Dinamani - சிறப்புக் கட்டுரைகள் - https://www.dinamani.com/tholliyalmani/special-articles/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3013828 தொல்லியல்மணி சிறப்புக் கட்டுரைகள் மூலக்கொல்லை ஓவியம் 2: பகுதி 1 த. பார்த்திபன் Thursday, October 4, 2018 01:19 PM +0530  

மூலக்கொல்லை பெருவிழா

மூலக்கொல்லை முதல் ஓவியம் உள்ள இடத்திலிருந்து ஏறத்தாழ அரை கிலோ மீட்டர் தொலைவில், மூலக்கொல்லை ஓவியம் இரண்டு என்ற சாமியாடிகளின் ஓவியப் புதையல் உள்ள இடம் அமைந்துள்ளது. இந்த ஓவியங்கள் தீட்டப்பட்ட இடத்தை அடைந்ததும், ஒரு பெரிய கல்திட்டைக்குள் நுழைகின்றோமோ என்ற எண்ணம் உருவானது. அது இயற்கையான அமைப்பு. அறை போன்ற இடைவெளியைத் தரும் வகையில், இரு பக்கத்தில் அமைந்த கல்குண்டுகளுக்கு மேல் ஒரு மிகப்பெரிய கல்குண்டு மூடுகல் போல் அமைந்துள்ளது. முன்புறம் ஒரு கல்குண்டு உள்ளது. பக்கக் கல்குண்டுக்கும் முன் கல்குண்டுக்கும் இடையேயுள்ள சிறு இடைவெளி அறை பகுதிக்குச் செல்ல உதவுகின்றது. அறை பகுதியில் இருந்து பின்பக்கம் செல்லவும் குறுகிய இடைவெளி உள்ளது. ஓவியங்கள் அறையின் கீழ்ப்புற உள், வெளிப்பக்கங்களிலும், முகப்பிலும், பின்பகுதியிலும், மேற்குப்புற வெளிப்பக்கத்திலும் தீட்டப்பட்டுள்ளன. இங்குள்ள ஓவியங்களை எட்டு தொகுப்பாகப் பிரித்துக் காணமுடிகின்றது.

ஓவியம் தீட்டும் வண்ணத்தைக் குழைக்க பாறையில் செதுக்கிய கிண்ணம் போன்ற சிறுகுழியையும், குழியில் வெள்ளை வண்ணம் ஆடைபோல் படிந்திருந்ததையும் காணமுடிந்தது. புதிய கற்கால மக்கள் ஓவியத்தின் வண்ணத்தைக் குழைக்க பாறையில் ஒரு குழியை உருவாக்கிப் பயன்படுத்தியதற்கான சான்றை முதன்முதலில் இங்குதான் காணமுடிகிறது.

பின்பிறமுள்ள ஓவியக் காட்சிகளை முதல் இரண்டு தொகுப்புகளாகப் பகுத்துக்கொள்ள முடிகிறது. முதல் தொகுப்பு வெளிப்படுத்தும் பொருளின் அடிப்படையில் “மூலக்கொல்லை பெருவிழா” என இங்கு அழைக்கப்படுகிறது. இரண்டாவது தொகுப்பை “குலக்குறி வழிபாடு” எனவும் காணமுடிகிறது. முதல் தொகுப்பான பெருவிழா இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது.

முதல் தொகுப்பு: பெருவிழா ஓவியம்

முதல் தொகுப்பு – பெருவிழா முழு காட்சி

முதல் தொகுப்பு – பெருவிழா முழு காட்சி - மற்றொரு கோணம்

மூலக்கொல்லைப் பெருவிழா என்று இங்கு பெயரிடப்பட்டுள்ள முதல் தொகுப்பு முழுவதும் வெள்ளை வண்ணம் கொண்டு தீட்டப்பட்டுள்ளது. ஓவியத்தைத் தீட்ட பாறை சீர்க்கப்பட்ட தன்மையும், இயற்கையாகப் பாறையின் மேற்பரப்பில் உருவான பள்ளமான பகுதியை கடலாக உருவகித்து, அதில் முதலை, திமிங்கிலம் போன்ற நீர்வாழ் விலங்குகளைச் சித்தரித்துள்ள விதமும் கவனத்தை ஈர்க்கும்படியாக உள்ளது. இப்பள்ளத்தில் பாசி படர்ந்து கருமையடைந்து அதன் நீர்நிலைத் தன்மையின் வசீகரத்தைக் கூட்டியுள்ளது. மாமல்லபுரத்தில் பல்லவர் சிற்பக்கலையின் உன்னதத்தையும், சிற்பியின் கற்பனை வளத்துக்கும் எடுத்துக்காட்டாக அர்ச்சுனன் தபசு சிற்பத் தொகுப்பு உள்ளது. இச்சிற்பத் தொகுதியில், பாறையில் இயற்கையாக அமைத்த பிளவை, கங்கைப் பேராறு எனக்கொண்டு பிற காட்சிகளை அதன் இருபுறமும் வடித்த கலைநுட்பத்தையும் சிற்பியின் மதிநுட்பத்தையும் வியப்பர். மாமல்லபுரப் படைப்பு பொ.ஆ.7-8-ம் நூற்றாண்டு ஆகும். ஆனால், மூலக்கொல்லை படைப்போ மு.பொ.ஆ.3000 ஆகும். எனில், மாமல்லபுரப் படைப்புக்கு 3800 - 3700 ஆண்டுகளுக்கு முன்னரே இயற்கையாக உருவாகியிருந்த ஒரு பள்ளத்தை ஒரு கடலாக – நெய்தல் இடமாகக் காட்சிப்படுத்தியிருப்பது ஆச்சரியமளிக்கிறது. அக்காலக் கலைஞனின் கற்பனைத்திறன் வியக்கவைக்கிறது. மாமல்லபுரத்துக் கலைஞனுக்கு மூலக்கொல்லை கலைஞன் முன்னோடியாக விளங்குகிறான்.

மூலக்கொல்லை பெருவிழா ஓவியத் தொகுப்பில் ஆங்காங்கே சில பகுதிகள் மங்கலாகி சிதைவுக்குள்ளாகி உள்ளன. முக்கியமான பெரும் பகுதி தெள்ளத் தெளிவாக உள்ளது நற்பேறே. இந்த ஓவியத் தொகுப்பானது, விழாவின் பொழுது மேற்கொள்ளும் நடனக் காட்சியை மையப்படுத்தியது என்றாலும், நாம் இன்றுவரை பாறை ஓவியங்களில் அறிந்த விழா, நடனக் காட்சி ஆகியவற்றின் குணங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்பது நமக்குப் புதிய செய்திகளை வழங்கிறது. நாம் இதுவரை அறிந்த நடனக் காட்சிகள் வேட்டையை நிகழ்த்திக் காட்டும் மந்திரச் செயலாகவோ, அல்லது படையல் செய்து அல்லது ஒரு திருவுருவை நிறுத்தி ஊர் கூடி கொண்டாடிய நிகழ்வாகவோ இருந்திருக்கிறது.

ஆனால், மூலக்கொல்லையின் அடிப்படை வேறுபாடு, இது சாமியாடிகளின் செயல்களை வெளிப்படுத்துவது என்பதில் உள்ளது. தவிரவும், வாழிடத்தையும், அறிந்த விலங்குகளையும், சுற்றுச்சூழலையும், தம்மக்களின் குணநலன்களையும், ஆண்-பெண் பாலினத்தையும் வெளிப்படுத்தும் பாங்கிலும், அவற்றின் துல்லியத்திலும் உள்ளது. இதில் வேட்டைக் காட்சியோ, தலைமைப் பண்பை முன்னிறுத்தும் அல்லது வீரத்தை முன்னிருத்தும் மனிதத் சித்தரிப்போ ஏதுமில்லை. வீரம் அல்லது தலைமைப் பண்பு ஆகிய பெருங் கற்படைப் பண்பாட்டுக் கால ஓவியங்கள் வெளிப்படுத்தும் குணங்களை இவை வெளிப்படுத்தவில்லை. அதனாலேயே, மூலக்கொல்லை ஓவியங்கள் புதிய கற்காலப் படைப்பு என காலத்தைத் தீர்மானிக்க வைக்கிறது. இதில் மனித உருவங்களும், மீவியல்பு மனித உருவங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மீவியல்பு மனித உருவங்கள், சாமியாடிகளாகவும் அவர்களின் செயல்களையும் காட்சிப்படுத்துகின்றன. இங்கு ஊர் கூடி பெருவிழா காண்பது ஊர் வளமையைச் சார்ந்தாக உள்ளது. இதனையொட்டி, சாமியாடிகள் ஊர் நன்மைக்காக எடுக்கப்படும் விழாவுக்கு நல்லாசியை வழங்க மூதாதையர் ஆவியை அழைக்கும் நிகழ்வானது ஒரு பகுதியாகவும், ஊர் கூடி வழிபடுவது, நடனமாடிக் கொண்டாவது போன்ற நிகழ்வுகள் மற்றொரு பகுதியாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

காட்சி விளக்கம்

இந்த ஓவியத் தொகுப்பில் உள்ள புனித இடம் என்று குறியீடாக்கப்படும் கோலத்தினை மையப்புள்ளியாகக் கொண்டு மேல் கீழ் பக்கவாட்டுக் காட்சிகள் என அடையாளப்படுத்திக்கொள்ளலாம்.

கோலத்தை மையமாகக் கொண்ட காட்சிகள்

கோலத்துக்கு மேல் பகுதி காட்சிகள், மூதாதையரை அழைக்கும் சாமியாடிகளின் செயலை மையப்படுத்தியுள்ளது. கோலத்துக்கு முதல் சுற்றுவரிசையாக நின்ற நிலையில் நான்கு மயில் உருவங்கள், ஒரு மீவியல்பு மனித உருவம், கிடந்தகோலத்தில் அல்லது மெய்மறந்து வீழ்ந்திருக்கும் ஒரு மீவியல்பு மனித உருவம் ஆகியவை உள்ளன. இவ்விரு மீவியல்பு மனித உருவங்களும் ஒரே சாமியாடியின் உருவங்கள் ஆகும். நின்ற நிலையில் உள்ள சாமியாடி, தன் மூதாதையரைத் தேடிய பயணத்தில் பரவசமடைந்து மெய்மறந்து வீழ்ந்திருக்கிறார். அவர் மூதாதையரைத் தேடி வேற்றுலத்துக்குப் பயணிக்கிறார் என்பதைச் சுட்ட ஒரு கோடும், அவர் மயில் உருவில் மூதாதையர் உலகம் நோக்கிப் பயணிக்கிறார் என்பதைச் சுட்ட ஒரு மயில் பறப்பதும் காட்டப்பட்டுள்ளது. அதனை அடுத்து ஒரு பெரிய ஒட்டகம் காட்டப்பட்டுள்ளது. பறக்கும் மயிலுக்கும் ஒட்டகத்துக்கும் இடையில் மற்றொரு கோடு காட்டப்பட்டுள்ளது, இக்கோடு மயிலாகப் பறந்து செல்லும் சாமியாடி, ஒட்டக வடிவில் தம் மூதாதையரை அழைத்துவரும் பயணத்தைத் தொடர்கிறார் என்பதை விளக்குகிறது.

இங்கு தமிழ்நாட்டு விலங்கு இல்லாத ஒட்டகம் காட்சிப்படுத்தப்படுவது ஏன் என்ற கேள்வி எழலாம். இதற்கான விடையை பின்னர் காண்போம். ஒட்டகத்துக்கு அடுத்து ஒரு மீவியல்பு மனித உருவம் குச்சி வடிவில் காட்டப்பட்டுள்ளது. இதன் முகம் பறவை முகம் பூண்டுள்ளது; இரு கைகளும், மேலே உயர்த்தி வேண்டுதலை நிகழ்த்துவதுபோல் காட்டப்பட்டுள்ளது. இவ்மீவியல்பு மனித உரு ஒரு பெண் என்பதைச் சுட்ட, தொடைகளுக்கு இடையே ஒரு சிறுபுள்ளி வைத்து பெண்குறி காட்டப்பட்டுள்ளது. எனில், இப்பெண் மீவியல்பு மனித உருவே, அழைக்கப்பட்ட மூதாதை ஆகலாம். எனில், இக்காட்சி மையப்படுத்துவது மயிலைக் குலக்குறியாகக் கொண்ட குழுவினர், தம் மூதாதையரான பெண்ணை தங்கள் குழுவின் நன்மைக்காக எடுக்கும் விழாவுக்கு அழைத்து வருகின்றனர். இவ்வழைப்புக்கு சாமியாடிகள் ஒட்டக வடிவில் பயணிக்கின்றனர். இந்த வகையில், இவ்வோவியத் தொகுப்பை மூதாதையர் வழிபாடாகக் காண இடமுள்ளது.

மேல் காட்சி

மேலே விவரிக்கப்பட்ட காட்சிக்கு மேலாக, பறவை முகம் கொண்ட மீவியல்பு மனித உருவம் ஒன்று மையமாக உள்ள சூரியனை நோக்கி விரைவதாகக் காட்டப்பட்டுள்ளது. மங்கிச் சிதைந்துள்ள இம்மையக் காட்சியானது, வட்டத்தில் இருந்து வெளிக்கிளம்பும் கதிர்கள் கொண்டதாக ஊகிக்கமுடிவதால் இது சூரியன் ஆகலாம். இதனால் இது நேரடியாக சூரிய வழிபாட்டைக் குறிக்கின்றது என்பதைவிட, சூரியன் மூதாதையர் வசிக்குமிடம் என்ற தொல்மனிதர்களின் நம்பிக்கையினைக் காட்டுகிறது எனலாம். இந்த இடத்திலும் வேற்றுலகப் பயணத்தைக் குறிக்கும் கோடு காட்டப்பட்டுள்ளது. ஆக சூரியலோகத்தில் உள்ள தம் மூதாதையை ஊர் நன்மை பொருட்டு எடுக்கப்பட்ட விழாவுக்கு சாமியாடிகள் அழைத்துவருகின்றனர் என்பதை இக்காட்சிகள் விளக்குகின்றன. கோட்டுக்குக் கீழ் ஒரு முதலை அருகில் உள்ள நீர்நிலையில் இருந்து (கடல்) மேலேறி ஊர்ந்து வருவதும் காட்டப்பட்டுள்ளது. இது குறித்து கடல் காட்சி பகுதியில் விளக்கப்படும்.

கடல் (நீர்நிலைக்) காட்சி

கடல் காட்சி

மேலே விவரிக்கப்பட்ட காட்சிக்கு இடதுபுறம் ஒரு பள்ளமான பகுதி கடலாக உருவகித்து அதில் நீர்வாழ் உயிரினங்களான முதலை, திமிங்கிலம் ஆகியவை நீந்துவது போலவும், கறைக்கு அருகில் ஒதுங்கியிருப்பது போலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கரைப் பகுதியில் தலையை மடக்கிப் படுத்திருக்கும் ஒரு பாம்பு காட்டப்பட்டுள்ளது. மேலே விளக்கிய முதலை நீரிலிருந்து மேலேறி ஊர்ந்து வருவதுபோலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது சாமியாடிகள் தங்கள் மூதாதையரைத் தேடிய பயணத்தில், தாங்கள் விரும்பி நினைத்த விலங்கு உருவத்தை அடைந்து அதுவாகவே செல்கின்றனர் என்பதைக் காட்டுவதாகும். (சாமியாடிகள் விலங்கு உருவில் பயணிக்கும் செயல் குறித்து முடிவுரைப் பகுதியில் விளக்கப்படும்).

இக்காட்சியிலிருந்து, மூலக்கொல்லை மக்கள் கடல் சார்ந்த நெய்தல் வாழ்வியலையும், நெய்தல் நில விலங்குகளைப் பற்றிய அறிவையும் பெற்றிருந்தார்கள் என்பதை அறியமுடிகிறது.

பக்கக் காட்சி

இடது பக்கக் காட்சி

கோலத்துக்கு இடதுபுறத்தில் இரண்டாம் வரிசையாக கடலில் இருந்து வெளிவந்து நிலத்தில் படுத்திருக்கும் ஒரு திமிங்கிலம் மற்றும் மான் அல்லது ஆடு காட்டப்பட்டுள்ளது. இதன் தலைப்பகுதியில் மண்படிவு படிந்துள்ளதால், மேற்கண்ட விலங்குகளில் ஏதோ ஒன்றாக யூகிக்கவேண்டி உள்ளது. மானாக எடுத்துக்கொள்ள வாய்ப்புகள் அதிகம். இதற்கு அடுத்து பறவை முகம் பூண்ட மனித உருவம் ஒன்று உள்ளது. இம்மனித உருவம், ஒரு கையில் வாளும், மற்றொரு கையில் கோடயமும் ஏந்தியுள்ளதாகவும், இடையில் வாளின் உறையும் காட்டப்பட்டுள்ளதாகவும் மேலோட்டமான பார்வைக்குத் தோன்றுகிறது. ஆனால், இந்த உருவத்தை நுணுக்கமாக ஆராயவேண்டி உள்ளது. பறவை முகம் பூண்ட இந்த மனித உருவம் எதிர் திசையினைப் பார்க்கிறது. கால் அசைவுகளின் திசையும் எதிர்திசைப் போக்கைக் காட்டுவதாக இருந்தாலும், உடலசைவுகள் இவ்வுருவத்தின் வேறு செயலான நாட்டியத்தை அடையாளப்படுத்துகின்றது.

பொதுவாக, வீரன் முன்னோகி விரையும்பொழுது இடுப்பில் கட்டிய வாளுறை முன்பக்கம் நீட்டிய நிலையில் வராது என்பது கொண்டும், காலசைவுகளின் போக்கைக் கொண்டும் இதன் உண்மைப் பொருளைத் தேடலாம். இவ்வுருவக் காட்சியை ஒரு சாமியாடி பறை இசைக் கருவியை ஒரு கையிலும், அதனை இசைக்கும் கோலை மற்றொரு கையிலும் ஏந்தி, அதனை வீராவேசத்துடன் இசைத்து ஆடுகிறார். ஆடுவதன் காரணமாகவே எதிர் திசையினை நோக்கும் கால் முன்னோக்கி சாய்ந்துள்ளது, ஆடுவதால், இடையில் கட்டிய பொருளும் முன்னோக்கி இருக்கிறது. அதே சமயத்தில், மற்றொரு கால் தரையில் உறுதியாக ஊன்றியுள்ளது. இதன் காலுக்குக் கீழ் ஒரு கோடு காட்டப்பட்டுள்ளது. இது, ஒரு கால் தரையிலும், மற்றொரு கால் அந்தரத்திலும் இருப்பதைக் காட்ட இடப்பட்டுள்ளது. இவ்வுருவத்தை பறையிசையை எழுப்பியபடி ஆடும் சாமியாடி அல்லது உதவிச் சாமியாடியாக எடுத்துக்கொள்ளலாம். இச்சாமியாடி ஏன் குழுமியிருக்கும் கூட்டத்தினரைப் பார்த்து இசைத்து ஆடவில்லை என்ற கேள்வி எழலாம். இப்பறையிசை, குழுவின் மகிழ்ச்சிக்காக இசைக்கப்படுவதல்ல; இசையின் லயத்தில் சாமியாடிகளையும் மக்களையும் மெய்மறக்கச் செய்வதாகும். மெய்மறந்து இருக்கும் நிலையில் திசை பற்றிய பிரக்ஞை பொதுவில் எழுவதில்லை. மூவுலகப் பயணத்தின்பொழுது, மெய்மறந்து சாவு நிலையில் இருக்கும் சாமியாடிகளின் உருவங்கள் ஒரு குறிப்பிட்ட திசை என்றில்லாமல் எல்லா திசையிலும் காட்டப்படும் இயல்பை இதனுடன் ஒப்பிட்டுத் தெளியலாம்.

முன்புறக் காட்சிகள்

முன்புறக் காட்சி

முன்புறக் காட்சியில் நான்கு மலை முகடுகள் புள்ளியிட்டு சுற்றிக்காட்டப்பட்டுள்ளன. இது, இம்மக்களின் வாழிடத்தை அல்லது இம்மக்கள் குறிஞ்சி நிலப் பண்பாட்டை உடையவர்கள் என்பதைக் குறிப்பதாகும். இதற்கு முன்புறமாக மூன்று பனை மரங்கள் மிக நேர்த்தியாக தீட்டப்பட்டுள்ளன. முதலிரண்டு பனை மரங்களுக்கு இடையில் ஒரு மயில் காட்டப்பட்டுள்ளது. பனை மரத்துக்குப் பிறகு மூன்று வரிசையில் மீவியல்பு மனித உருவங்களும், மனித உருவங்களும், விலங்கு உருவங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நடுவரிசையில் ஐந்து மனித உருவங்கள் நின்ற நிலையில் கைகோர்த்து நடனமாடும் நிலையில் காட்டப்பட்டுள்ளனர். இந்த ஐந்து உருவங்களின் தலையும் வட்டமாகக் காட்டப்பட்டுள்ளது. பாறைக்கலையில் இவ்வகை வட்டத்தலைச் சித்தரிப்புக் கொண்டவை, காட்சி உருவத்துக்குத் தக்கவகையில் “காளான் தலை மனிதர்கள் அல்லது காளான் தலை மீவியல்பு மனித உருவங்கள்” என்று அழைக்கப்படும். இவற்றுள் இரண்டாவது உருவம் அளவில் பெரியதாகக் காட்டப்பட்டுள்ளது.

இந்த ஐந்து காளான் தலை மனித உருவங்களும் பெண்கள் என்று காட்ட, உடலில் நளினமான வளைவுகளும் புட்டங்கள் பருத்தும் காட்டப்பட்டுள்ளன. பருத்த புட்டங்கள் தாய்மையின் அடையாளமாகத் தொல்லோவியங்களிலும் சிற்பங்களிலும் காட்டப்படும் மரபை நினைவுகொள்ளலாம். நடனமாடும் இவ்வுருவங்களின் கால் அசைவுகள் குழு நாட்டியத்தின் அடிப்படை விதியான ஒரு திசையில் இல்லாமல் உள்ளன. இது போதையூட்டும் கள்ளை உண்டு பரவசத்துடன் ஆடும்பொழுது, ஒவ்வொருவரும் பிறரது அசைவுகளுக்கு இணையாமல் தன்னிச்சையாக ஆடும் யதார்த்தநிலையைக் காட்டுவதாகும். காளான் தலை மெய்மறந்த நிலைக்கு ஆட்பட்டதின் குறியீடே என தொல்லோவிய வல்லுநர்கள் குறிப்பர். நான்காவது உருவம், தலையில் விழாக்கால அலங்காரத் தலைப்பாகையைக் கொண்டிருக்கிறது. ஆறாவதாக ஒரு மீவியல்பு மனித உருவம் அளவில் பெரியதாக இடம்பெற்றுள்ளது. இவ்வுருவம் பெண் என்பதைச் சுட்ட, தொடைகளுக்கு இடையில் ஒரு புள்ளிவைத்துக் காட்டப்பட்டுள்ளது. இவ்வுருவம் இரு கைகளையும் மேலே உயர்த்தி வணங்கும் கோலத்தில் காட்டப்பட்டுள்ளது.

மேல் வரிசையில் இரண்டு மீவியல்பு மனித உருவங்கள் இடம்பெற்றுள்ளன. முதல் உருவம் இரு கரங்களையும் மேலே உயர்த்தி வணங்கும் கோலத்திலும், மற்றொரு உருவம் தலையில் முட்கள் கொண்ட தலைப்பாகை அணிந்து, இரு கைகளையும் விரைப்பாகக் கீழே தொங்கவிட்டும், கால்களை அகல விரித்தும் வைத்துள்ள நிலையிலும் காட்டப்படுள்ளது. கால்கள் சித்தரிக்கும் அமைப்பைக் கொண்டு இது நடனமாடும் உருவம் ஆகும். இவ்வுருவம் ஆண் என்பதனைக் காட்ட, தொடைகளுக்கு இடையில் ஆண்குறி காட்டப்பட்டுள்ளது. இவ்விரு உருவங்களும் சாமியாடிகளே.

கீழ் வரிசையில் ஒரு மீவியல்பு மனித உருவம் இரு கரங்களையும் மேலுயர்த்தி மெய்மறந்து வணங்கும் நிலையில் காட்டப்படுள்ளது. அதே உருவம் கீழே மெய்மறந்து வீழ்ந்திருக்கும் காட்சியும் காட்டப்பட்டுள்ளது. நின்ற நிலைக்கும் வீழ்ந்திருக்கும் நிலைக்கும் இடையில் ஒரு கோடு காட்டப்பட்டுள்ளது. இது மீவியல்பு மனித உருவத்தில் உள்ள சாமியாடி தன் வேண்டுதலுக்குப் பிறகு வேற்றுலகப் பயணத்தில் உள்ளார் என்பதைக் குறிக்கிறது. அருகில், முதுகின் மீது நான்கு புள்ளிவைத்து சிறப்பித்துக் காட்டப்பட்ட புலியின் உருவம் காட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்புறமாக மற்றொரு விலங்கு ஒன்றின் உருவம் காட்டப்பட்டுள்ளது, இவ்விலங்கை இன்னதென்று அடையாளப்படுத்திக்கொள்ள முடியவில்லை. மானாக இருக்கலாம்.

புலியும் நடனமாடும் உருவங்களின் வேறுவேறான கால் அசைவுகளும்

தமிழரின் ஐந்திணைப் பண்பாட்டுக்கு முன்னோடியா மூலக்கொல்லை பெருவிழா ஓவியம்?

இவ்வோவியத் தொகுப்பின் காட்சிகளை ஒவ்வொன்றாக உட்செறிந்து கொள்ளும்பொழுது, ‘‘தமிழரின் ஐந்திணைப் பண்பாட்டுக்கு முன்னோடியா மூலக்கொல்லை பெருவிழா ஓவியம்” என்ற கேள்வியை எழுப்பிக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை. முதலை, மலை முகடு, புலி ஆகியவை குறிஞ்சியையும், மான் முல்லையையும் குறித்து நிற்பதாகக் காணலாம். பனை, வறட்சியைத் தாங்கி வளரும் தாவரம் என்பதால், குறிஞ்சி-முல்லைத் திரிநிலன்களுக்கு உரியதாகப் பொருத்திக் காண்பர். ஆனால், தமிழகத்தில் அனைத்து நிலங்களிலும் வளரும் புல், பனையாகும். எனில், இங்கு பனை மருதத்தோடும் தொடர்புடையதாக்கலாம். திமிங்கிலம் போன்றவை நெய்தலையும், ஒட்டகம் பாலையையும் குறிப்பதாகும். எனில், ஐந்திணைக்கு உரிய நிலங்களோடு இப்பகுதி மக்களுக்கு தொடர்பு உண்டு அல்லது ஐவகை நிலத்திலும் இம்மக்களின் குழுக்களோ கிளைக் குழுக்களோ பரவி இருந்துள்ளனர் என்பதை இவ்வோவியம் காட்டுகிறது எனலாம். அவர்களும் இவ்விழாவுக்கு அழைக்கப்பட்டனர் என்பதனையே இவ்விலங்குகள் தெரிவிக்கின்றன. மற்றொருவகையில், பனைப் பொருள்களால் பொருளாதார ரீதியான வளர்ச்சியினை மூலக்கொல்லை மக்கள் பெற்றிருந்தனர் என்பதையும் இது வெளிச்சமாகிறது. பனைப் பொருட்களின் வணிகத்தின் பொருட்டும் இம் மக்கள் பல குழுக்களாகப் பிரிந்து ஐவகை நிலத்திலும் பரவித் தங்கினர் என்பதையும் இக்காட்சிகள் தெரியப்படுத்துகின்றன.

தகடூர்ப் பகுதியும் பனையும்

தகடூர்ப் பகுதிக்கும் பனை மரங்களுக்கும் நிறைய தொடர்பு உண்டு. சங்க இலக்கியத்தில் அதியமான் மரபினர் பனம்பூ மாலையைச் சூட்டியவர் என்ற புகழைப் பெற்றிருப்பவர்கள். அதியர் மரபினர் குறித்த சங்க இலக்கியக் காட்சிகளுக்கு இது கூடுதல் வலு சேர்க்கும் சான்று. மேய்த்தல் தொழில் புரிந்த அதியமான்கள் மருதப் பண்பாட்டுக்கு உரிய கரும்பைப் பயிரிட்டனர் என்பது சங்க கால ஒளவையாரின் கூற்றாகும்.

ஓவியச் செய்தி

மூலக்கொல்லை ஓவியமானது ஊர் நன்மைக்காக எடுக்கப்பட்ட பெருவிழாவினையும், அதனை ஒட்டிய மூலக்கொல்லை மக்களின் சாமியாடிகளின் செயல்களையும் வெளிப்படுத்துகிறது. ஊர் விழாவுக்கு, சாமியாடிகள் தம் மூதாதையரை அழைக்க மூதாதையர் உலகுக்குச் – சூரியலோகம் - செல்கின்றனர். பனை மரத்தின் வளத்தினால் செழிப்புற்ற மூலக்கொல்லை மக்கள் அல்லது இவர்களின் கிளைக் குடியினர், ஐந்திணை வாழ் மக்களாகக் பரவி வாழ்ந்துள்ளனர். அவர்களும் விழாவுக்கு அழைக்கப்படுகின்றனர். இதன் பொருட்டான பயணத்தின்பொழுது, சாமியாடிகள் அவ்வவ் நிலத்தின் வலிமையான விலங்குகளான ஒட்டம், புலி, முதலை, பாம்பு, மான் ஆகியவற்றில் தம் ஆவியை புகுத்தி, அல்லது உருமாறி பயணிக்கின்றனர். மக்கள் விழா நடனத்தை நடத்தி மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

*

கட்டுரை ஆசிரியர் தொடர்புக்கு - thagadoorparthiban@gmail.com

]]>
தமிழர் பண்பாடு, மூலக்கொல்லை, சாமியாடிகள், பெருவிழா ஓவியம், கல்திட்டை, ஐவகை நிலங்கள், பனை https://www.dinamani.com/tholliyalmani/special-articles/2018/oct/04/மூலக்கொல்லை-ஓவியம்-2-பகுதி-1-3013828.html
3001488 தொல்லியல்மணி சிறப்புக் கட்டுரைகள் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய மூலக்கொல்லை பாறை ஓவியம்: உலகப் புகழ் பெறத்தக்கது - பாதுகாக்க வேண்டியது நமது கடமை! த. பார்த்திபன் Thursday, September 20, 2018 02:19 PM +0530  

ஆரோக்கியமான குழந்தைப்பேறுக்குச் சாமியாடிகளின் சடங்குமுறையைக் காட்டும் படைப்பு

பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ப. இரமேஷ் அவர்களால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குருவிநாயணப்பள்ளிக்கு அடுத்த மூலக்கொல்லை என்ற இடத்தில் இரண்டு இடங்களில் பாறை ஓவியங்கள் அடையாளம் காணப்பட்டு மூன்றாண்டுகளுக்குமேல் ஆகிறது. சில நாட்களிலேயே அவர் இந்த ஓவியங்கள் குறித்து என்னுடன் பேச வந்தார். தமிழகப் பாறை ஓவியங்களில் இதுவரை அறியவராத உள்ளுரைப் பொருளுடன் கூடிய இந்த ஓவியத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள பலமுறை களஆய்வு மேற்கொள்ள வேண்டியதானது. இடையில் கிருஷ்ணகிரி, அரசு ஆடவர் கலைக் கல்லூரி, வரலாற்றுத் துறை பேராசிரியர் முனைவர் பெ.வெங்கடேஸ்வரன் அவர்கள் இதனை அடையாளம் கண்டார். பேராசிரியர் மறுஆய்வுக்கு என்னை அழைத்தபொழுது அவர்களிடம், இரமேஷ் இந்த ஓவியத்தை முன்னரே அறிந்துவந்ததைக் குறித்தும் நான் ஆய்வு மேற்கொண்டு வருவதையும் தெரிவித்தேன். அதனால் அவர் இதனை ஆவணப்படுத்துவதில் இருந்து விலகிக்கொண்டார். பின்னர் இந்தப் படைப்பு குறித்து பலமுறை இருவரும் விவாதித்துள்ளோம். மேலும், ப. இரமேஷ், து. பாலாஜி, முனைவர் பட்ட ஆய்வு மாணவர், கிருஷ்ணகிரி மற்றும் எஸ். விஸ்வபாரதி, உதவிப் பேராசிரியர், வரலாற்றுத் துறை - அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி, கிருஷ்ணகிரி ஆகியோருடன் இறுதிக்கட்ட கள ஆய்வினை மேற்கொண்டேன். இவர்களின் உதவி மிகப்பெரிது; மறக்கத்தக்கதல்ல.

கடந்த ஜனவரி மாதம் சென்னைப் பல்கலைக் கழகத்தில் நடந்த இந்தியப் பாறை ஓவியக் கழகத்தால் நடத்தப்பட்ட கருத்தரங்கில், மூலக்கொல்லை இரண்டாவது ஓவியம் குறித்து ஒரு அறிமுகக் கட்டுரை இரமேஷால் வாசிக்கப்பட்டது. இவ்வோவியங்கள் குறித்த என் முழுமையான ஆய்வுடன், ஓவியங்கள் குறித்து தினமணி இணையதளம் (www.dinamani.com) மூலம் வெளியுலம் அறியச் செய்யப்படுகிறது.

இந்த ஓவியத்தின் சிறப்புகள், இவை வெளிப்படுத்தும் சமுதாய அமைப்பு, பொருளியல், இவற்றின் காலம் குறித்து விரிவாக எழுத வேண்டும் என கடந்த மூன்றாண்டுகளாகவே அவ்வப்பொழுது முயன்று வந்தேன். பல்வேறு பணிகளின் இடையூறால் காலதாமதம் ஆகியது.

***

இந்த ஓவியத்தை முழுமையாக அல்லது நான் அறிந்தவற்றை முழுமையாக அறியச்செய்ய என் முன் இரண்டு சவால்கள் இருந்தன. 1. சாமியாடியியம் என்ற தொல்மக்களின் வழிபாட்டு நம்பிக்கை மற்றும் மருத்துவ அறிவு பற்றியும், அதன் பன்முகத்தன்மை பற்றியும் விளக்குவது; 2. இனக்குழு தலைமை, வேளிர், அரசு உருவாக்கத்துக்கு முன் சமூகத் தலைமையாக இருந்த சாமியாடி தலைமை குறித்து விளக்குவது. இவ்விரண்டின் பின்புலம் இன்றி, இவ்வோவியத்தின்வழி பண்டைய இம்மக்கள் வெளிப்படுத்திய அவர்களின் அறிவுத்திறன் வளர்ச்சியையோ, சமூக அமைப்பையோ, அவர்களின் பொருளியலையோ சரியான அல்லது கூடியவரை அவற்றின் நெருக்கமான பொருளையோ அடைவது இயலாத ஒன்றே. சாமியாடித் தலைமை என்பதை மதகுரு ஆட்சி என்று சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பர். ஆனால், இவ்விரு தலைமைப் பண்புக்கும் குறிப்பிடத்தகுந்த வேறுபாடு உண்டு. அவை வரும் பத்திகளில் விளக்கப்படும்.

மேலும், தமிழகப் பாறை ஓவியங்கள் குறித்துப் பொதுப்புத்தியில் உறைந்த சில கருத்துருவங்களையும், இந்நாள்வரை நீடித்துவரும் காட்சிகளின் பட்டியல் வகையிலான விவரிப்புச் செய்யும் குணத்தையும் ஒதுக்கிவைக்க வேண்டியதும் அவசியமாக இருந்தது.

இப்பின்னணியில், ஓவியங்கள் குறித்த செய்திகளுக்குப் போகும் முன்னர், தொன்மைச் சமூகத்தினரிடையே வழக்கில் இருந்த சாமியாடிகள் குறித்தும் அவர்களின் செயல்பாடுகள் மற்றும் சிந்தனைகளான சாமியாடியியம் குறித்தும் சில செய்திகளை அறிமுகம் என்ற அளவிலேனும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

சாமியாடிகளும் சாமியாடியியமும்

ஆங்கிலத்தில் Shamans and Shamanism என்று சொல்லப்படுவதுதான் இங்கு சாமியாடிகளும் சாமியாடியியமும் என்று குறிக்கப்படுகிறது. தமிழில் இச்சொற்களுக்கு இணையாக மாயவித்தையரும் மாயவித்தையியமும், பூசாரிகளும் பூசாரியியமும், மந்திரவாதிகளும் மந்திரவாதியியமும் போன்று வேறு சொற்களும் ஆலோசிக்கப்பட்டன. தொல்மனிதனின் வழிபாட்டு முறை, சடங்கு முறை, மருத்துவ முறை அதனைச் செய்பவர், அதனைச் சார்ந்த நம்பிக்கைகள், செயல்முறைகள் ஆகியவற்றின் சிந்தனைகளின் தொகுப்பு ஆகியவற்றை ஆதிமணத்துடன் அடையாளப்படுத்தும் சொற்களாக அல்லது அதன் பொருளின் நெருக்கத்துக்கு அழைத்துச் செல்லும் சொற்களாக வேறு எந்த சொற்களைவிடவும் சாமியாடி, சாமியாடியியம் ஆகியவையே உள்ளன.

இங்கு ஆலோசிக்கப்பட்ட பிற சொற்களான மந்திரவித்தையன் என்பவர் மந்திரவித்தை புரிபவரையும்; பூசாரி என்பவர் பூசை போன்ற சடங்குகளைச் செய்பவரையும், மந்திரவாதி என்பவர் மந்திரவித்தையனையும் குறிக்கிறது. சாமியாடி என்பதன் முழுப்பொருளையும் இவை அடையாளப்படுத்துபவையாக இல்லை. இவையனைத்தும், பகுதிப்பொருள் அல்லது ஒரு செயலை மட்டும் அடையாளப்படுத்துபவையாகவே உள்ளன. நவீன புரிதலில், அருள் வந்து ஆடி அருள்வாக்கு சொல்பவர்களே சாமியாடிகள் என்று அழைக்கப்படுவது, நாம் அச்சொல் குறித்து வகுத்துக்கொண்ட புரிதல் குறைபாடே அன்றி வேறில்லை. குருமார் மற்றும் குருமாரியம் ஆகிய சொற்களையும் ஆலோசனைக்கு எடுத்துக்கொண்டேன். இச்சொற்கள், நூல்களால் வழிநடத்தப்படும் சமயக் குருக்களையும் அவர்களது கோட்பாடுகளையும் அடையாளப்படுத்துவதாக இருப்பதாலும், எழுதப்படாத கோட்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்ட பழைமைவாய்ந்த நிலையை அவை அடையாளப்படுத்தவில்லை என்பதாலும் சாமியாடி, சாமியாடியியம் சொற்களைத் தொடர்கிறேன்.

அண்மைக்காலங்களில் Neo Shamans and Neo Shamanism என்ற சொற்கள் தொல்நிலை சாமியாடி, சாமியாடியியத்தில் இருந்து புதியவை புகுத்தி அவற்றை ஏற்றுச் செயல்படுபவர்களைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இவற்றுக்கு இணையாக நவீன சாமியாடி, நவீன சாமியாடியியம் சொற்களை உருவாக்கிக்கொள்ளலாம்.

பெயராய்வு

ஆங்கிலத்தில் “சாமன்” (Shaman) என்று அழைக்கப்படும் சொல்லுக்கு வேரைத் தேடியவர்கள் இன்னும் அதனைக் கண்டடையவில்லை. சைபீரியாவின் “டங்க்ஸ்” (Tungus) மக்களின் “டங்க்சிக்” (Tungusic) மொழியில் இருந்து இச்சொல்லைப் பெற்றுக்கொண்டனர். முதலில் துவக்கக்கால ஆய்வாளர்களின் புழக்கத்தில் மட்டும் இருந்த இச்சொல், நாளடைவில் பொதுப் பயன்பாட்டுக்கு வந்தது. இச்சொல் ஆயிரக்கணக்கான தொல்சமயக் கருத்துருவங்களின் பொதுக்குணத்தைக் குறிக்க சமயவாதிகளாலும், மானுடவியலாளர்களாலும், தொல்லியலாளர்களும் பயன்படுத்தப்படுகிறது. சாமன் என்ற சொல்லுக்கு வேரையும் பொருளையும் தேடிய ஹோப்பல் (Mihaly Hoppal), இச்சொல் இந்தோ-ஈரானிய மொழிச்சொல் அன்று என்று கூறுகிறார். சம்ஸ்கிருதம் முதலான மொழிகளில் வழக்கில் உள்ள சுவாமி என்ற சொல்லை அடியாகக் கொண்டதன்று எனக் குறிப்பிடுகிறார் எனக் கருதலாம்.

தமிழில் சாமியாடி என்ற சொல்லானது சாமி+ஆடி என்றும், இன்னும் உட்பகுப்பாக சா+மீ+ஆடி என்ற சொற்களின் தொடர் ஒரு சொல்லாக ஒலிக்கிறது. சா = என்பது சாவு என்ற மரணத்தையும், மீ = என்பது மீள்தல் அல்லது உயிர்த்தெழுதலையும், ஆடி என்பது ஆடு+இ என வேர்களின் இணைவாக அமைந்து “ஆடு” என்பது துள்ளல், அசைவு, நடனம் முதலான பொருள்களைத் தந்து நிற்கும். “இ” தொழில் பெயர் விகுதியாகும். இது, சாவு நிலைக்குச் சென்று அதனிலிருந்து மீண்டு துள்ளுபவர் என்ற பொருளை வழங்குவதாகும். வரும் பக்கங்களில் சாமியாடிகளின் குணங்கள் குறித்து விளக்கப்படும்பொழுது இது பண்புப்பெயராக அமைவதை அறியலாம். இதனைக் கொண்டு, தமிழின் சாமியாடிதான் மருவி சாமன் ஆக உருவானது எனக் கூறுவது மிகையாக இருக்கும்; இட்டுக்கட்டியதாகவும் ஆகலாம். சாமியாடி என்ற தமிழ்ச் சொல் கொண்டுள்ள பண்புப் பொருள், சாமனின் பண்புப் பொருளோடு நெருக்கமாக உள்ளது. மேலாய்வுக்கு விட்டுவிடுகிறேன்.

சாமியாடியியம் என்ற சொல் அடையாளப்படுத்தும் இயம் (ism), அதாவது கோட்பாடு அல்லது தத்துவம் இதற்கு இல்லை என்பர். உலகம் முழுவதும் பரவியுள்ள எல்லா மனித இனம், குழுவிடமும் அவ்வவ் குழுக்களின் தேவை சார்ந்து பிறந்த அறிவும் வலிமையும் கூடிய ஒருவரே அல்லது ஒரு சிலரே சாமன், அதாவது சாமியாடி என்று அழைக்கப்படுகின்றனர். சாமியாடிகளிடையே இடமும் பொழுது சார்ந்து சிற்சில வேறுபாடுகள் இருப்பினும், ஒருவருக்கு ஒருவர் எந்தவிதத் தொடர்பு இன்றியே செயல்பாடுகளில் உலகளவிலான ஒரு பொதுக் குணம் உருவாகியுள்ளது. அப் பொதுக் குணங்களின் தொகுப்பே சாமியாடியியம் அல்லது ஆங்கிலத்தில் சாமனிசம் எனக் குறிக்கப்படுகிறது.

சாமியாடியிய ஆய்வுகள்

சைபீரியாவில் செம்மையான சாமியாடியியம் கடந்த 18-ம் நூற்றாண்டுவரை வழக்கில் இருந்தது. அங்கிருந்து சாமியாடியியத்தின் பல நுட்பமான செய்திகள் ஆய்வுப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. தொடர்ந்து மற்றும் மத்திய, கிழக்கு ஆசியா, இந்தியாவில் வழக்கில் இருக்கும் சாமியாடியியச் செயல்பாடுகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதனையொட்டியே, பாறைக்கலையில் சாமியாடியியம் குறித்த உலகளாவிய ஆய்வுகளும் தொல்லியளாளர்களால் நடத்தப்பட்டன. தமிழகத்தைப் பொருத்த அளவில், மூலக்கொல்லை ஓவியம்தான் சாமியாடியியத்தை முன்வைத்து முதன்முதலில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

சாமியாடியியத்தின் பொதுக்குணங்கள்

சாமியாடி என்று நினைத்தவுடன் நமக்கு தொல்மனிதர்கள், தொல்குடிகள், பழங்குடிகள் போன்று உணவைத் தேடும் கூட்டத்தையும், வேட்டையாடி உணவைச் சேகரிக்கும் கூட்டத்தைச் சார்ந்தவர்களும் நினைவுக்கு வருகின்றனர். ஆனால், சாமியாடியியத்தின் பல குணங்களை, சடங்குகளை, நம்பிக்கை வெளிப்பாடுகளை நவீன மனிதன் வெளிப்படுத்தி வருகிறான், சமய வேறுபாடுகள் இன்றி. அவனது சில அன்றாட சில செயல்கள் சாமியாடிகள் வழங்கியது என்பதை வசதியாக மறந்துவிட்டு அல்லது மதத்தின் போர்வையில் மறைந்துகொண்டு தொடர்ந்து செய்துவருகிறான். தன் சந்ததிக்கு மரபு என்ற வகையில் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் அதனை என்றென்றும் கடத்திவர வழங்குகிறான்.

சாமியாடியியம் மானுடர்களிடையே உள்ள ஒரு மதமா / சமயமா என்ற கேள்வி அவ்வப்பொழுது தொல்லியலாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள், மதத் தலைவர்கள் உள்பட எல்லாத் தரப்பிலிருந்தும் எழுப்பப்படுவது உண்டு. அது தொல்சமய நிலையா என்றும் ஆலோசிக்கப்படுவதும் உண்டு. மத நூல்களால் வழிநடத்தப்படும் ஒருவன் பண்பட்டவனாகவும், அவனது சமூகம் பண்பட்டச் சமூகமாகவும் ஆக்கப்படுகிறது. மத நூல்கள் ஆகாத, அதாவது எழுதப்படாத வாழ்வியல் நெறிமுறைகள், சமூகக் கட்டுமானங்கள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் கொண்டு இயங்கும் மனிதன் பண்படாத மனிதனாகிறான்; அவனது சமூகம் பண்படாத சமூகமாக்கப்படுகிறது. சாமியாடிகளுக்கும் மதகுருவுக்கும் உள்ள வித்தியாசத்தையும் இந்த வரையறை வழங்கிவிடுகிறது. இந்த வித்தியாசத்தை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளப்படும்போது, சாமியாடியியத்துக்கும் அதாவது சாமியாடி கோட்பாடுகளுக்கும் மதங்களுக்கும் உள்ள வித்தியாசம் நன்கு புலனாகும். உண்மையில், சாமியாடிகளின் வழித்தோன்றல்கள்தாம் ஆதிமத குருமார்கள் என்பது ஆச்சரியமான வரலாற்று உண்மை. சாமியாடி என்ற சொல் இருபாலரையும் குறிக்கும். ஆண் - பெண் இருபாலருமே சாமியாடிகளாக இருந்துள்ளனர்.

சாமியாடிகள் யார்

சாமியாடிகள் ஒவ்வொரு சமூகத்திலும் முதலில் மருத்துவத் தேவையின் பொருட்டே உருவானார்கள். இவர்கள் மனிதர்களுக்கு உண்டாகும் நோய், குறைகள் அனைத்தும் கெட்ட ஆவிகளால் உருவாகின்றன என்ற நம்பிக்கை கொண்டவர்கள். இந்நம்பிக்கையின் சான்றுகளைத் தொல்பழங்காலத்தில் இருந்தே காணமுடிகிறது. அவற்றைக் குணமாக்கவும், கெட்ட ஆவிகளை விரட்டவும் மிகவும் பலசாலியான, புத்திக்கூர்மை கொண்ட சிலர் ஒவ்வொரு சமூகத்திலும் உருவாயினர். சமூகத்தின் அறிவு வளர்ச்சியில்; சமூக அக்கறையில் மிகுந்திருந்தவர்களாக இவர்கள் இருந்தனர். அவர்களே சாமியாடிகள்.

ஒவ்வொரு சமூகத்திலும் சாமியாடிகள் உருவானார்கள். இச்சாமியாடிகளே நோய்களைப் குணமாக்கும் அக்கால அவ்வவ் சமூகத்தின் மருத்துவர்கள், மருந்துகளைச் செய்யும் விஞ்ஞானிகள். குறி சொல்லுதல், நிமித்தங்கள் பார்த்தல் என்பதும் இவர்களின் பணிகளில் ஒன்றாகின. இதனால், இவர்கள் ரசவாதிகளாகவும், கணித வல்லுநர்களாகவும், வானவியல் நிபுணர்களாகவும், வழிபாட்டை ஒருங்கமைத்துச் செய்யும் பூசாரிகளாகவும், தொல்மத மதகுருமார்களாகவும் ஆயினர். அவர்கள் உடல் வலிமையிலும் குறைவற்றவர்களாக இருந்தனர். காலஓட்டத்தில், இவர்கள் சமூகத்தை வழிநடத்தும் தலைவர்களாகவும் விளங்கினர். சாமியாடிகள் போர்த் தலைமையினையும் ஏற்றனர். வேட்டையானாலும் சரி, எதிரிக் குழுக்களுடன் போர் என்றாலும் சரி, ஆயுதம் ஏந்தி முன் செல்வது சாமியாடிகளின் சமூக நலம் கருதிய பணி. அதனால், வேட்டைச் சமூகத்திலும் சரி, உணவைச் சேகரிக்கும் கூட்டத்திலும் சரி, உணவை உற்பத்தி செய்யும் சமூகத்திலும் சரி, இவர்களே ஆயுதம்தாங்கி வேட்டையிலும், போர்க்களத்திலும் முன்நின்றனர். அருள்வாக்கு தரும் அருளாடிகளோடு இச்சாமியாடிகளை இணைத்துப்பார்த்து குழப்பிக்கொள்ளக் கூடாது என்பது முன்னரே விளக்கப்பட்டது.

சாமியாடிகளின் சில மறைவான செயல்களினாலும், அவர்களது பரவசநிலை, சமாதிநிலை (trance or ecstasy) அடைதல் குணங்களாலும், அரக்கர்களாக (demonized) இகழப்பட்டும், மனோவியாதிக்காரர்கள், (psychotic) சிதைவுற்ற பண்பாளார்கள் (schizophrenic) மற்றும் நரம்புமண்டலக் கோளாறு அல்லது மூளைச்சிதைவு (neurotic) உடையவர்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டனர். சாமியாடிகள் குறித்து இன்றும் மிகச்சிறந்த ஆவணமாக விளங்கும் நூலை எழுதிய எலியடே (Mircea Eliade), முதன்முதலில் “சாமியாடிகளை, மூளை தொடர்பான எந்த நோய் உடையவர்களாக உள்கிரகிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.

சமூகத்தில் சாமியாடிகளின் முக்கியப் பங்கு இவர்களின் மருத்துவத்தில் உள்ளது. இவர்கள் நோயை உண்டாக்கியவர் அல்லது கிருமிகளின் ஆன்மாவுக்குள் புகுந்து அதற்கான மாற்றை, அல்லது முறிப்பை அல்லது அதனை விரட்டி அடிக்கும் ஒன்றைக் கண்டறிந்து நிவாரணம் அளிப்பார்கள். இவ்வாறான செயலில் இவர்கள் ஈடுபடும்பொழுது, இவர்கள் பரவசநிலை அடைவார்கள், அல்லது தாற்காலிக மரணநிலை அடைந்து வேறு உலகம் சென்று மீண்டுவருவர். பின்னர் பாடுவர்; ஆடுவர். பறை (சிறுபறை), இவர்களிடமிந்து பிரிக்க முடியாத இசைக்கருவி. இதனால், சமயவழிப்பட்ட இசையும், பாடலும் இவர்களிடமிருந்து பிறந்தது என்பது மிகையில்லை. (பெயராய்வுச் செய்திகளை இங்கு ஒப்பிட்டுக்கொள்க). மாந்தரினப் பரிமாண வளர்ச்சியில், அறிவியல்பூர்வமான கண்டுபிடிப்புகளின் ஆதி முன்னோடி அறிஞர்களும் இவர்களே. நாம் மூடத்தனம் அறிவியல்பூர்வமற்றது என்று கருதும் விஷயங்களின் ஆதிமுன்னோடிகளும் இவர்களே.

Shaman, Shamanism ஆகியவற்றுக்குப் பொருள் வழங்கும் வழக்கில் உள்ள அகராதிகள் போலியானவர், கள்ளத்தனமானவர், மாறாட்டம் செய்பவர், மோசடி செய்பவர் என்றும், மந்திர சூனிய மதகுரு ஆட்சி, மாயவித்தை சூனியம் ஆகியவற்றை உள்கூறாகக் கொண்ட சமயம் என்பதான பொருள்களைத் தருவதை இங்கு ஒப்பிட்டுப் பார்க்கலாம். இவை தற்காலத்தில் சாமியாடிபோல் வேடமிட்டு வஞ்சிக்கும் நபரின் செயல்களைக் கொண்டு பொருள் கொள்ளப்பட்டதாகும். ஆனால், தொல்லியல் பார்வையிலும் சரி, பழங்குடி அறிவியலிலும் சரி, சாமியாடிகளின் பங்களிப்பு என்பது சமூகத்தின் நன்மை கொண்டு எழுந்து வளர்ந்தது ஆகும்.

சாமியாடிகளும் ஆவி வழிபாடும்

“ஆவி வழிபாடு” தொல்சமயச் சிந்தனையில் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பது. உலகின் எல்லா உயிருள்ள / உயிரற்ற பொருள்கள் ஆவிகளைக் கொண்டுள்ளன. ஆவிகளே ஆன்மா என்றும் குறிக்கப்படும். ஆவிகள், நன்மை செய்பவை தீமை செய்பவை என்று இரு பண்புகளையும் பெற்றிருப்பவை. மேலும் விரிவாகப் பார்க்க தினமணி.காம், தொல்லியல் மணி, யுத்தபூமி தொடர் அத்தியாயம் 67-ஐ பார்க்கவும்.

சாமியாடிகள் உலகில் இந்த ஆவிகள் ‘‘காரண ஆவிகள்” என்று அழைக்கப்படும். பொருள்முதல் வாழ்கையின் எல்லா நிகழ்வுகளில், உடல் நோயுருதல், உடல் நலத்துடன் இருத்தல், உணவை, உறைவிடத்தைப் பெறுதல், வேட்டையில் வெற்றிபெறல், மற்றும் சமூகத்தின் நல்லிருப்பு போன்றவற்றுக்கு ஆவிகளே காரணமாக அமைகின்றன. இதனாலேயே, இத்தகைய ஆவி/ஆன்மாக்களுடன் நல்லுறவைப் பேணுவது முக்கியமாகிறது, தவிர்க்க முடியாததாகிறது. இவ்வுறவைப் பேணுவதில் சமூகத்தில் சில சிறப்புப் பண்பு வாய்ந்த நபர்கள் இருந்தனர். அவர்கள் இவ் ஆவிகளோடு / ஆன்மாக்களோடு தொடர்புகொள்வர். இவ்வாறு தொடர்புகொள்ள இச்சிறப்பு வாய்ந்த நபர்கள் தங்களின் ஆவியை “காரண ஆவி”களின் உலகுக்குச் செலுத்துவர். இவ்வாறு தங்களின் ஆவியை “காரண ஆவிகள் இடத்துக்கு அல்லது உலகுக்குச் செலுத்தும் செயலே சாமியாடிகளின் பயணம்” என்று அழைக்கப்படுகிறது. மேலும் இவர்கள் தம் மூதாதையரின் ஆவிகளையும் துணைக்கு அழைத்து தம் தேவைகளையும் ஆலோசனையையும் பெறுவர்.

சாமியாடிகளின் பயணம்

மருத்துவம் சார்ந்த சாமியாடிகளின் ஈடு இணையற்றச் செயல்களில் முக்கிய இடம் பெற்றிருப்பது அவர்களின் “பயணம்” ஆகும். சாமியாடிகளின் இப்பயணத்தை “மூவுலகுப் பயணம்” எனலாம். மேலுலகு, கீழுலகு, நடுவுலகு என்பவையே இம்மூன்று உலகங்கள். இவ் உலகங்களின் பொருள், தேவர் அல்லது நல் ஆத்மாக்களின் உலகு, தீய ஆத்மாக்களின் உலகு, மனிதர்களின் உலகு என்பது ஏறத்தாழ எல்லா சமூகங்களிலும் ஒன்றுபோலவே இருக்கிறது.

அவர்கள் பயணத்தின்பொழுது பரவசநிலையை அடைவர், உணர்வற்ற சமாதி நிலைக்குச் செல்வர். “காரண ஆவி”களிடம் இவர்களின் ஆவிகள்தாம் வேண்டும் உதவிக் கோரிக்கையை வைக்கும், மன்றாடும், அல்லது தங்களின் விருப்பத்துக்கு இணையச்செய்யும்; தேவையெனில், சமயங்களில் அவற்றுடன் மோதும்; போராடும். முன்னர் குறித்தபடி, மூதாதையரின் ஆவிகளைத் துணைக்கு அழைக்கும். எவ்வாறாகினும் உரிய நிவாரணத்தைப் பெற்றுவரும்.

சாமியாடிகளின் பயணத்தில் பாடலும் பறையிசையின் பங்கும்

சாமியடிகளின் பயணத்தில் பாடலும் பறை இசைப்பின் பங்கும் பெரியது. தனி நபர் சார்ந்தோ, அல்லது சமூகம் சார்ந்தோ காரண ஆவிகளை நோக்கிய பயணத்தின்பொழுது சாமியாடிகள் தொடர்ந்து பாடுவர், பறையை இசைப்பர். அல்லது பறையிசைக்க வைக்கப்பட்ட நபர் தொடர்ந்து இசைப்பார். உடன் சமூகத்தினரும் ஆராவாரித்திருப்பர். இது சாமியாடிகளைப் பரவச நிலைக்குத் தள்ளுகிறது. பின்னர் தன் மெய்மறந்து உடல் சரிவதிலிருந்து அவரின் பயணம் தொடங்குகிறது.

சாமியாடிகளும் பறவை விலங்குகளும்

சாமியாடிகள் பறவை, விலங்குகளுடன் கொண்டிருக்கும் உறவு தனித்துவமானது. பொருள் பொதிந்தது. அவற்றின் சிறப்பான குணங்களை; அவற்றின் சக்திகளைத் தாம் பெறுவதன் பொருட்டே அவற்றை சாமியாடிகள் கைக்கொள்கின்றனர். அவற்றின் தோல்களை ஆடையாக்கிக்கொள்கின்றனர்; கொம்புகளை தலைக்கவசமாக்கிக்கொள்கின்றனர். தம் ஆவிகளை அவற்றுள் செலுத்திப் பயணிக்கின்றனர்; அல்லது பயணத்துக்கு வாகனமாக்கிக்கொள்கின்றனர். மான், குதிரை, கழுகு, மீன், பன்றி போன்ற இவற்றுள் முக்கியமானவையாக உள்ளன. இவற்றுள் பறவை உயிரினங்கள் மேலுலப் பயணத்துக்கும், மீன், பன்றி போன்ற உயிரினங்கள் கீழுலகப் பயணத்துக்கும் குறியீடுகளாக உள்ளன. மான், குதிரை போன்றவை மேலுலகப் பயணத்தின் வாகனக் குறியீடுகளாக உள்ளன. சில சமூகங்களில் பாம்புகளும் இடம்பெறுவதைக் காணலாம். சில சமூகங்களில் மான், குதிரை போன்ற விலங்குகள், நன்மையின் பொருட்டு வரும் மூதாதையரின் குறியீடுகளாகவும் இருக்கின்றன. இவ் உண்மையைச் சாமியாடியியம் சார்ந்த பாறை ஓவிய ஆய்வுகளும், அவ் ஓவியங்களைப் படைத்த சமூகத்தினரின் இனவியல் ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.

குதிரை உருவம் உருவாக்கும் சிக்கல்

இவ் ஓவியத் தொகுப்பில் ஒரு சாமியாடி குதிரையில் விரைவதுபோல் காட்டப்பட்டிருப்பது பெருங்கற்படைக் கால என்ற இரும்புக் காலப் படைப்பாக நிறுவ விவாதிக்கத் தோன்றும். சாமியாடியியத்தின்படி சாமியாடியின் குதிரைப் பயணம் என்பது பறை இசையோடு தொடர்புடையது. பறை என்பது ஒரு உயிரூட்டும் கருவி இன்னும் துல்லியமாக விலங்காக உயிரூட்டம் தரும் கருவி. பறைடன் சடங்கு நிகழ்த்தும்பொழுது இவ்வாறு உயிரூட்டம் பெறும் விலங்குகள் குதிரை, மான், ஒட்டகம் போன்றவை இருக்கின்றன. இது சைபீரிய, மத்திய ஆசிய சாமியாடிகளிடையே ஆய்வுசெய்து பெற்ற முடிவாகும். இங்கு, குதிரையில் விரையும் சாமியாடி ஒரு கையில் பறை போன்ற வட்டமான கருவி ஒன்றை ஏந்தியிருப்பது கவனிக்கத்தக்கது.

மூலக்கொல்லை பாறைக்கலை

பாறைக்கலை (Rock Art) என்னும் கலைச்சொல் பாறைக்கீறலையும் (Carving and Engraving) பாறைச் செதுக்குகளையும் (Base relief – Sculptured - on rock), பாறை ஓவியங்களையும் (Rock Paintings) ஒருசேரக் குறிக்கும் ஒரு சொல்லாகும். ஆங்கிலத்தில் பாறைக்கீறலையும், வரலாற்றுக்கு முற்பட்ட பாறைச்செதுக்கையும் Petroglyphs என்ற ஒரே சொல்லால் குறிப்பர். பாறைக்கீறல் என்பது கூர்முனை கொண்ட கல் அல்லது உலோகத்தால் ஆன கருவிகொண்டு சீராக்கப்பட்ட பாறையின் மேற்பரப்பில் கோடுகளால் ஆன உருவங்களைக் கீறி உருவாக்குவதாகும். செதுக்கு என்பது முழு பரும உருவமும் பாறையில் குழிவாகச் செதுக்கி அமைப்பதாகும். பொதுவாக, பாறை ஓவியங்களும் கீறல் செதுக்குகளும் தனித்தனியாகக் கிடைக்கும். உலகளவில் அரிதாகவே இந்தக் கலை வடிவங்கள் இணைந்து வெளிப்பட்டுள்ளன. இவ்வாறு பாறைச் செதுக்கையும், ஓவியத்தையும் இணைந்து உருவாக்கப்பட்டதொரு அரிய படைப்பாக மூலக்கொல்லை படைப்பு விளங்குகிறது.

மணற்பாறை

பாறை ஓவியங்கள், பொதுவாக வலுவான கிரானைட், நீசிஸ் போன்ற கடினப் பாறைகளிலேயே வரையப்படுவது வழக்கம். பாறையின் மேற்பரப்பு சீராக்கப்பட்ட, சமதளமாக்கப்பட்ட தளத்திலேயே ஓவியத்தைத் தீட்டும் மரபு பின்பற்றப்பட்டது. அரிதாகவே சீராக்கப்படாத தளத்தில் தீட்டப்பட்ட ஓவியங்களைக் காணமுடிகிறது. இக்குணத்துக்கு மாறுபட்டு, எளிதில் நொறுங்கும், வேகமான காற்றில் அரிப்புக்கு உள்ளாகும் மணற்பாறையில் மூலக்கொல்லை ஓவியமும் செதுக்கும் செய்யப்பட்டுள்ளது வியப்பைத் தருகிறது. இக் குண்டுப்பாறையைச் சுற்றிலும் கடினப்பாறைகளும், குகை போன்ற மறைவுத் தளங்களும் நிறைய இருந்தும் இம்மணற்பாறையைத் தேர்வு கொண்டது ஏன் என்று விளக்கிக்கொள்ள முடியவில்லை. இதற்கான காரணத்தையும் உடனடியாக அறிந்துகொள்ள இயலவில்லை. இது வழிபாட்டை முதன்மை நோக்கமாகக் கொண்டதால், ஒருமுறை மட்டும் அல்லது குறுகிய காலம் மட்டும் பயன்படுத்தும் நோக்கத்திலோ, அல்லது ஒரு சிறப்பு நிகழ்வின் பொருட்டு உருவாக்கப்பட்டதாகவோ இருக்கக்கூடும் என்ற ஒரு அனுமானத்தை வைக்கலாம். அல்லது வழிபாடு நோக்கமின்றி, தங்கள் சமூகத்தின் சாமியாடிகளின் செயல் திறனையும், சிறப்புகளையும் அவர்கள் பெற்றிருந்த அறிவியல் வளர்ச்சியையும், குறிப்பாக உடற்செயலியல் மற்றும் கருவுறுதல் அறிவை வெளிப்படுத்த அச்சமூகத்தைச் சார்ந்த ஒரு கலைஞன் உருவாக்கிய படைப்பாகவும் இருக்கலாம்.

இவ் ஓவியத் தொகுப்பும் செதுக்குகளும் மணற்கல்குண்டின் கீழ்ச்சரிவில் உருவாக்கப்பட்டுள்ளது. வீசும் காற்று இம்மணற்குண்டின் மேற்பரப்பில் செய்திருக்கும் அரிப்புகளைக் காணமுடிகிறது. இதனால் செதுக்குகளும் பாதிப்படைந்துள்ளன. ஓவியத் தொகுப்பின் ஒரு சில காட்சிகள் மங்கலாகியுள்ளன. இருந்தும், குறிப்பிட்ட ஒரு கோணத்தில் சாமியாடிகள் உருவப்படுத்திய கருப்பை, யோனி, கருமுட்டை, விந்து ஆகியவற்றின் செதுக்குகளின் முழுப்பரிமாணமும் அவற்றில் ஓவியங்கள் தீட்டப்பட்ட காட்சிகளும் சிறப்பாகத் தெரிகின்றன.

மூலக்கொல்லை பாறைக்கலை

மூலக்கொல்லை பாறைக்கலையில், பாறைச் செதுக்கு என்ற வகையில் கருப்பை, கருமுட்டையைக் குறிக்கும் வட்டம், விந்துவைக் குறிக்க நேர்க்கோடுகள் நான்கு எண்ணிக்கையில் என செதுக்கப்பட்டுள்ளன. யோனி வடிவம் செதுக்கிக் காட்டப்பட்டுள்ளதில், கருப்பைப் பகுதியில் இரு குழந்தைகள் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளனர். கருமுட்டையிலும் விந்துகளிலும் சாமியாடிகள் வழிபாட்டை நிகழ்த்துகின்றனர். இதற்கு இடதுபுறம் மற்றும் சில சாமியாடிகள் வருவதும் போவதும்போல் இருக்கின்றனர். இவர்களில் சிலர் உதவி சாமியாடிகளாகவும் இருக்கலாம்.

சமூகத்தில் சாமியாடிகள் செல்வாக்கு மிகுந்திருந்த காலக்கட்டத்தை இப்படைப்பு குறிக்கிறது. குழந்தைப் பெருக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட்ட சாமியாடிகளை நாம் இங்கு காண்கிறோம். அவர்களிடையே குழந்தைப்பேற்றுக்கு  கருமுட்டையும், விந்தும், கருப்பையும் மூலக்காரணமாக இருக்கின்றன என்ற அறிவு வளர்ச்சி பெற்றிருந்த நிலையை இவ் ஓவியம் சான்று பகர்கிறது.

அதேசமயம், குழந்தைப்பேறு குறைபாட்டுக்கு அல்லது வலிமையான, ஆரோக்கியமான நல்ல உடல்நிலை கொண்ட குழந்தை பிறப்புக்கு அதனதன் ஆவிகளே காரணம் என்ற தொல்சமய ஆவியுலக நம்பிக்கையும் கொண்டவர்களாக இச்சாமியாடிகள் இருந்துள்ளனர் என்பதையும் சுட்டுகிறது. அதனதற்குக் காரணமான ஆவிகளுடன் தொடர்புகொண்டு உரிய பரிகாரம் செய்யும் செயலையும் புரியும் சாமியாடிகளின் செயலை இவ் ஓவியத்தில் காண்கிறோம்.

காட்சி விளக்கங்கள்

யோனி - கருப்பை உட்குழிவான செதுக்கும் ஓவியமாக இரு குழந்தைகளும்

கல்குண்டின் வலதுபுறம் கருப்பை-யோனி வடிவம் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் செதுக்கிக் காட்டப்பட்டுள்ளது. கருப்பைப் பகுதி சற்று ஆழமாகக் குழிக்கப்பட்டுள்ளது. யோனியின் வாய்ப்பகுதி குறுகியதாகவும், ஆழம் குறைவானதாகவும் குழிக்கப்பட்டுள்ளது. இது உடற்கூறின் மெய்மையை ஒட்டியதாக உள்ளது. கருப்பைப் பகுதியில் இரு குழந்தை உருவங்கள் முழுமனித வடிவிலேயே காட்டப்பட்டுள்ளன. இரு குழந்தைகளும் கைகோர்த்த நிலையில் காட்டப்பட்டுள்ளனர். இது கருப்பையில் இருக்கும் இரட்டைக் குழந்தைகளை காட்டுவது எனலாம்.

கருமுட்டை, விந்து உருவங்களின் உட்குழிவான செதுக்குகளும், ஓவியமாக வழிபடும் சாமியாடி உருவங்களும்

யோனிச் செதுக்குக்கு இடது புறம் கருமுட்டையும் அதற்குக் கீழ் விந்துக்களும் செதுக்கப்பட்டுள்ளன. கருமுட்டைக்குள் இரு வரிசையில் 10 சாமியாடிகள் “மீவியல்பு மனித உருக்கள்” (காண்க: அடிக்குறிப்பு) எனப்படும் ஆந்த்ரோஃபோமார்ஃபிக் வடிவத்தில் (Antrophomorphic) கைகளை மேல்தூக்கி ஆழ்ந்த தியானம் அல்லது வழிபாடு செய்யும் நிலையில் காட்டப்பட்டுள்ளனர். மேல்வரிசையில் மூன்றாவதாக உள்ள உருவத்தில் இருந்து (தலையில் இருந்து?) ஒரு கோடு வளைந்து மேல்நோக்கிச் செல்கிறது. இது மேலுலகம் நோக்கிய பயணத்தைக் குறிப்பதாகலாம். கீழ்வரிசையில் உள்ள மூன்றாவதாக உள்ள உருவத்தில் இருந்து (காலில் இருந்து?) ஒரு கோடு வளைந்து கீழ்நோக்கிச் செல்கிறது. இது கீழ் உலகம் நோக்கிய பயணத்தைக் குறிப்பதாகலாம்.

விந்துச்செதுக்கில், நான்கு வரிசையில், வரிசைக்கு, ஒன்றுக்கு மேல் ஒன்றாக மூன்று மீவியல்பு மனித உருக்கள் உள்ளனர். இவர்கள் கருமுட்டையில் கண்டதுபோல் கைகளை மேல் உயர்த்தி ஆழ்ந்த தியானத்திலோ அல்லது வழிபடும் நிலையிலோ காட்டப்படாமல் விரைந்து செல்லும் கால் அசைவுகளோடு காட்டப்பட்டுள்ளனர். கால் அசைவுகள் ஒரு திசையைக் காட்டாமல், எதிரும்புதிருமான அசைவு இயக்கத்தோடு உள்ளன. முதல் இரு வரிசையில் மேலுள்ள உருவங்கள் சிதைந்துள்ளன. கீழ் இரு உருவங்கள் தெளிவாக உள்ளன. மூன்றாவது வரிசையில், மேல் உருவம் குதிரையில் விரைவதுபோல் காட்டப்பட்டுள்ளது. இரண்டு மற்றும் மூன்றாவது வரிசையில் கீழிருந்து முதல் உருவங்களுக்கு மேல் ஒரு வளைகோடு ஓடுகிறது. (இவ்வளைகோட்டின் நோக்கம் புரியவில்லை. விந்துக்களை இணைத்து ஓடுவதால் விந்துக்களின் இடம் அல்லது விந்துக்களின் உலகம் என்பதைச் சுட்டுவதாக இருக்கலாம்). நான்கு வரிசைக்குப் பின்னரும் சில உருவங்கள் நடந்துசெல்லும் அசைவு இயக்கத்தோடே உள்ளனர். இவர்களை, கருமுட்டைக்கு அடுத்து காட்டப்பட்டுள்ள, வருவதும் போவதுமாக உள்ள உருவங்களோடு இணைத்துக் காணலாம்.

வருவதும் போவதுமாக உள்ள சாமியாடிகள்

கருமுட்டை மற்றும் விந்துச் செதுக்குகளுக்கு இடதுபுறமாக, மூன்று வரிசையில் சாமியாடி உருவங்கள் வருவதும் போவதுமான உடலசைவு இயக்கத்துடன் காட்டப்பட்டுள்ளனர். நடுவரிசை உருவங்கள், கருமுட்டை-விந்துச் செதுக்கின் மத்தியில் இருந்து துவங்குகிறது. இவ்வரிசையில் எட்டு உருவங்கள் உள்ளன. கீழ்வரிசையில் மூன்று உருவங்கள் உள்ளன. இவற்றில் இரண்டு முழுமையாக உள்ளன. மேல் வரிசையில் ஐந்து உருவங்கள் உள்ளன. ஒன்று சிதைந்துள்ளது.

வளமையைக் குறிக்கும் × குறியீடும் வேற்றுலகப் பயணத்தைக் குறிக்கும் கோடும்

வருவதும் போவதுமாக உள்ள மேல் வரிசை உருவங்களுக்கு மேல் கவனத்தில் கொள்ள வேண்டிய இரு குறியீடுகள் தீட்டப்பட்டுள்ளன. ஒன்று, × குறியீடு. + அல்லது × குறியீடுகள் வளமைக் குறியீடாகவும், மூத்தோர் வழிபாட்டை அடையாளப்படுத்தும் குறியீடுகளாகவும் தொன்மை மக்களால் பயன்படுத்தப்பட்டு வருபவை. பழைமையான பாறை ஓவியங்களில் இருந்து தற்கால ஓவியங்கள் வரை இக்குறியீடுகளைக் காணலாம். இக்குறியீடுகளே இன்றைய மருத்துவத் துறையின் நோய் நீங்கி நலம்பெற பயன்படுத்தும் வளமைக்குறியீடாக இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. இந்த × குறியீட்டுக்கு மேல் ஒரு கிடைக்கோடு காட்டப்பட்டுள்ளது. பொதுவாக, இக்கோட்டை ஆறு என்று பொருள் கொள்ளும் பழக்கம் பரவலாக இருக்கிறது. சிலர் பாம்பு எனவும் பொருள் கொள்வர். சாமியாடியியத்தின் பின்புலனில் இது வேற்றுலகத்தைக் குறிக்கும் அல்லது வேற்றுலப் பயணத்தைக் குறிக்கும் குறியீடாகும்.

உருவங்களின் காட்சியமைப்பு

இவ்வோவியத்தில் இடம்பெற்றுள்ள உருவங்களின் காட்சி அமைப்பு கவனிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. கருமுட்டையில் உள்ள இரு உருவங்கள் மனித வடிவுடன் அளவில் சிறிதாக குழந்தைகளைக் காட்சிப்படுத்துபவையாக உள்ளன.

கருமுட்டையில் இடம்பெற்ற சாமியாடிகளின் மீவியல்பு மனித உருவங்கள், உயரத்திலும் தடிமனில் நடுத்தர அளவிலும் உள்ளன. இவ் உருவங்கள் ஓரிடத்தில் நின்றபடி ஆழ்ந்த தியானத்தில் அல்லது வழிபாட்டில் உள்ளதாகக் காட்டப்பட்டுள்ளன.

விந்துக்களில் இடம்பெற்ற சாமியாடிகளின் மீவியல்பு மனித உருவங்கள், குச்சி வடிவத்தில் அளவில் சிறியதாகவும், எதிரும் புதிருமாக விரையும் உடல் அசைவுடனும் காட்டப்பட்டுள்ளனர்.

வரும் போகும் நிலையில் உள்ள சாமியாடிகளின் மீவியல்பு மனித உருவங்களில் மேல் வரிசையில் உள்ள உருவங்கள் அளவிலும் தடிமனில் பெரியவை. கீழ்வரிசை உருவங்கள் உருவிலும் தடிமனில் நடுத்தரம் உடையவை. இவை ஏறத்தாழ கருமுட்டையில் உள்ள கீழ் வரிசை உருவங்களை ஒத்தவை.

இவ் உருவங்கள் அறிவியலைச் சொல்கின்றனவா?

இப்படைப்பில் சிற்பச் செதுக்குகள் குழந்தைப் பிறப்பு சார்ந்து கரு உருவாதலையும், அதில் கருமுட்டை, விந்து, கருப்பை, யோனி ஆகியவற்றின் பங்களிப்பையும் அதன் அறிவியலையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. இவற்றில் இடம்பெற்ற சாமியாடிகளின் மீவியல்பு மனித உருவங்கள் மீண்டும் மற்றொரு அறிவியலை நமக்கு வழங்குகின்றனவா என்று யோசிக்கவைக்கிறது. கருப்பையில் உள்ள அளவில் சிறிய உருவங்கள் குழந்தைகள் என்பது வெளிப்படையாக உள்ளது. கருமுட்டையின் உருவங்கள் நடுத்தரம் கொண்டவை. இவ் உருவங்கள் ஒரு நிலைத்த, உறைந்த அசைவற்ற தன்மையைக் கொண்டுள்ளன. இது, கருப்பையை அடைந்த கருமுட்டை பெறும் நிலைத்த, உறைந்த அசைவற்ற தன்மையியைக் காட்டுவதாகக் கொள்ளலாம். விந்துவைவிட கருமுட்டை அளவில் பெரியது என்பதால், இதில் இடம்பெறும் உருவங்கள் சற்று பெரியதாகக் காட்டப்பட்டுள்ளன எனவும் கொள்ளலாம்.

அடுத்ததாக, விந்துக்களில் இடம்பெற்ற உருவங்கள் குச்சி வடிவில் எதிரும் புதிருமான அசைவு இயக்கத்துடன் உள்ளன. இது, விந்துவானது கருமுட்டையைத் துளைத்து உட்செல்லும் வரை தொடர்ந்து முன்னும் பின்னும் நீந்தும் அசைவு இயக்க அறிவியலைச் சொல்வதாகக் கொள்ளலாம். விந்தின் அளவு கருமுட்டையைவிடச் சிறியது என்பதால், இதன் உருவங்கள் இவ் ஓவியத் தொகுப்பிலேயே அளவில் சிறிதாகக் குச்சி வடிவில் காட்டப்பட்டுள்ளன எனலாம். இவ்விரண்டுக்கும் அடுத்து, வரும்போகும் நிலையில் காட்டப்பட்டுள்ள உருவங்களில் மேல் வரிசை உருவங்கள் அளவில் பிற உருவங்களைவிடப் பெரியவை. இது புறஉலகின் உருவங்களின் இயல்போடு உள்ளன எனலாம். கீழ் வரிசை உருவங்கள் புறஉலகில் இருந்து விந்து, கருமுட்டைகளின் அகஉலகங்களில் செல்ல தம் உருவங்களை குறுக்கிக்கொண்டுள்ளன எனக் கொள்ளலாம். அல்லது உதவி சாமியாடிகள் எனவும் எடுத்துக்கொள்ளலாம். இந்த வகையில், கருமுட்டையின் நிலைத்த தன்மையும் விந்துக்களின் அலையும் தன்மையுமான அறிவியல் உண்மையை இவற்றில் இடம்பெற்ற உருவங்களின் காட்சி அமைப்பு தெளிவிப்பதாக உள்ளது. ஒரு கருமுட்டையைப் பல விந்துக்கள் தாக்கி, வலுவான விந்து முட்டையினுள் சென்று கருவை உருவாக்கும் என்ற அறிவியல் உண்மையின் அடிப்படையில், இங்கு ஒரு கருமுட்டையும் ஒன்றுக்கு மேற்பட்டது என்பதாக நான்கு விந்துக்களையும் காட்டியுள்ளதன் மூலம் விளக்கப்பட்டிருக்கிறது எனவும் எடுத்துக்கொள்ளலாம்.

சிறப்புகள்

குழந்தைப் பிறப்பு பற்றிய புதிர் புலப்படாத நிலையில், தொல்பழங்கால மக்கள் அது குறித்து பல குழப்பங்களை அடைந்தனர். இதன் காரணமாக, யோனியில் இருந்து குழந்தை வெளிவருவது போன்ற பிறப்புச் சித்திரங்களை முதலில் வழிபட்டனர். அதுபற்றிய தெளிவு கிடைக்கக் கிடைக்க, பெண்குறி யோனியும் ஆண்குறி லிங்கமும் குழந்தைப் பிறப்பில் பெரும்பங்கு ஆற்றுகின்றன எனத் தெரிந்துகொண்டு அவற்றை வழிபட்டனர். அறிவு வளர்ச்சியோடு கருமுட்டை, விந்து, கருப்பை ஆகியவை குழந்தை உருவாவதற்கும், வளர்வதற்கும் மூலக் காரணங்களாக விளங்குகின்றன என்பதை அறிந்துகொண்டனர். இத்தகைய அறிவு வளர்ச்சி பெற்றிருந்த காலகட்டத்தை மூலக்கொல்லை படைப்பு அடையாளப்படுத்துகிறது.

ஓவியச் செய்தி

ஆரோக்கியமான குழந்தைப் பிறப்புக்கு அல்லது குழந்தைப் பிறப்பில் உருவான இடையூறுக்கு சாமியாடிகள் மேற்கொண்ட செயலை இந்த ஓவியம் தெரிவிக்கிறது.

ஆரோக்கியமான குழந்தைப் பிறப்புக்கு அல்லது குழந்தைப் பிறப்பில் உருவான ஏதோ ஒரு இடையூறை நிவர்த்தி செய்யும் பொருட்டு, அக்கால மருத்துவர்களான சாமியாடிகள் மேற்கொள்ளும் செயல்கள் இதில் விளக்கப்படுகின்றன. குழந்தைப் பிறப்புக்குக் கருமுட்டை, விந்து, கருப்பை ஆகியவற்றின் இன்றியமையாமை பற்றி இவர்கள் பெற்றிருந்த அறிவு இன்றை மருத்துவ அறிவியலுக்கு இணையானதாகும். ஆரோக்கியமான குழந்தைக்கு ஆரோக்கியமான கருமுட்டையும் ஆரோக்கியமான விந்தும் அவசியம்; அதனை நோக்கிய செயலிலோ அல்லது கருமுட்டை கோளாறுக்குக் காரணமாக இருக்கும் அதன் காரண ஆவிகளுடனும், விந்துக் கோளாறுக்குக் காரணமாக இருக்கும் அதன் காரண ஆவிகளுடனும் சாமியாடிகள் தொடர்புகொண்டுள்ளதை, வேண்டுதல் செய்யும் செயலில் ஈடுபட்டுள்ளதை இவ் ஓவியம் எடுத்தியம்புகிறது. வேறு கோணத்தில், கருப்பையில் இரு குழந்தைகள் காட்டப்பட்டிருப்பதால், இரு கருக்களின் வளர்ச்சி, ஆரோக்கியமான இரட்டையர்பேறு ஆகியவற்றுக்காகவோ, அல்லது அதனால் எழுந்த சிக்கலைச் தீர்க்க முனைந்த சாமியாடிகளின் செயலாகவோ இதனைக் காணமுடிகிறது.

ஒப்பாய்வு

சாமியாடிகளின் செயல்களைக் காட்டும் உலகப் புகழ்பெற்ற ஓவியங்கள் ரஷ்யாவின் சைபீரியா பகுதியிலிருந்தும், தென் ஆப்ரிக்கா, அமெரிக்கா, பின்லாந்து முதலிய நாடுகளில் இருந்தும் அறியப்பட்டுள்ளன. இவை சாமியாடிகளின் மருத்துவம், நடனம், பாடலுடன் நடனம் மெய்மறந்த நிலை, ஆண்-பெண் குறிகளைக் காட்டும் வளமைச் சடங்குகள், மூவுலகப் பயணம், மூதாதையர் வணக்கம், மூதாதையரின் உதவியை கோருதல், மேலுலகினர், புனித ஆவிகள், தெய்வங்களை வணங்குதல் மற்றும் வானவியல் சார்ந்த செய்திகளை நமக்கு வழங்குகின்றன. இவற்றுள் தென் ஆப்ரிக்காவின் சான் பழங்குடியினர், சைபீரியப் பழங்குடியினர், ஐரோப்பியரின் பாகன் இனத்தினரின் ஓவியங்கள் போன்றவை புகழ்பெற்று விளங்குகின்றன. இவை வானவியல் சார்ந்த ஓவியங்கள் தவிர பிற அறிவியல் சார்ந்த செய்திகளை நமக்கு வழங்குவதில்லை. மருத்துவம் சார்ந்த செய்திகளை வழங்கும் சில ஓவியங்கள் மருத்துவ குணம் வாய்ந்த சில செடி கொடிகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் மனித உடல்செயலியல் சார்ந்த அறிவியல் செய்தியைத் தரும் ஓவியமோ, பாறைச் செதுக்கோ, பாறைக்கீறலோ என் அறிவுக்கு எட்டியவரை இடம் பெற்றிருக்கவில்லை. மூலக்கொல்லைப் படைப்புதான் இந்த வகையில் உடல்செயலியலை, குறிப்பாக குழந்தைப் பிறப்பு குறித்தான அறிவியலைத் தரும் முதல் பாறைக்கலைப் படைப்பாக விளங்குகிறது.

காலம்

நான் இப்பாறைக்கலையின் காலம் மு.பொ.ஆ. 3000 எனக் கொண்டு, இன்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனவும் பண்பாட்டு ரீதியில் புதிய கற்காலத்தில் இனக்குழுத் தலைமை உருவாவதற்கு முற்பட்ட; சாமியாடிகளின் செல்வாக்கும், தலைமைப்பண்பும் மிகுந்திருந்த காலக்கட்டம் எனவும் கணித்துள்ளேன். நாளை அல்லது இதன் தொடர்ச்சியாக வெளியிடப்படவுள்ள மூலக்கொல்லை பாறை ஓவியம்-2 பற்றிய ஆய்வுக் குறிப்புகள் வெளிவரும் வரை இதன் காலம் குறித்து விவாதிக்க விரும்புவோர் காத்திருக்க வேண்டப்படுகிறது.

***

அடிக்குறிப்பு: மீவியல்பு மனித உருக்கள்

வரலாற்று ஆசிரியர்களாலும், தொல்லியலாளர்களாலும் ஆந்த்ரோஃபோமார்ஃபிக் வடிவத்துக்கு “மனித உருவங்கள் அல்லது மனித வடிவங்கள்” என்ற சொல்லை உருவாக்கிப் பயன்படுத்தி வருகின்றனர். நானும் இவ்வாறான பயன்பாட்டை வேறு இடங்களில் பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் இதற்கு வேறு சொல்லை உருவாக்க வேண்டியது அவசியம் என பல சமயங்களில் உணர்ந்தது உண்டு. ஏனெனில், மனித உரு என்னும் போதும் சரி, மனித வடிவம் எனும் போதும் சரி, அது முழு மனித உருவத்தின் பொருளுக்கு அழைத்துச்செல்கிறது. அதாவது, மனித உரு எனும்பொழுது அது “Human Figure” என்ற பொருளையே வழங்குகிறது. ஆனால், தொல்லியல் பொருளில் “Human Figure” என்பது வேறு “Antrophomorphic” என்பது வேறு. சில ஆசிரியர்கள் ஆந்த்ரோஃபோமார்ஃபிக் வடிவத்துக்கு Human like figures, அதாவது “மனிதனைப் போன்ற உருவங்கள்” என வேறுபாட்டை உணர்த்தும்விதமாக குறிப்பர். உண்மையில், ஆந்த்ரோஃபோமார்ஃபிக் வடிவம் என்பது “குறை அல்லது மிகையான மனித உறுப்புகள் கொண்ட மனிதனைப் போன்ற உருவமாகும். உதாரணமாக, தலை இல்லாமல் இருக்கும் உருவங்கள். இவ்வகைக்குச் சான்றாக தாணிப்பாடி மோட்டூர் மற்றும் உடையாநத்தம் விசிறிப்பாறை என்ற பெருங்கற்காலச் சின்னங்களைக் குறிப்பிடலாம். இவை தலையற்ற குறை மனித வடிவங்களாகும். மிகை மனித வடிவங்களின் வகைக்கு பல பாறை ஓவியங்களைக் காட்டலாம். தலை மிகப்பெரியதாகக் காட்டுவது, பிளவுற்று இருப்பது, கழுத்து நீண்டிருப்பது, கரங்களில் ஐந்து விரல்களுக்குப் பதிலாக கூடுதலோ குறைவாகவோ இருப்பது போன்றும், அளவில் மிகப்பெரியதாகவும் மிகையான காட்சியாகவும் கட்டப்படும். பொதுவாக, இவை இயற்கை இயல்பிழந்த மனித உருக்களாகவே இருக்கும். எனில், இவை “மீவியல்பு மனித உருக்கள்” என்பதில் பொருந்துவதாக உள்ளது. இனி, “மீவியல்பு மனித உருக்கள்” என்ற சொல்லையே ஆந்த்ரோஃபோமார்ஃபிக் வடிவத்துக்கு உரிய சொல்லாகப் பயன்படுத்த இருக்கிறேன்.

***

வேண்டுகோள்

தொல்பொருள்களை அழிப்பதில், சிதைப்பதில், அலட்சியமாகக் கையள்வதில், புறக்கணிப்பதில் தமிழர்களுக்கு இணை தமிழர்கள் மட்டுமே. இரண்டாண்டுகளுக்கு முன் வெங்கட்டாபுரம் – கல்யாணபோடி குகை ஓவியத்தை வெளிப்படுத்திய 5 நாள்களுக்குள், அது பெற்ற சிதைவுகளைக் கண்டவுடன் 4000 ஆண்டுகள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருந்த அதனை ஏன் வெளிப்படுத்தினோம் என்ற வேதனையும் மனஉலைச்சலும் இன்னும் என்னைவிட்டு அகலவில்லை. அறிவுக்குறைவு காரணமாக யாரும் இதனைச் செய்வதில்லை. பெருமித உணர்வில், தங்களின் வருகைக்குச் சான்றாகவும், அழிப்புச் சிதைப்பு வேலையில் தன்பங்களிப்பு இது என்பதை தெளிவான அறிவோடு தங்களின் திட்டமிட்டே செய்துவருகின்றனர்.
மூலக்கொல்லை-1 பாறைக்கலை, மணற்கல் பாறையில் செதுக்கும் ஓவியமும் இணைந்து படைக்கப்பட்டுள்ளது. ஆர்வக்கோளாறுகளும், விஷமிகளும் எளிதில் சிதைக்கப்படக்கூடிய இந்தப் படைப்பை என்ன கதிக்கு ஆளாக்குவார்களோ என்று ஈரக்குலை நடுக்கத்தோடு கவலைப்படுகிறேன்.
தமிழகத் தொல்லியல் துறைக்கு ஆணையாளராகப் பொறுப்பேற்றிருக்கும் திரு. உதயச்சந்திரன், அவர்களுக்கும் இதன்மூலம் வேண்டுதல் விடுக்கின்றேன். பாறை ஓவியம் குறித்த எந்தவொரு ஆய்வும் முழுமையானதல்ல; எல்லோரும் ஏற்கத்தகுந்த ஒன்றாக இருப்பதில்லை என்பதை அறிவேன். இதனையொட்டி, பண்பாடு அடிப்படையில் இங்கு வெளிப்படுத்தப்பட்ட காலம், உள்ளுரைபொருள் குறித்து மாறுபாடான கருத்துக்கள் எழலாம்.
ஆனால் இது வெளிப்படுத்தும் அறிவியல், மருத்துவம் சார்ந்த உண்மை உலகையே ஈர்க்கக்கூடியது. உலகச் சாமியாடிகள் குறித்த ஆய்வுகளுக்குப் புதிய திறப்புக்களை வழங்கக்கூடியது. இந்திய-தமிழகப் பங்களிப்பை உறுதிசெய்வதாக இருக்கும். இப்படைப்பு குறித்த ஆய்வுகள் உலகளவில் பெரும் விவாதத்துக்கும், மறுஆய்வுக்கும் அழைத்துச்செல்வதாக இருக்கும். என் அனுபவ எல்லையில் இருந்து கூறமுடிவது என்னவென்றால், இப்படைப்பின் உன்னதத்தால்; வெளிப்படுத்தும் அறிவியல் சார்ந்த அறிவால் இது உலகப் புகழ் பெறக்கூடும். ஆகச்சிறந்த தொல்படைப்புகளின் அட்டவணையில்; இடவரைபடத்தில் இது இடம்பெறக்கூடும். அல்லது தமிழகத்துக்குச் சிறப்பு சேர்க்கும் என்பதால், ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்படலாம். எவ்வாறாயினும், எவ்வகைப்பட்ட ஆய்வுகளுக்கும், தொடர்ந்த மறுஆய்வுக்கும், விவாதத்துக்கும், அறிஞரின், தொல்லியளாளர்களின் வருகைக்காகவும் இது காப்பாற்றப்பட வேண்டும். சிறு சேதமின்றி காப்பாற்றப்பட வேண்டும்.
 
கட்டுரை ஆசிரியர் தொடர்புக்கு - thagadoorparthiban@gmail.com
]]>
சடங்கு, பாறை ஓவியம், மூலக்கொல்லை, உலகப் புகழ், சாமியாடிகள், moolakkollai, drawing, world famous https://www.dinamani.com/tholliyalmani/special-articles/2018/sep/20/5000-ஆண்டுகளுக்கு-முந்தைய-மூலக்கொல்லை-பாறை-ஓவியம்-உலகப்-புகழ்-பெறத்தக்கது---பாதுகாக்க-வேண்டியது-நமத-3001488.html
2966856 தொல்லியல்மணி சிறப்புக் கட்டுரைகள் மண்டபத்தில் குடியேற இருக்கும் ஒசூர் நாயகி: ஒசூர் நாயகி நடுகல் புதிய விவரங்கள் த. பார்த்திபன் Tuesday, July 24, 2018 03:03 PM +0530  

தினமணி இணையத்தளத்தின் தொல்லியல்மணி பகுதியில், சிறப்புக் கட்டுரைகள் பிரிவில் கடந்த 19.7.2018 அன்று ஒசூர் நாயகி: சிற்பத்தில் நிலைத்த தலைப்பலியில் முடிந்த ஈசனின் காதல் என்ற தலைப்பில் கட்டுரை வெளியிடப்பட்டது.

அக்கட்டுரை வெளியானதைத் தொடர்ந்து சில ஆரோக்கியமான, போற்றுதலுக்குரிய செயல்கள் நடைபெற்று வருகின்றன. தெருவோரத்தில் அநாதையாக நிற்கும் இந்த அரிய தொல்லியல் முக்கியத்துவமுடைய நடுகல்லை முறைப்படி பாதுகாக்கும் முயற்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மையத்தின் தலைவரும், கே.ஏ.பி. அறக்கட்டளை நிறுவனரும், முன்னாள் ஒசூர் சட்டப்பேரவை உறுப்பினருமான திரு. கே.ஏ. மனோகரன் அவர்கள் முன்வந்துள்ளார்.

இதன் முதற்படியாக, 23.7.2018 அன்று மதியம் அவரது முன்னிலையில் தெரு ஓரத்தில் இருந்த ஒசூர் நாயகி நடுகல் முழுமையாக வெளியே எடுக்கப்பட்டது. அப்போது, அந்நடுகல்லில் மேலும் ஒரு சிற்ப அடுக்கு உள்ளது அறியப்பட்டுள்ளது.

நடுகல் புதிய காட்சிகளும் செய்திகளும்

நடுகல் வெளியே எடுக்கப்பட்ட பிறகு அது, இந்நாள்வரை கருதப்பட்டதுபோல் ஈரடுக்கு கொண்டதன்று, மூவடுக்கு கொண்டது என்பது புலனானது. இதனால் கீழடுக்கு என்று நம்பப்பட்ட நாயகியின் காட்சி இடம்பெறும் அடுக்கு மத்திய இரண்டாம் அடுக்காக அமைகிறது. தற்பொழுது அறியவந்த மண்ணுக்குள் புதைந்திருந்த கீழடுக்கில், வளமை வழிபாட்டுக்கு உரிய சின்னங்களான குத்துவிளக்கு, பூர்ணகும்பம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

கீழடுக்கின் மத்தியில் ஒரு நல்ல வேலைப்பாடுகூடிய முக்காலி மீது பூர்ணகும்பம் ஒன்று நிரைந்து விரிந்துத் தொங்கும் மலர்ச்செடி, கொடிகளுடன் அதாவது கொடிக்கருக்கு இணைந்து காட்டப்பட்டுள்ளது. இதனை “கும்பலதா” என்று சிற்ப நூல்கள் குறிப்பிடும் பூர்ணகும்பத்தின் இருபுறமும் சிறப்பான வேலைப்பாடு அமைந்த குத்துவிளக்குகள் பக்கத்துக்கு ஒன்றாக வைக்கப்பட்ட காட்சி செதுக்கப்பட்டுள்ளது.  பூர்ணகும்பம் என்பது தாய்மை, வளமையை, செழிப்பைக் குறிக்கும் சின்னமாகும். அது தாயின் கருப்பையின் குறியீடு என்றும் குறிக்கப்படும். மேலும் சந்ததிப் பெருக்கத்துக்கும், செல்வ வளத்துக்கும் வணங்கப்படும் சின்னமாகவும் விளங்குவதாகும். பூர்ணகும்பம், சிற்பக் கலையில் சோழர் காலத்தில் இருந்து கோயில் கருவறையின் சுவர்களை அலங்கரிக்கச் செதுக்கப்படும் சின்னமாவும், விஜயநகர நாயக்கர் காலத்தில் சிறப்பான வடிவமைப்போடும், பல மடிப்புகள் கொண்டதாகவும், அழகான வேலைப்பாடுகள் கொண்டதாகவும், பஞ்சார அமைப்போடு இணைந்து கும்ப பஞ்சாரமாகவும் அமைக்கப்படும் சின்னமாகும். இங்கு நடுகல்லில் தனித்த கும்பம் முக்காலியில் காட்சிப்படுத்தியிருப்பது அரிதான சித்தரிப்பாகும்.    

ஒசூர் நாயகி நடுகல்: இதுநாள் வரை அறியாத மூவடுக்குக் காட்சி

திரு. கே.ஏ. மனோகரன்

இந்நடுகல்லை பாதுகாக்கும் முயற்சியை கையில் எடுத்துக்கொண்ட திரு. கே.ஏ, மனோகரன் அவர்கள் இது குறித்து கூறும்பொழுது, ஒசூர் நாயகி நடுகல்லின் சிறப்பு அறிந்து, அதனைப் பாதுகாக்கும் முகமாக கிருஷ்ணகிரி வரலாற்று மையம் மூலம் ஒசூர் நாயகிக்கு சிறப்பான மண்டபம் ஒன்றை அமைத்து அதில் நாயகியின் நடுகல்லை பாதுகாத்து வழிபாட்டுக்கும் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் பொருட்டு, தெரு ஓரத்தில் அநாதையாக இருக்கும் நடுகல்லை பாதுகாக்கும் வகையிலும், வழிபாட்டுக்குக் கொண்டுவருவதற்கும் அந்நடுகல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. முழுமையாகச் சேதமின்றி வெளியே எடுக்கப்பட்ட கல், மேலும் சில சிறப்பான செய்திகளை சிற்பங்கள் வழி தெரிவிக்கின்றது. முதலில் அது இவ்வளவு காலம் நம்பப்பட்டதுபோல் ஈரடுக்கு சிற்பத்தொகுப்பு நடுகல் அன்று; அது மூன்று அடுக்கு சிற்பத்தொகுப்பு என்பது இதன்மூலம் அறியப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி வரலாற்று மையத்தின் மூலமாகவும், அதன் தாய் நிறுவனமான ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறக்கட்டளை மூலமாகவும், கிருஷ்ணகிரி மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களின் வரலாற்றை முழுமையாக வெளிக்கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தற்போதுவரை கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களின் வரலாற்றுச் சிறப்புகளை வெளிப்படுத்தும் 15-க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிடுள்ளது. தேசிய, மாநில அளவிலான 6 பெரிய வரலாற்றுக் கருத்தரங்கங்களையும் நடத்தியுள்ளது. தற்பொழுது தொல்லியல் முக்கியத்துவமுடைய அரிய நடுகற்கள், பாறை ஓவியங்கள், மேலும் பலவகையான வரலாற்றுக்கு முற்பட்ட, வரலாற்றுக்கால பண்பாட்டினை வெளிப்படுத்தும் தொல்பொருட்களை அறியும் பொருட்டு களஆய்வுகளை மேற்கொண்டு அவற்றை ஆவணப்படுத்தியும் வருகிறது.

கே.ஏ. மனோகரன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் (ஒசூர்)

இப்பொழுது கண்டறியப்பட்டுள்ள 15-ம் நூற்றாண்டின் சிற்பக்கலைக்கு சிறந்த உதாரணமாகவும், வளமை வழிபாட்டில் சிறப்பிடம் பெற்ற நடுகல்லை பாதுகாக்க மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இறைவன் மீது கொண்ட காதலால், தன் தலையை அரிந்து காணிக்கையாகிய பெண்ணின் அரிய நடுகல் இது. நடுகல் வழிபாடே மூதாதையர் வழிபாட்டுடன் வளமை வேண்டி மேற்கொள்ளப்படுவதாகும். இந்த வகையில் நாயகியின் கல்லில் பூர்ணகும்பமும் இடம்பெற்றுள்ளது. இது மக்கள் செல்வம் வேண்டி வழிபட எடுக்கப்பட்ட நடுகல்லாகவும் விளங்கியுள்ளது. இக்கல் போற்றப்பட்டு, பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. விரைவில் மண்டப வேலைகள் முடிந்து அதில் ஒசூர் நாயகி நடுகல் வைத்து பாதுகாப்பு செய்யப்படுவதுடன், வழிபாட்டுக்கும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்கிறார். 

கட்டுரை ஆசிரியர் தொடர்புக்கு: த. பார்த்திபன் - thagadoorparthiban@gmail.com

]]>
தொல்லியல், நடுகல், ஒசூர் நாயகி, தருமபுரி, சிற்பக்கலை https://www.dinamani.com/tholliyalmani/special-articles/2018/jul/24/மண்டபத்தில்-குடியேற-இருக்கும்-ஓசூர்-நாயகி-ஓசூர்-நாயகி-நடுகல்-புதிய-விவரங்கள்-2966856.html
2963436 தொல்லியல்மணி சிறப்புக் கட்டுரைகள் ‘ஒசூர் நாயகி’ - சிற்பத்தில் நிலைத்த தலைப்பலியில் முடிந்த ஒசூர் நாயகியின் ஈசன் காதல் த. பார்த்திபன் Thursday, July 19, 2018 11:23 AM +0530  

ஈசன் மேல் தீரக் காதல் கொண்ட மதுரை மீனாட்சியோ; கோவிந்தனை வரித்துக்கொண்ட வில்லிப்புத்தூர் ஆண்டாளோ இல்லை இவள். இவள் ‘ஒசூரின் நாயகி’. சந்திரசூடனை உடலும் உயிருமாகக் கொண்டவள். சந்திரசூடேசுவரன், ஒசூர் மலைக்கோயில் மூலவரின் பெயர். மீனாட்சியின் திருமண நற்பேறு ஆண்டாளுக்கு வாய்க்கவில்லை; ஒசூரின் நாயகியைப் போலவே. ஆண்டாள், ஈசனின் சந்நிதியில் கரைந்து ஐக்கியமானாள்; ஒசூரின் நாயகியோ தலைஈந்து தன்னை வழங்கினாள். இவள் செயல் ஆண்டாள் புரியாதது. நிபந்தனையற்ற காதலுடன் கோபாலனை மோகித்த மீராவும் நினையாதது.

சுந்தரின் நெஞ்சில் உறைபவாளான மதுரை நாயகிக்கோ பெருங்கோயில் குடியிருப்பு. நாராயணனில் கரைத்தவளோ அவனின் பூமாலையிலும், புகழ் மாலையிலும் நித்திய வாசம். கோபாலன் இருக்குமிடங்களில் மீராவின் சுவாசம் சுற்றும். சந்திரனைச் சூடியவனைச் சேர நினைத்தவளின் வாசம் பச்சைக்குளம் தெருவோரம். நடுகல்லாய்ச் சமைந்தவளுக்கு கருவறை ஒரு வெற்று அறை; ‘கருவறை மூலவி’யாய் இருத்தல் ஒரு வேண்டாப் பதவி.

மீனாட்சியைப் பாட ஆயிரம் பேர் உண்டென்றால், ஆண்டாளோ தானே பெருங்கவியாய் உயிர்த்திருப்பவள். இவ்விரு பெரும்பேறும் ஒசூர் நாயகி அடையாதது. கல்லெடுத்தவர்களும் பெயர் சூட்டிப் புகழ் பாடவில்லை. கல் தொழுதவர்களும் புனையாதொழிந்தனர். மகளின் போக்கில் பெற்றோர் மனம் வெதும்பிக் கைவிட்டனரோ, சுற்றமும் தள்ளி வைத்ததோ நாயகி பெற்ற இந்நிலை. தலைமுறை மாறவே, நகரமயமாதலின் பண்பாட்டுத் தடுமாற்றமோ தொழுகவும் மறந்த கல்லெடுத்த ஊரைக் காண்கிறோம்.

ஒசூர் நாயகியின் இயற்பெயர் தெரியாது, தாய் தந்தையர் தெரியாது, ஊரும் மண்ணும் தெரியாது. ஆனால் அவர்கள் செல்வச்செழிப்புடன் ஆட்சி புரிந்தவர்கள். ‘ஓசூர் நாயகி’, இக்கட்டுரை ஆசிரியர் வைத்த பெயர். ஓசூரில் நடுகல்லாய் சமைந்திருப்பதால் நாயகிக்கு இந்த ஊர் அடை. சித்திர வெளிப்பாடுகள் கொண்டு இவள் தன் பெற்றோராலும், சுற்றத்தாலும் போற்றி வழிபடப்படவில்லை என்பதை ஊகித்து அறியலாம். நட்பும் ஊரும் அக்கரையுடன் கல்லெடுத்துப் போற்றியுள்ளனர். மகள் தலைஈந்து இறைவனைச் சேர்ந்ததை பெற்றொரும் சுற்றமும் விரும்பியிருந்தால், தலை ஈந்ததைப் போற்றியிருந்தால் கோயிலெடுத்து வணங்கியிருப்பர். தாங்களும் சுற்றமும் வணங்குவதையும் புடைப்பாகச் செதுக்கிக் காட்டியிருப்பர். இன்னும் பெண்ணின் காதலையும் தீரத்தையும் புகழ்வார்த்தைகளையும் கல்லெழுத்துக்களால் என்னென்றும் நிலைத்திருக்க வடித்திருப்பர். இவையாவும் இல்லை என்பதால் புறக்கணித்தனர் என்ற முடிவுக்கு வர வாய்ப்பு ஏற்படுகிறது.

ஒசூர் நாயகி நடுகல்: அண்மையில் இளங்காலைப்பொழுதில் எடுத்தது.

நடுகல்லான ஒசூர் நாயகி

ஒசூரின் பேரடையாளமாக விளங்கும் சந்திரசூடேசுவரர் மலைக்கோயிலுக்குச் செல்லும் பாதையில் இந்நடுகல் வீற்றிருக்கிறது. இந்நடுகல்லை ஈரடுக்கு நடுகல்லுக்கும் 15-ஆம் நூற்றாண்டின் நடுகல் சிற்பக்கலைக்கும் சிறந்த உதாரணமாகக் காட்டலாம். நடுகல்லில் சிற்ப நூல் கூறும் சிற்ப செந்நுற்பங்கள் வெளிப்படும் அரிய கலைப்படைப்பாகவும் உள்ளது இது.

ஒசூர் நாயகி செல்வச் செழிப்பு மிகுந்த அரச மரபில் வந்தவளாகவோ இருக்க வேண்டும். சிற்பத்தில் வெளிப்பட்டுள்ள கம்பீரமும், ஒய்யாரமும், சிறப்பான அணிமணிகளும் அவளது செல்வச் செழிப்பையும், அரச போகத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளன. நல்ல அழங்காரம் கூடிய இரு சேடிப்பெண்களின் இருப்பும் இதனை உறுதி செய்யும்.

சிற்பக்கலை

கீழடுக்குக் காட்சி

நாயகியின் செல்வச் செழிப்பான அரசபோகம் ‘பேரரசு அமர்வு என்ற மகாராஜ லீலாசன’க் கோலத்தில் மையத்தில் சித்தரிப்பதன் மூலமும் சொல்லப்படுகிறது.

பேரரசு அமர்வு என்ற மகாராஜ லீலாசனக் கோலம் என்பது ‘பீடத்தில் இரண்டு கால்களையும் வைத்து அமர்ந்து, ஒருகாலைப் பீடத்தின் மீது மடக்கியபடி படுக்கையாக வைத்தும் மற்றொரு காலை மடக்கி நிறுத்தியமைத்தும், வலது கையினை மடித்துத் தூக்கி நிறுத்திய அல்லது மார்பை நோக்கியமைத்து இடதுகையைப் பக்கவாட்டில் ஒய்யாரமாய் ஊன்றி உடலை சுகமாய் வளைத்து அமர்ந்திருக்கும் கோலம்’ ஆகும்.

கீழடுக்கில் நான்கு கால்கள் கொண்ட மேடையிருக்கையில், ஒசூர் நாயகி மடக்கி தூக்கி உயர்த்திய காலில் வலது கைமுட்டியை அமர்த்தி ஒய்யாரமாய்க் கரத்தை டோல முத்திரை காட்டி தொங்கும்படி வீசியிருக்கிறாள். தொங்கும் இடது கரம் முட்டியில் இருந்து மேல்நோக்கி உயர்ந்து பக்கவாட்டில் சாய்வாக நீளும் உள்ளங்கையில் கிளியை அமர்த்திக்கொண்டுள்ளாள். கிளி, நாயகியின் விரலில் இருந்து உள்ளங்கை வரை படர்ந்திருக்கும்படி தம் முன்னங்கால்களை முழுவதும் அழுத்தமாக மடக்கி அமர்ந்திருக்கிறது. சிந்தனை முழுவதும் வீசிக்கிடக்கும் ஈசன் காதலைப் பகிரும் தோழியாய் கிளியை வளர்த்தனளோ ஒசூர் நாயகி அறிகிலோம். தன்னை ஈசனின் அங்கமான மீனாட்சியாகவே கருதிக்கொண்டனள் அல்லது மீனாட்சிக்கு மாற்று தானே என இருந்தனள் என்பதற்குச் சான்றாகவும் கிளி வடிக்கப்பட்டுள்ளதை அறியலாம். குறியியலில் கிளி வளமையின் குறியீடு; சிருங்கார சரசலீலைச் சக்திக் குறியீடு.

நாயகி கொண்டையை இடதுபுறம் முடித்திருக்கிறாள். காதுமடல்களை மறைக்கும் அளவு வட்டக்குழையான தட்டையான பெரிய கடிப்பைப் பூட்டியுள்ளாள். (கடிப்பு = அளவில் பெரிய தோடு). கழுத்திலிருந்து சற்று கீழாகக் கண்டிகையும், கண்டிகையை ஒட்டியவாறு நெஞ்சுக்குழியில் பதிந்த முகப்புவைத்த பட்டையான சரப்பளியையும் அணிவிக்கப்பட்டுள்ளது. மார்புக்கச்சை அணிவிக்கப்படவில்லை. இருகரங்களிலும் மணிக்கட்டையடுத்து சூடகமும் முழங்கைக்கு மேலும் கீழும் கடக வளைகளும் அலங்கரிக்கின்றன. இடது கையில் தோள் வளை காட்டப்பட்டுள்ளது. வலது கரத்தில் இது தெளிவாகவில்லை அல்லது அணிவிக்கப்படவில்லை. குதிகால்வரை உடலை ஒட்டி மடிப்புகள் கூடிய பட்டாடை அணிந்துள்ளாள். இடுப்பில் இடையணிகளும், விரித்து சிறுதிரைபோல் முன்கொசுவம் எடுப்பாகக் காட்டப்பட்டுள்ளது. காலில் பாதசாலம் போன்று கொலுசு அணிவிக்கப்பட்டுள்ளது.

நாயகியின் இருபுறமும் சிறிய உருவில் இரு சேடிப்பெண்கள் நாயகிக்கு உதவியாய் நிற்கின்றார். இவர்களின் உடைகளும், அணிமணிகளும் மிக்கச் செழிப்பைக் காட்டுகின்றன. ஏறத்தாழ நாயகியை நிகர்த்தவர்கள். இவர்கள் தம் கரங்களில் கிண்ணம் அல்லது மலர்க் கொத்தை ஏந்தியவர்களாக உள்ளனர்.

ஒசூர் நாயகி நடுகல்: 10 ஆண்டுகளுக்கு முன் பகல்பொழுதில் எடுத்தது.

தலை ஈந்த நாயகி

கீழடுக்கில் வலதுபுறமாக நாயகி இருபங்கமாக ஒய்யாரமாக நின்றகோலத்தில் காட்சியளிக்கிறார். பேரரசு அமர்வில் பூண்டிருந்த அதே அணிமணி அலங்காரம் கொண்டுள்ளாள். இடது கரம் தோளிலிருந்து தொங்கி டேலமுத்திரையுடன் காட்சியளிக்கிறது. வலது கரமானது மேல் நோக்கியுயர்ந்து தன்னை ஈசனுக்கு தலைப்பலியாக்கி அர்ப்பணிக்கும் முகமாக கழுத்தைச் அரியும் நீண்ட வாளை உறுதியுடன் பிடித்துள்ளது.

வெண்சாமரம் ஏந்திய தேவலோகப் பெண்

கீழடுக்கின் வலது ஓரத்தில் ஒரு பெண் உருவம் இடது கரத்தால் வெண்சாமரம் வீசிக் கொண்டிருக்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. நின்ற கோலத்து நாயகியைப் போலவே காட்சியளிக்கிறாள். வெண்சாமரம் இவள் தேவலோகப் பெண் என்பதை குறிப்பிடுகிறது. இது நாயகி ஈசனின் கையிலாயத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாள் என்பதன் குறியீடு.

மேலடுக்குக் காட்சி

மேலடுக்கில் மையத்தில் ஈசனின் அருஉருவான லிங்கத் திருமேனி பிரபாவளியுடன் காட்சியளிக்கிறது. நடுகற்களில் லிங்கத்தைக் காட்சிப்படுத்துவது நடுகல்லுக்குரியோர் ஈசனடி சேர்ந்தனர் அல்லது சிவலோகத்தில் வாழ்கின்றனர் என்பதன் குறியீடாகும். நடுகல்லில் ஈசனை வழிபடுவது என்பது ஈசனடி சேர்ந்த நடுகலுக்குரியோரை வணங்குதல் என்பதாகும். இங்கு வணங்கப்படுபவர் ஒசூர் நாயகி என்போம். ஈசனுக்கு வலதுபுறம் ஒரு அலங்காரமான முக்காலியில் பெரிய சங்கு வைக்கப்பட்டுள்ளது (வலம்புரி?). அடுத்ததாக மேலடுக்கின் இடது ஓரமாக மிகப்பெரிய மணியை இடது கையில் தொடக்கவிட்ட நிலையில் ஒலித்துக்கொண்டும், வலது கரத்தில் பெரிய தீபக்காலால் ஒளியூட்டி பூசைபுரியும் பூசாரி காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். ஈசனுக்கு இடது புறம் மிகப்பெரிய நந்தி வடிக்கப்பட்டுள்ளது. நந்திக்கு அடுத்து நான்கு பெண்கள் காட்டப்பட்டுள்ளனர். முதல் பெண் இரு கரங்களையும் தலைக்கு மேல் குவித்து வணங்கிய நிலையில் உள்ளார் அடுத்த மூவரும் தம்முறைக்காக வரிசையில் காத்துள்ளனர்போல் காட்டப்பட்டுள்ளனர். மூலவரைவிடவும் உயர்ந்த, பெரிதான நந்தி காட்டப்பட்டிருப்பது வியப்பளிக்கிறது. சுட்டும் பொருள் விளங்கா நிலையில் உள்ளது.

தலைப்பலி அல்லது நவகண்ட வரலாற்றின் பக்கங்களைத் திருத்தி எழுதும் நாயகி.

இந்நடுகல் வழிபாட்டுப் பண்பாட்டில் தலைப்பலி, நவகண்ட, தூக்குதலை ஆகிய செயல்களுக்கு அறிந்த விளக்கங்களைத் தரும் வரலாற்றின் பக்கங்களைத் திருத்தி எழுதுகிறது.

தென்னிந்தியா முழுவதும் சாக்தம் அல்லது சக்தி வழிபாட்டில் காணப்படும் ஒரு வழிபாட்டு முறையே ‘அரிகண்டம்’, ‘தலைபலி’, ‘நவகண்ட பலி’, ‘தூக்குதலை பலி’ என்பர். தன் தலையை தானே ஈவது, தன் உடலை தானே ஒன்பது துண்டங்களாக அறிந்து படைப்பது, தன் தலையை அறுக்கும்பொழுது கீழே விழாது இருக்க தன் தலையை பிடித்துகொண்டு மரக்கிளை, மூங்கில் போன்றவற்றில் கட்டிவிட்டு அறுப்பது என்பன முறையே இவற்றின் பொருளாகும். அரிகண்டம் தலைப்பலி ஆகலாம். ‘சாவாரப்பலி’யை இதனை ஒத்ததாகக் குறிப்பிடப்படுவது உண்டு. ஆனால், இதன் நோக்கமும், செயலும் வேறு என்பதால் இங்கு கவனத்தில் கொள்ளப்படவில்லை.

போர் வெற்றி, அரசின் நலம், தெய்வத்தின் கோபத்தால் விளைந்த கொள்ளை நோய் தாக்கி சமுதாயம் அழியாமல் இருக்க, தெய்வத்தை சாந்தப்படுத்த, அல்லது எதிர்பாரா பேராபத்திலிருந்து காக்க போன்ற சமூகக் காரணங்களுக்காகவும், தம் வேண்டுதல் நிறைவேற்றிய தெய்வத்துக்கு நன்றியாகவும் இச்செயல் புரியப்படுகிறது. இவ்வாறு பலி தந்தவர்கள் தெய்வமாகப் போற்றப்பட்டனர். கல்லெடுத்தும் வணங்கப்பட்டனர்.

ஈசனிடம் காதல் கொண்ட பெண்ணுக்கு எடுக்கப்பட்ட கல் என்ற தனிச்சிறப்பு மட்டுமல்லாமல், ஒசூர் நாயகியின் கல் நடுகல் மரபில் பல புதியனவற்றைப் புகுத்துகிறது. அவற்றை கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தலாம்.

1. ஒரு பெண் தன்னை தலையை இறைவனுக்கு ஈவது.

2. இறைவனை மணாளனாக அடைய விரும்பிய பெண் செய்த தீரச் செயலைப் போற்றுவது.

3. பெண்கள் தவிர வேறு வகையில் மரணமடைந்த பெண்களுக்குக்கு கல் எடுக்கும் மரபு இல்லை என்ற வழக்கத்தை மீறிய புரட்சிகரமான கல்லெடுப்பாக இருப்பது.

4. வழிபாட்டில் பெண்கள் மட்டுமே இடம் பெற்றதைச் சுட்டும் கல். (பூசாரி தவிர).

5. பெற்றோர் மகளின் போக்கை புறக்கணித்த பொழுதும், நண்பிகளாலும், ஊர்ப்பெண்களாலும் சிறப்பித்து போற்றப்பட தீரம்.

6. வரையறுக்கும் சிற்பக்கலையை பின்பற்றி வடிக்கப்பட்ட கல்.

நடுகல் சிற்பவழிச் செய்தி

ஒசூரில் செல்வச் செழிப்பு மிகுந்த அரச குடும்பத்தில் பிறந்த பெண் – ‘ஒசூர் நாயகி’ - ஈசனான சந்திரசூடேசுவரன்பால் மையல் கொண்டு, இறைவனையே அடைய விரும்பி, தன்னை கிளியேந்தி சிருங்காரம் புரியும் மீனாட்சியாகவே கருதி வாழ்ந்தனள். தாய் தந்தை சுற்றம் நாயகியின் காதலை ஏற்கவில்லைபோலும், நாயகி இறைவனோடு உடலும் உயிருமாய் கலக்கத்தீர்மானித்தாள். அதற்கு அவள் தேர்ந்த நல்வழி தனக்குத்தானே தலைபலி தந்து தம் உடலையும் இன்னுயிரையும் படையலாக்கி ஈசனடி சேர்வது. பெற்றோர், உற்றார் உறவினர் புறக்கணித்த போதிலும், நண்பிகளும், ஊர்ப்பெண்டிரும் அவளைச் சிறப்பித்து கல்லெடுத்து வணங்கினர்.

நடுகல்லின் சிறப்பு

நான் அறிந்த முதல் பெண்தலைப் பலிக்கல் இது. இறைவனை அடைய ஒரு பெண் புரிந்த தீரமான செயல். அரிகண்டம், தலைபலி, நவகண்டம் அல்லது தூக்குதலை கொடுத்தல் ஆகிய செயல்கள் வீரத்தின் வெளிப்பாடாகவும் கொள்ளப்படும். ஓசூர் நாயகியின் செயலும் தெய்வீகமும் வீரமும் ததும்பியதே. தலைப்பலி அல்லது நவகண்டம் ஆகிய செயல்களுக்கு அன்று வரை இருந்த மரபார்ந்த பொருளை விடுத்துப் புதிய பொருளை வழங்கியப் புரட்சிகரமானப் பெண்.

குறிப்பு

தெரு ஓரத்தில் அநாதையாகக் கிடக்கும், சந்திரசூடனை நாடிய நாயகியின் கல்லை அழிவிலிருந்து பாதுகாக்க ஒசூர் மக்கள் முன்வருவார்களா? குறைந்தது ஒருமேடை அமைத்தேனும் பாதுகாத்து வழிபாட்டுக்கு மீட்பார்களா?

கட்டுரையாசிரியர் தொடர்புக்கு: thagadoorparthiban@gmail.com

]]>
hosur, ஒசூர், ஒசூர் நாயகி, நடுகல், சந்திரசூடேஸ்வரர், monument, chandrachoodeswarar https://www.dinamani.com/tholliyalmani/special-articles/2018/jul/19/ஒசூர்-நாயகி---சிற்பத்தில்-நிலைத்த-தலைப்பலியில்-முடிந்த-ஒசூர்-நாயகியின்-ஈசன்-காதல்-2963436.html
2942850 தொல்லியல்மணி சிறப்புக் கட்டுரைகள் தருமபுரி, குமாரசாமிப்பேட்டை மாந்திரீகர் மாரிமுத்து நடுகல்: அறிந்த நடுகல் வரலாற்றைப் புரட்டிப்போடும் நடுகல்! த. பார்த்திபன் Tuesday, June 19, 2018 02:43 PM +0530  

சங்க காலம் முதல், நடுகற்கள் எழுப்பப்படுவதில் இடமும் பொழுதும் சார்ந்து அடைந்துள்ள மாற்றங்கள் பலப்பல. இம்மாற்றங்கள், தொல்காப்பியம் அடையாளப்படுத்தும் தமிழர்ப் பண்பாட்டுக் காட்சிகளில் இருந்து பாரதூரமாய் வேறுபட்டுக் கிளைத்தமையின் விளைவுகளாகக் காட்சியளிக்கின்றன. தொல்காப்பியம் முற்றிலும் ஆநிரை தொடர்பாக வெட்சி, கரந்தைப் பூசல்களில் மாய்ந்த வீரர்களை வணங்கும் வீரவழிபாடாக நடுகல்லை அடையாளப்படுத்தும். கல்வெட்டுச் சான்றுகளும், சிற்பக்காட்சி வெளிப்பாடுகளும் பலதிறமாகக் கிளைத்த முன்னோர் வழிபாட்டுக்குச் சான்றுகளாகின்றன.

சதி, நவகண்டம், தலைப்பலி, உள்பட, விலங்குகளுடன் சண்டை, பெண், ஊர், மானம் காத்தல் ஈராகவும் ஏதோ ஒருவகையில் வீரம் வெளிப்படுத்தி மரணத்தைச் சந்தித்தவர்களுக்கு நடுகற்கள் எழுப்பப்பட்டன. பிற்காலத்தில், அகாலமாக மரணமடைந்தவர் நினைவாகவும் நடுகற்கள் எழுப்பட்டிருக்கின்றன. நிசிதிகை போன்று சமயம் சார்ந்த பெரியோர்கள் உண்ணாநோம்பிருந்து மாய்ந்தவர் நினைவுக்கற்களும் நடுகல் வகைப்பாட்டில் ஒன்றாகின்றன. அண்மையில் கொலை செய்யப்பட்டவர் நடுகல் ஆன வரலாறும் பர்கூர் – நெல்லூர் கொலையுண்டு தெய்வமானவர் நடுகற்கள் (நடுகல் மரபில் நாட்டார் தெய்வ உருவாகம் பற்றிய முதல் ஆய்வு) தலைப்பிலான என் கட்டுரை மூலம் வெளிப்படுத்தப்பட்டது (படிக்க: தினமணி, தொல்லியல்மணி, சிறப்புக்கட்டுரைப் பகுதிக்குச் செல்க).

நடுகற்களை யார் யார் எடுத்தனர் என்ற விவரத்தைச் சில கல்வெட்டுகள் காட்டுகின்றன. ஊரார், தலைவன், தனயன், அம்மா, தந்தை போன்று உறவுடையோர் ஊர்மக்கள் என்ற விவரங்களை அவை தரும்.

இப்படி இந்நாள் வரை யாருக்கு எதற்கு யாரால் எடுக்கப்பட்டது என்று அறியப்பட்ட வரலாற்றைப் புரட்டிப்போடும் நடுகல் ஒன்றை, இன்றைக்கு ஏறத்தாழ  ஓராண்டுக்கு முன் நேர்கொண்டேன். தருமபுரி, குமாரசாமிப்பேட்டை இடுகாட்டில் உள்ள இந்நடுகல், மேற்குறிப்பிட்ட இன்றுவரை அறியப்பட்ட எல்லா நடுகல் வரலாற்றையும், நடுகல் மரபு பற்றி பொதுப்புத்தியில் உறைந்த செய்திகளையும், அறிந்த காலட்ட வரலாற்றையும் புரட்டிப்போடுவதாக உள்ளது.

நடுகல் - மாந்திரீகர் மாரிமுத்து

பலமுறை இந்த நடுகல்லைக் கண்டிருக்கிறேன். சிலவேளை இதனை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என நினைப்பேன். சிறப்பான, கலையலங்காரம் கொண்டதில்லை என்றாலும், முதலில் அதன் தற்காலத்திய சிற்பக்கலை வெளிப்பாடுதான் என்னை ஈர்த்தது. நன்கு அறிந்த 18-ம் நூற்றாண்டு வரை நீடித்த நாயக்கர் கால சிற்பக்கலையின் எந்தக்  கூறுகளையும் கொண்டிராத அது, அதனிலிருந்து வேறுபட்ட அண்மைக்கால சிற்பக்கலைக் கூறுகளைக் கொண்டிருந்தது. மயானத்தில் நடுகல்லின் கீழ்ப்பகுதி பெரும்பாலும் சிற்பத்தின் குதிகால் உயரத்துக்கு மண்மேடால் மறைந்திருக்கும் என்பதால், கல்வெட்டை அறியமுடியாதிருந்தது. மேலும், வசதி குறைவு காரணமாக கடந்த 10-15 ஆண்டுகளாக ஊர் மயானம் எம்மூர் மக்களால் குறைவாகவே பயன்படுத்தப்பட்டதால், இந்த இடைவெளிக் காலங்களில் நான் இம்மயானத்துக்கு செல்லும் அவசியம் அமையவில்லை. ஓராண்டுக்கு முன்னர்தான், நிர்ப்பந்தம் வந்தது.    

நடுகற்கள், பெருங்கற்படைப் பண்பாட்டின் தொடர்ச்சியாக முன்னோர் வழிபாட்டின் நீட்சியாக எழுப்பப்படுபவை. நடுகற்கள் எழுப்பும் பண்பாடு, 17-18-ம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தது என்றும், பின்னர் அது மறைந்தொழிந்தது என்று வரலாற்று ஆசிரியர்களும், தொல்லியலாளர்களும் தெரிவிப்பர். இது, 1980-90-களில் வரையப்பட்ட கருத்து. நாயக்கர் காலச் சிற்பங்கலைப் பண்புகளுடன் கூடிய நடுகற்களுக்குப் பின் எழுந்த சிற்பக்கலைக் கூறுகள் கொண்ட நடுகற்கள் அறியப்படாமையும், பிற்கால கல்வெட்டுப் பொறிப்பு கொண்ட நடுகற்கள் வெளிப்படாமையும் 17-18-ம் நூற்றாண்டில் நடுகல் மரபு முடிவுக்கு வந்தமைக்குச் சான்றுகளாயின. ஆனால், அண்மைக்காலத்தில் 18-19-ம் நூற்றாண்டைச் சார்ந்த துப்பாக்கி ஏந்தியவர்களாக உள்ள நடுகற்கள் சில அறியப்பட்டு வருகின்றன. அரிதாக, 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில், 1910-ம் ஆண்டில் எழுப்பப்பட்ட கன்னட மொழி கல்வெட்டுப் பொறிப்புடன் உள்ள நடுகல், கிருஷ்ணகிரி மாவட்டம் கும்மாளாபுரத்தில் உள்ளது. (அடிக்குறிப்பு 1). இது ஆங்கிலேய - கிழக்கிந்திய ஆட்சி உருவாக்கத்தைத் தொடர்ந்து நடுகல் எழுப்பும் மரபு அரிதாக மாறிப்போன காலகட்டத்தைக் காட்டுகிறது.  

கல்வெட்டுப் பகுதி - 1951 மாரிமுத்து

1951 - கல்வெட்டு ஆண்டுக்குறிப்பு

குமாரசாமிப்பேட்டை நடுகல் கல்வெட்டு, ஒரு வரிச் செய்தியாக, 1951 மாரிமுத்து என்பதைத் தெரிவிக்கிறது. அதாவது, இது 1951-ம் ஆண்டு மறைந்த மாரிமுத்து என்பவருக்காக எழுப்பட்டது என்பதைத் தெரிவிக்கிறது. இதனால் இக்கல்வெட்டுடன் கூடிய இவ்வெளிப்பாடு, 20-ம் நூற்றாண்டின் மத்திய காலகட்டத்திலும் நடுகல் எழுப்பப்பட்டமைக்குச் சான்றாகவும் வரலாற்று முக்கியத்துவமும் உடையதாகிறது. (அடிக்குறிப்பு 2). நடுகல் மரபின் இருபதாம் நூற்றாண்டு எச்சமாகவும் இதனைக் கருதலாம்.

{pagination-pagination}

மாரிமுத்து வரலாறு

நடுகல் கல்வெட்டு குறிப்பிடும் மாரிமுத்து என்பவர் வாணிய செட்டியார் வகுப்பைச் சார்ந்தவர். காய்கறி வியாபாரம் செய்துவந்தார். அவரது சொந்தங்கள், இன்றும் தருமபுரி கடைவீதியைச் சுற்றிய பகுதியில் குடியுள்ளனர். ஆனால், அவருக்கும் அவரது சொந்தபந்தங்களுக்கும் தொடர்பு அறுந்துவிட்டது. தொடர்பறுப்புக்கு அவர் வேறு வகுப்பைச் சார்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதே காரணம். தன் திருமணத்துக்குச் சில காலத்துக்குப் பிறகு அவர், குமாரசாமிப்பேட்டையில் உள்ள செங்குந்தர்குல நண்பர்களின் உதவியுடன் குமாரசாமிப்பேட்டைக்குக் குடியேறி தன் இறுதிக்காலம் வரை வாழ்ந்துள்ளார். அவரது ஒரே மகன் அரசுப்பணி காரணமாக வெவ்வேறு ஊர்களில் குடியிருந்து, பணிக்காலத்தியேயே காலமாகியிருக்கிறார். அதனால், இந்நடுகல் வழிபாட்டில் இருந்து நீங்கியுள்ளது. நீங்கியது 30-35 ஆண்டுகளுக்கு முன்னர்தான் என்று தகவலாளி ஒருவர் கருதுகிறார். (அடிக்குறிப்பு 3).

இந்நடுகல்லுடன், நடுகல்லுக்கு எதிரில் 5 அடி இடைவெளியில் ஒரு பெரிய வேல் நடப்பட்டதாகவும், வழிபாடு நீங்கிய சிறிது காலத்திலேயே அது திருடப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றனர்.  

தனக்குத் தானே கல்வடித்துக் கொண்டுவந்தவர்

தன் மரணத்தை முன்கூட்டியே கணித்திருந்த மாந்திரீகர், இந்த நடுகல்லைப் பென்னாகரத்துக்குப் பக்கத்தில் இருந்து செய்வித்துக் கொண்டுவந்தார் என்கின்றனர். தன் சமாதியின் மீது நாள் குறித்து நடப்பட வேண்டும் என தன் நண்பர்களிடம் விருப்பத்தைத் தெரிவித்திருந்ததார். சில மாதங்களிலேயே அவர் இறப்பு நிகழ்ந்தது. அவர் இறப்புக்குப் பின் நண்பர்களும், ஊர்க்காரர்களும் மாந்திரீகரின் விருப்பப்படியே கல்வெட்டுப் பொறித்து நட்டுள்ளனர்.  

இந்த நடுகல்லில் இருக்கும் உருவம் அவரது மெய்யான உருவமா என்ற கேள்விக்கு, தலை அலங்காரம். கைகளில் ஈட்டி, குண்டாந்தடி இல்லை என்றால் நேரில் இப்படித்தான் இருப்பார் என்கின்றனர். மேலும், அவர் நகை அணிந்து பார்த்ததில்லை என்கின்றனர். கல்லில், முகம் முட்டைவடிவத்தில் உள்ளது; மெய்ப்படி அப்படி இருந்ததில்லை என்று ஒருவர் மறுக்கிறார். இது உருவ ஒற்றுமையை கேள்விக்கு உள்ளாக்குகிறது. சிற்பம், மாரிமுத்து விரும்பிய மனத்தோற்றமாக இருக்கலாம், அல்லது சிற்பி மாரிமுத்துவை ஒரு ஊர்க்காவலனாக சிறப்பிக்க ஆயுதங்களுடன் வடித்த சிற்பமாக இருக்கலாம்.        

மாரிமுத்துவின் சிறப்புகள்

மாரிமுத்துவின் நினைவு, ஊர் முதியவர்கள் சிலரிடமும், அவர் சார்ந்த கதைகள் சிலரிடமும் பதிந்துள்ளன. அவர் பற்றிய செய்திகளில் இரண்டு செய்திகள் பொதுக்கருத்தாக உள்ளன. 1. அவர் மந்திர தந்திரங்களில் வித்தகர். மாந்திரீகம், மருத்துவம் அறிந்தவர். குழந்தைகளுக்கு வரும் நோய்களை தன் மாந்திரீகம் மூலம் நிவர்த்தி செய்திருக்கிறார். அவர் பிறரால் செய்த மாந்திரீகக் கட்டுகளை நீக்கி, படுக்கையாக இருந்த சிலரை நடக்கும்படி செய்திருக்கிறார். மாந்திரீகம் தொடர்பாக அவர் மயானத்தில் நள்ளிரவு பூசைகள், குறிப்பாக அமாவாசை நாள்களில் செய்துவருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். 2. அவர் பல வித்தைகள் கற்றிருந்தார். அதில் ஒன்று சிலம்பாட்டம். ஆனால் போட்டிகளில் அவர் கலந்துகொண்டது பற்றியோ, விருதுகள் பெற்றது பற்றியோ ஒன்றும் விவரம் இல்லை. அப்படி ஏதும் நடக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர். அவர் தன் சிலம்பாட்ட வித்தையை நண்பர்கள் உள்பட யாருக்கும் கற்றுத்தரவில்லை. தான் கற்ற மாந்திரீகத்தை யாருக்கும் கற்றுத்தராதது போலவே.

நடுகல் சிற்பக்கலை     

கிழக்கு நோக்கி நடப்பட்டுள்ள நடுகல்லில், மாரிமுத்து கரண்டமகுடத் தலை அலங்காரம் கொண்டுள்ளார், இருபுறமும் பின்பக்கமிருந்து பக்கவாட்டில் நேராக விரைத்து, குறுகியதாய் நீண்டு பிறகு தொங்கும் சடைமுடியும் கொண்டுள்ளார். முத்துவைத்த நெற்றிப்பட்டம் அணிந்துள்ளார். காதுகளில் தொங்குகுண்டு காதணி அலங்கரிக்கிறது. கழுத்தில் முகப்பு வைத்த கண்டசரமும், தொப்பூள்வரை தொங்கும் பதக்கமுள்ள ஆரமும் அணிவிக்கப்பட்டுள்ளன. கையிலும், காலிலும் சற்று தடித்த காப்பு பூட்டப்பட்டுள்ளது. வலது கரத்தில் தரையில் ஊன்றி செங்குத்தாக நிற்கும் ஈட்டியும், இடது கரத்தை பக்கவாட்டில் மடக்கி மூட்டியை மேல்நோக்கி தூக்கி, மணிக்கட்டை மட்டும் கீழாக இறக்கி குண்டாந்தடி போன்ற குறுந்தடியை குறுக்காகப் பிடித்தபடி உள்ளார். தொடைவரை ஆடை காட்டப்பட்டுள்ளது. முன்புறம், தொடைகளுக்கு நடுவில் அலங்காரத்துக்காகக் கட்டப்படும் தொங்கும் விறிசி மடிப்பு ஆடைக்கட்டு, இடைவாரில் இருந்து தொங்குகிறது. கால் பாதங்கள் தெற்கு நோக்கியதாகக் காட்டப்பட்டுள்ளன. நடுகல்லை வண்டி வாகனங்களில் ஏற்றி இறக்க வசதியாக, இரு தோளுக்கும்  மேல் இரு துளைகளும், இடுப்பின் இருபுறம் இரு துளைகளும் போடப்பட்டுள்ளன.

கள செய்திக்குப் பின்

கல்வெட்டும், கள ஆய்வுத் தகவல்கள் இல்லையென்றால், இந்நடுகல்லை சிற்ப அமைதிகொண்டு, மாந்திரீகர் மாரிமுத்து நடுகல்லை ஈட்டியும், குறுந்தடியும் கொண்டு ஊரைக்காத்த வீரனுக்கு 19-20-ம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட கல் என்றே வகைப்படுத்தியிருப்பேன்; காலத்தை, ஒரு நூற்றாண்டேனும் பழமைகொண்டதாகக் கணித்திருப்பேன். மெய்யில் மாந்திரீகரான அவருக்கும் காட்சிப்படுத்தப்பட்ட ஆயுதங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பதை நினைவில் கொள்வோம். அண்மைக்கால நடுகற்களின் சிற்பக்கலை நம்மை உண்மைக்கு அருகில் கொண்டுசெல்லாமல் திசை தடுமாறவே செய்யும் என்ற தேவையான விழிப்புணர்வையும் இக்கல் தருகிறது.    

இப்படி நடுகல் மரபில், தொல்காப்பியம் முதல் இந்நாள் வரை அறியப்பட்ட எல்லா செய்திகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட வரலாற்றைப் புரட்டிப்போடுகிறது இக்கல். வீரம் வித்தாமலும், அகால மரணம் இன்றியும் நடுகல் எழுப்பப்பட்ட நிகழ்வுக்குச் சான்றாகி, நடுகல் வரலாற்றில் புதிய பக்கங்களை எழுதிச் செல்கிறார், 1951-ல் தனக்குத்தானே கல்லெழுதி நண்பர்களைக் கொண்டு எழுப்பிவித்த மாந்திரீகர் மாரிமுத்து.

*

அடிக்குறிப்பு 1

B.R. Gopal, H.S. Gopal Rao & P.V. Krishnamurthy, Kannada Inscription  of Tamil Nadu, Kannada University, Hambi, Vidyanya, (2000), No.62.

அடிக்குறிப்பு 2

1951 ஆண்டுக்குறிப்பில், இறுதி எண் 1 லேசாகச் சிதைந்துள்ளது. அவ்வெண் 2-டோ என தோற்றமயக்கம் தருகிறது. 1 என்பதே சரி என்று தகவலாளிகள் தெரிவிக்கின்றனர்.

அடிக்குறிப்பு 3

தகவலாளிகள், குப்புசாமி, வயது 86; குப்பன் வயது 81; தங்கவேலு வயது 89; சண்முகம் வயது 66. நால்வரும் தருமபுரி, குமாரசாமிப்பேட்டையில் வசிப்பவர்கள். முதல் மூவர், இக்கல்லெடுப்பை  அறிந்தவர்கள். இரண்டாமவர், தன் 14-15 வயதில் கல்லெடுப்பில் பங்குகெடுத்தவர். மாரிமுத்துவின் கரிசனத்துக்கு உரிய குழந்தையாக இருந்தவர். நான்காமவர், தன் மூத்தோர்களிடம் இருந்து பெற்ற தகவல்களைக் கதைகளாகக் கொண்டிருந்தவர், இரண்டு மாதங்களுக்கு முன் இயற்கை எய்தினார்.

- த. பார்த்திபன்

கட்டுரையாசிரியர் தொடர்புக்கு: thagadoorparthiban@gmail.com

]]>
தொல்லியல், மாந்திரீகம், யுத்தபூமி, கட்டுரைகள், நடுகற்கள், கல்வெட்டு, தொல்காப்பியம், தொல்லியல்மணி https://www.dinamani.com/tholliyalmani/special-articles/2018/jun/19/தருமபுரி-குமாரசாமிப்பேட்டை-மாந்திரீகர்-மாரிமுத்து-நடுகல்-அறிந்த-நடுகல்-வரலாற்றைப்-புரட்டிப்போடும்-2942850.html
2924083 தொல்லியல்மணி சிறப்புக் கட்டுரைகள் பர்கூர் - நெல்லூர் கொலையுண்டு தெய்வமானவர் நடுகற்கள் த. பார்த்திபன் Monday, May 21, 2018 12:31 PM +0530  

குறிப்பு

நடுகல் மரபில், நாட்டார் தெய்வ மரபுகளின் தாக்கத்தை வெளிப்படுத்தும் முதல் ஆய்வு இது. தகடூர்ப் பகுதியில் நான் அறிந்த இவ்வகையான நடுகல் வடிவமெடுத்த நாட்டார் தெய்வங்கள் குறித்து தனியாக எழுதத் திட்டமிட்டிருந்தேன். ஈரோடு மாவட்டம், பர்கூர் - நெல்லூர்ப் பகுதியில் இருக்கும் இத்தெய்வங்கள் முந்திக்கொண்டனர். நடுகல் மரபே நாட்டார் மரபுதானே, அது என்ன தனிதாக்கம் என்று கேள்விகள் எழலாம். இது குறித்து, கட்டுரையின் பகுதியாக சில செய்திகளை விளக்கியுள்ளேன். ‘‘நடுகல் மரபும் நடுகல்மரபில் நாட்டர் தெய்வ மரபும்’’ என்று அடுத்து எழுத இருக்கும் கட்டுரை, இவ்விரண்டின் வேறுபட்ட பரிமாணங்களை விளக்குவதாக அமையும். 

*

அண்மையில், முகநூலில் கவனம் பெற்று பலவிதமான கருத்துகளை எழுதச் செய்த ஈரோடு மாவட்டம், பர்கூர் பகுதியில் நெல்லூரில் உள்ள நடுகல் இது. இதனைப் பதிவேற்றியவர், பழங்குடிமகன் என்ற மீனாட்சிசுந்தரம் குறும்பன். 

(நெல்லூர் முதல் நடுகல்)

இந்நடுகல்லில், கல்வெட்டுப் பொறிப்பு இல்லை என்பதால், இக்கல் எழுப்பப்பட்டதற்கான காரணங்களை நேரடியாக அறியமுடியாது உள்ளது. இதன் காரணமாக, இந்நடுகல் பற்றி எழுந்த கருத்துப் பதிவுகள் பெரும்பாலும் தவறான புரிதலுக்கு அழைத்துச் சென்றிருக்கின்றன. உதாரணமாக, 

•    போர் அல்லது பூசலில் ஆண்-பெண் இருவரும் ஒரே வாளால் வீழ்த்தப்படும் காட்சி.

•    இறந்தவர்கள், தேவகன்னியரால் தேவலோகம் அழைத்துச் செல்லப்பட்ட காட்சி. 

•    இறந்தவர்கள், ஐந்து தேவலோகப் பெண்களால் சுவர்க்கம் அழைத்துச் செல்லப்பட்ட காட்சி. 

•    தூக்குதலை, அரிகண்டம், நவகண்டம் போன்ற தலைப்பலிக்கல் வகையில் ஒன்று. 

•    சிடிகல் வகை தலைப்பலிக்கல். 

•    போரில் ஈடுபட்டு மாய்ந்த ஐவரும் தேவலோகத்தில் உள்ளனர். 

•    போரில் மாய்ந்த ஐவரையும் தேவலோகத்துக்கு அழைத்துச் செல்ல ஐந்து தேவலோகப் பெண்கள் உள்ளனர்.

இக்கருத்துப் பதிவுகள் நிகழ்ந்துவருகையில், இடையில் மற்றொரு நடுகல் படம் வெளியிடப்படுகிறது. இவ்விரண்டு கற்களும் அருகருகே அமைந்துள்ளன. இரண்டும் ஒரே நிகழ்ச்சி தொடர்பானவை. 

இந்நடுகற்கள் குறித்து எழுந்துள்ள மேற்குறித்த கருத்துகள் யாவும், இந்நடுகற்களின் உள்ளார்ந்த பொருளை அடைவதை நோக்கி நகராமல் இருக்கின்றன. சிற்பக்கலை வெளிப்படுத்தும் நுணுக்கமான, அதேசமயத்தில் நேரடியான விவரச் சித்தரிப்புகளையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் சொல்லப்பட்டவையாக இருக்கின்றன. 

இந்நடுகற்களின் சிற்பச் சித்தரிப்புகளில் இருந்து பெறமுடியும் செய்திகளைப் பார்ப்போம். 

முதல் நடுகல் 

இது இரண்டு அடுக்கால் ஆனது. கீழடுக்கில் நான்கு ஆண் உருவங்களும் ஒரு பெண் உருவமும்; மேல் அடுக்கில் ஐந்து ஆண் உருவங்களும் இடம்பெற்றுள்ளன. கீழடுக்கில் உள்ள ஆண் உருவங்களில், வலதுபுறத்திலிருந்து இடமாக முதல் மூவரது தலை அலங்காரம் கொண்டையோடு ஏறத்தாழ ஒரே தோற்றத்தில் உள்ளது. நீண்டு தொங்கும் காதுகளில் வட்டகுலை அலங்கரிக்கிறது. மார்புகளில் பலவித அணிமணிகள் பூண்டுள்ளனர். இதில் ஒவ்வொருவரின் அணிமணிகளும் மாறுபடுகின்றன. மூவரின் காலசைவுகள் ஒரு திசை நோக்கி – வலதிலிருந்து இடதுபுறம் - விரைவதாகக் காட்டப்பட்டுள்ளது. இம்மூவரும் ஆயுதம் ஏந்தியுள்ளனர். முதலாமவர் வலது கரம், குறுவாள் ஏந்தி குத்துவதற்கு ஆயத்தமான நிலையில் பிடித்தபடி உள்ளது. இடது கரம், மற்றொரு அளவில் சற்று பெரிய குறுவாளை பக்கவாட்டில் இருக்குமாறு மணிக்கரத்தில் இருந்து பக்கவாட்டில் மடக்கிக் காட்டப்பட்டுள்ளது. இரண்டாமவர் வலது கரம், வாளை உயர்த்திப் பிடித்தவாறும், இடது கரம் தொங்குகரத்தில் குறுவாளைத் தொங்கிவிட்டவாறும் காட்டப்பட்டுள்ளது. மூன்றாமவர் தன் வலது கரத்தில் இருக்கும் மிக நீண்ட வாளை, நான்காவதாக உள்ள ஆண் மற்றும் ஐந்தாவதாக உள்ள பெண் ஆகியோரது இடையில் பக்கவாட்டில் சொருவி அவர்களை வீழ்த்துவதாகக் காட்டப்பட்டுள்ளது. இந்நாள் வரை நாம் அறிந்த வாள்களிலேயே மீக நீண்ட வாள் எனக் கருதத்தகும் அக்கொலைவாள், இருவரின் உடலிலும் பாய்ந்து வாளின் கூர்முனை பெண்ணின் உடலில் இருந்து நீட்டமாக வெளிவந்துள்ள நிலையில் காட்டப்பட்டுள்ளது. வலது கரம் நான்காமவரின் தலைமுடியைப் பிடித்திழுப்பதுபோல் காட்டப்பட்டுள்ளது. நான்காமவர் முதல் மூவரிடமிருந்து வேறுபடும் நீண்ட சடைபின்னல் அலங்காரம் கொண்ட தலையுடன், நிறைய அணிமணி அலங்காரங்களுடன் உள்ளார். ஐந்தாவதாக உள்ள பெண் உயர்வகை ஆடை, அணிமணி அலங்காரமும் கொண்டை முடித்த தலையுமாகக் காட்டப்பட்டுள்ளனர். கடைசி இருவரின் சிற்ப விவரிப்புகள் ஆழ்ந்த கவனத்தை வேண்டுகின்றன. இவர்கள் கைகளில் ஆயுதங்கள் காட்டப்படவில்லை. ஆணின் வலது கரம் தன் தலைமுடியைப் பிடித்திழுக்கும் மூன்றாவது ஆணின் இடது கரத்தின் மணிக்கட்டுப் பகுதியைப் பிடித்துள்ளது. இடது கை பெண்ணின் வலது கையுடன் கோத்த நிலையில் காட்டப்படுள்ளது. ஆணின் கால் திசை - இடதிலிருந்து வலமாக மாறியுள்ளது; இது தங்களைத் தாக்க வருபவர்களின் திசையை, அதாவது எதிர்திசையை, அதாவது வந்த திசையை நோக்கியவாறு உள்ளது. பெண்ணின் வலது கரம் ஆண் கரத்தோடு கைகோத்திருக்க, இடது கரம் இயல்பாக நடந்துசெல்லும் தொங்குகர அசைவுடன் உள்ளது. இவளது கால் அசைவுகள், முதல் மூவரின் திசை போன்றே காட்டப்பட்டுள்ளது. இப்பெண்ணின் ஆடை அலங்காரம் சிறப்பாக உள்ளது. இன்று கூடைவிரிப்புப்பாவாடை என்று குறிப்பிடும் வடிவமைப்பு கொண்ட பாவாடையை இப்பெண் அணிந்துள்ளாள். சிறந்த அணிமணி அலங்காரங்கள் கொண்டுள்ளாள். சமூகத்தில் உயர்ந்த மதிப்பு பெற்ற, அல்லது செல்வச்செழிப்பு மிகுந்தவர்கள் என்று காட்டும்விதமாக இவ்விருவரின் தோற்றமும் உள்ளது. 

மேல் அடுக்கில் ஐந்து உருவங்கள் ஒரே முக, ஆடை, அலங்கார பாவனையில் ஒரு நீண்ட கல்மேடை போன்ற ஆசனத்தில் ஐவரும் ஒரே பாவனையில் வலது காலை தொங்கவிட்ட நிலையிலும், இடதுகாலை மடக்கியும் சுகாசன அமைதியில் காட்டப்பட்டுள்ளனர். கீழ் அடுக்கில் நான்காம் ஆணின் தலை அலங்காரமான நீண்ட தலை அலங்காரத்தில் இந்த ஐவரும் உள்ளனர். இவர்களது வலது கரமானது கிலுக்கட்டை இசைக்கருவியை இசைக்கும் லாகவத்தில் காட்டப்பட்டுள்ளது. இடது கரம், அமர்ந்துள்ள காலின் தொடையில் பதிந்தவாறு காட்டப்பட்டுள்ளது.

(கிலுக்கட்டை வாசிக்கும் மேல் வரிசை ஐவரில் ஒருவர். நிறமாற்றம் சிற்பத்தின் சில சித்தரிப்புகளை நன்கு புலப்படுத்துவதாக உள்ளது. முதல் நடுகல்)

இக்காட்சிகள் நான்கு முக்கியச் செய்திகளை நமக்கு வழங்குகின்றன.

1.    இதில் போர்க்காட்சி இல்லை. 

2.    இதில் இடம் பெற்றவர்கள், இரு வேறுபட்ட குழுவினைச் சார்ந்தவர்கள். தலையலங்காரத்தில் உள்ள வேறுபாடு இதனை வெளிச்சமாக்குகிறது.

3.    ஒரு குழுவினைச் சேர்ந்த முதல் மூவர், வேறு குழுவைச் சேர்ந்த ஆண்-பெண் இணையை அவர்கள் அறியாதவாறு பின்தொடர்ந்து குத்திச் சாய்க்கின்றனர்.

4.    தாங்கள் தாக்கப்படுவத்தை ஆண் மட்டுமே அறிகிறான் உடன் இருக்கும் பெண் அறிவதில்லை. 

அடுத்து, இரண்டாவது நடுகல் சித்தரிப்புகளைப் பார்ப்போம்.

(இரண்டாம் நடுகல் - கிலுகட்டை வாசிக்கும் மூதாதையர்) 

இந்நடுகல்லும், முதல் நடுகல் போலவே இரு அடுக்குச் சித்தரிப்புகள் கொண்டது. இந்நடுகல் நிலத்தில் புதைந்தும், மண்மேடிட்டும் இருப்பதால், கீழடுக்கின் சிற்பச் சித்தரிப்புகளின் முழுமையைக் கண்டுணரமுடியாது உள்ளது. கீழ் அடுக்கில் உள்ள வலதுபுற உருவத்தின் (கொலையாளி) தொடைப்பகுதி வரையிலும், இடதுபுற உருவத்தில் (கொலையுண்டவர்) இடுப்புவரையிலும்தான் காணமுடிகிறது. இது முதலாமவரின் கால் அசைவுகளையும், இரண்டாமவரின் கால் அசைவுகளுடன், ஆடைச் சித்தரிப்புகளையும் அறியமுடியாமல் செய்துவிடுகிறது. 

மேலடுக்கில், முதல் நடுகல் சிற்பச் சித்தரிப்பு போலவே, நீண்ட சடை தரித்த இருவர் கல்மேடை ஒன்றில் சுகாசனத்தில் அமர்ந்து, இடது கரத்தை தம்தம் தொடை மீது அமர்த்தியும், வலது கரத்தில் கிலுக்கட்டை இசைக்கருவியை இசைப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளனர். கீழடுக்கில் இரு உருவங்கள் உள்ளன. இடதுபுற ஆண் முதல் நடுகல்லின் முதல் மூவரைப் போலவே, தோற்றம் ஆடை அணிமணி அலங்காரத்தில் காட்டப்பட்டுள்ளார். எனில், இவர் முதல் நடுகல் சித்தரிக்கும் கொலை செய்த குழுவைச் சார்ந்தவராகிறார். இவரது இடது கரம் இரண்டாமவரின் கொண்டையைப் பிடித்திழுப்பது போலவும், தன் வலது கரத்தில் உள்ள வாளை இரண்டாவது உருவத்தின் பக்கவாட்டில் இருந்து சொருகுவது போலும் காட்டப்பட்டுள்ளது. இரண்டாவது உருவம் தன் வலது கரத்தை தன் கொண்டையை இழுக்கும் முதல் உருவத்தின் கையின் மணிக்கட்டுப் பகுதியை பிடித்துள்ளது. இடது கரம் தொங்கும் கரமாக உள்ளது. இரண்டாம் உருவத்திடம் ஆயுதங்கள் ஏதும் இல்லை. இரண்டாவதாக இடம் பெற்றுள்ள உருவம் ஆணா பெண்ணா என்ற ஐயம் எழுகிறது. முதல் நடுகல்லின் சிற்பச் சித்தரிப்போடு ஒப்பிட்டும், தலை மற்றும் இடுப்பு வரையிலான அலங்காரத்தைக் கொண்டும் இது பெண் என்றே கருதலாம். மேடிட்ட மண்ணை முழுமையாக அகற்றி உடை அலங்காரத்தை வெளிக்கொணர்த்தால், இச்சித்திரத்தின் உண்மைத்தன்மை விளக்கமாகும். இங்கு அனுமானிக்கப்பட்ட கருத்து நிலைத் தகவலாகலாம். 

இக்காட்சிச் சித்தரிப்பு, முதல் நடுகல்லின் செய்திகளையே வழங்குகிறது. அதனை இவ்வாறு வரிசைப்படுத்திக்கொள்ளலாம்:

1.    இது போர்க்காட்சி இல்லை. 

2.    இடம் பெற்றவர்கள் இரு வேறுபட்ட குழுவினைச் சார்ந்தவர்கள். தலையலங்காரத்தில் உள்ள வேறுபாடு இதனை வெளிச்சமாக்குகிறது.

3.    ஒரு குழுவினைச் சேர்ந்த ஒருவர், வேறு குழுவைச் சேர்ந்த பெண் (?) ஒருவரை அவர் அறியாதவாறு பின்தொடர்ந்து குத்திச் சாய்க்கின்றார்.

இரண்டு கற்களிலும் மேலடுக்கில் உள்ளவர்கள், கொலை செய்யப்பட்டவர்களின் குழுவினைச் சார்ந்த தலைவர்களாகவோ, மூத்த குடிமக்களாகவோ இருக்க வேண்டும். இவர்கள் கிலுக்கட்டை இசைக்கருவியை இசைத்தவாறு காட்டப்படுவது, குறும்பர் இனத்தவரின் பண்பாட்டில் பிறப்பிலும், இறப்பிலும் இன்றியமையாது இடம்பெறும் இசைச் சடங்கின் பகுதியைப் பிரதிபலிப்பதாகும். 

இக்கற்களில் போர் இல்லை, இருப்பது கொலைதான் என்பதைத் தெளிந்தபின், கள ஆய்வில் மேலும் வலிமையான தகவல்களைத் திரட்ட முடியும் என்பதில் உறுதியானேன். மேலும், கள ஆய்வுகளில் சில பிற்கால நடுகற்களில் நாட்டார்த் தெய்வ உருவாக்கத்தின் தாக்கம் உள்ளதை அவற்றின் சித்தரிப்புகள் நேர்காணல்கள் வழியாக அறிந்துள்ளேன். ஏனெனில், அவை வீரம் வித்துதல் என்ற நடுகல்லின் மையமான கோட்பாட்டுக் குணத்தை எவ்வகையிலும் வெளிப்படுத்துவதில்லை. மேலும், பழங்குடிமகன் பதிவில் மழை வேண்டியும், பஞ்ச காலத்திலும் வழிபடும் எங்கள் குல தெய்வம் என்று கூடுதல் செய்தியை குறிப்பிட்டதும் கள ஆய்வின் அவசியத்தை உணர்த்தியது. உற்சாகமும், தன் பண்பாட்டின் ஆழங்களைத் தேடும் துடிப்புள்ள இளைஞன் பழங்குடிமகன் (வயது 31) மற்றும் அவரது தாத்தா பத்ரே கவுடா (வயது 76) இருவரும் எனக்குத் தேவையான தகவல்களை அளித்துள்ளனர். 

நாட்டார் தெய்வங்களின், குறிப்பாக குலதெய்வங்களின் உருவாக்கத்தில் சில இறப்புக் காரணங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. அவற்றுள் வீரம் வித்தி மாய்ந்த மற்றும் சதி கற்கள் உட்பட நடுகல் தெய்வங்கள் தவிர பிற காரணங்களில், 1. கன்னியாக இறந்தவர்கள்; 2. குறை ஆயுளில் இறந்தவர்கள்; 3. பிறரால் கொலை செய்யப்பட்டவர்கள்; 4. பலி கொடுக்கப்பட்டவர்கள்; 5. அகால மரணங்களைச் சந்தித்தவர்கள்; 6. விபத்தில் இறந்தவர்கள்; 7. தற்கொலை செய்துகொண்டவர்கள்; 8. விலங்குகளால் தாக்கப்பட்டு இறந்தவர்கள் போன்வை முக்கியக் காரணங்களாக உள்ளன. பேறுகாலத்தில் இறந்தவர்களுக்கு எழுப்பப்படும் சுமைதாங்கிக் கற்களும் வழிபாட்டுக்கு உரிய வீட்டுத்தெய்வங்களாகவோ, குலதெய்வங்களாகவோ ஆவது உண்டு.

இவ்விருவரிடமிருந்தும் பெற்ற தகவல்கள், இக்கற்களில் உள்ள நாட்டார் தெய்வ உருவாக்கத்தின் தாக்கத்தை உறுதிசெய்தது. இக்கற்கள் குறித்து பெரியவர் பத்ரே கவுடா அவர்கள் கூறும்போது, ‘‘தங்கள் சமூகத்தின் இரு கூட்டத்தாரிடையே இருந்த பகை காரணமாக, ஒரு கூட்டத்தார் மற்றொரு கூட்டத்தாரில் சிலரை அவர்கள் எதிர்பாராதபொழுது குத்திச் சாய்க்கின்றனர். இதனைத் தொடர்ந்து, கொலை செய்யப்பட்டவர்கள் நினைவுக்கு கல்லெழுப்பி அவர்களை ஊரார் வணங்கி வருகின்றனர்’’ என்கிறார். பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த இந்நிகழ்வு குறித்து வழிவழியாகச் சொல்லப்பட்டவற்றை நினைவிலிருந்து மீட்டிச் சொல்கிறார். இக்குழுக்களை தற்பொழுது அடையாளம் காண முடியவில்லை. போலவே, நீண்ட சடைமுடி தரிப்பது யார்? ஒரு குழுவா, சமூகத்தில் குறிப்பிட்ட அந்தஸ்து பெற்றவர்களா என்ற கேள்விகளுக்கு திருப்திகரமான விவரங்கள் இல்லை. இந்நிகழ்வைத் தொடர்ந்து ஊரில் பஞ்சம், மழையின்மை போன்றவற்றை இம்மக்கள் சந்திருக்க வேண்டும்; கொலையுண்டவர்களின் ஆவிகளே காரணம் என்ற அச்சமும் எழுந்திருக்க வேண்டும். இதன்காரணமாக, இவர்களின் ஆவிகளைச் சாந்தப்படுத்தவும், தீமைகள் அண்டாதிருக்கவும் இவர்களை வழிபாடு செய்கின்றனர். 

நாட்டார் மரபில், கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் அவரை வழிபடுவர்; அவரது ஆன்மா அமைதிகொள்ளவும், பிறவகைகளில் தீமை வழங்காதிருக்கவும் இவ்வழிபாடு அமையும். பின்னர், கொலை செய்தவர்களும் அவரை வழிபடுவர். இப்படி வழிபாடு பெறும் தெய்வம்/தெய்வங்கள், படிப்படியாக பிற குழுவினர் சாதியினர், பிற குடும்பத்தினர் ஆகியோரும் வழிபடுவதற்கு உரியதாகும். இதற்கு அந்தத் தெய்வம் பற்றிய நம்பிக்கை, பயம் ஆகியவை முக்கியக் காரணிகளாகும். அத்தெய்வம் பற்றி பரவும் செய்திகள், அதன் நிலைபெறுதலுக்கு காரணமாகும். இதற்கேற்ப, ‘‘இந்நடுகல் வழிபாட்டில் குறும்பர்களோடு, ஒக்கலிக்க சமூகத்தினரும் தவறாது பங்கேற்கின்றனர்’’ என்பது இங்கு பெறப்பட்ட கூடுதல் செய்தி. இது, பலசமூகங்கள் வணங்கும் தெய்வமாக இத்தெய்வங்கள் நிலை பெற்றதைக் காட்டுகிறது. 

தென் தமிழகத்தில் இவ்வாறு உருவாகும் நாட்டார் வகைத் தெய்வங்கள், பெண் தெய்வமாயின் இசக்கி அம்மன் ஆகிறார். ஆண் தெய்வமாயின், மாடன், பாட்டன், சாமி முதலிய பின்னொட்டுகள் கொண்ட பெயர்களுடன் வழிபடப்படுகிறார். தமிழகத்தின் வடபகுதியில் இவ்வகைத் தெய்வங்கள் நடுகல் தெய்வங்களாக வெளிப்படுகின்றன. இவர்களில் சில தனிப்பெயர்களைக் கொண்டுள்ளனர். வேடியப்பன் என்பது பொதுப்பெயராக உள்ளது. நடுகல் பெண் தெய்வங்கள் தனிப்பெயர் கொண்டுள்ளதை அறியமுடியவில்லை. சதி தெய்வங்கள் சூட்டிக்கொள்ளும் பெயர்களான வீராயி, வீரமாத்தி பெயர்களைச் சிலர் குறிப்பிட்டனர். இது இப்பகுதியில் பரவலாக வழக்கிலுள்ள, விரும்பப்படும் பெயர்களாகும். இப்பெயர்கள் பண்புப் பெயர்கள் நிலையில் இருந்து பெண் தெய்வம் என்ற சுட்டுப்பொருளாகி இருப்பதை இவ்விடங்களில் காண்கிறேன். 

நெல்லூர் – (பர்கூர்) கொலையுண்டு நடுகலான தெய்வங்களுக்கு தனிப்பெயர் இல்லை. விஜயநகர கலைப்பாணியில் அமைந்துள்ள இதன் காலத்தை பொ.ஆ. 1500 அளவில் கணிக்கலாம். அதாவது, இக்கல் இன்றைக்கு 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகலாம்.

சடைசாமி 

இவ்விரு சிற்பங்களில் மேலடுக்கில் உள்ளவர்கள் மற்றும் முதல் நடுகல்லில் கீழடுக்கில் கொல்லப்படுபவரின் நீண்ட சடைமுடி தலையலங்காரம் எதன் அடையாளம் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கிறது. ‘‘அந்தியூர், மூலக்கடையில் உள்ள ஒரு கோயிலை சடைசாமி கோயில் என்று அழைக்கிறோம் என்றும் அக்கோயிலின் நடுகல் சிற்பம் இம்மாதரியான நீண்ட சடைமுடி கொண்டவரது உருவமே’’ என்ற தகவலைத் தந்தார் மீனாட்சி. இது, இம்மக்களின் மூதாதையரின் ஒரு உருவம் இவ்வாறு காட்டப்படுகிறது என்பதற்குச் சான்றாக விளங்குகிறது. 

தகடூர்ப் பகுதியில் இம்மாதிரியான நீண்ட சடை அலங்காரம் கொண்டவர்களின் பல கற்களைக் காணமுடிகிறது. இங்கு இவ்வலங்காரம் கொண்டவர்கள் வெவ்வேறான சித்தரிப்புகளில் காட்டப்பட்டுள்ளனர். பாரூரில் மகுடத்தை நெஞ்சில் அணைத்து வாசிப்பவர் போல் ஒருவரும்; நீண்ட தடியை இடது கையிலும் வாளை வலது கையில் கொண்டவராக மற்றொருவரும் உள்ளனர். காரியமங்கலத்தில் உள்ள ஒருவர் சாட்டையை கொண்டவராகவும், மற்றொருவர் இரு கைகளிலும் நீண்ட குச்சி அல்லது மூங்கில்களைக் கொண்டவராகவும், தோளில் புரளும் சாட்டையைக் கொண்டவராகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதை இங்கு குறிப்பிடலாம். 

மகுடம், இம்மக்களின் பண்பாட்டில் தவிர்க்கமுடியாத இசைக்கருவி. மகுடம் பெரும்பான்மையோரால் ‘‘தப்பு’’, ‘‘தப்பட்டை’’ என்ற பெயர்களால் தவறாகவே அடையாளப்படுத்தப்படுகிறது. மகுடம் என்பது மார்போடு அணைத்து இரு கைவிரல்களாலும் தட்டி இசை ஒலிக்கச்செய்யும் கருவியாகும். தப்பு, தப்பட்டை என்பது இரு குச்சிகள் கொண்டு கருவியில் தட்டி இசை எழுப்பும் கருவியாகும். பேய், பிசாசு பிடிக்காதிருக்கவும், நோய் நீங்கவும் சாட்டை அடிக்கும் சடக்கு இம்மக்களால் மேற்கொள்ளப்படுகிறது. விழாக்களின்பொழுது இச்சாட்டையடி சடங்கு நிகழ்த்தப்படுகிறது. குலத்தலைவர்களே சாட்டையை எடுத்து அடிப்பர். இச்சாட்டைகளை வேறு யாரும் தொடுவதில்லை. சாட்டையடிக்க உரிமையுடைவர் மட்டுமே கையாள்வர். இந்த விலக்கு (taboo) நம்பிக்கை எழுதப்படாத சட்டமாக இம்மக்களிடையே உள்ளது. இதனால், இசைக்கருவிகள், சாட்டை போன்ற புனிதப் பொருட்கள் கொண்டவர்கள், அல்லது குலத்தலைவர்கள் இவ்வாறான நீண்ட தலைமுடி அலங்காரத்தில் காட்டப்படுவர் என்ற முடிவுக்கு வர இயலாது. இக்குழுவினரில் ஒரு பிரிவினர் நீண்ட தலையலங்காரம் தரித்தவர்களாக இருந்திருக்க வேண்டும். அவர்களின் மூதாதையர் ஒருவரின் கோயிலே அந்தியூர் மூலக்கடையில் உள்ளதாகும். தகடூர்ப் பகுதியில் காண்படும் கற்கள், அவர்களுள் பலவித பண்பாட்டு அடையாளங்களை விளக்குவதாக அமையும் கற்கள் எனலாம். 

இந்நடுகற்கள் தரும் செய்தி

இந்த இரு நடுகற்களும் ஒரே செய்தியை வழங்குகின்றன. பகை, விரோதம் காரணமாக ஒரு குழுவைச் சார்ந்தவர்கள் (கொண்டை தரித்தவர்கள்) மற்றொரு குழுவைச் சார்ந்தவர்களை (நீண்ட சடை தரித்தவர்கள்) ஆண்-பெண் பாரபட்சம் பார்க்காமல் குத்திச் சாய்க்கின்றனர். முதல் கல்லில் மூவர் சேர்ந்து ஒரு ஆண்-பெண் இணையை குத்திச் சாய்க்கின்றனர். இரண்டாவது கல்லில், ஒருவர் மற்றொரு குழுவைச் சார்ந்த பெண் (?) ஒருவரை குத்திச் சாய்க்கிறார். இவர்களது மரணம், இவர்களது குல மூதாதையரால் ஆசிர்வதிக்கப்படும்விதமான கிலுக்கட்டை இசைத்து வணங்கப்படுகிறது. 

துவக்கத்தில், இக்கல் கொலையுண்டவர்களின் சந்ததிகளாலும், அவர்களது குழுவினராலும் வணங்கப்பட்டது. பின்னர் கொலையுண்டவர்களின் மீதான அச்சத்தால், கொலை செய்தவரின் குழுவினரும் வணங்கத் தலைப்பட்டனர். இக்கல் தெய்வங்களை வணங்குவதால், பஞ்சம், வறட்சி நீங்குகிறது என்ற நம்பிக்கை உருவானது. நாளடைவில், இந்நடுகல் குறும்பர் குடியினர் மட்டுமல்லாது ஒக்கலிக்கர் சமூகமும் வணங்கும் ஊர்த்தெய்வமானது. 

- த. பார்த்திபன் (தொடர்புக்கு: thagadoorparthiban@gmail.com)

]]>
நடுகல், நாட்டார் மரபு, பர்கூர் - நெல்லூர், தகடூர் https://www.dinamani.com/tholliyalmani/special-articles/2018/may/21/பர்கூர்---நெல்லூர்-கொலையுண்டு-தெய்வமானவர்-நடுகற்கள்-2924083.html
2912569 தொல்லியல்மணி சிறப்புக் கட்டுரைகள் வீரவழிபாடும் இசையும்: நடுகல் பண்பாட்டுக்குப் புதிய வெளிச்சம் தரும் புலிக்குத்திப்பட்டான் நடுகல் த. பார்த்திபன் Thursday, May 3, 2018 01:12 PM +0530  

ஆலுக்குறும்பா (=தமிழில்: பால் குறும்பா) என்ற முகநூல் பக்கத்தில், கடந்த 2018 மார்ச் 24-ம் தேதி பதிவேற்றியிருந்த புலிக்குத்திப்பட்டான் நடுகல் பற்றிய குறிப்புகள், வீர வழிபாட்டுக்குப் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுவதாக உள்ளது. இது மூதாதையரை வழிபடும் பண்பாட்டில் இசை பெற்றிருந்த முக்கியத்துவத்தையும், அவ்வழிபாட்டின் நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தும் முதல் சான்றாகவும் விளங்குகிறது. இது குறும்பர் சமூகத்தினருக்கு மட்டும் உரிய பண்பாடா அல்லது பிற சமூகங்களும் இவ்வகை வழிபாட்டு மரபுகளைக் கொண்டிருந்தனவா என்ற முடிவுக்கு வர மேலும் சான்றுகள் தேவை. அதேசமயத்தில், இக்குறிப்பிட்ட சான்று குறும்பர் சமூகத்தினருக்கு உரியது. இன்றைய நிலையிலும் அவர்களது வழிபாட்டில் இருப்பது.

(புலிக்குத்திப்பட்டான் நடுகல் முழுத்தோற்றம் (புகைப்படம் நன்றி: ஆலுக்குறும்பா முகநூல் பக்கம்)

உடனடி கவனத்தை ஈர்த்த இந்நடுகல் குறித்து கடந்த சிலநாட்களாக சில செய்திகளையும், கருத்துப்பதிவுகளையும் காண நேர்ந்தது. குறிப்பாக, வீரன் தேவலோகம் செல்லும் காட்சி; தேவலோகத்துக்கு அழைத்துச்செல்லும் பெண்கள்; காட்சியில் உள்ள அனைவரும் தேவலோகப் பெண்கள் போன்ற சில பதிவுகளை மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது. இப்பதிவுகள் எதுவும் இந்நடுகல்லின் சிற்ப வெளிப்பாடுகளையும், நுணுக்க விவரங்களையும் கருத்தில் கொள்ளவில்லை. ஆகையால், மூதாதையர் வழிபாட்டில் குறும்பர் பண்பாட்டின் பின்னணிகளைக் கண்டடைய வேண்டிய இடம் அடையமுடியாமல் தவறவிடப்பட்டுள்ளது. மேலும், இதில் கல்வெட்டுப்பொறிப்பு இல்லை என்பதால், நடுகல் தெரிவிக்கும் செய்தி மற்றும் காலம் குறித்த விவரங்களை நேரடியாக அறியமுடியாது உள்ளது. இதன் காரணமாக, சிற்ப வெளிப்பாட்டையும், சிற்ப அமைதியைக்கொண்டே நடுகல்லின் உள்ளார்ந்த பொருள் மற்றும் காலம் பற்றிய முடிவுகளுக்கு வரவேண்டி உள்ளது. இப்பின்னணியில், இந்நடுகல்லை விரிவாகவும் நுணுக்கமாகவும் பார்க்கவேண்டி உள்ளது.

புலிக்குத்திப்பட்டான் / விண்ணுலகம் / தேவலோகப் பெண்கள் பொது சிற்பக்காட்சி

புலிக்குத்திப்பட்டான் வகை நடுகற்களின் பொதுவான சிற்பக்காட்சிக்கும், தேவலோகப் பெண்கள், சுவர்க்கம், கைலாயம், சமயச் சின்னங்கள் முதலியவை இடம்பெறும் சிற்பக்காட்சிகளுக்கும், இந்நடுகல்லின் சிற்பக்காட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம்தான் இந்த நடுகல்லை அரிய ஒன்றாக்கியுள்ளது. நடுகல் வழிபாட்டில் இசை பெற்றிருந்த சிறப்பான இடத்தை அறியச்செய்யும் தொல்பொருள் சான்றாகவுள்ள இது, அக்காலப் பண்பாட்டின் நிகழ்வுகளை எழுதிச்செல்கிறது. நடுகல் வழிபாட்டில் புதிய வெளிச்சம் பாய்ச்சி, இலக்கியங்கள் இலக்கணங்கள் வழி அறியப்படாத செய்திகளைப் புலப்படுத்துகிறது.

புலிக்குத்திப்பட்டான் வகை நடுகல்லின் பொது சிற்ப அமைதியாக, கீழ்க்கண்ட ஐந்து வகைகளில் காணலாம்.

சிற்ப அமைதி 1

புலியுடன் வீரன் போரிடும் காட்சி - வீரன் கைகளில் வில் அல்லது வாள், குறுவாள் அல்லது ஈட்டி போன்ற ஆயுதங்கள் கொண்டிருக்கும். பொதுவாக, வீரனின் ஒரு கரம் ஈட்டி அல்லது வில்லை கொண்டிருக்க, மற்றொரு கரம் குறுவாளை உயர்த்தியபடி விலங்கினைத் தாக்கும் வாக்கில் இருக்கும். சமயங்களில், வீரன் குறுவாளை விலங்கின் வாயிலோ, மார்பிலோ, கழுத்திலோ ஆழமாகப் பாய்ச்சிய காட்சியாகவும் சித்தரிக்கப்படும். போலவே, ஈட்டி அல்லது அம்பு விலங்கின் உடலில் தைத்திருக்க, அந்த விலங்கின் முன்னங்கால் அல்லது வாய்ப்பகுதி வீரனை தாக்கிய காட்சி இடம்பெறும். இக்காட்சிகளுடன் மதுக்குடம், மற்றும் மங்களச் சின்னங்கள் காட்டப்படும்.

சிற்ப அமைதி 2

வீரனுடன், மேலே குறிப்பிட்ட காட்சிகளுடன் வீரனின் மனைவி அல்லது மனைவியர், மதுக்குடம் அல்லது பானைகள் சுமந்து வருவது போன்று காட்டப்படுவர். இது அவனது மனைவி/மனைவியர் வீரனுக்கு கல்லெழுப்பி படையல் செய்து வணங்கிய காட்சியைச் சித்தரிப்பதாகும். மதுக்குடம், பானையைச் சுமந்துவரும் பெண்களைச் சதிக்கு ஆட்படுத்திக் கொண்டவர்களாகக் கருதும் போக்கு நிலவுகிறது. சதி முத்திரைகளோ; சின்னங்களோ, சதி குறியீட்டுப் பொருட்களோ காட்டப்படவில்லை எனில், அது சதியாக இருக்க வாய்ப்பில்லை. அது பொது வரையறையும் இல்லை.

சிற்ப அமைதி 3

சதியோடு இணைந்த நடுகல் ஆயின், மேற்கண்ட காட்சிகளோடு ஒரு பெண் சதியைக் குறிப்பிடும் பொருட்களை ஏந்தியும் அல்லது குறிகளை சுட்டும் முத்திரைகளைக் காட்டியும் சித்தரிக்கப்படுவாள்.

சிற்ப அமைதி 4

வீரனுக்குத் துணையாக, வேட்டைக்கு உதவும் விலங்கு குறிப்பாக நாய் காட்சிப்படுத்தப்படும். காட்டு விலங்கு மீது நாய் பாய்வது போன்றோ, அதனை தாக்கி கடித்து இழுப்பது போன்றோ அல்லது வீரனுக்கு அருகில் இருப்பது போன்றோ காட்டப்படும்.

சிற்ப அமைதி 5

வீரன், வீர சுவர்க்கம் அல்லது தேவலோகம் அல்லது சிவலோகம் அல்லது வைகுந்தம் அடைந்தான் என்பதனைச் சுட்டும் விதமாக, ஒன்று அல்லது இரு தேவலோகப் பெண்கள் அல்லது, இந்திரலோகப் பெண்கள் அல்லது தேவதைகள் வீரனை, சதிக்கு உட்பட்ட பெண்ணை அழைத்துச்செல்வது போன்றோ, அந்தரத்தில் நிற்பது போன்றோ, பறந்து செல்வது போன்றே காட்சிப்படுத்தப்படுவர். அந்நிலையில் லிங்கம், நந்தி, நாமம், வேல், சூலம், விஷ்ணு போன்ற சமயச் சின்னங்கள் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டோ இடம் பெறும். இவற்றுடன், சமயங்களில் சூரியன், பிறைசந்திரன் உருவங்களும் இடம் பெறும்.

இக்காட்சிகள், வீரனைச் சுற்றியோ அல்லது அடுக்குக் காட்சியாகவோ அமைக்கப்படும். அடுக்குக்காட்சி எனில், கீழ் அடுக்கில் வீரன் விலங்குடன் போர் புரியும் காட்சியும், வேட்டைக்கு நாய் உதவியிருப்பின் அதன் காட்சியும், சதி பெண்ணும் காட்டப்படுவர். இதற்கு மேலே அமைக்கப்படும் இரண்டாம் அடுக்கில், வீரனை தேவலோகப் பெண்கள் அல்லது தேவதைகள் அழைத்துச்செல்லும் காட்சி இடம் பெறும். இதற்கு மேல் அமையும் மூன்றாம் அடுக்கில் சமயச் சின்னங்கள் இடம் பெறும். இது, வீரன் அவன் சார்ந்த சமயம் அல்லது மேலுலகு சென்று இறைவனடி சேர்ந்தான் என்பதை மறைபொருளாக உணர்த்துவதாக அமையும். இதே வரிசையில் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. குறிப்பாக, இரண்டாம் மூன்றாம் அடுக்குக் காட்சிகள் மாறியும் கூடுதல் விவரங்களுடனும் அமையலாம். சில நடுகற்கள் 5 அடுக்கு வரை சிற்பக் காட்சிகள் விவரிக்கப்பட்டுக் கிடைக்கின்றன. மேலும் கூடுதலான அடுக்குக் கொண்ட கற்களும் அரிதாகக் கிடைத்துவருகின்றன.

மேலே விவரிக்கப்பட்ட சிற்ப அமைதிகள் புலிக்குத்திப்பட்டான் கல்லுக்கு மட்டும் பொருந்துபவை அல்ல. வீரன் எவ்வகையில் மாய்ந்திருந்தாலும், அவன் சார்ந்த சமூகத்தின் நம்பிக்கையின் அடிப்படையில் தேவலோகம், சுவர்க்கம், வைகுந்தம், கைலாயம் சென்றடைந்தான் என்ற காட்சியை விவரிக்கும் எந்த ஒரு நடுகல்லுக்கும் இது பொருந்தும். 

நீலகிரி - குன்னூர் புலிக்குத்திப்பட்டான் கல்

இந்த நடுகல் இருக்கும் இடம் பற்றி அறியமுடியவில்லை. புகைப்படத்தைப் பதிவேற்றிய ஆலுக்குறும்பா, இதன் இடம் நீலகிரி - குன்னூருக்கு அருகில் என்ற விவரத்தை மட்டும் தந்துள்ளனர். குறிப்பான இடம் பற்றி மெளனம் காப்பதாகத் தெரிகிறது. இந்த நடுகல்லில் வீரன் ஒருவன், ஆடு ஒன்று, புலி ஒன்று, இரு பெண்கள் மற்றும் ஆறு ஆண் உருவங்கள் என 11 உருவங்கள் இடம்பெற்றுள்ளன. வீரன், நடுநாயகமாக மிகப் பெரியதாக காட்டப்பட்டுள்ளான். வீரன், புலியின் மார்பில் ஈட்டி போன்ற ஒரு நீண்ட ஆயுதத்தைப் பாய்ச்சியுள்ளான். வீரனின் ஈட்டியின் மேல் பகுதியும் கூர்முனை கொண்டுள்ளது. வீரனின் இடது தொடையில் புலியில் கால் ஆழப் பதிந்துள்ளது. வீரனுக்கு வலதுபுறம் ஆடு ஒன்று காட்டப்பட்டுள்ளது. இம்மூன்று சிற்பங்களும், ஆட்டைத் தாக்கவந்த புலியைத் தாக்கி தானும் மாய்ந்த வீரன் நினைவாக எடுக்கப்பட்ட நடுகல் என்ற செய்தியை வழங்குகிறது. சுற்றிலும் காட்டப்பட்டுள்ள ஆண் பெண் உருவங்கள், திருச் சின்னம், கோயில் பூசைமணி, சங்கு, கிலுக்கட்டை, கிணைப்பறை போன்ற இசைக் கருவிகளைக் கொண்டவர்களாக உள்ளனர். இக்காட்சிகளைக் கொண்டு பார்க்கும்பொழுது, புலியைக் கொன்று தானும் மாய்ந்த வீரனுக்கு அவனது குடும்பத்தினர் அல்லது ஊரார் வழிபாடு செய்யும் நிகழ்வைப் பதிவுசெய்த அரிய நடுகல்லாக இது விளங்குகிறது.

இங்குக் குறிப்பிட்டுள்ள கருவிகளின் வரிசையில் “திருச்சின்னம்” மற்றும் “கிணைப்பறை” குறித்து சில விளக்கங்களைக் கண்ட பிறகு இந்நடுகல்லின் சித்தரிப்புக்கு வருவோம்.

திருச்சின்னம்

திருச்சின்னம் இசைக் கருவி, தமிழர் பண்பாட்டில் கோவில் வழிபாடு, உற்சவ நிகழ்ச்சிகளில் முக்கிய இடம் பெறும் ஒன்றாகும். அரிய வகை இந்த இசைக் கருவி எக்காளம், தாரை போன்ற இசைக் கருவிகளின் வரிசையில் இடம் பெறும் ஒன்றாகும். தோற்றத்தில் எக்காளமோ, தாரையோ என்று மயக்கம் தருவதாகும். “ஓம்…” என்று ஒலி முகிழும் இசைக் கருவியாகவும், கோவில்களில் வாசிக்கப்படும் 18 வகை இசைக் கருவிகளில் ஒன்றாகவும், வழிபாட்டுச் சடங்கோடு தொடர்புடைய ஒரு இசைக் கருவி என்றும் திருச்சின்னம் விளக்கப்பெறும். நுட்பமான இந்த ஊதுகருவி உருவம் அனசு மற்றும் உலவுடன் கூடிய இரண்டு நீளமான பித்தளைக் குழல்களால் ஆனது. இது, குவிந்து கூர்ந்து இருக்கும் அனசுமுகப்பு இரண்டையும் ஒரு சேர வாயில் வைத்து ஊதும் கருவியாகும். மிகுந்த பயிற்சியும் வலுவும் உள்ளவர்கள் மட்டுமே இதனை இசைக்கமுடியும். இறைவன் திருவீதியுலாப் புறப்பாடு, மங்கள ஆரத்தியை அறிவிப்பதற்காக திருச்சின்னம் இசைக்கப்படுவது மரபாகும். மது எடுப்பு, குதிரை எடுப்பு ஊர்வலங்களிலும் இக்கருவி இசைக்கப்படும். “திருச்சீரணம்”, “திருச்சூரணம்” என்ற பெயர்களாலும் இது அழைக்கப்பெறுவது உண்டு. “தாரை”, “தப்பட்டை”, ‘‘நமரி”, ‘‘எக்காளம்” ஆகியவற்றுடன் திருச்சின்னம் சேர்த்து கிராமிய பஞ்ச இசைக் கருவிகள் எனக் குறிக்கப்பெறும். (P. Sambamurthy, Catalogue of Musical Instruments Exhibited in the Government Museum, Chennai, 1998 & வெ. நீலகண்டன், வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள், பிளாக்ஹோல் மீடியா, சென்னை, 2011).

நீலகிரி நடுகல்லில் உள்ள இந்த இசைக்கருவி திருச்சின்னம் என்ற முடிவுக்கு வரும்முன், “ஆயர் குழல்” (Shepherd Flute or cowherd Flute) வகையினமாக இருக்குமோ என ஐயம் கொண்டேன். ஆயர் குழல் ஒன்று சென்னை அரும்பொருட்காட்சியகத்தில் உள்ளது. (P. Sambamurthy, Ibid.,) ஆயர் குழலானது புல்லாங்குழலின் நீளத்தைவிட அளவு சிறுத்தது. ஆனால், குழலின் விட்டத்திலும் தடிமனில் பெரியது. ஊதும் அனசு முகப்பும், காற்று வெளியேறும் உலவு முகப்பும் சம விட்டம் கொண்டவை. ஆனால், இந்நடுகல்லில் உள்ள கருவியில் அனசு முகப்பு சிறுத்தும் உலவு முகப்பு பெருத்தும் உள்ளது. மேலும் புல்லாங்குழல் அல்லது ஆயர் குழல் கருவியை ஒரு குழல் கொண்டு மட்டும்தான் வாசிப்பர். திருச்சின்னம் மட்டுமே இரண்டு கருவிகளை ஒரு சேர வாயில் வைத்து வாசிக்கப்படும் சின்னமாகும். இங்கு இக்கருவி வாசிக்கும் தோற்றத்தில் இல்லை என்றாலும், இரு கருவிகளும் மத்தியில் அவற்றை பிணைக்கும் தாம்புகளும், அதனை அலங்கரிக்கும் குஞ்சங்களும் காட்டப்பட்டுள்ளன. திருச்சின்னம் கருவியோடு நான் பார்க்கும் இரண்டாம் நடுகல் இது. இரண்டையும் ஒப்பிடும்பொழுது, திருச்சின்னமும் பலவகை தடிமன் கொண்ட கருவியாகவும் மரம், உலோகம் ஆகியவை கொண்டும் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன என முடிவுக்கு வரமுடிகிறது.

கிணைப்பறை

இக்கருவியை “சிறுபறை” வகையினமாக முதலில் கருதினேன். ஆனால், திருச்சின்னத்தோடு இணைத்து வாசிக்கும் கருவிகளில் ஒன்றாக கிணைப்பறையைச் சுட்டுவார் மு. அருணாசலம். அதே சமயத்தில், இலக்கியங்களில் சுட்டப்படும் கிணைப்பறையின் உருவம் எப்படி இருக்கும் எனத் தெரியாது என்பார். (தமிழ் இசை இலக்கண வரலாறு, 2009, கடவு பதிப்பகம், சென்னை, ப.164) கிணைப்பறையும் தடாரிப்பறையும் ஒன்றா அல்லது வேறுவேறானதா என கேள்விக்கு, இரு கருவிகளில் இருந்தும் கிடைக்கும் ஒலி ஒன்றாக இருப்பதால் வேற்றுமையினைக் காண முடியவில்லை என்கிறார் மு. வளர்மதி. இவர். தடாரி மற்றும் கிணைப்பறைகளின் வரைபடத்தை அளித்துள்ளார். (பறை இசைக்கருவி – ஓர் ஆய்வு, திருமகள் நிலையம், சென்னை, 1999, பக். 42-47). கிணைப்பறை சிறு குச்சியைக்கொண்டு அடிக்கும் கருவியாகும். நடுகல்லில் இக்கருவியை வாசிப்பதாகச் சித்தரிக்கப்படும் ஆண் உருவம் கையில் சிறு குச்சியை பிடித்திருப்பது கவனிக்கத்தக்கது. பறை இசைக்கருவியை எந்த லாகவத்திலும் பிடித்தும் உடல் பிடிமானத்தில் வைத்தும் அடித்து இசை எழுப்பலாம். இந்த வகையில், அமர்ந்த நிலை வாசிப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ள உருவம், தனது இடது கையில் கருவியை ஏந்தி தன் தொடையை பிடிமானமாகக் கொண்டுள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது.

நீலகிரி புலிகுத்திப்பட்டான் நடுகல் சித்தரிப்புகள்

இந்நடுகல்லில் மையமாக உள்ள வீரன், எளிமையான இடையாடையுடன் கைகளிலும் காலிலும் காப்பு பூட்டியுள்ளான். வட்டமான முகத்தில் நீண்டு தொங்கும் காதுகளில் வட்டக் குண்டலமும் (விருத்த குண்டலம்) மார்பில் சவடி போன்ற தட்டையான ஆபரணமும் அலங்கரிக்கிறது. தலையைச் சுற்றி வட்டமாகவும், வலது புற வளைவும் முடிவில் குண்டுமுடிச்சும் கொண்ட தலைப்பாகை அணிந்துள்ளான். இடையில் இடைவாள் உறையோடு காட்டப்பட்டுள்ளது. வீரன் இடதுகாலை மடக்கி இடதுபுறமாக சாய்ந்து தன் முழு உடல்வலுவோடு ஈட்டியை புலியின் மார்பில் மேலிருந்து கீழாகச் சொருகுவதாக காட்டப்பட்டுள்ளான்.

(வீரனின் வலது புறக்காட்சி)

வீரனின் வலது புறக்காட்சியில், இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண் காட்டப்பட்டுள்ளனர். வலது புறத்தில் உள்ள முதல் ஆண் திருச்சின்னம் என்ற இசைக்கருவியை பிடித்தபடி உள்ளான். வலது புற நடுவில் உள்ள ஆண், வலது கரத்தில் பூசைமணியூம், இடது கரத்தில் சங்கும் ஏந்தியுள்ளான். மூன்றாவதாக உள்ள பெண், வலது கரத்தில் கிலுக்கடையும் பூசைமணியும், இடது கரத்தில் கிலுக்கட்டையும் பிடித்தபடி காட்டப்பட்டுள்ளாள்.

(வீரனுக்கு வலது புற மேற்புற காட்சிகள்)

வீரனுக்கு மேலே மூன்று ஆண் உருவங்கள் இடம் பெற்றுள்ளன. நடுவில் உள்ள ஆண் சம்மணம் இட்டு அமர்ந்துள்ளான். இச்சித்தரிப்பு, தலைவன் அல்லது குடும்பத்தின் மூத்த உறுப்பினர் என்ற நிலையினைச் சுட்டுவதாக உள்ளது. பக்கத்துக்கு ஒருவராக ஒரு காலை மடக்கியும், ஒரு காலை தொங்கவிட்டும் உள்ளவர்களாக இருவர் காட்டப்படுள்ளனர். நடுவில் உள்ளவர் கிணைப்பறை என்ற சிறிய வகை பறைக்கருவியை இடது வலதுகரத்தில் ஏந்தியும், அதை இசைக்கும் சிறு குச்சியை வலதுகரத்தில் பிடித்தவாறும் காட்டப்படுள்ளார். இருபுறமும் உள்ளவர்கள், ஒரு கையில் கிலுக்கட்டையை உயர்த்திப்பிடித்து இசைப்பவர்களாகக் சுட்டப்பட்டுள்ளனர். மற்றொரு கரத்தில் இன்னதென்று அறியமுடியாத இசைக்கருவியைக் கொண்டுள்ளனர்.

வீரனின் வலது புறத்தில் ஆண் உருவம் ஒன்றும் பெண் உருவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளன. இவ்விரு உருவங்களின் கரங்களும், இன்னதென்று விளங்கிக்கொள்ள முடியாத பொருட்களைக் கொண்டுள்ளன. அவை சிறியதாகவும், பிற சித்தரிப்புகளில் மறைந்துள்ளதாகத் தோன்றுகிறது. இவையும் இசைக் கருவிகளாக இருக்க வாய்ப்பு உண்டு. எல்லா ஆண், பெண் உருவங்களும் தலைப்பாகை அணிந்துள்ளனர். பெண் உருவங்கள் இரண்டிலும் கொண்டை பெரியதாகக் காட்டப்பட்டுள்ளது. நீண்டு தொங்கும் காதுகளில் வட்டக் குண்டலங்கள் பூட்டப்பட்டுள்ளன. எல்லா உருவங்களின் உடலசைவும், அவரவர் இசையின் இலயத்தோடு இணைந்ததாக உள்ளது.

இச்சிற்பத்தில் தேவமாதர்களோ, தேவலோகமோ, சுவர்க்கமோ, வைகுந்தமே, கைலாயமோ, மதச் சின்னங்களோ, இறையுருக்களோ, இறையுருக்களின் குறியீடுகளோ என்று குறிப்பிடும்படி ஏதுவும் இடம் பெறவில்லை. ஆகையால், முகநூலில் பதிவான வீரன் தேவலோகம் செல்லும் காட்சி, தேவதைப் பெண்கள் போன்ற செய்திகளுக்குப் போதிய சான்று இச்சிற்பங்களின் வெளிப்பாட்டில் இல்லை.

காலம்

சிற்பங்களின் உருவ அமைதியும், சிறிதே பருத்த உடல்வாகும், அணிமணிகளின் அலங்காரமும், இதனை 13-ஆம் நூற்றாண்டுக்கு உரியதாகவும், வட்டமுகமும் தலைப்பாகை அலங்காரமும் பேசளர்களின் கலைநயத்தின் சாயலை ஏற்றுக்கொண்டுள்ளன எனக் கருத இடமளிக்கின்றன.

நடுகல் காட்சிகளின் பொருள்

ஆடுகளைத் தாக்க வந்த புலியைக் கொன்று தானும் வீழ்ந்த வீரனை, சுற்றமும் ஊராரும் பல்வகை இசைக்கருவிகள் முழக்கி வழிபடுகின்றனர்.

(அதே நடுகல், வண்ணம் மாற்றப்பட்டது. இசைக்கருவிகள் நன்கு துலக்கமாகின்றன).

- த. பார்த்திபன்

(தொடர்புக்கு - thagadoorparthiban@gmail.com)

]]>
https://www.dinamani.com/tholliyalmani/special-articles/2018/may/03/வீரவழிபாடும்-இசையும்-நடுகல்-பண்பாட்டுக்குப்-புதிய-வெளிச்சம்-தரும்-புலிக்குத்திப்பட்டான்-நடுகல்-2912569.html