Dinamani - தலையங்கம் - https://www.dinamani.com/editorial/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3196039 தலையங்கம் விம்பிள்டன் வெற்றிகள்! ஆசிரியர் Saturday, July 20, 2019 01:37 AM +0530  

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய ஊடகங்களில் தரப்பட்ட முக்கியத்துவம், வழக்கம்போல டென்னிஸூக்குத் தரப்படவில்லை.

ம்பிள்டனில் ரோஜர் பெடரரும், ரபேல் நடாலும்தான் உலகத்தின் கவனத்தை ஈர்ப்பது வழக்கம். கடந்த 10 ஆண்டுகளில் பெடரர்-நடால் இரட்டையர்களின் முக்கியத்துவத்தை வேறெந்த விளையாட்டு வீரராலும் பின்னுக்குத் தள்ள முடிந்ததில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் அவர்கள் இருவரையுமே திணறடித்த பெருமை நோவக் ஜோகோவிச்சுக்கு மட்டுமே உண்டு. 

இந்த முறை உலகின் முதல் நிலை ஆட்டக்காரரான நோவக் ஜோகோவிச் விம்பிள்டன் பட்டத்தை வென்று, பெடரர்-நடால் ரசிகர்களை மிகப் பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதற்கு முன்னால் இதேபோல 2008-இல் பெடரரும்-நடாலும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கலந்துகொண்டபோது அவர்களில் கோப்பையை வெல்லப் போவது யார் என்கிற பரவலான எதிர்பார்ப்பு உலகமெங்கும் இருந்தது. அவர்கள் இருவரும் இந்த முறை விம்பிள்டன் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் கலந்துகொண்டனர். ஆனால், இந்த முறை அவர்களுக்கு இடையேயான போட்டிக்காக அல்ல, ஜோகோவிச் எழுப்பிய சவாலை எதிர்கொள்வதற்காக. 

கடந்த 11 ஆண்டுகளில் ஜோகோவிச் தன்னுடைய கிராண்ட் ஸ்லாம் வெற்றி எண்ணிக்கையை ஒன்றிலிருந்து 15-ஆக அதிகரித்துக் கொண்டு பெடரருக்கும், நடாலுக்கும் போட்டியாக சர்வதேச டென்னிஸில் அசைக்க முடியாத வீரராக உயர்ந்திருந்தார். 

பெடரருக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிச் சுற்று ஆட்டத்தில், 5 செட்டுகள் விளையாடி வெற்றி பெற்று தனது ஐந்தாவது விம்பிள்டன் பட்டத்தைக் கைப்பற்றினார் ஜோகோவிச். 

இப்போதும்கூட, நடாலும் பெடரரும்தான் இரண்டாவது, மூன்றாவது சர்வதேச டென்னிஸ் வீரர்களாக தர நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இருவருமே உச்சகட்ட திறமையுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருந்தும்கூட, ஜோகோவிச் அவர்கள் இருவரையும் மூச்சிரைக்க வைத்து வெற்றி கண்டிருப்பதைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

2011-இல் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டிதான் ஜோகோவிச்சின் இரண்டாவது பெரிய சர்வதேச போட்டி. அப்போது தொடங்கி, ஒன்றுவிட்டு ஒன்று என்பதுபோல அவரது வெற்றிப் பயணம் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது. 34 சர்வதேச போட்டிகளில் 15 போட்டிகளில் ஜோகோவிச் வெற்றி பெற்றிருக்கிறார். இதே காலகட்டத்தில் பெடரர் நான்கு போட்டிகளிலும், நடால் ஒன்பது போட்டிகளிலும் மட்டுமே வெற்றி அடைந்திருக்கின்றனர். இதுவரை ஜோகோவிச் வெற்றி பெற்றிருக்கும் 16 கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில், 12 போட்டிகளில் பெடரரையோ, நடாலையோ தோற்கடித்திருக்கிறார் என்பதைக் குறிப்பிட வேண்டும்.

லண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விம்பிள்டன் இறுதி ஆட்டம் ஒருவகையில் டென்னிஸ் ரசிகர்களுக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. நான்கு மணி நேரம் 57 நிமிஷங்கள் நடந்த இந்த ஆட்டம்தான் இதுவரை நடந்த விம்பிள்டன் இறுதி ஆட்டங்களிலேயே மிக அதிகமான நேரம் விளையாடப்பட்ட ஆட்டம். வெற்றி பெற்ற ஜோகோவிச்சும், இரண்டாம் இடம்பிடித்த ரோஜர் பெடரரும் ஆட்டம் முடிந்து மைதானத்தில் இருந்து வெளியேறும்போது இரண்டு பேரும் சேர்ந்து 36 கிராண்ட் ஸ்லாம் வெற்றிகளைப் பகிர்ந்து கொண்டிருந்தனர். ரபேல் நடால் 18 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார். 

1967-இல் ஆஸ்திரேலிய வீரரான ராய் எமர்சன் 12 கிராண்ட் ஸ்லாம் வெற்றி பெற்று உலக சாதனை படைத்தார். அந்தச் சாதனையை 33 ஆண்டுகளுக்குப் பிறகு 2000-ஆம் ஆண்டில் விம்பிள்டன் கோப்பையை வென்று பீட் சாம்ப்ராஸ் முறியடித்தார். ரோஜர் பெடரர், அமெரிக்கரான பீட் சாம்ப்ராஸின் சாதனையை ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு விம்பிள்டனில் தனது 15-ஆவது கிராண்ட் ஸ்லாம் வெற்றியின் மூலம் முறியடித்தார். பெடரருக்கு இப்போது 38 வயதாகப் போகிறது. இன்னும் எத்தனை நாள், எத்தனை வெற்றிகளை அவரால் ஈட்ட முடியும் என்கிற கேள்வி எழுகிறது. 

பெடரரின் சாதனையை 32 வயது ஜோகோவிச் முறியடிக்கக் கூடும். செர்பிய நாட்டைச் சேர்ந்த ஜோகோவிச் எல்லா வகையான டென்னிஸ் மைதானங்களிலும் விளையாடும் திறமை பெற்றிருப்பதுதான் அதற்குக் காரணம். 

டென்னிஸ் விளையாட்டில் "ஹார்ட் கோர்ட்', "கிராஸ் கோர்ட்' என இரண்டு வகை மைதானங்கள் உண்டு. "ஹார்ட் கோர்ட்'டில் தன்னிகரல்லாத வீரராக நடால் இருந்தாலும்கூட, ஆண்டுதோறும் ஒரேயொரு கிராண்ட் ஸ்லாம் ஆட்டம்தான் "ஹார்ட் கோர்ட்'டில் நடைபெறும். மேலும், ஜோகோவிச்சைவிட நடால் ஒரு வயது மூத்தவர் என்பதால் ரோஜர் பெடரரின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு 32 வயது ஜோகோவிச்சுக்குத்தான் அதிகம் உள்ளது. 

பெண்கள் ஆட்டத்தில் செரீனா வில்லியம்ûஸ 6-2, 6-2 என்ற நேர் செட்டுகளில் 56 நிமிஷங்கள் மட்டுமே நடந்த ஆட்டத்தில் தோற்கடித்து தனது முதல் விம்பிள்டன் கோப்பையை வென்றிருக்கிறார் ருமேனியாவைச் சேர்ந்த 27 வயது சிமோனா ஹலேப். மகப்பேறுக்குப் பிறகு மீண்டும் விளையாட வந்த 37 வயது செரீனா எதிர்கொள்ளும் மூன்றாவது தொடர் தோல்வி இது. அவர் தனது தோல்வியை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு, முதல்முறையாக  வெற்றி பெற்றிருக்கும் சிமோனா ஹலேப்பை ஆரத்தழுவி பாராட்டியது ஏனைய விளையாட்டு வீரர்களுக்கு முன்னுதாரணம் படைக்கிறது!

]]>
https://www.dinamani.com/editorial/2019/jul/20/விம்பிள்டன்-வெற்றிகள்-3196039.html
3195531 தலையங்கம் நொறுங்கும் நகரங்கள்! ஆசிரியர் Friday, July 19, 2019 03:53 AM +0530  

எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தில்லியின் குதுப்மினாரும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெருவுடையார் கோயில் கோபுரமும் கோடை வசந்தம் மழை பல கண்டும், அதிகம் உணரப்படாத எத்தனையோ நிலநடுக்கங்களை எதிர்கொண்டும்கூட எந்தவித பாதிப்பும் இல்லாமல் உயர்ந்து நிற்கின்றன. ஆனால், நவீன கட்டடக்கலை வல்லுநர்களால் பொறியியல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் கட்டப்படும் கட்டடங்கள் நொறுங்கி விழுகின்றன. 

உலகின் பல்வேறு நாடுகளில் மேம்பாலங்களும், கட்டடங்களும் இடிந்து விழுந்திருக்கின்றன என்றாலும், இந்தியா எதிர்கொள்ளும் நிகழ்வுகள் அனைத்துமே கவனக்குறைவாலும், போதிய கண்காணிப்பு இல்லாததாலும், ஊழலின் காரணமாகவும் நிகழ்கின்றன என்பதால் இவற்றை விபத்து என்று ஏற்றுக்கொள்ள மனம் ஒப்பவில்லை. 

மும்பை மாநகரத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட பழைய கட்டடம் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை இடிந்து விழுந்ததில் 13-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர். தென் மும்பையில் உள்ள டோங்ரி என்கிற அதிக மக்கள்தொகையுள்ள பகுதியில் இருந்த அந்தக் கட்டடத்தின் இடிந்து விழுந்த பகுதி, முறையான அனுமதியில்லாமல் கட்டப்பட்டிருந்ததாக இப்போது மும்பை மாநகராட்சி தெரிவிக்கிறது. அனுமதியில்லாமல் அந்தப் பகுதி கட்டப்பட்டிருந்ததை இத்தனை நாளும் தெரியாமலோ, தெரிந்தும் அகற்றாமலோ இருந்தது யாருடைய குற்றம் என்று மாநகராட்சியை யாரும் கேள்வி கேட்பதில்லை.

நான்கடுக்கு கட்டடம் காலை 11.40 மணிக்கு இடிந்து விழுந்திருக்கிறது. இது குறித்துத் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது 12.10 மணிக்கு. நவீன தகவல் தொடர்பு யுகத்தில் விபத்து குறித்து தெரிந்துகொள்வதற்கு ஏறத்தாழ அரை மணி நேரம் தேவைப்படுகிறது என்று சொன்னால் நம்பும்படியாகவா இருக்கிறது?

கீழ் மத்திய தரப் பிரிவினர் வாழ்ந்துவந்த கட்டடம் அது. ஒவ்வொரு அடுக்கிலும் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் தங்கி இருந்தன. ஏறத்தாழ 15 குடும்பங்கள் வாழ்ந்து வந்த அந்தக் கட்டடம், குடியிருப்பதற்கு ஏற்றதல்ல என்றும், இடிக்கப்பட வேண்டியது என்றும் ஓராண்டுக்கு முன்பே எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தும், யாரும் அங்கிருந்து அகற்றப்படவில்லை.

"கேசர்பாய்' என்று பெயரிடப்பட்டிருந்த அந்தக் கட்டடம், 2018-இல் காலியாக விடப்பட்டு விட்டதாக மாநகராட்சி ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கட்டடம் அப்படியே இருந்திருக்கிறது. அதில் குடியிருப்போர் யாரும் காலி செய்யாமல் இருந்திருக்கிறார்கள். அந்தக் கட்டடத்தில் குடியிருப்போருக்கு வேறு இடம் வழங்கப்படாததால் அவர்களைக் காலி செய்ய வற்புறுத்த முடியவில்லை என்பது சட்டப்பேரவை உறுப்பினர் அமின் படேலின் வாதம். 

அனுமதியில்லாத கட்டடங்களில் சட்டவிரோதமாக குடியிருப்போருக்கு எல்லாம் மாற்று இடவசதி செய்து கொடுத்துத்தான் பழைய கட்டடங்களைக் காலி செய்ய வேண்டும் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. எந்தவோர் அரசாங்கத்தாலும் அந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது. 

"கேசர்பாய்' என்கிற கட்டடம், ஓர் அறக்கட்டளைக்குச் சொந்தமானது. அந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு அங்கே புதிதாகக் கட்டடம் எழுப்ப அறக்கட்டளை முயற்சித்தபோது, குடியிருந்தவர்கள் மிக அதிகமான இழப்பீட்டுத் தொகை கேட்டு வற்புறுத்தியதன் விளைவுதான் இப்போது கட்டடமும் இடிந்து, 13-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. 

இப்படி பழைய கட்டடங்கள் இடிந்து விழுவது மும்பைக்குப் புதிதொன்றுமல்ல. 2013-இல் மும்புரா பகுதியில் லக்கி காம்பவுண்ட் கட்டடம் இடிந்து விழுந்ததில் 76 பேர் மரணமடைந்தனர், 64 பேர் காயமடைந்தனர். அதே ஆண்டில் ஜூன் மாதம் மாஹிமிலுள்ள அல்டாஸ் மேன்ஷன் இடிந்து விழுந்ததில் 10  பேர் உயிரிழந்தனர். 2017-இல் ஏற்பட்ட கட்டட விபத்தில் 30 பேர் மரணமடைந்தனர். கடந்த ஆண்டில் காட்கோபரில் இதேபோல  பழைய நான்கு மாடி கட்டடம் ஒன்று நொறுங்கி விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். 

எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையிலுள்ள பழைய கட்டடங்கள் என்று 500-க்கும் மேற்பட்ட   கட்டடங்களை பிருஹான் மும்பை மாநகராட்சி  அடையாளப்படுத்தியிருக்கிறது. ஆண்டுதோறும் பருவமழை அதிகரிக்கும்போது கட்டடச் சுவர்கள் இடிந்து விழுவதும், உயிரிழப்பு ஏற்படுவதும் மும்பையில் வழக்கமாகிவிட்டிருக்கிறது. 

கடந்த பத்தாண்டுகளாகவே இந்தியாவின் நகர்ப்புறங்களில் கட்டட விபத்துகளும், மேம்பால விபத்துகளும்,  தீ விபத்துகளும் சிறிய அளவிலும் பெரிய அளவிலுமாக தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. தேசிய குற்ற ஆவண அமைப்பின் புள்ளிவிவரப்படி, 2001-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான இடைவெளியில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததன் மூலம் மட்டும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,000. 

இந்த விபத்துகளுக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. நகராட்சி அமைப்புகளும், வீட்டு வசதி வாரியங்களும் இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள முடியாமல் (தெரியாமல்) தவிக்கின்றன. பழைய கட்டடங்களின் வாடகையை அதிகரிக்க வீட்டு வாடகைச் சட்டம் அனுமதிக்காமல் இருப்பதும்கூட ஒரு காரணம். கணிசமான வாடகை வருவாய் இல்லாததால் போதுமான பராமரிப்பை கட்டட உரிமையாளர்கள் மேற்கொள்ளாமல் இருப்பதால் கட்டடங்கள் பாதுகாப்பற்றவையாகத் திகழ்கின்றன.

அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் மக்கள்தொகையில் சரிபாதி பேர் நகரங்களில் வாழப் போகிறார்கள். அடுக்குமாடிக் குடியிருப்புகள்தான் புகலிடமாக மாற இருக்கின்றன. பாதுகாப்பற்ற நிலைமை தொடருமானால்... நினைக்கவே நடுங்குகிறது!

]]>
https://www.dinamani.com/editorial/2019/jul/19/நொறுங்கும்-நகரங்கள்-3195531.html
3194689 தலையங்கம் ஜனநாயகத்தின் தோல்வி! ஆசிரியர் Thursday, July 18, 2019 02:10 AM +0530
உச்சநீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்பின் நிழலில் கர்நாடக சட்டப்பேரவை இன்று கூட இருக்கிறது. மாநில ஆளுநரால் முடிவெடுக்கப்பட வேண்டிய பிரச்னையை, தேவையில்லாமல் உச்சநீதிமன்றத்தின் பார்வைக்கு இட்டுச் சென்று கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது மரியாதையைத் தாங்களே குலைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

கர்நாடக சட்டப்பேரவையின் 15 உறுப்பினர்களின் பதவி விலகல் குறித்து முடிவெடுக்கும் உரிமையை பேரவைத் தலைவருக்கு வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 15 உறுப்பினர்களின் பதவி விலகல் குறித்துத் தீர்மானிக்கும் உரிமையை சட்டப்பேரவைத் தலைவருக்கு வழங்கிவிட்டு, அந்த உறுப்பினர்கள் இன்று சட்டப்பேரவையில் நடைபெற இருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள அவர்களைக் கட்டாயப்படுத்தும் உரிமை பேரவைத் தலைவருக்குக் கிடையாது என்று கூறியிருப்பதுதான் தீர்ப்பின் தெளிவின்மை. 

15 உறுப்பினர்களும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் போனால், அதன் உடனடி அரசியல் விளைவுகள் ஆளும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள அரசை பாதிக்கும். சட்டப்பேரவைத் தலைவருக்கும் முழுமையான அதிகாரத்தை வழங்காமல், பதவி விலகும் உறுப்பினர்களுக்கும் சாதகமாக இல்லாமல் மிகச் சாதுர்யமாக ஒரு தீர்ப்பை வழங்கியிருப்பதற்காக உச்சநீதிமன்றத்தை பாராட்டத் தோன்றவில்லை.

அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலான இந்திய ஜனநாயகம், அரசமைப்பு அமைப்புகளுக்கு தனித்தனியான அதிகாரங்களை வழங்கியிருக்கிறது. அதன்படி, அது நீதித் துறையானாலும், சட்டப்பேரவையானாலும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத சம அதிகார வரம்புகளைப் பெற்றிருக்கின்றன. உச்சநீதிமன்றத்தின் மீது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவை எப்படி அதிகாரம் செலுத்த முடியாதோ, அதேபோல பேரவைகளின் நடவடிக்கைகளில் நீதித் துறையும் தலையிட முடியாது, கூடாது என்பதுதான் அரசியல் சாசனம் வகுத்திருக்கும் வரம்பு. இந்த அடிப்படையில் பார்க்கும்போது உச்சநீதிமன்றத்தின் புதன்கிழமை தீர்ப்பு விவாதத்துக்குரியதாக மாறுகிறது. 

சட்டப்பேரவை தன்னிச்சையாக இயங்கும் சுதந்திரத்தில் நேரடியாக அல்லாமல் மறைமுகமாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறுக்கிடுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பு போன்ற ஓர் அரசின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் மிக முக்கியமான கட்டத்தில், சட்டப்பேரவைத் தலைவர் தன்னுடைய முடிவை செயல்படுத்துவதற்கோ, அதற்கான நேரத்தை நிர்ணயிப்பதற்கோ அதிகாரமில்லை என்கிற நிலை சட்டப்பேரவையின் அதிகாரத்தில் நீதித் துறையின் தேவையில்லாத தலையீடு என்றுதான் கருத வேண்டியிருக்கிறது. 

சட்டப்பேரவை சுதந்திரமாக தனித்து இயங்கும் உரிமை பெற்றதா, சட்டப்பேரவையின் செயல்பாடுகளில் அவைத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதா என்கிற கேள்விக்கு உச்சநீதிமன்றம் சாதகமாகப் பதிலளித்திருக்கிறது. அதே நேரத்தில், சட்டப்பேரவை விதிகள் முறையாக அவைத் தலைவரால் பின்பற்றப்படாதபோது  பேரவை உறுப்பினர்களுக்கு நீதித் துறையை நாடும் உரிமை உண்டு என்பதையும் ஆமோதித்திருக்கிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத முடிவை வழங்கியது. இப்படி தொங்கு சட்டப்பேரவை அமைவது புதிதொன்றுமல்ல. அதேபோல, எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதும், நாடாளுமன்ற ஜனநாயக முறையில் புதிதொன்றுமல்ல. 

ஆளுநரைப் பொருத்தவரை பல்வேறு முன்னுதாரணங்களின் அடிப்படையில், மிக அதிகமான இடங்களில் வெற்றி பெற்றிருந்த பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார். பெரும்பான்மையை நிரூபிக்க இரண்டு வார கால அவகாசமும் வழங்கினார். 

1989-இல் அன்றைய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் அதிக எண்ணிக்கை பலம் கொண்ட ராஜீவ் காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் கட்சியைத்தான் முதலில் ஆட்சி அமைக்க அழைத்தார். காங்கிரஸ் கட்சி மறுத்துவிட்ட நிலையில்தான் வி.பி. சிங் தலைமையிலான தேசிய முன்னணி என்கிற கூட்டணி ஆட்சி அமைந்தது. 

1991-லும், 1996-லும் பெரும்பான்மை பலமில்லாத, அதிக எண்ணிக்கை பலம் கொண்ட நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சியும், வாஜ்பாய் தலைமையிலான பாஜகவும்தான் ஆட்சி அமைக்க முதல் வாய்ப்பைப் பெற்றன. அந்த முன்னுதாரணங்களின் அடிப்படையில்தான் ஆளுநரால் எடியூரப்பாவுக்கு முதல் வாய்ப்பு வழங்கப்பட்டது. 

இப்போது போலவே அப்போதும் ஆளுநரின் முடிவுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் தலையிட்டது. ஆளுநரின் முடிவை ஏற்றுக் கொண்டது. ஆனால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வழங்கியிருந்த இரண்டு வார அவகாசத்தை இரண்டு நாள்களாகக் குறைத்தது. அதே பாணியில் இப்போது சட்டப்பேரவைத்  தலைவரின் அதிகாரத்தையும் ஏற்றுக்கொண்டு, அதேநேரத்தில் அவர் தனது அதிகாரத்தை செயல்படுத்த முடியாத நிலையையும் உருவாக்கித் தந்திருக்கிறது.

நீதித் துறையின் தேவையற்ற தலையீட்டுக்குக் காரணம், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் தங்களது கடமையையும் தங்களுக்கான உரிமைகளையும் உணர்ந்து செயல்படாமல், பதவியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருப்பதுதான். 

குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு இன்றைய வாக்கெடுப்பில் தோல்வியடைந்து, காங்கிரஸ் அதிருப்தியாளர்களின் உதவியோடு பாஜக ஆட்சி அமைவதால் மட்டும் என்ன மாற்றம் ஏற்பட்டுவிடப் போகிறது? அடுத்த சில வாரங்களில் பதவி பேரங்களும் பதவி விலகல் அச்சுறுத்தல்களும் அந்த ஆட்சியையும் நிலைகுலையச் செய்யும் என்பதுதான் நடைமுறை உண்மை.

]]>
https://www.dinamani.com/editorial/2019/jul/18/ஜனநாயகத்தின்-தோல்வி-3194689.html
3193805 தலையங்கம் மாற்றத்துக்கேற்ற சட்டம்! ஆசிரியர் Wednesday, July 17, 2019 02:48 AM +0530 மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா மக்களவையில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. 1988-இல் கொண்டுவரப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் 2001-இல் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 2016-இல் மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. 2017 பிப்ரவரியில் மக்களவையால் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காததால், முந்தைய மக்களவையின் பதவிக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அந்த மசோதா காலாவதியாகிவிட்டது. இப்போது 17-ஆவது மக்களவையில் மீண்டும் அதே மசோதா அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. 
பயணிப்பதற்குத் தகுதி இல்லாத மோசமான சாலைகள், போதுமான கடுமை இல்லாத போக்குவரத்து விதிகள், முறையாக நடவடிக்கை எடுக்காத போக்குவரத்து அமைப்புகள், ஆபத்தான வாகன ஓட்டிகள் என்று சாலை விபத்துகள் இந்தியாவின் மிகப் பெரிய உயிர்க்கொல்லியாக மாறியிருக்கின்றன. அதனால், அதிவேகமாக அதிகரித்துவரும் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப, மோட்டார் வாகனங்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை காலத்துக்கு ஏற்ப மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. 
ஏறத்தாழ 1.5 லட்சம் பேர் சாலை விபத்தில் உயிரிழக்கிறார்கள். 5 லட்சத்துக்கும் அதிகமானோர் காயமடைகிறார்கள். இதற்கெல்லாம் வாகன ஓட்டிகளின் கவனக்குறைவு முக்கியமான காரணம் என்றாலும்கூட, கணிசமான விபத்துகளுக்கு அளவுக்கு அதிகமான பயணிகளை அல்லது சரக்குகளை ஏற்றுவது, பராமரிக்கப்படாத சாலைகள், முறைப்படுத்தப்படாத நாற்சந்திகள், ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்டிருக்கும் வேகத்தடைகள் ஆகியவையும்கூட முக்கியமான காரணிகள். 
எண்ம தொழில்நுட்பம் (டிஜிட்டல் டெக்னாலஜி') மூலம் ஓட்டுநர் உரிமம் பெறுவது முறைப்படுத்தப்பட்டு, அதன் மூலம் முறைகேடுகளைத் தடுக்க சட்டத்திருத்தம் வழிகோலுகிறது. 
இந்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால், ஓட்டுநர் உரிமம் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு இணையத்தின் மூலம் வழங்கப்படும். ஓட்டுநர் உரிமம் பெறுவதில் முறைகேடுகள், இடைத்தரகர்கள் தடுக்கப்பட்டு அதன் மூலம் கையூட்டு பெறுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க சட்டத்திருத்தம் வகை செய்கிறது. 
புதிய மசோதாவில் இன்னொரு புதிய அம்சம், அதிகரிக்கப்பட்டிருக்கும் அபராதத் தொகை. அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றினால் ஒரு பயணிக்கு ரூ.200 அபராதம் வசூலிக்க நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இருக்கைப் பட்டை அணியாமல் இருப்பதற்கான அபராதத் தொகை ரூ.100-லிருந்து ரூ.1,000-ஆக அதிகரிக்கப்படுகிறது. சாலைகளில் அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டுவது, உரிமம் இல்லாமல் ஓட்டுவது ஆகியவற்றுக்கான  அபராதம் ரூ.500-லிருந்து ரூ.5,000-ஆக அதிகரிக்கப்படுகிறது. 
மது அருந்தி வாகனத்தை ஓட்டினால் அபராதம் ரூ.2,000-த்திலிருந்து ரூ.15,000-ஆக உயர்த்தப்படுகிறது. வாகனம் ஓட்டுவதற்கு தடை செய்யப்பட்டவர்கள் அதை மீறி ஓட்டினால் இனிமேல் ரூ.10,000 அபராதம் செலுத்தியாக வேண்டும்.
வாகன ஓட்டுநர்கள் மட்டுமல்ல, வாகன விற்பனையாளர்கள், தயாரிப்பாளர்கள்கூட மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். மோட்டார் வாகனங்களின் பராமரிப்பில் கவனக்குறைவு இருந்தால் விற்பனையாளர் வாகனத்துக்கு ரூ.1,00,000 அபராதமும், சிறைத் தண்டனையும் எதிர்கொள்ள வேண்டும். அதேபோல, வாகனத் தயாரிப்பில் குறைபாடுகள் இருந்தால், தயாரிப்பாளர் மீதான அபராதம் ரூ.100 கோடி வரை விதிப்பதற்கு சட்டம் வழிகோலுகிறது. 
திருத்த மசோதாவில் பாதசாரிகளுக்கும், வாகன ஓட்டிகள் அல்லாத சாலை பயன்பாட்டாளர்களுக்குமான பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டிருக்கிறது. மோட்டார் வாகனங்களிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கான அதிகாரம் மாநில அரசுகளுக்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களில்10.5% பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். குழந்தைகளை மோட்டார் வாகனங்களை இயக்க அனுமதிக்கும் பெற்றோர்களும், மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என்பது மிக முக்கியமான அம்சம். 
மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவின் இன்னொரு மிக முக்கியமான அம்சம், ஈர நெஞ்சத்தாருக்கு (குட் சமாரிட்டன்') தரப்படும் பாதுகாப்பு. விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவப் போய் ஈர நெஞ்சத்தார் படும் அவஸ்தை சொல்லி மாளாது. அதனால், பலரும் சாலை விபத்துகளின்போது மனதை கல்லாக்கிக் கொண்டு அகன்று விடுகிறார்கள். அந்த  நிலைமைக்கு இந்த மசோதா முற்றுப்புள்ளி வைக்கிறது என்பது வரவேற்புக்குரிய திருத்தம் என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. 
மாநில அரசுகளின் உரிமைகளை மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா பறிக்கிறது என்கிற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. மாநில உரிமைகளைவிட பொது மக்களின் உயிரும், பாதுகாப்பும் முக்கியமானது. மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா, இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாக வேண்டும். இந்த  சட்டத்திருத்த மசோதா கொண்டுவருவதன் நோக்கத்தையும் உணர்வையும் புரிந்துகொண்டு, மாநில அரசுகள் அதற்கு வெற்றிகரமாக செயல்வடிவம் கொடுக்க வேண்டும். போக்குவரத்து விதிமீறல்கள் தடுக்கப்பட வேண்டும். நெடுஞ்சாலை மரணங்கள் இல்லாத நிலையை இந்தியா எய்த வேண்டும்.
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/jul/17/மாற்றத்துக்கேற்ற-சட்டம்-3193805.html
3193057 தலையங்கம் வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை... ஆசிரியர் Tuesday, July 16, 2019 01:37 AM +0530 இந்தோனேஷியாவிலுள்ள சுரபயா என்கிற துறைமுகத்துக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து எட்டு பெட்டகங்கள் (கண்டெய்னர்கள்') கப்பலில்  வந்தன. ஓஷியானிக் மல்ட்டி டிரேடிங்' என்கிற ஆஸ்திரேலிய நிறுவனம் இந்தோனேஷிய நிறுவனம் ஒன்றிற்கு அந்தப் பெட்டகங்களில் பழைய காகிதங்களை அனுப்பியிருந்தது. அந்தப் பெட்டகங்களை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்ட இந்தோனேஷிய சுங்க இலாகாவினர் அதிர்ந்து விட்டனர்.
எட்டு பெட்டகங்களில் ஆஸ்திரேலியாவிலிருந்து 218 டன் குப்பைக் கழிவுகள், பழைய காகிதம் என்கிற பெயரில் இந்தோனேஷியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன. நெகிழிக் கழிவுகள், இ-கழிவுகள், குப்பைக் கழிவுகள், வீட்டுக் கழிவுகள் மட்டுமல்லாமல், பெண்களின் மாதவிடாய் அணையாடை (சானிட்டரி நாப்கின்கள்'), குழந்தைகளின் அரையாடை (டயாப்பர்ஸ்) குத்தி அடைக்கப்பட்டிருந்தன. அந்த எட்டு பெட்டகங்களும் ஆஸ்திரேலியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டன. 
இரண்டு வாரங்களுக்கு முன்புதான் இந்தோனேஷியா இதேபோல பிரான்சிலிருந்தும், வேறு சில மேலை நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்ட 49 பெட்டகங்களைத் திருப்பி அனுப்பியது. கடந்த மே மாதம் பல்வேறு நாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட 450 டன் பிளாஸ்டிக் கழிவுகளை, மலேசியா அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பியது.
கடந்த மாதம் கனடாவிலிருந்து அனுப்பப்பட்ட நகராட்சி, மாநகராட்சி குப்பைக் கழிவுகளை பிலிப்பின்ஸ் நாடு திருப்பி அனுப்பியது. 69 பெட்டகங்களில் நிரப்பப்பட்டிருந்த அந்தக்  குப்பைக் கழிவுகள் ஏறத்தாழ இரண்டு வாரங்கள் துறைமுகத்தில் அனுமதிக்காகக் காத்துக் கிடந்து, அனுமதி மறுக்கப்பட்டு மீண்டும் கப்பலில் திருப்பி ஏற்றப்பட்டது. 
2018-ஆம் ஆண்டு வரை வெளிநாடுகளிலிருந்து நெகிழிக் கழிவுகளை சீனா துணிந்து இறக்குமதி செய்து வந்தது. அந்த நெகிழிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து புதிய பொருள்களாக ஏற்றுமதி செய்தது. நெகிழிக் கழிவுகளுடன், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் சுகாதாரக் கேடுகளுக்கு வழிகோலும் நச்சுக் கழிவுகளும் அதிக அளவில் நுழையத் தொடங்கியபோதுதான் சீனா விழித்துக் கொண்டது.
நெகிழிக் கழிவு இறக்குமதிக்குச் சீனா தடை விதித்ததைத் தொடர்ந்து, வளர்ச்சி அடைந்த நாடுகள் பெரும் பிரச்னையில் சிக்கிக் கொண்டன. தங்கள் நாட்டில் உற்பத்தியாகும் கழிவுகளைக் கொண்டுபோய்க் கொட்டுவதற்கு இடமில்லாமல், வளர்ச்சி அடையாத நாடுகளுக்குக் காகிதக் கழிவுகள் என்கிற பெயரில் ஏற்றுமதி செய்யத் தொடங்கின.
மேலை நாடுகளில் உருவாகும் குப்பைக் கழிவுகள் ஆப்பிரிக்க நாடுகளைவிட, ஆசிய நாடுகளுக்குத்தான் அதிகமாக ஏற்றுமதி  செய்யப்படுகின்றன. அதிலும் குறிப்பாக,  இந்தியா உள்ளிட்ட தெற்காசியாவும், இந்தோனேஷியா, மலேசியா, வியத்நாம், பிலிப்பின்ஸ் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியாவும்தான் ஆபத்தான, சுகாதாரக் கேடுகளை விளைவிக்கும் கழிவுகளின் குப்பைத் தொட்டிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
பத்தாண்டுகளுக்கு முன்பே, 12.06.2009-இல் நாம் என்ன குப்பைத் தொட்டியா?' என்கிற தலைப்பில் இந்தப் பிரச்னை குறித்த தினமணி' தலையங்கம், இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்படும் வளர்ச்சி அடைந்த நாடுகளின் கழிவுகள் குறித்த அச்சத்தை  வெளிப்படுத்தியிருந்தது. செப்டம்பர் 2005-ஆம் ஆண்டு தூத்துக்குடி துறைமுகத்துக்கு 25,000 டன் பழைய கழிவுகள் வந்து இறங்கின. அதில் 40 பெட்டகங்களில் அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகராட்சி குப்பைக் கழிவுகள் நிரப்பப்பட்டிருந்தன. இந்தியாவில் கொட்டுவதற்குக் கொண்டுவரப்பட்ட நெகிழிக் கழிவுகள், பூச்சிக்கொல்லி மருந்துக் குப்பிகள், செயலிழந்த பேட்டரிகள், உபயோகப்படுத்தப்பட்ட மாதவிடாய் அணையாடை உள்ளிட்டவை அவற்றில் அடைக்கப்பட்டிருந்தன.
அதுபோல, எத்தனை எத்தனை கப்பல்களில் எத்தனை எத்தனை பெட்டகங்களில் மேலைநாட்டு குப்பைக் கழிவுகள் இந்தியாவுக்குக் கடந்த பல ஆண்டுகளாகக் கொண்டுவரப்படுகின்றன என்பது வெளியில் தெரியாத ரகசியம். இந்தியா மட்டுமல்ல, உலகிலுள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட வளர்ச்சி அடையும் நாடுகள் இந்தப் பிரச்னையை எதிர்கொள்கின்றன. உள்நாட்டில் உருவாகும் குப்பைக் கழிவுகளையே வெளியேற்ற முடியாமல் நாம் திணறும் நிலையில், பிற நாட்டுக் கழிவுகளை இறக்குமதி செய்யும் நிறுவனங்களை நாம் தேசத் துரோகிகளாகக் கருதாமல் வணிக நிறுவனங்களாக ஏற்றுக்கொள்கிறோம் என்பதுதான் வேதனைக்குரிய எதார்த்தம்.
கடந்த மே மாதம், நார்வேயில் பேசல்' ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் 14-ஆவது மாநாடு கூடியது. 1992-இல் கூடிய பேசல்' மாநாடு, வளர்ச்சி அடைந்த நாடுகளிலிருந்து, வளர்ச்சி அடையும் நாடுகளுக்கு அனுப்பப்படும் நச்சுக் கழிவுகளின் இடமாற்றத்தைத் தடுப்பது குறித்து விவாதித்தது. கழிவுகள் உற்பத்தியாகும் இடத்திலேயே அவை அழிக்கப்பட வேண்டும் என்று பேசல்' கூட்டறிக்கை வலியுறுத்தியது.
சமீபத்தில் நார்வேயில் நடந்த கூட்டத்தில் 185 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பல்லாயிரம் கோடி மதிப்புள்ள கழிவுகளைக் கையாளும் நிறுவனங்கள் எந்தவித சர்வதேசக் கட்டுப்பாட்டிலும் இல்லை எனும் நிலையில், அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் திணறுகின்றன வளர்ச்சி அடையும் நாடுகள். அவற்றில் மிக முக்கியமான நாடு நமது இந்தியா.
நதிகள், நீர் நிலைகள், குளம் குட்டைகள், ஏன் இந்தியாவின் கடற்பரப்பு வரை குப்பைக் கூளமாகி வருகின்றன. இதனால் ஏற்பட இருக்கும் சுகாதாரக் கேடுகளும், உருவாக இருக்கும் நோய்த் தொற்றுகளும் பயமுறுத்துகின்றன. ஆனால், நாம் கவலைப்படாமல் இருக்கிறோம்...!
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/jul/16/வருமுன்னர்க்-காவாதான்-வாழ்க்கை-3193057.html
3192363 தலையங்கம் மாற்றை யோசிக்கலாமே! ஆசிரியர் Monday, July 15, 2019 03:00 AM +0530 நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் துணிந்து எடுக்கப்பட்டிருக்கும் முடிவுகளில் ஒன்று பெட்ரோல் டீசலில் இயங்கும் வாகனங்களுக்குப் பதிலாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை ஊக்குவிப்பது என்கிற திட்டம் . 2030-க்குள் ஸ்கூட்டர்கள்,
 மோட்டார்சைக்கிள்கள், மூன்று சக்கர வாகனங்கள் என்று தொடங்கி அனைத்து வாகனங்களையும் பேட்டரி தொழில்நுட்பத்தின் மூலம் மின்சாரத்தில் இயக்குவது என்பதுதான் நீதி ஆயோக்கின் இலக்கு.
 மத்திய பட்ஜெட்டில் மின்சார வாகனங்களுக்கான கடனுக்குச் செலுத்தப்படும் வட்டித் தொகைக்கு ரூ. 1.5 லட்சம் வருமானவரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12% லிருந்து 5%-ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. மின் ஏற்ற நிலையங்களை ("சார்ஜிங் ஸ்டேஷன்') அமைப்பதற்கும், மின்சாரத்தில் இயங்கும் சரக்கு வாகனங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. எரிசக்தி துறை அமைச்சகம் கடந்த டிசம்பர் மாதத்திலேயே குறைந்த கட்டணத்தில் விரைவாக பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்காக மின் ஏற்று நிலையங்களை அமைப்பதற்கான விதிமுறைகளையும் அடிப்படை தர நிர்ணயத்தையும் அறிவித்திருக்கிறது.
 இந்தியாவில் விற்பனையாகும் வாகனங்களில் 80% இரண்டு சக்கர வாகனங்கள் என்ற நிலையில், மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனங்கள் குறைந்த விலையில் அமையும்போது கணிசமான வரவேற்பைப் பெறக்கூடும். அதேநேரத்தில் பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்கும், சார்ஜ் குறைந்த பேட்டரிகளைக் கொடுத்துவிட்டு சார்ஜ் இருக்கும் பேட்டரிகளாக மாற்றிக் கொள்வதற்கும் வழிகோலப்பட்டால் மட்டுமே மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் வரவேற்பை பெறும். வாகனம் நிறுத்தும் இடங்கள், மின் ஏற்று நிலையங்கள், விடுதிகள் என்று பரவலாக மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படாமல் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் வெற்றி அடைவது ஐயப்பாடுதான்.
 கடந்த வாரம் எத்தனாலில் இயங்கும் மோட்டார்சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல பன்னாட்டு மோட்டார் வாகன நிறுவனம் ஒன்று மின்சாரத்தில் இயங்கும் காரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டரும் சந்தைப்படுத்தப்பட்டிருக்கிறது. மின்சாரத்தில் இயங்கும் வாகனம் குறித்து பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது என்றாலும், அரசு எதிர்பார்க்கும் அளவுக்கு வரவேற்பு அதிகரிக்கும் என்று தோன்றவில்லை. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் வரிச் சலுகை மட்டுமே மின்சார வாகனங்களை வாங்குவதற்கு பொதுமக்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் ஆர்வத்தைத் தூண்டி விடாது.
 அமெரிக்காவில் மின்சார வாகனங்களை வாங்கினால் 7,500 டாலர் வரை வரிச்சலுகை வழங்கப்படுகிறது. அதன் விளைவாக மின்சார வாகனங்களின் விற்பனை பெருமளவில் அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் வழங்கப்பட்டிருக்கும் வரிச் சலுகையும் குறைவு, மின்சார வாகனங்களை இயக்குவதற்கான கட்டமைப்பு வசதியும் ஏற்படுத்தப்படவில்லை.
 சீனாவில் 13 லட்சத்துக்கும் அதிகமான மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் சாலைகளில் ஓடும் நிலையில், இந்தியாவில் வெறும் 6,000 வாகனங்கள் மட்டுமே இதுவரை சந்தைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்கும் "டெஸ்லா', இந்தியாவிலும் உற்பத்தியைத் தொடங்க இருப்பதால் மின்சார வாகனங்கள் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்படும். அதனால், இந்தியாவின் பெரு நகரங்களில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டால், மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டர், மோட்டார்சைக்கிளுக்கான வரவேற்பு அதிகரிக்கக் கூடும்.
 மின்சார வாகனங்கள் குறித்து சில கேள்விகளை எழுப்பத் தோன்றுகிறது. கரியமில வாயுவால் ஏற்படும் காற்று மாசைக் குறைப்பதுதான் மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதன் நோக்கம். இந்தியாவைப் பொருத்தவரை நமது மின்சாரத் தேவை அனல் மின்சக்தி நிலையங்களின் மூலம்தான் அதிகமாக ஈடுகட்டப்படுகிறது. மோட்டார் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையைக் குறைத்து, அதற்குப் பதிலாக அனல் மின்சக்தி நிலையங்களில் கரியமில வாயு வெளியேற்றத்தை அதிகரிக்கப் போகிறோமா?
 பேட்டரி தொழில்நுட்பம் மூலம் மின்சார வாகனங்கள் இயக்கப்படுகின்றன. செல்லிடப்பேசிகள், மடிக் கணினிகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகள்தான் மின்சார வாகனங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. தொடர்ந்த பயன்பாட்டின்போது லித்தியம் பேட்டரிகள் சூடாகிவிடும். ஆயிரக்கணக்கில் மடிக் கணினிகளும், செல்லிடப்பேசிகளும் சூடாகி வெடித்ததாலும், தீ பிடித்ததாலும் விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. லித்தியம் அல்லாத வேறு பேட்டரி தொழில்நுட்பம் இல்லாத நிலையில், மின்சார வாகனங்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்படுகிறது.
 பெட்ரோல், டீசல், மின்சாரத்துக்கு மாற்றாக எத்தனாலில் இயங்கும் வாகனங்கள் அமையக்கூடும். அமெரிக்காவில் சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால் மூலம் இயங்கும் வாகனங்கள் வரவேற்புப் பெற்றன. ஆனால் சோளத்தின் விலை அதிகரித்து, மக்கள் பயன்பாட்டுக்கு சோளத் தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த முயற்சி கைவிடப்பட்டது.
 பிரேஸில் நாட்டில் வாகனப் பயன்பாட்டிற்கு அனேகமாக எத்தனால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அங்கே கரும்பிலிருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது. பிரேஸிலைப் போல, கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலில் இயங்கும் வாகனத் தயாரிப்புக்கு, மின்சாரத்தில் இயங்கும் வாகனத்திற்கு தரப்படும் முக்கியத்துவத்தை இந்தியாவும் வழங்க முற்படுவதுதான் புத்திசாலித்தனமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.
 
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/jul/15/மாற்றை-யோசிக்கலாமே-3192363.html
3191121 தலையங்கம் கர்'நாடக' குழப்பம்! ஆசிரியர் Saturday, July 13, 2019 01:45 AM +0530 நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக முதலமைச்சர் குமாரசாமி அறிவித்ததைத் தொடர்ந்து கர்நாடக அரசியல் புதியதொரு திருப்பத்தை (குழப்பத்தை) நோக்கி நகர்ந்திருக்கிறது. முதலமைச்சர் விரும்பினால் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு வழிகோலுவதாக சட்டப் பேரவைத் தலைவர் கே.ஆர்.ரமேஷ்குமார் அறிவித்திருக்கிறார் என்றாலும், அந்த அறிவிப்புக்குப் பின்னால் சில சூட்சுமங்கள் அடங்கியிருக்கின்றன. 
கடந்த ஆண்டு  நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டது. முந்தைய தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி மக்களால் நிராகரிக்கப்பட்டு, வெறும் 80 இடங்களில் மட்டுமே  வெற்றி பெற முடிந்தது.  மதச்சார்பற்ற ஜனதாதளமும் கடந்த தேர்தலில் பெற்றிருந்ததைவிட, 3 இடங்கள் குறைவாக 37 இடங்களில்தான் வெற்றி பெற்றது. 104 இடங்களுடன் மிக அதிகமான எண்ணிக்கை பலம் கொண்ட கட்சியாக பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது என்றாலும், தனிப் பெரும்பான்மையை எட்ட அந்தக் கட்சிக்கு 9 இடங்கள் தேவைப்பட்டன.
மிக அதிகமான இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்பதால், சட்டப்பேரவை பாஜக தலைவர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா அழைத்தார். பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு அவகாசமும் வழங்கினார்.  224 இடங்கள் உள்ள அவையில் 104 இடங்கள் மட்டுமே பெற்றிருக்கும் கட்சி  ஆட்சி அமைக்கும்போது, தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஏனைய கட்சிகளிலிருந்து உறுப்பினர்களைத் தன் பக்கம் இழுப்பதைத் தடுக்க முடியாது. அதன் பின்னணியில் குதிரை பேரம் நடைபெறும் என்பதைக் காரணம் காட்டி, அதிக பலம் கொண்ட கட்சி பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதைத் தடுப்பதைவிட, சட்டப்பேரவையைக் கலைத்து மறு தேர்தலுக்கு வழிகோலுவதுதான் தீர்வு.
1952-இல் அன்றைய சென்னை ராஜதானியில் ராஜாஜியின் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் இருந்து  அதற்குப் பிறகு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் அமைந்த சிறுபான்மை அரசுகள் அனைத்துமே ஏதாவது பேரங்களோ, சமரசங்களோ இல்லாமல்  அமைந்ததில்லை. அந்த முன்னுதாரணங்களின் அடிப்படையில்தான் கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா அதிக இடங்களில் வெற்றிபெற்ற பாஜகவுக்கு  ஆட்சி  அமைக்க வாய்ப்பளித்து, பெரும்பான்மையை நிரூபிக்க போதிய அவகாசமும் வழங்கினார்.
இந்தப் பின்னணியில்தான் வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, தேர்தலுக்கு முன்னால் கடுமையாக எதிர்த்துப் போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதாதளத்துடன் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைக்க வாய்ப்பு கோரியது. 224 உறுப்பினர்கள் கொண்ட அவையில்  80 உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸும், 37 உறுப்பினர்கள் கொண்ட மதச்சார்பற்ற ஜனதாதளமும் தங்களுக்குள் குதிரை பேரத்துக்குப் பதிலாக இன்னொரு வகையான  பதவிப் பேரத்தை செய்து கொண்டன. அதன்படி 37 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருந்த மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு முதலமைச்சர் பதவியையே விட்டுக்கொடுக்க முன்வந்தது காங்கிரஸ் கட்சி. 
தங்களது உறுப்பினர்களை இழுப்பதற்கு பாஜக  குதிரை பேரம் நடத்துகிறது என்கிற குற்றச்சாட்டுடன் உச்சநீதிமன்றத்தை அணுகி முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கால அவகாசம் வழங்காமல்  உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை கொண்டுவருவதற்கான தீர்ப்பையும் காங்கிரஸ்-மஜத பெற்றது. உச்சநீதிமன்றம்  அந்தக் கோரிக்கையை ஏற்காமல், ஆளுநரின் அதிகார வரம்புக்குள் நுழையாமல், தலையிடாமல் இருந்திருந்தால்  ஒன்று எடியூரப்பா அரசு  நிலையான ஆட்சி அமைத்திருக்கும் அல்லது ஆட்சி அமைக்க முடியாமல்  மறு தேர்தலுக்கு வழிகோலப்பட்டிருக்கும்.
முதல்வர் குமாரசாமி தலைமையில்  காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆட்சி கடந்த ஆண்டு அமைந்ததிலிருந்தே அந்தக் கூட்டணி நித்ய கண்டம் பூர்ண ஆயுசாகத்தான் பதவியில்  தொடர்ந்து வருகிறது. 37 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்ற  மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் தலைமையில் ஆட்சி அமைந்ததை  முன்னாள் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முதல்வர் குமாரசாமியின் பல்வேறு முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்புடையதாக இல்லை. காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே காணப்படும்  கோஷ்டிப் பூசல் நாளும் பொழுதும்  அதிகரித்து வந்தது. இந்தப் பின்னணியில்தான், 10 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பதவி விலகத் தீர்மானித்தார்கள்.  மதச்சார்பற்ற ஜனதாதளத்திலிருந்தும் 6 பேர் பதவி விலக முற்பட்டிருக்கின்றனர்.
பதவி விலகல் கடிதத்தை ஏற்பதில் முதலில் தயக்கம் காட்டிய சட்டப்பேரவைத் தலைவர்  இப்போது முடிவெடுக்க தனக்குக் கால அவகாசம் வேண்டும் என்று  பதவி விலகல் கடிதங்களைக் கிடப்பில் போட்டிருக்கிறார். இந்தப் பிரச்னையில் ஜூலை 16 அன்று தீர்ப்பு வழங்கும் வரை சட்டப்பேரவைத் தலைவர் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
 உச்சநீதிமன்றம் ஆரம்பம் முதலே தலையிடாமல் இருந்திருக்கலாம்.  ஆளுநரின் முடிவுக்கும்  சட்டப்பேரவை உறுப்பினர்களின் முடிவுக்கும் விடப்படுவதுதான் அரசியல் சாசனத்தின் உணர்வையும், ஜனநாயகத்தின்  மாண்பையும்  பிரதிபலிப்பதாக இருக்கும். 
விலைபோகும்  உறுப்பினர்களைத் தேர்வு செய்தால், ஜனநாயகத்தில்  அதன் பலனை  வாக்காளர்கள் அனுபவிக்க வேண்டும். குதிரை பேரத்தைக் காரணம் காட்டி மக்கள் தீர்ப்பை  தடம்புரளச் செய்வது ஜனநாயகம் அல்ல!
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/jul/13/கர்நாடக-குழப்பம்-3191121.html
3190399 தலையங்கம் தூத்தி சந்த்தின் சாதனை! ஆசிரியர் Friday, July 12, 2019 01:31 AM +0530 இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் பந்தயத்தில் இந்திய அணி இறுதிச் சுற்றை எட்டாமல் போனால் என்ன? உலக பல்கலைக்கழக விளையாட்டுகளில், இந்தியாவின் அதிவேக மங்கை தூத்தி சந்த் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று அந்தக் குறையை ஈடுகட்டியிருக்கிறார்.
ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது தூத்தி சந்த் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் அரியதொரு விளையாட்டு வீராங்கனை. 400 மீட்டர் ஜூனியர் உலக சாம்பியன் ஹிமா தாஸ் (19 வயது) , ஜாவலின் வீரர் நீரத் சோப்ரா (வயது 21) , உயரம் தாண்டுதல் வீராங்கனை தேஜஸ்வின் சங்கர் (20 வயது) ஆகியோருடன் தூத்தி சந்த்தும் இந்தியாவின் தலைசிறந்த சர்வதேச விளையாட்டு வீரர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராக வலம் வருகிறார். 
அவர்களைவிட தூத்தி சந்த்தின் வெற்றிக்குக் கூடுதல்              மரியாதை உண்டு. ஓட்டப் பந்தயம் என்பது இந்தியாவின் பலங்களில் ஒன்றாக இருந்ததில்லை. அதிக அளவில் வீரர்கள் இல்லாத காரணத்தால், தேசிய முகாம்கள் பல முறை ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில் அது ஆசிய விளையாட்டுப் போட்டியானாலும், பல்கலைக்கழக போட்டியானாலும், சர்வதேச அரங்கில் தூத்தி சந்த் வெற்றி பெறும் ஒவ்வொரு பதக்கமுமே ஏனைய வெற்றிகளையெல்லாம்விடச் சிறப்பு வாய்ந்தது என்று நாம் கொள்ள வேண்டும். 
நபோலியில் நடந்த உலக பல்கலைக்கழகங்களின் விளையாட்டுப் போட்டியில், தூத்தி சந்த் 100 மீட்டரை 11.32 விநாடிகளில் கடந்து சாதனை புரிந்திருக்கிறார். உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய விளையாட்டு வீராங்கனை என்கிற பெருமை அவருக்குக் கிடைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சர்வதேச அளவில் முதல் முறையாக இந்தியா வெற்றி பெற்றிருப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
நபோலியில் நடந்த போட்டியில் 11.32 விநாடிகளில் தூத்தி சந்த் 100 மீட்டரைக் கடந்து வெற்றி பெற்றது சாதனைதான் என்றாலும்கூட, அவருடைய தேசிய சாதனையைவிட இது ஒன்றும் பெரிதல்ல. ஏற்கெனவே தேசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டரை 11.26 விநாடிகளில் கடந்து தூத்தி சந்த் சாதனை புரிந்திருக்கிறார். ஆனால், இப்போதைய நபோலி வெற்றி தனிப்பட்ட முறையில் தூத்தி சந்த்தின் மிகப் பெரிய சாதனை. 
தூத்தி சந்த்தின் வெற்றிப் பயணம் ஆரம்பம் முதலே பல தடைகளை உடைத்தெறிந்த வண்ணம் முன்னேறி வந்திருக்கிறது. 2014-இல் காமல்வெல்த் விளையாட்டுகளில் போட்டியிடத் தகுதி இல்லாதவர் என்று இந்திய தடகள ஆணையம் அவருக்குத் தடை விதித்தது. அவருக்கு டெஸ்டோஸ்டிரோன் சோதனை நடத்தியபோது பெண்மைக்கான கூறுகள் குறைவாக இருப்பதாகக் கூறி, அவர் மகளிருக்கான விளையாட்டில் போட்டியிட முடியாது என்று நிராகரிக்கப்பட்டார். தூத்தி சந்த் தளர்ந்து விடவில்லை. அதை எதிர்த்து முறையீடு செய்து போராடி, அந்த முடிவை மாற்ற வைத்தார். அவரது போராட்டம் விளையாட்டு அரங்கில் பாலினசமத்துவத்தை உறுதிப்படுத்தும் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. 
இந்த முறை அவர் எதிர்கொண்ட பிரச்னை முற்றிலும் வித்தியாசமானது. தனக்கு ஓரினச் சேர்க்கை உறவு இருப்பதாக துணிந்து அறிவித்தார் தூத்தி சந்த். அது சர்வதேச அளவில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஓரினச் சேர்க்கைக்கு சட்ட ரீதியான அனுமதியை உச்சநீதிமன்றம்  வழங்கிவிட்டிருந்ததால் இந்தப் பிரச்னையை முன்வைத்து அவரை வீழ்த்திவிட முடியவில்லை. ஆனால், சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. 
பழக்கமில்லாத, பார்த்திராத எந்தவித மாற்றத்தையும் சமுதாயம் விமர்சிக்கத்தான் செய்யும். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்துச் சிந்தித்து என்னுடைய வாழ்க்கையை நான் வீணடித்துக்கொள்ள விரும்பவில்லை என்பதுதான் தன்மீதான விமர்சனங்களுக்கு தூத்தி சந்த் அளித்த பதில்.
கடந்த சில மாதங்களாகவே மிகப் பெரிய எதிர்ப்புகளை தூத்தி சந்த்  சந்தித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அவரது பயிற்சியாளர் அவரிடமிருந்து பிரிந்தார். ஓரினச் சேர்க்கை உறவை பயன்படுத்தித் தனது சகோதரி மிரட்டிக் கொண்டிருந்ததிலிருந்து வெளியேறுவதற்காகத்தான் துணிந்து தன்னுடைய உறவை வெளிப்படுத்தினார் தூத்தி சந்த். 
ஒடிஸா மாநிலம் சக்ககோபால்பூர் கிராமத்திலுள்ள நெசவுத் தொழிலாளிகளான அவரது பெற்றோர் அந்த உறவை ஏற்றுக்கொள்ளவில்லை. பெற்றோராலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில்தான் தூத்தி சந்த்தின் விளையாட்டுப் பயணம் தொடர்ந்தது. 
அதனால்தான் நபோலி தங்கப் பதக்கம் அவரது தன்னம்பிக்கைக்குக் கிடைத்திருக்கும் தனிப் பெரும் வெற்றி.
ஒவ்வொரு முறை வீழும்போதும் பிரச்னையை எதிர்கொள்ளும்போதும் தூத்தி சந்த் மீண்டெழுந்து வந்திருக்கிறார். இப்போது அவருடைய அடுத்த இலக்கு செப்டம்பர் 26-ஆம் தேதி தொடங்க இருக்கும் தோஹா உலக சாம்பியன் போட்டி. 
இந்த முறை நபோலி பந்தயத்தில் கலந்துகொள்ள அரசு உதவவில்லை. அவரது  பல்கலைக்கழகம்தான் அந்தச் செலவை ஏற்றுக்கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டில் நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலோ, செப்டம்பர் மாத தோஹா போட்டியிலோ தேர்வாவதற்கு குறைந்தது 11.24 விநாடிகளில் 100 மீட்டர் ஓடியாக வேண்டும். அதற்கான பயிற்சி தேவை. 
இதுகுறித்தெல்லாம் தூத்தி சந்த் கவலைப்படுவதாக இல்லை. தனது சுட்டுரையில் அவரது பதிவு இதுதான் - என்னை வீழ்த்துங்கள், நான் அதிக வலுவுடன் மீண்டும் எழுவேன்!
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/jul/12/தூத்தி-சந்த்தின்-சாதனை-3190399.html
3189712 தலையங்கம் முதுமை எழுப்பும் சவால்! ஆசிரியர் Thursday, July 11, 2019 01:30 AM +0530 சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கும் பொருளாதார ஆய்வறிக்கை, மக்கள்தொகை அடிப்படையிலான புதியதொரு போக்கைப் பதிவு செய்கிறது. ஒருபுறம் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுபோல, இன்னொருபுறம் முதியோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பதுதான் பொருளாதார ஆய்வறிக்கை வழங்கும் தகவல்.
இந்தியாவின் மக்கள்தொகையில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பகுதியினர் சுமார் முப்பது வயதுக்கும் கீழே உள்ளவர்கள் என்றால், முதியோரின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருவது தெரியவந்திருக்கிறது. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 8.6%-ஆக இருந்த முதியோரின் விகிதம், 2041-க்குள் 25%-ஆக அதிகரிக்கக்கூடும் என்று பொருளாதார ஆய்வறிக்கை எச்சரிக்கிறது. அப்படி அதிகரிக்கும் நிலையில், அதற்குத் தகுந்தாற்போல ஆட்சியாளர்கள் திட்டமிட்டாக வேண்டும்.
மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதும், ஆயுளை நீட்டிப்பதும் சாதனைகள்தான். ஆனால், இந்தச் சாதனைகள் புதிதாகப் பல பிரச்னைகளையும் சவால்களையும் எழுப்பும் என்பதையும் நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும்.
இந்தியாவில் தனிமனித சராசரி ஆயுள்காலம் 50 வயதையொட்டி இருந்த காலம் எப்போதோ மலையேறிவிட்டது. அறுபதைக் கடந்து எழுபதையும் தாண்டிப் பலரும் முதுமையிலும் இளமையாக வலம்வரும் நிலைமையை நாம் அடைந்திருக்கிறோம் என்பது மிகப் பெரிய சாதனை. அதற்கேற்றாற்போல, ஓய்வு பெறும் வயதையும் அதிகரித்தாக வேண்டும். ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும்போது, போதுமான மருத்துவ வசதிகள், முதியோர் பாதுகாப்பு, ஓய்வூதியம், சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட ஓய்வுகாலப் பயன்களை அதிகரிப்பதும் அவசியமாகிறது.
இந்தியாவைப் பொருத்தவரை, நகரங்களைவிட கிராமப்புறங்களில் வாழும் முதியோரின் நிலைமை பல விதத்திலும் பாதுகாப்பானதாக இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. போதுமான நவீன மருத்துவ வசதிகள் கிராமப்புற முதியோருக்குக் கிடைப்பதில்லை என்கிற குறையைத் தவிர, அவர்களில் 75% பேர் பாதுகாப்பாகவும், தங்கள் உறவினர்களால் மரியாதையுடன் பேணப்பட்டும் வாழ்கிறார்கள் என்று தெரிகிறது.
இந்திய நகரங்களில் வாழும் முதியோரில், ஆறு பேரில் ஒருவர் போதுமான ஊட்டச்சத்தோ, தேவைக்கேற்ற உணவோ பெறுவதில்லை. மூன்று பேரில் ஒருவர் போதுமான மருத்துவ வசதி இல்லாமலும், தேவைக்கேற்ற மருந்துகள் பெறாமலும் இருக்கிறார்கள். இரண்டு பேரில் ஒருவர் குடும்பத்தினராலும், சுற்றத்தினராலும் மரியாதையுடனும் கெளரவத்துடனும் நடத்தப்படுவதில்லை. இவை பத்துக்கும் மேற்பட்ட ஆய்வுகளிலிருந்து திரட்டப்பட்ட புள்ளிவிவரங்கள்.
நகரமயமாக்கலின் காரணமாக, அதிக அளவில் மகளிர் பணிக்குச் செல்லும் சூழல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் ஏற்படும் மிக முக்கியமான பாதிப்பு, கூட்டுக் குடும்ப முறை அருகி வருவது என்கிறார்கள் சமூகவியலாளர்கள். தங்களது வாழ்க்கையின் பெரும்பாலான பகுதியைத் தங்களுடைய குழந்தைகளுக்காக உழைத்து ஓய்ந்து போயிருக்கும் முதியோரில் பெரும்பாலோர் கூட்டுக் குடும்பச் சூழலில் பிறந்து வளர்ந்தவர்கள். அவர்களால் தங்களது வயோதிகத்தில் தனிமை வாழ்க்கை வாழ முடிவதில்லை. தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தேவையற்றவர்களாகி விட்டிருப்பதாக நினைத்து வேதனையில் வயோதிகத்தைக் கழிக்கிறார்கள்.
இன்னோர் ஆய்வு தரும் அதிர்ச்சித் தகவல் இது. இந்திய நகரங்களில் பத்து வயோதிகத் தம்பதியரில் ஆறு தம்பதிகள் தங்களுடைய குழந்தைகளால் வெளியேற்றப்பட்டு அல்லது புறக்கணிக்கப்பட்டு, தனித்து வாழ வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறார்கள். குழந்தைகளின் படிப்புக்காகவும், திருமணத்துக்காகவும் தங்களது உழைப்பையும், சேமிப்பையும் கரைத்துவிட்ட நிலையில், முதுமையில் எல்லா நம்பிக்கையையும் இழந்து புகலிடம் இல்லாத நிலைமைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். வேடிக்கை என்னவென்றால், அவர்களில் ஒருவர்கூட தங்களுடைய குழந்தைகளைக் குற்றப்படுத்தவோ, குறைகூறவோ தயாராக இல்லை என்பதுதான். 
மேலைநாடுகளைப்போல, 18 வயதானால் குழந்தைகள் வீட்டிலிருந்து வெளியேறித் தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ளும் பழக்கம்  இந்தியாவில் இல்லை. தங்களது படிப்பு முடித்து, திருமணமாவது வரையிலும்கூடப் பெற்றோரின் பராமரிப்பில்தான் பெரும்பாலான குழந்தைகளின் வாழ்க்கை கழிகிறது. அதுவரையில், அவர்களது எல்லா வசதிகளையும், தேவைகளையும், ஆசைகளையும் பெற்றோர் நிறைவேற்றித் தருகிறார்கள். அதே அளவிலான பாசத்தையும் பரிவையும் வயதான காலத்தில் பெற்றோருக்கு அந்தக் குழந்தைகள் காட்டுவதில்லை.
கால மாற்றத்தையும் சமுதாய மாற்றத்தையும் தவிர்த்துவிட முடியாது. மேலைநாட்டுக் கலாசாரத்தை நோக்கி இந்திய சமுதாயம் நகர்ந்து கொண்டிருக்கிறது. தாய்மொழிக் கல்வி கற்றுத்தந்த பண்பாட்டுக் கூறுகள் இல்லாத, பொருளாதாரம் சார்ந்த ஆங்கிலக்  கல்வியை ஏற்றுக் கொண்டதன் விளைவை நாம் எதிர்கொண்டாக வேண்டும்.
இந்தியர்களின் ஆயுள்காலம் அதிகரித்து வருவதால் முதியோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மனிதவள மேம்பாட்டுத் துறையும், மகளிர் நல மேம்பாட்டுத் துறையும், பிற்படுத்தப்பட்டோர் நல மேம்பாட்டுத் துறையும், மகளிர் - குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறையும் போல, முதியோர் நலம் பேணவும், அதிகரித்து வரும் முதியோர் பிரச்னையை எதிர்கொள்ளவும் முதியோர் நல மேம்பாட்டுத் துறை மத்திய அரசிலும், மாநில அரசுகளிலும் ஏற்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் எழுந்திருக்கிறது. இந்தப் பிரச்னைக்கு முதியோர் இல்லங்கள் அல்ல தீர்வு!
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/jul/11/முதுமை-எழுப்பும்-சவால்-3189712.html
3189127 தலையங்கம் நோய் நாடி...நோய் முதல் நாடி...! ஆசிரியர் Wednesday, July 10, 2019 02:32 AM +0530 நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இரண்டரை மணி நேர நிதிநிலை அறிக்கை உரையில், சுகாதாரம் குறித்து ஒரு வார்த்தைகூட இல்லை என்பது வேதனை அளிக்கிறது. கோரக்பூரிலும், முசாபர்பூரிலும் அரசின் கவனக்குறைவால் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இரண்டொரு வார்த்தைகளையாவது அவர் கூறியிருக்கலாம். அதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் இருப்பதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில நிதி ஒதுக்கீடுகளையாவது அறிவித்திருக்கலாம்.
சந்தைப் பொருளாதாரத்தை இந்தியா வரித்துக் கொண்டது முதல் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பது நடுத்தர, மாதச் சம்பள வர்க்கத்தினரும், அடித்தட்டு மக்களும்தான். நடுத்தர, மாத ஊதிய வர்க்கத்தினரின் பிரச்னைகள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தால் முழுமையாக ஈடுகட்டப்படுவதில்லை. அரசு மருத்துவமனைகளை நாட அவர்களது கெளரவம் அனுமதிப்பதில்லை. தனியார் மருத்துவமனைகளால் கடனாளியாகி, தங்களது வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கும் மத்திய தர வர்க்கத்தினரின்  சோகக் கதைகள் தெருவுக்குத் தெரு, குடும்பத்துக்குக் குடும்பம் சொல்லி மாளாது. 
நடுத்தர வர்க்கத்தினரின் நிலைமை இதுவென்றால், அடித்தட்டு மக்களின் அவஸ்தை அதைவிடக் கொடுமை. அரசு மருத்துவமனைகளில் தேவைக்கேற்ப தரமான மருத்துவர்களும் கிடையாது, மருந்துகளும் கிடையாது என்பதுதான் இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களிலும் காணப்படும் நிலைமை. கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து எதுவும் கூறாமல் இருப்பதுதான் நல்லது. எந்த அளவில் அடித்தட்டு மக்களின் மருத்துவச் சேவை, பொது மருத்துவத் துறையால் பேணப்படுகிறது என்பதை வெளிச்சம் போடுவதற்கு, கோரக்பூர், முசாபர்பூர் சம்பவங்களே போதும். 
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த ஜிடிபியில், சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீடு 2.5% அதிகரிக்கும் என்று அரசு கூறியிருந்தது. நிதியமைச்சர் தாக்கல் செய்திருக்கும் இந்த நிதியாண்டுக்கான ரூ.27,86,349 கோடிக்கான நிதிநிலை அறிக்கையில், சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு வெறும் ரூ.64,999 கோடி. அதாவது, மொத்த நிதிநிலை அறிக்கையில் 2.3%. கடந்த நிதியாண்டின் ரூ.23,99,147 கோடி நிதிநிலை அறிக்கையில், சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு ரூ.52,800 கோடி. அதாவது, 2.2%. இந்த நிதியாண்டில் பெயரளவிற்கு 0.1% சுகாதாரத்துக்காக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. 
பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் என்கிற மருத்துவக் காப்பீட்டுத்  திட்டத்தின் கீழ், இந்திய மக்கள்தொகையில் 40% பேருக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும். அதற்கு ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு தேவைப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ரூ.6,400 கோடி மட்டுமே அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஆயுஷ்மான் பாரத் எப்படி நடைமுறை சாத்தியமாகும் என்பதை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்தான் தெளிவுபடுத்த வேண்டும்.
ஃபிட்னஸ் அண்ட் வெல்னஸ் கிளினிக் எனப்படும் ஒரு லட்சம் நல்வாழ்வு மருத்துவமனைகளுக்கான நிதி ஒதுக்கீடு இந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.1,200 கோடியிலிருந்து ரூ.1,600 கோடியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒவ்வொரு மருத்துவமனைக்கும் ஒரு மாதத்திற்கு ரூ.13,333 அளவில்தான் வழங்க முடியும். இந்தத் தொகையில் நல்வாழ்வு மருத்துவமனைகள் எப்படி செயல்படும் என்று நிதியமைச்சர் எதிர்பார்க்கிறார்? 
அடித்தட்டு மக்களின் மருத்துவச் சேவைக்குத் தனியார் மருத்துவமனைகள் உதவிக்கரம் நீட்டப் போவதில்லை. அரசு மருத்துவமனைகள்தான் ஒரே வழி. இந்த நிலையில், மாவட்ட மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு ரூ.3,108 கோடியிலிருந்து ரூ.2,000 கோடியாக குறைக்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலாக இப்போதிருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மருத்துவக் கல்விக்கான இடங்களை அதிகரிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. 
ஏற்கெனவே மாவட்ட மருத்துவமனைகளைத் தனியாரின் பராமரிப்புக்கு விட்டுவிடுவது என்றும், அதன் மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகள் பயன்பெறும் என்றும் கூறப்படும் நிலையில், அதற்கான முன்னோட்டமாக நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருக்கிறதோ என்கிற ஐயப்பாட்டை எழுப்புகிறது இந்த நிதிநிலை அறிக்கை.
வசதி படைத்தவர்களுக்கு மட்டும்தான் மருத்துவ சிகிச்சை என்கிற நிலைமை ஜனநாயக முரண். கண்காணிக்கப்படாத-ஒழுங்குபடுத்தப்படாத தனியார் மருத்துவமனைகள் மூலம் மட்டுமே மருத்துவ சிகிச்சை என்பது மிகப் பெரிய பிரச்னையை உருவாக்கும்.  
அதைவிடக் கவலை அளிக்கும் மிக முக்கியமான இன்னொரு ஆபத்தும் இதில் அடங்கியிருக்கிறது. மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானோர் அடித்தட்டு மக்களாக இருக்கும் நிலையில் போதுமான, தரமான மருத்துவ வசதி அவர்களுக்கு வழங்கப்படாமல் போனால், அதன் விளைவாக ஏற்படும் பயங்கரமான நோய்த்தொற்றுகளுக்கு ஒட்டுமொத்த தேசமே பலியாகும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 
அடித்தட்டு மக்களின் சுகாதாரம் முறையாகவும் முழுமையாகவும் பேணப்படாமல் போனால், அதனால் ஏற்படும் பாதிப்பு ஒட்டு மொத்த மக்கள்தொகையையும் பாதிக்கும். மெட்ராஸ் ஐ பாதிப்பில் தொடங்கி டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், காலரா, மலேரியா, டைஃபாய்டு என்று அடித்தட்டு மக்களைப் பாதிக்கும் நோய்த் தொற்றுகள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பரவும் என்பதை உணர்ந்தால், வலுவான பொதுத் துறை மருத்துவத்தின் அத்தியாவசியம் என்ன என்பது புரியும்.
இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை குறித்த விவாதங்களில் சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு குறித்து யாருமே கவலைப்படாமல் இருப்பது, நாம் எந்த அளவுக்கு சமூகப் புரிதல் இல்லாமல் இருக்கிறோம் என்பதைத்தான் உணர்த்துகிறது.
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/jul/10/நோய்-நாடிநோய்-முதல்-நாடி-3189127.html
3188249 தலையங்கம் பூனைக்கு யார் மணி கட்டுவது? ஆசிரியர் Tuesday, July 9, 2019 01:30 AM +0530
இந்தியாவில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான காவல் துறை பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. மிக அதிகமான காவல் துறை காலியிடங்கள் உத்தரப் பிரதேசத்திலும், அதைத் தொடர்ந்து பிகார், மேங்கு வங்கம், தெலங்கானா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலும் காணப்படுகின்றன.
2018 ஜனவரி 1 நிலவரப்படி இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றிலுள்ள அனுமதிக்கப்பட்ட காவல் துறைப் பணியாளர்களின் எண்ணிக்கை 24,84,170. ஆனால், 19,41,473 பணியாளர்கள்தான் காவல் துறையில் பணியாற்றுகிறார்கள்.
2017 ஜனவரி மாத நிலவரப்படி 5.38 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது என்றால், 2018-இல் அந்த எண்ணிக்கை 5.43 லட்சமாக அதிகரித்தது. அதே நேரத்தில் அனுமதிக்கப்பட்ட காவல் துறையினரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வந்திருக்கிறது. முறையாகப் பணியிடங்கள் நிரப்பப்படாமல், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை ஏன் அதிகரித்துக் கொண்டிருந்தது என்பது குறித்து உள்துறை அமைச்சகம் சிந்திக்காதது வியப்பை ஏற்படுத்துகிறது.இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட காவல் துறையினரின் எண்ணிக்கை ஒரு லட்சம் பேருக்கு 180 பேர் இருப்பதற்குப் பதிலாக 135 பேர்தான் இருக்கிறார்கள். ஐ.நா. சபையின் பரிந்துரைப்படி, ஒரு லட்சம்  பேருக்குக் குறைந்தது 222 காவல் துறையினர் இருக்க வேண்டும். இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட அளவில்கூட காவல் துறையினர் இல்லாமல் இருப்பதற்கும், குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் நிச்சயமாகத் தொடர்பு உண்டு என்பதை மேலே குறிப்பிட்டபுள்ளிவிரவம் தெளிவுபடுத்துகிறது.
2017-இல் காவல் துறை நவீனமயமாக்கலுக்கு ரூ.25,000 கோடியை மத்திய அமைச்சரவை ஒதுக்கீடு செய்தது. சட்டம் - ஒழுங்கு மாநிலத்தின் பொறுப்பாக இருந்தாலும்கூட, காவல் துறை மேம்பாட்டுக்கு உதவ வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு என்பதை உணர்ந்து அந்த ஒதுக்கீடு செய்யப்பட்டது. 
அதிகரித்து வரும் வன்முறையையும், குற்றங்களையும், பயங்கரவாத ஊடுருவல்களையும் எதிர்கொள்ளத் தேவையான தொழில்நுட்ப மேம்பாடு மாநில காவல் துறையினருக்கு தேவைப்படுகிறது என்பதில் எள்ளளவும் ஐயப்பாடில்லை. அதை உணர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் மத்திய அமைச்சரவையின் காவல் துறை நவீனமயமாக்கலுக்கு செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடு.
மத்திய அரசின் ரூ.25,000 கோடி ஒதுக்கீட்டில், ஜம்மு - காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், நக்ஸல் பாதிப்புள்ள மாவட்டங்கள், பயங்கரவாதத் தடுப்பு உள்ளிட்ட உள்நாட்டுப் பாதுகாப்புப் பயன்பாட்டுக்காக  சுமார் ரூ.10,000  கோடி தரப்பட்டது. மாநில காவல் துறையின் மேம்பாட்டுக்கு ரூ.15,000 கோடி  ஒதுக்கப்பட்டது. காவல் துறை நவீனமயமாக்கலுக்கு மாநிலங்கள் 25% நிதி ஒதுக்கினால், மத்திய அரசு 75% நிதியுதவி அளிக்கும் என்பதுதான் அந்தத் திட்டத்தின் அடிப்படை. 
காவல் துறை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு ஒதுக்கீடு வழங்க முற்பட்டது என்பது மட்டுமல்லாமல், அவர்கள் நவீன ஆயுதங்கள் வாங்குவது, வாகனங்கள் வாங்குவது, நவீன தொலைத்தொடர்பு கருவிகள் வாங்குவது, தடய ஆய்வுக் கூடங்கள் மேம்படுத்துவது ஆகியவற்றுக்குத் தனியாக நிதி வழங்கவும் உள்துறை அமைச்சகம் உதவுகிறது. இந்தியாவிலுள்ள எல்லா காவல்  நிலையங்களையும் தேசிய குற்ற புள்ளிவிவரத் துறையுடன் இணைப்பது மட்டுமல்லாமல் நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், விசாரணை அமைப்புகள்,  ஆவண, புலனாய்வுத் துறை ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைக்கவும் சில திட்டங்களையும் உள்துறை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
என்னதான் தொழில்நுட்ப ரீதியாகவும், நவீனமயமாக்கல் மூலமாக பலப்படுத்தினாலும், போதுமான அளவு காவலர்கள் பணியில் இல்லாமல் போனால், காவல் துறையின் செயல்பாட்டை மேம்படுத்துவது சாத்தியமாகாது. 2006-இல் உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒன்று, காவல் துறையின் செயல்பாடுகள் குறித்த வழிகாட்டுதலை தெளிவுபடுத்த மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. காவலர்களின் செயல்பாடு, நியமனம் மற்றும் இடமாற்ற முடிவுகள், காவல் துறையினரின் ஒழுங்கீனம் குறித்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் ஆகியவை முறைப்படுத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அரசியல் தலைமை சில கண்துடைப்புகளுடன் அந்தத் தீர்ப்பை உதாசீனப்படுத்தியது என்பதுதான் உண்மை.
குறைந்த எண்ணிக்கையில் காவல் துறையினர் இருக்கும் வரை முறையான விசாரணை செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்வது இயலாது. பெரும்பாலான வழக்குகள் போதுமான சாட்சி இல்லாமல் குற்றவாளிகள் தப்பிவிட அது வழிகோலும். 
காவல் துறையினரின் நியமனத்திலும் இடமாற்றத்திலும் ஊழலும், அரசியல் தலையீடும் இருக்கும்வரை அவர்களின் செயல்பாடுகள் தரமானதாகவும், பாரபட்சம் இல்லாமலும் இருக்காது. 
குறைந்த எண்ணிக்கையிலுள்ள காவல் துறையினரை ஆட்சியாளர்கள் தங்களது பாதுகாப்புக்குப் பயன்படுத்துவது தொடரும் வரை அவர்களால் தங்களது அன்றாடக் கடமைகளை நிறைவேற்ற முடியாது. 
அதிகரித்து வரும் தொழில்நுட்பம் சார்ந்த குற்றங்களையும் குற்றங்களின் எண்ணிக்கையையும் எதிர்கொள்ளப் போதுமான பயிற்சியும் ஓய்வும் வழங்கப்படாமல் சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை. எல்லோருக்கும் இது நன்றாகவே தெரியும். இப்படியே தொடர்ந்தால், பாதுகாப்பற்ற சூழலை நோக்கி இந்தியா பயணிக்கும் என்பது மட்டும் உறுதி.
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/jul/09/பூனைக்கு-யார்-மணி-கட்டுவது-3188249.html
3187674 தலையங்கம் தேர்தல்தான் தீர்வு! ஆசிரியர் Monday, July 8, 2019 03:00 AM +0530 கடந்த 14 மாதங்களாக முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கூட்டணி அரசு ஆட்சியில் தொடர்கிறது என்பதுதான் ஆச்சரியம். ஆட்சியைக் காப்பாற்ற காங்கிரஸ் தலைவர்களும் மஜத தலைவர்களும் கடைசி நேர முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும், இதற்காக எல்லாவிதமான குதிரை பேரங்களும் நடந்து வருகின்றன என்பதும், என்ன காரணத்துக்காக இந்த ஆட்சி அமைந்ததோ அந்தக் காரணத்தையே முறியடிக்கிறது.
 கடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில், மிக அதிகமான இடங்களில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியை முறைப்படி ஆட்சி அமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா அனுமதித்ததும், பெரும்பான்மையை நிரூபிக்கப் போதிய அவகாசம் அளித்தும் அரசியல் சாசன வரம்பின் கீழ் உட்பட்டுத்தான் செய்யப்பட்டன. ஆனாலும், பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்று கூறி காங்கிரஸும், மஜதவும் நீதிமன்றத்தை அணுகி உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் உடனடியாக சட்டப்பேரவையில் வாக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டது.
 பெரும்பான்மை பலத்தை எட்டுவதற்கு பாஜகவுக்கு போதிய அவகாசம் அளிக்கப்படாத நிலையில், முதல்வர் எடியூரப்பா நம்பிக்கை தீர்மானத்தை எதிர்கொள்ளாமலேயே பதவி விலகினார். 79 இடங்களில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ், வெறும் 37 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த மஜதக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்து கூட்டணி ஆட்சிக்கு வழிகோலியது.
 முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளர்கள் ஆரம்பம் முதலே மஜதக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்ததை ஏற்றுக்கொள்ளாமல் இருந்த நிலையில், நித்திய கண்டம் பூர்ண ஆயுசாகத்தான் கடந்த 14 மாதங்கள் அந்தக் கூட்டணி அரசு ஆட்சியில் தொடர்கிறது.
 கடந்த வாரம் காங்கிரஸ் உறுப்பினர்களான ஆனந்த் சிங்கும், ரமேஷ் ஜர்கி ஹோலியும் பதவி விலகுவதாக அறிவித்தனர். இரு சுயேச்சைகளின் ஆதரவுடன் 225 பேர் கொண்ட அவையில் ஆளும் கட்சியின் பலம் 115-ஆகக் குறைந்தது. நேற்று 10 காங்கிரஸ் உறுப்பினர்களும் மஜதவின் மூன்று உறுப்பினர்களும் ராஜிநாமா செய்வதாக அறிவித்திருக்கிறார்கள். விரைவிலேயே மேலும் சில காங்கிரஸ் உறுப்பினர்கள் பதவி விலகக்கூடும் என்கிற நிலையில், எந்த நேரமும் ஆட்சி கவிழும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
 காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சிங், கடந்த வாரம் பதவி விலகியதற்கு முதல்வர் குமாரசாமி எடுத்த ஒரு முடிவுதான் காரணம். ஆனந்த் சிங்கின் தொகுதியான விஜயநகரில் 3,677 ஏக்கர் நிலத்தை, ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1.20 லட்சம் விலையில் பலாரி என்கிற இடத்தில் உள்ள ஜெ.எஸ்.டபிள்யு. உருக்கு ஆலைக்கு அளித்ததற்கு அமைச்சரவை எடுத்த முடிவுதான் அவர் பதவி விலகக் காரணம். தனது தொகுதிக்கும், தொகுதி மக்களுக்கும் எதிரான அந்த முடிவை ஆரம்பம் முதலே அவர் எதிர்த்து வந்தார்.
 கோகக் தொகுதி உறுப்பினர் ரமேஷ் ஜார்கி ஹோலி, கூட்டணி ஆட்சி அமைந்தது முதலே அதிருப்தியாளராகத்தான் தொடர்ந்து வந்திருக்கிறார். முதல்வர் குமாரசாமியின் பல முடிவுகள் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களை மிகவும் காயப்படுத்தி இருக்கின்றன. அவரது அமைச்சரவை விரிவாக்கம் காங்கிரஸில் மட்டுமல்லாமல் மஜதவிலும் அதிருப்தியாளர்களை உருவாக்கி இருக்கிறது. மஜத தலைவர் தேவெ கௌடாவுக்கும், காங்கிரஸின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையாவுக்கும் இடையேயான அரசியல் பகை புதிதொன்றுமல்ல.தேவெ கௌடாவின் மகன் குமாரசாமி மஜதவில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அந்தக் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தவர் சித்தராமையா. அதனால், அவரது முதல் அரசியல் எதிரியாக பாஜகவைவிட, மஜதவைதான் கருதி செயல்படுபவர். இப்போது போர்க்கொடி தூக்கியிருக்கும் பலரும் அவரது ஆதரவாளர்களாக இருப்பது வியப்பை ஏற்படுத்தவில்லை.
 மஜதவின் மூன்று உறுப்பினர்களும் காங்கிரஸின் 10 உறுப்பினர்களும் தங்களது பதவி விலகல் கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவர் அலுவலகத்திலும் ஆளுநர் வஜுபாய் வாலாவிடமும் அளித்துவிட்டு மும்பை நட்சத்திர விடுதியில் அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள். அவர்களைத் திருப்திப்படுத்தவும் சமாதானப்படுத்தவும் குதிரை பேரம் நடந்து கொண்டிருக்கிறது. பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடும் என்று கூறி பெரும்பான்மையை நிரூபிக்க கால அவகாசம் வழங்கக்கூடாது என்று உச்சநீதிமன்றத்துக்கு போன காங்கிரஸும் மஜதவும், இப்போது குதிரை பேரத்துக்கு காலஅவகாசம் பெற்றுக்கொண்டிருக்கின்றன.
 கடந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அப்போதே ஆளுநர் ஆட்சியை அறிவித்து மறுதேர்தலுக்கு வழிகோலியிருக்க வேண்டும். கடந்த 14 மாதங்கள் எந்தவித இலக்கும் இல்லாமல், ஊழல் கட்டவிழ்த்துவிடப்பட்டு, நிர்வாகம் சீர்குலைந்து, குமாரசாமி தலைமையில் ஆட்சி என்கிற பெயரில் ஜனநாயகம் தடம்புரள வழிகோலப்பட்டது. இனியும் அந்தக் கேலிக்கூத்து தொடரக்கூடாது.
 உடனடியாக ஆட்சியைக் கலைத்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி, ஹரியாணா, மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுடன் கர்நாடக மாநிலத்திலும் வரும் டிசம்பர் மாதம் தேர்தலை நடத்துவதுதான் இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வாக இருக்கும். காங்கிரஸாக இருந்தாலும், மஜதவாக இருந்தாலும், பாஜகவாக இருந்தாலும் சரி, போதும் குதிரைப் பேர கூட்டணி ஆட்சி!
 
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/jul/08/தேர்தல்தான்-தீர்வு-3187674.html
3186413 தலையங்கம் இன்னுமொரு பட்ஜெட்!  ஆசிரியர் Saturday, July 6, 2019 03:06 AM +0530 மிகப் பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் இருந்ததாலோ என்னவோ, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் முதல் நிதிநிலை அறிக்கை எந்தவிதமான விமர்சனத்தையும் எழுப்பவில்லை. இன்னொரு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது, அவ்வளவே!
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அதிகம் வேலை வைக்காமல், கடந்த ஏப்ரல் மாதம் முந்தைய நிதியமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ஏகப்பட்ட சலுகைகள் வாரி வழங்கப்பட்டு விட்டன. அவர் இந்த நிதியாண்டுக்கான அடிப்படைகளை ஏற்படுத்திவிட்டதால், அதிகம் சிரமப்படாமலும், அலட்டிக் கொள்ளாமலும் பயணித்திருக்கிறார் நிர்மலா சீதாராமன்.
நடுத்தர வர்க்கத்தினரைத் தொடாமல், கோடீஸ்வரர்களைக் குறி வைத்து சில வரிவிதிப்புகளை மேற்கொண்டிருப்பது வரவேற்புக்குரியது. ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை வருமானம் உள்ளவர்களுக்கு 3%, ரூ.5 கோடிக்கும் மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 7% என்று அவர்களது வருமான வரியில் கூடுதல் வரி விதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, ரூ.400 கோடிக்கும் அதிகமான விற்றுவரவுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய்க்கு 25% வரி அறிவித்திருப்பது நல்ல முடிவு.
நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் வழங்கப்பட்டிருக்கும் குறிப்பிடத்தக்க சலுகை, ரூ.45 லட்சம் வரை மதிப்புள்ள வீட்டுக் கடன் வாங்குவோருக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1.5 லட்சம் வட்டி மானியம் அளிக்கப்பட்டு வந்தது. இப்போது அதை ரூ.3.5 லட்சமாக நிதியமைச்சர் உயர்த்தியிருக்கிறார். அதன்படி, ரூ.45 லட்சம் வரையிலான மதிப்பைக் கொண்ட முதல் வீடு வாங்குவதற்கு கடன் பெறுவோர் செலுத்தும் வட்டியில் பெறும் கழிவு ரூ.3.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் வாகனங்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. சாதாரண பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு 28% வரி விதிக்கப்படுகிறது என்றால், மின்சார வாகனங்களுக்கு வெறும் 5% மட்டுமே வரி என்று அறிவித்திருக்கிறார். மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு கடன் வசதி தரப்படுவதுடன் அதற்கான  வட்டிக்கு வரிவிலக்கும் அளிக்கப்படுவது புதிய முயற்சி. போதுமான கட்டமைப்பு வசதியோ, திட்டமிடலோ இல்லாமல், மின்சார வாகனங்களின் அதிகரித்த பயன்பாடு எப்படி சாத்தியப்படும் என்பது குறித்து அரசு சிந்தித்திருக்கிறதா என்று தெரியவில்லை.
இதுவரை பான் எனப்படும் வருமான வரிக் கணக்கு எண்ணின் அடிப்படையில்தான் வரி செலுத்தப்பட்டு வந்தது. இப்போது ஆதார் எண்ணின் அடிப்படையிலும் வரி செலுத்தலாம் என்று அமைச்சர் அறிவித்திருக்கிறார். அப்படியானால், பான் அட்டை, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட இருக்கிறதா, இல்லை பான் அட்டை கைவிடப்படுகிறதா என்பது குறித்த தெளிவு இல்லாமல் இருக்கிறது. 
ரொக்கப் பரிமாற்றம் குறைக்கப்பட வேண்டும் என்கிற இலக்கை 2014-இல் பதவிக்கு வந்தது முதல்  பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார். இப்போது ரூ.1 கோடிக்கும் அதிகமாக வங்கியிலிருந்து ரொக்கப் பணம் எடுப்பவர்களுக்கு 2% வரி விதிக்கப்பட்டிருக்கிறது. 2% வரி செலுத்திவிட்டு, அந்த அதிக அளவில் ரொக்கப் பணத்தைக் கையாளவாப் போகிறார்கள்? கருப்புப் பணப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் முயற்சியாகத்தான் இது முடியும். அரசின் நோக்கம் ரொக்கப் பரிமாற்றத்தைக் குறைப்பதாக இருந்தால், ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கப் பணம் எடுப்பதற்கே, 30% என்று வரி விதிக்கப்பட்டிருக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் மீதான வரி அதிகரிப்பு எரிச்சலூட்டுகிறது. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிவிதிப்பு வரம்புக்குள் கொண்டு வருவதற்குப் பதிலாக, வரியை உயர்த்தி விலையை அதிகரிப்பது, நடுத்தர வர்க்கத்தினரை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிப்பது மட்டுமல்ல, விலைவாசியையும் அதிகரிக்கும்  என்பது நிதியமைச் சருக்கு ஏன் புரியவில்லை? தங்கம் மீதான இறக்குமதி சுங்கவரி உயர்வு கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால், கடத்தல் தங்கம் சந்தையில் புழங்கப்போகிறதே, அதை எப்படித் தடுக்கப் போகிறோம்?
இந்தியப் பொருளாதாரத்தின் மிகப் பெரிய பிரச்னை வேலைவாய்ப்பின்மை. அதற்குத் தீர்வு, கட்டுமானத் துறையும், சிறு, குறு தொழில்களும் புத்துயிர் பெறுவதுதான். வங்கி சாரா நிதி நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கி இருக்கிறார் நிதியமைச்சர். நலிந்து கிடக்கும் நிதி நிறுவனங்கள் இந்தப் பணத்தால் செயல்படத் தொடங்கலாமே தவிர, சிறு, குறு தொழில்களின் செயல்பாட்டுக்கு உதவிட முடியாது. அவலை நினைத்து உரலை இடிக்கிறார் நிர்மலா சீதாராமன்.
இந்தியாவின் தண்ணீர்த் தேவை குறித்து நிர்மலா சீதாராமனின் நிதிநிலை அறிக்கை கவலைப்பட்டிருக்கிறது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. உடனடி செயல்பாட்டுக்கு இது உதவாது என்பதையும் கூறியாக வேண்டும். பங்குச் சந்தையில் பதிவு செய்யும் நிறுவனங்களில் பொது மக்களின் பங்களிப்பு 25%-ஆக இருந்ததை 35%-ஆக உயர்த்தியிருப்பது நல்ல முடிவு. அதை 50% வரை அதிகரித்தாலும் தவறில்லை.
நிர்மலா சீதாராமனின் நிதிநிலை அறிக்கையில், பெரிய புத்திசாலித்தனமோ, பாராட்டி மகிழும்படியான அறிவிப்புகளோ இல்லை. ஒருமாத காலத்தில் தயாரிக்கப்பட்ட மிகச் சாதாரணமான நிதிநிலை அறிக்கை. இதனால், பொருளாதாரத்திற்கோ, சாமானிய மக்களின் வாழ்க்கையிலோ, எந்தவிதத் தாக்கமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை!
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/jul/06/இன்னுமொரு-பட்ஜெட்-3186413.html
3185496 தலையங்கம் சவாலும் எதிர்பார்ப்பும்! ஆசிரியர் Friday, July 5, 2019 01:33 AM +0530 இந்திய வரலாற்றில் முதல் முறையாக முழுநேர நிதியமைச்சராக  ஒரு பெண்மணி இன்று நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய இருக்கிறார். 2014-இல் நரேந்திர மோடி தலைமையில் முந்தைய ஆட்சி அமைந்தபோது இருந்த சூழலே வேறு. சர்வதேசப் பொருளாதாரம், கச்சா எண்ணெய் விலை, இந்தியாவின் வளர்ச்சி விகிதம் என்று அனைத்துமே சாதகமாக இருந்த நேரம் அது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு முந்தைய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்குக் கிடைத்த வாய்ப்பைப் போன்றதல்ல, இப்போது இரண்டாவது முறையாக நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைத்திருக்கும் நிலையில் நிர்மலா சீதாராமனுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு.
நிர்மலா சீதாராமனின் முதல் நிதிநிலை அறிக்கை பற்றாக்குறை அறிக்கையாக இருக்கப் போகிறதா என்றால், எந்தவித ஐயப்பாடும் இல்லாமல் அது ஒரு பற்றாக்குறை நிதிநிலை அறிக்கையாகத்தான் இருக்கும். பற்றாக்குறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது தவறு என்று கூறிவிட முடியாது. 1949, 1950-ஆம் ஆண்டுகளைத் தவிர, சுதந்திர இந்தியாவில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் அத்தனை நிதிநிலை அறிக்கையுமே பற்றாக்குறை அறிக்கைதான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
செலவினத்தைவிட வருவாய் அதிகமாக இருந்தால், அது உபரி நிதிநிலை அறிக்கை. பொருளாதாரம் உச்சகட்ட வளர்ச்சியில் இருந்து, வேலைவாய்ப்பு அதிகரித்துக் காணப்பட்டால், வரி வருவாய் அதிகரிக்கும். நிதிநிலை உபரியாக இருக்கும். விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசில நாடுகள் மட்டும்தான் உபரி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கின்றன.
வருமானத்தைவிட செலவினங்கள் அதிகரிக்கும்போது, பற்றாக்குறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. பொருளாதாரம் சற்று பலவீனமாக இருந்து, வேலைவாய்ப்பின்மை அதிகமாகக் காணப்படும். வளரும் பொருளாதார நாடுகளில் பற்றாக்குறை நிதிநிலை அறிக்கைதான் தாக்கல் செய்யப்படும். வளர்ச்சிப் பணிகளுக்காகவும், கட்டமைப்பு வசதிகளுக்காகவும், மக்கள் நல்வாழ்வுக்காகவும் கடன் வாங்கித்தான், அதிக பற்றாக்குறையை ஈடுகட்ட முடியும். 
இந்தியா மட்டுமல்ல, உலகின் பெரும்பாலான நாடுகளில் பற்றாக்குறை நிதிநிலை அறிக்கைதான் தாக்கல் செய்யப்படுகின்றன. உலகின் மிகப் பெரிய பொருளாதாரம் என்று கருதப்படும் அமெரிக்காவையே எடுத்துக்கொள்வோம். 20 டிரில்லியன் டாலர் பொருளாதாரமான அமெரிக்காவின் நிதிப் பற்றாக்குறை 22 டிரில்லியன் டாலர். இந்தப் பின்னணியில்தான், நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்ய இருக்கும் அவரது முதல் நிதிநிலை அறிக்கையை நாம் பார்க்க வேண்டும்.
நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கிடைத்திருக்கும் அவகாசம் வெறும் ஒரு மாதம் மட்டும்தான். இந்தக் குறுகிய இடைவெளியில் அவரால் ரசவாத வித்தையா காட்டிவிட முடியும்? இந்தியாவின் பொருளாதாரமும், நிதிநிலையும் அவருக்குச் சாதகமாக இல்லாத சூழலில் தனது முதலாவது நிதிநிலை அறிக்கையை எந்த அளவுக்கு சாதுர்யமாகத் தயாரித்து அவர் சமாளிக்கப் போகிறார் என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும்.
பொருளாதாரத்தை முடுக்கிவிட அவர் சில ஊக்க நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். அப்படிச் செய்ய முற்படும்போது, நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாது. வரி வருவாய் சாதகமாகவோ, உதவியாகவோ இல்லாத சூழலில், சுணக்கத்தில் இருக்கும் பொருளாதாரத்தை அவர் எப்படி முடுக்கிவிட்டு சுறுசுறுப்பாக்கப் போகிறார் என்பதில்தான் அவரது நிதிநிலை அறிக்கையின் வெற்றி அடங்கி இருக்கிறது.
வேலைவாய்ப்பின்மை மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. ஊபர், ஓலா ஓட்டுநர்களாகவும், ஸ்விகி, ùஸாமட்டோ, உணவு விநியோக நிறுவன ஊழியர்களாகவும், பல்பொருள் அங்காடித் தொழிலாளர்களாகவும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்று கருதுவது சிறுபிள்ளைத்தனம். உத்தரவாதமுள்ள, பாதுகாப்பான வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதுதான் அரசின் கடமை. அதை உடனடியாக சாதித்துவிட முடியாது என்றாலும், அதற்கான இலக்கை நோக்கிய திட்டமிடல் நிதிநிலை அறிக்கையில் இருக்க வேண்டும்.
மோட்டார் வாகனம், மனை வணிகம் மற்றும் குடியிருப்புக் கட்டுமானம், சில்லறை வணிகம், தகவல் தொலைத்தொடர்பு, விவசாயம் ஆகிய துறைகள் முடங்கிப்போய்க் கிடக்கின்றன. சிறு, குறு தொழிற்சாலைகள் நாணய மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. அறிமுகத்தால் பாதிக்கப்பட்டன, இன்னும் மீண்டெழுந்தபாடில்லை. இந்தத் துறைகள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் நிதிநிலை அறிக்கையில் எந்த அளவுக்கு முன்னுரிமை பெறுகின்றன என்பதைப் பொருத்துத்தான் இந்தியப் பொருளாதாரத்தின் எழுச்சியும், அவரது நிதிநிலை அறிக்கையின் வெற்றியும் இருக்கும்.
இந்தியாவின் ஜிடிபியில் 5% முதல் 6%  வரை பங்களிப்பு நல்கும் குடியிருப்புத் துறைக்கு ஊக்கம் அளிப்பதன் மூலம், அதிக அளவில் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும். 2013-இல் தொடங்கப்பட்ட 5.6 லட்சம் தொழில்கள் நின்று போயிருக்கின்றன. அவற்றுக்கு ஊக்கமளித்து உயிர்ப்பிப்பதன் மூலம், வேலைவாய்ப்புச் சந்தைக்கு ஆண்டுதோறும் வரும் எழுபது லட்சம் இளைஞர்களில் கணிசமானவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும்.
நிர்மலா சீதாராமனின் முதல் நிதிநிலை அறிக்கையில் மிகப் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கவில்லை. ஆனால், பொருளாதாரத்தில் காணப்படும் மந்த நிலையை மாற்றுவதற்கான முயற்சியும், அடுத்த ஐந்தாண்டு காலத்துக்கான தொலைநோக்குத் திட்டமிடலும் இருந்தாலே போதும், அவர் வெற்றி அடைந்ததாகக் கருதலாம்.
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/jul/05/சவாலும்-எதிர்பார்ப்பும்-3185496.html
3184686 தலையங்கம் ஐ.நா.வில் இந்தியா... ஆசிரியர் Thursday, July 4, 2019 01:36 AM +0530 இந்தியாவுக்கு சர்வதேச அளவில் மரியாதையை ஏற்படுத்திக் கொடுக்கும் ராஜதந்திர ரீதியிலான வெற்றி ஒன்று போதிய கவனத்தைப் பெறவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் இந்தியா மீண்டும் இடம்பெறுவதற்கான வாய்ப்பு கைகூடும் நிலையை எட்டியிருக்கிறது.
பத்து உறுப்பு நாடுகளைக் கொண்டது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழு. அந்த பத்து உறுப்பினர்களில் ஐந்து உறுப்பினர்கள் நிரந்தர உறுப்பினர்கள். ஏனைய ஐந்து உறுப்பினர்கள் சுழற்சித் தேர்தல் மூலம் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்த உறுப்பினர்கள் நிரந்தரமில்லாத உறுப்பினர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். 
ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாக உள்ள ஆசிய பசிபிக் பகுதியைச் சேர்ந்த 55 நாடுகள் ஒருமனதாக 2021-22-க்கான நிரந்தரமில்லாத உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்படுவதை அங்கீகரித்திருக்கின்றன. இந்தக் குழுவில் நிரந்தரமில்லாத பதவிக்கு விழைந்த ஒரே நாடு இந்தியாதான் என்பதும், அனைத்து நாடுகளும் இந்தியாவின் தேர்வை அங்கீகரித்திருக்கின்றன என்பதும் நமக்குக் கிடைத்திருக்கும் முதல்கட்ட வெற்றி.
அடுத்தகட்டமாக, ஐ.நா.வின் பொதுச்சபை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நிரந்தரமில்லாத ஐந்து உறுப்பினர்களைத் தேர்வு செய்ய இருக்கிறது. ஐ.நா. பொதுச்சபையின் 193 உறுப்பினர்கள் நாடுகள் அந்தத் தேர்தலில் வாக்களிக்கும். 129 நாடுகளின் ஆதரவு இருந்தால்தான் ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் உறுப்பினராக முடியும். 1950-51 முதல் ஏழு முறை இதற்கு முன்னால் இந்தியா ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவில் நிரந்தரமில்லாத உறுப்பினர் குழுவில் பதவி வகித்திருக்கிறது.
கடந்த 2011-12-இல் ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவில் உறுப்பினராக இருந்த இந்தியாவின் பதவிக்காலம் முடிவடைந்தது. சுழற்சி முறையில் 2030-இல்தான் இந்தியாவுக்கு மீண்டும் பாதுகாப்புக்  குழு உறுப்பினராகும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். ஆனால், கடந்த ஏழு ஆண்டுகளாகவே 2021-22-இல் மீண்டும் பாதுகாப்புக் குழு உறுப்பினராகும் வாய்ப்புக்கு இந்தியா தனது முயற்சியைத் தொடங்கிவிட்டது. சர்வதேச அளவில் தீர்மானங்களை எடுக்கும் முதன்மையான குழுவாக ஐ.நா.வின் பாதுகாப்புக் குழு இருப்பதால் அதில் இந்தியா இடம்பெறுவது அவசியம் என்பதில் ஐயப்பாட்டுக்கு இடமில்லை. 
ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவில் இந்தியாவால் சில சிறப்பான பணிகளில் ஈடுபட முடியும். நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவை ஓரணியாகவும், ரஷியாவும் சீனாவும் இன்னொரு அணியாகவும் இருக்கும் நிலையில், அந்த இரண்டு அணிகளுடனும் இணைந்து செயல்படும் தகுதியும் உறவும் உள்ள ஒரே நாடாக இந்தியா திகழ்கிறது. நிரந்தரமில்லாத உறுப்பினர் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதை ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவின் ஐந்து நிரந்தர உறுப்பினர் நாடுகள் விரும்புவதற்கு அது ஒரு முக்கியமான காரணம்.
2021-22-ஆம் ஆண்டுகளில் பாதுகாப்புக் குழுவின் நிரந்தரமில்லாத உறுப்பினராக இருக்க வேண்டிய நாடு ஆப்கானிஸ்தான். அதற்கான முயற்சியில் ஆப்கானிஸ்தான் ஈடுபட்டு வந்தது. இந்தியாவுடனான நெருக்கமான உறவின் அடிப்படையில், நமது கோரிக்கையை ஏற்று இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்க ஆப்கானிஸ்தான் முன்வந்திருக்கிறது. 
நம்முடனான இருநாட்டு உறவில் பல பிரச்னைகள் இருந்தாலும்கூட, இந்தியாவுக்கு ஆதரவு தர பாகிஸ்தான் முற்பட்டிருக்கிறது என்பது எதிர்பாராத திருப்பம். பாகிஸ்தான் மட்டுமல்ல, சீனாவும்கூட ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவிற்கான இந்தியாவின் வேட்புமனுவை ஆதரிக்க முன்வந்திருக்கிறது. பாகிஸ்தான், சீனா ஆகிய இரு நாடுகளின் முடிவை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, ராஜாங்க ரீதியிலான நட்புறவை இந்தியா மேம்படுத்திக்கொள்ள மிக முக்கியமான வாய்ப்பாக ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவுக்கான தேர்தல் அமையக்கூடும்.
ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவில் கடந்த ஏழு முறை இந்தியா பதவி வகித்தபோது, பல்வேறு பிரச்னைகளில் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமலும், முடிவெடுக்காமலும் தனது பொறுப்பைத் தட்டிக் கழித்திருக்கிறது. அதனால், துணிந்து எந்த முடிவையும் எடுக்காத உறுப்பினர் என்கிற அவப்பெயர் இந்தியாவுக்கு உண்டு. 
பெரும் வல்லரசாகத் தன்னை உருவாக்கிக்கொள்ள முனையும் சீனா ஒருபுறமும், ஐ.நா. சபையின் மீதான தனது பொறுப்புகளையும், கடமைகளையும் குறைத்துக் கொள்ளும் மனநிலையில் அமெரிக்கா இன்னொருபுறமும் இருக்கும் காலகட்டத்தில் ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவில் நிரந்தரமில்லாத உறுப்பினராகும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைக்க இருக்கிறது. இரண்டு அணிகளுடனும் நட்புறவை வைத்திருக்கும் இந்தியா, இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு உலக வல்லரசுகளை இணைந்து செயல்பட வைக்கும் உறவுப் பாலமாக மாற வேண்டும். 
2022-இல் ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினராகும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைத்தால் அதில் இன்னொரு சிறப்பும் இருக்கிறது. இந்தியா விடுதலை பெற்ற 75-ஆவது ஆண்டைக் கொண்டாடும் நிலையில், நமக்குக் கிடைக்கும் சர்வதேச அங்கீகாரம் என்பதுதான் அந்தச் சிறப்பு. இந்தியாவைப் பொருத்தவரை, மக்கள்தொகை அடிப்படையிலும் உலகின் நான்காவது பெரிய பொருளாதாரம் என்கிற அடிப்படையிலும், ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் நிரந்தர உறுப்பினராகும் எல்லாத் தகுதியும் நமக்கு இருக்கிறது. இந்தியாவின் அடுத்தகட்ட முயற்சி அதுவாகத்தான் இருக்க வேண்டும்.
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/jul/04/ஐநாவில்-இந்தியா-3184686.html
3183934 தலையங்கம் பதவி போதை படுத்தும் பாடு! ஆசிரியர் Wednesday, July 3, 2019 01:43 AM +0530 நாடாளுமன்ற பாஜக உறுப்பினர்களின் முதலாவது கூட்டத்தில் அதிகார துஷ்பிரயோகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி வன்மையாகக் கண்டித்திருக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும், பாஜகவினரும் கட்சியின் கெளரவத்தைக் குலைக்கும் விதத்தில் நடந்து கொள்வதை சாடி இருக்கும் அவர், அதுபோன்ற செயல்பாடுகளுக்கு எதிரான தனது ஆத்திரத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். பிரதமரின் சீற்றத்துக்கும், பரவலாக பொதுமக்கள் மத்தியில் எழுந்திருக்கும் கோபத்துக்கும் வெவ்வேறு மாநிலங்களில் நடந்திருக்கும் அனுமதிக்க முடியாத இரண்டு அதிகார துஷ்பிரயோகங்கள்தான் காரணம்.
கடந்த ஜூன் 26-ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மாநகராட்சி அதிகாரி ஒருவரை 34 வயது பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஆகாஷ் விஜயவர்கியா கிரிக்கெட் மட்டையால் தாக்கிய நிகழ்வு சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவியது. நீதிமன்ற உத்தரவின்படி, இந்தூர் மாநகராட்சி நிர்வாகம் ஒரு கட்டடத்தை இடிப்பதற்கு முற்பட்டது. அப்போது அந்தப் பகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரான ஆகாஷ் விஜயவர்கியாவின் தலைமையில் பாஜக தொண்டர்கள் மாநகராட்சி அதிகாரிகளைத் தங்களது கடமையை நிறைவேற்றவிடாமல் தடுத்தனர். அதிகாரி ஒருவரை அருகில் இருந்த கிரிக்கெட் மட்டையால் ஆத்திரத்துடன் அடித்து விரட்ட முற்பட்டிருக்கிறார் ஆகாஷ். இது செல்லிடப்பேசியில் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.
ஆங்காங்கே இடிந்துவிழும் நிலையில் இருக்கும் அந்தக் கட்டடம், குடியிருப்புக்கு ஏற்றதல்ல என்று மாநகராட்சி நிர்வாகம் மட்டுமல்ல, நீதிமன்ற விசாரணையிலும் தெரியவந்திருக்கிறது. இத்தனைக்குப் பிறகும், சட்டப்பேரவை உறுப்பினரான ஆகாஷ் விஜயவர்கியா, மாநகராட்சி அதிகாரி திரேந்திர பயாஸ்ஸை மக்கள் நலன் என்கிற பெயரில் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதை என்னவென்று நியாயப்படுத்துவது?
இடிக்கப்பட இருக்கும் கட்டடத்திலிருந்து பெண்மணி ஒருவரை அந்த ஊழியர் பலவந்தமாக இழுத்து வெளியேற்ற முற்பட்டதாகவும், அதனால் ஆத்திரமடைந்து அவரைக் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதாகவும் தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார் ஆகாஷ். அவரது விளக்கம் உண்மையாகவே இருந்தாலும், இது குறித்து விசாரிக்கவும் தண்டிக்கவும் காவல் துறைக்கும் நீதிமன்றத்துக்கும்தான் அதிகாரமே தவிர, சட்டப்பேரவை உறுப்பினருக்கு அரசு அலுவலர் ஒருவரைத் தாக்குவதற்கான அதிகாரம் இல்லை என்பது பொறுப்பான எம்.எல்.ஏ. பதவி வகிக்கும் அவருக்கு எப்படித் தெரியாமல் போனது?
 தெலங்கானாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆளுங்கட்சியான தெலங்கானா ராஷ்டிர சமிதி உறுப்பினர் ஒருவரின் சகோதரரும், அரசியல்வாதியுமான கொனேறு கிருஷ்ணா ராவ் என்பவரின் செயல்பாடு, இந்தூர் சம்பவத்தைப்போலவே வன்மையான கண்டனத்துக்குள்ளாகிறது. பெண் வனத்துறை அதிகாரி ஒருவர், வனத் துறைக்குச் சொந்தமான ஒதுக்கீட்டு நிலத்தில் தனது குழுவினருடன் மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கே வந்த கொனேறு கிருஷ்ணா ராவ், அந்த இடம் தங்களுக்குச் சொந்தமானது என்றும், அதிலிருந்து வெளியேறும்படியும் அந்தப் பெண் அதிகாரியை மிரட்டி இருக்கிறார். 
அந்தப் பகுதி வனத்துறைக்குச் சொந்தமானது என்று கூறி, தனது மேலதிகாரிகளின் உத்தரவுப்படி அங்கே மரக் கன்றுகளை நடுவதற்கான உத்தரவைக் காண்பித்திருக்கிறார் அந்தப் பெண் அதிகாரி. அந்த உத்தரவைக் கிழித்துப்போட்டது மட்டுமல்லாமல், கொனேறு கிருஷ்ணா ராவ் அந்த அதிகாரியை ஆத்திரத்தில் கன்னத்தில் அறைந்ததை சக அதிகாரி ஒருவர் செல்லிடப்பேசியில் படமெடுத்ததன் விளைவு, சமூக ஊடகங்கள் அந்த நிகழ்வை தேசிய அளவில் எடுத்துச் சென்றுவிட்டன. 
ஆளுங்கட்சி அரசியல்வாதிகளின் தவறுகளை சாமானியக் குடிமகன் தட்டிக்கேட்க முற்பட்டால், சட்டத்தை உங்கள் கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கூறும் அரசியல்வாதிகள், சட்டத்தைத் தங்கள்கையில் எடுத்துக்கொண்டு அதிகார வர்க்கத்தை அச்சுறுத்துவது மட்டும் எந்த விதத்தில் நியாயம்? தேசத்துரோக குற்றம், கிரிமினல் மான -நஷ்ட வழக்கு என்று ஊடகவியலாளர்களையும், இடித்துரைப்பாளர்களையும் (விஸில்புளோயர்ஸ்) பிரிட்டிஷ் காலனிய ஆட்சிச் சட்டங்களின் மூலம் வாய்ப்பூட்டுப் போடும் அரசியல்வாதிகள், தங்களது அதிகார துஷ்பிரயோகத்துக்கு அரசியல் சாசன விலக்குத் தரப்பட்டிருப்பதாக எண்ணிச் செயல்படுகிறார்கள் என்று தோன்றுகிறது.
அரசியல்வாதிகளின் இதுபோன்ற போக்குக்கு அதிகார வர்க்கமும் ஒரு வகையில் காரணம் என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. தங்களது பதவி உயர்வுக்காகவும், அரசியல்வாதிகளுடன் சேர்ந்து ஊழலில் பங்கு பெறுவதற்காகவும் சுயமரியாதையையும், தங்களது பதவிக்கான கெளரவத்தையும் அதிகாரிகளில் பலர் அடகு வைக்கும் போக்கு கடந்த அரை நூற்றாண்டு காலமாக அதிகரித்து வருவதன் காரணத்தால்தான், அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகளைத் தங்களது ஏவலர்களாகக் கருத முற்பட்டிருக்கிறார்கள்.
அரசியல்வாதிகளே இல்லாமல்கூட இயல்பு நிலையில் இந்தியா செயல்படும். ஆனால், அதிகாரிகளும், அரசு ஊழியர்களும்  இல்லாமல் போனால், ஒட்டுமொத்த நிர்வாகமே ஸ்தம்பித்துவிடும். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 
அரசு ஊழியர்கள் அடிவருடிகள் ஆகிவிட்டார்கள் என்கிற அரசியல்வாதிகளின் மனத்துணிவின் வெளிப்பாடுகள்தான் தெலங்கானாவிலும் மத்தியப் பிரதேசத்திலும் நடந்திருக்கும் மேலே குறிப்பிட்ட இரண்டு நிகழ்வுகளும். இந்த நிலை இப்படியே தொடர்ந்தால், நாளைய இந்தியா எப்படி இருக்கும் என்பதை இந்நாட்டு மன்னர்கள்தான் (குடிமக்கள்) சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/jul/03/பதவி-போதை-படுத்தும்-பாடு-3183934.html
3183195 தலையங்கம் கோடீஸ்வரர்களின் கூடாரம்! ஆசிரியர் Tuesday, July 2, 2019 01:32 AM +0530 பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும்கூட, நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்றிரண்டு சொகுசு வாகனங்களைப் பார்ப்பதுகூட அரிதாக இருக்கும். இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தின் வாகன நிறுத்தத்தில் இப்போது சாதாரண சிறிய வாகனங்கள் தென்படுவதில்லை என்பதுதான் நிலைமை.
10-ஆவது மக்களவையின் உறுப்பினர்களில் பலர், நிதிநிலை அறிக்கை விவாதிக்கப்பட்டபோது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்கிற வேறுபாடில்லாமல் ஒரு கோரிக்கையை முன்வைத்துக் குரலெழுப்பினார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சொந்த வாகனம் வாங்குவதற்கு, தவணை முறைக் கடன் வசதி செய்து தரப்பட வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை. 
அப்போதெல்லாம் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்தும், ஆட்டோ ரிக்ஷாக்களிலும், பொது வாகனங்களிலும் நாடாளுமன்ற நுழைவாயிலை அடைந்து, அங்கிருந்து நாடாளுமன்ற வளாகத்துக்கு நாடாளுமன்ற வாகனங்களில் செல்வது வழக்கமாக இருந்தது. இப்போது இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்களையும், இணையமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில பாஜக உறுப்பினர்களையும் தவிர, ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் தங்களது விலை உயர்ந்த வாகனங்களில்தான் நாடாளுமன்றத்துக்கு வருகிறார்கள். ஜனநாயகத்தின் கோயில் இப்போது ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் நிகராகக் காட்சி அளிக்கும் அவலத்தை என்னவென்று கூறுவது? 
கோடீஸ்வரர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும், வெற்றி பெற முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டிருப்பதன் விளைவுதான், நாடாளுமன்றத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் கோடீஸ்வரர்களாக இருப்பதற்குக் காரணம். அதனால், தங்களது பணக்காரத்தனத்தைப் பறைசாற்றிக் கொள்ளும் போக்குக்கு மரியாதை ஏற்பட்டிருப்பதில் வியப்படைய ஒன்றுமில்லை. 
2009-இல் இருந்த 15-ஆவது மக்களவையின் 543 உறுப்பினர்களில் 315 பேர் கோடீஸ்வரர்கள். 2014-இல் 16-ஆவது மக்களவையில் 443 பேர் கோடீஸ்வரர்கள். தற்போதைய 17-ஆவது மக்களவையில் 475 பேர் கோடீஸ்வரர்கள். அவர்களது சராசரி சொத்து மதிப்பு ரூ.20.93 கோடி என்றாலும்கூட, பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல நூறு கோடிகளுக்கு அதிபர்கள் என்பது நாடறிந்த உண்மை.
தேர்தலுக்குத் தேர்தல் மக்கள் பிரதிநிதிகளின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரிப்பதன் ரகசியம் என்னவென்று விசாரணை நடத்துவதிலோ ஆய்வு செய்வதிலோ அர்த்தமொன்றும் இல்லை. அதன் காரணம், உறுப்பினர்களுக்கும், வருமான வரித் துறைக்கும், வாக்களிக்கும்  வாக்காளர்களுக்கும் நன்றாகவே தெரியும். 
நமது அரசியல்வாதிகள் மிகவும் புத்திசாலிகள். எப்படி சம்பாதித்தார்கள் என்பது குறித்த கேள்வியில்லாமல், ஈட்டிய வருமானத்துக்கு வருமான வரி செலுத்திவிட்டால், இந்தியாவில் நேர்மையான வரி செலுத்தும் குடிமக்களாகிவிடுகிறார்கள். வரி செலுத்தப்பட்டதா என்பது மட்டும்தான் கேள்வியே தவிர, வருமானம் எப்படி ஈட்டப்பட்டது என்பது, வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு குறித்த கேள்வியைப் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது. 
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசுக்கு ஓர் உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. அதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் சொத்து மதிப்பு அதிகரிப்பது குறித்துக் கண்காணிப்பதற்கு ஒரு நிரந்தர அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது. தேர்தலுக்குத் தேர்தல் மக்கள் பிரதிநிதிகளின் சொத்து மதிப்பு அதிகரிப்பது ஜனநாயகம் தோல்வியடைவதன் அறிகுறி என்றும், இதை இப்படியே அனுமதித்தால் வருங்காலத்தில் மாஃபியா கும்பலின் ஆட்சியாகிவிடும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை செய்தது.
அப்படி ஓர் அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை என்பதுடன் தேர்தல் வேட்புமனுப் படிவத்தில் தங்களது சொத்து மதிப்பு குறித்து விவரம் தரப்படாமலோ, முழுமையாகத் தரப்படாமல் இருந்தாலோ அது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி குற்றமாக்கப்படவும் இல்லை. 2003-இல் இது குறித்து உச்சநீதிமன்றம் எச்சரித்திருக்கிறது.
தேர்தல் வேட்புமனுப் படிவத்தில் வேட்பாளரின் கல்வித்  தகுதி, சொத்து மதிப்பு, கடன் மதிப்பு, குற்றப் பின்னணி ஆகியவை குறித்த விவரங்கள் தரப்படுவது வாக்காளர்களின் அடிப்படை உரிமை என்றும், அவை தவறாகத் தரப்பட்டிருந்தால் முறையாகத் தனது  தேர்வை வாக்காளர் செய்வது தடுக்கப்படுகிறது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. 
கடந்த செப்டம்பர் 2017-இல் 98 சட்டப்பேரவை உறுப்பினர்கள், 7 மக்களவை உறுப்பினர்கள் ஆகியோரது  சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்திருப்பது  குறித்து விசாரணை நடத்துவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய நேரடி வரி ஆணையம் தெரிவித்தது. ஆனால், இன்றுவரை அந்த விசாரணையின் முடிவு என்ன என்பது குறித்துப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. அதைத் தட்டிக் கேட்கவோ, விளக்கம் கேட்கவோ நமது மக்கள் பிரதிநிதிகள் ஏன் முன்வரவில்லை என்பதற்கு விளக்கம் தேவையில்லை.
பணக்காரர்கள் மக்கள் பிரதிநிதிகளாகக் கூடாது என்பதல்ல. ஆனால், பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகள் பணக்காரர்களாக இருப்பது என்பது இந்தியாவின் 80%- கும் அதிகமான சாமானிய, நடுத்தர, அடித்தட்டு வர்க்கத்து மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகவோ, நலன் பேணுவதாகவோ, அவர்களது பிரச்னையை எடுத்துரைப்பதாகவோ இருக்காது. அது மக்களாட்சித் தத்துவமுரண்!
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/jul/02/கோடீஸ்வரர்களின்-கூடாரம்-3183195.html
3182555 தலையங்கம் கழிவுநீர்த் தொட்டி மரணங்கள்! ஆசிரியர் Monday, July 1, 2019 02:50 AM +0530 இந்தியா சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் கடந்தும்கூட, மனிதர்களே மனிதக் கழிவுகளை அகற்றும் அவலம் தொடர்கிறது. 1993-இல் மனிதர்கள் மலம் அள்ளுவதை தடை செய்ய சட்டம் நிறைவேற்றப்பட்டது. 2013-இல் அந்தச் சட்டத்தில் திருத்தமும் கொண்டுவரப்பட்டது. அப்படியும்கூட, எந்தவிதப் பயனோ மாற்றமோ இல்லாத நிலை தொடர்கிறது.
 கடந்த ஜூன் மாதம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் துப்புரவுத் தொழிலாளர்கள் கழிவுநீர்த் தொட்டிகளில் இறங்கியபோது விஷவாயுவால் தாக்கப்பட்டு இறந்திருக்கிறார்கள். இதில் தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. கோவை மாவட்டம் கொண்டையம்பாளையம் ஊராட்சியில் கழிவுநீர்த் தொட்டியில் இறங்கியபோது, விஷவாயு தாக்கியதில் மூன்று தொழிலாளர்கள் கடந்த வியாழக்கிழமை பலியாகியிருக்கிறார்கள்.
 குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள விடுதி ஒன்றின் கழிவுநீர்த் தொட்டியை கடந்த ஜூன் 15-ஆம் தேதி சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி ஏழு பேர் இறந்தனர். அதேபோல, ஹரியாணா மாநிலம் ரோத்தக்கில் கடந்த புதன்கிழமை மழைநீர் வடிகால் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டதை சீராக்க, தொட்டியில் இறங்கிய நான்கு பேர் உயிரிழந்தனர். ஏப்ரல் மாதம் குருகிராமில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தப்படுத்த உள்ளே இறங்கிய இரண்டு துப்புரவுத் தொழிலாளிகள் அதற்குள்ளேயே விழுந்து மாண்டிருக்கிறார்கள்.
 துப்புரவுத் தொழிலாளர்களுக்கான தேசிய ஆணையம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. துப்புரவுத் தொழிலாளர்களின் நலன் பேணுவது அதன் குறிக்கோள். அந்த ஆணையம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரப்படி, 2017 முதல் ஐந்து நாள்களுக்கு ஒருமுறை கழிவுநீர்த் தொட்டியில் இறங்கும் தொழிலாளி ஒருவர் சராசரியாக உயிரிழக்கிறார். இதிலிருந்து, துப்புரவுத் தொழிலாளர்களே நேரடியாகக் கழிவுநீர்த் தொட்டிகளில் இறங்கி சுத்தப்படுத்துவதைத் தடை செய்யும் 1993 சட்டம் எந்த அளவுக்கு மீறப்படுகிறது என்பது வெளிப்படுகிறது.
 1993-இல் துப்புரவுத் தொழிலாளிகள் மனிதக் கழிவுகளை அகற்றுவது சட்டப்படி தடை செய்யப்பட்டது என்றால், 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2013-இல் அந்தச் சட்டத்தை மேலும் வலுப்படுத்த அதில் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. மனிதத் துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் மறுவாழ்வுச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இத்தனைக்குப் பிறகும்கூட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாமல் நேரடியாக துப்புரவுத் தொழிலாளர்கள் கழிவுநீர்த் தொட்டிகளிலும், கழிவுநீர் ஓடைகளிலும் இறங்கி வேலை செய்வதற்கு வற்புறுத்தப்படுகிறார்கள். இதற்கு அவர்களது வறுமையும், பிறப்பும், அதிகாரிகளின் இரக்கமற்ற மனோபாவமும்தான் காரணம்.
 திருத்தப்பட்ட "துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் மறுவாழ்வுச் சட்டம் - 2013'-இன் 7-ஆவது பிரிவின்படி, பாதுகாப்புக் கவசம் உள்ளிட்டமுன்னேற்பாடுகள்இல்லாமல் துப்புரவுத் தொழிலாளர்களைச் செயல்படப் பணித்தல் சட்டப்படி குற்றம். அதற்கு தண்டனையோ, அபராதமோ - இவை இரண்டுமோ விதிக்கப்படலாம். அப்படியிருந்தும், அது குறித்துக் கவலைப்படாமல் கழிவுநீர்த் தொட்டிகளிலும் கழிவுநீர் ஓடைகளிலும் துப்புரவுத் தொழிலாளர்கள் நேரடியாக இறக்கப்பட்டு துப்புரவு செய்ய பணிக்கப்படுகிறார்கள் என்றால், அதிகாரிகள் வர்க்கம் அந்தச் சட்டம் குறித்துக் கவலைப்படவில்லை என்றுதான் பொருள்.
 2014-இல் பிரதமர் நரேந்திர மோடி அரசு பதவியேற்றபோது இந்தப் பிரச்னை குறித்து ஆய்வு செய்ய செயல்படை ஒன்று அமைக்கப்பட்டது. அதன் முதல்கட்ட ஆய்வின்படி, இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட துப்புரவுத் தொழிலாளிகளின் எண்ணிக்கை 53,236. இது 12 மாநிலங்களில் உள்ளவர்களின் எண்ணிக்கை மட்டுமே. பல மாநிலங்கள் மனித துப்புரவுத் தொழிலாளர்கள் இருக்கின்றனர் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன, மறைக்கின்றன.
 மனித துப்புரவுத் தொழிலாளர்களின் கழிவுநீர்த் தொட்டி மரணங்களுக்கு இரண்டு காரணங்கள் காணப்படுகின்றன. முதலாவது காரணம், சமூக ரீதியிலானது. காலங்காலமாக துப்புரவுத் தொழிலாளர்கள் மீதான சமூகத் தீண்டாமை முக்கியமான காரணம்.
 இரண்டாவது காரணம், எத்தனையோ தொழில்நுட்பம் வந்தும்கூட, அதில் உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகள் முதலீடு செய்யாமல், இன்னும்கூடக் கழிவுநீர்த் தொட்டிகளில் துப்புரவுத் தொழிலாளர்களை நேரடியாக இறக்கி சுத்தப்படுத்த வற்புறுத்துவது.
 துப்புரவுத் தொழிலாளர் சட்டத்தை மீறுபவர்கள் தண்டிக்கப்பட்டால், கழிவுநீரில் இறங்கிப் பணியாற்றும்போது மரணமடையும் துப்புரவுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் சம்பவங்களும் தொடராது, அதிகரிக்காது. இந்தப் பிரச்னையில் அதிகார வர்க்கமும், ஒப்பந்தக்காரர்களும் மட்டுமல்லாமல் நீதித் துறையும் மெத்தமான இருக்கிறது என்பதன் வெளிப்பாடுதான், தொடரும் அசம்பாவிதங்கள்.
 தலித்திய அரசியல் கட்சிகளும்கூட, துப்புரவுத் தொழிலாளர்கள் குறித்து அதிகம் கவலைப்படுவதே இல்லை. அவர்கள் கணிசமான வாக்கு வங்கியாக இல்லாமல் இருப்பதும், தலித்துகளில் தீண்டத்தகாத தலித்துகளாக அவர்கள் கருதப்படுவதும் அதற்கு முக்கியமான காரணம்.
 துப்புரவுத் தொழிலாளர்களுக்கு கணிசமான ஊதியத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதுடன் பட்டியலினத்தவர்களுக்கான இடஒதுக்கீட்டில் அவர்களுக்கு முன்னுரிமையும் அளிக்கப்படுவதன் மூலம் ஓரளவுக்கு இந்தக் களங்கத்தைத் துடைக்க முடியும். இந்தக் களங்கம் தொடரும்வரை, கழிவுநீர்த் தொட்டி மரணங்களும் தொடரத்தான் செய்யும்!
 
 
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/jul/01/கழிவுநீர்த்-தொட்டி-மரணங்கள்-3182555.html
3181289 தலையங்கம் ஒசாகா சந்திப்பு ஆசிரியர் Saturday, June 29, 2019 01:38 AM +0530 ஜப்பானிலுள்ள ஒசாகாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு முக்கியமான குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ள இருக்கிறார். ரஷியா-இந்தியா-சீனா முத்தரப்புக் கூட்டத்திலும், அதைத் தொடர்ந்து ஜப்பான்- அமெரிக்கா-இந்தியா முத்தரப்புக் கூட்டத்திலும் கலந்துகொள்ளும் இந்தியாவின் நிலைப்பாடு சர்வதேச அளவில் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. 
 ஒசாகாவில் அமெரிக்க அதிபரைப் பிரதமர் மோடி சந்திப்பதற்கு முன்னால், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ இந்த வாரத் தொடக்கத்தில் இந்தியா வந்திருந்தார். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இறக்குமதி வரிகள் குறித்த கருத்து வேறுபாடுகளை அகற்றுவதும், இந்தியாவை அமெரிக்க அணியின் முக்கியமான நட்பு நாடாக இணைத்துக் கொள்வதும்தான் பாம்பேயோ விஜயத்தின் அடிப்படை நோக்கம். 
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான இறக்குமதி வரிகள் குறித்த வர்த்தக கருத்து வேறுபாடு, சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான அளவில் இல்லை என்றாலும்கூட, இந்தியாவின் நலனைப் பாதிக்கும் அளவில் இருக்கிறது என்பதை மறுத்துவிட முடியாது. அமெரிக்கா, இந்தியப் பொருள்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கியிருந்தது. அதனால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பல பொருள்களுக்கு அமெரிக்காவில் இறக்குமதி சலுகை வழங்கப்பட்டிருந்தன. திடீரென்று அமெரிக்கா, இந்தியாவுக்கு அளித்திருந்த சிறப்புச் சலுகையை விலக்கிக் கொண்டது. அதன் விளைவாக ஆண்டுதோறும் 150 கோடி டாலர் (ரூ.10,342 கோடி) மதிப்புள்ள எக்கு, அலுமினியம் உள்ளிட்ட பொருள்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கிறது.  இந்தியாவும் தன் பங்குக்கு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் 28 பொருள்களின் மீதான வரியை அதிகரித்தது. அதுமுதலே இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவில் சமநிலை தகர்ந்திருக்கிறது. 
வர்த்தகத்திலும் சரி, முதலீட்டிலும் சரி மிக அதிக அளவில் இந்தியாவுடன் தொடர்புடைய நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது. பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு  கடந்த 20 ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. அதிக திறன் கொண்ட ஹெலிகாப்டர்களை இந்திய ராணுவம் இந்த ஆண்டு அமெரிக்காவிடமிருந்து வாங்கியிருக்கிறது. அப்படியிருந்தும்கூட அமெரிக்கா, இந்தியாவின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் சில முடிவுகளை எடுத்திருக்கிறது. குறிப்பாக, ஈரானிலிருந்தும் வெனிசுலாவிலிருந்தும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியாவுக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகை அமெரிக்காவால் விலகப்பட்டிருப்பது மிகப் பெரிய பொருளாதார பாதிப்பை இந்தியாவுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.  
பாம்பேயோ குறிப்பிட்டிருப்பதுபோல, எந்த ஒரு பேச்சுவார்த்தையிலும் எந்த ஒரு நாடும் தான் விரும்பிய அனைத்தையும் பெற்றுவிட முடியாது. இரு தரப்புகளும் சில சலுகைகளையும் சமரசங்களையும் ஏற்றுக்கொண்டாக வேண்டும். வர்த்தக உறவு பலப்படுத்துவது என்று முடிவெடுத்துவிட்டால், அதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்று மைக் பாம்பேயோ விமானம் ஏறுவதற்கு முன்னால் நிருபர்களிடம் தெரிவித்த கருத்து நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருந்தது. 
இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்வதும், வர்த்தகத்தில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது என்றாலும்கூட, ஒருவகையான அதிருப்தியும் அவர்கள் மத்தியில் காணப்படுகிறது. இணைய வணிகத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் சில தடைகள், இந்தியாவின் வர்த்தக நடைமுறைகள் உள்ளிட்டவை அமெரிக்க நிறுவனங்களை பாதித்திருக்கின்றன. அதேநேரத்தில் அமெரிக்காவைப் புறக்கணித்துவிட்டு உலகமய சூழலில் இந்தியாவால் தனித்து இயங்கவோ, நமது பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் செயல்படவோ இயலாது என்கிற நிதர்சனத்தையும் நாம் புரிந்துகொண்டாக வேண்டும். 
45 ஆண்டுகளில் மிக அதிகமான வேலைவாய்ப்பின்மை இந்தியாவில் காணப்படுகிறது. இந்தியாவின் உண்மையான வளர்ச்சி குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இந்தப் பின்னணியில் டொனால்ட் டிரம்ப்பின் வர்த்தக யுத்தத்தில் சீனாவைத் தொடர்ந்து அடுத்த இலக்காக இந்தியா சிக்கிக்கொள்ளக் கூடாது. பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் செய்வது, எரிசக்தி வர்த்தகத்தை அதிகரிப்பது உள்ளிட்ட உறுதிமொழிகளால் அதிபர் டிரம்ப்பை சமாதானப்படுத்த முயற்சிப்பதில் பயனில்லை. 
எல்லா ஆசிய நாடுகளும் பொருளாதாரத்தில் தங்களை வளர்த்துக் கொண்டிருப்பதன் பின்னணியில் அவர்களது ஏற்றுமதி காணப்படுகிறது. கடந்த ஐந்தாண்டுகளாக இந்தியாவின் ஏற்றுமதியில் தேக்கம் ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வர்த்தகப் போரில் சீனப் பொருள்களின் மீது கடுமையான தடைகளை அமெரிக்கா விதித்திருக்கும் நிலையில், சீனாவின் இடத்தை இந்தியா பிடிக்க முற்படுவதுதான் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.
இந்தப் பின்னணியில்தான் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபரை சந்தித்திருக்கிறார். தேர்தலில் மிகப் பெரிய வெற்றியடைந்து இரண்டாவது முறையாகப் பதவிக்கு வந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை, விரைவில் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் டொனால்ட் டிரம்ப் சந்தித்தார் என்கிற பின்னணியில்தான் அவர்களது சந்திப்பை அணுக வேண்டும்.
பிரநதமர் மோடி - அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை எந்த அளவுக்கு சுமுகமாகவும், இந்தியாவுக்குச் சாதகமாகவும் இருக்கிறது என்பதைப் பொருத்து, இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் அமையப் போகிறது. அதனால், ஒஸாகா சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/jun/29/ஒசாகா-சந்திப்பு-3181289.html
3180554 தலையங்கம் தொடரும் கும்பல் கொலைகள்... ஆசிரியர் Friday, June 28, 2019 01:28 AM +0530 கும்பல் வன்முறைக்கும், கும்பல் கொலைகளுக்கும் முற்றிலுமாக முற்றுப்புள்ளி விழும் என்கிற எதிர்பார்ப்பைத் தகர்த்திருக்கிறது ஜார்க்கண்ட சம்பவம். தப்ரஸ் அன்சாரி என்பவர் கும்பல் வன்முறைக்கு ஆளாகி கடந்த சனிக்கிழமை உயிரிழந்திருக்கிறார். ஜார்க்கண்ட் கும்பல் கொலை தொடர்பாக  தான் அந்தச் சம்பவத்தால் மிகவும் வேதனை அடைந்திருப்பதாகவும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் மாநிலங்களவையில் கடந்த புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 24 வயது தப்ரஸ் அன்சாரி தாக்கப்பட்டிருக்கும் விதம் புதிதொன்றுமல்ல. வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஐந்தாண்டுகளாகவே பசுப் பாதுகாவலர்கள் நடத்தி வரும் வன்முறைக் கொலைகளின் அதே பாணியில்தான் இதுவும் நடந்தேறியிருக்கிறது. இந்த முறை பசுக்களைப் பாதுகாப்பது அல்லது மாட்டிறைச்சிக்காக மாடுகளைக் கொண்டு செல்வது போன்ற காரணங்கள் இல்லை என்பதுதான் வேறுபாடு. தப்ரஸ் அன்சாரி திருட்டில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, மரத்தில் கட்டிவைத்து தாக்கப்பட்டிருக்கிறார். ஆனால், இஸ்லாமியரான அவரை ஜெய் ஸ்ரீராம், ஜெய் அனுமான் என்று கோஷம் எழுப்ப அந்த வன்முறைக் கும்பல் வற்புறுத்தியிருப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்?
ஜார்க்கண்ட் சம்பவம் குறித்துப் பொதுவெளியில் பரவலான விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, சம்பவத்தில் தொடர்புடைய சிலர் கொலை முயற்சி குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது என்றாலும்கூட, பொறுப்பற்ற விதத்தில் செயல்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 
அன்சாரியை பல மணி நேரம் மரத்தில் கட்டிவைத்து நையப்புடைத்த பிறகுதான் சம்பவ இடத்துக்குக் காவல் துறையினர் வந்திருக்கிறார்கள். அப்போதும்கூட, அவரைத் துன்புறுத்திய வன்முறையாளர்கள் கைது செய்யப்படாமல், திருட்டுக் குற்றத்துக்காக தப்ரஸ் அன்சாரி கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீதிருந்த காயங்கள் குறித்து எந்தப் பதிவும் செய்யப்படவில்லை. முதல் தகவல் அறிக்கையில் அவர் தாக்கப்பட்டிருப்பது குறித்தோ, காயம் அடைந்திருப்பது குறித்தோ எதுவுமே குறிப்பிடப்படவில்லை. கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அன்சாரியின் நிலைமை மோசமானதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கே உயிரிழந்தார்.
ஜார்க்கண்ட் சம்பவம் ஏதோ திடீரென்று நடந்திருக்கும் சம்பவம் அல்ல. கடந்த மார்ச் 2014 முதல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இதுவரை 18 பேர் வன்முறைக் கும்பலால்  கொல்லப்பட்டிருக்கிறார்கள். அந்த நிகழ்வுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்றாலும்கூட, இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை. அதற்குக் காரணம், தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிகைகளில் வலுவான சாட்சியங்களோ சட்டப்பிரிவுகளோ காவல் துறையினரால் சேர்க்கப்படவில்லை. எல்லாவற்றையும்விட அதிர்ச்சி அளிப்பது என்னவென்றால், கும்பல் வன்முறைக்  கொலைகளில் ஈடுபட்டவர்களை முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா உள்ளிட்ட ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவர்கள் ஆதரித்தும் பாராட்டியும் பேசுவதும்தான். 
இதுபோன்ற கும்பல் கொலைகளில் ஒரு பாணி கடைப்பிடிக்கப்படுகிறது. வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவது செல்லிடப்பேசிகளில் படமெடுக்கப்பட்டு, சமூக ஊடகங்களின் மூலம் வதந்திகள் பரப்பப்படுகின்றன. அதனால் ஏனைய பகுதிகளில் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு முன்மாதிரியாகவும், தூண்டுதலாகவும் அந்தச் சம்பவங்கள் மாறிவிடுகின்றன. சமூக ஊடகங்கள் வாயிலாக வதந்திகள் பரப்பப்படுவதும், துவேஷங்கள் உருவாக்கப்படுவதும் ஒருவகை வியாதியாகவே மாறியிருக்கிறது.
கும்பல் கொலைகள் குறித்தும், கும்பல் வன்முறை குறித்தும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு ஒரு தீர்ப்பை வழங்கியது. கும்பல் கொலைகளுக்கு என்று தனியான சட்டம் ஏற்படுத்தப்பட்டு அதற்கான தண்டனை நாடாளுமன்றத்தால் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. இதற்கென்று தனியான சட்டம் இயற்றப்பட்டால்தான் கும்பல் கொலையில் ஈடுபடும் வன்முறையாளர்களுக்கு அச்சம் ஏற்படும் என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த கருத்து வரவேற்புக்குரியது. அரசும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஆலோசிக்க அமைச்சர் குழு ஒன்றை ஏற்படுத்தியது. இதுவரை அது குறித்து எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
கும்பல் வன்முறைக்கும் கொலைக்கும் தனியாகச் சட்டம் இயற்றியாக வேண்டும் என்கிறஅவசியம் இல்லை. இப்போதிருக்கும் சட்டங்களே போதுமானவை. ஆனால், அரசும் நிர்வாகமும் கும்பல் வன்முறைக்கும் கொலைக்கும் எதிரான கடுமையான நிலைப்பாட்டை எடுக்காமல் போனால், புதிய சட்டங்கள் கொண்டுவருவதால் மட்டும் எந்தவித மாற்றமும் ஏற்பட்டுவிடாது. 
சட்டத்தை மீறுபவர்களும், முறையான நடவடிக்கைகளை எடுக்காத காவல் துறையினரும் உடனடியாகவும் கடுமையாகவும் தண்டிக்கப்படுவார்கள் என்கிற அழுத்தமான எச்சரிக்கை ஆட்சியாளர்களால் வெளியிடப்பட்டு செயல்படுத்தினால் மட்டும்தான் இதற்கு முற்றுப்புள்ளி விழும். 
பிரதமர் வருத்தம் தெரிவித்தால் போதாது; தனது வார்த்தைக்கு அழுத்தமும், அர்த்தமும் கொடுத்தால் மட்டும்தான், சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்பவர்களின் கொட்டத்துக்கு முற்றுப்புள்ளி விழும்!
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/jun/28/தொடரும்-கும்பல்-கொலைகள்-3180554.html
3179827 தலையங்கம் மாயாவதியின் முடிவு! ஆசிரியர் Thursday, June 27, 2019 02:31 AM +0530 அரசியல் இயக்கங்களும், தனிநபர் செல்வாக்கில் உருவான கட்சிகளும் குடும்பக் கட்சிகளாக மாறுவது என்பது இந்தியாவுக்கு ஒன்றும் புதிதல்ல. இந்தியாவின் முன்னோடி அரசியல் கட்சியும், விடுதலைப் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய இயக்கமுமான காங்கிரஸ் கட்சி குடும்பக் கட்சியாக மாறியது. அதைப் பின்பற்றி பல கட்சிகளும் குடும்ப அரசியலை வரித்துக்கொண்டன. 
இப்போது மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் குடும்பக் கட்சியாக மாறுகிறது.
17-ஆவது மக்களவைத் தேர்தலில் மத்தியிலும், உத்தரப் பிரதேசத்திலும் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியை எதிர்கொள்ள, அதுவரை எதிரும் புதிருமாக இருந்த சமாஜவாதி கட்சியும், மாயாவதியின் தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் தங்களது மனமாச்சரியங்களை ஒதுக்கிவிட்டு இணைந்து போட்டியிடத் தீர்மானித்தன. அஜித் சிங்கின் ராஷ்ட்ரீய லோக்தள கட்சியையும் இணைத்துக்கொண்டு வலுவான மூன்று கட்சிக் கூட்டணி அமைத்து பாஜகவை எதிர்கொள்ள முற்பட்டன.
போதுமான இடங்கள் ஒதுக்கப்படவில்லை எனக் கூறி காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவெடுத்தபோதே, அந்த மூன்று கட்சிக் கூட்டணி வலுவிழந்துவிட்டது. கடந்த 2014-இல் ஓர் இடத்தில்கூட வெற்றி பெற முடியாத பகுஜன் சமாஜ் கட்சி, 10 இடங்களிலும், சமாஜவாதி கட்சி முந்தைய தேர்தலில் வெற்றி பெற்றிருந்த ஐந்து இடங்களிலும் வெற்றி பெற முடிந்ததே தவிர, பாஜகவின் வெற்றி வாய்ப்பை பெரிய அளவில் அந்தக் கூட்டணியால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
தேர்தல் முடிவுகள் வெளிவந்த சில நாள்களிலேயே, கூட்டணியின் படுதோல்விக்கு சமாஜவாதி கட்சியினரை குற்றம்சாட்ட முற்பட்டார் மாயாவதி. 2014-இல் ஓர் இடத்தில்கூட வெற்றி  பெற முடியாத பகுஜன் சமாஜ் கட்சி, இந்த முறை 10 இடங்களில் வெற்றி பெற்றதற்கு சமாஜவாதி கட்சியின் யாதவர் வாக்கு வங்கிதான் காரணமென்பதை ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இல்லை. கடந்த திங்கள்கிழமை சமாஜவாதி கட்சியுடனான தனது கட்சியின் உறவை அதிகாரபூர்வமாக முறித்துக்கொண்டார் அவர். இனிவரும் தேர்தல்
களில் யாருடனும் கூட்டணி அமைத்துக் கொள்வதில்லை என்றும், தனித்துப் போட்டியிடுவது என்றும் மாயாவதி அறிவித்தார். 
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இப்போது புதியதொரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். தனது சகோதரர் ஆனந்த்குமாரை பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய துணைத் தலைவராகவும், அவரது மகனும், மாயாவதியின் மருமகனுமான ஆகாஷ் ஆனந்தை தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் நியமித்திருக்கிறார் அவர். தலித்துக்களின் மேம்பாட்டை முன்னிறுத்தி, பாபா சாகேப் அம்பேத்கரின் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்காக கன்ஷிராமால் தொடங்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி, இப்போது புதியதொரு பாதையில் 
பயணிக்க முற்பட்டிருக்கிறது. 
கூட்டணி அமைப்பதும், கூட்டணியிலிருந்து விலகுவதும் மாயாவதிக்கு எப்படி சகஜமோ, அதேபோல திடீர் அரசியல் முடிவுகளை எடுப்பதும் அவருக்குப் புதிதல்ல. கடந்த ஆண்டு மே மாதம்தான், தனது குடும்ப உறுப்பினர்கள் யாரும் பகுஜன் சமாஜ்  கட்சியில் எந்தவிதப் பொறுப்புகளும் வகிக்கக்கூடாது என்று அவர் அறிவித்தார். இப்போது தனது சகோதரரை துணைத் தலைவராக்கியிருக்கிறார். 
கடந்த சில மாதங்களாகவே ஆனந்த்குமாரின் மகன் ஆகாஷ் ஆனந்தின் முக்கியத்துவம் பகுஜன் சமாஜ் கட்சியில் அதிகரித்து வருகிறது. 24 வயது ஆகாஷ்தான் கடந்த மக்களவைத் தேர்தலில் மாயாவதியின் வலது கரமாகச் செயல்பட்டார். ஆனால், தேசிய ஒருங்கிணைப்பாளர் என்கிற முக்கியமான பொறுப்புக்கு மாயாவதி அவரை தேர்ந்தெடுப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. 
இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, அதிமுக ஆகிய நான்கு கட்சிகள் மட்டும்தான் எந்தவொரு தனிநபரின் கட்டுப்பாட்டிலோ, குடும்பத்தின் கட்டுப்பாட்டிலோ இல்லாமல் செயல்படுகின்றன. பிரதமர் நரேந்திர மோடியை முன்னிறுத்தி பாஜக இயங்குகிறது என்றாலும், அந்தக் கட்சி வகுக்கப்பட்ட அரசியல் நெறிமுறைகளின் அடிப்படையில்தான் இப்போதும் செயல்படுகிறது என்பதை 
ஜெ.பி. நட்டா செயல் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது வெளிப்படுத்துகிறது.
பிஜு ஜனதா தளம் (நவீன் பட்நாயக்), ஐக்கிய ஜனதா தளம் (நிதீஷ் குமார்), ஆம் ஆத்மி கட்சி (அரவிந்த் கேஜரிவால்) ஆகிய மூன்று கட்சிகள் மட்டும்தான் தனிநபர் செல்வாக்கின் அடிப்படையிலான கட்சிகளாக செயல்படுகின்றன. தனிநபர் கட்சிகளாக இருந்த மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் இப்போது குடும்ப அரசியலை வரித்துக் கொண்டிருக்கும் கட்சிகளாக மாறிவிட்டிருக்கின்றன.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் திமுகவைத் தவிர, காங்கிரஸ் உள்ளிட்ட ஏனைய குடும்பக் கட்சிகள் அனைத்துமே வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு திமுகவின் செல்வாக்கைவிட பரவலாகக் காணப்பட்ட பாஜக மீதான எதிர்ப்பும், அதன் விளைவாக காங்கிரஸ் இடம் பெற்றிருந்ததால் திமுக கூட்டணிக்குக் கிடைத்த ஆதரவும்தான் காரணமென்று கூற வேண்டும். 
தலித் மக்களின் மேம்பாடு என்கிற உயரிய இலக்குடன் கன்ஷிராமால் தொடங்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி, இப்போது மாயாவதியின் குடும்பக் கட்சியாக மாறுகிறது. அரசியல் கட்சிகள் குடும்பக் கட்சிகளாக மாற்றப்படுவதற்கு காரணம், கோடிக்கணக்கிலான மதிப்பிலுள்ள கட்சியின் சொத்துகள்தான் என்பதைச் சொல்லியா தெரிய வேண்டும்?
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/jun/27/மாயாவதியின்-முடிவு-3179827.html
3179042 தலையங்கம் ஏங்கித் தவிக்கும் நீதி! ஆசிரியர் Wednesday, June 26, 2019 01:36 AM +0530
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்கும் ஒவ்வொருவரும், தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைந்து தீர்ப்பதை தங்களது இலக்காக அறிவித்தாலும்கூட, தேங்கும் வழக்குகளின் எண்ணிக்கை பலம் அதிகரிக்கிறதே தவிர, இலக்கை நோக்கிய பயணம் தொடங்குவதாகக்கூடத் தெரியவில்லை. இந்தப் பின்னணியில்தான் பிரதமர் நரேந்திர மோடிக்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அனுப்பியிருக்கும்  மூன்று கடிதங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. 
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் இப்போதைய அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பதவி ஓய்வு வயதை அதிகரிக்க வேண்டும் என்றும் தனது முதல் இரண்டு கடிதங்களில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். மூன்றாவது கடிதத்தில், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை மீள் நியமனம் செய்யும்  கைவிடப்பட்ட கொள்கை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார். 
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையான 31 இடங்களும் இப்போது நிரப்பப்பட்டுவிட்டன.கடந்த ஆண்டு புள்ளிவிவரத்தின்படி, உச்சநீதிமன்றத்தில் மட்டும் 57,987 வழக்குகள் விசாரணையில் இருக்கின்றன. அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் வழக்குகளை விரைந்து விசாரித்து முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்பது தலைமை நீதிபதியின் கருத்து. 
அதேபோல, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பதவி ஓய்வு வயதை அதிகரிக்க வேண்டும் என்பது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயின் இன்னொரு கோரிக்கை. இப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பதவி ஓய்வு வயது 65. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பதவி ஓய்வு வயது 62.  தலைமை நீதிபதியின்  இந்த ஆலோசனையை  மத்திய அரசு  உடனடியாகப் பரிசீலிப்பது அவசியம். 
இப்போதைய நிலையில் இந்தியாவிலுள்ள 25 உயர்நீதிமன்றங்களில் 399 நீதிபதிகளின் இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. அதாவது, அனுமதிக்கப்பட்ட இடங்களில் 37% நிரப்பப்படாமல் இருக்கின்றன. உயர்நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் 43 லட்சத்துக்கும் அதிகம் எனும்போது, உடனடியாக  உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பதவி ஓய்வு வயதை அதிகரிப்பதும், நிரப்பப்படாமல் இருக்கும் இடங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பதும் எந்த அளவுக்கு அவசியம் என்பதை நாம் உணரலாம். 
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் மட்டுமல்ல, கீழமை நீதிமன்றங்களின் நிலைமை இதையெல்லாம்விட மோசமாகக் காணப்படுகிறது. ஏறத்தாழ 5,000-க்கும் அதிகமான இடங்கள் விசாரணை நீதிமன்றங்களில் நிரப்பப்படாமல் இருக்கின்றன. சுமார் 2.84 கோடி வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. கீழமை நீதிமன்றங்களில் விசாரணைக்குக் காத்திருக்கும் வழக்குககளின் எண்ணிக்கையை உடனடியாகக் குறைத்தால் மட்டுமே சாமானியர்களுக்கு முறையான நீதி வழங்கப்படும். விசாரணை நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கிக் கிடப்பதால் பல நிரபராதிகள் விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டு அவர்களது வாழ்க்கை சிதைக்கப்பட்டிருக்கிறது என்பதை நீதித் துறையும் அரசும் மட்டுமல்ல, பொதுமக்களாகிய நாமும் உணரக் கடமைப்பட்டவர்கள். 
இந்தியாவில் தீர்ப்புக்காக தே(ஏ)ங்கிக் கிடக்கும் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 3.3 கோடிக்கும் அதிகம். அதில், மிக அதிகமான வழக்குகள் உத்தரப் பிரதேசம் (61.58 லட்சம்), மகாராஷ்டிரம் (33.22 லட்சம்), மேற்கு வங்கம் (17.59 லட்சம்), பிகார் (16.58 லட்சம்), குஜராத் (16.45 லட்சம்) ஆகிய ஐந்து மாநிலங்களில் காணப்படுகின்றன. தேங்கிக் கிடக்கும் வழக்குகளில் 60% வழக்குகள் இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமாக விசாரணையில் இருப்பவை. ஏனைய 40% வழக்குகள்  ஐந்து ஆண்டுகளும், அதற்கு மேலும் காத்துக் கிடப்பவை.
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை பலத்தை அதிகரிப்பது, உச்சநீதிமன்ற நீதிபதிகளைப்போல உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பதவி ஓய்வு வயதை  65 வயதாக அதிகரிப்பது உள்ளிட்ட இரண்டு கோரிக்கைகளுமே  உடனடியாக நிறைவேற்றப்படக்கூடியவை அல்ல. அரசியல் சாசனத் திருத்தம் செய்யப்பட்டால் மட்டுமே இவை இரண்டும் சாத்தியமாகும். அதற்கு நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் எந்த அளவுக்கு ஒத்துழைக்கும் என்பது தெரியவில்லை. நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை நீதித் துறை ஏற்றுக்கொள்ளாத நிலையில், தலைமை நீதிபதியின் கோரிக்கையை கெளரவம் பார்க்காமல் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என்று எப்படி எதிர்பார்ப்பது? 
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மீள் நியமனத்தின் மூலம் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை விரைந்து விசாரித்து, முடிவுக்குக் கொண்டு வருவது என்கிற ஆலோசனையில் தவறில்லை. ஆனால், அது குறித்த தெளிவான வழிமுறைகளும் நடைமுறைகளும் உருவாக்கப்படாத வரையில், அது ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்க பயன்படுமே தவிர, வழக்குகளை விரைந்து தீர்க்க வழிகோலுமா என்பதென்னவோ சந்தேகமாக இருக்கிறது. அதற்காக அந்த முயற்சியே தவறு என்று ஒதுக்கிவிடவும் முடியாது. 
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் முன்மொழிந்திருக்கும் ஆலோசனைகள் நாடாளுமன்றத்திலும், பொதுவெளியிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு, தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்கும், சிறைச்சாலையில் ஏங்கித் தவிக்கும் விசாரணைக் கைதிகளுக்கும் விடிவை ஏற்படுத்தியாக வேண்டும்.
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/jun/26/ஏங்கித்-தவிக்கும்-நீதி-3179042.html
3178255 தலையங்கம் இஸ்ரேலில் - இனி...? ஆசிரியர் Tuesday, June 25, 2019 01:30 AM +0530
இஸ்ரேலின் வரலாற்றில் முதல்முறையாக தேர்தல் நடந்தும்கூட, எந்த ஒரு கட்சியோ, கூட்டணியோ ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டு, மறு தேர்தலுக்கு வழிகோலப்பட்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி முடிவடைந்த இஸ்ரேல் நாடாளுமன்றமான நெஸ்ùஸட்டுக்கு நடைபெற்ற தேர்தலில், பிரதமர் நெதன்யாகு தலைமையிலான லிக்குட் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியும்கூட, கூட்டணி ஆதரவு இல்லாததால் பெரும்பான்மை பலம் பெற முடியவில்லை. இப்போது இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு செப்டம்பர் மாதம் மீண்டும் தேர்தல் நடக்க இருக்கிறது. 
120 இடங்களைக் கொண்ட நெஸ்ùஸட்டில், லிக்குட் கட்சி 36 இடங்களில் வெற்றி பெற்றது. ஐக்கிய டோரா யூதர் கட்சி ஏழு இடங்களும், முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி பெஞ்சமின் காண்ட்ஸின் தலைமையிலான புளு அண்ட் வொயிட் கட்சிக்கு 35 இடங்களும் கிடைத்தன. இஸ்ரேல் தேர்தல் முறைப்படி, விகிதாச்சார அடிப்படையில்தான் இடங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. அதனடிப்படையில் லிக்குட் கட்சிக்கு 26.27% வாக்குகள் கிடைத்ததால், அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக முடிந்ததே தவிர, ஆட்சி அமைக்கும் அளவிலான பெரும்பான்மை கிட்டவில்லை. 
கடந்த 2015 தேர்தலில் ஐக்கிய டோரா யூதர் கட்சி ஆறு இடங்களையும், ஷாஸ் என்கிற யூத மதவாதக் கட்சி ஏழு இடங்களையும் வென்றன என்றால், இந்த முறை இரண்டு கட்சிகளுமே தலா எட்டு இடங்களைப் பெற்றிருக்கின்றன. ஐக்கிய வலதுசாரி கட்சிகளும், இஸ்ரேல் பெட்னு (இஸ்ரேல் நமது தேசம்) கட்சியும் தலா ஐந்து இடங்களிலும், குலானு கட்சி 4 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த கட்சிகள் அனைத்துமே பிரதமர் நெதன்யாகுவுக்கு ஆதரவு அளித்திருந்தால், 120 உறுப்பினர்களைக் கொண்ட நெஸ்ùஸட்டில் அவருக்குப் பெரும்பான்மை பலம் கிட்டியிருக்கக் கூடும். 
ஆனால், இஸ்ரேல் பெட்னு கட்சியின் வற்புறுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தால், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவால் பெரும்பான்மை பலத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை. இஸ்ரேல் பெட்னு கட்சித் தலைவர் அவிக்டார் லைபர்மேன் முன்வைத்த நிபந்தனைதான் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 35 இடங்களைக் கைப்பற்றியும்கூட எதிர்க்கட்சியான புளு அண்ட் வொயிட் கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை எனும் நிலையில், இனி அடுத்தது என்ன என்கிற எதிர்பார்ப்புடன் தேர்தலுக்கு இஸ்ரேல் காத்திருக்கிறது. 
120 இடங்களைக் கொண்ட இஸ்ரேலின் நெஸ்ùஸட்டில், அந்த நாடு உருவான 1948 முதல் இதுவரை எந்த ஒரு கட்சிக்குமே தனிப்பெரும்பான்மை கிடைத்தது இல்லை. இஸ்ரேலைப் பொருத்தவரை இதுவரை நான்கு முறை பிரதமராகவும், கடந்த மூன்று முறை தொடர்ந்து பதவியைத் தக்கவைத்துக் கொண்டவராகவும் இருக்கும் நெதன்யாகு, ராஜதந்திர ரீதியாக மிகப் பெரிய சாதனைகளை அந்த நாட்டுக்கு சாதித்துக் கொடுத்திருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. 
இஸ்ரேலின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியது மட்டுமல்லாமல், அமெரிக்காவின் உதவியுடன் சிரியா எல்லையில் உள்ள பகுதிகளை ஆக்கிரமித்து இஸ்ரேலுடன் இணைத்துக்கொண்டது அவரது மிகப் பெரிய வெற்றி. இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா ஜருசலேமை ஏற்றுக்கொண்டது இன்னொரு வெற்றி. இவ்வளவெல்லாம் இருந்தும்கூட, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் பெஞ்சமின் நெதன்யாகு கூட்டணி அமைக்க முடியாமல் போனதற்கு ஒரு முக்கியமான காரணம் இருந்தது.
இஸ்ரேல் என்கிற நாடு உருவானது முதல், அந்த நாட்டின் குடிமக்கள் அனைவரும் கட்டாய ராணுவ சேவையில் ஈடுபட்டாக வேண்டும் என்றும், தேசிய சேவையில் சில வருடங்களாவது பங்களிப்பு நல்கியிருக்க வேண்டும் என்பதும் சட்டம். ஆனால், யூத மத ஆசாரங்களை நிலைநிறுத்தும் மதப் பிரசாரகர்களுக்கு கட்டாய ராணுவ சேவையில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 
தங்களுக்கென்று தனி நாடு உருவானதைத் தொடர்ந்து, யூத மதம் அழிந்துவிடாமல் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும், யூதர்களின் மொழியான ஹீப்ரூ வழக்கொழிந்துவிடாமல் இருக்க வேண்டும் என்றும் முதலாவது பிரதமர் டேவின் பென்குரியன் தலைமையிலான அரசு முடிவெடுத்தது. யூத மத சேவைக்கு இஸ்ரேல் முன்னுரிமை அளித்தது. இஸ்ரேலின் மொத்த மக்கள் தொகையில் 10%-க்கும் அதிகமாக இருக்கும் மதப் பிரசாரகர்கள் தங்களது முழு நேரத்தையும் மத நூல்களைப் படிப்பதிலும், மதத்தை அடுத்த தலைமுறையினர் மத்தியில் பரப்புவதில் மட்டுமே செலவழிக்கிறார்கள்.
இவர்களுக்கு ராணுவ சேவையிலிருந்தும், தேச சேவையிலிருந்தும் அளிக்கப்பட்ட விலக்கை அகற்றுவது என்றும் முடிவெடுத்தது நெதன்யாகு தலைமையிலான கூட்டணி. அந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை. அந்த மசோதாவைக் கைவிட்டால் நெதன்யாகுவுக்கு ஆதரவளிக்க ஏனைய கட்சிகள்முற்பட்டன. ஆனால், அவிக்டார் லிபர்னானின் இஸ்ரேல் பெட்னு கட்சி அந்த மசோதாவைநிறைவேற்றுவதை நிபந்தனையாக முன்வைத்தது. இதனால், ஆட்சி அமைக்க முடியாமல் இப்போது இன்னொரு தேர்தலை இஸ்ரேல் எதிர்கொள்கிறது.
நெதன்யாகு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. அது குறித்த விசாரணை அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் எதுவுமே நடந்து முடிந்த தேர்தலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் மறுதேர்தல், அநேகமாகப் பிரதமர் நெதன்யாகுவுக்குச் சாதகமாக அமையலாம், அமையாமலும் போகலாம்.
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/jun/25/இஸ்ரேலில்---இனி-3178255.html
3177620 தலையங்கம் பாவம் குழந்தைகள்! ஆசிரியர் Monday, June 24, 2019 04:01 AM +0530  

பிகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் மூளை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இதுவரை 136 குழந்தைகள்  மரணித்திருக்கின்றன. ஆரம்பத்தில் குழந்தைகளின் மரணத்துக்கு விழிப்புணர்வு இல்லாமல் இருந்ததும், கோடையின் தாக்கமும், "ஹைபோகிளை சிமியா' என்கிற திடீர் ரத்த சர்க்கரை அளவு குறைவும் காரணங்களாகக் குறிப்பிடப்பட்டன. குழந்தைகளின் மரணத்துக்கு இரண்டு முக்கியமான காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஊட்டச்சத்து குறைவும், போதுமான அளவில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாமல் இருப்பதும் குழந்தைகளின் மரணத்துக்கு இரண்டு முக்கியமான காரணங்கள் என்று அரசே இப்போது ஒப்புக்கொள்கிறது.

1995 முதல் தொடர்ந்து ஆண்டுதோறும் கோடைகாலத்தில் மூளை அழற்சி நோய் தாக்கி வந்திருக்கிறது. 2010 முதல் 2014 வரையிலான புள்ளிவிவரப்படி 1,000-க்கும் அதிகமான குழந்தைகள் முசாபர்பூர் மாவட்டத்தில் மூளை அழற்சி நோய் பாதிப்புக்குள்ளாகி மரணித்திருக்கின்றன. 

லிட்ச்சி என்கிற பழங்கள் மிக அதிகமாக உற்பத்தியாகும் பகுதியில் முசாபர்பூர் மாவட்டம் இருக்கிறது. மூளை அழற்சி நோயை ஏற்படுத்தும் நச்சுப்பொருள் லிட்ச்சி பழத்தில் காணப்படுகிறது. பகலில் லிட்ச்சி பழங்களைச் சாப்பிடும் ஊட்டச்சத்தில்லாத குழந்தைகள் முறையான உணவில்லாமல் இரவில் உறங்கப் போகும்போது லிட்ச்சியிலுள்ள நச்சுப்பொருள் உயிர்க்கொல்லியாக மாறிவிடுகிறது. லிட்ச்சியிலுள்ள நச்சுப்பொருள் போதுமான ஊட்டச்சத்துள்ள குழந்தைகளைப் பாதிப்பதில்லை.
முசாபர்பூரில் 136 குழந்தைகள் மரணித்திருப்பதற்கு மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென்று குறைந்ததைக் காரணமாக்குகின்றன. மருத்துவமனைகளில் போதுமான அளவு தீவிர சிகிச்சைப் பிரிவு இல்லாமல் இருப்பதையும், அனல் காற்றையும் காரணிகளாக்குகின்றன. பிகார் மாநிலத்தில் முசாபர்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களை ஆண்டுதோறும் இந்த நோய் பாதித்து வந்தும்கூட, இதை எதிர்கொள்ள நிர்வாகம் தயாராக இல்லாதது குறித்து அவர்கள் மெளனம் சாதிக்கின்றனர். 

2014-இல் முசாபர்பூர் மாவட்டத்தில் அடிப்படை மருத்துவ வசதிகள் மற்றும் சுகாதார நிலையங்களின் கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பது குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஐந்து ஆண்டுகளாகியும் எதுவுமே முன்னெடுக்கப்படவில்லை. மருத்துவர்களின் எண்ணிக்கை தேவையைவிட 25 சதவீதம் குறைவாகக் காணப்படுகிறது. செவிலியர், ஆயாக்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்களின் நிலைமையும் அதேதான். தொழில்நுட்ப வசதிகள் மிக மிகக் குறைவு. இவையெல்லாம்தான் முசாபர்பூர் பாதிப்புக்கு மிக முக்கியமான காரணங்கள். 

முசாபர்பூர் மூளை அழற்சி நோய் பாதிப்பு குறித்து 2017-இல் இந்திய - அமெரிக்க மருத்துவக் குழு ஒன்று  ஆய்வு செய்தது. லிட்ச்சி பழங்களைச் சாப்பிட்ட ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகள் இரவு உணவருந்தாமல் உறங்கினால் அடுத்த நாள் காலையில் மூளை அழற்சி நோய் பாதிப்புக்குள்ளாவதை அந்த மருத்துவர் குழுவும் உறுதி செய்தது. 

"நோயின் அறிகுறி தெரியத் தொடங்கிய நான்கு மணி நேரத்துக்குள் 10% டெக்ஸ்ட்ரோஸ்  கொடுப்பதன் மூலம் 74% குழந்தைகளைக் காப்பாற்ற முடியும்; சாதாரண குறைந்த ரத்த சர்க்கரைக்கு 5% டெக்ஸ்ட்ரோஸýம், அதிக அளவிலான பாதிப்புக்கு 10% டெக்ஸ்ட்ரோஸýம்  கொடுத்தால் குழந்தைகளைக் காப்பாற்ற முடியும்' என்று 2014-இல் இன்னொரு ஆய்வுக் குழு உறுதிப்படுத்தியிருக்கிறது.

மூளை அழற்சி நோய்தான் குழந்தைகளின் மரணத்துக்குக் காரணமென்றால், இந்த மிகவும் எளிமையான டெக்ஸ்ட்ரோஸ் மருத்துவத்தின் மூலம் பல குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்குமேயானால், ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் காப்பாற்றப்பட்டிருக்கும்.

அண்டை மாநிலமான உத்தரப் பிரதேசத்திலும் இதேபோன்ற பாதிப்பு காணப்பட்டது. அங்கே "தஸ்டக்' என்கிற திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி, ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி ஆரோக்கியம், ஊரக வளர்ச்சி, அடிப்படைக் கல்வி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, தடுப்பூசி போடுதல் உள்ளிட்டவற்றை உடனடியாகக் கவனிக்க வழிகோலப்பட்டது. அதனால் மூளை அழற்சி நோய் உள்ளிட்ட எந்தவொரு பிரச்னையானாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதால், பெருமளவில் நோய்த்தொற்றுகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. அதை பிகார் மாநில அரசு பின்பற்றாமல் போனதன் விளைவால்தான் 136 குழந்தைகளின் இழப்புகளை எதிர்கொள்கிறது.

தென்னிந்திய மாநிலங்களில், அதிலும் குறிப்பாக தமிழகத்திலும் கேரளத்திலும், குழந்தைகளுக்கு முறையான சத்துணவு வழங்குதல், தாய் - சேய் நலன் பேணுதல், ஆரம்ப சுகாதார நிலையங்கள் முறையாகச் செயல்படுதல், கிராமப்புற செவிலியர்களின் அளப்பரிய தொண்டு ஆகியவை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதுபோல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உறுதிப்படுத்தப்பட்டால், பிகாரில் ஏற்பட்டிருக்கும் குழந்தைகளின் உயிரிழப்பு முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்கும்.

இன்னும்கூட இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 44% போதுமான எடையில்லாத நிலையில் காணப்படுகிறார்கள். ஆரோக்கியமில்லாத குழந்தைகளை வைத்துக்கொண்டு உலகின் நான்காவது பெரிய பொருளாதாரம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்வது நகைமுரண் அல்லாமல் வேறென்ன?

]]>
https://www.dinamani.com/editorial/2019/jun/24/பாவம்-குழந்தைகள்-3177620.html
3176348 தலையங்கம் என்ன செய்யும் சீனா? ஆசிரியர் Saturday, June 22, 2019 01:31 AM +0530 ஹாங்காங் மக்களின் போராட்டம் இப்போதைக்கு முடிவுக்கு வரும் என்று தோன்றவில்லை. ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை வழக்கு விசாரணைக்காக சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்ட மசோதாவை அறிவித்தவுடன் தொடங்கியது இந்தப் போராட்டம். அந்த மசோதாவை நிறுத்தி வைப்பதாக ஹாங்காங் அரசு அறிவித்தும்கூட, போராட்டக்காரர்கள் பின்வாங்குவதாக இல்லை. 
இந்த நாடு கடத்தல் சட்ட மசோதாவை திரும்பப் பெறுவது மட்டுமல்லாமல், ஹாங்காங் அரசின் தலைவர் கேரி லாம் பதவி விலக வேண்டும் என்பதும் ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கை. கடந்த வாரம் போராட்டக்காரர்கள் மீது வன்முறையை ஏவி அடக்க முற்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை வேண்டும் என்பதுதான் ஆர்ப்பாட்டக்காரர்களின் புதிய கோரிக்கை. அதனால்தான் வெள்ளிக்கிழமை போராட்டம் காவல்துறை தலைமையகத்தை முன்னிலைப்படுத்தி நடத்தப்பட்டது. 
ஹாங்காங் அரசின் தலைவரான கேரி லாம், மக்களின் மனவோட்டத்தைப் புரிந்துகொள்ளாமல் சில நடவடிக்கைகளை மேற்கொண்டதுதான் இந்தப் போராட்டத்துக்குக் காரணம். ஹாங்காங் நகரத்தின் அடிப்படைச் செயல்பாடுகளை சீனாவின் வற்புறுத்தலுக்கு இணங்க அவர் மாற்ற முற்பட்டதை இந்த அளவுக்கு மக்கள் கடுமையாக எதிர்ப்பார்கள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.
அதனால்தான்  சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிராக லட்சக்கணக்கில் மக்கள் தெருவில் இறங்கிப் போராட முற்பட்டபோது, அதை எதிர்கொள்ள முடியாமல் ஹாங்காங் நிர்வாகம் நிலை தடுமாறுகிறது. 
நாடு கடத்தல் மசோதாவை தலைவர் கேரி லாம் தற்போதைக்கு ஒத்தி வைத்திருக்கிறாரே தவிர, முற்றிலுமாகக் கைவிட்டு விடவில்லை. அவரது முக்கிய ஆலோசகர்களில் பலரும், அந்த மசோதாவை கைவிடும்படி கேட்டுக்கொண்டும்கூட கேரி லாம் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் இருப்பதற்கு சீனாவின் மறைமுக உத்தரவுதான் காரணம் என்று தெரிகிறது. ஏற்கெனவே சீனாவுடன் ஹாங்காங் இணைவதை விரும்பாத மக்கள் மத்தியில், புதிய சட்டம் அச்சத்தையும், பீதியையும் எழுப்பியிருப்பதில் வியப்பில்லை.
1997-இல் ஹாங்காங்கிலிருந்து  பிரிட்டிஷார் வெளியேறியபோது, அந்தத் தீவை சீனாவிடம் ஒப்படைத்தனர். அடுத்த 50 ஆண்டுகளுக்கு ஹாங்காங் சீனாவின் பகுதியாக இருந்தாலும்கூட, சிறப்பு அந்தஸ்துடன் ஒரே நாடு, இரு நிர்வாகம் என்கிற கொள்கையின் அடிப்படையில் செயல்படும் என்கிற ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி,  2047 வரை ஹாங்காங் சுயாட்சி உரிமையுடன் தனி நாணயம், அதற்கென்று அரசியல் நீதிபரிபாலன முறை ஆகியவற்றுடன் செயல்பட வழிவகை செய்யப்பட்டது. 
இந்தப் பின்னணியில்தான் தலைவர் கேரி லாம், புதிய நாடு கடத்தல் மசோதாவை அறிமுகப்படுத்த முற்பட்டார். 
இந்த நாடு கடத்தல் சட்ட மசோதாவின்படி, முன்பு போல ஹாங்காங்கில் நடைபெறும் குற்றங்கள் தொடர்பான வழக்குகள், ஹாங்காங்கில் மட்டுமே விசாரித்து நீதி வழங்கும் முறை கைவிடப்படும். சீனா சந்தேகப்படும் எவரையும் ஹாங்காங் நிர்வாகம் கைது செய்து விசாரணைக்கு சீனாவுக்கு அனுப்ப முடியும். சீனாவில் நீதித் துறை தன்னிச்சையாகச் செயல்படாமல் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், வழங்கப்படும்  தீர்ப்புகள் எப்படி இருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், சீனாவுக்கு எதிரான விமர்சகர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள். சீனாவுக்கு எதிரான தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஏற்கெனவே பதவி விலக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்; ஆட்சிக்கு எதிரானவர்கள் தேர்தலில் நிற்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது; ஓர் அரசியல் கட்சி தடை செய்யப்பட்டிருக்கிறது; வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பின்னணியில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் நாடு கடத்தல் மசோதா, மறைமுகமாக ஹாங்காங்கை சீனாவின் முழுமையான கண்காணிப்புக்கும், அதிகாரத்துக்கும் உள்படுத்தும் முயற்சி என்று போராட்டக்காரர்கள் கூறுவதில் நியாயம் இல்லாமல் இல்லை.
2014-இல் தேர்தல் முறையில் மாற்றம் ஏற்படுத்த முற்பட்டபோது, ஹாங்காங் மக்கள் தெருவில் இறங்கிப் போராடினார்கள். 
எல்லோரும் குடையை ஏந்திக்கொண்டு தெருவில் இறங்கிப் போராடியதால், அந்தப் போராட்டம் அம்பர்லா மூவ்மெண்ட் என்று வரலாற்று முக்கியத்துவம் பெற்றுவிட்டது. 
அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கியத் தலைவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது வழக்கு  தொடுக்கப்பட்டது என்பதால், இந்த முறை புதுமையான ஓர் அணுகுமுறையை போராட்டக்காரர்கள் கையாண்டிருக்கிறார்கள். யாரையுமே போராட்டத் தலைவர்கள் என்று அடையாளப்படுத்தாமல் முழுக்க முழுக்க சமூக ஊடகத்தின் உதவியுடன் போராட்டம் நடைபெறுகிறது. 
ஹாங்காங் போராட்டம் சீனாவுக்கு மிகப் பெரிய தலைவலியாக மாறிவிட்டிருக்கிறது. ஹாங்காங்கிலிருந்து முதலீடுகள் ஏற்கெனவே  வெளியேறத் தொடங்கிவிட்டன. ஹாங்காங்கில் நிலவும் நிலையற்ற தன்மை, பலரையும் சிங்கப்பூரிலும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் தங்களது சொத்துகளுடன் குடியேற வைத்திருக்கிறது. 
சீனா பொறுமை காக்குமா அல்லது அடக்குமுறையை ஏவி விடுமா என்பது போகப் போகத்தான் தெரியும். போராட்டக்காரர்கள் பின்வாங்குவதாக இல்லை. சீனா பின்வாங்குமா, இல்லை பழிவாங்குமா?
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/jun/22/என்ன-செய்யும்-சீனா-3176348.html
3175593 தலையங்கம் மரபு தடுமாறுகிறது! ஆசிரியர் Friday, June 21, 2019 01:32 AM +0530 இந்திய நாடாளுமன்றத்துக்கு என்றொரு மரபு உண்டு. நமது நாடாளுமன்றத்தின் மாண்புகள் புனிதமானவையாகக் கருதப்படுபவை. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரதமராக இந்திய நாடாளுமன்றத்துக்குள் நரேந்திர மோடி நுழைந்தபோது தரையில் விழுந்து வணங்கிவிட்டு நுழைந்தார் என்றால், நாடாளுமன்றத்தின் மீதான அவரது மதிப்பும் மரியாதையும் எந்த அளவிலானது என்பது வெளிப்பட்டது. நாடாளுமன்றத்தின் மதிப்புக்கு அவரது ஆட்சியில் களங்கம் ஏற்படுவது வேதனை அளிக்கிறது.
பதினேழாவது மக்களவை தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்ச்சி கடந்த செவ்வாய், புதன்கிழமைகளில் நடந்தது. இதுவரை இல்லாத புதிய சில தேவையற்ற பழக்கங்கள் இந்த முறை நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பின்போது கையாளப்பட்டதுதான் விமர்சனத்துக்கும், முகச்சுளிப்புக்கும் காரணமாகியிருக்கிறது. அமைதியாக நடந்திருக்க வேண்டிய உறுப்பினர்களின் பதவியேற்பு, ஏதோ திருவிழா போலக் கோஷங்களுடன் நடைபெற்றதைப் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது.
பதவியேற்க வந்த மேற்கு வங்க பாஜக உறுப்பினர்கள், பதவியேற்பதற்கு முன்னால் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமெழுப்ப, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தங்கள் பங்குக்கு ஜெய் ஸ்ரீராம் கோஷத்துடன் அதை வழிமொழிய, நாடாளுமன்றம் ஏதோ கட்சி மாநாடு போலக் காட்சியளித்தது. பாஜகவினரைப் பின்பற்றி, திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜெய் பங்களா, ஜெய் மா துர்கா என்று கோஷமெழுப்பத் தொடங்கியபோது, நோய்த்தொற்றுபோல எல்லா கட்சியினரும் தங்கள் பங்குக்கு கோஷமெழுப்பியபடி பதவியேற்றது, நாடாளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்குரியதாக மாற்றியது.
ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசிக்கு திடீரென்று ஏன் பாபா சாகேப் அம்பேத்கர் மீது பாசம் ஏற்பட்டது என்று தெரியவில்லை. அவரது பங்குக்கு ஜெய் பீம், ஜெய் மீம், தக்பீர் அல்லாஹு அக்பர், ஜெய் ஹிந்த் என்று கோஷமெழுப்பிப் பதவியேற்றுக் கொண்டார்.
நமது தமிழக திமுக கூட்டணி உறுப்பினர்களும் சளைத்தவர்களில்லை. தமிழ் வாழ்க கோஷத்துடன் நிறுத்திவிடாமல், சிலர் கருணாநிதி, பெரியார் என்று தங்களது தலைவர்களுக்கும் வாழ்க கோஷம் போட்டுப் பதவி ஏற்றுக்கொண்டனர். 
பாஜகவில் தொடங்கி, கோஷம் எழுப்பியபடி பதவியேற்ற அத்தனை உறுப்பினர்களிடமும், நாடாளுமன்றத்தின் மாண்பையும் மரபையும் காப்பாற்ற வேண்டும் என்கிற அக்கறையைவிட, அரசியல் ரீதியாகத் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம்தான் மேலெழுந்திருந்தது வெளிப்படையாகவே தெரிந்தது.
130 கோடி மக்களைப் பிரதிபலிக்கும் 542 உறுப்பினர்கள் எனும்போது, அந்த உறுப்பினர்களின் பொறுப்பும், கடமையுணர்வும் எந்த அளவில் இருக்க வேண்டும் என்று நாம் சிந்தித்துப் பார்த்தால், பதவியேற்பின்போது எழுப்பப்பட்ட கோஷங்களின் தரக்குறைவு புரியும். ஓட்டப் பந்தயத்தில் பங்கு பெற்று வெற்றி பெறுவது போலல்ல, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பதவியேற்பது என்பதுகூடப் புரியாதவர்களை நாம் தேர்ந்தெடுத்து அனுப்பி விட்டோமோ என்கிற அச்சம் மேலெழுகிறது.
பதினேழாவது மக்களவையில், கடந்த மக்களவையைவிட அதிக அளவில் மகளிர் இடம்பெறுகிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது. 542 உறுப்பினர்கள் உள்ள அவையில் 78 பேர், அதாவது 14.3% மகளிர் என்பது, இடஒதுக்கீடு இல்லாமலேயே மகளிரின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது என்பதைத்தான் காட்டுகிறது.
மகளிரின் எண்ணிக்கை பலம் அதிகரிக்கும்போது, அவையின் செயல்பாடுகள் மேம்படும். எனினும், கோஷம் எழுப்புவதில் தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்தனர்.
கடந்த 2014-இல் மொத்த உறுப்பினர்களில் 316 பேர் நாடாளுமன்றத்துக்குப் புதியவர்கள் என்றால், இந்த முறை முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 233 மட்டும்தான். முதல் முறையாக நாடாளுமன்றத்துக்குப் போகிறோம் என்கிற மிகப் பெரிய எதிர்பார்ப்புடனும், கனவுடனும் பதவி ஏற்றவர்களில் பலரும், பதவியேற்பின்போது காணப்பட்ட கோஷங்களைப் பார்த்து, ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்தார்களா என்றால் இல்லை. 
அவர்கள் மற்றவர்களைவிட உரக்க கோஷங்களை எழுப்பி பதவி ஏற்றனர்.
பதினேழாவது மக்களவையில் இடம்பெற்றிருக்கும் உறுப்பினர்களில் 233 பேர், அதாவது 43% பேர் குற்றப் பின்னணி உள்ளவர்கள் என்று தெரியும்போது, நமக்கு நம்பிக்கை எப்படி ஏற்படும்?
தங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் வழக்குகள் அரசியல் ரீதியிலானவை என்று, குற்றப் பின்னணியுள்ள எல்லா உறுப்பினர்களாலும் தங்களை நியாயப்படுத்திக் கொண்டுவிட முடியாது. 29% வழக்குகள் பாலியல் வன்முறை, கொலை, கொள்ளை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எனும்போது, அதை அவர்கள் எப்படி நியாயப்படுத்த முடியும்?
நாடு தழுவிய அளவில் காணப்படும் வறட்சியும் அதனால் ஏற்பட்டிருக்கும் தண்ணீர்ப் பஞ்சமும் அச்சுறுத்துகின்றன. வேலையில்லாத் திண்டாட்டம், உணவுப் பொருள்களின் விலை உயர்வு உள்ளிட்டவை இதர பிரச்னைகள். இப்படி, கவலைப்படுவதற்கு நிறையவே இருக்கும்போது, 130 கோடி மக்களின் பிரதிநிதிகளாக மக்களவைக்குத் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டிருப்பவர்கள் கோஷங்களை எழுப்பிக் குதூகலிப்பது  என்பது எந்தவிதத்திலான ஜனநாயகம்?
புதிய மக்களவை உறுப்பினர்களுக்கு நாம் விடுக்கும் வேண்டுகோள் இதுதான்-கோஷம் போடுவதற்காக மக்கள் உங்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பவில்லை. அவையின் மாண்பைக் குலைத்து விடாதீர்கள்!
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/jun/21/மரபு-தடுமாறுகிறது-3175593.html
3174874 தலையங்கம் சம்பிரதாயமா... வாக்குறுதியா? ஆசிரியர் Thursday, June 20, 2019 01:36 AM +0530 நாடாளுமன்ற மழைக்காலத் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கியதற்கு முன்பாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். 17-ஆவது மக்களவைத் தலைவராக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 
பல ஆண்டுகளுக்குப் பிறகு தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைந்துள்ளது. 542 உறுப்பினர்களில் 353 பேர் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள்.  பாஜகவின் எண்ணிகை பலம் மட்டுமே 303 இடங்கள். வலுவை இழந்த எதிர்க்கட்சி வரிசையுடன் 17-ஆவது மக்களவை காட்சியளிக்கிறது என்பது மட்டுமல்ல, முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி, அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுவதற்குரிய இடங்களில்கூட வெற்றி பெறவில்லை.  
நாடாளுமன்றத்துக்குள் நுழையும்போது கட்சி குறித்தோ, எதிர்க்கட்சி குறித்தோ உறுப்பினர்கள் சிந்திக்கக் கூடாது. நாட்டின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படுவதுடன் மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதிலும் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்களது எண்ணிக்கை குறைவாக இருப்பது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. அவர்களுடைய ஒவ்வொரு கருத்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்குத் தகுந்த மதிப்பளிக்கப்படும் என்று பிரதமர் கூறியிருப்பது வரவேற்புக்குரியது.
எதிர்க்கட்சிகளின் குரலுக்கு மரியாதை அளிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருப்பது சம்பிரதாயத்துக்காகவா அல்லது ஆளும் கட்சியின் அணுகுமுறையின் வெளிப்பாடா என்பதை அன்றாட நடவடிக்கைகளில் நாடாளுமன்றம் ஈடுபடும்போதுதான் தெரிந்துகொள்ள முடியும். எதிர்க்கட்சிகளுக்குப் போதிய வாய்ப்பளித்து, பெருந்தன்மையுடன் நடந்துகொள்ள அரசு முற்படுமேயானால் மட்டுமே, கூச்சல், குழப்பம் இல்லாமல் நாடாளுமன்றம் செயல்படும்.
கடந்த 16-ஆவது மக்களவையில் எதிர்க்கட்சிகளின் குரல் எடுபடவில்லை என்பது மட்டுமல்ல, முறையான வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. பல முக்கியமான பிரச்னைகளில் விவாதத்துக்கும், விமர்சனங்களுக்கும் இடமளிக்காமல் அவசரச் சட்டங்களின் மூலம் அணுக அரசு முற்பட்டது. வேறு வழியே இல்லாத நிலையில் மட்டுமே அவசர சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதும், ஒவ்வொரு மசோதாவும் நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்ட பிறகே சட்டமாக்கப்பட வேண்டும் என்பதும் ஜனநாயக நெறிமுறை.
இந்திய ஜனநாயகம் எப்படி நடைபெற வேண்டும் என்பதற்கு அடித்தளம் அமைத்தது 1952-இல் அமைந்த முதலாவது மக்களவை. அப்போது 489 இடங்கள் மட்டுமே இருந்த மக்களவையில், பெரும்பான்மை பெறுவதற்கு 245 இடங்கள் போதும். ஆனால், பண்டித ஜவாஹர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி 364 இடங்களைப் பெற்று, இப்போதைய நரேந்திர மோடி அரசைவிட பலமான ஆளுங்கட்சியாக இருந்தது. எதிர்க்கட்சி வரிசையில் இரண்டு இலக்க  இடங்களுடன் 16 இடங்கள் வென்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், 12 இடங்களைக் கொண்ட சோஷலிஸ்ட் கட்சியும் மட்டுமே காணப்பட்டன.
எதிர்க்கட்சிகளுக்கு எண்ணிகை பலம் இருக்காவிட்டாலும்,   தலைசிறந்த நாடாளுமன்றவாதிகள் பலர் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தனர். தோழர் ஏ.கே.கோபாலன் தலைமையில் கம்யூனிஸ்டுகளும், ராம் மனோகர் லோஹியா, ஆசார்ய கிருபளானி உள்ளிட்டோர் தலைமையில் சோஷலிஸ்டுகளும் எண்ணிக்கை பலவீனத்தை ஈடுகட்டினர். பிரதமர் ஜவாஹர்லால் நேருவும், எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசும்போது, தான் அவையில் இருப்பதைக் கட்டாயமாக்கியிருந்தார். அதன் மூலம் அவரது அமைச்சரவை சகாக்கள் எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்துகளுக்கும், விமர்சனங்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பதை பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு உறுதிப்படுத்தினார். எதிர்க்கட்சித் தலைவர்கள் உரையாற்றும்போது, ஆளும்கட்சித் தரப்பிலிருந்து எந்தவித இடையூறோ, குறுக்கீடோ இல்லாமல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. 
பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு கையாண்ட அதே அணுகுமுறையைப் பிரதமர் நரேந்திர மோடியும் கையாள முற்பட்டால் மட்டுமே நாடாளுமன்றத்தின் செயல்பாடு ஆக்கப்பூர்வமானதாக  இருக்க முடியும். 16-ஆவது மக்களவையில் கூட்டத்தொடர் நடக்கும்போது அரசு முறைப் பயணமாக பிரதமர் பலமுறை வெளிநாடுகளுக்குச் சென்றது அதுவரை இல்லாத வரம்புமீறல். கூட்டத்தொடர் நடக்கும்போது  நாடாளுமன்றத்தில் இருப்பதை பிரதமர் உறுதிப்படுத்தினால், எதிர்க்கட்சியினரின் குரலுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்கிற அவரது உறுதிமொழியைச் செயல்படுத்த முடியும்.
ஒரே தேசம், ஒரே தேர்தல் பிரச்னையை விவாதிப்பதற்காக அரசுத் தரப்பால் கூட்டப்பட்ட முதல் அனைத்துக் கட்சி கூட்டத்திலேயே எல்லா கட்சிகளும் பங்கு பெறவில்லை என்பதிலிருந்து எந்த அளவுக்கு இரு தரப்பும் இணைந்து செயல்படும் என்பது வெளிப்படுகிறது. எல்லா பிரச்னைகளிலும் ஆளும் கட்சியுடன் எதிர்க்கட்சிகள் ஒத்துப்போக வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஆளும்கட்சிக்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருந்தாலும் அதை வெளிப்படுத்தும் வாய்ப்பை எதிர்க்கட்சிகளுக்கு வழங்குவது ஆளும் கட்சியின் கடமை. 
ஆளும் கட்சிக்குப் பெரும்பான்மை பலம் இருக்கும் நிலையில், மக்களவையின் செயல்பாட்டு முடக்கம் இருக்காது என்று நம்பலாம். ஆனால், அது மட்டுமே மக்களவையின் வெற்றிகரமான செயல்பாடாக இருக்காது. எதிர்க்கட்சிகளுக்கு எந்த அளவுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது, அவையில் விவாதம் நடைபெறுகிறது என்பதன் அடிப்படையில்தான் ஜனநாயகத்தின் வெற்றி - தோல்வி தீர்மானிக்கப்படும்.
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/jun/20/சம்பிரதாயமா-வாக்குறுதியா-3174874.html
3174104 தலையங்கம் அணுகுமுறையில் தெளிவு! ஆசிரியர் Wednesday, June 19, 2019 01:37 AM +0530
இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு நரேந்திர மோடி பங்கேற்ற முதலாவது சர்வதேச மாநாடு என்பதால்,  கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில்  கூடிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ.) உச்சி மாநாடு சர்வதேச கவனத்தை ஈர்த்தது. எதிர்பார்த்தது போலவே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான நரேந்திர மோடி அரசின் அணுகுமுறை குறித்து ஓரளவுக்கு எஸ்.சி.ஓ. மாநாடு  தெளிவை ஏற்படுத்தியது. 
சீனாவும் ரஷியாவும் இணைந்து உருவாக்கிய அமைப்புதான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு. இதில் ஆப்கானிஸ்தானும், முந்தைய சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து போன மத்திய ஆசிய நாடுகளான  உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளும் உறுப்பினர்களாக  இருக்கின்றன. 
2017-இல் இந்தியாவும் பாகிஸ்தானும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டன. இந்த அமைப்பில் ரஷியா, இந்தியா, சீனாவைத் தவிர ஏனைய நாடுகள் அனைத்துமே இஸ்லாமிய நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும்கூட, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ரஷியா-சீனா ஆகிய இரு நாடுகளின் கட்டுப்பாட்டில்தான் இயங்கி வருகிறது.
உலகிலுள்ள பல நாடுகளும் ஏதாவது ஒரு வல்லரசின் தலைமையில் இயங்கும் அமைப்புடன் தங்களை இணைத்துக் கொள்கின்றன. இதனால் பாதுகாப்பு ரீதியாகவும்,  வர்த்தக ரீதியாகவும்  அந்த நாடுகள் பயன் பெறுகின்றன. தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க், பாகிஸ்தானின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் வலுவிழந்து போய்விட்ட நிலையில், இந்தியாவுக்கு  ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பலவிதத்திலும் உதவியாக இருக்கிறது.  குறிப்பாக, நமக்கு பாகிஸ்தானுடனும், ஆப்கானிஸ்தானுடனுமான தொடர்புக்கு இந்த அமைப்பு மட்டும்தான் இப்போதைக்கு உதவுகிறது.
இந்தியா ஒருபுறம் அமெரிக்காவுடனும், இன்னொரு புறம் சீனாவுடனும் மறுபுறம் ரஷியாவுடனும் தனது நட்புறவைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. சீனாவுக்கும் ரஷியாவுக்கும் எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தக ரீதியிலான போரை முன்னெடுத்திருக்கும் நிலையில்,  இந்தியாவுக்கு சில தர்மசங்கடங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கை இந்தியாவையும் பாதித்திருக்கிறது என்கிற நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைக்கு எதிராக, பிரதமர் நரேந்திர மோடி உரக்க எழுப்பிய குரல் சீனாவையும் ரஷியாவையும் ஆச்சரியப்படுத்தி இருக்கக்கூடும்.
பிஷ்கெக் மாநாட்டில்  இதற்கு முன்னர் காணப்படாத உற்சாகத்துடனும், துணிவுடனும் பிரதமர் நரேந்திர மோடி காணப்பட்டதை அனைவருமே  உணர்ந்தனர். இந்தியாவின் புதிய வாய்ப்புகளும், அவருக்குத் தேர்தல் மூலம் கிடைத்திருக்கும் மறு அங்கீகாரமும் அவரது முக்கியத்துவத்தை அதிகரித்திருப்பது தெளிவாகவே தெரிந்தது. அவரது உரை அதை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்தது.
சீன அதிபர் ஷி ஜின்பிங்குடனான தனது தனிப்பட்ட நெருக்கத்தை வெளிப்படுத்திய அதே நேரத்தில் சீனாவின் வர்த்தக சாலைத் திட்டத்தை அவர் எதிர்த்ததும், பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்கிற சீனாவின் வேண்டுகோளை நிராகரித்ததும் இந்தியாவின் தெளிவான கண்ணோட்டத்தைக் காட்சிப்படுத்தின. 
இந்த ஆண்டின் இறுதிக்குள் மேலும் நான்கு முறை பிரதமர் மோடியும் சீன அதிபர் ஷீ ஜின்பிங்கும் சந்திக்க இருக்கிறார்கள். அதன் முன்னோட்டமாக பிஷ்கெக்கில் அவர்களிடையே நடந்த 25 நிமிஷ சந்திப்பு  சில தெளிவுகளை இருவருக்கும் ஏற்படுத்தி இருக்கக்கூடும். இரண்டு தலைவர்களுமே உடனடியான பிரச்னைகளையும், ராஜதந்திர ரீதியிலான நிர்ப்பந்தங்களையும் தாண்டி, சர்வதேச அளவிலான பிரச்னைகள் குறித்தும் விவாதித்திருக்ககூடும் என்று  கூறப்படுகிறது.  
பிரதமரின் தொகுதியான வாராணசியில் இரு நாடுகளுக்கு மிடையே நடக்க இருக்கும் நட்புறவுக் கூட்டத்துக்கு  வரும் அக்டோபர் 11, 12 தேதிகளில் சீன அதிபர் ஷி ஜின்பிங் அழைக்கப்பட்டிருக்கிறார். விரைவிலேயே ஜப்பானில் நடக்க இருக்கும் ஜி20 மாநாட்டில் இருவரும் மீண்டும் சந்திக்க இருக்கிறார்கள். பிஷ்கெக்கில் நடந்த சந்திப்பில்,  தீவிரவாதம் முற்றிலுமாக அகற்றப்பட்ட நிலையில் மட்டுமே இஸ்லாமாபாதுடனான எந்தவிதப் பேச்சுவார்த்தைக்கும் இந்தியா முன்வரும் என்பதைச் சீன அதிபரிடம் பிரதமர் மோடி தெளிவுபடுத்தினார். அதனால்தான் பயங்கரவாத நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று துணிந்து, அழுத்தமாகப் பிரதமர் மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பதிவு செய்திருக்கிறார் என்று  தோன்றுகிறது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானைச் சந்திப்பதற்கு பிஷ்கெக்கில் ஏழு வாய்ப்புகள் அமைந்தும்கூட பிரதமர் மோடி அதைத் தவிர்த்துவிட்டார். ஒரே ஒருமுறை சம்பிரதாயத்துக்காகக் கைகுலுக்கியதுடன் அவர் நிறுத்திக் கொண்டதற்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும். குறிப்பாக, தேர்தல் பிரசாரத்தில் பாகிஸ்தானை மிகக் கடுமையாக விமர்சித்துவிட்டு, திடீர் திருப்பமாக நட்பு பாராட்டுவது இந்தியாவில் தன் மீதான பிம்பத்தைச் சிதைத்துவிடும் என்றுகூட அவர் தயங்கியிருக்கலாம். பாகிஸ்தானுடனான உறவு, அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கை ஆகியவற்றில் மிகத் தெளிவான அணுகுமுறையை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் இந்தியா வெளிப்படுத்தியது. 
முந்தைய பிரதமர் மோடிக்கும் இப்போதைய பிரதமர் மோடிக்கும் இடையே மிகப் பெரிய மாற்றம் தெரிகிறது. அந்த மாற்றத்தின் அறிகுறிதான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை.
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/jun/19/அணுகுமுறையில்-தெளிவு-3174104.html
3173410 தலையங்கம் மருத்துவத்துக்கு என்ன சிகிச்சை? ஆசிரியர் Tuesday, June 18, 2019 01:43 AM +0530 மேற்கு வங்கத்தில் கடந்த ஒரு வாரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவர்கள், முதல்வர் மம்தா பானர்ஜியின் வாக்குறுதியைத் தொடர்ந்து தங்களது போராட்டத்தை முடித்துக் கொண்டிருக்கிறார்கள். பிரச்னை எழுந்தவுடன் கௌரவம் பார்க்காமல், மேற்கு வங்க அரசின் சுகாதாரத் துறையையும் தனது பொறுப்பில் வைத்திருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜி, நேரிடையாக சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தால் மருத்துவர்களின் போராட்டம் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றிருக்காது. 
கொல்கத்தாவிலுள்ள என்.ஆர்.எஸ். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த ஜூன் 10-ஆம் தேதி 74 வயது முகமது சயீத் என்கிற நோயாளி ஒருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து பிரச்னை எழுந்தது. நோயாளிக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், குறித்த நேரத்தில் கவனிக்கவில்லை என்றும் ஆத்திரமடைந்த முகமது சயீதின் உறவினர்கள், விளக்கம் தர முனைந்த இரண்டு மருத்துவர்களைத் தாக்கியதில் தொடங்கியது இந்தப் போராட்டம்.
மருத்துவர்களின் அடிப்படைக் கோரிக்கையை மறுப்பதற்கில்லை. பாதுகாப்பான பணிச்சூழல் மருத்துவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சிகிச்சை பலனளிக்காமல் போகும்போது, நோயாளிகளின் உறவினர்களுக்கு ஆத்திரம் ஏற்படுவது இயற்கை. அதற்காக அவர்கள் தங்களது ஆத்திரத்தை மருத்துவர்களின் மீது காட்ட முற்படுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. 
தவறான சிகிச்சை வழங்கப்படுதல், சரியான சமயத்தில் மருத்துவர்கள் இல்லாமல் இருத்தல், கவனிக்காமல் இருத்தல் உள்ளிட்டவை கண்டனத்துக்குரியவை மட்டுமல்ல, தண்டனைக்குரியவையும்கூட. அதற்காக வழக்குத் தொடுப்பதற்கான சட்டப் பிரிவுகள் இருக்கின்றன. சில மாநிலங்களில் சிறப்புச் சட்டங்களும் இயற்றப்பட்டிருக்கின்றன. அதனடிப்படையில், தவறான சிகிச்சை குறித்து வழக்குத் தொடரும் உரிமை நோயாளிகளுக்கு உண்டு. வழக்குத் தொடுத்து வெற்றி பெற்று இழப்பீடும் பெற்ற நிகழ்வுகளும் உண்டு. அப்படியிருக்கும்போது சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு மருத்துவர்கள் தாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து மட்டு மல்லாமல், பொதுவாக இந்திய மருத்துவத் துறையின் செயல்பாடுகள் குறித்தும், தரம் குறித்தும் பல கேள்விகளை கொல்கத்தா பிரச்னை எழுப்புகிறது. அரசின் தவறான கொள்கைகளால், மருத்துவர்களுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. அதனால், இந்தியாவில் மருத்துவர்களின் எண்ணிக்கை மிக முக்கியமான பிரச்னை. 
உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி, 1,000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும். அதன்படி பார்த்தால், இந்தியாவில் 1,472 பேருக்கு ஒரு மருத்துவர் மட்டுமே இருக்கும் நிலைமை காணப்படுகிறது. ஒட்டுமொத்த இந்தியாவில் செயல்படும் மொத்த மருத்துவர்களின் எண்ணிக்கையே 10 லட்சத்துக்கும் குறைவாகத்தான் காணப்படுகிறது. 
மருத்துவர்களும் சரி, பெரும்பாலும் மாநிலத் தலைநகரங்களிலும் முக்கியமான பெரு நகரங்களிலும்தான் பணிபுரிகிறார்களே தவிர, பிற்பட்ட மாவட்டங்களிலும், ஊரகப் பகுதிகளிலும் பணி புரிபவரின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. பகுதிகள் ரீதியாக பகுத்தாய்வு செய்து பார்த்தால், இந்தியாவின் பல பகுதிகளில் 25,000 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலையில்கூட மருத்துவர்கள் இல்லாத நிலை பரவலாகக் காணப்படுகிறது.
தனியார்மயத்துக்குச் சாதகமான மத்திய-மாநில அரசுகளின் செயல்பாடுகளால் புறக்கணிக்கப்படும் அரசு மருத்துவமனைகளும், அரசு மருத்துவக் கல்லூரிகளும் சாமானியர்களுக்குத் தரமான மருத்துவத்தை எட்டாக்கனியாக்கிக் கொண்டிருக்கிறது. மருத்துவக் கல்வியும் மருத்துவமும் வணிகமாக்கப்பட்டிருப்பதால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை அடித்தட்டு மக்கள்தான் எதிர்கொள்கிறார்கள். நடுத்தர மக்கள் அதிக அளவில் கடனாளி ஆவதற்கு அதிகரித்துவிட்டிருக்கும் மருத்துவச் செலவுகள்தான் காரணம் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 
மருத்துவக் கல்வி வணிகமாகிவிடக் கூடாது என்கிற நோக்கில், உச்சநீதிமன்றத்தால் வலியுறுத்தப்பட்டு கொண்டுவரப்பட்டிருக்கும்  நீட் தேர்வு, அரைகுறைத்  தீர்வாக மாறிவிட்டிருக்கிறது. இந்திய மருத்துவக் கல்வி குறித்த விரிவான விவாதம் நடத்தப்பட்டாக வேண்டும். 
மருத்துவக் கல்வியில் நீதித் துறையின் அவசியமற்ற தலையீடு காரணமாக, கிராமப்புறங்களில் பணியாற்ற மருத்துவர்கள் இல்லை. மருத்துவப் பட்டம் பெறுபவர்களில் பெரும்பாலோர் மருத்துவ மேல்படிப்புக்கு முனைகிறார்கள். குறைந்தது ஐந்தாண்டுகளாவது பொது மருத்துவ அனுபவம் பெற வேண்டும் என்கிற வரம்பு இல்லாததால், சிறப்பு சிகிச்சையில் காணப்படும் திறமை, மருத்துவர்கள் மத்தியில் பொது சிகிச்சையில் இல்லாமல் போய்விட்டிருக்கிறது. அது குறித்து யாரும் கவலைப்படுவதாக இல்லை. அதன் விளைவுதான் பொது மருத்துவத்தில் காணப்படும் தவறான சிகிச்சைகளும், எதிர்வினைகளும் என்பதை எடுத்தியம்பாமல் இருக்க முடியவில்லை. 
மருத்துவர்களுக்கு எதிரான வன்முறையை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவில் 77% மருத்துவர்கள் ஏதாவது வகையில் வன்முறையை எதிர்கொள்ளும் பணிச்சூழலில் இயங்குகிறார்கள் என்கிற கசப்பான உண்மையையும், போதுமான மருத்துவர்கள் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதும் மேற்கு வங்க மருத்துவர்களின் போராட்டத்தின் மூலம் ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்குமேயானால், தவறிலும் ஒரு நன்மை ஏற்பட்டிருப்பதாக ஆறுதல் அடையலாம்.
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/jun/18/மருத்துவத்துக்கு-என்ன-சிகிச்சை-3173410.html
3172765 தலையங்கம் தாமதமல்ல, இழப்பு! ஆசிரியர் Monday, June 17, 2019 03:00 AM +0530 பதினாறாவது மக்களவை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து  காலாவதியான 46 மசோதாக்களை மீண்டும்  அறிமுகப்படுத்துவது என்று பிரதமர் நரேந்திர மோடி அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது.  இன்று தொடங்க இருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே  பல மசோதாக்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.

மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி, நிறைவேற்றுவதன் மூலம்தான் அரசு செயல்படுகிறது. மசோதா நிறைவேறும்போது அது சட்டமாகிறது. மசோதாக்கள் நிறைவேறாமல் தேங்கிக் கிடந்தால் அதன் பாதிப்பை நிர்வாகமும் மக்களும் எதிர்கொள்ள நேரிடும்.  இதனால், ஏற்படும் இழப்பு குறித்த புரிதல் பரவலாக இல்லாமல் இருக்கிறது. 

2016-17 நிதியாண்டில் மட்டும் மின் பகிர்வு மற்றும் மின் விநியோகத்தின் மூலம் ஏற்பட்ட  மின்சக்தி இழப்பு  25 லட்சம் யூனிட்டுகள். அதாவது, அந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட மொத்த மின்சாரத்தில் 21.42% மின் பகிர்விலும் விநியோகத்திலும் வீணாகியிருக்கிறது. அரசின் ஒப்புதல்படி மின் பகிர்விலும், மின் விநியோகத்திலும் ஏற்படும் இழப்பில் 1% குறைந்தால், அதன் மூலம் ரூ.4,146.60 கோடி இழப்பு குறையும். 

2007-2008 முதல் 2016-2017 வரை 21,29,129 ஜிகாவாட் மணிகள் அளவிலான மின்சாரத்தை மின் பகிர்வு மற்றும் மின் விநியோகத்தின் மூலம் இந்தியா இழந்திருக்கிறது. 

எப்போதோ சட்டம் இயற்றி, திட்டமிட்டு முறையான நடவடிக்கைகளின் மூலம் மின் பகிர்வு, மின் விநியோகத்தால் ஏற்படும் இழப்பைக் குறைத்திருக்க முடியும். 2014 டிசம்பர் 19-ஆம் தேதி,  மின்சாரம் (திருத்த) மசோதா 2014 மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த மசோதா மின் கசிவு, முறையற்ற மின் கணக்கெடுப்பு, மின் கட்டண வசூல் முறை ஆகியவற்றை எதிர்கொள்ள வழிகோலியிருந்தது. மின்சாரம் (திருத்த) மசோதா 2014 நிலைக் குழுவால் விவாதிக்கப்பட்டு, மீண்டும்  நாடாளுமன்றத்துக்கு மே 2015-ஆம் ஆண்டு தரப்பட்டுவிட்டது. 

மறுபடியும் அறிமுகப்படுத்துவதற்குக் காத்திருக்கும் இன்னொரு மிக முக்கியமான மசோதா மோட்டார் வாகனங்கள் (திருத்த) மசோதா.  பட்ஜெட் கூட்டத் தொடரில்  இந்த மசோதா மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2017 ஏப்ரல் மாதம் மக்களவையால் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. 

போக்குவரத்துத் துறையில் மிகப் பெரிய மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும்  கொண்டு வருவதற்காகப்  பல மாத விவாதங்களுக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட மசோதா இது. 100% இணைய நிர்வாகம், ஓட்டுநர் உரிம சான்றிதழ் முறைகேடுகளைத் தடுத்தல், வாகனத் திருட்டு, போக்குவரத்து விதி மீறல்கள் ஆகியவை இந்த மசோதாவின் மூலம் எதிர்கொள்ளப்படுகின்றன.

கிரீன்லேண்ட் என்கிற நாட்டின் மக்கள்தொகையைப் போல் மூன்று மடங்கு எண்ணிக்கையில் இந்திய சாலைகளில் ஆண்டுதோறும் விபத்தில் சிக்கி மடிகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கான புள்ளிவிவரத்தைப் பார்த்தால் எந்த அளவுக்கு சாலை விபத்துகளால் நாம் பாதிக்கப்படுகிறோம் என்பது தெரியும். 48 லட்சம் சாலை விபத்துகளில் 10 ஆண்டுகளில் 13,82, 880 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். விபத்துக்கான காரணம் பலவாக இருந்தாலும், மோட்டார் வாகனச் சட்டம் சரியாக அமல்படுத்தப்படவில்லை என்பதும், அதன் சட்டப் பிரிவுகள் தெளிவாக இல்லை என்பதும்தான் காரணம்.

மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா 2016 சாலை போக்குவரத்துத் தொடர்பான பல்வேறு பிரச்னைகளை விரிவாகவும், தெளிவாகவும் எதிர்கொள்கிறது. சாலை பாதுகாப்பு விதிகள், வாகன உரிமத்துக்கான நடைமுறைகள், மின்னணுக் கண்காணிப்பு, காப்பீடு, வாகனங்களின் தகுதி சோதனை, குறைபாடுகளுக்கான  பிழைக் கட்டணம் ஆகியவை இந்த மசோதா சட்டமாக்கப்படும்போது, தெளிவும், கடுமையும் பெறும். 

2016 ஆகஸ்ட் 9-ஆம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா, இரண்டு குழுக்களால் பரிசீலிக்கப்பட்டு பிப்ரவரி 2017-இல் அவைக்கு அனுப்பப்பட்டது. நாடாளுமன்றத்தில்  தேங்கிக் கிடக்கும் முக்கியமான மசோதாக்களில் இதுவும் ஒன்று. முத்தலாக் விவாகரத்து முறையைத் தடை செய்யும் முஸ்லிம் மகளிர் (திருமண உரிமைப் பாதுகாப்பு) மசோதா, இந்திய மருத்துவ கவுன்சில் திருத்த மசோதா,  பாலியல் குற்றங்களில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் போக்சோ திருத்த மசோதா, மத்திய பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா, மனித உரிமைப் பாதுகாப்பு திருத்த மசோதா உள்ளிட்ட பல மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்பட இருக்கின்றன. 

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று நாம் கூறிக்கொள்வது வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டும்தான். உண்மையான ஜனநாயகம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால்  விவாதிக்கப்பட்டு முறையாகவும், விரைவாகவும் சட்டங்கள் இயற்றப்படுவதன் மூலம் நிர்வாகம் நடத்தப்படுவது என்பதைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம்.  

மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் தேங்கிக் கிடப்பதை எதிர்க்கட்சிகள் தங்களது வெற்றியாகக் கருதுவதும், மசோதாக்கள் காலாவதியாகிப் போவதைப் பற்றிக் கவலைப்படாமல் ஆளும் கட்சி ஆட்சியில் தொடர்வதும் முறையான ஜனநாயகம் அல்ல.

இரண்டாவது முறையாக  மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அரசால், காலாவதியான  மசோதாக்கள் மீண்டும் தாக்கல் செய்யப்படுவது வரவேற்புக்குரியது!

]]>
https://www.dinamani.com/editorial/2019/jun/17/தாமதமல்ல-இழப்பு-3172765.html
3171638 தலையங்கம் மீண்டும் ஒரு வாய்ப்பு! ஆசிரியர் Saturday, June 15, 2019 02:10 AM +0530
தர்க்க ரீதியாகப் பார்த்தால் சந்தைப் பொருளாதாரம் என்பது நுகர்வோருக்கு சாதகமான சூழலை உறுதிப்படுத்துவதாக அமைய வேண்டும். அமெரிக்கா உள்ளிட்ட சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படையிலான நாடுகளில் எல்லாம் அதன் பயனை நுகர்வோர் முழுமையாக அனுபவிக்கிறார்கள். அந்த நாடுகளில் அமல்படுத்தப்பட்டிருக்கும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமும், கண்காணிப்பு அமைப்புகளும், நுகர்வோர் இயக்கங்களும், எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் மத்தியில் காணப்படும் விழிப்புணர்வும்தான் அதற்குக் காரணம்.

1991-இல் அன்றைய நரசிம்ம ராவ் அரசு பாரியவாதம் ("குளோபலைசேஷன்'), பொருளாதார சீர்திருத்தம் என்கிற பெயரில் இந்தியாவில் சந்தைப் பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தியபோது, நுகர்வோரின் நலனை முன்னிறுத்தி எடுக்கப்படும் நடவடிக்கை என்று கூறப்பட்டது. ஆனால், கடந்த 28 ஆண்டு பொருளாதார சீர்திருத்தத்தின் செயல்பாட்டை மீள்பார்வை பார்க்கும்போது, இந்தியாவில் காணப்படுவது சந்தைப் பொருளாதாரமல்ல, மோசடி முதலாளித்துவம் ("குரோனி கேப்பிடலிஸம்') என்றுதான் கூறத் தோன்றுகிறது. நுகர்வோர் அமைப்புகள் வலிமையாக இல்லாமல் இருப்பதும், இந்தியாவில் வலுவான நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இல்லாமல் இருப்பதும்தான் இதற்குக் காரணம்.

1986-ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை அன்றைய ராஜீவ் காந்தி அரசு  கொண்டுவந்தது. 1991-இல் பொருளாதார சீர்திருத்தம் அறிவிக்கப்படுவதற்கு முன்னால் அல்லது அறிவிக்கப்பட்டவுடன், "நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986'-இல் மாற்றங்களை ஏற்படுத்தி கடுமைப்படுத்தியிருக்க வேண்டும். 

நுகர்வோர் அமைப்புகள் தொடர்ந்து குரல் எழுப்பியும்கூட, ஆட்சிக்கு வந்த பல்வேறு அரசுகளும் அது குறித்த முனைப்பைக் காட்டவில்லை. 

2014-இல் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தபோது, மத்திய நுகர்வோர் நல அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் இந்தப் பிரச்னையில் முனைப்புக் காட்டினார். மாதிரி வரைவு மசோதா உருவாக்கப்பட்டது. அந்த மாதிரி மசோதா, அடுத்த ஐந்து ஆண்டுகள் பல்வேறு மாற்றங்களைக் கண்டது. பல திருத்தங்கள் செய்யப்பட்டன. 2019-இல் 
16-ஆவது மக்களவை முடிவுக்கு வந்தவுடன் அந்த மசோதா காலாவதியாகிவிட்டது. 

பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த ஆட்சியில் அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானால் கொண்டுவரப்பட்ட மசோதாவில், "நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986'-இல் இருந்த பல அடிப்படைக் குறைபாடுகள் களையப்படாமல் தொடர்ந்தன. கொண்டுவரப்பட்ட சில மாற்றங்கள், மசோதாவை மேலும் பலவீனப்படுத்துவதாக இருந்தன. ஒருவகையில் பார்த்தால், அந்த மாதிரி மசோதா தாக்கல் செய்யப்படாமல் காலாவதியானதேகூட வரவேற்புக்குரியது என்றுதான் கருத வேண்டும். 

"நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986'-இன் மிகப் பெரிய குறை, இழுத்தடிக்கப்படும் மிகவும் சிக்கலான வழக்கு நடைமுறைகள். முந்தைய சட்டத்துக்கு மாற்றாக தயாரிக்கப்பட்ட புதிய மசோதா, பேச்சுவார்த்தைத் தீர்வை வலியுறுத்தியது. வஞ்சிக்கப்படும் நுகர்வோருக்கு நியாயம் வழங்கப்படுவதற்கு பதிலாக பேச்சுவார்த்தைத் தீர்வு வழங்குவது, நுகர்வோர் நலனைப் பாதுகாப்பதாக இருக்காது. 

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது தயாரிப்பாளர்களுடனும், சேவை வழங்குபவர்களுடனுமான பிரச்னைகளை வழக்குரைஞர்களின் உதவியில்லாமல் விரைவாகத் தீர்வு காணும் மாற்று முறையை வழங்குவதுதான் இலக்கு என்று ஆட்சியாளர்கள் உறுதியளித்தது நடைமுறைப்படுத்தப்படவே இல்லை. எளிமையாகவும், விரைவாகவும், செலவில்லாமலும் நுகர்வோருக்கு நீதி கிடைப்பதில்லை என்பதுதான் நடைமுறை எதார்த்தம். பல்வேறு ஆய்வுகள் இதற்குப் பல காரணங்களைத் தெரிவிக்கின்றன. மிக முக்கியமான காரணம், அதிக அளவிலான வழக்குரைஞர்களின் தலையீடு, நுகர்வோர் நீதிமன்றத்தை வழக்கமான நீதிமன்றம்போல மாற்றியிருப்பதுதான்.

"நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986'-இல் ஒழுங்காற்று ஆணையர் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தாலும், அந்த ஆணையரின் கடமைகள் குறித்த முறையான, விரிவான விளக்கங்கள் இல்லை. நுகர்வோரின் உரிமைகளை உறுதிப்படுத்த வலிமையான ஆணையமும், ஆணையரும் இல்லாமல் நுகர்வோர் பாதுகாப்பு குறித்து விவாதிப்பது என்பதே அர்த்தமற்றது.

"1986' சட்டத்தின்படி, நுகர்வோரின் முதல் உரிமையே அவர்களுக்குப் பாதுகாப்பான பொருள்களும், முறையான சேவையும் வழங்கப்படுவதுதான். இன்று சந்தையில் காணப்படும் பெரும்பாலான பொருள்கள் நுகர்வோரை வஞ்சிப்பவையாகவும், பாதுகாப்பற்றவையாகவும் இருக்கின்றன எனும்போது, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், நுகர்வோர் கண்துடைப்புச் சட்டமாக மாற்றப்பட்டிருக்கிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

கடந்த ஆட்சியில் நுகர்வோர் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்த அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு கிட்டியிருக்கிறது. பழைய மசோதா காலாவதியாகிவிட்ட நிலையில், அவர் 17-ஆவது மக்களவையில் புதிய மசோதாவை தாக்கல் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது "நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986'-இல்  ஏற்படுத்தப்படும் திருத்தம் அல்ல, புதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம். 

பழைய தவறுகள் களையப்பட்டு, நுகர்வோரின் பாதுகாப்பை மட்டுமே முன்னிறுத்தி, புதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற அவருக்குக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் நழுவவிடக் கூடாது.

]]>
https://www.dinamani.com/editorial/2019/jun/15/மீண்டும்-ஒரு-வாய்ப்பு-3171638.html
3170729 தலையங்கம் விபத்தில் சிக்கும் விமானங்கள்! ஆசிரியர் Friday, June 14, 2019 01:29 AM +0530
அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்ஹட்டிலிருந்து அருணாசலப் பிரதேசம் ஷியோமி மாவட்டத்துக்கு கடந்த 3-ஆம் தேதி பிற்பகல் ஏ.என்-32 ரக போக்குவரத்து விமானம்  புறப்பட்டது. சீன எல்லையோரத்தில் அந்த விமானம் வனப் பகுதியின் மேலே பறந்தபோது காணாமல் போனது. அதில் பயணித்த விமானப் படையைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
நிகழாண்டில் மட்டும் கடந்த ஆறு மாதங்களில் ஒன்பது விமானங்களையும், ஒரு ஹெலிகாப்டரையும் இந்திய விமானப் படை இழந்திருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் இந்திய விமானப் படையின் ஜாகுவார் ரக விமானம், உத்தரப் பிரதேசம் குஷிநகர் மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது. பிப்ரவரி மாதத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட விபத்துகளை இந்திய விமானப்படை எதிர்கொண்டது. பெங்களூருவில்  விமானப்படையின் இரண்டு ஹாக் ரக விமானங்கள் கடந்த பிப்ரவரி மாதம் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாயின. அதே மாதத்தில் பெங்களூருவில் மிராஜ் 2000 விமானமும், ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் மிக்-27 ரக  விமானமும் விபத்துக்குள்ளாயின.
மார்ச் மாதத்திலும் விபத்தின் அணிவகுப்பு தொடர்ந்தது. ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் அருகே  மிக்-27 ரக விமானமும், பிகானீர் அருகே மிக்-23 ரக விமானமும் விபத்துக்குள்ளாயின. ஒன்றன் பின் ஒன்றாக இந்திய விமானப்படை விமானங்களை இழந்து வருவதற்கு அந்த விமானங்கள் மிகவும் பழைய தொழில்நுட்பத்துடன் கூடியவை என்பது மிக முக்கியமான காரணம். 
இந்திய விமானப்படை இனியும்கூட நவீனப்படுத்தப்படாமல் பெரும்பாலான பழைய விமானங்களையே பயன்படுத்தி வருகிறது என்கிற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை. கடந்த மன்மோகன் சிங் ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட அதி நவீன ரஃபேல் போர் விமானத்துக்கான ஒப்பந்தம், அரசியல் காரணங்களால் தாமதமானதன் பாதிப்பை இந்திய விமானப் படை எதிர்கொள்கிறது. 
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய விமானப்படை பிப்ரவரி 26-ஆம் தேதி நடத்திய பாலாகோட் விமானத் தாக்குதலுக்கு அடுத்த நாள், காஷ்மீர் மாநிலம் பட்காமில் இந்திய விமானப் படையின் மிக்-17 ரக ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் 6 விமானப் படையினர் உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர். பாலாகோட் தாக்குதலும், பாகிஸ்தானால் பிடிக்கப்பட்ட விங் கமாண்டர் அபிநந்தனின் விடுதலையும் ஏற்படுத்திய பரபரப்பும், தலைப்புச் செய்திகளும், பட்காம் ஹெலிகாப்டர் விபத்து குறித்த செய்தியை அநேகமாக இருட்டடிப்புச் செய்து விட்டன. ஊடகங்களில் சிறு தகவலாக மட்டுமே அது வெளியிடப்பட்டது. 
இப்போது இந்திய விமானப்படை ஸ்ரீநகர் விமான தளத்தின் தலைமை அதிகாரியைப் பதவி நீக்கம் செய்திருக்கிறது. அதன் பின்னணியில் பட்காம் ஹெலிகாப்டர் விபத்து குறித்த விசாரணை இருந்தது இப்போது வெளிவந்திருக்கிறது. 
பட்காமில் சுட்டு வீழ்த்தப்பட்ட மிக்-17  ஹெலிகாப்டர், இந்திய விமானப்படையின் ஏவுகணையால் வீழ்த்தப்பட்ட அதிர்ச்சி தரும் தகவல் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. பாலாகோட் விமான தாக்குதலைத் தொடர்ந்து, விமான பாதுகாப்பு மிக அதிகமான தயார் நிலையில் இருந்தும்கூட, மிக்-17 ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டது தீவிர விசாரணைக்கு ஆளானதில் வியப்பொன்றுமில்லை. 
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் நௌஷேரா என்கிற இடத்தில் இந்திய - பாகிஸ்தான் ஜெட் விமானங்கள் மிகக் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டிருந்தபோது பட்காமில் மிக்-17 ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டது. நண்பர்களையும், எதிரிகளையும் அடையாளம் காட்டும் ஐ.எஃப்.எஃப். என்கிற தொலைப்பார்வைக் கருவி, வான்வெளியில் நமது இந்திய விமானங்களை அடையாளம் காட்டும். மிக்-17 ஹெலிகாப்டரில் அந்தக் கருவி செயல்படவில்லையா, இல்லை முடக்கப்பட்டிருந்ததா என்கிற கேள்வி எழுகிறது.
சாதாரணமாக இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் பறக்கும்போது, விமான தளத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையுடன் ஐ.எஃப்.எஃப். கருவி  இணைக்கப்பட்டிருக்கும். அதனால், விமான தளத்திலிருந்து விண் ஏவுகணைத் தாக்குதலை நடத்தும்போது, எதிரி விமானங்களைக் குறிப்பிட்டு அடையாளம் கண்டு சுட்டு வீழ்த்திவிட முடியும். அப்படி இருக்கும்போது, பட்காமில் வழக்கமான நடைமுறைகளையும், இந்திய விமானப்படையின் தலைமையகத்தின் கண்டிப்பான உத்தரவுகளையும் அந்த ஹெலிகாப்டர் பின்பற்றாமல் போனது ஏன் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டாக வேண்டும்.
குறிப்பாக, இந்திய விமானப்படையின் ஒருங்கிணைந்த விமானத் தலைமையும், கட்டுப்பாட்டு நிர்வாகமும் எல்லையில் பதற்றம் நிலவிய சூழலில் ஏன் தீவிர கண்காணிப்புடன் இயங்கவில்லை என்பது மிக முக்கியமான கேள்வி. ரேடார்கள், ஆளில்லா உளவு விமானங்கள் உள்ளிட்ட எந்த ஒரு கருவியும் மிக் 17 ரக விமானத்தை எதிரிகளின் ஊடுருவல் விமானம் என்று அடையாளம் காட்டவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். 
கடந்த மூன்று மாதங்களாக பட்காம் விபத்து ரகசியமாகவும், மர்மமாகவும் காப்பாற்றப்பட்டது என்பதேகூடக் கண்டனத்துக்குரியது. என்ன நடந்தது என்பதை வெளிப்படையாகத் தெரிவிப்பது மட்டுமல்லாமல், அந்த விபத்துக்குக் காரணமான பல்வேறு நிலையிலுள்ள விமானப் படை அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். 
இந்திய விமானப்படையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடக் கூடாது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பயந்து, விமானப்படையை நவீனப்படுத்தும் முயற்சியில் எந்தவிதத் தளர்ச்சியும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு, புதிய பாதுகாப்பு அமைச்சரான ராஜ்நாத் சிங்குக்கு உண்டு.
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/jun/14/விபத்தில்-சிக்கும்-விமானங்கள்-3170729.html
3170052 தலையங்கம் கதுவா தரும் ஆறுதல்! ஆசிரியர் Thursday, June 13, 2019 01:40 AM +0530 ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடந்த எட்டு வயதுச் சிறுமியின் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கின் மீதான தீர்ப்பு திங்கள்கிழமை வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் இந்த வழக்கை ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திலிருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றியதற்கு மிக முக்கியமான காரணம், முறையாக நீதி வழங்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான். உச்சநீதிமன்றத்தின் நம்பிக்கையைக் காப்பாற்றியிருக்கிறது பதான்கோட் விசாரணை நீதிமன்றம்.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டிலுள்ள விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. காவல் துறையைச் சேர்ந்த துணை ஆய்வாளர் ஆனந்த் தத்தா, சிறப்பு காவல்துறை அதிகாரி சுரேந்தர் வர்மா, தலைமைக் காவலர் திலக் ராஜ் ஆகிய மூவருக்கும் ஐந்தாண்டு சிறைத் தண்டனை வழங்கியிருக்கிறது. 
குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்து பாலியல் வன்கொடுமை கொலைக்கு ஆளான சிறுமியின் உடையிலிருந்த ரத்தக் கறையைக் கழுவியது, கழுத்திலிருந்த மாலையையும் தலையிலிருந்த ரிப்பனையும் மறைத்தது என்கிற உதவிகளைச் செய்த காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வெறும் ஐந்தாண்டு தண்டனை மட்டுமே வழங்கப்பட்டிருப்பது ஏற்புடையதாக இல்லை. 
2018-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி ஜம்முவிலுள்ள கதுவா என்கிற இடத்தில் நடந்த கொடூரமான சம்பவம் இது. பக்கர்வால் என்கிற ஆடு மேய்க்கும் முஸ்லிம் இனத்தவர், ஜம்முவிலும் காஷ்மீர் பள்ளத்தாக்கிலுமாக மாறி மாறி வாழும் நாடோடிக் கூட்டத்தினர். கதுவா என்கிற ஊரில் இந்தக் கூட்டம் ஆண்டுதோறும் முகாமிடும்போது அவர்களை அச்சுறுத்தி அகற்றுவதற்கான முயற்சிகள் பலமுறை நடந்தன. 
ஒருநாள் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி கடத்தப்பட்டு கதுவாவிலுள்ள கோயில் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டார். போதை மருந்து தரப்பட்டு பலராலும் பாலியல் வன்
முறைக்கு ஆளாக்கப்பட்டார். அந்தச் சிறுமி இறக்கும் நிலையில், தனக்குக் கடைசியாக இன்னொரு வாய்ப்புத் தரும்படி அந்தக் கூட்டத்தில் இருந்த காவல் துறையினர் ஒருவர் வேண்டுகோள் விடுத்தார் என்றால், எந்த அளவுக்குக் கொடூரமான செயலாக அந்தப் பாலியல் வன்கொடுமை இருந்திருக்கும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அந்தச் சிறுமி கொல்லப்பட்டது மட்டுமல்லாமல், அந்தக் கொலை மறைக்கப்பட்டது. அந்தக் கொலையை மறைப்பதற்கு கதுவா காவல் நிலையத்தைச் சேர்ந்த சிலர் உதவினார்கள். நான்கு நாள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்தச் சிறுமியைக் கடைசியில் கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கிறார்கள். பக்கர்வால் நாடோடிக் கூட்டத்தை எச்சரிப்பதற்காக நடத்தப்பட்ட செயல் இது.
கொலை செய்யப்பட்ட அந்தச் சிறுமியை அடக்கம் செய்யக்கூட அனுமதி மறுக்கப்பட்டது. அடக்கம் செய்யும் இடம் நாடோடிக் கும்பலுக்குச் சொந்தமானதல்ல என்றும், சட்டவிரோதமாக இத்தனை ஆண்டுகளாக அந்தக் கும்பல் கதுவாவில் தங்குவதும், இறந்தவர்களை அடக்கம் செய்வதுமாக இருக்கிறது என்றும் அதற்குக் காரணம் கூறப்பட்டது. 
வழக்குப் பதிவு செய்வதற்குக்கூட மிகப் பெரிய எதிர்ப்பு. கொலை செய்யப்பட்ட சிறுமியின் வழக்கில் வாதாட அரசு வழக்குரைஞர் உள்பட கதுவாவிலுள்ள எந்த ஒரு வழக்குரைஞரும் முன்வரவில்லை. இந்த நிலையில்தான் உச்சநீதிமன்றம் தலையிட்டு வழக்கு முறையாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காக பதான்கோட் விசாரணை நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது. 
ஒருபுறம் கதுவா பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் ஜம்மு-காஷ்மீர் மாநில வழக்குரைஞர்கள், காவல் துறையினர், நீதித் துறையினர் ஆகியோரின் செயல்பாடு குறித்து விமர்சனங்கள் இருந்தாலும்கூட, சில பாராட்டுக்குரிய அம்சங்களையும் எடுத்தியம்பாமல் இருக்க முடியவில்லை. மிக விரைவாக விசாரணையை சிறப்பு விசாரணைக் குழு மேற்கொண்டு இரண்டு மாதங்களில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது பாராட்டுக்குரியது. 
வழக்கு விசாரணை ஓராண்டு நீடித்தது என்றாலும், சம்பவம் நடந்த 17 மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதைப் பாராட்டாமல் இருக்க முடியாது. விசாரணை நீதிபதி செஜ்வேந்தர் சிங்கின் அணுகுமுறையில், அவர் சாட்சிகளின் வாக்குமூலத்தை எடுத்துக்கொண்ட விதம் மேல்முறையீட்டின்போது எடை போடப்படும். 
கடந்த ஆண்டு 12 வயதுக்குக் கீழே உள்ள சிறுமிகள் தொடர்பான பாலியல் கொடுமைக்கு மரண தண்டனை விதிக்கும் போஸ்கோ சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியிருக்கிறது. அந்தச் சட்டத்தின் அடிப்படையில் கதுவா வழக்கின் முக்கிய குற்றவாளிகளான சஞ்சீவ் ராம், பர்வேஷ் குமார், தீபக் கஜூரியா ஆகியோருக்கும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த காவல் துறையினருக்கும் ஏன் மரண தண்டனை வழங்கப்படவில்லை என்கிற கேள்வியை மீண்டும் மீண்டும் எழுப்பாமல் இருக்க முடியவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் விடுவிக்கப்பட்டிருப்பது, அவர் மீதான குற்றச்சாட்டு முழுமையாக விசாரிக்கப்படவில்லை என்பதைத்தான் எடுத்துரைக்கிறது.
கடந்த 2016-ஆம் ஆண்டிலிருந்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடாமல் இருக்கிறது. அந்தப் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டால்தான் போஸ்கோ சட்டத்தின் மீதான மரண தண்டனை அச்சம் எந்த அளவுக்குச் செயல்பட்டிருக்கிறது என்பது தெரியும். அலிகர், போபால் என்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், கதுவா சம்பவத்தின் மீதான தீர்ப்பு வரவேற்புக்குரியதாகவும் ஆறுதல் அளிப்பதாகவும் இருக்கிறது.
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/jun/13/கதுவா-தரும்-ஆறுதல்-3170052.html
3169410 தலையங்கம் நாடகமே வாழ்க்கை... ஆசிரியர் Wednesday, June 12, 2019 01:37 AM +0530 கலையுலகைப் பொருத்தவரை கடந்த திங்கள்கிழமை ஒரு கருப்பு தினம். இரண்டு மாபெரும் கலைஞர்களை இந்தியா இழந்திருக்கிறது. அந்த இரண்டு கலைஞர்களுமே சென்னையுடன் தொடர்புடையவர்கள் என்பதால் தமிழகத்தின் துக்கம் சற்று கூடுதலாகவே இருக்கிறது. 
திரைப்படமும், தொலைக்காட்சியும், இணையமும், யூ டியூப் சேனல்களும் பிரபலமாகிவிட்ட நிலையிலும் நாடக மேடையில் ஒருவரால் தனது திறமையின் அடிப்படையில் வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று நிரூபித்ததுதான் கிரேஸி மோகன் என்கிற கலைஞரின் மிகப்பெரிய சாதனை. நாடக நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா என்று மேடையிலும், திரையுலகிலும், தொலைக்காட்சியிலும் வெற்றி பவனி வந்தவர்  கிரேஸி மோகன். பொறியியல் பட்டதாரியான அவர் நாடக ஆசிரியரானது எதிர்பாராத திருப்பமாக இருந்திருக்கலாம். ஆனால் நாடகக் கதாசிரியராக மாறிய பிறகு, நாடக மேடைகளில் தவிர்க்க முடியாத ஆளுமையாக அவர் வலம் வந்தது எதிர்பாராதது அல்ல. அவரது நாடகங்களைத் துணுக்குத் தேரணங்கள் என்று விமர்சித்தவர்கள்கூட, அவரது வசனங்களைக் கேட்டு வயிறு குலுங்கச் சிரித்தவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. 
கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் நாடகத்தில் தொடங்கி மாது மிரண்டால், சாக்லேட் சாமியார், சாக்லேட் கிருஷ்ணா, மதில் மேல் மாது என்று தனது இறுதிக் காலம் வரை  பல்லாயிரம் முறை தனது நாடகங்களை உலகின் பல்வேறு நாடுகளில் நடத்தியிருக்கும் அவரது சாதனையை முறியடிக்க, இனியொரு  கிரேஸி மோகன் பிறந்து வந்தால் மட்டுமே முடியும். 
நாடக உலகில் கோலோச்சியவர்கள் திரையுலகில் வெற்றியடைவது கடினம். 80 களுக்குப் பிறகு சினிமா என்பது மேடைத்தனத்தில் இருந்து விடுபட்டு திரை மொழியாக மாறிவிட்டது. 1983-இல் அவரது மேரேஜ் மேட் இன் சலூன் நாடகம் இயக்குநர் கே.பாலசந்தரால் பொய்க்கால் குதிரை என்று திரை வடிவம் பெற்றதன் மூலம் வசனகர்த்தாவாக கிரேஸி மோகன் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து அவருடைய வசனத்தில் மிளிர்ந்த  மகளிர் மட்டும், வசூல் ராஜா எம்பிபிஎஸ், பஞ்ச தந்திரம், மைக்கேல் மதன காமராஜன், பம்மல் கே சம்பந்தம், அபூர்வ சகோதரர்கள், அருணாசலம், காதலா காதலா, அவ்வை சண்முகி, சதி லீலாவதி, தெனாலி உள்ளிட்ட திரைப்படங்களின் வெற்றிக்கு கிரேஸி மோகன் முக்கியமான காரணம் என்பதை அந்தப் படங்களின் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், நடிகர்களும், ரசிகர்களும் ஏற்றுக்கொள்வார்கள்.
நகைச்சுவை நாயகன் கிரேஸி மோகன் என்றால், பன்முகக் கலைஞர் கிரீஷ் கார்னாட். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருக்கும்போது 1961-இல் கிரீஷ் கார்னாட் எழுதிய படைப்பு யயாதி. தனது 20-ஆவது வயதிலேயே யயாதி, துக்ளக் என்கிற இரண்டு நாடகங்களைப் படைத்துத் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டவர். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற கிரீஷ் கார்னாட், வேலை தேடி வந்த இடம் சென்னை. சென்னையிலுள்ள ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி பிரஸ்ஸில் 1963 முதல் 1970 வரை பணியாற்றிய பிறகு, தனது பணியைத் துறந்து சென்னையிலிருந்த மெட்ராஸ் பிளேயர்ஸ் என்ற நாடகக் குழுவில் இணைந்து நடிக்கத் தொடங்கினார் அவர். நாடக உலகில் மிகப் பெரிய புரட்சியை உருவாக்கியது துக்ளக் என்கிற அவரது 13 காட்சி நாடகம்.
இன்றுவரை இந்திய நாடக வரலாற்றில், கிரீஷ் கார்னாட்டின் துக்ளக் நாடகம் ஒரு மைல் கல்லாகக் கருதப்படுகிறது. அவரது நாடகங்களான ஹயவதனாவும், நாகமண்டலாவும் கன்னடத்தின் தலைசிறந்த இலக்கியப் படைப்புகளாகப் போற்றப்படுகின்றன. நாடகக் கலைஞராக இருந்த கிரீஷ் கார்னாட், தேசிய அளவில் பரவலாக அறியப்பட்டது திரையுலகில் அவர் அடியெடுத்துவைத்த பிறகுதான். 
வணிக நோக்கமற்ற கலைப் படங்கள் வெளிவரத் தொடங்கிய 70 களில் திரையுலகில் திரைக்கதை வசனகர்த்தாவாக சம்ஸ்காரா திரைப்படத்தின் மூலம் நுழைந்தார் கிரீஷ் கார்னாட். மன்தான் ஹிந்தி படத்தில் நடிகராகவும், வம்ச விருக்ஷா, காடு, உத்சவ் திரைப்படங்களில் இயக்குநராகவும் கிரீஷ் கார்னாட் மாற்று சினிமாவின் தனித்துவ ஆளுமையாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். 
நடிகராகவும், இயக்குநராகவும் கிரீஷ் கார்னாட் அறியப்படுவதைவிட, இந்திய நாடக மேடையில் புரட்சியை ஏற்படுத்திய படைப்பாளியாகத்தான் அதிகமாகக் கொண்டாடப்படுகிறார். பதல் சர்க்கார், ஹபீத் தன்வீர், விஜய் டெண்டுல்கர், சி.என்.ஸ்ரீகண்ட நாயர், நாராயண பணிக்கர், மோகன் ராகேஷ் ஆகியோரைப்போல கிரீஷ் கார்னாட்டும் இந்திய நாடகத் துறையில் தனி முத்திரை பதித்தவர். அவரது திப்பு சுல்தானின் கனவு (தி ட்ரீம்ஸ் ஆப் தி திப்பு சுல்தான்) வரலாற்றுடனும், நிகழ்கால அரசியலுடனும் பின்னிப் பிணைந்த அற்புதமான நாடகம். வெளியுலகுடன் ஆங்கிலத்தில் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டாலும் கடைசி வரை தனது தாய் மொழியான கன்னடத்தில்தான் தனது படைப்பிலக்கியப் பணிகளை மேற்கொண்டார் அவர் என்பது அவர் மீதான மரியாதையை அதிகரிக்கிறது. 
ஞான பீட விருது, பத்ம பூஷண் விருது என்று தலைசிறந்த விருதுகளைப் பெற்ற கிரீஷ் கார்னாட்டின் மறைவும், தமிழக மக்களின் மனதில் நகைச்சுவை சிம்மாசனம் போட்டு அமர்ந்த கிரேஸி மோகனின் மறைவும் ஈடுசெய்ய முடியாத நாடக மேடை இழப்புகள்.  நாடகம் தான் அவர்கள் இருவருக்குமே வாழ்க்கையாக இருந்தது. வாழ்க்கையே ஒரு நாடகம்தான் என்று அவர்களது மரணம் தனது முடிவுரையை எழுதியிருக்கிறது.
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/jun/12/நாடகமே-வாழ்க்கை-3169410.html
3168710 தலையங்கம் அகதிகள் அல்ல, ஆபத்து! ஆசிரியர் Tuesday, June 11, 2019 02:50 AM +0530 இரண்டாவது முறையாக பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டவுடன் அண்டை நாடுகளான மாலத்தீவுகளுக்கும், இலங்கைக்கும் தனது முதல் அரசு முறைப் பயணத்தை நரேந்திர மோடி மேற்கொண்டது, அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவை மேலும் வலுப்படுத்திக்கொள்ளும் முயற்சி. தெற்காசியாவின் அமைதியைக் குலைக்கும் விதத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானுக்கு எதிராக ஏனைய அண்டை நாடுகளை இந்தியாவுக்கு ஆதரவாக ஒருங்கிணைக்கும் முயற்சியில் பிரதமர் இறங்கியிருக்கிறார் என்பது தெளிவாகிறது.
 மாலத்தீவுகளையும் இலங்கையையும், நேபாளத்தையும் பூடானையும்விட, பயங்கரவாதப் பிரச்னையில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டிய நாடு வங்கதேசம்தான். கடந்த ஆண்டு இறுதியில் அங்கு நடந்த தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று பிரதமர் ஷேக் ஹசீனா தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சிகள் அநேகமாக ஓரங்கட்டப்பட்டு விட்ட நிலை. முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியக் கட்சித் தலைவருமான கலீதா ஜியா, அவரது மகனைப் போலவே கிரிமினல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நாடு கடத்தப்பட்டாலும்கூட வியப்படையத் தேவையில்லை.
 அதிகாரத்தைத் தனது கட்டுப்பாட்டில் முழுமையாகக் கொண்டுவந்திருக்கும் நிலையிலும்கூட, பிரதமர் ஷேக் ஹசீனா, பிரச்னைகள் இல்லாமல் ஆட்சி நடத்திவிட முடியும் என்று தோன்றவில்லை. கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்துத் தீர்வு காணாவிட்டால், நீறுபூத்த நெருப்பாக இருக்கும் ஒரு பிரச்னை பேராபத்தாக மாறிவிடக்கூடிய அபாயம் நிறையவே இருக்கிறது. மியான்மரிலிருந்து வங்கதேசத்துக்குள் நுழைந்துவிட்டிருக்கும் ரோஹிங்கயா அகதிகள்தான் அந்தப் பிரச்னை.
 அதிகாரப்பூர்வமாக 7 லட்சம் என்று கூறப்பட்டாலும், 10 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கயா அகதிகள் மியான்மர் ராணுவத்தால் விரட்டப்பட்டு, வங்கதேசத்தில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து நடத்தப்படும் மியான்மர் ராணுவத்தின் தாக்குதல்களால் வங்கதேச எல்லைக்குள் அவர்கள் அகதிகளாக நுழைந்தவண்ணம் இருக்கிறார்கள். அவர்களை மியான்மரை ஒட்டியுள்ள வங்கதேச எல்லையில் பல்வேறு முகாம்களில் முள்வேலிகளுக்குள் வங்கதேச அரசு அடைத்து வைத்திருக்கிறது. அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் முடியாமல், அவர்களால் ஏற்படும் மிகப் பெரிய நிதிச் சுமையைத் தாங்கவும் முடியாமல் வங்கதேசம் தடுமாறுகிறது.
 கண்காணிப்பும், பலத்த பாதுகாப்பும் இருந்தாலும்கூட, ரோஹிங்கயா அகதிகளுக்கு முறையான வசதிகள் செய்து தரப்படாததால், அவர்கள் முகாம்களிலிருந்து தப்பித்து விடுகிறார்கள். முள்வேலிகள் உடைக்கப்பட்டு முகாம்களிலிருந்து வெளியேறி வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் ரோஹிங்கயா அகதிகள் பரவத் தொடங்கியிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கில் தொடங்கி, ஆயிரக்கணக்காகி இப்போது லட்சக்கணக்கிலான ரோஹிங்கயா அகதிகள் வங்கதேசத்தில் மட்டுமல்லாமல், அங்கிருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு அண்டை நாடுகளிலும் ஊடுருவத் தொடங்கியிருக்கிறார்கள்.
 முகாம்களிலிருந்து வெளியேறும் ரோஹிங்கயா அகதிகள், வாழ்வாதாரத்துக்காகப் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். போதை மருந்து கடத்தல், பாலியல் தொழிலுக்குப் பெண்களை கடத்திக் கொண்டுபோய் விற்பனை செய்தல் உள்ளிட்டவை மட்டுமல்லாமல், குழந்தைகளைக் கடத்திக் கொண்டுபோய் விற்பதிலும்கூட அவர்கள் ஈடுபடுவதாக வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் ஒப்புக்கொண்டிருப்பதிலிருந்து, ரோஹிங்கயா அகதிகள் மிகப் பெரிய பிரச்னையாக மாறியிருப்பது வெளிப்படுகிறது.
 பல சட்ட விரோத நடவடிக்கைகளில் பர்தா அணிந்த பெண்கள் ஈடுபடுகிறார்கள் என்றும், அவர்களை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை என்றும் உள்துறை அமைச்சரே கூறுகிறார். வங்கதேசத்திலிலுள்ள ராஜ்ஷாஹி என்கிற ஊரில் பர்தா அணிந்த ரோஹிங்கயா பெண்மணி, போலி கடவுச்சீட்டுத் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கூட்டம் கூட்டமாக ரோஹிங்கயா இடைத் தரகர்கள் கிளம்பியிருக்கிறார்கள். இவர்கள் பாலியல் தொழிலுக்கு மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பெண்களை அனுப்புவதைத் தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள்.
 இந்திய எல்லையையொட்டிய ராஜ்ஷாஹி போன்ற நகரங்களில் காணப்படும் ரோஹிங்கயா அகதிகளின் செயல்பாடுகள், இந்தியாவிலும் நடைபெறுகின்றன என்பதை நாம் உணர வேண்டும். வங்கதேசத்துக்குள் நுழையும் ரோஹிங்கயாக்களை, பாகிஸ்தானிய பயங்கரவாத அமைப்புகள் அவர்களது வறுமையையும், நிலைமையையும் பயன்படுத்தி மூளைச்சலவை செய்கின்றனர். இந்திய எல்லைக்குள் ஊடுருவி பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயங்கரவாத இயக்கங்களின் உலைக்களமாகப் பாகிஸ்தான் மாறியிருப்பதைப்போல, வங்கதேசத்தையும் மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதை இந்திய அரசும், பிரதமரும் உணர்ந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
 ரோஹிங்கயா அகதிகள் வங்கதேச அகதிகளுடன் சேர்ந்து இந்தியா முழுவதும் (தமிழகம், கேரளம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில்கூட) ஊடுருவியிருக்கிறார்கள். ஷேக் ஹசீனாவின் வங்கதேச அரசின் உதவியும், முனைப்பும் இல்லாமல், இந்திய அரசால் அகதிகள் மூலமான பயங்கரவாதத்தை எதிர்கொண்டுவிட முடியாது. அதனால், பிரதமரின் பார்வை, வங்க தேசத்தை நோக்கித் திரும்பியாக வேண்டும்!
 
 
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/jun/11/அகதிகள்-அல்ல-ஆபத்து-3168710.html
3167950 தலையங்கம் ஹரியாணா வழிகாட்டுகிறது.. ஆசிரியர் Monday, June 10, 2019 11:14 AM +0530  நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியிலிருக்கும் பாரதிய ஜனதா கட்சி, ஹரியாணா மாநிலத்தில் உள்ள 10 இடங்களையும் கைப்பற்றியிருப்பது ஆச்சரியப்படுத்தவில்லை. ஹரியாணாவைப் பொருத்தவரை, 2014 அக்டோபரில் மனோகர் லால் கட்டரின் தலைமையிலான ஆட்சி அமைந்தது முதல், பாஜகவின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதுதான் உண்மை. இதற்கு முன்னால் நடந்த நகராட்சித் தேர்தல்களிலும், ஜிந்த் சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் ஆளும் பாஜக பெற்ற வெற்றிகளின் நீட்சிதான் இப்போதைய மக்களவைத் தேர்தல் வெற்றி.
 பாஜகவின் செல்வாக்குக்கும் தொடர் வெற்றிக்கும் அடிப்படைக் காரணம் முதல்வர் கட்டரின் தலைமையிலான பாஜக அரசின் திறமையான நிர்வாகமும், ஊழலற்ற ஆட்சியும்தான் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். கடந்த நான்கரை ஆண்டுகளில் ஹரியாணா அரசு கொண்டு வந்திருக்கும் பல நிர்வாகச் சீர்திருத்தங்கள் அந்த மாநிலத்தின் மீதான ஊழல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட கறைகளை பெருமளவில் துடைத்தெறிந்திருக்கிறது.
 பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு 1966-இல் ஹரியாணா தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது முதல் பன்சிலாலில் தொடங்கி, கட்டருக்கு முன்பு முதல்வராக இருந்த பூபிந்தர் சிங் ஹூடா வரையிலான அத்தனை முதல்வர்களும் ஏதாவது ஓர் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி மக்களின் வெறுப்பை எதிர்கொண்டவர்கள்தான். தனியார் குடியிருப்பு நிறுவனங்களுக்கும் மனை வணிக நிறுவனங்களுக்கும் சலுகை வழங்கி மாநில ஆட்சியாளர்கள் கோடிகளில் புரள்வது வாடிக்கையாக இருந்தது. போதாக்குறைக்கு அரசு ஊழியர்களின் இடமாற்றம், நியமனம் உள்ளிட்டவை ஆட்சியாளர்களால் ஒரு தொழிலாக மாற்றப்பட்டிருந்தது.
 தேவி லாலின் மகன் ஓம் பிரகாஷ் சௌதாலா 1989-90-லும், 1999-2005-லும் முதல்வராக இருந்தார். இவரது பதவிக் காலத்தில் 3,206 ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் மிகப் பெரிய முறைகேடு நடந்தது. முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலாவும் அவரது மகன் அஜய் சிங் சௌதாலாவும் நேரடியாகவே கையூட்டுப் பெற்று ஆசிரியர்களை நியமித்தனர். 2008 ஜூன் மாதம் முன்னாள் முதல்வர் சௌதாலா உள்ளிட்ட 53 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சௌதாலாவுக்கும் அவரது மகனுக்கும் 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் 2013-இல் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை தில்லி உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உறுதிப்படுத்திய நிலையில் அவர்கள் இருவரும் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
 9-ஆவது முதல்வராக ஆட்சிக்கு வந்து, 2005 முதல் 2014 வரை ஆட்சியிலிருந்த பூபிந்தர் சிங் ஹூடாவும் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் வழக்குகளையும் எதிர்கொள்கிறார். பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு வரம்பு மீறிய சில சலுகைகளை வழங்கி, பல நூறு கோடி ரூபாய் முறைகேடுகளுக்கு வழிகோலிய குற்றச்சாட்டு அவர் மீது நிலவுகிறது.
 இந்தப் பின்னணியில்தான் 2014-இல் ஆட்சிக்கு வந்த மனோகர் லால் கட்டர் தலைமையிலான பாஜக அரசின் செயல்பாடுகள் மக்களால் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் நில ஒதுக்கீட்டுப் பிரச்னைகளில் முற்றிலுமாக வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தியிருப்பது கட்டர் அரசின் மிகப் பெரிய வெற்றி. அடுத்தபடியாக வரைமுறை இல்லாத அரசுப் பணியாளர்களின் இடமாற்றத்துக்கும், சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சிக்காரர்கள் ஆகியோரின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப இடமாற்றம் வழங்குவதற்கும் முற்றிலுமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
 இதற்கு முன்னால் ஹரியாணாவில் அரசுப் பணியாளர்கள் நியமனத்தில் பரவலாகக் காணப்பட்ட ஊழலும், அரசியல் தலையீடும் மக்களை ஆட்சியாளர்கள் மீது சலிப்படையவும், வெறுப்படையவும் வைத்திருந்தது. அந்த நிலைமையை முற்றிலும் மாற்றி வெளிப்படைத்தன்மையுடன் முழுக்க முழுக்க திறமையின் அடிப்படையில் மட்டுமே அரசு வேலைவாய்ப்பு என்பதை கட்டர் அரசு உறுதிப்படுத்தியிருக்கிறது. கட்டார் அரசின் துணிச்சலான இந்த முடிவுதான் அந்த அரசுக்கு மிகப்பெரிய செல்வாக்கை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 ஹரியாணா அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம்தான் காவல் துறைக்கான சீருடைப் பணியாளர்கள், "கிளாஸ் 4' ஊழியர்கள், கணக்கர்கள், "குரூப் சி', "குரூப் டி' ஊழியர்கள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கட்டர் அரசு அமைந்த பிறகு, வேறு சில மாநிலங்களைப் போலவே "குரூப் சி', "குரூப் டி'-க்கான நேர்முகத் தேர்வுகள் அகற்றப்பட்டிருக்கின்றன. இதுவரை நடந்து வந்த முறைகேடுகளுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல ஹரியாணா அரசுப் பணியில் உள்ள "குரூப் சி' ஊழியர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு தேர்வெழுதியாக வேண்டும் என்கிற புதிய வரைமுறை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
 லட்சக்கணக்கான இளைஞர்கள் தகுதியின் அடிப்படையில் எந்தவிதக் கையூட்டும் வழங்காமல் அரசுப் பணியில் இணைகிறார்கள். அதன் விளைவாக மேலதிகாரிகளும் தங்களது பழைய வழிமுறைகளை மாற்றிக்கொண்டு ஊழலில்லாத நேர்மையான நிர்வாகத்தை வழங்க முற்பட்டிருக்கிறார்கள். இப்படியொரு மாற்றம், ஊழலில் கொழித்த ஹரியாணா மாநிலத்தில் நிகழுமென்று யாருமே கனவில்கூட எதிர்பார்த்திருக்க முடியாது.
 ஊழல், அரசியல் தலையீடு போன்றவற்றைக் கட்டுப்படுத்த முடியாது என்று யார் சொன்னது? ஹரியாணா வழிகாட்டுகிறது. இந்தியாவின் ஏனைய மாநிலங்கள் அதைப் பின்பற்ற முற்பட்டால், ஊழலற்ற இந்தியாவை உறுதிப்படுத்த முடியாவிட்டாலும், ஊழல் குறைந்த இந்தியா சாத்தியப்படக்கூடும்!
 
 
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/jun/10/ஹரியாணா-வழிகாட்டுகிறது-3167950.html
3167024 தலையங்கம் வருமுன் காப்போம்! ஆசிரியர் Saturday, June 8, 2019 01:39 AM +0530
தொடர்ந்து கடந்த எட்டு ஆண்டுகளாகக் குறிப்பிட்ட ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. 
கர்நாடக அரசு போதிய அளவில் தண்ணீர் திறந்து விடாததும், அதனால் மேட்டூர் அணையின் மதகுகளைத் திறக்கும் அளவுக்குத் தண்ணீர் இல்லாமல் இருப்பதும்தான் காரணம். போதுமான அளவு மழை இல்லாததால், தங்களுக்கே விவசாயத்துக்கும், குடிநீருக்குமே தண்ணீர் இல்லை என்று கர்நாடக அரசு கை விரிக்கிறது. அந்தக் கூற்றை முழுமையாக ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை, முழுமையாக மறுத்துவிடவும் முடியாது.
"எல் நினோ' தாக்கத்தால் தொடர்ந்து சில ஆண்டுகளாக வறட்சி, வெள்ளம், புயல் என்று ஒன்றன் பின் ஒன்றாகப் பல பாதிப்புகளை தமிழகம் எதிர்கொண்ட வண்ணம் இருக்கிறது. இந்தப் பின்னணியில் விவசாயிகளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் பயிர்க் காப்பீடு மட்டும்தான். 
நரேந்திர மோடி அரசின் பாராட்டுக்குரிய திட்டங்களில் ஒன்று விவசாயப் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் என்பதில் ஐயப்பாடில்லை. அந்தத் திட்டத்தின் செயல்பாட்டில் சில குறைபாடுகள் இருக்கின்றன என்றாலும், விவசாயிகளின் பிரச்னைக்கு அதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்கும்.
"பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதி யோஜனா' எனப்படும் "பிரதமர் விவசாயிகள் நிதியுதவித் திட்டம்' என்பது கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. இரண்டாவது முறையாக இப்போது ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், மோடி அமைச்சரவையின் முதல் கூட்டத்தின் முதல் முடிவாக அந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. 
இந்தியாவிலுள்ள 14.5 கோடி விவசாயிகளுக்கு நேரடி மானியமாக 2019-20 நிதியாண்டில் ரூ.87,217.50 கோடி வழங்கப்பட இருக்கிறது. விதை, உரம் வாங்குவது உள்ளிட்ட அடிப்படை விவசாயச் செலவுக்கு உதவுவதற்காக இந்த நிதி வழங்கப்படுகிறது.
பிரதமர் விவசாயிகள் நிதியுதவித் திட்டமும், பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டமும் முறையாகச் செயல்படுத்தப்பட்டால், வேளாண் இடர் பெருமளவில் எதிர்கொள்ளப்படும் என்று ஆட்சியாளர்கள் எதிர்பார்ப்பது சரியான அணுகுமுறை. ஆண்டுதோறும் காரிஃப், ராபி பருவ காலங்களில் விவசாயிகள் பயிரிடுவதற்காகக் கடன் வாங்குவதும், இயற்கை ஏமாற்றுவதால் இழப்பை எதிர்கொள்வதும், அதன் காரணமாகக் கடனாளிகளாவதும் வழக்கமாகி விட்டிருக்கிறது. ஒவ்வொரு தேர்தலின்போதும், பொறுப்பற்ற விதத்தில் கடன் தள்ளுபடிகளை அறிவித்து அரசியல் கட்சிகள் ஆதாயம் தேட முற்படும் போக்குக்கு, அரசின் நிதியுதவித் திட்டமும், பயிர்க் காப்பீட்டுத் திட்டமும் முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்பலாம்.
தமிழகத்தைப் பொருத்தவரை, பயிர்க் காப்பீட்டுத் திட்டம் ஓரளவுக்கு வெற்றியடைந்திருக்கிறது என்றுதான் கூற வேண்டும். கடந்த நிதியாண்டில், 24 லட்சம் தமிழக விவசாயிகள் பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்திருக்கிறார்கள். கடந்த இரண்டு நிதியாண்டுகளில் அவர்களில் ஏறத்தாழ 21 லட்சம் விவசாயிகள் ரூ.5,291 கோடி அளவிலான இழப்பீடும் பெற்றிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டில் மட்டும் 35.30 லட்சம் ஏக்கர் விவசாய நிலப்பரப்பு இந்தத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டது. 
காப்பீடு பெற்ற 24 லட்சம் விவசாயிகளில் 19.24 லட்சம் விவசாயிகள் வேறு எந்த விவசாயக் கடனும் பெறவில்லை என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
தமிழக அரசின் முனைப்பை நாம் பாராட்ட வேண்டும். விவசாயிகள் மத்தியில், காப்பீடு பெறுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், அவர்களை இணைப்பதிலும், இழப்பீடு பெற்றுத் தருவதிலும் தமிழக அரசின் வேளாண் துறை பெரும் பங்களிப்பு வழங்குகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 35.30 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது உண்மையிலேயே மிகப் பெரிய சாதனை. மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் வெறும் எட்டு லட்சம் விவசாயிகள் மட்டுமே காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்திருந்தனர் என்பதையும், அவர்கள் இழப்பீடாக ரூ.650 கோடி மட்டுமே பெற முடிந்தது என்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தால், எந்த அளவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பது விளங்கும்.
விவசாயக் காப்பீட்டுத் திட்டத்தில் சில குறைகள் இல்லாமல் இல்லை. 2016-இல் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதமர் விவசாயப் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எல்லாவித விவசாய இடர்களும் இழப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன. காப்பீட்டு நிறுவனங்கள் குறித்த நேரத்தில் முழுமையான இழப்பீடு வழங்காமல் இருப்பதுதான், இந்தத் திட்டத்தின் மிகப் பெரிய குறை. 2016-17 
நிதியாண்டுக்கான இழப்பீடு பெறாத விவசாயிகள் சிலர் இன்னமும் இருக்கிறார்கள்.
2016-17-இல் 93,000 விவசாயிகளும், 2017-18-இல் 86,000 விவசாயிகளும் தங்களது பயிர்களுக்குக் காப்பீடு பெற்றனர். அவர்களில் 60% விவசாயிகள்தான் முழுமையான இழப்பீடு பெற்றிருக்கிறார்கள். இதற்குக் காரணம், காப்பீட்டு நிறுவனங்களா, இல்லை அவர்களிடமிருந்து இழப்பீட்டை பெற்று விவசாயிகளுக்கு விவசாயக் கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்களா என்பது தெரியவில்லை.
இந்த ஆண்டும் தமிழகம் வறட்சியை எதிர்கொள்ளக்கூடும் என்கிற தகவல் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை நிரம்பா
விட்டாலும், டெல்டா மாவட்ட சாகுபடிப் பருவத்துக்கான அளவு தண்ணீர் கிடைத்தாலேகூடப் போதும். அதுவும்கூட சந்தேகமாக இருக்கிறது. இந்த நிலையில் பருவ மழையை நம்பி விவசாயம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. 
அனைத்து விவசாயிகளும் முறையாகப் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்படுவதும், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய இழப்பீடு நிலுவையைப் பெற்றுத் தருவதும் தமிழக அரசின் கடமை.
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/jun/08/வருமுன்-காப்போம்-3167024.html
3166180 தலையங்கம் வெற்றியின் சவால்! ஆசிரியர் Thursday, June 6, 2019 11:53 PM +0530 பொருளாதாரத்தைப் புத்துணர்ச்சி பெறச் செய்வதற்காகவும், வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காகவும் பிரதமரின் தலைமையில் இரண்டு அமைச்சரவைக் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பொருளாதார மந்த நிலையை மாற்றுவதில் மோடி அரசு  முனைப்புக் காட்டுவது பாராட்டுக்குரியது.
கடந்த 2018}19}ஆம் நிதியாண்டின் கடைசிக் காலாண்டு நிலவரப்படி, 5.8% என்கிற அளவில்தான் பொருளாதார வளர்ச்சி இருந்தது. கடந்த நான்கு ஆண்டுகளில், மிகக் குறைவான வளர்ச்சி விகிதம் இதுதான். இதே காலாண்டில் சீனா 6.4% வளர்ச்சியை அடைந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியாவின் வளர்ச்சி, சீனாவைவிடக் குறைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, வேலையில்லா நிலைமை 2017}18 நிதியாண்டில் 6.1%}ஆக அதிகரித்திருக்கிறது. இது 45 ஆண்டுகளில் மிகவும் அதிகமான அளவு என்று கூறப்படுகிறது. ஒரு கோடிக்கும் அதிகமானோர், தேசிய வேலைவாய்ப்பு சேவை மையத்தில் வேலைக்காகப் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த இணையதளத்தில் காணப்படும் வேலைவாய்ப்பின் அளவு வெறும் 3.5 லட்சம் மட்டுமே. இந்தப் பின்னணியில்தான், பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்பின்மையையும் போர்க்கால அடிப்படையில் அணுக  மத்திய அரசு முற்பட்டிருக்கிறது. 
கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் விவசாயம் மட்டுமல்லாமல், தொழில் உற்பத்தி, கட்டுமானம், வர்த்தகம், சுற்றுலா, போக்குவரத்து, தகவல் தொடர்பு என்று எல்லாத் துறைகளுமே மந்த கதியில் இயங்கி இருக்கின்றன. மூன்றாவது காலாண்டில் 2.8%}ஆக இருந்த விவசாய உற்பத்தி, கடைசி காலாண்டில் 0.1% குறைந்திருக்கிறது. 2017}18}இன் கடைசி காலாண்டில், விவசாயம் 6.5% வளர்ச்சியைக் கண்டது. பருவமழை பொய்த்ததுதான் வளர்ச்சி விகிதம் குறைந்ததற்குக் காரணம் என்று  கூறப்படுகிறது.
விவசாயம் மட்டுமல்ல, தொழில் உற்பத்தியும் பெரிய அளவிலான வளர்ச்சியைக் காணவில்லை. மூன்றாவது காலாண்டில் 6.4%}ஆக இருந்த வளர்ச்சி, நான்காவது காலாண்டில் 3.1%}ஆகக் குறைந்துவிட்டது. ஆறுதலளிப்பது என்னவென்றால், பொது நிர்வாகம், பாதுகாப்பு, நிதித்துறை, மனை வணிகம், சேவைத் துறை உள்ளிட்டவை வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கின்றன. அதற்குக் காரணம், கணிசமான நிதி ஒதுக்கீட்டை அரசு செய்ததுதான்.
ஜி.எஸ்.டி. என்கிற சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்தி இரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கிறது. வரி வசூல் பாராட்டும்படியாக  இல்லை. மத்திய ஜி.எஸ்.டி.யின் வசூல் 2018}19}க்கு ரூ.6.03 லட்சம் கோடி என்று முதலில் மதிப்பிடப்பட்டது. பிறகு, இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அதுவே ரூ.5.03 லட்சம் கோடியாகக் குறைக்கப்பட்டது. கணக்குத் தணிக்கை அதிகாரிகளால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையின்படி, வரி வசூல் ரூ.4.57 லட்சம் கோடியைவிடக் குறைவு என்பது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை வெளிப்படுத்தும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், 2019}20  நிதியாண்டில் மத்திய ஜி.எஸ்.டி. வசூல் 33.5% அதிகரித்தாக வேண்டும். அப்போதுதான், இடைக்கால நிதிநிலை அறிக்கையில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இலக்கான ரூ.6.1 லட்சம் கோடியை எட்ட முடியும். இந்த நிதியாண்டில் முதல் இரண்டு மாதங்களான ஏப்ரல், மே}இல் வரி வசூல் சற்று அதிகரித்திருக்கிறது என்றாலும்கூட, இலக்கை  எட்டுவது சாத்தியம் என்று தோன்றவில்லை.
நடப்பு நிதியாண்டுக்கான ஜி.எஸ்.டி. வசூல் ரூ.13.7 லட்சம் கோடி என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய, மாநில ஜி.எஸ்.டி-க்கள் இரண்டும் ரூ.6.1 லட்சம் கோடி வசூல் வழங்கும் என்பதன் அடிப்படையில் போடப்பட்டிருக்கும் கணக்கு அது. அதாவது, மத்திய ஜி.எஸ்.டி மாதந்தோறும் ரூ.50, 833 கோடி வசூலிக்கும் என்கிற எதிர்பார்ப்பின் அடிப்படையிலான மதிப்பீடு. எதிர்பார்த்த அளவில் இல்லாமல், கடந்த இரண்டு மாதங்களாக வசூலாகும் ஜி.எஸ்.டி}இன் அளவு சராசரியாக ரூ.41, 721 கோடி மட்டுமே. வரி வசூல் மட்டுமே கணக்கிடப்படுகிறதே தவிர, திருப்பிக் கொடுக்க வேண்டிய தொகை கழிக்கப்படவில்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஜி.எஸ்.டி. வசூல் மட்டுமல்ல, நேரடி வரி வசூலும் புதிய அரசுக்குப் பாதகமாகவே அமைந்திருக்கிறது. கடந்த நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட் இலக்கான ரூ.5.29 லட்சம் கோடிக்குப் பதிலாக, 
வசூலான வருமான வரியின் அளவு ரூ.4.61 லட்சம் கோடிதான். நடப்பு நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இலக்கான ரூ.6.1 லட்சம் கோடியை எட்ட வேண்டுமானால், வருமான வரி வசூல் 34.8% அதிகரிக்க வேண்டும். அந்த இலக்கை எட்டுவது அசாத்தியம்.
பிரதமர் நரேந்திர மோடி அரசு பெற்றிருக்கும் தேர்தல் வெற்றி, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இந்தியாவில் பலமான, நிலையான 
அரசுக்கு வழிகோலியிருக்கிறது. இந்த அரசு பலமாகவும், நிலையாகவும் தொடர வேண்டுமானால், பொருளாதாரமும், வேலைவாய்ப்பும் அரசின் முழுமையான கவனத்தைப் பெற்றாக வேண்டும். பிரதமர் அதை உணர்ந்திருக்கிறார் என்பதை அவரது முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.
மிகப் பெரிய சவாலை எதிர்கொள்கிறது பிரதமர் நரேந்திர மோடி அரசு. அதுதான் வெற்றிக்குக் கிடைத்திருக்கும் பரிசு!

]]>
https://www.dinamani.com/editorial/2019/jun/06/வெற்றியின்-சவால்-3166180.html
3165830 தலையங்கம் சிகரம் தொடும் அபாயம்! ஆசிரியர் Thursday, June 6, 2019 03:04 AM +0530 உலகெங்கிலுமிருந்தும் நேபாள - சீன எல்லையில் இருக்கும் மிக உயரமான மலைச்சிகரமான எவரெஸ்டில் ஏறி சாதனை படைக்க ஆயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும் முனைகிறார்கள். திறமையான மலையேற்றப் பயிற்சியுடையவர்களுக்கேகூட 8,848 மீ. உயரத்தில் இருக்கும் எவரெஸ்ட் சிகரம், பாதுகாப்பற்றதாகவும், ஆபத்தானதாகவும் இருந்து வருகிறது. 
  கடந்த மே 27-ஆம் தேதி எலியா சைக்கலி என்கிற திரைப்பட இயக்குநர் 20,029 அடி உயர எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடையக் காத்திருந்த தனது அனுபவத்தைப் பதிவு செய்திருக்கிறார். நெரிசல், குழப்பம், வரிசையில் காத்திருப்பு, இறந்து கிடந்த சடலங்கள் என்று சிகரத்தின் அருகிலுள்ள நான்காவது முகாம் காட்சியளித்தது என்று பதிவு செய்கிறார் அவர்.
எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் மலையேற்றக்காரர்களின் நெரிசல் ஏற்படுவதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. சிகரத்தில் ஏறத் துடிக்கும் மலையேற்ற சாகசக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், நேபாள அரசு எந்த வரைமுறையும் இல்லாமல் சாகசக்காரர்களுக்கு மலையேறுவதற்கு அனுமதி வழங்குவதும் முதலாவது காரணம். 
இந்த ஆண்டு மட்டும் நேபாள அரசு 381 நபர்களுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது. சாகசக்காரர்களின் எண்ணிக்கையைப் போல இரண்டு மடங்கு நபர்கள் மலையேற்றச் சரிவுகளில் ஆங்காங்கே உள்ள முகாம்களில் காணப்படுகிறார்கள். அவர்களில் சிலர் வழி காட்டிகள். வேறு சிலர் சுற்றுலாக் குழுவினர்களை அழைத்துச் செல்லும் அமைப்பினர். 
இரண்டாவது காரணம், எவரெஸ்ட் மலையேற்றப் பருவகாலம் குறுகிவிடுவது. பானி புயல் காரணமாக ஏப்ரல் கடைசியில் இருந்து மே முதல் வாரம் வரை 10 நாள்களுக்கு எவரெஸ்ட் சிகர மலையேற்றம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. அந்த 10 நாள் தடையால் நான்காவது முகாமிலிருந்து மலையேறுவதற்கான காலம் மே 22, 23 ஆகிய இரண்டு நாள்களாகச் சுருங்கிவிட்டது. 
அந்தக் குறுகிய இரண்டு நாள் இடைவெளியில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிவிட வேண்டும் என்கிற பரபரப்பு அனைவரிடமும் காணப்பட்டது. அதனால், கடுமையான குளிரில், எடுத்துச் சென்றிருக்கும் ஆக்சிஜன் வாயுவை வீணாக்கிக் கொண்டு, மூன்று நான்கு மணிநேரம் மலையேற்றக்காரர்கள் வரிசையில் காத்திருக்க முற்பட்டனர். குளிர் தாங்காமல் சுருண்டவர்கள் பலர். 
ஏனைய சாகசங்களுக்கு முறையான பயிற்சி அவசியப்படு வதைப்போல, இமயமலை பயணத்துக்கு பயிற்சி எடுத்துக்கொண்டு வருபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இதற்கென்று தகுதி வரையறுக்கப்படவில்லை. முன்பெல்லாம் ஆண்டொன்றுக்கு ஒரு குழுவினர் மட்டுமே எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். இப்போது பணம் இருக்கும் யார் வேண்டுமானாலும் எவரெஸ்ட் சாகசத்தில் ஈடுபட முற்படுவதுதான் பிரச்னைக்கு முக்கியமான காரணம். 
மலையேற்ற சாகசம் என்பது ஒரு மிகப் பெரிய வணிகமாக மாறிவிட்டிருக்கிறது. நேபாள அரசு மலையேற்றப் பருவ காலத்தில் ஒவ்வோர் அனுமதிக்கும் 11,000 டாலர்களை கட்டணமாக வசூலிக்கிறது. திபெத் வழியாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது என்றால், அது இதையும்விட அதிகம் செலவாகும். 
எவரெஸ்ட் மலையேற்ற சாகசத்துக்கு குறைந்தது ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சம் வரை செலவாகிறது. இந்த அளவிலான பணத்தை செலவழித்துவிட்டு, பாதி வழியில் திரும்புவதற்கு மலையேற்றக்காரர்கள் தயங்குகிறார்கள். பருவ நிலை மோசமாக இருந்தாலும், பனிப்பொழிவு இருந்தாலும் அது குறித்துக் கவலைப்படாமல் ஏறத் துடிக்கிறார்கள். 60 நாள்கள் கடும் சோதனைகளுக்கு இடையே பயணித்து மூன்றாவது அல்லது நான்காவது முகாமை அடைந்துவிட்ட பிறகு, அடுத்த 10 அல்லது 12 மணி நேரத்தில் எப்படியாவது எவரெஸ்ட் சிகரத்தை எட்டிவிட வேண்டும் என்கிற துடிப்பில் தங்களது பாதுகாப்பு குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை. 
1953, மே 29-ஆம் தேதி எட்மண்ட் ஹில்லாரியும், டென்சிங்கும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து வெற்றிக்கொடி நாட்டியது முதல், உலகளாவிய மலையேற்ற சாகசக்காரர்களின் லட்சியமே வாழ்க்கையில் ஒரு முறை எவரெஸ்டில் ஏறிவிட வேண்டும் என்பதுதான். கடந்த 60 ஆண்டுகளில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. சமீபகாலமாக பருவநிலை மாற்றமும், 
உலக வெப்பமயமாதலும் பனிச்சிகரங்களை உருக வைத்துக் கொண்டிருக்கின்றன. 
உலகத்தின் கூரை என்று கருதப்படும் எவரெஸ்ட் சிகரத்தில், மனித நெரிசல் ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம் ஆபத்தும் அதிகரித்திருக்கிறது. 200 கி.மீ. வேகத்தில் பனிக்காற்று வீசிக்கொண்டிருக்கும். எப்போது சிகரங்கள் உருகி, பனிச்சரிவு ஏற்படும் என்பது தெரியாது. 20 ஆயிரம் அடிக்கும் அதிகமான உயரத்தில் ஆக்சிஜன் வாயு குறைவதால் பலருக்கு உடல் நலம் பாதிக்கப்படும். இவையெல்லாம் தெரிந்துதான் மலையேற்றக்காரர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முற்படுகிறார்கள் என்றாலும்கூட, அவர்களுக்கு முறையான பாதுகாப்பு அளிப்பதற்கும், மலையேற்றக்காரர்களை ஒழுங்குபடுத்துவதற்கும் போதிய முயற்சிகளை எடுக்காமல் இருந்துவிட முடியாது.
மலையேற்றம் வணிகமாகிவிட்டதில் தவறில்லை. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதிக்க விழைவதிலும் தவறில்லை. சென்ற வாரம் புதன்கிழமை மட்டும் 200 பேர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரிந்திருக்கிறார்கள். ஒரு நாளில் இத்தனை பேர் எவரெஸ்டில் ஏறியது இதுதான் முதல் முறை. கடந்த ஆண்டு 807 பேர் சிகரம் ஏறினர். 2012 புள்ளிவிவரப்படி, 2012-இல் எவரெஸ்டில் ஏற முற்பட்ட மலையேற்றக்காரர்களின் எண்ணிக்கை 26,000. இப்போது அது பல மடங்கு அதிகரித்திருக்கக் கூடும். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்காமல், அனுமதி வழங்குவது எந்த வகையில் நியாயம்?

]]>
https://www.dinamani.com/editorial/2019/jun/06/சிகரம்-தொடும்-அபாயம்-3165830.html
3165011 தலையங்கம் கல்வி அரசியல்! ஆசிரியர் Wednesday, June 5, 2019 01:46 AM +0530 மொழிப் பிரச்னை மீண்டும் எழுப்பப்பட்டு தற்காலிகமாக மத்திய அரசின் புத்திசாலித்தனமான முடிவால் தொடக்கத்திலேயே முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. வரைவு அறிக்கையில் ஹிந்தி கட்டாயமில்லை என்கிற திருத்தத்தை வெளியிட்டு இப்போதைக்கு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம். 
கடந்த ஆண்டு இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கனின் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழு ஒன்று புதிய கல்விக் கொள்கையை வகுப்பதற்காக அமைக்கப்பட்டது. அந்தக் குழு மத்திய அரசுக்கு வரைவு அறிக்கையை வழங்கியது. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக இணையத்தில் தேசிய கல்விக் கொள்கை தொடர்பான பரிந்துரைகள் வெளியிடப்பட்டு, அதன் மீது கருத்துத் தெரிவிக்கும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். 484 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கை, மாநில மொழி (தாய்மொழி), ஆங்கிலம் ஆகியவற்றுடன், ஆறாவது வகுப்பு முதல் மூன்றாவது மொழியாக ஹிந்தியையும் கட்டாயம் கற்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. இப்போது கட்டாயமாக ஹிந்தி கற்க வேண்டும் என்பது மாற்றப்பட்டு, தங்களது மாநில மொழி அல்லாத வேறு ஏதாவது ஓர் இந்திய மொழியைக் கற்க வேண்டும் என்கிற திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. 
ஹிந்தி எதிர்ப்பு என்கிற பார்வையில் மட்டுமே தேசிய கல்விக் கொள்கையை அவதானிக்க முற்படுவது புத்திசாலித்தனமானது அல்ல. இந்தப் பிரச்னையின் அடிப்படையில் போராட்டத்தைத் தூண்டிவிட்டு  அரசியல் ஆதாயம் தேட எதிர்க்கட்சிகள் முற்படுவது பொறுப்பின்மை. அதேபோல, மாநில மக்களின் உணர்வுகளையும், வருங்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்துக் கவலைப்படாமல் ஹிந்தியை வலுக்கட்டாயமாகத் திணித்து தேசிய மொழியாக அதற்கு அங்கீகாரம் பெற்றுத்தர வேண்டும் என்கிற தேசியக் கட்சிகளின் முனைப்பையும் கண்டிக்காமல் இருக்க முடியவில்லை.
தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை உள்ளடக்கியுள்ள பல முக்கியமான கொள்கைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. அறிவுஜீவிகளின் மொழி ஆங்கிலம்  என்றும், இந்தியாவில் 15 விழுக்காட்டினர் மட்டுமே ஆங்கிலம் பேசுகிறார்கள் என்றும், ஆங்கிலத்தின் முக்கியத்துவம் குறைக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும் அம்சங்கள் குறித்து விவாதிப்பதை விட்டுவிட்டு, மூன்று மொழிக் கொள்கை தேவையா, தேவையில்லையா என்று அரசியல் ரீதியாக அலச முற்படுவது புத்திசாலித்தனமாகாது.
மக்கள் மத்தியில் கல்வி கற்பது என்று சொன்னாலே ஆங்கிலம் தெரிந்திருப்பது என்கிற எண்ணம் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. அதன் விளைவால் ஆங்கிலக் கலப்பில்லாமல் இந்தியாவின் எந்தப் பகுதியிலும், எந்த மொழியிலும் (ஹிந்தி உள்பட) எவராலும் பேசிவிட முடியாது என்கிற நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். ஆங்கிலம் சரியாகக் கற்றுத்தரப்படவில்லை என்பதாலும், தனியார் பள்ளிகளில் படித்தால் மட்டுமே ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற முடியும் என்பதாலும்தான் இந்தியா முழுவதும் தனியார் பள்ளிகள் புற்றீசல்போல உருவாகி வருகின்றன.
இதன் விளைவாக, தாய்மொழியில் எழுத, பேசத் தெரியாத தலைமுறை உருவாகி ஏறத்தாழ கால் நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. அதனால், தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்தும் ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயமாகத் தாய்மொழியில் கல்வி (மாநில மொழி) என்பதை மொழிப் பற்றாளர்களும் நடுநிலையாளர்களும் வரவேற்றாக வேண்டும். ஹிந்தித் திணிப்பில் குளிர்காய நினைக்கும் அரசியல் கட்சிகள், தமிழில் கல்வி என்பதை மறைக்க முற்படுகின்றன.
இன்றைய நிலையில் சர்வதேச மொழியாக ஆங்கிலம் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகளாவிய அளவிலான வர்த்தகத்துக்கும், வேலைவாய்ப்புக்கும், தொடர்புக்கும் ஆங்கிலம் கட்டாயமாகிவிட்டிருக்கும் நிலையில், அதன் முக்கியத்துவத்தை தேசப்பற்று என்ற போர்வையில் தேசிய கல்விக் கொள்கையை குறைக்க முற்படுவது வருங்கால இளைய சமுதாயத்தினருக்கு இழைக்கப்படும் அநீதி. தகவல் தொழில்நுட்பத்தில் சர்வதேச வல்லமையை இந்தியா பெற்றதற்கு ஆங்கிலம்தான் காரணம். இந்திய மொழிகளை ஆதரிப்பதற்காக ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தைக் குறைக்க முற்படுவது ஏற்புடையதல்ல.
1930-லிருந்து ஹிந்தி பிரச்னை வரும் போதெல்லாம் நமது தாய்மொழியாம் தமிழுக்கு ஆபத்து என்று தமிழகம் கொதித்தெழுகிறது. உலகிலேயே நம்மைப் போன்ற மொழிப்பற்றுள்ள இனம் இல்லை என்பது பெருமிதத்துக்குரியது. அதே நேரத்தில் ஹிந்தி மீதான நமது எதிர்ப்பு, திராவிட அரசியலால் பிராமணர்களின் அடையாளம் என்று கருதப்படும் சம்ஸ்கிருதத்தின் மீதான எதிர்ப்பு என்பதையும் நாம் உணர வேண்டும்.
அவருக்கு ஹிந்தி தெரியும் என்பது முதல்முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு மத்திய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்தைப் பெற்றுத் தருவதற்கான தகுதியாக மறைந்த திமுக தலைவர் கருணாநிதி குறிப்பிட்டதையும், இன்றைய அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரின் வாரிசுகளும் ஹிந்தி படித்தவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்கும்போது, ஹிந்தித் திணிப்புக்கு எதிராகப் போராட்டக்களத்தில் குதிக்கத் தயாராகும் தலைவர்களின் போலித்தனத்தைப் பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை.
ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயமாகத் தாய்மொழிக் கல்வி, தாய்மொழியில் மட்டுமே கல்வி. ஆறாம் வகுப்பு முதல் தாய்மொழியும், ஆங்கிலமும் கூடுதலாக. இந்திய மொழியோ, அந்நிய மொழியோ ஏதாவதொரு மொழி கற்பிக்கப்பட வேண்டும். அந்த மும்மொழிக் கொள்கைதான் வருங்கால இந்தியாவை மட்டுமல்ல, எதிர்காலத் தமிழ்ச் சமுதாயத்துக்கும் நல்லது.
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/jun/05/கல்வி-அரசியல்-3165011.html
3164388 தலையங்கம் இப்படியும் இருக்குமோ? ஆசிரியர் Tuesday, June 4, 2019 01:39 AM +0530 பதினேழாவது மக்களவைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான இரண்டாவது அமைச்சரவை பதவியேற்றிருக்கிறது. அமைச்சரவை குறித்தும், அமைச்சர்களின் இலாகாக்கள் குறித்தும் பரவலாக விவாதிக்கப்படும் அளவுக்கு, பதினேழாவது மக்களவை உறுப்பினர்கள் குறித்த பார்வையோ, ஆய்வோ இல்லாமல் இருக்கிறது. 
ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்திருக்கும் மகத்தான ஆதரவால் 2014-இல் அந்தக் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த பலர் இன்று மக்களவை உறுப்பினர்கள் ஆகியிருக்கிறார்கள். அதனால், ஒப்பிட்டு நோக்கும்போது 16-ஆவது மக்களவைக்கும், 17-ஆவது மக்களவைக்கும் இடையே பெரிய வித்தியாசம் எதுவும் காணப்படவில்லை என்றுதான் கூற வேண்டும். 
மக்களவையின் 542 உறுப்பினர்களில் 233 உறுப்பினர்கள் முதல்முறையாக மக்களவைக்குப் போட்டியிட்டவர்கள். 277 பேர் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்கள். 44 பேர் இதற்கு முன்னால் போட்டியிட்டும் தேர்வாகாமல், இந்த மக்களவைத் தேர்தலில் தேர்வானவர்கள். பல உறுப்பினர்கள் 
மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குக் காரணம் பாஜகவுக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய ஆதரவு. பாஜக சார்பில் மீண்டும் போட்டியிட்ட 226 பேர் இந்த முறையும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். 
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மக்களவை உறுப்பினர்களில் 118 பேர் குறைந்தது மூன்று முறையும் அதற்கு அதிகமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்கள். பாஜகவைச் சேர்ந்த மேனகா காந்தி (சுல்தான்பூர்), சந்தோஷ் குமார் கங்குவார் (பரேலி) இருவரும் எட்டாவது முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மத ரீதியாகப் பகுப்பதாக இருந்தால், தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மக்களவை உறுப்பினர்களில் 90.4% இந்துக்கள். கடந்த 2014-ஐவிட முஸ்லிம்கள் ஐந்து பேர் கூடுதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதாவது அவர்களது விகிதம் 4.2%-லிருந்து 5.2%-ஆக அதிகரித்திருக்கிறது. ஏனைய மதச்சிறுபான்மையினரான சீக்கியர்களும், கிறிஸ்தவர்களும் மொத்த மக்களவை உறுப்பினர்களில் 4%. 
கடந்த மக்களவையுடன் ஒப்பிடும்போது, இந்த முறை பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 11.6%-லிருந்து 14.6%-ஆக அதிகரித்திருக்கிறது. எண்ணிக்கை 61-லிருந்து 78-ஆகியிருக்கிறது. 17-ஆவது மக்களவையில் அதிகரித்திருக்கும் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றின் சார்பில் கூடுதலாக மகளிர் போட்டியிட்டதும் வெற்றி பெற்றதும் முக்கியமான காரணம். பாஜகவின் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 30-லிருந்து 41-ஆகவும் (10% - 13%). காங்கிரஸ் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 4 பேரிலிருந்து 6-ஆகவும் (9%-லிருந்து 11%) அதிகரித்திருக்கிறது.
இதை மிகப் பெரிய மாற்றம் என்று கருதவோ, போற்றவோ முடியவில்லை. 8,049 வேட்பாளர்கள் போட்டியிட்ட 2019 மக்களவைத் தேர்தலில், பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 724 மட்டுமே. பல மாநிலங்களில் ஆண்களைவிட அதிகமாகப் பெண்கள் வாக்களித்திருந்தும்கூட, வேட்பாளர்களாகவும், வெற்றி பெற்றவர்களாகவும் பங்கு பெற்ற பெண்களின் எண்ணிக்கை அதற்கேற்ப இல்லை என்கிற உண்மை சுடுகிறது. 
காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தாலும்கூட, மிக அதிகமான அளவில் (54) பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளித்தது. பாஜகவின் சார்பில் ஏறக்குறைய அதே அளவில் (53) பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் 24 மகளிரும், மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் 23 பேரும், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் 10 பேரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 4 பேரும் தேர்தலில் களம் கண்டனர். 222 பெண்கள் சுயேச்சைகளாகப்போட்டியிட்டனர். 
மிகப் பெரிய அளவில் பெண்கள் வாக்களிப்பில் கலந்து கொண்டும்கூட, 78 பேர் மட்டுமே வெற்றி பெற முடிந்திருக்கிறது. 
2009-இல் 59 மகளிரும், 2014-இல் 61 மகளிரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இப்போது மக்களவைப் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 78-ஆக அதிகரித்திருக்கிறது என்பது, பாராட்டும்படியாக இல்லாவிட்டாலும் ஆறுதல் அளிக்கிறது.
இந்தியத் தேர்தல்களில் மிகப் பெரிய சவால்களை எதிர்கொண்டு பெண்கள் வெற்றி பெறுகிறார்கள். ஆனாலும்கூட, எந்த ஓர் அரசியல் கட்சியும் தேர்தல் பிரசாரத்தின்போதும், ஆட்சியிலும், பெண்கள் பிரச்னைகள் குறித்துப் போதிய கவனம்  செலுத்துவதில்லை. சேலை, தையல் இயந்திரங்கள் போன்ற இலவசங்கள் வழங்குதல், பணம் கொடுப்பது என்று பெண்களைக் கவர்ந்து அவர்களது வாக்குகளைப் பெற முயற்சிக்கும் அரசியல் கட்சிகள், மகளிரின் பொருளாதார முன்னேற்றம் குறித்தும், அவர்களது பிரச்னைகள் குறித்தும் கவலைப்படுவதில்லை.
மிகப் பெரிய அளவில் பெண்கள் கல்வியில் தேர்ச்சி பெறுகிறார்கள். குறிப்பாக கிராமப்புறப் பெண்கள் படித்துப் பட்டம் பெற்றாலும்கூட, அதற்கேற்ற வேலைவாய்ப்பு இல்லாத நிலைமை காணப்படுகிறது. அகில இந்திய அளவில் மகளிரை முன்னிறுத்தி அவர்களது வேலைவாய்ப்புக்கும், பொருளாதார மேம்பாட்டுக்கும் தேவையான திட்டங்களை வகுத்து  வழிகாட்ட மனிதவள மேம்பாட்டு அமைச்சகமோ, மகளிர் குழந்தைகள் நல அமைச்சகமோ முனைப்புக் காட்டுவதாகத் தெரியவில்லை. 
மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானியை, இந்த முறை மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராக நியமித்திருப்பது பலரையும் புருவம் உயர்த்தச் செய்திருக்கிறது. மகளிர் நல மேம்பாட்டுக்கு புதிய அரசு முன்னுரிமை வழங்குவதன் வெளிப்பாடாக இந்த முடிவு இருக்குமேயானால், பாராட்டுக்குரிய முடிவு!
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/jun/04/இப்படியும்-இருக்குமோ-3164388.html
3163830 தலையங்கம் தொடங்கியது கிரிக்கெட் ஜுரம்! ஆசிரியர் Monday, June 3, 2019 03:00 AM +0530 உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் தொடங்கிவிட்டிருக்கும் நிலையில், கிரிக்கெட் ஜுரத்தில் உலகமே ஆழ்ந்திருக்கிறது. பயிற்சி ஆட்டங்களின் வெற்றி, தோல்விகள் மிகைப்படுத்தப்படுகின்றன. உலகக் கோப்பை கிரிக்கெட் போன்ற போட்டியில் முடிவு எப்படி வேண்டுமானாலும் அமையலாம்.
 1975-இல் தொடங்கிய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இதுவரை 11 போட்டிகள் முடிந்து இப்போது 12-ஆவது போட்டியை எதிர்கொள்கிறது. ஐந்து நாள் டெஸ்ட் ஆட்டங்களையும், 20 ஓவர் டி-20 ஆட்டத்தையும்விட, உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெறுவதுதான், கிரிக்கெட் அணிகளின் பெருமையாகவும் பெருமிதமாகவும் கருதப்படுகிறது.
 இன்றைய நிலையில், ஒருநாள் ஆட்டங்களில் இங்கிலாந்து முன்னிலையிலும் அடுத்த இடத்தில் மிக சக்திவாய்ந்த அணியாக இந்தியாவும் இருக்கின்றன. கடந்த நூற்றாண்டில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கப்பட்டபோது, மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கைதான் ஓங்கியிருந்தது. இந்த நூற்றாண்டின் முதலாவது 10 ஆண்டுகளில் ஒரு நாள் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா முன்னிலை வகித்தது. இப்போது அப்படி எந்தவொரு நாட்டு அணிக்கும் அதுபோன்ற தனிப் பெருமை இல்லை.
 உலகக் கோப்பை களத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் காணப்படும் அணிகள் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகியவை. இவற்றில் ஆஸ்திரேலியா ஐந்து முறையும், இந்தியா இரண்டு முறையும் உலகக் கோப்பையை வென்றிருக்கின்றன. இங்கிலாந்து இதுவரை வென்றதில்லை. முன்னாள் சாம்பியன்களான மேற்கு இந்தியத் தீவுகளும், இந்தியாவும், ஆஸ்திரேலியாவும், பாகிஸ்தானும் வெற்றிக்கான வாய்ப்புடைய நியூஸிலாந்தும், தென்னாப்பிரிக்காவும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்திருக்கின்றன.
 கடந்த 2015 முதல் உலகக் கோப்பைக்கான போட்டியில் பல குறிப்பிடத்தக்க மாறுதல்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இப்போதைய முறையில் எந்தவோர் அணியும் தொடர்ந்து நன்றாக விளையாடினால் மட்டுமே இறுதியில் கோப்பையை வெல்ல முடியும். சாதாரண போட்டிகளில் அதிர்ஷ்டம் ஒத்துழைத்தால் எந்தவோர் அணியும் வெற்றி பெற்றுவிடலாம். இப்போதைய உலகக் கோப்பைக்கான முறையில் அதிர்ஷ்டம் மட்டுமே போதாது.
 போட்டியில் கலந்து கொள்ளும் ஒவ்வோர் அணியும் ஏனைய ஒன்பது அணிகளுடன் விளையாடியாக வேண்டும். அவற்றில், அந்த ஆட்டங்களிலிருந்து தேர்வு பெறும் நான்கு சிறந்த அணிகள்தான் அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெறும். ஒருநாள் மோசமாக ஆடினால் அடுத்த ஆட்டத்தில் அதை ஈடுகட்ட முடியும். அதேபோல அதிர்ஷ்டவசமான வெற்றியின் மூலம் எந்தவோர் அணியும் தேர்வு பெற்றுவிட முடியாது. அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெறும் அணிகள் போட்டியின் தொடக்கம் முதல் தொடர்ந்து நன்றாக விளையாடினால் மட்டுமே, உலகக் கோப்பையை நெருங்கும் வாய்ப்பைப் பெற முடியும்.
 இப்படிப்பட்ட முறையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிச் சுற்றை எட்டிப் பிடிப்பதற்கு 38 நாள்கள் ஆகும். இந்த 38 நாள்களில் 45 ஆட்டங்கள் நடத்தப்பட்டிருக்கும். அதனால், கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒவ்வொரு நாளும் கொண்டாட்டம்தான். வேறு எந்த வேலையையும் செய்ய விடாமல் அவர்களை ஒரு மாதத்துக்கும் மேலாக தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கட்டி வைக்கப் போகிறது.
 அதே நேரத்தில் விளையாட்டு வீரர்களைப் பொருத்தவரை, இதைச் சாதகமாகவும் பாதகமாகவும் எடுத்துக்கொள்ள முடியும். இரண்டு போட்டிகளுக்கு இடையே நீண்ட இடைவெளி இருப்பது அவர்களுக்கு ஓய்வெடுப்பதற்கும் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்கும் உதவக்கூடும். அதே நேரத்தில், வீரர்கள் தங்களுடைய விளையாட்டின் மீதான ஆர்வத்தையும், வேகத்தையும் இழந்துவிடவும் வழிகோலலாம்.
 இங்கிலாந்தில் போட்டி நடைபெறும் கால இடைவெளியில் வெயில் காலம் அதிகரிக்கத் தொடங்கும். அந்த ஒன்றரை மாத கால மாற்றத்தை அனுசரிக்கவும் ஏற்றுக்கொள்ளவும் முடிந்த அணியால்தான் தொடர்ந்து வெற்றிகரமாக விளையாட்டில் ஈடுபட முடியும்.
 2011-இல் மும்பையில் நடந்த உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் கேப்டன் தோனியின் தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்றபோது, இப்போதைய கேப்டன் விராட் கோலி புதுமுக ஆட்டக்காரராக இருந்தார். இப்போது இந்திய அணியின் கேப்டன் என்பது மட்டுமல்லாமல், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாகவும் திகழ்கிறார். இந்தியாவின் 100 கோடிக்கும் அதிகமான மக்களின் எதிர்பார்ப்பைச் சுமந்து கொண்டிருக்கும் விராட் கோலி, இந்த முறை எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம்.
 இங்கிலாந்தின் தட்பவெப்ப நிலையும், வேனல் காலமும் இந்திய அணிக்கு எந்த அளவுக்குச் சாதகமாக இருக்கும் என்பது தெரியவில்லை. அதே நேரத்தில் ஜஸ்ப்ரீத் பும்ரா போன்ற சிறந்த ஆரம்ப பந்து வீச்சாளர்கள் உள்பட திறமையான ஆட்டக்காரர்களுடன் இந்திய அணி களமிறங்கியிருக்கிறது. 1983-இல் கபில் தேவ் தலைமையில் இதே இங்கிலாந்தில் மேற்கு இந்தியத் தீவுகளைத் தோற்கடித்து இந்தியா உலகக் கோப்பையை வென்றதை நினைவுபடுத்துவதுபோல, இந்த முறை விராட் கோலி தலைமையிலான அணியும் கோப்பையை வென்று சாதனை படைக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த இந்தியாவுமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
 உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்துக்காக (ஜூலை 14) உலகமே காத்திருக்கும் வேளையில், மூன்றாவது உலகக் கோப்பை வெற்றிக்காக இந்தியா காத்திருக்கிறது!
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/jun/03/தொடங்கியது-கிரிக்கெட்-ஜுரம்-3163830.html
3162375 தலையங்கம் பழையன கழிதலும் புதியன புகுதலும்! ஆசிரியர் Saturday, June 1, 2019 01:33 AM +0530
இரண்டாவது முறையாக நரேந்திர மோடியின் தலைமையில் 58 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவை பதவியேற்றிருக்கிறது. பழைமையும் - புதுமையும், அனுபவமும் - இளமையும், திறமையும் - கட்சி விசுவாசமும் கலந்த வித்தியாசமான அமைச்சரவையாகப் பிரதமர் மோடியின் இரண்டாவது அமைச்சரவை காட்சியளிக்கிறது. 
24 கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் 9 இணையமைச்சர்கள், 24 இணையமைச்சர்கள் உள்ளிட்ட பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது அமைச்சரவையின் சராசரி வயது 60-க்குக் கீழே என்பது குறிப்பிடத்தக்கது. முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 37 அமைச்சர்களுக்கு இந்த முறை வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 27 புது முகங்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த அமைச்சரவையில் மிக முக்கியமான பொறுப்பு வகித்த நிதியமைச்சர் அருண் ஜேட்லியும், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் புதிய அமைச்சரவையில் இல்லை. அவர்கள் மட்டுமல்ல, சுரேஷ் பிரபு, மேனகா காந்தி, உமா பாரதி, மகேஷ் சர்மா, ராதா மோகன் சிங், ராஜ்யவர்த்தன் ரத்தோர், ஜெயந்த் சின்ஹா, ஜுவால் ஓராம், ராம்பிரசாத் யாதவ் ஆகியோரும் இடம்பெறவில்லை. 
உடல்நலக் குறைவால் அருண் ஜேட்லியும், சுஷ்மா ஸ்வராஜும் அவர்களாகவே ஒதுங்கிக் கொண்டார்கள் என்றால், சிவசேனையின் வற்புறுத்தலால் சுரேஷ் பிரபுவுக்கு இடமளிக்கப்படவில்லை என்று தெரிகிறது. நரேந்திர மோடியின் கடுமையான விமர்சகரான வாஜ்பாய் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஜெயந்த் சின்ஹா பிரதமர் மோடியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகக் கருதப்படுபவர். அவர் அமைச்சரவையில் இடம்பெறாதது வியப்பளிக்கிறது.
கட்சிகள் மாறி மாறி ஆட்சியமைத்தாலும், 1977 ஜனதா ஆட்சிக் காலத்தைத் தவிர, ஏனைய எல்லா அமைச்சரவைகளிலும் நேரு குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இடம்பெற்றிருந்தார்கள். இந்த முறை மேனகா காந்தி அமைச்சரவையில் இடம் பெறாததன் மூலம், முதல் முறையாக நேரு குடும்ப அங்கத்தினர் இல்லாத அமைச்சரவை நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேகனா காந்திக்குப் பதிலாக, வருண் காந்திக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்கிற பரவலான எதிர்பார்ப்பு பொய்த்திருக்கிறது. 
1947-இல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு தலைமையில் அமைந்த முதலாவது அமைச்சரவையில் நிதியமைச்சராகத் தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.கே. ஷண்முகம் செட்டி இடம்பெறுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அன்று முதல் இன்று வரை பெரும்பாலான அமைச்சரவைகளில் இந்தியாவின் நிதித் துறையைக் கையாளும் பொறுப்பில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். வேறு எந்த மாநிலத்தவரையும்விட, அதிகமாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் நிதியமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் அந்தப் பெருமை தொடர்கிறது. 
எதிர்பார்த்தது போலவே பாஜக தலைவர் அமித் ஷா அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது மட்டுமல்லாமல், உள்துறைப் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக பாஜகவை அசைக்க முடியாத அரசியல் சக்தியாக மாற்றிக் காட்டியிருக்கும் அமித் ஷா, பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் காந்தி நகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும்போதே அமைச்சரவையில் இடம்பெறுவார் என்பதை ஊகிக்க முடிந்தது. இரண்டு முறை பாஜக தலைவராகப் பதவி வகித்திருக்கும் நிலையில், அந்தக் கட்சியின் மரபுப்படி அவர் கட்சித் தலைவர் தொடர முடியாது என்பதும்கூட அவர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதற்கு முக்கியமான காரணம்.
மகத்தான மக்கள் அங்கீகாரத்துடன் இரண்டாவது முறையாக வியாழக்கிழமை பதவியேற்றிருக்கும் நரேந்திர மோடியின் அமைச்சரவை சில தெளிவான செய்திகளை வெளிப்படுத்துகிறது. இதுவரை கட்சித் தலைமையில் இருந்த அமித் ஷா, ஆட்சிப் பொறுப்புக்கு இடமாற்றமாகி இருப்பதும், அவருக்கு உள்துறை அமைச்சகப் பொறுப்பை வழங்கியிருப்பதும் அரசின் அணுகுமுறை மாற்றத்துக்கு வழிகோலக்கூடும். பாஜக தலைவராக வேறொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும்கூட, ஆட்சிக்கும் கட்சிக்கும் இடையேயான இடைவெளி குறைய நிறையவே வாய்ப்பிருக்கிறது. இதுவரை பின்னணியில் இருந்து செயல்பட்ட அமித் ஷா, இனிமேல் உள்துறை அமைச்சராக நேரடியாகவே அதிகாரத்தை கையாளப் போகிறார்.
யாருமே எதிர்பாராத விதத்தில்  முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலர் எஸ்.ஜெயசங்கருக்கு பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் மிக முக்கியமான பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்தியத் தூதராகவும், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுவதற்கு சர்வதேச ஆமோதிப்பை பெற்றுத் தந்தவருமான ஜெய்சங்கர் வெளியுறவுத்  துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம் உலக வல்லரசு நாடுகளுடனான உறவுக்கு அதீத முக்கியத்துவம் அளிக்க 
இந்திய அரசு விரும்புகிறது என்பது வெளிப்படுகிறது. 
தமிழகத்தைப் பொருத்தவரை, இந்த முறையும் மத்திய அமைச்சரவை ஏமாற்றமளித்திருக்கிறது. சுதந்திர இந்திய வரலாற்றில் தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் மத்திய அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக இடம்பெறாமல் இருப்பது, 2014-இல் நரேந்திர மோடி பிரதமரானது முதல்தான். 
அந்தக் குறை தொடர்கிறது. இந்தக் குறை தொடரும் வரை தமிழகத்தில் பாஜக வளராது என்கிற உண்மையைப் பிரதமருக்கு யார் உணர்த்துவது?
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/jun/01/பழையன-கழிதலும்-புதியன-புகுதலும்-3162375.html
3161723 தலையங்கம் வெளியேறுகிறார் மே! ஆசிரியர் Friday, May 31, 2019 02:53 AM +0530 பிரிட்டன் பிரதமர் தெரசா மே பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார். ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து விலகுவதற்கான அவரது அரசின் நிபந்தனைகளை மூன்று முறை பிரிட்டன் நாடாளுமன்றம் நிராகரித்த நிலையில், பதவியில் தொடர்வதற்கு அவருக்கு  வழியில்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஜூன் 7-இல்  அவர் பதவி விலகும்போது, அதனால் பிரிட்டன் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு முடிவு ஏற்படுமா என்றால், அதற்கான சாத்தியமே இல்லை. 
வெளியேற்ற ஒப்பந்தத்துக்கு மே 22-ஆம் தேதி நான்காவது முறையாக பிரிட்டன் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற பிரதமர் மே திட்டமிட்டிருந்த முயற்சி அரைகுறையாக நின்று போனது. ஐரோப்பியக் கூட்டமைப்புக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் பிரதமர் தெரசா மேயின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வி அடைந்தது. நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற முடியாது என்பதை அவர் புரிந்துகொண்டார். ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் விலக வேண்டும் என்கிற பிரெக்ஸிட் முடிவை வலியுறுத்தும் நைஜல் ஃபராஜ் தலைமையிலான பிரெக்ஸிட் ஆதரவு கட்சிக்குக் கிடைத்த எதிர்பாராத பெரும் வெற்றி, பிரதமர் மேயின் எல்லா திட்டங்களையும் தகர்த்தது.
ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து விலகுவது குறித்து பிரதமர் மே நடத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வெளியேற்ற ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் குறித்து அவரது கன்சர்வேட்டிவ் கட்சியிலேயே பரவலான கருத்து வேறுபாடு இருக்கிறது. அதனால்தான் மூன்று முறையும் நாடாளுமன்றத்தில் வெளியேற்ற ஒப்பந்தத்துக்கான அங்கீகாரத்தைப் பிரதமர் மேயால் பெற முடியவில்லை. 
ஐரோப்பியக் கூட்டமைப்பு என்கிற ஒருங்கிணைந்த சந்தையிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது என்கிற அடிப்படையில் வெளியேற்ற ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. அதனால் ஐரோப்பியக் கூட்டமைப்பின் சுங்கக் கட்டணம், ஐரோப்பியக் கூட்டமைப்பு உறுப்பினர் நாடுகளின் குடியுரிமை பெற்றவர்கள் பிரிட்டனில் வேலை பார்க்கும் உரிமை, ஐரோப்பியக் கூட்டமைப்பின் பிரதிநிதி ஒருவர் பிரிட்டனில் இருப்பது உள்ளிட்ட நிபந்தனைகளை கன்சர்வேட்டிவ் கட்சியில் மட்டுமல்ல, பிரிட்டனிலுள்ள அனைத்துக் கட்சிகளிலும் விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள். பிரதமர் மே முன்மொழிந்திருக்கும் வெளியேற்ற ஒப்பந்தம், ஐரோப்பியக் கூட்டமைப்புக்குச் சாதகமாகவும் பிரிட்டனுக்கு எதிராகவும் இருக்கிறது என்பதுதான் அவர்களது பரவலான குற்றச்சாட்டு. 
அதே நேரத்தில், ஐரோப்பியக் கூட்டமைப்பில் தொடர்வதற்குச் சாதகமாக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் இல்லை. பிரிட்டன் வெளியேறும் நிலைமையாக இருந்தாலும், நிபந்தனைகளே இல்லாத வெளியேற்றமாக இருந்தாலும், ஐரோப்பியக் கூட்டமைப்புடன் உள்ள உறவையும், பொருளாதாரத் தொடர்பையும் பிரிட்டன் துண்டித்துக் கொள்ளக் கூடாது என்பது அவர்களது வாதம். 
ஐரோப்பியக் கூட்டமைப்பும், 1973-இல் பிரிட்டனுடன் ஏற்படுத்திக் கொண்ட உறவு முறிவதை விரும்பவில்லை. இதனால் பலவீனப்படுவதுடன், கூட்டமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் வேறுசில நாடுகளும் பிரிட்டனைத் தொடர்ந்து வெளியேற முற்படக் கூடும் என்று ஐரோப்பியக் கூட்டமைப்பு அச்சப்படுகிறது.
தனது அரசியல் முடிவை பிரதமர் மே தானே எழுதிக் கொண்டார் என்றுதான் கூற வேண்டும். 2017-இல் தனது தலைமையை வலுப்படுத்திக்கொள்ள அவர் எடுத்த திடீர் முடிவுதான் இடைக்காலத் தேர்தல். அவர் எதிர்பார்த்ததுபோல், கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மை பலம் பெறாததால் அவரது அரசியல் ராஜதந்திரம் தோல்வியடைந்தது.
பதவி விலகும் பிரதமர் தெரசா மேயின் இடத்தை நிரப்பப் போவது யார் என்கிற கேள்வி பிரிட்டனில் மட்டுமல்ல, உலக நாடுகளிளெல்லாம் விவாதிக்கப்படுகிறது. அது அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை. பிரதமர் பதவிப் போட்டியில் முன்னணியில் இருப்பவர் பிரிட்டனின் முன்னாள் வெளியுறவுச் செயலராக இருந்த போரீஸ் ஜான்சன். வெளியேற்ற ஒப்பந்தம் ஏற்கப்பட்டாலும், ஏற்கப்படாவிட்டாலும், திட்டமிட்டபடி அக்டோபர் 31-ஆம் தேதி ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்பதில் தீர்மானமாக இருப்பவர் அவர். 
சமீபத்தில் நடந்த ஐரோப்பியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் பிரிட்டனின் ஆளுங்கட்சியான பிரதமர் தெரசா மேயின் கன்சர்வேட்டிவ் கட்சி நான்காவது இடத்தைத்தான் பெற முடிந்தது. கன்சர்வேட்டிவ் கட்சியைப் போலவே, பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியும் பிரெக்ஸிட்டைப் பொருத்தவரை பிளவுபட்டிருக்கிறது. ஐரோப்பியக் கூட்டமைப்புத் தேர்தலில் மூன்றாவது இடத்துக்குத் தொழிலாளர் கட்சி தள்ளப்பட்டது. 
புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் நைஜல் ஃபராஜின் (யுனைடெட் கிங்டம் இன்டிபென்டட் கட்சி) வெளியேற்றத்தை வலியுறுத்தும் பிரெக்ஸிட் ஆதரவு கட்சி. அது பிரிட்டனிலுள்ள பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. நைஜல் ஃபராஜின் யுனைடெட் கிங்டம் இன்டிபென்டட் கட்சி, குடியேற்றத்துக்கு எதிரான, இன உணர்வுக்கு ஆதரவான கட்சி என்பதால், 
மக்கள் மத்தியில் அதற்குப் பெருகி வரும் ஆதரவு ஏனைய கட்சிகளை அச்சுறுத்துகிறது. 
பிரதமர் தெரசா மேயின் பதவி விலகலால் பிரிட்டன் எதிர்கொள்ளும் பிரச்னைகள் மேலும் அதிகரிக்குமே தவிர, குறைய வாய்ப்பில்லை. தேர்தல் நடத்தப்பட்டாலும் தீர்வு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். உலகமே அண்ணாந்து பார்த்து வியந்த பிரிட்டனின் இன்றைய நிலை, ஆச்சரியப்படுத்தவில்லை, அனுதாபப்பட வைக்கிறது!
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/may/31/வெளியேறுகிறார்-மே-3161723.html
3161029 தலையங்கம் கிழக்கு நோக்கிய பார்வை! ஆசிரியர் Thursday, May 30, 2019 02:22 AM +0530 முதல் தடவையாக 2014-இல் நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றபோது, பதவியேற்பு விழாவுக்கு இந்தியாவின் அண்டை நாடுகள் அனைத்துக்குமே அழைப்பு விடப்பட்டிருந்தது. அன்றைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்பட அண்டை நாடுகளின் தலைவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டதும் அவர்கள் கலந்துகொண்டதும் நரேந்திர மோடியின் முதல் ராஜதந்திர வெற்றியாக வர்ணிக்கப்பட்டது. 
கடந்த முறை சார்க் நாட்டுத் தலைவர்கள் பதவியேற்பு நிகழ்வுக்கு அழைக்கப்பட்டார்கள் என்றால், இந்த முறை அதில் சிறு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் நரேந்திர மோடி. பிம்ஸ்டெக் என்று சுருக்கமாக அழைக்கப்படும் வங்காள விரிகுடாவை ஒட்டிய நாடுகளுக்கு அழைப்பு விடப்பட்டிருப்பதிலிருந்து இந்தியாவின் ராஜதந்திர அணுகுமுறையில் காணப்படும் மாற்றத்தை உணர முடிகிறது. பிம்ஸ்டெக் என்பது இந்தியாவைத் தவிர வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் அடங்கிய அமைப்பு. 
2014-இல் தனது பதவியேற்புக்கு விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்துகொண்டதை பிரதமர் மோடி பெருமையாகவே தனது சுட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். இந்தியாவுடனான பாகிஸ்தானின் அணுகுமுறை மாற்றம் பரவலான வரவேற்பைப் பெற்றது. 
நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் நடந்த சார்க் மாநாட்டில் பிரதமர் மோடியும் கலந்துகொண்டார். சார்க் உறுப்பினர் நாடுகளின் உயரதிகாரிகள் பல மாதங்கள் விவாதித்து பல்வேறு ஒப்பந்தங்களைத் தயாரித்திருந்தனர். அவற்றில் மிக முக்கியமான ஒப்பந்தம், உறுப்பினர் நாடுகளுக்கிடையேயான பரஸ்பரத் தொடர்புகள் குறித்தது. கடைசி நிமிஷத்தில் ஒப்பந்தம் கையொப்பமாக இருந்த நிலையில், ராவல்பிண்டியிலிருந்து பாகிஸ்தான் ராணுவம் ஒப்புதல் அளிக்காததால், பிரதமர் நவாஸ் ஷெரீப் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாமல் முடக்கினார்.
காத்மாண்டுவில் ஏற்பட்ட அனுபவம்தான் வங்கதேசம், பூடான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்திக்கொள்ள நரேந்திர மோடியைத் தூண்டியது. அப்போதிலிருந்தே சார்க் அமைப்பைத் தாண்டி பிம்ஸ்டெக்கை வலுப்படுத்தும் திட்டத்தை இந்தியா முன்னெடுத்தது. சார்க் உறுப்பினர்களான வங்க தேசம், பூடான், நேபாளம், இலங்கை மட்டுமல்லாமல் வங்காள விரிகுடா கடலை ஒட்டிய தென்கிழக்கு ஆசிய நாடுகளான மியான்மரையும், தாய்லாந்தையும் பிம்ஸ்டெக்கில் இணைத்துக் கொண்டது இந்தியாவின் புத்திசாலித்தனமான அடுத்தகட்ட நகர்வு. 
இந்தியாவின் எல்லாவிதமான நட்புறவு சமிக்ஞைகளையும் பாகிஸ்தான் புறந்தள்ள முற்பட்டிருக்கிறதே தவிர, சமாதானத்துக்கான எண்ணத்துடன் செயல்பட்டதே இல்லை. 1999-இல் அன்றைய பிரதமர் வாஜ்பாய் லாகூருக்கு பேருந்தில் பயணம் செய்து இரு நாடுகளுக்கிடையே போக்குவரத்துத் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்தார். ஆனால், அதன் எதிரொலியாக கார்கிலில் பயங்கரவாதிகளின் ஊடுருவலுக்கு பாகிஸ்தான் உதவ முற்பட்டது. 
அதேபோல, நவாஸ் ஷெரீப்பின் பிறந்தநாளுக்கு, அவரே எதிர்பாராத வண்ணம் திடீரென்று லாகூரிலுள்ள அவரது வீட்டிற்கு நரேந்திர மோடி சென்று வாழ்த்தினார். அடுத்த சில வாரங்களில் ஜெய்ஷ் ஏ முகமது பயங்கரவாதிகள் பதான்கோட் விமானதளத்தில் தாக்குதல் நடத்தினார்கள். 
பாகிஸ்தானில் உருவாகும் பயங்கரவாதிகள் இந்தியாவின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்திருக்கிறார்கள். 2001-இல் இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல், 2008-இல் மும்பைத் தாக்குதல், 2016-இல் உரி தாக்குதல், அண்மையில் புல்வாமா தாக்குதல் என்று பாகிஸ்தானின் மறைமுக ஆதரவுடன் இந்தியாவின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் ஏராளம்.
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உருவாகும் பயங்கரவாதத்தை முற்றிலுமாக அழிப்பதற்கு சர்வதேச அளவில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. அப்படியிருந்தும்கூட, அது குறித்து எந்தவிதத் தீவிர நடவடிக்கையையும்  இம்ரான்கான் அரசு மேற்கொள்ளவில்லை எனும் நிலையில், புதிய அமைச்சரவையின் பதவியேற்புக்கு பாகிஸ்தானை அழைக்காமல் இருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
இந்தியாவைப் பொருத்தவரை நரசிம்ம ராவ் அரசு முன்மொழிந்த கிழக்கு நோக்கிய பார்வை வர்த்தக ரீதியாகவும், பொருளாதார மேம்பாட்டு ரீதியாகவும் இந்தியாவுக்குச் சாதகமாக இருந்து வருகிறது. ஆசிய நாடுகளுடனான தொடர்பை வலுப்படுத்திக் கொள்ள பிம்ஸ்டெக் ஒரு பாலமாக இந்தியாவுக்கு அமையும். கடந்த 30 ஆண்டுகளில் தென்கிழக்கு ஆசியாதான் உலகிலேயே மிக அதிகமான பொருளாதார வளர்ச்சியைச் சந்தித்திருக்கிறது என்பதால், நமது கிழக்கு நோக்கிய பார்வை மிக மிக அவசியம். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த நாடுகள் இந்து மதம், பெளத்தம் ஆகியவற்றால் இந்தியாவுடன் பல நூற்றாண்டு கலாசாரத் தொடர்புடையவை என்பதை நாம் உணர வேண்டும். 
2014-இல் பதவியேற்புக்கு சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்தது எந்த அளவுக்குப் புத்திசாலித்தனமோ, அதேபோன்ற ராஜதந்திரம்தான் இந்த முறை வேண்டுமென்றே பாகிஸ்தானைப் புறக்கணித்து, பிம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்களைப் பதவியேற்பு விழாவுக்கு அழைத்திருப்பது. இந்த நாடுகளைப் பொருத்தவரை இந்தியாவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ள விழையும் அதே நேரத்தில், இந்தியா மீதான ஒரு வருத்தமும் அந்த நாடுகளுக்கு உண்டு. அது என்னவென்றால், நாம் அந்த நாடுகளுக்குப் பல்வேறு வாக்குறுதிகளை வாரி வழங்கிவிட்டு அவற்றை விரைந்து நிறைவேற்றாமல் இருக்கிறோம் என்பது. 
பிரதமரின் கவனம் பிம்ஸ்டெக் நாடுகளின் மீது திரும்பியிருப்பதால், அந்தக் குறைபாடு அகற்றப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/may/30/கிழக்கு-நோக்கிய-பார்வை-3161029.html
3160271 தலையங்கம் தோல்வியா, நீட்சியா? ஆசிரியர் Wednesday, May 29, 2019 01:28 AM +0530 பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தேர்தல் வெற்றியை வரலாற்று வெற்றி என்று குறிப்பிடுவதில் தவறே இல்லை. 1971-இல் தனிப் பெரும்பான்மையுடன் இந்திரா காந்தி வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானதற்குப் பிறகு, இப்போதுதான் அதே போன்றதொரு வெற்றி ஒரு பிரதமருக்குச் சாத்தியமாகி இருக்கிறது எனும்போது, அதை வரலாற்று வெற்றி என்றல்லாமல் வேறு எப்படிக் கூறுவது? ஏறத்தாழ 1971-லும் இதேதான் நிலைமை என்பதால், இந்திரா காந்தியையும் பிரதமர் நரேந்திர மோடியையும் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
2014 தேர்தலில் 80-இல் 71 இடங்களை உத்தரப் பிரதேசத்தில் பாஜக வென்றது என்றாலும், அதன் வாக்கு விகிதம் 42.6% தான். இப்போது 62 இடங்களில்தான் வெற்றி அடைந்திருக்கிறது என்றாலும்கூட, பாஜகவின் வாக்கு விகிதம் 49.5%-ஆக அதிகரித்திருக்கிறது. இத்தனைக்கும் உத்தரப் பிரதேசத்தில் மாநிலக் கட்சிகளான சமாஜவாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும், ராஷ்ட்ரீய லோக் தளமும் மகா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.
குஜராத், ராஜஸ்தான், தில்லி, உத்தரகண்ட், ஹிமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள அத்தனை இடங்களையும் பாஜக கைப்பற்றியிருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 இடங்களில் 28 இடங்களை வென்றிருக்கிறது. மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 48 இடங்களில், கடந்த 2014 தேர்தலைப் போலவே இந்த முறையும் 41 இடங்களைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், பிகார் மாநிலங்களில் இழந்த இடங்களை மேற்கு வங்கம், ஒடிஸா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அதிகரித்திருக்கும் எண்ணிக்கை மூலம் பாஜகவால் ஈடுகட்ட முடிந்திருக்கிறது.
2014-இல் 31%-ஆக இருந்த பாஜகவின் வாக்கு விகிதம், இந்தத் தேர்தலில் 37.5%-ஆக அதிகரித்திருப்பதுதான், காங்கிரஸ், பாஜக அல்லாத ஏனைய கட்சிகளின் வாக்கு விகிதம் சரிந்திருப்பதற்கு முக்கியமான காரணம். பாஜகவின் வாக்கு விகிதம் அல்லது செல்வாக்கு அதிகரித்திருப்பதற்குப் பின்னணி என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் இதற்கு அடிநீரோட்டமாக சில சமூக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைக் காண முடிகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசும்போது, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருக்கும் சில கருத்துகள் ஆழமான சிந்தனைக்குரியவை. தேர்தல் வெற்றிக்குப்  பிறகு அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் பார்வை குறித்து அவர் வலியுறுத்தியிருக்கிறார். குறிப்பாக, மதச்சார்பின்மை என்கிற பெயரால் சிறுபான்மையினர் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்றும், அந்த அச்சுறுத்தலில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டு, அவர்கள் மத்தியில் காணப்படும் பாஜக மீதான நம்பிக்கையின்மை அகற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருப்பது, பாஜகவின் புதிய பார்வை என்றுதான் சொல்ல வேண்டும்.
சிறுபான்மையினர் குறித்த பார்வை எப்படி இருந்தாலும், பாஜகவின் தேர்தல் வெற்றிக்கும், அதிகரித்த செல்வாக்குக்கும் ஜாதி அடிப்படையிலான சமூக மாற்றங்கள் முக்கியமான காரணம் என்று தெரிகிறது. அந்த வெற்றிக்கு சில வலுவான காரணங்கள் இருந்ததை இப்போதுதான் அரசியல் நோக்கர்கள் உணரத் தொடங்கி இருக்கிறார்கள்.
யாதவ், ஜாதவ் ஜாதியினரின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏனைய பிற்படுத்தப்பட்ட, பட்டியலினப் பிரிவுகளின் ஒட்டுமொத்த ஆதரவையும் பாஜக  பெற முடிந்ததன் விளைவுதான் ஹிந்தி பேசும் மாநிலங்களில் அந்தக் கட்சியின் அதிகரித்த செல்வாக்குக்குக் காரணம்.
எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அவசரச் சட்டம் கொண்டுவந்து நரேந்திர மோடி அரசுதான் தடுத்து நிறுத்தியது. இருந்தும்கூட தலித் மக்களின் ஆதரவை பாஜகவால் பெற முடியவில்லை. 
ஆனால், அந்த முடிவு ஏனைய ஜாதியினர் அனைவரையும் பாஜகவின் மீது ஆத்திரம் கொள்ள வைத்தது. குறிப்பாக, தலித்துகளுடன் நேரிடையான மோதலில் இருக்கும் இடைப்பட்ட, பிற்பட்ட வகுப்பினரின் ஆதரவையும், ஜாதி இந்துக்களின் ஆதரவையும் பாஜக இழக்கத் தொடங்கியது. அதன் விளைவுதான் ஆறு மாதங்களுக்கு முன்னர் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல்களில் அந்தக் கட்சி எதிர்கொண்ட பின்னடைவு.
பொருளாதாரத்தில் பின்தங்கிய இதர வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு அறிவித்ததன் மூலம், பாஜகவினர் மீது அதிருப்தியில் இருந்த ஜாதி இந்துக்களின் ஆதரவை பாஜகவால் திரும்பப் பெற முடிந்தது. பூணூல் அணிந்து கொண்டு தன்னை தத்தாத்ரேய கோத்திர பிராமணன் என்று ராகுல் காந்தி அடையாளம் காட்ட முற்பட்டது, பிராமணர்களையோ, ஜாதி இந்துக்களையோ கவரவில்லை என்பது மட்டுமல்ல, சிறுபான்மை மக்கள் மத்தியில் காங்கிரஸ் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியது. மென்மையான இந்துத்துவா கொள்கையை காங்கிரஸ் கடைப்பிடிக்கிறது என்கிற தோற்றத்தை அது ஏற்ப டுத்தியது.
மண்டல் கமிஷனால் உருவாக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் வாக்கு வங்கி என்பது ஒரு சில கட்சிகளின் தனிச் சொத்தாக இருந்தது மாறிவிட்டிருக்கிறது. சுதந்திர இந்திய வரலாற்றில் பிராமணர் அல்லாத ஒருவர் பிரதமராகத் தனது பதவிக் காலத்தை முழுமை செய்திருப்பது நரேந்திர மோடிதான் (மன்மோகன் சிங் இந்துவல்ல, சீக்கியர்). ஜாதியப் பார்வை இல்லாத, வளர்ச்சியை நோக்கி நகரும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் பிரதிநிதியாக நரேந்திர மோடி காட்சியளிப்பதேகூட, பாஜகவின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருக்கக்கூடும்.
பாஜகவின் வெற்றி, ஜாதிய அரசியலின் தோல்வியா அல்லது அடுத்தகட்ட நீட்சியா என்பதை அடுத்தடுத்த தேர்தல்கள் தீர்மானிக்கும்.
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/may/29/தோல்வியா-நீட்சியா-3160271.html
3159598 தலையங்கம் தீ...பரவக் கூடாது! ஆசிரியர் Tuesday, May 28, 2019 01:56 AM +0530 குஜராத் மாநிலம் சூரத் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்து ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அந்த தீ விபத்தில் மாணவர்கள் பலர் கொழுந்துவிட்டெரியும் தீப்பிழம்புகளுக்கு இடையில் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளப் பரிதவித்த காட்சி பலரது இதயத்தையும் உலுக்கியது. அதிருஷ்டசாலிகள் பலர் தப்பி உயிர் பிழைத்தனர். பதின்ம வயது இளைஞர்கள் பலர் தீக்கிரையாகினர். மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்ததாலும், மூச்சுத் திணறல் ஏற்பட்டதாலும் 22-க்கும் அதிகமான மாணவர்கள் உயிரிழந்திருக்கின்றனர்.
சூரத் நகரிலுள்ள சர்தானா பகுதியில் அமைந்த நான்கடுக்கு மாடி வணிக வளாகத்தில் இயங்கி வந்த தனியார் பயிற்சி மையத்தில் அந்த தீ விபத்து ஏற்பட்டது. அந்தத் தீ விபத்தை, விபத்து என்று ஒதுக்கிவிட முடியாது. ஏனென்றால், அந்தக் கட்டடத்தில் ஒரேயொரு மாடிக்குத்தான் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஏனைய இரண்டு மாடிகள் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருந்தன. 
கட்டட உரிமையாளருக்கு விதிமீறல் குறித்து பலமுறை எச்சரிக்கை அனுப்பப்பட்டதே தவிர,  விதிமுறை மீறல் குறித்து மாநகர நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தப் பிரச்னையில் மாநகர நிர்வாகம் கடும்  கண்டனத்துக்கு ஆளாகிறது. மாநகர அதிகாரிகளின் மெத்தனப் போக்கு மன்னிக்க முடியாத குற்றம். கடந்தாண்டுதான் சூரத் நகரில் இதேபோல இன்னொரு பயிற்சி மையத்தில் தீ விபத்து ஏற்பட்டு இரண்டு மாணவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அந்தச் சம்பவம் சூரத் மாநகரிலுள்ள ஏனைய கட்டடங்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை நிர்வாகத்துக்கு ஏற்படுத்தியிருக்க வேண்டும். 
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இதுபோலத் தொடர்ந்து தீ விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் தலைநகர் தில்லியிலுள்ள ஐந்து மாடி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 2017 டிசம்பரில் மும்பையிலுள்ள இரண்டு உணவு விடுதிகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் தீக்கிரையானார்கள். 50 பேர் கடுமையான 
தீக்காயங்களுடன் நூலிழையில் உயிர் தப்பினர். 2016-இல் ஒடிஸா தலைநகர் புவனேசுவரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் தீவிர சிகிச்சையில் இருந்த 19 நோயாளிகள் மரணித்தனர். 2010-இல் பெங்களூரில் அடுக்குமாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழக்க நேரிட்டது.
தமிழகத்தையே எடுத்துக்கொண்டால், 2004 ஜூலை 16-இல் நடந்த கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்தும், அதில் 7 வயதிலிருந்து 11 வயதுக்குட்பட்ட 94 குழந்தைகள் உடல் கருகி மாண்டதும், மாறா வடுவாக அனைவரது இதயத்திலும் நிலைத்துவிட்டிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில், அதிலும் குறிப்பாக சென்னை மாநகரில் தொடர்ந்து தீ விபத்துகள் ஏற்பட்டவண்ணம் இருக்கின்றன. பலர் உயிரிழக்கின்றனர். இது குறித்த வெள்ளை அறிக்கை வெளிக்கொணரப்படுமேயானால், நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்கள் மிகுந்த தர்மசங்கடத்துக்கு உள்ளாகும்.
கடந்த 2015-இல் மட்டும் இந்தியாவில் பொது இடங்களிலும் தனியார் வீடுகளிலும் ஏற்பட்ட தீ விபத்தில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை 17,700 என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 1997-இல் தில்லியிலுள்ள உபஹார் திரையரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 59 பேரும், 2004-இல் கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா ஆரம்பப் பள்ளியில் 
ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளும் இந்தியாவின் மனசாட்சியை உலுக்கியிருக்க வேண்டும். 
மத்திய - மாநில அரசுகளும் நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்களும் அக்கறையுடனும் பொறுப்புணர்வுடனும் தீ விபத்து பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்துச் செயல்பட்டிருக்க வேண்டும். 
அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதுடன் தீ விபத்துக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவில்லை என்பதைத் தலைக்குனிவுடன் நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். கீழமை நீதிமன்றங்களில் குற்றம் நிரூபிக்கப்பட்ட தில்லி உபஹார் திரையரங்க உரிமையாளர்களும்,  கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்குக் காரணமானவர்களும் உச்சநீதிமன்றத்தில் விடுதலை பெற்ற அவலத்தை என்னவென்று உரைப்பது?
தீ விபத்து பாதுகாப்பு குறித்து போதிய சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், அவை பின்பற்றப்படுவதில்லை. தீயணைப்புத் துறை அனுமதி வழங்கிய பிறகு தொடர்ந்து கால இடைவெளியில் ஆய்வு செய்வதில்லை. அனுமதி பெற்ற பிறகு கட்டட உரிமையாளர்களும் அதில் செயல்படும் கடைகள், விடுதிகள் போன்றவற்றின் உரிமையாளர்களும் அனுமதிக்கப்பட்ட வரைபடத்தில், அனுமதியில்லாமலேயே மாறுதல்களைச் செய்துகொள்கிறார்கள். 
அவை கண்காணிக்கப்படுவதில்லை. 
இந்தியாவில் 8,550 தீயணைப்பு நிலையங்கள் இருக்க வேண்டும். ஆனால், 2,000 தீயணைப்பு நிலையங்கள்தான் இருக்கின்றன. இதிலிருந்து எந்த அளவுக்குத் தீ விபத்து பாதுகாப்பு குறித்து அரசு முனைப்புக் காட்டுகிறது என்பது தெளிவாகிறது. 
இந்தப் பிரச்னைக்கு தீர்வு இல்லாமல் இல்லை. எந்தவோர் அடுக்குமாடிக் குடியிருப்போ, வணிக வளாகமோ, பொது இடமோ  அவை எல்லாமே தீ விபத்துக்கான காப்பீட்டைப் பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். அப்போதுதான் கட்டடம் கட்டுபவர்கள் பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக இருந்தால் காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீடு வழங்காது. 
இந்தச் சுலபமான வழிமுறையைக்கூட அரசுக்கு எடுத்துச்சொல்ல அதிகார வர்க்கம் ஏன் முன்வரவில்லை என்பதுதான் புரியவில்லை.
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/may/28/தீபரவக்-கூடாது-3159598.html
3159019 தலையங்கம் காங்கிரஸ், இனி..? ஆசிரியர் Monday, May 27, 2019 03:25 AM +0530 17-ஆவது மக்களவைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது ஆளும் பாஜகவின் வெற்றியைவிட காங்கிரஸ் கட்சி எதிர்கொண்ட பின்னடைவுதான் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனது 2014 எண்ணிக்கை பலத்தை இரட்டிப்பாக்கக்கூட முடியாத அவலநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது என்பது மிகப் பெரிய சோகம்.

2014-இல் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்த காங்கிரஸ் கட்சி, 19% வாக்குகளுடன் வெறும் 44 இடங்களில்தான் வெற்றி பெற்றது. இப்போது எட்டு இடங்கள் அதிகமாகப் பெற்றிருக்கிறது என்றாலும் தனது வாக்கு வீதத்தில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. பஞ்சாப், கேரளம், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களும் காங்கிரஸின் மானத்தைக் காப்பாற்றி இருக்கின்றன. ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தோல்வியடைந்திருப்பதிலிருந்து, எந்த அளவுக்கு காங்கிரஸ் தேசிய அளவில் வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். 

2014 மக்களவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்யும் பொறுப்பு மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும் இந்தியா முழுவதும் பயணித்து, காங்கிரஸ் தொண்டர்களையும், அரசியல் விமர்சகர்களையும் பொதுமக்களையும் சந்தித்து ஓர் அறிக்கை தயாரித்தார். அந்த அறிக்கை அப்போதைய தலைவர் சோனியா காந்தியிடம் தரப்பட்டது. அந்த அறிக்கை என்ன ஆனது, அதன் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி என்ன முடிவெடுத்தது என்பது குறித்து யாருக்கும் தெரியாது. ஆனால், 2014-இல் காங்கிரûஸத் தோல்விக்கு  வழிநடத்தியவர்கள், இப்போதும்கூட 2019-இல் கட்சியை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள். 

1967 முதல் காங்கிரஸ் தனது செல்வாக்கை இழந்து வருகிறது என்பதுதான் உண்மை. வங்கிகளை தேசியமயமாக்கல் போன்ற முற்போக்குக் கொள்கைகளும் கட்சி பிளவும் 1971-லும், ஜனதா ஆட்சியில் காணப்பட்ட குழப்பம் 1980-லும், இந்திரா காந்தியின் படுகொலை 1984-லும், ராஜீவ் காந்தியின் படுகொலை 1991-லும் காங்கிரஸூக்கு செயற்கையான சுவாசம் அளித்தன. தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸ் 1989 முதல் தனித்த பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் சக்தியை இழந்துவிட்டது. 2004-லும், 2009-லும் வலுவான கூட்டணியை அமைத்துக் கொண்டு மாநிலக் கட்சிகளின் தயவில், அவற்றின் விருப்பு வெறுப்புகளுக்கு அடிபணிந்து ஆட்சி அமைக்க முடிந்ததே தவிர, தன்னை வலுப்படுக்கொள்ள முடியவில்லை.

காங்கிரஸ் கட்சி வம்சாவளித் தலைமையின் உறைவிடமாக மாறிவிட்டிருக்கிறது என்பதை அதன் தலைவர் ராகுல் காந்தி சமீபத்திய தோல்விக்குப் பிறகுதான் புரிந்து கொண்டிருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்தும், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும், மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரமும் தங்களது வாரிசுகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைப்பதற்கும், அவர்கள் வெற்றி பெறுவதிலும் காட்டிய முனைப்பை கட்சியின் வெற்றிக்கு காட்டவில்லை என்கிற குற்றச்சாட்டையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த கோரிக்கைகள் ராகுல் காந்தியால் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பதிலிருந்து அவர் எந்த அளவுக்குப் பலவீனமான தலைவராக இருக்கிறார் என்பது வெளிப்படுகிறது.

எந்தவொரு கட்சியும் தன்னை மாற்றிக்கொள்ள விரும்பும்போது, முதல் கட்டமாக தலைமை மாற்றத்துக்கு வழிகோல வேண்டும். ஆறு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது குறைந்தபட்சம் பழைய தலைவர்களான கமல்நாத்தையும், அசோக் கெலாட்டையும் அகற்றிவிட்டு ஜோதிராதித்ய சிந்தியாவையும், சச்சின் பைலட்டையும் அந்த மாநிலங்களின் முதல்வர்களாக தேர்வு செய்திருந்தால், ராகுல் காந்தியின் தலைமையில் மாற்றம் ஏற்படுகிறது என்கிற தோற்றத்தையாவது ஏற்படுத்தி இருக்க முடியும். 

காங்கிரஸின் பிரசாரம் இந்த முறை மிகவும் நன்றாகவே திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் காங்கிரஸூம் அதன் தலைவர் ராகுல் காந்தியும் மக்கள் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பிரதமர் நரேந்திர மோடியைத் தாக்குவதில் முனைப்புக் காட்டியது மிகப் பெரிய அணுகுமுறைத் தவறு. 

திமுக தலைவர் ஸ்டாலினைத் தவிர வேறு யாரும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழியவில்லை, முன்மொழியத் தயாராகவும் இல்லை. காங்கிரஸூம் பல்வேறு மாநிலக் கட்சிகளுடன் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு 2004 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி போல ஒரு வலுவான கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. நரேந்திர மோடி என்கிற பாஜகவின் வலிமையான தலைமைக்கு ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் நிகரல்ல என்கிற பலவீனத்துடன்தான் 2019 மக்களவைத் தேர்தலின் பிரசாரம் நடைபெற்றது. 

காங்கிரஸூக்கு இப்போது ஒன்றிரண்டு மாநிலங்களைத் தவிர, இந்தியாவின் எந்தப் பகுதியிலும் அமைப்பு ரீதியான பலம் கிடையாது. 2004 முதல் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோதும், கடந்த ஐந்தாண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதும் கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்த காங்கிரஸ் தலைமை எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. கட்சித் தலைவர்களும் சரி, வாரிசு அடிப்படையில் கட்சித் தலைமையால் ஆசிர்வதிக்கப்படுகிறார்கள். புதியவர்களுக்கு இடமில்லை என்பதுதான் உண்மை நிலை. 

காங்கிரஸில் தலைமுறை மாற்றம் நிகழ்கிறதே தவிர, தலைமை மாற்றம் ஏற்படுவதில்லை என்கிற நிலைமை தொடர்ந்தால், வீழ்ச்சி தொடருமே தவிர, எழுச்சி ஏற்படப்போவதில்லை. இது காங்கிரஸூக்கு மட்டுமல்ல, குடும்ப அரசியலைப் பின்பற்றும் எல்லா கட்சிகளுக்குமே பொருந்தும்!
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/may/27/காங்கிரஸ்-இனி-3159019.html
3157882 தலையங்கம் வெற்றியில் தோல்வி; தோல்வியில் வெற்றி! ஆசிரியர் Saturday, May 25, 2019 02:39 AM +0530 மக்களவைத் தேர்தல் முடிவுகள் தமிழகத்தைப் பொருத்தவரை எந்தவித மாற்றத்தையோ, எதிர்பாராத திருப்பத்தையோ ஏற்படுத்திவிடவில்லை. இந்தியாவின் ஏனைய பகுதிகளைப் போலல்லாமல், தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை வலுவாகவே இருக்கிறது என்பதன் வெளிப்பாடாக வேண்டுமானால் திமுக அணியின் வெற்றியைக் குறிப்பிடலாம்.
திமுக தலைமையிலான அணி தேர்தல் நடந்த 38 இடங்களில், 37 இடங்களைக் கைப்பற்றியதுகூட வியப்பை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால், 1967 முதலே தமிழகத்தைப் பொருத்தவரை ஏதாவதொரு அணிக்குச் சாதகமாகத்தான் தேர்தல் முடிவுகள் அமைந்து வந்திருக்கின்றனவே தவிர, வெற்றி வாய்ப்பு சரிபாதியாகவோ, சிதறியோ அமைந்ததே இல்லை. 
2004 தேர்தலில் திமுக கூட்டணி அத்தனை இடங்களையும் (39) வென்றதை, இப்போதைய வெற்றியுடன் ஒப்பிட முடியாது. ஏனென்றால், 2004-இல் திமுக தனது 39 இடங்களுடன் மத்திய ஆட்சியில் இடம் பெற முடிந்தது. 
2014-இல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்றதுடனும் ஒப்பிடவும் முடியவில்லை. 2014-இல் அதிமுகவால் மத்திய ஆட்சியில் இடம்பெற முடியவில்லை என்றாலும், மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. இப்போது திமுக கூட்டணி 37 இடங்களில்  வெற்றி பெற்று எதிர்க்கட்சியில் அமர முடிந்திருக்கிறதே தவிர, அந்த வெற்றியால் எந்தவிதப் பயனும் இருக்கப் போவதில்லை என்பதுதான் உண்மை. 
இடைத்தேர்தல் நடந்த சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதைப்போல திமுக வெற்றி பெற்றிருந்தால், தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும்கூட ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கக் கூடும். அதற்கு வாய்ப்பில்லாமல், திமுகவால் 13 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்திருக்கிறது. 
அண்டை மாநிலமான கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அடைந்திருக்கும் மிகப் பெரிய வெற்றிக்கு ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸூக்குக் காணப்பட்ட வரவேற்புதான் காரணம் என்று கூறப்படுகிறது. அதேபோல, தமிழகத்திலும் காங்கிரஸூக்கு ஆதரவாக இருந்த மனநிலை திமுகவின் பெரும் வெற்றிக்குக் காரணம் என்று காங்கிரஸார் கருதினால் தவறு காண முடியாது. 
தமிழக தேர்தல் முடிவுகளைப் பொருத்தவரை இடதுசாரிகள் மகிழ்ச்சி அடைய காரணம் இருக்கிறது. மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டு, ஆட்சியில் இருக்கும் கேரளத்திலும் ஓர் இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கும் நிலையில், 17-ஆவது மக்களவைக்கு நான்கு இடதுசாரி உறுப்பினர்களை தமிழகம் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறது. 
சட்டப்பேரவை இடைத் தேர்தல்களில் அதிமுக 9 இடங்களில் வெற்றியையும், ஏனைய 13 தொகுதிகளில் இரண்டாவது இடத்தையும் பெற்றிருக்கிறது. மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியின் பின்னடைவுக்கு பாஜகவுக்கு எதிராகக் காணப்பட்ட அலை முக்கியமான காரணம் என்று தெரிகிறது. நியூட்ரினோ திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், கொங்கு மண்டல விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் அமையும் கெயில் எரிவாயுக் குழாய்கள் திட்டம், நீட் தேர்வு, ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தமிழக வாக்காளர்கள் மத்தியில், பாஜகவுக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தியிருப்பது தெளிவாகிறது. நீட் தேர்வு, ஸ்டெர்லைட் பிரச்னை, கெயில் எரிவாயுக் குழாய் திட்டம் போன்றவற்றுக்கு நீதிமன்றத் தீர்ப்புகள்தான் காரணம் என்றாலும்கூட, அந்தத் தீர்ப்புகளை பாஜகவினர் நியாயப்படுத்த முற்பட்டதன் விளைவுதான் பாஜக சார்ந்த ஒட்டுமொத்த அதிமுக அணிக்கும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
மக்களவைத் தேர்தலில் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக மிகப் பெரிய பின்னடைவை எதிர்கொண்டாலும், அந்தக் கூட்டணி மகிழ்ச்சி அடைய நிறையவே காரணங்கள் இருக்கின்றன. 38 மக்களவைத் தொகுதிகளில் ஓர் இடத்தில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது என்றாலும்கூட, 37 இடங்களில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி செயலிழந்துபோய் மக்களவையில் எதிர்க்கட்சியில் அமர்கிறது என்பதேகூட ஆளும்கட்சிக்கு மிகப் பெரிய ஆறுதல். 
சட்டப்பேரவை இடைத் தேர்தல்களில் 9 இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம் ஆளும்கட்சி பெரும்பான்மை பலம் பெற்று விட்டிருக்கிறது. ஆட்சிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த உறுப்பினர்களேகூட இனிமேல் தங்கள் நிலையை உணரத் தலைப்படுவார்கள். தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இழப்பதற்கு இனிமேல் தயாராக மாட்டார்கள்.
ஆளும் கட்சிக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றி, பிரிந்து போன டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சந்தித்திருக்கும் மிகப் பெரிய தோல்வியாகும். மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வைப்புத் தொகையை இழந்திருப்பது மட்டுமல்ல, பல இடங்களில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தைவிடவும் குறைவான வாக்குகளைத்தான் அந்தக் கட்சியால் பெற முடிந்திருக்கிறது. விலகிப்போன 
அதிமுக தொண்டர்கள் மீண்டும் கட்சியில் இணைவார்கள் என்பதால், அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது பழைய பலத்துடன் ஆளும் அதிமுக களமிறங்க முடியும் என்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய ஆறுதல். 
38-இல் 37 இடங்களில் வெற்றி பெற்றும் பயனில்லாத நிலையில் திமுக. மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்தாலும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்ட மகிழ்ச்சியில் ஆளும் அதிமுக. இதுதான் 2019 தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும் செய்தி.

]]>
https://www.dinamani.com/editorial/2019/may/25/வெற்றியில்-தோல்வி-தோல்வியில்-வெற்றி-3157882.html
3157433 தலையங்கம் மீண்டும் மோடி ஆட்சி... வாழ்த்துகள்! ஆசிரியர் Friday, May 24, 2019 03:49 AM +0530 இந்திய ஜனநாயகம் வலுவானதாக இருக்கிறது என்பதன் வெளிப்பாடுதான் 2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள். 
சுதந்திர இந்திய வரலாற்றில், பண்டித ஜவாஹர்லால் நேருவிற்கும், இந்திரா காந்திக்கும் பிறகு தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் பிரதமர் என்கிற தனிச்சிறப்பை பெறுகிறார் மோடி. சமூக, பொருளாதாரப் பிரச்னைகளைப் பின்தள்ளி, பாஜக முன்வைத்த தேசத்தின் பாதுகாப்புக்கு வாக்காளர்கள் முன்னுரிமை அளித்திருக்கிறார்கள் என்பதுதான் தேர்தல் முடிவுகள் தெளிவாக வெளிப்படுத்தும் செய்தி. 
தேசிய ஜனநாயகக் கூட்டணி  மிகப் பெரிய வெற்றியை அடைந்திருப்பதற்கு, பாஜக மிகவும் புத்திசாலித்தனமாக ஏற்படுத்திக் கொண்ட கூட்டணியும் ஒரு காரணம். பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட செல்வாக்கும், மக்கள் அவரது தலைமையின் மீது வைத்திருக்கும் அசாத்திய நம்பிக்கையும்தான் அடிப்படைக் காரணங்கள் என்றாலும்கூட, கருத்து வேறுபாடுகளை அகற்றித் தனது கூட்டணிக் கட்சிகளை பாஜக தலைமை அரவணைத்துக் கொண்டதும், அந்தக் கூட்டணியின் மிகப் பெரிய வெற்றிக்கு முக்கியமான காரணம்.
பிகாரில் ஐக்கிய ஜனதா தளத்துடனும், மகாராஷ்டிரத்தில் சிவசேனையுடனும் இருந்த கருத்து வேறுபாடுகளை அகற்றி, சுமுகமாகக் கூட்டணியை வலுப்படுத்திக் கொண்ட பாஜக தலைவர் அமித் ஷாவின் ராஜதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றி இது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. கடந்த 2014 தேர்தலில் வெற்றி பெற்ற அத்தனை இடங்களையும் தக்க வைத்துக்கொள்ள முடியாது என்பதை உணர்ந்து, ஒடிஸாவிலும், மேற்கு வங்கத்திலும் அதை ஈடுகட்டும் விதத்தில் பாஜகவை வளர்த்ததும், பல இடங்களில் வெற்றி பெற்றதும் பிரமிக்க வைக்கும் அரசியல் சாதுர்யம் என்றுதான் கூற வேண்டும்.
கேரள மாநிலம் வயநாட்டிலும் போட்டியிட்டதால்தான் அமேதியில் தோல்வியடைந்த ராகுல் காந்தி மக்களவையில் இடம் பெற முடிந்திருக்கிறது. மூன்றிலக்க இடங்களைப் பெற முடியாவிட்டாலும், தனது எண்ணிக்கை பலத்தை இரட்டிப்பாக்கும் என்று எதிர்பார்த்த காங்கிரஸ், கடந்த முறையைவிட ஒருசில இடங்கள்தான் அதிகம் பெற்றிருக்கிறது. அதுவும்கூட, தமிழகம், கேரளத்தின் தயவால்.   இடதுசாரிகள் இரண்டிலக்க எண்ணிக்கையைத் தொடவில்லை என்பது மட்டுமல்ல, விரல் விட்டு எண்ணுமளவில் சுருங்கிப் போய்விட்டார்கள்.
சில வாரங்களுக்கு முன்பே ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால், பாஜகவின் வெற்றியை எதிர்பார்த்திருந்தார் என்றுதான் தோன்றுகிறது. "பாஜகவும் நரேந்திர மோடியும் மீண்டும் வெற்றி பெற்றால் அதற்குக் காங்கிரஸ்தான் காரணமாக இருக்கும்' என்று அவர் வெளியிட்டிருந்த கருத்து உண்மையாகிவிட்டிருக்கிறது. எந்தவொரு மாநிலத்திலும் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறிவிடாமல் கூட்டணி அமைக்கத் தவறியது காங்கிரஸ் கட்சியின் மிகப் பெரிய தவறு.
எதிர்க்கட்சியில் உள்ள திமுகவைத் தவிர, எல்லா மாநிலக்  கட்சிகளும் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலைமையை எதிர்பார்த்தன. அந்தச் சூழலில் தாங்களே பிரதமராகும் கனவில் மம்தா பானர்ஜியும், மாயாவதியும் மட்டுமல்ல, சந்திரபாபு நாயுடுவும், சந்திரசேகர் ராவும் கூட வலம்வரத் தொடங்கினர். எந்தவொரு எதிர்க்கட்சியும், திமுக முன்மொழிந்த ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக வழிமொழியத் தயாராக இருக்கவில்லை. காங்கிரஸ் கூட்டணியிலேயே பல தலைவர்கள் அதற்குத் தயாராக இருந்தார்களா என்று தெரியவில்லை.
பிரதமர் நரேந்திர மோடியைத் "திருடன்' என்று மீண்டும் மீண்டும் ராகுல் காந்தி வர்ணித்ததுகூட காங்கிரஸூக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கக் கூடும். புல்வாமாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலும், அதைத் தொடர்ந்து இந்திய ராணுவம் நடத்திய பாலாகோட் துல்லியத் தாக்குதலும் மக்கள் மத்தியில் தேசத்தின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தி இருந்தன. இந்தப் பின்னணியில், ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதில் முறைகேடு என்று கூறி பிரதமர் நரேந்திர மோடியின் நேர்மை குறித்துக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டு, வாக்காளர்களால் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டது மட்டுமல்ல, காங்கிரûஸயும் சேர்த்தே நிராகரிக்க வைத்திருக்கிறது.
2014 மக்களவைத் தேர்தலில், ஊழலற்ற அரசு, அனைவருக்குமான வளர்ச்சி, முந்தைய மன்மோகன் சிங் அரசின் குறைபாடுகள் ஆகியவற்றை முன்வைத்து பாஜக தனது தேர்தல் பிரசாரத்தை அமைத்து  வெற்றி பெற்றது. இந்த முறை, பிரதமர் மோடியை மட்டுமே முன்னிறுத்தி, மக்களவைத் தேர்தலை ஏறத்தாழ ஒரு அதிபர் தேர்தலாகவே மாற்றிவிட்டது. 
பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டபோது, அவருக்கு மாற்றாக எதிர்க்கட்சியால் யாரையும் முன்னிறுத்த முடியவில்லை. மோடியை அகற்றிவிட்டுப் பிரதமர் நாற்காலியில் மாயாவதியையும், மம்தா பானர்ஜியையும், சரத்பவாரையும், சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர் ராவையும் ஒப்பிட்டுப் பார்த்த இந்திய வாக்காளர்கள், புத்திசாலித்தனமாக மீண்டும் பிரதமர் மோடியையே தேர்ந்தெடுத்திருப்பதில் வியப்பென்ன இருக்கிறது?
பதினேழாவது மக்களவைத் தேர்தல், வலுவான இந்தியாவைக் கட்டமைக்க இன்னொரு வாய்ப்பை வழங்கிப் பிரதமர் நரேந்திர மோடியை முன்னிலும் வலுவான பிரதமராக்கி இருக்கிறது. ஜாதிக் கட்சிகளை ஓரம்கட்டி, தேசியப் பார்வையுடன் இந்திய வாக்காளர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்களித்திருப்பது "ஸப்கா சாத், ஸப்கா விகாஸ்' (அனைவரும் இணைந்து அனைவரின் வளர்ச்சிக்காக) என்கிற அவரது அறைகூவல் குறித்த எதிர்பார்ப்பில்தான்.

]]>
https://www.dinamani.com/editorial/2019/may/24/மீண்டும்-மோடி-ஆட்சி-வாழ்த்துகள்-3157433.html
3156741 தலையங்கம் தேர்தலும் ஆணையமும்! ஆசிரியர் Thursday, May 23, 2019 01:36 AM +0530
17-ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்து இன்று வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன. வரையறுக்கப்பட்ட காலஇடைவெளியில் தவறாமல் தேர்தல்கள் நடத்தப்படுவதுதான் ஜனநாயகத் தேர்தல் முறையின் அடிப்படை. தற்போது நடந்து முடிந்திருக்கும் 17-ஆவது மக்களவைத் தேர்தல் வரையில், தேர்தல் மூலம் நாடாளுமன்ற, சட்டப்பேரவைகளைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்லாமல், தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் ஆட்சி மாற்றத்தையும் நம்மால் ஏற்படுத்த முடிந்திருக்கிறது. 
தேசிய அளவிலும் சரி, மாநில அளவிலும் சரி பெரும்பாலான தொகுதிகளில் அரசியல் கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. இது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை எதிர்க்க முடியும் என்பதையும், ஆட்சியாளர்களும் எதிர்க்கட்சியினரும் தங்களது கருத்துகளை மக்கள் மன்றத்தில் எடுத்துரைத்து அதன் அடிப்படையில் போட்டியிட முடியும் என்பதையும் வெளிப்படுத்துகின்றன. இதற்குப் பெயர்தானே ஜனநாயகம்.
அதே நேரத்தில் தரம் குறைந்த தாக்குதல்கள், முகம் சுளிக்க வைக்கும் பரப்புரைகள் ஆகியவற்றால் ஜனநாயக நாகரிகத்தை தேர்தல் பிரசாரம் குலைத்ததையும் சந்தித்தோம். மத ரீதியிலான, ஜாதி ரீதியிலான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டதைப் பார்த்தோம். வேலையில்லாத் திண்டாட்டம், வேளாண் இடர், வேளாண்மை சார்ந்த சமூகத்திலிருந்து தொழில் துறை சார்ந்த சமூகமாக மாறிவரும் போக்கு, நகரமயமாதல் உள்ளிட்டவை பிரசாரத்தில் முக்கியத்துவம் பெறாமல் போனதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. 
முன்னெப்போதும் இல்லாத வகையில் 17-ஆவது மக்களவைக்கான தேர்தலில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு விமர்சிக்கப்படுவது வருத்தமளிக்கிறது. சுதந்திரமாகச் செயல்படும் அமைப்பு என்கிற மரியாதை தேர்தல் ஆணையத்துக்கு உண்டு. தேர்தல் ஆணையத்தின் சில முடிவுகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக இருந்தது போன்ற தோற்றத்தைத் தவிர்த்திருக்க வேண்டும். ஏழு கட்டங்களாக மக்களவைக்கான வாக்குப்பதிவு நடத்தப்பட்டதும், முக்கியமாக உத்தரப் பிரதேசம், பிகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பலகட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டதும் பிரதமரின் பிரசாரத்துக்கு உதவுவதாக அமைந்தது என்கிற குற்றச்சாட்டை எழுப்பியிருக்கிறது. 
கடந்த ஏப்ரல் 11 முதல் மே 19 வரை பல கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போதெல்லாம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் குறைபாடு குறித்து அங்கொன்றும் இங்கொன்றுமாக சில செயல்பாட்டுக் குறைகள் காணப்பட்டனவே தவிர, பெரும்பாலான இயந்திரங்கள் குறித்து பரவலான குற்றச்சாட்டு எதுவும் எழவில்லை. 
ஒருசில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படவில்லை. அவை உடனடியாக மாற்றப்பட்டன. விரல் விட்டு எண்ணும் அளவிலான வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச் சீட்டு செயல்படவில்லை. அந்த வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்கு ஆணையம் உத்தரவிட்டது. 17.4 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்போது அவற்றில் சில செயல்படாமல் இருப்பதைக் குறை கூறுவது தவறு.
ஏழு கட்டத் தேர்தல் முடிந்த நிலையில்தான், எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த அச்சத்தை எழுப்ப முற்பட்டிருக்கின்றன. அதுவும்கூட, வாக்குக் கணிப்பு முடிவுகள் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக வெளிவந்தது முதல், எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை முன்னிறுத்தி விமர்சிக்க முற்பட்டிருப்பது நியாயமான அச்சத்தாலா அல்லது தோல்வி பயத்தின் வெளிப்பாடா? 
தொகுதிக்கு ஐந்து வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச் சீட்டுகளை எண்ண உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஒப்புகைச் சீட்டுகளை எண்ணிய பிறகே, ஏனைய வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 
நடத்தப்பட வேண்டும் என்கிற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்திருக்கிறது. இதுபோன்ற நிர்வாக நடைமுறைகளில் முடிவெடுக்கும் உரிமை ஆணையத்திடம் இருப்பதுதான் சரியாக இருக்கும்.
தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதும், அது ஊடக வெளிச்சம் பெற்றிருப்பதும் இந்திய ஜனநாயகத்துக்கு வலு சேர்ப்பதாக இல்லை. தேர்தல் ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களில் ஒருவர் கருத்து வேறுபாடு தெரிவிப்பதில் தவறும் இல்லை, வியப்பும் இல்லை. ஒருவர் மட்டுமே தேர்தல் ஆணையராக இருந்த நிலைமையை மாற்றி, தலைமைத் தேர்தல் ஆணையரின் தலைமையில் மூன்று பேர் கொண்ட தேர்தல் ஆணையம் ஏற்படுத்தப்பட்டிருப்பதே, கருத்து வேறுபாடுகள் விவாதிக்கப்பட்டு பெரும்பான்மை முடிவின்படி முடிவெடுக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான். 
பிரதமர் குறித்த தேர்தல் நடத்தை விதிமீறல் குற்றச்சாட்டுகளில் பெரும்பான்மை முடிவின்படி, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா முடிவெடுத்திருக்கிறார். இந்த நிர்வாக முடிவு குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், கேள்வி எழுப்பி மாற்றுக் கருத்து குறித்துத் தெரிந்துகொள்ள முடியும். 
தேர்தல் ஆணையம் எடுக்கும் ஒவ்வொரு நிர்வாக முடிவிலும், ஆணையர்களுக்கு இடையே நிலவிய கருத்து வேறுபாடுகளை ஊடகங்களிடம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை அது குலைக்கக்கூடும்.
தேர்தல் முடிவுகள் ஒருபுறமிருக்க, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்தும், தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் குறித்தும் விமர்சனங்கள் எழுந்திருப்பது இந்திய ஜனநாயகத்துக்கு வலு சேர்க்காது.
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/may/23/தேர்தலும்-ஆணையமும்-3156741.html
3156027 தலையங்கம் மெய்ப்பொருள் காண்பது அறிவு! ஆசிரியர் Wednesday, May 22, 2019 01:50 AM +0530
இந்தியத் தேர்தல் முறை குறித்தும், தேர்தலுக்காக அரசும், வேட்பாளர்களும் கோடிக்கணக்கில் செலவிடும் பணம் குறித்துச் சிந்திக்கவும், கணக்கிடவும் முற்பட்டால் தலை சுற்றுகிறது. கணக்கில் வராமல் எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்பது வெளியில் வரப்போவது இல்லை என்பதால், 2019 மக்களவைத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் செலவழித்தது எவ்வளவு என்பது குறித்த உண்மையான விவரம் வெளிவரவே போவதில்லை. கடந்த 39 நாள்கள் ஏழு கட்டத் தேர்தல் பிரசாரத்துக்காக, போட்டியிட்ட அரசியல் கட்சிகளாலும், வேட்பாளர்களாலும் செய்யப்பட்டிருக்கும் செலவு ரூ.50,000 கோடியைத் தாண்டும் என்பது மட்டும் நிச்சயம். 
1952-இல் நடந்த இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் 489 மக்களவைத் தொகுதிகளுக்கு 1,849 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அன்றைய மக்கள்தொகையான 36 கோடியில் சுமார் 17.4 கோடி பேர் வாக்களித்தனர். முதல் மூன்று பொதுத் தேர்தல்களில் அரசுக்கான செலவு ரூ.10 கோடிக்குள் அடங்கிவிட்டது. 
தேர்தல் ஆணையத்தின் கணக்குப்படி 1952-இல் தேர்தல் நடத்த வாக்காளர் ஒருவருக்கு 60 காசுகள் செலவாகியிருக்கிறது. இப்போது தேர்தல் நடத்துவதற்கான செலவினம் என்பது கட்டுக்கடங்காமல் போயிருப்பது மட்டுமல்லாமல், அதைக் கட்டுப்படுத்துவது என்பது இயலாத ஒன்றாகவும் மாறிவிட்டிருக்கிறது.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்கான அரசின் செலவு சுமார் ரூ.3,870 கோடி என்று தெரிகிறது. இது 2009-இல் நடந்த 15-ஆவது மக்களவைத் தேர்தலுக்கான அரசின் அதிகாரப்பூர்வ செலவைவிட மூன்று மடங்கு அதிகம். 
நடைபெற்ற 2019 மக்களவைத் தேர்தலில் 543 மக்களவை இடங்களுக்கு 8,049 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 130 கோடி மக்கள்தொகையில், 90 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் 
வாக்களிக்கும் தகுதி பெற்றவர்கள். ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் வாக்காளர்களின் எண்ணிக்கை பல லட்சம் அதிகரித்து விட்டிருக்கும் நிலையில், தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ செலவும் அதிகரித்திருப்பதில் வியப்பில்லை.
58 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட சட்ட விதிமுறை களின் அடிப்படையில் மக்களவைக்கும், சட்டப்பேரவைகளுக்கும் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவினங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்றாலும்கூட, எதார்த்த நிலைமையின் அடிப்படையில் அவை ஏற்படுத்தப்படவில்லை என்பதுதான்  உண்மை. தேர்தலுக்கான அரசுச் செலவினங்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடோ, வரைமுறையோ இல்லாமல் இருக்கும்போது, வேட்பாளர்களின் செலவுகளுக்கு நடைமுறைக்கு ஒவ்வாத வகையில் கட்டுப்பாடு விதித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. அதனால்தான் வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் மிகப் பெரிய அளவில் கணக்கில் வராத செலவுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள். 
தேர்தல் நடைமுறை விதிகள் 1961-இன் சட்டப்பிரிவு 90-இன் கீழ் வேட்பாளரின் அதிகபட்ச தேர்தல் செலவு குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன்படி, வேட்பாளர் போட்டியிடும் மாநிலங்களுக்கு ஏற்ப தேர்தல் செலவுக்கான அளவு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. பெரிய மாநிலங்களில் ரூ.70 லட்சமும், சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ரூ.54 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன.
அதனடிப்படையில் பார்த்தால், நடைபெற்ற 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 8,049 வேட்பாளர்களின் மொத்த செலவு ரூ.5,600 கோடியாக இருக்கும். இது வெறும் புள்ளிவிவரமாக இருக்குமே தவிர, உண்மையில் செலவழிக்கப்பட்ட தொகையின் சிறு பகுதியாகத்தான் இருக்கும் என்பதை நாம் உணர வேண்டும். 
சராசரியாக ஒரு மக்களவைத் தொகுதியில் 15 லட்சம் வாக்காளர்கள் இருக்கும் நிலையில், வாக்காளர் ஒருவருக்கு ரூ.5 என்கிற அளவில்தான் மொத்த பிரசார காலத்தில் ஒருவேட்பாளர் செலவு செய்கிறார் என்பதை நம்பவா முடியும்? வாக்காளர்களுக்கு ரூ.200-லிருந்து ரூ.5,000 வரை பணம் கொடுக்கப்படுகிறது என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுவிட்ட நிலையில், தேர்தல் நடைமுறை விதிகள் 1961 மீறப்படுவதற்குத்தானே தவிர, கடைப்பிடிப்பதற்கானதல்ல என்பது தெளிவாகிறது.
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வாகனங்களுக்காக 34%, பிரசார சாதனங்களுக்காக 23%, பேரணிகளுக்காக 19%, ஊடக விளம்பரத்திற்காக 7%, பதாகை, துண்டுப் பிரசுரங்கள் ஆகியவற்றுக்காக 4%, வேட்பாளர்களின் களப்பிரசாரத்துக்காக 3% செலவிடலாம். ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தல் முடிந்ததும் தங்களது தேர்தல் செலவுகளை பட்டயக் கணக்காளரின் மூலம் முறைப்படுத்தித் தாக்கல் செய்கிறார்கள். தாக்கல் செய்யப்படும் கணக்குகள் வெறும் கண்துடைப்பு, பொய்யானவை என்பது தேர்தல் அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும்.
போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களில் ஒருசிலர் தவிர பெரும்பாலோர் கோடீஸ்வரர்கள். வாக்குக்கு நோட்டு என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது, இப்போது அங்கிங்கெனாதபடி எங்கும் பரவிவிட்ட நிலையில், நமது தேர்தல் முறையிலேயே நாணயமின்மையும், திருட்டுத்தனமும், கருப்புப்பணமும், ஊழலும், கையூட்டும் பின்னிப்பிணைந்து விட்டிருக்கும் சூழல் காணப்படுகிறது. 
நடந்து முடிந்திருக்கும் மக்களவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவு வேட்பாளர்கள் பணத்தை வாரி இறைத்திருக்கிறார்கள். அரசியல் கட்சிகள் அதை ஊக்குவித்திருக்கின்றன. இந்த நிலையில், தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்கள் நாடாளுமன்றத்தில் ஊழலுக்கு எதிராகப் போராடுவார்கள் என்கிற நம்பிக்கையுடன் தேர்தல் முடிவுக்குக் காத்திருப்போம்!
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/may/22/மெய்ப்பொருள்-காண்பது-அறிவு-3156027.html
3155477 தலையங்கம் தவறான சிகிச்சை! ஆசிரியர் Tuesday, May 21, 2019 05:40 AM +0530 தரமான கல்வியைப் போலவே, தரமான மருத்துவ சிகிச்சை என்பதும் நடுத்தர வர்க்கத்தினருக்கும், கீழ்த்தட்டு மக்களுக்கும் எட்டாக்கனியாகி வருகிறது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்தியர்களில் பெரும்பான்மை மக்கள் கடனாளிகளாவதும், வறுமையில் தள்ளப்படுவதும் மருத்துவச் செலவுகளால்தான் என்று பல்வேறு ஆய்வுகள் புள்ளிவிவரங்களுடன் உறுதிப்படுத்துகின்றன.  

கடந்த ஆண்டு சுதந்திர தின விழா உரையில் பிரதமர் நரேந்திர மோடி "ஆயுஷ்மான் பாரத்' என்கிற தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்தை அறிவித்தபோது அதை மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் ஒட்டுமொத்த இந்தியாவே போற்றி வரவேற்றது. வறுமைக் கோட்டுக்குக் கீழேயுள்ள நகர்ப்புறத் தொழிலாளர்கள், கிராமப்புற மக்கள் ஆகியோரில் 10 கோடி குடும்பங்களை சமூக, பொருளாதார, ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கின் அடிப்படையில் அடையாளம் கண்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டொன்றுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்குவது என்பதுதான் "ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின் நோக்கம். வேறு எந்த நாட்டிலும் இந்த அளவிலான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்படவில்லை என்று உலகமே வியந்து பாராட்டியது. 

நரேந்திர மோடி அரசின் "எண்ம இந்தியா' திட்டம் காரணமாக தகவல் தொழில்நுட்பப் பயன்பாடு "ஆயுஷ்மான் பாரத்' திட்டச் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவுக்கு அத்தியாவசியமான நல்லதொரு திட்டம் அறிவிக்கப்பட்டது என்றாலும்கூட, அந்தத் திட்டம் எதிர்பார்த்ததுபோல செயல்படவில்லை என்பதற்கு மிக முக்கியமான காரணம், வெளிப்படைத்தன்மையுள்ள கலந்தாலோசனையின் அடிப்படையில் மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயிக்கப்படாததும், அரசு பொது மருத்துவமனைகளின் கட்டமைப்பு வசதிகளும், தரமும், பொறுப்புணர்வும் உறுதிப்படுத்தப்படாததும் என்பது வெளிப்படை. இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் இடையே பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது என்பது பூதாகரமாக வெடிக்கக் காத்திருக்கும் மிகப் பெரிய பிரச்னை. அதன் தொடக்கம்தான் மகாராஷ்டிர மாநிலத்தில் வெளிப்பட்டிருக்கும் அதிருப்தி. 

மகாராஷ்டிர அரசின், "மகாத்மா ஜோதிபா பூலே ஜன ஆரோக்கிய யோஜனா' என்பது, தமிழகத்தின் முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் போன்றது. இந்தத் திட்டத்தின் மூலம், 2.25 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு மகாராஷ்டிர அரசால் மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. பல தனியார் மருத்துவமனைகள் புற்றுநோய் சிகிச்சையில் இந்தத் திட்டத்தை தவறாகப் பயன்படுத்துகின்றன என்று கூறி நூற்றுக்கும் அதிகமான கட்டணக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. 

இந்தப் பிரச்னையில் அரசையோ, தனியார் மருத்துவமனைகளையோ குறிப்பிட்டு குற்றஞ்சாட்டிவிட முடியவில்லை. புற்றுநோய் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் கதிரியக்க சிகிச்சை என்கிற பெயரில் அவர்களது காப்பீட்டுத் தொகை முழுவதையும் தனியார் மருத்துவமனைகள் வசூலித்து விடுகின்றன என்பது அரசுத் தரப்பு குற்றச்சாட்டு. தங்களைக் குறைந்த கட்டணத்திலான, காலாவாதியான மருத்துவ சிகிச்சை முறையைக் கையாள அரசு வற்புறுத்துவதாக மருத்துவமனைகள் குற்றம்சாட்டுகின்றன. 

அரசின் காப்பீட்டுத் திட்டத்தைப் பயன்படுத்தி பல தனியார் மருத்துவமனைகள் தங்களது முதலீட்டை மீட்டெடுக்க முயற்சிக்கின்றன என்றும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் கோரப்படும் பெரும்பாலான இழப்பீடுகள் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சையாகவே இருக்கின்றன என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், தனியார் மருத்துவமனைகளுக்கும்-காப்பீட்டு நிறுவனங்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பாளர்கள் (டிபிஏ) செயல்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கும் சிகிச்சை முறை குறித்துத் தெளிவுபடுத்தும்படி வற்புறுத்துவதுடன், புற்று நோயாளிகளுக்கு எந்தவித சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது வரை காப்பீட்டுத் தொகையை அனுமதிப்பதற்கு முன்னால் ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை வழங்க முற்படுகிறார்கள் என்பது தனியார் மருத்துவமனைகளின் குற்றச்சாட்டு. தேவையில்லாமல் கதிரியக்க சிகிச்சை வழங்கி மொத்த காப்பீட்டுத் தொகையையும் மருத்துவமனைகள் பெற்றுவிட முயற்சிக்கின்றன என்பதால் 
நோயாளிகளின் நலன் கருதியும், அரசின் திட்டம் தவறாகப் பயன்படுத்துவது தடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் தாங்கள் தலையிட வேண்டியிருக்கிறது என்பது காப்பீட்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர்களின் விளக்கம். 

தனியார் மருத்துவமனைகளுக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் இடையே நடக்கும் பனிப்போரால் பல நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கிறார்கள். அதிகக் கட்டணத்துடனான நவீன சிகிச்சை முறைகளைக் கையாளத் தாங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்கின்றன தனியார் மருத்துவமனைகள். 

இந்தியா முழுவதும் பஞ்சாயத்துகளிலிருந்து வட்ட, மாவட்ட, மாநில, தேசிய அளவிலான அரசு மருத்துவமனைகளில் மக்களின் வரிப்பணம் கடந்த 70 ஆண்டுகளாக கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. காப்பீடு வழங்க அரசு பொதுத் துறை  நிறுவனங்கள் செயல்படுகின்றன. அரசின் காப்பீட்டுத் திட்டங்களை, பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களின் மூலம் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே செயல்படுத்துவது என்று முடிவெடுத்தால் என்ன? இதன் மூலம் அரசு மருத்துவமனைகளின் தரமும் உயரும், காப்பீட்டுத் திட்டமும் வெற்றி பெறும், காப்பீட்டுத் திட்டத்தின் நோக்கமும் நிறைவேறும்.

]]>
https://www.dinamani.com/editorial/2019/may/21/தவறான-சிகிச்சை-3155477.html
3154785 தலையங்கம் இனி மூன்று நாள் காத்திருப்பு... ஆசிரியர் Monday, May 20, 2019 03:24 AM +0530 ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி 17-ஆவது மக்களவைத் தேர்தலுக்கான ஏழு கட்ட வாக்குப்பதிவு நேற்றுடன் முடிவடைந்திருக்கிறது. கடந்த 2014 தேர்தலில் 9 கட்டங்களாக 10 நாள்கள் மட்டுமே மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த முறை ஏழு கட்டங்களாகக் குறைந்தும்கூட 39 நாள்கள் நீண்டு நின்றது. 
2014-இல் 83.4 கோடி வாக்காளர்கள் வாக்களித்தார்கள் என்றால், இந்த முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 90 கோடியாக அதிகரித்திருக்கிறது. கடந்த முறை 39.7 கோடியாக இருந்த பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 43.2 கோடியாக அதிகரித்திருக்
கிறது. 2014 தேர்தலில் 9.2 லட்சம் வாக்குச்சாவடிகள் இருந்தன என்றால், இந்த முறை 13.35 லட்சம் வாக்குச்சாவடிகள். அதுமட்டுமல்ல, 2014-இல் 17 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்பட்டன என்றால், இப்போது அதுவே 23.3 லட்சமாக உயர்ந்திருக்கிறது. 
மே 23-ஆம் தேதிதான் முடிவுகள் வெளிவர இருக்கின்றன. இந்த 43 நாள்கள் இடைவெளி தேவைதானா என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை. நிலப்பரப்பு அளவிலும் மக்கள்தொகை அளவிலும், தொகுதிகள் எண்ணிக்கையிலும் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், பல கட்டங்களாக தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு நடத்த முற்பட்டதைக் குறை காண முடியாது. அதற்காக, ஏழு கட்ட வாக்குப்பதிவா? மேற்கு வங்கத்திலும் பிகாரிலும்கூட உத்தரப் பிரதேசத்தைப்போல பல கட்ட வாக்குப்
பதிவு நடத்த வேண்டிய அவசியம்தான் என்ன? எதிர்க்கட்சிகள் எழுப்பியிருக்கும் கேள்விகளில் நியாயம் இல்லாமல் இல்லை. 
இந்தியாவின் மக்களவைத் தேர்தல் என்பது பிரம்மாண்ட
மானது. உலகின் வேறு எந்த நாடும் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஜனநாயக சாதனை. 10 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகளுடன் எந்த ஒரு வாக்காளரும் தனது வாக்கைப் பதிவு செய்ய இரண்டு கி.மீ.க்கும் அதிகமாக பயணிக்க வேண்டியதில்லை என்கிற அளவிலான முன்னேற்பாடு அபார சாதனை. 20,000-க்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் வனப்பகுதிகளில் அமைந்திருக்கின்றன என்பதும், 1.1 கோடி அரசு ஊழியர்கள் நடந்தும், வாகனங்கள் மூலமும், ரயில் மூலம், படகுகள் மூலமும், ஹெலிகாப்டர் மூலமும், சில இடங்களில் யானைகள் மீதேறியும்கூடப் பயணித்து வாக்குப்பதிவை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்கள் என்பதையும் பார்த்து உலகமே வியக்கிறது. 
நேற்றைய கடைசிக் கட்ட வாக்குப்பதிவில் 59 மக்களவைத் தொகுதிகள் இடம்பெற்றன. அவற்றில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாராணசி தொகுதியும் அடக்கம். வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், 543 மக்களவைத் தொகுதிகளில் 542 தொகுதிகளில்தான் வாக்குப்பதிவு நடைபெற்றிருக்கிறது. 
ஒருசில இடங்களில் வன்முறையும், கலவரமும், துப்பாக்கிச் சூடும் நடந்தன என்றாலும்கூட, பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடாமல் 17-ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்கு தேர்தல் ஆணையத்துக்குப் பாராட்டுகள். ஆளும்கட்சியின் (பிரதமரின்) பிரசாரத்துக்கு உதவும் வகையில் வாக்குப்பதிவை அமைத்துக் கொடுத்தது என்கிற குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது என்றாலும்கூட, இந்தியத் தேர்தல் முறையில் மக்கள் தீர்ப்புக்கு எதிராக எதையும் செய்துவிட முடியாது என்பதுதான் உண்மை. 
கடைசிக் கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும் பல்வேறு அமைப்புகளின் வாக்குக்கணிப்புகள் ஊடகங்களில் வெளியாகியிருக்கின்றன. இந்தியத் தேர்தலின் சிறப்பே அதன் ரகசியத்தன்மைதான். அது பலமுறை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. வாக்குக்கணிப்புகளையும் கருத்துக்கணிப்புகளையும் மீறி இந்திய வாக்காளர்கள் பல தேர்தல்களில் அதிர்ச்சித் திருப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். வாக்காளர்களின் தீர்ப்பை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வெளிப்படுத்தும் வரை எந்தவொரு கருத்துக்கணிப்பையும் துணிந்து இறுதி  முடிவாக எடுத்துக்கொண்டுவிட முடியாது.
வாக்குக்கணிப்பு முடிவுகள், பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கின்றன. மே 23-ஆம் தேதி வெளிவர இருக்கும் இறுதி முடிவுகளும், பெரும்பாலான வாக்குக்கணிப்பு முடிவுகளை உறுதிப்படுத்துமேயானால், அந்த வெற்றிக்குக் காரணம், ஆளும் கூட்டணியின் சாதனைகள் என்பதைவிட எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை என்பதைத்தான் குறிப்பிட வேண்டும். "பாஜக மீண்டும் ஆட்சி அமைக்குமானால் அதற்குக் காரணம் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறைதான்' என்கிற தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கேஜரிவாலின் குற்றச்சாட்டை முற்றிலுமாக புறந்தள்ளிவிட முடியாது. 
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, உத்தரப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகளுடன்தொகுதி உடன்பாட்டை  காங்கிரஸ் ஏற்படுத்திக் கொண்டிருந்தால், கணிசமான தொகுதிகளில் பாஜக தோல்வியடைந்திருக்கக்கூடும். ஆனால், காங்கிரஸின் கணக்கு வேறாக இருந்தது. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை அந்தக் கட்சி எதிர்கொண்ட நிலையில், இந்தத் தேர்தலில் தனது எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரித்தாலேகூட அது மிகப்பெரிய வெற்றியாக இருக்கும் என்று காங்கிரஸ் கருதியிருக்கக்கூடும். 
2014 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றபோது தனது முதல் "மனதின் குரல்' நிகழ்ச்சியில், பிரதமராக வேண்டும் என்று ஆசைப்பட்ட  ஒரு சிறுமியின் கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி  அளித்த பதில் - "அதற்கு 2024 வரை காத்திருக்க வேண்டும்'. தெரிந்துதான் சொன்னாரோ?

]]>
https://www.dinamani.com/editorial/2019/may/20/இனி-மூன்று-நாள்-காத்திருப்பு-3154785.html
3153613 தலையங்கம் பொருளாதார மந்த நிலை! ஆசிரியர் Saturday, May 18, 2019 04:50 AM +0530
மும்முரமான 17-ஆவது மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம், மிக முக்கியமான பொருளாதாரப் பிரச்னைகள் குறித்து கவலைப்படவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. மே 23-ஆம் தேதிக்குப் பிறகு பதவியேற்க இருக்கும் அடுத்த அரசு, எதிர்கொள்ளப்போவது திணறிக் கொண்டிருக்கும் பொருளாதாரத்தையும், நிதி நெருக்கடியையும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்த மத்திய அரசு பதவியேற்கும் ஒருசில வாரங்களில்,   நிதிநிலையறிக்கையைத் தாக்கல் செய்தாக வேண்டும்,  மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டாக வேண்டும். பொருளாதார இயக்கம் முற்றிலுமாக ஸ்தம்பித்துவிடவில்லை என்றாலும் வேகம் குறைந்திருக்கிறது. மோட்டார் வாகனங்களின் விற்பனை கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 8% குறைந்திருக்கிறது என்பது, நுகர்வோர்  தேவையில் சுணக்கம் ஏற்பட்டிருப்பதன் வெளிப்பாடு. மோட்டார் வாகனங்கள்  மட்டுமல்ல, நுகர்வோர் தேவைகள் அனைத்தின் விற்பனையுமே குறைந்திருக்கிறது.

கார்களின் விற்பனையை மட்டும் எடுத்துக் கொண்டால் 17% குறைந்திருக்கிறது. 2.48 லட்சம் கார்கள்தான் விற்பனையாகி இருக்கின்றன. இது கடந்த எட்டு ஆண்டுகளில் மிகக் குறைவான விற்பனை. ஓராண்டுக்கு முன்னர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாத விற்பனையான 2,98,504-வுடன் ஒப்பிடுவதாக இருந்தால், 20% குறைவு. இரு சக்கர வாகனங்களின் விற்பனை 16% குறைந்து 16 லட்சம் வாகனங்கள்தான் விற்பனையாகி இருக்கின்றன. இரு சக்கர வாகனங்கள் விற்பனையும்,  விமானப் பயணிகளின் எண்ணிக்கையும்கூடக் குறைந்திருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

சரக்கு வாகனங்களின் விற்பனையும் மந்த நிலையில்தான் காணப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் 6% குறைந்து 68,680 வாகனங்கள்தான் விற்பனையாகி இருக்கின்றன. லாரிகள், "ட்ரக்'குகள், குறைந்த எடை சரக்கு வாகனங்கள் ஆகியவற்றின் விற்பனை குறைவது என்பது வணிகத் துறையும், உற்பத்தித் துறையும் மந்த கதியில் இயங்குவதன் அடையாளம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மோட்டார் வாகனங்களின் விற்பனையில் 
தேக்கம் ஏற்பட்டிருப்பதற்குப் பல்வேறு காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன.

முதலாவது காரணம், இந்தியாவின் பொருளாதாரம்  ஆரோக்கியமாக இல்லை என்பது. கடந்த 2018-19 நிதியாண்டின் கடைசிக் காலாண்டு நிலவரப்படி வளர்ச்சி விகிதம் வெறும் 6.6% மட்டுமே. கடந்த ஐந்து காலாண்டுகளில் இதுதான் மிகமிகக்  குறைந்த விகிதம்.  

இரண்டாவதாக, நிலையில்லாத கட்டுப்பாடுகளும், நடத்தை முறைகளும்கூட வாகன விற்பனைக் குறைவுக்குக் காரணிகள்.  வங்கிசாரா நிதி நிறுவனங்களில் காணப்படும் நிதிப் பற்றாக்குறையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் விளைவாக இரு சக்கர வாகனங்களின் காப்பீட்டுத் தொகை அதிகரித்திருப்பதும்கூட விற்பனையைப் பாதித்திருக்கின்றன. 

"ஊபர்', "ஓலா' போன்ற வாடகை கார் நிறுவனங்கள் நகர்ப்புறங்களில் செல்வாக்குப் பெற்று வருவதால், அதிகரித்த பெட்ரோல், டீசல் கட்டணத்தின் காரணமாகப் பலரும் வாகனங்கள் வாங்குவதைத் தவிர்க்க முற்படுவதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பழைய மோட்டார் வாகனங்களின் விற்பனை அதிகரிப்பதாலும், புதிய வாகன விற்பனையில் மந்த நிலைமை ஏற்பட்டிருக்கக்கூடும். 20 லட்சத்துக்கும் அதிகமாக மோட்டார் வாகன மறுவிற்பனை நடந்திருப்பதாகச் சில புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

உலகளாவிய அளவிலேயே 21-ஆம் நூற்றாண்டில் பிறந்த தலைமுறையினர், கடந்த தலைமுறையினர் போல, மோட்டார் வாகனங்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது.  அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் இந்தப்  போக்கு இந்தியாவையும் தொற்றிக்கொண்டு விட்டதோ என்று மோட்டார் வாகனத் தயாரிப்பாளர்கள் அச்சப்படுகிறார்கள்.

மோட்டார் வாகன விற்பனைக் குறைவு குறித்து இந்த அளவுக்குப் பதற்றம் தேவைதானா என்று கேட்கலாம். அது வெறும் அடையாளம்தான். மோட்டார் வாகனம் என்பது  வெளிப்படையாகத் தெரியும் துறை. எல்லாத் துறைகளிலும் இதுபோல மந்த நிலையும், வீழ்ச்சியும் காணப்படுகிறது என்பதுதான்  கவலையை ஏற்படுத்துகிறது. 

கடந்த ஆண்டைவிட,  "கேபிட்டல் குட்ஸ்' என்று சொல்லப்படும் மூலதனப் பொருள்கள் துறை 8.7%,  தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, "ஏ.சி.' போன்ற நுகர்வோர் பொருள்கள் 5.1% , சோப்பு, ஷாம்பு, அழகு சாதனங்கள் உள்ளிட்ட நுகர்வோர் அன்றாட சாதனங்கள் 0.3% என்கிற அளவில் விற்பனைக் குறைவைச் சந்தித்திருக்கின்றன.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வணிக யுத்தமும் சரி, மேற்கு ஆசியாவில் காணப்படும் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயரும் சூழலும் சரி, இந்தியப் பொருளாதாரத்தின் மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடும். எதிர்பார்ப்பதுபோல, பருவமழை பொய்க்காமல் இருந்தால், வேளாண் இடர் ஓரளவுக்குக் குறைந்து, அதனால் கிராமப்புறப் பொருளாதார நிலை சற்று சீர்படக்கூடும்.

இந்தப் பின்னணியில்தான், புதிய அரசு பதவியேற்க இருக்கிறது. உடனடியாகச் சில கொள்கை முடிவுகளை எடுத்து, பொருளாதார மந்த நிலையை மாற்ற முயற்சி எடுக்காமல் போனால்,  பின் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும். தனிப்பெரும்பான்மை இல்லாத  கூட்டணி ஆட்சி  அமையுமானால், அந்த அரசால் பொருளாதார  நெருக்கடியை எதிர்கொள்ள முடியுமா என்கிற மிகப் பெரிய கேள்விக்குறியும் இந்தியாவை எதிர்நோக்குகிறது.

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்வதுடன் கடமை முடிந்துவிடுவதில்லை.

]]>
https://www.dinamani.com/editorial/2019/may/18/பொருளாதார-மந்த-நிலை-3153613.html
3152884 தலையங்கம் மன்னிப்பா, எதற்காக? ஆசிரியர் Friday, May 17, 2019 01:31 AM +0530
கடந்த வாரம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் முகத்தை உருமாற்றம் செய்து ஒரு நையாண்டிப் பதிவு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது. அந்த நையாண்டிப் பதிவை மேற்கு வங்க பாஜகவின் இளைஞர் அணியான பாரதிய யுவ மோர்ச்சா தலைவர் பிரியங்கா சர்மா மே 10-ஆம் தேதி மீள்பதிவு செய்தார். அதை சகித்துக் கொள்ள முடியாமல் மேற்கு வங்க அரசு நடவடிக்கை எடுக்க முற்பட்டது, முதல்வர் மம்தா பானர்ஜியின் ஆட்சியில் எந்த அளவுக்கு கருத்துச் சுதந்திரம் கழுத்து நெரிக்கப்படுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. 
மம்தா பானர்ஜியும் அவரது அரசும் சகிப்புத்தன்மை இல்லாமல் எதிர்க்கட்சியினரை மட்டுமல்ல, எதிர்க் கருத்துகளை முன்வைத்தவர்களையும் கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாக்குவது புதிதொன்றுமல்ல. அந்தப் பாடங்களையெல்லாம் அவர் மறந்துவிட்டார் போலிருக்கிறது. நரேந்திர மோடி அரசின் சகிப்புத்தன்மையில்லாத அரசியலுக்கும், சர்வாதிகாரப் போக்குக்கும் எதிராகக் களமிறங்கியிருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் பின்னணி, அவரது குற்றச்சாட்டுகளை கேலிக்கூத்தாக்குகின்றன. 
பாஜக இளைஞரணி தலைவரான பிரியங்கா சர்மா, உருமாற்றம் செய்த மம்தா பானர்ஜியின் உருவத்தை சமூக ஊடகங்களில் மீள்பதிவு செய்ததைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் ஹெளரா காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரை உடனடியாக எடுத்துக்கொண்ட ஹெளரா காவல் துறையினர், பிரியங்கா மீது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகளில் மட்டுமல்லாமல், மான- நஷ்ட வழக்கும் பதிவு செய்ததுதான் வேடிக்கை. மான-நஷ்ட வழக்குகளை பாதிக்கப்பட்டவர்கள்தான் தொடுக்க முடியுமே தவிர, இன்னொருவருக்காக யாரோ ஒருவர் மான-நஷ்ட வழக்கு தொடர முடியாது என்பதுகூட வழக்குப் பதிவு செய்த காவல் துறையினருக்குத் தெரியவில்லை. 
பிரியங்கா சர்மா மீதான வழக்கை விசாரிக்கும் பொறுப்பு சைபர் குற்றப் பிரிவினரிடம் தரப்பட்டது. அவர் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 ஏ பிரிவின் கீழும், 67 ஏ பிரிவின் கீழும் வழக்குப் பதிவு செய்தார்கள். 66 ஏ பிரிவு கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்று கூறி அந்தப் பிரிவையே உச்சநீதிமன்றம் 2015-இல்  அகற்றிவிட்டது. 67 ஏ பிரிவு பாலியல் ரீதியான பதிவுகளைச் செய்வதற்கு எதிரான பிரிவு. பிணையில் விடுதலை இல்லாத அந்தப் பிரிவின் கீழ், உருமாற்றப் பதிவுக்காக பிரியங்கா சர்மா மீது வழக்குப் பதிவு செய்திருப்பது அதைவிட விசித்திரமாக இருக்கிறது.
வழக்குப் பதிவு செய்த ஹெளரா காவல் துறையினர் பிரியங்கா சர்மாவைக் கைது செய்து, குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.  வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிரிவுகள், வழக்கின் அடிப்படை ஆகியவை குறித்து குற்றவியல் நடுவராவது சிந்தித்து முடிவெடுத்து தீர்ப்பு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அவரோ, எல்லா வழக்குகளையும்போல இந்த வழக்கையும் காவல் துறையினரின் கோரிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொண்டு, பிரியங்கா சர்மாவை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.
மேற்கு வங்கம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான இந்த நடவடிக்கையை எதிர்த்தது. உச்சநீதிமன்றத்துக்கு வழக்கு வந்தது. பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து, உச்சநீதிமன்ற விடுமுறை அமர்வு அவசர அவசரமாக வழக்கை விசாரித்தது. குற்றவியல் நடுவர் நீதிமன்றத் தீர்ப்பின்படி 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் இருந்த பிரியங்கா சர்மாவை, பிணையில் விடுவிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அவரை உடனடியாகப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்,  தவறான முறையில் சட்டம் பயன்படுத்தப்பட்டிருப்பதன் வக்கிரத்தைச் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். 
பிரியங்கா சர்மா பிணையில் வெளிவர மறுத்துவிட்ட நிலையில், மறுநாளே அவரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதுடன் நின்றிருக்க வேண்டும். ஆனால், அவர் விடுவிக்கப்படும்போது மன்னிப்புக் கடிதம் ஒன்றை எழுதிக் கொடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டது எந்த வகையிலான நியாயம் என்று புரியவில்லை. 
அவர் எதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருக்க வேண்டும். அவர் மீதான குற்றம் சட்டப்படி நிரூபிக்கப்படாத நிலையில், பிரியங்கா சர்மாவை மன்னிப்புக் கடிதம் கொடுக்கும்படி உச்சநீதிமன்றம் கூறியிருப்பது இயற்கை நியதிக்கு எதிரானது. 
எல்லாவற்றையும்விட வேடிக்கை, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும்கூட பிரியங்கா சர்மாவை விடுதலை செய்யாமல் மேற்கு வங்க அரசு காலம் தாழ்த்தியது. உச்சநீதிமன்றம் மீண்டும் கண்டித்ததைத் தொடர்ந்து அடுத்த நாள் அவர் விடுவிக்கப்பட்டார். விடுவிக்கப்படும்போது, தவறுதலான தகவலின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறி அந்த வழக்கையே காவல்துறை கைவிட்டிருக்கிறது என்பதுதான் எல்லாவற்றையும்விட விசித்திரம். 
மேற்கு வங்க அரசின் வரம்பு மீறிய அடக்குமுறை நடவடிக்கையைவிட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புதான் அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான வரம்பு மீறிய, சட்டவிரோதமான குற்றச்சாட்டுகளில், உச்சநீதிமன்றம் கூறியிருப்பதுபோல மன்னிப்பு கோருவது என்று சொன்னால் ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளில் வெளிவரும் கார்ட்டூன்களுக்காக மன்னிப்பு கோர வேண்டியிருக்கும். திரைப்படங்களிலும், நாடகங்களிலும் வரும் காட்சிகளுக்காக மன்னிப்பு கோர வேண்டிவரும். 
ஜனநாயக நாட்டில் பொதுவாழ்க்கையில் ஈடுபடும் எவருமே விமர்சனத்துக்கு உட்பட்டவர்களே. அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாமல் இருப்பது, கருத்துச் சுதந்திரத்தை சிலுவையில் அறைவதாகத்தான் இருக்கும்!
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/may/17/மன்னிப்பா-எதற்காக-3152884.html
3152248 தலையங்கம் இதுதான் இந்தியா! ஆசிரியர் Thursday, May 16, 2019 01:27 AM +0530 திருவனந்தபுரத்தை அடுத்த  நெய்யாற்றங்கரை என்கிற ஊரில் வாழ்கிறது சந்திரனின் குடும்பம். நண்பர் ஒருவரை சந்திரன் சந்திக்கச் சென்றிருந்தபோதுதான் அவருக்கு அந்தத் தகவல் கிடைத்தது. அவரது வீட்டிலிருந்து வந்த அலறல் சப்தமும், உள்ளேயிருந்து வரும் புகையும் அக்கம்பக்கத்தவர்களைத் திடுக்கிட வைத்தன. 
செய்தி கேள்விப்பட்ட சந்திரன் விரைந்து வந்து பார்த்தபோது, வீட்டில் கதவு தாழிடப்பட்டிருந்தது. பக்கத்து வீட்டுக்காரரின் துணையோடு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தால், நெருப்பில் கருகிக் கொண்டிருந்தார்கள் அவருடைய 42 வயது மனைவி லேகாவும், 19 வயது மகள் வைஷ்ணவியும். தீயை அணைக்கும்போதே மகள் வைஷ்ணவி இறந்திருக்கிறாள். மனைவி லேகாவை, உடனடியாகத் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள் என்றாலும்,  அடுத்த சில மணி நேரங்களில் அவரது உயிரும் பிரிந்தது. 
15 ஆண்டுகளுக்கு முன்பு தனது 10 சென்ட் நிலத்தை அடமானம் வைத்து நெய்யாற்றங்கரை கனரா வங்கியில் ரூ.5 லட்சம் கடன் வாங்கி இருந்தார் சந்திரன். அந்தப் பணத்தில்தான் அந்த இடத்தில் வீடு கட்டி, சந்திரனின் குடும்பம் வசித்து வந்தது. அவர் வாங்கிய ரூ.5 லட்சம் கடனுக்கு வட்டியும் அசலுமாகப் பல தவணைகளில் சுமார் எட்டு லட்சம் ரூபாய் வரை அவர் செலுத்தியிருக்கிறார். அவ்வப்போது, தவணைகள் தவறியதுண்டு. அதனால் வட்டி அதிகரித்திருக்கிறது. இப்போதைய நிலையில் வட்டியும் முதலுமாக இன்னும் ரூ.6.85 லட்சம் திருப்பித் தரவேண்டும். 
கடந்த சில மாதங்களாக அவர்  தவணைத் தொகையைச் செலுத்தவில்லை என்பதால்,  நெய்யாற்றங்கரை கனரா வங்கி அவர் மீது  நீதிமன்ற நடவடிக்கையை மேற்கொண்டது. நீதிமன்ற உத்தரவின்படி ஜப்தி செய்து அவர்களை அகற்றி, வீட்டையும் நிலத்தையும் பறிமுதல் செய்ய கனரா வங்கி நடவடிக்கை  எடுக்க முற்பட்டது.
வீட்டை விற்று கனரா வங்கியின் கடன் தொகையைச் செலுத்திடும் முயற்சிகளை சந்திரனின் குடும்பம் மேற்கொண்டது. அவர்களது கடைசி நம்பிக்கையாக இருந்த தரகர் ஒருவரும் கைவிட்ட நிலையில்தான், செய்வதறியாது தனது நண்பரின் உதவியை நாட சந்திரன் சென்றிருந்தார். செவ்வாய்க்கிழமை மதியத்துக்குப் பிறகு அவர்களது வீடு ஜப்தி செய்யப்படும் என்று வங்கி அதிகாரிகள் நேரில் வந்து மிரட்டியிருக்கிறார்கள்.
வங்கி அதிகாரிகள் ஜப்திக்கு நேரம் குறித்துவிட்டார்கள் என்பதறிந்து, லேகாவும் மகள் வைஷ்ணவியும் மனமொடிந்து விட்டனர். ஜப்தி நடவடிக்கையால் அக்கம்பக்கத்தினரின் அவமானத்தை எதிர்கொள்ளத் துணிவில்லாமல், தங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
தேர்தல்  நடந்து கொண்டிருக்கும் நிலையில், எந்தவொரு விவசாயக் கடன் மீதும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்ற கேரள அரசின் தடை உத்தரவு இருக்கிறது. அதையும் மீறி,  நெய்யாற்றங்கரை கனரா வங்கி அதிகாரிகள் எப்படி ஜப்தி நடவடிக்கை எடுக்க முற்பட்டார்கள் என்ற  கேள்வியை பொதுமக்கள் மட்டுமல்ல, அரசே கேட்கிறது.  
சாமானியர் சந்திரன் வாங்கிய ரூ.5 லட்சம் கடனுக்கு,  வட்டியும் முதலுமாக ரூ. 8 லட்சம் செலுத்தியும்கூட, ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால்,  நமது பொதுத் துறை வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கித் திருப்பித் தராதவர்களும், மோசடி செய்து பணம் கொள்ளையடித்தவர்களும் தடையே இல்லாமல் வெளிநாடுகளுக்குச் சென்று விடுகிறார்கள்.
கடந்த மூன்று ஆண்டுகளில், நமது பொதுத் துறை வங்கிகளில் நடத்தப்பட்ட மோசடிகளில் ஏற்பட்டிருக்கும் இழப்பு சுமார் ரூ.70,000 கோடி. 2015-16-இல் ரூ.16,409 கோடி, 2016-17-இல் ரூ.16,652 கோடி, 2017-18-இல் ரூ.36,694 கோடி, 2017-18 நிதியாண்டில் மட்டும் நமது அரசுத் துறை வங்கிகளில் நடந்திருக்கும் மோசடிகள் 6, 500. இதில் நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி கூட்டணி நிகழ்த்திய ரூ.12, 000 கோடி மோசடியும் அடக்கம்.
2017-18-ஆம் ஆண்டில் பொதுத் துறை வங்கிகளான பஞ்சாப் நேஷனல் வங்கி (ரூ.6,461 கோடி), பாரத ஸ்டேட் வங்கி (ரூ.2,390 கோடி), பேங்க் ஆஃப் இந்தியா (ரூ. 2,224 கோடி),  அலாகாபாத் வங்கி (ரூ.1,520 கோடி), ஆந்திரா வங்கி (ரூ.1,303 கோடி), யூகோ வங்கி (ரூ.1,224 கோடி), ஐசிஐசிஐ வங்கி (ரூ.1,116 கோடி), யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (ரூ.1,095 கோடி),  சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (ரூ.1,084 கோடி), பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா (ரூ. 1,029 கோடி), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ரூ.1,015 கோடி) ஆகியவை ரூ.1,000 கோடியிலும்   அதிகமாக மோசடிகளில் இழந்திருக்கின்றன. ஏனைய வங்கிகளும் இழக்காமலில்லை. ஆனால், அவை ஆயிரம் கோடியை எட்டவில்லை, அவ்வளவே!
மோசடிகளில் இழந்த பணம் இவ்வளவு என்றால், பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன்கள் அளவு எவ்வளவு தெரியுமா? சுமார் ரூ.4,00,000 கோடி.  
சந்திரன் குடும்பத்தினரைப் போல அவமானங்களுக்குப் பயப்படும் நடுத்தர வர்க்க  இந்தியர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். 
அழுத்தம் தாள முடியாமல் அவர்களில் சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆனால்,  விஜய் மல்லையாக்களும், நீரவ் மோடிகளும் எந்தவிதக் குற்ற உணர்வே இல்லாமல், இந்தியாவிலிருந்து வெளியேறி மேலைநாடுகளில் குடியேறி சொகுசாக வாழ்க்கை நடத்துகிறார்கள்.
இந்தியாவில் பிறப்பதாக இருந்தால் கோடீஸ்வரர்களாக மட்டும்தான் பிறக்க வேண்டும்!  வங்கிகளில் கடன் வாங்குவதாக இருந்தால்  கோடிகளில்தான் கடன் வாங்க வேண்டும்!
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/may/16/இதுதான்-இந்தியா-3152248.html
3151656 தலையங்கம் அச்சத்தில் இந்திய ராணுவம்! ஆசிரியர் Wednesday, May 15, 2019 02:10 AM +0530 நடைபெறும் மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் நமது ராணுவ வீரர்களின் தியாகத்தைத் தேர்தல் பிரச்னையாக மாற்றியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. 
ஒருபுறம் பாலாகோட் துல்லியத் தாக்குதலை ஆளும் பாரதிய ஜனதா கட்சி தனது சாதனையாக மார்தட்டிக் கொள்ள முற்படுவதும், இன்னொருபுறம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்திய விமானப் படையின் துல்லியத் தாக்குதலையே கேள்வி கேட்க முற்பட்டிருப்பதும் எந்த அளவுக்கு இந்திய ராணுவத்தைப் பாதித்திருக்கும் என்பது குறித்து யாருமே கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. 
ஏற்கெனவே தாங்கள் விவாதப்பொருளாக்கப்பட்டிருப்பதில் வருத்தமடைந்திருக்கும் பாதுகாப்புப் படையினரை இன்னொரு சோதனையும் எதிர்கொள்கிறது. இந்தியாவில் 41 ராணுவ தளவாடத் தொழிற்சாலைகள் அரசால் நடத்தப்படுகின்றன. இந்திய ராணுவத்திற்கு வழங்கப்படும் அடிப்படைத் தளவாடங்களும், தாக்குதலுக்குப் பயன்படும் குண்டுகளும் அந்த அரசு ராணுவ தளவாட நிறுவனங்களில்தான் தயாரிக்கப்படுகின்றன. இந்திய ராணுவம் தங்களுக்கு வழங்கப்படும் ரவைகளும் குண்டுகளும் மிகவும் தரம் குறைந்ததாக இருப்பதாகவும், அதனால் அதிக அளவில் விபத்துகள் நடைபெறுவதாகவும் பாதுகாப்பு அமைச்சகத்துக்குத் தெரிவித்திருப்பது அபாயகரமான நிலைமையை வெளிப்படுத்துகிறது. 
அரசின் ராணுவ தளவாட தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ரவைகள், குண்டுகள் தொடர்பான விபத்துகள் அதிகரிப்பது ராணுவ வீரர்கள் மத்தியில் நம்பிக்கைக் குறைவை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் டாங்குகளில் பயன்படுத்தப்படும் 125 எம்எம் அதிதிறன் கொண்ட குண்டுகளின் பயன்பாட்டில் 40-க்கும் மேற்பட்ட விபத்துகள் நேர்ந்திருக்கின்றன. அது மட்டுமல்லாமல் எல்-70 என்கிற விமானங்களைத் தாக்கும் பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் அதிதிறன் கொண்ட 40 எம்எம் குண்டுகளை ராணுவ வீரர்களின் பயிற்சியின்போது பயன்படுத்துவது அறவே நிறுத்தப்பட்டுவிட்டது. அதற்குக் காரணம், இதனால் ஏற்பட்ட எதிர்பாராத விபத்துகளால் பல ராணுவ வீரர்கள் பயிற்சின்போது காயமடைந்தார்கள் 
என்பதுதான். 
சில குண்டுகள் வெடிக்காமல் போவதும், வேறுசில பயன்படுத்துவதற்கு முன்பே வெடித்து விடுவதும், இன்னும் சில தாமதமாக வெடிப்பதும் ராணுவ வீரர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியிருக்கின்றன. தரமில்லாத தயாரிப்பாலும், முறையான பாதுகாப்புடன் வழங்கப்படாததாலும் விரைவிலேயே அவை செயலிழந்துவிடுகின்றன என்கிறது ராணுவம். 
ராணுவ தளவாடங்களில் மட்டுமல்ல, நமது விமானப் படையும் பல சவால்களை எதிர்கொள்கிறது. பாலாகோட் தாக்குதல் இந்திய விமானப் படையின் பலவீனத்தை வெளிச்சம் போட்டதை நாம் உணர வேண்டும். பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானங்களுக்கு நமது பழைமையான மிக்-21 போர் விமானங்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. அதையும் மீறித்தான் நமது விமானப் படையினர் பாலாகோட்டில் துல்லியத் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 
பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது நாம் தற்காப்புத் தாக்குதல் நடத்த வேண்டுமென்றால், நமது பாதுகாப்பு குறித்து மீள்பார்வை பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. பாகிஸ்தானிடம் அதிநவீன ரக போர் விமானங்கள் இருக்கும் நிலையில், நம்முடைய பழைய தொழில்நுட்பத்துடன் கூடிய விமானங்களால் அவற்றை எதிர்கொள்ள முடியாது என்கிற உண்மையை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
இந்தியாவின் ரஃபேல் போர் விமான கொள்முதல் விவாதப் பொருளாகி இருப்பது, இந்திய ராணுவத்தைக் கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. ரஃபேல் போர் விமானம் வாங்குவதில் ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டுவதன் மூலம், காங்கிரஸ் கட்சியின் மீதான போஃபர்ஸ் களங்கத்தை துடைக்க நினைக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் விமர்சனங்களைப் பல முன்னாள் ராணுவ, விமானப் படை அதிகாரிகள் கண்டித்திருப்பதில் நியாயமிருக்கிறது. காரணம், இதற்கு முன்னால் போஃபர்ஸ் வாங்கியது விவாதப் பொருளாக்கப்பட்டாலும், 1999 கார்கில் போரில் பாகிஸ்தானிய ஊடுருவிகளை அகற்ற அந்த பீரங்கிகள்தான் பயன்பட்டன என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். விமர்சனங்களை எழுப்பி ரஃபேல் போன்ற அதிநவீன போர் விமானங்களை வாங்குவது  தடுக்கப்பட்டால், அதனால் இந்தியாவின் பாதுகாப்பு பேராபத்தை எதிர்கொள்ளும் என்று அவர்கள்  எச்சரிக்கிறார்கள்.
ராணுவ தளவாடங்களை இந்தியாவில் தயாரிப்பது என்கிற நரேந்திர மோடி அரசின் முயற்சி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. உலகிலேயே மிக அதிகமாக ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடு இந்தியாதான் என்பதால், தளவாட உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது தொழிற்சாலைகளை அமைக்க முன்வரவில்லை. இந்திய ராணுவத்தின் ராணுவ தளவாட கொள்முதல் கொள்கை மிகவும் கடினமானதும், காலதாமதம் ஏற்படுத்துவதாகவும் இருப்பதால் தனியார் துறையினர் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. உத்தரவாதமும், தொடர்ந்து ஆதரவும் இல்லாதபோது தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டாததில் வியப்பும் இல்லை. 
முறையான, உறுதியான ராணுவ தளவாட கொள்முதல் கொள்கை இல்லாமல் இருப்பதும், அரசின் ராணுவ தளவாட தொழிற்சாலைகளில் தரமான தளவாடங்களைத் தயாரிக்காமல் இருப்பதும் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கின்றன. இது குறித்து யாருமே கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/may/15/அச்சத்தில்-இந்திய-ராணுவம்-3151656.html
3150975 தலையங்கம் அரசியலும்...பொருளாதாரமும்! ஆசிரியர் Tuesday, May 14, 2019 01:39 AM +0530 பொருளாதார விளைவுகள் குறித்த எந்தவிதக் கவலையும் இல்லாமல் தேர்தல் வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு வாக்காளர்களைக் கவர்ந்தால் போதும் என்பதில் அரசியல் கட்சிகளுக்கிடையே போட்டா போட்டி நிலவுகிறது. எந்தக் கட்சி ஆட்சியில் அமர்ந்தாலும் வாக்காளர்களுக்கு அளித்திருந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டால், பொருளாதாரம் மிகப்பெரிய  இடரை எதிர்கொள்ளும்.
இந்தியாவைப் பொருத்தவரை மத்திய அரசின் நிதி நிலைமை ஆரோக்கியமானதாக இருந்தால் மட்டும் போதாது. அந்நியச் செலாவணி கையிருப்பு, அதிகரித்த ஏற்றுமதி,  அந்நிய நேரடி முதலீடு என்பதெல்லாம் வலுவான பொருளாதாரத்துக்கு அடையாளங்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அவை மட்டுமே பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தி விடாது. 
தகவல் தொடர்புத் துறையின் வளர்ச்சியால் இந்தியாவுக்கு அந்நியச் செலாவணி கிடைக்கிறது என்றாலும், அரசுக்கு அதனால் கிடைக்கும் நேரடி வருவாய் மிக மிகக் குறைவு.  உற்பத்தி அதிகரிப்பதன் மூலம் மட்டுமே அரசின் வரி வருவாயும், அதிகரித்த வேலைவாய்ப்பும் ஏற்படும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
முன்பே கூறியதுபோல, தேசிய அளவில் வலுவான பொருளாதாரம் இருந்தால் மட்டும் போதாது. இந்தியாவைப் போன்ற  கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில்  செயல்படும் தேசத்தில், மாநிலங்களின் பொருளாதாரம் வலுவாக இருந்தால்தான் தேசிய அளவிலான பொருளாதாரம் வலுவானதாக இருக்கும். இன்றைய எதார்த்த நிலைமை என்னவென்றால், மாநிலங்களின் நிதி நிலைமை கவலைக்குரியதாகக் காணப்படுகிறது என்பதுதான்.
பெரும்பாலான மாநிலங்கள்  மிகப் பெரிய நிதி நெருக்கடியை எதிர்கொள்கின்றன. அந்த மாநிலங்களின் பற்றாக்குறைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்தையே  பாதித்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்படுகிறது. ஒருபுறம் வட்டி விகிதம் குறைந்து வந்தாலும், நிதிப் பற்றாக்குறையில் சிக்கியிருக்கும் மாநிலங்கள் தங்களது நிதி நிலைமையைச் சரிக்கட்ட  அதிகரித்த வட்டியில் கடன் வாங்கிக் கொண்டிருக்கின்றன. 
இந்தப் பின்னணியில்தான் தேசிய, மாநில அரசியல் கட்சிகள் தேர்தல் வெற்றியைக் குறிவைத்து கடன் தள்ளுபடிகளையும், மானியங்களையும் வழங்க முற்படுகின்றன.  காங்கிரஸ் கட்சியின் நியாய் திட்டமானாலும் ஆளும் பாஜகவின் விவசாயிகள் மானியத் திட்டமானாலும், பல்வேறு மாநிலக் கட்சிகள் அறிவித்திருக்கும்  இலவசத் திட்டங்களும், ஏற்கெனவே நிதிப் பற்றாக்குறையில் தள்ளாடிக் கொண்டிருக்கும் மாநிலங்கள் மீது கடுமையான  சுமையாக மாறப் போகின்றன. இந்தத் தேர்தல் அறிவிப்புகளை ஆட்சிக்கு வந்து அந்தக் கட்சிகள் நடைமுறைப்படுத்த முற்பட்டால், குறைந்தது அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு எந்தவொரு வளர்ச்சித் திட்டத்தையும் செயல்படுத்த முடியாது என்கிற உண்மை மறைக்கப்படுகிறது.
ஒருபுறம் பற்றாக்குறை அதிகரிக்கிறது என்றால், இன்னொருபுறம் அந்தப் பற்றாக்குறையை ஈடுகட்டும் விதத்தில் நிதி ஆதாரத்தை வரிகள் மூலமோ, வேறு விதத்திலோ அதிகரிக்கும் வாய்ப்புகள் மாநில அரசுகளுக்குக் குறைந்து வருகின்றன. ஜி.எஸ்.டி. (சரக்கு-சேவை வரி) வந்த பிறகு எல்லா மாநிலங்களும் மத்திய வரியில் தங்களுக்கு வழங்கப்படும்  பங்கை எதிர்நோக்கித்தான் செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.  ஊழியர்களுக்கு  வழங்க வேண்டிய சம்பளத் தொகையைக்கூட வழங்க முடியாமல்  பல மாநில அரசுகள் திணறுகின்றன. 
அப்படிப்பட்ட நிதி நிலைமையில் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அந்த மாநிலங்களில் தொழில் தொடங்கவோ, முதலீடு செய்யவோ தயங்குகின்றனர். அதனால்தான் சில குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டுமே முதலீடுகளும், தொழில்களும் குவிகின்றன. மாநில அரசுகளின் நிதி நிலைமை பலவீனம் சரி செய்யப்படாமல் போனால்,  ஏற்கெனவே அந்த மாநிலத்தில் செயல்படும்  தொழில் துறையினரும், சேவைத் துறையினரும்கூட பாதிக்கப்படுவதும், அதன் தொடர் விளைவாக  இழப்பை எதிர்கொண்டு மூடுவதும் தவிர்க்க முடியாததாகிவிடும்.  
ஏறத்தாழ 19 மாநிலங்களின்  நிதி நிலைமை  மோசமாகக் காணப்படுகிறது.  2018-19 நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் அந்த மாநிலங்களின்  நிதிப் பற்றாக்குறை எதிர்பார்ப்பைவிட 62.2% அதிகரித்திருந்தது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கேரளம் ஆகிய மாநிலங்களில்  நிதிநிலை அறிக்கையின்  எதிர்பார்ப்பைவிட, நிதிப் பற்றாக்குறை  முதல் 9 மாதங்களிலேயே பல மடங்கு அதிகரித்து, கவலைக்கிடமான நிலையில் காணப்படுகிறது. இதை எதிர்கொள்ள இந்திய ரிசர்வ் வங்கியிடமோ, நிதி ஆணையத்திடமோ எந்தவித வழிமுறையும் இருப்பதாகத் தெரியவில்லை. பற்றாக்குறையைக் குறைத்து, மாநிலங்களின் நிதி நிலைமையைச் சீர்படுத்துவதற்கான வழிமுறைகள் விவாதிக்கப்படுகின்றன என்றாலும்,  அதற்கு இதுவரை வழிகாண முடியவில்லை.
என்.கே.சிங் தலைமையிலான 15-ஆவது நிதி ஆணையம்,  இந்தப் பிரச்னைகள் குறித்து விவாதிக்க இரண்டு நாள் கூட்டம் ஒன்றை மும்பையில்  கூட்டியது. இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், தலைசிறந்த பொருளாதார நிபுணர்கள்,  வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்ட அந்த இரண்டு நாள் கூட்டம் பல்வேறு  வழிமுறைகள் குறித்து  விவாதித்தது. 
பொருளாதார நிபுணர்கள் விவாதித்து, நிதிப் பற்றாக்குறையை அகற்ற வழிகாண முற்படும்போது,  நமது அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை வாரி வழங்கி அவர்களது முயற்சியைக் குலைக்க முற்படுகின்றனவே, என்ன செய்ய?
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/may/14/அரசியலும்பொருளாதாரமும்-3150975.html
3150471 தலையங்கம் இப்படியே தொடரக் கூடாது! ஆசிரியர் Monday, May 13, 2019 02:56 AM +0530 உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்ந்து பிரச்னைக்குள்ளாகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் "கொலீஜியம்' பரிந்துரைக்கும் சில பெயர்கள் அரசுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருப்பது மட்டுமே அதற்குக் காரணம் என்று கூறிவிட முடியாது.
 உத்தரகண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி கே.எம்.ஜோசப், உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு "கொலீஜியம்' பரிந்துரைத்தபோது, அரசு சற்று தயக்கம் காட்டியது. பரிந்துரையை மறுபரிசீலனை செய்யும்படி திருப்பி அனுப்பியது. அவருக்குப் பதவி உயர்வு தரப்பட்டேயாக வேண்டும் என்று "கொலீஜியம்' பிடிவாதமாக இருந்ததால், மத்திய அரசு அந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு வழிகோலியது.
 உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் கடந்த ஜனவரி மாதம் மீண்டும் சர்ச்சைக்குள்ளானது. உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுவதற்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பிரதீப் நந்திரஜோகையும், தில்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ராஜேந்திர மேனனையும் முந்தைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான "கொலீஜியம்' கடந்த டிசம்பர் மாதம் பரிந்துரைத்திருந்தது. தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் பதவியேற்றதைத் தொடர்ந்து, அந்தப் பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டு, கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரியையும், தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னாவையும் பரிந்துரைத்தது. மத்திய அரசும் வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்டு அவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
 இப்போது, மீண்டும் ஒரு "கொலீஜியம்' பரிந்துரை சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி, உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் அடங்கிய "கொலீஜியம்', ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அனிருத்தா போûஸயும், குவாஹாட்டி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.எஸ்.போபண்ணாவையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப் பரிந்துரைத்திருந்தது. அந்தப் பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்யும்படி உச்சநீதிமன்றத்தை அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. எதிர்பார்த்தது போலவே, அரசின் வேண்டுகோளை "கொலீஜியம்' நிராகரித்திருக்கிறது.
 நீதிபதி கே.எம்.ஜோசப் பிரச்னை போலவே, உச்சநீதிமன்ற "கொலீஜிய'த்தின் முடிவுக்குக் கட்டுப்பட்டு, அதன் பரிந்துரைகளை இந்த முறையும் அரசு ஏற்றுக்கொள்ளும் என்று நம்பலாம். ஆனால், எத்தனை காலம்தான் நீதித் துறையும், சட்ட அமைச்சகமும் இதுபோல பரிந்துரைகளைப் பந்தாடிக் கொண்டிருக்கப் போகின்றன என்கிற கேள்வி எழுகிறது.
 உலகிலேயே நீதிபதிகளை நீதிபதிகளே தேர்ந்தெடுத்து நியமித்துக் கொள்ளும் விசித்திரமான நடைமுறையைப் பின்பற்றும் ஒரே நாடு இந்தியாவாகத்தான் இருக்கும். இப்போது இருக்கும் நீதிபதிகளில் பலரும், நீதிபதிகளாகவும், தலைமை நீதிபதிகளாகவும் உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் இருந்தவர்களின் வாரிசுகள் என்பதிலிருந்து, திறமை மட்டுமே அவர்களது நியமனத்துக்குக் காரணமல்ல என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதனால்தான் நீதிபதிகள் நியமனத்துக்கான "கொலீஜியம்' முறை அடிக்கடி விவாதத்துக்கும், விமர்சனத்துக்கும் உள்ளாகி வருகிறது.
 உயர்நீதிமன்றங்களிலும், கீழமை நீதிமன்றங்களிலும் நூற்றுக்கணக்கில் நீதிபதிகள் இடம் நிரப்பப்படாமல் இருக்கின்றன. கடந்த மாத இறுதி நிலவரப்படி, உயர்நீதிமன்றங்களில் மட்டும் 396 நீதிபதிகள் இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. ஜார்க்கண்ட், குவாஹாட்டி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் மட்டுமல்லாமல், ஹிமாசல பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட "கொலீஜிய'த்தால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நான்கு நியமனங்களும் மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டால், உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 31 நீதிபதிகள் இடங்களும் நிரப்பப்பட்டுவிடும்.
 "கொலீஜியம்' நீதிபதிகள் நியமன முறை என்பது, 1993-இல் இரண்டாவது நீதிபதிகள் வழக்கில் உச்சநீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட வழிமுறை. இதற்கு அரசியல் சாசன அங்கீகாரம் கிடையாது.
 அரசியல் சாசனத்தில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் "கலந்தாலோசித்து' நீதிபதிகளை அரசு நியமனம் செய்யும் என்றுதான் சட்டப்பிரிவு 124, 127-இல் கூறப்பட்டுள்ளது. "கலந்தாலோசித்து' என்பதற்கு "பரிந்துரையின் அடிப்படையில்' என்கிற புதிய விளக்கத்தை, 1993 இரண்டாவது நீதிபதிகள் வழக்கில் வழங்கி, நீதிபதிகளை நியமித்துக் கொள்ளும் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் தனக்குத்தானே எடுத்துக் கொண்டுவிட்டது.
 அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய நீதிபதிகள் நியமனச் சட்டமும், உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. நீதிபதிகளே நீதிபதிகளை நியமித்துக் கொள்ளும் "கொலீஜியம்' முறை தொடரத்தான் வேண்டுமா; அப்படித் தொடர்வதாக இருந்தால், நீதிபதிகள் நியமனத்தில் அரசுக்குத் தொடர்போ, தலையீடோ இருக்கவே கூடாதா; நியமனம் குறித்த வெளிப்படைத்தன்மை இல்லாமல் இதேபோலத்தான் தொடரப் போகிறதா போன்ற கேள்விகள் எழுகின்றன.
 அரசியல் சாசன அங்கீகாரம் பெற்ற நீதிபதிகள் நியமன அமைப்பு ஏற்படுத்தப்படுவதுதான் இதற்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும். தன்னிச்சையாகவும் வெளிப்படைத்தன்மை இல்லாமலும் நீதிபதிகளே நீதிபதிகளை நியமித்துக் கொள்வது தவறு! நீதிபதிகள் நியமனம் அரசின் வசம் ஒப்படைக்கப்படுவதும் தவறு! நீதிபதிகள் நியமனம் இதுபோல அடிக்கடி விவாதப் பொருளாவது மிகப் பெரிய தவறு!
 
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/may/13/இப்படியே-தொடரக்-கூடாது-3150471.html
3149111 தலையங்கம் இனி ரெய்வா காலகட்டம்! ஆசிரியர் Saturday, May 11, 2019 01:35 AM +0530 ஜப்பானில் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை, தலைமை மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக ஜப்பானின் அரசராக இருந்த 85 வயது அகிஹிடோ தனது அரச பதவியை பட்டத்து இளவரசரும் மூத்த மகனுமான நருஹிடோவிடம் கொடுத்துவிட்டு ஓய்வு பெற்றிருக்கிறார். மே மாதம் முதல் ஜப்பானில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாகி இருக்கிறது. இத்துடன் மன்னர் அகிஹிடோவின் ஹெய்சே காலகட்டம் முடிந்து, புதிய அரசர் நருஹிடோவின் ரெய்வா காலகட்டம் ஆரம்பமாகிறது.
ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் மன்னர் அகிஹிடோவின் பதவிக்காலம் முடிவடைந்து மன்னர் நருஹிடோவின் ஆட்சி மே முதல் தேதியே தொடங்கியது என்றாலும், உடனடியாக பட்டம் சூட்டும் நிகழ்ச்சி நடந்துவிடாது. அதற்கு முன்னால் பல சடங்குகள் நடைபெற்றாக வேண்டும். அக்டோபர் 22-ஆம் தேதி பட்டம் சூட்டு விழாவுக்கு  நாள் குறிக்கப்பட்டிருக்கிறது. 
டோக்கியோவிலுள்ள ஜப்பானிய மன்னர்களின் கியோடோ அரண்மனையில் உள்ள சிறப்பு சிம்மாசனமான கிரசாந்திமம் சிம்மாசனம் பதவி ஏற்புக்குப் பயன்படுத்தப்படுகிறது. முந்தைய மன்னர் அகிஹிடோ 1989 ஜனவரி 7-ஆம் தேதி, அவரது தந்தையும் மன்னருமான ஹிரோஹிடோவின் மரணத்தைத் தொடர்ந்து ஜப்பானின் 125-ஆவது அரசராக அரியணை ஏறினார். ஜப்பானியர்கள், ஒவ்வொரு மன்னரின் ஆட்சிக்காலத்தையும் ஒரு காலகட்டமாகக் கருதுகிறார்கள். அந்தக் காலக்கட்டத்துக்கு ஒரு பெயர் சூட்டப்படுகிறது. 
மன்னர் அகிஹிடோவின் காலகட்டமான ஹெய்சே என்பதற்கு சமாதானம் ஏற்படுத்துதல் என்று பொருள். இப்போதைய மன்னர் நருஹிடோவின் காலகட்டமான ரெய்வா என்பதற்கு இணக்கமான சூழலை ஏற்படுத்துதல் என்று பொருள். 
ஜப்பானிய அரசர்களின் காலகட்டத்தைக் குறிக்கும் பெயர்களை சீன இலக்கியங்களிலிருந்துதான் தேர்ந்தெடுப்பது வழக்கம். இந்த முறை பிரதமர் ஷின்சோ அபே அந்த வழக்கத்துக்கு விடையளித்து, 1,200 ஆண்டுகளுக்கு முந்தைய ஜப்பானிய கவிதை நூலான மன்யோஷூவிலிருந்து தேர்ந்தெடுத்திருக்கிறார்.
இதற்காக ஒரு குழுவே கடந்த சில மாதங்களாகப் பணியாற்றிஇருக்கிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஜப்பானிய அரசமைப்புச் சட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. மன்னர்கள் வெறும் அடையாளமாக்கப்பட்டுவிட்டனர். மன்னரிடமிருந்து அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்பட்டுவிட்டன. வெறும் அடையாளமாக மட்டுமே மன்னரும், அரச குடும்பமும் செயல்பட்டாலும்கூட, பிரிட்டனைப் போலவே ஜப்பானிலும் மன்னருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மக்கள் மத்தியில் மிகுந்த மரியாதை நிலவுகிறது. யாரும் மன்னரைப் பெயர் சொல்லி அழைப்பதில்லை.
பேரரசர் என்று மரியாதையுடன்தான் குறிப்பிடுவார்கள்.
மன்னராக அரியணை ஏறியிருக்கும் நருஹிடோ, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்றாலும் குறிப்பிடத்தக்க கல்வித் தகுதிகளைப் பெறவில்லை. தண்ணீர் சேமிப்பு குறித்தும், நீர் மேலாண்மை குறித்தும் ஆர்வம் காட்டும் மன்னர் நருஹிடோவின் பதவிக்காலம் எப்படி இருக்கப்போகிறது என்று இப்போதே சொல்லிவிட முடியாது. ஓய்வு பெற்ற மன்னர் அகிஹிடோவின் பதவிக்காலத்தில், அவரது தந்தையின் காலகட்டம்போல ஜப்பான் போர் எதையும் எதிர்கொள்ளவில்லை. ஆனால் சுனாமிகள், எரிமலை வெடிப்புகள் போன்ற பல இயற்கைப் பேரழிவுகளை எதிர்கொண்டது.
சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலங்களில் இந்திய -ஜப்பானிய உறவு நெருக்கமானதாக இருக்கவில்லை. 1957-இல் பிரதமர் நொபுசுகே கிஷியும், 1960-இல் பிரதமர் ஹயாடோ இகேடாவும் தாங்கள் பிரதமராகப் பதவியேற்ற மூன்று மாதங்களில் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தனர். அப்போது ஜப்பானுக்கு அதிக அளவில் இரும்புத் தாதுவையும், பருத்தியையும் இந்தியா ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது. அதற்கு 24 ஆண்டுகளுக்குப் பிறகுதான், 1984-இல் ஜப்பானியப் பிரதமராக இருந்த யாசுஹிரோ நகாசோனேயின் இந்திய விஜயம் நடந்தது. பிரதமர் நரசிம்ம ராவ் இந்தியப் பிரதமரானதைத் தொடர்ந்து, பிரதமர் டோஷிகி கைஃபு இந்தியா வந்தார். அதுமுதல்தான் இந்திய - ஜப்பானிய உறவு புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியது.
2005-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்திய - ஜப்பான் கூட்டுறவு மாநாடுகள் நடந்து வருகின்றன. 2013-இல் மன்னர் அகிஹிடோவின் அரசு முறைப் பயணம், இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் சரி, பிரதமர் நரேந்திர மோடியும் சரி,ஜப்பானுடனான உறவை நெருக்கமானதாகத் தக்கவைத்துக் கொண்டார்கள் என்பதை மறுக்க முடியாது. அதேபோல, இப்போதைய ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே ஜப்பானின் நெருக்கமான நட்பு நாடாக இந்தியாவைக் கருதுகிறார்.
சீனாவில் ஜப்பானின் அந்நிய நேரடி முதலீடு 2016-இல் 953 கோடி டாலராக இருந்தது, கடந்த ஆண்டில் 1,075 கோடி டாலராக அதிகரித்திருக்கிறது. ஆனால், இந்தியாவுடனான முதலீடு அதே காலகட்டத்தில் 328 கோடி டாலரிலிருந்து 425 கோடி டாலராகத்தான் உயர்ந்திருக்கிறது. ஆனாலும்கூட, இந்தியாவில் இப்போது 1,441 ஜப்பானிய தொழில் நிறுவனங்களும், 5,102 வர்த்தக
நிறுவனங்களும் செயல்படுகின்றன. அந்த நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யும் பொருள்களை ஜப்பானுக்கும், ஏனைய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றன.
ஜப்பானில் அரியணை ஏறியிருக்கும் மன்னர் நருஹிடோ பட்டத்து இளவரசராக 1987-இல் இந்தியா வந்தார். 32 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இப்போது மன்னராக நருஹிடோவை வரவேற்க இந்தியா காத்துக் கொண்டிருக்கிறது!
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/may/11/இனி-ரெய்வா-காலகட்டம்-3149111.html
3148462 தலையங்கம் அச்சுறுத்துகிறது போதை பீதி! ஆசிரியர் Friday, May 10, 2019 03:08 AM +0530 இத்தனை நாளும் மதுப் பழக்கத்தால்தான் தமிழகம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்த நமக்கு பேரதிர்ச்சியாக அமைந்திருக்கிறது பொள்ளாச்சியிலும், மாமல்லபுரத்திலும் காவல் துறையினரால் நடத்தப்பட்ட சோதனை. மிகப் பெரிய அளவில் இளைஞர்கள் மத்தியில் போதை மருந்துப் பழக்கம் அதிகரித்து வருவது அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.
பொள்ளாச்சியில் இருக்கும் தனியார் சொகுசு ஓய்வு விடுதியில் (ரிசார்ட்) கடந்த சனிக்கிழமை அதிகாலை வேளையில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின்போது அங்கே  இளைஞர்களின் உல்லாச விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. சுமார் 160-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பல்வேறு போதைப் பொருள்களுடன் சனி, ஞாயிறு வார விடுப்பைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். இவர்களில் 112 பேர் கஞ்சா, அபின், கோகைன், போதை மாத்திரைகள், போதை மருந்து உள்ளிட்டவையின் போதையில் காணப்பட்டனர். 
போதை மருந்து உல்லாசத்தில் ஈடுபட்டிருந்த அந்த இளைஞர்களில் பெரும்பாலோர் கோயம்புத்தூரில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் கேரளத்தைச் சேர்ந்த மாணவர்கள். இவர்கள் அனைவரும் சமூக ஊடகங்களின் மூலம் போதை மருந்துகளுக்காக இணைக்கப்பட்டிருப்பவர்கள். ஒவ்வொரு வாரக் கடைசியிலும் இதுபோல இளைஞர்கள் 24 மணிநேர போதை விருந்துகளுக்கு சமூக ஊடகக் குழுக்கள் மூலம் இணைகிறார்கள். ஒவ்வொரு மாணவரும் நுழைவுக் கட்டணமாக ரூ.1,200 செலுத்துகிறார்கள்.
சோதனை நடத்தப்பட்ட தனியார் சொகுசு ஓய்வு விடுதி எந்தவித உரிமமோ, அனுமதியோ பெறாமல் நடத்தப்பட்டு வந்தது அப்போதுதான் தெரியவந்தது. காவல் துறையினருக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தெரியாமல் சொகுசு ஓய்வு விடுதி நடத்திவிட முடியும் என்பதேகூட அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
விடுதி உரிமையாளர், மேலாளர் உள்ளிட்ட 14 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 28 வயது ரஷியர் ஒருவரும் அடக்கம். அந்த மாணவர்களுக்கு, அவர்
களுக்குத் தேவைப்படும் போதைப் பொருள்களை விற்பனை செய்வது அந்த ரஷியர்தான் என்று கூறப்படுகிறது. இதுபோல, கோவை மாநகரத்தைச் சுற்றி எத்தனை விடுதிகள் செயல்படுகின்றன, போதை  விருந்துக்காக எத்தனை சமூக ஊடகக் குழுக்கள் இருக்கின்றன, அவற்றில் தொடர்புடைய இளைஞர்களின் எண்ணிக்கைதான் எவ்வளவு என்பன குறித்து  தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டால் திடுக்கிடும்  தகவல்கள் வெளிவரக்கூடும். 
கோவையில் மட்டும்தான் அப்படி என்று ஒதுக்கிவிட முடியாது என்பதை உறுதிப்படுத்துகிறது கடந்த திங்கள்கிழமை அன்று சென்னை மாமல்லபுரத்தில் சோதனையில் பிடிபட்ட சட்டவிரோதமான போதை விருந்து. மாமல்லபுரத்திலுள்ள மூன்று நட்சத்திர விடுதி ஒன்றில் காவல் துறையினர் திங்கள்கிழமை அதிகாலை வேளையில் நடத்திய சோதனையில் பொள்ளாச்சியைப் போலவே போதையில் மிதக்கும் 160 இளைஞர்கள் பிடிபட்டிருக்கிறார்கள். காவல் துறையின் வலையில் அகப்பட்டவர்களில் வெளிநாட்டவர் ஒருவரும், 7 பெண்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
மாமல்லபுரம் போதை விருந்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அனைவருமே 18 முதல் 25 வயதுப் பிரிவினர். பொள்ளாச்சியில் போதை விருந்துக்கு நுழைவுக் கட்டணம் ரூ.1,200 என்றால், அதுவே மாமல்லபுரத்தில் ரூ.3,000. போதை விருந்தில் ஈடுபட்டவர்களிடமிருந்து மது புட்டிகள், கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருள்கள், எல்.எஸ்.டி. எனப்படும் போதை மருந்து, போதை மாத்திரைகள், கோகைன், மரிஜ்வானா போன்றவை கைப்பற்றப்பட்டிருக்கின்றன. 
பொள்ளாச்சியைப் போலவே மாமல்லபுரம் போதை  விருந்தும் சமூக ஊடகக் குழுக்கள் மூலம்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதில் கலந்துகொண்ட இளைஞர்கள் அனைவரும் சென்னையிலுள்ள பல பிரபல கல்லூரிகளில் படிக்கும் மாணவ - மாணவியர். இவர்களில் 25 பேர் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் என்றால், 31 பேர் மாமல்லபுரத்தைச் சுற்றியுள்ள பல்வேறு பொறியியல் கல்லூரி மாணவர்கள். 
இதுவரை இந்தியாவிலேயே பஞ்சாபிலும் தில்லியிலும்தான் மிக அதிகமான அளவில் இளைஞர்கள் மத்தியில் மது அல்லாத ஏனைய  போதை மருந்துப் பழக்கங்கள் இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. பஞ்சாபில் ஆண்டுதோறும் சுமார் ரூ.7,500 கோடி அளவில் போதை  மருந்து விற்பனை நடைபெறுவதாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ஓர் ஆய்வு தெரிவித்தது. அந்த ஆய்வின்படி, பஞ்சாபில் 2.3 லட்சம் பேர் அபின் அடிமைகளாகவும், 1.23 லட்சம் பேர் ஹெராயின் என்கிற போதைமருந்துக்கு அடிமைகளாகவும் இருப்பதாகக் கூறப்பட்டது. 
பொள்ளாச்சியும் மாமல்லபுரமும் தெரிவிக்கும் தகவல் என்னவென்றால், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாபில் காணப்பட்ட நிலைமை இன்று இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் பரவி வருகிறது என்பதுதான். பொள்ளாச்சியும் மாமல்லபுரமும் ஏதோ விதிவிலக்குகள் அல்ல. அவற்றை ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதாகத்தான் நாம் காண வேண்டும். 
தமிழகத்தின் நகர்ப்புறங்களில் மட்டும்தானா இளைஞர்கள் மத்தியில் போதை  மருந்து பாதிப்பு காணப்படுகிறது, இல்லை, சிறுநகர் பகுதிகள் வரை பரவிவிட்டிருக்கிறதா என்பது குறித்து உடனடியாகத் தீவிர ஆய்வு நடத்தியாக வேண்டும். இணையதள போதை மருந்துக் குழுக்கள் அடையாளம் காணப்பட்டு, போதை மருந்துக்கு அடிமையாகி இருக்கும் இளைஞர் கூட்டத்தை மீட்பதற்கான போர்க்கால நடவடிக்கையை அரசும், கல்லூரிகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முடுக்கிவிட்டாக வேண்டும்!
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/may/10/அச்சுறுத்துகிறது-போதை-பீதி-3148462.html
3148205 தலையங்கம் பல்லுயிர்ப் பெருக்கம் பாதிக்கப்படுமானால்... ஆசிரியர் Thursday, May 9, 2019 09:16 AM +0530 இயற்கைக்கு எதிரான எல்லா நடவடிக்கைகளையும் மனித இனம் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது வேதனைக்குரிய உண்மை. உலகத்திலுள்ள மொத்தத் தாவர வகைகள் - உயிரினங்களில் எட்டில் ஒரு பங்கு அழிவை எதிர்கொள்வதாகப் பல்வேறு ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. அதற்குக் காரணம், உயிரிய வேற்றுமைக்கு (பயோ டைவர்சிட்டி) மனித இனம் ஏற்படுத்தும் அச்சுறுத்தல். 
ஐ.நா.வின் சார்பின் பல்வேறு நாடுகளின் உறுப்பினர்கள் அடங்கிய குழு கடந்த திங்கள்கிழமை  அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. 130 நாடுகள் அடங்கிய அந்தக் குழுவில் இந்தியாவும் இடம்பெற்றிருந்தது. பாரிஸில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையின்படி, பூமியின் நிலப்பரப்பில் 75% இடத்தையும், கடல் சூழலில் 40% அளவிலும், உள்நாட்டு நதிகள், நீர் நிலைகள் போன்றவற்றில் 50% அளவிலும் மனித இனம் மாற்றம் ஏற்படுத்தியிருக்கிறது. 
அதிகரித்த நகர்மயமாக்கல், காடுகள் அழிக்கப்படுதல், விவசாய நிலபரப்பு அதிகரித்தல் ஆகியவற்றால் இயற்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
உயிரிய வேற்றுமை குறித்த அந்த அறிக்கையின்படி, உடனடியாக இயற்கையைப் பாதுகாக்கும் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம்தான் பேரழிவு ஏற்படுவதைத் தடுக்க முடியும். சர்வதேச அளவில் மட்டுமல்லாமல், கிராம அளவிலிருந்து இதற்கான முயற்சியை மேற்கொண்டால் மிகப் பெரிய இயற்கைப் பேரழிவிலிருந்து பூவுலகைக் காப்பாற்றிவிட முடியும் என்கிறது அந்த அறிக்கை.
உலகில் ஏறத்தாழ 80 லட்சம் உயிரினங்களும், தாவர வகைகளும் காணப்படுகின்றன. அவற்றில் 55 லட்சம் பூச்சி வகைகளைச் சேர்ந்தவை. இவற்றில் அடுத்த பத்தாண்டுகளுக்குள் சுமார் 10 லட்சம் உயிரினங்களும் தாவர இனங்களும் அழிவை எதிர்கொள்ளக் கூடும் என்று கருதப்படுகிறது. 
இதற்கு மிக முக்கியமான காரணம், பூமியின் நிலப்பரப்பும், கடலும்  அளவுக்கு அதிகமாக மனித இனத்தால் பயன்படுத்தப்படுவதுதான். பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசு ஆகியவையும் காரணங்கள். உயிரினங்கள் தங்களது வாழ்விடங்களிலிருந்து வேறு வாழ்விடங்களுக்கு மாற்றப்படுவது அல்லது அகற்றப்படுவது அல்லது துரத்தப்படுவது அவற்றின் அழிவுக்குக் காரணமாகின்றன. 
கடந்த 16-ஆவது நூற்றாண்டிலிருந்து குறைந்தது 680 முதுகெலும்புள்ள விலங்கினங்கள் அழிந்துவிட்டிருக்கின்றன. உணவுக்காகவும் விவசாயத்துக்காகவும் பயன்படும் வளர்ப்பு மிருகங்களில் 9% அழிந்திருக்கின்றன. பல உயிரினங்கள் மனித இனத்தால் அவற்றின் வாழ்விடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அழிவை எதிர்கொள்கின்றன. புதைபடிவ எரிபொருள் (ஃபாஸில் ஃபூயல்), நீர், உணவு, நிலம் ஆகியவற்றில் 2,000-க்கும் அதிகமான மனித இன ஆக்கிரமிப்பு நிகழ்வதால் இயற்கையின் மீது கடுமையான அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. 
உணவுப் பயிர்களின் உற்பத்தி கடந்த அரை நூற்றாண்டில் 300% அதிகரித்திருக்கிறது. அதே நேரத்தில், மண் வளம் குறைந்துவிட்டிருப்பதால் விளைநிலப் பரப்பில் 23% அளவில் உற்பத்திக் குறைவு காணப்படுகிறது. பூமியின் மொத்த நிலப்பரப்பில் சுரங்கங்கள் ஒரு சதவீத அளவில்தான் செயல்படுகின்றன என்றாலும், அவற்றின் எதிர்வினைகள் உயிரிய வேற்றுமை மீது பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதனால் நிலத்தடி நீரின் பரப்பிலும், உயிரினங்களின் ஆரோக்கியத்திலும் பாதிப்பு ஏற்படுத்தப்படுகிறது. 
கடல் நீர் உள்பட உலகிலுள்ள நீர் வளம் அனைத்துமே மாசுபடுத்தப்படுகிறது என்கிறது அறிக்கை. ஆண்டுதோறும் 30 முதல் 40 கோடி டன் அளவிலான தொழிற்சாலை நச்சுக் கழிவுகள் நீரில் கலக்கின்றன என்கிறது அந்தக் குழுவின் ஆய்வு. கடந்த 40 ஆண்டுகளில் நெகிழியால் ஏற்படும் மாசு 10 மடங்கு அதிகரித்திருக்கிறது. 
கடந்த 20 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்குச் சராசரியாக கடல் நீரின் அளவு மூன்று மி.மீ. அதிகரித்திருக்கிறது. 1900-ஆம் ஆண்டு முதல் எடுத்துக்கொண்டால், கடல் நீரின் சராசரி மட்டம் 16 முதல் 21 செ.மீ. அதிகரித்திருக்கிறது. அதேபோல, புவி வெப்பம் 0.7 டிகிரி அதிகரித்திருக்கிறது. உலகில் வாழும் உயிரினங்களுக்கான வாழ்வாதாரம் 20% குறைந்திருக்கிறது. அதேபோல, நீர் - நிலவாழ் உயிரினங்கள் 40%, பவழப் பாறைகள் 30%, மூன்றில் ஒரு பங்கு நீர் வாழ் உயிர்கள் ஆகியவை அச்சுறுத்தப்பட்டிருக்கின்றன. 
அந்த அறிக்கையில்  குறிப்பிடப்பட்டிருக்கும் இன்னொரு முக்கியமான செய்தி, இயற்கையைப் பேணும் ஆர்வலர்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை குறித்த புள்ளிவிவரம். கடந்த 2002-க்கும் 2013-க்கும் இடையில் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்னைகளில் குரலெழுப்பிய ஆயிரத்துக்கும் அதிகமான ஆர்வலர்களும், ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இயற்கைக்கு எதிரான போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைப்பவர்களின் உயிருக்கு சுயநல சக்திகள் அரசின் உதவியுடன் முற்றுப்புள்ளி வைப்பதை அந்த அறிக்கை வேதனையுடன் சுட்டிக்காட்டுகிறது. 
எந்தவொரு நாட்டையும் குறிப்பிட்டு அந்த அறிக்கை குற்றப்படுத்தவில்லை. சர்வதேச அளவில் உயிரிய வேற்றுமையின் பாதிப்புக்கான காரணங்களை 15,000 அறிவியல்பூர்வமான தரவுகளுடனும், பல்வேறு அரசுகளின் தகவல் உதவியுடனும் அந்தக் குழு ஆராய்ந்தது. உலகிலுள்ள 50 நாடுகளைச் சேர்ந்த 145 வல்லுநர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்திய ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கும் அந்த அறிக்கை,  மனித இனத்துக்குத் தெரிவிக்கும் செய்தி இதுதான் - உயிரிய வேற்றுமையும், பல்லுயிர்ப் பெருக்கமும் பாதிக்கப்படுமானால், அதன் தொடர் வினையாக மனித இனமும் அழிவை எதிர்கொண்டாக வேண்டும்!
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/may/09/பல்லுயிர்ப்-பெருக்கம்-பாதிக்கப்படுமானால்-3148205.html
3147561 தலையங்கம் வெற்றியும்...கவலையும்... ஆசிரியர் Wednesday, May 8, 2019 01:28 AM +0530

ஒன்றன் பின் ஒன்றாக பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. கடந்த மாதம் வெளிவந்த மாநில பிளஸ் 2 தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 91.30 % என்றால், கடந்த வாரம் வெளியான சிபிஎஸ்இ என்று பரவலாக அறியப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பிளஸ் 2 தேர்வு முடிவின் தேர்ச்சி விகிதம் 83.40%. தமிழகத்தைப் பொருத்தவரை, மாநிலக் கல்வி வாரியத்தின் பிளஸ் 2 தேர்வு எழுதிய 8,69,423 மாணவ, மாணவியரில் கடந்த சில ஆண்டுகளைப் போலவே மாணவர்களைவிட மாணவிகள் கூடுதலாகத் தேர்ச்சி பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு சற்று (0.5%) குறைந்திருக்கிறது. அரசுப் பள்ளிகளைவிட (92.48%) அரசு உதவி பெறும் பள்ளிகளும் (94.53%) மெட்ரிக் பள்ளிகளும் (99.05%) அதிகத் தேர்ச்சி விகிதத்தை அடைந்திருப்பதும் எதிர்பார்த்ததுதான் என்றாலும், மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. 
பிளஸ் 2 தேர்வில் கலந்து கொண்ட 7,083 மேல்நிலைப் பள்ளிகளில் 1,281 பள்ளிகள் 100% தேர்ச்சியைப் பெற்று சாதனை படைத்திருக்கின்றன. இந்தியாவிலுள்ள 12,441 பள்ளிகளைச் சேர்ந்த 12,05,484 பேர் எழுதிய சிபிஎஸ்இ முறை பிளஸ் 2 தேர்வில், 83.40% மாணவ, மாணவியர் தேர்ச்சி  பெற்றிருக்கிறார்கள். கடந்த ஆண்டின் தேர்ச்சி விகிதத்தைவிட (83.01%) இந்த ஆண்டின் தேர்ச்சி விகிதம் அதிகம். சிபிஎஸ்இ பிரிவிலும் மாணவர்களைவிட மாணவியர்தான் அதிக விழுக்காடு அளவில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
சிபிஎஸ்இ பிரிவின் பிளஸ் 2 பொதுத் தேர்வில், அதில இந்திய அளவில் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடத்தையும் (98.20%), சென்னை மண்டலம் (92.93%) இரண்டாமிடத்தையும், தில்லி மண்டலம் (91.87%) மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன. அகில இந்திய அளவில் உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாதைச் சேர்ந்த ஹன்சிகா சுக்லா, முஸாஃபர்நகரைச் சேர்ந்த கரீஷ்மா அரோரா ஆகியோர் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த ஜி. கார்த்திக் பாலாஜி 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தைப் பிடித்திருக்கிறார். அவர்களுக்கு வாழ்த்துகள்.
தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்ட நிலையில், இப்போது மாணவ, மாணவியரின் கவனமும், முனைப்பும் அடுத்தாற்போல எந்தக் கல்லூரியில், என்ன படிப்பில் சேரலாம், இடம் கிடைக்கும் என்பது குறித்துத் திரும்பியிருக்கிறது. நுழைவுத் தேர்வுகளை எழுதினால் மட்டுமே இடம் பெற முடியும் என்பது போன்ற படிப்புகளும் ஏராளம். நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு, பிளஸ் 2 தேர்வைவிட நீட் தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்தும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
இந்த ஆண்டு சிபிஎஸ்இ பிரிவின் பிளஸ் 2 தேர்வில் தேர்வு எழுதியவர்களில் 94,299 பேர், 90%-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள். அதிக மதிப்பெண்களை வாரி வழங்கும்போது, பல படிப்புகளுக்கான நுழைவு மதிப்பெண் உச்சத்தை எட்டிவிடுகிறது. சில படிப்புகளுக்கு 100% மதிப்பெண் பெற்றிருந்தால்தான் இடம் கிடைக்கும் என்பதுபோன்ற நிலைமை ஏற்பட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. பிளஸ் 2  தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே தரமான பல்கலைக்கழகங்களில் சில படிப்புகளுக்கான அனுமதியை உறுதி செய்யாது என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டது.
கல்வித் துறை பல சவால்களை எதிர்கொள்கிறது என்றாலும், இரண்டு முக்கியமான பிரச்னைகள் முன்னுரிமையும், முக்கியத்துவமும் பெறுகின்றன. ஒருபுறம் தரமான உயர்கல்வி நிலையங்கள் அதிக அளவில் இல்லாமல் இருக்கின்றன. இன்னொருபுறம், மதிப்பெண் சார்ந்த கல்வி முறையால் நமது மாணவர்களின் கல்வித் தரமும், புரிதலும் குறைவாகக் காணப்படுகின்றன. இந்திய உயர்கல்வி  நிறுவனங்களில் படித்து வெளிவரும் மாணவர்களில் 53% பேர் அவர்கள் படித்த துறையில் வேலை பார்க்கத் தகுதியற்றவர்களாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இன்னொரு பிரச்னையும் எழுந்திருக்கிறது. பிளஸ் 2  தேர்வு முடிவுகளின்படி மாணவர்களைவிட மாணவியர்தான் அதிக மதிப்பெண்களும், அதிக அளவில் தேர்ச்சியும் பெறுகின்றனர். அதேபோல, உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அப்படிப் படித்து வெளிவரும் பெண்களுக்கு, அதற்கேற்ப வேலைவாய்ப்புகள் உருவாகி இருக்கின்றனவா என்றால் இல்லை. பெண் கல்விக்கு முன்னுரிமை கொடுத்துத் திட்டங்கள் தீட்டும்போது, அப்படிப் படித்துத்  தேர்ச்சி பெறும் மகளிருக்கான வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தவும், அதிகரிக்கவும் எந்தவித முயற்சியும் எடுக்கப்படாமல் போவது, உளவியல் ரீதியிலான பாதிப்பைப் பலருக்கும் ஏற்படுத்துகிறது.
மதிப்பெண்கள் பெற்றால் மட்டும்தான் வருங்காலம் என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தைப் பள்ளிகளும், பெற்றோர்களும் மாணவ, மாணவியரின் மனதில் ஆழமாக ஏற்படுத்தி விடுகிறார்கள். அதிக மதிப்பெண்கள் பெறாதவர்கள், மதிப்பெண் பெற்றும் தாங்கள் விரும்பிய படிப்பில் இடம் பெற முடியாதவர்கள், தேர்வில் வெற்றி பெறாதவர்கள் ஆகியோர் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆட்படுவது அதிகரித்து வருகிறது. அவர்களில் சிலர் தற்கொலைக்குத் துணிந்துவிடுகிறார்கள். தெலங்கானாவின் மாநில வாரியத் தேர்வு முடிவுகள் 20 மாணவர்களின் தற்கொலைக்குக் காரணமாகி இருக்கிறது.
தேர்வு முடிவுகளும், அதிகரித்த தேர்ச்சி விகிதமும் மகிழ்ச்சி அளிப்பதைவிட, வருங்காலம் குறித்த திகைப்பைத்தான் அதிகரிக்கிறது!
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/may/08/வெற்றியும்கவலையும்-3147561.html
3146883 தலையங்கம் நம்பிக்கை ஏற்படுத்தவில்லை... ஆசிரியர் Tuesday, May 7, 2019 01:40 AM +0530 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழு, குற்றச்சாட்டில் எந்தவித ஆதாரமும் இல்லை என்று தெரிவித்திருக்கிறது. நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அந்தக் குழுவின் அறிக்கை வெளியிடப்படாமல் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  
இது குறித்து உச்சநீதிமன்றம்  திங்கள்கிழமையன்று அறிக்கை வெளியிட்டது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது உச்சநீதிமன்றத்தின் முன்னாள் ஊழியர் சுமத்திய குற்றச்சாட்டுகளில் எந்தவித ஆதாரமும் காணப்படவில்லை என்பதுடன் அந்த அறிக்கை முடிந்துவிட்டது. 
கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிரான தன்னுடைய குற்றச்சாட்டுகளை 22 உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு பிரமாணப் பத்திரத்தின் வாயிலாக உச்சநீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் அனுப்பியிருந்தார். அதன் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்ட குழுவின் விசாரணையில் அவர் கலந்துகொள்ள மறுத்துவிட்டார். 
நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான குழு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயை விசாரித்தது. எதிர்த்தரப்பு வாதமில்லாமல் நடத்தப்பட்ட விசாரணை முடிவு இப்போது வெளியிடப்பட்டிருக்கிறது. 
நீதிபதி பாப்டே குழுவின் விசாரணையில் தனக்கு நீதி கிடைக்காது என்றும், விசாரணைக் குழு நேர்மையான விசாரணை நடைமுறையைக் கடைப்பிடிக்காது என்றும் தனது அச்சத்தை வெளிப்படுத்தியிருந்தார் அந்தப் பெண் ஊழியர். நீதித்துறையின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கு எதிராக தான் குற்றஞ்சாட்டியிருக்கும் நிலையில், தனது தரப்பு நியாயத்தை முன்வைப்பதற்குச் சமமான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது அவரது குற்றச்சாட்டு.
அவருடைய கூற்றுப்படி, நீதிமன்ற விசாரணை வெளிப்படையாக இல்லை. விசாரணை நடைமுறை குறித்துத் தனக்குத் தெரிவிக்கப்படவில்லை, விசாரணை பதிவு செய்யப்படவில்லை, தன்னுடைய வாக்குமூலத்தின் நகல் தனக்குத் தரப்படவில்லை என்பவையெல்லாம் விசாரணையிலிருந்து தான் விலகிக் கொண்டதற்கான காரணங்கள் என்று அந்தப் பெண் ஊழியர் குறிப்பிட்டிருக்கிறார். குற்றஞ்சாட்டிய பெண் ஊழியர் வழக்குரைஞரை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை என்பது அவர் விசாரணையில் கலந்துகொள்ளாததற்கு மிக முக்கியமான காரணம்.
குற்றஞ்சாட்டப்பட்டிருப்பது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் மீது; விசாரணைக் குழுவில் இருப்பவர்கள் சட்டத்தின் அத்தனை அம்சங்களையும் கரைத்துக் குடித்த அனுபவசாலிகளான உச்சநீதிமன்ற நீதிபதிகள். இந்தப் பின்னணியில் சட்டம் குறித்த புரிதல் இல்லாத உச்சநீதிமன்ற அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர், தன் சார்பில் வாதாட வழக்குரைஞரை வைத்துக்கொள்ளக் கூடாது என்று தடுக்கப்பட்டது இயற்கை நீதியல்ல. அதுமட்டுமல்லாமல், விசாரணை நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களிடம் மட்டுமல்ல, தனது வழக்குரைஞரிடமேகூட அவர் தெரிவிக்கக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டதை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்ததில் வியப்பொன்றுமில்லை. விசாரணை நடத்தப்படும் சூழலே தன்னை அச்சுறுத்துவதாகவும், அச்சம் ஏற்படுத்துவதாகவும் இருந்ததால்தான் தொடர்ந்து விசாரணையில் கலந்துகொள்வதில்லை என்று முடிவெடுத்ததாக அந்தப் பெண் ஊழியர் தெரிவித்திருக்கிறார். 
பாலியல் தொந்தரவு வழக்குகளில் சாதாரணமாகக் கடைப்பிடிக்கப்படும் நடைமுறையை நீதிபதி பாப்டே குழு ஏன் பின்பற்றவில்லை என்பது வியப்பளிக்கிறது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டு என்பதால், நேர்மையான விசாரணையை நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். முறையான சட்ட நடவடிக்கையோ, விசாகா குழுவின் விதிமுறைகளோ, இதுபோன்ற வழக்குகளில் உச்சநீதிமன்றம் இதற்கு முன்னால் வழங்கிய தீர்ப்புகளோ விசாரணைக் குழுவை அமைத்ததிலும், அதன் நடைமுறையிலும் பின்பற்றப்படாமல் போனது ஆச்சரியமாக இருக்கிறது. 
குழுவின் உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இருக்கும் நீதிபதிகள். குழுவின் தலைமைப் பொறுப்பில் பெண் நீதிபதி இல்லை. நீதித்துறைக்கு தொடர்பில்லாத ஒருவர் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்படவில்லை. குறைந்தபட்சம், முன்னாள் உச்சநீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவிடம் விசாரிக்கும் பொறுப்பை ஒப்படைத்திருக்கலாம். 
விசாரணைக் குழுவுக்கு கடந்த மே 2-ஆம் தேதி நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். குற்றஞ்சாட்டியிருக்கும் பெண் ஊழியர் கலந்துகொள்ளாத நிலையில், ஒரு தரப்பு விசாரணையாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீதான விசாரணை தொடரக் கூடாது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். கடந்த வாரம் விசாரணைக் குழுவைச் சந்தித்து தன்னுடைய கருத்துகளை அவர் தெரிவித்திருக்கிறார். குற்றஞ்சாட்டியிருக்கும் பெண் ஊழியரின் வேண்டுகோளின்படி, வழக்குரைஞரை வைத்துக்கொள்ள விசாரணைக் குழு அனுமதிக்க வேண்டும் அல்லது நடுநிலையார் ஒருவரின் தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது நீதிபதி சந்திரசூட் அளித்த ஆலோசனை. 
நீதி வழங்கப்பட்டால் மட்டும் போதாது, நீதி முறையாக வழங்கப்பட்டிருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவும் வேண்டும். நீதிபதி பாப்டே குழுவினர் அளித்திருக்கும் நற்சான்றிதழ், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு வேண்டுமானால் ஆறுதல் அளிக்கலாம். நீதித்துறையின் மீது சுமத்தப்பட்டிருக்கும் களங்கத்தைத் துடைக்கப் பயன்படாது.
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/may/07/நம்பிக்கை-ஏற்படுத்தவில்லை-3146883.html
3146511 தலையங்கம் வரும்முன் காத்தோம்... ஆசிரியர் Monday, May 6, 2019 02:55 AM +0530 ஒடிஸா மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது. பெருமளவிலான சேதம் ஏற்பட்டிருந்தாலும்கூட, அதிக அளவில் உயிரிழப்பு ஏற்படுத்தாமல் பானி புயல் தனது சீற்றத்தை வெளிப்படுத்தி ஓய்ந்திருக்கிறது. ஒடிஸா அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலகமே வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறது.
 இந்திய மாநிலங்களில் கடந்த நூறாண்டுகளில் சுமார் நூறு புயல்களால் தாக்கப்பட்டிருக்கும் மாநிலம் ஒடிஸா. 20 ஆண்டுகளுக்கு முன்பு 250 கி.மீ. வேகத்தில், 1999 அக்டோபர் 29-ஆம் தேதி ஒடிஸாவின் தலைநகர் புவனேஸ்வரத்தைத் தாக்கிய கடும் புயலுக்கு அடுத்தபடியாக இப்போது பானி புயல் 160 முதல் 175 கி.மீ. வேகத்தில் அந்த மாநிலத்தைத் தாக்கி ஓய்ந்திருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு தாக்கிய புயலில் 9,688 பேர் உயிரிழந்தார்கள் என்றால், இந்த முறை ஒடிஸா அரசின் முன்னேற்பாடுகளால் உயிரிழப்புகள் சுமார் 34 என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.
 கடந்த 30 ஆண்டுகளில் ஒடிஸாவையும் வங்கக் கடலோரத்தையும் நான்கு கடுமையான புயல்கள் தாக்கியிருக்கின்றன. இப்போது பானியுடன் சேர்த்து எண்ணிக்கை ஐந்தாகிறது. ஒடிஸா மாநிலத்தின் 13 மாவட்டங்களை பானி புயல் சின்னாபின்னமாக்கி நகர்ந்திருக்கிறது. ஒரு கோடிக்கும் அதிகமானோர் உடைமைகளை இழந்து நடுத்தெருவில் நிற்கிறார்கள். எல்லா அத்தியாவசியத் தேவைகளும் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. தகவல் தொடர்பு முற்றிலுமாக இல்லாத நிலை. வீடுகள், வணிக நிறுவனங்கள் மட்டுமல்லாமல், சாலைகள், பாலங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட எல்லா கட்டமைப்பு வசதிகளும் பானி புயலின் கொடூரத் தாக்குதலில் சிதைந்து கிடக்கின்றன.
 புரி, கோர்தா மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன என்றால், கடலோர மாவட்டங்களான கட்டக், பத்ரக், கேந்திராபரா, ஜகத்சிங்பூர், பாலாசோர், மயூர்பன்ஜ், கியோன்ஞ்சர், தென்கானால், நயாகர் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கட்டமைப்பு வசதிகள், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, தகவல் தொடர்பு இணைப்பு ஆகியவை அரசுக்கு மிகவும் சவாலாக உயர்ந்திருக்கின்றன. நல்லவேளையாக விமான நிலையங்கள் பாதிக்கப்பட்டாலும்கூட, விமானப் போக்குவரத்தைத் தாமதமில்லாமல் தொடங்க முடிந்திருக்கிறது. புவனேஸ்வர் ரயில்நிலையம் சிதைந்து கிடந்தாலும்கூட, ரயில் தொடர்பு இன்னும் ஓரிரு நாள்களில் சீரமைக்கப்பட்டுவிடும் என்று தெரிகிறது.
 பானி புயலை எதிர்கொள்ள மாநில அரசும், பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினரும் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கவை. ஏறத்தாழ 11 லட்சத்துக்கும் அதிகமானோர் புயல் தாக்குவதற்கு முந்தைய நாளே பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டிருப்பதை அசுர சாதனை என்றுதான் சொல்ல வேண்டும்.
 கஞ்சம் மாவட்டத்தில் மட்டும் 3 லட்சத்துக்கும் அதிகமானோரும், புரி மாவட்டத்தில் 1.5 லட்சத்துக்கும் அதிகமானோரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். பலரும் தங்களது வீடுகளையும் உடைமைகளையும் விட்டுவிட்டு வெளியேற மறுத்த நிலையில், பிரச்னையின் உக்கிரத்தை நிவாரணப் பணியினர் அவர்களுக்கு எடுத்துச்சொல்லி ஒப்புக் கொள்ள வைத்தது மிகப் பெரிய சாதனை.
 400-க்கும் அதிகமான பாதுகாப்பு மையங்கள், சுமார் 1,000 சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அங்கெல்லாம் மக்கள் தங்க வைக்கப்பட்டனர். புயல் பாதிப்புப் பகுதிகளில் உடனடி நிவாரணப் பணிகளுக்காக 300 பேரிடர் நிர்வாகக் குழுவினர் முன்னெச்சரிக்கையாக அமர்த்தப்பட்டனர். 1,000-க்கும் அதிகமான மருத்துவ முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
 "ஒவ்வோர் உயிரும் முக்கியமானது' என்பதுதான் நிவாரணப் பணியினருக்கு ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் விடுத்திருந்த செய்தி. 1,000-க்கும் அதிகமாக பிரசவத்திற்குக் காத்திருந்த பெண்கள் முன்னுரிமையுடன் மருத்துவமனைகளில் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டதை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இதற்கு முன்னால் கடந்த சில ஆண்டுகளில் நாம் சந்தித்த ஹுட்ஹுட், பைலின், டிட்லி, தானே, வர்தா, ஒக்கி, கஜா புயல்களிலிருந்து தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினர் அனுபவ ரீதியாக அறிந்து கொண்ட பாடங்கள், பானி புயலை அதிக உயிரிழப்பில்லாமல் எதிர்கொள்ள உதவியது எனலாம்.
 பானி புயல் பூமத்திய ரேகைக்கு அருகில் உருவாகி கடலிலேயே பல நாள்கள் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது. அதனால், கடலிலிருந்து கடல் வெப்பத்தால் உருவாகும் ஈரப்பசையுள்ள காற்றை உள்வாங்கியிருந்தது. அதிசக்தி வாய்ந்த புயல் உருவாகி வருவதை முன்கூட்டியே அறிந்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததால்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடிந்தது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
 வங்கதேசத்தால் சூட்டப்பட்டிருக்கும் "ஃபோனி' ("பானி' புயலுக்கு "ஃபோனி' என்பதுதான் சரியான உச்சரிப்பு.) என்கிற பெயருக்கு நல்ல பாம்பின் படம் என்று பொருள். நல்ல பாம்பின் சீற்றத்தைப் போலவே பானி புயலும் ஒடிஸாவில் தனது சீற்றத்தைக் காட்டி மறைந்திருக்கிறது.
 இதுபோன்ற இயற்கைப் பேரிடர் பாதிப்புகளுக்கு பருவநிலை மாற்றமும் ஒரு முக்கியமான காரணம் என்று யுனிசெஃப் அமைப்பு எச்சரித்திருக்கிறது. பருவநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் கடல்நீர் அளவால் புயல் உருவாகிறது என்றும், அதனால் கடலோரப் பகுதிகளில் பலத்த மழையுடன் பாதிப்புகள் ஏற்படுவதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்திருக்கிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க முனைப்புடன் நடவடிக்கை எடுக்காமல் போனால், கடலோரப் பகுதிகள் இதுபோல புயலால் பாதிக்கப்படுவதைத் தடுக்க முடியாது.
 
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/may/06/வரும்முன்-காத்தோம்-3146511.html
3145121 தலையங்கம் ஆறுதல், அவ்வளவே! ஆசிரியர் Saturday, May 4, 2019 01:32 AM +0530
பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது என்கிற பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்திருக்கிறது. இது கடந்த பல ஆண்டுகளாக இந்தியா தொடர்ந்து எழுப்பிவரும் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி என்பதில் சந்தேகம் இல்லை. 
பாகிஸ்தானைச் சேர்ந்த மசூத் அஸார், போர்ச்சுக்கல் நாட்டு போலி கடவுச்சீட்டில் இந்தியாவுக்குள் நுழைந்து ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத சதியில் ஈடுபட்டு வந்தவர். 1994-ஆம் ஆண்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டவர். 1999-ஆம் ஆண்டில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் காந்தகாருக்குக் கடத்தப்பட்டபோது பயணிகளை விடுவிப்பதற்காக சிறையில் இருந்த மசூத் அஸாரை வேறுவழியின்றி இந்தியா விடுவிக்க வேண்டி வந்தது. அதுமுதல் இந்தியாவுக்கு எதிரான பல்வேறு பயங்கரவாத சதிகளில் ஈடுபட்டு வருபவர் மசூத் அஸார். 
புல்வாமாவில் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல். 2016-ஆம் ஆண்டு பதான்கோட் விமானப் படை தாக்குதல் ஆகியவை மசூத் அஸாரின் திட்டமிடல்தான். 2008 மும்பை தாக்குதலிலும் அவருக்குத் தொடர்புண்டு. 2016 பதான்கோட் தாக்குதலைத் தொடர்ந்தும், 2017 உரி தாக்குதலைத் தொடர்ந்தும் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வந்தது. 
ஐ.நா. பாதுகாப்பு சபையின் அல்காய்தா தடை குழுவின் தீர்மானம் 1267-இன் கீழ் மசூத் அஸாரை பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பத்தாண்டுகளுக்கு முன்பே மும்பைத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா முன்வைத்தது. 
அந்தப் பட்டியலில் லஷ்கர்-ஏ-தொய்பாவின் உறுப்பினர்களும் அதன் தலைவர் ஹபீஸ் சயீதும் சேர்க்கப்பட்டார்கள். ஆனால், மசூத் அஸார் இடம்பெறவில்லை. 
இந்த ஆண்டின் தொடக்கத்திலும், மார்ச் மாதத்திலும் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் ஆதரவுடன் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கான தீர்மானத்தை பிரான்ஸ் கொண்டுவந்தபோதுகூட சீனா அதற்கு முட்டுக்கட்டை போட்டது. மசூத் அஸார் சீனாவின் ஆதரவு பெற்ற பயங்கரவாதி என்கிற அவப் பெயர் உருவாகிவிட்டிருப்பதைத் தொடர்ந்து வேறுவழியில்லாமல் சீனா தன்னுடைய பிடிவாதத்தை இப்போது தளர்த்திக் கொண்டிருக்கிறது.
சீனாவின் பிடிவாதம் தளர்ந்து, சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அஸாரை ஐ.நா. அறிவித்ததற்கு இந்தியா கொடுத்த அழுத்தத்தைவிட, அமெரிக்கா முன்னெடுத்த நடவடிக்கைகள்தான் காரணம். மசூத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை சீனா தடுத்தால், இந்தப் பிரச்னையை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் விவாதத்துக்கு கொண்டு செல்லப்போவதாக அமெரிக்கா எச்சரித்ததுதான், சீனாவின் பிடிவாதம் தளர்ந்ததற்கு முக்கியமான காரணம். 
ஐ.நா. பாதுகாப்பு சபையில் மசூத் அஸார் பிரச்னை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டால், சீனா வெளிப்படையாக ஒரு சர்வதேச பயங்கரவாதியை ஆதரித்தும் நியாயப்படுத்தியும் பேச வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதற்கு சீனா தயாராக இருக்கவில்லை. அதுமட்டுமல்ல, அல்காய்தா தடை குழுவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தோனேஷியா உலகிலேயே அதிக அளவில் முஸ்லிம்கள் வாழும் நாடு. அந்த நாடே மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு ஆதரவளிக்கும் நிலையில், சீனாவும் பாகிஸ்தானும் பலவீனப்பட்டுவிட்டன. இதுதான் மசூத் அஸார் மீதான நடவடிக்கையின் உண்மையான பின்னணி. 
தீர்மானம் முழுமையான வெற்றி என்று கூறிவிட முடியாது. 
ஐ.நா. பாதுகாப்பு சபை வெளியிட்டிருக்கும் தீர்மானத்தில் இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களில் மசூத் அஸாரின் தொடர்பு குறித்தோ, ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத ஊடுருவலின் பின்னணியில் அவர் இருப்பது குறித்தோ எதுவும் கூறப்படவில்லை. புல்வாமா தாக்குதல் குறித்த குறிப்பும் கடைசி நேரத்தில் அகற்றப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகுதான் சீனா ஆட்சேபம் தெரிவிக்காமல் தீர்மானம் நிறைவேற வழிகோலியிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
அல்காய்தா தடை குழுவின் தீர்மானம் 1267-இன் கீழ் அறிவிக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த 20 பயங்கரவாதிகளில் மசூத் அஸாரும் ஒருவர் என்பது பாகிஸ்தானுக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை. அதே நேரத்தில், இதனால் மட்டுமே மசூத் அஸாரின் செயல்பாடுகள் முழுமையாக முடக்கப்படும் என்று கருதிவிடவும் முடியாது. 
ஐ.நா.வால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானிய பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-ஏ-தொய்பாவின் தலைவர்  ஹபீஸ் சயீது அந்த நாட்டில் சுதந்திரமாக உலவுகிறார் என்பது மட்டுமல்ல, நிதி திரட்டுவது, பிரசாரம் செய்வது என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். பாகிஸ்தானிய அரசு அந்த நாட்டிலிருந்து செயல்படும் அத்தனை பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகளையும் துணிந்து அடக்கவும், ஒடுக்கவும், முடக்கவும் முற்பட்டாலொழிய பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட்டு விடாது. 
மசூத் அஸார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருப்பதால் சர்வதேச நாடுகளிலுள்ள அவரது சொத்துகள் முடக்கப்பட்டு, அவரது பயணங்கள் தடுக்கப்படும். ஆயுதங்கள் கிடைப்பது தடைபடும். ஆனால், பாகிஸ்தானின் மறைமுக ஆதரவு இருக்கும்வரை ஹபீஸ் சயீதாக இருந்தாலும், மசூத் அஸாராக இருந்தாலும், எந்த பயங்கரவாத அமைப்பாக இருந்தாலும், அவர்களது பயங்கரவாதச் செயல்பாடுகள் தொடரத்தான் செய்யும். இந்தியா ஆறுதல் அடையலாமே தவிர, நிம்மதிப் பெருமூச்சு விட்டுவிட முடியாது.
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/may/04/ஆறுதல்-அவ்வளவே-3145121.html
3144514 தலையங்கம் யாகாவாராயினும்... ஆசிரியர் Friday, May 3, 2019 01:48 AM +0530 தேர்தல் ஆணையம் தரக்குறைவான பரப்புரைக்காக ஏற்கெனவே உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சமாஜவாதி கட்சித் தலைவர்களில் ஒருவரான ஆசம்கான், பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவி மாயாவதி, பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் மேனகா காந்தி ஆகியோருக்கு பிரசாரத் தடை விதித்து எச்சரித்திருக்கிறது. இவர்கள் மீதான குற்றச்சாட்டு மத ரீதியிலான உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் பரப்புரையாற்றினார்கள் என்பதுதான். 
சுதந்திர இந்தியாவின் முதல் கால் நூற்றாண்டு காலம் தலைசிறந்த ஜனநாயக வாதிகளையும், கொள்கைப் பிடிப்புள்ள அரசியல் தலைவர்களையும் கொண்டிருந்தது. அவசர நிலை பிரகடனத்தைத் தொடர்ந்து 1977-இல் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு  இந்திரா காந்தி தலைமையிலான அன்றைய காங்கிரஸ் ஆட்சியை எதிர்க்க முற்பட்டபோதுகூட, தரக்குறைவான வார்த்தைப்  பிரயோகங்களைக் கையாளவில்லை. இந்திரா காந்தியும் சரி, எதிர்க்கட்சிகளின் கொள்கை முரண்பாடுகளையும், பிரதமர் பதவி மோகத்தையும், ஒற்றுமையின்மையையும் விமர்சித்தாரே தவிர எந்தவொரு தலைவரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை. 
1989-இல் போஃபர்ஸ் ஊழலின் பின்னணியில் இடதுசாரிகள், பாரதிய ஜனதா கட்சி, பல மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைந்து தேசிய முன்னணி என்கிற பெயரில் ராஜீவ் காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராகக் களமிறங்கியபோதும்கூட தனிப்பட்ட முறையிலான விமர்சனங்கள் முன்வைக்கப்படவில்லை. போஃபர்ஸ் ஊழலில் சோனியா காந்தியின் குடும்ப உறுப்பினர்களான குவாத்ரோச்சி உள்ளிட்டவர்களின் தொடர்பு விமர்சிக்கப்பட்டதே தவிர, முறையற்ற விமர்சனங்களில் எந்தவொரு கட்சியும் ஈடுபடவில்லை. 1991-இல் நடந்த 10-ஆவது மக்களவைக்கான தேர்தலுக்குப் பிறகுதான், அரசியல் தரம் தாழ்ந்து ஜனநாயகப் பண்புகள் வலுவிழக்கத் தொடங்கின.
கடந்த 16-ஆவது மக்களவைத் தேர்தலில் இருந்து, அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் தனிப்பட்ட முறையிலான தாக்குதல்களின் அடிப்படையில் மாறியிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், 2012-இல் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின்போது அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை மரண வியாபாரி  என்று அன்றைய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி குற்றஞ்சாட்டியதில் இருந்து அரசியல் நாகரிகத்தின் வீழ்ச்சி தொடங்கியது என்று கூறலாம். 
அதன் எதிர்வினையாக பாஜகவினரும் சோனியா காந்தியையும், அவரது குடும்பத்தினரையும் வெளிநாட்டவர்கள் என்று குற்றஞ் சாட்டி, அவர்களது இத்தாலியத் தொடர்பை தேர்தல் பரப்புரையாக்கினர். அவையெல்லாம் சகித்துக்கொள்ளக் கூடியவை என்று மாற்றி விட்டிருக்கிறது இப்போதைய  17-ஆவது மக்களவைக்கான அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம்.
தமிழகத்தில் ஆரம்பம் முதலே திமுகவின் அரசியல் பிரசாரங்கள் தனிப்பட்ட முறையிலான தாக்குதலின் அடிப்படையில்தான் அமைந்து வந்திருக்கின்றன. தொடக்க காலத்தில் ராஜாஜியையும், அதற்குப் பிறகு காமராஜரையும், தொடர்ந்து எம்ஜிஆர், ஜெயலலிதாவையும் திமுகவின் மூத்த தலைவர்கள் நாக்கூசும் விதத்தில் எப்படியெல்லாம் விமர்சித்தார்கள் என்பது வரலாறு. 
திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அந்தக் கட்சியின் அணுகுமுறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், முன்னாள் துணை முதல்வராகவும், இன்றைய எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கொலைகாரன், மண்புழு என்றெல்லாம் தேர்தல் பிரசாரத்தின்போது வசைமாரி பொழிந்தது முகம் சுளிக்க வைத்தது. அவரிடமிருந்து இப்படிப்பட்ட அணுகுமுறையை மக்கள் எதிர்பார்க்கவில்லை.
காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராகவும் இருக்கும் ராகுல் காந்தியின் பிரசாரம் கண்ணியக்குறைவானது என்பது மட்டுமல்ல, அவர் வகிக்கும் பதவிக்கு கௌரவம் ஏற்படுத்துவதாகவும் இல்லை. 
பிரதமர் நரேந்திர மோடி குறித்து மேடைகளில் வாய்க்கு வந்தபடி அவர் ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டுவதும் விமர்சிப்பதும் கடும் கண்டனத்துக்கு ஆளாகியிருக்கிறது. 
ரஃபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கூறாத ஒரு கருத்தை நீதிமன்றம் குறிப்பிட்டதாகக் கூறி பிரதமர் மோடி திருடன் என்கிற ராகுல் காந்தியின் பரப்புரைக்கு மன்னிப்புக் கோரச் சொன்னது உச்சநீதிமன்றம். மன்னிப்புக் கோராமல் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று பதிலளித்ததன் விளைவாக நீதிமன்றத்தின் கோபத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் அவர். ஒரு தேசியக் கட்சியின் தலைவருக்கான அணுகுமுறை ராகுல் காந்தியிடம் காணப்படவில்லை. 
இவையெல்லாம்கூடப் பரவாயில்லை. பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்கத் தேர்தல் பிரசாரத்தின்போது, தேர்தல் முடிவுக்குப் பிறகு 40 திரிணமூல் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவுக்குக் கட்சி மாறத் தயாராக இருக்கிறார்கள் என்று கூறியிருப்பது, அவர் வகிக்கும் பதவியின் கௌரவத்தையே குலைப்பதாக இருக்கிறது. இந்த அளவுக்குத் தரம் தாழ்ந்துபோய், கட்சித் தாவலை ஊக்குவிக்கும் விதத்தில் இதுவரை எந்வொரு இந்தியப் பிரதமரும் பேசியதில்லை. 
தேர்தல் வெற்றி - தோல்விக்காக, மூன்றாம் தரப் பேச்சாளர்களைப்போல, பிரதமர் பதவி வகிப்பவரும் பிரதமராகத் துடிப்பவரும் தரம் தாழ்ந்து வசைமாரி பொழியும் அரசியல் சூழல் வரும்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. 
சிலப்பதிகாரப் பாயிரம் கூறுவதைப்போல, அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் நிலை ஏற்பட்டால் மட்டுமே இந்திய ஜனநாயகம் பிழைக்கும் போலிருக்கிறதே...

]]>
https://www.dinamani.com/editorial/2019/may/03/யாகாவாராயினும்-3144514.html
3143841 தலையங்கம் வரவேற்புக்குரிய தீர்ப்பு! ஆசிரியர் Thursday, May 2, 2019 01:32 AM +0530
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையேயான பிரச்னை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் மிகவும் தெளிவான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அரசியல் சாசனத்தின் உணர்வை முழுமையாகப் பிரதிபலிக்கும் தீர்ப்பாக அமைந்திருப்பதால், இனி வருங்காலத்தில் இந்தியாவில் ஆளுநர்  முதல்வர் அதிகாரப் பகிர்வு குறித்த பிரச்னைகள் எழும்போதெல்லாம் இந்தத் தீர்ப்பு மேற்கோள் காட்டப்படும்.
புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கிரண் பேடி நியமிக்கப்பட்டது முதலே, வே. நாராயணசாமி தலைமையில் அமைந்த காங்கிரஸ் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் தொடங்கிவிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைக் கலந்தாலோசிக்காமல் துணைநிலை ஆளுநர் அதிகாரிகளுக்கு தன்னிச்சையாக உத்தரவுகளைப் பிறப்பிக்கத் தொடங்கியபோது அதிகாரிகள் தர்மசங்கடத்தில் ஆழ்ந்தனர். அரசுக்கு இணையாக ஆய்வுக் கூட்டங்களை நடத்துவது, அரசு ஆவணங்களை அதிகாரிகளிடம் கோரிப்பெறுவது, அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிப்பது என்று துணைநிலை ஆளுநர் செயல்படத் தொடங்கியபோது புதுச்சேரி அரசு அநேகமாக ஸ்தம்பித்துவிட்ட நிலையை எட்டியது. 
பிரச்னை கைமீறிப் போனபோது, புதுச்சேரி முதல்வரும் அமைச்சர்களும் துணைநிலை ஆளுநர் மாளிகை முன்னால் தெருவில் உட்கார்ந்து போராட வேண்டிய கேலிக்கூத்தான சூழல் ஏற்பட்டது. அந்த நிலையில்தான் புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமி நாராயணன், துணைநிலை ஆளுநரின் செயல்பாடுகளுக்குக் கட்டுப்பாடு விதிக்க சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். 
ஆளுநர்களுக்கும், முதல்வர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவது என்பது புதிதொன்றுமல்ல. 198384இல் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என்.டி. ராமாராவ் ஆந்திர முதல்வராக இருந்தபோது, மத்திய காங்கிரஸ் ஆட்சியால் நியமிக்கப்பட்ட ஆளுநர் தாகூர் ராம்லால் அவருக்குக் கொடுத்த தொந்தரவுகள் சொல்லி மாளாது. இதய அறுவைச் சிகிச்சைக்காக முதல்வர் என்.டி. ராமாராவ் அமெரிக்கா சென்றிருந்தபோது, ஆளுநர் ராம்லால் நிதியமைச்சராக இருந்த பாஸ்கர் ராவை முதல்வராக்கி மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தினார். பெரும் போராட்டத்திற்குப் பிறகு ராமாராவ் தன்னுடைய சட்டப்பேரவை பெரும்பான்மையை நிரூபித்து ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டும் முதல்வர் பதவியை கைப்பற்ற வேண்டியிருந்தது.
கேரளத்தில் ஈ.கே. நாயனார் முதல்வராக இருந்தபோது, அப்போதைய ஆளுநராக இருந்த ராம்துலாரி  சின்ஹா இடதுசாரி கூட்டணி அமைச்சரவைக்கு ஏற்படுத்திய பிரச்னைகள் ஏராளம். திருவனந்தபுரம் ஆளுநர் மாளிகையில் இருந்துதான் கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியே செயல்படுகிறது என்று விமர்சிக்கப்படும் அளவுக்கு ஆளுநர் ராம்துலாரி சின்ஹா செயல்பட்டார். அதேபோல, குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது ஆளுநராக இருந்த கமலா பெனிவாலுக்கும் அவருக்கும் நடந்த பனிப்போர் உலகறிந்த ரகசியம்.  
ஆளுநர்கள் நியமனம் குறித்து அரசியல் சாசன சபை மிகவும் விரிவாகவே விவாதித்தது.  ஜவாஹர்லால் நேரு, கே.எம். முன்ஷி, பி.எஸ். தேஷ்முக் உள்ளிட்ட பலர், தனது அரசியல் சாசனக் கடமைகளை நிறைவேற்றும் அளவிலான அதிகாரங்களுடன் ஆளுநர்கள் மாநில நிர்வாகத் தலைவர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று கருதினர். அமைச்சரவை எடுக்கும் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தும் அதிகாரம் அவர்களுக்குத்  தரப்பட வேண்டுமென்றும், மாநில அரசின் அன்றாட ஆணைகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டால்தான், நிர்வாகம் எப்படி நடக்கிறது என்பது குறித்து ஆளுநர்களுக்குத் தெரியும் என்றும் பி.எஸ். தேஷ்முக் ஜூன் 2, 1949இல் இது குறித்த விவாதத்தின்போது கருத்துத் தெரிவித்திருக்கிறார். 
1967 தேர்தலில் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் ஆட்சி அமைந்தபோதுதான் இந்தியக் கூட்டாட்சித் தத்துவம் குறித்த பல கேள்விகள் எழும்பின. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், பல மாநிலங்களில் எதிர்க்கட்சி ஆட்சிகளும் ஏற்பட்ட நிலையில், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் மூத்த காங்கிரஸ் தலைவர்களாகவும் இருந்ததால், பிரச்னைகள் ஏற்படத் தொடங்கியதில் வியப்பில்லை. 
இப்படியொரு சூழல் ஏற்படும் என்பதை அரசியல் சாசன சபை உணர்ந்து விவாதித்திருக்கிறது என்பதுதான் ஆச்சரியம். 1949 மே 31ஆம் தேதி அரசியல் சாசன சபை விவாதத்தின்போது வெவ்வேறு கட்சிகள் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அமைக்கும்போது, ஆளுநர்களுடைய நிலைப்பாடு எப்படி இருக்கும் என்ற கேள்வியை விஸ்வநாத தாஸ் எழுப்பியிருக்கிறார். ஆளுநர்கள் மத்திய ஆட்சியில் இருக்கும் கட்சியின் பிரதிநிதியாகச் செயல்படமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் என்று அவர் அப்போது எழுப்பிய கேள்வி தொலைநோக்குப் பார்வையுடன் கூடியது என்பதை கடந்த அரை நூற்றாண்டு கால அரசியல் நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
யூனியன் பிரதேச அரசின் நிர்வாகியாகிய துணைநிலை ஆளுநர், புதுச்சேரி மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில்தான் செயல்பட முடியும் என்றும், துணைநிலை ஆளுநருக்கு என்று தனியாக சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவையின், அமைச்சரவையின் அதிகாரத்தைவிட அதிகமான அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு இல்லை என்றும் வழங்கப்பட்டிருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்புக்குரியது. ஜனநாயகத்தில் ஆளுநர்தான் முடிவெடுப்பார் என்றால், தேர்தலும், சட்டப்பேரவையும் அமைச்சரவையும் எதற்காக?
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/may/02/வரவேற்புக்குரிய-தீர்ப்பு-3143841.html
3143208 தலையங்கம் உலகமயம் வாழ்க! ஆசிரியர் Wednesday, May 1, 2019 01:33 AM +0530 உலகமயம் என்கிற பெயரில் பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்குக் கதவுகளை திறந்துவிடும்போது அதன் பின்விளைவுகளையும் தேசம் எதிர்கொள்ளத்தான் வேண்டும். இதைக் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் பல்வேறு நிகழ்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. அந்த வரிசையில் இப்போது பெப்சிகோ நிறுவனத்தால் வழக்கு தொடரப்பட்டிருக்கும் குஜராத் மாநில விவசாயிகளின் பிரச்னையும் சேர்ந்து கொள்கிறது. 
பெப்சிகோ நிறுவனம் பெப்சி குளிர்பானம் மட்டுமல்லாமல் உருளைக்கிழங்கிலிருந்து தயாரிக்கும் லேஸ் உள்ளிட்ட நொறுக்குத் தீனிப் பொருள்களையும் இந்தியாவில் சந்தைப்படுத்துகிறது. அதற்குத் தேவைப்படும் உருளைக்கிழங்கை ஒப்பந்த முறையில் விவசாயிகளிடமிருந்து அந்த நிறுவனம் பெறுகிறது. இதற்காக எஃப்.எல்.2027 என்கிற ஒரு புதிய ரக உருளைக்கிழங்கை தனது ஆராய்ச்சியின் மூலம் அந்த நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.  
பெப்சிகோ மட்டுமல்லாமல் அமெரிக்க நிறுவனமான அட்லாண்டிக்கும் ஏ.டி.எல். என்கிற உருளைக்கிழங்கு ரகத்தை சந்தைப்படுத்தியிருக்கிறது. இதற்கு எந்தவிதக் காப்புரிமையும் கிடையாது. இதன் மூலமும், எஃப்.சி.5 என்கிற உருளைக்கிழங்கு ரகத்தின் மூலமும், எஃப்.எல்.2027 ரகத்திற்கு நிகரான தரத்திலுள்ள உருளைக்கிழங்குகளை உற்பத்தி செய்ய முடியும். இவை மட்டுமல்லாமல், லேடி ரொஸட்டா என்கிற டச்சு நாட்டு ரக உருளைக்கிழங்கும் இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்டிருக்கிறது. 
இந்தப் பின்னணியில்தான் இப்போது பெப்சிகோ, குஜராத் மாநிலம் சபர்கந்தாவிலுள்ள நான்கு விவசாயிகள் மீது ரூ.1 கோடி இழப்பும், ஆரவல்லி மாவட்டத்திலுள்ள பல விவசாயிகள் மீது ரூ.20 லட்சம் இழப்பீடும் கோரி ஆமதாபாத் வணிக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது. பயிர் வகை மற்றும் விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம் 2001-இன் அடிப்படையில், தனது எஃப்.எல்.2027 ரக உருளைக்கிழங்குக்கு 2016-இல் காப்புரிமை பெற்றிருப்பதாகவும், அதனால் அந்த ரக உருளைக்கிழங்கைப் பயிரிட்டதற்கு தனக்கு இழப்பீடு தர வேண்டுமென்றும் கோரியிருக்கிறது. 
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தாங்கள் எந்தவிதத்திலும் பெப்சிகோவின் உரிமையை மீறவில்லை என்று வாதிடுகிறார்கள். பாஜகவின் விவசாய அமைப்பான பாரதிய கிசான் சங்கம் உள்ளிட்ட 200-க்கும் அதிகமான அமைப்புகள் பெப்சிகோ தனது வழக்கைத் திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்துகின்றன.
பெப்சிகோவைப் பொருத்தவரை 24,000 விவசாயிகள் அந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தின்படி எஃப்.எல்.2027 ரக உருளைக்கிழங்கை பயிரிடுகின்றனர். ஆண்டொன்றுக்கு 3 லட்சம் டன் அளவில் உருளைக்கிழங்கை விவசாயிகளிடமிருந்து பெப்சிகோ நிறுவனம் கொள்முதல் செய்கிறது. அவர்களுக்கு தனது எஃப்.எல்.2027 ரக உருளைக்கிழங்கு விதைகளை கிலோ ஒன்றுக்கு ரூ.20 முதல் 25 வரையில் விற்பனை செய்கிறது. 
ஒரு கிலோ விதைக்கு 11 முதல் 13 மடங்கு உற்பத்தியை எஃப்.எல்.2027 வழங்கும் என்று கூறப்படுகிறது. கிலோ ஒன்றுக்கு ரூ.10 வீதம் விவசாயிகளிடமிருந்து உற்பத்தியான உருளைக்கிழங்கை பெறும் பெப்சிகோ நிறுவனம், 45 எம்.எம்.க்கும் குறைவான அளவுள்ள உருளைக்கிழங்குகளை நிராகரிப்பதுடன், பச்சையாக இருப்பவை, கருப்புப் புள்ளி இருப்பவை ஆகியவை 15 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தால் ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுகிறது. 
பெப்சிகோவால் நிராகரிக்கப்பட்ட உருளைக்கிழங்குகளை விவசாயிகள் சந்தையில் விற்பனை செய்கிறார்கள் அல்லது விதைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். அப்படி விதைகளுக்குப் பயன்படுத்துவதை பெப்சிகோ அனுமதிக்க மறுக்கிறது. இதுதான் அடிப்படைப் பிரச்னை. இந்திய விவசாயிகள் இரண்டு சட்டங்களால் பாதுகாக்கப்படுகின்றனர். இந்திய காப்புரிமைச் சட்டம், பயிர் வகை மற்றும் விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம் 2001 இவற்றின் அடிப்படையில் 3,500-க்கும் அதிகமான பல்வேறு பயிர் வகைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதன் அடிப்படையில், வியாபார ரீதியாக அந்தப் பயிர்களை உற்பத்தி செய்யவும்,  விற்கவும், விநியோகம் செய்யவும், ஏற்றுமதி செய்யவும் விவசாயிகள் உரிமை பெறுகிறார்கள். பயிர் வகை மற்றும் விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம் 2001, விவசாயிக்குத் தன்னுடைய விளைபொருளைச் சேமித்து வைக்கவோ, பயன்படுத்தவோ, பயிரிடவோ, விற்பனை செய்யவோ உரிமையைத் தருகிறது. ஆனால், அவற்றை இலச்சினை உடைய தனிப் பெயரில் சந்தைப்படுத்த முடியாது, அவ்வளவே. இதன் அடிப்படையில் பார்த்தால் குஜராத் விவசாயிகள் எந்த வகையிலான அறிவுசார் சொத்துரிமையையும் மீறவில்லை என்றுதான் கூற வேண்டும்.
பெப்சிகோவுக்கு போட்டியாக பாலாஜி வேபர்ஸ் என்கிற நிறுவனமும் விவசாயிகளிடமிருந்து அதிக அளவில் உருளைக்கிழங்குகளை கொள்முதல் செய்கிறது. 65 பில்லியன் டாலர் (ரூ.4,52,140 கோடி) மதிப்புள்ள பன்னாட்டு நிறுவனம், சாமானிய இந்திய விவசாயிகள் மீது வழக்குத் தொடுத்திருப்பது, வேறு நிறுவனங்களுக்கு இடம் கொடுக்காமல் அனைத்து விவசாயிகளையும் தன் கைக்குள் வைத்திருக்கும் முயற்சி. 
பெப்சிகோ நிறுவனம், தங்களது ஒப்பந்தத்தின் கீழ் வருவதாக இருந்தால் வழக்குகளை திரும்பப் பெறத் தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறது. விவசாயிகளுக்குப் பாதுகாப்பாக இருப்போம் என்று குஜராத் அரசு தெரிவித்திருப்பது தற்காலிக ஆறுதல் மட்டுமே. 
இந்தப் பிரச்னைக்கு நியாயமான தீர்வு காணப்படாவிட்டால், இந்திய விவசாயமும், விவசாயிகளும் பெப்சிகோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் கைப்பாவைகளாக மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும், ஜாக்கிரதை!
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/may/01/உலகமயம்-வாழ்க-3143208.html
3142553 தலையங்கம் பாதி கிணறு கடந்தது... ஆசிரியர் Tuesday, April 30, 2019 02:41 AM +0530
பாதி கிணறு தாண்டியிருக்கிறது 2019 மக்களவைத் தேர்தல். 
17-ஆவது மக்களவைக்கான தேர்தலின் நான்காவது கட்ட வாக்குப்பதிவு மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு  வங்கம் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களிலுள்ள 72 தொகுதிகளில் நேற்று நடைபெற்றது.  
2019 மக்களவைத் தேர்தலின் ஏழு கட்ட வாக்குப்பதிவில் நான்காவது கட்ட வாக்குப்பதிவு முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த 2014 தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற 282 தொகுதிகளில் சுமார் 160 தொகுதிகள் நான்காவது வாக்குப்பதிவு நடந்திருக்கும் மாநிலங்களிலிருந்து பெறப்பட்டவை. பாஜக 2014-இல் பெரும் வெற்றியடைந்த மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளுக்கு நடந்த வாக்குப்பதிவு என்பதால் நான்காவது கட்டம் மிகவும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. 
வாக்குப்பதிவு நடந்த 72 தொகுதிகளில், கடந்த தேர்தலில் பாஜக 56 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. அதனால், இப்போது ஐந்தாண்டு ஆட்சிக் காலத்திற்குப் பிறகு அந்தத் தொகுதிகள் அனைத்தையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் பாஜகவுக்கு ஏற்பட்டிருக்கிறது.
இந்த நான்காவது கட்ட வாக்குப்பதிவில் மகாராஷ்டிரத்தில் 17, ராஜஸ்தானில் 13, உத்தரப் பிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள் மட்டுமல்லாமல், மத்தியப் பிரதேசம், ஒடிஸா, பிகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலுள்ள தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்திருக்கிறது. ஏற்கெனவே 302 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கும் நிலையில், இப்போது நடந்த 72 தொகுதிகளையும் சேர்த்தால் இதுவரை 374 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. அடுத்த மக்களவையில் ஆளும் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்குமா, கிடைக்காதா என்பதை இதுவரை நடந்து முடிந்துள்ள வாக்குப்பதிவுகள் அநேகமாக முடிவு செய்திருக்கும்.
சராசரியாக 64% வாக்குகள் நான்காம் கட்டத் தேர்தலில் பதிவாகியிருப்பதாகத் தெரிகிறது. இதில் மேற்கு வங்கத்தில் சராசரியைவிட அதிகமாக 76.47% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. அதிகரித்த வாக்குப்பதிவு முதல்வர் மம்தா பானர்ஜிக்கோ அல்லது பிரதமர் நரேந்திர மோடிக்கோ உள்ள ஆதரவின் அறிகுறியா அல்லது திரிணமூல் காங்கிரஸுக்கோ பாஜகவுக்கோ காணப்படும் எதிர்ப்பலையின் அறிகுறியா என்பதை தேர்தல் முடிவுகள்தான் வெளிப்படுத்தும். 
அந்த மாநிலத்தில் நடந்த எட்டு மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவின்போது சில வாக்குச்சாவடிகளில் மோதல் ஏற்பட்டிருப்பதும், மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவின்  வாகனத்தை திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் அடித்து நொறுக்கியிருப்பதும், கும்பலைக் கலைக்க காவல் துறையினர் வானை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதும் தேர்தல் முடிவுகளைக் கூர்ந்து கவனிக்க வைத்திருக்கின்றன. 
மகாராஷ்டிரத்தில் நேற்று வாக்குப்பதிவு நடந்த 17 தொகுதிகளிலும் கடந்த 2014 தேர்தலில் பாஜக - சிவசேனை கூட்டணி வெற்றி பெற்றிருந்தது. மும்பை, கொங்கண், வட மகாராஷ்டிரா பகுதிகளில் உள்ள இந்த 17 தொகுதிகளின் முடிவை ஒட்டித்தான் மகாராஷ்டிர மாநிலத்தின் 48 தொகுதிகளின் முடிவுகளும் இருக்கக்கூடும். 
கடந்த 2014 தேர்தலில் மூன்று முறை தொடர்ந்து மாநில ஆட்சியில் இருந்த காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராகவும், இரண்டு முறை மத்தியில் தொடர்ந்து ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு எதிராகவும் மக்கள் வாக்களித்தனர். இந்த முறை ஆட்சிக்கு எதிரான மனநிலையை பாஜக - சிவசேனை கூட்டணி எதிர்கொள்கிறது. மகாராஷ்டிரத்தில் பரவலாகக் காணப்படும் வறட்சியும், வேளாண் இடரும் பாஜக கூட்டணியால் கடந்த முறை வெற்றி பெற்ற 17 தொகுதிகளையும் இந்த முறை தக்க வைத்துக்கொள்ள முடியுமா என்கிற ஐயப்பாட்டுக்குக் காரணமாகின்றன.
அதேபோல, ராஜஸ்தானில் கடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்திருக்கிறது. தேர்தல்களின்போது எல்லைப்புற மாநிலமான ராஜஸ்தானில் எப்போதுமே தேசப் பாதுகாப்பு முக்கியமான பங்கு வகிப்பது வழக்கம். இந்த முறை பாலாகோட் தாக்குதலும், பயங்கரவாத அமைப்புகள் மீதான துல்லியத் தாக்குதல்களும் எந்த அளவுக்கு பாஜகவுக்கு கை கொடுக்கும் என்பதைப் பொருத்து ராஜஸ்தானில் தேர்தல் முடிவுகள் அமையும். 
ராஜஸ்தானில் கடந்த டிசம்பர் மாத சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும்கூட, அதிக வாக்கு வித்தியாசம் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இருக்கவில்லை. காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு வாக்குறுதி அளித்ததுபோல விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை என்பது பாஜகவுக்குச் சாதகமான சூழலை ராஜஸ்தானில் ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 
உத்தரப் பிரதேசத்தில் நேற்று நடந்த 13 தொகுதிகளில், 12 தொகுதிகளில் கடந்த 2014 தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இந்த முறை பாஜகவுக்கு எதிராக பலமான சமாஜவாதி - பகுஜன்சமாஜ் கூட்டணி களத்தில் இருந்தாலும்கூட, கான்பூர், உன்னாவ், ஃபருக்காபாத், ஜான்சி உள்ளிட்ட பல முக்கியமான தொகுதிகளில் காங்கிரஸ் முனைப்புடன் களமிறங்கி மும்முனைப் போட்டியை ஏற்படுத்தியிருப்பதால் அது பாஜகவுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தக் கூடும். 
எந்த ஓர் அலையும் இல்லாத தேர்தலில், வெற்றி - தோல்வியை நிர்ணயிப்பது ஆளுங்கட்சிகளின் பலத்தைவிட எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையும், பலவீனமும்தான். அதை பாஜக நன்றாகவே புரிந்துகொண்டிருக்கிறது. அதனால்தான், இந்துத்துவாவை முன்னிறுத்தாமல் நான்காம் கட்ட தேர்தலில் ஜாதி அரசியலை முன்னிறுத்த முற்பட்டிருக்கிறது.
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/apr/30/பாதி-கிணறு-கடந்தது-3142553.html
3141939 தலையங்கம் தன்னம்பிக்கையின்மை! ஆசிரியர் Monday, April 29, 2019 02:20 AM +0530 அரசியலில் துணிச்சலுடன் முடிவெடுப்பவர்கள்தான் அநேகமாக வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதை வரலாறு பலமுறை நிரூபித்திருக்கிறது. கடந்த 2014 தேர்தலில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நரேந்திர மோடி, தனக்குத் தொடர்பில்லாத உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாராணசி தொகுதியில் களமிறங்கியபோது, அவரது துணிச்சலை ஒட்டுமொத்த இந்தியாவும் அண்ணாந்து பார்த்தது.  அதேபோன்றதொரு வாய்ப்பு இந்த முறை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான நேரு குடும்பத்து வாரிசு பிரியங்கா காந்திக்கு இருந்தும்கூட அதை அவர் நழுவவிட்டது அவருக்கு மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்கே மிகப் பெரிய அரசியல் சறுக்கல் என்றுதான் குறிப்பிட வேண்டும். 
அகில இந்திய அளவில் 17-ஆவது மக்களவையில் தனிப்பெரும்பான்மை பெற முடியாவிட்டாலும் அதிக எண்ணிக்கை பலமுள்ள கட்சியாக வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்பில் காங்கிரஸ் இருக்கும்போது, உத்தரப் பிரதேச மாநிலத்தில் கணிசமான இடங்களை அந்தக் கட்சி வென்றாக வேண்டும். அப்படியொரு நம்பிக்கை இருப்பதால்தான் சமாஜவாதி கட்சி-பகுஜன் சமாஜ் கட்சி-ராஷ்ட்ரீய லோக் தளம் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கூட்டணியில் இணையாமல் உத்தரப் பிரதேசத்தில் தனித்துப் போட்டியிடுகிறது காங்கிரஸ். அப்படிப்பட்ட சூழலில்தான் இப்போது வாராணசியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிடுவதில்லை என்கிற முடிவை பிரியங்கா காந்தி எடுத்திருக்கிறார்.
வாராணசியில் கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் மீண்டும் களமிறக்கப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் தனது வேட்
பாளரை அறிவிப்பதற்காக சமாஜவாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி காத்திருந்தது. ஒருவேளை பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக இருந்தால், ராகுல் காந்தி  போட்டியிடும் அமேதி, சோனியா காந்தி  போட்டியிடும் ரேபரேலி தொகுதிகளைப் போலவே வாராணசியிலும் தங்களது  வேட்பாளரை நிறுத்தாமல் பிரதமர் மோடியை தோற்கடிக்க பிரியங்கா காந்தியை ஆதரிக்க அந்தக் கட்சிகள் தயாராகவே இருந்தன. பெரிய எதிர்ப்பு இல்லாமல் நரேந்திர மோடி வாராணசி தொகுதியில் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு மறைமுகமாக காங்கிரஸ் உதவியிருக்கிறது என்று கூடக் கூறலாம்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரதமரின் தொகுதியான வாராணசியில் உலகத் தரத்திலான புற்றுநோய் மருத்துவமனை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலுள்ள பெரு நகரங்களுக்கு நிகரான அளவில் விமான நிலையம் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த நகருக்கு வரும் நெடுஞ்சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. 24 மணிநேரத் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. வாராணசியின் வளர்ச்சிக்காக ரூ.21,762 கோடி ஒதுக்கப்பட்டிருக்கும்போது இவையெல்லாம் வியப்பை ஏற்படுத்தவில்லை. இதனால் எல்லாம் வாராணசியின் சாமானிய வாக்காளரின் அன்றாட வாழ்க்கை முறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படவில்லை.
நரேந்திர மோடியின் தேர்தல் வாக்குறுதியில் ஒன்றான புனித கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்துக்காக ரூ.20,000 கோடியில் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடி வாராணசிக்கு விஜயம் செய்யும்போது, கங்கையில் இருந்து அசுத்தமான தண்ணீர் அகற்றப்பட்டு நல்ல தண்ணீர் அவர் வரும் சில மணிநேரங்களுக்கு முன்னால் கொட்டப்படுகிறது என்பதுதான் உண்மை. 
வாராணசியின் பாரம்பரிய நெசவாளர்கள் ஐந்தாண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தார்களோ அதைவிட மோசமான நிலையில்தான் இருக்கிறார்கள் என்பதும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்பதும் வாராணசி வாசிகளுக்கு நன்றாகவே தெரியும். இந்த நிலையில், நரேந்திர மோடி பாணி  வளர்ச்சியின் மாயத்தோற்றம் என்கிற பலூனை உடைக்கும் மிகப் பெரிய வாய்ப்பு பிரியங்கா காந்திக்கு கிடைத்தும்கூட அவர் அதை நழுவவிட்டதன் பின்னணி பல காங்கிரஸ்காரர்களுக்கே புரியவில்லை.
உத்தரப் பிரதேசத்தில் கணிசமான வெற்றியைப் பெறாமல், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெற முடியாது என்கிற உண்மையை நரேந்திர மோடி புரிந்து வைத்திருக்கும் அளவுக்குக்கூட, பல தலைமுறை வாரிசு அரசியல் அனுபவமுள்ள  நேரு குடும்பத்தின் வாரிசுகளான ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் தெரிந்துகொள்ளவில்லை. கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டது முதல் அவருக்கு மக்கள் மத்தியில் காணப்பட்ட வரவேற்பும் ஆதரவும் வாராணசியில் அவர் துணிந்து நரேந்திர மோடிக்கு எதிராகக் களமிறங்கி இருந்தால், வாராணசியிலும் உத்தரப் பிரதேசத்திலும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவில் 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸூக்கு சாதகமான ஆதரவு அலையையே எழுப்பியிருக்கக்கூடும். 
அமேதியில் வெற்றி பெற முடியாதோ என்கிற சந்தேகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலத்தில் பாதுகாப்பான வயநாடு தொகுதியில் போட்டியிடுவதும், வாராணசியில் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்துவிடுவோமோ என்கிற அச்சத்தில் பிரியங்கா காந்தி களமிறங்காததும் காங்கிரஸ் கட்சி தன்னம்பிக்கையில்லாமல்தான் 2019 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்கிறது என்கிற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. தன்னம்பிக்கை இல்லாதவர்கள் அரசியலில் வெற்றி பெறுவதில்லை.

]]>
https://www.dinamani.com/editorial/2019/apr/29/தன்னம்பிக்கையின்மை-3141939.html
3140756 தலையங்கம் அதிபராகும் நடிகர்! ஆசிரியர் Saturday, April 27, 2019 02:27 AM +0530
நடிகர்கள் நாடாளுவது என்பது புதிதொன்றுமல்ல. எம்ஜிஆரில் தொடங்கி உலகம் முழுவதும் நாடாண்ட நடிகர்களின் பட்டியல் மிக மிக நீளம். அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன், ஹாலிவுட் நடிகர் கிளின்ட் ஈஸ்ட்வுட், அர்னால்டு ஸ்வாஸ்னேகர், என்.டி. ராமாராவ், ஜெயலலிதா என்று வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல், அரசியலிலும் வெற்றி பவனி வந்த நட்சத்திரங்கள் ஏராளம் ஏராளம். அந்த வரிசையில் இணைகிறார் உக்ரைன் நாட்டின் அதிபராக மக்களின் பேராதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் வொலோதிமீர் ஸெலன்ஸ்கி.
"மக்களின் சேவகன்' என்றொரு தொலைக்காட்சித் தொடர். உக்ரைன் நாட்டில் பலத்த வரவேற்பைப் பெற்ற "மக்களின் சேவகன்' என்கிற அந்தத் தொலைக்காட்சி நாடகத் தொடர், கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த அரசியல் நையாண்டி நாடகத்தில் எதிர்பாராத விதமாக உக்ரைன் நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் 41 வயது நகைச்சுவை நடிகர் ஒருவர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்தத் தொடரின் கதாநாயகனாக நடித்த வொலோதிமீர் ஸெலன்ஸ்கி, 73% மக்கள் ஆதரவுடன் உக்ரைன் நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஒரு நகைச்சுவை நடிகர் என்பதைத் தவிர, எந்த ஓர் அரசியல் பின்னணியும் இல்லாதவர் மிகப் பெரிய தேர்தல் வெற்றியைப் பெற்றிருப்பது ஒட்டுமொத்த உலகத்தையும் நிமிர்ந்து உட்கார்ந்து உக்ரைனை வியந்து பார்க்க வைத்திருக்கிறது. 
ஊழல், பொய் வாக்குறுதிகள், நிர்வாகத் திறமையின்மை இவற்றையெல்லாம் பார்த்துப் பார்த்து சலித்துப்போயிருந்த உக்ரைன் 
மக்களுக்கு, அரசியல் அமைப்புக்கு முற்றிலும் தொடர்பில்லாத நகைச்சுவை நடிகர் வொலோதிமீர் ஸெலன்ஸ்கி வித்தியாசமாகத் தெரிந்ததில் வியப்பென்ன இருக்கிறது? 
சமூக அநீதிகளுக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் அவர் மக்களின் சேவகன் நாடகத்தில் பேசிய வசனங்களும், நடித்த காட்சிகளும்  ஊழல் நிறைந்த, அரசியல் அமைப்புக்கு மாற்றுச் சக்தியாக மக்கள் மனதில் அவரை நம்ப வைத்தது. 
2014-இல் கிரீமியாவை  ரஷியா ஆக்கிரமித்ததை வொலோதிமீர் ஸெலன்ஸ்கி வெளிப்படையாகவும் தனது தொலைக்காட்சித் தொடர் மூலமும் ஆதரித்தவர் என்பது பரவலாகக் கூறப்படும் 
குற்றச்சாட்டு. அதேபோல கிழக்கு உக்ரைனில் 10,000-த்துக்கும் அதிகமானோர் பிரிவினை கேட்டுப் போராடி உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களை ஸெலன்ஸ்கி ஆதரித்தார் என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது. ரஷியாவிடமிருந்து நிதியுதவி பெற்றவர் என்று குற்றஞ்சாட்டப்படும் வொலோதிமீர் ஸெலன்ஸ்கியை ரஷிய அதிபர் புதின் ஆதரிப்பதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. அதிபர் புதினுக்கும் உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரோஷென்கோவுக்கும் இடையில் சுமுகமான நட்புறவு இல்லை என்பதால், தனது கைப்பாவையாக ஒருவர் உக்ரைன் அதிபராக வேண்டும் என்று அவர் விரும்பினார் என்று கூறப்படுகிறது. 
தேர்தலில் வொலோதிமீர் ஸெலன்ஸ்கி சில வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷிய நாட்டு கடற்படையுடன் நடந்த மோதலில் 24 உக்ரைன் மாலுமிகள் கைது செய்யப்பட்டு ரஷிய சிறையில் இருக்கிறார்கள். அவர்களை 
விடுவித்துக் கொண்டு வருவதுதான் தனது முதல் கடமை என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். அதேபோல, ரஷியாவுடன் நேரடியான யுத்தம் நடப்பதால், ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தாமல் இருக்க முடியாது என்பது அவரது கருத்து. உக்ரைனின் சுதந்திரத்திலும் இறையாண்மையிலும் எந்த நாட்டுடனும் எந்தவித சமரசமும் செய்துகொள்ள முடியாது என்று அதிபர் தேர்தலின்போது தொடர்ந்து வாக்குறுதி அளித்த வொலோதிமீர் ஸெலன்ஸ்கி, "நாம் நமது மக்களையும் விட்டுவிட முடியாது, எல்லைகளையும் விட்டுவிட முடியாது' என்று முழங்கியதுதான் வாக்காளர்களுக்கு அவர் மீது இந்த அளவு நம்பிக்கை ஏற்பட்டதற்கு முக்கியமான காரணம்.
ஐந்தாண்டுகளுக்கு முன்பு இதே ஸெலன்ஸ்கி, அதிபர் புதினுக்கு "தயவு செய்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் ராணுவ ரீதியிலான மோதல் ஏற்பட வழிகோலாதீர்கள். உக்ரைனும் ரஷியாவும் சகோதர நாடுகள். வேண்டுமானால், தனிப்பட்ட முறையில் நான் தங்கள் முன் மண்டியிட்டு யாசிக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், தயவுசெய்து உக்ரைன் மக்களை மண்டியிட வைத்துவிடாதீர்கள்' என்று வேண்டுகோள் விடுத்ததை அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 
இன்னும் ஒரு மாதத்தில் அதிபராகப் பதவியேற்கப் போகும் வொலோதிமீர் ஸெலன்ஸ்கியின் ரஷியா குறித்த கொள்கை எப்படி இருக்கப்போகிறது என்பதும், அவரது பொருளாதாரக் கொள்கை, வெளி விவகாரக் கொள்கை ஆகியவை குறித்தும் யாருக்கும் எதுவும் தெரியாது. அப்படி ஏதாவது அவருக்கு இருக்கிறதா என்பதும் தெரியவில்லை. மக்களின் மிகப் பெரிய ஆதரவுடன் உக்ரைன் அதிபராக அரசியல் அனுபவமே இல்லாத வொலோதிமீர் ஸெலன்ஸ்கி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்றால், அதற்கு ஒரேயொரு காரணம்தான் இருக்க முடியும். அது மாற்றத்தை  மக்கள் விரும்புகிறார்கள் என்பது. 
இன்னும் குறிப்பாகச் சொல்வதாக இருந்தால், அரசியல் கட்சிகளின் மீதும், அரசியல் தலைவர்களின் மீதும், நிர்வாக அமைப்பின் மீதும் முற்றிலுமாக நம்பிக்கையை இழந்துவிட்ட நிலையில், களத்துக்கு வெளியில் இருந்து வேடிக்கை பார்க்கும் வேடிக்கை மனிதர், மாற்றத்தை ஏற்படுத்திவிட மாட்டாரா என்கிற எதிர்பார்ப்புதான் காரணமாக இருக்க முடியும்.

]]>
https://www.dinamani.com/editorial/2019/apr/27/அதிபராகும்-நடிகர்-3140756.html
3140170 தலையங்கம் ஆறுதலளிக்கும் மாஸ்க்யூரிக்ஸ்! ஆசிரியர் Friday, April 26, 2019 02:22 AM +0530 உலக சுகாதார நிறுவனம் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருக்கும் சுற்றறிக்கை ஒட்டுமொத்த உலகத்துக்கே நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும், ஓரளவுக்கு நிம்மதிப் பெருமூச்சையும் அளிக்கிறது. தென்கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள மலாவி என்கிற நாடு, கொசுக்களின் மூலம் பரவும் மலேரியா காய்ச்சலுக்கு எதிரான "மாஸ்க்யூரிக்ஸ்' என்கிற தடுப்பூசியைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறது. மலாவியைத் தொடர்ந்து ஆப்பிரிக்காவிலுள்ள கென்யா, கானா ஆகிய இரண்டு நாடுகளும் விரைவிலேயே இந்தத் தடுப்பூசி திட்டத்தில் இணைய இருக்கின்றன. கொசுக்களால் பரவுகின்ற மலேரியாவுக்கு எதிரான இந்தத் தடுப்பூசி திட்டம், மருத்துவ ஆராய்ச்சிக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றி.

2018-ஆம் ஆண்டில் உலக மலேரியா அறிக்கையின்படி, ஆண்டுதோறும் 4.3 லட்சத்துக்கும் அதிகமானோர் மலேரியா தொற்றால் உயிரிழக்கிறார்கள். உலகளாவிய அளவில் குழந்தைகளின் மரணத்துக்கு மிக அதிகமான காரணமாக இருப்பது மலேரியாதான். ஆப்பிரிக்காதான் மிகவும் பாதிக்கப்பட்ட கண்டமாக இருக்கிறது. ஒவ்வோர் இரண்டு நிமிஷத்துக்கும் மலேரியாவால் ஆப்பிரிக்க கண்டத்தில் ஒரு குழந்தை மரிக்கிறது என்றும், சில குழந்தைகள் ஒரே ஆண்டில் ஐந்தாறு முறை மலேரியாவால் பாதிக்கப்படுகின்றன என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆப்பிரிக்காவை மட்டுமல்ல, ஆசிய கண்டத்தையும் பெரிய அளவில் பாதிக்கும் நோய்த்தொற்றாக மலேரியா காணப்படுகிறது. ஆசியாவில் தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், மியான்மர் ஆகிய நாடுகளில் அதிக அளவில் காணப்படும் மலேரியா தொற்று இந்தியாவுக்கும் பரவியிருக்கிறது. இதில் கவலையளிப்பது என்னவென்றால், மலேரியா நுண்ணுயிரி வழக்கமான மருந்துகளுக்குக் கட்டுப்படாமல் எதிர்ப்புச் சக்தி பெற்றுவிட்டிருக்கிறது என்பதுதான். இந்த நிலை தொடர்ந்தால் மலேரியாவைக் கட்டுப்படுத்த வழியே இல்லை என்கிற நிலைமை ஏற்பட்டுவிடும் என்கிற அச்சத்தில் மருத்துவ விஞ்ஞானிகள் செய்வதறியாது திகைத்துப் போயிருந்தனர். அந்த நிலையில்தான் இப்போது "மாஸ்க்யூரிக்ஸ்' அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

80 ஆண்டுகளுக்கு முன்பு மலேரியா காய்ச்சலைக் கட்டுப்படுத்த "குளோரோகுயின்' என்கிற மருந்து வெற்றிகரமாகச் செயல்பட்டது. ஆனால் காலப்போக்கில் மலேரியா நுண்ணுயிரி, "குளோரோகுயினு'க்கு எதிர்ப்புச் சக்தியைப் பெறத் தொடங்கியது. "குளோரோகுயினால்' மலேரியா காய்ச்சலைக் கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவர்கள் திகைத்தபோது, புராதன  சீன மருத்துவ முறையிலிருந்து "ஆர்ட்டிமிசினின்' என்கிற மாற்று மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

மலேரியா நுண்ணுயிரி எதிர்ப்பு சக்தியை "ஆர்ட்டிமிசினினு'ம் பெறத் தொடங்கியபோது, மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் அதிர்ந்து போய்விட்டார்கள். மலேரியாவைக் கட்டுப்படுத்த "ஆர்ட்டிமிசினினு'க்கு எந்தவித மாற்றும் இல்லாத நிலையில்தான், மருத்துவ ஆராய்ச்சி "மாஸ்க்யூரிக்ஸ்' என்கிற பெயரில் புதிய நம்பிக்கையை வழங்கியிருக்கிறது. 

சர்வதேச அளவிலான குழுவினர் கடந்த 30 ஆண்டுகளாக 50 கோடி டாலருக்கும் அதிகமான செலவில்  ஆராய்ச்சி செய்து இப்போது "மாஸ்க்யூரிக்ûஸ' கண்டுபிடித்திருக்கின்றனர். "மாஸ்க்யூரிக்ஸூ'ம் மலேரியாவை முழுமையாகக் கட்டுப்படுத்திவிடும் என்று கூறிவிட முடியாது. இந்த மருந்தை சோதனை முறையில் வழங்கிப் பார்த்தபோது, "மாஸ்க்யூரிக்ஸ்' வழங்கப்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதியினரைத்தான் மலேரியா காய்ச்சலில் இருந்து கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால், "மாஸ்க்யூரிக்ஸ்' வழங்கப்பட்ட குழந்தைகளுக்கு மலேரியா காய்ச்சலின் கடுமை வெகுவாகவே குறைந்து காணப்பட்டது என்பதை அனைவருமே ஏற்றுக்கொள்கிறார்கள். 

மலேரியாவுக்கு முற்றிலும் சக்தி வாய்ந்த மாற்று மருந்தைக் கண்டுபிடிக்க பல ஆண்டுகள் பிடிக்கும் என்பதால் அதுவரை உலகம் காத்திருக்க முடியாது. இப்போதைக்கு "மாஸ்க்யூரிக்ஸ்' முழுமையான தீர்வாக இல்லாவிட்டாலும், ஓரளவுக்குப் பயனளிக்கும்  மாற்றாக இருக்கக்கூடும் என்கிற நம்பிக்கை பிறக்கிறது.

இந்தியாவைப் பொருத்தவரை ஆப்பிரிக்காவில் நடைபெறும் "மாஸ்க்யூரிக்ஸ்' பரிசோதனை முயற்சியை நாம் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம். கடந்த சில ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கத்தை பெருமளவில் நாம் குறைத்துவிட்டிருந்தாலும்கூட, உலகில் மலேரியாவால் கடுமையாகப் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் தொடர்கிறது. 

2018 உலக மலேரியா அறிக்கையின்படி, 2016 - 17 ஆண்டுகளில் மலேரியாவால் ஏற்படும் பாதிப்பு இந்தியாவில் 24 சதவீதம் குறைந்திருக்கிறது. ஆனாலும்கூட, 100 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் மலேரியாவால் பாதிக்கப்படலாம் என்கிற இடர் ("ரிஸ்க்') காணப்படுகிறது என்கிறது அந்த அறிக்கை. 

ஒடிஸா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மலேரியாவால் மிக அதிகமாகப் பாதிக்கப்படும் மாநிலங்களில், அந்த மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளால் பெருமளவில் அந்த நோய் பரவாமல் தடுக்கப்பட்டிருக்கிறது. மலேரியாவுக்கான மருத்துவப் பரிசோதனை, கொசு உற்பத்தித் தடுப்பு நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருந்து விநியோகம், உடனடிப் பரிசோதனை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை மலேரியா பிரச்னையில் ஓரளவுக்கு முனைப்புடன் செயல்படுவதை மறுப்பதற்கில்லை. 

"மாஸ்க்யூரிக்ஸ்' தற்காலிக மாற்றாக இருக்கலாம், ஆனால் மிகப் பெரிய ஆறுதல். இதனால், நாம் மகிழ்ந்துவிட முடியாது. கொசுக்கள் உற்பத்தியாவதை முற்றிலுமாக தடுத்துவிட முடியும் என்று தோன்றவில்லை. ஆனால், நிச்சயமாகக்  கட்டுப்படுத்த முடியும். மலேரியா நுண்ணுயிரியை அழிக்கும் நிரந்தர மருந்தைக் கண்டுபிடிக்க முடியும் என்று தோன்றவில்லை. அதனால் "மாஸ்க்யூரிக்ஸ்' போன்ற முயற்சிகள் தொடரத்தான்  வேண்டும்.
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/apr/26/ஆறுதலளிக்கும்-மாஸ்க்யூரிக்ஸ்-3140170.html
3139610 தலையங்கம் தர்மசங்கடத்தில் உலகம்! ஆசிரியர் Thursday, April 25, 2019 03:05 AM +0530
வரும் மே மாதம் 2-ஆம் தேதி முதல் ஈரானிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி  செய்ய உலக நாடுகள் அனைத்துக்கும் அமெரிக்கா தடை விதித்திருக்கிறது. கடந்த நவம்பர் மாதமே ஈரானுக்கு எதிரான தடையை அமெரிக்கா அறிவித்தது என்றாலும், உலகிலுள்ள எட்டு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி  செய்வதற்கு தற்காலிக தடை விலக்கு வழங்கியிருந்தது. அந்த நாடுகள் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் அளவைக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன்தான் அமெரிக்கா தடை விலக்கு அளித்திருந்தது. 

ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விலக்கு வழங்கப்பட்டிருந்த எட்டு நாடுகள் - கிரீஸ், இத்தாலி, தைவான், ஜப்பான், தென்கொரியா, இந்தியா, சீனா, துருக்கி. இவற்றில் கிரீஸ், இத்தாலி, தைவான் ஆகிய மூன்று நாடுகளும் ஏற்கெனவே ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை முழுவதுமாக நிறுத்திவிட்டிருக்கின்றன. ஜப்பானும் தென்கொரியாவும் ஈரானிய கச்சா எண்ணெயை நம்பியிருப்பவை அல்ல. அதனால், இந்தியா, சீனா, துருக்கி ஆகிய மூன்று நாடுகளும்தான் அமெரிக்காவின் இந்த முடிவால் மிகவும் பாதிக்கப்படுபவை. 

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான விரோதம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. 40 ஆண்டுகளுக்கு முன்பு ஈரானில் அயதுல்லா கொமேனி தலைமையில் இஸ்லாமியப் புரட்சி ஏற்பட்டு அமெரிக்காவின் நண்பராக இருந்த அரசர் ஷாவின் ஆட்சி அகற்றப்பட்டது முதலே இரண்டு நாடுகளுக்கும் இடையேயான பகை தொடர்கிறது. அமெரிக்காவுக்கு நெருக்கமான சவூதி அரேபியாவுடனும் இஸ்ரேலுடனான ஈரானின் பகைமைதான் அமெரிக்காவை அந்த நாட்டுக்கு எதிராகச் செயல்பட வைப்பதன் காரணம். ஆண்டுக்கு 50 பில்லியன் டாலர் (5000 கோடி டாலர்) அளவிலான ஈரானின் கச்சா எண்ணெய் வருவாயை முடக்குவதன் மூலம் ஈரானின் அணுசக்தித் திட்டம், ஏவுகணை சோதனை, சிரியாவுக்கு அந்த நாடு வழங்கும் உதவி ஆகியவற்றை முடக்க நினைக்கிறது அமெரிக்கா.

ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முடக்குவதன் மூலம் அந்த நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலுமாகச் சிதைத்து, அரசியல் குழப்பத்துக்கு வழிகோலி ஈரானின் இஸ்லாமியக் குடியரசுக்கு முடிவுகட்ட நினைக்கிறது அமெரிக்கா. அமெரிக்காவின் இந்த முயற்சிக்கு அரபு நாடுகள் அனைத்தும் துணை நிற்கின்றன என்பதுடன், இஸ்ரேலும் அதை விரும்புகிறது. ஆனால், அவ்வளவு எளிதாக ஈரானிய இஸ்லாமியக் குடியரசு, அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணிந்துவிடாது என்பதால், வளைகுடாவில் தொடர்ந்து குழப்பம் நிலவும் என்பதுடன் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையும் கடுமையாகப் பாதிக்கப்படலாம். 

இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகளில்  இரண்டாவது இடத்தில் இருக்கிறது ஈரான். நமது தேவையில் ஏறத்தாழ 10 சதவீதம் கச்சா எண்ணெயை அங்கிருந்துதான் இறக்குமதி செய்கிறோம். கடந்த சில மாதங்களாக ஈரானிலிருந்தான நமது கச்சா எண்ணெய் இறக்குமதியைக் கணிசமாகக் குறைத்திருந்தாலும்கூட, முழுவதுமாக நம்மால் நிறுத்திவிட முடியுமா என்பது சந்தேகமாக இருக்கிறது. 

ஈரானிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் இந்திய நிறுவனங்கள் மீதும் தடை விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா எச்சரித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அந்த நிறுவனங்களுடனான டாலர் பரிமாற்றங்கள் முடக்கப்படும். அமெரிக்காவிலுள்ள அந்த நிறுவனங்களின் சொத்துகள் முடக்கப்படும் ஆபத்தும் காத்திருக்கிறது. 

இந்தப் பின்னணியில் அரசுத் துறை நிறுவனங்கள் உள்பட ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்திய நிறுவனங்கள் மாற்று ஏற்பாடுகளை முன்னெடுப்பதல்லாமல் வேறு வழியில்லை என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. மேலும், மிகப்பெரிய அளவில் இந்தியா, ஈரானிலுள்ள சாபஹார் துறைமுகத்தில் முதலீடு செய்திருக்கிறது. ஈரானுடனான உறவைத் துண்டித்துக் கொள்வதால், மிகப் பெரிய அளவில் நாம் இழப்பை எதிர்கொள்ளக் கூடும்.

ஒருபுறம் ஈரானுடனான உறவு துண்டிக்கப்படுவதால் பெரும் இழப்பீடு ஏற்படும் என்றாலும், அமெரிக்காவுடனான நட்புறவை இழப்பதால் இந்தியா அடையும் இழப்பு அதையெல்லாம்விட மிக மிக அதிகம். இந்தியா மட்டுமல்ல, சில ஐரோப்பிய நாடுகளும்கூட ஈரானிலிருந்தான கச்சா எண்ணெய் இறக்குமதியை முற்றிலுமாக துண்டித்துக்கொள்ள விரும்பவில்லை. அமெரிக்க சந்தையையும், அமெரிக்க வர்த்தக முறையையும் இழக்க அவர்கள் தயாராக இல்லை. இந்தியாவுக்கும்கூட அதுதான் நிலைமையாக இருக்கிறது.

அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாடு மத்திய ஆசியாவின் அரசியல் சமநிலையை பெருமளவில் பாதிப்பதுடன் ஈரானையும் கட்டாயமாகப் பாதிக்கும். ஈரான், சிரியா கூட்டணியைவிட அரபு நாடுகள் பொருளாதார ரீதியாகவும், அதிகார ரீதியாகவும் வலிமை பெறும்.  

இந்தியாவும், ஈரானிய கச்சா எண்ணெயை நம்பி இருக்கும் நாடுகளும் தடையால் பாதிக்கப்படும் நிலையில் அதற்கு நிகரான கச்சா எண்ணெயை அமெரிக்கா வழங்குவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். உலகக் கச்சா எண்ணெய் சந்தை அமெரிக்காவின் விருப்பு வெறுப்புகளுக்கு அடிமைப்பட்ட நிலையில் இருப்பது ஏற்புடைய சூழல் அல்ல. 

உலக வர்த்தகத்தின் செலாவணியாக அமெரிக்க டாலர் இருக்கும்வரை அமெரிக்காவின் மேலதிகாரத்தை உலகிலுள்ள எந்த நாடாலும் எதிர்கொள்ள முடியாது. அதற்கு ஒரு மாற்று ஏற்படாத வரையில், இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்துமே "அமெரிக்கா எவ்வழி, நாங்களும் அவ்வழி' என்று நடை
போடுவதைத் தவிர வேறு வழியொன்றுமில்லை!

]]>
https://www.dinamani.com/editorial/2019/apr/25/தர்மசங்கடத்தில்-உலகம்-3139610.html
3138863 தலையங்கம் நிமோ ஜூடெக்ஸ் இன் காசா ஸ்வா! ஆசிரியர் Wednesday, April 24, 2019 02:00 AM +0530 நீதி முறையாக வழங்கப்பட்டால் மட்டும் போதாது, அது நேர்மையாக வழங்கப்படுகிறது என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தவும் வேண்டும். அதேபோல, "நிமோ ஜூடெக்ஸ் இன் காசா ஸ்வா' என்கிற லத்தீன் சட்டவிதிக்கு, "தானே தனக்கு எதிரான வழக்கில் நீதிபதியாக இருக்க முடியாது' என்று பொருள். நேர்மையானவர், சட்டத்தைக் கரைத்துக் குடித்தவர், நீதிமான் என்றெல்லாம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் தொடர்பான குற்றச்சாட்டு எழுப்பப்பட்டிருக்கும் நிலையில், மேலே குறிப்பிட்ட பரவலாக அறியப்படும் இரண்டு சட்டவிதிகளையும் எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. 

எந்தவொரு மனுவும் தாக்கல் செய்யப்படாத நிலையில், உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு அவசர அவசரமாக கடந்த சனிக்கிழமை கூட்டப்பட்டது. அதற்கு முந்தைய நாள் மாலையில், முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தனக்கு கடுமையான பாலியல் தொந்தரவுகள் செய்ததாக உச்சநீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கு பிரமாணப் பத்திரம் அனுப்பியிருந்தார். அதன் அடிப்படையில், நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய தலைமை நீதிபதியின் தலைமையிலான அமர்வு கூடியது. தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் நீதித்துறையின் சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதல் என்பது அவசரமாக அந்த அமர்வைக் கூட்டுவதற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

கடந்த ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் இல்லத்தில் பெண் ஊழியர் ஒருவருக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்பதுதான் குற்றச்சாட்டு. தன்னுடைய தலைமை நீதிபதி பதவியை முடக்குவதற்கு பெரிய சக்திகள் திட்டமிடுவதாகவும், தன்னுடைய நேர்மையையும், கெளரவத்தையும் குலைப்பதற்கு முயற்சிகள் நடப்பதாகவும், உச்சநீதிமன்றம் சில முக்கியமான வழக்குகளில் வழங்க இருக்கும் தீர்ப்புகளை முடக்குவதற்கு முனைகிறார்கள் என்றும் தலைமை நீதிபதி குற்றம்சாட்டினார். இந்தப் பின்னணியில் சில முக்கியமான கேள்விகளை எழுப்பாமல் இருக்க முடியவில்லை. 


உச்சநீதிமன்றத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழுவிடம் இந்த வழக்கை விசாரிக்க உத்தரவு பிறப்பிப்பதற்குப் பதிலாகத் தனது தலைமையில் ஓர் அமர்வை ஏற்படுத்தி, அவசர அவசரமாக இந்தப் பிரச்னையைத் தலைமை நீதிபதி விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது முதலாவது கேள்வி.


கடந்த ஆண்டு முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக நீதிபதி ரஞ்சன் கோகோய் உள்பட நான்கு நீதிபதிகள் பொதுவெளியில் எழுப்பிய குற்றச்சாட்டு, அவர் முக்கியமான வழக்குகளை மூத்த நீதிபதிகளுக்கு ஒதுக்குவதில்லை என்பது. இப்போது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கும்  நிலையில், தனக்கு அடுத்தபடியான இரண்டு அல்லது மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்விடம் இந்தப் பிரச்னையை விசாரிக்க உத்தரவிடாமல், தனது தலைமையில் பதவி மூப்பு குறைந்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வை ஏற்படுத்தி தலைமை நீதிபதி விசாரிக்க முற்பட்டது சரியா என்பது இரண்டாவது கேள்வி. 

மூன்றாவதாக, அப்படியே விசாரிக்க முற்பட்டிருந்தாலும்கூட, அந்த அமர்வில் ஒரு பெண் நீதிபதி ஏன் இணைக்கப்படவில்லை என்று எழுப்பப்படும் குற்றச்சாட்டைப் புறந்தள்ளிவிட முடியாது. 

நீதிபதிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுப்பப்படுவது புதிதொன்றுமல்ல. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. கங்குலி, பாலியல் புகாரைத் தொடர்ந்து 2014-இல் மேற்கு வங்க மனித  உரிமை ஆணையத்தின் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டி வந்தது. இன்னொரு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக ஊடகங்களில் எதுவும் வெளிவரக் கூடாது என்று தில்லி உயர்நீதிமன்றத்தில் 2011-இல் தடையுத்தரவு பெற்றிருக்கிறார். மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் மாநிலங்களவையின் மூன்று உறுப்பினர் கொண்ட விசாரணைக் குழுவின் விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்பதால் அவர் மீதான நடவடிக்கை 2017-இல்  கைவிடப்பட்டது. இப்போது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியே பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கிறார்.

குற்றம் சுமத்திய பெண் ஊழியரின் தரப்பு வாதத்தைக் கேட்காமல் உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு விசாரிக்க முற்பட்டது, நீதி நேர்மையாக வழங்கப்படுகிறது என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்தாலும், தீர்ப்பு எழுதும்போது இரண்டு பேர் கொண்ட அமர்வின் சார்பில் முடிவு அறிவிக்கப்பட்டிருப்பது அதைவிட வேடிக்கை. இவற்றுக்கெல்லாம் உச்சமாக, இப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் தங்களுக்குப் பெண் உதவியாளர்களே வேண்டாம் என்று கோரியிருக்கிறார்கள். 

சரியோ - தவறோ, உண்மையோ - பொய்யோ தன் மீது பாலியல் குற்றச்சாட்டை ஒருவர் சுமத்தும்போது, அதுவும் பிரமாணப் பத்திரத்தில் சாட்சிகளை இணைத்து குற்றம் சுமத்தியிருக்கும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு ஒழுங்காற்றுக் குழுவிடம் விசாரணைக்கு ஒப்படைத்திருந்தால், நேர்மையாளரான தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது கேள்விக்கணைகளும், சந்தேகப் பார்வைகளும் எழுந்திருக்காது.

]]>
https://www.dinamani.com/editorial/2019/apr/24/நிமோ-ஜூடெக்ஸ்-இன்-காசா-ஸ்வா-3138863.html
3138007 தலையங்கம் கண்ணீர்த் துளியின் கண்ணீர்! ஆசிரியர் Tuesday, April 23, 2019 01:53 AM +0530
உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, இலங்கையில் கடந்த ஞாயிறன்று மூன்று தேவாலயங்கள், நடத்திர விடுதிகள் உள்பட மொத்தம் எட்டு இடங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் இதுவரை 290 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். இந்த வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலைப் படையினர் ஏழு பேர் இலங்கைப் பிரஜைகள் என்று தெரிகிறது. இலங்கையில் அவசரநிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் அமைதி முற்றிலுமாகத் தகர்க்கப்பட்டிருக்கிறது.
இலங்கை தலைநகர் கொழும்பிலுள்ள புனித அந்தோணி தேவாலயம், இலங்கையின் மேற்குப் பகுதியில் கடலோர நகரமான நீர்கொழும்பிலுள்ள புனித செபாஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு நகரில் புனித சியோன் தேவாலயம் ஆகியவற்றில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி நடந்து கொண்டிருந்த சிறப்பு வழிபாட்டின்போது குண்டுவெடிப்பு நடந்திருக்கிறது. கொழும்பு நகரிலுள்ள மூன்று நட்சத்திர விடுதிகளில் நடந்த குண்டுவெடிப்பில் 27-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்துமகா சமுத்திரத்தின் கண்ணீர்த் துளி என்று அழைக்கப்படும் இலங்கை, புராண காலம் தொட்டு ரத்தம் சிந்தும் பூமியாகவே தொடர்கிறது என்பது வேதனையளிக்கிறது. பயங்கரவாதிகளின் மும்பை தாக்குதலுக்குப் பிறகு தெற்காசியாவில் நிகழ்த்தப்பட்ட மிகவும்  கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல், இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தொடர் வெடிகுண்டு வெடிப்பாகத்தான் இருக்கும். இப்படியொரு கொடூரமான தாக்குதல் தீவிரமாக சிந்தித்துத்தான் திட்டமிடப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மதத் தீவிரவாதிகளாகத்தான் இருக்க முடியும் என்பது, கிறிஸ்தவ தேவாலயங்களைக் குறிவைத்து தாக்கியிருப்பதிலிருந்து தெரிய வருகிறது. 
கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித  பயங்கரவாதத் தாக்குதலும் இல்லாமல் இருந்த இலங்கையின் அமைதியைக் குலைப்பதுபோல நடந்தேறியிருக்கும் இந்தத் தொடர் வெடிகுண்டு வெடிப்பு, யாருமே எதிர்பாராமல் நிகழ்ந்தது என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. முக்கியமான தேவாலயங்களையும், கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தையும் தற்கொலைப் படையினர் தாக்கத் திட்டமிட்டிருப்பதாக இலங்கையின் காவல் துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரா 10 நாள்களுக்கு முன்பு எச்சரித்திருந்தார். அதன் பின்னணியில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது. 
இத்தனைக்குப் பிறகும் துல்லியமான திட்டமிடலுடன் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது எனும்போது, இதற்குப் பின்னால் இருக்கும் பயங்கரவாத அமைப்பு வலிமையான, அடிப்படை கட்டமைப்புடன் காணப்படுகிறது என்று தெரிகிறது. ஈஸ்டர் பண்டிகை அன்று தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதன் பின்னணியில், இஸ்லாமிய அல்லது பெளத்த மதத் தீவிரவாதிகள் இருக்கக் கூடும் என்று காவல் துறை கருதுகிறது.
இந்தத் தாக்குதலின் பின்னணியில் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்கிற இஸ்லாமிய தீவிரவாதக் குழு இருப்பதாகப் பரவலாகத் தெரிவிக்கப்பட்டாலும், எந்தவொரு மதக் குழுவுடனும் இந்தத் தாக்குதலைத் தொடர்புபடுத்தும் சாட்சியங்கள் எதுவும் இல்லை. எந்தவோர் அமைப்பும் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்கவும் இல்லை.
நியூஸிலாந்தில் மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்வினையாக ஈஸ்டர் பண்டிகையன்று தேவாலயத்தில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்று கருதுவதும், ஆதாரமற்ற ஊகமாகத்தான் இருக்கும். 
இலங்கையைப் பொருத்தவரை, ஈழத் தமிழர் பிரச்னையேகூட தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையேயான போராட்டம் மட்டுமல்ல. இந்துக்களுக்கும் பெளத்தர்களுக்கும் இடையே நடந்த போராட்டமாகவும் அதைக் காண வேண்டும். இலங்கையில் தமிழர்களின் வளர்ச்சியை பெளத்த மதத்தைச் சேர்ந்த  சிங்களர்கள், இந்து மத வளர்ச்சியாகப் பார்க்க முற்பட்டனர். அதேபோல, இப்போது அதிகரித்துவரும் கிறிஸ்தவ மதமாற்றம் சிங்களர்களை, குறிப்பாக பெளத்த பிக்குகளை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. அதன் விளைவாக கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்  என்பது புதிதொன்றுமல்ல. கடந்த 2015 முதல் தற்போது நடந்த தாக்குதல் வரை இதுவரை தேவாலயங்கள் மீதும், கிறிஸ்தவப் பாதிரியார்கள் மீதும், கிறிஸ்தவர்கள் மீதும்  சுமார் 200 தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. 
2014 ஜனவரி மாதம் இரண்டு தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த 2017-லும் அதேபோல வடமேற்கு இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுபோன்ற தாக்குதல்களுக்கு எல்லாம் மதமாற்றம்தான் முக்கியமான காரணம். மதமாற்றத்தால் தங்களது சொந்த பூமியில் தாங்கள் சிறுபான்மையினராகி விடுவோமோ என்கிற அச்சம்தான் சிங்கள-பெளத்தர்களை இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபடுத்துகிறது என்று பல்வேறு ஆய்வுகள் ஏற்கெனவே தெரிவித்திருக்கின்றன.
அதிபர் சிறீசேனாவுக்கும் பிரதமர் ரணிலுக்கும் இடையே நடக்கும் அரசியல் போராட்டத்துக்கு இடையில் இலங்கையில் குண்டுவெடிப்புத் தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது. இன்னொருபுறம், இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழலை எதிர்பார்த்து  அதில் அரசியல் ஆதாயம் தேட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச காத்திருக்கிறார். நடந்தேறியிருக்கும் மாபாதகத் தாக்குதலுக்குக் காரணம், மதமாகவும் இருக்கலாம், அரசியலாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அது இலங்கைக்கும் தெற்காசியாவுக்கும் நன்மை பயப்பதாக இருக்காது!
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/apr/23/கண்ணீர்த்-துளியின்-கண்ணீர்-3138007.html
3137583 தலையங்கம் திறமைகளின் அணிவகுப்பு! ஆசிரியர் Monday, April 22, 2019 03:58 AM +0530 கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த, இங்கிலாந்தில் நடக்க இருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்திய அணியில் விளையாடும் வீரர்களை, கிரிக்கெட் தேர்வுக் குழுவினர் மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுத்திருப்பதுடன், பேட்டிங்கிலும் சரி, பந்துவீச்சிலும் சரி எல்லாவிதத் திறமைகளுக்கும்  போதுமான, சரிசமமான இடமளித்திருப்பதைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

இங்கிலாந்தில் வரும் மே 30-ஆம் தேதி தொடங்க இருக்கும் 12-ஆவது உலகக் கோப்பைக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு அனுபவமிக்க ஆட்டக்காரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் கேப்டன் விராட் கோலிக்கு வழங்கியிருக்கிறார்கள். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குறைந்தது 50 ஆட்டங்களிலாவது பங்கேற்ற அனுபவசாலிகள் மட்டுமே உலகக் கோப்பை போட்டியில் இடம்பெறுவதற்கு முழுமையான தகுதி பெற்றவர்கள் என்கிற கருத்து உண்டு. இந்திய அணியில் இடம்பெறும் 15 ஆட்டக்காரர்களில் ஒன்பது பேர், 50-க்கும் மேற்பட்ட ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களில் பங்கு பெற்றவர்கள். தோனி 341 ஆட்டங்களில் பங்கேற்றார் என்றால், அணியில் நான்கு பேர் 50 ஆட்டங்களில் பங்கேற்றவர்கள். 14 ஒரு நாள் ஆட்டங்களில் பங்கேற்ற கே.எல். ராகுலும், ஒன்பது ஆட்டங்களில் மட்டுமே பங்கேற்ற விஜய் சங்கரும் இடம்பெற்றிருக்கிறார்கள் என்றாலும்கூட, அவர்களது திறமையைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

இந்திய அணியில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களும் வேகப் பந்துவீச்சாளர்களும், சுழல் பந்துவீச்சாளர்களும் இடம்பெற்றிருக்கின்றனர். பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலுமே வல்லவர்களாக இருக்கும் விஜய் சங்கர், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, கேதார் ஜாதவ் ஆகிய நால்வரும் கேப்டன் கோலியின் தலைமையிலான அணிக்கு வலு சேர்ப்பவர்கள். இந்திய அணியின் பந்துவீச்சைப் பற்றிக் கூறுவதாக இருந்தால், இடம்பெற்றிருக்கும் 15 பேரில் ஒன்பது பேர் பந்துவீச்சாளர்கள். ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, புவனேஸ்வர் குமார் ஆகிய மூவரும் வேகப் பந்துவீச்சாளர்கள் என்றால், சஹலும், குல்தீப் யாதவும் சுழல் பந்துவீச்சாளர்கள். குல்தீப் யாதவும், யுஜவேந்திர சஹலும் சுழல் பந்துவீச்சில் சிறப்புத் திறமை பெற்றவர்கள். தொடக்கப் பந்துவீச்சில் தங்களது திறமையை பல முறை நிரூபித்திருப்பவர்கள் ஜஸ்ப்ரீத் பும்ராவும், புவனேஸ்வர் குமாரும், முகமது ஷமியும். 

ரோஹித் சர்மாவும், ஷிகர் தவனும் வழக்கம்போல தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. மூன்றாவது ஆட்டக்காரராக வழக்கமாகக் களமிறங்கும் கேப்டன் விராட் கோலியின் பேட்டிங் திறமை பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ரன்களை அள்ளிக் குவிப்பதில் தன்னிகரற்ற திறமையை பலமுறை நிரூபித்திருக்கிறார். 

இந்திய அணியைத் தேர்ந்தெடுப்பதில் தேர்வுக் குழுவின் முன்னால் இருந்த மிகப் பெரிய கேள்வி, நான்காவது ஆட்டக்காரராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதிலும், ஒருவேளை தோனிக்கு காயம் ஏற்பட்டால் அவருக்குப் பதிலாக விளையாட சரியான விக்கெட் கீப்பர் யார் என்பதும்தான். "மிடில் ஆர்டர்' என்று கூறப்படும் நான்காவது ஆட்டக்காரராக ஆல்ரவுண்டர் விஜய் சங்கரையும், மகேந்திர சிங் தோனிக்கு மாற்றாக இருப்பதற்கு தினேஷ் கார்த்திக்கையும் தேர்வுக் குழுவினர் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். 

விஜய் சங்கர் அனுபவசாலியல்ல என்றாலும்கூட, அவரது தேர்வு எந்தவித விமர்சனத்தையும் எழுப்பவில்லை. ரிஷப் பந்த்தை பின் தள்ளிவிட்டு தினேஷ் கார்த்திக்கைத் தேர்ந்தெடுத்திருப்பதை சிலர் குறைகூறாமல் இல்லை. ஆனால், தினேஷ் கார்த்திக் அனுபவசாலி என்பதையும், ரிஷப் பந்த்தைவிட விக்கெட் கீப்பராக சிறப்பாகச் செயல்படுபவர் என்பதிலும் சந்தேகமில்லை. ரிஷப் பந்த்தும், அம்பதி ராயுடுவும் மாற்று வீரர்களாகச் சேர்க்கப்பட்டிருப்பதால், தேவை ஏற்படும்போது அவர்களது திறமையையும் பயன்படுத்தும் வாய்ப்பு கேப்டன் கோலிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

விஜய் சங்கரை நான்காவது ஆட்டக்காரராகத் தேர்ந்தெடுப்பதற்கு இன்னும் சில காரணங்கள் கூறப்படுகின்றன. இங்கிலாந்து ஆட்டக்காரர்களின் ஸ்விங் பந்துவீச்சை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேனாக அவர் இருக்கிறார் என்பதும், இங்கிலாந்தின் சூழலுக்கு அவருடைய மிதவேகப் பந்துவீச்சு இந்திய அணிக்குக் கை கொடுக்கும் என்பதாலும் முன்னுரிமை பெற்றிருக்கக் கூடும். விராட் கோலி, மகேந்திர சிங் தோனி, ரோஹித் சர்மா, ஷிகர் தவன் ஆகியோரின் பேட்டிங் திறமை உலகக் கோப்பைப் போட்டியில் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

1983-இல் இதற்கு முன்னால் இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை பந்தயத்தில் கபில் தேவின் தலைமையில் வெற்றிவாகை சூடியபோது இந்திய அணி எந்த அளவுக்கு திறமைகளின் ஒட்டுமொத்த அணியாகக் காட்சியளித்ததோ அதைப்போல இந்த முறையும் காட்சியளிக்கிறது. இந்திய அணியின் முதல் பதினொன்று ஆட்டக்காரர்களின் வரிசை ரோஹித், தவன், கோலி, சங்கர், தோனி, ஜாதவ், பாண்டியா, குல்தீப், புவனேஸ்வர், பும்ரா, ஷமி என்பதாக இருக்கும். விராட் கோலியின் பேட்டிங் திறமையும், எம்.எஸ். தோனியின் உலகக் கோப்பையை வென்ற அனுபவமும் திறமையான இளம் கிரிக்கெட் வீரர்களின் அணிவகுப்பும் வரும் ஜூன் 5-ஆம் தேதி செளதாம்ப்டன் நகரில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்வதில் தொடங்கி, இங்கிலாந்தில் வெற்றிக் கோப்பையை மீண்டும் ஒருமுறை கைப்பற்றுவதில் முடியும் என்கிற நம்பிக்கையை இந்திய அணியின் பட்டியல் ஏற்படுத்துகிறது.

]]>
https://www.dinamani.com/editorial/2019/apr/22/திறமைகளின்-அணிவகுப்பு-3137583.html
3136182 தலையங்கம் பணநாயகமாகும் ஜனநாயகம்! ஆசிரியர் Saturday, April 20, 2019 01:30 AM +0530
இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரப்படி, நேற்றைய நிலையில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் ரொக்கத்தின் அளவு ரூ.707.3 கோடி. இன்னும் ஐந்து கட்ட வாக்குப்பதிவு இருக்கிறது என்பதையும், கடைசி கட்ட வாக்குப்பதிவு அடுத்த மாதம் 19-ஆம் தேதிதான் முடிவடைய இருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதற்குள் தேர்தல் ஆணையத்தால் அதிகாரபூர்வமாக கைப்பற்றப்படும் ரொக்கம் குறைந்தது மூன்று - நான்கு மடங்கு அதிகரிக்கக்கூடும். 
கடந்த இரண்டு கட்ட வாக்குப்பதிவில் தேர்தல் ஆணையத்தால் கைப்பற்றப்பட்டிருக்கும் போதை மருந்துகள், கஞ்சா, அபின் உள்ளிட்ட லாகிரி வஸ்துகள் ஆகியவற்றின் அளவு 6,000 கிலோவிற்கும் அதிகம் என்கிற தகவல் திடுக்கிட வைக்கிறது. சுமார் 1,200 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன என்று சொன்னால் தேசம் எந்தத் திசையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது என்கிற கேள்வி எழுப்பாமல் இருக்க  முடியவில்லை. 
வேடிக்கை என்னவென்றால், தேர்தலில் மிக அதிகமாக பணம் புழங்கும் மாநிலம் என்கிற பெருமையை தமிழகம் அடைந்திருக்கிறது என்பதுதான். அதிகாரபூர்வமாக நேற்றுவரை ரூ.208.27 கோடி ரொக்கம் தமிழகத்தில் இருந்து மட்டும் ஆணையத்தால் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அடுத்த இடத்தில் ஆந்திரப் பிரதேசமும் (ரூ.137.07 கோடி), தெலங்கானாவும் (ரூ.68.82 கோடி) தேர்தலில் பணம் புழங்கும் மாநிலங்களாக அந்தப் பட்டியில் தெரிவிக்கிறது. 
தமிழகம் கல்வியிலும் சுகாதாரத்திலும் மட்டுமல்ல, வாக்குக்குப் பணம் கொடுப்பதிலும் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்பது நாம் பெருமைபடக்கூடிய சாதனை ஒன்றுமல்ல.
 கடந்த செவ்வாய்க்கிழமை வேலூர் மக்களவைக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணையமும், வருமான வரித் துறையினரும் திமுக நிர்வாகி ஒருவரின் சிமெண்ட் கிடங்கிலிருந்து ரூ.10.48 கோடி ரொக்கத்தை கைப்பற்றி இருக்கிறார்கள். திமுகவின் பொருளாளரும் முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் அந்தத் தொகுதியின் திமுக வேட்பாளர். 
சிமெண்ட் கிடங்கிலிருந்து ரொக்கம் கைப்பற்றப்பட்டது என்பது மட்டுமல்ல, ரூபாய் நோட்டுக் கட்டுகள் விநியோகத்திற்காக வார்டு வாரியாக, வாக்குச்சாவடி வாரியாகப் பெயர் எழுதப்பட்டு உறைகளில் போடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. அத்தனையும் புத்தம் புதிய ரூ.200 நோட்டுக் கட்டுகள். அவையெல்லாம் கனரா வங்கியின் வேலூர் கிளையிலிருந்து பெற்றப்பட்டவை என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது. இது வேலூரில் மட்டும்தானா அல்லது திமுகவால் தமிழகம் முழுவதும் திட்டமிட்டு வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டனவா என்கிற கேள்வியும் எழுகிறது. 
நியாயமாகப் பார்த்தால் தேர்தல் ஆணையம் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை போட்டியிலிருந்து நிரந்தரமாகத் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டுமே தவிர, வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. 
இரண்டு நாள்களுக்கு முன்பு ஆண்டிபட்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளரின் அலுவலகத்திலிருந்து இதேபோல ரூ.1.48 கோடி தேர்தல் ஆணையத்தால் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அங்கேயும் உறைகளில் ரூ.300 தனித்தனியாக போடப்பட்டு, வாக்குச்சாவடிகளின் பெயர்கள் எழுதப்பட்டு, விநியோகத்திற்கு தயாராக வைக்கப்பட்டிருந்தன. 
எதிர்க்கட்சியினரை குறிவைத்து தேர்தல் ஆணையமும் வருமான வரித் துறையினரும் தேர்தல் நேரத்தில் சோதனை நடத்துகிறார்கள் என்கிற விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. இது கையும் களவுமாக மாட்டிக்கொண்ட திருடர்கள் என்னை மட்டுமே ஏன் பிடிக்கிறீர்கள், மற்றவர்களைப் பிடிக்கவில்லையே என்று கேட்பது போல இருக்கிறது. ஆளுங்கட்சித் தரப்பிலும், ஆளுங்கட்சியைச் சேர்ந்த பலரிடமும் இதேபோல சோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன என்பதும், அதில் சில அமைச்சர்களின் உதவியாளர்கள் வீடுகளிலும்கூட சோதனை நடத்தப்பட்டிருக்கின்றன என்பதும் அவர்களுக்குத் தெரியாததல்ல. 
ஆர்வம் மிகுதியால் யாரே துப்பு கொடுத்ததை நம்பி தூத்துக்குடியில் திமுக வேட்பாளர்கனிமொழியின் வீட்டில் தேர்தல் ஆணையத்தினர் சோதனை நடத்தியது வரம்பு மீறல்தான் என்பதை மறுக்க முடியாது. அதற்காக வேலூரிலும் ஆண்டிபட்டியிலும் நடத்தப்பட்ட சோதனைகளை அதிகார துஷ்பிரயோகம் என்று விமர்சிப்பதும் ஏற்புடையதல்ல.
தேர்தலில் பணம் விநியோகிப்பது என்பது இந்தியாவைப் பொருத்தவரை, அதிலும் தமிழகத்தைப் பொருத்தவரை புதிதொன்றுமல்ல. 1962-இல் நடந்த மூன்றாவது பொதுத்தேர்தலிலேயே இரண்டு ரூபாய் வழங்கப்பட்டது என்று அப்போது திமுக தலைவர் அண்ணா பேசியிருக்கிறார். ஆனால், இப்போது போல பண விநியோகத்தை தேர்தலின் இன்றியமையாத பகுதியாக மாற்றியது திமுகதான். 2009-இல் நடந்த திருமங்கலம் இடைத்தேர்தலில் அந்தக் கட்சியால் தொடங்கிவைக்கப்பட்ட பண விநியோக நச்சு, ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் நிலைக்கு மாற்றிவிட்டிருக்கிறது. 
அரசியல்வாதிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்பதைக்கூட சகித்துக்கொள்ளலாம்; ஆனால், வாக்காளர்கள் தங்களது வாக்குக்குப் பணம் பெறுவதை உரிமையாக நினைக்கத் தொடங்கியிருக்கிறார்களே, அதை நினைத்தால்தான் அச்சம் மேலெழுகிறது. பண விநியோகத்திற்காக தேர்தலை ரத்து செய்வதல்ல, பணம் விநியோகம் செய்யும் வேட்பாளரை நிரந்தரமாக தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழக்கச் செய்வதுதான் இதற்கு சரியான தீர்வு.
 

]]>
https://www.dinamani.com/editorial/2019/apr/20/பணநாயகமாகும்-ஜனநாயகம்-3136182.html
3135595 தலையங்கம் காத்திருப்பில் தமிழகம்! ஆசிரியர் Friday, April 19, 2019 01:29 AM +0530
பதினேழாவது மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்திருக்கிறது. 11 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன்பிரதேசத்தில் உள்ள 95 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவு முற்றிலுமாக அமைதியாக நடைபெற்றது என்று கூற முடியாமல் செய்துவிட்டிருக்கிறது கர்நாடகம், மேற்கு வங்கம் மற்றும் மணிப்பூரில் நடைபெற்ற சில அசம்பாவிதங்கள்.
நேற்று நடைபெற்ற இரண்டாவது கட்ட வாக்குப்பதிவில், மாநிலக்  கட்சிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆளும் பாஜகவைப் பொருத்தவரை நேற்று நடந்த இரண்டாவது கட்ட வாக்குப்பதிவில் கடந்த தேர்தலில் பெற்ற 27 இடங்களையும், காங்கிரஸ் பெற்ற  12 இடங்களையும் தக்க வைத்துக் கொள்ளப் போட்டியிடுகின்றன. ஒடிஸா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜகவும், தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரம், ஒடிஸா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸும் தங்களது மக்களவை எண்ணிக்கை பலத்தை அதிகரிக்கும் முனைப்பில் இருக்கின்றன.
முன்னாள் பிரதமர் தேவெ கெளடா கர்நாடக மாநிலம் தும்கூரு தொகுதியில் இருந்தும், முன்னாள் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா ஸ்ரீநகர் தொகுதியில் இருந்தும், ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் அந்த மாநிலத்தில் பிஜேப்பூர், ஹிஞ்சிலி சட்டப்பேரவைத் தொகுதிகளிலிருந்தும் மக்களின் அங்கீகாரத்துக்காக நேற்று களம் கண்ட தலைவர்களில் சிலர். இரண்டாவது கட்டத் தேர்தலில் 1,606 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் பட்டதாரிகள் 48% என்றால், கோடீஸ்வரர்கள் 27%  பேர். மகளிர் 8% என்றால், குற்றப் பின்னணி உடைய வேட்பாளர்கள் 16% பேர்.
நேற்று நடந்த மக்களவைக்கான இரண்டாவது கட்ட வாக்குப்பதிவில் கூர்ந்து கவனிக்கப்படுபவை ஒடிஸா சட்டப்பேரவைக்கும், தமிழக சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்குமான போட்டிகள்தான். தமிழகத்தைப் பொருத்தவரை, மக்களவைத் தேர்தலும், சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல்களும் வரலாற்று முக்கியத்துவம் பெறப்போகின்றன. இந்தத் தேர்தல் முடிவுகள் மாற்றத்திற்கானவையா, இல்லை திமுகவுக்கு ஏமாற்றமானத்துக்கானவையா என்பதைத் தீர்மானிப்பவையாக அமையும். ஜெயலலிதா, கருணாநிதி என்கிற இரண்டு ஆளுமைகளின் மறைவுக்குப் பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால், அதிமுக, திமுக இரண்டு கட்சிகளின் வருங்காலத்தை நிர்ணயிக்கப் போகும் தேர்தலாக இது அமைய இருக்கிறது.
ஜெயலலிதாவின் மறைவும், அதிமுகவில் தினகரன் அணியால் ஏற்பட்ட பிளவும், கடந்த ஆறுமாதங்களுக்கு முன்புவரை திமுக 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்கிற தோற்றத்தை ஏற்படுத்தி இருந்தன. அதிமுகவுக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைத்ததும், அந்தக் கட்சி ஏற்படுத்திக் கொண்ட வலுவான கூட்டணியும் திமுகவின் நூற்றுக்கு நூறு வெற்றி என்கிறக் கனவைத் தகர்த்து, இப்போது போட்டியை நீயா, நானா என்கிற அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறது.
கடந்த 26 நாள்கள் தேர்தல் பிரசாரத்தில், தமிழகம் முழுவதும் 8,000 கி.மீ. பயணித்து, நாள்தோறும் பத்துக்கும் அதிகமான தெருமுனைப் பிரசாரக் க