைப் பிடித்திருந்தால், அவரைப் புகழும் வகையான செய்திகளை, செய்தித்தாளில் தேடிப் படிக்க வைக்கிறது. அதேபோல், வெறுப்பவரைப் பற்றிய தகவலை நாம் தேடிப் படிப்போம். செய்தியின் மூலத்தை, உண்மைத்தன்மையை ஆராய அந்தக் கவனப்பிழை அனுமதிக்காது.

இரண்டாவது, மூலம் குறித்த கருத்துப் பிழை. பொதுவாக, ஆங்கிலப் பத்திரிகையில் வரும் செய்திகளுக்கு நம்பகத்தன்மை அதிகமாகக் கொடுப்பது நமது அடிப்படைப் பிழை. இது, ‘செகப்பா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான்’ என்பது போன்ற ஒன்று. சில நாளிதழ்களுக்குக் காலம் காலமாகக் கொடுக்கப்பட்ட மதிப்பு மற்றவற்றிலும் அதிகமாக இருப்பின், அது தரும் செய்திகளை நாம் உண்மையென நம்பும் சாத்தியம் அதிகம். அந்த இதழ் பல கைகள் மாறி இப்போது போலியான அல்லது சாய்மானம் கொண்ட செய்திகளை வெளியிட்டு வரலாம். நமது நம்பிக்கையினால் இச்செய்திகளை நம்பிவிடும் சாத்தியம் அதிகம்.

மூன்றாவது, அனுபவ மற்றும் கருதுகோள் சாய்மானம். என்றோ எங்கோ கண்ட/கேட்ட செய்தியைத் தற்போது வந்திருக்கும் செய்தியுடன் இணைத்துப் பார்த்து, தருக்க ரீதியாக நாமே ஒரு முடிவுக்கு வருவது. உதாரணமாக, கம்பெனிகளில் மென் திறமைகள் (soft skills) எனப்படும் திறம்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்ற செய்தி, நாம் கேட்ட/புரிந்துகொண்ட அளவில் பதியும்போது, ‘அடிப்படைத் திறமையைவிட மென் திறமைகளே அதிகம் தேவை’ என்பதாக மாறுகிறது. இதன் விளைவு, தனது அடிப்படைத் திறமையை, நேர்த்தியை வளர்த்துக்கொள்ளாமல், பேச்சு, விரிவுரை கொடுத்தல், குழு உரையாடல், ஆங்கிலச் சொற்களில் தேர்ச்சி என்பவற்றில் மட்டும் கவனம் செலுத்துகிறோம். அதன் தாக்கம், வேலையில் சேர்ந்தபின் புரியும். கம்பெனிகளில் நல்ல பேச்சுத்திறமை மட்டுமிருந்தால் போதாது; வினைத்திறம், செயலை வெற்றிகரமாக முடிக்கும் வேகம், திறமை என்பதே மிக அடிப்படையான எதிர்பார்ப்பு. அது இல்லாவிடில், எத்தனை நேர்த்தியாகப் பேசினாலும், வெற்றிபெற இயலாது.

போலிச் செய்தி என்பது சமூகத்தில் பரபரப்பு, வதந்தி மட்டுமல்ல, தனிமனித அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை மேலே பார்த்தோம். இந்த மூன்று பிழைகள் மட்டும் நம்மை போலிச் செய்திகளை நம்பவைத்துவிடுவதில்லை. நம் மனச் சூழல், சுற்றுப்புறச் சூழல், அன்றைய, அந்த நேரத்தில் நமது எண்ணங்களைப் பிடித்து நிறுத்தும் வலிமை, நம்மை வலியுறுத்தும் நம்பகமான மனிதர்கள், ஊடகங்கள் போன்று பல காரணிகள் தங்கள் தாக்கத்தை மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ தோற்றுவிக்கின்றன. இவற்றில் எதன் தாக்கம் அதிகம், நமக்கு எது தேவை என்பதை நாம் மட்டுமே தீர்மானிக்க இயலும்.

உண்மையான நிரூபிக்கப்பட்ட தகவல்களையே மாற்றிச் சொல்லிவிட முடியுமெனில், திட்டமிடப்பட்டு, பொய்யாகப் பரப்பப்படும் போலிச் செய்தி, வதந்திகள், மீம்ஸ்கள், போலி வீடியோக்களில் நாம் மிகக் கவனமாக இருக்கவேண்டி இருக்கிறது. சமூக ஊடகங்களில் இதற்காகவே போலிச் செய்தி தயாரிப்பு ‘நிறுவனங்கள்’ இருப்பதாகவும், ரஷ்யாவில், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்-ல் இருக்கும் இண்டர்நெட் ரிசர்ச் ஏஜென்ஸி என்னும் நிறுவனத்தில் பலர் இந்தப் போலிச் செய்திகளைத் தயாரித்து வெளியிடவே வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றனர் என்றும், அமெரிக்கத் தேர்தலின்போது, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் ஹிலாரி க்ளிண்ட்டனுக்கு எதிராக அவர்கள் குவித்த போலிச் செய்திகளின் தாக்கம் கண்கூடாகக் காணப்பட்டது.

பொய்ச் செய்திகளால் சில நன்மைகளும் உண்டு. ஒரு குழுவை, ஒரு குறித்த நோக்கத்தின் மேல் இயங்கவைக்கவும், ஒரு மனிதனை பொருத்தமாகப் பொய்ச் செய்திகளால் ஊக்கமடையவைத்து தன் செயலை உற்சாகத்துடனும், திடத்துடனும் செய்யவைக்க இயலும் என்கிறார்கள் மனநல ஆலோசகர்கள். குழந்தைகள் முதல் கிழவர்கள் வரை அனைவருக்கும் இந்த ஊக்கம் தேவைப்படுகிறது.

மகாபாரதத்தில் ‘அஸ்வத்தாமன் கொல்லப்பட்டான்’ என்ற பொய்ச் செய்தி பரப்பப்பட்டது. துரோணர் அதனை நம்ப மறுத்து, இதனை ‘எப்போதும் உண்மையே பேசும் தருமன் சொன்னால் மட்டுமே நம்புவேன்’ என்றார். இது, செய்தியின் மூலத்தின் மீது வைத்த நம்பிக்கை. அஸ்வத்தாமன் என்ற பெயரில் இருந்த யானை கொல்லப்பட்டது. தருமன், உண்மையே சொல்லுமளவில் செய்தியைச் சற்றே திரித்துச் சொன்னார் - ‘அஸ்வத்தாமன் இறந்தது உண்மை. அது ஒரு யானை’ என்றார். நியாயமாகப் பார்த்தால், அவர் பொய் சொல்லவில்லை. ஆனால், செய்தியை துரோணர் புரிந்துகொண்ட விதம், தன் மகன் அஸ்வத்தாமன் இறந்ததாக இருந்தது. துரோணரின் உயிர் பறிக்கப்பட்டது.

இளமையில் நாம் கேட்ட முதல் பொய்ச் செய்தி, ‘ஓநாய் வருவதாகக் கத்திய சிறுவனின்’ கதை. ஒரு முறை பொய்ச் செய்தியை அவன் தந்ததால், நிஜமாகவே ஓநாய் வந்தபோது, மக்கள் தங்கள் அனுபவச் சாய்மானத்தில் அவனது செய்தியை நம்ப மறுத்தனர்.

இணையதளத்தில் வரும் மின்னஞ்சல்களில் 60 சதவீதம் பொய் அஞ்சல்களே எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவை பல வடிகட்டிகளால் தடுக்கப்பட்டும் நமது உள்பெட்டி ஒவ்வொரு நாளும் நிறைகிறது. இணையதளத்தின் வலிமையைப் பெருமளவில் வீணாக்கும் பொய்ச் செய்திகள், மின்னஞ்சல்கள், சமூக ஊடகங்கள் மூலமே பரப்பப்படுகின்றன.

வேண்டாத மின்னஞ்சல் தொடர்புகளைத் துண்டிக்காமல் வைத்திருப்பது, பேஸ்புக்கில் பலரைத் தொடர்வது, நாம் இட்ட பதிவுகளுக்கு எத்தனை விருப்பக்குறிகள் வந்திருக்கின்றன என்று பார்ப்பது, ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் பலரைத் தொடர்வது என்பதான ஒரு போதை அடிமைத்தனத்திலிருந்து நாம் விலகி வர வேண்டும். முதல்படியாக, இத்தனை மணித்துளிகள் மட்டுமே ஊடகங்களில் செலவிடுவேன் என ஒரு திட்டமும், எச்சரிக்கை மணியும் வைத்துப் பணியாற்றுதல் அவசியம். மெல்ல மெல்ல இவற்றிலிருந்து விடுபடும் பழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும்.

சில சமூகக் கலைநிகழ்ச்சிகள், சொற்பொழிவுகளில் பங்கேற்பது, நாடகம், சினிமா அரங்குகளுக்குச் சென்று பார்ப்பது என்பதான பழக்கங்கள் கொண்டுவர முடியுமானால் நன்று. இவை, ஆரோக்கியமான நிஜ மனித உறவுகளை மேம்படுத்தும். அவர்கள் சொல்வதிலும் பொய்ச் செய்திகள் வரலாம். சற்றே நிதானத்துடன், ‘இச்செய்தி தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறதா?’ என்பதாக சரிபார்த்துப் பின் நம்புதல் (trust but verify) என்ற பழக்கத்தைக் கற்க வேண்டும். அப்பாவியாக எதையும் நம்பி மோசமடைவதைவிட, சந்தேகப்பிராணியாக சற்று நிதானத்துடன் இயங்குவது, நேராக யோசிப்பதன் ஒரு அடையாளம்.

(யோசிப்போம்)

]]>
போலிச் செய்தி, வலைத்தளங்கள், நம்பிக்கை, மென் திறமைகள், fake news, trust but verify, e-mails, soft skils https://www.dinamani.com/junction/nera-yosi/2018/jun/09/குவியத்தின்-எதிரிகள்---20-போலிச்-செய்திகள்-2934277.html
2929170 ஜங்ஷன் நேரா யோசி குவியத்தின் எதிரிகள் - 19. ஏட்டுச் சுரைக்காயில் கூட்டு சுதாகர் கஸ்தூரி. Saturday, June 2, 2018 11:43 AM +0530  

2008-ல், உலகளவில் பங்குச்சந்தை பெருமளவு சரிந்தது. பல லட்சம் கோடிகள் நொடிகளில் மறைந்தன. பெரும்பணக்காரர்கள் நிஜமாகவே தெருவில் நின்றார்கள். அமெரிக்காவின் சப் ப்ரைம் மார்க்கெட்டின் விளைவு உலகளவில் பாதித்த நிலையில், சில மார்க்கெட் வல்லுநர்கள் தொலைக்காட்சியில் ‘‘மார்க்கெட் விழும் என்பதை நாங்கள் முன்பே சொன்னோம்’’ என்றனர். ‘‘எந்தக் காரணங்கள் என்பதைச் சொல்லுவதில் வேண்டுமானால் முரண் இருக்கலாம். ஆனால் சந்தை வீழும் என்பதில் சந்தேகமே இல்லை’’ என்று, முன்பு அங்கு இங்கு சொன்ன சொற்களாலும் எழுத்துகளாலும் உறுதி செய்தார்கள். மக்கள் அதையும் நம்பினார்கள். மேலும் அந்த வல்லுநர்கள் சொல்வதைக் கூர்ந்து கவனித்தார்கள்.

‘‘சந்தையில் இப்போது முதலீடு செய்யாதீர்கள். மார்க்கெட் தாறுமாறாகிக் கிடக்கிறது’’ என்றனர் பலர். இதைக் கேட்டு, முன்பே முதலீடு செய்திருந்ததையும் மக்கள் மிக அதிக நஷ்டத்தில் வெளியே எடுத்தனர்.

‘‘எனது ம்யூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மிக மோசமான நிலையில் இருக்கிறதே, எடுக்கலாமா?’’ என்று என் நண்பரிடம் கேட்டேன். அவர் மறுதலித்தார். ‘‘உங்களுக்கு இந்த நாடு, இந்த உலகம் மீண்டு வரும் என்ற நம்பிக்கை இருந்தால், மேலும் முதலீடு செய்யுங்கள். பெரிய பெரிய கம்பெனிகளின் பங்குகள் அடிமட்ட விலையில் கிடைக்கின்றன. என்ன, நம்பிக்கையும், உறுதியும், ரிஸ்க் எடுக்கும் மனநிலையும் தேவை’’ என்றார். எனக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லாததாலும், நேரடிச் சந்தை பற்றி அதிகம் தெரியாததாலும், ம்யூச்சுவல் ஃபண்டில் இருந்ததை எடுக்காத அளவில் தைரியத்தை வைத்துக்கொண்டு, முதலீடு என்பதையே நிறுத்திவிட்டேன்.

2010 முதல் சந்தை மீண்டு வந்தபோது, யாரெல்லாம் 2008/09-ல் முதலீடு செய்திருந்தனரோ, அவர்கள் செல்வம் பெருகியது. அப்போது தொலைக்காட்சியில் அதே வல்லுநர்கள் ‘‘நான் சொல்லல? மார்க்கெட் மீண்டு வரும்னு? இப்ப…’’ இதையும் மக்கள் நம்பினர். ஏனெனில், அவர்கள் சொன்ன பங்குகள், யூனிட்டுகள் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தன. வல்லுநர்கள், நீங்கள் தோற்றாலும், ஜெயித்தாலும் வல்லுநர்களாகவே இருப்பார்கள்.

எதார்த்த ஆலோசனை சிலரிடமிருந்தே கிடைக்கும். வல்லுநர்களை அதிகம் நம்பவேண்டாம் என்று நஸ்ஸிம் நிக்கோலாஸ் தலேப் (Nassim Nicholas Taleb), ரோல்ஃப் டோப்லி (Rolf Doebli) போன்ற இன்றைய சமூக அறிவாளர்கள் கூறிவருகின்றனர். ஏனெனில், நிகழ்வின் புரிதல் என்பது தகவல் ஒரு பக்கம், அதனைத் திரித்துக் கூறுதல் மறுபக்கம் எனப் பிரிந்து கிடக்கிறது. இரண்டாவது பக்கத்தில் கில்லாடிகள் இந்த வல்லுநர்கள். அவர்கள் காட்டும் ட்ரெண்ட் நிலவரம், புள்ளியியல் தகவல்நிலைகள் போன்ற தகவல்களைத் தேவைக்கு ஏற்றார்போல் திரித்து விவரிக்க முடியும். நாமும், நமது தருக்க ரீதியான சிந்தனை மூலம் அதனை ஏற்றுக்கொள்ளவே செய்வோம்.

உதாரணமாக, ‘‘இப்போது வேலை வாய்ப்பு அரிதாகிவிட்டது. ஐ.டி. துறை படுத்துவிட்டது’’ என்று ஒரு மனிதவளத் துறை அதிகாரி சொல்கிறார் எனக் கொள்வோம். அதனை உறுதிப்படுத்தும்விதமாக, கூகிள் தேடல் மூலம், இரண்டே நிமிடத்தில் பல தகவல் வரைபடங்களையும் புள்ளிவிவரங்களையும், செய்தித் துணுக்குகளையும் எடுக்கமுடியும். ‘‘பாத்தீங்களா. இதான் சொன்னேன். ஐ.டி.ல இப்ப வேலையே இல்ல’’ என்பார், அவருக்குச் சாதகமாக மற்றொரு மனிதவளத் துறை அதிகாரி. அவருக்கு ஆட்கள் ஐ.டி.யில் தேவையில்லை; சிவில், மெக்கானிக்கலில் வேண்டுமென்றால், இதனைவிடச் சிறந்த ஆயுதம் வேறில்லை. புள்ளிவிவரங்கள், ஆலோசனை நிறுவனங்களின் அறிக்கைகள் – ‘‘அக்ஸெஞ்ச்சர் போன வருசம் ரிப்போர்ட்ல ‘இந்தியாவில் ஐ.டி. ஆளெடுப்பு 4.5 சதவீதம் குறையும்’ என்று சொல்லியிருக்கு’’ என ஒரு செய்தி கொண்டு, இன்றைய மாணவர்களைப் பயமுறுத்திவிட முடியும்.

தகவல்கள், புள்ளியியல் விவரங்கள் அனைத்தும் நம்பத்தகுந்தவை அல்ல. அவற்றின் தனித்த உண்மை நிலையைவிட, பல மாறிகளுடனான சேர்க்கையில் உண்மை நிலை அறியப்பட வேண்டும். அதுவே யதார்த்தம். ஐ.டி.யில் ஆளெடுப்பு 4.5 சதவீதம் குறையும் என்றால், எங்கே? எப்போது? எந்தத் தனித் துறையில் (ஜாவா/ டாட்நெட், பைத்தான்…) என்பது தெளிவாகச் சொல்லப்பட வேண்டும். நீங்கள் ஆரக்கிள் டேட்டாபேஸ் கற்றவராக இருந்தால், இந்தச் செய்தியால் பயப்படவேண்டியதில்லை. பொதுவான செய்தி பரவலான தாக்கத்தை விளைவிக்கும். எனவே, செய்திகளின் உண்மைத்துவம், தெளிவு நிலை இவை கவனிக்கப்பட வேண்டும்.

வல்லுநர்களை நம்பக் கூடாது என்கிறார்களா? அல்ல. எந்த அளவு நம்ப வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும் என்கிறார்கள். தலேப் எழுதிய ‘Skin in the Game’ புத்தகத்தில் இதனை விரிவாக எடுத்துரைத்திருக்கிறார். ‘‘உங்கள் செல்வத்தை ‘இந்தப் பங்குகளில், ம்யூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யுங்கள்’ என்று சொல்பவரும் அதே பங்குகளில், ஃபண்டுகளில் முதலீடு செய்திருக்கிறாரா என்று பாருங்கள். அவர் செய்யாமல் உங்களை அறிவுறுத்தினார் என்றால், சற்று யோசியுங்கள். தனது சொந்த அளவில் ரிஸ்க் இல்லாது பிறரை ரிஸ்க் எடுக்கத் தூண்டுபவர்கள் உலகில் அதிகம். இவர்களால்தான் பல சரிவுகள், பின்னடைவுகள் வந்திருக்கின்றன என்பதை ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டுகிறார் தலேப்.

தலேப்

இது முதலீடு என்பதில் மட்டுமல்ல, பெரும் பொறுப்பில் இருப்பவர்கள் பொறுப்பில் தவறினால், பொதுமக்களின் சொத்து விரயமாவதும், மிஞ்சிப்போனால் தவறு செய்பவர்கள் சிறையில் அடைக்கப்படுவதும் மட்டுமே மிஞ்சுகிறது. போன செல்வம் போனதுதான். வங்கிகளில் வாராக்கடன்கள் இதற்குப் பெரும் சான்று.

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில், அவருக்கு சொந்த ரிஸ்க், அக்கறை எந்த அளவில் இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். ஒருவர் ஏன் குறிப்பிட்ட ஒரு தலைவரைப் போற்றியோ தூற்றியோ சொல்கிறார் என்பதை சற்றே விலகிக் கவனித்தால், அவருக்கு அந்த இயக்கத்தில் ஒரு ரிஸ்க்கும் இல்லை, ஆதாயமே இருக்கிறது என்பது கவனத்தில் வருமானால், விலகி நிற்பதே நல்லது.

சில கேள்விகளை அடிக்கடிக் கேட்டுக்கொள்வது நல்லது. நாம் நம்பும் இவர் / அல்லது இவர் தரும் செய்தியின் பின்னால் நிற்கும் இவரது கருத்து, இவருக்கு எந்த அளவில் ரிஸ்க்கை ஏற்படுத்துகிறது? ஏன் இவர் இப்படிச் சொல்கிறார்? என்ற கேள்விகளும் அதன் பின்னான ஆய்வுகளும் சில மணித்துளிகள் செலவிட நேர்ந்தாலும், நமது தனிவாழ்வு, பொதுவாழ்வில் நமது குவியத்தை நோக்கிச் செல்ல வழிவகுக்கும்.

ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டார் என்பதற்குப் பொங்குபவர்கள், காஷ்மிரப் பண்டிட்டுகள் என்ற ஒரு இனமே சொந்த மாநிலத்திலிருந்து வாள்முனையில் விரட்டப்பட்டிருக்கிறது என்பதற்குப் பொங்குகிறார்களா என்பதைக் கவனித்தல் நல்லது. அப்படிச் செய்யவில்லை என்றால், அவர்களிடம் இருந்து விலகி நம் வேலையைப் பார்த்தல் நலம். காகிதம், ஊடகம், சமூக வலைத்தளத்தில் தீவிரமாக எழுதுபவர்களைவிட, ஒரு குறிப்பிட்ட நோக்கத்தில் சிறுஅளவிலேனும் குவியத்துடன் இயங்குபவர்களை அடையாளம் கண்டுகொண்டு, அவர்களது இயக்கத்தின் பின்னணியை அறிந்துகொண்டு, இச்செயல் நமது குறிக்கோளை அடையப் பயன்படுமா? அல்லது இடையூறாக இருக்குமா? என்று கேட்டுக்கொள்வது அவசியம். கேட்டுக்கொள்வது என்பதைவிட, கேள்வியாக ஒரு காகிதத்தில் எழுதி, சில நாட்கள் அவகாசம் கொடுத்து நம் கருத்தைப் பதிவு செய்ய வேண்டும். அதன்பின் நிதானமாக அவற்றை ஒரு மீள்பார்வை செய்தால், நாம் செய்ய வேண்டிய தீர்மானம் ஒரு வடிவில் வரத்தொடங்கும்.

இங்கு, நேராக யோசிப்பது மட்டுமல்ல, நேராக எழுதி, கவனித்து இயக்கத்தினை முடிவு செய்ய வேண்டும்.

(தொடர்ந்து யோசிப்போம்)

]]>
share market, பங்குச் சந்தை, முதலீடு, investment, mutual fund, IT Industry, statistics, ம்யூச்சுவல் ஃபண்ட், வல்லுநர்கள், suggestions https://www.dinamani.com/junction/nera-yosi/2018/jun/02/குவியத்தின்-எதிரிகள்---19-ஏட்டுச்-சுரைக்காயில்-கூட்டு-2929170.html
2912595 ஜங்ஷன் நேரா யோசி குவியத்தின் எதிரிகள் - 18. நினைவின் கற்பனை சுதாகர் கஸ்தூரி. Tuesday, May 29, 2018 01:39 PM +0530  

தடவியல் துறைக்கான மென்பொருள் கட்டமைப்பது, நிறுவுவது குறித்தான துறையில் என் பணி சில வருடங்கள் தொடர்ந்தது. அப்போது, காவல் துறை அதிகாரிகள், புலனாய்வுத் துறை அதிகாரிகள் எனச் சிலரோடு கலந்தாலோசித்த தருணங்கள் உண்டு.

நாக்பூரிலிருந்து வந்த ஒரு மூத்த அதிகாரி, மென்பொருளில் அவர்களது முடிவை எழுதும் இடத்தில் குறைந்தது இரு தேர்வுகள் இருக்குமாறு வடிவமைக்கச் சொன்னார். அதாவது, ஒரு முடிவு எழுதுமிடத்தில் இரு முடிவுகளுக்கான சாத்தியம் தேவை.

“எதற்கு இப்படி? உங்களிடம் ஒரு முடிவுதானே இருக்கும்?” என்றேன்.

“இல்லை” என்றார் சிரித்தவாறு. “பெரும்பாலும், விசாரணைக்கு உட்படுத்தபடுவோர் மிகத்திடமாக, உறுதியாகச் சொல்லுமிடத்திலும், கிடைக்கும் தடயத்திலும் தவறு இருக்கும். கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரித்து அறிவதே மெய்”.

நான் எழுதுவதை நிறுத்தினேன். “தீர விசாரித்து என்று சொல்கிறீர்களே. விசாரணையிலும் கண், காது கொண்டுதானே அறிகிறீர்கள்? அப்போ அதுவும் பொய்யாகத்தானே இருக்கும்?”

‘‘முக்கியமான சொல் ‘‘விசாரணை” அல்ல ‘‘தீர” என்பது. எவ்வளவுக்கு எவ்வளவு சுழன்று சுழன்று தகவல்களை அறிகிறோமோ, அந்த அளவுக்கு தடயம் மாறும், செய்தி மாறும், விசாரணையின் ரூபம் மாறும். அதோடு, முடிவுகளேகூட மாறும். இது மனம், உடல் அறிவு தாண்டி நம்பிக்கை தொடர்புடையது. நம்பிக்கை என்பதும், நினைவு என்பதும் தவறிழைக்க முடியும்”.

டேனியல் கோல்மேன் (Daniel Goleman) இதனை, “மனம், நம்பிக்கை, நினைவுகள்தான் முன் நம்பிய நிகழ்வை, நிஜமென பதிந்துகொள்ளும் விபரீதம்’’ என்கிறார். பெரும் விபத்தில் சிக்கி மீண்டவர்கள் சொன்ன விவரங்களில் பல தவறாக இருப்பதைப் பார்க்கமுடியும். அவர்கள் பொய் சொல்ல வேண்டுமென்று நினைத்துச் சொல்லியிருக்கமாட்டார்கள். சம்பவம் அவர்களது நினைவில் பதிந்ததும், சொல்வது போலவே இருக்கும். (இதனை, நவீன கருவிகள் மூலம் உறுதிப்படுத்தமுடியும்). ஆனால், நிகழ்வு அவ்வாறு நடந்திருக்காது.

இதன் காரணம், நமது புலன்கள் மட்டுமல்ல, மூளையின் தாற்காலிக நினைவுப் பகுதி, நினைவு சேமிப்புப் பகுதி போன்றவையும், நிகழ்வுகளைத் தாம் ஏற்றெடுக்கும் விதத்தில் பதிந்துவைக்கின்றன. அதாவது, கற்பனை சொல்லும் கட்டளையில் ஒரு நிகழ்வை உருவாக்கிக்கொள்கின்றன.

டேனியல் கோல்மேன்

ஒரு உறுமல் ஒலி கேட்கிறது என வைத்துக்கொள்வோம். புலன்கள் மூளையிடம் சேர்க்க, அது தாற்காலிக நினைவில் உறுமலைத் தேடுகிறது. இது சிங்கத்தின் கர்ஜனை. நாம் இருப்பது மிருகக்காட்சி சாலையோ, அல்லது கிர் காடுகளாகவோ இருந்தால் இந்த முடிவு சரியானது. வீட்டில் இருக்கையில்? டிவியில் ஓடும் டிஸ்கவரி சேனல். இந்த துரிதச் சரிபார்த்தல் நடக்க நேரமானால், நாம் சமீபத்தில் கேள்விப்பட்டபடி, வீட்டில் சிறுத்தை நுழைந்திருக்கும் என முடிவு வந்துவிடுகிறது. அதன்பின் பதற்றம் தணிந்தபின்னும் மூளை சொல்வது, “இல்ல, நான் ஜன்னல் பக்கம் பார்த்தேன். ஒரு சிறுத்தையோட வால் தெரிஞ்சது”. நம் நினைவு சேர்த்துவைத்திருப்பது சமீபத்திய நிகழ்வின் தாக்கம் (Recency effect). இதுபற்றிப் பின்னர் காண்போம். இப்போதைக்கு நாம் சிந்திக்க வேண்டியது, நாம் கேட்ட உறுமல் ஒலி, பார்த்த சிறுத்தையின் வால், இவை நிஜமா, பொய்யா?

பொய் என்பது உலகு சொல்லும். நிஜமென்பதை மனம் சொல்லும். இரண்டும் உண்மைதான். உணர்ந்தறிதலுக்கு, மூளை தன்னுள் வைத்திருக்கும் ஒலி, காட்சியை ஒன்று சேர்த்து ஒரு நிகழ்வை உருவாக்கிவிடுகிறது. இந்தத் தூண்டல்கள், காட்சிகள் எல்லாம் வெளியில் இருந்து வரவில்லை. உள்ளிருந்தே உருவாக்கப்பட்டவை. உணர்ந்தறிதலுக்கு இந்த இரண்டுக்குமான வித்தியாசம் தெரியாது.

2015-ல், இந்தூர் அருகே நிகழ்ந்த ஒரு ரயில் விபத்தில், ஆற்றின் கரையில் வீழ்ந்த ஒருவர் பாம்பு கடித்ததாகச் சிகிக்சைக்கு அழைத்துவரப்பட்டார். காயத்தைப் பார்த்த சீனியர் செவிலி, இது பாம்புக்கடி அல்ல என்பதை உணர்ந்து, வேறு மருந்துகளை உடனே செலுத்திக் காப்பாற்றினார். ஆனால் பாதிக்கப்பட்டவர், “ஒரு பெரிய பாம்பு நெளிந்து செல்வதைப் பார்த்தேன்” என்றார் உறுதியாக. அவர் சொன்ன தடயம், இடம் எல்லாம் சரியாக இருந்தது. இடம், காலம், வலி, காயம் எல்லாம் நிஜம். ஆனால், பாம்பு கற்பனை.

வீட்டிலிருந்து கிளம்பும்போது சாவியைப் பையில் போட்டதாக மிக உறுதியான நினைவு. ஆனால், பூட்டிய கதவின் மறுபுறம் இரவு நேரத்தில், பையில், இல்லாத சாவியைத் தேடுவது கொடுமையான அனுபவம். கேட்டால், “நல்லா நினைவிருக்கு. சாவி எடுத்தாச்சான்னு நீ கேட்டே, அப்ப சாவியைப் பாத்துட்டு, பைக்குள்ள போட்டுட்டுத்தான் ஆமான்னேன்” என்போம். சாவி, வரவேற்பரையில் டிவி-யின் மேல் பத்திரமாக இருக்கும். நினைவு என்பதை மூளை தவறாக உறுதி செய்ததன் அடையாளம் இது.

இதற்கும் யோசிப்பதற்கும் என்ன தொடர்பு? காட்சிகள் பிம்பங்களாவே விரிய வேண்டுமென்பதில்லை. ஒருவர் நம்மிடம், “அடுத்த வாரம் வாங்க; பேசி முடிச்சிடலாம்” என்றால், “நிஜமாகவே நமக்குச் சாதகமாக முடிந்துவிடும்” என்று நினைப்பதில், இந்த உணர்வு, நினைவுப்பிழை வருவதற்குச் சாத்தியமிருக்கிறது. அவர் சொன்ன வார்த்தைகள் மட்டுமல்ல, உடல்மொழி, அன்றைய சூழ்நிலை அனைத்தையும் சேர்த்து அளவிடவேண்டி இருக்கிறது.. ‘‘முடிச்சிடலாம்னுதானே அன்னிக்குச் சொன்னாரு?” என்றால், “ஏறக்குறைய முடிச்சிறலாம்னுதான் சொன்னாரு. நீங்க தப்பாப் புரிஞ்சுகிட்டா?” என்று பின்னால் கேட்கவேண்டி வரும்.

சந்தேகப்பிராணியாக இருக்க வேண்டுமென்பதில்லை. காரணி ஒன்றல்ல. பலவும் இருக்கக்கூடும் என்ற சாத்தியத்தை உணர்ந்துகொண்டு, புரிதலைத் தொடர வேண்டும். இந்த உணர்வு, நினைவுப்பிழை, நாம் உணர்வுக்குழம்பாக இருக்கும்வேளையிலும், குழம்பிய நிலையிலும் மிக அதிகமாகத் தாக்கும். மருத்துவத் துறை, போலீஸ், சட்டம், வியாபாரப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவோர் கவனிக்க வேண்டிய புரிதல்நிலைப் பிழை இது.

நமக்கு ஒருவரைப் பிடித்துப்போனால், அவர் செய்வதெல்லாம் நமக்கு நல்லது போன்றே உணர்வைத் தோற்றுவிக்கும். செய்யாததையெல்லாம் செய்தது போலவே நினைவும் சேகரித்து வைக்கும். ஒருவரிடமிருக்கும் வெறுப்பும் இதைத்தான் செய்யவைக்கும்.

அந்தக் காவல் அதிகாரி தொடர்ந்தார். “மும்பையில் சில வருடங்கள் முன்பு நடந்த சீரியல் கொலைகள் நினைவிருக்கிறதா? நாங்கள் அனைவரும் பார்த்த தடயங்கள், கேட்ட சாட்சியங்கள் ஒருவனை நோக்கி அழைத்துச் சென்றன. அனைவருக்கும் இவன்தான் கொலையாளி என்று தோன்றியிருக்க, சாட்சியங்கள் அதற்குச் சாதகமாகவே தோன்றின. வேறு இடத்திலிருந்து வந்த என்னை அது தாக்கவில்லை. ஒவ்வொரு சாட்சியத்தையும் மறுத்துக்கொண்டே வந்தேன். இறுதியில் உண்மை வேறாக இருந்தது’’.

நமது நினைவிலிருந்து தெளிவாக உறுதியாகச் சொல்வதாயிருந்தாலும், ஒருமுறை ‘‘இப்படித்தான் இருந்ததா?” என ஒரு நிமிட மவுனச் சோதிப்புக்குப் பிறகு பகிர்ந்துகொள்ளுதல், நேராக யோசிப்பதின் அடையாளம், இது கடினமானது எனினும்.

(யோசிப்போம்)

]]>
Memory, decision, மனம், Mind, முடிவு, சிந்தனை, interrogation, goleman, effect, கோல்மேன் https://www.dinamani.com/junction/nera-yosi/2018/may/05/குவியத்தின்-எதிரிகள்---18-நினைவின்-கற்பனை-2912595.html
2902711 ஜங்ஷன் நேரா யோசி குவியத்தின் எதிரிகள் - 16. வெள்ளையா இருக்கறவன்.. சுதாகர் கஸ்தூரி. Saturday, April 21, 2018 12:00 AM +0530  

ஸ்டீபன், அந்த வருடம் பதவி உயர்வை எதிர்பார்த்திருந்தார். குறைந்தது 15% ஊதிய உயர்வுடன், கார் கிடைக்கும். குடியிருப்பு வளாகத்தில், நாலு மாதத்துக்கு முன்பே சொல்லிவைத்து, கார் நிறுத்துவதற்கு, வேப்ப மரத்தினடியில் இடமும் உறுதியாகிவிட்டது.

பதவி உயர்வு வரவில்லை. அதோடு காரும்.

ஸ்டீபன், புள்ளிவிவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பார். எத்தனை மில்லியன் டாலர்களுக்கு அவரது விற்பனை இருந்தது? அவரது குழுவின் மொத்த செலவு என்ன? ஒவ்வொரு ஆளுக்கும், சராசரி லாபம் எத்தனை டாலர்கள் என்பதை அவர் புட்டு புட்டு வைத்து, தன் பதவி உயர்வை உறுதிப்படுத்துவார் என எதிர்பார்த்தோம்.

ஆனால், ஸ்டீபனின் எதிர்விளைவு நாங்கள் எதிர்பார்த்தபடி இல்லை. ஒரு வெள்ளிக்கிழமை மாலை, நண்பர்களுடன் பீர் அருந்திக்கொண்டிருக்கும்போது, ஸ்டீபன் பொங்கினார். ‘எல்லாம் அந்த ஸ்டெல்லாவால் வந்த்து. சந்தேகமேயில்ல. அவதான் பாஸ்கிட்ட வேற மாதிரி போட்டுக்கொடுத்திருக்கா.’

‘ஸ்டீபன், ஸ்டெல்லா உங்களைப் பத்தி ஏன் பேசப்போறா? அவளுக்கும் உங்களுக்கும் ஒரு போட்டியுமே இல்லையே?’

‘உங்களுக்குத் தெரியாது’ சற்றே அடங்கியபின், மெதுவாகச் சொன்னார். அவளோட பையனுக்கு எங்க சர்ச் மூலமா, செயிண்ட் சேவியர்ஸ் காலேஜ்ல இடம் வாங்கித்தரச் சொன்னா. எங்க ஃபாதர் செய்யல. அந்த கோபம்.’

ஸ்டெல்லாவின் பையனுக்கு மிக நல்ல மதிப்பெண்கள். சேவியர்ஸ் கிடைக்காவிட்டாலும், மிக நல்ல கல்லூரி ஒன்றிலேயே சேர்ந்திருந்தான். ஸ்டெல்லா அவன் படிப்பைப் பற்றி ஒரு குறையும் சொன்னதில்லை. ஸ்டீபன் மீது அவருக்கு ஒரு கோபம் இருந்தது என்னமோ உண்மை.

ஸ்டீபன் சொன்னதில் நியாயம் இருந்திருக்கலாம். அதற்கு ஒரு நிகழ்தகவு 50% வைத்துக்கொண்டாலும், ஸ்டெல்லாவைத் தெரிந்தவர், 20%-க்கு மேல் அந்தக் கதைக்கு நம்பகத்தன்மை கொடுக்கமாட்டார்கள். மொத்தத்தில், அது 10%-க்கு மேல் நம்பமுடியாத கதை. ஆனால், ஸ்டீபனுக்கு 100% நம்பக்கூடிய நிகழ்வு.

இந்தப் பிறழ்வு, நமக்குப் பலமுறை வரும். சில நிகழ்வுகளைக் குறித்தும், தடைகளைக் குறித்தும் நமக்கென ஒரு அனுமானம் இருக்கும். நிகழ்வு நடந்தபின், நமது அனுமானத்தை மிகப்பெரிய அளவில் நம்பகத்தன்மை கொடுத்து வலுவாக்கிவிடுவோம்.

‘போன வாரம் சந்திரகாந்த்துக்கு மாரடைப்பு வந்துச்சாமே? அப்பவே சொன்னேன். இவரு கன்னாபின்னான்னு தின்றாரு. ஒரு வயசுக்கு அப்புறம், தீனிய குறைச்சுக்கணும். அதோட உடற்பயிற்சி செய்யணும். இவரு காலேல எட்டு மணி வரைக்கும்ல தூங்குவாரு. ஏழரை மணிக்கு செல்போன்ல கூப்பிட்டுப் பாருங்க, எடுக்கவே மாட்டாரு…’

சந்திரகாந்த், வயிற்றில் ஒரு ஆபரேஷனுக்குப் பிறகு மிகக் குறைவாக (ஆனால் அடிக்கடி) உண்பார் என்பது பலருக்குத் தெரியாது. அவர் அடிக்கடி என்னமோ சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறார் என்பதால், பெருந்தீனி தின்கிறார் என்ற ஒரு எண்ணம் பலருக்கு வந்துவிட்டது.

காலையில் அவர் நடைப்பயிற்சி செய்கிறார் என்பதும், ஏழே காலில் இருந்து எட்டு மணி வரை அவர் தியானம், பூசை என ஈடுபடுகிறார் என்பதும் பலருக்குத் தெரியாது. அந்த நேரத்தில் அவர் போன் அடித்தால் எடுக்கமாட்டார் என்பதன் காரணம், உறக்கமல்ல.

இந்த இரண்டாம் அனுமானத்துக்கு என்ன காரணம்? முதலில் சொன்ன குற்றச்சாட்டுக்காவது அவர் அடிக்கடி உண்பதைப் பலர் பார்த்திருக்கிறார்கள் எனலாம். அவர் தூங்குகிறார் என்பதை எவரும் கண்டதில்லை. இருப்பினும் ஏன் இந்த தவறான கருத்து?

நாம், ஒருவர் ஒரு நடைமுறைத் தவறைக் கொண்டிருக்கிறார் என்றால், பல நடைமுறைத் தவறுகளை அவருக்குக் கற்பித்து விடுவோம். அவை தொடர்புடையதாக இருக்க வேண்டுமென்பதில்லை. நடைமுறைத் தவறு என்ற வட்டத்தில் அடங்கினால் போதும். எனவே, அவர் அடிக்கடி உண்கிறார் என்றதும், அவர் அதிகம் உறங்குவார், நேர விரயம் செய்வார், சுத்தம் சுகாதாரம் குறைவாக இருக்கும் என்று மனதில் நீட்டித்துவிடுவோம். அவை பொய்யென உறுதிப்படுத்தும்வரை, அவற்றை மனதுள்ளே மறைமுகமாகக் கொண்டிருப்போம்.

ஏதோ சில வெள்ளைக்காரர்கள் கனவான்களாக நடந்துகொண்டார்கள், தலைவர்களாக வெற்றி கொண்டிருக்கிறார்கள் என்று படித்ததால், அனைத்து வெள்ளைக்காரர்களும், எல்லா நேரத்திலும் கனவான்களாகவே இருப்பார்கள் என்ற சாய்வு நிலை நீட்டீப்புதான், ‘வெள்ளைக்காரன் பொய் சொல்லமாட்டான்’ என்ற கருத்து.

பள்ளியில், ஒரு மாணவன்/மாணவி சில பாடங்களில் சரியாகப் படிக்கவில்லையென்றால், ஆசிரியர்களே அவர்களைப் பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்புக் கொடுப்பதில்லை: நன்றாகப் படிக்கும் மாணாக்கர்களுக்கு அதிகமாக வாய்ப்புகள், அவர்களது திறமை அவற்றில் அதிகமில்லாது போயினும், கொடுக்கப்படுகிறது – இந்த ஆசிரியர்களின் சாய்வு நிலை பற்றிப் பல ஆய்வுக் கட்டுரைகள் வந்திருக்கின்றன. இதுவும், ஒரு நிகழ்வின் தொடராகப் பல நிகழ்வுகளில் எதிரொலிக்கும் எதிர்வினை என்றே சொல்லலாம்.

டாட்டா கம்பெனியின் இண்டிகா, சந்தையைச் சந்தித்தபோது, அதன் மிகப்பெரிய போட்டி, பன்னாட்டுக் கார் கம்பெனிகளோ, இந்தியத் தயாரிப்பான மாருதி சுசூகியோ அல்ல. சந்தையில் அதுவரை டாட்டா என்றாலே கனரக வாகனங்கள், பேருந்துகள் என்றிருந்த சாய்வுக் கண்ணோட்டத்தில், அதன் கார், மிதமான சொகுசுக் கார் என்ற அளவில் மதிக்கப்படாது போனதே காரணம். அதன் சந்தைப்படுத்துதல், டாட்டாவின் பிம்பத்தைத் தாண்டி வரவேண்டி இருந்தது.

இது பெரிய சோதனை என்பதை டாட்டா உணர்ந்திருந்தது. எனவே, இண்டிகாவை வாடகைக்கார் என்ற சந்தைப்பிரிவில் பொருத்திவைத்தது. ஆனால், இதே வெற்றி அதன் நேனோ காருக்குக் கிடைக்கவில்லை. ஏதோ புதியதொரு முயற்சி என்றளவிலேயே நேனோவை சந்தை எதிர்கொண்டது. விலை குறைவு, டாட்டாவின் தரம் என்பது இரண்டாம்பட்சமாகவே மக்களுக்குத் தோன்றியது. சாய்வுநிலைச் சிந்தனை அத்தகையது.

சாய்வுநிலை நீட்டிப்பு பிறரைக் குறித்தே இருக்க வேண்டும் என்பதில்லை. நம்மைக் குறித்த பல எதிர்மறை எண்ணங்கள், நேர்மறை எண்ணங்கள் நமது பல திறமைகளை, குணங்களை வெளிவரச் செய்யாமல் தடுக்கின்றன. எனக்குக் கணக்கு வராது; எனவே கணினித் துறை எனக்கு சரிப்படாது. எதுக்கு புதுசா கத்துக்கப்போயி வருந்தணும்? ‘இந்த கம்பெனியிலயே இருந்து செட்டில் ஆயிருவோம்’ என்பவர்க்கு, கணினித் துறையில் அனைவரும் புரோக்ராம் எழுதுவதில்லை; அவரது துறை பற்றி அவருக்கு இருக்கும் அறிவு, துறை வல்லுநர் என்றளவில் பெரிய அளவில் வளர வைக்கும் என்பது தெரியாமல் போய்விடுகிறது.

இதேபோல், ‘எனக்கு எதுவும் புதுசா செய்யப் பிடிக்கும். வேலைய விட்டுட்டு பிசினஸ் செய்யலாம்னு இருக்கேன்’ என்பவர், எந்த பிசினஸ், அதில் தனக்கு என்ன முன் அனுபவம், யார் உதவுவார்கள் என்பதையெல்லாம் கணிக்காமல், ‘நான் இறங்கினா வெற்றிதான்’ என்ற அளவில் இறங்கி, மாட்டிக்கொண்டு முழிப்பதைப் பல இடங்களிலும் பார்க்கலாம். இதுவும் ஒரு சாய்வுநிலைக் கருத்தைப் பல திசைகளில் நீட்டிப்பதுதான்.

பல பன்னாட்டுக் கம்பெனிகள், தன் ஊழியர்களை ஒரு முத்திரை குத்தப்படுவதைத் தடுக்க முயற்சி எடுக்கின்றன. வேலைச் சுழற்றி என்பது, ஒரு மனிதரில் இருக்கும் பல திறமைகளை வெளிக்கொணர உதவுவது மட்டுமல்ல, ‘நான் ஒரு விற்பனையாளன் மட்டுமே’ என்ற உணர்விலிருந்து, பத்து வருடம் விற்பனைத் துறையில் இருப்பவர் வெளிவர சாத்தியமாக்குகிறது. தான் மற்றும் பிறரைக் குறித்த ஒரு பிம்பக்கட்டு உடைய இது பெரிதும் உதவுகிறது.

ஏதோ ஒன்று நம்மைத் தூண்டுகிறது என்றால், அது நம் வாழ்வில் மிக முக்கியமானதாக இருப்பின், அதில் நமது கருத்துகளை உடனே செயல்படுத்தாமல், எழுதிவைக்க வேண்டும். பின், நாம் அறிந்த நமது சாய்வுகளைப் பதிவு செய்து, நமது கருத்துகளில் பொருத்திப் பார்த்து, நிதானமாக மீண்டும் சுயஆய்வு செய்தல் அவசியம். அந்தச் சாய்வு நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ இருக்கலாம் என்பதால், கவனம் இதில் மிக அவசியம். அதன்பின், நம்பகமான பிறரது கண்ணோட்டங்களைக் கவனமாகப் பதிப்பித்து, அதனோடு நமது கருத்துகளை ஒப்பிட்டுப் பார்த்தல் சிறந்தது. எப்போதும் இதற்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை, ஆனாலும்.

(யோசிப்போம்)

]]>
வேலை, பிம்பம், ஊழியர், work, workers, probability https://www.dinamani.com/junction/nera-yosi/2018/apr/21/குவியத்தின்-எதிரிகள்---16-வெள்ளையா-இருக்கறவன்-2902711.html
2899441 ஜங்ஷன் நேரா யோசி குவியத்தின் எதிரிகள் - 15. தேர்ச்சியெனும் பொறி சுதாகர் கஸ்தூரி. Saturday, April 14, 2018 12:00 AM +0530  

“விஷுவல் பேஸிக்-ல சுனிதாவை அடிக்க ஆளே கிடையாது”. “நீதாம்ப்பா அந்த கண்ட்ரோல் ரூம்ல ராஜா. எத்தனை ஆபீஸர் வந்தா என்ன? ஆப்பரேட்டர் நீ இல்லாம ஃபேக்டரியே நின்னுபோயிரும்”. 

கேட்கும்போது, மிதமிஞ்சிய கிறக்கத்தைத் தரும் சொற்கள். எனது பணியை, என் தேர்ச்சியை, திறமையை பிறர் பாராட்டும் தருணம் பெரியது. என்னை நானே அடையாளம் கண்டுகொண்டு, ‘சபாஷ்டா’ என்று முதுகில் தட்டிக்கொண்டு புத்துணர்வுடன் வேலை பார்க்கக் கிளம்பும் தருணம். 

இதுவரை எல்லாம் நல்லாத்தான் போயிட்டிருக்கு. ஆனால், நாம் நம்மை அறியாமலேயே ஒரு பொறியை நம் காலில் மாட்டிக்கொள்கிறோம் என்பது கசப்பான உண்மை. 

ஒரு துறையில் தேர்ச்சி பெறுவதற்கு 10,000 மணி நேரப் பயிற்சி தேவை என்று ஒரு யதார்த்த நிகழ்வுகளின் தொகுப்பு, அதன் அடிப்படையிலான புள்ளியியல் விவரம் சொல்கிறது. உடல், மனம், மூளை இவற்றின் இணைந்த நிகழ்வுகளின் அடிப்படையில் வரும் திறமை, மெருகேற்றம் 10,000 மணி நேரப் பயிற்சியில் நிச்சயமாக மேலோங்கி நிற்கும். எனவே, ஒருவருக்கு ஒரு துறையில் ஆர்வத்தின் மூலமாக, அல்லது அவரது இயல்பான திறமையின் மூலமாக தேர்ச்சி எளிதில் வந்துவிட்டால், அதற்குக் கிடைக்கிற நேர்மறைப் பின்னூட்டம், பாராட்டுகள் அவரை மேலும் திறம்படச் செய்ய உந்துகின்றன. பத்தாயிரம் மணி நேரப் பயிற்சி இன்றி, ஒரு மாதப் பயிற்சியிலேயே அவர் தேவைப்பட்ட தேர்ச்சியை அடைந்துவிடுகிறார் என்றால், அவரை மேற்சொன்னவாறு புகழ்கிறது உலகு. 

இதில்தான் மறைமுகமாகப் பொறி வருகிறது. எனக்கு விஷுவல் பேஸிக் என்ற கம்ப்யூட்டர் மொழி தெரியுமென்றால், அதில் எனது தேர்ச்சி புகழப்பட்டது என்றால், அதனையே மேலும் மேலும் செய்யத் தோன்றும். மூளை, அதிகமாக அலட்டிக்காமல், அதிகப் பயனைப் பெற முயல்கின்ற சோம்பேறி என முன்னே பார்த்திருக்கிறோம். தேர்ச்சி பெற்ற ஒரு துறையில் அதிக முயற்சி தேவையில்லை. தேவைப்பட்ட பரிசு, பாராட்டு கிடைத்துவிடும். ஏன், புதிதாக மற்றொன்றைக் கற்க வேண்டும். விடு, விஷுவல் பேஸிக்ல அடுத்த ப்ராஜெக்ட் எடுத்துக்கோ. 

இப்படித்தான் சுனிதா இன்று ஒரு டைனோசராக மாறியிருக்கிறாள். உலகு, அந்தப் ப்ரோக்ராமிங் மொழியை விடுத்து அடுத்த லெவலுக்குப் போனதை அவள் கண்டாலும், கவனிக்கவில்லை. விளைவு? இரண்டு வருடங்களுக்கு மேல் அவளது கம்பெனி “நீ மிகக் கடினமான உழைப்பாளி. உனது திறமை, விசுவாசம் மிக அதிகமாகவே பாராட்டப்பட வேண்டியவை. ஆனால், சுனிதா…” என்று இழுத்து, இரண்டு மாதம் நோட்டீஸ் கொடுத்தார்கள். அவள் வாங்கிக்கொண்டிருந்த சம்பளத்துக்கு ஏற்ற வேறு வேலை கிடைக்கவில்லை. வங்கி லோனில் வாங்கிய பெங்களூர் வீட்டுக்கு மாதத்தவணை கட்டுவதில் மூச்சடைத்துப்போனது. 

இருவத்தி நாலாவது வயதில், ஒரு கம்பெனியில் கண்ட்ரோலர் ரூம் ஆபரேட்டராக ஜெயந்த் சேர்ந்தபோது கிடைத்த சம்பளம் அன்று போதுமானதாக இருந்தது. இருமுறை, இரவெல்லாம் கண்விழித்து, பெரும் இடர்களைச் சமாளித்து பாராட்டுப் பெற்றான். ‘‘உன்னை விட்டா அந்த கண்ட்ரோலரை இயக்க யாராலும் முடியாது” என்ற அதிகாரிகளின் சொற்கள் கண்ணை மறைக்க, அவன் அடுத்ததாக என்ன செய்தால், ஆபீஸராக முன்னேறலாம்? என்ற எண்ணமே இன்றி திறம்பட்ட ஆபரேட்டராக மட்டுமே இருந்தான். 

ஐந்து வருடத்தில் தொழில்நுட்பம் மாறியது. கம்பெனி, வேறு கண்ட்ரோலரை வாங்கியது. அதிகமான திருகுமானிகளோ, இயக்கும் லீவர்களோ இன்றி, ஒரு கீ போர்டு, ஸ்கிரீன், ஜாவா–வில் எழுதப்பட்ட மென்பொருள் என அடக்கமாக வந்த கண்ட்ரோலரை இயக்க ஜெயந்த் தடுமாறினான். “தம்பி, நீ வீட்டுக்குப் போகலாம்” என்று ஒரு மாலை நேரத்தில் சமோசா, டீ, பூங்கொத்து எனக் கொடுக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டான். புதிதாகச் சேர்ந்திருந்த இளைஞனின் சம்பளம், ஜெயந்த்தின் சம்பளத்தில் நேர் பாதி. 

ஒரு துறையில், ஒரு காலகட்டத்தில் இருக்கும் தேர்ச்சி எப்போதும் பாராட்டப்படாது. ‘மாறுதல் ஒன்றே நிலைத்திருக்கும்’ என்ற சொல் கவர்ச்சியான சொற்கட்டு மட்டுமல்ல, வலிமிகுந்த யதார்த்தம். இதனை அறியாது அப்படியே நின்றவர்கள், நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படுகிறார்கள். 

தனிமனிதர்கள் என்றல்ல, பல பெரிய கம்பெனிகளுக்கும் இதுதான் நிலை. ப்ளாக்பெர்ரி, பத்து வருடங்களுக்கு முன் பெருமளவில் அலுவலகத் தொடர்புக்காகப் பயன்படுத்தப்பட்டது. எனது கம்பெனியின் உலகளவில் நடக்கும் கூட்டத்தில் ‘‘ப்ளாக்பெர்ரி எப்படி நம் வியாபாரத்தை வலுப்படுத்தும்?” என்பதாக ஒரு தனிக் குழு ஆலோசனையே நடைபெற்றது. ஸ்மார்ட்ஃபோன்களின் வரவைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், மாறாமல் இருந்த ப்ளாக்பெர்ரி, இப்போது எங்கே?

ஏழு வருடங்களுக்கு முன்புவரை, மிக அதிக அளவில் விற்ற அலைபேசிகளைத் தயாரித்து முன் நின்ற நிறுவனம் நோக்கியா. “உலகில் அதிக அளவில் கேமராக்களை தயாரிக்கும் நிறுவனம் எது? என்ற புகழ்பெற்ற கேள்வியின் விடை – நோக்கியா. (செல்போன்களில் கேமராக்களைப் பதித்து விற்றதில் உலக சாதனை புரிந்தது நோக்கியா). இதெல்லாம் 4 வருடங்கள் முன்பு. இன்று நோக்கியா? மைக்ரோஸாஃப்ட்-ஆல் வாங்கப்பட்டு சிதைந்துபோனது. 

110 வருடங்களாகத் தொழில்நுட்பத்தில் கண்டுபிடிப்பும், அதன் பயன்பாட்டுத் தயாரிப்புமாக முன்னணியில் இருந்த நிறுவனம் ஜெராக்ஸ். ஒளிநகலென்பதை உலகுக்கு அறிமுகப்படுத்திய ஜெராக்ஸின் பெயர், ஒளிநகலெடுப்பதன் வினைச்சொல்லாகவே மாறியது. ஜப்பானிய போட்டியாளர்களுடன் சந்தையைச் சந்திக்கத் தடுமாறிய ஜெராக்ஸ், மாறும் உலகின் இயல்பைப் புரிந்துகொள்ளாமல், பின்தங்கி, இறுதியில் அதன் ஒளிநகல் துறையை, ஃபுஜி ஃபிலிம் கம்பெனிக்கு விற்றது. 

மேற்சொன்ன அனைத்திலும் பொதுவானது என்ன? உலகம் மாறுவதைப் புரிந்துகொள்ளாமை; அறிந்திருந்தாலும், தனது நிலையில் மாற்றம் ஏற்படுத்தாமை. “எனது துறையில் நான் பாதுகாப்பாக இருக்கிறேன்” என்ற பொய்யான பாதுகாப்பு உணர்வு, நாளை வரவிருக்கும் அபாயத்தை உணரமுடியாமல் தடுத்துவிடுகிறது. நிகழ்வு முன்னே நிற்கும்போது, அதிர்ச்சியில் தடுமாறும்போது, முன்னேற்பாடு இல்லாமையால் முழுகிப்போகிறார்கள். 

நாம் பணியாற்றும் நிறுவனங்களே நாளை புதிய மாற்றத்துக்குத் தயாராகலாம். அந்த நேரத்தில், மாற்றத்தை எதிர்க்காமல், “நாம் வாழ அல்லது முன்னேற என்ன செய்யணும்?” என்ற கேள்வியைக் கேட்டுக்கொள்வது நலம். நம்மால் கேட்க முடியவில்லை என்றால், துறையறிந்த ஒரு விற்பன்னரிடம் தகவலைக் கொடுத்து, ஆலோசனை கேட்கலாம். பாதுகாப்பற்ற உணர்வு, அச்சத்தை விளைவித்து, மாற்றங்களை எதிர்க்கத் தூண்டும். அது பரிமாற்றப் பகுப்பாய்வின்படி, நம் பெர்ஸனாலிட்டியில் “சைல்ட்” எனப்படும் உணர்வுபூர்வமாக இயங்கும் குழந்தை நிலையைக் குறிக்கும். ஒரு எதிர்வினை, குழந்தை நிலையிலிருந்து வருவது வரவேற்கத்தக்க ஒன்றல்ல. 

இந்த மாய பாதுகாப்பு உணர்வினை, தேர்ச்சியினால் கிடைக்கும் நிறைவினை தேர்ச்சியெனும் பொறி (competency trap) எனலாம். இதில் மாட்டிக்கொள்ளாமல், “ரைட்டு, இன்னிக்கு பாராட்டு கிடைத்திருக்கிறது. நல்லது. ஆனால், இப்ப நம்ம துறை எப்படி மாறிகிட்டிருக்கு. நாம என்ன செஞ்சா முன்னேறலாம்?” என்ற கேள்வியை அடிக்கடி நமக்குள் சிந்தையில் கேட்டுக்கொள்வது, நேரா யோசிப்பதன் ஒரு அடையாளம்.

(யோசிப்போம்)

]]>
https://www.dinamani.com/junction/nera-yosi/2018/apr/14/குவியத்தின்-எதிரிகள்---15-தேர்ச்சியெனும்-பொறி-2899441.html
2890460 ஜங்ஷன் நேரா யோசி குவியத்தின் எதிரிகள் - 14. பல்முனை இயக்கம் சுதாகர் கஸ்தூரி. Monday, April 2, 2018 10:43 AM +0530  

‘‘கணேசன் மாதிரி வேலை பாக்கணும். நம்மகிட்ட பேசிட்டிருக்கறப்பவே, லெட்ஜர்ல எண்ட்ரி போட்டுருவாரு. நாம வேலைய ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே அவர் வேலையை முடிச்சுட்டு, பாஸ் கேபின்ல போய் ஒக்காந்துருவாரு. ஏன் பிரமோஷன் கிடைக்காது?’’

‘‘கைக்கு கை, வாய்க்கு வாய்-ன்னு இருக்கணும். பேசிக்கிட்டே இருக்கும்போது நம்ம வேலையைப் பாத்துகிட்டே போணும்’’.

ஒரே நேரத்தில் பல்வகை இயக்கத்தைச் செய்பவர்களை உலகம் வியக்கிறது. முன்னேறும் தகுதியில் இது ஒன்று எனச் சிலாகிக்கிக்கிறோம். காணும்போது, அவர்கள் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்து முடித்துவிடுவதைப்போல் தோற்றமளிக்கிறது.

ஆனால், இது ஒரு பிறழ்வு என்கிறார்கள் வல்லுநர்கள். மல்ட்டி டாஸ்க்கிங் என்பது மூளையையும் உடல் உறுப்புகளையும் அதிகப் பளு தந்து அயர்வடையைச் செய்யும் தவறான பழக்கம் என்பது பல உளவியல் ஆய்வாளர்களின் முடிவு.

அஷ்டாவதானி, தசாவதானி என்று எட்டு / பத்து வேலைகளை ஒரே நேரத்தில் செய்பவர்களை வியக்கும் நமக்கு, அவர்கள், அந்தத் திறமையால் பெற்ற பயன்களைப் பற்றித் தெரியாது. வாழ்வில் ஒரே வேலையைத் தடுமாற்றத்துடன் செய்பவர்களைப்போல சராசரியான வெற்றிகளையே அடைந்திருக்கிறார்கள். பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்வதில் உள்ள சிக்கல் என்ன?

ஒரு வேலையை நம் மூளை கிரகிக்கும்போது, ஹிப்போகேம்பஸ் என்ற பகுதி, முன் அனுபவங்கள், முன்பு பெற்ற தகவல்களை முன்னெடுத்து, சமீபத்தில் பெற்ற தகவல்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிறது. புரிதல், அறிதல், புரிதலின் வேறு பரிணாமங்கள், முன்பு தவறாகப் புரிந்தது, அல்லது தற்போது தவறாக வரும் தகவல்கள் என அனைத்தையும் மூளை படுவேகமாகக் கிரகித்து எதிர்வினையாற்ற முயல்கிறது.

ஆனால், மூளை என்பது ஒரு சோம்பேறி. எவ்வளவு குறைவான ஆற்றல் செலவிட்டு, அதிகமாகப் பலன் கிடைக்கும் என்ற கணக்கிலேயே எப்போதும் அது இருக்கும். எனவே, பல சமிக்ஞைகள் ஒரே நேரத்தில் கிடைத்தால், தானியங்கு நிலையில் எத்தனை பணிகளைச் செய்ய முடியுமெனத் தீர்மானித்து, அந்தந்தப் பகுதிக்கு அனுப்பிவைக்கும். இயல்பாக, காபி டம்ளரை எடுத்தபடியே மில்லியன் டாலர் பிரச்னைகளை அலசுபவர்களுக்கு, கை செய்யும் வேலை பற்றிய கவனம் அதிகம் இருக்காது. சிலர், போனில் பேசும்போது காகிதத்தில் ஏதோ வரைந்தபடியே இருப்பார்கள். அல்லது தலைக்கு மேல் கையைத் தூக்கி, நெற்றியை வருடியபடி… இந்த ஆக்க நிலை அனிச்சைச் செயலை மூளை தானியங்கி நிலைக்குத் தள்ளிவிடுகிறது.

எல்லாச் செயலையும் இப்படி மூளையால் அனிச்சைச் செயலுக்குத் தள்ளமுடியாது. உணர்வும், மூளையின் சில பகுதிகளும் கவனத்தினை அதிகம் கையாளவேண்டி இருக்கிறது.

உதாரணமாக, ஒருவரை ஒரு போன் உரையாடலின்போது, நான்கு இலக்க எண்கள் இரண்டைப் பெருக்கிக் காட்டச் சொல்லுங்கள். மிகக் கடினம்.

சமையலறையில் பொருள்களைத் தேடும்போது, இந்தப் பெருக்கலோ, கூட்டலோ கடினம். ‘இருடா, வேலையா இருக்கேன்ல’ என்று பதில் வரும். அதேநேரம், உப்புமாவுக்கு ரவை வறுத்துக்கொண்டிருக்கையில், மூளையால் இந்தப் பெருக்கலைப் போட்டுவிடமுடியும். மூளை, ஆக்க நிலை அனிச்சைச் செயலாக, ஒரு தானியங்கி நிலையில் கைகளை, வாணலியில் வேலை பார்க்க விட்டுவிடுகிறது. தேடும்போது, கவனம் வேண்டியிருக்கிறது. காண்பதை கிரகித்து, முன் நினைவுகளின் தகவல்நிலையில், அந்தப் பொருளைப் பொருத்திப் பார்த்து, ‘‘இதுதான் /  இது இல்லை’’ என்று சொல்லவேண்டி இருக்கிறது. இதற்கு மூளைக்கு கவனம், ஆற்றல் குவியம் தேவைப்படுகிறது. எனவே, பெருக்கல் என்பது அந்த நேரத்தில் இயலாத ஒன்று.

இதனை கானேமான், ‘சிஸ்டம் 1 மற்றும் சிஸ்டம் 2-ன் வேலைத்திறன்’ என்பதாகத் தனது நூலில் குறிப்பிடுகிறார். எதனை சிஸ்டம் 1-க்குத் தர வேண்டும், எதனை 2-க்குத் தர வேண்டும் என்பதை சிறுவயதினர் அறியமாட்டார்கள். அவர்களது மூளை இந்தப் பதப்படுத்தலில் இன்னும் ஈடுபடாத நிலையில், சிஸ்டம் ஒன்றிலிருந்தே பதில் சொல்ல எத்தனிப்பார்கள். எனவே, கேள்வி கேட்டால், டக்கென தவறாகப் பதில் சொல்லும்போது, ‘‘அவசரக் குடுக்கை, நல்லா யோசிச்சுப் பதில் சொல்லு’’ என்றெல்லாம் சொல்லவேண்டி இருக்கிறது. இது அவர்களது மூளை பல்திறம்பட்ட வேலைகளில் ஒரே நேரத்தில் ஈடுபட எத்தனிப்பதால் வருவது மட்டுமல்ல; அவர்களுக்குத் தூண்டும்பொருளின் ஆழம் புரியாததால், எந்த நிலையிலிருந்து பதில் சொல்ல வேண்டும் எனத் தெரியாததால் வரும் குழப்பம்.

அனுபவம் பெற்ற பின்னும் இது தொடர்வதற்குக் காரணங்கள் இரண்டு.

1. எதிர்வினையாற்ற வேண்டிய பதற்றம், அழுத்தம், உணர்வுக் கொந்தளிப்பு, நம்மை ‘child’ மனநிலையிலிருந்து பதில் சொல்ல வைக்கிறது. இந்த அநிலையில் கேள்விகளை உள்வாங்கி, சரியாகப் புரிந்து, பகுத்தாய்ந்து, நிலைத்தகவல்களில் இருந்து தகவலைத் தேடி, பொருத்திப் பார்த்து, நிலைமைக்குத் தக்கவாறு எதிர்வினையாற்றும் முதிர்வு அந்த நேரத்தில், சைல்ட் மனநிலைப்பாங்கால் மழுங்கடிக்கப்படுகிறது. இது உணர்வுபூர்வமான மனநிலை எதிர்வினை. இதுபற்றி விரிவாகப் பின் ஆராய்வோம்.

2. பல்திறம்பட்ட செயலாற்றம். ஒரே நேரத்தில் பலதரப்பட்ட வேலைகளில் மூளை ஈடுபடும்போது, அது குவியத்துடன் ஆற்ற வேண்டிய வேலை ஒன்றினை மட்டுமே முக்கியமாக ஏற்றுக்கொண்டு, பிறவற்றைத் தானியங்கி நிலையில் தள்ளிவிட எத்தனிப்பதை சற்று முன் கவனித்தோம். எனவே, ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டுமே மூளையால், குவியத்துடன், உணர்வுடன் ஒருங்கிணைந்து செயலாற்றமுடியும். ஒரே நேரத்தில் குவியம், உணர்வு வேண்டிய பல வேலைகள் வரும்பொழுது, மூளை சிலவற்றைக் கவனத்திலிருந்து கழற்றிவிட்டு விடுகிறது. இதன் விளைவு, தோல்விகள், ஏமாற்றம், கோபம். இயலாமை உணர்வு.

ஒரே நேரத்தில் பல வேலைகள் வரும்போது, நாமே தன்னுணர்வுடன் எதனை முக்கியமாக, உடனுக்குடன் செய்ய வேண்டியது எனத் தீர்மானித்து ஒரு பட்டியலிடுவது நன்று. அடுத்தடுத்த சவாலான வேலைகளை, மூளை தானே நினைவிலிருந்து மறக்கச் செய்கிறது. எனவேதான், பட்டியலிடுவது அவசியம்.

பல வேலைகள் வரும்போது, அவற்றின் முக்கியம் மற்றும் அவசியத்தின் அடிப்படையில் பட்டியலிட்டுச் செயலாற்ற முனைவது, நேரா யோசிப்பதன் ஒரு இன்றியமையாத அங்கம்.

(யோசிப்போம்)

]]>
https://www.dinamani.com/junction/nera-yosi/2018/mar/31/குவியத்தின்-எதிரிகள்---14-பல்முனை-இயக்கம்-2890460.html
2886162 ஜங்ஷன் நேரா யோசி குவியத்தின் எதிரிகள் - 13. உறுதிப்படுத்தும் சாய்வு சுதாகர் கஸ்தூரி. Saturday, March 24, 2018 12:00 AM +0530  

டாக்டர் மணிவண்ணன், ஏழு குழந்தைகளில் நாலாவதாகப் பிறந்தவர். தந்தை, கை வண்டி இழுத்தார். தாய், பல வீடுகளில் வேலைக்காரியாக வேலை பார்த்தவர். பெங்களூரின் புறநகர்ப் பகுதியில் வாழ்ந்த தமிழ்க் குடும்பம் அவர்களது.

ஒரு கலவரத்தில் வீடு எரிந்துபோக, தமிழ்நாட்டுக்குக் குடிபெயர்ந்தார்கள். தந்தைக்கு ஒரு விபத்தில் இடது கை போனது. தந்தையோடு வண்டிக்குள் நுழைந்து அவரும், அவர் சகோதரரும் சேர்ந்து வண்டியிழுத்திருக்கிறார்கள். மணிவண்ணனுக்குப் படிப்பு எளிதில் வரவில்லை. ‘நீ வண்டி தள்ளத்தான் லாயக்கு’ என்ற சொற்களை அனுதினமும் பள்ளியில் கேட்டிருக்கிறார் அவர்.

வண்டி இழு என்று தந்தை சொன்னபோது, மாலையில் வண்டி இழுத்து, ரெண்டு பைசாவுக்கு நாலு குடம் என்று தண்ணீர் இறைத்துக் கொடுத்து, காலையில் பள்ளிக்குப்போனவர், மெல்லமெல்ல உயர்ந்து, ஓட்டலில் வேலைபார்த்து, கிடைத்த பணத்தில் கல்லூரியில் சேர்ந்தார். அதன்பின் அரசு வேலை, முதுகலைப் பட்டம், வேலை ராஜினாமா, முனைவர் பட்டம், வெளிநாடு.

இதெல்லாம் அவரது நண்பர் ஒருவர் சொல்லிக் கேட்டது. ஒருமுறை மணிவண்ணனிடம் பேசும்போது, ‘ஆமா, வண்டி இழுத்தேன், என்ன இப்போ?’ என்றார் இயல்பாக. ‘அது அன்னிக்கு, இது இன்னிக்கு. நாளைக்கு என்னதோ அப்படி இருக்கும். நம்ம வேலையைக் கவனிப்போம்.

‘ஆசிரியர் என்னை ஒரு முட்டாள்னு சொன்னார். அன்னிக்கு அது சரிதான். அன்னிக்கு நான் முட்டாப்பயதான். இன்னிக்கு அவர் ‘உன்னைப்பாத்தா பெருமையா இருக்கு’ன்னா, அது இன்னிக்கான உண்மை. இதுல உணர்ச்சிவசப்பட என்ன இருக்கு?’.

அவரது வாழ்க்கையை அப்படியே எழுதினால் பலருக்கு ஊக்குவிப்பதாக இருக்கும் என்றேன். அவர் மறுத்தார். ‘இதெல்லாம் ஒரு விஷயம்னு பேசிகிட்டு? எல்லாம் நாம நினைக்கறதுல இருக்கு. அவங்க சொன்ன திட்டும், வாழ்த்தும் எனக்கு உள்ளயே போகலை. நான் என்ன செய்யணும்னு நினைச்சேனோ, அதுல குறியா இருந்தேன். அதுல உவப்பா இருந்தேன். கிடைச்சதும் மகிழ்ந்து நின்றுவிடவில்லை. அடுத்த உவப்பு எதுன்னு முதல்லயே தீர்மானிச்சிருந்தேன். அதுல என் கவனத்தையும், சிந்திப்பையும் செலுத்தினேன். அவ்வளவுதான்’.

நேரா யோசி என்பதை இதைவிட பொட்டில் அறைந்தாற்போல் எனக்கு இதுவரை யாரும் சொல்லிவிடவில்லை.

எவர் சொல்வதும், நமது நம்பிக்கைக்குள் நுழைந்துவிட்டால் அப்படியே எடுத்துக்கொண்டுவிடுகிறோம். நமது மனச்சித்திரங்களை அந்த நிறங்கள் குலைத்துவிடுகின்றன. Ice Age படம் பார்த்தவர்கள், அந்தப் பெண் சடையானை எல்லி, தன்னுடன் வளர்ந்த possum விலங்குகள்போல தானும் மரக்கிளையிலிருந்து தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கும். ‘நீ ஒரு சடையானை, எல்லி’ என்பதை ஹீரோ யானை வலியுறுத்தியும் அதனால் நம்ப முடியாது. ‘பாரு, என்னால் எளிதாகத் தலைகீழாகத் தொங்கமுடியும்’ என்று எல்லி சொல்லும். இது உறுதிப்படுத்தும் சாய்வு. Confirmation bias.

நாம் ஒன்றை சிந்திக்கிறோம். அதற்கு எதிராகவோ, சாதகமாவோ ஒரு வலிய கருத்து முன்வைக்கப்படுமாயின், அதன் தாக்கம் தருக்க அளவில் மட்டுமே இருக்கும்வரை, அதனைப் புரிந்துகொள்ள முயற்சி எடுப்பதில் தவறல்ல. அது உணர்ச்சியைத் தாக்குமாயின், தருக்கம்/விவாதத்தில் ஈடுபடாமல் விலகுவது நல்லது. எல்லோராலும், தருக்க அளவில் ஒரு பொருளைக் குறித்து விவாதிக்க முடியாது. தேவையும் இல்லை. குறிப்பாக, சமூக அரசியல் நிகழ்வுகளைக் குறித்து நம் கருத்துகள் சாய்வு தாக்கியதாகவே இருக்கும். அதனை எதிர்த்து ஒருவர் சொல்வாரானால், அதனை அதிகம் சிந்திக்காமல், எதிர்விவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. இது இருவகையில் பயன்படும். ஒன்று, நமது சாய்வு நிலையை வெளிக்காட்டாது. இரண்டு, பிறரது சாய்வுநிலை நம்மைப் பாதிக்காது. இதனை, பிறரது மதம், சாதி, நிறம், பொதுவில் பழகும் பண்பு, நட்பு, நம்பகத்தன்மை, அறிவுத்திறன் என்பதைக் குறித்த நமது அனுமானமாகவும் கொள்ளலாம். இவை அனைத்தும் நம் உறுதிப்படுத்தும் சாய்வு சார்ந்தவைதாம்.

இந்த உறுதிப்படுத்தல் மிக ஆழத்தில் செயல்படுகிறது; இருக்கும் பிறழ்வுகளிலேயே மிக மோசமானது இதுதான் என்கிறார் ரால்ஃப் டோப்லி. நமது கருத்தில் ஒரு கிருமியாக நுழைந்து, அக்கருத்து தேவைப்படும் ஒவ்வொரு நிகழ்விலும் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் சாய்வு இது. அனிச்சை நிலையான பழக்கமாக, தருக்கத்தின் வெளிப்பாடாகத் தோன்றுவதால், இதனை ஒரு சாய்வாக நாம் அவதானிப்பது கடினம்.

படம் ரால்ஃப் டோப்லி

சிறுவயதில் திக்குவாய் பாதிப்பு இருந்த ஒருவர், இப்போது நண்பர்கள் மத்தியில் இயல்பாகப் பேசினாலும், சற்றே முக்கியமான விஷயத்தைப் பேசும்போது திக்கி நிற்பதைப் பார்க்கலாம். சிறுவயதில் பள்ளியில் பேசச் சொன்னபோது ஒரு டென்ஷனில் திக்கியவரை, ‘ஏன் திக்கறே? ஒழுங்கா பேச முடியாதா’ என்று திட்டிய டீச்சரின் சொல் ஆழப் பதிந்திருக்கும். ‘என்னால் முக்கியமான நேரத்தில் பேச முடியாது’ என்ற முடிவு உள்ளேற, அது, எப்போது முக்கியமான பேச்சிலும், திணறும்போது ‘சொன்னேன்ல? உன்னால திக்குவாயாத்தான் பேசமுடியும்’ என்று மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இதை எப்படித் தடுப்பது?

பழைய பதிவுகளை மீண்டும் கண்டெடுத்தல். எதில் நாம் திணறுகிறோம்?, எது தடுக்கிறது? என்பதை நம் எண்ண ஓட்டத்தில் பிரக்ஞையுடன் கவனிக்க வேண்டும். நாளை பரீட்சை என்றால், ‘நமக்கு நல்ல மார்க் வராது, பெரிய வெற்றி வந்துவிடாது’ என்று இன்று தோன்றுமானால், அது உறுதிப்படுத்தும் சாய்வு. நேர்மறையான வார்த்தைகளை அடிக்கடி சொல்லிப்பார்த்து, சொல்வதை நம்புவது முதல்படி வெற்றியைத் தரும்.

புதிதாக தவறான எண்ணங்கள் உள்ளே பதிவதைத் தடுப்பது. இதன் காரணிகள் ஊடகங்கள், செய்தி, உரையாடல், சமூக வலைத்தளங்கள். எதிர்மறையான கருத்துகளை வாசிக்காது விலகலாம். உரையாடல்கள், விவாதங்கள் வருமானால், நம்முள் அக்கருத்துகளை ஊன்றுமளவு கவனிப்பதைத் தடுக்க வேண்டும்.

எதையும் ஒழுங்காகக் கவனிக்காது உரையாடுவது தவறானதுதான். ஆனால், எல்லாவற்றையும் உள்வாங்குவது நல்லதல்ல. கவனத்துடன் ஒரு விஷயத்தை அவதானிப்பது என்பதும், உள்வாங்கிக்கொள்வது என்பதும் வெவ்வேறானவை. உள்வாங்குவது உணர்வு, நம்பகத்தன்மை சார்ந்தது. கவனம் என்பது கவனிக்கப்படும் பொருளின் உண்மைத்தன்மை சார்ந்தது.

சாய்வைக் கண்டுபிடிப்பதே ஒரு வெற்றிதான். நேராக யோசிப்பதன் பெருவெற்றி அது.

(யோசிப்போம்)

]]>
https://www.dinamani.com/junction/nera-yosi/2018/mar/24/குவியத்தின்-எதிரிகள்---13-உறுதிப்படுத்தும்-சாய்வு-2886162.html
2881203 ஜங்ஷன் நேரா யோசி குவியத்தின் எதிரிகள்: 12. பிரசார விளைவு மற்றும் செய்தி விளைவு சுதாகர் கஸ்தூரி. Saturday, March 17, 2018 12:00 AM +0530  

அண்மைக்காலத்தில், நண்பர் ஒருவரது நடவடிக்கைகளில் மாறுதலைக் கவனித்தேன். திடீரென உணர்ச்சிவசப்பட்டு, அரசு இயந்திரங்களைத் திட்டத் தொடங்கினார். பொதுஇடங்களில், தொலைக்காட்சி சேனல்களை அரசியல் விவாதங்களுக்குத் திருப்பச் சொன்னார். காரில் உரத்த குரலில் அரசியல் பேசுகிறார் என்பதால், அவருடன் செல்வதை நண்பர்கள் தவிர்த்தனர்.

சமீபத்தில், வாடிக்கையாளர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, விவாதம் செய்து அது பிரச்னையாகப் போய்விட்டது. ஒரு வாரம் முன்பு, மருத்துவப் பரிசோதனை செய்ததில், ரத்த அழுத்தம் பார்டர் லைனில் இருப்பதாகவும், அவருக்குத் தூக்கம் குறைவாக இருப்பதாகவும் கம்பெனிக்கு அறிக்கை சென்றது. அவரது வீட்டில் விசாரித்ததில், சமீப காலத்தில் அடிக்கடி கத்துகிறார் என்றும், அதிகம் அரசியல் விவாதம் செய்கிறார் என்றும் கவலைப்பட்டனர். நண்பர்கள் வற்புறுத்தி அவரை ஒரு மனநல ஆலோசகரிடம் அழைத்துச் சென்றோம். மெல்ல மெல்ல காரணம் புலப்பட்டது.

சில மாதங்களுக்கு முன்பு, அவருக்கு “தனிச்சுற்று இதழ்” ஒன்றை குடியிருப்பு வளாகத்தில் இருப்பவர் இலவசமாகக் கொடுத்துள்ளார். இது அரசியல் சார்ந்ததல்ல என்றும், உலக நிகழ்வுகளையும் சில கதைகளையும் மட்டுமே கொண்டது என்றும் அவர் உறுதி அளித்திருந்தார். “பிடித்திருந்தால், ஆறு மாசத்துக்குப் பின் சந்தா கட்டுங்கள்” என்றபின், மாதாமாதம் அந்த இதழ் அவரது வீட்டுக்கு வந்திருக்கிறது.

அந்த இதழின் கட்டுரைகள் பல கருத்துகளைச் சார்ந்ததாக இருந்தாலும், அடிப்படையில் அரசின் கொள்கைகள், நடப்புகளை வெளீப்படையாகவோ, மறைமுகமாகவோ எதிர்த்தே இருந்தன. இரு கட்டுரைகள் ஒன்றன்பின் ஒன்றாக இருக்கும். அடுத்து ஒரு கவிதை. அதற்கு அடுத்து ஒரு மதத்தின் கொள்கைப் பரப்பும் கட்டுரை. புத்தக விமரிசனம் பகுதியில் எடுக்கப்பட்டிருக்கும் புத்தகம், அரசினை எதிர்த்து அமைந்ததாக இருக்கும். அல்லது அந்த விமரிசனம், புத்தகம் மூலம் அரசினை எதிர்ப்பதாக இருக்கும். புத்தகத்தில், “பேஸ்புக்கில் வந்தது, ட்விட்டரில் வந்தது” என்று ஒரு பக்கம். அனைத்தும், ஏதோ ஒருவகையில் அரசு எதிர்ப்பாக இருக்கும். சில கட்டுரைகளில், தொலைக்காட்சி விவாதத்தில் ஒருவர் சொன்னதை உயர்த்திப் பிடித்து எழுதியிருந்தார்கள்.

நண்பர் அந்த விவாதங்களைப் பார்க்கத் தொடங்கினார். மெல்ல மெல்ல, நகைச்சுவை நாடகத் தொடர், குடும்பத்தோடு பார்ப்பது குறைந்து, சூடான விவாதங்களைத் தனியாக அவர் பார்க்கலானார். சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்ட சிலருக்கு நண்பராகச் சேர்ந்தார். சில பக்கங்களில், தொடர்ந்து கமென்ட் எழுதிக்கொண்டிருந்தார்.

அவருக்கும் அவர் மனைவிக்கும் பொது நண்பராக இருந்த ஆசிரியை ஒருவர், அவரது கமென்ட்டுகளைப் படித்து, அவர் மனைவியிடம் அவற்றை வாசிக்கச் சொன்னார். கமென்ட்டுகளை வாசித்த அவர் மனைவி திகைத்துப்போனார். இத்தனை வெறுப்பும், வன்முறையுமாக அவரது பேச்சு இதற்கு முன் இருந்ததில்லை. குறிப்பாக, ஒரு பிரபலத்தின் பேச்சில் வெறுப்படைந்திருந்த அவர், இவரைப் போட்டுத்தள்ளினாதான் நாடு உருப்படும் என்ற அளவில் எழுதியிருந்ததை, மனைவியின் தோழி சுட்டிக்காட்டினார்.

நண்பர்கள் சிலரது முயற்சியாலும், அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆணையாலும், மனநல ஆலோசகரிடம் அவரை அழைத்துச் சென்றனர். மனநல ஆலோசகர் பரிசோதித்துவிட்டு, அவரை இப்படி சிந்திக்கச் சொன்னார் - “உங்களது வருமான வரி திடீரென 30 சதவீதம் அதிகமாக உயர்த்தப்பட்டுவிட்டது. வீட்டுக்கான மாதத் தவணை 1 சதவீதம் அதிகமாகிவிட்டது. பள்ளிக்கூட ஃபீஸ், பெட்ரோல் விலை எல்லாம் கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. ஆனால், உங்கள் சம்பளம் உயரவில்லை. என்ன செய்வீர்கள்?”

நண்பரின் எதிர்வினை, இயலாமையும், கோபமும் கூடிய, வன்முறையாக இருந்தது. அரசு, அந்த அரசைத் தேர்ந்தெடுத்த பொதுமக்களின் முட்டாள்தனம் என வார்த்தைகளால் விளாசினார். அவரிடம் ஒரு கணனி கொடுக்கப்பட்டது. முதல் வேலையாக அவர் செய்தது, பேஸ்புக்கில் நுழைந்ததுதான். அதன்பின், ட்விட்டரில் அடுத்தடுத்து ட்வீட்டுகள். அனைத்தும் அவரது கருத்தை வலியுறுத்துவதாக இல்லாமல், அரசினையும், சில தலைவர்களையும் திட்டி எழுதப்பட்டிருந்தன. சவால்களைத் தெளிவாகச் சொல்வது, அவற்றின் தாக்கம், எவ்வாறு அவற்றை எதிர்கொள்வது என்பதான சிந்தனைக் குறிப்புகள் என ஒரு தருக்கம் கலந்த சிந்தனையாக அது இருக்கவில்லை. வெறுப்பும், கோபமும் மண்டிக்கிடந்த வசைச்சொற்களின் கலவையாக இருந்தது.

அவர் வாசிக்கும் இதழ்கள், பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இதழ்களில் கட்டுரைகளும், கதைகளும் ஒரு திட்டமிட்ட வடிவில் அமைந்திருப்பதை மனநல ஆலோசகர் விளக்கினார்.

ஒரு கருத்து இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். எதிர்ப்பவர்களிடம் கொண்டுசெல்ல முயற்சி தேவையில்லை. நம்புபவர்களிடம் கொண்டுசெல்லவும் முயற்சி தேவையில்லை. நடுவில் இருப்பவர்களைக் கவரவே விளம்பரமும், மெல்ல வற்புறுத்தும் உத்திகளும் தேவைப்படும். இந்த உத்திகளில் ஒன்று, அடிக்கடி கருத்தினை பலவிதங்களில் கொண்டுசெல்வது. பிரசாரமாக அதனைச் சொல்லாமல், ஒரு நிகழ்வு, அதனைச் சித்தரிக்கும் காட்சிப் படங்கள், அந்நிகழ்வின் அலசல், அதன் முடிவு, தான் சொல்லவந்த கருத்து என அமைக்கப்பட்டு, கருத்து ஒரு சவாலுக்கான விடையாகச் சொல்லப்படும். தருக்கத்தை பள்ளிக்காலத்திலிருந்தே நம்பிவந்திருக்கும் மனது, இதனை மறைமுகமாக ஏற்றுக்கொள்ளும். காட்சிப் படங்களும் ஒலிகளும், கருத்தினை மனதில் அதிக ஆழத்தில் கொண்டுசேர்க்கும். எனவேதான், வன்முறை பற்றிய கட்டுரைகளில், நெஞ்சை அசைக்கும் படங்களை வலிந்து இடுகிறார்கள். எழுதுபவர், இதற்கெல்லாம் ஒரே விடை நாம் நம்பும் கருத்து மட்டுமே என்பதாகச் சொல்லியிருப்பார்.

இதன் காரணிகள் பல இருப்பினும், அவற்றில் இரண்டு, மிக முக்கியமானவை. ஒன்று பிரசார விளைவு, மற்றொன்று செய்திகளின் விளைவு. Propaganda Effect மற்றும் News Effect.

பிரசாரம் என்பது இங்கு வெளிப்படையாக மட்டும் வராமல், செய்திகளின், கட்டுரைகளின் உணர்வுகளின் நீட்சியில் மறைமுகமாக வருகிறது. விளம்பரங்களின் அடிநாதமே இந்தப் பிரசார விளைவுதான். இது மிக மோசமான மற்றொரு விளைவை நம் மனத்தில் விதைக்கிறது. அதனை ஸ்லீப்பர் எஃபெக்ட் என்பார்கள். இதனைப் கார்ல் ஹாவ்லெண்ட் என்ற ஆய்வாளர், போர் வீரர்களிடம், போர்ப் பிரசாரங்களின் தாக்கத்தை ஆய்வு செய்தபோது கண்டறிந்தார்.

காட்சிகளும், வலிமையான சொற்களும் நம்முள் புதைந்துபோகின்றன. அந்தக் கட்டுரை மறந்துபோனாலும், அதன் தொடர்பான காட்சிகள், சொற்கள், நமக்குள் ஒரு நீட்சியை கட்டுரையின் பொருளோடு மனதில் ஏற்படுத்துகின்றன. 1960-களில் தயாரிக்கப்பட்ட ஒரு பற்பசையை, வீட்டில் அப்பா பயன்படுத்தச் சொல்வதில் இதன் தாக்கம் இருக்கிறது. 80-களில் நன்றாக இருந்த பத்திரிகையை இன்றும் விடாமல் வாங்குவதன் பின்னணியில், ஸ்லீப்பர் எஃபெக்ட் விழித்திருக்கிறது.

அந்தப் பத்திரிகை அவர் வீட்டுக்கு வருவது நாலு மாதத்துக்கு முன்பே நின்றுவிட்டது என்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால், மனநல ஆலோசகர் ‘அது திறமையான விளம்பர உத்தி’ என்றார். ‘‘ஸ்லீப்பர் எஃபெக்ட் மற்றும் பிரசார விளைவுகள், அவருக்குள் தகுந்த தாக்கத்தை ஏற்படுத்திவிட்டன. அவரை எழுதவும், பேசவும் ஊக்குவித்தவர்கள், அவருக்கென ஒரு அங்கீகாரத்தை அளித்து, அடையாளத்தை ஏற்படுத்திவிட்டார்கள். அதன்பின், அவர் காரணிகளின் தூண்டுதல் இல்லாமலே, எந்த ஊடகத்திலும், செய்தியிலும், அந்தச் சொற்களையும், கருத்துகளையும் பிரதிபலிக்கும் நிகழ்வுகளைக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறார். அதில் தன் கருத்துகளைப் பரிமாறுவதில், தன் அடையாளத்தை, அங்கீகாரத்தைப் பலப்படுத்த முயல்கிறார். தொலைக்காட்சியில் எவ்வளவோ சேனல்கள் இருக்கும்போது, அவர் ஏன் இந்தச் செய்திகளை, விவாதங்களைத் தேடிப் போகிறார் என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும்”.

மனநல ஆலோசகரது ஆலோசனைப்படி, மொபைலில் வாட்ஸப், பேஸ்புக் மென்பொருள் போன்றவை நீக்கப்பட்டன. அவரது லாப்டாப் மகளுக்குக் கொடுக்கப்பட்டது. ஒரு மாதத்துக்கு யாரும் டிவி பார்க்க வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டு, டிடிஎச் சேவை தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. மாலைப்பொழுதுகளில், அருகில் இருக்கும் கோவிலுக்கு மனைவியுடன் நடந்துபோவது ஒரு பழக்கமாக வலிந்து கொண்டுவரப்பட்டது. அலுவலகத்தில், அவரது அலுவலகப் பயணங்கள் நிறுத்தப்பட்டு, அவரது பயணங்களை நண்பர்கள் பார்த்துக்கொண்டனர். குடும்பத்தினருடன், அருகில் இருக்கும் இடங்களுக்குச் சுற்றுலா சென்றுவந்தார். ஜிம்-மில் சேர்ந்து, இரு வாரம் சென்று, விலகினார். யோகா கிளாஸ் நாலு நாள்கள் சென்றார். யூடியூபில் பார்த்த ஒரு காணொளி சொன்ன உணவுப்பழக்கம் தனது எடையை 5 கிலோ குறைத்ததென சத்தியம் செய்தார். பொதுவில், இப்போது மனிதனாக இருக்கிறார்.

இலவசமாக வரும் ஊடகங்களோ, கேட்காமல் வரும் செய்திகளோ நமக்குச் செய்யும் நன்மையைக் கருதும் முன், ஒரு கேள்வி கேட்டுக்கொள்ளலாம். பிரெஞ்சில், ‘க்வீ போனோ’ (Cui Bono) என்பார்கள். அதன் தமிழாக்கம், ‘இதனால் யாருக்கு நன்மை?’

இந்தக் கேள்வி, நம்மை நேராகச் சிந்திக்கும் பாதையில் கொண்டுவந்துவிடும். முக்கியமாக, இந்தக் கேள்வி கேட்கச் சொல்வது, விளம்பரமல்ல.

(யோசிப்போம்)

]]>
https://www.dinamani.com/junction/nera-yosi/2018/mar/17/குவியத்தின்-எதிரிகள்-12-பிரசார-விளைவு-மற்றும்-செய்தி-விளைவு-2881203.html
2878101 ஜங்ஷன் நேரா யோசி குவியத்தின் எதிரிகள்: 11. அறிதலும் அறிவும் சுதாகர் கஸ்தூரி. Thursday, March 15, 2018 03:12 PM +0530  

‘‘பங்குச்சந்தை கீழே விழுந்துகிட்டே இருக்கு. எல்லாம் இந்த ஜி.எஸ்.டினாலதான்”.

‘‘போன வாரம் நிஃப்ட்டி முந்நூறு பாயின்ட் மேலே ஏறிச்சு. ஏங்கறீங்க? நாலு புரோக்கர் திட்டம்போட்டு மேல ஏத்தியிருக்கான்”.

இதுபோன்ற உரையாடல்களில், பங்குச்சந்தையில் முதலீடு செய்திருப்பவர்கள் அதிகம் பேசுவதைக் கவனித்திருக்கலாம். பங்குச்சந்தை என்றல்ல, எதிலும் சற்றே அறிவு கொண்டு இயங்குபவர்கள், அத்துறையில் விற்பன்னர்போலப் பேசுவதைக் காணமுடியும்.

இந்தப் பேச்சின் ஆதாரம் என்ன என்று கேட்டுப் பார்த்தால், ‘‘டி.வில சொன்னானே? அதுவும், காலைல பத்து மணிக்கு ஒருத்தர் வருவாரு. ரெண்டு வருசம் முன்னாடியே ரியல் எஸ்டேட் விழும்னாரு. விழுந்துருச்சு பாருங்க. கில்லாடி. அவர் சொன்னது அப்படியே பலிக்குது’’.

முன்கூட்டியே கணிப்பது, செய்தி சார்ந்தது மட்டுமல்ல. அவரது சாய்வு நிலையும் சார்ந்தது என்பதை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம். ஒரு பங்கு ஏறுவதற்கும் இறங்குவதற்கும் மிகத் துல்லியமான காரணிகளைச் சொல்லிவிடும் விற்பன்னர் இன்னும் பிறக்கவில்லை.

அமெரிக்காவில், பங்குச்சந்தை பற்றி ஊடகங்களில் கருத்து கூறும் விற்பன்னர்களின் கணிப்புகளைக் கவனமாக ஒரு வருடம் பதிவுசெய்து, அக்கணிப்பின் லாப விகிதத்தைக் கணக்கிட்டார்கள். இக் கணிப்பின் மூலம் கிட்டிய லாபம், கவனமாக ஒருவர் செய்திகளை ஆராய்ந்து எடுத்த முடிவின் லாபத்தைவிட அதிகமாக இல்லை. சுருங்கச் சொன்னால், சராசரி லாபம், விற்பன்னர்களின் பரிந்துரையால் அதிகம் மாறிவிடவில்லை.

ஏன்,  சிலர் சொல்வதை நம்பி நாம் நம் கருத்துகளை மாற்றுகிறோம்?

ஊடகத்தின் நம்பிக்கைத்தன்மை மட்டுமல்ல. ‘இன்னார், இன்ன பதவியில் இருப்பதால், அவரது திறமை இத்துறையில் ஓங்கியிருப்பதால், அவர் சொல்வது சரியாக இருக்கும்’ என்ற சாய்வு நிலை. இது நம்பிக்கை இல்லை. நமது அறிவின் மேல் நமக்கு நம்பிக்கை இல்லாததால், விற்பன்னர் என்று நாம் கருதும் ஒருவரைச் சார்ந்து முடிவெடுக்கிறோம். இது சமூகக் கட்டமைப்பு கொண்ட விலங்குகளிலிருந்து பரிணாம வளர்ச்சியில் வந்த உணர்வு.

வலிமைமிக்க ஒன்று, தனது கூட்டத்துக்குத் தலைவனாகிறது. அதனைப் பின்தொடர்ந்து, அக்கூட்டத்தில் உள்ள விலங்குகள் செல்கின்றன – பல சமயங்களில் கண்களை மூடியபடி. தன்னிச்சையான சிந்தனை என்பதை, குழுவின் சிந்தனைக்கு விட்டுக்கொடுத்துவிட்டு, தன் முடிவில் தோல்வியிருக்கலாமோ என்று தாற்காலிகமாகப் பயமின்றிச் செல்லும் பண்பு அது. இதன் மற்றொரு வடிவம், குழும சிந்தனை (GroupThink). ஒரு குழுமம் ஒரு கோணத்தில் சிந்திக்கும்போது, உறுப்பினர்கள் அதனை விடுத்து வேறு பாதையில் சிந்திக்கத் தயங்குவார்கள். தான் சொல்வது தவறாகிவிடுமோ என்ற அச்சம் மட்டுமல்ல, குழுமத்தின் ஆதரவிலிருந்து நீங்கிவிடுவோமோ என்ற அடிப்படைப் பய உணர்வு.

குழுமம் என்பது பிறரால் மட்டுமே உண்டாக்கப்பட வேண்டியதல்ல. நாமே, மனத்தளவில் ஒரு குழுமத்தை உருவாக்கிக்கொண்டு அதன் உறுப்பினராகிறோம். நன்றாக விற்கும் டி.வியை வாங்கும்போது, அதனை வாங்கிய அத்தனை வாடிக்கையாளர்களுடன் நாமும் மனத்தளவில், நமது முடிவினால் சேர்ந்துகொள்வதான ஒரு கற்பனை நிம்மதி.

ஜெர்மன் நிறுவனத் தயாரிப்பு கார் வாங்கத் திட்டமிட்ட என் நண்பரை, “அதற்கு பராமரிப்புச் செலவு அதிகமாகுமாம். எதுக்கும் கேட்டுக்கொள்ளுங்கள்” என்றார் மற்றொரு நண்பர். வாங்க நினைத்திருந்தவர், “இத்தனை பேர் வாங்கியிருக்கான். அவ்வளவு பேரும் முட்டாளா? அதுவும் ஜெர்மன் கார். ஒரு போலித்தனமும் இருக்காது” என்றார். அடுத்த இரண்டே வாரத்தில், மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ்களை பொய்யாகத் தயாரித்திருந்ததாக உலகளவில் அந் நிறுவனம் தண்டிக்கப்பட்டது. இந்தியாவில், இன்றும் அதன் உபரி பாகங்களின் விலை மிக அதிகம் என்ற கருத்து உண்டு. ஜெர்மன் தயாரிப்பு, எனவே தரம் வாயந்தது; நிறையப் பேர் வாங்கியிருக்கிறார்கள், எனவே நல்ல தயாரிப்பு என்பது, தொடர்பில்லாதவற்றை நமது அளவீடுகளில் புகுத்தி ஒரு மாய ஆறுதலைப் பெறுகிறோம்.

ஒன்றின் தன்மையை மற்றதில் நீட்டிப்பதில் பல அபாயங்கள் உண்டு. எனினும், நம் மூளை அதனை உடனே செயலாற்றுகிறது. இதன் முக்கியக் காரணம், மூளை ஒரு சோம்பேறி. அது அதிகம் சிந்திப்பதை விரும்புவதில்லை. முன் முடிவுகளை தருக்கத்துடன் நீட்டித்து, நம்பிக்கையைத் தூண்டிவிடுகிறது. அடுத்த காரணம், சந்தேகிப்பதில், தாமதிப்பதில் சில நேரம் தவறுகள் வந்துவிட வாய்ப்பு இருக்கிறது. ‘நீங்க தயங்கிட்டீங்க. ஒருநாள் முந்தி, அட்வான்ஸ் 10 பர்சன்ட் குடுத்திருந்தீங்கன்னா, வீட்டு விலையில ரெண்டு லட்சம் குறைஞ்சிருந்திருக்கும்” என்ற வீட்டுத்தரகரின் பேச்சை நாம் கேட்க விரும்புவதில்லை.

அடுத்தது,  ஆராயாமல், பெரும்பான்மை, பொதுமைப்படுத்துவது. ‘‘உலகத்துல பல அறிவாளிகள் இந்த சிந்தனையைச் சார்ந்தவர்கள்தான். எனவே, அவர்கள் எழுதினதுன்னா சரியாத்தான் இருக்கும்” என்ற சிந்தனைத் தூண்டலில் பின்னே, ‘இவர்கள் எழுதுவது அறிவாளித்தனமானதுதான் என யார் சொன்னார்கள்?’ என்ற கேள்வி எழுமானால், அது குறித்து ஆராய நேரமும், முயற்சியும் செலவிட வேண்டும். எனவே பொய்யோ, நிஜமோ ஒரு பெரும்பான்மை, பொதுத்தன்மையை வலியச் சென்று ஏற்கிறோம்.

அடுத்து, இப்படி அனுமானிக்கப்பட்ட பொதுத்தன்மையை, பெரும்பான்மையைக் கேள்வி கேட்கும் நாம் முட்டாளாகப் பார்க்கப்படுகிறோம் என்ற உணர்வு. ‘‘இத்தனை பேர் சொன்னா கேக்கணும். நீயா சந்தேகப்பட்டே, அனுபவி” என்று நமது சந்தேகம் சரியல்ல என்று உறுதிப்படுமானால், நமது தோல்வியை எள்ளுவார்களோ? என்ற அச்சம். இந்தச் சமூக அந்நியப்படுத்தல் குறித்த பிரமை நம்மை பல சமரசங்களைச் செய்யத் தூண்டுகிறது.

இதேதான், “அந்த தலைவரோட தாத்தா பெரிய தியாகி. எனவே இவரும் நமக்காக உழைப்பார்’’ என்பதும், “இவர் பற்றி ஒரு செய்தியை வாட்ஸப்பில் படித்தேன். எனவே, இவர் நல்ல அமைச்சராக இருக்கமாட்டார்’’ என்பதும், தொடர்பில்லாத செய்திகள் நம் முடிவில் நீள்வதன் அடையாளம். எதன் அளவுகோலாக எது இருக்க வேண்டும் என்பதைச் சரியாகச் சிந்திப்பது, நேராக யோசிப்பதன் மற்றொரு அடையாளம்.

]]>
https://www.dinamani.com/junction/nera-yosi/2018/mar/10/குவியத்தின்-எதிரிகள்---11-அறிதலும்-அறிவும்-2878101.html
2873212 ஜங்ஷன் நேரா யோசி குவியத்தின் எதிரிகள்: 10. விருப்பமும் முன்முடிவுகளும் சுதாகர் கஸ்தூரி. Saturday, March 3, 2018 12:00 AM +0530  

நண்பர் ஒருவரின் விருந்துக்கு நானும் என் மனைவியும், மும்பையின் நெரிசலான வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தோம். எங்கள் கார் மிக மெதுவாக ஊர்ந்துகொண்டிருந்தது. ‘மாருதி டிஸையர்தான் மிக அதிகமாக விக்கிற காரோ?’ என்று கேட்டார் என் மனைவி.

சற்றே குழம்பினேன். புள்ளிவிவரப்படி, ரெண்டாவது அதிக விற்பனையாகும் கார் அதுதான். முதல் இடம் அல்டோ. பிரச்சனை அதுவல்ல. நான் பார்க்கும்போது, சாலையில் பலவிதமான கார்கள் தெரிந்தன. ஓபராய் மால் அருகே சென்றுகொண்டிருந்தோம் என்பதால், விலையுயர்ந்த, ஆடி, பி.எம்.டபிள்யூ, பென்ஸ் என பலதரப்பட்ட படகுக்கார்கள் இருக்கையில், எங்கிருந்து டிஸையர் வந்தது?

‘அங்க பாருங்க, ரெண்டு போகுது. இதோ, நமக்குப் பின்னால, ரெட் கலர்…’. இருபது கார்கள் செல்லுமிடத்தில் அதில் நான்கு கார்கள் டிஸையர். அது அவருக்குத் தெரிந்திருக்கிறது.

அதாவது, கவனத்தில் வந்திருக்கிறது. மற்ற கார்கள் கண்ணில் பட்டாலும், கவனத்தில் இடம்பெறவில்லை.

பின்னரே எனக்கு நினைவு வந்தது. ஒருநாள் முன்புதான் புதிய கார் வாங்குவதற்குச் சென்று, டிசையர் ஒன்றைப் பதிவு செய்துவிட்டு வந்திருந்தோம். அவரது கவனத்தில் டிஸையரின் தாக்கம் இருந்ததால், ரோடெல்லாம் டிஸையர் காரே தெரிந்திருக்கிறது.

நமக்குப் பிடித்த ஒன்றை உலகமே விரும்புவதாகத் தோன்றும் கவனப்பிழையை, பலவற்றிலும் பார்க்கலாம். நான் வாங்கிய கம்பெனியின் பங்குகள் ஒரு ரூபாய் உயர்ந்தாலும், மார்க்கெட் உயர்ந்ததாக நினைப்பது; நமக்குப் பிடித்த நடிகர் என்பதால் படம் குப்பையாக இருந்தாலும், நல்லா இருக்கு என்பது. டீச்சர்களிடமே இந்தக் கவனப்பிழை இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. தனது வகுப்பில் தனக்குப் பிடித்த மாணவனை அனைவருக்கும் பிடித்திருக்கும் என நினைப்பது அதன் நீட்சி.

சுருக்கமாகச் சொன்னால், ‘நாம் எதிலும், எதைப் பார்க்க விரும்புகிறோமோ, அதையே பார்க்கிறோம்’. இதில் முக்கியமான சொல், ‘பார்க்க விரும்புகிறோமோ’. ஒரு நிகழ்வு, காட்சி புலப்படும் முன்னரே, அதைக் குறித்தான கவனத்தில் ஒரு சாய்வு ஏற்பட்டுவிடுகிறது.

இதன் பிரச்சனை, தனக்குப் பிடித்திருக்கும் ஆள் அல்லது பொருளில் இருக்கும் குறையை நம் கவனத்தில் கொண்டுவராமல் செய்துவிடுவது. நாம் முதலீடு செய்திருக்கும் மியூச்சுவல் ஃபண்ட், கம்பெனிப் பங்கு பலரிடமும் இருப்பதாகத் தேடி, அது உண்மையென நம்பி, கவனிக்காமல் விட்டுவிட்டு, நிதியை இழப்பது ஒரு உதாரணம்.{pagination-pagination}

முதலில் ஒன்றை முடிவெடுத்துவிடுகிறோம். அதன்பின் நம் முடிவு சரியாக இருப்பதாக உறுதிப்படுத்த, பலர் நம்மைப்போலவே இருப்பதாக நினைத்துவிடுகிறோம். அதன் எடுத்துக்காட்டாக, நம் முடிவுக்குச் சாதகமாக இருக்கும் நிகழ்வுகளில் நம் கவனத்தைச் செலுத்தி, நம்மை மீண்டும் நம்பவைத்துக்கொள்கிறோம். இது பொய்யான ஆறுதல் என்பதை நம் சிந்தனை சொல்வதே இல்லை.

பதின்மவயதில், தான் விரும்பும் ஒருவனை தன் தோழிகள் ‘நல்லவனா இருக்கான்டி’ என்று சொல்வதில், தன் விருப்பத்துக்குச் சாதகமாகப் பலர் சொல்வதாக மயங்கி, வீணே காதலில் வீழ்ந்து அழிந்தவர் பலர் உண்டு. ‘அவன் என்னையும் ஒருமாதிரிப் பாக்கறான். சரியில்ல’ என்று சொல்லும் தோழியை, ‘பொறாமைல சாகறா’ என்று விலக்கவே தோன்றும்.

அம்பாஸிடர் கார், கிட்டத்தட்ட அதன் முடிவு நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் வேளையில், ஒரு முதிய நண்பர் ‘வெள்ளை அம்பாஸிடர், நாலு லட்சம் சொல்றான். வாங்கலாம்னு இருக்கேன்’ என்றபோது, ‘அது என்னிக்குமே ஓடும் சார். கிளாஸிக் காராச்சே அது?’ என்று சொன்ன நண்பர்கள், அவர் காருக்கு உதிரி பாகம் இல்லாமல் திண்டாடியபோது, ‘அப்பவே நினைச்சேன். கொஞ்சம் நிதானிச்சிருக்கலாம்’ என்றார்கள். இதை ஏன் அப்பவே சொல்லல என்றால், ‘வாங்கணுங்கறாரு. அதுக்கு நாம ஏன் முட்டுக்கட்டை போடணும்? நல்லதா சொல்லணும். இல்ல, சொல்லக் கூடாதுன்னு ஒரு பாலிஸி’ என்றார்கள். தாங்கள் அறியாமலே, சமூக ஒத்துணர்வுப் பிழை ஒன்றைச் செய்திருக்கிறோம் என்பதை அவர்களும், அவரும் அறியவில்லை.

இதனாலேயே, திருக்குறள் போன்ற பதினெண்கீழ்க் கணக்கு அறிவுரை நூல்கள், தோழமை பற்றிச் சொல்லும்போது, ‘இடித்துரைப்பவன் தோழன்’ என்றன. நாம் சமூக ஒத்துணர்வுப் பிழையில் அழுந்தும்போது, அதனை நீக்கும்விதமான பின்னூட்டத்தைத் தருபவர்களே உண்மையான நலம் விரும்பிகள். ஆனால், அவர்களை அந்த நேரத்தில் பிடிக்கவே பிடிக்காது.

சமூக ஊடகங்கள், ஒரு சாய்வு நிலையிலேயே செய்திகளை வெளியிடுவதில், இந்த சமூக ஒத்துணர்வுப் பிழையை வளர்க்கிறது. நமக்கு ஒரு அரசியல்வாதியைப் பிடிக்கவில்லை என வைத்துக்கொள்வோம். அவருக்கு எதிராக வரும் செய்திகளே நம் கவனத்தில் அதிகம் படும். நமது சிந்தனை, ‘நிஜமாகவே அந்தாளு ரொம்ப மோசம்தான். நாம நினைச்சது சரிதான். இந்தாளு ஆட்சியில நல்லதே நடக்கல’ என்றே செல்லும். அதே ஊடகத்திலோ, அல்லது பிற ஊடகங்களிலோ, அவர் செய்த நிஜமான நற்பணி பற்றி வந்திருந்தாலும், நாம் அதனைப் பார்த்திருந்தாலும், கவனத்தில் பதிக்கமாட்டோம்.

ஒரு கருத்து பற்றி அடிக்கடி, அதற்குச் சாதகமாகவே செய்திகள் வந்தபடி இருந்தால், சட்டென ஒரு கணம் நாம் பின்வாங்க வேண்டும். உலகத்தில், ஒரு நிகழ்வுக்கு எதிர் நிகழ்வுகள் நிகழப் பல சாத்தியங்கள் உண்டு. எனக்கு மட்டும் ஏன் ஒரே சாத்தியம் தென்படுகிறது?

அந்தச் சிந்தனையிலிருந்து சற்றே விலகி சில நாள்கள் இருந்தால், பிற நிகழ்வுகள் கவனத்தில் வரும். நாம் சாய்வற்று சிந்திக்கச் சாதகமான சூழ்நிலை ஏற்படுகிறது. சில மணி நேர அவகாசம் போதாது என்கின்றனர் ஆய்வாளர்கள். சில வேளைகளில், சூழ்நிலையை மாற்றுவதும் சாதகமாக இருக்கிறது. கொதிப்படைந்து வீட்டில் சண்டை போட்டுக்கொண்டு இருப்பவர்கள், அந்த இடத்தை விட்டுத் தாற்காலிகமாக விலகுவது, விவாதங்களைத் தவிர்க்கும்.

நேராக யோசிப்பதில் ஒரு முக்கிய உணர்வு நிலை, நாம் சிந்திப்பதைக் குறித்து சிந்திப்பது. நான் சிந்திப்பதன் தூண்டுதல்கள் என்ன? என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டுமென்றால், நமது சிந்தனை பற்றிய தன்னிலை விமர்சனம் தோன்ற வேண்டும். இதற்குத் தனியாகப் பயிற்சி தேவை. எவ்வாறு பயிற்சி செய்ய வேண்டும் என்பது, அவரவர் தன்னிலை உணர்வைப் பொறுத்தது என்றாலும், ஒரு நாளில் ஒரு முறையேனும், தன் சிந்தனை குறித்தான விமர்சனம் செய்வது உகந்தது.

]]>
https://www.dinamani.com/junction/nera-yosi/2018/mar/03/குவியத்தின்-எதிரிகள்-10-விருப்பமும்-முன்முடிவுகளும்-2873212.html
2869470 ஜங்ஷன் நேரா யோசி குவியத்தின் எதிரிகள்: 9 சுய இரக்கம் சுதாகர் கஸ்தூரி. Saturday, February 24, 2018 11:12 AM +0530  

“நல்லா நினைவிருக்கு. ஸ்கூல் படிக்கறப்போ, ஒரேயொரு தேய்ஞ்சுபோன செருப்பு மட்டும்தான் இருக்கும். அதுவும், அண்ணன் போட்டுப் போட்டு, குதிகால் பக்கம் ஓரமா ரொம்பத் தேஞ்சுபோன ரப்பர் செருப்பு. அப்பாகிட்ட, ஒரு புதுச் செருப்பு கேட்டேன்”. நண்பர் நிறுத்தினார். அவர் கண்கள் சற்றே இளகி இளகி ஈரமாக இருந்தன. பூனா போகும் வழியில் ஒரு ரெஸ்டாரன்ட்டில் காரை நிறுத்திவிட்டு, டீ குடிக்க அமர்ந்திருந்தோம்.

“கண்டபடி திட்டிட்டார். சே, ஒரு செருப்புக்கு இவ்வளவு திட்டு தேவையா?ன்னு அன்னிக்கு நினைச்சேன் சுதாகர். இன்னிக்கிவரை, எனக்குன்னு நான் ஒரு செருப்பு எடுக்கறதில்ல”.

அவர் கால்களைப் பார்த்தேன். ஷு பளபளத்தது.

“ஆபீஸுக்கு ஷூ போட்டுப் போறேன். அது என் பொண்டாட்டி வாங்கித் தந்தது. என் பணத்துல, எனக்குன்னு ஒரு செருப்பு வாங்கமாட்டேன்”.

மெல்ல எழுந்தபோது, அவருக்கு என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஐயோ பாவம் என்றா? அல்லது உங்க உறுதியை நினைச்சு பெருமையா இருக்கு என்றா? அல்லது இப்படித்தான் நானும் சின்ன வயசுல… என்று தொடங்கி, என் கதையைச் சொல்லி அழுவதா?

மனிதர் தொடர்ந்தார். “என்னவெல்லாம் கஷ்டப்பட்டிருப்பேன்னு இப்ப நினைச்சாலும் கண்ணீர் வந்துடும். தனியா சில நேரம் படுக்கையில படுத்திருக்கறச்சே, அப்படியே கண்ணீர் வழிஞ்சு தலையணையை நனைக்கும். என் பொண்டாட்டி, எதுக்கு இப்ப அழறீங்கன்னு கேப்பா. நான் ஒன்னும் இல்லேன்னுடுவேன். என் கஷ்டம் என்னோட போகட்டும்”

நிஜத்தில், அவர் கஷ்டம் பலரோடு போகிறது. என் நண்பர்கள் பலரும், “அந்த செருப்புக் கதையை சொல்லியிருப்பாரே?” என்று சொல்லிச் சிரித்திருக்கிறார்கள். அவர், தன் கதையைக் கேட்டு அனைவரும் ப்ச் ப்ச் என்று அனுதாபப்படுகிறார்கள் என்று நினைத்திருக்கிறார். ஆனால், நினைப்பு ஒன்று, நடைமுறை ஒன்று.

இது பலருக்கும் புரிவதில்லை. “நான் ஸ்கூல் படிக்கும்போது, ஒன்பது கிலோமீட்டர் நடந்தே போவேன். சைக்கிள் வாங்க காசு கிடையாது” என்பது, இக்காலத்து இளைஞர்களிடம் புரிதலையோ, empathy-யையோ ஏற்படுத்திவிடாது. ஏனெனில், ஒன்பது கிலோமீட்டர் நடப்பதன் வலியை அவர்கள் உணர்திருக்கும் சாத்தியம் குறைவு. ஏதோ அழுமூஞ்சி சினிமாவைப் பார்ப்பது போன்ற உணர்வுடன், நம்முன் கஷ்டப்பட்டு தங்கள் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

இளைஞர்களுக்கும் இந்த விபரீத பகிர்வுணர்வு உண்டு. தான் காதலிக்கும் பெண்ணிடம் நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கேன் தெரியுமா? என்பதாக, இதுபோன்ற கதைகளைச் சொல்லி, அவளை ஓடியே போகவைத்த பலரை எனக்குப் தனிப்பட்ட முறையில் தெரியும்!

ஏன் இதைச் சொல்கிறோம்? ‘நான் கடந்துவந்த பாதை கரடுமுரடானது’ என்று சொல்வது, ‘நான் வீரன். அவ்வளவு கஷ்டத்திலும் விடாமுயற்சியுடன் முன்னேறி வந்திருக்கிறேன்’ என்று சொல்வதைப் போன்றது என்ற தவறான நினைப்பு. ‘பாதை கடினம், நான் கஷ்டப்பட்டேன்’ என்பது யதார்த்தமான ஒன்று. அதில் ‘என் வெற்றிக்கு இப்படி வழி வகுத்தேன்’ என்பது, மறைதற்பெருமை. இது, சொல்பவரின் கவனத்திலிருந்து மறைந்து, கேட்பவரின் நினைவில் உதிக்கும்.

அதோடு, தன்னைப் பற்றிக் கேட்க, தானே சொல்லும் வாய்ப்பு இது என்கிறார்கள் உளவியலாளர்கள். என் கடந்த காலத்தை நான் மட்டுமே அறிவேன். அதை எவரும் பாராட்ட இல்லாததால், நானே சொல்லிக்கொள்கிறேன் என்பதை மறைபொருளாகக் கொண்டு வெளிவரும் பகிர்வுகள் இவை. எந்த அளவுக்கு இதனைத் தவிர்க்கிறோமோ, அந்த அளவுக்கு பிறர் நம்மை இயல்பாக எடுத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

அனைவருக்குமே, குறைந்தது ஒரு கதை இருக்கிறது. பெரும்பாலும், அதில் சுயஇரக்கம் சார்ந்த, நம் கவலைகள், இடர்கள் சவால்கள் சார்ந்த பக்கங்கள் உண்டு. அவற்றைச் சொல்வதில் சில நுணுக்கங்கள் தேவைப்படுகின்றன. எப்படி, யாரிடம், எந்தச் சூழ்நிலையில், எந்த மனப்பக்குவத்தில் இருந்து சொல்கிறோம்? என்பதைப் பொறுத்து, நமது கதையின் தாக்கம் வளர்கிறது.

ஒரே வார்த்தையில், ஒரு செயலில் பலத்த தாக்கத்தை உருவாக்கிய பலர் உண்டு. நமக்குத் தாக்கம் உண்டாக்கிய கதைகளும் நிகழ்வுகளும் உண்டு. அப்படித் தாக்கம் உண்டாக்கும் அளவுக்கு நம் கதை முக்கியமானதா? என்ற ஒரு கேள்வி, வெகு நேராக யோசித்துக் கேட்டுக்கொண்ட பின், நம் கதையைச் சொல்லத் தொடங்குவது நல்லது. நம் கதைகளை மிக ரசிப்பவர் உண்டு. அவரிடம்கூட யோசித்தே சொல்ல வேண்டும். அந்த ரசிகர் - நாம்.

(தொடர்ந்து யோசிப்போம்)

]]>
https://www.dinamani.com/junction/nera-yosi/2018/feb/24/குவியத்தின்-எதிரிகள்-9-சுய-இரக்கம்-2869470.html
2858520 ஜங்ஷன் நேரா யோசி குவியத்தின் எதிரிகள்: 8 வண் நுகர்வு சுதாகர் கஸ்தூரி. Saturday, February 10, 2018 12:00 AM +0530  

“எங்கிட்ட 200 புடவை இருக்கு. அதுல நூறு பட்டுப்புடவை.”

அந்தப் பெண்மணியை ஒரு திருமண வரவேற்பில் சந்தித்தேன். எனது அறிவியல் கதைகள் பற்றியும் பேஸ்புக் பதிவுகள் பற்றியும் மிகப் பரவலாகப் பேசிக்கொண்டிருந்தார். பள்ளி ஆசிரியையான அவர், மிகக் கடுமையான சமூகத் தடைகளைத் தாண்டி வந்திருந்தார். ஜாதிக் கொடுமைகளைத் தைரியமாக எதிர்கொண்டு, சிதைபட்டிருந்த மணவாழ்வைத் தாண்டி, ஒரே மகளைத் தன்னந்தனியராகப் படிக்க வைத்திருந்தார்.

‘‘மியூச்சுவல் ஃபண்டுல சில லட்சம் போட்டிருக்கேன். பொண்ணு பேர்ல பிபிஎஃப் கட்டிட்டு வர்றேன். ஒவ்வொரு வருஷமும் சின்னச் சின்னதா ஆர்.டி. போட்டு, மொத்தமா கொஞ்சம் தொகை வந்ததும் குந்துமணி அளவாச்சும் தங்கம் வாங்கிப் பொண்ணுக்குப் போட்டிருக்கேன். ஒரு ஃப்ளாட் புக் பண்ணியிருக்கேன். பெண்ணு வெளிநாடு போய்ப் படிக்கணுங்கறா. பைசா வேணுமே?”

இந்த அளவுக்குத் தெளிவாகத் தன் பிற்காலத் தேவைகளைக் கணிக்கத் தெரிந்து, திட்டமிட்டு செயலாக்கியிருந்த அவரது சேமிப்பில், ஒரு கரையான் புற்று தென்பட்டது. நூறு பட்டுப் புடவையா என்றேன், திகைத்து. சிரித்தார். “ஆமா, எனக்கு அது ஒரு வெறி. வீக்னெஸ்னு நினைக்காதீங்க. சின்ன வயசுல பட்டுப்பாவாடை, புடவைன்னு கட்ட முடியலேன்னு ஒரு தாபம் இருந்துகிட்டே இருக்கு. இப்ப கிழவியாயாச்சு. ஆனாலும் பட்டுப் புடவைன்னா குமரியாயிருவேன்”

சேமிப்பு வேறு, சேமித்துக் குவித்து அடைத்து வைத்தல் என்பது வேறு. வாங்கிக் குவிக்கும் அந்த நுகர்வு ஆரோக்கியமானதல்ல. தேவைக்கு அதிகமானது எது என்பதைத் தெளிவாகச் சிந்திக்கத் தவறும் கணம், பன்முகமாக நாம் சிந்தித்துத் தெளிவான மன ஆளுமையுடன் எடுக்கும் முடிவுகளை தரமிழக்கச் செய்துவிடுகிறது. இதில் பாலின வேறுபாடோ, வயது வேறுபாடுகளோ இல்லை எனச் சொல்லிவிட முடியாது. பல ஆய்வுகள், அசாதாரண நுகர்வில் பெண்களே அதிகம் ஈடுபடுகிறார்கள் எனச் சொல்கின்றன.

ஸஸ்ஸெக்ஸ் பல்கலைக் கழகத்தில் ஹெல்கா டிட்மார் என்ற ஆய்வாளர், வண் நுகர்வு பற்றித் தன் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடுகிறார் - “இரு காரணிகள் முக்கியமாகத் தெரிகின்றன. ஒன்று, ‘நாம் யார்’ என்பது பற்றிய நமது கணிப்புக்கும், ‘நாம் யாராக இருக்க விரும்புகிறோம்’ என்பதற்குமான இடைவெளி. இரண்டு, ‘நுகர்வுகள் பற்றிய நமது முன் முடிவுகள்’.

ஹெல்கா டிட்மார்

முதல் காரணி பற்றி பல கோணங்களில், பல அனுபவங்களை நாமே அலசலாம்.

‘‘நான் வேற எதையும் வாங்கமாட்டேன் சார். ஆனா, மாசம் ரெண்டாயிரம் ரூபாய்க்குப் புத்தகம் வாங்கிடுவேன்” என்பவரிடம், ‘அதில் எத்தனை புத்தகங்களைப் படித்திருக்கிறீர்கள்?’ என்று கேட்கக் கூடாது. நட்பு முறிந்துவிடும் சாத்தியம் இருக்கிறது. ‘‘சின்ன வயசுல, எங்கூடப் படிச்சவங்க, எதாவது ஆங்கிலப் புத்தகம் பத்திப் பேசுவாங்க. நான் முழிச்சிகிட்டிருப்பேன். சரி, நாமளும் படிச்சுக் காட்டுவோம்னு அன்னிக்கு நினைச்சதுதான்” என்று எதாவது காரணம் என்றாவது வெளிவரும். ஆக, வாழ்வில் என்றோ இருந்த ஒரு குறைபாட்டை இன்று நிவர்த்தி செய்யும்விதமாக மனம் ஆழ்கிறது.

ஏனெனில், நினைவுக்கும், நிகழ்வுக்கும் உணர்ச்சியில் வித்தியாசம் காண்பது எளிதல்ல. பல ஆண்டு முன்பு நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் தீவிரம் இன்றும் மனத்தில் இருப்பதற்கு, அது குறித்த நினைவுகளை உணர்வுகள், இன்றைய நிலையுடம் பொருத்திவைக்கிறது. சுய இரக்கம் என்ற உணர்வு, “அன்னிக்கு நான் எளியவனா இருந்ததால்தானே அப்படி இளக்காரமா பேசினாங்க” என்ற நினைவு, மீண்டும் மீண்டும் நான் பலமின்றி இருக்கிறேன் என்பதையே உறுதிப்படுத்தும். “நான் அன்று பலமின்றி இருந்தேன்” என்ற தெளிவான சிந்தனையாக, உணர்வு, காலம், இடம் கடந்து சிந்தனையைத் தாக்குவதில்லை. முன்பு நடந்ததை நினைத்து அழுபவர்கள், அந்நிகழ்வு என்றோ நடந்தது என்பதை அழும்போது நினைப்பதில்லை.

உணர்வுகள், நிகழ்காலத்தைத் தவறாகவே நினைக்க வைக்கின்றன. இது இறந்தகாலத்தைக் குறித்த தாக்கமாகவும், அதனை எதிர்காலத்தில் சரிசெய்ய, இன்று வாங்கவும் தூண்டுகின்றன. முப்பது ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் ஆங்கிலம் தெரியாது அவமானப்பட்ட ஒருவர், இன்றும் மூன்றாவது முறையாக ஆக்ஸ்ஃபோர்டு அகராதி வாங்குவதன் அடிப்படைக் காரணம், இன்று அவரது மனத்தில் தோன்றும் தற்காப்பின்மை. உணர்வு, அது என்றோ நடந்தது என்பதை அந்நேரத்தில் அறிவுறுத்துவதில்லை.

இதன் நீட்சியாக, ‘‘நான்தான் அன்னிக்கு படிக்காமப் போயிட்டேன். நீயாச்சும் படி” என்று, மகளுக்கும் மகனுக்கும் வாங்கிக் குவிப்பதை சொல்லிச் சமாளிப்பார்கள். இது ஓரளவுக்குச் சரியாகவே நமக்குப் படலாம். ஆனால், அதீதமாக ஒரு உணர்வு வெறியில் செயல்படுபவர்களைச் சற்றே கவனிக்கவேண்டி இருக்கிறது.

இரண்டாவது காரணி பற்றிப் பேசும் முன், வண் நுகர்வு பற்றி சில வார்த்தைகள். ஓனியோ மேனியா – வண் நுகர்வு (Compulsive buying disorder) என்பது யாருக்கோ வருகிற மனநோய் அல்ல. நம்மில் பலருக்கும் பல பொழுதுகளில் வந்துபோகிற, கரை தாண்டுகின்ற உணர்ச்சி வெள்ளமே அது. ‘‘ஆபீஸ்ல எல்லாரும் 10,000 ரூபாய்க்கு புடவை எடுத்தாங்க. அதான் சரி, நாமளும் ஒண்ணு எடுப்பமேன்னு எடுத்தேன்” என்பது சமூக அழுத்தத்துக்குப் பலியாகும் தருணம். இதனை நன்கு அறிந்தவர்கள் விற்பனை விற்பன்னர்கள். “உங்க பக்கத்து வீட்டுல இருக்கு, எதிர் வீட்டுல இருக்கு, அப்ப உங்க வீட்டுல இருக்க வேண்டாமா?” என்று டிவியில் வரும் விளம்பரம், சமூக அழுத்தத்தை முன்னிறுத்துகிறது.

‘‘மனசு சரியில்லாதப்போ, அப்படியே மால் வரை போயிட்டு வருவேன். என்னமாச்சும் வாங்குவேன். நுகர்தல் மருத்துவம் என்பது ரொம்பவே பயனுள்ளது” என்பவர்கள், நம் அனுதாபத்துக்கு உரியவர்கள். மனது சரியில்லை என்பது, என்னில் ஏதோ சரியில்லை என்பதான பாதுகாப்பற்ற உணர்வின் வழித்தோன்றல். வாங்குதல் என்பது, நீ தனியனாக, பொருளாதார ரீதியாக, உன்னை நிறைவு செய்யக்கூடிய வலுவில் இருக்கிறாய்” என்பதை மனது தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் மாய உணர்வு. இந்த நுகர்தலில் கிடைக்கும் நிறைவு, அடுத்த நாளே காணாமல் போகும். அதில் ஒரு குற்ற உணர்வு தோன்றுவதைத் தடுக்க, ‘‘நான் சரியாத்தான் செய்கிறேன்’’ என்பதாக உலகுக்குக் காட்ட, மீண்டும் செயற்கையாக நுகர்வில் ஈடுபடுவோர் உண்டு. அல்லது, அதனைத் தவிர்க்க அதிகமாக உண்பது, மனச்சோர்வில் ஆழ்வது என்பதாக உழல்பவர்களும் உண்டு.

இதற்கும், நேராக யோசிப்பதற்கும் என்ன தொடர்பு?

ஒரு பொருளையோ, சேவையையோ எடுத்துக்கொள்ளும் முன், அதன் அவசியம் பற்றிய சிந்தனை தேவை. “இது இப்போது எனக்குத் தேவைதானா?” என்ற கேள்வி, எப்போதும் ‘‘இல்லை” என்ற பதிலை மட்டுமே தரத் தேவையில்லை. காரணங்கள், தேவைகள் நிஜமாக இருக்குமானால், நுகர்வில் தவறில்லை. சில நேரங்களில், உணர்வின் உந்துதலுக்கு ஆட்பட்டு நுகர்வதும் தவறல்ல. எல்லாவற்றையும் தேவையின் அடிப்படையில் மட்டுமே ஆராய்ந்துவிட முடியாது. அது, வாழ்வைச் சுவையற்றதாகச் செய்துவிடும். ராத்திரி 10 மணிக்கு குடும்பத்துடன் சென்று ஐஸ்க்ரீம் சுவைத்து வரும் தம்பதிகள் ஊதாரிகள் அல்லர். வாழ்வின் சிறு சிறு ஆசைகளை, மகிழ்வுகளைப் பங்கிட்டு வாழத் தெரிந்தவர்கள். சம்பளம் வந்த அன்று டாக்ஸியில் சென்று பிளாக்கில் டிக்கட் வாங்கி சினிமா பார்த்துவிட்டு, மாத நடுவில் வட்டிக்குக் கடன் வாங்கி அரிசி வாங்கியவர்களை நாம் அறிந்திருக்கிறோம். இதுபோன்று சிலவற்றை நாமும் சில சந்தர்ப்பங்களில் செய்துவிடும் சாத்தியம் இருப்பதால், ஒரு நிமிடம் அது குறித்து, அதன் தேவை குறித்துச் சிந்திப்பது அவசியமாகிறது.

சிந்தனை, இருபுறமும் சாயாமல், அளவுடன் இருப்பதற்கு, நுகர்வதைச் சற்றே தள்ளிப்போட்டு, வேறு தருணத்தில், வேறு இடத்தில் அத்தேவையைக் குறித்து சிந்தித்து அதன் முடிவை நடைமுறைப்படுத்த - நேராக யோசிக்க வேண்டும்.

(தொடர்ந்து யோசிப்போம்)

]]>
நுகர்வோர், வண் நுகர்வு, தேவை, செலவினம், consumer, purchase, buying, compulsive https://www.dinamani.com/junction/nera-yosi/2018/feb/10/குவியத்தின்-எதிரிகள்-8-வண்-நுகர்வு-2858520.html
2844251 ஜங்ஷன் நேரா யோசி குவியத்தின் எதிரிகள்: 7 இணைத்துப் பார்த்தல் சுதாகர் கஸ்தூரி. Saturday, January 13, 2018 11:43 AM +0530  

‘‘நீலக் கலர் சட்டை” என்றார் ஜீவன் குப்தா. தூரத்தில் வரும் தன் மேனேஜரை கவனித்தவாறே, “இன்னிக்கு பாஸ் பெரிய டீல் எதோ பேசப்போறாரு”. எதாவது முக்கியமான வேலை என்றால், குப்தாவின் மேனேஜர் ஒரு நீலநிறச் சட்டையில்தான் வருவார். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு, அவர் நீலக்கலர் சட்டை இட்டுச் சென்றிருந்த முக்கியமான மீட்டிங்கில், வெற்றி அவருக்குச் சாதகமாக அமைந்ததாம்.

அவரது சட்டையின் நிறத்துக்கும், ஒரு படுசிக்கலான அறிவியல் கருவி வாங்கப்படுவதற்கும் எதாவது தொடர்பிருக்கிறதா என்றால், ஒரு குழந்தைகூட இல்லை என்று சொல்லிவிடும். அப்படியிருந்தும், இவ்வளவு அனுபவம் வாய்ந்த ஒருவர் ஏன் அறிவற்ற ஒரு செயலைச் செய்கிறார்?

மூளை பல தகவல்களை இணைத்துப் பார்த்து, சாதகமான எதிர்நிகழ்வைத் தயார் செய்கிறது. ஒரு கூட்டத்தில் பெரியவர் ஒருவர் வந்தால், பிறருடன் மரியாதை நிமித்தமாக எழுந்து நிற்கிறோம். இதில் முன் அனுபவத்துக்குப் பங்கு இருக்கிறது என்றாலும், அனுபவமில்லாதார், பிறர் செய்வதைப் பார்த்து இயங்கலாம், அல்லது முன்கூட்டியே பழக்கங்கள் பற்றி படித்து/கேட்டு அறிந்திருந்தாலும், சரியாக இயங்க முடியும். இது இணைத்துப் பார்த்தல் என்ற வகைப்படும்.

எல்லா நேரத்திலும், மூளை சரியாக இணைத்து பார்த்துவிடாது. ஒரு நிகழ்வு தந்த தாக்கத்தில், அதில் ஈடுபட்டிருந்த பல நிகழ்வுகளை மூளை தன்னுள் பதித்துக்கொள்கிறது. ‘அந்தப் பெரிய வெற்றி கிடைத்திருந்த அன்று, நீலச்சட்டைதான் போட்டிருந்தேன். எனவே, நீலச்சட்டை ராசியானது’ என்பதும், “போன வாரம் தோல்வியைச் சந்தித்தபோது, நீலச்சட்டை போடலை’ என்பதும், நீலச்சட்டைக்கு ஒரு தளத்தைக் கொடுத்துவிடுகின்றன.

100 முறை அவர் சென்ற விற்பனை நிகழ்வுகளில், 60 முறை வென்றதாகவும், அதில் 45 முறை நீலச்சட்டை அணிந்திருந்ததாகவும் வைத்துக்கொள்வோம். இது, வெற்றிபெற்ற நிகழ்வில் 75 சதவீதம் நீலச்சட்டைக்குச் சாதகமான தகவல். ஆனால், நிகழ்தகவின் அடிப்படையில் பார்த்தால், புள்ளியியல் விவரங்கள் வேறு தகவல்களைச் சொல்லும். இருப்பினும், மனம், சாய்வுடன் “எதுக்குங்க வம்பு? நீலச்சட்டையே போட்டுட்டு போறேன்” என்று நீலச்சட்டையை எடுக்கத் தூண்டும். இதுதான் இணைத்துப் பார்த்தலின் பலம்.

பல நேரங்களில் இந்தப் பலம், நமது பலவீனங்களை மறைக்க மனம் போடும் நாடகம். தோத்துவிடுவோமோ என்ற அச்சம், பாதுகாப்பின்மையை மறைக்க, மூளை பழைய நிகழ்வுகளைத் தேடுகிறது. முன்பு வெற்றியைச் சந்தித்த நிலையில் எதெல்லாம் இருந்ததோ, அதையெல்லாம் மீட்டெடுத்துக் கொண்டுவர முயல்கிறது மூளை. இதில் தருக்கம் கேட்கும் கேள்விகளை, பாதுகாப்பின்மை அடக்குகிறது. “எதுக்கு வம்பு” என்ற கேள்வி முன் தூக்கி நிற்கிறது.

‘சரி, நீலச்சட்டை போட்டுப்போனா என்ன? அது ஒரு ஊக்கம் தந்தால் நல்லதுதானே’ என்ற கேள்வி சரியாக இருப்பதுபோல் இருக்கலாம். சற்றே யோசித்துப் பார்ப்போம்.

“இது என் பலவீனத்தை மறைக்கும் ஒரு உத்தி” என்பது தெளிவாக நமக்குத் தெரிகின்றதா? அந்தப் பலவீனம் இன்னும் இருப்பதை உணரமுடிகிறதா? எதனால் அந்த அச்சம், பாதுகாப்பின்மை வருகிறது?. பாதுகாப்பின்மையை, அச்சத்தை மறைக்காமல், அதனை ஒரு உறுதியினால் அகற்ற முடியுமா என்பது போன்ற சிந்தனைகள் வளர, சாய்வற்ற பின்னூட்டம், மற்றும் நமது சிந்தனை அவசியம்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று நினைப்பது நேரான சிந்தனை.

(தொடரும்)

]]>
அறிவியல், மனம், இணைத்துப் பார்த்தல், நேரா யோசி, குவியம், science, mind, linking, blue shirt, நீலச் சட்டை https://www.dinamani.com/junction/nera-yosi/2018/jan/13/குவியத்தின்-எதிரிகள்-7-இணைத்துப்-பார்த்தல்-2844251.html
2835822 ஜங்ஷன் நேரா யோசி குவியத்தின் எதிரிகள்: 6 முன் அனுபவம் சுதாகர் கஸ்தூரி. Saturday, December 30, 2017 12:17 PM +0530  

தொண்ணூறுகளில் டேப் ரெக்கார்டர்களில் பாட்டு கேட்க, ஒலி நாடாவில் பாட்டுகளைப் பதிந்து தரும் கடைகள் இருந்தன. ராயல்டி பற்றி எவரும் கவலைப்படாமல், நாம் கேட்டிருக்கும் பாடல்களை, நாடாவில் பதிந்து தருவார்கள். இதில் அவர்களுக்கே ஒரு திறமை வாய்த்திருப்பதால், நோயாளிகளிடம் மருத்துவர்கள் கேட்பதுபோல், “சிவாஜியா எம்ஜியாரா? ஜெமினி சேக்கலாமா? ஏ ஸைடுல, கடைசில ரெண்டு நிமிஷம்தான் இருக்கும். இங்க, மியூஸிக் போட்டுட்டு, ‘சின்னஞ்சிறிய வண்ணப்பறவை’ பாட்ட அடுத்த பக்கத்துல பதிஞ்சிடறேன்’’ என்று தங்கள் அனுபவத்துக்கு ஏற்ப பதிந்து தருவார்கள்.

ஒருமுறை, எம்.எஸ்.ஸின் பஜகோவிந்தம் முதலாக சில பாடல்களைப் பதியக் கொடுத்தேன். கடையில் இருந்த முதியவரிடம் “அண்ணாச்சி, ராஜாஜி பேசறது முதல்ல வரணும்” என்றேன். “அட, அது தானா வரும் தம்பி. பஜகோவிந்தம்னாலே முதல்ல ‘‘ஆதி சங்கராச்சார்யா”ன்னு ராஜாஜி பேச்சுலதான் தொடங்கும்” என்றார். வாங்கி, ஊருக்குப்போய் பார்த்ததும் தெரிந்தது, ராஜாஜி பேச்சு பதியப்படவில்லை.

அனுபவசாலி, பல எண்ணற்ற கேசட்டுகளைப் பதிந்து தந்தவரால் இதனைப் பொறுக்க முடியவில்லை. கடைப் பையனை வார்த்தைகளால் விளாசினார். “அண்ணாச்சி, பஜகோவிந்தம்னு எழுதியிருந்தீய. அது வேற” என்று அவன் சொன்னதை காதிலேயே அவர் வாங்கவில்லை. தன் கணிப்பு தவறிய அதிர்ச்சியில் சில நொடிகள் மவுனமாக இருந்தார்.

இதேதான், வழக்கமாகப் போகும் ரயில் புறப்படும் நேரம் மாறியிருப்பதைச் சரிபார்க்காமல், “ஏழு அம்பதுக்குதான் வண்டிய எடுப்பான். அவசரமே இல்லாம ஏழரைக்குப் போனாப் போறும்” என்பவர், ஏழேகாலுக்கு அந்த வண்டி கிளம்பிப் போனதை எளிதில் ஏற்றுக்கொள்ளமாட்டார். “எப்ப நேரத்தை மாத்தினான், வீணாப்போனவன்?” என்று ரயில்வேயை திட்டிக்கொண்டிருப்பார்

இது அனுபவம் குறித்த அனுமானப் பிழை. அனுபவம் எப்போதும் சரியாகவே இருக்க வேண்டியதில்லை. கேள்வி என்ன? என்பதை முதலில் அனுபவம் கொண்டு, பெருமூளை தீர்மானிக்கப் பார்க்கிறது. வெகு விரைவில், தன்னிடம் இந்த சவாலை தீர்த்துவிட்டு, அமைதியாகக் கிடக்க வேண்டும். அதுதான் அச்சோம்பேறியின் திட்டம். அனுபவம் பெரும்பாலும் சரியான பதிலைத் தரும். ஆனாலும், தவறுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

இதற்கும், நேராக யோசிப்பதற்கும் என்ன தொடர்பு? நேராக யோசிப்பது என்பது ஒரு முறை பின்னூட்டமும், சரிபார்த்தலும் அடங்கியது. ‘ஏழு அம்பதுக்குத்தான் ட்ரெயின். எதுக்கும் ஒரு தடவ செக் பண்ணிக்கிடறேன்” என்பது உங்கள் அறிவை, அனுபவத்தை குறைத்து மதிப்பிடுவதாக ஆகாது. மாறாக, சரியாகச் செல்ல வைக்கும். Trust, but verify என்பது ஒரு நல்ல பழக்கம்.

முன் அனுபவம் என்பது நமக்கு ஏற்பட்டதாக மட்டுமே இருக்கவேண்டியதில்லை. சிறுவயதில் நேரடியாகக் கேட்ட அறிவுரைகளும், பிறரது உரையாடல்களில் இருந்து எடுத்து, அதனுடன் ஒரு அனுபவத்தைக் கோர்த்தெடுத்துக் கொண்டதாகவோகூட இருக்கலாம். இது, ஆராயப்படாது பதிந்துபோன ஒரு அனுபவ நினைவாக இருந்து, உரித்த நேரத்தில் அப்படியே வெளிவரும் ஆலோசனை அன்றி இயக்கமாக இருக்கச் சாத்தியங்கள் உண்டு.

1984-ல், வீட்டை விட்டு முதன்முறையாக நானும் என் நண்பனும் வேறு யாருடைய துணையும் இன்றி மதுரைக்குச் செல்ல வேண்டியிருந்தபோது, நண்பனின் பெரியப்பா சொன்னார் – ‘‘மதியம், ராத்திரி சோறு திங்கணும்னா, ரயில்வே ஸ்டேஷன்ல போயி சாப்பிடுங்க என்னா?” சரியெனத் தலையாட்டினாலும், ஏன் என்று விளங்கவில்லை. அவரே சொன்னார், “அங்கதான் சோத்துல சோடா உப்பு சேக்கமாட்டான்.”

அவரது அறிவுரையின் பின்புலம், 1940-களில் இரண்டாம் உலகப் போரின்போது, அரிசித் தட்டுப்பாடு வந்ததன் தாக்கம். பிற ஓட்டல்களில் அரிசி குறைவாக இருக்கவே, அதில் சோடா உப்பு சேர்த்து, வயிறு நிரம்பச் செய்தனர். ஆனால், ரயில்வே கேன்டீனில், அரசு தரும் அரிசி என்பதாலும், அரசின் நேரடிக் கண்காணிப்பு இருந்ததாலும் சோடா உப்பு சேர்க்க மாட்டார்கள். இதெல்லாம் எப்பவோ போய்விட்டது என்றாலும், அவர் மனதில் இருந்து அந்த அனுபவம் நீங்கவில்லை. சூழ்நிலையை ஆராயாது, மனம் ‘பேரன்ட்’ என்ற நிலையிலிருந்து பகிரும் அனுபவப் பரிமாற்றம் இது.

நம் முன் அனுபவத்தின் நீட்சியாக பலவற்றையும் பார்த்தால், இதுபோன்றே பல கசப்பு அனுபவங்களைத் தந்துவிடும். ‘‘அந்த காலேஜ்ல டீச்சர் எல்லாம் அருமையானவர்கள். கண்ணை மூடிட்டுச் சேருங்க” என்று ஒரு காலேஜை பரிந்துரைப்பவர் மனத்தில் நினைத்திருந்தது ‘நான் படிக்கறப்போ சுப்ரமணியன் சார் க்ளாஸ் எடுத்தார்னா, ஒரு பய ஃபெயிலாக மாட்டான்’ என்பது. அவர் எப்பவோ ரிடையர்ட் ஆகிவிட்டார் என்பதும், கல்லூரியில் தற்போது தாற்காலிக ஆசிரியர்கள் கொண்டு மாரடிக்கிறார்கள் என்பதும் அவருக்குத் தெரியாது. விளைவு?

எனவே, முன் அனுபவம் எவ்வளவுதான் நல்லதாக இருந்தாலும் “இது என் அனுபவம். எதுக்கும் ஒரு தடவை…” என்று சரிபார்ப்பது தவறுகளைத் தடுக்கும். பல நேரங்களில், இது வேண்டாத முயற்சியாக இருக்கலாம். அதில் சலிப்படைவதைத் தவிர்க்க “இது, எனக்காகச் செய்வது” என்று மனத்தில் நினத்துக்கொள்வது பயனளிக்கலாம். சிலர், “சரி விடு, எத்தன தடவ சரி பார்ப்பே?” என்று உள்ளூரத் திட்டினாலும், ‘எதற்கும் ஒருமுறை’ என்று மனத்துக்குள் சொல்லிக்கொள்வது பல விபரீதங்களைத் தடுக்கும்.

எல்லாவற்றிலும் சந்தேகப் பிராணியாக இருக்க வேண்டுமா? உறுதியாக எதையும் நம்பிவிடக் கூடாதா? என்று கேள்வி எழலாம். இதுவும் நம் முன் அனுபவ நீட்சிதான். நாம் பேசும் பொருள் என்ன? சரி பார்ப்பது. எதில் சரி பார்க்க வேண்டும்? சூரியன் கிழக்கே உதிப்பதையா? அல்லது நாளைக்கு எத்தனை மணிக்கு இன்டர்வியூ என்பதையா? இந்தப் பகுத்தறிவு அவரவர் தம்மில் வர வேண்டிய ஒன்று.

அனுபவத்தை எங்கே பயன்படுத்துவது? நிலையான ஒரு தகவல் இருக்குமானால், அனுபவம் தவறல்ல. “பாத்ரூமா? இப்படி நேராப் போயி, வலது பக்கம் திரும்புங்க” என்பது உங்கள் வீட்டைப் பொறுத்த அளவில், அனுபவத்தின் பலம். இது பழக்கத்தில், அனுபவத்தில், அதிகம் யோசிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இல்லாமல் வருவது. அதே அனுபவம் வேறொரு கட்டடத்தில் சரியாக இருக்காது.

யோசிக்க வேண்டிய செயல்களில் முன் அனுபவத்தைப் பயன்படுத்துவதில் கவனம் தேவை என்பதையே முன் அனுபவப் பிழை முன்னிறுத்துகிறது. வட இந்தியாவில் ஜுகாட் (Jugaad) என்றொரு சொல் உண்டு. ஒரு சவாலுக்கு, தனக்குத் தெரிந்த, கிடைத்த பொருட்களை வைத்து ஒரு தீர்வைக் கொண்டுவருதல் என்பது ஜுகாட்.

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் அருகே ஒரு கிராமத்தில், லஸ்ஸி தயாரிக்கும் கடையொன்றில், பெருமளவு லஸ்ஸி தேவைப்பட, இவ்வளவு தயிரை எப்படிக் கடைவது என்று யோசித்தார்கள். வீட்டிலிருந்து, பழைய வாஷிங்மெஷினை கடை முதலாளியின் மனைவி கொண்டுவந்தார். நன்றாகத் தேய்த்து கழுவி, அதில் தயிரைக் கொட்டி ஓடவிட, பத்து லிட்டர் தயிர் ஐந்து நிமிடத்தில் ரெடியானது. இது ஜுகாட். அனுபவம் – வாஷிங் மெஷினில் நீர் சுழல்வது. அதன் நீட்சி, தயிர் கடைவது. இங்கு அனுபவம் சரியாக இயங்குகிறது.

ஆனால், எல்லா சூழ்நிலையிலும் இது ஒத்துப்போகாது. ஒருவன், வயிற்று வலிக்கு எட்டு கடுக்காய்களை அரைத்து உண்டு, வலி சரியாகிப்போக, எந்த வலியுடன் வந்தவர்களுக்கும் எட்டு கடுக்காய் சாப்பிடுங்கள் என்று சொல்வது அபத்தம் என்பதையே முன் அனுபவப் பிழை காட்டுகிறது. “எல்லா வலிக்கும் எட்டே கடுக்காய்” என்று ஒரு பழமொழியே உண்டு.

எனவே, தன் அனுபவத்தைக் கருத்தாகவோ, அறிவுரையாகவோ முன்வைக்கும் முன்னர், ஒரு நிமிடம் ‘இது சரியாக இருக்குமா?’ என்று தன்னிடமும் பிறரிடமும் கேட்டுப் பின்னூட்டம் பெற்றுக்கொள்வது பல விபரீதங்களைத் தடுக்கும். இந்த ஒரு நிமிட இடைவெளியில் பல செயல்கள் சாத்தியம்.

இந்த இடைவெளியைப் பல கோணங்களில் உளவியலாளர்கள் அலசியிருக்கிறார்கள்.

பரிமாற்ற ஆய்வுகளில், இது அடல்ட் எனப்படும் மனச் சிந்தனையின் பலம் என்று சொல்கிறார்கள். இதனை, ‘ஐ ஆம் ஓகே, யூ ஆர் ஓகே’ மற்றும் ‘ஸ்டேயிங் ஓகே’ போன்ற பரிமாற்ற ஆய்வு பிரபல புத்தகங்களில் விளக்கமாகக் காணலாம்.

ஸ்டீபன் கோவே தன் புத்தகமான ‘செயலூக்கம் உள்ளவர்களின் ஏழு பழக்கங்கள்’ (7 Habits of Effective People) என்ற புத்தகத்தில், தூண்டலுக்கும் எதிர்வினைக்குமான இடைவெளியைப் புகழ்கிறார்.

டேனியல் கானேமான், ‘விரைவாகச் சிந்திப்பது, மெல்லச் சிந்திப்பது’ (Thinking Fast, Thinking Slow) என்ற தனது புகழ்பெற்ற புத்தகத்தில், எதிர்வினையின் வேகத்தையும், அது வரும் இடைவெளியின் அளவையும் முக்கியமாகச் சொல்கிறார்.

எப்போது முன் அனுபவத்தை மேற்கொள்ள வேண்டும்? எப்போது சிந்தித்துப் பரிமாற்றம் செய்ய வேண்டும்? இதனைப் பற்றித் தெரிய வேண்டுமானால், மேலே கூறிய மூன்று புத்தகங்களையும் வாசியுங்கள். சில காலம் அதில் உள்ள கோட்பாடுகளை நடைமுறைப்படுத்திப் பாருங்கள். அதன்பின் நம் அனுபவம் சார்ந்த ஒரு பழக்கம் ஏற்படும்.

]]>
பெருமூளை, சிந்தனை, அனுபவம், experience, amygdala, thinking, people https://www.dinamani.com/junction/nera-yosi/2017/dec/30/குவியத்தின்-எதிரிகள்-6-முன்-அனுபவம்-2835822.html
2822035 ஜங்ஷன் நேரா யோசி குவியத்தின் எதிரிகள்: 5 அனிச்சையான சிந்தனைகள், எதிர்வினைகள் சுதாகர் கஸ்தூரி. Saturday, December 9, 2017 12:00 AM +0530  

கார் ஓட்டக் கற்றுக்கொள்ளச் செல்கிறீர்கள். ஆக்ஸிலேட்டர், பிரேக், க்ளட்ச் இருப்பதையும், க்ளட்சை அழுத்தி, கியரைப் போடவும் சொல்லிக் கொடுக்கிறார்கள். இரு நாட்களுக்கு, உய்ங்க்க் என்று திமிறி, கார் முன்னே பாய்ந்து ஒரு குலுக்கலோடு நிற்கிறது. எளிதாக கியர் போட்டுச் செல்லும் சிறு பெண்ணைப் பார்த்துப் பொறாமைப்படுகிறீர்கள். “எனக்கு வர்றதுக்கு நாளாகும்” என்றும் தோன்றுகிறது. மெள்ள மெள்ள பழக்கத்துக்கு வந்த பிறகு, கியரோ, க்ளட்சோ, பிரேக்கோ, எதுவுமே நீங்கள் உணர்ந்து செயலாற்றுவதில்லை. தானாக, ஆக்க நிலை அனிச்சைச் செயலாக வந்துவிடுகிறது. இதுவேதான் நீச்சலுக்கும், ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கும்… ஏன், பயிற்சி மூலம் வரக்கூடிய எந்தப் புதிய திறன்களுக்கும் இதேதான்.

மூளை, தன் செயல்பாட்டைக் குறைத்துக்கொள்ளவே அதிகம் எத்தனிக்கிறது. எனவே, பழகிய செயல்களை, தானியங்கு நிலையில் விட்டுவிடுகிறது. இந்த நிலையில், மூளையின் வேலை இருப்பினும் அது குறைவாகவே இருக்கும். ஒரு அனுபவசாலி கார் ஓட்டும்போது, அவர் மூளை வேலை செய்யாமல் இல்லை. ஆனால், அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. அமைக்டிலா அடங்கிக்கிடக்கிறது. பெருமூளையின் சிறு பகுதியே வேலை செய்கிறது. மூளை, சி.டி.யைப் போடுவது, ஏசியை கூட்டுவது போன்ற பிற வேலைகளில் ஈடுபட்டுவிடுகிறது.

ஒரு வேலையைத் திறம்பட, தானியங்கு நிலையில் செய்ய 10000 மணி நேரப் பயிற்சி தேவை என்றொரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. 10000 மணி நேரப் பயிற்சி மட்டும் போதாது. தவறான பயிற்சியாக இருந்தால், தவறான ஒரு திறமையாளராகவே அவர் உருவாக முடியும். எனவே, பயிற்சி – பின்னூட்டம் - மாற்றுதல் – பயிற்சி –பின்னூட்டம் என்ற ஒரு சுழற்சிதான், நல்ல ஒரு திறமைசாலியை உருவாக்க முடியும்.

தானியங்கு நிலையில் மூளையின் வேலையை அதிகம் நம்பிவிட முடியாது. பழக்கங்கள் கிட்டத்தட்ட 80 சதவீதம் நமது இயக்கங்களைத் தீர்மானிக்கின்றன. இது நம்பமுடியாத ஒன்று. நாம் என்னமோ, திறமையாக, தருக்கரீதியாக, சிந்தித்து மட்டுமே செயல்படுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில், பழக்கங்கள் நம் இயக்கங்களிலும், சிந்திக்கும் விதத்திலும் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்த நிலையில், நமது யோசிப்பைப் பற்றி யோசிப்போம். நமது பழக்கங்களின் அடிப்படை ஒன்றில், “உன்னைப் பற்றி கிண்டலாகப் பேசினால், இந்த கெட்டவார்த்தை சொல்லு” என்று அழுத்தமாக இருந்தால், ஒரு இன்டர்வியூவில், வேண்டுமென்றே கேட்கப்பட்ட நக்கலான கேள்விக்குப் பதில் அந்த கெட்டவார்த்தை இயல்பாக வந்துவிழும். (வந்திருக்கிறது, கேட்டிருக்கிறேன்).

டேனியல் கானேமான் என்ற நோபல் பரிசு பெற்ற உளநிலை ஆய்வாளர், இந்த இருவகையான மனத்தை கிட்டத்தட்ட தானியங்கியான சிஸ்டம் 1, தருக்க ரீதியான சிஸ்டம் 2 எனப் பிரித்தார். சிஸ்டம் 1 என்பது மிகக் குறைவான நேரத்தில் எதிர்வினை செய்வது. சிஸ்டம் 2 என்பது சற்றே பின்வாங்கி, சிந்தித்துச் செயலாற்றுவது. பழக்கங்கள், சிஸ்டம் 1-ன் செயல்பாட்டை முன்வைக்கின்றன.

டேனியல் கானேமான்

இதுபோன்றே, இயல்பு வாழ்க்கையிலும் பழக்கத்தின் அடிப்படையில்தான் நம் பதில்கள் அமைகின்றன. சிலர் பேசும்போது “ஐ மீன்... யு நோ…” என்று அடிக்கடி சொல்வது அவர்களுக்கே தெரியாத ஒன்று. பதில் சொல்லாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில்லை. உடல் மொழியாகவும் இருக்கலாம். அது இன்னும் மோசம்.

பழக்கங்களினால் நம் சிந்தனையில் தாக்கம் ஏற்படும்போது, அது சிந்தனை மொழியிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரு செயலின் எதிர்வினையாக, “நம்மைப் பத்தி தப்பாதான் சொல்கிறார்கள்” என்பது பலமுறை நம் மனதில் தோன்றும்போது, அது பழக்கமாகிறது. சந்தேகம் என்பதும் ஒரு சிந்தனைப் பழக்கம். இது பெரிதாகும்போது, டெல்யூஷனாக (delusion) மாறும்.

உடல் இயங்கும் பழக்கத்தை மாற்ற சார்லஸ் டுஹிக் ஒரு உத்தி சொல்கிறார். எந்தப் பழக்கத்துக்கும் தூண்டுகோல், நமது எதிர்வினை, அதன் முடிவாகக் கிடைக்கும் பயன் என்பவை அவசியம்.

சார்லஸ் டுஹிக்

சிகரெட் என்பதைப் பார்த்தால், நம் எதிர்வினையாக சிகரெட்டை எடுக்கிறோம். அதன் முடிவாக ஒரு நிறைவு கிடைப்பதை உடல் எதிர்பார்க்கிறது. அதே முடிவுக்கு, நம் எதிர்வினையை மாற்றிப் பார்த்தால்? அதாவது, சிகரெட் புகைப்பதன் முடிவான நிறைவை, மற்றொரு வினை தருமானால்? இப்படித்தான், நிக்கோடின் பட்டையின் பயன்பாடு புழக்கத்துக்கு வந்தது. சிகரெட் என்ற தூண்டுதலுக்கு, நிறைவைத் தரும் நிக்கோடின் பட்டையைப் பயன்படுத்துவது என்ற எதிர்வினை, மெள்ள  மெள்ள, புகைக்கும் பழக்கத்தை மாற்றிவிடுகிறது.

நிக்கோடின் பட்டை

தூண்டுதல் – எதிர்வினை – முடிவு என்பதில், நடுவில் இருக்கும் எதிர்வினையை மாற்றுவதுபோல், ஒரு தூண்டுதலுக்கும், நமது பதிலான எதிர்வினைக்கும் நடுவே, நமது கிரகிப்பு, சிந்தனை என்பதை மாற்றிப் பார்த்தால்?

ஆக்க நிலை அனிச்சைச் செயல்கள் இதனை எளிதில் செய்ய விடாது. எனவே, ஒரு தூண்டுதல் கிடைத்ததும், அது மூளையில் எதனால் கிரகிக்கப்படுகிறது என்பதைக் கண்டு, அதனை மாற்ற முயற்சிக்கப் பழக வேண்டும்.

பயப்படும்படியான ஒரு உருவம் முன்னே வந்தால், அமைக்டிலா பணி செய்துவிடும், கவலையில்லை. ‘‘உனக்கெல்லாம் மூளையே கிடையாதாடா?” என்ற கேள்விக்கு, “இப்படி எவனாச்சும் கேட்டான்னு வையி, பிச்சிறுவேன்” என்று பலகாலமாகச் சொல்லி வந்திருந்தால், கைதான் பேச வரும். இது தானாக வரும் எதிர்வினை என்றால், எப்படி இதனைத் தடுப்பது?

எனவே, ஒரு சிறு விதியைக் கவனமாக உள்வாங்குவோம்.

ஒவ்வொரு தூண்டுதலுக்கும், பதிலுக்கும் நடுவே, ஒரு இடைவெளி இருக்கிறது. அது, சிந்திக்க வேண்டிய கால இடைவெளி. அதனைப் பயன்படுத்தி, அதன்பின் பதில் சொல்ல வேண்டும்.

இதன்படி, யதார்த்த கால அவகாசமாக 5 நொடிகள் என்பதை கணக்கில் வைக்கலாம்.

“உனக்கு மூளையே கிடையாதாடா?” என்று கேள்வி வருகிறது. 1-2-3-4-5 என்று மனதில் கணக்கிட்டு, அதன்பின் பதில் சொல்லிப் பாருங்கள். உங்கள் பதில் வேறாக இருக்கலாம்.

இந்தக் கால அவகாசத்தில், மூளை தன்னில், எந்த உறுப்பு பதில் சொல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது. இதன் விளைவு, பெரும்பாலும், பெருமூளையின் நடுப்பகுதி, முன்பகுதி பதில் சொல்வதில் ஈடுபடுகிறது. இந்தக் கால அவகாசம் மிக முக்கியம்.

சில நேரங்களில், கால அவகாசத்துடன், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமும் நேரிடுகிறது. மூச்சை மெதுவாக இழுத்து, அடக்கி, மெள்ள வெளியிடுவது நல்ல பயனைத் தரும். சிறு சிரிப்பு, அனைவரையும் சுற்றி மெள்ள நோட்டமிடுதல் போன்றவையும் பயனளிக்கும். சிலருக்கு இரு நொடிகள் போதும். சிலருக்கு பத்து நொடிகள் தேவைப்படலாம்.

இந்தக் கேள்வியைவிட சில மோசமானவை சமூக வலைத்தளங்களில் வரும் சில வீடியோக்கள், புகைப்படங்கள், உணர்ச்சிபூர்வமாக எழுதப்பட்ட பதிவுகள். இவற்றுக்கு உடனடியாகப் பதிலளிக்கத் தோன்றினால், மேலே சொன்ன உத்தியைப் பயன்படுத்துங்கள். உணர்வைத் தவிர்க்க, அடுத்த பதிவுக்குச் செல்லுங்கள். தூண்டுதல் மாறும்போது, பதிலும் மாறும். பல கம்பெனிகள், தங்கள் பணியாளர்களின் சமூக வலைத்தள இயக்கங்களைக் கவனிப்பதற்குக் காரணம், அவர்களது உணர்வு எதிர்வினைகளை அறியும் நோக்கமும்தான்.

சில நொடிகள் நேர அவகாசம், நேரே யோசிப்பதை வலுப்படுத்தும். சிஸ்டம் 2-க்கு நமது எதிர்வினையாற்றல், சிந்தனைகளைக் கொண்டுவர சற்றே முயல்வது நல்லது.

]]>
பயிற்சி, மூளை, சிந்தனை, brain, practice https://www.dinamani.com/junction/nera-yosi/2017/dec/09/குவியத்தின்-எதிரிகள்-5-அனிச்சையான-சிந்தனைகள்-எதிர்வினைகள்-2822035.html
2808486 ஜங்ஷன் நேரா யோசி குவியத்தின் எதிரிகள்: 4 குறுக்கான இடையாடல்கள் சுதாகர் கஸ்தூரி. Saturday, November 18, 2017 12:00 AM +0530  

‘பட்டுக்கோட்டைக்கு வழி சொல்லுடா’ன்னா, ‘கொட்டைப் பாக்கு பத்து பணம்’ங்கான்’ என்று ஒரு பழமொழி உண்டு. கேள்வி ஒன்றுக்குச் சம்பந்தம் இல்லாத பதில் வருவதில் உண்டான எரிச்சலை, இதுபோன்ற பழமொழிகள் வெளிக்காட்டுகின்றன. ஏன் எரிச்சல் வர வேண்டும்? அவர் காதில் பட்டுக்கோட்டை என்பது கொட்டைப்பாக்கு என்று கேட்டிருக்கலாம், அல்லது அவர் வேறு சிந்தனையில் இருந்திருக்கலாம்.

ஆனால், நமது எதிர்பார்ப்பு என்பது வேறு வகையான குவியம். ‘நான் சொல்வதை சரியாகத்தான் சொல்கிறேன். கேட்பவருக்கு மிகச்சரியாக அது புரியும் வகையில்தான் சொல்கிறேன். எனவே, எனக்கு வேண்டிய பதில் வர வேண்டும்’ இதுதான் நமது அச்சமய, தாற்காலிகக் குவியத்தின் எதிர்பார்ப்பு. இந்தத் தாற்காலிகக் குவியத்துக்காக உடல் செலவிடும் சக்தி, நீடித்த நேரத்துக்குத் தேவைப்படும் ஆற்றலைவிட அதிகமானது. எனவே, சரியான பதில் கிடைக்காதபோது, ஏமாற்றங்கள் எரிச்சலைத் தோற்றுவிக்கின்றன. கேள்வியின் நேரமும், பதிலின் அவகாசமும் மிகக் குறுகிய காலகட்டத்தவை; ஏமாற்றத்தின் ஆழம் அதிகம்.

நீடித்த காலத்தின் குவியம், ஆயத்தங்களைக் கொண்டு துவங்குவது. என்ன செய்ய வேண்டும் என்பதையும், எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் முன்கூட்டியே தீர்மானித்துக்கொள்கிறோம். அதன்படி நடக்க எத்தனிக்கையில், வரும் இடையூறுகளையும் மனம் எதிர்பார்த்து, அதற்கு ஏற்ப தன் பதில்களை முன்கூட்டியே தயார் செய்து வைத்துக்கொள்கிறது.

இரண்டு மணி நேரம் தொடர்ந்து படிக்கப்போகிறோம் என உறுதி எடுத்துவிட்டால், ‘அம்மா, நான் படிக்கப்போறேன். அக்காகிட்ட சொல்லிவை. அத எடுக்க வர்றேன், இதை எடுக்க வர்றேன்னு ரூம்ல அநாவசியமா தொல்லை பண்ணக் கூடாது’ என்றோ, அம்மா பத்து தடவை கூப்பிட்டபின் ‘ம்’ என்று பதில் சொல்லவோ நாம் ஆயத்தப்படுத்திக்கொள்கிறோம். எதிர்பார்த்த விளைவுகளை நாம் நோக்கியிருப்பதால், நமது தேவைகளும் அதற்குள் அடங்கிப்போகின்றன.

இடையூடல்கள் என்பவை பரிமாற்றத்தைச் சேர்ந்தவை. பரிமாற்றப் பகுப்பாய்வுகள், நாம் மூன்று நிலைகளில் இருப்பதாகச் சொல்கின்றன. பேரன்ட், அடல்ட், சைல்டு என்று அவை வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. நாமாக அனுமானித்துக் கற்றவற்றை ‘பேரன்ட்’ என்ற நிலையாகவும், உணர்ச்சிவயமான தகவல் நிலைகள் ‘சைல்டு’ என்பதாகவும், இவை இரண்டையும் சரிதூக்கிப் பார்த்து, எந்த இடத்தில் எது தேவையோ அவ்வாறு பரிமாற்றம் செய்வது ‘அடல்ட்’ என்ற நிலையாகவும் பரிமாற்றப் பகுப்பாய்வு வரையறுக்கிறது. இதில், ஒரு நிலையில் இருந்து பேசி, வேறொரு நிலையிலிருந்து பதிலை எதிர்பார்க்கையில், சம்பந்தமே இல்லாமல் வேறொரு நிலையிலிருந்து பதில் வரும்போது, எதிர்பார்ப்பு சிதைகிறது. ஏமாற்றம், கோபம், எரிச்சல் பொங்குகிறது.

உதாரணமாக, ‘இன்னிக்கு ரஜினி படம் ரிலீஸ். ஃப்ரெண்ட்ஸோட பாத்துட்டு வரட்டுமா?’ என்று ஆசையுடன் (சைல்டு - உணர்ச்சி) கேட்கையில், ‘அடுத்த மாசம் செமஸ்டர். படிக்கற வழியப் பாரு’ என்று பதில் (பேரன்ட் -  முன்முடிவு) வருகையில், எரிச்சல் ஏற்படுகிறது. சைல்டு எதிர்பார்த்தது, ‘போயிட்டு வா’ அல்லது ‘இன்னிக்கு செம கூட்டமா இருக்குமே? இன்னொரு நாள், நாம எல்லாரும் போவமா?’ என்ற அடல்ட் நிலை பதில். வந்ததோ, பேரன்ட்டில் இருந்து. இது குறுக்கான இடையூடல். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஏமாற்றம்; எரிச்சல்.

இந்தக் குறுக்கான இடையூடலைத் தவிர்க்க வழியென்ன? நாம் எப்படிக் கேட்டாலும், எதிரே இருப்பவரின் மன நிலையல்லவா இடையூடலை வழிநடத்துகிறது? என்பது சரியான காரணம்தான். ஆனால், நமது எதிர்பார்ப்பு என்பது ஏமாற்றமாக விரியாமல், ‘சரி, இவங்க மனநிலைமை வேற’ என்ற புரிதல், வேறுவகையில் கேள்வியையோ, அல்லது உரையாடலையோ நகர்த்திவிடும். எதிர்பார்ப்பின் பதில் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், பதிலை உள்வாங்க சில நொடிகள் எடுத்துக்கொள்வது பெரும்பலனைத் தரும்.

இதனால்தான், குழந்தைகளின் ‘அம்மா... அப்பாகிட்ட கேட்டு சொல்லேன்’ என்பது ஒரு நல்ல உத்தி. அம்மாவுக்கு, அப்பாவின் உடல்மொழியும் தெரியும். எது நல்ல நேரம் என்பதை அவள் சரியாகக் கணக்கிட்டுக் கேட்பாள். தெரிந்தோ தெரியாமலோ, உடல்மொழியின் அவசியத்தை, வீட்டில் இருப்போர் கவனித்து உள்வாங்கிவிடுகிறார்கள்.

]]>
https://www.dinamani.com/junction/nera-yosi/2017/nov/18/குவியத்தின்-எதிரிகள்-4-குறுக்கான-இடையாடல்கள்-2808486.html
2805412 ஜங்ஷன் நேரா யோசி குவியத்தின் எதிரிகள்: 3. சுயக்கற்றலும் சாய்வு நிலைப்பாடுகளும் சுதாகர் கஸ்தூரி. Saturday, November 11, 2017 12:00 AM +0530  

தினசரி ஒன்றை வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள். ‘விமான நிலையத்தில் போதைப் பொருள் பறிமுதல் – ஒருவர் கைது’.  மேற்கொண்டு வாசிப்பதை இப்போது நிறுத்துங்கள்.

அந்த நபர்கள் குறித்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலை அனுமானியுங்கள்.

1. அவர்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர்கள்? இந்தியராக இருந்தால், எந்த மாநிலத்தைச் சார்ந்தவர்கள்?

2. அவர்களது பாலினம் என்ன?

3. அவர்களது வயது என்ன?

உங்கள் பதில், கீழ்க்கண்டவற்றில் எத்தனை சரியாக இருந்தன?

1. வெளிநாட்டவராக இருந்தால், ஆப்பிரிக்க நாட்டவர். அவர்கள் கறுப்பர்கள். இந்தியராக இருந்தால், வடகிழக்கு மாநிலத்தவர்.

2. ஆண்கள்.

3. இளைஞர்கள் 20-30 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இதில் பெரும்பாலும் சரியாக இருந்தால், சற்றே உண்மைச் செய்திகளைப் பார்ப்போம்.

1. கடத்துபவர்கள் பெரும்பாலும் இந்தியர்கள். அந்நிய நாட்டவர்களில் பெரும்பாலோர் நேபாளிகள், நைஜீரியர்கள், மியான்மர் நாட்டு மக்கள்.

2. பிடிபட்டவர்களில் 25 சதவீதத்துக்கு மேல் பெண்கள் (பஞ்சாப் மாநிலம்).

3. 30 சதவீதத்துக்கு மேல் இருப்பவர்கள் 40 - 50 வயதினர். போதைக் கும்பல் ராணிகளாக இருப்பவர்கள் பலர். அதிலும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 50 சதவீதம்.

நமது அனுமானத்துக்குக் காரணம், இதுவரை நாம் படித்து, பார்த்து வந்த செய்திகள். மீண்டும் செய்திகள் காணக்கிடைக்கும்போது, பழைய செய்தியை மனம் நிகழ்காலத்துக்கு நீட்டுகிறது. இந்த தன் அனுபவரீதியான சுயக்கற்றல், தன்னனுபவக் கற்றல் (Heuristic) எனப்படும். இதுபோல, தீவிரவாதிகள் என்றாலே குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றிய எண்ணம் உங்கள் மனத்தில் ஏற்படுமானால், அதுவும் தன்னனுபவக் கற்றலின் நீட்சியே.

சாய்வுநிலை என்பது, இக்கற்றலின் வழியே நிகழ்வுகளைக் குறித்த, மக்களைக் குறித்த அனுமானங்கள். அமெரிக்காவில், தாடி வைத்திருந்த ஒரே காரணத்துக்காக தீவிரவாதி எனத் தவறாக எண்ணப்பட்டு கொலை செய்யப்பட்ட சீக்கியர்கள் பற்றி வாசித்திருக்கிறோம். நம்மூரில், சற்றே மூக்கு சப்பையாக, கண்கள் இடுங்கி இருந்தால் சீனாக்காரன் என்கிறோம். உண்மையில் அவர் சுத்த இந்தியனான அஸ்ஸாமியோ, மிஸோரக்காரனாகவோகூட இருக்கலாம். உடனே நாம் அவர்களை நம்பகமற்ற கண்கொண்டு பார்க்கிறோம். இது சாய்வு நிலை.

வெள்ளைக்காரனெல்லாம் அறிவாளி என்பதாக நம்மூரில் இன்றும் பல கம்பெனிகளில் பார்க்கிறோம். நாம் சொல்வதைத்தான் அவர்களும் சொல்வார்கள் என்றாலும், அவர்கள் வந்தால், அதீத உபசரிப்பு, மரியாதை, அவர்கள் சொல்வதை அப்படியே நம்புவது என்பது இன்றளவும் நீடிக்கிறது. இதெல்லாம், ‘வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்லமாட்டான்’ என்பது போன்ற அப்பட்டமான சாய்வுநிலை வெளிப்பாடு.

தர்க்கத்துடனான சிந்தனை, மூளையின் முன்பக்கத்திலிருந்து வருமுன்னரே இந்த வெளிப்பாடு வந்துவிடுகிறது. இவை, உணர்ச்சிகளின் மூலமான அமைக்டிலாவின் பணி மட்டுமல்லாது, தவறான செய்திகளை மூளை எடுத்து முன்வைப்பதன் விளைவும்தான்.

டேனியல் கானேமான் என்ற நோபல் பரிசுபெற்ற உளவியலாளர் எழுதியிருக்கும் Thinking Fast and Slow என்ற புத்தகத்தில், தன்கற்றலும், சாய்வுநிலைப்பாடுகளும் பற்றி தெளிவாகக் குறிப்பிடுகிறார். துரிதமாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டிய வேளையில், தர்க்கத்துக்கு அதிக இடமில்லை.

கார் ஒன்று முன்பு வேகமாக வரும்போது, அது மணிக்கு எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் வருகிறது? நான் வலப்புறம் ஓட வேண்டுமா? அல்லது இடபுறமாகவா? என்றெல்லாம் சிந்திக்காமல், உடனே ஒரு முடிவை நாம் எடுக்கிறோம். இந்தக் கண நேர முடிவுகளை எடுப்பது மூளையின் நடுப்பகுதி. அது பிற உணர்வுகளின் செய்திகளை உள்வாங்கும் பகுதிகளிலிருந்து வரும் செய்திகளுக்கு ஏற்ப, தனது நினைவுக்கிடங்கில் இருக்கும் செய்திகளைக் கொண்டு முடிவெடுக்கிறது. இது துரித சிந்தனை.

‘45 லட்சம் மதிப்புள்ள நிலப்பகுதியை 20 லட்சத்துக்கு ஒருவர் தருகிறார். அதுவும் ஐந்து நிமிடத்தில் பதில் சொல்ல வேண்டும்’ என்று ஒரு செய்தி வந்தால், உடனே நாம் முடிவெடுப்பதில்லை. ஒரு சந்தேகம் வருகிறது. ஏன் இப்படி அடிமட்ட விலையில் விற்கிறான்? ஏதோ வில்லங்கம் இருக்கு. மேற்படி தகவல்களைச் சேகரிக்கிறோம், அல்லது விலகிப்போகிறோம். இது மெதுவாகச் செயல்படும் சிந்தனை. இதனை முடிவெடுப்பது, மூளையின் முன்புறப் பெருமூளைப் பகுதி.

குறிப்பிட்ட பண்புகளை ஒரு சமூகத்துக்கே பொதுவான பண்பாக ஏற்றிச்சொல்லும் profiling என்பதும், தன்கற்றலும், சாய்வுநிலைப்பாடுமான சிந்தனையின் வெளிப்பாடுதான். ‘பஞ்சாபிகள் எல்லாருமே தண்ணியடிப்பார்கள். பெரிதான குரலில் பேசுவார்கள். ஏமாற்றுக்காரர்கள், ஆடம்பரமான வாழ்வுக்காக அலட்டிக்கொள்வார்கள்’ என்று பரவலான ஒரு கருத்து உண்டு. இதில் எத்தனை சதவீதம் உண்மை என்பதை டில்லியிலும், பஞ்சாபிலும் வாழ்ந்தவர்கள் தன் அனுபவமாகச் சொல்லக் கேட்டால் ஆச்சரியப்படுவோம்.

பொதுவான கருத்தாக அதனை ஒப்புக்கொள்பவர்கள், ‘ஆனா, எங்க வீட்டுக்கு மேலே ஒரு சர்தார்ஜி இருந்தான். நம்பமாட்டே, அமைதியா, மரியாதையா பேசுவான். எக்ஸாம் இருக்குன்னா, காலேல வந்து கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிட்டுப்போவான்’ இதுபோல் பலர் சொல்லிக் கேட்டதுண்டு. ஏன், எனக்கே அத்தகைய அனுபவம் உண்டு.

ஆக, நம் சுயக்கற்றல், சாய்வு நிலைப்பாடுகள் பொய்யானவையா? அப்படியானால், இவை ஏன் வளர்ந்து வந்திருக்கின்றன? சுயக்கற்றல் தவறல்ல. ஆனால், நாம் அதனை எல்லாவற்றுக்கும் நீட்டிப்பதுதான் தவறாகிவிடுகிறது. எங்கோ நடந்த நிகழ்வுகளை அடிக்கடி நினைத்துப் பொருத்திப் பார்ப்பது, எச்சரிக்கைக்காக மூளை கொண்டுவரும் செய்திகளை இயங்குதளத்தில், அமைக்டிலா மூலம் செயல்பாட்டாக இறக்கியதுதான் தவறு.

ஸ்டீஃபன் கோவே, Seven Habits of Effective People என்ற புத்தகத்தில் எழுதுகிறார் – ‘ஒரு தூண்டுதலுக்கும், அதன் எதிர்வினைக்கும் நடுவே, எவ்வகையான எதிர்வினையை நான் ஆற்ற வேண்டும் என்று தீர்மானிக்கும் இடைவெளி இருக்கிறது. அதில் பொருத்தமான எதிர்வினையைத் தீர்மானிக்கும் அறிவும், உரிமையும் நம்மிடம் இருக்கிறது’.

இதுதான் அமைக்டிலாவின் எதிர்வினைக்கும், பெருமூளையின் முன்புறப் பகுதியின் எதிர்வினைக்கும் நடுவே நாம் தேர்ந்தெடுக்கும் முதிர்வின் அறிமுகம். இந்த உரிமையை நாம் எப்போதும் தன்னுணர்வாகக் கொண்டிருந்தால், அதுவே சரியான எதிர்வினையைத் தேர்ந்தெடுக்கத் தூண்டிவிடும். சரியான மனஆளுமைக் குவியம், தன்னுணர்வுடன், தன் எதிர்மறை இயக்கத்தைச் சரியான தோற்றுவாயிலிருந்து (அமைக்டிலா, பெருமூளையின் முற்பகுதி) வெளிக்காட்டும். இது நேராக யோசிப்பதன் அடையாளம்.

]]>
தன்னனுபவக் கற்றல், அறிவியல், யோசித்தல், முன்யோசனை, heuristic, profiling, science, thinking https://www.dinamani.com/junction/nera-yosi/2017/nov/11/குவியத்தின்-எதிரிகள்-3-சுயக்கற்றலும்-சாய்வு-நிலைப்பாடுகளும்-2805412.html
2796909 ஜங்ஷன் நேரா யோசி குவியத்தின் எதிரிகள்: 2. பின்னூட்டமற்ற போக்கு சுதாகர் கஸ்தூரி. Saturday, October 28, 2017 12:00 AM +0530  

ரமேஷ் சிவசாமி, பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் நடுநிலை மேலாளர். 35 வயதில், ஹெப்பாலில் 2BHK வீடு, இரு மகள்கள்; மென்பொருள் கம்பெனியொன்றில் வேலை செய்யும் 28 வயதான மனைவி என்று, சாஃப்ட்வேரில் சுவாசிக்கும் சாதாரண பெங்களூர்வாசி. ஒரு புல்லட் வைத்திருந்தவர், எல்லாரும் ஒரே நேரத்தில் செல்ல முடிவதில்லை என்று ஒரு சுசூகி டிஸைர் கார் சமீபத்தில்தான் வாங்கினார்.

ரமேஷ் சிவசாமி, முந்தாநாள் அதிகாலை மூன்றரை மணியளவில் இறந்துபோனார்

‘திடீர்னு நெஞ்சு அடைக்கிறதுன்னு சொன்னாரு. தண்ணி கொண்டுவர்றதுக்குள்ள…’ என்று கேவும் அவர் மனைவியிடம் சிறிது சிறிதாகக் கேட்டு, ரமேஷ் வேலை பார்த்த கம்பெனியின் மனிதவளத் துறை அறிந்த ஒரு செய்தி, ‘ரமேஷுக்கு ஒரு மாதமாக தோள்பட்டை வலி, ரத்தச் சர்க்கரை அளவு 240’.

‘நல்லாத்தான் இருக்கேன்’ என்றார் ரமேஷ், ஒரு வாரம் முன்பு, தனது புல்லட் 350-யை கிளப்பிக்கொண்டே. ‘பாருங்க, புல்லட் எடுக்க முடியுது, காலைல வாக்கிங் போறேன்’

பின், எப்படி?

‘அவன் அறிகுறிகளைச் சரியாகக் கவனிக்கவில்லை’ என்றார் மருத்துவ நண்பர் ஒருவர். ‘ரமேஷ் இதைச் சொன்னப்போ, ‘எதுக்கும் ஒரு இ.ஸி.ஜி. எடுத்துரு’ன்னேன். நல்லாத்தான் இருக்கறேன். காசு புடுங்கறதே ஃங்களுக்கு வேலை’ன்னு திட்டிட்டுப் போனான்’ என்றார்.

‘நல்லாத்தான் இருக்கிறேன்’ என்பது மனத்தளவில் நல்ல சிந்தனை. ஆனால் உடல், புறவயக் காரணிகள் தரும் பின்னூட்டங்களை, எவ்வளவு சிறியதாக இருப்பினும், அதன் மீது ஒரு கவனம் வைக்க வேண்டும். நம் குவியம், சற்றே அவற்றின் தாக்கம் மீது திரும்ப வேண்டும். இல்லையா?’

‘கரெக்ட். ஆனால் அதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. ரமேஷ் கொஞ்சம் பயந்த சுபாவம். அது ஒரு காரணமாக இருக்கலாம்’.

‘ஸாரி’ என்றேன். ‘ரமேஷ் அதிகம் கவலைப்படுகிற டைப். சவால்கள் வராமல் இருப்பதற்காக, முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்பான். பிரச்னைகள் இருந்தால், அவற்றைத் தவிர்க்கப் பார்ப்பான். அதற்கும் கவனத்துக்கும் என்ன தொடர்பு?’

‘அதைப்பற்றி அப்புறம் பார்ப்போம். இப்ப கொஞ்சம் விலகி, மூளையின் சில உறுப்புகளையும், அவற்றின் இயக்கத்தையும் பற்றி கொஞ்சம் புரிஞ்சுக்குங்க’ என்றார் டாக்டர்.

கொஞ்சம் பொறுமையாக கவனமாக, அடுத்த ஒரு பத்தியை வாசித்து நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இனி வரும் பத்திகளை அறிய இது பயன்படும்.

மூளையின் நான்கு பகுதிகளில் இரு பகுதிகள் பெருமூளை மற்றும் லிம்பிக் அமைப்பு. லிம்பிக் அமைப்பின் ஓருறுப்பு அமைக்டிலா என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பரிணாமத்தில் வளர்ந்த ஒன்று. இது உணர்ச்சிவயமான ஆளுமையின் இடம். தன்இயக்கம், புறவயத் தூண்டுதலுக்கான உடலின் எதிர்வினை என்பனவற்றை அமைக்டிலா கவனித்துக்கொள்கிறது. திடீரென பலத்த ஒலி கேட்டால் நாம் பதறுகிறோம். உடலின் இந்த எதிர்வினையை அமைக்டிலா தூண்டுகிறது. பலத்த ஒலி, திடீர் நிகழ்வுகள், இதயத் துடிப்பை அதிகமாக்கி, ரத்தத்தை அதிக அழுத்தத்தில் உடலெங்கும் செலுத்தி, பரபரப்பூட்டும் அட்ரினலின் போன்ற ஹார்மோன்களை சுரக்கவைத்து… கிட்டத்தட்ட, கற்கால மனிதன், சிங்கத்தைப் பார்த்தால் ஓட முயற்சிக்கும் இயக்கத்துக்கு நம்மைத் தயாராக்குகிறது. இதன் வேலை இன்றும் தொடர்கிறது. என்ன, இப்போது சிங்கம் வரத் தேவையில்லை, ஹலோ என்றாலே அரைமணி நேரம் அறுக்கும் எதிர்வீட்டு ரிடையர்டு சதாசிவம் வந்தால் போதும்.

கடந்த சில ஆயிரம் ஆண்டுகளாக பாலூட்டிகளுக்கு அதிகமாக வளர்ந்த ஒரு பகுதி, பெருமூளை. இதனாலேயே இதற்கு நியோ (புதிய) கார்டெக்ஸ் என்றொரு பெயரும் உண்டு. இதன் முன்புறப் பகுதியை pre frontal cortex என்கிறார்கள். இது, அக, புறவயமான தூண்டுதல்களை, தகுந்த செய்திகளுடன், தர்க்கத்துடன், மட்டுப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளுடன் ஆராய்ந்து, நம்மைச் செயல்பட வைக்கிறது.

எனவே, நமது அறிதலுக்கும், எதிர்வினைகள் உருவாகுதலுக்கும் இரு சாத்தியங்கள் இருக்கின்றன. அமைக்டிலாவின் அட்டகாசம் மற்றும் பெருமூளையின் பாதுகாப்பு.

நமது எதிர்வினை எப்படி, எதன் மூலமாக இருக்க வேண்டும்?

இதற்கு ‘பின்னூட்டம் குறித்தான அறிதல் வேண்டும்’ என்கிறார் டேனியல் கோல்மேன். எனவே பின்னூட்டம் பற்றி முதலில் பார்ப்போம்.

அத்தியாயம் இரண்டில், ‘எங்கே ஓடுகிறேன்? என்ற கேள்வி முதலிலும், எப்படி ஓடுகிறேன் என்பது இரண்டாவதாகவும் இருக்க வேண்டும்’ எனப் பார்த்தோம். இப்போது இரண்டாவது கேள்வியைக் கவனிப்போம்.

இதனை, ‘எப்படி ஓடிக்கொண்டிருக்கிறேன்?’ என்ற தொடர்நிகழ்கால கேள்வியாக அடிக்கடி நம்மையும், நாம் நம்புகிறவர்களையும் கேட்டுக்கொள்ள வேண்டும் எனப் பொருள் கொள்ளலாம். இயங்குவதைவிட, பின்னூட்டம் பெற்று, இயக்கத்தைத் திருத்துவது அவசியம். ‘நல்லாத்தான் போயிட்டிருக்கு’ என்ற நினைப்பு, இருவிதமான தவறுகளை நாம் அறியாமலே செய்விக்கிறது.

ஒன்று, பாதையிலிருந்து சிறிது சிறிதாக நாம் விலகிச்செல்வதை நாம் அறியாமல் போவது. Drifting என்று இதனைச் சுருக்கமாக அழைப்போம்.

எந்த இயந்திரமும், உயிரியும் சீராக ஒரே தளத்தில் எப்போதும் ஒரே மாதிரி இயங்குவதில்லை. அக மற்றும் புறவயக் காரணிகளால், இயக்கம் தடுமாறுகிறது. மாட்டுவண்டிகளில் கட்டப்பட்டிருக்கும் மாடுகள், எங்கு செல்ல வேண்டுமென அறிந்திருந்து, மிகப் பழக்கமான பாதையில் செல்வதாக இருப்பினும், வண்டிக்காரர் அடிக்கடி அவற்றை நேராகச் செலுத்துவதைப் பார்த்திருப்போம். நேராக ஒரே ரோட்டில் செல்ல வேண்டுமென்றாலும், ஓட்டுநர்கள் ஸ்டீரிங் வீலை விட்டுவிடுவதில்லை. பின்னாலும், முன்னாலும் வருபவற்றை, முன்னே பாதையில் இருக்கும் இடர்களை, வளைவுகளைக் கவனித்து ஓட்டவேண்டி இருக்கிறது. இந்தக் கவனம் என்பது ஒரு பின்னூட்டம்.

அதன் விளைவாக நாம் எடுக்கும் எதிர்வினைச் செயல்களை இரு வகையாகப் பிரிக்கலாம். 1. திருத்தமான ஆக்கங்கள், 2. தடுக்கும் விதமான ஆக்கங்கள். (Corrective Action, Preventative action). ஒன்று, ஒரு நிகழ்வின் பின்னான எதிர்வினை; மற்றது, நிகழ்வு வருமுன்னே எடுக்கப்படும் செயல்கள்.

பின்னூட்டங்கள், இவை இரண்டிலும் எது வேண்டுமோ, அதனை சரிவர எடுக்க உதவுகின்றன. நமது கிரகிப்புத் திறன், பின்னூட்டங்களை எடுக்கும் விதத்தைப் பொறுத்தே நமது எதிர்வினைகள் அமைகின்றன. இந்த எதிர்வினைகள்தான் ‘வினையாக’ வந்து முடிகின்றன.

‘நீ பெயிலாப் போவே’ என்று அப்பாவோ, ஆசிரியரோ சொல்கிறார் என்றால், கேட்கும்போது அது ஒரு திட்டு. கொஞ்சம் நமது வகையில் நேராக யோசித்தால், எதிர்மறை உணர்வு சார்ந்த பின்னூட்டம். நாம் இதனை ‘வந்துட்டார்யா, அட்வைஸ் பண்ணறது மட்டுமே வேலை’ என்று சலிப்புடன் எடுக்கலாம், அல்லது ‘என்னைப் பிடிக்கல இவருக்கு, அதான் திட்றாரு’ என்று கோவப்படலாம். இவை இரண்டும், மூளையின் அமைக்டிலா என்ற உறுப்பின் இயக்கம். உணர்ச்சிக் கொந்தளிப்பு நம் சிந்தனையைத் தாக்கினால், அது அமைக்டிலாவின் வேலை!

இந்த இரண்டு சிந்தனையிலும் விலகி, அதே உணர்வுத்தாக்கத்தில் மற்றொன்று செய்யலாம். அது விளக்கம் கேட்கும் கேள்வி. ‘எதைவைத்து இப்படிச் சொல்றீங்க?’ என்ற கேள்வி, நம்மைத் திட்டுபவரிடம் கேட்க வாய்ப்பு இருக்குமானால், அப்படி ஒரு உரையாடல் சாத்தியமானால், தயங்காமல் கேளுங்கள். இது இரு வகையில் பயன்படும்.

ஒன்று, நம் மனத்தில் இருப்பது, ஒரு பகுத்தாய்வுச் சிந்தனையின் வெளிப்பாடான கேள்வியாக வருகிறது. இதன் பதில் ஒரு பின்னூட்டமாக அமையும் வாய்ப்பு இருக்கிறது.

பின்னூட்டத்தின் எதிர்வினை, உணர்வுபூர்வமாக அமைக்டிலாவின் தாக்கமாக அமையும் வாய்ப்பு இப்போது கணிசமாகக் குறைகிறது. கிட்டத்தட்ட 60 சதவீத அமைக்டிலாவின் தாக்கம் குறைவதாகச் சில ஆய்வுகள் சொல்கின்றன. இதன்பின்னும் உணர்வுபூர்வமாக நம் எதிர்வினை அமையும் வாய்ப்பு இருக்கிறதென்றால், செய்ய வேண்டியது... ஆம், நீங்கள் நினைப்பது சரி, ‘ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்?’ என்ற கேள்வியை மீண்டும் தொடுப்பது. இதன் பதில் ஒரு பின்னூட்டம். மீண்டும் கேள்வி, பின்னூட்டம். ஒரு சுழற்சியில், இது போகப்போக, இறுதியில், அவர் அப்படிச் சொன்னதன் காரணம் வேறாக இருப்பதைக் காண முடியும். அல்லது, காரணமே இன்றி அவர் கத்தியதை அவரே உணரவும் வாய்ப்பு இருக்கிறது.

எல்லா உரையாடல்களும் இப்படி எம்.ஜி.ஆர். பட முடிவுபோல ‘சுபம்’ என முடிந்துவிடாது. வாக்குவாதமும், விவாதமுமாகத் தொடர வாய்ப்பு இருக்கிறது. இது எதிராளியின் அமைக்டிலாவின் ஆதிக்கத்தையும் பொறுத்தது. எனவே, பின்னூட்டத்தின் பின் நிற்கும் நிலையைச் சற்றே நிதானமாக நோக்குங்கள். எதிரே இருப்பவர் காட்டுத்தனமாக, சற்றும் தர்க்கமில்லாமல் கத்திக்கொண்டே போனால், விவாதத்தைத் தொடர வேண்டாம். ஏனெனில், தேவையற்ற விவாதத்தில் வெற்றிபெற்றவர் என எவருமில்லை.

மற்றொன்று, நமது கேள்வி, நிதானமாகப் பகுத்தாய்ந்து, தர்க்கத்தின் வழியாக வரும் பரிமாற்றமாக வெளிப்படுகிறது. இப்படிக் கேட்பதற்கு மூளையின் Pre frontal cortex வேலை செய்கிறது. இது, தர்க்கத்தின் இயங்குதளம். இதன்மூலம் வரும் பரிமாற்றங்கள், நம்மை உணர்ச்சியில் பொங்காமல் அமைதியாக நடந்துகொள்ளவைக்கும். எனவே, நாம் பிறரது சொற்களால், நடத்தையால் தூண்டப்பட்டாலும், நிதானம் இழக்காமல் செயல்படும் வாய்ப்பு அதிகம். ஒன்றும் பெரிதாகச் செய்துவிட முடியாவிட்டாலும், குறைந்தபட்சம், அநாவசியமான சொற்களைப் பேசவோ, நடந்துகொள்ளவோ மாட்டோம். அந்த அளவுக்குப் பாதிப்பு தவிர்க்கப்படும்.

பின்னூட்டங்களின் ஆற்றலைப் புரிந்துகொள்ள, நம்மைப் பற்றிய சுயஉணர்வு நிலை அவசியம். ‘நான் ஒரு பின்னூட்டத்தை எதிர்பார்க்கிறேன்’ என்ற நினைப்பே, நமது அமைக்டிலாவை சற்றே அழுந்தச் செய்துவிடும். நிதானத்துடன் நமது நிலைப்பாடு இருக்கும்போது, எதிர்வினைகள் தர்க்கரீதியில், கட்டுப்பாடான உணர்வுடன் வெளீப்படுகிறது. நேராக யோசிப்பதன் ஒரு முக்கிய நிலை இது.

இது மற்றொரு கேள்வியைக் கொண்டுவருகிறது. நமது மூளையின் கார்டெக்ஸின் முன் பகுதி எப்போதுமே, தர்க்க நெறியில், பின்னூட்டத்தை உள்வாங்கிச் சரியாகச் செயல்பட, சிந்திக்கவைக்கிறதா? அமைக்டிலாவை விடுத்து, கார்டெக்ஸின் முன்பகுதி வழியாக எதிர்வினையைக் கொண்டுவரும் ஆளுமையை வளர்ப்பது சாத்தியமா? அப்படி வளர்க்க என்ன உத்தி இருக்கிறது?

இன்னும் சில எதிரிகளை அடையாளம் கண்டபின், இதுபற்றி நேராக யோசிப்போம்.

]]>
அமைக்டிலா, மூளை, பின்னூட்டம், brain, amygdala https://www.dinamani.com/junction/nera-yosi/2017/oct/28/குவியத்தின்-எதிரிகள்-2-பின்னூட்டமற்ற-போக்கு-2796909.html
2792340 ஜங்ஷன் நேரா யோசி குவியத்தின் எதிரிகள்: 1. புகார் சுதாகர் கஸ்தூரி. Saturday, October 21, 2017 12:00 AM +0530  

‘‘போன வாரம் இடைவிடாம 16 மணி நேரம் வேலை பாத்திருக்கேன். இன்னிக்கு பாஸ் ‘வேலை இன்னும் முடியலை’ன்னு திட்டறாரு. ஷில்ப்பாகிட்ட புது ப்ராஜெக்ட் கொடுக்கறவனுக்கு, அட்லான்டா ப்ராஜெக்டை முடிச்சுக்கொடுத்தவ யாருன்னு தெரியலையா? கொஞ்சம் வெள்ளையா இருந்தா போதும், வழிவானுங்க” - இவை சகஜமாக ஒரு மென்பொருள் கம்பெனியின் காபி டேபிளில் பேசப்படும் சொற்கள்.

சிலவற்றில் உண்மை இருக்கக்கூடும். ஆனால், மனிதவளத் துறையில் கேட்டால் லேசாகச் சிரிப்பார்கள். அவர்களில் பலருக்குத் தெரிந்த ஒரு சொற்றொடர், “அனைவரும், தன்னைத் தவிர மற்ற யாரும் கம்பெனிக்குத் தேவையில்லாதவர்கள் என்று கருதுகிறார்கள்” (Everyone thinks the other person is a white elephant).

“நான் பல தியாகங்கள் செய்கிறேன். ஆனால், மற்றவர்கள் ஒன்றும் செய்யாது முன்னேறிச் செல்கின்றனர்”.

இதனை Self evaluation error என்கிறார் தோப்லி என்ற அறிஞர். நம் திறமை குறித்த சுயஉறுதி அவசியம். ஆனால், மேலே சொன்னது சரியான காரணங்கள் இல்லாத, வெறும் தற்புகழ்ச்சி சிந்தனைகளே. சுயஉறுதியின் வளர்ச்சி, வலி நிறைந்த பாதைகளில் செல்லத் திடம் கொள்வதிலும், வலிகளைத் தாங்கி, உறுதியுடன் மேலே செல்வதிலும் இருக்கிறது. ஆனால், தற்புகழ்ச்சி சிந்தனை என்பது, சிறு சிறு வெற்றிகளில் அதிகமாகத் தன்னைப் பாராட்டிக்கொள்வதில் வரும் களிப்பு. அது தரும் எதிர்பார்ப்புகள் தோல்வி அடையும் நேரத்தில், அதிர்ச்சியும் கோபமும் விரக்தியும் ஒருங்கே பொங்குகின்றன. இதன் வெளிப்பாடு - புகார்.

மிக நிதானமாக, நமது உணர்ச்சிகளை அகற்றி, நாம் என்ன நினைக்கிறோம் என்பதை எழுதிவிட்டு, சில மணி நேரம் கழித்து வாசித்துப் பார்த்தால், பல கோணங்களில் சிந்தை புறப்படும். அதில் உணர்வற்ற, தர்க்கரீதியான சிந்தனையை, சுயஉணர்வோடு பிடித்து அதில் சிந்திக்க வேண்டும். இந்தச் சிந்தனைக்கு குவியம் மட்டுமல்ல, உணர்வுக் குப்பைகளை அகற்றும், சுயஉணர்வும் அவசியம்.

நண்பர்களிடம் ஆற்றாமையைச் சொல்லிப் புலம்பும்போது, புகார்களே மிஞ்சி இருப்பதைப் பார்க்கலாம். அதில் இயலாமை, கோபம், பொறாமை போன்றவை முன் நிற்கும். புகார் செய்யும் முன், ஒருமுறை ‘‘இதைச் சொல்லத்தான் வேண்டுமா?” என்று நினைப்பது நல்லது. என்ன சொல்கிறோம் என்பது மட்டுமல்ல, யாரிடம் சொல்கிறோம் என்பதும் முக்கியம். ‘இவனிடம், இதனைச் சொல்வதால் என்ன பயன்?’ என்ற ஒரு கேள்வி போதும். புகார்கள் சொல்வது பெருமளவில் நின்றுவிடும்.

‘என் மனக்குறையைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளக் கூடாதா?’ என்று கேட்கலாம். தாராளமாகச் செய்யலாம். மேலே சொன்ன அந்த ஒரே கேள்வியை நம்மிடம் கேட்டுக்கொண்டு, அதற்குச் சாதகமான பதில் என்றால், குறையைப் பகிர்வதில் தவறே இல்லை. இதனால்தான், நிபுணர்களிடம் கவுன்சிலிங் செல்வது அவசியம். வீட்டில், பெரியவர்களிடம் குறைகளைச் சொல்வது நல்ல பழக்கம். அவர்களால் உங்களது தொழில்ரீதியான புகார்களுக்குப் பதில் சொல்ல முடியாததாக இருக்கலாம். நம்முடைய பெரும்பாலான புகார்கள் மனித உறவுகள் சார்ந்தவையே. அதனால், அவற்றை அவர்களால் தெளிவாக அடையாளம் கண்டு ஒரு தீர்வை, அல்லது தீர்வுக்கான வழிமுறையை நிச்சயம் சொல்லமுடியும்.

புகார்களில் 90 சதவீதம் உண்மை இல்லை. ஏனெனில், புகார்களுக்கு ஒரு நிகழ்வு என்பது சாக்கு மட்டுமே. அதன்பின் நிற்பது மனத்தின் விகார எண்ணங்களே. புகார் செய்யும்போது, மனது நாம் சொல்வதை நம்புகிறது. மீண்டும் மீண்டும் அதுபோன்ற நிகழ்வுகளில்தான் நம்பியதைப் பொருத்திப் பார்க்கிறது. அது கொஞ்சம்போல உண்மையாக இருக்கும் என்று தோன்றினாலும் போதும்; தன் நம்பிக்கையை உறுதிப்படுத்திக்கொள்கிறது. “அந்த ஆளு ஷில்பாவோட சிரிச்சி சிரிச்சிப் பேசும்போதே நினைச்சேன்டி. இது இப்படித்தான் வந்து முடியும்னு. அவளுக்கும் வெக்கம் இருக்கா பாரு” - இறுக்கமடைந்த மனம், மென்மேலும் புகார்களைச் சொல்லவைக்கிறது.

இந்த, புகார் – சிந்தனை – புகார் என்ற விஷச் சுழற்சியை அறுத்துவிடுவது எளிதல்ல.

தவறான பாதையில் செல்லும் வண்டி, மிக விரைவாகச் செல்வதால் மட்டும் இலக்கை அடைந்துவிட முடியாது.

நான் நன்கு ஓடுகிறேன் என்று மட்டும் சிந்தித்துவிட்டால், குழப்பமே மிஞ்சும். எங்கே ஓடுகிறேன் என்ற கேள்வி முதலிலும், எப்படி ஓடுகிறேன் என்பது இரண்டாவதாகவும் இருக்க வேண்டும்.

நேரத்தில் முடித்துக்கொடுக்க வேண்டிய ஒரு வேலையை எடுத்துக்கொள்வோம். வேலையில் முக்கியமானது, உற்பத்தித் திறன் (productivity) மற்றும் தரம் (quality). இரு நாட்களுக்குள் செய்ய வேண்டிய ஒன்றை நான்கு நாட்களுக்கு இழுத்தடித்துச் செய்வதிலும், இரு நாட்களுக்குள் செய்துகொடுத்த பணியில் இன்னும் இரு நாட்கள் தவறுகளைச் சரிசெய்ய வைப்பதும் கம்பெனிகளுக்கு உதறல் கொடுக்கும்.

‘நான் நல்லாத்தான் வேலை செய்கிறேன், செய்வேன்’ என்ற சுயஅனுமானத்தைவிட, ‘இந்த வேலைக்கு எது தேவை, எப்போது தேவை’ என்பது குறித்த தெளிவு நம்மிடம் இருக்கிறதா? என்று கேட்டுக்கொள்வது பொருத்தமாக இருக்கும்.

இதற்கு சுயஉணர்வு அவசியம். மனக் குவியத்தின் ஒரு அங்கமாக சுயஉணர்வைச் சொல்லலாம். சுயஉணர்வும், வெளி நிகழ்வுகளைத் தெளிவாக அறிதலும்; புகார்களை மட்டுப்படுத்துவது மட்டுமல்ல, தெளிவாகச் சிந்திக்கவும் உதவும். இதற்குப் பின்னூட்டம் என்பது கைகொடுக்கிறது.

(தொடரும்)

]]>
சுய உணர்வு, சுய மதிப்பு, சுய உறுதி, அலுவலகம், முன்னேற்றம், வேலை, job, office, self evaluation, project https://www.dinamani.com/junction/nera-yosi/2017/oct/21/குவியத்தின்-எதிரிகள்-1-புகார்-2792340.html
2789719 ஜங்ஷன் நேரா யோசி நேரா யோசி சுதாகர் கஸ்தூரி. Saturday, October 14, 2017 12:00 AM +0530  

வெளியே வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. வெப்பநிலை முப்பத்திரண்டு டிகிரி செல்சியஸ் என்றும், புழுக்கம் 75 சதவீதமென்றும் நிலவிய கொடுமையான கோடை நாள் அது. கருத்தரங்கு அறையின் கதவைத் திறந்துகொண்டு வந்த பெண்மணி, அங்கு இருந்த மூன்று பேருக்கும், சூடான காபியை மேசையில் சத்தமெழாமல் வைத்துவிட்டு அகன்றாள். மூவரும் அவள் வந்தததைக்கூடக் கவனிக்காமல், வியர்வை வழிய, தங்கள் முன்னே இருந்த திரையில் ஓடிக்கொண்டிருந்த எண்களையும், அவற்றின் நிறத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, தங்கள் குறிப்பேடுகளில் பென்ஸிலால் எழுதிக்கொண்டிருந்தார்கள். ஏஸி நின்றுபோயிருந்தது.

மும்பையின் பவாய் பகுதியில், பிரம்மாண்டமான அலுவலகக் கட்டடம் ஒன்றின் ஏழாவது மாடியில் அமைந்திருந்த அந்தப் பன்னாட்டு நிறுவனத்தில் மின்சாரம் இல்லாமல் இல்லை. அந்தக் கருத்தரங்கு அறை தவிர, அனைத்து அறைகளிலும், தங்குதடையின்றி ஏ.ஸி. ஓடிக்கொண்டிருந்தது.

இந்தியா தவிர பல நாடுகளிலும் தங்கள் இயக்கத்தைக் கொண்ட அந்நிறுவனத்தில் வேலைக்குச் சேருவது என்பது குதிரைக் கொம்பு. பிற கல்லூரிகளில் வேலைக்கு ஆளெடுக்க வரும் கம்பெனிகள் மூன்றரை லட்சம் என வருட ஊதியம் பேசும்போது, இவர்கள் இருபத்தைந்து லட்சம் என்பார்கள். ப்ரோக்ராமிங் அறிவும், மிகச் சிறந்த தன்னாளுமையும் அவர்களுக்குத் தலையாயத் தேவைகள்.

“எங்கள் நிறுவனத்தின் முக்கியப் பிரிவுகளில் முதலீட்டு வங்கி முதன்மையானது. கொலம்பியாவில் பருவத்துக்கு முந்தி மழை பெய்தது என்று செய்தி வந்தால், நீங்கள் பார்க்காமல் போய்விடலாம். ஆனால் நாங்கள் நகம் கடித்து நிற்போம். காபிக் கொட்டைகள் தகுந்த அளவு பயிராகாது போனால், உலகச் சந்தையில் காபியின் விலை கிடுகிடுவென ஏறும். அதில் பணத்தை முடக்கிவைத்திருக்கும் எங்களுக்குப் பல மில்லியன்கள் நஷ்டப்படும். இதனைச் சரிகட்ட எங்கு முதலீடு செய்திருக்கிறோம் என்று பார்க்க வேண்டும். கரீபியன் நாடுகளில் கரும்பு அமோக விளைச்சல் என்றால், அங்கு உடனே தாவ வேண்டும். பல மில்லியன்களை நொடிக்கு நொடி கவனித்து வர வேண்டிய அழுத்தமான பணி அது” என்றார் அதில் பணி செய்யும் ஈஸ்வரன்.

‘‘ப்ரோக்ராமிங் அறிவும், தருக்கமும் உள்ள இளைஞர்களை எடுத்து, தகவல்களையும், புள்ளிவிவரங்களையும் அறிந்து, அதில் மறைந்திருக்கும் செய்தியைப் பாலில் இருந்து நெய் எடுப்பதைப்போல எடுக்கப் பயிற்சி கொடுக்கிறோம். இந்த இளைஞர்கள்தாம் எங்கள் எதிர்கால ஆளுமைகள். இதற்குப் போதிய மனக்குவியமும், மன ஆளுமையும் இருக்கிறதா என்று முதலிலேயே சோதித்துவிடுகிறோம்” என்றார், மனிதவளப் பிரிவின் தலைவர் ஜூலியா டிசொஸா.

அந்த வருடம், மூன்று பேர் மட்டுமே கடைசிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். கருத்தரங்கில் தனித்தனியே கணினிகள் கொடுக்கப்பட்டு, திரையில் ஒருவருக்கு, காபிக்கொட்டையின் விலை நொடிக்கு நொடி மாறி வருவதையும், மற்றொருவருக்கு சர்க்கரையின் விலை உலகச் சந்தையில் மாறி வருவதைக் காட்டுகிறார்கள். மூன்றாமவருக்குக் கச்சா எண்ணெய். மூவருக்கும் சில செய்திகள் திரையின் கீழே ஓடிக்கொண்டிருக்கின்றன. ‘சிரியா மீது ரஷ்யா போர் தொடுக்கிறது. ஃபிஜித் தீவில் தொழிலாளர்கள் போராட்டம்’ – இது, கச்சா எண்ணெய் கவனிப்பவரின் திரையில் ஓடுகிறது. காபி கவனிப்பவரின் திரையில் ஓடிய செய்தி – ‘உலகளவில் கச்சா எண்ணெய் விலை சரிவைச் சரிகட்ட, ஒபெக் நாடுகளின் கூட்டமைப்பின் அறிக்கை நாளை வெளிவருகிறது’.

மூன்றரைக்குத் திரை அணைந்துபோக, அடுத்த கட்டத்துக்கு அவர்கள் காத்திருக்கிறார்கள். நான்கு மணி வரை அழைப்பு வராத நிலையில், அவர்கள் தங்களுக்குள் பேசத் தொடங்குகிறார்கள். இதனை, ஒரு சி.சி.டிவியில் சில சீனியர் மேனேஜர்கள் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள்..

நாலரை மணியளவில், அவர்களது தனிப்பட்ட இன்டர்வியூ முடிகிறது. அன்று இரவே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. காபி விலையைக் கவனித்தவர் தேர்ச்சிபெறவில்லை. சர்க்கரையைக் கவனித்தவர் அடுத்த நிலைக்குத் தேறுகிறார். கச்சா எண்ணெய் விலையைக் கவனித்த பெண்ணை அழைத்து “நீ இதில் இப்போது தேர்ச்சி பெறவில்லை; ஆனால், மென்பொருள் சோதனை செய்யும் பிரிவில் வேலை இருக்கிறது” என்கிறார்கள். அப்பெண் மறுத்து, இது என் தகுதிக்குச் சரியான வேலையில்லை, மன்னிக்கவும் என்று போய்விடுகிறார்.

சரி, மனக்குவியம் என்பதற்கும் இந்த நேர்முகத் தேர்வுக்கும் என்ன தொடர்பு?

ஒரு வேலையைச் செய் என்று ஆணை வரும்போது, மூளை இரு வேலைகளைச் செய்கிறது. தனக்குப் பிடிக்காத, தேவையில்லாதது எனக் கருதுவதைக் கவனத்திலிருந்து விலக்கிவைக்கிறது. உணர்ச்சியுடன்கூடிய நிலையில் “இதனைக் கவனி” என்று அட்ரீனலின், நார் எபினெஃப்ரின் போன்ற ஹார்மோன்களைத் தூண்டிக்கொண்டு, பதற்றத்துடன் தனக்கு இட்ட வேலையைக் கவனிக்க எத்தனிக்கிறது. காபி விலையைப் பார்ப்பவர், கீழே ஓடிய கச்சா எண்ணெய் பற்றிய செய்தியைக் கவனிப்பதில்லை. அவர் கண்ணில் படுகிறது, ஆனால் கவனத்தில் செல்வதில்லை.

கவனம் என்பது மனக்குவியத்திலிருந்து வேறுபட்டது. Focus என்பது, கவனம் போன்ற பல கட்டங்களைத் தன்னுள் கொண்டது. கவனம் சிதறுதல் ஒரு கீழ்ப்படி நிலை.

வாழ்வில் ஒவ்வொரு படியிலும் கவனம் தேவை. அதே நேரத்தில், மேலதிகத் தகவல்களை நாம் அறிய வேண்டுமென்பதும் ஒரு முரண். ‘கண்டது கற்கப் பண்டிதனாவான்’ என்ற அதே மூத்தோர் சொன்ன மொழிதான், “பலமரம் கண்ட தச்சன், ஒரு மரமும் வெட்டான்”. இதில் எது சரி? இரண்டும் சரிதான். எப்போது யாருக்கு, எது தேவைப்படும் என்ற தேர்ந்தெடுத்தலில் நம் அறிவும் முதிர்வும் இருக்கிறது.

குவியம் என்பதையும், கவனம் என்பதையும் நாம் குழப்பிக்கொண்டுவிடுகிறோம். 19 இன்ஞ் திரையில், கீழே ஓடிக்கொண்டிருக்கும் செய்தி அவர்கள் கண்ணில் படாமலோ, அவர்கள் நினைவில் தேங்காமலோ இல்லை. அதிகப்படித் தகவலை, வேண்டாத ஒன்றென்றால், மூளை தனது உள்ளறைகளில் சேமித்து வைப்பதில்லை. அது மிஞ்சிப்போனால் இரண்டு மணி நேரம் நினைவில் இருக்கும். இந்தக் கவனம் குவியத்தின் வெளிப்பாடு. எந்த அளவுக்குக் குவியம் செறிவடைகிறதோ, அந்த அளவுக்குக் கவனம் பலப்படும்.

ஃபிஜியில் தொழிலாளர் போராட்டம் என்பதைப் பார்த்த இளைஞன் அதனைத் தெரிவித்திருந்தால், சர்க்கரை விலையைக் கவனித்தவன், உள்ளே வாங்கியிருக்க முடியும். அவனது விலை அவதானிப்பு மாறியிருக்கும். இதுபோலவே, கச்சா எண்ணெய் கதையும். தங்களுக்குள் அவர்கள் ரிலாக்ஸாக பேசிக்கொண்டிருக்கையில், தேவையான தகவல்களைத் தங்கள் குழுவுக்குத் தந்து உதவுகிற மனப்பாங்கு இருக்கிறதா என்பதைக் கவனிக்கிறார்கள். ஒருவர் கவனத்தில் இருந்து ஆவியாகிப்போகிற செய்தி, மற்றவருக்கு உதவக்கூடும். இந்தப் பரந்த மனப்பாங்கு தன்னாளுமைத் திறத்தின் ஓர் அங்கம். தன் எல்லைகளை அறிந்துகொண்டு, பிறரிடம் தனக்கு வேண்டிய தகவலைப் பெறுகிற பண்டமாற்று வித்தையைத் தன்னகத்தே கொண்டவர்கள் எந்தப் பணிக்கும் தேவையானவர்கள். இதனைப் பயிற்சி மூலம் கொண்டுவர, கம்பெனிகள் பெரும்பாடு படவேண்டி இருக்கும்.

தன் விருப்பம், தேவைகளை அறிந்து நிற்பவர்களால் மட்டுமே தகவல்களை அலசித் தேக்கி, பிறருக்கு அளித்து முன்னேற முடியும். அந்தப் பன்னாட்டு நிறுவனம், மூன்று பேருக்கு அந்த ஒருநாள் செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா? மூச்சைப் பிடித்துக்கொள்ளுங்கள்… இரண்டு லட்சம். இத்தனைக்கும் ஏஸி ஓடவில்லை.

இந்த இரண்டு லட்சம், பல கோடிகளை சம்பாதிக்கவோ, இழக்கவோ செய்துவிடும் என்பதால், அதனைச் செலவாகக் கருதாமல், முதலீடாக அந்நிறுவனத்தின் மனிதவளத் துறை கருதுகிறது.

நாம் நல்ல வேலைக்குச் சேர்வதென்பதும், தொழிலில் வளர்வதும் புத்திசாலித்தனமாகப் பேசிவிடுவதிலோ, நம் எடுத்திருக்கும் மதிப்பெண்களிலோ மட்டுமல்ல; நமது ஒழுங்கில், சில விஷயங்களில் தனித்துக் காணப்படும் குவியம், கவனம், சுயக் கட்டுப்பாடுகளிலும் இருக்கிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மனக்குவியம், கவனம், ஒழுங்கு பற்றி மேலே பார்க்கும் முன், மனக்குவியத்தின் சில எதிரிகளைப் பார்த்துவிடுவோம்.

(தொடரும்)

]]>
யோசனை, நேர்முகத் தேர்வு, இன்டர்வியூ, வேலை, அலுவலகம், interview, job, office, company, skills https://www.dinamani.com/junction/nera-yosi/2017/oct/14/நேரா-யோசி-2789719.html