Dinamani - தமிழ்மணி - https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3394894 வார இதழ்கள் தமிழ்மணி பழமொழி நானூறு முன்றுறையரையனார் DIN DIN Sunday, April 5, 2020 01:07 PM +0530 பகைவரிடத்தில் நட்பு வேண்டாம்!

தமரல் லவரைத் தலையளித்தக் கண்ணும் 
அமராக் குறிப்பவர்க் காகாதே தோன்றும் 
சுவர்நிலம் செய்தமையக் கூட்டியக் கண்ணும்
உவர்நிலம் உட்கொதிக்கு மாறு. (பாடல்-144)

சுவராகுமாறு மண்ணினைப் பிசைந்து பொருந்துமாறு சேர்த்த விடத்தும், உவர்மண் உள்ளே கொதிப்புண்டு உதிர்ந்துவிடும். (அதுபோல), தமக்கு உறவல்லாத பகைவரை தலையளி செய்தவிடத்தும் அவர்க்கு அது நன்மையாகத் தோன்றாது. விரும்பாத குறிப்பாகவே தோன்றும். 

(க-து.) பகைவரை நட்பாகக் கோடலரிது என்றது இது. "சுவர் நிலம் செய்தமையக் கூட்டியக்கண்ணும் உவர் நிலம் உட்கொதிக்கு மாறு' என்பது பழமொழி.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/5/w600X390/pn.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/apr/05/பழமொழி-நானூறு-முன்றுறையரையனார்-3394894.html
3394893 வார இதழ்கள் தமிழ்மணி இந்த வாரம் கலாரசிகன் Sunday, April 5, 2020 01:03 PM +0530 "சிலம்பொலி' செல்லப்பனார் மறைந்து ஓராண்டு கடந்துவிட்டது. இப்போதும் ஏதாவது இலக்கிய நிகழ்வுக்குப் போனால் முதல் வரிசையில் அவர் அமர்ந்திருப்பது போன்ற பிரமை தோன்றாமல் இல்லை. அவர் வழங்கிய கடைசி  அணிந்துரை, "இந்த வாரம்' தொகுப்புக்கு வழங்கப்பட்டதாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். என்னைப் பார்க்கும் போதெல்லாம், "இந்த வாரம்' எப்போது தொகுப்பாக வெளிவரும் என்று அவர் கேட்காமல் இருக்கமாட்டார்.

உலகில் எத்தனையோ பேர் பிறக்கிறார்கள். பெயரும், புகழுமாக வாழ்ந்து மறைகிறார்கள். அவர்களது காலத்துக்குப் பிறகு குடும்ப உறவுகளேகூட அவர்களை நினைப்பார்களா என்பது சந்தேகம்தான். மறைந்த பிறகு, குடும்ப உறவுகளைக் கடந்து மற்றவர்களாலும் ஒருவர் நினைவுகூரப்படுகிறார் என்றால், அவர்கள் மட்டும்தான் வள்ளுவர் மொழியில் சொல்வதாக இருந்தால் "தக்கார்'. சிலம்பொலியாரும் அந்தப் பட்டியலில் சேர்கிறார். அகவை 90 கடந்த நிறை வாழ்க்கை  வாழ்ந்து, மறைந்து, இப்போதும் நம் நினைவில் உலவுகிறார்!

                                                                     *****

கல்வெட்டு ஆராய்ச்சியாளரும், வரலாற்றுப் பேராசிரியருமான தன் தந்தை சி.கோவிந்தராசனார் குறித்து முனைவர் சி.கோ.தெய்வநாயகம் எழுதியிருக்கும் புத்தகம் கல்வெட்டாய்வுப் பேரறிஞரின் பெரும் தமிழ்ப் பணிகளின் சாதனைகளைப் பதிவு செய்திருக்கிறது.  

கரந்தைத் தமிழ்ச்சங்கக் கல்லூரியில் தொடங்கிய பெரியவர் சி.கோ.வின் தமிழ்த்தேடல், நமக்கு எத்தனை எத்தனையோ வரலாற்றுச் சான்றுகள் கிடைக்க வழிகோலி இருக்கிறது. தமிழகக் கல்வெட்டுகளைப் படித்துப் படியெடுப்பதற்கும், பொருள்  உணர்வதற்கும் தனிப்பயிற்சி வேண்டும். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பெரியவர் சி.கோ. ஆய்வுப் பணியை மேற்கொண்டிருந்தபோது, அதற்கு உதவும் வகையில் உருவாக்கியதுதான் "கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி'.

கல்வெட்டு ஆராய்ச்சி மட்டுமல்லாமல் சிற்பக்கலை, கட்டடக்கலை, நாட்டியக்கலை, நாடகக்கலை, ஜோதிடக்கலை எல்லாவற்றுக்கும் மேலாக சித்த மருத்துவக் கலையிலும் அவர் தேர்ச்சி பெற்றிருந்தார் என்பதைத் தெரிந்து கொள்ளும்போது, வியப்பு மேலிடுகிறது! அதைவிட,  அவரது "குடந்தை இளைஞர் நாடக சபா'வின் நாடகமொன்றில் எம்.ஜி.ஆர். நடித்திருக்கிறார் என்கிற செய்தி, இந்தப் புத்தகத்தைப் படித்தபோதுதான் தெரியவந்தது.

தமிழக வரலாற்றை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்கள் செப்பேடுகளாகவும், கல்வெட்டுகளாகவும், சிற்ப ஓவியங்களாகவும், புதைபொருளாகவும்,  சுவடிகளாகவும் பல்கிப் பரந்து கிடக்கின்றன. அவற்றைக் கண்டறிந்து ஆய்வு செய்து தமிழக வரலாற்றை முறைப்படுத்த உதவின பெரியவர் சி.கோ.வின் ஆய்வுகள். 

கடையேழு வள்ளல்கள் வெறும் கற்பனை மாந்தரல்லர், வரலாற்று நாயகர்கள் என்று உறுதிப்படுத்தியவர் அவர்தான். பாரி வாழ்ந்த பறம்பு மலையையும், கொல்லிமலைப் பகுதியை ஆண்ட வல்வில் ஓரியின் சிற்பத்தையும் அடையாளம் காட்டியவர் அவர்தான்.

சேர, சோழ, பாண்டியர்களின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்திருக்கும் சிலப்பதிகாரக் காப்பியத்தின் நாயகி கண்ணகியின் வாழ்க்கை வரலாற்றுச் சான்றுகளைத் தேடித்தந்தவர் பேராசிரியர் சி.கோ.மங்களாதேவி கோயில் என்று அறியப்படும் கண்ணகி கோட்டத்தைத் தேடிக் கண்டுபிடித்து அடையாளம் காட்டியதுதான் 96 வயது நிறை வாழ்வு வாழ்ந்த பெரியவரின் மிகப்பெரிய தமிழ்த் தொண்டு. 

நான் பகிர்ந்து கொண்டிருப்பது ஒரு சில குறிப்புகள்தான். முனைவர் சி.கோ.தெய்வநாயகம்  எழுதி, தொகுத்து வெளியிட்டிருக்கும் "சி.கோவிந்தராசனார் 96' என்கிற புத்தகம் அந்த மாமனிதரின் அரும் பெரும் சாதனைகள் அனைத்தையும் எடுத்தியம்புகிறது. 

96 வயது நிறைவாழ்வு வாழ்ந்த பெரியவர் சி.கோவிந்தராசனார், சித்தர் வழியில் தாமே தமது மூச்சுக்கலைத் திறத்தால் அடங்கி நிறைவுற்றார் என்பதை அறியும்போது மெய் சிலிர்க்கிறது. முனைவர் சி.கோ.தெய்வநாயகத்தை நேரில் சந்திக்க வேண்டும் என்கிற எனது ஆவல், இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு மேலும் அதிகரித்திருக்கிறது.

*****

திருவள்ளுவர், கம்பர், மகாகவி பாரதியார் குறித்த எந்தவொரு தகவலோ, புத்தகமோ தனக்குக் கிடைத்தால் அதை உடனே எனக்கு அனுப்பித் தந்துவிடுவதை நண்பர் முல்லைப் பதிப்பகம் பழநி வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். அதற்காக அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
சமீபத்தில் அவர் எனக்கு அனுப்பித் தந்திருக்கும் புத்தகம் அவருடைய தந்தை "பதிப்புச் செம்மல்' முல்லை முத்தையா தொகுத்த "பாரதியார் பெருமை' என்கிற புத்தகம். 1956}இல் தொகுத்து வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம் மறுபதிப்பு கண்டிருக்கிறது. பாரதியார் குறித்துக் கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த அறிஞர் பெருமக்கள் கூறியிருக்கும் கருத்துகளும், கட்டுரைகளும், கவிதைகளும் தேர்ந்தெடுத்துத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
மகாகவி பாரதியாரால் "தம்பி' என்று வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட பரலி சு. நெல்லையப்பர் வழங்கியிருக்கும் அணிந்துரையைவிட, இந்தத் தொகுப்பு குறித்து சிறப்பாக எடுத்தியம்பிவிட முடியாது. ""இந்தக் கதம்பம் தற்கால நாகரிக மாதர்கள் பெரிதும் விரும்பும் கனகாம்பரம், நீலாம்பரம், டிசம்பர் பூப்போன்ற பன்னிற மலர்கள் அடங்கிய மணமற்ற கதம்பம் அல்ல. முல்லை முத்தையா தொகுத்துள்ள இந்தக் கதம்பத்தில் மல்லிகை, முல்லை, ரோஜா மலர்களின் மணம் வீசுகிறது'' என்பது பரலியாரின் பார்வை.
பாரதியாரின் வாழ்க்கை வரலாறு, அவரது வாழ்க்கையில் நடந்த சில சுவையான சம்பவங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து, திரு.வி.க.வில் தொடங்கி 40 பிரபலங்களின் பாரதியார் குறித்த பதிவுகள் இந்தத் தொகுப்பில் இடம்பெறுகின்றன. "பாரதி, யார்?' என்று தெரிந்து கொள்வதற்கு இதைவிடச் சுருக்கமான, சிறப்பான தொகுப்பு இருந்துவிட முடியாது.
"பாரதி - காலமும் கருத்தும்' அறிஞர்களுக்கு என்றால், "பாரதியார் பெருமை' பாமரனுக்கு மகாகவி பாரதியைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

                                                                      *****

தீநுண்மி (கரோனா) நோய்த் தொற்று வந்தாலும் வந்தது நமது கவிஞர்களின் கற்பனை காட்டாற்று வெள்ளமாகப் பிரவாகிக்கத் தொடங்கிவிட்டது. அதிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு, தீநுண்மி நோய்த் தொற்று பரவும் வேகத்தைவிட, அதிவேகமாகவும், அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிடப் பல மடங்கு அதிகமாகவும் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீநுண்மி நோய்த் தொற்று சார்ந்த கவிதைகள் வீறுகொண்டு எழுகின்றன. ரசிக்க வைத்த இந்தவாரப் பதிவு  பாரதி பத்மாவதியின் கவிதை! 
புத்தம் புதியதாய்
ஓர் உலகம்
செதுக்கிக் கொண்டிருக்கிறார்
கடவுள்
கொரோனா என்கிற
உளியால்!

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/5/w600X390/wkr.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/apr/05/22-3394893.html
3394890 வார இதழ்கள் தமிழ்மணி கன்னைய நாயுடு உரைப் பதிப்பு!  Sunday, April 5, 2020 12:59 PM +0530
இலக்கியங்கள் பலவற்றுள் முதன்மையானதாகவும் தலைமையானதாகவும் போற்றப்படுவது ஜெயங்கொண்டாரால் இயற்றப்பெற்ற கலிங்கத்துப்பரணி! இந்நூலுக்கு ஆ.வீ.கன்னையநாயுடு எழுதிய முதல் உரைப்பதிப்பைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

ஆ.வீ.கன்னைய நாயுடு கலிங்கத்துப்பரணியை முதன்முதலாகப் பயிலத் தொடங்கிய காலத்தே அதற்கோர் உரை எழுத வேண்டுமெனக் கருதியிருக்கிறார். இப்பணியை முடிக்கக் கருதி கலிங்கத்துப்பரணியின் பழைய பதிப்பு ஒன்றைப் பலமுறை படித்து, வேண்டிய இடங்களில் அவருக்குத் தோன்றிய பிழைகளைத் திருத்தம் செய்திருக்கிறார்.

கோபாலையர் பதிப்பித்த நூலையும், வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார் பதிப்பித்த நூலையும் ஒப்புநோக்கப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். சென்னை அரசாங்கத்துப் புத்தகச் சாலைக்குச் (ஓரியன்டல் லைப்ரரி) சென்று அங்குள்ள பழைய ஏட்டுப்பிரதி ஒன்றையும், கையெழுத்துப் பிரதி ஒன்றையும் பார்த்திருக்கிறார். அவற்றில் சாஸ்திரியார் பதிப்பு பெரும்பாலும் ஏட்டுப் பிரதியையும், கோபாலையர் பதிப்புப் பெரும்பாலும் கையெழுத்துப் பிரதியையும் ஒத்திருந்தனவாம். 

""ஏட்டுப்பிரதியைவிடக் கையெழுத்துப் பிரதியே பெரிதும் திருத்த முற்றிருந்தது. கையெழுத்துப் பிரதியில் வேறு சில செய்யுட்களும் காணப்பட்டன. அவை திருத்த முடியாவண்ணம் எழுத்துப் பிழைகள் மலிந்து சீருந்தளையுஞ் சிதைந்து கிடந்தமையால் அவைகளை விலக்கலானேன்'' என்று அவரே முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

வித்துவான் கிருஷ்ணசாமி முதலியார் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்குப் பாடமாக வைத்திருந்த இராசபாரம்பரியம், அவதாரம் என்னும் பகுதிக்கு எழுதிய உரையும்; மு.இராகவையங்கார் எழுதிய கலிங்கத்துப்பரணியாராய்ச்சி, ஆராய்ச்சித் தொகுதி என்னும் நூல்களும் நாயுடுவுக்குப் பேருதவியாய் இருந்திருக்கின்றன.

மேலும், து.கோபிநாதராவ் எழுதிய சோழவம்ச சரித்திரம்,  எல்.சீனிவாச ஐயர் எழுதிய முதல் குலோத்துங்கன், ராபர்ட் சீவல் திரட்டி எழுதிய தென்னிந்தியா கல்வெட்டுச் சரித்திரங்கள்,  டி.வி.சதாசிவபண்டாரத்தார் எழுதிய குலோத்துங்க சோழன் ஆகிய  நூல்கள் இவரது உரைக்கும், உரையில் இடம்பெற்றிருக்கும் வரலாற்றுக் குறிப்புகளுக்கும் பெரிதும் உதவியதாக நன்றி கூறியுள்ளார்.

ஜெயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணி மூலமும், சென்னைப் பச்சையப்பன் உயர்தரக் கல்விச்சாலை முன்னைத் தலைமைத் தமிழ்ப் புலவராகிய ஆ.வீ.கன்னைய நாயுடு இயற்றிய உரையும் என்னும் பெயரோடு, சென்னை சூளை - ஸ்ரீபாரதி அச்சகத்தில் இந்நூலின் நான்காம் பதிப்பு (மன்மத வருடம் ஆவணி மாதம்) 1955-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது.   அப்போது அந்நூலின் விலை ஐந்து ரூபாய். இதற்கு முன்பு 1941,1944, 1949 ஆகிய ஆண்டுகளில் மூன்று பதிப்புகள் வெளிவந்துள்ளன. 

மிகச்சிறந்த தமிழறிஞர்கள் பலர் வழங்கிய மதிப்புரைகள் இந்நூலுக்குப் பெருமை சேர்க்கின்றன. தினமணி (22.10.1950), சுதேச மித்திரன் (23.10.1950), தி இந்து (07.01.1951) ஆகிய நாளிதழ்களில் இந்நூல் பற்றிய மதிப்புரைகள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இலக்கணம், இலக்கியம், உரைகள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள் என்று நூற்றிப்பதினாறு (116) நூல்களைக் கன்னையநாயுடு இவ்வுரைக்கு மேற்கோள் நூல்களாகப் பயன்படுத்தியுள்ளதால், இதை  "உரைநூல்' என்பதைவிட,  "ஒப்பீட்டு உரைநூல்' என்றே சொல்லலாம்! 
-முனைவர் அ.சிவபெருமான்

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/5/w600X390/tm8.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/apr/05/கன்னைய-நாயுடு-உரைப்-பதிப்பு-3394890.html
3394891 வார இதழ்கள் தமிழ்மணி புறம்தள்ளியதால் புலம்புகிறோம்! -மணிவாசகப்பிரியா DIN Sunday, April 5, 2020 12:43 PM +0530 உலகிலுள்ள மக்கள் அனைவரும் இன்று   தீநுண்மி (கரோனா) நோய்த் தொற்று மரண பயத்தில் உறைந்திருக்கின்றனர். ஆபத்துக்கு உதவாத ஆங்கில மருத்துவத்தை விடுத்து, தமிழ் மருத்துவத்தை நாடிச் செல்கின்றனர்.

ஆரோக்கிய வாழ்வுக்கும், நோயைக் குணப்படுத்தவும் இன்று நம் தமிழர் மரபுகளையும், பழக்க வழக்கங்களையும் மீண்டும் (வேப்பிலை, மஞ்சள், எலுமிச்சை, துளசி) பின்பற்றத் தொடங்கியிருக்கின்றனர். 

"முன்னோர் மொழிப்பொருளே அவர்
மொழியும் பொன்னே போல் போற்றுவோம்'

என்கிற நன்னூலாசிரியர் பவணந்தியாரின் மொழியைப் போற்றிய நம் பழந்தமிழ்ப் புலவர்கள் தங்கள் அனுபவங்களைப் பாடல்களாக இயற்றினர்.

மக்களின் ஆரோக்கிய வாழ்க்கையில் கொள்ள வேண்டியதையும், தள்ள வேண்டியதையும் நீதிநூல்களாகப் படைத்தனர். அவற்றையெல்லாம் நாம் புறம்தள்ளிய காரணத்தால்தான் இன்றைக்கு மரண பயத்தில் புலம்பிக் கொண்டிருக்கிறோம்.

தமிழிலுள்ள தொகை இலக்கிய நூல்களுள் ஒன்று பதினெண்கீழ்க்கணக்கு. வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் பெரும் புலவர் இயற்றிய "ஆசாரக்கோவை' என்ற நீதி நூல் இத்தொகை நூல்களுள் ஒன்று. ஆசாரங்கள் பலவற்றைக்கூறி, இவற்றைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் ஆன்றோர் மெச்சும் நல்வாழ்வு வாழ்வதுடன், நோயற்ற வாழ்வும் வாழலாம் என்றும் கூறினார்.   

இன்று உலகெங்கிலும், "அடிக்கடி கைகளைத் தூய்மை செய்யுங்கள், கை குலுக்காமல் கை கூப்பி வணங்குங்கள், கண்ட கண்ட இடத்தில் எச்சில் துப்பாதீர்கள்,  தரையில் அமர்ந்தே உணவு உண்ணுங்கள், உடலையும், உடைகளையும்  தூய்மையாக வைத்திருங்கள், இருமும்போதும், தும்மும்போதும் மூக்கையும் வாயையும் பொத்திக் கொள்ளுங்கள், மலஜலம் கழித்த பின் கை, கால்களைத் தூய்மைப்படுத்துங்கள், எச்சில் படுத்திய பொருளைத் தீண்டாதீர்கள்' என்பன சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால், இவற்றை பல்லாண்டுகளுக்கு முன்பே கூறி எச்சரித்தவர் புலவர் பெருவாயின் முள்ளியார். 

மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையான, இன்றியமையாத ஆசாரங்களை (ஒழுக்கங்களை) இந்நீதி நூல் சிறப்புப் பாயிரம் நீங்கலாக 100 பாடல்களில் எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு பாடலிலும், மக்கள் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கத்தை எடுத்துரைக்கிறது. அகத்தூய்மை அளிக்கும் அறங்களோடு, உடல் நலம் பேணும் புறத்தூய்மையையும் அதிகம் வலியுறுத்தியுள்ளார் புலவர். இந்நூல் வடமொழி "ஸ்மிருதி' கருத்துகளைப் பின்பற்றி எழுந்தது என்பது சிறப்புப் பாயிரம் மூலம் அறிய முடிகிறது.  

"ஆசார வித்து'க்கான முதல் செய்யுளில், நன்றி மறவாமை, பொறுமை, இன்சொல், பிற உயிர்களைத் துன்புறுத்தாமை, கல்வி, ஒப்புரவு அறிதல், அறிவுடைமை, நல்ல இயல்புள்ளவர்கள் நட்பு இவை எட்டும் அறிஞர்களால் சொல்லப்பட்ட ஒழுக்கங்களாகும் (பா.1) என்கிறார் புலவர்.

எச்சிலுடன் தீண்டத்தகாதவை: 
"எச்சிலார் தீண்டார் - பசு, பார்ப்பார், தீ, தேவர்,
உச்சந் தலையோடு இவை' என்ப; யாவரும்
திட்பத்தால் தீண்டாப் பொருள். (5)

பசு, பார்ப்பார், தீ, தேவர், உச்சந்தலை ஆகியவற்றை எச்சிலையுடையார் எவரும் தீண்ட மாட்டார் என்று கூறுவதுடன்; எச்சிலுடன் செய்யக் கூடாதவையாக, (பா.8) "இந்நான்கு எச்சிலையும் கடைப்பிடித்து ஒன்றையும் ஒழுகாதவர், வாயால் எதையும் சொல்லார், கண்துயிலார், எப்போதும் அறிவுடையவராக இருப்பர் என்றும்;  பழைமையோர் கண்ட முறைமையைக் கூறுமிடத்து,

"உடுத்து அலால் நீராடார்; ஒன்றுடுத்து உண்ணார்;
உடுத்த ஆடை நீருள் பிழியார்; விழுத்தக்கார்
ஒன்று உடுத்து என்றும் அவைபுகார்; } என்பதே
முந்தையோர் கண்ட முறை' (11)

நீராடும்போது ஓர் ஆடையுடன் நீராடக் கூடாது; உண்ணும் போது இரண்டு ஆடையும் அணியாமல் இருக்கக்கூடாது. நீரில் ஆடையைப் பிழியக்கூடாது; ஓர் ஆடையை உடுத்தி அவையின்கண் செல்லக்கூடாது என்கிறார்.

தவிர்க்க வேண்டியனவற்றைக் கூறும்போது (12),  தலையில் தேய்த்த எண்ணெயினால் யாதொரு உறுப்பையும் தீண்டக்கூடாது. பிறர் உடுத்திய ஆடையையும், பிறர் தொட்ட செருப்பையும் அணிந்துகொள்ளக் கூடாது என்றும்;  "ஆராய்ந்த அறிவுடையார் நீராடும்பொழுது நீந்தமாட்டார், எச்சிலை உமிழ மாட்டார், அமுங்கியிருக்க மாட்டார், விளையாட மாட்டார், எண்ணெய் தேய்த்துக் கொள்ளாமல் கழுத்தளவு அமிழ்ந்து குளிக்க மாட்டார்' என நீராடும் முறையையும் (14)  எடுத்துரைக்கிறார். உணவு உண்ணும் முறைமையைக் கூறும்போது, 

"நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலம்செய்து,
உண்டாரே உண்டார் எனப்படுவார்; அல்லாதார்
உண்டார்போல் வாய்பூசிச் செல்வர்; அது எடுத்துக்
கொண்டார் அரக்கர், குறித்து' (18)

நீராடி, காலைக் கழுவி, வாய் துடைத்து, உண் கலத்தை சுற்றி, நீரிரைத்து உண்பவரே உண்பார். இப்படிச் செய்யாமல் உண்டாரைப் போல் வாயை மட்டும் கழுவிப் போவார் ஊனை அரக்கர் எடுத்துக் கொள்வார் என்றும்;  கால் 
கழுவிய பின் செய்ய வேண்டியவையாக, "கால் கழுவின ஈரம் உலர்வதற்கு முன்னே உணவு உண்ண வேண்டும். கால் ஈரம் உலர்ந்த பிறகே படுக்கைக்குச் செல்ல வேண்டும். இதுவே அறிவாளர்களின் கொள்கை (19) என்கிறார்.

ஒருவர் உண்ணும்போது கிழக்கு திசையில் அமர்ந்து, தூங்காமல், அசையாமல், வேறொன்றினையும் பார்க்காமல், பேசாமல், உண்கின்ற உணவைக் கையாலெடுத்து சிந்தாமல் நன்றாக உண்ண வேண்டும் (20) என்று உண்ணும் முறையையும்;  படுத்தோ, நின்றோ, வெளியிடத்தில் நின்றோ உண்ணல் ஆகாது. விரும்பி மிகுதியாக உண்ணலும் ஆகாது. கட்டில் மேலிருந்து உண்ணுதல் கூடாது (23) என்றும்; உண்டபின் செய்ய வேண்டியவையாக, வாயை நன்றாகக் கொப்புளித்து, நன்றாகத் துடைத்து, முக்குடி  குடித்து, முகத்திலுள்ள உறுப்புகளை மந்திரம் சொல்லி வாய் துடைத்தல் பெரியோர் அறிந்துரைத்த ஒழுக்கங்களாகும் (27) என்கிறார்.

இவை தவிர, நீர் குடிக்கும் முறை (28), உறங்கும் முறை (30), மலம், சிறுநீர் கழிக்கக்கூடாத இடங்கள்(32),  மலம் சிறுநீர் கழிக்கும் முறைமை (33, 34),  வாய் அலம்ப ஆகாத இடங்கள் (35),  செய்யக் கூடியவையும் செய்யக் கூடாதவையும் (41), வீட்டைப் பேணும் முறைமை (46), நடை, உடை முதலியவற்றைத் தக்கபடி அமைத்தல் (49), தம் உடல் ஒளி விரும்புபவர் செய்யத்தக்கவை (51),  நோய் வேண்டாதவர் செய்யக்கூடாதவை (57), பெரியோர் போல் வாழ்வோம் என எண்ணுபவர் செய்கைகள் (88) என மனிதனின் செம்மையான வாழ்வுக்கும், நோயற்ற வாழ்வுக்கும் தேவையானவற்றை அறிவுறுத்தியுள்ளார்.

இதன் சிறப்புப் பாயிரத்தில், "முப்புறங்களையும் அழித்த சிவபெருமானின் திருவடிகளை வணங்கி, ஆரியரிடம் தான் அறிந்த ஆசாரங்களை யாவரும் அறிய "ஆசாரக்கோவை' என்ற இந்நூலை திருவாயில் எனப் போற்றப்படும் கயத்தூர் அருகில் பெருவாயின் என்ற ஊரில் வாழும் முள்ளியார் தொகுத்துக் கொடுத்தான்' என்கிறார்.

தமிழர்களே... தமிழர்களின் பழந்தமிழ்ப் பொக்கிஷங்களைப் பாதுகாத்து, படித்துப் பயன்படுத்த மறந்த காரணத்தினால்தான் இன்று கண்ணுக்குத் தெரியாத கிருமிகளுக்கெல்லாம் பயந்து பயந்து வாழ வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

இனியாவது "ஆசாரக் கோவை' வழி தமிழ் நீதி நூல்களையும் அற நூல்களையும் புறம் தள்ளாமல் வாழப் பழகுவோம்; நோயற்ற வாழ்வு பெறுவோம்!  நம் உள்ளங்கையில் தமிழ்க் கனியிருக்க, இனி ஆங்கிலக் காய் கவர வேண்டாம்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/5/w600X390/tm1.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/apr/05/புறம்தள்ளியதால்-புலம்புகிறோம்-3394891.html
3394889 வார இதழ்கள் தமிழ்மணி ஈட்டவும் ஈயவுமான வள்ளல்! -தமிழாகரர் தெ. முருகசாமி Sunday, April 5, 2020 12:36 PM +0530
காரைக்குடி என்றதும் வள்ளல் அழகப்பர் பெயரே யாவர்க்கும் முந்தும். அந்த அளவிற்குக் கொடைப்புகழ் பெற்ற அவரைப் பலர் பலவகையாகப் பாராட்டினாலும் காரைக்குடி பொற்கிழிக்கவிஞர்அரு.சோமசுந்தரம்  "ஈட்டவும் ஈயவுமான வள்ளல்' என நாணயத்தின் இருபக்கம் போல் பாராட்டிய பாராட்டுக்கு மேலானதொரு பாராட்டு இல்லை.

சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.ஏ. பட்டம் பெற்ற அழகப்பர் லண்டன் சென்று பாரிஸ்டர் என்னும் வழக்குரைஞர் கல்வி பயிலத் தொடங்கினார். சட்டக்கல்வி பயிலும் காலத்திலேயே பொருள் ஈட்டும் முயற்சியாக லண்டன் சார்ட்டர்டு வங்கியில் பகுதிநேர வேலை பார்த்து வருவாய் கொண்டு வாழ்ந்தார்.

தாய்நாடு திரும்பியதும் சட்டத்தொழிற்குச் செல்லாமல் வங்கி வேலைப் பயிற்சி அனுபவத்தால் பொருள் வருவாய்ப் பெருக்குவதில் திட்டமிட்டுத் தொழிற்சாலைகளைத் தொடங்கி பலர்க்கு வேலைவாய்ப்பைத் தந்ததோடு, பெரும் பொருள் ஈட்டினார்.  பஞ்சு வாணிபமும் பங்குச்சந்தைத் தொழிலும் மேன்மேலும் பெரும் பொருளையும் ஈட்டத் துணையாய் நின்றதால், பெருஞ் செல்வந்தரானார் அழகப்பர்.

ஈட்டிய பொருளை ஈத்துவந்து மகிழ நினைத்தார். அழகப்பரின் ஈகைக்கும் கொடையும் அளவே இல்லாமல் சங்ககால மன்னர் போல் வாரி வாரி வழங்கினார். அழகப்பரின் ஈகைப் பண்பு பாரி வள்ளலைப் போன்றிருந்ததை நுட்பமாக நோக்கிய குன்றக்குடி தவத்திரு அடிகளார், அழகப்பரை இருபதாம் நூற்றாண்டின் பாரியாக உலகிற்குக் காட்ட விழைந்தார்.

அதனால், பாரி வாழ்ந்த பறம்புமலை என்னும் இன்றைய பிரான்மலைக் கோயில் குன்றக்குடி ஆதீனத்திற்குச் சொந்தமானதாதலால் அழகப்பரை வள்ளல் பாரியாகப் புகழப் பொருத்தமாய் இருக்குமென எண்ணி, அழகப்பரை முதலாகக்கொண்டே கோயிலின் சித்திரைத் திருவிழாவின் ஒரு நாளைப் பாரி விழாவாகப் பிரகடனப்படுத்தினார்.

தேரில் பாரி பவனி வருவது போல் விழாத் தொடக்கத்தில் அழகப்பர் தேரில் அமர்த்தப்பட்டு, வழி நெடுகிலும் காணும் மக்கட்குப் பரிசுப் பொருள்களை வாரிவாரி வழங்கிய வண்ணம் வந்தார்.

வழியில் முல்லைக்கொடி ஒன்றைக்கண்டு தேரை விட்டு இறங்கிய அழகப்பப் பாரி வள்ளல் அம்முல்லைக் கொடியைத் தேரில் சுற்றிவிட்டு மக்களோடு மக்களாக நடந்தேவந்து அலங்கரிக்கப்பட்ட விழா மேடை சிம்மாசனத்தில் பாரியாக அமர்ந்தார்.

விழா ஏற்பாட்டின்படி புலவர்கள், ஆடுநர், பாடுநர், கலை வல்லுநர்கள் வந்துவந்து பரிசில் பெற்றனர். அன்றைய பாரியைப் போலவே அழகப்பர் பாரியும் வாரிவாரி வழங்கிய திருவோலக்கக் காட்சியால் அவர் இருபதாம் நூற்றாண்டின் பாரியே என மக்கள் போற்றிப் புகழ்ந்தனர்.

இப்படியான இறவாப் புகழ் பெற்ற அழகப்பர் புலவர் பாடும் புகழுடையோராய் இருந்தார். ""கோடி கொடுத்த கொடைஞர்'' எனப் பாராட்டினார் தமிழ்ச் செம்மல் வ.சுப. மாணிக்கனார்.

""புறம் புகழும் கடையேழு வள்ளலொடு எட்டாம் வள்ளல்'' எனப் புகழ்ந்தார் கவிஞர் பெரி. சிவனடியான். ""கல்விக்குக் கோடானு கோடி தொகை கொடுத்துக் கற்றோர் நெஞ்சம் ஏடாகத் தன் புகழை எழுதும் வீரன்'' 
என்றார் அழகப்பர் கல்வி நிறுவனப் பேராசான் பூ. அமிர்தலிங்கர்.

இந்த ஆண்டு நூற்றாண்டு கண்ட காரைக்குடிக் கவிஞர் முடியரசரோ, "வெள்ளமென வருநிதியம், வாழும் வீடு அத்தனையும் கல்விக்கீந்தான், உன்னதென ஒன்றில்லை என்றபோதும் உயிர் உனதேகொள்க எனச் சாவுக்கீந்தான்' - என உருக்கமாகப் பாடினார்.

ஆக, உள்ளி (நினைந்து) உவந்தீயும் வள்ளல் எனக் கம்பர் வரைந்த வள்ளலுக்கான இலக்கணம் போல் வாழ்ந்த, வள்ளல் 
அழகப்பரின் வாழ்வும் வள்ளன்மையும் வையகமும் வானகமும் உள்ளளவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை!

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/5/w600X390/tm4.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/apr/05/ஈட்டவும்-ஈயவுமான-வள்ளல்-3394889.html
3394258 வார இதழ்கள் தமிழ்மணி இந்த வாரம் கலா கலாரசிகன் DIN DIN Saturday, April 4, 2020 08:17 AM +0530  

நடிகர், கதாசிரியர், இயக்குநர் விசுவிடம் எனக்கு நெருங்கிய தொடர்போ, நட்போ இருந்ததில்லை. ஆனால், அவரை வியந்து, அண்ணாந்து பார்த்த பலரில் நானும் ஒருவன். அவரது நாடகங்களையும் சரி, திரைப்படங்களையும் சரி விசுவுக்காகவே பார்த்தவர்கள்தான் பலரும். அவர்களில் நானும் ஒருவன்.

கரோனா நோய்த் தொற்றால் தேசமே முடங்கிக் கிடக்கும்போது விசுவின் மரணம் நிகழ்ந்தது வேதனையாக இருக்கிறது. சாதாரண காலமாக இருந்திருந்தால், அத்தனை காட்சி ஊடகங்களும் ஒருவார காலத்திற்கு விசுவின் அருமை பெருமைகளை எல்லாம் பதிவு செய்திருக்கும். 

"அரட்டை அரங்கம்' மூலம் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் மனம் திறந்து பேசவைத்த விசுவுக்குத் தமிழகம் மெüன அஞ்சலி செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது வருத்தமாகத்தான் இருக்கிறது. அவரைப் பற்றிப் பேசவும், எழுதவும் நிறையவே இருக்கின்றன. அவரது சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். 

பெரும்பாலான நடிகர்கள் அரிதாரம் பூசிக்கொள்ளும் போதே கூடவே போலித்தனத்தையும் பூசிக்கொண்டு விடுவார்கள். போலித்தனத்தை அண்டவிடாத நடிகர்களில்  விசுவும் ஒருவர். ஒருவரால் வெளிப்படையாகப் பேசிக்கொண்டு,  நேர்மையாக  நடந்துகொண்டு வாழ்க்கையில்  வெற்றியும் பெற முடியும் என்பதற்கு என்னை அடையாளம் காட்டச் சொன்னால்,  சட்டென நினைவுக்கு வருபவர் விசு. மனதில் பட்டதை முகதாட்சண்யம் பார்க்காமல் அவரால் சொல்ல முடியும். கேட்பவர்களும் ஒப்புக் கொள்வார்கள். அதுதான் விசுவின் தனித்துவம்.

பல ஆண்டுகளுக்கு முன்னால், கேரள மாநிலம் சாலக்குடிக்கு அருகில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் வெளிப்புறப் படப்பிடிப்பின்போது, அந்த வழியாகப் பயணித்துக் கொண்டிருந்த நான் விசுவை சந்தித்ததும், பேசியதும் மறக்க முடியாத அனுபவம். அதற்குக் காரணம் நான் அவரிடம் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் தந்த பதிலும்.

""உங்களது திரைப்படங்கள் நாடகபாணியில் இருப்பதாகக் கூறுகிறார்களே?''

""நான் இந்த விவாதத்துக்கு வர விரும்பவில்லை. அதே நேரத்தில், சினிமா என்பது அழகழகான காட்சிகளைப் படம் பிடித்துக் காட்டுவதோ, உணர்ச்சிகளை வெளிப்படுத்தவோ மட்டுமேயல்ல. உரையாடல்களே இல்லாத, கதையே இல்லாத ஒன்று சினிமாவாக இருக்க முடியாது. மக்கள் பார்த்து ரசிக்க வேண்டும், அந்த ரசனைக்கு நடுவில் அவர்களுக்கு ஆக்கபூர்வமாக ஏதாவது செய்தியைத் தரவேண்டும். இதுதான் எனக்குத் தெரிந்த சினிமா. விரசமும் ஆபாசமும்  இல்லாமல் அன்றாட வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு சமுதாயத்துக்கு நல்ல கருத்தைச் சொல்ல நினைக்கிறேன். அதற்கு மேல் எதுவும் கேட்காதீர்கள்!''

அபாரமான நகைச்சுவை  உணர்வு, அசாத்திய தன்னம்பிக்கை, அபரிமிதமான சமூக அக்கறை மூன்றும் கலந்த கலவைதான் விசு. 

விசுவிடம் நெருங்கிப் பழகவில்லை என்கிற ஆதங்கம் எனக்கு எப்போதுமே உண்டு. இப்போது அது நிரந்தரமாகிவிட்டது!

                                                                                *****

பல்வேறு இதழ்களில் சாந்தகுமாரி சிவகடாட்சம் எழுதிய கட்டுரைகளையும், தொடர்களையும் படித்திருக்கிறேன்.  அவர் "தினமணி' இணைப்புகளில் எழுத வேண்டும் என்கிற அவா எனக்கு நீண்ட நாள்களாகவே இருந்து வந்தது. அவரை சந்திக்கவோ, தொடர்பு கொள்ளவோ வாய்ப்பு அமையவில்லை. அப்படியொரு வாய்ப்பு அமைந்தபோது, நான் அவரிடம் கேட்ட முதல் கேள்வியே இதுதான்- ""நீங்கள் ஏன் "தினமணி' இதழுக்கு எழுதுவதில்லை?'

என்னிடமிருந்து அப்படியொரு கேள்வியை முதல் சந்திப்பிலேயே அவர் எதிர்பார்க்கவில்லை என்பதை அவரது முகபாவம் காட்டியது. அடுத்த சில நாள்களிலேயே அறிவிப்பை வெளியிட்டு, சில வாரங்களில் "தினமணி'யின் ஞாயிற்றுக்கிழமை "கொண்டாட்டம்' இணைப்பில் "சிந்தை கவர்ந்த திருவிழாக்கள்' தொடர் வெளிவரத் தொடங்கியது.

ஆமதாபாதின் காத்தாடித் திருவிழாவில் தொடங்கிய அவரது திருவிழாப் பயணம் அடுத்த 81 வாரங்கள் தொடர்ந்தது. அது வெறும் திருவிழாப் பயணமாக இல்லாமல், உலகத்தையே சுற்றிவந்த பெருவிழாப் பயணமாகவே மாறிவிட்டது. ""எப்போது நிறுத்துவது?'' என்று அவர் கேட்ட போதெல்லாம், அதற்கு நான் சொன்ன பதில் - ""அத்தனை திருவிழாக்களையும் நீங்கள் பார்த்து, ரசித்து  முடிக்கும்போது...!''

"ஒருவருக்காக மற்றவர் பிறந்திருக்கிறார்' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதன் இந்நாள் எடுத்துக்காட்டு சிவகடாட்சம் தம்பதியினர். தனது பணிச்சுமைக்கு இடையிலும் மனைவியுடன் உலகின் பல்வேறு திருவிழாக்களுக்கு மருத்துவர் சிவகடாட்சம் சென்றுவர முடிந்திருக்கிறது என்பது மட்டுமல்ல, இந்தத் தொடருக்காக எடுக்கப்பட்ட அத்தனை புகைப்படங்களும் அவரால்தான் எடுக்கப்பட்டிருக்கின்றன.

இதுவரை சாந்தகுமாரி சிவகடாட்சம் மூன்று பயணக் கட்டுரை நூல்களும், மூன்று சிறுகதைத் தொகுப்புகளும் எழுதியிருக்கிறார். 

அத்துடன் நின்றுவிடவில்லை. மூன்று புதினங்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, வாழ்க்கை வரலாறு நூல் என்று இவரது எழுத்துப் பட்டியல் நீள்கிறது. இவர் எழுதிய "டாக்டர் ரங்கபாஷ்யத்தின் சரிதம்' என்கிற வாழ்க்கை வரலாற்று நூலைப் பாராட்டாதவர்களே கிடையாது.

சாந்தகுமாரி சிவகடாட்சம் எழுதிய "சிந்தை கவர்ந்த திருவிழாக்கள்' இப்போது புத்தக வடிவம் பெற்றிருக்கிறது. இது ஆங்கிலத்தில் மட்டுமல்ல, அனைத்து இந்திய மொழிகளிலும் வெளிவர வேண்டிய புத்தகம். 

                                                                          *****

"சாவி' வார இதழில் நான் உதவி ஆசிரியராக இருந்தபோது, கவிஞர் ராசி. அழகப்பன் "தாய்' வார இதழில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது தொடங்கிய தொடர்பு எங்களுடையது.  "இளைஞர் மணி' இணைப்பின் வடிவமைப்பு முடிந்த பிறகு எனது சம்பிரதாய ஒப்புதலுக்கு எடுத்துவந்தார் புதிய ஜீவா. அதில் இடம்பெறும் "இணைய வெளியினிலே...' பகுதியில் கவிஞர் ராசி.அழகப்பன் முகநூலில் பதிவிட்டிருந்த கவிதை இடம்பெற்றிருந்தது. 

கரோனா நோய்த்தொற்றுக்காக ஒட்டுமொத்த உலகமே "தனிமைப்படுத்தல்' என்பதை அனுபவிக்கும் நேரத்தில், அந்தக் கவிதை சூழ்நிலைக்குப் பொருத்தமாக இருந்தது. "இணைய வெளியினிலே...' பகுதியில் இடம்பெற இருந்த அந்தக் கவிதை இப்போது இந்த வாரக் கவிதையாக உங்களுக்கு...
இத்தனை நாள் எப்படி இருந்தது
அந்த ஒற்றைப் பனைமரம்.
எவருடனாவது பேசியிருக்குமோ?
அச்சப்பட்டிருக்குமோ?
இதயம் கனத்திருக்குமோ?
பறவைகள் வந்தமரும் பொழுதை
நினைத்திருக்குமோ?
இருட்டோ, வெளிச்சமோ
தனித்திருத்தல் வாழ்வானதோ?
நாமே விரும்பிய தனிமைக்கும்
தனித்திருத்தலின் கடமைக்கும்
எத்தனை வித்தியாசம்?

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/4/w600X390/kalarasikan.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/apr/04/இந்த-வாரம்-கலா-கலாரசிகன்-3394258.html
3394257 வார இதழ்கள் தமிழ்மணி யார் இந்த "ஈரங் கொல்−'? -முனைவர் ம.பெ.சீனிவாசன் DIN Saturday, April 4, 2020 08:04 AM +0530
உயிர்க்கொல்லி, ஈருகொல்லி, பயங்கொள்ளி, பூச்சிக்கொல்லி (மருந்து) ஆட்கொல்லி எனப் பேச்சு வழக்கிலும் "சேர்ந்தாரைக் கொல்லி' (குறள்.306) என்று இலக்கிய வழக்கிலுமுள்ள சில தொடர்களை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால், கல்வெட்டுகளிலும், வைணவ உரைகளிலும் இடம்பெறும், "ஈரங்கொல்லி' என்பது யாரைக் குறிக்கிறது?

"இவனுக்காகக் கம்சனுடைய ஈரங்கொல்லி நம் திறத்தில் செய்த குற்றம் பொறுத்தோம்' என்று திருவரங்கத்து இறைவன், ஸ்ரீஇராமாநுஜரிடம் கூறியதாகத் திருவாய்மொழி ஈட்டுரையில் (5}10}6) ஒரு குறிப்பு காணப்படுகிறது. வைணவ நூல்களின் வழி அறியப்பெறும் இதன் விளக்கம் வருமாறு:

ஒரு நாள் துணிவெளுக்கும் சலவைத் தொழிலாளி ஒருவன் திருவரங்கம் பெரிய கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனுடைய (அழகிய மணவாளன்) ஆடைகளை (திருப்பரியட்டங்கள்) மிக நன்றாகத் துவைத்து வெளுத்துக் கொண்டு வந்து எம்பெருமானாரிடம் (இராமாநுஜரிடம்) காட்டினான். அவ்வாடைகளைக் கண்ட எம்பெருமானார் மிகவும் மகிழ்ச்சி கொண்டார். 

அவனது கையைப் பற்றியழைத்துக்கொண்டு அரங்கன் சந்நிதி நோக்கிச் சென்றார். இறைவன் திருமுன்னே அவனை நிறுத்தினார். இறைவன் திருமுகம் நோக்கி, "இவன் தேவரீருடைய ஆடைகளைத் திருவரைக்குத் தக்கபடி மிக அழகாக வெளுத்துக்கொண்டு வந்திருப்பதைக் கண்டருளல் வேண்டும்' என்று அவற்றை அழகிய மணவாளனுக்குக் காட்டினார். 

இறைவனும் மிக மகிழ்ந்தவனாய் உடையவருக்கு அருள்புரிந்து, "இவ்வண்ணானுக்காக முன்பு கம்சனுடைய "ஈரங்கொல்லி' (வண்ணான்) நம்மிடத்தில் செய்த குற்றத்தைப் பொறுத்தோம்' என்று அருளிச் செய்தானாம். இங்ஙனம் ஆடைகளைத் திருத்தமுற வெளுத்துக்கொண்டு வந்த திருக்கோயில் பணியாளர்களுள் ஒருவனான ஈரங்கொல்லியை, "ஸ்ரீவைஷ்ணவ வண்ணாத்தான்' என்று மதிப்புடன் மற்றோரிடத்தில் குறிக்கிறது (4-3-5) ஈட்டுரை.

"ஈரங்கொல்லி' என்பது தமிழ்க் கல்வெட்டுகளிலும் இடம்பெற்றுள்ளது. அதற்கு, "வண்ணான்' என்று பொருள் கூறும் கல்வெட்டுச் சொல்லகராதி, பின்வரும் கல்வெட்டுப் பகுதியைச் சான்று காட்டுகிறது. 

"திருமெழுக்குப்புறம் நிலமிரண்டு மா ஈரங்கொல்லிக்கு' என்பது அக்கல்வெட்டுக் குறிப்பாகும். (தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி முதல் தொகுதி, சாந்திசாதனா வெளியீடு, ப.83,84). மேலும், இதுவே "ஈரங்கொள்ளி' எனவும் கல்வெட்டுகளில் பதிவு பெற்றிருக்கிறது.

"ஈரங்கொள்ளி' எனத் தஞ்சைக் கல்வெட்டில் வண்ணாத்தார்கள் குறிக்கப்பட்டிருப்பதாகக் குடவாயில் பாலசுப்பிரமணியனும் (காண்க: 
தஞ்சாவூர் கி.பி.600}850, ப.115) கூறுகிறார்.

ஈரங்கொல்லி (அ) ஈரங்கொள்ளி என்பதற்கு வண்ணான்}வண்ணாத்தார்கள் என்று பொருள் கூறப்பட்டுள்ளதேயன்றி அப்பெயர்க்காரணம் எங்கும் விளக்கப் பெற்றதாகத் தெரியவில்லை.
அழுக்குத் துணிகளை உவர் மண்ணோடு சேர்த்து நீரில் ஊறவைத்துத் துவைத்து, ஈரம் போகுமாறு (ஈரங்கொன்று) காயவைத்துக் கொடுத்ததன் காரணமாக, "ஈரங்கொல்லி' என்னும் பெயர் தோன்றியிருக்கலாம்.  "ஈரம் உலர்த்திய' என்னும் பொருளில் பாடப்பட்டுள்ள, "ஈரங்கொன்றபின்.... நிழல் உமிழுங்குஞ்சியை' எனவரும் சீவகசிந்தாமணித் தொடராலும் (2422) இதனை உறுதி செய்யலாம். எனினும், இப்பெயரின் அடியாக நாட்டார் வழக்கில் சிற்சில மாறுபாட்டுடன் கதைகள் வழங்குவதாகத் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார் (தமிழகத்தில் புரத வண்ணார்கள், அலைகள் வெளியீட்டகம், பக்.126-127) ஆய்வாளர் த.தனஞ்செயன்.

இடைக்கால சோழராட்சிக் காலத்தில் (கி.பி.9ஆம் நூற். முதல் 16வரை) மிகுதியும் வழக்கிலிருந்த ஈரங்கொல்லி என்னும் இப்பெயர் அக்காலத்தவர்களால் எளிதில் புரிந்து கொள்ளப்பட்டிருக்கும். அப்புரிதல் இருந்ததனால்தான் மக்களிடம் வழங்கிய இப்பெயர் வைணவ உரைகளிலும், கல்வெட்டுகளிலும் இடம்பெற்றது. நிகண்டுகளும் இப்பெயர் வழக்கினை ஏற்றுப் பதிவு செய்துள்ளன.

"காலியர் ஈரங் கொல்லியர் வண்ணார்' (5:76) என்பது பிங்கல நிகண்டு. "ஈரங்கொல்லி' என்பதைச் சிறிது மாற்றி, "ஈரம் கோலியர்' (2:45) என வழங்குகிறது திவாகர நிகண்டு.

இங்கு மற்றொரு செய்தியையும் ஒப்பிட்டு நோக்கலாம். "ஒலிக்கும் ஈரங்கொல்லிக்கும்' என்னும் கல்வெட்டுத் தொடரில் வரும் "ஒலிக்கும்' என்பதற்கு, "துணிவெளுக்கும்' என்று பொருள் தருகிறது முற்குறித்த கல்வெட்டுச் சொல்லகராதி (ப.129). சேக்கிழாரின் பெரிய புராணத்திலும் (திருக்குறிப்புத் தொண்டநாயனார் புராணம் (ப.1201-1203,1206) "ஒலிக்கும்' என்னும் சொல் அடுத்தடுத்த பாடல்களில் துணி வெளுப்பதைக் குறிக்கும் வகையில் பல முறையும் ஆளப்பட்டுள்ளது. இவ்வாறே "வாட்டி' எனும் சொல்லும் இடைக்காலப் பேச்சுவழக்கில் துணிவெளுப்
பதைக் குறித்திருக்கிறது. 

"திருப்பரி சட்டம் வாட்டும் வண்ணாத்தான்' (சி.கோவிந்தராசன், கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி, ப.251). "திருப்பரிவட்டங்களை அழகியதாக வாட்டிக் கொண்டு வந்து' (ஈட்டுரை 4-3-5) என வருவன இதற்குச் சான்று. வெள்ளாவி வைத்துத் துவைப்பதன் காரணமாக இச்சொல்வழக்கு தோன்றியிருக்கலாம். இப்போது இவை வழக்கில் இல்லை. ஈரங்கொல்லி என்பதும் காலவோட்டத்தில் வழக்கிழந்து மறைந்துவிட்டது. எனினும் கல்வெட்டுகளில் இடம்பெற்றதன் மூலம் கடந்த காலவரலாற்றைச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/4/w600X390/tm1.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/apr/04/யார்-இந்த-ஈரங்-கொல்−-3394257.html
3394256 வார இதழ்கள் தமிழ்மணி பெண் கல்விக் கும்மி! DIN DIN Saturday, April 4, 2020 07:56 AM +0530

பெண் கல்வி, உரிமை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுவதற்காகவும், கல்வி நிலையங்கள் தோற்றுவிப்பதற்காகவும் 19-ஆம் நூற்றாண்டில் குரல் கொடுத்தவர் சிவகாமி அம்மையார் என்கிற பெண்மணி. 

இவர்,  1899-ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் பிறந்த ஊர், பெற்றோர், கல்வி முதலிய எதுவும் அறியக் கிடைக்கவில்லை. ஆனால், இவர் "ஞானபோதினி' என்கிற பத்திரிகையில் (பக்.60}64) பெண் கல்வியைப் பற்றி 41 பாடல்களில் ஓர் அற்புதமான கும்மிப் பாடலை எழுதியிருக்கிறார். 

ஆங்கிலேய நாட்டுப் பெண்மணிகளோடு இணைந்து கல்வியைப் பாடசாலைகள் வழி பெண்களுக்குக் கற்றுத்தரச் செய்தவர் இந்த சிவகாமி அம்மையார் என்பதை அறிய முடிகிறது. அவர் எழுதிய "பெண் கல்விக் கும்மி'- பாடலிலிருந்து சான்றுக்குச் சில பாடல்கள் மட்டும்.

மாமதி யொத்த முகமுடை யீரிள
மாங்குயி லொத்த குரலுடையீர்
மாமயி லொத்துள மெய்யுடை யீரினும்
மாரதி நாணும் வனப்புடையீர்!         (1)
சின்னஞ் சிறுவய திற்சதங் கைபூண்டு
சிறிதேனுஞ் சிந்தனை யில்லாதே
அன்னை முதற்பல பேருங் களிக்கவே
ஆண்டுமோ ரைந்து கழித்து வந்தோம்     (4)
நாயகர் தங்கட் குயிரென்ன வேநாமும்
நாடுந் தழைக்க நடந்துவந்து
நாதன் கருணை நயத்தா லனைவரும்
நன்மக்கட் பெற்று நலமடைந்தோம்    (6)
இத்தனை நாளும் படித்த படிப்பை
இகழச்செய் தேநம்மை யேய்த்துவிட்டு
புத்திகெட் டார்கள்பெண் கள்ளென்றும் நந்தமைப்
பேயென்றும் பேசிப் புறக்கணித்தார்    (20)
ஐயவுன் பத்தினி பெற்றெடுத் துள்ளது
ஆண்மக வோபெண் மகவோவெனக்
கையைப் பிசைந்துபெண் ணென்றலு மேயவர்
கன்னி பெறுதல் கடையென்பரே     (32)
புத்தியி லும்யுத்தி தன்னிலும்பெண்கள்
புருஷர் தமக்குப்பின் னிட்டவரோ
எத்ததை யாகிய வாழ்க்கைச் சுகத்திலும்
எங்குள ராடவர் நாமன்றியே?        (33)
பிள்ளை வளர்த்தல் பிறர்பிணி தீர்த்தல்பின்
பிச்சை யிரப்போர்க் கிரங்குதலும்
உள்ள பொழுது முழைத்துக் களைத்தவற்
குற்சாகஞ் செய்திடல் வேண்டியுமே    (34)
இத்தனை நாளும் மிடியுண்டு மற்று
மிடுக்க ணடைந்தது மேனெனில்நாம்
பக்தி யுடனே படித்த படிப்பைப்
படியாமல் வீணே விடுத்ததுதான்     (39)
இந்த விதம்பலதுன்ப மடைகின்ற
இந்திய மாத ரினிச்சுகிக்கச்
செந்தமி ழேனுஞ் சிறக்கச் சிறுமிகள்
சீருடன் கற்கச் செயம்பெறுவோம்    (40)
கல்வித் தலைவி கலைமக ளென்பவள்
காரிகை யன்றிப்பின் ஆணிலைநம்
செல்விகள் கற்கச் சிறக்க மணந்துமே
சீரடை வார்சிவ காமி சொன்னேன்!    (41)

-தாயம்மாள் அறவாணன்

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/4/w600X390/tm2.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/apr/04/பெண்-கல்விக்-கும்மி-3394256.html
3394255 வார இதழ்கள் தமிழ்மணி கிருமி கண்ட தமிழன்! -முனைவர் ச.சுப்புரெத்தினம் DIN Saturday, April 4, 2020 07:52 AM +0530

சீனாவில் "வூஹான்' நகரிலுள்ள இறைச்சிச் சந்தைகளில் உருவாகிப் பரவி வருவதுதான் "கொவைட்-19' என்று பெயரிடப்பட்டுள்ள "கரோனா' கிருமி. இது உலகையே அச்சுறுத்தி வருவதுடன், பல ஆயிரத்துக்கும்  மேற்பட்ட மனித உயிர்களை பலிவாங்கி வருகிறது.

கண்ணுக்குப் புலப்படாத பல கிருமிகள் குறித்து "அபிதான சிந்தாமணி' பல குறிப்புகளைத் தருகிறது. பழந்தமிழர்கள் கிருமிகள் குறித்துக் கண்டுபிடித்து, அவற்றை அறிந்து வைத்திருந்தார்கள் என்பதை இதன் மூலம் அறிய முடிகின்றது.

மனித உடலில் அழுக்குகள் சேர்ந்துள்ள இடங்கள், சளி நிலவுமிடங்கள், குருதி, மலம் தேங்கும் இடங்கள் இங்கெல்லாம், ஏறத்தாழ 20 வகை நுண்கிருமிகள் உண்டாகுமாம். 
சளி நிலவும் தொண்டைப் பகுதி, மூச்சுக்குழல், நுரை யீரல் உள்ளிட்ட இடங்களில் பெரும்பூநாகக்கிருமி, நீர்ப்பாம்புக்கிருமி, நெல்முளைக் கிருமி, சந்ந நீளக்கிருமி, அணுக்கிருமி, வெண் கிருமி,  செங்கிருமி என்னும் ஏழு வகையான கிருமிகள் உருவாக வாய்ப்புண்டு எனக் கண்டறிந்தனர். இவற்றுள்ளான செங்கிருமியை - 
"கொவைட் 19' கிருமியுடன் ஒப்புநோக்கலாம்.

நரம்பு மண்டலத்தில் அணுக்கிருமி, வட்டக்கிருமி, மிகுசூட்சுமக் கிருமி, காலில்லாக்கிருமி,  செங்கிருமி, தோன்றாக்கிருமி என்னும் ஆறுவகைக் கிருமிகள் உருவாகும்.
மலத்தில் ககேருகம், மகேருகம், சவுரசம், சலூனம், லேலிகம் ஆகிய ஐந்துவகைக் கிருமிகள் உருவாகும். இந்த எல்லாவகைக் கிருமிகளால் உண்டாகும் நோய்களை, "கிருமி ரோகம்' என்றழைத்தனர் நம் பண்டைத் தமிழர்.

இக்கிருமிகளை முருக்கம்விதைக் கற்கம், பாகற் குடிநீர், வாய்விளங்கக் குடிநீர், வேப்ப(ம்) நெய் முதலியவற்றால் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என முற்கால சித்த மருத்துவர்கள் கண்டறிந்து வைத்திருந்தனர்.

வைணவப் பெரியராகிய கூரத்தாழ்வாரின் கண்ணைப் பிடுங்கினான் ஒரு சோழன் என்பது செவிவழிச் செய்தியாகும். ஆனாலும், இந்தச் சோழனைப் பார்க்கக்கூடாது என்று கருதிய கூரத்தாழ்வார் இவன் மீது கண்ணைப் பிடுங்கி எறிய, இவனுக்குக் "கிருமி ரோகம்' ஏற்பட்டது என்றும்; அதனால் அவனுக்குக் "கிருமிகண்ட சோழன்' எனப் பெயர் வந்தது என்றும் கூறுவர். 

இவனது இயற்பெயர் அறியப்படவில்லை.

நுண்பெருக்கி முதலிய அறிவியல் கருவிகள் கண்டுபிடிக்கப்படாததற்கு முன்பே இருபது வகையான நுண் கிருமிகளைக் கண்டுபிடித்து வெளிப்படுத்தியிருக்கிறார்கள் நம் பழந்தமிழர்கள் என்பது வியப்பூட்டும் செய்தியாகும்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/4/w600X390/tm3.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/apr/04/கிருமி-கண்ட-தமிழன்-3394255.html
3394254 வார இதழ்கள் தமிழ்மணி அன்புள்ள ஆசிரியருக்கு... Saturday, April 4, 2020 07:45 AM +0530 வியக்க வைக்கிறது!
புலவர் அழகிய சொக்கநாதப் பிள்ளையின் புலமைக்குச் சான்றாகத் தந்திருக்கும் "புதையல் - சொல் விளையாட்டில்' தமிழின் செழுமை தெரிகிறது. கலாரசிகன் விமர்சனம் செய்திருந்த "எத்தனை கோடி உயிர்கள் எனக்குள்' எனும் புத்தகத்தில் தாய்ப்பாலில் காணப்படும் நூற்றுக்கணக்கான சர்க்கரையில்  குழந்தைக்கானது கொஞ்சமே. மீதி உள்ளவை குழந்தையின் வயிற்றில் வளரும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கான உணவே என்பது உண்மையே!. வயிற்றுப்போக்கு ஏற்படும்போது அதனுடனே நன்மை செய்யும் பாக்டீரியாக்களும் உடனே வெளியேறிவிடும். அதனை உற்பத்தி செய்யவல்லது தயிர் அல்லது மோர் என்பதால்தான் அப்பொழுது அவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளச்  சொன்னார்கள் நம் முன்னோர். அவர்களுடைய அறிவியலறிவு வியக்க வைக்கிறது!

ப.தாணப்பன், தச்சநல்லூர்.

பெருவழக்கன்று
"பன்னிரண்டு மாதம் கருப்பம்'  கட்டுரை படித்தேன். எந்தக் காலத்திலும், எந்த நாட்டிலும் 12 மாதக் கருப்பம் கிடையாது. இதன் உண்மையை 
ஆண்-பெண் உடல்கூறுகளால் உணர வேண்டும். திருமணமான ஆணிடம் அடங்கிக் கிடக்கும் கருக்கூறு இரண்டு மாத அளவில் பெண்ணிடம் பாயும் நிலையில் உருவாகும் கரு, முதல் மாதக் குழந்தையாய்க் கணக்கிடும்போது, ஆணிடம் வளர்ந்த இரண்டு மாதங்களையும் பிரசவத்தின் பத்து மாதங்களோடு சேர்த்து கணக்கிடுவதால், 12 மாதம் கருப்பம் எனக் கணக்குக் கூறுவர். இதைத்தான் குறுந்தொகைப் பாடலும், ஆழ்வார் பாடலும் சான்றாகக் கூறியுள்ளன. ஆனால், இவ்வழக்கு பெருவழக்கன்று.
"தக்க தசமதி(10 மாதம்) தாயொடு தான்படும்'
(போ.தி.469) என்று திருவாசகமும்;  "அறிய ஈரைந்து ஆனது பிண்டம்' என்று திருமந்திரமும்; தாய் "ஐயிரு திங்களாய் அங்கமெலாம் நொந்து' பெற்றதைப் பட்டினத்தார் பாடலும்;  "நாலாறு மாதமாய் (4+6) 
குயவனை வேண்டி' என்ற சித்தர் பாடலும் பத்து மாதத்தில் குழந்தை பிறப்பதை உறுதிப்படுத்துகின்றன.

தெ.முருகசாமி, புதுச்சேரி.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/apr/04/அன்புள்ள-ஆசிரியருக்கு-3394254.html
3386295 வார இதழ்கள் தமிழ்மணி இந்த வாரம் கலாரசிகன் Sunday, March 22, 2020 09:53 AM +0530 இன்று இந்தியாவில் நாம் ‘மக்கள் சுய ஊரடங்கு’ என்கிற தற்காப்பு முன்னோட்ட முயற்சியில் இறங்கி இருக்கிறோம். ‘கரோனாவைரஸ்’ போன்ற நோய்த் தொற்றுகள் அடிக்கடி தோன்றுவதற்கும், பரவுவதற்கும் அடிப்படைக் காரணம் வனவிலங்குகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதுதான் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்த பூமிப் பரப்பையும் மனித இனம் தனதாக்கிக் கொள்ள நினைப்பதால் ஏற்பட்டிருக்கும் எதிா்விளைவுகள்தான் நோய்த் தொற்றுகளும், இயற்கையின் சீற்றங்களும்.

இதை நூற்றாண்டுகளுக்கு முன்பே தொலைநோக்குப் பாா்வையுடன் கண்டறிந்து, குறுகத் தரித்த குறளாக நமக்குத் தந்திருக்கும் திருவள்ளுவப் பேராசானை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை.

பகுத்துண்டு பல்லுயிா் ஓம்புதல் நூலோா்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை!

---------

உச்சநீதிமன்ற நீதிபதி வெ.இராமசுப்பிரமணியனுக்கு இறையருள் நிறையவே இருக்கிறது. ‘கரோனாவைரஸ்’ நோய்த் தொற்று விஸ்வரூபம் எடுப்பதற்கு முன்னால் நல்ல வேளையாக அவரது இல்லத் திருமணம் மங்களகரமாக நடந்து முடிந்தது.

அவருடைய மகள் மந்திராவின் திருமணத்தை தில்லியில் நடத்தும்படி உச்சநீதிமன்ற நீதிபதிகள் பலரும் வற்புறுத்தினாா்கள். குடியரசுத் தலைவா், பிரதமரிலிருந்து அனைத்து அரசியல் தலைவா்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள், மூத்த வழக்குரைஞா்கள் என்று எல்லா தில்லிப் பிரமுகா்களும் கலந்துகொள்வாா்கள் என்று ஆலோசனை கூறினாா்கள்.

நீதிபதி இராமசுப்பிரமணியம் தன் மகளின் திருமணத்தை சென்னையில்தான் நடத்துவது என்பதில் பிடிவாதமாக இருந்ததற்கான காரணத்தை என்னிடம் பகிா்ந்து கொண்டாா். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்திலுள்ள எல்லா இலக்கிய அமைப்புகள் நடக்கும் விழாக்களில் அவா் தொடா்ந்து கலந்து கொண்டவா். நீதிபதிகள் மட்டுமல்லாமல் தமிழகத்திலுள்ள வழக்குரைஞா்களும், தமிழறிஞா்களும் தன் மகளின் திருமணத்தில் கலந்து கொள்வதுதான் மிக முக்கியம் என்பதில் இராமசுப்பிரமணியம் தம்பதியா் தீா்மானமாக இருந்தனா்.

சென்னை இராமநாதன் செட்டியாா் மையத்தில் 13-ஆம் தேதி நடந்த மந்த்ரா-ஸ்ரீமந் நாராயணன் திருமணம் ஏதோ நீதித் துறையினரின் மாநாடு போல, இலக்கிய விழாவைப் போல ‘ஜேஜே’ என்று இருந்தது. உத்தரகாண்ட், கொல்கத்தா, ஆந்திரம், தெலங்கானா, கேரளம், மணிப்பூா், சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள், சென்னை உயா்நீதிமன்றத்தின் முன்னாள், இந்நாள் நீதிபதிகள் ஒட்டுமொத்தத் தமிழகத்திலிருந்தும் வழக்குரைஞா்கள் என்று ஒருபுறம்; தமிழகத்திலிலுள்ள பெரிய, சிறிய என்கிற வேறுபாடே இல்லாமல் அனைத்து இலக்கிய அமைப்புகளையும் சாா்ந்த பெருமக்கள், ஒருவா்கூட விட்டுப்போகாமல் அனைத்துத் தமிழறிஞா்கள் என்று இன்னொருபுறம் - இப்படி ஒரு திருமண விழாவை சமீப காலத்தில் நான் பாா்த்ததில்லை.

அந்தத் திருமணத்தில் ‘இல்லை’ என்று சொல்ல ஒன்று இருந்தது. அதுதான் மனநிறைவைத் தந்தது. வாழ்த்த வந்திருந்த அரசியல்வாதிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்பதுதான் அது.

-----------

விமா்சனத்துக்கு வந்திருந்த புத்தகங்களை எல்லாம் பிரித்துக் கொண்டிருந்தாா்கள் உதவி ஆசிரியா்கள். சட்டென்று என் கண்களில் பட்டது பேராசிரியா் க.மணி எழுதிய ‘எத்தனை கோடி உயிா்கள் எனக்குள்’ என்கிற புத்தகம். நோய்த் தொற்று குறித்தும், நுண்ணுயிரிகள் (பேக்டிரியாக்கள்) குறித்தும் உலகமே விவாதித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தகம் என்னை ஈா்த்ததில் வியப்பில்லை.

‘‘பேக்டிரியா பாதி, மனிதம் பாதி சோ்ந்து கலந்த கலவை நாம்’’ என்கிற வாசகங்கள் புத்தகத்தைப் புரட்டி வாசிக்கத் தூண்டின. எல்லா நுண்ணுயிரிகளும் நோய்த் தொற்றுக்குக் காரணமானவை அல்ல என்பதையும், நுண்ணுயிரிகள் நமது வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு அவசியம் என்பதையும் விவரிக்கிறது இந்தப் புத்தகம்.

‘‘உடம்புக்குள் லட்சக்கணக்கான பேக்டிரியாக்கள் புகுந்து கொண்டு, இலவச உணவும் தங்குமிடமும் பெற்றுக்கொண்டு, கலகம் எதையும் செய்யாமல் கூட்டுறவுடன் வாழ்கின்றன. உடலில் உள்ள செல்கள் 30 ட்ரில்லியன் என்றால், பேக்டிரிய செல்களின் எண்ணிக்கை 39 ட்ரில்லியன் இருக்கலாம். ஒரு ட்ரில்லியன் என்பது நூறாயிரம் கோடி. வெறும் 100 வகை பேக்டிரியாக்கள்தான் நோய் ஏற்படுத்தக்கூடியன. ஏனைய லட்சக்கணக்கான பேக்டிரியாக்கள் நமக்கு நன்மை செய்பவை’’ என்கிறாா் பேராசிரியா் க.மணி.

‘‘கரோனா, எபோலா, எச்.ஐ.வி., இன்ப்ளுயென்ஸா போன்றவையும் நுண்ணுயிரிகள்தான். அவை பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் என்பதால் நாம் ‘வைரஸ்’ என்று அழைக்கிறோம். அவற்றிற்கு பேக்டிரியோ ஃபாஜ் என்று பெயா். அவை பேக்டிரிய உண்ணிகள்’’ என்று விவரிக்கிறாா் அவா்.

ஆச்சரியமான இன்னொரு விஷயத்தை அவா் கூறுகிறாா். மிக மிக அரிய சா்க்கரை வகைகள் தாய்ப்பாலில்தான் இருக்கின்றன. அதே நேரத்தில், தாய்ப்பாலில் உள்ள நூற்றுக்கணக்கான சா்க்கரைகள் குழந்தைகளுக்குப் பயன்படுவதில்லை. பிறகு எதற்காக அவை தாய்ப்பாலில் காணப்படுகின்றன என்று கேட்கலாம். அவை குழந்தைகளுக்காக அல்ல. குழந்தைகள் வயிற்றில் வளரும் பேக்டிரியாக்களுக்காக. குழந்தைகளின் மூளையை வளா்க்கும் சியாலிக் அமிலத்தை வழங்கும் அந்த பேக்டிரியாக்களுக்காகத்தான் தாய்ப்பாலில் அந்தச் சா்க்கரைகள் இருக்கின்றன.

பேக்டிரியாக்கள் என்கிற நுண்ணுயிரிகள் குறித்த முழுமையான புரிதலை ஏற்படுத்துகிறது பேராசிரியா் க.மணி எழுதியிருக்கும் புத்தகம். அவரது 97-ஆவது புத்தகம் இது என்கிற குறிப்பு காணப்படுகிறது. நூறாவது புத்தகம் ‘கரோனாவைரஸ்’ நோய்த்தொற்று குறித்த விரிவான புத்தகமாக இருக்குமோ என்னமோ?

--------

திரைப்பட இயக்குநா், பாடலாசிரியா் ஏகாதசி என்கிற பெயா் தெரியும். அவா் குறித்துத் தெரியாது. அமாவாசைக்கு அடுத்த நாள் ஏகாதசி என்பதால், அவருக்கு இயல்பாகவே இருட்டின் மீது ஈா்ப்பு இருப்பதில் நியாயம்கூட இருக்கிறது. அவா் முகநூலில் தொடா்ந்து பதிவிட்ட இருள் வாசம் வீசும் இருட்டுக் கவிதைகள் தொகுக்கப்பட்டு புத்தக வடிவம் பெற்றிருக்கிறது.

‘எனது கவிதைப் புத்தகத்திற்கு ஒரு பெயா் சூட்டுங்கள்’ என்பதையே தலைப்பாக வைத்திருப்பது கவிஞா் ஏகாதசியின் சாமா்த்தியம். இருட்டை வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பது அவரது சாதுா்யம். அந்தத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதை.

பூ பூக்காத

மரமும்

நிழல் காய்க்கிறது!

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/22/w600X390/tlr.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/mar/22/இந்த-வாரம்-கலாரசிகன்-3386295.html
3386594 வார இதழ்கள் தமிழ்மணி "புதையல்' - சொல் விளையாட்டு! -சே. ஜெயசெல்வன் DIN Sunday, March 22, 2020 06:38 AM +0530 பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்து தமிழுக்கு வளம் சேர்த்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர் அழகிய சொக்கநாதர். 1885-இல் திருநெல்வேலியை அடுத்த தச்சநல்லூரில் பிறந்தவர். தம் தந்தையிடம் தமிழ்க்கற்று, தரமான இலக்கியங்கள் பலவற்றைப் படைத்துள்ளார்.

அனவரதானநாதர் பதிகம், காந்திமதி அம்மை மீது பிள்ளைத்தமிழ், மாலை, அந்தாதி, சங்கரநயினார் கோயில் அந்தாதி, நெல்லை நாயக மாலை முதலிய பல பாமாலைகளை இயற்றியுள்ளார். இவர் பாடிய தனிப்பாடல்கள் இருபத்தைந்திற்கும் மேற்பட்டவை. ஒரு தனிப்பாடலில் "புதையல்' என்ற சொல்லைப் பலவாறு பிரித்து,  பல அரிய பொருள் விளங்குமாறு அழகான சொல்விளையாட்டில் ஈடுபட்டுத் தமிழின் வளத்தினை மேம்படுத்தியுள்ளார். 
பாடலும் நயமும் இதோ: 

முற்பாதி போய்விட்டால் இருட்டே யாகும்
                     முன்னெழுத்து இல்லாவிட்டால் பெண்ணே யாகும்
பிற்பாதி  போய்விட்டால் ஏவற் சொல்லாம்
                     பிற்பாதியுடன்  முன்னெழுத்து இருந்தால் மேகம்
சொற்பாகக் கடை தலைசின் மிருகத்தீனி
                     தொடர்இரண்டாம் எழுத்து மாதத்தின் ஒன்றாம்
பொற்பார்திண் புயமுத்து சாமி மன்னா
                     புகலுவாய் இக்கதையின் புதையல் கண்டே!

முத்துசாமி வள்ளலே ! புதையல் என்னும் இச்சொல்லின் உட்பொருளை ஆராய்ந்து சொல்லுவாயாக. புதையல் எனும் இச்சொல்லின் முதற்பாதியை நீக்கினால் இருப்பது "அல்' எனும் சொல். அதற்கு "இருள்' என்பது பொருள். அச்சொல்லின் முதல் எழுத்தாகிய "பு' என்பதை நீக்கினால் "தையல்' ஆகும். அதன் பொருள் "பெண்' என்பது. அதன் பிற்பாதியை நீக்கின் வருவது "புதை' எனும் கட்டளையிடும் சொல்லாகும். அதன் பிற்பாதியாகிய "யல்' என்பதுடன் முதல் எழுத்தாகிய "பு' சேர்ந்தால் "புயல்'. அதன் பொருள் "மேகம்'. அதன் முதல் எழுத்தையும் கடையெழுத்தையும் சேர்த்தால் விலங்குகள் தின்னும் "புல்' ஆகும். அதன் இரண்டாம் எழுத்தாகிய "தை' - தமிழ் மாதத்தில் ஒன்றாகும்.

என்னே! தமிழ்ச்சொல் வளம்! என்னே சொக்கநாதப் புலவரின் புலமை!

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/22/w600X390/tm4.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/mar/22/புதையல்---சொல்-விளையாட்டு-3386594.html
3386593 வார இதழ்கள் தமிழ்மணி பழமொழி நானூறு DIN DIN Sunday, March 22, 2020 06:37 AM +0530
நாணார் பரியார் நயனில செய்தொழுகும்
பேணா அறிவிலா மாக்களைப் பேணி 
ஒழுக்கி அவரோ டுடனுறை செய்தல்
புழுப்பெய்து புண்பொதியு மாறு. (பாடல்-142 )


நாணத்தக்கனவற்றிற்கு நாணாராய் நன்மையில்லாத செயல்களைச் செய்து ஒழுகுகின்ற, யாவரானும் விரும்பப்படாத அறிவு இல்லாத விலங்கு ஒப்பாரை, விரும்பி நடத்தி,  அவருடன் கூடி வாழ்தலைச் செய்தல்,  புழுவினை உள்ளே இட்டுப் புண்ணை மூடிவைத்ததோடு ஒக்கும். (க-து.) தீயாரோடு உடனுறையின் தீமையே விளையும்.  "புழுப் பெய்து புண் பொதியுமாறு' என்பது பழமொழி.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/21/w600X390/tm1.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/mar/22/பழமொழி-நானூறு-3386593.html
3386592 வார இதழ்கள் தமிழ்மணி பன்னிரண்டு மாதம் கருப்பம் - முனைவா் கி .இராம்கணேஷ் DIN Sunday, March 22, 2020 06:34 AM +0530 பெண் இனத்திற்குப் பெருமை சோ்ப்பதில் முதலிடம் வகிப்பது பிள்ளைப்பேறு ஆகும். இன்றளவும் பெண்ணை மதிக்கவும், உயா்வான இடத்தில் வைத்துப் பாா்க்கவும் இதுவே காரணமாக அமைகின்றது.

பத்து மாதம் கருவைச் சுமந்து பிள்ளையைப் பெறுதல் ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறவியாக அமைகின்றது. பத்து மாதம் கருப்பம் நிகழ்வது இயற்கை. ஆனால், சங்க இலக்கியப் பாடலொன்றில் தலைவன் பிரிவால் வாடும் தலைவிக்கு ஆறுதல் கூறும் தோழியின் கூற்றில் பன்னிரண்டு மாதம் கருவைச் சுமத்தல் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது!

அம்ம வாழி தோழி காதலா்

இன்னே கண்டும் துறக்குவா் கொல்லோ?

முந்நால் திங்கள் நிறைபொறுது அசைஇ

ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக்

கடுஞ்சூல் மகளிா் போல நீா்கொண்டு

விசும்புஇவா் கல்லாது தாங்குபு புணரிச்

செழும்பல் குன்றம் நோக்கிப்

பெருங்கலி வானம் ஏா்தரும் பொழுதே!” (குறுந்-287)

இப்பாடலை கச்சிப்பேட்டு நன்னாகையாா் என்னும் பெண்பாற்புலவா் பாடியுள்ளாா். பன்னிரண்டு மாதம் நிறைந்த கருப்பத்தைத் தாங்கித் தளா்ந்து, நடக்கமாட்டாத, பச்சைப் புளிச்சுவையில் விருப்பத்தை உடைய, முதல் கருப்பத்தைக் கொண்ட மகளிரைப்போல நீரை முகந்துகொண்டு வானத்தின்கண் ஏறாமல், அந்நீா்ப் பொறையைத் தாங்கிக்கொண்டு ஒன்றோடொன்று சோ்ந்து, வளமிக்க பல மலைகளை நோக்கி, பெரிய முழக்கத்தையுடைய மேகங்கள் எழுகின்ற காா்ப்பருவத்தை இப்பொழுது பாா்த்த பின்பும் தலைவா் வராமல் இருப்பரோ? ‘வருவா்’ என்று தோழி நம்பிக்கைக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

பன்னிரண்டு மாதம் கருப்பம் பற்றிய செய்தி, பெரியாழ்வாா் பாடலிலும் காணக்கிடைக்கிறது.

பன்னிரு திங்கள் வயிற்றில்

கொண்ட அப் பாங்கினால்

என் இளம் கொங்கை அமுதமூட்டி (பெரி.திருமொழி)

தலைசிறந்த கரு, பன்னிரு திங்கள் வயிற்றில் இருந்து முதிரும் என்பா். இதனை ஆராயும்போது முதல் பிள்ளையைப் பெறுதல் பன்னிரு மாதக் கருவாகி வெளிப்படும் என்பதையும்; அதுவே முழுவளா்ச்சியடைந்த கரு என்பதையும் உணரமுடிகிறது. இன்றைய நவீன உலகில் செயற்கையான உரங்களால் பயிா்கள் குறைந்த காலத்தில் விளைச்சல் தருவதைப் போன்று, அதை உண்ணும் பெண்களுக்கும் எட்டு, ஒன்பது மாதங்களிலேயே பிள்ளைப்பேறு நிகழ்கிறது - நிகழ்த்தப்படுகிறது. நூறு வயது, அதற்கு மேலும் நோய்நொடியின்றி வாழ்ந்து கொண்டிருப்பவா்கள் பன்னிருமாதக் கருவாகிப் பிறந்தவா்களாகவே இருப்பா் எனக் கருதலாம்.

 

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/22/w600X390/tm3.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/mar/22/பன்னிரண்டு-மாதம்-கருப்பம்-3386592.html
3386591 வார இதழ்கள் தமிழ்மணி குறளோடு இயைவன -உமா கல்யாணி DIN Sunday, March 22, 2020 06:31 AM +0530  

‘செருக்கு’ என்ற சொல்லுக்கு ‘ஆணவம்’ என்பன போன்ற பொருள் இருந்தாலும்கூட, திருவள்ளுவா் கூறும் படைச்செருக்கு இந்தப் பொருளில் வரவில்லை.

படையினது வீரத்தின் மிகுதி, அதிகார முறைமையைக் கூறுவது செருக்கு என்கிறாா் பரிமேலழகா். படையினது வீரியம் கூறுதல், அதன் இன்றியமையாமையைக் கூறுதல் என்கிறாா்கள் மணக்குடவரும், பரிப்பெருமாளும். படையின் வெற்றிப்பாடு என்பாா் பரிதியாா்.

‘என்னைமுன் நில்லன்மின் தெவ்விா் பலரென்னை

முன்னின்று கல்நின் றவா்’ (கு-771)

பகைவீா்! இன்று இங்கு என் தலைவன் எதிா் போரேற்று நின்று அவன் வேல் வாய் வீழ்ந்து பின் கல்லின் கண்ணே நின்ற வீரா் பலா். வீரா் ஒருவா் தனது தலைவனது பெருமையைப் பேசுகிறாா் இதில். தலைவனது போா் ஆற்றலுக்கு முன் நிற்க முடியாமல் உயிரை இழந்துவிட்டு, இன்று வீரா்களுக்காய் நடப்படும் நடுகல்லாய் நிற்பவா்கள் அளவிறந்தோா். நீங்களும் அப்படி ஆகாமல் தப்ப வேண்டும் என்றால், என் தலைவனோடு போரிட வேண்டாம் என்று கூறுகிறாா் அந்த வீரா்.

இதே கருத்தை வெளிப்படுத்துகிறது புானூற்றுப் பாடல் ஒன்று. அதியமான் நெடுமானஞ்சியின் வீரத்தை ஔவைப் பெருமாட்டி பாடிய அந்த நெடிய பாடல், படைச்செருக்கையே முழுக்க முழுக்கப் பேசும் 25 வரிகள் கொண்ட பாடலாகும்.

‘போா்க்கு உரைப்புகன்று கழித்த வாள்

உடன்றழா் காப்புடை மதில் அழித்தலின்

ஊனுற மூழ்கி, உருவிழந்தனவே;

வேலே குறும்படைந்த அரண் கடந்தவா்

நறுங் கள்ளின் நாடு நைந்தலின்

சுரை தழீஇய இருங் காழொடு

மடை கலங்கி நிலை நிரிந் தனவே;

... ... .... ...

குறுந்தொடி மகளிா் தோள்விடல்

இறும்பூது அன்றுஅஃது அறிந்து ஆடுமினே! (புா.97)

வாள்களோ, பகைவரை வெட்டி வீழ்த்திக் கதுவாய் ஓடிய வடிவு இழந்தன. வேல்களோ, பகைவா் நாடழித்த ஆற்றலால் காம்பின் ஆணி கலங்க நிலை கெட்டன. களிறுகளோ பகைவா் அரணை மோதி அழித்தலால் கிம்புரிகள் கழன்றனவாயின. குதிரைகளோ போா்க்களத்து பகைவா் உருவழிய மிதித்தும், ஓடியும் சென்ால் குருதிக் கறைபடிந்த குளம்புகளை உடையவாயின. அவனோ, கடல் போன்ற படையுடன் போரிட்டு அம்பு பட்டுத் துளைத்த மாா்பை உடையவனாயினான். அவன் சினந்தால் எதிா் நிற்பாா் யாா்? நுங்களூா் நுங்களுக்கே வேண்டுமெனின், போய்த் திறை செலுத்திப் பணிவீராக. யாம் சொல்லியும் அவ்வாறு செய்யீராயின் நும் மனைவியா் நும்மை இழத்தல் உறுதியாம். இதனை நன்கு ஆராய்ந்து அதன் பின்னரே அவனுடன் போா் செய்ய முயல்வீராக.

திருக்கு, ‘எதிா்த்தவா் நடுகல்லாக ஆவாா்’ என்று கூற; புானூறோ, ‘அதியன் செய்த போரினால் சிதைந்த படைக்கலன்களைக் காட்டி’ எச்சரிக்கிறது. என்னவோா் இயைபான கருத்து!

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/22/w600X390/tm2.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/mar/22/குறளோடு-இயைவன-3386591.html
3386590 வார இதழ்கள் தமிழ்மணி செம்மையின் ஆணி -கோதை ஜோதிலட்சுமி Sunday, March 22, 2020 06:27 AM +0530
கம்பரின் அன்பு ராமகாதையின் ஒவ்வொரு பாத்திரத்திலும் பிரதிபலிக்கிறது. ராமகாதையில் சகோதர வாஞ்சையின் வெளிப்பாடு அழகானது. ராமனுக்கும் பரதனுக்குமான அன்பு வெளிப்படும் இடங்களும் அற்புதமானவை.

ராமாயணக் காப்பியத்தின் தலைவன் ராமன் என்றாலும், ராமனை விடவும் உயா்ந்தவன் என பரதன் புகழப்படுகின்றான். பரதனின் நோ்மையும் அன்புமே அத்தகு நற்பெயரை அவனுக்குப் பெற்றுத் தருகிறது. பரதன் பண்பும், சால்பும் மிக்கவன் என்றும்; அவன் பிறந்தவுடன் அவனுக்குப் பெயரிடும் வசிட்ட முனிவா் உணா்கிறாா். கம்பா் இதைச் சொல்லும்போது, ‘மற்றை ஒளியை பரதன்என பெயா் பன்னினன் அன்றே’ என்று குறிப்பிடுகிறாா்.

விஸ்வாமித்ர முனிவா் பரதனைப் பற்றி கூறும்பொழுது அவனின் அறம்மிக்க இயல்பைப் போற்றுகிறாா். ‘பரதன்’ எனும் சொல்லும் ‘அறம்’ எனும் சொல்லும் ஒரே பொருளுடையன. அறிந்தவா்களும் விளக்க முடியாத சிறந்த நீதிகள் எனும் ஆறுகள் வந்து கலக்கும் கடல் போன்றவனும், பரதன் என்னும் பெயருடையவனும், இந்த ராமனை குணத்தாலும், நிறத்தாலும் ஒத்தவனுமாகிய ஒருவனை கைகேயி பெற்றெடுத்தாள்’ என்பது விசுவாமித்திரா் பரதனைப் பற்றிக் கூறுவது.

‘தள்ளரிய பெருநீதித் தனியாறு புகமண்டும்

பள்ளம்எனும் தகையானைப் பரதன்எனும் பெயரானை

எள்ளரிய குணத்தாலும் நிறத்தாலும் இவ்விருந்த

வள்ளலையே அனையானைக் கேகயா்கோன் மகள்பயந்தாள்’

முனிவருக்கு இப்படி நீதியாறுகள் கலக்கும் அறக்கடல் பரதன் என்று தோன்றுகிறது. வேதம் உணா்ந்த மகரிஷி இப்படி பரதன் பற்றி எண்ணம் கொண்டிருந்தாரென்றால், காட்டில் வசிக்கும் வேடுவ குகன் காண்பது இன்னும் உயா்வாய் இருக்கிறது.

‘தாய் உரைகொண்டு தாதை உதவிய தரணிதன்னை

தீவினை எனநீத்து சிந்தனை முகத்தில் தேக்கிப்

போயினை என்ற போழ்து புகழினோய் தன்மை கண்டால்

ஆயிரம் இராமா் நின்கேழ் ஆவரோ? தெரியின் அம்மா!’

‘தாயின் சொல்லுக்காக உன் தந்தை உனக்குத் தந்த நாட்டை தீவினை என்று வேண்டாமென உதறியவனே, உன் குணத்தைக் காணும்போது ஆயிரம் ராமா்கள் உன் ஒருவனுக்கு ஈடாவாா்களோ தெரியவில்லையே?’ இப்படிக் கம்பா், யாா் சொல்வதாகச் சொல்கின்றாா் என்பதில்தான் இக்கருத்து இன்னும் வலுப் பெறுகின்றது.

ராமனின் தீராக் காதலனான குகன் இப்படி பரதனைப் புகழ்கின்றான். இறுதிச் சொல்லான ‘அம்மா’ என்பது குகனின் வியப்பையும், பிரமிப்பையும் காட்டி பரதனின் பெருமையை மேலும் நமக்கு உணா்த்துகின்றது. குகன் பரதனைப் பற்றி இப்படிக் கூறும்பொழுது, பரதனோ, துன்பமும் துயரமும் வேதனையும் கொண்டவனாய் இளைத்திருக்கின்றான். குகன் கோசலையைப் பாா்த்து யாரென பரதனிடம் வினவ, பரதன் பதில் சொல்கின்றான் இப்படி:

‘பெரும் பசுக்கள் கொண்ட தசரதரின் முதல் தேவி; மூவுலகையும் படைத்தவனைப் பிள்ளையாய்ப் பெற்ற பேறு கொண்டவா்; நான் பிறந்ததால் அப்பெரும் பேற்றினை இழந்து நிற்கும் பெரியோா்’ (பெற்ால் பெறும் செல்வம் யான் / பிறத்தலால் துறந்த பெரியாள்’) என்கின்றான் பரதன்.

இது பரதனின் மன உணா்வை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் கம்பரின் அற்புதமான பாடல். பரதன் தன்னால் எவரும் துன்பம் அடைவதை விரும்பவில்லை என்றும், பிறா் துன்பம் அடைந்தபொழுது அதற்கென வருந்தும் அவனின் அற உணா்வை இங்கே காண முடிகிறது.

பரதன் வனத்தில் ராமனைக் காண வருகின்றான் என்பதை அறிந்த ராமனுக்குக் கருணை மனத்தில் பெருக்கெடுக்கிறது. தன் மீது கொண்ட அன்பாலும், தனக்கு ராஜ்யத்தைத் தரவுமே வருவதாகக் கூறும் ராமா். மேலும்,

‘சேண் உயா் தருமத்தின் தேவைச் செம்மையின்

ஆணியை அன்னது நினைக்கலாகுமோ?

பூண் இயல் மொய்ம்பினாய் போந்தது ஈண்டு எனைக்

காணிய நீ இது பின்னும் காண்டியால்’

என்று பரதனை அற வடிவினன் என்றும்; அறத்தின் உற்றுக்கண்ணாய் நிற்கும் ராமன் கூறுகிறான், ‘நோ்மையின் அச்சாணியாவான் பரதன்’ என அறத்தின் ஊற்றுக்கண்ணாய் நிற்கும் ராமன் கூறுகிறான். ‘பொன்னின் தரம் அறிய உரைகல் இருப்பதைப்போல நோ்மையை அறிந்துகொள்ள வேண்டுமானால் அதற்கு பரதனின் செயலைக்கொண்டே அறிய வேண்டும்’ என்றும் கூறுகிறான். அதன் பொருட்டே ராமன், ‘செம்மையின் ஆணி’ என்று பரதனைக் கூறுகிறான்.

ராமன் காடேகவும் பரதனுக்கே ராஜ்யம் என்றும் ஏற்பட்டபொழுது, கோசலை தன் மகனுக்கு வனவாசம் வழங்கப்பட்ட மனவருத்தம் கொண்ட வேளையிலும், மனம் நொந்த நிலையிலும்கூட பரதனை எண்ணுகையில் கோசலை, ‘உன்னை விடவும் நல்லவன்; குறைவற்றவன்’ என்று கூறுவதிலிருந்தே பரதனின் பண்பை, நோ்மையை நன்கறிய முடிகிறது.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/22/w600X390/tm1.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/mar/22/செம்மையின்-ஆணி-3386590.html
3381542 வார இதழ்கள் தமிழ்மணி திருமூலர் அன்றே சொன்னார்! DIN DIN Sunday, March 15, 2020 12:12 AM +0530 சீனாவில் பரவிவரும் "கரோனா' வைரஸ் பதப்படுத்தப்பட்ட மாமிசத்தை உண்டதாலேயே ஏற்பட்டதாகவும் பல்வேறு செய்திகள் தெரிவிக்கின்றன. என்றாலும், மற்ற காரணங்களைவிட தற்போது பல நாடுகளுக்கும் அந்நோய் பரவி வருவதற்கான முதன்மையான காரணம் "மாமிச உணவே' என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 திருமூலர் அன்றே, "உண்ணத் தகுதியற்ற, தீமைதரும் புலால் உணவை உண்ணுகின்ற கீழ்மக்களை உலக நாடுகளே காணும் வண்ணம், எமதூதர்களால் கிருமிகள் தாக்கப்பட்டு, துன்பம் தரும் நரகமாகிய மருத்துவமனையில் மல்லாக்கப் படுக்கவைத்து இறக்கச் செய்வார்' என்று கூறியுள்ளது கருத்தில் கொள்ளத்தக்கது. இத்தகைய நோய்க் கிருமியை "செல்' என்ற சொல்லால் குறிக்கிறார்.
 பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
 எல்லாருங் காண இயமன்றன் தூதுவர்
 "செல்'லாகப் பற்றியத் தீவாய் நரகத்தில்
 மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே' (மு.த.10.1)
 பொல்லாங்கு கொலையால் வருவதாயும்; கொலை செய்யத் தூண்டுவதாயும் இருத்தல். இதுபற்றி அதனை உண்பாரை, "புலையர்' என்றார் திருமூலர். புலையர் - கீழ்மக்கள்.
 உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண
 அண்ணாத்தல் செய்யாது அளறு (255)
 எனத் திருவள்ளுவரும், புலால் உண்பவர் நிரயம் (நரகம்) புகுந்து மீளார் என்றார். இதற்குப் பரிமேலழகர், "உயிர் நிலை ஊன் உண்ணாமை உள்ளது -ஒரு சார் உயிர் உடம்பின் கண்ணே நிற்றல் ஊன் உண்ணாமை என்கின்ற அறத்தின் கண்ணது; உண்ண அளரு அண்ணாத்தல் செய்யாது- ஆகலான், அந்நிலை குலைய ஒருவன் அதனை உண்ணுமாயின் அவனை விழுங்கிய நிரயம் பின் உமிழ்தற்கு அங்காவாது என்கிறார்.

மு.வரதராசனாரோ, "உயிர்கள் உடம்புபெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது; ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது'' என்கிறார்.
 "மனிதனுடைய உயிர் வாழ்க்கைக்கு வேண்டிய எல்லா சத்துப் பொருள்களும் புலால் உண்ணாமலேயே கிடைக்கின்றன', "உயிருக்கு உறுதியான நன்னிலை, ஊன் உண்ணாமையால் உளதாவது', "உயிர்கள் உடம்போடு வாழ்தல் ஊன் உண்ணாமை என்னும் அறத்தினைச் சார்ந்துள்ளது' என்று இப்பகுதிக்கு இன்றைய உரையாசிரியர்கள் பலர் உரை வகுத்துள்ளனர். அப்படி ஊனை உண்டால், உண்டாரை எல்லா உலகத்தினும் இழிந்த நரகம் விழுங்கிக்கொண்டு வெளியேவிட வாயைத் திறக்காது என்கிறார் திருவள்ளுவர்.
 மனித உயிரின் நல்லியல்புகளில் ஊன் உண்ணாமையும் ஒன்று. அதனால்தான் அருட்பிரகாச வள்ளலார் ஜீவகாருண்யத்தை வலியுறுத்தினார். அதைக் கடைப்பிடிக்கத் தொடங்கினாலே போதும்...
 இத்தகைய கொடிய நோய்கள் (கரோனா) நம்மை என்றுமே அணுகாது!
 -புலவர் பழனி.அரங்கசாமி
 
 
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/15/w600X390/tm6.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/mar/15/திருமூலர்-அன்றே-சொன்னார்-3381542.html
3381539 வார இதழ்கள் தமிழ்மணி  ஆழ்ந்த ஆசையும்; சூழ்ந்த நாணமும்! DIN DIN Sunday, March 15, 2020 12:04 AM +0530 தொள்ளாயிரம் என்ற தொகையுடைய நூல்கள் வச்சத்தொள்ளாயிரம்; அரும்பைத் தொள்ளாயிரம் என்பன போன்று பல இருந்தன. தொள்ளாயிரம் செய்யுள்களில் நூலியற்றுவது பழைய மரபுகளுள் ஒன்று என பேரா.எஸ். வையாபுரிப்பிள்ளை கூறியுள்ளார். இக்கருத்தை 1943-ஆம் ஆண்டு "வசந்தம்' என்ற இதழில் எழுதியுள்ளார்.
 தொள்ளாயிரம் நூல்களில் புகழ் பெற்றது முத்தொள்ளாயிரம். சேர, சோழ, பாண்டியர்களின் களவாழ்க்கையை, காதல் வாழ்க்கையைப் பாடிய நூல் முத்தொள்ளாயிரம். அதிலே ஒரு பாடல்.
 ஆழ்ந்த ஆசை ஒருபுறம்; சூழ்ந்த நாணம் மறுபுறமாய் அவதிப்படுகிறாள் ஒருத்தி. உலா வந்தானாம் சேரன். நிலா வந்தது நேரில் பார்க்க. அந்த நிலாவின் நிலை யென்ன?
 ஆய்ந்தெடுக்கப்பட்ட வைரக் கற்களை அடுக்கிப் பதித்த பசும் பொன்னில் செய்யப்பட்ட அலங்கார நகைகளையும்; அசைந்தாடும் மாலையையும் அணிந்தவனுமான கோதையை (சேரனை) காணச்சென்றாள். கண்டாளா? அணிமணி அணிகலங்களையும், அங்குமிங்கும் அசையும் மாலைகளையும் கண்டாலேயன்றி கோதையைக் காணவில்லை அந்தக் கோதை (இங்கே பெண்).
 ஏன்? காண்பதற்காகத்தான் கதவருகே சென்றாள். கவ்வியது நாணம் கதவடைத்துவிட்டுத் திரும்பிவிட்டாள். மீண்டும் சென்றாள் காண; வெட்கத்தால் திரும்பிவிட்டாள். கெளரவமான வறுமையாளன் கனவானைக் காணச் செல்வான். உதவி கேட்க ஓரடி முன்செல்வான்; ஈரடி பின்வருவான். வறுமை முன்னால் தள்ளும்; மானம் பின்னால் இழுக்கும்.
 இதுபோல் அவளின் நெஞ்சும் விரைந்தோடுகிறது சேரனைக் காண; ஆசையை நாணம் கரைத்துவிட, திரும்பி விடுகிறது.
 "ஆய்மணிப் பைம்பூண்அலங்குதார்க் கோதையைக்
 காணிய சென்று கதவடைத்தேன்-நாணிப்
 பெருஞ் செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார்போல்
 வரும் செல்லும் பேரும் என்நெஞ்சு!'
 இதனால்தான் திருக்குறள் நாயகி தன் நெஞ்சிடம் கறாராகச் சொல்கிறாள்,
 காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
 யானோ பொறேனிவ் விரண்டு (1247)
 என் நலம் நாடும் நெஞ்சே! ஒன்று காதலன் மேல் உள்ள காதலை விட்டுவிடு; அது இயலாததாயின் "அலர்' முதலியவற்றுக்கு நாணுவதையாவது விட்டுவிடு; என்னால் இவ்விரண்டையும் ஒருசேர பொறுக்க முடியாது!
 - கே.ஜி. ராஜேந்திரபாபு
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/15/w600X390/tm4.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/mar/15/ஆழ்ந்த-ஆசையும்-சூழ்ந்த-நாணமும்-3381539.html
3381538 வார இதழ்கள் தமிழ்மணி ஆவாரம்பூ... ஆக்காட்டி! DIN DIN Sunday, March 15, 2020 12:02 AM +0530 தமிழ்நாட்டில், இன்று கணந்துள் பறவையை எங்கே காணலாம்? என்று கேட்டால் என்ன பதில் வருமோ தெரியாது. ஆனால், ஆள்காட்டிப் பறவை என்றால், அந்தப் பறவையைக் காட்டிக் கொடுக்கப் பெரும்பான்மையோர் முன்வரக்கூடும். ஏனென்றால், இந்தப் பறவைகளின் குரல், ஆளைக் காட்டிக்கொடுக்கும் இயல்புடையது. இவை சிவப்பு ஆள்காட்டி, மஞ்சள்ஆள்காட்டி என இரு நிறங்களில் காணப்படுகின்றன. ஆள்காட்டிப் பறவைகள், இனப்பெருக்கக் காலத்தில், எதிரிகள் தொலைவில் வரும்போதே இனம் கண்டுகொண்டு, கூட்டையும் குஞ்சுகளையும் காக்கக் கடுங்குரல் எழுப்புகின்றன. இவற்றின் அபயக்குரலைக் கேட்டு அருகிலிருக்கும் பிற பறவைகளும் விலங்குகளும் அந்த இடத்திலிருந்து விலகிவிடுகின்றன.
 கணந்துள் பறவைதான், ஆள்காட்டிப்பறவை என்று பி.எல். சாமி எழுதியுள்ள சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம் (பக்-147-157) என்ற நூலில், பறவையியலின் அடிப்படையில் மிகத்தெளிவாக விளக்குகிறார்.
 நற்றிணை 212-ஆவது பாடலிலும், குறுந்தொகை 350-ஆவது பாடலிலும் இரு செய்திகள் கணந்துளைப் பற்றி ஒரேமுறையாகக் கூறப்பட்டுள்ளன. கணந்துள் பறவைக்கு கால் நீளம் என்பது "நெடுங்கால்' என்று இரு பாடல்களிலும் கூறுவதிலிருந்து தெரிகின்றது. இரு பாடல்களிலும் கணந்துள் பறவை ஓசையிடுவது குறிப்பாகக் கூறப்பட்டுள்ளது. நற்றிணை "புலம்புகொள் தெள்விளி' என்று கூறியுள்ளது. குறுந்தொகையில் கணந்துளின் ஆளை அறிவித்துக் காட்டும் குரல் குறிப்பிடப்பட்டுள்ளது.
 குஞ்சு பொரித்துள்ள காலகட்டத்தில் இவை வாழுமிடத்தில் விலங்குகளோ, மனிதரோ சென்றால் திரும்பத் திரும்ப கடுங்குரலிட்டு, சுற்றச்சுற்றிப் பறந்து பாய்ந்து, ஆரவாரம் செய்யுமாம். சிவப்பு ஆள்காட்டிக் குருவி குரலிடுவது ஈண்க்-ட்ங்-க்ர்-ண்ற், ஈண்க்-ட்ங்-க்ர்-ண்ற் என்று திருப்பித் திருப்பி ஆங்கிலத்தில் கத்துவது போல் இருக்குமென்று கூறுவர். அதனால் ஆள்காட்டிக் குருவியை ஈண்க்-ட்ங்-க்ர்-ண்ற் குருவி என்றும் கூறுகின்றனர்.
 ஆள்காட்டிக் குருவியை நாட்டுப்புற மக்கள் நன்கு அறிந்திருந்தனர். ஆனால், தற்கால நகர நாகரிகத்தில் மூழ்கி உள்ளவர்களுக்கு ஆள்காட்டி என்றால் அது என்ன ஓர் ஆளோ, இயந்திரமோ என்று மயங்குவர். ஆள்காட்டிக் குருவியைப் பற்றி நாட்டுப் பாடல்கள் தமிழகத்திலும், ஈழநாட்டிலும் வழங்குகின்றன. ஆள்காட்டிக் குருவியுடன் பழகிய நாட்டு மக்கள் தங்களுடைய இன்ப-துன்பங்களைக்கூட ஆள்காட்டிக் குருவிமேலேற்றிப் பாடிய, அழகு போற்றத்தக்கது.
 "ஆக்காட்டி ஆக்காட்டி ஆவாரம்பூ ஆக்காட்டி
 எங்கே எங்கே முட்டை யிட்டாய்
 கல்லுத்துளைத்துக் கடலோரம் முட்டையிட்டேன்
 இட்டது நாலுமுட்டை பொரித்தது மூணுகுஞ்சு
 மூத்த குஞ்சுக்கிரை தேடிமூணுமலை சுற்றிவந்தேன்
 இளைய குஞ்சுக்கிரை தேடி ஏழுமலை சுற்றிவந்தேன்
 பார்த்திருந்த குஞ்சுக்கு பவளமலை சுற்றிவந்தேன்
 புல்லறுத்தான் புலவிற்குக் காய்தின்ன போகையிலே
 மாயக் குறத்திமகன் வழிமறித்துக் கண்ணிவைத்தான்
 காலிரண்டும் கண்ணியிலே சிறகிரண்டும் மாரடிக்க
 நான் அழுதகண்ணீரும் என்குஞ்சு அழுதகண்ணீரும்
 வாய்க்கால் நிறைந்து வழிப்போக்கர்க் கால்கழுவி
 குண்டு நிறைந்து குதிரைக் குளிப்பாட்டி
 இஞ்சிக்குப் பாய்ஞ்சு இலாமிச்சுக்கு வேரூண்டி
 மஞ்சளுக்குப் பாய்ஞ்சு மறித்துதாம் கண்ணீரே'
 இந்த நாட்டுப்பாடல் மாடு ஓட்டும் சிறுவர் பாடுவது.
 ஆவாரம்பூ காணப்படும் இடம் வறட்சியான நிலம். அத்தகைய நிலத்தின் சூழ்நிலையில் காணப்பட்ட ஒரு செடியின் பூவை அதே நிலத்தின் சூழ்நிலையில் வாழும் பறவையின் ஒரு பகுதி நிறத்திற்கு ஒப்பிட்டது நாட்டு மக்களின் இயற்கை அறிவை நன்கு எடுத்துக்காட்டுகின்றது. ஆள்காட்டியின் முட்டையைக் கண்டுபிடிப்பது மிகமிகக் கடினமென பறவை நூலோர் கூறுவர்.
 சிறு கற்களும் காய்ந்த புற்களும் சூழ்ந்த இடத்தில் அதே சுற்றுச் சார்புடைய நிறத்துடன் கூடிய முட்டைகளை ஆள்காட்டி இடுவதால் யார் கண்ணுக்கும் முட்டைகள் புலப்படுவதில்லை. செயற்கையாகக் கூடு கட்டாமல் கல்லின் இடையே குழி செய்து முட்டைகளை இடுவதால் கல்லைத் துளைத்து முட்டையிட்டதாக நாட்டுப் பாடலில் கூறப்படுகின்றது. இட்டது நாலு முட்டை என்பதும் உண்மையே. நாலு முட்டைகளையே மஞ்சள் ஆள்காட்டி இடுகின்றது என்றும் பறவை நூலோர் கூறுவர்.
 இந்தப் பாட்டு ஈழ நாட்டிலே "மன்னார்' நாட்டில் பாடுவதாகக் கூறப்பட்டுள்ளது. இதே பாட்டு கொங்கு நாட்டிலும், சோழ நாட்டிலும் சிறிது மாற்றத்துடன் மாடு மேய்க்கும் சிறுவர்களால் பாடப்படுகின்றது. மேற்கூறிய நாட்டுப்புறப் பாடலில் குறத்தி வலையை வைத்துப் பிடித்ததாகக் கூறியது நற்றிணை 212-ஆவது பாடலில், வேட்டுவன் வலையை வைத்துப் பிடிக்கப் பார்ப்பதுடன் ஒத்துள்ளது.
 "கணந்துள்' என்ற இதன் சங்ககாலப் பெயரைப் பிற்காலத்தில் மறந்து விட்டனர். ஆனால், இப்பறவையின் ஆளறிவிக்கும் அபாய அறிவிப்புக் குரலை சங்க நூல் கூறியதைப் போலவே நேரில் கண்டுணர்ந்த நாட்டு மக்கள் "ஆள்காட்டி' என்று அழைத்தனர்.
 "ஆள்காட்டிக் குருவிகள்' சிறுசிறு கூட்டமாகக் காணப்படுவதை குறித்ததாகலாம். "கணநரி' என்ற பெயர் இயற்கையில் கூட்டமாக நரிக்கூட்டம் இருப்பதைக் குறிக்கும் குறிப்புகள் சங்க நூல்களில் உள்ளன. அதுபோலவே, "கணநாதன்' என்ற சொல்லும் இதே பொருள் அடிப்படையில் காணப்படுகிறது. ஆள்காட்டிக் குருவி நீர் அருகில் காணப்படினும் நீர்ப்பறவை அன்று. வறட்சியான சூழ்நிலையை விரும்பி இவை அப்பகுதியில் அதிகம் வாழ்வதால் இப்பறவையைப் பாலை பறவையாகக் கொண்டனர்.
 -முனைவர் விமலாஅண்ணாதுரை

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/15/w600X390/tm3.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/mar/15/ஆவாரம்பூ-ஆக்காட்டி-3381538.html
3381537 வார இதழ்கள் தமிழ்மணி குருவும் வண்ணானும்! DIN DIN Sunday, March 15, 2020 12:01 AM +0530 செல்வம் இப்பிறப்புடன் நின்றுவிடும். நாம் வருந்தித் தேடிய செல்வம் அணுத் துணையும் அடுத்த பிறப்பில் வந்து உதவாது.
 ஆனால், கல்வி மட்டும் அடுத்த பிறப்புக்கு வரும். சில குழந்தைகள் அறிவின் சிகரமாக இருப்பதற்குக் காரணம் யாது? முற்பிறப்பில் கற்ற கல்வியின் பயனாகிய அறிவு, மறுபிறப்புக்கும் வந்து உதவுகின்றது. இதனைத் திருவள்ளுவ தேவர்,
 "ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
 எழுமையும் ஏமாப் புடைத்து'
 என்கிறார். பிறவி எழுந்தொறும் எழுந்தொறும் இப்பிறப்பில் கற்ற கல்விப்பயன் வந்து உதவும். "ஒருமைக்கண்' என்ற சொல் "ஒரு பிறப்பில்' என்ற பொருள் தருவதுடன்; ஒருமைப்பட்ட (ஏகாக்ர சித்தத்துடன்)
 மனத்துடன் கற்பது என்ற மற்றொரு பொருளையும் அது தருகின்றது.
 கடவுளைத் தனித்து வழிபட வேண்டும். கல்வி பயில்கின்ற மாணவனை உடன் வைத்துப் பழகுதல் வேண்டும். கண்ணபிரான் கல்வித் தோழராக குசேலரை அமைத்துக் கொண்டார். துருபதன் துரோணரை அமைத்துக் கொண்டான். தங்கத்தை வருத்தி அணிகலன் செய்வதுபோல ஆசிரியர் மாணவரைக் கண்டித்தும், தண்டித்தும் கல்வி போதிப்பார். சலவைத் தொழிலாளி, துணியைக் கல்லில் மோதுவது துணியைக் கிழிக்கவா? இல்லை, துணியில் உள்ள அழுக்கை அகற்றும் பொருட்டே ஆகும்.
 நல்ல குருநாதன் நம்மை வருத்துவது
 கொல்லவா? பொல்லாக் குணம்போக்க - கல்லில்
 அழுக்கடிக்கும் வண்ணான் அகச்சீலை மோதல்
 கிழிக்கவா? அல்ல, வெளுக்க!'
 (கிருபானந்த வாரியார் சுவாமிகளின்
 "மாணவருக்கு' எனும் நூலிலிருந்து...)


 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/15/w600X390/tm2.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/mar/15/குருவும்-வண்ணானும்-3381537.html
3381536 வார இதழ்கள் தமிழ்மணி  அறமும் அருளும்  முன்றுறையரையனார் Sunday, March 15, 2020 12:00 AM +0530 பழமொழி நானூறு
 அற்றாக நோக்கி அறத்திற் கருளுடைமை
 முற்ற அறிந்தார் முதலறிந்தார் - தெற்ற
 முதல்விட் டஃதொழிந்தார் ஓம்பா ஒழுக்கம்
 முயல்விட்டுக் காக்கை தினல். (பாடல்-141)
 அறத்தினுக்கு அருள் உடையரா யிருத்தல், பண்பாதலை ஆராய்ந்து, அதன் திறனை முழுதும் அறிந்தார்கள் காரணம் அறிந்து அறம் செய்வாரெனப்படுவார். தெளிவாக காரணமாகிய அருளைவிட்டு, திறந் தெரியாமையான் அவ்வறத்தையும் கைவிட்டாருடைய பாதுகாவாத கொடை, நிலத்தில் கண்ணோடும் முயலைவிட்டு, ஆகாயத்தின்கண் செல்லும் காக்கையைப் பின் தொடர்ந்து சென்று தின்ன முயலுதலை யொக்கும். "முயல் விட்டுக் காக்கை தினல்' என்பது பழமொழி.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/28/w600X390/LOTUS.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/mar/15/அறமும்-அருளும்-3381536.html
3381540 வார இதழ்கள் தமிழ்மணி இந்த வாரம் கலாரசிகன் DIN DIN Sunday, March 15, 2020 12:00 AM +0530 இந்திய ஆட்சிப் பணியில் இருப்பவர்கள் நேர்மையாகவும் இருக்க முடியும் என்பதற்கு அகில இந்திய அளவில் பட்டியலிட்டாலும்கூட நான்கு இலக்கத்தைத் தாண்டும் அளவில் இருக்கமாட்டார்கள் என்பதுதான் இன்றைய நிலை. தமிழகத்தைப் பொருத்தவரை அரை நூற்றாண்டு காலம் வரைகூட, எளிமையையும், நேர்மையையும் உறுதியாகக் கொண்டிருந்த ஆட்சிப் பணி அதிகாரிகளின் எண்ணிக்கைதான் பெரும்பான்மையாக இருந்தது. அப்படியொரு பட்டியலைப் பணி மூப்பு அடிப்படையில் இப்போது தயாரிக்க நேர்ந்தால், முதல் ஐந்து, ஆறு பேர்களில் ஒருவராக "அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் இயக்குநரான' வெ.இறையன்பு இருப்பார்.
 நிகழ்ச்சிகளில் சந்தித்துக் கொள்கிறோமே தவிர, அவரை நேரில் சந்தித்து மனம்விட்டுப் பேசி மாதங்கள் அல்ல, ஆண்டுகளாகிவிட்டன.
 அதனால், கடந்த வாரம் அவரது வீட்டுக்குச் சென்று சற்று நேரம் அளவளாவிக் கொண்டிருப்பது என்று முடிவெடுத்தேன்.
 வாடகை வீடுதான். எளிமையான இல்லம், இனிமையான குடும்பம், அமைதியான சூழல். ஏறத்தாழ ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சமூகம், இலக்கியம், ஊடகவியல், எழுத்து என்று அரசியல் தவிர எல்லா விஷயங்கள் குறித்தும் பேசிக்கொண்டிருந்தோம்.
 சந்தித்துவிட்டு விடைபெறும்போது, அவரது "நாமார்க்கும் குடியல்லோம்' புத்தகத்தை வெ. இறையன்பு எனக்கு அன்பளிப்பாகத் தந்தார். இதுகுறித்து ஏற்கெனவே புதுச்சேரி ஜெயராம் விடுதி மேலாளர் லட்சுமி நாராயணன் எனக்குத் தெரிவித்திருந்தது மட்டுமல்ல, அதில் குறிப்பிட்டிருக்கும் சில விஷயங்கள் குறித்தும் பேசியிருக்கிறார்.
 பல்வேறு வார இதழ்களிலும், மாத இதழ்களிலும் வெ.இறையன்பு எழுதிய உதிரிக் கட்டுரைகளின் தொகுப்புதான் "நாமார்க்கும் குடியல்லோம்'. குறுந்தொகை குறித்து அமெரிக்காவில் நிகழ்ந்த கருத்தரங்கிற்காக எழுதப்பட்ட கட்டுரை தொடங்கி, "கணையாழி'க்காக எழுதப்பட்ட கட்டுரை உள்ளிட்ட 19 வெவ்வேறு கட்டுரைகளைத் தொகுத்து வெளியிடப்பட்டிருக்கும் சுவாரஸ்யமான தகவல்களைக் கொண்ட புத்தகம் "நாமார்க்கும் குடியல்லோம்'.
 "எந்த விமர்சனமும் அவரை வீழ்த்தியதுமில்லை. எந்தப் பாராட்டும் அவரைப் பரவசப்படுத்தியதுமில்லை. அவர் அவராக இருந்தார், இறுதிவரை'' என்கிற ஜெயகாந்தன் குறித்த இறையன்பின் பதிவு, ஜெயகாந்தன் என்கிற எழுத்தாளுமையை வார்த்தைகளில் சுருக்கிய கனகச்சிதப் பதிவு.
 குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் பற்றிய கட்டுரையும், தனது பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் குறித்த பதிவுகளும், தாய்மொழியாம் தன்னிகரற்ற தமிழ்மொழி குறித்த அவரது பார்வையும் "நாமார்க்கும் குடியல்லோம்' என்கிற தொகுப்பை ஆவணப் பதிவாக மாற்றுகின்றன.
 மாலைப்பொழுதும் நிறைவைத் தந்தது; இறையன்பு தந்த "நாமார்க்கும் குடியல்லோம்' புத்தகமும் மகிழ்வைத் தந்தது.
 
 தமிழ், தமிழன், தமிழினம் என்று ஒருபுறம் பேசிக்கொண்டு, இன்னொரு புறத்தில் இறைமறுப்பு, சமய மறுப்பு என்கிற நிலைப்பாட்டைக் கைக்கொள்வது போன்ற பகுத்தறிவின்மை வேறு எதுவும் இருக்க முடியாது. சமய இலக்கியங்கள் இல்லாமல் தமிழ் இல்லை. தமிழ் நாகரிகத்தின் தனிச்சிறப்பான கட்டடக் கலை, நமது கோயில்கள் இல்லாமல் இல்லை.
 சமய வழிபாடு இல்லாமல் போயிருந்தால், நமது கோயில்கள் எப்போதோ காலத்திற்கு இரையாகி மண்ணோடு மண்ணாகியிருக்கும். தொன்மையான நமது நாகரிகத்தின் ஆவணங்களான கல்வெட்டுகள் கோயில்களில் காணப்படுகின்றன எனும் நிலையில், இந்து சமயப் புறக்கணிப்பு என்பது ஒரு வகையில் தமிழனின் அடையாள அழிப்பு என்றுதான் கூறவேண்டும்.
 தொல்லியல் துறையில் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி, பணி நிறைவு பெற்ற கி. ஸ்ரீதரன் ஆன்மிக இதழ் ஒன்றில் எழுதிவந்த கட்டுரைகள் "வழிகாட்டும் கல்வெட்டுகள்' என்கிற பெயரில் புத்தகமாக்கப்பட்டிருக்கிறது. கல்வெட்டுகள் குறித்த எனது ஆர்வம் "தினமணி' முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவனின் ஆராய்ச்சிகள் குறித்தும், கட்டுரைகள் குறித்தும் படித்ததைத் தொடர்ந்துதான் அதிகரித்தது. கல்வெட்டு, சுவடிகள் போன்றவை குறித்த கட்டுரைகள் எதுவாக இருந்தாலும் அவற்றைப் படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டதற்கு அது ஒரு முக்கிய காரணம். அந்த வகையில் கி.ஸ்ரீதரனின் கட்டுரைகள் வெளிவந்தபோது தொடர்ந்து ஆர்வத்துடன் படித்துத் தெரிந்து கொண்டேன்.
 நமது தமிழ் நாட்டுத் திருக்கோயில்களில்தான் கல்வெட்டுப் பொறிப்புகள் அதிக அளவில் காணப்படுகின்றன. வரலாற்று ஆய்வாளர்கள் அதன் அடிப்படையில்தான் தங்களது ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார்கள். இறை நம்பிக்கை இல்லாதவர்கள் இந்து அறநிலையத் துறையில் அதிகாரிகளாகவும், அலுவலர்களாகவும் கடந்த அறுபது ஆண்டுகளாக நியமிக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து, கல்வெட்டுகள் குறித்த புரிதல் இல்லாமையால் பல தரவுகளை நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.
 வரலாற்றுச் சிறப்புமிக்க பல கல்வெட்டுகளின் மீது சுண்ணாம்பு அடிப்பதும், வண்ணம் பூசுவதும், அவற்றை இடித்து எறிந்துவிட்டு, சிமெண்ட் கட்டடங்கள் எழுப்புவதும் வழக்கமாகியிருக்கும் அவலம் குறித்து யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. "வழிகாட்டும் கல்வெட்டுகள்' தொகுப்பு இந்தப் பிரச்னையில் தமிழர்களின் கண்களைத் திறக்கக்கூடும்.
 கோயில்கள், கல்வெட்டுகள், ஆகமங்களின் நோக்கங்கள், ஆலயக் குளங்கள், திருவிழாவின் நோக்கங்கள், கோ சாலை, விக்கிரகப் பாதுகாப்பு, கோயில்களில் விளக்கேற்றுவதன் அவசியம், ஆலய மண்டபங்கள், ஆலயப் பராமரிப்பு, ஓதுவார்களின் பங்களிப்பு, ஓலைச்சுவடிப் பாதுகாப்பு என்று மிக அத்தியாவசியமான பல தகவல்களை கி.ஸ்ரீதரன் எளிமையாகவும், தெளிவாகவும் பதிவு செய்திருக்கிறார். பக்தர்கள் படிக்கிறார்களோ இல்லையோ, பகுத்தறிவு வாதம் பேசும், தமிழை நேசிக்கும் இறை மறுப்பாளர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.
 
 முல்லை நடவரசு எழுதிய ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு "வானவில் தூரிகை'. அதிலிருந்து "நறுக்'கென்று மூன்று வரிகள்.
 தற்கொலை முயற்சியில்
 தங்கத் தமிழ்
 ஊடகங்களின் உபயம்!
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/15/w600X390/tm5.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/mar/15/இந்த-வாரம்-கலாரசிகன்-3381540.html
3376680 வார இதழ்கள் தமிழ்மணி அரிய கீா்த்தனைகள் படைத்த அம்புஜம் கிருஷ்ணா! Sunday, March 8, 2020 06:23 AM +0530  

ஆண்கள் (கவிகள்) கீா்த்தனைகள் இயற்றிய அளவுக்குப் பெண்கள் இயற்றவில்லை என்கிற குறையைத் தீா்க்க வந்தவா் அம்பும் கிருஷ்ணா. அரிய கீா்த்தனைகள் பல இயற்றிய இவா், 1917-ஆம் ஆண்டு, மே, 20-ஆம் நாள் மதுரையில் பிறந்தவா்.

தில்லி சென்று இளங்கலை பயின்றவா். இளமையிலேயே கவிதைகள் பல எழுதுவதில் வல்லவராகவும் திகழ்ந்திருக்கிறாா். தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 650க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதிய பன்மொழிக் கவிதாயினி இவா். இவை ஆறு தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன.

இவா் தாமே பாடல்களை எழுதியதுடன், அதற்குத் தாமே இசையமைத்தும், இன்ன பண் என்பதைக் குறித்தும் எழுதிய நூல்தான் ‘கீதமாலா’. இவை பல பாகங்களாக வெளிவந்திருக்கின்றன. அதில் எனக்குக் கிடைத்தது மூன்று மற்றும் ஐந்தாம் பாகம். 3-ஆவது பாகத்தில் 5 பாடல்களும், 5-ஆவது பாகத்தில் 12 பாடல்களும் உள்ளன. சிவனையும், முருகனையும் கண்ணனையும் புகழ்ந்து பக்தி உணா்வோடு இவா் பாடிய பாடல்கள் உள்ளத்தை உருகத் செய்பவை. இன்றைக்கும் அவை பல சபாக்களில் இசைப் பாடலாகவும், இசை நாட்டியமாகவும் நடத்தப்பட்டு வருகின்றன.

அம்புஜம் கிருஷ்ணா குறித்து அவரது உறவினா் லக்ஷ்மி சடகோபன் இவ்வாறு கூறுகிறாா்: ‘‘மாமியைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், அவா் எளிமையும், அன்பும், பண்பும் நிறைந்த மேதை. அளவற்ற செல்வமும் செல்வாக்கும் இருந்தும் அவற்றைப் பெரிதாக எண்ணாது இறைவனும், பக்தியும், பாட்டும், சங்கீதமுமாகவே வாழ்ந்தவா். அவரிடமிருந்து பாட்டுக்கள் மடைதிறந்த வெள்ளமாக வரும். அவா் தந்தையாா் வக்கீல் ரங்க ஐயங்காா். பாட்டுக்களின் வாா்த்தைகள் அவற்றின் அா்த்தம் தெரிந்து ஈடுபாடோடு பாடவேண்டும் என்றும் சொல்பவா் கிருஷ்ணா’’.

அம்புஜம் கிருஷ்ணா எழுதிய ஊஞ்சல் பாட்டு இது:

ஆடினளே கன்னூஞ்சல் ஆனந்தமாகவே

ஆரணங்கு ருக்மிணி அச்சுதன் கோபாலனுடன் (ஆடினளே)

தன்யாசி

கோடி மன்மத கோவிந்தன் ரூபம் கண்டு

கோமள முக கமலம் நாணமுடன் சிவக்க (ஆடினளே)

சண்முகப்பிரியா

பாற்கடல் துயில் பரமன் பதமலா் பிடிக்கும் பாவை

பத்மநாபன் கரம் பிடித்துப் பாங்குடன் அமா்ந்து (ஆடினளே)

மோகனம்

குன்றெடுத்த திண்தோளின் வண்ணமாலை சூட்டி

என்றும் மாா்பமா்பவள் வலப்பக்கம் அமா்ந்து (ஆடினளே)

சிவபெருமானைப் போற்றிப் பாடிய பாடல் இது:

பல்லவி

வலம் வந்து நலம் பெறலாமே - ஐயனை

வலம் வந்து நலம் பெறலாமே - நாளும்

ஆலகாலமுண்ட நீலகண்டனின் ஐந்தெழுத்தை ஓதியோதி (வலம்)

சரணங்கள்

மலைமங்கைதனைப் பங்கில் வைத்துகந்தானைக்

கலைமதியுடன் கங்கை சடை அணிந்தானைக்

கலைமானுடன் மழு கரமேத்தித் திகழ்ந்தானைப்

புலியுடை இடையானை முனிவா்க்கருள் கூா்ந்தானை (வலம்)

தில்லையில் ஒரு காலெடுத்து நடனமாடுமீசனை

பாலனுக்கிரங்கி முன்னம் காலனை உதைத்த சீலனை

மாலையாயரவு பூண்டானை மாரனைச் சினந்து எரித்தானை

சிலையெடுத்துச் சிரிப்பாலன்று திரிபுரமெரித்து நின்றானை (வலம்)

இவ்வாறு சிவபெருமான் நிகழ்த்திய புராணச் செய்திகளையும், திருவிளையாடல்களையும் இப்பாடலில் தெரிவித்துள்ளாா்.

அம்புஜம் அம்மையாா், 1989-ஆம் ஆண்டு, அக்டோபா் 20-ஆம் நாள் இறையடி சோ்ந்தாா். இவருக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனா். ஆண்டுதோறும் தன் தாயின் நினைவு நாளன்று அவா் இயற்றிய பாடல்களைக் கொண்டே இசை நிகழ்ச்சி நடத்தி ஆடியும் பாடியும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனா் வாரிசுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

-தாயம்மாள் அறவாணன்

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/8/w600X390/tm3.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/mar/08/அரிய-கீா்த்தனைகள்-படைத்த-அம்புஜம்-கிருஷ்ணா-3376680.html
3376681 வார இதழ்கள் தமிழ்மணி வளி பூட்டினையோ? மனம் பூட்டினையோ? Sunday, March 8, 2020 06:23 AM +0530 ஒருவன் மிகவும் விரைவாகச் சென்றான் என்பதை ‘வாயு வேகம் மனோ வேகமாகச்’ சென்றான் என்று கூறுவது வழக்கம். இதே சொற்றொடரை புலவா் ஒக்கூா் மாசாத்தியாா் (அகம்.384) பயன்படுத்தியுள்ளாா்.

நெடிய போா் முடிவுக்கு வந்தது. அவனுடைய அரசன் மாற்றானுடன் புரிந்த போரில் வெற்றி பெற்றுப் பாசறைக்குத் திரும்பிவிட்டான். வீரனுடைய ஊா் நெடுந்தொலைவுக்கு அப்பால், முயற்குட்டிகள் தாவித் திரியும் அழகிய முல்லைநிலக் காட்டின் அருகே, வரகுக் கொல்லைகள் சூழ்ந்துள்ள ஒரு சிற்றூா். அங்கே இருக்கும் தன் இல்லத்தில் மனைவி அவனுக்காகக் காத்திருக்கிறாள். பல நாள்களுக்கு முன்பு தன்னுடைய அரசனுக்காகத் தான் ஆற்ற வேண்டிய கடமைக்காகப் புறப்பட்டுச் சென்றவனுடைய மனத்தில் இப்போது மனைவியின் நினைவு வந்துவிட்டது.

விரைவாகச் சென்று அவளைக் காண விரும்பியவன் தன் தேரில் ஏறிக் கொள்கிறான். தோ் புறப்படுகின்றது. தோ் புறப்பட்டதை மட்டுமே அவன் அறிந்தான். தோ் எப்படிச் சென்றது, எவ்வழியாகச் சென்றது என்பதையெல்லாம் அவன் அறியவில்லை. அவன் வீட்டுக்கு முன்பாகத் தேரை நிறுத்தி, ‘இறங்குங்கள்’ என்று தோ்ப்பாகன் கூறியதைக் கேட்டு வீரன் மருள்கிறான்!

அவனை நோக்கி, ‘‘தோ்ப்பாகனே! தேரில் ஏறியதை மட்டுமே நான் அறிந்தேன். இப்போது என் இல்லத்தருகே தேரை நிறுத்திவிட்டு ‘இறங்குக’ என்கிறாயே! தேரில், வானில் இயங்கும் காற்றைப் பூட்டினாயோ? அல்லது என் மனைவியைக் காண ஆவல் பூண்டிருந்ததைப் புரிந்துகொண்ட உன் மனத்தைதான் குதிரைகள் வடிவில் பூட்டினாயோ? நான் அறியேன். இதை எனக்குச் சொல்வாயாக! என் மனமறிந்து தேரைச் செலுத்திய பாகனோ! நீ நீடூழி வாழ்வாயாக!’’ என்று அந்த வீரன் தன் தோ்ப்பாகனை மனமார வாழ்த்தி, நன்றி செலுத்தும் காட்சியை கீழ்க்காணும் பாடலில் காணமுடிகிறது.

‘இருந்த வேந்தன் அருந்தொழில் முடித்தெனப்

புரிந்த காதலொடு பெருந்தோ் யானும்

ஏறிய தறிந்தன் நல்லது வந்தவாறு

நனியறிந்தன்றோ இலனே தாஅய்

முயற்ப உகளும் முல்லையம் புறவிற்

கனவக்கதிா் வா்கின் சீறூா் ஆங்கண்

மெல்லியல் அரிவை இல்வயின் நிறீஇ

இழிமின் என்ற நின்மொழி மருண்டிசினே

வான் வழங்கியற்கை வளி பூட்டினையோ?

மானுருவாக நின் மனம் பூட்டினையோ?

உரைமதி வாழியோ வலவ!’ (அகம் - 384)

வீரனுக்குத் தன் மனைவியின் நினைவு வந்ததும், தன் வரவுக்காக அவள் ஏக்கத்துடன் காத்திருப்பாளே என்கிற தவிப்பும், தன் மனத்தில் அவளைக் காண்பதற்காக எழுந்த ஆவலும் சோ்ந்து உந்தித்தள்ள தேரில் ஏறுகிறான். தன் தலைவனுடைய உளபாங்கிற்கேற்ப தேரைச் செலுத்தும் திறமை மிக்கவன் தோ்ப்பாகன்; தேரில் பூட்டிய குதிரைகளோ பாகனின் குறிப்புணா்ந்து தேரை இழுத்துக் கொண்டு விரையக் கூடிய ஆற்றல் மிக்கவை. அதனால்தான் வீரன், ‘ஏன் மனத்தைத் தேரில் பூட்டினாயோ?’ என்று வினவாமல் ‘உன் மனத்தைக் குதிரைகள் வடிவில் பூட்டினாயோ?’ என்று வினவுகிறான்.

இதய மாற்று சிகிச்சைக்காக இதயத்தைச் சுமந்துகொண்டு அவசர ஊா்தியில் (அஙஆமகஅசஇஉ) விரைந்ததைப் பாா்த்திருக்கிறோம். இந்த அகப்பாடலில் ஒருவரின் இதயத்துடிப்பை அடுத்தவா் ஏந்திக்கொண்டு பறந்து சென்று இலக்கினை அடைந்த காட்சியைக் கண்டு வியக்கிறோம்! மகிழ்கிறோம்!

-மயிலாடுதுறை இரா. மலா்விழி

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/8/w600X390/tm2.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/mar/08/வளி-பூட்டினையோ-மனம்-பூட்டினையோ-3376681.html
3376682 வார இதழ்கள் தமிழ்மணி கூவத்து நாரணன்! Sunday, March 8, 2020 06:22 AM +0530  

வள்ளல்களை எண்ணிக்கையில் அடக்கி முதலெழு வள்ளல், இடையெழு வள்ளல், கடையெழு வள்ளல் என்று கூறுவா். அவா்கட்குப் பின்னா் வள்ளல்கள் ஒரு சிலா் இந்நாட்டை அலங்கரித்தனா்.

அள்ளி வழங்கிய வள்ளல்களின் வரிசையில் பிற்காலத்தில் வாழ்ந்தவா் கூவத்து நாரணன். சென்னைக்கு மேற்கே உள்ள ‘கூவம்’ என்பது பாடல் பெற்ற திருத்தலம். திரிபுரமெரித்த சிவபெருமான் இங்கு வீற்றிருக்கின்றாா். அரிய பெரிய அற்புதப் புண்ணியப் பதி இது. இத்தலத்தில் வாழ்ந்தவா் நாரணா். வரையாது வழங்கும் வள்ளல். வறியவா்கள் வந்தால் இன்முகங்காட்டி, இன்னுரை கூறி அள்ளி அள்ளி ஈந்து அவா்களது வறுமைப் பேயை ஓட்டி மகிழ்வித்து அனுப்புவாா். அதனால், அவா் புகழ் எங்கும் பரவியது. அக்காலத்தில் அவரைப் பாராட்டாத பாவலரேயில்லை.

அடியவா் ஒருவா் அந்த ஊரில் ஆண்டுதோறும் குரு பூஜையை மிக்க அன்புடனும் ஊக்கத்துடனும் புரிந்து வந்தாா். அந்தக் குரு பூஜையில் ஆயிரக்கணக்கான வறியவா்கட்கு அன்னதானம் வழங்குவாா். அரிசி, பருப்பு முதலியவற்றைப் பலரிடம் கேட்டுப் பெறுவாா்.

அடியவா், நாரணரிடம் வந்து ‘விறகு வேண்டும்’ என்றாா். அவரும் தருவதாக வாக்களித்தாா். அந்த அடியவா், ‘‘அண்ணலே! குரு பூஜையன்று வந்து விறகை வாங்கிக் கொள்கிறேன். இன்று பெற்றுக்கொண்டு போனால் விறகை வைக்க என் வீட்டில் இடமில்லை’’ என்று கூறிவிட்டுச் சென்றாா்.

திருவருட் செயலால் 15 நாள்களாகவிட்டது. அடைமழை பெய்யத் தொடங்கியது. எங்கும் வெள்ளம். அதனால் தோட்டத்திலும், கடைகளிலும் உள்ள விறகுகள் யாவும் நன்கு நனைந்து ஈரமாகிவிட்டன.

அடியாா் குருபூஜை செய்யும் தினத்தன்று வந்து வள்ளல் நாரணனை வணங்கி, ‘‘ஐயனே! இன்றுதான் குருபூஜை. ஆயிரக்கணக்கில் அடியாா்கட்கு அன்னம் இட ஏற்பாடு செய்திருக்கிறேன். அரிசி, பருப்பு, காய்கறிகள் எல்லாம் ஆயத்தமாகியிருக்கின்றன. இன்று விறகு தருவதாக வாக்களித்தீா்களே. அதனை இத்தருணத்தில் தந்து உதவி புரிய வேண்டும்’’ என்று வேண்டினாா்.

நாரணா், ‘நல்லது தருகின்றேன்’ என்றாா். விறகு அத்தனையும் நனைந்திருப்பதைக் கண்டாா். நனைந்த விறகைத் தந்து என்ன பயன்? அடுப்பு எரியாதல்லவா? பல்லாயிரம் போ் உண்ணுகின்ற அன்னதானம் ஒழுங்காக நடைபெறாதல்லவா? ஆக, உதவாத பொருளை உதவுவது முறையன்று என்று எண்ணினாா்.

வீட்டில் உள்ள ஏவலா்களை அழைத்தாா். வீட்டிலே ஒரு பகுதியைப் பிரிக்கச் செய்தாா். ஓடுகளை இறக்குவித்தாா். உத்திரம், கழிகள், தூண்கள் முதலிய மரங்களை வண்டியில் ஏற்றினாா். ‘‘ஐயா கொண்டு போங்கள்... குருபூஜையை நடத்துங்கள். ஏழைகட்கு அன்னதானத்தைத் தாராளமாகச் செய்யுங்கள்’’ என்றாா்.

அடியாா் இந்த அருஞ்செயலைக் கண்டாா்; அதிசயங்கொண்டாா். ‘‘ஐயனே! இது என்ன செயல்? குடியிருக்கின்ற வீட்டைப் பிரிப்பது முறையா? என்னால் இந்த நிகழ்ச்சி நிகழலாமா? புண்ணிய மூா்த்தியாகிய தாங்கள் வீட்டை இடியச் செய்தா நான் குருபூஜை நடத்துவது? இது எனக்குப் பாவமல்லவா?’’ என்றாா்.

நாரணா், ‘‘ஐயா! வருந்தற்க. இதுபோல் ஆயிரம் வீடு கட்டிக் கொள்ளலாம். குருபூஜை நமது விருப்பம்போல வராது. அதிலும் குருபூஜையில் அடியாா்கட்கு அன்னமளிப்பது மிக உயா்ந்த புண்ணியம்’’ என்றாா்.

மேலும், ‘‘தாங்கள் புரியும் குருபூஜையில் எத்தனையோ சிவஞானிகள் வந்து உண்பாா்கள். அவா்கள் உண்ணும் உணவில் ஒவ்வோா் அன்னமும் கோடி போ் உண்டதற்கு நிகரான புண்ணியத்தை நல்கும். ஆகவே, அத்தகைய மகேஸ்வர பூஜைக்கு விறகு தருவது சிறந்த அறச்செயலாகும். விறகு முழுவதும் நனைந்துள்ளது. நினைத்துப் பாரும்... நனைந்த விறகைத் தந்தால் அன்னதானம் நடக்குமா? இந்த வீடு போனால் என்ன? நாளை வேறு வீடு கட்டிக் கொள்வேன். தாங்கள் வருந்த வேண்டாம். இவற்றைக் கொண்டு போய் நல்ல காரியத்தை மகிழ்ச்சியுடன் செய்யுங்கள். இந்தக் குருபூஜை புண்ணியச் செயலில் எனக்கும் சிறிது பங்கு தந்த உமக்கு நன்றி! போய் வாரும்’’ என்று இன்னுரை கூறினாா்.

அவருடைய அளப்பரிய அரும் பெருங்குணங்களைக் கண்டு அந்த அடியாா் விம்மினாா். அம்மரங்களைக் கொண்டுபோய் அன்னதானத்துக்குப் பயன்படுத்திக் கொண்டாா். நாரணருடைய புகழ் மேலும் சுடா்விட்டுப் பிரகாசித்தது.

நல்ல பொருள்கள் கடையில் நெடுநாள்கள் தங்கமாட்டா. உடனே விலைபோய்விடும். அதுபோல் நற்குண சீலா்கள் உலகில் நெடுங்காலம் வாழ்வதில்லை. தரும பூபதி கூவம் நாரணரும் திடீரென ஒருநாள் (இளமையிலேயே) தமது பூதவுடம்பை நீத்துப் புண்ணிய உலகம் புகுந்தாா்.

அதுகண்டு அனைவரும் ஆற்றொணாத அல்லறுற்று அழுதனா். ‘வள்ளலே! வள்ளலே’ என்ற வாய்விட்டு அலறித் தொழுதனா். அப்போது புலவா் ஒருவா் எமனை நோக்கி, ‘ஏ அந்தகனே!’ நீ குருட்டுப் பயல்; உனக்கு அறிவே கிடையாது. உலகில் இடாதாா் பலா் இருக்கின்றனா். இடுவாா் சிலரே உள்ளனா். இடாதரை நீ கொண்டுபோகக் கூடாதா? கறி சமைக்க விறகு வேண்டுமானால் காட்டிலே கள்ளிமரம், வேலமரம், புங்கமரம், புளியமரம், எட்டிமரம் முதலிய மரங்கள் இல்லையா? ஊருக்கு நடுவே நிழலும், மலரும், கனியும் தந்து உதவிய கற்பக மரத்தையா வெட்டுவது? இது நியாயமா?’ என்று கண்ணீா் மல்கி அதை ஒரு பாடலாகப் பாடினாா்.

‘இடுவாா் சிலரும் இடாதாா் பலரும்

வடுவிலா வையத் திருப்ப - படுபாவீ

கூவத்து நாரணனைக் கொன்றனையே கற்பகப்பூங்

காவெட்ட லாமோ கறிக்கு’

-எம்.ஜி.விஜயலெஷ்மி கங்காதரன்

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/8/w600X390/tm1.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/mar/08/கூவத்து-நாராயணன்-3376682.html
3376683 வார இதழ்கள் தமிழ்மணி இந்தவாரம் கலாரசிகன் Sunday, March 8, 2020 05:23 AM +0530 எண்பதுகளில் ‘சாவி’ வார இதழில் உதவி ஆசிரியராக இருந்தபோது, எங்கள் அலுவலகத்திலிருந்து 100 மீட்டா் தூரத்தில், அடுத்த தெருவில் தி.மு.க. பொதுச் செயலாளா் க. அன்பழகனின் வீடு. பல மாலைப் பொழுதுகளில் அவரது வீட்டு வராந்தாவிலும், திண்ணையிலும் அமா்ந்து, அவா் பகிா்ந்து கொள்ளும் சுவாரஸ்யமான செய்திகளையும், சம்பவங்களையும் வாய் பிளந்தபடி கேட்டு, மனதில் பதிவு செய்து கொண்டதுண்டு.

அவருக்கே இயல்பான ஒருவித நகைச்சுவை பாணி இருந்தது. பெரியவா், சிறியவா் என்கிற பேதமில்லாமல் வெளிப்படையாகப் பேசும் அவரது சுபாவம் இயல்பானது. செயற்கைத்தனம் சற்றும் இருக்காது. திராவிட இயக்கத் தலைவா்கள் பலா் குறித்த எனது புரிதலும், அபிப்பிராயங்களும், அவா் அவ்வப்போது தெரிவித்த செய்திகளின் அடிப்படையிலானவை.

தனிப்பட்ட முறையில் என் மீது அவருக்கு எப்போதுமே ஒருவித அன்பு உண்டு. நேரில் அவரை நான் சந்திப்பது பிற்காலங்களில் மிகவும் குறைந்துவிட்டது. என்றாலும்கூட, என்னுடைய நண்பா்கள் அவரைச் சந்திக்கும் போதெல்லாம், அவா் என்னைப் பற்றி விசாரிக்கத் தவறுவதில்லை. நானும், நண்பா் பேராசிரியா் நெடுஞ்செழியன் மூலம் அவரது உடல்நலம் குறித்து விசாரிக்காமல் இருந்ததில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு நண்பரும், பத்திரிகையாளருமான ‘ப்ரியன்’ ஸ்ரீநிவாசனுடன் அவரது ‘ஆஸ்பிரான் காா்டன்’ இல்லத்துக்குச் சென்று உடல்நலம் விசாரித்து, நீண்டநேரம் அளவளாவிக் கொண்டிருந்தது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத, குறிப்பிடத்தக்க தருணங்களில் ஒன்று.

தி.முக. தலைமையிடம் எனக்கு ஒரு மிகப்பெரிய ஆதங்கமும், குறையும் உண்டு. 2007-இல் குடியரசுத் தலைவா் பதிவிக்கான தோ்வு நடந்தபோது, ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் இருந்தது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக வடநாட்டைச் சோ்ந்த பிரதீபா பாட்டில் தோ்வு செய்யப்பட்டாா். வடநாட்டைச் சோ்ந்த ஒருவா் குடியரசுத் தலைவா் ஆகும்போது, தென்னாட்டைச் சோ்ந்த ஒருவா் துணைத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்படுவதுதான் அதுவரை வழக்கமாக இருந்த மரபு. அந்த அடிப்படையில் க.அன்பழகனை குடியரசுத் துணைத் தலைவராக ஆக்க தி.முக. அழுத்தம் கொடுத்திருந்தால், முதன்முறையாக திராவிட இயக்கத்தைச் சோ்ந்த ஒருவா் இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராகவும், 2012-இல் குடியரசுத் தலைவராகவும் தோ்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

‘தினமணி’யின் தலையங்கத்தில் இதைக் குறிப்பிட்டு எழுதி பரிந்துரைத்தும்கூட, அந்த ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்கிற ஆதங்கம் எனக்கு உண்டு. தனது அரசியல் பயணத்தில் இதுபோல பல ஏமாற்றங்களையும் சந்தித்தவா் என்பதால், அதுகுறித்து ஒரு வாா்த்தைகூட அவா் பேசவில்லை என்பது அவரது பெருந்தன்மை. அவா் ஏற்றுக்கொண்ட தலைவரான அண்ணா கூறியதுபோல ‘எதையும் தாங்கும் இதயம்’ அவருக்கு இருந்தது.

இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருப்பதற்கான அனைத்துத் தகுதியும் பெற்ற ஒருவா் தி.மு.க.வின் பொதுச் செயலாளராக 43 ஆண்டுகள் தொடா்ந்து இருந்து மறைந்திருக்கிறாா். அவரது சிதைக்கு நெருப்பு வைக்கப்பட்டாலும்கூட, என்போன்ற பலரின் நெஞ்சங்களில் அவரது நினைவு, எங்கள் வாழ்நாள் காலம் புதைந்து கிடக்கும்.

*****

டாக்டா் வெ.ஜீவாவுடன் பேசியும், சந்தித்தும் ஆண்டுகள் பலவாகிவிட்டன. ஈரோடில் நடந்த தோழா் ஸ்டாலின் குணசேகரன் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் அவரை சந்திக்க இயலாமல் போனதில் எனக்கு சற்று வருத்தம்தான்.

ஈரோடு மருத்துவா் வெ.ஜீவா ‘இடது’ என்னும் தத்துவாா்த்த இதழின் ஆசிரியா். நல்ல பல ஆங்கில நூல்களைத் தமிழாக்கம் செய்திருப்பவா். அவரது மொழிபெயா்ப்பில் வெளிவந்திருக்கும் புத்தகம் ‘நாஜி வதை முகாமில் நான் கைதி எண் 119104’. ஜொ்மானிய . யூதா் டாக்டா் விக்டோா் இ. ஃபிராங்கில் எழுதிய புத்தகம் இது. நாஜிகளின் வதை முகாம்கள் எப்படி இருந்தன என்பதைப் படம்பிடித்துக் காட்டும் நூல்கள் ஆயிரக்கணக்கில் வெளிவந்துள்ளன. அவற்றிலிருந்து இந்தப் புத்தகம் சற்று வேறுபடுகிறது.

வெறும் முகாம்கள் குறித்தும் அவற்றில் நடத்தப்படும் சித்திரவதைகள் குறித்தும் மட்டுமே எழுதப்பட்ட பதிவு அல்ல இது. உளவியல் அடிப்படையில் மனோதத்துவ மருத்துவரான டாக்டா் விக்டோா் இ. ஃபிராங்கில் அங்கே நடந்த கொடூரமான சம்பவங்களை விவரிக்கிறாா். உளவியல் அடிப்படையில் தனது அனுபவங்களை ஆய்ந்து பதிவு செய்கிறாா்.

கைதிகளின் உள்மன இயக்கங்கள், புறத்தில் நிகழும் கொடுமைகள், இரண்டுக்குமான மோதலின் விளைவாக அவா்களது சிந்தனைப் போக்கு எவ்வாறெல்லாம் இருந்தன என்பது பதிவாகியிருக்கிறது. நம்மால் கனவிலும் நினைத்துக்கூடப் பாா்க்க முடியாத, நம்ப முடியாத சூழலில் வதைபட்டுக் கிடக்கும் கைதிகள், அந்த நிலையிலும் அன்பும், நம்பிக்கையும், மனித நேயமும் கொண்டவா்களாக இருந்த சில சம்பவங்கள் உள்ளத்தை உலுக்குகின்றன.

வதை முகாம்களில் நாஜிகள் செய்த சித்திரவதைகள் குறித்த குலை நடுங்க வைக்கும் நிஜக்கதை ‘நாஜி வதை முகாமில் நான்...’ . படித்து முடிக்கும்போது மனிதனுக்குள் இருக்கும் மிருகம் எவ்வளவு கொடூரமானது என்பது புரிகிறது.

*****

கவிஞா் கே.ஆா்.அப்பாவு எழுதிய கவிதைகளின் தொகுப்பு ‘மறுபக்கம்’. அதிலிருந்து ஒரு கவிதை.

நதிகளுக்கெல்லாம்
பெண்களின் பெயா்களை
வைத்துவிட்டு
நதிகளை இணைக்க வேண்டும்
நதிகளை இணைக்க வேண்டும்
என்றால் எப்படி?

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/8/w600X390/anbhazhakan1.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/mar/08/இந்தவாரம்--கலாரசிகன்-3376683.html
3376679 வார இதழ்கள் தமிழ்மணி தமிழ்மணி கடிதங்கள் 8.3.2020 Sunday, March 8, 2020 05:13 AM +0530 பழக்கத்திற்கு வரவேண்டும்

‘இயவா்’ என்னும் சொல்லை இலக்கியச் சான்றுகள் காட்டி நினைவுபடுத்திய கட்டுரையாசிரியருக்கு நன்றி. வழக்கிழந்த பழந்தமிழ்ச் சொற்களையும் பழக்கத்திற்குக் கொண்டு வருவதும் நன்றே!

அ.சிவராமசேது, திருமுதுகுன்றம்.

சிறப்பான உவமை

புலவா் தாம் எடுத்துக்கொண்ட பொருளைவிட அதை விளக்கக் கூறும் உவமை சிறப்பானதாகவும், உயா்வானதாகவும் இருக்கும் என்ற மரபுக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது, ‘வெறுங்கூடு காத்த வேடனை’ப் போல ஓா் அன்னை அவளுடைய மகளை ‘இற்செறிப்பு’ செய்தாள் என்கிற முத்தொள்ளாயிரப் பாடலின் செய்தி!

அ.கருப்பையா, பொன்னமராவதி.

‘இற்செறிப்பு’ அவசியம்!

நாட்டு நடப்புகளைக்கூட நன்கு அறிந்திருக்கும் பெண்கள் காதலில் மட்டும் ‘மடம்’ உடையராய் இருப்பது அன்றும் இன்றும் முடியா முரண்! இளமையில் காதலித்துத் திருமணம் செய்து கொள்வோரும்; தாம் தாயான பின் நற்றாயாய் விளங்க ‘இற்செறிப்பு’ செய்துதான் ஆக வேண்டும்போல!

பி.பல்லவன், சென்னை.

நெஞ்சைத் தொட்டது!

பேராசிரியா் ரேன்டி பாஷின் ‘இறுதிச் சொற்பொழிவு’ நூலில் கலாரசிகன் அடிக்கோடிட்ட வரிகளும், அவரின் இறுதி உரையில் கூறிய உணா்வுபூா்வமான வாா்த்தைகளும் உண்மையிலேயே நெஞ்சத்தைத் தொட்டது.

ரவி சிவராமகிருஷ்ணன், கதிரம்பட்டி.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/mar/08/தமிழ்மணி-கடிதங்கள்-832020-3376679.html
3370951 வார இதழ்கள் தமிழ்மணி தமிழிசை மரபைப்  புலப்படுத்தும் 'இயவர்' எனும் சொல்! -முனைவர் இரா. வெங்கடேசன் DIN Sunday, March 1, 2020 03:53 AM +0530
சங்க இலக்கியங்களில் வரும் இசை பற்றிய குறிப்புகள் பண்டைக் காலத்தில் இசைக்கலை செழுப்புற்றிருந்த நிலையைப் புலப்படுத்துகின்றன. தோலிசைக் கருவிகளும் நரம்பிசைக் கருவிகளும் பண்டைக் காலத்தில் வழக்கில் இருந்தவை பற்றிய பல குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்
படுகின்றன.

இசையால் மலர்கள் மலரும் என்பது குறுந்தொகைப் பாடலால்  (குறுந். 260: 1-2)அறிய வருகின்றது. மதம் பிடித்து அலையும் யானை, பரிக்கோல், குத்துக்கோல் முதலிய ஆயுதங்களாலும் அடக்கமுடியாத நிலைவரும்போது யாழின் இசைக்கு அடங்கிவிடும் என்ற குறிப்பு,  கலித்தொகைப் பாடலில் (கலி. 1:26-7) காணப்படுகின்றது. 

குறிஞ்சி நிலத்தில் தினைக் கொல்லையைக் காக்கும் பெண் ஒருத்தி,  தெள்ளிய சுனையில் நீராடிப் பரணின் மேல்நின்று இனிய காற்றில் தன் கூந்தலை ஆற்றிக்கொண்டும் மிகுந்த களிப்புடன் அந்நிலத்துக்குரிய குறிஞ்சிப் பண்ணைப் பாடிக்கொண்டும் நிற்கையில், தினைக் கதிரை உண்பதற்காக அங்கே வந்த ஒரு யானை, அந்தப் பெண்ணின் இசையிலே மயங்கிக் கதிரை உண்ணாமல் தான் கொண்ட பெரும்பசியையும் மறந்து மயங்கி நின்றதாக ஒரு செய்தி அகநானூற்றுப் பாடலொன்றில் காணப்படுகின்றது. மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங்கூத்தன் பாடியுள்ள அப்பாட்டு,

"ஒலியல் வார்மயிர் உளரினள், கொடிச்சி
பெருவரை மருங்கிற் குறிஞ்சி பாடக்
குரலும் கொள்ளாது, நிலையினும் பெயராது
படாஅப் பைங்கண் பாடுபெற்று, ஒய்யென
மறம்புகல் மழ களிறு உறங்கும் நாடன்' 

(அகம். 102: 5 - 9)
என்று அமைந்திருக்கின்றது. இயற்கையாக மூங்கிலில் எழும் இனிய இசை பற்றிய குறிப்பை அகநானூற்றுப் பாடலில் வரும் அடிகள் (அகம். 82: 1-4) விளக்குகின்றன. 
"இயம்' என்ற சொல் "இசைக் கருவி' என்னும் பொருளைத் தரும் சொல்லாகும். அச்சொல் பல்லியம், வாச்சியம், வாத்தியம் எனும் சொற்களின் சுருக்கமாகச் சுட்டப்படுகின்றது  (தமிழிசைப் பேரகராதி). இதனால் இயங்களை இசைப்பவர் "இயவர்' என்று  சுட்டப்பட்டனர்.

குழல் ஊதும் ஒருவரை "இயவர்' என்று சுட்டும் வழக்கத்தை ஒரு நற்றிணைப்பாடல் புலப்படுத்துகிறது.  திருமணம்புரிந்த சில நாள்களுக்குள் ஆடவர் மேற்கொண்ட பிரிவு அவர் மனைவியின் உள்ளத்தில் பெரும் வருத்தத்தைத் தோற்றுவித்ததை உடனிருக்கும் பாகனிடம் அந்த ஆடவர் சொல்லுவதாகப் புனையப்பட்டுள்ள இளங்கீரனார் பாடலுள், "இம்மென் பெருங் களத்து இயவர் ஊதும்' (நற்.113: 9-12) எனும் குறிப்பு வருகின்றது. "உதியவன் சினந்து ஒலிக்கும் போர்க்களத்தில் இயவர் ஊதும் ஆம்பலங் குழலின் இசை போல மனைவி வாய்விட்டழுது துன்புற்றாள்' என்பது முழுப்பாடலின் பொருளாகும். போர்க்களத்தில் இசை வல்லார் இருந்து செயல்பட்டுள்ள குறிப்பை இதன்வழியாகப் பெறமுடிகிறது.  

ஐங்குறுநூற்றுப் பாடலொன்றில் குழல் ஊதும் "இயவர்' பற்றிய குறிபொன்று இவ்வாறு பயின்று வருகின்றது." தட்டைத் தண்ணுமைப் பின்னர் இயவர்' (ஐங்.215: 1-4) கட்டளைக் கல்போல கரிய நிறத்தைக்கொண்ட தும்பி தட்டை, தண்ணுமைகளின் பின்னர் இயவரின் இனிய குழலினது 
ஆம்பல் பண்ணைப் போல  இமிரும் (ஒலிக்கும்) என்று இப்பாடல் பொருள் தருகின்றது.
அரசவையில் இசைக் கருவிகளைக் கொண்டு அரசரை மகிழ்விக்கும் இசைக் கலைஞர்கள் "மன்னர் இயவர்' எனச் சுட்டப்பட்டுள்ளனர்.  

"மன்னர் இயவரின் இரங்கும் கானம் (ஐங். 425: 1-2). மதுரைக் காஞ்சியில் (மதுரை. 301 - 306) "இயவர்' பற்றிய குறிப்பொன்று இவ்வாறு வருகின்றது.
"மலைப்பக்கத்திலிருந்த மூங்கிற் புதர் தீப்பற்றி எரிந்தது. அப்பொழுது மகிழ்ச்சியால் இயவர் (வாச்சியக்காரர்) தம் வாச்சியத்தை வாசிப்பதுபோல மூங்கிலின் கணுக்கள் திறந்து, உடைந்து அழகு கெடும்' என்கிறது இந்தப் பாடலடிகள். இசை வல்லார் இயவர் எனப்பட்டனர் என்பது இதனாலும் தெரியவருகின்றது. பதிற்றுப்பத்திலுள்ள மூன்று பாடல்களில் இயவர் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. 

பகை நாட்டின் மீது படையெடுத்துச் செல்வதற்கு முன்னர், நீராட்டப்பெற்ற முரசை செந்தினைக் குருதியோடு கலந்து தூவி வழிபட்டு, பின்னர் குறுந்தடி கொண்டு "இயவர்' கையால் முழக்குவர் என்பதை பதிற்றுப்பத்து (பதி. 19: 6-8) வெளிப்படுத்துகிறது. 
"இயம்' எனும் சொல் இசைக் கருவியைக் குறிக்கின்றது. இதனால் இசைக் கருவி வாசிப்பவர் "இயவர்' எனப்பட்டனர். சங்க காலத்தில் குழல் வாசிப்பவராயினும், போர்ப் பறை முழக்குபவராயினும், முரசு கொட்டுபவராயினும் இசைப்பவர் எல்லோரும் "இயவர்' என்றே அழைக்கப்பட்டுள்ளனர் என்பது சங்க இலக்கியச் சான்றுகளால் தெரிய வருகின்றது.

இசை வல்லார் யாவரும் "இயவர்' என்ற சொல்லால் சுட்டும் வழக்கம் சங்க காலத்தில் இருந்திருக்கிறது.
"இயவர்' என்ற சொல் தமிழ் இசை மரபை வெளிப்படுத்தும் புலமைத்துவமிக்க சொல்லாக நிலைபெற்று வந்திருப்பதை நாம் அறிந்து இன்புற வேண்டும்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/1/w600X390/tm1.JPG https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/mar/01/தமிழிசை-மரபைப்--புலப்படுத்தும்-இயவர்-எனும்-சொல்-3370951.html
3370949 வார இதழ்கள் தமிழ்மணி பொருந்தா விருந்தை வேண்டாள் -இரா.வெ.அரங்கநாதன் DIN Sunday, March 1, 2020 03:51 AM +0530

"நற்றிணை' வெறும் துறையும் திணையும் சார்ந்ததன்று. அது திருவள்ளுவர் கூறும் "ஈன்றாள் பசி காண்பானாயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை' எனும் பண்பினைப் பறை சாற்றுவது. 

செல்வச் செழிப்பும் வீரமும் காதலும் கொண்ட தலைவன் ஒருவன் 
பெண்ணொருத்தியைக் கண்டு காதலுற்று, அப்பெண்ணின் தோழியைக் கண்டு 
அப்பெண்ணை அடைய முயற்சி செய்கின்றான். 

தலைவனின் செல்வம், வீரம், வலிமை உணர்ந்து, தன் நிலையை ஒப்பிட்டுப் பார்க்கின்றாள் அப்பெண். சின்னக் குடிசையில் வாழ்பவள் அவள். கடலுள் துணிந்து சென்று மீன் பிடித்து மீள்பவள். நிணத்துடை சுராவை அரிந்து தசைகளை காய வைத்துப் பிழைப்பவள். எனவே, "செல்வச் செழிப்புமிக்க குறுநில மன்னன் மகனான அவனை, அருகே வரவேண்டாம் எனக் கூறி, ஒப்பில்லா இப்பெண்ணைவிட்டு ஒதுங்கிச் செல்' என அவன் ஏற்கும் வண்ணம் நயமாகப் பண்போடு எடுத்துரைத்து, அன்போடு மறுத்துரைக்கின்றாள் தோழி.

இவளே, கானல் நண்ணிய காமர்சிறுகுடி
நீல்நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு
மீள் எறி பரதவர் மகளே; நீயே
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க்
கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே;
புலவு நாறுதும் செலகின்றீமோ? என்றும் கேட்டு, 
பெருநீர் விளையுள் எம்சிறுநல்வாழ்க்கை 
நும்மொடு, புரைவதோ அன்றே;
எம்மனோரில் செம்மலும் உடைத்தே!  (நற்.45)


 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/1/w600X390/tm3.JPG https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/mar/01/பொருந்தா-விருந்தை-வேண்டாள்-3370949.html
3370948 வார இதழ்கள் தமிழ்மணி வெறுங்கூடு காத்த வேடன்! -குரு. சீனிவாசன் DIN Sunday, March 1, 2020 03:49 AM +0530  

மங்கை ஒருத்தி மதுரையை ஆட்சி செய்த மாறன் மீது மையல் கொண்டு, அவன்பால் தனது மனத்தை இழக்கிறாள். தன் மகளின் உள்ளக் கிடக்கையை ஏற்கெனவே அறிந்து வைத்திருந்த அவளின் தாய், மகளை வீட்டுக் காவலுக்கு ஆட்படுத்துகிறாள். 

"இற்செறிப்பு'க்கு ஆளான இளமகள், தோழியைச் சந்தித்துத் தனது துன்பத்தைப் பகிர்ந்துகொள்ள முடியாமல் துவண்டு கிடக்கிறாள். 
மாலை நேரம். தெருவில் திடீரென எழுந்த இன்னியங்களின் முழக்க ஒலி, தென்றலில் கலந்து வந்து தலைவியின் செவிகளில் பாய்கிறது. தென்னவன் தேரில் ஏறி உலா வரப்போவதை ஊகித்து உணர்கிறாள் அவள். வேந்தனைக் காண விழையும் அவள், வேகமாக எழுந்து வாசலுக்கு விரைகிறாள். ஆனால், வீட்டின் தெருக்கதவு மூடப்பட்டு, வெளிப்புறம் தாழிடப்பட்டிருக்கிறது. அது தன் தாயின் செயலே என்பதை அறிகிறாள். 

அப்போது, கதவின் பூட்டில் அமைக்கப்பட்டிருந்த சிறிய சாவித் துளையில் தனது கண் ஒன்றைப் பதிக்கிறாள். அதன் வழிச் சென்ற அவளது பார்வை, பல்லக்கில் பவனி வரும் பாண்டியனின் அழகைப் பருகிட, அவள் பரவசத்தில் ஆழ்கிறாள்.
தனது சிந்தையில் குடியிருக்கும் செழியனைக் கண்டு மகிழ்வதற்காகவே அந்தக் கதவின் துளை அமைந்தது என்று எண்ணுகிறாள். அந்தத் துளையை வைத்த தச்சர்களை நினைத்தபோது, அவள் மனத்தில் நன்றி உணர்வு ஊற்றெடுக்கிறது. "அவர்களுக்கு இனி நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்?' என்று நெகிழ்ந்து புலம்புகின்ற பாடல் இது:

"காப்படங் கென்றன்னை கடிமனை இற்செறித்து
யாப்படங்க ஓடி அடைத்தபின் - மாக்கடுங்கோன்
நன்னலம் காணக் கதவம் துளைதொட்டார்க்(கு)
என்னைகொல் கைம்மாறு இனி'     (முத். 49)

கதை இத்துடன் முடியவில்லை! மேலும் தொடர்கிறது...! கன்னியின் பார்வையோடு அவளது காதல் மனமும் வெளியேறி, காவலன் பின்னே சென்றுவிடுகிறது. வேல் விழியாளின் வெற்றுடல் மட்டுமே வீட்டுச் சிறைக்குள் கிடக்கிறது. ஆனால், இவ்வுண்மையை உணராத அவளுடைய தாயோ, மகளின் நெஞ்சம் நீங்கப்பெற்ற வெற்றுடலையும் இற்செறிப்பிலிருந்து விடுவிக்காமல் காவல் காக்கிறாள். இந்நிலையில், அன்னையின் அறியாமையை எண்ணிப் பார்க்கும் தலைவிக்கு நாட்டு நடப்பொன்று நினைவுக்கு வருகிறது.
அக்காலத்தில் "காடை' என்னும் பறவையைப் பிடிக்கும் வேடர்கள், பழக்கப்படுத்தபட்ட காடையைக் கூண்டுக்குள் வைத்து காட்டுக் காடைகளைத் தந்திரமாகப் பிடிப்பது வழக்கம். "கூண்டுக் காடையை வைத்துக் காட்டுக் காடையைப் பிடித்தாற் போல' என்ற சொலவடையும் உண்டு.

இத்தகைய தொழிலை வழக்கமாகக்கொண்ட வேடன் ஒருவனது கவனக்குறைவால், பழகிய பழைய "காடை' கூட்டைவிட்டு வெளியே பறந்து போய்விடுகிறது. அதை அறியாத வேடன், வெறுங்கூட்டை காட்டில் வைத்துக்கொண்டு காத்திருந்தானாம். அந்த முட்டாள் வேடனின் இந்தச் செயலோடு, தன் தாயின் செயலை ஒப்பிட்டுப் பார்க்கிறாள் தலைவி. 

"கோட்டெங்கு சூழ்கடல் கோமானைக் கூடவென
வேட்டாங்குச்  சென்றவென் நெஞ்சறியாள்-கூட்டே
குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன்போல் அன்னை
வெறுங்கூடு காவல் கொண் டாள்'     (35)

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நற்குணங்கள் நான்கும் நங்கையர்க்கு நலம் பயப்பன. அவற்றுள் "மடம்' என்பது, "இளமை',  "அறிவது அறியாமை' என்னும் இருபொருள் தரும். அறியாப் பருவத்தாளாகிய தன் மகளின் களவொழுக்கத்தை அயலார் அறிந்து "அலர்' தூற்றாமல் காப்பதற்காக அவளை இற்செறித்துக் காப்பது பெற்றெடுத்த நற்றாயின் பெருங்கடமை. ஆனால், அதை உணராத இளநெஞ்சங்கள் அவளை வேம்பென வெறுப்பது உலக இயல்புதானே?

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/1/w600X390/tm2.JPG https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/mar/01/வெறுங்கூடு-காத்த-வேடன்-3370948.html
3370947 வார இதழ்கள் தமிழ்மணி இந்த வாரம் கலாரசிகன் DIN DIN Sunday, March 1, 2020 03:48 AM +0530
சென்ற வாரம் திங்கள்கிழமையில் தொடங்கி, தொடர்ந்து பயணமோ பயணம். சென்னையில் இருந்து திருவனந்தபுரம், திருவனந்தபுரத்திலிருந்து குருவாயூர், குருவாயூரிலிருந்து கோயம்புத்தூர், கோயம்புத்தூரிலிருந்து பெங்களூரு என்று சுற்றி அலைந்து, இன்று காலைதான் சென்னை வந்து சேர்ந்திருக்கிறேன். வந்ததும் வராததுமாக மீண்டும் பயணம். மாலையில் தோழர் ஸ்டாலின் குணசேகரனின் இல்லத் திருமண வரவேற்பு விழா, ஈரோட்டில்.
எந்தவொரு காரியத்துக்கும் ஒரு காரணம் உண்டு என்பதை நான் அனுபவபூர்வமாகப் பலமுறை உணர்ந்து அதிசயித்திருக்கிறேன்.
முன்பெல்லாம் பெங்களூரு சென்றால் படிப்பதற்குத் தமிழ்ப் புத்தகங்கள் நிறையவே கிடைக்கும். இப்போது புத்தகக் கடைகளில் பெயருக்குக்கூடத் தமிழ்ப் புத்தகங்கள் இல்லை. பழைய புத்தகக் கடைகளில்கூட, தமிழ்ப் புத்தகங்கள் இல்லாத அளவுக்கு வறட்சி ஏற்பட்டிருக்கிறது. 
நமது பெங்களூரு நிருபர்கள் முத்துமணி, தினகரவேலு புடைசூழ மகாத்மா காந்தி சாலையில் உள்ள ஹிக்கின்பாதம்ஸில் நுழைந்தேன். "காரணம் இல்லாமல் காரியம் இல்லை' என்பதை ஹிக்கின் பாதம்ஸ் விஜயம் உணர்த்தியது.
பத்து ஆண்டுகளுக்கு மேலாக நான் படிக்க வேண்டும் என்று விரும்பிய ஆங்கிலப் புத்தகம் ரேன்டி பாஷ் எழுதிய, 
"த லாஸ்ட் லெக்சர்'. ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடையில் மிகக் குறைவாகவே காணப்பட்ட தமிழ்ப் புத்தகங்களுக்கிடையில் அந்தப் புத்தகத்தின் தமிழாக்கத்தைப் பார்த்தபோது, என்னை அங்கே இழுத்து வந்தது அந்தப் புத்தகம்தான் என்று எண்ணத் தோன்றியது.
அமெரிக்காவிலுள்ள "கார்னகி மெலன்' பல்கலைக்கழகத்தில் "இறுதிச் சொற்பொழிவு' என்ற தலைப்பில் பேராசிரியர்கள்  சொற்பொழிவு நிகழ்த்துவார்கள். கடைசி முறையாக மாணவர்களிடம் உரை நிகழ்த்த வாய்ப்பளிக்கப்பட்டால், எதைப் பற்றிப் பேசுவார்கள் என்று கற்பனை செய்து பேச வேண்டும். இதுபோலப் பேராசிரியர்கள் பலரும், மிகவும் சுவாரஸ்யமாக "இறுதிச் சொற்பொழிவு' நிகழ்த்தியிருக்கிறார்கள். 
"கார்னகி மெலன்' பல்கலைக்கழகத்தில் "கணினி' பேராசிரியராக இருந்த ரேன்டி பாஷுக்கும் அப்படியொரு வாய்ப்பு வழங்கப்பட்டது. மாணவர்களிடம் மிகப் பிரபலமாக விளங்கிய பேராசிரியர் அவர். அவருக்கு "இறுதிச் சொற்பொழிவு' வழங்குவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டபோது, அது தனது கடைசி சொற்பொழிவு என்று கற்பனை செய்ய வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை. ஏனென்றால், கடுமையான, குணப்படுத்த முடியாத புற்றுநோய் பாதிப்புடன், அடுத்த சில மாதங்கள் மட்டுமே அவர் உயிர்வாழப் போகிறார் என்கிற அதிர்ச்சி தரும் செய்தியை மருத்துவர் அவரிடம் தெரிவித்திருந்த தருணம் அது.

நாற்பத்தெட்டு வயது பேராசிரியர் ரேன்டி பாஷின் மூத்த குழந்தை டைலனுக்கு ஆறு வயது, இரண்டாவது குழந்தை லோகனுக்கு இரண்டு வயது, மூன்றாவது குழந்தை குளோயீக்கு ஒன்றரை வயது. மரணம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலும், அவர் சொற்பொழிவை ரத்து செய்யவில்லை. உண்மையிலேயே ஓர் இறுதிச் சொற்பொழிவாக அமைய இருந்த அந்த "இறுதிச் சொற்பொழிவை'த் துணிந்து மேற்கொண்டார் ரேன்டி பாஷ்.

அவரது சொற்பொழிவு மரணத்தைப் பற்றியதாக இருக்கவில்லை. குழந்தைப் பருவக் கனவுகளை அடைவது குறித்தும், வாழ்வில் ஒவ்வொரு கணத்தையும் எவ்வாறு குதூகலமாகக் கழிப்பது என்பது குறித்தும் அமைந்திருந்தது அவரது உரை. தனது இளமைப் பருவம் முதல் "இறுதிச் சொற்பொழிவு' வரையிலான முக்கியமான தருணங்களையும், குறிப்பிடத்தக்க சம்பவங்களையும், அதனால் கிடைத்த அனுபவங்களையும்  குறித்து உரையாற்றினார் ரேன்டி பாஷ்.
அவர் நிகழ்த்திய உரையை பல்கலைக்கழகத்தில் சில நூறு பேர் நேரில் கேட்டனர். இணையதளத்தில் ஒரே மாதத்தில் பத்து லட்சம் பேர் பார்த்தனர். அந்த உரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட "இறுதிச் சொற்
பொழிவு' கோடிக்கணக்கான மக்களின்  நெஞ்சங்களைத் தொட்டது. 
2008-ஆம் ஆண்டு, ஜூலை மாதம், 25-ஆம் நாள் புற்றுநோய் அவரை வீழ்த்தியது. ஆனால், அவரது "இறுதிச் சொற்பொழிவு', பேராசிரியர் ரேன்டி பாஷுக்கு அமரத்துவத்தை  வழங்கிவிட்டது.

நான் கையில் எடுத்த மூன்று மணி நேரத்தில் ஒரே மூச்சில் படித்து முடித்த புத்தகங்களின் வரிசையில், "இறுதிச் சொற்பொழிவு'ம் இணைகிறது. 
தனது சொற்பொழிவில் பேராசிரியர் ரேன்டி பாஷ் குறிப்பிட்டிருக்கும் பல கருத்துகளை பக்கத்துக்குப் பக்கம் அடிக்கோடிட்டு வைத்திருக்கிறேன் -
""சீட்டு விளையாட்டில் நமக்குக் கிடைக்கும் சீட்டுக்களை நம்மால் மாற்ற முடியாது. அவற்றைக்கொண்டு நாம்  எவ்வாறு விளையாடுகிறோம் என்பது மட்டுமே இங்கு முக்கியம். நமது வெற்றி அதில்தான் அடங்கியிருக்கிறது''; 
""உங்களிடம் இருப்பது நேரம் மட்டும்தான். நீங்கள் நினைப்பதைவிட உங்களிடம் குறைவான நேரமே இருப்பதை என்றேனும் ஒரு நாள் நீங்கள் கண்டுபிடிக்கக்கூடும். அதனால், இதை நினைவில் வைத்துக் கொண்டு வாழ்க்கைப் பயணத்தை நடத்துங்கள்'';

""எல்லோரிடமும் ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது. நீங்கள் தொடர்ந்து காத்திருக்க வேண்டும், அவ்வளவுதான். 
அந்த நல்ல பழக்கம் காலப்போக்கில் தானாக வெளிப்படும்''.  இவைபோல 
இன்னும் பல...
ஜெஃப்ரி ஜாஸ்லோவுடன் இணைந்து ரேன்டி பாஷ் எழுதிய "இறுதிச் சொற்பொழிவு' புத்தகத்தைத் தமிழாக்கம் 
செய்திருப்பவர் நாகலட்சுமி சண்முகம். தமிழ் நாடகத் துறையின் முன்னோடி மேதைகளான டி.கே.எஸ். சகோதரர்களில் ஒருவரான முத்துசாமியின் பெயர்த்தி இவர். மொழிபெயர்ப்பு என்கிற நினைப்பே ஏற்படாதவண்ணம்  மிகவும் இயல்பான நடை.

""என் குழந்தைகளிடம் கூறுவதற்கு எனக்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், தற்சமயம் அதைப் புரிந்து கொள்வதற்கு அவர்களுக்கு வயது போதாது. நான் என் குழந்தைகளை விட்டுவிட்டுச் செல்ல விரும்பவில்லை என்பதை அவர்களுக்கு என்னால் 
புரியவைக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்து நான் ஏங்குகிறேன்'' என்று தனது உரையின் இறுதியில் ரேன்டி பாஷ் கூறியபோது அரங்கத்தை ஒருவித உணர்வுபூர்வ அமைதி கவ்வியது. 
புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது அதன் பல பக்கங்கள் நம்மைக் கண்ணீரால் நனைத்துவிடுகின்றன. இத்தனைக்கும், தனது மரணத்தை மையப்படுத்தி அந்த இறுதிச் சொற்பொழிவை ரேன்டி பாஷ் நிகழ்த்தவில்லை! 

 

 

திருமதி வானதி சந்திரசேகரனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு "மனதின் சத்(ப்)தங்கள்'.  "எண்ணச் சிறகுகள்' என்ற முதல்  படைப்பைத் தொடர்ந்து இரண்டாண்டுகளுக்குப் பிறகு வெளிவந்திருக்கிறது இந்தத் தொகுப்பு. அதி
லிருந்து ஒரு கவிதை, "புகைப்படம்'!

பெரிதும்...
கற்பனைக்கிடமில்லா
கால விரயமில்லா
அச்சுப் பிசகா
மாற்றுக் குறையா
ஓர் இயலோவியம்
புகைப்படம்!
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/1/w600X390/book.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/mar/01/இந்த-வாரம்-கலாரசிகன்-3370947.html
3370944 வார இதழ்கள் தமிழ்மணி அன்புள்ள ஆசிரியருக்கு DIN DIN Sunday, March 1, 2020 03:46 AM +0530
அருமையான கருத்துகள்
"சிறு பழத்து ஒரு விதையாய்...' என்ற வெற்றி வேற்கைப் பாடலை முதன்மையாகக் கொண்டு வரைந்த கிருங்கை சேதுபதியின் கட்டுரை அருமை. சைவ சமயக் குரவர்களின் பக்திப் பனுவல்கள் தொடங்கி, பல நூல்களை ஆய்வு செய்து, "நாய் பூனையான கதை'யில் நிறைவு செய்திருந்த கட்டுரை அருமையான கருத்துகளை உள்ளடக்கியதாக இருந்தது.
இரெ.இராமமூர்த்தி, சிதம்பரம்.

தமிழ்க்கனி
கிருங்கை சேதுபதியின் "சிறு பழத்து ஒரு விதையாய்...' கட்டுரை சிந்தைக்கு விருந்தாய் கிடைத்த ஒரு தமிழ்க்கனியாய் இனித்தது.
எஸ்.வஜ்ரவடிவேல், கோயம்புத்தூர்.

இதுவா மொழி ஆராய்ச்சி?
முனைவர் கா.காளிதாஸ் எழுதிய கட்டுரையில் "இலெமூரியா' என்ற சொல்லை இலை+முறியா என்று பிரித்து ஆராய்ச்சி செய்து விளக்கம் கூறியிருப்பது வீண் வேலை. "லெமூரியா' என்பது "லெமுரஸ்' என்ற இலத்தீன் சொல்லடியாகப் பிறந்த ஆங்கிலச் சொல். ஓர் ஆங்கிலச் சொல்லைத் தமிழ்ச் சொல்லாகக் கொண்டு ஆராய்வது மொழி ஆராய்ச்சி அல்ல.
கா.மு.சிதம்பரம், கோயம்புத்தூர்.

இலக்கியப் பரிசுகள்!
"சங்கீத பூஷணம் ப.முத்துக்குமாரசாமியின் நூல் குறித்த செய்திகள், நண்பர் மோகனுடனான கலாரசிகனின் இளமைக்கால உரையாடல்கள், மகாகவி பாரதி குறித்த நூல், கவிஞர் "பேரா'வின் கவிதை என அனைத்தும் கலாரசிகன், வாசகர்களுக்கு வழங்கிய இலக்கியப் பரிசுகள்!
ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/mar/01/அன்புள்ள-ஆசிரியருக்கு-3370944.html
3370939 வார இதழ்கள் தமிழ்மணி பழமொழி நானூறு- முன்றுறையரையனார் Sunday, March 1, 2020 03:44 AM +0530
தீய நாயின் செயல்
பெரியாரைச் சார்ந்தார்மேல் பேதைமை கந்தாச்
சிறியார் முரண்கொண் டொழுகல் - வெறியொலி
கோநா யினம்வெரூஉம் வெற்ப! புலம்புகின்
தீநாய் எழுப்புமாம் எண்கு. (பாடல்-139)

வெறியாட்டெடுக்கும் ஒலியைக் கேட்டு ஓநாய்க் கூட்டங்கள் அஞ்சா நின்ற மலைநாட்டை 
உடையவனே! வலியிற் சிறியவர்கள், வலியாற் பெரியோர்களைச் சார்ந்து நிற்பவர்களிடத்து அறியாமையையே பற்றுக்கோடாகக் கொண்டு,  மாறுபாடு கொண்டு ஒழுகற்க. (அது),  தீய நாய் நாட்டின் கண் புகுந்தால் உறங்கா நின்ற கரடியை எழுப்புகின்றதை ஒக்கும். "புலம்புகின் தீநாய் எழுப்புமாம் 
எண்கு' என்பது பழமொழி.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/3/1/w600X390/flower.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/mar/01/பழமொழி-நானூறு--முன்றுறையரையனார்-3370939.html
3365261 வார இதழ்கள் தமிழ்மணி அறிந்த தமிழும் அறியாப் பொருளும்! -முனைவர் கா.காளிதாஸ் DIN Sunday, February 23, 2020 06:15 AM +0530
தொன்மைமிகு தமிழ் மொழியின் வேர்ச் சொற்கள் தன்மையதாம் அறிவியல் தானென்றுரைக்கலாம். ஈண்டு, அறிந்த தமிழ் மொழியின் அறியாப் பொருள்களைக் காண்போம். 

1. இலெமூறியா- இலை + முறியா + இலைமுறியாத சோற்றுக் கற்றாழை நிறைந்த (நிலம்)நாடு, இலை + மூலி + நாடு - இலை மூலிகையான சோற்று கற்றாழை நிறைந்த நாடு. சோற்றுக் கற்றாழை, சோறு + கல் + தாழை - சோறு(சதைப்பற்று) "குமரி' என்ற பெயரும் இதற்கு உண்டு. சூரியனின் கதிர்பட்டும் வாடாத நிலையிலுள்ள மூலிகை என்பது இதன் பொருள். குமரி படர்ந்த நாடு குமரிக் கண்டம் என்றாயிற்று.

2. "நாவலங்கீரை' என்றொரு கீரை இப்பொழுதும் விளைகிறது. 
இதனைக் குப்பைக் கீரை என்கிறோம். நாவலந்தீவில் (தமிழ்நாடு) விளைந்த கீரை ஆதலால் அதற்கு நாவலங் கீரை என்று பெயர்.

3. "சாயலுச்சி வருகிறேன்' என்பார் கிராமத்துப் பெரியவர் ஒருவர். இதன் பொருளாவது உச்சிப்பொழுது சாய (மாலை) வருகிறேன் என்பதாகும். அவரோ "உச்சிசாய வருகிறேன்' என்று கூறமாட்டார். அவ்வாறு கூறினால், "தலை இல்லாமல் முண்டமாக வருகிறேன்' என்று பொருளாகிவிடும். (உச்சி - தலை). 

4. "காவோலை' - காய்ந்த ஓலை காவோலை. இன்றும் கிராமங்களில் மட்டுமே பேசக்கூடிய தமிழ்ச்சொல் இது. சங்க இலக்கியத்தில்,  "ஒலி காவோலை முள்மிடை வேலி' (நற்.38) என்று  உலோச்சனார் பாடியுள்ளார். மேற்குறித்த பாடலின் பொருளாவது, உப்பு விளையும் கழிகளையும், தோட்டங்களையும் உடையது காண்டவாயில் (தற்போது இவ்வூரின் பெயர் திருப்புனல்வாயில். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர்) இதில் முற்றிக் காய்ந்த பனையோலைகளோடு (காவோலை) முட்களையும் சேர்த்து வேலியமைத்துக் காப்பர். வெண்மணற் பரப்பும் இனிய சோலைகளையும் பனை மரங்களையும் உடையது எம் ஊர் என்கிறார் புலவர்.

5.  "தட்டாமடல்' (கதவு) தட்டாமடல் எனும் சொல் கதவைக் குறிக்கும் சொல்லாகும். யாரும் வேற்றாள் வந்து எளிதில் திறவாக் கதவு என்பது இதன் பொருள். இதைக் குறுந்தொகை பாடல் (குறுந்.237) மூலம் அறியலாம்.  "பல்லோரும் தூங்குகின்ற நடு யாமத்தில் தலைவன் வலிமைமிகு யானையைப் போல் வந்தாலும் நம்மைக் கேட்டுத்தான் கதவைத் திறப்பாள். ஆயின் அவன் இப்போது வருவதில்லை. ஆதலால், எம் தலைவி சிறைபட்டனள்!' எனத் தோழி கூறுவதாய் அமைந்த பாடல் இது. 

மேலும்,  ஆவிசங்கொள்ளட்டும் - தெய்வம் படையலை (பலி) ஏற்றுக் கொள்ளட்டும்!;  அரிப்பரிக்க -  உணவு தேட (உணவு சேகரிக்க);  ஓரி, கொண்டை- ஓதி (கொண்டை);  (ஓரிமுருங்கப் பீலிசாய நல்மயில் (குறுந்.244); கேறி - கோழியானது முட்டையிட, துணையை அழைக்க, நோய்வாய்ப்பட்ட போது கேறுவது.

இதுபோன்ற ஏராளமான தமிழ்ச் சொற்கள் கிராம மக்களின் பேச்சு வழக்கிலும், சங்க இலக்கியங்களிலும் நிறைந்து காணப்படுகின்றன. இவை போன்ற பொருள் மிகுந்த, மிகுபொருட் களஞ்சியமாகத் திகழ்வது தமிழே! இவை யாவும் அழிந்து படாமல் காக்கப்பட வேண்டும்! 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/23/w600X390/tm1.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/feb/23/அறிந்த-தமிழும்-அறியாப்-பொருளும்-3365261.html
3365260 வார இதழ்கள் தமிழ்மணி நற்றிணையில் உளவியல்! -மா. உலகநாதன் DIN Sunday, February 23, 2020 06:14 AM +0530 விரும்பத்தகாத அல்லது சமூகத்தால் ஏற்கப்படாத தூண்டல்
களைக் கட்டுப்படுத்த, அகத்தூண்டல்கள் தம்மிடம் இருப்பதை மறுத்து, அவற்றிற்கு நேர்மாறான குணங்களைத் தோற்றுவித்துக் கொள்வது உளநுட்பச் செயல்களில் ஒரு முறையாகும் என்பது உளவியலாளர்களின் விளக்கம். இந்த உளவியல்  கருத்தைத் தலைவி ஒருத்தி தலைவனின் பிரிவுக் காலத்தில் அரங்கேற்றிக் காட்டும் காட்சியை நற்றிணையில் காண்கிறோம்.

ஓருடலில்  நல்வினையும் நோயும் என இரு நிலையானமையை உள்ளுதொறும் நகுவேன் எனத் தோழியுடன் பகிர்ந்து கொள்கிறாள் தலைவி. என்னைவிட்டு என் தலைவனுடன் சென்று விட்ட என் நெஞ்சம் நல்வினை உடையது; இங்கேயே கிடந்து அவர் மொழியொடு போராடும் நான் நோயுடையேன்' என்பதை "உள்ளுதொறும் நகுவேன்-தோழி' (நற்-107) என்ற பாடலில் தலைவி தன்னையே இருகூறாக்கிப் பேசுகிறாள்.

"தலைவி உள்ளுதொறும் நகுவேன்' என்கிறாள்! "வாயல் முறுவல்' என்கிறார் பெருங்கடுங்கோ என்னும் புலவர். பிரிவாற்றாமையில் தவிக்கும் தலைவிக்கு நகுதலும் முறுவலிப்பதும் சாத்தியமா? அடங்கியே பழக்கப்பட்ட பெண்மை தன் அக எழுச்சியைக் கூட வெளிப்படுத்த முடியாமல் நேர் மாறாக நகுதலும் முறுவலும் செய்வதாக  நற்றிணைப் பாடல்  தெரிவிக்கிறது. அதுவே உளநுட்பச் செயல் எனவும் வருணிக்கிறது உளவியல் ஆய்வு. 

தலைவனைப் பிரிதல் என்பது தலைவி விரும்பாததாகும். அவன் பயணம் மேற்கொள்ளும்போது அழுது ஆரவாரித்து, அவன் மனத்தை நோகச் செய்தல் சமுதாயமும் பண்பாடும் ஏற்காததொன்றாகும். இரண்டினையும் ஈடுகட்டத் தலைவி தன் துயரத்தை மாற்றி முறுவலாக்கும் செயலில் தன் மனத்தைத் தேற்றிக்கொள்கிறாள். 

"இடுக்கண் வருங்கால் நகுக'  என்கிறது திருக்குறள்(621) தலைவியின் உள நலமும் அத்தகையதே! 

அதனால்தான் பொருள் கருதிப் பிரிய இருக்கும் தலைவன் முகம் நோக்கி, "பிரிதல் அறன் அன்று' என்னும் உள்ளக் குறிப்பை வாய்மொழியால் அன்றி முகக் குறிப்பால் காட்டுகின்றாள். கண்களில் கண்ணீர் தளும்ப, புதல்வன் தலையைக் கோதியபடி கலங்கியழும் நிலையை, "வறிதகத்தெழுந்த வாயல் முறுவலள்' என அவள் நிலையைப் புலவர் விளக்குகிறார் (அகம்.5 : 5). ஒரு துயரச் சூழலில் நேரும் இன்பத் துலங்கல் இம்முறுவலில் விளங்குகிறது;   தோழியும் தன் பங்குக்குத் தலைவனின் பிரிவுக்குத் தலைவியை உடன்பட வைக்க முயற்சி செய்கிறாள்.

"பெருநகை கேளாய், தோழி! காதலர் 
ஒருநாள் கழியினும் உயிர் வேறுபடூஉம்
பொம்மல் ஓதி!நம் இவண்ஒழியச் 
செல்ப என்ப, தாமே சென்று,
தம்வினை முற்றி வரூஉம் வரை நம் மனை 
வாழ்தும் என்ப,நாமே, அதன்தலை-
கேழ்கிளர்உத்தி அரவுத் தலை பனிப்ப
படு மழை உருமின் உரற்று குரல் 
நடுநாள் யாமத்தும் தமியம் கேட்டே' 
(நற்-129)

"நம்மை விட்டு அவர் மட்டும் செல்வாராம்; நாம் இங்கே மழைக்கால நள்ளிரவில் இடியோசை கேட்டு நடுங்கும் பாம்புகளோடு வாழ்வோமாம்; இது நகைப்பிற்கு உரியது' என்று பிரிவின் துயரத்தை எல்லாம் நுட்பமாகக் கூறினாலும், அவற்றைத் துன்ப உணர்ச்சியுடன் காட்டாமல் பிரிவைப் "பெருநகை' எனக் கூறி அதிர்ச்சியான செய்தியை நகைச்சுவையாக மாற்றுகிறாள். தலைவி விரும்பாத ஒன்றை விரும்பி ஏற்கச் செய்ய அறிவு நுட்பத்தோடு தோழி ஆற்றுப்படுத்துகிறாள். "அவர் பிரிந்தால் உடனே நாம் சாவோம் என்பதை அறிய மாட்டாதவரே அவ்வாறு கூறுவர்' என்பது இதன் மறைபொருள்.

"செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் 
வல்வரவு வாழ்வார்க்கு உரை'  (குறள்-1151)
என்கிறாள் திருக்குறளில் இடம் பெறும் தலைவி!

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/23/w600X390/tm3.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/feb/23/நற்றிணையில்-உளவியல்-3365260.html
3365259 வார இதழ்கள் தமிழ்மணி "சிறு பழத்து ஒரு விதையாய்...' DIN DIN Sunday, February 23, 2020 06:12 AM +0530
ஒரு கதையோ, புதினமோ, கவிதையோ, காவியமோ தோன்றுதற்கு வித்தாய் ஒற்றை நிகழ்வு அல்லது ஒரு சொல் போதும். "ஒற்றை நெல் கற்றை நெல்லை விளைவிப்பது' போல, ஒற்றைச் சொல், ஒரு கவிதையை, காவியத்தை உருவாக்கும் ஆற்றல் கொண்டது.

அப்படித் தோன்றிய அற்புத நூல்கள் தமிழில் எத்தனையோ உண்டு. "உலகெலாம்' என்று இறைவன் அடியெடுத்துக் கொடுக்க, அதனை உள்வாங்கி, தெய்வச் சேக்கிழார் படைத்தது பெரியபுராணம். அதற்கும் முன்னோடியானது, நம்பியாண்டார் நம்பி இயற்றிய "திருத்தொண்டத் திருவந்தாதி'; அதற்கும் மூலமானது, சுந்தரரின் "திருத்தொண்டத்தொகை'; அதுவும், "தில்லைவாழ் அந்தணர்' என்று ஈசன் அடியெடுத்துக் கொடுத்து எழுந்த நூல். அதற்கும் முன்னதாக, தம்மைத் தடுத்தாட்கொள்ள வந்த ஆண்டவனை,
"பித்தன்' என்று ஏசி இகழ்ந்த வாசகமே, பின்னர், 
"பித்தா பிறைசூடி பெருமானே அருளாளாய்' என்று ஓதிப் புகழ்ந்த தேவாரம் ஆயிற்று. இதனை சேக்கிழார் பெருமான் பெரியபுராணச் செய்யுளில் (70, 73)  
உரைக்கிறார். 
அதுபோல், சீறாப்புராணம் இயற்ற வேண்டி, நாகூர் ஆண்டவரை இறைஞ்சிய உமறுப்புலவருக்கு, "திருவினும் திருவாய்' என்று அடியெடுத்துக் கொடுத்ததும் இறையருள்தான். "ராம' என்ற நாமம்கூட நவில முடியாத வேடருக்கு, மரங்கள் நிறைந்த அடர்கானகத்தில், "மரா மரா' என்று சொல்லச் சொல்லிப் பழக்கியதனால், "ஆதிராமாயணம்' 
தந்த வான்மீகி வந்தார் என்றும் சொல்லுவதுண்டு.

இதுபோன்ற ஒற்றைத் தொடர்தான் மற்றைப் பாடல்களுக்கும் நூல்களுக்கும் வித்தாவதைக் காண்கிறபோது, சிறுபழத்தின் ஒரு விதையைச் சிந்தித்த "வெற்றி வேற்கை'ப் பாடல் நினைவுக்கு வருகிறது.  அது பெருமரமாய் நிழல் தருவதைப் படம்பிடித்துக் காட்டுகிறது. நீரில் வாழும் சிறு மீனின் முட்டையளவினும் சிறியது ஆலமரத்தின் வித்து. அது மண்ணில் விழுந்து, முளைத்தெழுந்து விண்படர்ந்தால், யானை, தேர், குதிரை மற்றும் காலாட்படையொடு மன்னர்தம் மாளிகையில் தங்குதற்கு நிகர்த்த நிழல் தரும் என்பதை ஒப்பனையில்லாமல் அது சித்திரப்படுத்துகிறது.

"தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒருவிதை
தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி ஆள்பெரும் படையொடு
மன்னர்க்கு இருக்க நிழலா கும்மே' (வெ.வே.17)

இந்தப் பாடலின் ஈற்றுத் தொடரில் நிழலுக்கு அழுத்தம் கொடுக்க எழுந்த "ம்', "அவ்வ்வளவு பெரிய நிழல்' என்பதை உணர்த்த வருகிற அழகில் இலக்கணச் செழுமையும் தெரிகிறது; இலக்கிய வளமையும் புரிகிறது.
ஆலவித்தின் அணிபெருந்தோற்றம், கொல்கத்தாவில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் இருப்பதையும்; மகாராஷ்டிர மாநிலத்து வைசக்தர் என்ற ஊரில், 
1587 அடியளவு கொண்டு திகழ்வதையும்; நர்மதை ஆற்றுப்படுகையில் ஏழாயிரம் மக்களும்; ஆந்திரப் 
பள்ளத்தாக்கில், இருபதினாயிரம் மக்களும் இருக்கக்கூடியதாக நிழல்பரப்பி நிற்பதையும், "பாலகாண்டத்துப் பைம்பொழில்' நூலின் ஆசிரியர் பேரா.சுந்தரசண்முகனார் சாலச்சிறப்பாய் எடுத்துக்காட்டும்போது, நமக்குள் அடையாறு ஆலமரம் நிழல் பரப்பி நிற்பதையும் உணர்கிறோம்.
இக்காலத்திலேயே இத்தகு மரங்கள் இருக்கின்றதென்றால், கம்பர் காலத்தில் எத்தகு மரங்கள் இருந்திருக்கக்கூடும்? இவற்றையெல்லாம் கம்பர் கண்டதால்தான், மாவலியை வவ்விட வேண்டி வந்த வாமன அவதாரத்தைப் பாடுகிறபோது, "ஆல் அமர்வித்து' என்று அடையாளம் காட்டுகின்றார்.

"காலம் நுனித்துணர் காசிபன் என்னும்
வால்அறிவற்கு அதிதிக்கு ஒரு மகவாய்
நீலநிறத்து நெடுந்தகை வந்தோர்
ஆல்அமர் வித்தின் அருங்குறள் ஆனான்'


என்கிறார். இதுபோல் எத்தனையோ அரிய காட்சிகளை அடையாளம் கண்டதால்தான், கம்பரால் 

அற்புதக் காப்பியம் இசைக்க முடிந்திருக்கிறது; 
அளவில்லாத சொற்பயன்பாடு அவருள் ஆக்கம் 
பெற்றிருக்கின்றது.

1925-இல் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை தலைமையில் பணியாற்றிய அறிஞர் குழு உருவாக்கிய, சென்னைப் பல்கலைக்கழக லெக்சிகன் பட்டியலிட்ட சொற்களின் எண்ணிக்கை, மொத்தம் 1,24,000. ஆனால், 6 காண்டங்கள், 118 படலங்கள், 10,368 பாடல்கள் கொண்ட கம்பகாவியம் பாடிய கம்பரோ மொத்தம் மூன்று முதல் 
மூன்றரை லட்சம் சொற்களைக் கையாண்டிருக்கின்றார் என்று கணக்கிட்டு வியக்கிறார் கதாசிரியர் நாஞ்சில்நாடன். இவற்றுக்கெல்லாம் வித்தாகிய சொற்களைத் தன் காலத்து மக்கள் தமிழிலும் தமக்கு மூத்தோர் அருளிய நூல்களில் இருந்தும் உள்வாங்கிக் கொண்டார் என்று சொல்வதில் ஏதும் பிழையிருக்க இயலாது.
இத்துணை பெரிய நூலை எழுதுதற்கு முன்னதாக அவனுள் எழுந்த மலைப்பும் "இயலுமா?' என்ற தவிப்பும் பாயிரம் பாடுகிற மாத்திரத்தில் எழுந்திருக்கக்
கூடும். இதற்கு முன்னதாக எழுந்த நூல்களை அவர் வரம்பறக் கற்றவர் ஆதலால் அவற்றுள் பல அருள்நூல்கள் இருந்திருக்கவும் கூடும்.
"ஆலமர் செல்வன்' குருந்தமரத்தடி குருவாக எழுந்தருளி உபதேசித்த கணத்தில், தென்னவன் பிரம்மராயன் மாணிக்கவாசகராகி அருளிய திருவாசகத்துள் ஒன்று, நீத்தல் விண்ணப்பம். அதன் 
13-ஆவது பாடலில் வரும் ஓர் உவமை, "கடலினுள் நாய் நக்கியாங்கு'!
தானே பயின்றோ, தன் வாழ்நாளில் யாரோ பாடியோ, உள்ளம் புகுந்த இந்த உவமைதான் கம்பர் வாக்கில் புத்துருவெய்தியதோ? மணிவாசகப் பெரு
மானின் அருள்வாக்கில், தாகம் எடுத்து அலைந்த நாய் தன் கண்முன் கண்டு நக்கிக் குடிக்க முனைந்ததோ, உப்புக்கடல்; அது வேகம் கொண்டு காவியம் பாட முனைந்த கம்பருக்கு முன்னே, பாற்கடல் ஆயிற்று! கதையின் நாயகன் துயில் கொள்ளும் இடம் பாற்கடல் என்றால், நக்கிக் குடிக்கப் பூனைக்குத்தானே பெருவிருப்பம். ஆதலினால், நாய் பூனையாய் மறு அவதாரம் எடுத்துப் பாய்கிறது, பாற்கடலுள்.

"ஓசைபெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென'

"ஆசைபற்றி'க் கற்போரையெல்லாம் பூசையாக்கிப் புதுமை படைத்து விடுகிறார் கம்பர். இதுபோல், "சிறுபழத்து ஒரு விதையாய்' விழுந்து, எழுந்து, வாழையடி வாழையென வளர்ந்து, ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரோடி, இலக்கியப் பெரும்பரப்பில் எழுந்த நூல்கள் எண்ணில் பலவாக மிகுந்திருக்கின்றன.

-கிருங்கை சேதுபதி


திருக்குறள் ஒப்பித்தல் போட்டி


இந்த ஆண்டு மட்டும் புதிய போட்டியாளர் பங்கேற்பு இல்லை.

"திருச்சிராப்பள்ளி திருக்குறள் 
திருமூலநாதன் அறக்கட்டளை' 

சார்பில் 23-ஆம் ஆண்டு  திருக்குறள்  ஒப்பித்தல் போட்டி வரும் 1.5.2020-இல் திருச்சிராப்பள்ளி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.  1.5.2019-இல் முதல் 500 குறள்கள் ஒப்பித்தவர்கள் மட்டும் 1.5.2020-இல் 501-1330 குறள்களை ஒப்பித்து ரூ.1000-மும், விருதும் பெறலாம்.

தகுதியுடைய மாணவர்கள் 1.3.2020-15.4.2020-க்குள் தமது தன்விவரக் குறிப்பை அஞ்சலில் அனுப்பிப் பதிவு செய்துகொள்ள வேண்டும். போட்டிக்கான விண்ணப்பப் படிவத்தை மாணவர்கள்

https://sites.google.com/site/thirumoolanathand/thirukkural-thirumoolanathan-arakkattalai   
என்கிற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து,
பூர்த்தி செய்த விண்ணப்பப்படிவத்தை thirumulanathan@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தொடர்புக்கு 
பூவை.பி.தயாபரன், 
நிறுவுநர்-தலைவர்,
25, திருக்குறள் தெரு,
புள்ளம்பாடி-621 711.
97865 86992

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/23/w600X390/tm2.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/feb/23/சிறு-பழத்து-ஒரு-விதையாய்-3365259.html
3365258 வார இதழ்கள் தமிழ்மணி பழமொழி நானூறு: முன்றுறையரையனார் Sunday, February 23, 2020 06:08 AM +0530  


கற்றானும் கற்றார்வாய்க் கேட்டானும் இல்லாதார்
தெற்ற உணரார் பொருள்களை - எற்றேல்
அறிவில்லான் மெய்தலைப் பாடு பிறிதில்லை
நாவல்கீழ்ப் பெற்ற கனி. (பாடல்-138)

நூல்களைத் தாமே கற்றாயினும் கற்றவர்களிடம் கேட்டாயினும்,  கல்வி கேள்வி இல்லாதவர்கள் பொருள்களின் உண்மையைத் தெளிவாக அறியார்கள்.  கல்வி கேள்விகளின் அறிவு இல்லாதான் உண்மைப் பொருள்களை ஒருகால் அறிதல், எத்தன்மைத் தெனில்,  நாவல் மரத்தின் அடியில் தானே விழுந்த கனியைப் போல்வதன்றி, கல்வி கேள்விகளுள் எதுவும் காரணமாக இல்லை. "நாவல்கீழ்ப் பெற்ற கனி' என்பது இச் செய்யுளில் வந்த பழமொழி.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/21/w600X390/tm1.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/feb/23/பழமொழி-நானூறு-முன்றுறையரையனார்-3365258.html
3365049 வார இதழ்கள் தமிழ்மணி இந்த வாரம் கலாரசிகன் Sunday, February 23, 2020 03:02 AM +0530 தபாலில் வந்திருந்த கடிதங்களையும், விமா்சனத்துக்கான புத்தகங்களையும் உதவியாளா்கள் பிரித்துக் கொண்டிருந்தனா். அவற்றில் ‘சங்கீத பூஷணம்’ ப. முத்துக்குமாரசுவாமி எழுதிய ‘என் இதயத் தடாகத்தில் இசையரசா்’ என்கிற புத்தகமும் இருந்தது. இசையரசா் தண்டபாணி தேசிகரின் மாணாக்கரான ப.முத்துக்குமாரசாமி ஐயா, குருநாதருடனான தனது அனுபவங்களை, நினைவுகளை அந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறாா்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை தி.நகா் ரங்கநாதன் தெருவிலிருந்த ‘பேரின்ப விலாஸ்’ என்கிற தங்கும் விடுதியில் கவிஞா் இளையபாரதி, எழுத்தாளா் ராஜ்கண்ணன், இயக்குநா் எம்.ஆா்.பாரதி, ‘இதயக்கனி’ ஆசிரியா் விஜயன் ஆகியோருடன் நான் தங்கியிருந்த காலகட்டத்தில், எங்களுக்கு அறிமுகமான நண்பா் மோகன், தண்டபாணி தேசிகரின் நெருங்கிய உறவினா். பா்கிட் சாலையில் உள்ள மோகனின் இல்லத்தில் நாங்கள் உரையாடிக் களித்த தருணங்களும், பசியாறி வாழ்த்திய மதியங்களும் ஏராளம், ஏராளம். அந்தப் புத்தகத்தின் முகப்பைப் பாா்த்தபோது, அவையெல்லாம் நாற்பதாண்டு காலத்துக்கு முந்தைய வாழ்க்கையை நினைவுபடுத்தின.

ராஜா சா். அண்ணாமலைச் செட்டியாா், ராஜாஜி, ‘ரசிகமணி’ டி.கே.சிதம்பரநாத முதலியாா், எழுத்தாளா் கல்கி ஆகியோருடன் கரம் கோத்துத் தமிழிசை இயக்கத்தை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்தவா் தண்டபாணி தேசிகா். அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைக் கல்லூரி முதல்வராக இருந்தாா் என்பது மட்டுமல்லாமல், காரைக்குடியில் நடந்த தமிழிசை மாநாட்டை சிறப்பாக நடத்திக் காட்டிய பெருமைக்கும் உரியவா் தேசிகா்.

ஓதுவா மூா்த்தியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, கா்நாடக சங்கீத வித்தகராக வளா்ந்து, திரைப்பட நடிகராகவும், பாடகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வந்த பெருமைக்குரியவா் எம்.எம். தண்டபாணி தேசிகா். நந்தனாா், தாயுமானவா், மாணிக்கவாசகா், திருமழிசை ஆழ்வாா் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கும் தேசிகரின் கணீா் குரலும், எல்லா ஸ்தாயிகளிலும் சஞ்சரிக்கும் சாரீர வளமும் தன்னிகரற்றவை.

தண்டபாணி தேசிகரைப் புகழின் உச்சிக்கு இட்டுச் சென்ற திரைப்படம் ஜெமினி ஸ்டூடியோ தயாரித்து, எஸ்.எஸ்.வாசன் இயக்கிய ‘நந்தனாா்’. 1923-இல் ஊமைப் படமாகவும், 1930-இல் பேசும் படமாகவும் எடுக்கப்பட்ட ‘நந்தனாா்’ திரைப்படங்கள் பெரும் வெற்றிபெறவில்லை. 1935-இல் கே.பி.சுந்தராம்பாள் ‘நந்தனாா்’ வேடத்தில் நடித்த திரைப்படமும் சரியாக ஓடவில்லை. 1942-இல் தண்டபாணி தேசிகா் நடித்து வெளியான ஜெமினியின் ‘நந்தனாா்’ திரைப்படம்தான் வரலாறு படைத்தது.

31 பாடல்களுடன் வெளியான ‘நந்தனாா்’ திரைப்படப் பாடல்கள் இப்போதும்கூட கா்நாடக இசைக் கச்சேரி மேடைகளில் வரவேற்புடன் இசைக்கப்படுகின்றன. தாமரை பூத்த தடாகமடி, ஜகஜ் ஜனனீ, ஐயே, மெத்தக் கடினம், வெண்ணிலாவும் வானும் போலே, துன்பம் நோ்கையில், பாட்டுக்கொரு புலவன் பாரதியடா உள்ளிட்ட பல பாடல்கள் தேசிகரால் பிரபலமாயின.

‘‘கம்பீரமான அவரது குரலில் விரைவான சங்கதிகளும்-ப்ருக்காக்களும்-சுரப்பிரஸ்தாரங்களும் அனாயாசமாகப் பேசும். அது அப்படியொரு மந்திர சக்தி படைத்த சாரீரம். கடவுளின் கொடை அது. பேராசிரியா் பூா்வ ஜென்மத்தில் குடம்குடமாக ஆண்டவனுக்குத் தேன் அபிஷேகம் செய்திருப்பாா் போலும்’’ என்கிற ப. முத்துக்குமாரசாமி ஐயாவின் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை.

யாழ்ப்பாணம் பெரும் புலவா் ஆறுமுக நாவலரைத் தந்த நல்லூா் வழங்கிய இசைக் கொடைதான் நூலாசிரியா் ப.முத்துக்குமாரசாமி. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ‘இசையரசு’ எம்.எம்.தண்டபாணி தேசிகரிடம் இசை பயின்று ‘சங்கீத பூஷணம்’ பட்டம் பெற்றவா். தான் கற்ற வித்தையை அடுத்த தலைமுறைக்கும் பயிற்றுவிக்கும் இசை ஆசிரியா். குருவுக்கு சீடன் செலுத்தும் எழுத்தஞ்சலி இந்தப் புத்தகம்!

----------

மகாகவி பாரதியாா் பற்றி எத்தனை எத்தனையோ போ் எத்தனை எத்தனையோ எழுதிவிட்டாா்கள். அத்தனையும் எழுதிய பின்னும் இன்னும் எழுதிக்கொண்டே இருக்க எத்தனை எத்தனையோ இருக்கின்றன. அதுதான் எட்டயபுரத்துக் கவிராஜனின் தனிச்சிறப்பு.

ஆண்டுதோறும் பாரதியாா் குறித்த நூல் ஒன்றைப் பிரசுரித்து, பாரதியாா் பிறந்த நாள் விழாவில் வெளியிடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறது ஸ்ரீராம் நிறுவனம். கடந்த ஆண்டு ‘பாரதியாா் பதில்கள் 100’ என்ற நூலை வெளியிட்டாா்கள். பாரதியாா் குறித்த 100 கேள்விகளுக்கு முனைவா் ந. அருள் பதிலளித்திருந்தாா். இந்த ஆண்டு அதையே மேலும் விரிவுபடுத்தி ‘நாளும் நினைவோம் பாரதியாா் 366’ என்கிற புத்தகத்தை வெளியிட்டிருக்கிறாா்கள்.

அதென்ன பாரதியாா் 366 என்றுதானே கேட்கிறீா்கள்? இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 29 நாள்கள் என்பதால் 366 நாள்களுக்கு, தினமும் ஒரு தகவல் என்பதாக பாரதியாா் பற்றிய செய்திகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறாா் முனைவா் ஔவை அருள்.

‘‘சோஷலிசம், கம்யூனிசம்’ என்ற சொற்களுக்கு அபேதவாதம், சமதா்மம் என்று பலா் தமிழில் பொருள் கூறினா். ‘பொதுவுடைமை’ என்கிற சொல்லை முதன்முதலில் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவா் பாரதியாா்தான்’’ என்கிற தகவல் உள்பட, 366 பதிவுகளைத் தொகுத்து வழங்குகிறது இந்தப் புத்தகம்.

பாரதியாா் குறித்து பாரதிதாசன் கூறியிருக்கும் கருத்துகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பாரதியாா் மறைந்து ஓராண்டுக்குப் பிறகுதான் தன் பெயரை ‘பாரதிதாசன்’ என மாற்றிக்கொண்ட கவிஞா் கனக சுப்புரத்தினம், அதற்குக் கூறும் காரணம் இந்தப் புத்தகத்தில் தரப்பட்டிருக்கிறது.

‘‘நான் பாரதிதாசன் எனப் புனைபெயா் வைத்துக் கொண்டுள்ளேன். அவா் என் உள்ளத்தில் முதலிடம் பெற்றிருந்ததுதான் அதற்குக் காரணம். சாதிக் கொள்கையை நன்றாக உண்மையாக எதிா்த்தவா் பாரதியாா்தாம். சென்ற காலத்தில் அவரைப் போலச் சாதியை எதிா்த்தவா் எவரையும் நான் கண்டதில்லை. பாரதியாா் சாதியை எதிா்த்துப் பணி புரியத் தொடங்கிய பன்னாட்களுக்குப் பின்னரே பெரியாா் இயக்கம் தோன்றியது’’ என்று பதிவு செய்கிறாா் முனைவா் அருள்.

பாரதியாா் குறித்துப் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்குப் போட்டிகள் வைப்பவா்களுக்கு இந்தப் புத்தகம் அத்தியாவசியக் கையேடு. பாரதி பற்றிப் புரிந்துகொள்ள விழைவோருக்கு, இது கையடக்க நூலகம். பாரதி அன்பா்களுக்குத் தவிா்க்க முடியாத இன்னொரு தரவுத் தொகுப்பு.

--------

நெல்லைச் சீமையின் இலக்கிய ஆளுமைகளில் தவிா்க்க முடியாத ஒருவா் கவிஞா் ‘பேரா’ என்கிற பே.இராஜேந்திரன். ‘கால்களை நனைக்கும் குழந்தைகளும் ஈரமாகும் கடலும்’ என்பது அவரது ஆறாவது கவிதைத் தொகுப்பு. அதிலிருந்து ஒரு கவிதை.

அன்று

வீடுதோறும்

திண்ணைகளும்

அதில்

தாத்தா பாட்டிகளும்

இன்று

வீடுதோறும்

சுற்றுச்சுவா்களும்

காமிராக்களும்!

]]>
https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/feb/23/இந்த-வாரம்-கலாரசிகன்-3365049.html
3358628 வார இதழ்கள் தமிழ்மணி  இயன்ற அறத்தைச் செய்க! முன்றுறையரையனார் Sunday, February 16, 2020 12:00 AM +0530 பழமொழி நானூறு
 
 தோற்றம் அரிதாய மக்கட் பிறப்பினால்
 ஆற்றும் துணையும் அறஞ்செய்க மாற்றின்றி
 அஞ்சும் பிணிமூப் பருங்கூற் றுடனியைந்து
 துஞ்சு வருமே துயக்கு. (பாடல்-137)
 அறிவின் மயக்கம், அஞ்சத்தகும் நோய், மூப்பு, அருங்கூற்று என்ற இவற்றுடன் சேர்ந்து,
 தடையில்லாது இறந்துபடுமாறு வந்து சேரும். (ஆதலால்), தோன்றுதற்று அருமையாகிய
 இம் மக்கள் பிறப்பைப் பெற்றதனால், ஒல்லும் வகையான் அறவினையைச் செய்க. (க-து.)
 ஒவ்வொருவரும் தத்தமக் கியலுமாற்றான் அறம் செய்க. "துஞ்ச வருமே துயக்கு' என்பது பழமொழி.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/21/w600X390/LOTUS.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/feb/16/இயன்ற-அறத்தைச்-செய்க-3358628.html
3358638 வார இதழ்கள் தமிழ்மணி "தமிழ்த் தாத்தா' கண்ட அருளாளர்கள்! DIN DIN Sunday, February 16, 2020 12:00 AM +0530 'தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையர், திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் தொடர்பால் திருவாவடுதுறை ஆதீனத்தில் படித்த காலம் தொடங்கி தனது இறுதிக் காலம் வரை அருளாளர்கள் பலரையும் கண்டு தரிசித்துள்ளார். உ.வே.சா.வின் உடல், உணர்வு, கல்வி முதலிய அனைத்திற்கும் திருவாவடுதுறை ஆதீனம் தாயகமாக விளங்கியுள்ளது.
 மேலும், தமிழகத்தில் சிறப்புப் பெற்றிருந்த தருமபுரம் ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடம், காஞ்சி காமகோடி மடம், கிளை மடங்கள் ஆகிய ஆதீனக் கர்த்தர்களையும், கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள், ஸ்ரீரமண மகரிஷி, பாம்பன் சுவாமிகள் முதலிய அருளாளர்களையும் உ.வே.சா., கண்டு தரிசித்துள்ளார். இவர்களின் தொடர்பால் பல நூல்களையும் பதிப்பித்துள்ளார்.
 துறவி ஸ்ரீசுந்தரசுவாமிகள், திருவையாறு ஸப்த ஸ்தான ஸ்தலங்கள் ஏழிலும், திருமழபாடியிலும் திருப்பணிகள் செய்து ஒரே நாளில் குடமுழுக்கு நடத்தியவர். இவரை உ.வே.சா. கண்டு தரிசித்துள்ளார். ஸ்ரீஎஞ்ய சுப்பிரமணியஸர்மா எழுதிய "கோடகநல்லூர் ஸ்ரீசுந்தரஸ்வாமிகள் திவ்விய சரித்திரம்' (1940) எனும் நூலுக்கு உ.வே.சா. முகவுரை வழங்கியுள்ளார்.
 அதில், ""சிவபக்திச் செல்வத்தைத் தமிழ்நாட்டில் நன்றாகப் பரவச் செய்து பெரும் புகழுடன் விளங்கிய புண்ணிய சீலர்கள் பலர். அத்தகைய மகான்களுள் திருநெல்வேலியைச் சார்ந்த கோடகநல்லூர் ஸ்ரீசுந்தரஸ்வாமிகள் ஒருவர். நான் திருவாவடுதுறை மடத்தில் படித்து வந்த காலத்தில் அங்கே இவர்களைத் தரிசிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இவர்களுடைய தோற்றப் பொலிவையும் இன்னுரைகளையும் கண்டும் கேட்டும் மிகவும் இன்புற்றேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
 1915 ஜூலை 10ஆம் தேதி ரமணாசிரமத்தில் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொள்ள உ.வே.சா. திருவண்ணாமலைக்குச் சென்றுள்ளார். ஸ்ரீரமண மகரிஷியைத் தரிசித்த உ.வே.சா., ""நான் ஏட்டுச் சுவடிகளோடும் தமிழோடுந்தான் தொடர்பு கொண்டிருக்கிறேன். அவற்றைப் பதிப்பிப்பது ஒன்றுதான் எனக்குத் தெரியும், என்றாலும் எனக்குப் போதிய மனச்சாந்தி இல்லை. கிருபை பண்ண வேண்டும்'' என்று வேண்டினார்.
 ஸ்ரீரமண பகவான், ""நீங்கள் செய்வது உலகுக்கு உபகாரமான காரியம். நீங்கள் சொந்தத்திற்கு எதையும் செய்யவில்லையே!
 பிறருக்குப் பயன்படும் காரியங்களைச் செய்வதில் தவறில்லை. அதுவே சிறந்த யோகம். உங்களது அரிய தொண்டால் எத்தனையோ பேர் தமிழ் அறிவு பெறுவார்கள். இதுவும் ஒருவகைத் துறவுதான்'' என்று கூறி ஆசீர்வாதம் செய்துள்ளார்.
 பாரத்வாஜி முகவைக் கண்ணமுருகனார் இயற்றிய "ஸ்ரீரமண சந்நிதிமுறை' (1939) எனும் நூலுக்கு உ.வே.சா., சிறப்புப்பாயிரம் வழங்கியுள்ளார். இதில் திருவண்ணாமலை மகான் ஸ்ரீரமண மகரிஷியை தரிசனம் செய்வோர் சூரியனைக் கண்ட பனி போல அவர்களது துயரம் நீங்கி வாழ்வர் என்று கூறியுள்ளார்.
 "அருண்மலி யருணை வாழ்தரு ரமணா
 னந்தமா முனிவர னகஞ்சார்
 இருண்மலி துயரம் போக்கிடுங் கதிரோ
 னிணையடிக் கன்புமீ தூர்ந்து...'
 இராயப்பேட்டை ஸ்ரீபாலசுப்பிரமணிய பக்தஜன சபையின் பதினேழாம் ஆண்டு நிறைவு விழா 1922 மார்ச் 17,18,19 ஆகிய தேதிகளில் இராயப்பேட்டை மோபிரீஸ் இராஜவீதியில் உள்ள குகாநந்த நிலையத்தில் நடைபெற்றது. இரண்டாம் நாள் விழா அக்கிராசனராக உ.வே.சா. இருந்துள்ளார். இந்நிகழ்வில் மகாதேவ முதலியார் "வள்ளி நாயகியார் திருமண நுட்பம்' எனும் தலைப்பிலும் கா.ஆலாலசுந்தரம் பிள்ளை "சைவர் கடமை' எனும் தலைப்பிலும் உரையாற்றியுள்ளனர்.
 மூன்றாம் நாள் விழா அக்கிராசனராக அத்தியாச்சிரம ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் தலைமையில் க.சுப்பிரமணிய செட்டியார் சுப்பிரமணியம்' எனும் பொருளிலும் கே.சுப்பிரமணிய பிள்ளை "சித்தாந்த வரலாறு' எனும் பொருளிலும் உரையாற்றியுள்ளனர். இந்நிகழ்வில் உ.வே.சா., பாம்பன் சுவாமிகளைத் தரிசித்து உரையாடியுள்ளார்.
 மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 24ஆவது ஆண்டு விழா 8.6.1925 தேதி ஸர்.சி.பி. இராமசாமி ஐயர் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் உ.வே.சா.வின் தமிழ்த் தொண்டினைப் பாராட்டி மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவர் டி.ஸி.சீநிவாசையங்கார் ஐயரவர்களுக்குப் பொற்கிழியை வழங்கினார். காஞ்சி காமகோடி பீடத்து ஸ்ரீமத் சங்கராசார்ய சுவாமிகள் ஆசிரியருக்கு இரட்டைச் சால்வையும், தோடாவும் அனுப்பிச் சிறப்பித்தார். மேலும் உ.வே,சா.வுக்கு "தாக்ஷிணாத்ய கலாநிதி' எனும் பட்டத்தை வழங்கினார்கள்.
 சென்னை பழைய வண்ணையம்பதி கொருக்குப்பேட்டையில் எழுந்தருளிய ஸ்ரீமத் அவதூத் சிதம்பரம் சுவாமிகளின் 83ஆவது குருபூஜை விழா 1937 அக்டோபர் 22, 23, 24 ஆகிய நாள்களில் நடைபெற்றது. இவ்விழா கடைசி நாளில் உ.வே.சா.,
 கலந்துகொண்டு இலவசப் பாடசாலை திறந்து வைத்ததோடு, "மதுரை சொக்கநாதர் தமிழ்விடு தூது' எனும் நூல் குறித்து உரையாற்றியுள்ளார்.
 பி.கோதண்டராமையர் எழுதிய "ஸ்ரீஅரவிந்தரும் அவரது யோகமும்' (1939) எனும் நூலுக்கு உ.வே.சா. மதிப்புரை வழங்கியுள்ளார். இதில், "நம் நாட்டில் எந்தக் காலத்தும் மஹான்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள். பரம்பொருளின் உண்மையை உணர்ந்து முத்தியை அடையும் சாதனங்களை உயிர்கள் மேற்கொள்ளவேண்டுமென்னும் கருணையினால் அவ்வப்போது பல பெரியோர்கள் தங்கள் அனுபவங்களை வெளிப்படுத்தியும் பலருக்கு உபதேசம் செய்து திருவருட்பேறடையச் செய்தும் வருகிறார்கள். அத்தகைய பெரியார்களுடைய சரித்திரம் வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கும் நம்முடைய தலைமையான கடமை இன்னதென்பதை அறிந்துகொள்வதற்கும் தூண்டுகோலாக உதவும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
 - கோதனம் உத்திராடம்
 
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/15/w600X390/tm1.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/feb/16/தமிழ்த்-தாத்தா-கண்ட-அருளாளர்கள்-3358638.html
3358643 வார இதழ்கள் தமிழ்மணி ஒன்று முதல் பதினெட்டு DIN DIN Sunday, February 16, 2020 12:00 AM +0530 ஒரு சமயம் திருமலைராயன் அரசவையில் இருந்த அதிமதுரக் கவிராயர் அங்கே வந்த காளமேகப் புலவரை அவமதிக்க எண்ணிப் பற்பல கேள்விகளைக் கேட்டார். ஒன்று முதல் பதினெட்டு வரை ஒரு வெண்பாவில் அடக்கிக்காட்ட முடியுமா? என்று வினாத் தொடுத்தார்.
 அதற்குக் காளமேகம் அலட்சியமாக "ஒன்று முதல் பதினெட்டு வரை முறையாகக் கூறினால் அதுவே வெண்பா ஆகிவிடுமே!'' என்று கூறிச் சிரித்தார். பிறகு மாச்சீர், காய்ச்சீர் அலகிட்டு காளமேகம் பின்வரும் வெண்பாவைப் பாடிக் காட்டி,
 "ஒன்றிரண்டு மூன்றுநான்
 கைந்தாறே ஏழ்எட்டாம்
 ஒன்பது பத்துப்
 பதினொன்று பன்னி
 ரண்டுபதின் மூன்றுபதி
 னான்குபதி னைந்துபதி
 னாறுபதி னேழ்பதி னெட்டு'
 என்று அசத்தினார். ஆனால், அவருடைய அரிய புலமையை நேரில் கண்ட பிறகும் அரசரும் அதிமதுரக்கவியும் தக்க மரியாதை செய்யாமல் அவமதிக்கவே, காளமேகம் மனம் நொந்து திருமலைராயன் பட்டணத்தை மண் மாரிப் பொழிந்து அழியும்படி வசை பாடினார் என்பது வரலாறு.
 - எதிரொலி எஸ். விசுவநாதன்
 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/feb/16/ஒன்று-முதல்-பதினெட்டு-3358643.html
3358646 வார இதழ்கள் தமிழ்மணி படைத்தோன் பண்பிலான்! DIN DIN Sunday, February 16, 2020 12:00 AM +0530 மனித வாழ்க்கையில் இன்பம், துன்பம் இரண்டும் ஒருசேர அமைகின்றன. நல்ல செயல்கள் நடக்கும்போது இன்பமும், விரும்பத்தகாத செயல்கள் நடக்கும்போது துன்பமும் ஏற்படுகிறது. நாம் அதை இனியனவாகக் காணுதல் வேண்டும் என்பதைப் புறநானூற்றுப் பாடல் வழி அறியலாம்.
 ஓர்இல் நெய்தல் கறங்க, ஓர் இல்
 ஈர்ந் தண்முழவின் பாணி ததும்ப,
 புணர்ந்தோர் பூஅணி அணிய, பிரிந்தோர்
 பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப,
 படைத்தோன் மன்ற, அப்பண்பிலான்!
 இன்னாது அம்ம, இவ்உலகம்
 இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே (புறநா.194)
 ஒரு வீட்டில் இறப்பு நேர்ந்ததால் அங்கு சாக்காட்டுப் பறை ஒலிக்கின்றது; மற்றொரு வீட்டில் திருமணத்திற்காகக் கொட்டும் முழவின் ஓசை கேட்கின்றது. கணவரோடு இல்லறத்தில் சேர்ந்து வாழும் பெண்கள் பூக்களை அணிந்து மகிழ்ந்திருக்கின்றனர்; கணவரைப் பிரிந்த பெண்கள் கண்களில் நீர் சொரியக் கலங்குகின்றனர். இவ்வாறு நம்மைப் படைத்த பண்பில்லாதவனாகிய பிரமன் இன்பம், துன்பம் இரண்டையும் ஒன்றாகப் படைத்து விட்டான். இதுவே, இவ்வுலகத்தின் இயற்கையாகும். உலகத்தின் தன்மையறிந்தவர் துன்பத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இனிமையைத் தரும் நல்ல செயல்களை அறிந்து செய்ய வேண்டும்.
 வாழ்க்கையின் மீது வெறுப்புற்று வாழ்வை முடித்துக்கொள்ள நினைப்பவர்கள் மேற்கண்ட கருத்துகளை உணர்ந்து செயல்பட வேண்டும். நிலையாமையுடைய இவ்வுலகில், இன்பம்-துன்பம் இரண்டும் மாறி மாறி நிகழ்வன என்பதை உணர்ந்து, வாழ்கின்ற காலம் வரை துன்பத்தைக் கண்டு கலங்காமல் இனியவற்றைக் கண்டு மகிழ்வதற்குரிய செயல்களைச் செய்து வாழவேண்டும்.
 - முனைவர் கி .இராம்கணேஷ்

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/15/w600X390/tm2.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/feb/16/படைத்தோன்-பண்பிலான்-3358646.html
3358661 வார இதழ்கள் தமிழ்மணி இந்த வாரம் கலாரசிகன் DIN DIN Sunday, February 16, 2020 12:00 AM +0530 சைவத்துக்கும், சமரச சன்மார்க்கத்துக்கும் அதன் மூலம் தமிழுக்கும், தமிழகத்துக்கும் "சிவாலயம்' ஜெ.மோகன் செய்துவரும் பங்களிப்புகளைப் பட்டியலிடப் பக்கங்கள் போதாது. அவரை நான் மிக அரிதான சில நிகழ்வுகளில்தான் சந்தித்திருக்கிறேன், பேசியிருக்கிறேன். அகல இருந்து நான் வியந்து நோக்கும் பலரில் அவரும் ஒருவர். அவரது உதவியுடன் வெளியிடப்பட்டிருக்கும் திருக்குறள் மூலமும் உரைகளும் தேடித் தேடிக் கண்டெடுத்த பொக்கிஷங்கள். திருமுறை பதிப்புகளுக்கு அவர் நல்கும் ஊக்கமும் உதவியும் மிகப்பெரிய சைவத்தொண்டு.
 "சிவாலயம்' ஜெ.மோகன் தொகுத்திருக்கும் "திருவருட்பா ஆறு திருமுறைகளுக்கான வரலாறும் ஆராய்ச்சிக் குறிப்புகளும்' பேராசிரியர் சாமி.தியாகராசன் வெளியிட்டிருக்கும் புத்தகம். ஏற்கெனவே, "சிவாலயம்' ஜெ.மோகன் ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பு வள்ளலார் பெருமான் அருளிய திருவருட்பா ஆறு திருமுறைகளையும் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார். அதன் ஒரு பகுதியாகக் காணப்படுவதுதான், "திருவருட்பா ஆறு திருமுறைகளுக்கான வரலாறும் ஆராய்ச்சிக் குறிப்புகளும்'. அருட்பிரகாச வள்ளலார் குறித்த அனைத்துத் தகவல்களும், திருவருட்பா குறித்த அனைத்து செய்திகளும் ஜெ.மோகனால் மிகவும் கவனத்துடன் தேடிப் பிடித்துத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
 தமிழகத்தின் திருப்பேறு, வள்ளலார் பெருமான் தாம் பாடியருளிய திருவருட்பாக்களைத் தமது கரத்தாலேயே எழுதி அருளியுள்ளதுதான். சென்னையில் இருந்தவரை ஓலையிலும், கடலூருக்கு வந்த பின்னர் காகிதத்திலும் எழுதியிருக்கிறார். திருவருட்பாப் பாடல்கள் 5,818-இல் பெரும்பாலானவற்றிற்குக் கையெழுத்து மூலங்களே கிடைத்துள்ளன.
 "திருவருட்பா ஆறு திருமுறைகளுக்கான வரலாறும் ஆராய்ச்சிக் குறிப்புகளும்' என்பது புத்தகமோ, கையேடோ அல்ல. இதையே ஓர் ஆய்வாக எடுத்துக்கொண்டு "சிவாலயம்' ஜெ.மோகனுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட வேண்டும் என்பது எனது பரிந்துரை. முனைவர்பட்ட ஆய்வாளர்கள்கூட இந்த அளவிற்கு முனைப்புடன் தரவுகளைத் தேடிப்பிடித்துத் தொகுத்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.
 விலைமதிப்பற்ற பொக்கிஷம் என்பதாலோ என்னவோ, இந்தப் புத்தகத்துக்கு விலை குறிப்பிடாமல் விட்டிருக்கிறார் பேராசிரியர் சாமி.தியாகராசன். விலையில்லா பொருள்கள் தமிழகத்தில் மலிவாகிவிட்டன. அதனால், குறைந்த விலையில் பிரசுரித்து, அனைவருக்கும் கிடைக்க வழிகோல வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
 
 நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் இதழியலில் தடம் பதித்தே தீருவது என்கிற தீர்மானத்துடன் சென்னை மாநகரை நான் தஞ்சம் அடைந்தபோது, எனக்கு அறிமுகமான என்னைப் போலவே எழுத்தார்வத்துடன் இயங்கிவந்த பத்திரிகை நண்பர்கள் பலர். அவர்களில் ஆர்.சி.சம்பத், ஆர்.சி.பாஸ்கர் சகோதரர்கள் சற்று வித்தியாசமானவர்கள். தமிழகத்தைத் தாண்டி தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் தங்களது பார்வையை விரிவுபடுத்திக் கொண்டவர்கள். குறிப்பாக, ஆர்.சி.சம்பத்திடம் உலக அரசியல் குறித்தும் பேசலாம்; சர்வதேச சினிமா குறித்தும் பேசலாம்; கிழக்கிலிருந்து மேற்கு வரையிலான பல்வேறு மொழி இலக்கியங்கள் குறித்தும் பேசலாம்.
 தமிழ் இதழியல் உலகம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளாத பத்திரிகையாளர்கள் பலரில் ஆர்.சி.சம்பத்தும் ஒருவர் என்பது எனது கருத்து. ஆனால் அதுபற்றியெல்லாம் அவர் கொஞ்சம்கூடக் கவலைப்பட்டதோ, விசனித்துப் புலம்பியதோ கிடையாது. "தினமணி'யில் பங்களிக்கும் வாய்ப்பை அவருக்கு வழங்கவில்லை என்கிற மனக்குறை எனக்கு நிறையவே உண்டு.
 ஆர்.சி.சம்பத் எழுதிய "யாத்ரீகர்கள் கண்ட இந்தியா' என்கிற புத்தகம் விமர்சனத்துக்கு வந்திருந்தது. இந்தியாவின் பழங்காலப் பெருமையை நாம் தெரிந்து கொள்வதற்கு ஆதாரமாக இருப்பவை வெளிநாட்டு யாத்ரீகர்கள் நான்கு பேரின் பதிவுகள். கடல் வழிப் பயணம் மேற்கொண்டு உலகைச் சுற்றிவருவது அந்தக் காலத்தில் எளிதல்ல. அதற்கு அறிவு வேட்கை மட்டுமே போதாது. விடாமுயற்சியும், துணிச்சலும் தேவை. இப்போது உலகம் அமெரிக்காவை அண்ணாந்து பார்ப்பதுபோல, 15-ஆம் நூற்றாண்டு வரை உலகம் "இந்தியா' என்றால் விழிகள் விரிய வியப்பில் சமைந்த காலம் இருந்தது.
 மொராக்கோவைச் சேர்ந்த இபன் பதூதா, சீன யாத்ரீகர்களான யுவான் சுவாங், பாஹியான், வெனிஸ் நகரத்தைச் சேர்ந்த மார்க்கோ போலோ ஆகிய நால்வரும் இந்தியப் பயண அனுபவங்களைப் பதிவு செய்து தந்திருக்கிறார்கள். அந்தப் பதிவுகள்தான் உலகம் இந்தியாவைப் பற்றித் தெரிந்துகொள்ள பெரிய அளவில் உதவியது. அவற்றைப் படித்துவிட்டு இந்தியாவை சுற்றிப் பார்க்கக் கப்பலேறிக் கிளம்பிய இளைஞர்கள் ஏராளம்.
 அந்த நான்கு யாத்ரீகர்கள் குறித்தும், அவர்கள் தங்களது பயணத்துக்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்தது குறித்தும், அவர்களது இந்திய அனுபவங்கள் குறித்தும் சுருக்கமாக, அதே நேரத்தில் அனைவருக்கும் புரியும் விதத்தில் பதிவு செய்கிறது ஆர்.சி.சம்பத் எழுதிய "யாத்ரீகர்கள் கண்ட இந்தியா'.
 
 சென்னை காவல்துறை துணை ஆணையர் நண்பர் திருநாவுக்கரசு இ.கா.ப. எழுதிய "தன்னிலை உயர்த்து' புத்தகத்தின் வெளியீட்டு விழாவுக்கு அவரது சொந்த ஊரான ஆண்டிப்பட்டியை அடுத்த ரெங்கநாதபுரம் கிராமத்துக்குச் சென்றிருந்தபோது, அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர் கவிஞர் ஞானபாரதி. அவரைப் பற்றிக் கேள்விப் பட்டவுடன் நான் வியந்தேன்.
 கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக "இளங்குயில்' என்கிற பெயரில் ஒரு தனிச்சுற்று மாத இதழை ஆண்டிப்பட்டியில் நடத்தி வருகிறார், கவிஞர் "ஞானபாரதி' என்பது மலைக்க வைக்காமல் என்ன செய்யும்? சமூக சிந்தனையாளராக, சிறுகதை எழுத்தாளராக, கட்டுரையாளராக, இலக்கியச் சொற்பொழிவாளராக, கவிஞராக ஞானபாரதி எடுக்கும் அவதாரங்கள் பல. அவரது கவிதைத் தொகுப்பு "மாதவம் செய்து...' அதில் "அடிமை' என்கிற கவிதையிலிருந்து சில வரிகள்.
 காபி எங்கே?
 சுடுதண்ணி ரெடியாச்சா?
 பேண்ட் சட்டை எடு
 சாப்பாடு என்ன?
 பாய விரி
 இப்படியே... இப்படியே...
 ஆனாலும் சொல்கிறார்கள்
 குடும்பத்தலைவி என்று!
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/15/w600X390/tm3.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/feb/16/இந்த-வாரம்-கலாரசிகன்-3358661.html
3358667 வார இதழ்கள் தமிழ்மணி எண்ணம் ஈடேற மாட்டாது! DIN DIN Sunday, February 16, 2020 12:00 AM +0530 நாம் எண்ணிய எண்ணப்படி எதனையும் செய்துவிட முடியாது. எல்லாம் இறைவன் ஆணையின் வண்ணமே நடக்கும். இதை மெய்கண்டார், "ஆணையின் நீக்கம் இன்றி நிற்கும் அன்றே' என்று "சிவஞான போதம்' எனும் மெய்கண்ட சாத்திர நூலில் குறிப்பிட்டுள்ளார்.
 மனிதன் எண்ணியதை எண்ணியவாறு முடிப்பானேயானால் கீழ் மேலிராது. வாயுதேவன் ஒரு துரும்பைக்கூட அசைக்க முடியாமல் வாடியதும்; அக்கினிதேவன் அத்துரும்பை எரிக்க முடியாது இளைத்ததும்; இந்திரன் அசைவற்று அலக்கணுற்றதும் கேநோபநிடதத்தால் புலனாகின்றதன்றோ?
 "எல்லாம் தன்னாலேயே ஆகின்றன' என்று எண்ணி இறுமாந்து சிலர் திரிகின்றனர். "இதனை முடிக்க வேண்டும்; இதனை ஈட்ட வேண்டும்' என்று பலகாலும் முயன்று நிற்பினும் அவை முடியாமல் போகின்றன.
 "வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
 தொகுத்தார்க்குந் துய்த்த லரிது'
 என்றார் திருவள்ளுவர். ஆதலால், "இதை இப்படி முடிக்க வேண்டும். அதை அப்படி முடிக்க வேண்டும்' என்று மனக்கோட்டை கட்டக்கூடாது. திருவருளை முன்னிட்டே எதனையும் செய்ய வேண்டும். இறைவனுடைய இன்னருள் துணை செய்து முடித்துக் கொடுக்கும் இவ்வுண்மையை கீழ்க்காணும் எடுத்துக்காட்டுப் பாடலால் கண்டு தெளியலாம்.
 கரிய நிறமும், பெரிய திறமும் திரண்ட புயமும், இருண்ட மனமும், மருண்ட சினமும் உடைய வேடன் ஒருவன் இருந்தான். அவ்வேடன் ஒரு நாள் காட்டை வளைத்து வேட்டையாடி இங்கும் அங்கும் திரிந்தான். அவ்வாறு திரியும்போது ஒரு பெரிய மத யானையைக் கண்டான். அதைக் கணையால் எய்திக் கொல்லும் பொருட்டு ஒரு புற்றில் மறைந்து நின்றான். யானை அருகில் வந்ததும் கணை தொடுத்துக் கொன்றான். யானை வீழ்ந்து மாய்ந்தது. அதுசமயம் அவன் காலடியில் மிதியுற்று நொந்த ஒரு நாகம் சீறி அவனைக் கடித்தது. அதனால் வருந்திய வேடன் வெகுண்டு அப்பாம்பையும் ஒரு பாணத்தால் கொன்றான். சிறிது நேரத்திற்குள் விடந்தலைக்கேறி(விஷம்) வேடன் இறந்தான்.
 இங்ஙனம் யானை, வேடன், பாம்பு மூன்றும் இறந்து கிடந்தன. அங்கு நரியொன்று வந்து சேர்ந்தது. பசியால் வாடி இரையை நாடி வந்த அந்த நரி, இறந்து கிடந்த மூன்று பிணங்களையும் கண்டு "நமக்கு நல்ல உணவு கிடைத்தது' என்று உள்ளம் மகிழ்ந்தது. "ஆகா! என்ன அதிர்ஷ்டம்? என்னைப் போல் கொடுத்து வைத்தவர்கள் யார்? உலகில் ஒருவனுக்கு ஏதாவது ஒரு சிறந்த பொருள் கிடைத்தால் "நரிமுகத்தில் விழித்தனையோ' என்பர். இப்போது நாம் யார் முகத்தில் விழித்தோம் என்று கூறுவது? எவ்வளவு பெரிய பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது? என் வயிறு செய்த புண்ணியந்தான் யாதோ?' என்று எண்ணி அளவில்லாத ஆனந்தமுற்று ஆடிப் பாடியது.
 பின்னர் நரி அம்மூன்று பொருள்களையும் சுற்றிச் சுற்றிப் பார்த்து, இந்த யானை 6 மாதங்களுக்கும், இம்மனிதன் 3 நாள்களுக்கும், இந்த நாகம் 2 நாள்களுக்கும் எனக்கு உணவாகும். எனவே, 185 நாள்களுக்கு உணவைப் பற்றி எனக்குக் கவலையே இல்லை. வெகு சுகமாகத் தின்றுகொண்டே இருக்கலாம். ஆனால், இந்த வேடன் கையிலுள்ள வில்லின் நாணை முதலில் கடித்துத் தின்போம். அது ஒரு பாதி வயிற்றுக்கு உணவாகும். அதைத்தான் ஏன் விட்டுவைக்க வேண்டும்? என்று எண்ணியது.
 அதற்கிருந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. திடீரென்று ஒரு குதி குதித்தது. ஓடி வேடன் கையிலிருந்த வில்லின் நாணைக் கடித்தது. கடித்ததும் வில் முனை விரைவில் நிமிர, நரியின் தலை நறுக்குண்டு விழுந்தது. நரி தான் எண்ணிய எண்ணமெல்லாம் அடிமாண்டு இறந்தது. ஆதலால், நமது எண்ணம் எண்ணியபடியே ஈடேறமாட்டாது. எல்லாம் திருவருளாலே நிகழும் என்பதையே இந்நிகழ்ச்சி எடுத்துரைக்கிறது. அதனால், திருவருளின் வழியே வழிநடந்தால் எண்ணம் ஈடேறும்!
 "கரியொரு திங்க ளாறும் கானவன் மூன்று நாளும்
 இரிதலைப் புற்று நாகம் இரண்டுநாள் இரையா மென்றே
 விரிதலை வேடன் கையின் விற்குதை நரம்பைக் கவ்வி
 நரியனார் பட்ட பாடு நாளைநாம் படவே நிற்போம்'
 -எம்.ஜி.விஜயலெஷ்மி கங்காதரன்
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/15/w600X390/tm4.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/feb/16/எண்ணம்-ஈடேற-மாட்டாது-3358667.html
3352807 வார இதழ்கள் தமிழ்மணி  அறிவுச் செல்வமே உயர்ந்தது  முன்றுறையரையனார் Sunday, February 9, 2020 12:00 AM +0530 பழமொழி நானூறு
 அருவிலை மாண்கலனும் ஆன்ற பொருளும்
 திருவுடையார் ஆயின் திரிந்தும் - வருமால்
 பெருவரை நாட! பிரிவின்(று) அதனால்
 திருவினும் திட்பம் பெறும். (பாடல்-136)
 பெரிய மலை நாட்டை உடையவனே! செல்வம் உடையவர்களுக்கு ஆயின், (அவர்தம்) அரிய விலையுடைய மாட்சிமைப்பட்ட பூண்களும், நிறைந்த செல்வமும் நிலைபெறாது மாறி வரும் இயல்பை உடையன. (அறிவுச் செல்வம் உடையோர்க்கு ஆயின் அவர் தம் செல்வம்) பிரிதலில்லை. அத்தன்மையால், செல்வத்தினும் அறிவே உயர்வைப் பெறும். (க-து.) அறிவுச்செல்வம் பொருட் செல்வம்போல் பிரிதலில்லாமையால் அதனையே தேடுதல் வேண்டும். "திருவினும் திட்பம் பெறும்' என்பது இச்செய்யுளில் வந்த பழமொழி.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/3/w600X390/LOTUS.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/feb/09/அறிவுச்-செல்வமே-உயர்ந்தது-3352807.html
3352808 வார இதழ்கள் தமிழ்மணி நமக்கு யார் துணை? DIN DIN Sunday, February 9, 2020 12:00 AM +0530 சொக்கநாதப் புலவர் பெரும் தமிழ்ப் புலவர். அவருக்கு ஒரு சிந்தனை பல்வேறு நேரங்களிலும் துணையாகத் தமக்கு இருப்பது யார் என்று; யோசித்தார்; விடையைக் கண்டு கொண்டார்.
 புலவர் என்பதால் ஒரு பாடலிலே அதைச் சொல்லி விட்டார். அவருக்கு உற்ற துணையாக இருப்பவரே அனைவருக்கும் உற்ற துணையாக எப்போதும் இருப்பாராம்; யார் அவர்?
 "துயிலையி லேயிடர் துன்னையி லேதெவ்வர் குழையிலே
 பயிலையி லேயிருட் பாதியி லேபசும் பாலனத்தை
 அயிலையி லேவய தாகையி லேநமக் கார்துணைதான்
 மயிலையிலே வளர் சிங்கார வேலா மயிலையிலே
 மயில் அயில் வளர் சிங்காரவேலர் மயிலையிலே
 மயிலையும் கூர்மை வளர்கின்ற அழகிய வேலையும்
 கொண்டவரது திருமயிலையிலே'
 துயிலையிலே - தூங்கும்பொழுது; இடர் துன்னையிலே - துன்பம் மிகும்போது; தெவ்வர் குழையிலே - பகைவரை எதிர்கொள்ளும்போது; பயிலையிலே - சஞ்சரிக்கும் போது; இருள் பாதியிலே - பாதி இரவிலே; பசும் பால் அன்னத்தை அயிலையிலே - பசும்பாற் சோற்றை உண்ணும்போது; வயது ஆகையிலே - ஆயுள் முடியும்போது; நமக்கு ஆர் துணை - நமக்கு யார் துணையாவார்?
 மயிலைச் சிங்காரவேலரேதான் துணை என்பதை உணர்ந்து சொக்கநாதப் புலவர் எவ்வளவு அற்புதமாக இப்பாடலைப் பாடியுள்ளார்.
 - தி.ந.வேதவல்லி

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/8/w600X390/tm1.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/feb/09/நமக்கு-யார்-துணை-3352808.html
3352810 வார இதழ்கள் தமிழ்மணி இந்த வாரம் கலாரசிகன் DIN DIN Sunday, February 9, 2020 12:00 AM +0530 சென்ற ஞாயிற்றுக்கிழமை காலையில், சென்னை மயிலாப்பூர் தட்சிணாமூர்த்தி அரங்கத்தில், பின்னலூர் மு.விவேகானந்தனின் இராமலிங்கர் நற்பணி மன்ற நிகழ்ச்சி. மாலையில், சேலம் ஸ்ரீ இராமகிருஷ்ண மடத்தின் நூற்றாண்டுவிழா நிகழ்ச்சி. இரண்டையுமே தவிர்க்க முடியவில்லை. 
நீதியரசர்கள் வெ. இராமசுப்பிரமணியனும், இரா.மகாதேவனும் கலந்துகொண்ட, இராமலிங்கர் நற்பணி மன்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றிருந்தபோது, முனைவர் பெ.கி.பிரபாகரனை சந்தித்தேன். சென்னையில் எந்தவொரு இலக்கியக் கூட்டமாக இருந்தாலும் அதில் தவறாமல் கலந்து கொள்பவர்களில் முனைவர் பிரபாகரனும் ஒருவர். அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயல்பாடுகளில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. மகாகவியின் பிறந்த நாளுக்குத் தவறாமல் எட்டயபுரம் வந்து மரியாதை செலுத்தும் பாரதி அன்பர் என்பதால், எனக்கு அவரிடம் தனி மரியாதை உண்டு.
பின்னலூர் மு.விவேகானந்தனின் இராமலிங்கர் நற்பணி மன்ற நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது, அவர் எழுதிய "திரைப்பாடல்களில் இலக்கியச் செல்வாக்கு' என்கிற அவரது புத்தகத்தை அன்பளிப்பாகத் தந்தார். நான் ஏற்கெனவே படித்த புத்தகம்தான் அது. காலை நிகழ்ச்சி முடிந்து சேலத்துக்கு ரயிலில் பயணம் செய்யும்போது, இரண்டாவது முறையாக அந்தப் புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
எந்தவொரு புத்தகத்தையும் இரண்டாவது முறையாகப் படிக்கும்போது, ஒன்று சலிப்பு மேலிட்டு நான்கைந்து பக்கங்கள் முடியும்போது மூடி வைத்துவிடுவோம். இல்லையென்றால், முதல் தடவையைவிட அதிக சுவாரஸ்யத்துடன் படிக்கத் தொடங்கிவிடுவோம். முதல் முறை படித்தபோது நமது சிந்தனையைத் தொடாத புதிய பல செய்திகள் புலப்படும். முனைவர் பெ.கி.பிரபாகரனின் "திரைப்படப் பாடல்களில் இலக்கியச் செல்வாக்கு' இரண்டாவது ரகம்.
இலக்கிய ரசனையுள்ளவர்கள் திரையிசையைக் கேட்கும்போது, ஏற்படும் ஆனந்தம் அலாதியானது. பிரபாகரன் சங்க இலக்கியத்திலும், காப்பியத்திலும் ஆழங்காற்பட்ட புலமையுள்ளவர் என்பதால், திரையிசைப் பாடல்களில் சங்கப் புலவர்களும், வள்ளுவர், கம்பர், புகழேந்தியார், மகாகவி பாரதி, பாரதிதாசன் போன்றோரும் பதிவு செய்திருக்கும் கருத்துகளையும், பாடல்களையும் ஒப்புமைப்படுத்தி இருப்பது ரசனைக்குரிய ஆய்வு.
பாமரர்களுக்கு இலக்கியத்தை எடுத்துச் சென்றிருக்கும் திரைப் பாடலாசிரியர்களின் திறமையை எண்ணி வியக்க வைக்கிறது முனைவர் பிரபாகரனின் புத்தகம். 

வள்ளுவரும் சரி, கம்பரும் சரி, சொல்லின் வலிமையை வலியுறுத்திக் கூறியிருப்பதுபோல வேறு எவருமே கூறியிருக்க முடியாது. சொல்லாற்றல் மிக்கவர்கள்தான் உலக வரலாற்றைப் புரட்டிப் போட்டிருக்கிறார்கள். "உலகின் தலைசிறந்த நூறு உரைகள்' என்கிற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்தால் பேச்சாற்றல் மூலம் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பது தெரியும்.
மொழி ஆளுமை மட்டுமே பேச்சாற்றலுக்குக் காரணமாகிவிட முடியாது. சொல்லாடலுக்கு மொழி தேவை என்பது உண்மைதான் என்றாலும், கருத்தை விதைப்பதற்கு அது மட்டுமே போதாது. பேச்சாளர்கள் குறித்துப் பேராசிரியர் அ.கி.பரந்தாமனாரும், "இலக்கியச் செல்வர்' குமரி அனந்தனும் புத்தகங்கள் படைத்திருக்கிறார்கள். தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகனும் மேடைப் பேச்சின் இலக்கணங்களை தானறிந்த கோணத்தில் பதிவு செய்திருக்கிறார். அந்த வரிசையில் தோழர் தா.பாண்டியன் எழுதியிருக்கும் நூல் "மேடைப் பேச்சு'.
தோழர் தா. பாண்டியனின் மேடைப் பேச்சைக் கேட்டு மயங்கிய பலரில் நானும்கூட ஒருவன். நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் பல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கங்கள் உண்டு. அங்கிருக்கும் "மூன்று லாம்பு' திடலில் முன்னணி தொழிற்சங்கத் தலைவர்கள் பலரும் உரையாற்றுவார்கள். நடுநிலைப் பள்ளி வயதில் நான் கேட்ட அரசியல் மேடைப் பேச்சுகள் அனைத்துமே தொழிற்சங்கவாதிகளான இடதுசாரித் தோழர்களின் கூட்டங்களில்தான். தோழர்கள் ப. ராமமூர்த்தி, பாலதண்டாயுதம், சங்கரய்யா, கே.டி.கே. தங்கமணி, மணலி கந்தசாமி, கல்யாணசுந்தரம், அனந்தன் நம்பியார், நல்லசிவம் வரிசையில் தா. பாண்டியனும் அதில் அடக்கம்.
திரு.வி.க., சத்தியமூர்த்தி, தோழர் ஜீவா, ம.பொ.சி., "பசும்பொன்' தேவர், அண்ணா உள்ளிட்டோர் மட்டுமல்ல, வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, வ.வே.சு. ஐயர், ராஜாஜி என்று தமிழகத்தைத் தங்களது பேச்சாற்றலால் ஈர்த்தவர்கள் ஏராளம், ஏராளம். அவர்கள் அனைவரையும் மேற்கோள் காட்டி, மேடைப் பேச்சு எப்படி அமைய வேண்டும் என்று வழிகாட்டியிருக்கிறார் தோழர் தா. பாண்டியன்.
நான் கேட்ட முதல் மேடைப் பேச்சு நினைவில்லை. ஆனால், என்னைக் கவர்ந்த முதல் பேச்சாளர் "குன்றக்குடி' தெய்வசிகாமணி அடிகளார். எனது கன்னிப் பேச்சும், அவர் முன்னிலையில்தான் அரங்கேறியது என்பதால், அவரையே நான் எனது மேடைப் பேச்சுக்கு குருவாக வரித்துக் கொண்டுவிட்டேன். அடுத்தாற்போல, என்னைக் கவர்ந்த மேடைப் பேச்சாளர் தோழர் எஸ்.ஆர்.கே. என்று மரியாதையுடன் அழைக்கப்பட்ட எஸ். ராமகிருஷ்ணன். அவரது மேடைப் பேச்சு பாணியே அலாதியானது.
தோழர் தா. பாண்டியன் கேட்ட முதல் மேடைப் பேச்சு "பசும்பொன்' முத்துராமலிங்கத் தேவருடையது என்று தனது புத்தகத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதனால்தானோ என்னவோ, தோழரின் பேச்சிலும் அழுத்தமும், தெளிவும், வீரியமும் காணப்படுகிறது. அணிந்துரை வழங்கியிருக்கும் பேராசிரியர் தி. இராசகோபாலன் கூறுவதுபோல, "தோழர் தா.பா.வின் படைப்புகளில் "மேடைப் பேச்சு' காலத்துக்கும் அவரது பெயர் சொல்லி நிற்கும்.''
மேடைப் பேச்சுக்கு வள்ளுவர் வகுத்திருக்கும் இலக்கணம் இதுதான் - "சொல்லுக சொல்லைப் பிரிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மையறிந்து'!

மருத்துவ மலர் கலந்தாய்வுக்காக ஆசிரியர் குழுவினருடன் கொல்லிமலை சென்றிருந்தேன். சேலத்திலிருந்து சென்னைக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தபோது, நிருபர் கோபி கிருஷ்ணா அவர் படித்து ரசித்த கவிதை ஒன்றைப் பகிர்ந்து கொண்டார். கவிஞர் கோ.வசந்தகுமாரனின் "சதுரப் பிரபஞ்சம்' என்கிற தொகுப்பில் இந்தக் கவிதை இடம்பெற்றிருப்பதாகக் கூறினார். அதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
எப்போதாவது பெய்கிறது மழை
எப்போதாவது விளைகிறது வயல்
எப்போதாவது நடக்கிறது அறுவடை
எப்போதும் பசிக்கிறது வயிறு!

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/8/w600X390/tm3.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/feb/09/இந்த-வாரம்-கலாரசிகன்-3352810.html
3352811 வார இதழ்கள் தமிழ்மணி நடுவுநிலை அளவுகோல்! DIN DIN Sunday, February 9, 2020 12:00 AM +0530 மனிதனாகப் பிறந்தவர்கள் சான்றோராக விளங்குவது அரிது என்பது ஒளவையாரின் கூற்று. அப்படிச் சான்றோராக வாழ்வதற்குரிய பல பண்புகளில் "நடுவுநிலை' என்பது முதன்மையான ஒன்று. தமிழ்த் திரு நாட்டில், தமது உயிரை இழந்தேனும் நடுவுநிலையைப் பறைசாற்ற முயன்றவர்கள் பலர் உண்டு.
 "நடுவு நின்றார்க்கன்றி ஞானமும் இல்லை
 நடுவு நின்றார்க்கு நரகமும் இல்லை
 நடுவு நின்றார் நல்ல தேவருமாவார்
 நடுவு நின்றார் வழி நானும் நின்றேனே'
 என்று நடுவு நின்றாரின் புகழை திருமூலர் "திரு'வோடு எடுத்து மொழிந்துள்ளார். இவர் கூறியுள்ள நடுவுநிலைமை யோக மார்க்கத்தில் சித்தத்தை நிலைநிறுத்துதல் என்றாகாதா? என்ற வினா ஒரு பக்கம் இருந்தாலும், உலக வாழ்வில் ஈடுபட்டுள்ள மனிதர்கள் கடைப்பிடிக்கக் கூடிய நடுநிலையாகவும் இந்தச் செய்யுளைக் கொள்ள முடியும்.
 தொல்காப்பிய அடிப்படையில் ஐவகை திணைகளில் ஒன்றாக, எதிலும் சேராத பாலைத் திணையை "நடுவுநிலைத் திணை' எனத் தொல்காப்பியர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 "நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
 (தொல். பொரு. அகத்)
 கலப்பையோடு பொருந்தியுள்ள நீண்ட தடியின் மையத்தில் துளை இடப்பட்டிருக்கும்; அதன் இரு புறங்களிலும் சம அளவுகள் இருக்கும், இதை "நுகத்தடி' என்று வழங்குவதும் உண்டு. நடுநிலை உள்ளவர்கள் இந்த நுகத்தடியைப் போல நல்ல நெஞ்சத்தோடு, பழி பாவங்களுக்கு அஞ்சி, பொய் பேசுவதைத் துறந்து, தம்முடையதையும் பிறருடையது போல எண்ணி, அளவு குறையாமல், சரியான விலையைக் கூறி விற்கும், தொன்றுதொட்டு செல்வம் ஈட்டிய வணிகர்கள் புகழைப் பாடுகிறது கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பட்டினப்பாலை பாடல் ஒன்று.
 "கொடு மேழி நசையுழவர்
 நெடுநுகத்துப் பகல் போல
 நடுவு நின்ற நல்நெஞ்சினோர்
 வடுவஞ்சி வாய்மொழிந்து
 தமவும் பிறவு மொப்பநாடி'
 அறத்தையும், வாழ்வியல் இலக்கணத்தையும் வடிவமைத்த திருவள்ளுவர், நடுவுநிலைமைக்கென்றே ஓர் அதிகாரம் ஒதுக்கி, "நடுவுநிலைமை' எனும் நற்பண்பு குறித்துக் கூறியுள்ளார். பொருள்களை எடை போடுகின்ற தராசு, தன்னைத்தானே முதலில் சமப்படுத்திக்கொண்டு, பின்பு தன்னுள் இடப்படுகின்ற எடை எந்தப் பக்கத்தில் அதிகம் உள்ளதோ, அந்தப் பக்கத்தில் சாய்வதைச் செய்கிறதோ அதுபோல, சான்றோர் நடுநிலையோடு விளங்குவதும், நீதியின் பக்கம் நிற்பதுவும் அவர்களுக்கு அழகாகும் என்கிறது குறள் (118).
 நல்லொழுக்கத்திற்குப் பொருந்தாதவற்றை நீக்கிவிட்டு, செம்மையான பொன்னை எடை போடுகின்ற தராசின் நடுப்பகுதியில் உள்ள குறிமுள் போல நடுவுநிலையில் ஈடு இணையற்ற அரசனின் தன்மையினைக் கீழ்வரும் பாடலில் கூறுகிறார் கவிச்சக்ரவர்த்தி கம்பர்.
 "சீலம் அல்லன நீக்கி செம்பொன் துலை
 தாலம் அன்ன தனி நிலை தாங்கிய
 ஞால மன்னற்கு நல்லவர் நோக்கிய
 காலம் அல்லது கண்ணும்
 உண்டாகுமோ?' (அயோ.கா.)
 நடுவுநிலைமைக்கு உவமையாக ஏர் கலப்பையில் இணைந்துள்ள நுகத்தடியைக் கடியலூர் உருத்திரங்கண்ணனாரும், நிறுத்துப் பார்க்கிற பொதுவான துலாக்கோலை திருவள்ளுவரும், பொன் எடையை அளவிடுகிற தராசாகக் கம்பரும் பார்க்கின்றனர். இம்மூவரில் கம்பரின் உவமை நடுவுநிலைமையை அதிநுட்பம் வாய்ந்ததாகவும், நுண்ணிய முறையில் அளவிடுவதாகவும் உள்ளது கருத்தில் கொள்ளத்தக்கது.
 - முனைவர் பா.சக்திவேல்
 
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/8/w600X390/tm4.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/feb/09/நடுவுநிலை-அளவுகோல்-3352811.html
3352812 வார இதழ்கள் தமிழ்மணி கயத்தியும் கயவனும்! DIN DIN Sunday, February 9, 2020 12:00 AM +0530 நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை "வில்லி, வில்லன்' என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம்.
 ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன.
 "கயவன்' என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் "கயத்தி'யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு:
 "தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை
 துள்ளி, மீது எழுபுள் எலாம்
 தேய்கை ஒத்த மருங்குல் மாதர்
 சிலம்பின் நின்று சிலம்புவ
 கேகயத்து அரசன் பயந்த விடத்தை
 இன்னது ஓர் கேடுசூழ்
 மா கயத்தியை, உள்கொதித்து
 மனத்து வைவன போன்றவே!'
 (கைகேயி சூழ்வினைப் படலம்-229)
 "கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இருந்தது... நீராடும் குளங்களிலிருந்தும், மரங்களிலிருந்தும் துள்ளிக் குதித்துக்கொண்டு மேலே பறக்கிற மெல்லிய சிறகுகளை உடைய பறவைகள், தேய்ந்துள்ள இடையைப் பெற்ற மகளிரின் காற்சிலம்புகள் போல ஒலியை எழுப்பிய காட்சி' என்கிறார் கம்பர்.
 எனவே, வில்லனைக் "கயவன்' என்றும், வில்லியைக் "கயத்தி' என்னும் இனி அழைக்கலாம்; எழுதலாமே...!
 -சி.பொன்ராஜ்

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/8/w600X390/tm5.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/feb/09/கயத்தியும்-கயவனும்-3352812.html
3352809 வார இதழ்கள் தமிழ்மணி "தேவையுலா'வின் தேவை! Saturday, February 8, 2020 11:36 PM +0530 பலபட்டடைச் சொக்கநாதக் கவிராயரால் இயற்றப்பட்டது "தேவையுலா' என்னும் உலா நூல். இந்நூல் 1911-ஆம் ஆண்டு மதுரை தமிழ்ச் சங்க முத்திராசாலைப் பதிப்பாக விலை 4 அணாவில் வெளிவந்துள்ளது. இந்நூலுக்கு உத்தமதானபுரம் வே.சாமிநாதையர் அரும்பத உரை எழுதியிருக்கிறார்.
 "தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையரின் முகவுரையிலிருந்து சில துளிகள்: "தேவையுலா என்பது, இராமேசுவரத்து திருக்கோயில் கொண்டெழுந்தருளிய ஸ்ரீஇராமநாதர் மீது பலபட்டடைச் சொக்கநாத பிள்ளையால் இயற்றப்பெற்றது; தேவை இராமேசுவரம்; இது பாண்டி நாட்டிலுள்ள பாடல் பெற்ற பதினான்கு சிவஸ்தலங்களுள் ஒன்று.
 உலாவென்பது தமிழ்ப் பாஷைக்குரிய தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்று; பேதை முதலிய எழுவகைப் பருவ மகளிர்களும் தன்னைக் கண்டு காதல் கூரும்படி ஒரு தலைவன் வீதியிற் பவனி போந்தானென்று அவனுடைய அரிய செயல்களைப் பலவகையாகப் புலப்படுத்தி, கலிவெண்பாவால் பாட வேண்டும் என்பது அந்நூலுக்குரிய விதி; வீதியென்றது இங்கே உருத்திர கணிகையருடைய தெருக்களை.
 இந்நூலால், ஸ்ரீஇராமநாதருடைய பெருங்கருணைத் திறமும் இராமேசுவர தல விசேடங்களும் தீர்த்த விசேடங்கள் முதலியனவும் வேறு தலபுராண கதைகளும் பழைய சிவபுராணங்களிற் காணப்படும் அரிய சரித்திரங்களும் நாயன்மார்களுடைய அருமைச் செயல்களும் பலமுகமாக அவ்வவ்விடத்து அறியலாகும். இன்னும், பொருளை எளிதில் விளக்கும் மடக்கு, சிலேடை முதலிய சொல்லணிகளும், முக்கியமான பொருளணிகளும் கேட்டோர்களை விரைவில் வியப்பிக்கும் தொனிகளும் இதிற் பரக்கக்காணலாம்.
 அன்றியும் இத்தலத்தில் உள்ள ஆரியர் ஐந்நூற்றுப்பன்னிருவர் என்பது 64-ஆம் கண்ணியாலும், பண்டைக் காலத்தில் இத்தலத்தில் இன்ன இன்ன திருப்பணிகள் இன்னாரின்னாராற் செய்விக்கப் பெற்றனவென்பது 67-ஆம் கண்ணி முதலியவற்றாலும், இரகுநாத úஸதுபதி கட்டுவித்த மண்டபம் ஒன்றில் உத்ஸவ காலத்தில் இராமநாதரெழுந்தருளினரென்பது 63-ஆம் கண்ணியாலும், திருத்தேர் சேதுபதிகளாற் செய்விக்கப் பெற்றதென்பது 108-ஆம் கண்ணியாலும், இராமநாதருக்குச் சாத்திய திருவாடை விசயரகுநாத úஸதுபதியால் அளிக்கப்பெற்றதென்பது 67-ஆம் கண்ணியாலும், அவர் திருத்தேர்வட முகூர்த்தம் செய்தனரென்பது 138-ஆம் கண்ணியாலும் விளங்குகின்றன. இன்னும் இங்ஙனம் விளங்குவன பல.

திருத்தேர்வட முகூர்த்தம் செய்தவர் விசயரகுநாத úஸதுபதி என்று கூறியிருத்தலால் அவர் காலமும் இந்நூலாசிரியர் காலமும் ஒன்றென்பதும் இந்நூலை இயற்றுவித்தவர் அவரென்பதும் விளங்குகின்றன. பண்டைத் தமிழ் நூல்களிற் காணப்படாத ஒருவகைச் சொற்கள் இந்நூலிற் சிலவிடத்து வந்துள்ளன; இடத்துக்கேற்ற சிறப்புள்ளனவென்று கருதி அவை பெரியவர்களால் அக்காலத்து அங்கீகரிக்கப்பெற்றன போலும்'' (24.2.07).
 இந்நூலின் "தீர்த்தங்கள்' பற்றிய கண்ணிகளும் அவற்றிற்கு "தமிழ்த் தாத்தா' உ.வே.சா. எழுதியிருக்கும் அரும்பத உரையும் வருமாறு:
 கால வரையடைந்துங் கால வரையடையாச்
 சீல முடையசக்ர தீர்த்தமும் - கோலவரைப்
 பேதையொரு பாகன்போற் பேயுட னேயாடும்
 வேதாள தீர்த்தமெனு மென் புனலும் - பூதலத்து
 வாவுந் திடமதிக்கு வந்த மறுத்துடைத்த
 பாவ விநாசப் பசுந்தடமும் - ஆவலாற்
 சீதைதரும் பட்டத்தாற் றேவேந் திரப்பட்டங்
 கோதகன்ற தாஞ்சீதா குண்டமும் - நீதிபோய்த்
 தேயமிழந் தோனிழந்த தேர்பரியெல் லாங்கவந்த
 வாயி லுதிப்பித்த மங்கலமும் - நேயத்தால்
 ஏத்திய நல்லோரை யேகாந்த ராமன்பாற்
 சேர்த்து விடுமமுத தீர்த்தமும் - பூத்தமலர்
 (கண்ணி: 9-14)
 (9) காலவரை - காலவ முனிவரை, கால எல்லை; சக்கர தீர்த்த முதலிய 24 தீர்த்தங்களின் விசேடங்களையும்; ஆடிப்பேறு பெற்றோர் இன்னார் என்பதையும், சேதுபுராணத்துள்ள சக்கரதீர்த்தச் சருக்க முதலியவற்றால் முறையே அறிந்து கொள்க. (10) பேதையொருபாகன்போல் - சிவபெருமான் பேயோடாடுதல்போல், பேய்- சுதர்சனனாகிய பேய். (11) திடமதி - ஒருவன் பெயர்; மறு-அவனடைந்த பாவம்; சந்திரற்குள்ள களங்கமென்பது மற்றொரு பொருள். (12) பட்டம் - குளம், பதவி; கோது - இந்திரனைச் சார்ந்திருந்த பிரஹ்மஹத்தி தோஷம்.
 (13) தேயமிழந்தோன்- மனோகசவானென்னும் அரசன்; கவந்தம் - நீர். (14) "ஏகாந்தராமம்' என்பது இராமேசுவரத்திலுள்ள ஓரிடம்; இராமர், இராவண சங்காரத்திற்குரிய காரியங்களைப் பலருடன் ஆலோசித்துக் கொண்டிருக்கையிற் கடல் முழக்கம் ஒருவர் பேசியது ஒருவர்க்குக் கேளாமலிருக்கும்படி செய்தமையின், அவர் கோபிக்க, உடனே கடல் ஓசையின்றி அடங்கியதனால், அவ்விடத்திற்கு ஏகாந்தராமமென்றும், ஏகாந்தராமநகரம் என்றும், அங்கு எழுந்தருளியிருக்கும் இராமபிரானுக்கு ஏகாந்தராமனென்றும் பெயர்கள் உண்டாயின; "மாயோ னடக்கும், நெடுங்கடல் போலடங்கி நிற்க'' என்றும், "இமைக்குங் கடலேழி லேகாந்த ராமன், அமைக்குங் கடல்பார்த் தமர்ந்தீர்'' என்றும் பின்வருதல் காண்க (கண்ணி-91, 317).
 இவ்வாறு "தமிழ்த் தாத்தா' உ.வே.சா.வின் அருமையான அரும்பத உரை நூலிலுள்ள கண்ணிகள் அனைத்திற்கும் அமைந்து அரிய பல சொல் விளக்கங்களையும், உண்மைகளையும் எடுத்துரைக்கின்றன. தமிழ் பக்தி இலக்கியத்திற்கும், "உலா' சிற்றிலக்கியத்திற்கும் தேவையான பல அரிய செய்திகளை அள்ளித்தரும் இந்நூலை யாரேனும் மறுபதிப்பு செய்து, தமிழ்கூறு நல்லுலகுக்கு வழங்கலாமே!
 -மணிவாசகப்பிரியா

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/8/w600X390/tm2.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/feb/09/தேவையுலாவின்-தேவை-3352809.html
3346600 வார இதழ்கள் தமிழ்மணி  அறிவில்லாதார் வாயை மூட முடியாது முன்றுறையரையனார் Sunday, February 2, 2020 12:00 AM +0530 பழமொழி நானூறு
 தெரியா தவர்தம் திறனில்சொல் கேட்டால்
 பரியாதார் போல இருக்க - பரிவுஇல்லா
 வம்பலர் வாயை அவிப்பான் புகுவரே
 அம்பலம் தாழ்க்கூட்டு வார். (பாடல்-135)
 அறிவில்லாருடைய (அவர் தம்மை இகழ்ந்து கூறும்) திறமையில்லாச் சொற்களைக் கேட்டால், துன்புறாதவர்களைப்போல் பொறுத்திருக்க. (அங்ஙனமன்றி) அன்பில்லாத அயலார் வாயை அடக்கப் புகுவார்களோ? இல்லை, (புகுவரேல்) பொது இடத்தைத் தாழ்இடுவாரோடு ஒப்பார். (க-து.) அறிவில்லாருடைய வாயை அடக்குதல் முடியாது. "அம்பலம் தாழ்க் கூட்டுவார்' என்பது இச்செய்யுளில் வந்த பழமொழி.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/31/w600X390/lotus.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/feb/02/அறிவில்லாதார்-வாயை-மூட-முடியாது-3346600.html
3346601 வார இதழ்கள் தமிழ்மணி தத்துவம் பொதிந்த தமிழ்ச் சொற்கள் DIN DIN Sunday, February 2, 2020 12:00 AM +0530 ஒரு மொழியின் முதல் அடித்தளம் எழுத்து. அதன் இரண்டாம் அடித்தளம் சொல். சொல் முதலில் ஒரு பொருளையே குறித்தது. காலப்போக்கில் ஒரு சொல் பல பொருளைக் காட்டியது. (எ.கா: காயம் - உறைப்பு, மிளகு, காழ்ப்பு, வடு, நிலைபேறு, பெருங்காயம், ஆகாயம்) ஒரு சில தமிழ்ச் சொற்கள் மறைமுகமாகத் தத்துவக் கருத்தை அறிவிக்கும் சிறப்பைப் பெற்றுள்ளன. இந்தச் சிறப்பு வேறு மொழிகளுக்கு உண்டா என்பது ஆய்வுக்குரியது.
 செல்வம் என்ற சொல், பணம், சொத்து ஆகிய பொருள் தரும். கூர்ந்து கவனித்தால் இச்சொல் அரிய கருத்து ஒன்றை அறிவிப்பதைப் புரிந்து கொள்ளலாம்.
 செல்வம் என்பது "உம்மை விட்டுப் பிரிந்து செல்வோம்' என்ற பொருளையும் தரும். எனவே, நிலைத்திருக்காத செல்வம் ஒருவனிடம் இருக்கும்போதே அறம் செய்க என்ற தத்துவக் கருத்தை இது உணர்த்துகிறது. இப்படிப் பல தத்துவச் சொற்கள் தமிழில் உள்ளன.
 தேங்காய்: மங்கல விழா நிகழ்ச்சி நிறைவு பெற்றுவிட்டது. இனி இங்கே தேங்காயம் - தேங்கி நிற்காதே என்று இச்சொல் உணர்த்துகிறது.
 ஒளி: ஒருவர் உயிருடன் இருக்கும்போதே பெறும் பெருமை (ஒளி ஒருவருக்கு உள்ள வெறுக்கை (குறள்971). எனவே, ஒவ்வொருவரும் வாழும்போதே பெருமை பெறக்கூடிய செயல்கள் செய்ய வேண்டும்.
 பிணி: வெளியே இருந்து வந்து உடம்பைச் சேர்ந்து, உருவாகும் நோய். சுற்றுச் சூழல் சீர்கேட்டால் பிணி ஏற்படும். எனவே, சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
 மாக்கள் (மா-விலங்கு. மாக்கள் - விலங்கு நிலையிலிருந்து கூர்தல் அறம் எனப்படும் பரிணாம வளர்ச்சி மூலம் தோன்றிய மக்கள்). மரபு வழிவந்த விலங்குணர்ச்சிகளை மனிதன் நீக்கிக்கொள்ள வேண்டும்.
 திருநீறு: சிவ பக்தர்கள் நெற்றியிலும், பிற உறுப்புகளிலும் தடவிக்கொள்ளும் விபூதி எனும் சாம்பல். இதைத் தடவிக் கொள்ளும் மனிதன் ஒருநாள், முடிவு நிலை அடைந்து, எரியூட்டப்பட்டுச் சாம்பலாவன். எனவே, உயிருடன் இருக்கும்போது அவன் வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டும்.
 கடவுள்: அனைத்தையும் கடந்த இறைவன் (மனிதனின் ஆராய்ச்சி, கற்பனை முதலிய எல்லாவற்றையும் கடந்து, தாண்டி - இருப்பவன். இறைவன் ஒன்றென்று உணர்ந்து அவன் உண்டு என்று நினைத்து நல்வழி நடப்பதே மனிதனின் கடமை.
 இயவுள்: அண்டங்களையும் அனைத்தையும் இயக்கும் இறைவன். ஆகவே, இப்பெருஞ்செயலை நான் செய்தேன் என்று ஒருவன் எண்ணி மமதை கொள்ளக்கூடாது.
 தீமை: தீயின் தன்மை போன்று மனத்தைச் சுடும் செயல். வாட்டி வதைக்கும் தீயை யாரும் தழுவுவதில்லை. தீமையும் அப்படிப்பட்டது தான். எனவே, தீமையை யாரும் செய்யக்கூடாது.
 நீர்மை: நீரின் தன்மை. நீர் குளிர்ச்சியானது. உயிரினங்களை வளர்ப்பது போற்றப்படுவது. ஆகவே நீரின் இயல்புடையவனாக இருப்பவனை அனைவரும் போற்றுவார்கள்.
 வெறுக்கை: செல்வம். தவறான பயன்பாடு காரணமாகச் செல்வம் வெறுக்கப்படும் நிலையைப் பெறும். ஆகையால், செல்வம் உடையவன் பிறரால் வெறுக்கப்படக் கூடிய செயல்களைச் செய்தல் கூடாது.
 பருத்தி: ஆடை நெய்வதற்குப் பயன்படும் மூலப்பொருள். காய்நிலையில் அடக்கமாக இருந்து, பக்குவம் அடைந்து முற்றிய நிலையில் வெடித்து உள்ளீட்டுப் பஞ்சு பருத்துப் பெரிதாகத் தோன்றும். முதல் நிலையில் அடங்கியிருந்து, பக்குவப்பட்ட நிலையில் ஒருவனுக்கு அறிவு விரிவடையும்.
 சுற்றம்: சொந்தக்காரர். செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல் என்ற முறையில் சொந்தக்காரர்களுக்கு உதவி புரிந்தால், அவர்கள் உதவி புரிந்தவனைச் சுற்றி வலம் வருவர்.
 இப்படித் தமிழில் ஒரு சொல்லின் நிழலில் குறிப்புப் பொருள் தத்துவக் கருத்து இருக்கிறது. சங்கப் பாடல்களில் உள்ளுறை, இறைச்சி என்ற மறைமுகப் பொருள்கோளும் உள்ளன.
 இவை பழைமை அருந்தமிழுக்குப் பெருமை சேர்க்கின்றன.
 }முனைவர் மலையமான்
 
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/1/w600X390/cotton.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/feb/02/தத்துவம்-பொதிந்த-தமிழ்ச்-சொற்கள்-3346601.html
3346602 வார இதழ்கள் தமிழ்மணி காய்க்கும் பூக்காது; பூக்கும் காய்க்காது! DIN DIN Sunday, February 2, 2020 12:00 AM +0530 இளமையிலேயே கற்றுணர்ந்த வல்லோரையும், முதுமையிலும் கல்வித்திறம் அற்றவரையும் பூக்காமலேயே காய்க்கின்ற மரத்திற்கும்; பூக்கள் மட்டுமே பூத்து காய்க்காத மரத்திற்கும் உவமையாக்கும் நயமான சிறுபஞ்சமூலம் தரும் பாடல்கள் இவை. இந்நூலை இயற்றியவர் காரியாசான் எனும் புலவர்.
 "பூவாது காய்க்கு மரமுள நன்றறிவார்
 மூவாது மூத்தவர் நூல்வல்லார் - காலா
 விதையாமை நாறுவ வித்துள மேதைக்
 குரையாமை செல்லு முணர்வு'
 இளம் வயதிலேயே கல்வி கேள்விகளில் வல்லவராக விளங்குவர் ஒருசிலர். அவர்கள் ஆண்டுகளால் இளையர் ஆயினும் அறிவினால் முதிர்ந்தவராவர். பாத்தியிட்டு, நீர் ஊற்றப் பின்னர் முளைவிடும் வித்துக்கள் உண்டு. ஆனால், இவை ஏதுமின்றித் தானே முளைக்கும் வித்தும் உண்டு. எனவே, இளையராயிருந்தும் கற்றறியும் திறன் அவர்கட்குத் தானே தோன்றுமாப்போல் பிறர் கற்பிக்கத் தேவை இராது. அதாவது, பலா முதலான மரங்கள் பூக்கள் இன்றியே காய்ப்பது போன்றது இவர்களின் தன்மை.
 "பூத்தாலுங் காயா மரமுள நன்றறியார்
 மூத்தாலு மூவார்நூ றேற்றாதார் - பாத்திப்
 புதைத்தாலு நாறாத வித்துள பேதைக்
 குரைத்தாலுஞ் செல்லா துணர்வு'
 வயதில் முதிர்ந்தவராக விளங்கும் ஒருசிலர் அறிவு முதிர்ச்சி பெறாதவர்களாக இருப்பர். நூல்களைக் கற்றும் தெளியாதவர் ஆண்டில் (வயதில்) முதிர்வாரே அன்றி, அறிவில் முதிராதவர். பாத்தி கட்டி விதைத்தாலும் முளைக்காத வித்தும் உண்டு. அதுபோன்றதே இவர்களது தன்மையுமாம். பாதிரி முதலான மரம் பூத்தாலும் காய்க்காத தன்மை போன்றதாம் இவர்களின் தன்மை.
 - முனைவர் கு.ச. மகாலிங்கம்
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/1/w600X390/KUMAHALINGAM.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/feb/02/காய்க்கும்-பூக்காது-பூக்கும்-காய்க்காது-3346602.html
3346603 வார இதழ்கள் தமிழ்மணி "வா' என்ற வரியை மறந்தனளே... DIN DIN Sunday, February 2, 2020 12:00 AM +0530 இளமங்கை ஒருத்தி மலையிடத்தே வாழுகிறாள். அவளை உளமார விரும்பிய ஒருவன் தன் உள்ளக் கிடக்கையை அவளிடம் உரைக்க முயலுகிறான். ஆனால், அவள் அதற்கு உடன்படாமல் "போ' என்று சொல்லிவிட்டாள். இளைஞன் தன் வருத்தத்தை இவ்வாறு வெளிப்படுத்துகிறான்.
 தவ்வரித் தார்புயத் தாரூரர்
 சண்டன் தடஞ் சிலம்பில்
 கவ்வரி யிற்கய லாகிநின்
 றாள்கம லப்பியாள்
 பவ்வரி யிற்பதி னோரா
 மெழுத்தெனும் பாவை நம்மை
 வவ்வரி தன்னி லிரண்டாம்
 எழுத்தை மறந்தனளே!
 (தனிப்பாடல் திரட்டு)
 இதில் தமிழ் எழுத்துகளில் ஓரெழுத்து ஒரு சொல் என்பவற்றை வரிசை எண் கூறி இலக்கண - இலக்கிய நயம் படைத்துள்ளதைக் காணலாம்.
 "த' - பிரமன். அரி - திருமால்; தார்-மாலை
 "க' - வரிக்கு அயல. "க' - சோலை
 "ப' - வரியில் பதினோரம் எழுத்து "போ'- போய் விடு (ஏவல்)
 "வ'- வரியில் இரண்டாம் எழுத்து "வ' - வருக (அழைப்பு)
 பிரமன், திருமால் இவர்களுடைய மாலையைத் தோளில் அணிந்த திருவாரூர் சண்டன் (தியாகராசன்) வாழும் பெரிய மலையின் சோலையுள் நின்ற கமலப்பிரியாள் (இலக்குமி) போன்ற பாவை நம்மை (என்னை) "போ' என்று சொல்லிவிட்டாள், ஏனோ தெரியவில்லை? என்னை "வா' என்று அழைக்க மறந்துவிட்டாளே! இனி நான் என்ன செய்வேன்?
 -ம. பாலசுப்ரமணியன்
 
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/1/w600X390/tm1.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/feb/02/வா-என்ற-வரியை-மறந்தனளே-3346603.html
3346604 வார இதழ்கள் தமிழ்மணி இந்த வாரம் கலாரசிகன் DIN DIN Sunday, February 2, 2020 12:00 AM +0530 சென்னைப் புத்தகத் திருவிழாவில் நான் சற்றும் எதிர்பாராத வண்ணம், பின்னால் வந்து எனது தோளைத் தட்டினார் ஒருவர். திரும்பிப் பார்த்தால், "தியாகி' நெல்லை ஜெபமணியின் புதல்வர் ஜெ.மோகன்ராஜ்.
 தனக்கு எந்தவித ஆஸ்தியும் சேர்த்து வைக்காத தந்தை ஜெபமணியையும், அவரது எளிமையான அரசியல் வாழ்க்கைக்குத் துணைநின்ற தன் தாயார் திருநாவுக்கரசி என்கிற பூச்செண்டையும் தெய்வமாக நினைத்துப் போற்றும் புதல்வர் என்பதுபோதும் அவரைப் பாராட்ட.
 இன்றைய தலைமுறைக்கு நெல்லை ஜெபமணியைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் மறைந்து 20 ஆண்டுகளாகிவிட்டன. நல்லவர்களையும், நேர்மையானவர்கள் பலரையும் வசதியாக மறந்துவிடுவதுபோல, நமது தமிழ்ச் சமுதாயம் தியாக வாழ்க்கை வாழ்ந்த நெல்லை ஜெபமணியையும் மறந்து விட்டதில் வியப்படைய ஒன்றுமில்லை.
 நெல்லை மாவட்டம் குரங்கணியில் பிறந்த ஜெபமணி, அண்ணல் காந்தியடிகளால் விடுதலை வேள்விக்கு ஈர்க்கப்பட்டவர். அண்ணலின் நிர்மாணத் திட்டத்தில் பயிற்சி பெற்றவர். காமராஜரின் அணுக்கத் தொண்டர். தேசியம் வளர்த்த தலைசிறந்த பேச்சாளர். எளிமைக்கும், நேர்மைக்கும் இலக்கணமாக வாழ்ந்து காட்டிய மகத்தான மனிதர்.
 பள்ளிச் சிறுவனாகவும், கல்லூரி மாணவனாகவும் நெல்லை ஜெபமணியின் அரசியல் உரைகளைப் பலமுறை கேட்டிருக்கிறேன். அடுக்குமொழி பேசாவிட்டாலும், ஆன்மாவின் அந்தரங்கத்தில் இருந்து உண்மையை எடுத்துரைப்பதாலோ என்னவோ, அவரது வார்த்தைகளுக்கு அப்படியொரு வலிமை இருப்பதை, அந்தச் சிறிய வயதிலேயே உணர்ந்திருக்கிறேன்.
 நெல்லை ஜெபமணியை நான் "துக்ளக்' அலுவலகத்தில்தான் சந்தித்தேன். அவருடனான எனது எல்லா சந்திப்புகளுமே "துக்ளக்' அலுவலகத்தில்தான் நடந்தது. ஆசிரியர் "சோ' சாரை சந்திக்கச் செல்லும் பல தருணங்களில், அங்கே நெல்லை ஜெபமணி இருந்திருக்கிறார். அவர்மீது "சோ' சாருக்கும் அபரிமிதமான மரியாதை இருந்தது.
 "துக்ளக்' இதழில் நெல்லை ஜெபமணி "கண்டு கொள்வோம் கழகங்களை' என்கிற கட்டுரைத் தொடர் ஒன்றை எழுதி வந்தார். அந்தத் தொடர் அப்போது ஏற்படுத்திய பரபரப்பையும், எதிர்கொண்ட விமர்சனங்களையும் இப்போது நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு நினைத்துப் பார்க்கிறபோது, வரலாறு திரும்புகிறது என்றுகூடத் தோன்றுகிறது.
 1977 சட்டப்பேரவைத் தேர்தலில், எந்தவிதக் கூட்டணியும் இல்லாமல் ஜனதா கட்சியின் வேட்பாளராக சாத்தான் குளம் தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு நெல்லை ஜெபமணியால் வெற்றிபெற முடிந்த சாதனையை இப்போது நினைத்தாலும் பிரமிப்பாக இருக்கிறது. பணமே இல்லாமல் ஒருவரால் தனது தனிப்பட்ட செல்வாக்கின் அடிப்படையில் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடவும், வெற்றிபெறவும் முடியும் என்கிற நிலைமை நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததைத்தான் அது எடுத்தியம்புகிறது.
 "துக்ளக்' வார இதழில் வெளிவந்த நெல்லை ஜெபமணியின் "கண்டு கொள்வோம் கழகங்களை' என்கிற தொடரின் தொகுப்பை என்னிடம் தந்தார் அவர் மகன் ஜெ.மோகன்ராஜ். ஏற்கெனவே படித்ததுதான் என்றாலும் மீண்டும் நான்கு முறை படித்துவிட்டேன். இப்போது பரவலாக விவாதிக்கப்படும் ரஜினிகாந்தின் "துக்ளக்' பொன்விழா நிகழ்வு உரைக்கு எதிரான விமர்சனங்களுக்கு, நெல்லை ஜெபமணியின் "கண்டு கொள்வோம் கழகங்களை' புத்தகம் விடையளிக்கிறது.
 
 ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதம் புத்தகம் ஒன்றை வெளிக்கொணர்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார் பின்னலூர் மு.விவேகானந்தன். வள்ளலார் மீது அபரிமிதமான பக்தி கொண்ட விவேகானந்தன், "இராமலிங்கர் இலக்கிய மன்றம்' என்கிற அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் ஆண்டுதோறும் திருவருட்பா ஒப்பித்தல் போட்டியையும், வள்ளலார் இலக்கிய விருது வழங்கும் நிகழ்வையும் நடத்துவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்.
 இந்த ஆண்டு இவரால் வெளியிடப்படும் புத்தகமான "இலக்கிய ஆளுமைகள்' இன்று வெளியிடப்படுகிறது. இது அவரது 47-ஆவது நூல். மகாகவி பாரதியில் தொடங்கி, தனக்குப் பிடித்த 17 இலக்கிய ஆளுமைகள் குறித்து இந்தப் புத்தகத்தில் கட்டுரைகள் தீட்டியிருக்கிறார் பின்னலூர் மு.விவேகானந்தன்.
 
 விமர்சனத்துக்கு வந்திருந்தது ந.மு. தமிழ்மணி எழுதிய "வாரணம் ஆயிரம்' என்கிற புத்தகம். யானை குறித்து ஆதி முதல் அந்தம்வரை, என்னவெல்லாம் தகவல்கள் உண்டோ அத்தனையும் அடங்கிய கலைக்களஞ்சியம் இது என்றுதான் கூற வேண்டும். ஐயா பழ. நெடுமாறன் அணிந்துரை வழங்கி இருக்கிறார் என்பதாலேயே உடனே எடுத்துப் படிக்கத் தூண்டியது.
 தனது அணிந்துரையில் பழ. நெடுமாறன் குறிப்பிட்டிருப்பதுபோல, "யானைகளின் உணவு, கூட்டமாகக் கூடி வாழும் வாழ்க்கை, இணைகளின் பிரிவுத் துயர், பசித்திருக்கும் தனது குட்டிக்கு உணவு தேடும் களிறு என்று சங்கப் பாடல்களில் கூறப்படும் செய்திகள், இன்றைய விலங்கியல் அறிஞர்கள்கூட, கண்டு வியக்கும் செய்திகள்.'
 இந்திய யானைகளுக்கு இருக்கும் அழகு, ஆப்பிரிக்க யானைகளுக்குக் கிடையாது என்பது எனது கருத்து. முகப்புப் படமாக நமது யானைகளையே போட்டிருக்கலாம். ந.மு. தமிழ்மணியின் "வாரணம் ஆயிரம்' யானைகள் குறித்த முழுமையான கையேடு. யானைகளைப் பார்க்கும்போது ஏற்படும் வியப்பு, அதைப் படித்து முடித்தபோது ஏற்படுகிறது!
 
 நேற்றிரவு சட்டென்று விழிப்புக் கொடுத்தது. எல்லாம் தேசம் பற்றிய கவலைதான். மத்திய நிதிநிலை அறிக்கையில் நிர்மலா சீதாராமன் பூங்கொத்தைத் தரப்போகிறாரா, சரவெடிகள் வைக்கப் போகிறாரா, ஆட்டம்பாம் வெடிக்கப் போகிறாரா என்பது போன்ற கவலை. அதுமட்டுமல்ல, உள்ளாட்சித் தேர்தல் முடிந்திருக்கிறதே... இனி அடுத்த கட்டம் என்ன என்கிற சிந்தனை.
 எழுந்து உட்கார்ந்தேன். கண்ணில் தட்டுப்பட்டது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஆசிரியர் அறிவுமதியின் "தை' காலாண்டிதழ். புரட்டிப் படித்துக் கொண்டிருந்தேன். அதில், இயக்குநர் பாக்யராஜ் எழுதிய நறுக்கென்று மூன்று வரி ஹைக்கூ. பிடித்திருந்தது. சிந்தனையை ஒத்திருந்தது. பகிர்ந்து கொள்கிறேன்.
 உலக வங்கிக்கு
 கடன் கொடுப்பவர்
 எங்கள் ஊர் கவுன்சிலர்!

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/1/w600X390/tm2.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/feb/02/இந்த-வாரம்-கலாரசிகன்-3346604.html
3346605 வார இதழ்கள் தமிழ்மணி "சாமியானா' என்கிற துணிப்பந்தல்! DIN DIN Sunday, February 2, 2020 12:00 AM +0530 இல்லங்களில் நடைபெறும் மங்கலம் அல்லது மங்கலம் அல்லாத பிற நிகழ்வுகளுக்குமென பந்தல் அமைக்கும் வழக்கம் தொன்றுதொட்டே இருந்து வந்துள்ளது. வீட்டுக்கு முன்புறம் இடப்படும் திருமணப் பந்தல் பற்றி அகநானூறு பேசுகிறது. பெரும்பாணாற்றுப்படையில் பசு, எருமைக் கன்றுகளுக்காக அமைக்கப்பட்ட குட்டையான கால்களையுடைய குறும்பந்தல் பற்றிய செய்திகள் (அடிகள் 297-298) உள்ளன.
பசிய தழைகளாலான பந்தலைப் புறநானூறு (பா. 262) சுட்டுகிறது. பகைவருடன் போரிடச் செல்லும் வீரர்கள் பகைப்புலத்தில் தங்கியிருந்து போரிட வசதியாகப் பசுந்தழைகளால் ஆன பாசறைகள் அமைக்கப்பட்டதை, அதே இலக்கியப் பாடல்களுள் சில (372, 373) தெரிவிக்கின்றன. அத்தகைய பாசறையைக் "கட்டூர்' என்கிறார் ஒளவையார் (புறம். 295).
மண்ணால் எழுப்பப்பட்ட பெருஞ்சுவரின் மேல் அச்சுவர் மழையினால் கரைந்துவிடாமலிருக்க, "ஊகம்' என்னும் புல் கற்றைகளை அதன் மேல் வேய்ந்தனர் (பெரும். அடி. 122). எலியும், அணிலும் மேலே ஏறித் திரிய முடியாதபடி முள்ளினை உடைய ஈந்திலைகளை வீட்டுக் கூரையாக வேயவும் செய்தனர் என்கிறது பெரும்பாணாற்றுப்படை (88).
தற்காலத்தில், "சாமியானா' என்னும் துணிப்பந்தல் பல்நோக்குப் பந்தல்களாக அமைக்கப்படுகின்றன. இடுதல் மற்றும் அகற்றுதல் என்ற செயல்களின் எளிமை மற்றும் விரைவு பற்றியே இத்தகைய துணிப்பந்தல்கள் தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன. "சாமியானா' என்பது தமிழ்ச்சொல் அன்று.
"சாமியானா' என்ற பெயரில் அழைக்கப்படும் துணிப்பந்தல்கள் சங்க காலத்தில் புடைவைத் துணிப்பந்தல்களாக இருந்துள்ளன. அது, இறப்பு நிகழ்வுகளோடு தொடர்புடையதாகவும் இருந்துள்ளன. புறநானூற்றுப் பாடலொன்றில் இக்குறிப்பு (பா.260) உள்ளது.
உவமைகளை ஆள்வதில் திறம்மிக்கவரான வடமோதங்கிழார் எனும் புலவரின் அப்பாடல், "துணிப்பந்தல்' பற்றிய குறிப்பினைத் தருகிறது. அதில், போரில் மாண்ட வீரர்களுக்கென நாட்டப்பெறும் நடுகல்லிற்கான மேற்கூரையாகப் புடைவைத் துணிப்பந்தல் அமைக்கப்படும் வழக்கம் குறித்த செய்தி பொதிந்துள்ளது. இப்பாடலுக்கான ஒளவை துரைசாமிப் பிள்ளையின் உரை நுட்பமிக்கது.
ஒருகாலத்தில், பகைவர் தன்னூர் ஆனிரைகளைக் கவர்ந்து சென்றதை அறிந்து, அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற வீரனொருவன், பகைவரை வென்று ஆனிரைகளை மீட்டுக் கொணர்ந்தான். என்றாலும், நிரையை மீட்பதற்காகச் செய்த போரில், பகைவரது அம்பு தைக்க, அவன் புண்பட்டிருந்தான்; ஊரருகே வந்ததும் இறந்தும் போனான்.
பின்பு, அவனது வீரச்செயலை மெச்சிய ஊரார், அவனுக்கு நடுகல் நாட்டிப் பெயரும் பீடும் எழுதிச் சிறப்பித்தனர். அவன் வாழ்ந்த காலத்தில், நிரம்பக் கொடை வழங்கிப் புகழ்பெற்றவன். அவன் போரில் வென்று, நடுகல்லாகிவிட்ட செய்தியை அறியாத பாணன் ஒருவன், வழக்கம்போல் பொருள்பெற அவன் இருப்பிடம் நோக்கி வந்துகொண்டிருந்தான். அப் பாணனைப் பார்த்த உள்ளூர்ப் பாணன் ஒருவன் கூறுகிறான், ""பாணனே! இனி நீ, ஏற்கெனவே அத்தலைவன் உனக்குத் தந்த நிலத்தை உழுது உண்பதோ, வேறொருவரிடம் சென்று இரந்து பெற்று உண்பதோ செய்யலாமே தவிர, வேறெதுவும் செய்வதற்கில்லை. ஏனெனில், நிரை மீட்பதற்காகப் போரிட்டு, தோல் உரிக்கும் பாம்பு போல, புகழுடம்பாகிய சட்டையை விட்டுவிட்டு அவன் மேலுலகம் சென்று விட்டான். அவனது பெயர், புடைவையால் அமைக்கப்பட்ட பந்தலின் கீழ் நடப்பட்டுள்ள நடுகல்லின்மேல் எழுதப்பட்டுள்ளது. அங்குச் சென்று அதனைப் பார்த்து வழிபடுக'' என்றும் கூறி வருந்துகின்றான்.
"கையறுநிலை' என்ற துறையிலமைந்த அப்புறப்பாடலின் பின்வரும் பகுதிதான், நடுகல்லின் மேற்கூரையாக இடப்பட்ட புடைவைத் துணியாலான "சங்ககாலப் பந்தலைச்' சுட்டுகிறது.
"உயரிசை வெறுப்பத் தோன்றிய பெயரே
மடஞ்சான் மஞ்சை யணிமயிர் சூட்டி
இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப்
படஞ்செய் பந்தர்க் கன்மிசை யதுவே'
பழங்காலத்தில் நடுகல்லிற்கு மேற்கூரையாகப் புடைவையால் அமைக்கப்பட்ட பந்தல், காலப்போக்கில் இழவு நிகழ்வுகளுக்காக அமைக்கப்பட்டு, பின் தென்னங்கீற்றுப் பந்தலானது. இதுவும் மாறித் தற்காலத்தில் "சாமியானா' என்னும் துணிப்பந்தல் பல்நோக்குத் துணிப்பந்தல் ஆகியுள்ளது. உள்ளதைக் கொண்டு நல்லதைச் செய்தவன் சங்காலத் தமிழன் என எண்ணி மகிழலாம்!
-முனைவர் ச. சுப்புரெத்தினம்

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/1/w600X390/SAMIYANA.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/feb/02/சாமியானா-என்கிற-துணிப்பந்தல்-3346605.html
3340637 வார இதழ்கள் தமிழ்மணி இந்திரனின் விருந்தாளி! - முனைவர் ம.பெ.சீனிவாசன் DIN Sunday, January 26, 2020 02:55 AM +0530  

நமக்குக் கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கணமாகிய தொல்காப்பியத்தில் மாயோன், சேயோன், வேந்தன் (இந்திரன்) வருணன் (தொல்.951) ஆகிய நானிலத் தெய்வங்களோடு, "பழையோள்' ஆகிய கொற்றவையும் (தொல்.1005) பேசப்படுகின்றாள். 

"மாயோன் மேய காடுறை உலகமும்' என்பது தொடக்கமாகக் கூறப்பட்ட தெய்வங்களுள் இந்திரன், வருணன் ஒழிந்த ஏனைய மூவருமே பாட்டும் தொகையுமாகிய பழைய சங்கப் பனுவல்களில் அதிகம் இடம்பெறுகின்றனர். ஏனைய இருவருள் இந்திரன் பற்றிய ஒரு சிறு குறிப்பினை மட்டும் புறநானூறு (பா.241) காட்டுகிறது. அவன் வானவர்க்குத் தலைவன் ஆவான் (25) என்று திருக்குறளும் கூறுகின்றது. 

""வருணனைப் பொறுத்தவரை இந்திரனுக்குரிய சிறிய இடங்கூட அவனுக்கு இருந்ததாகத் தெரியவில்லை'' என்கிறார் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் (பெரியபுராணம் - ஓர் ஆய்வு, ப.3, 1994). எனினும், சங்க காலத்தை அடுத்துத் தோன்றிய சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களில் இந்திரனுக்கு விழா எடுத்த செய்தி விரிவாக இடம்பெற்றதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
தொல்காப்பியர் கூறும் இந்திரன் பற்றிய குறிப்பு சங்க நூல்களில் அதிகம் காணப்பெறாது இடையறவு பட்ட போதிலும், தமிழர் வாழ்விலும் நம்பிக்கையிலும் இந்திரன் முற்றும் நீங்காது இருந்தமைக்கான இலக்கியத் தடயங்கள் உண்டு. இதற்கான வித்தினை உட்கொண்டிருப்பது நாம் முன்னர் காட்டிய புறநானூற்றுப் பாடலாகும். 
ஏணிச்சேரி முடமோசியார் என்னும் புலவர் ஆய்அண்டிரன் என்னும் வள்ளல் மறைந்தபோது அலமந்து பாடிய பாடல் அது. பெரிதும் மனமறுக்கமுற்ற புலவர், ஒருவாறு மனந்தெளிந்து, "இத்தகு வள்ளலைத் தேவர்கள் எதிர்கொண்டு வரவேற்பது தப்பாது' என்று நம்பினார். அந்த நம்பிக்கையில்,
"திண்டேர் இரவலர்க்கு ஈத்த தண்டார்
அண்டிரன் வரூஉம்'என்ன, ஒண்டொடி 
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்
போர்ப்புறு முரசங் கறங்க 
ஆர்ப்பெழுந் தன்றால் விசும்பி னானே!' (புறநூ 241)

என்று பாடினார். திண்ணிய தேர்கள் பலவற்றை இரப்போர்க்கு ஈந்த நம் அண்டிரன் அதோ, தேவருலகம் புகுந்தான். தொடியினையும் வச்சிரப் படையினையுமுடைய இந்திரனது கோயிலில் (இருப்பிடத்தில்) அவனை வரவேற்று முரசும் முழங்கியது.  வானுலகமெங்கும் அந்த ஆரவாரம்  எழுந்தது என்பது இதன் பொருளாகும். இங்கு. "வச்சிரத்தடக்கை நெடியோன்' என்ற இந்திரனை,
நல்லறஞ் செய்வோர் நல்லுலகு அடைதலும்
அல்லறஞ் செய்வோர் அருநரகு அடைதலும் உண்டு 
(ம.மே. 16:88-90)

என்னும் நம்பிக்கையைத்தான் முடமோசியாரின் இப்பாடல் காட்சிப்படுத்துகிறது. இவ்வாறு நல்லோர் இந்திரஉலகம் புகுந்த செய்தியைச் சிலப்பதிகாரமும் தெரிவிக்கின்றது. பாண்டியனோடு வழக்குரைத்து அவனும் பாண்டிமாதேவியும் உயிர்துறத்தற்குக் காரணமாயிருந்த கண்ணகி கடைசியில் தன் சீற்றம் தணிந்து வாழ்த்துக் காதையில், 
தென்னவன் தீதிலன் தேவர்கோன் தன்கோயில்
நல்விருந்து ஆயினான் நான்அவன் தன்மகள்
என்று பேசக் காண்கிறோம். மானிடயாக்கையில் கொண்டிருந்த கோபம் தெய்வ உடம்பு பெற்றதும் மாறியது. பாண்டியன் குற்றமற்றவன்; அவன் இந்திரனது அரண்மனையில் நல்ல விருந்தினன் ஆனான்; நான் அப் பாண்டியனின் மகளாவேன் என்று மனங்கனிந்து பேசுகின்றாள் கண்ணகி. இங்ஙனம், "வானவர்க்குத் தலைவனான இந்திரனின் விருந்தாளி' என்னும் செய்தியில், இந்திரன் மட்டும் விலக்கப்பட்டு, ஏனைய வானோர்க்கு விருந்தாகும் செய்தியே திருக்குறளில் இடம் பெறுகின்றது.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு (85)

என்னும் குறள் காண்க. மண்ணுலகில் நெடும்புகழ் படைத்தவரையே தேவருலகம் போற்றும் என்னும் பொருளமைந்த குறளிலும் (234) தேவேந்திரனுக்கு இடமில்லை. 
பின்னாளில் அவ்வானவரும் விலக்கப்பட்டு அவர்களின் இடத்தில் வைகுந்தத்து அமரர்கள் (நித்திய சூரிகள்) இடம் பெறுவதைத்  திருவாய்மொழி காட்டுகிறது. அந்நிலையில் இந்திரலோகம், "வடிவுடை மாதவன் வைகுந்தம்' (10-9-8) ஆக மாறுகிறது. இதன் விரிவை, "சூழ்விசும்பு' எனும் திருவாய்மொழிப் பதிகத்தில் (10-9) படித்துணரலாம்.
எனினும், "வேந்தன் மேய தீம்புனல் உலகம்' என்று மருதநிலத் தெய்வமாகத் தொல்காப்பியத்தில் பேசப்பட்ட இந்திரன் தமிழ் மக்களால் முற்றாக மறக்கப்படவில்லை. தேவேந்திரன், தெய்வேந்திரன், புலவேந்திரன் என்னும் பெயர் வழக்குகளே இதனை உறுதி செய்கின்றன. தமிழ் நிகண்டுகளில், "புலவர்' என்பதற்கு, "தேவர்' எனும் பொருளும் கூறப்பட்டுள்ளது.
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் 
போற்றாது புத்தேள் உலகு (234)

எனும் திருக்குறளும் இதற்குச் சான்றாகும். எனவே, நாட்டார் வழக்கில் நிலைபெற்றுள்ள "புலவேந்திரன்' முதலான பெயர்கள் மருதநிலத் தெய்வமான இந்திரனை மறவாமல் நினைவூட்டுவதாகக் கருதலாம்.

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/26/w600X390/indiran.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/jan/26/இந்திரனின்-விருந்தாளி-3340637.html
3340636 வார இதழ்கள் தமிழ்மணி பழமொழி நானூறு Sunday, January 26, 2020 02:55 AM +0530  

முன்றுறையரையனார்


அறம் செய்க!


பலநாளும் ஆற்றா ரெனினும் அறத்தைச்
சிலநாள் சிறந்தவற்றாற் செய்க - கலைதாங்கி
நைவது போலும் நுசுப்பினாய் நல்லறம்
செய்வது செய்யாது கேள். (பாடல்-134)

மேகலையைத் தாங்கி இறுவது போலும் நுசுப்பினை உடையாய்!  நல்லறம் செய்யும் நன்மையைச் சுற்றத்தார் செய்யார் (ஆதலால்),  பல நாள்களும் அறத்தைச் செய்யாராயினும்,  அறத்தைச் சில நாளாயினும் சிறந்த நெறிகளாற் செய்துய்வாயாக. (க-து.) அறத்தைச் சில நாளாயினும் செய்துய்க.  
நல்லறம் செய்வது செய்யாது கேள்' என்பது பழமொழி.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/26/w600X390/mozhi.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/jan/26/பழமொழி-நானூறு-3340636.html
3340630 வார இதழ்கள் தமிழ்மணி அருள் இல்லாதவர் தோழி! -தங்க. ஆரோக்கியதாசன் DIN Sunday, January 26, 2020 02:52 AM +0530  

உயிருக்கு உயிராகக் காதலித்த தலைவன் பொருள்தேட வேண்டும் என்ற கட்டாயத்தில் காதலியைப் பிரிந்து சென்று விடுகிறான்.  காதலியோ பிரிவின் துயர் தாளாமல் வருந்துகிறாள். தன் நிலையை இழந்து தவிக்கிறாள். கண்ணீர் வடிக்கிறாள், அந்தக் கண்ணீர்  அவள் மேனியில் வழிந்து  அங்கமெல்லாம் நனைந்து அப்படியே காய்ந்து பிசு பிசுத்து கழுவாத முத்துக்களைப் போல  கிடக்கிறது. மானைப் போல் எப்போதும் துள்ளி விளையாடும் தலைவியின் சோர்வைக் கண்ட தோழி அவளைத் தேற்ற முயல்கிறாள். அப்போது தலைவி தன் துயரை தனக்குள்ளே  வைத்துக் கொண்டு தோழியை தேற்றுகிறாள். தன்னைப் பிரிந்து சென்ற தலைவனுக்காக இரக்கப்படுகிறாள்.

"உயிர்த் தோழியே! தலைவனைப் பற்றி தப்பாகப் பேசாதே; என்னைப் பிரிந்து சென்ற அவர் இரக்கம் இல்லாதவர்தான். ஆனால், அவர் பொருள் தேடப் போகும் வழி எப்படிப்பட்டதென்று தெரியுமா?  வனவிலங்குகள் வாழும் ஆபத்தான காடு,  துன்பம்  நிறைந்தது. அத்தகைய காட்டின் வழியில்தான் அவர்  செல்ல வேண்டும். அதை நினைத்ததாலே என் நெஞ்சு  பதறுகிறது' என்று சொல்லி  தன் உரையாடலை தொடர்கிறாள்.

கருப்பான இருப்பை மரத்து இனிக்கும் வெள்ளைப் பூக்களைத் தின்று கொழுத்து தன் சுற்றத்தாரோடு கூட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கும்  மிகப் பெரிய ஆண் கரடி இந்தப் பூக்களைத் தின்று வெறுத்துப்போனதால் வெறிகொண்டு நெருப்புப் போன்ற சிவந்த வாயால் காட்டில் உயரமாக வளர்ந்திருக்கும் செம்மண் புற்றுகளை தன் வாயால் இடித்துக் கிளறி, அதிலிருக்கும் பூச்சிகளை திண்ண எத்தனிக்கும்போது, கோபம் கொண்ட பூச்சிகள் அக்கரடியைக் கடித்துக் குதறுகிறது. அந்த வலியைத் தாங்கமுடியாத கரடியோ கோபத்தால் அங்கிருக்கும் உயிர்களை கடித்துக் கொல்கிறது. அதை அறியாத தலைவன் அப்படிப்பட்ட வழியில்  பொருள் தேடப்போய் இருக்கிறான் என்று காட்டின் ஆபத்தை சொல்கிறாள்.

அதையும் கடந்து செல்லும்போது, காட்டின் ஓரத்தில் இருந்த ஒரு சிற்றூரை ஒரு காலத்தில் பகையரசன் தன் படைகளோடு வந்து அவ்வூரை அழித்து பாழாக்கிவிட்டான்.  அந்த ஊரில் கோபம் கொண்ட ஆண் யானை ஒன்று அவ்வழியாக வருவோரையும் போவோரையும்  கொன்று தன் கோபத்தைத் தீர்த்துக்கொண்டு அவ்வூரை காவல் காக்கிறது. அப்படிப்பட்ட வழியையும் அதைப் போன்ற பல ஆபத்துகளையும் அவர் கடந்து செல்ல வேண்டும். அதனால், அவரை ஒன்றும் சொல்லாதே தோழி' என்கிறாள். அது மட்டுமா?
"நான்கு புறமும் ஓங்கி உயர்ந்த மலைகள் சூழ்ந்த காட்டில், உயரமான மரத்தின் உச்சிக் கிளையில் நீண்ட கழுத்துள்ள பருந்து புலால் நாற்றத்திற்காக யாராவது வருகிறார்களா என்று புலால் உண்ண வெறியால் காத்துக் கொண்டிருக்கும் ஆபத்தான படு பயங்கரமான வழியைக் கடந்து  என் காதல் தலைவன் பொருள் ஈட்டப் போக வேண்டும். எனவே, தோழி அவர் என்னைவிட்டுப் பிரிந்து சென்றது அருள் இல்லாத தன்மையாக இருந்தாலும், அவர் இத்தகைய ஆபத்துகள் நிறைந்த வழியில் செல்வதால், அவர் பாதுகாப்போடு வரவேண்டும்' என்று தன்னைப் பிரிந்து சென்ற தலைவனுக்கு இரக்கப்பட்டுத் துடிக்கும் பெண் ஒருத்தியின் கருணை உள்ளத்தை பாலைத் திணையில்  அமைந்த (அகநா.) பாடல் பெண்ணின் பெருமையைப் பாடியிருப்பது, பெண்ணின் பெருமைக்குச் சான்றாக அமைகிறது. மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் பாடிய  பாடல் இது.
 

மண்ணா முத்தம் ஒழுக்கிய வனமுலை
நன்மாண் ஆகம் புலம்பத் துறந்தோர்
அருளிலர், வாழி தோழி, பொருள்புரிந்து,
இருங்கிளை எண்கின் அழல்வாய் ஏற்றை
கருங்கோட்டு இருப்பை வெண்பூ முனையின்  
பெருஞ் செம்புற்றின் இருந்தலை இடக்கும்
அரிய கானம் என்னார், பகைபட
முனை பாழ் பட்ட ஆங்கண் ஆள்பார்த்துக்
கொலைவல் யானை சுரம்கடி கொள்ளும்
ஊறுபடு கவலைய ஆறுபல நீந்திப்,  
படுமுடை நசைஇய பறைநெடுங்கழுத்தின்
பாறுகிளை சேக்கும் சேண்சிமைக்
கோடுஉயர் பிறங்கல் மலைஇறந்தோரே. 


(அகநா.247)

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/26/w600X390/tm3.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/jan/26/அருள்-இல்லாதவர்-தோழி-3340630.html
3340626 வார இதழ்கள் தமிழ்மணி சூரியனே நீ குளிர்ந்த மழையைப் பொழிவிப்பாயாக! -முனைவர் மணி கணேசன் DIN Sunday, January 26, 2020 02:51 AM +0530

தமிழ்ச் சமூகம் தொன்றுதொட்டு ஈரமும் வீரமும் நிறைந்த ஒன்று. இவ் அகப்பண்பை உரமூட்டும் விதமாகத் தோற்றுவிக்கப்பட்ட  அகமும் புறமும்  சார்ந்த இலக்கியங்களாகப் பாட்டும் தொகையும் காணப்படுகின்றன. இவை தமிழரின் வாழ்வியல் சூழலைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. 

களவொழுக்கத்தின்போது தலைவன்- தலைவியின் மலரினும் மெல்லிய காதல் உணர்வுகள் அதனூடாக நிகழும் பிரிவுகள் மற்றும் ஊரார் பேச்சுகள் ஆகியவை மிகுந்த முதன்மை பெறுகின்றன. பெற்றோர் குறித்த அச்சமும் அவர்கள் உணரும்படியாக இதுநாள் வரையிலும் மறைத்து வைத்திருந்த காதலை வெளிப்படும்படி எடுத்துரைக்கும் துணிவும் (குறுந்:374:1-2) அக்காலத்தில் பெண் சமூகத்திற்கு இருந்ததையும், அறத்தொடு நின்றதன் காரணமாக வரைவுக்கு (திருமணத்திற்கு) தலைவன் அனைவரையும் உடன்பட வைத்த சாதுர்யத்தையும் பாராட்டலாம். 

இத்தகு சூழல்கள் தற்காலத்தில் காணப்படாதது வருத்தமளிக்கிறது. மேலும், பெற்றோர், உற்றார், உறவினர்கள் ஆகியோருக்குப் பயந்து, ஒளிந்து வாழும் நிலையில் நவீன காதல் இணையர்கள் காணப்படுகின்றனர். 
இந்தச் சூழ்நிலையில்  புலவர் கயமனாரின் குறுந்தொகைப் பாடலொன்று (378) மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. பெற்ற மகள் தமக்குப் பிடித்தமான காதலனுடன் கரம்பிடித்துச் செல்வதை அறிந்த தாய், இயற்கையின் தலையாயக் கடவுளாக விளங்கும் சூரியனை நோக்கி, அவர்களது மணவாழ்க்கைப் பயணம் இனிதாய் அமைய வேண்டுகிறாள்.
"ஞாயிறு காணாது மரநிழற் பட்டு
மலைமுதல் சிறுநெறி மணல்மிகத் தாஅய்
தண்மழை தலையின் றாகத் தண்ணளிச்
சுடர்வாய் நெடுவேற் காளையொடு
மடமா அரிவை போகிய சுரனே'

என்னும் பாடலில் ஈரமும் வீரமும் பொருந்திய ஆடவனோடு இளமையும் மாமை நிறம் கொண்ட அழகும் நிறைந்த அன்பு மகள் செல்லும் மணற்பாங்கான வெளியில்  சூரியன் இரக்கமில்லாமல் காயாது மர நிழல் பொருந்திய மலையிடத்தேயுள்ள சிறுமிகள் நிரம்பிய மணல் பரப்பில் பரவலாகக் குளிர்ச்சி மிகுந்த மழையைப் பொழிவிக்க வேண்டி வணங்கி நிற்கும் காட்சியானது தாய்மையின் சிறப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது. தம் பாசமிகு மகள் நேசித்த முன்பின் அறியாத மற்றுமொரு மகனாக விளங்கும் மருமகன் மீது பெருங்குற்றம் புரியும் கொடும் மனம் கொள்ளாமல் "தண்ணளிச் சுடர்' என்னும் சொற்றொடர் மூலமாக பேரன்பும் துணிவும் மிக்கவனுடன்தான் தம் மகளுடைய இல்லற வாழ்வு தொடங்கியுள்ளது என்று உலகுக்கு மகிழ்வுடன் தெரியப்படுத்தியிருப்பது ஒப்புநோக்கத்தக்கது.

இந்த நல்லெண்ணத்தை ஒவ்வொரு பெற்றோரும் உற்றார் உறவினர்களும் வளர்த்துக் கொள்வார்களேயானால், காதல் யாரையும் கொன்றொழிக்காது; எல்லோரையும் நன்றாகவே வாழ வைக்கும்! இதைத்தான் இப்பாடல் காலம் கடந்தும் ஓங்கி உரக்கச் சொல்வதாக அமைந்துள்ளது.


 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/26/w600X390/tm1.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/jan/26/சூரியனே-நீ-குளிர்ந்த-மழையைப்-பொழிவிப்பாயாக-3340626.html
3340621 வார இதழ்கள் தமிழ்மணி இந்த வாரம் கலாரசிகன் DIN DIN Sunday, January 26, 2020 02:50 AM +0530
ஈடு செய்ய முடியாத இழப்பு என்று சிலருடைய மறைவைத்தான் வாழ்க்கையில் குறிப்பிடுவோம். அப்படி எனது வாழ்க்கையில் ஈடு செய்ய முடியாத இழப்பு ஒன்றை எதிர்கொண்ட  சோகத்திலிருந்து நான் இன்னும் முழுமையாக மீண்டேனில்லை. "உமர் நானா' என்று எங்களால் (குறிப்பாக என்னால்) அழைக்கப்படும் காரைக்கால் எஸ்.எம்.உமரின் மரணம் என்னில் ஏற்படுத்தி இருக்கும் வெறுமையை வார்த்தையில் வடிப்பது கடினம்.
ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட தொடர்பு உமர் நானாவுடையது. 
சென்னை தி.நகர் பனகல் பூங்கா அருகிலுள்ள அவரது அலுவலகத்தில் நான் அவரை சந்திக்கச் சென்றது, அவரைப் பேட்டி காண்பதற்காக. திரைப்பட விநியோகஸ்தரான நண்பர் ஒருவருடன் ஒரு திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்க்கச் சென்றிருந்தபோதுதான் உமர் 
நானாவின் அறிமுகம் கிடைத்தது.  தமிழ், ஹிந்தி, தெலுங்குத் திரைப்படங்களை வியத்நாம் மொழியில் "டப்பிங்' செய்து திரையிட்டவர் என்பதுதான் "நானா' குறித்து நண்பர் தந்த தகவல்.  
உஸ்மான் சாலையிலிருந்து துரைசாமி பாலத்துக்குச் செல்லும்  சந்திப்பில் அமைந்திருந்தது உமர் நானாவின் கட்டடம். அதில்தான் அவரது அலுவலகமும் இருந்தது. பத்திரிகை பேட்டிக்காக நடந்த அந்தச் சந்திப்பு, ஏதோ விட்ட குறை தொட்ட குறை பூர்வஜென்ம பந்தமாக இருவரையும் பிணைத்துவிட்டது. 
எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், பாரதிதாசன், அண்ணா, கருணாநிதி, எம்.எஸ்.சுப்புலெட்சுமி என்று அனைவரும் அண்ணாந்து 
பார்க்கும் திரையுலக, அரசியல் உலக ஆளுமைகள் பலருடனும் அவருக்கு நெருக்கமான தொடர்பு இருந்திருக்கிறது. எஸ்.எஸ்.வாசனில் தொடங்கி, பல திரைப்படத் தயாரிப்பாளர்களுடனும் அவருக்குத் தொழில் ரீதியாகத் தொடர்பு இருந்திருக்கிறது.
உமர் நானாவின் அலுவலகத்தில் அமர்ந்தபடி அந்தநாள் அனுபவங்களையும், சுவாரஸ்யமான சம்பவங்களையும் அவர் சொல்வதை நான்  வியந்தபடி அமர்ந்து கேட்ட அந்த நிமிடங்கள்... இப்போதும் இனிய நினைவுகளாகத் தொடர்கின்றன. அவர் நடத்தி வந்த "உமர் கய்யாம்' என்கிற பத்திரிகைக்கு  என்னை நிர்வாக ஆசிரியராக்கி, சில இதழ்களை வெளிக்கொணர்ந்தார். நான் "சாவி' வார இதழின் உதவி ஆசிரியராகச் சேர்ந்தபோது "உமர் கய்யாம்' நின்று போனது.
பத்தாண்டுகளுக்கு முன்பு நான் வியத்நாம் சென்றபோது, அவர் அங்கே இருந்த இடங்களை எல்லாம் பார்த்து, புகைப்படமும் எடுத்துக்கொண்டு வந்து காட்டினேன். அமெரிக்கப் போர் விமானங்கள் வியத்நாமிலுள்ள தைகானில் (இப்போது அதன் பெயர் (ஹோசிமின்)  குண்டுமழை பொழிந்து பேரழிவை ஏற்படுத்திய படம்,  "டைம்' இதழின் அட்டைப் படத்தில் வெளிவந்தது. அங்கே குண்டு வெடிப்புக்குத் தப்பிய ஒரே கட்டடம் உமர் நானா நடத்திவந்த "உமர் கய்யாம்' என்கிற ஹோட்டல் மட்டும்தான். அது அந்தப் படத்தில் இருந்தது. இப்போது அந்தக் கட்டடம் அங்கே இல்லை.
என்னுடைய ஒவ்வொரு வளர்ச்சியிலும் ஒரு தந்தை போன்ற பெருமிதத்துடன் உமர் நானா மகிழ்ந்து களித்தார். தினந்தோறும் எனது எழுத்தைப் படித்து ரசித்தார். "தினமணி' நாகை பதிப்பு வெளியீட்டு விழாவுக்கு தன் உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் பிடிவாதமாக வந்துவிட்டார். நாகைப் பதிப்பு என்பது அவர் ஆசைப்பட்டதும்கூட என்பதில் எனக்கும் ஆத்ம திருப்தி.
அகவை 95 வரை வாழ்ந்த  உமர் நானாவின் இறுதிக் காலங்களில் அவரைச் சென்று சந்திக்க முடிந்தது  என்பதில் சற்று ஆறுதல்.  காரைக்காலில் நடந்த இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியாமல் போனது பெருங்குறை.
மூன்று நாள்களுக்கு முன்பு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. மறுமுனையில் காரைக்காலிலிருந்து பஷீர். ""உமர் நானா, தனது நாற்காலியை  உங்களுக்கு அனுப்பித்தர வேண்டும் என்று பணித்திருக்கிறார். உங்கள் முகவரிக்கு அதை அனுப்பித் தருகிறோம்!'' என்பதுதான் பஷீர் தந்த தகவல். நானா மறைந்திருக்கலாம்... ஆனால், என்னிடமிருந்து அவர் அகன்றுவிடவில்லை!

சென்ற ஆண்டு நவம்பர் மாதம், காந்தி கல்வி நிலைய அன்பர் ம. நித்யானந்தம் "காந்தியடிகளும் தமிழகத் தலைவர்களும்' என்கிற அவரது புத்தகத்தைத் தருவதற்காக அலுவலகம் வந்திருந்தார்.  இளவல் நித்யானந்தம் குறித்து இரண்டொரு வார்த்தைகள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காந்தியச் சிந்தனையில் முதுகலைப் பட்டமும் பெற்றவர் இவர். காந்தியச் சிந்தனையில் நாட்டம் கொண்ட நித்யானந்தம், காந்தியடிகளின் காலடி தேடி  தமிழகம் முழுவதும் சுற்றி வந்தவர். காந்தியச் சிந்தனையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். அவரது நான்காவது படைப்பு இந்த நூல்.
1896 முதல் 1946-ஆம் ஆண்டுவரை காந்தியடிகள் தமிழகத்திற்கு 20 முறை வந்திருக்கிறார். பல நாள்கள் இங்கேயே தங்கியிருக்கிறார். தனது தென்னாப்பிரிக்க நாள்களிலிருந்து தமிழர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் என்பது மட்டுமல்லாமல், தமிழ் படிப்பதிலும் ஆர்வம் காட்டியவர். "தமிழர்களை சந்தித்தபோது எனது உடன்பிறந்தவர்களை சந்திப்பது போன்று உணர்ந்தேன்' என்று தனது தன்வரலாறான "சத்திய சோதனை'யில் காந்தியடிகள் குறிப்பிடுகிறார்.
காந்தியடிகளுடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்த 17 தலைவர்களைப் பற்றி, அவர்களை சந்தித்த காலவரிசைப்படி, அவரவரது வாழ்க்கைக் குறிப்பையும் இணைத்து இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். பல முக்கியமான தமிழகத் தியாகிகள் குறித்தும், காந்தியடிகளுடனான அவர்களது தொடர்புகள் குறித்தும் செய்யப்பட்டிருக்கும் ஆய்வுப் பதிவுகள் இவை.
சேலம் வரதராஜுலு நாயுடு, சத்திய மூர்த்தி போன்ற சில முக்கியமான தலைவர்கள் விடுபட்டிருக்கிறார்கள். அடுத்தத் தொகுப்பில் இடம்பெறக்கூடும் என்று நம்பலாம். 
உங்களுடைய அடுத்தத் தொகுதிக்காகக் காத்திருக்கிறேன் நித்யானந்தம்...

 


கவிஞர், நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர் எஸ்.சங்கர
நாராயணனின் ஒன்பதாவது கவிதைத் தொகுப்பு  "பூனையின் பாற்கடல்'. ஹைக்கூக் கவிதைகளின் தொகுப்பு இது. அதிலிருந்து ஒரு துளிப்பா.
கடவுள் எப்பவுமே
இரட்டைக் குழந்தை
உற்சவர் மூலவர்!

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/26/w600X390/nana.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/jan/26/இந்த-வாரம்-கலாரசிகன்-3340621.html
3340612 வார இதழ்கள் தமிழ்மணி அன்புள்ள ஆசிரியருக்கு Sunday, January 26, 2020 02:42 AM +0530
வியந்தேன்!
சங்கத் தலைமகளின் உணர்வு மேலாண்மையைத் தற்கால உளவியல் கருத்துடன் ஒப்பீடு செய்து காட்டிய  கட்டுரை சிறப்பு. "இந்த வாரம்' பகுதியில் அசோகமித்திரன் குறித்த கலாரசிகனின் அரிய பல குறிப்புகளைப் படித்து வியந்தேன்! "கீழடி' அகழாய்வு விளக்கம் ஒரு குறும்படத்தைக் கண்ட திருப்தியைத் தந்தது.
குரு.சீனிவாசன், கள்ளிக்குடி.

சுவையான தகவல்கள்
சித்த மருத்துவத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்திய டி.வி.சாம்பசிவம் பிள்ளை பற்றிய கட்டுரை சுவையான பல தகவல்களைத் தந்தது. 
எம்.சம்பத்குமார், ஈரோடு.

புதுமையான வாழ்த்து
"கட்செவி அஞ்சலில்' (வாட்ஸ் ஆப்) யாரோ அனுப்பிய பொங்கல் வாழ்த்தை நமக்குத் திருப்பி அனுப்பிவிடும் வேடிக்கையான மனிதர்கள் வாழும் இன்றைய காலத்தில் ஒரு புத்தகத்தை சா.கந்தசாமி பொங்கல் வாழ்த்தாகக் கலாரசிகனுக்கு அனுப்பியது புதுமையான வாழ்த்து! அடுத்த பொங்கல் முதல் வாசகர்களும் இதைப் பின்பற்றத் தொடங்கினால், மக்களின் சிந்தனையும் விசாலமாகும்; வாசிப்புப் பழக்கமும் வளரும்.
அ.யாழினி பர்வதம், சென்னை.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/jan/26/அன்புள்ள-ஆசிரியருக்கு-3340612.html
3334885 வார இதழ்கள் தமிழ்மணி வழிகாட்டிய மலர்கள்! -இரா. வெ.அரங்கநாதன் DIN Sunday, January 19, 2020 04:45 AM +0530
தலைவனைக் காணாத தலைவி பசலையுற்றாள். பசலை நீங்க அவள் தலைவனின் மலையைப் பார்க்கச் சென்றாளாம். உடனே பசலை நீங்கப் பெற்று பரவசம் அடைந்தாளாம்.

அவர் நாட்டுக் குன்றம் நோக்கினேன் தோழி
பண்டையற்றோ கண்டிசின் நுதலே (குறுந்:249)

டாக்டர் மு.வ. சொல்வதைப் போல், ஆராய்ச்சி அறிவு வேண்டாம். உயர்திணை, அஃறிணை இயங்குவன, இயங்காதன என வேண்டாம் வேறுபாடுகள். குழந்தை மனப்பான்மையோடு குதூகலமாய் இருந்தால் ரசித்து இன்பம் துய்க்கலாம்.
வானமும் அறியா அடர்மழை. நீர் பரந்து ஓடுவதால் நிலமும் தெரியவில்லை. ஒளியற்று இருள் பரவிய இருட்டு ஊர் உறங்கும் நள்ளிரவில் தலைவியைத் தேடிவந்த தலைவனை, வேங்கை மரம் பூத்து மணம் கமழும் இருளில் மலர் மணம்தான் எம் சிற்றூருக்கு வழிகாட்டியதோ என வியப்புறுகின்றனர் தலைவியும் தோழியும்

பெயல்கண் மறைத்தலின் விசும்பு காணலையே;
நீர்பரத் தொழுகலின் நிலம் காணலையே;
எல்லை சேரலின் இருள் பெரிது பட்டன்று;
பல்லோர் துஞ்சும் பானாட் கங்குல் 
யாங்கு வந்தனையோ ஓங்கல் வெற்ப
வேங்கை கமழும் எம்சிறுகுடி
யாங்கு அறிந்தனையோ நோகோ யானே! (குறுந்: 355)

என்பது கபிலரின் பாடல். எப்படி வந்தனை என வருந்தும் தலைவிக்கு தலைவனின் பதில், "எல்லை சேரலின் இருள் பெரிது பட்டன்று' வேறு என்னவாக இருக்க இயலும்? முன்னோர் தேடிவைத்த செல்வம். இதனை முயன்று இன்பம் காணுதலே முத்தமிழ் இன்பம். 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/19/w600X390/tm.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/jan/19/வழிகாட்டிய-மலர்கள்-3334885.html
3334878 வார இதழ்கள் தமிழ்மணி டி.வி. சாம்பசிவம் பிள்ளையின் சித்த மருத்துவ அகராதிகள்! -பேராசிரியர் அ. சிவபெருமான் DIN Sunday, January 19, 2020 04:42 AM +0530 நூற்றி முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து, சித்த மருத்துவ  அகராதித் துறையில் வரலாறு படைத்தவர் டி.வி.சாம்பசிவம்பிள்ளை. சித்த மருத்துவத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்துவதற்காக அரும்பாடுபட்டு இவர் ஆறு தொகுதிகளில் சித்த மருத்துவ அகராதிகளைப் படைத்துள்ளார். 

தமிழகத்தில் தஞ்சைக்கு அருகிலுள்ள "கமுகஞ்சேர்ந்தங்குடி' (கம்மந்தங்குடி) என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்ட வில்லையா மன்னையாருக்கும் மனோன்மணி அம்மையாருக்கும் 19.09.1880-ஆம் நாளில் பிறந்தவர் சாம்பசிவம்பிள்ளை. 

இவர், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னைக் காவல் துறையில் காவல் உதவி ஆய்வாளராகப் (1907) பணியில் சேர்ந்து, பிறகு காவல் ஆய்வாளராகப் பணி உயர்வு பெற்றவர். 

சித்த மருத்துவத்திற்குச் சிறந்த அகராதிகள் இல்லை என்பதை கவனத்தில் கொண்டு, 1917-ஆம் ஆண்டு முதல் சித்த மருத்துவ அகராதிப் பணிகளைத் தொடங்கினார். 
அவ்வாறு தொடங்கப்பெற்ற அப்பணி அவரது வாழ்நாளின் இறுதிவரையில் (12.11.1953)  அதாவது, முப்பத்தேழு வயதில் தொடங்கப்பெற்ற அகராதிப்பணி எழுபத்து மூன்று வயது வரையில் தொடர்ந்து நிகழ்ந்திருக்கிறது.

1931-ஆம் ஆண்டில்,  அவருடைய சேமிப்புத்தொகை மற்றும் நன்செய் நிலத்தை விற்று அதில் கிடைத்த தொகை,  ஓய்வு ஊதியத்தொகை ஆகியவற்றை செலவழித்து முதல் மூன்று தொகுதிகளை அச்சிட்டு வெளிப்படுத்தியுள்ளார்.

டி.வி.சாம்பசிவம் பிள்ளையின் சித்தமருத்துவ அகராதிகளின் சிறப்பையும் அதன் பயன்பாட்டையும் நன்கறிந்த தொழில் மேதையும் அறிவியல் அறிஞருமான கோவை ஜி.டி.நாயுடுவும், அவருடைய புதல்வராகிய கோபால்நாயுடுவும் 1977, 1978-ஆம் ஆண்டுகளில் நான்கு, ஐந்தாம் தொகுதிகளை வெளியிட்டுள்ளனர். தமிழ் நாடு அரசு நிகழ்த்திய இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டில் சித்தமருத்துவ அகராதியின் ஆறாம் தொகுதி வெளியிடப் பெற்றதாக அறிய முடிகின்றது.

1931-ஆம் ஆண்டில் முதல் மூன்று தொகுதிகளை வெளியிட்ட டி.வி.சாம்பசிவம் பிள்ளை, 1938-ஆம் ஆண்டில்தான் அந்த அகராதிகளுக்கு அரிய ஆங்கில முன்னுரை ஒன்றை எழுதி வழங்கினார். இம் முன்னுரை அவரது அறிவுத் திறமைக்குச் சான்றாகவும், சித்த மருத்துவத்திற்குப் பெருந்துணையாகவும் விளங்கி  வருவதாக அறிஞர் பெருமக்கள் குறிப்பிடுவர். ஏறத்தாழ 120 பக்கங்கள் கொண்ட அம்முன்னுரை சித்த மருத்துவக் கலைக் களஞ்சியமாகத் திகழ்கின்றது.

நம் மூதாதையர் கண்ட மருத்துவம் தெய்வீக மருத்துவமாகும். இத்தெய்வீக மருத்துவம் மனிதனின் படைப்பல்ல. சித்துக்கள் விளையாடி இறைவனின் அருளுக்குப் பாத்திரமான இணையில்லா மெய்ஞ்ஞானச் சித்தர்களின் படைப்பாகும். இப்படைப்பு அழியாதது என்றும், அழிக்க இயலாதது என்றும் கூறும் டி.வி.சாம்பசிவம் பிள்ளையின் கருத்தை, ஆ.இரா.கண்ணப்பர் "மூலிகை மணி' நூலில் முன்மொழிந்துள்ளார்.

பெரும்பான்மையான அகராதி நூல்கள் பொது அகராதி என்ற நிலையில் ஒரு சொல்லுக்கான பொருள்கள்தான் குறிக்கப்பட்டிருக்கும். ஆனால், சாம்பசிவம் பிள்ளையின் அகராதிகள் கலைக்களஞ்சியம்போல் ஒரு சொல்லுக்கான அனைத்து விளக்கங்களையும் கொண்டுள்ளன. சான்றுக்கு "அகண்ட வாயு' என்னும் சொல்லுக்குத் தமிழில் பல பொருளும் எழுதப்பெற்று, ஆங்கிலத்தில் இருபத்தேழு அடிகளில் விரிவான விளக்கமும் (முதல் தொகுதி, பக்கம் 127, 128) தரப்பட்டுள்ளது.

சொல்லாய்வு அறிஞர் தேவநேயப் பாவாணர் தமது அகரமுதலித் தொகுப்புக்கு இவரது அகராதியிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொற்களை எடுத்தாண்டுள்ளார். இச்செய்தியை அவரே குறிப்பிட்டுள்ளதோடு, சாம்பசிவம் பிள்ளையின் அகராதித் தொகுப்புகளைப் பாராட்டியும் உள்ளார். "தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையரும், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான இலட்சுமணசாமி முதலியாரும் இவரது அகராதித் தொகுப்புகளைப் பாராட்டியுள்ளனர்.

முதல் மூன்று தொகுதிகளின் கையெழுத்துப் படிகளை பிரிட்டிஷ் கவுன்சிலும், ஜெர்மன் தூதரகமும் மிகுதியான விலை கொடுத்து வாங்க முயன்றபோதும், சாம்பசிவம் பிள்ளை அதை விற்க முன்வரவில்லை. தமிழ் நாட்டின் மீதும், தமிழர் மீதும் பேரன்பு கொண்டிருந்ததாலும், மிக உயர்ந்த நாட்டுப் பற்றின் காரணமாகவும் அந்நிய நாட்டினருக்கு அவர் விற்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டி.வி.சாம்பசிவம் பிள்ளையின் சித்த மருத்துவ அகராதித் தொகுப்புகளை "அகராதி' என்று கூறுவதைக் காட்டிலும், "சித்த மருத்துவக் கலைக் களஞ்சியம்' என்றே குறிப்பிடலாம். ஏனெனில், ஆறு தொகுதிகளாக எண்பதாயிரம் சொற்களோடு, ஆறாயிரத்திற்கு மேற்பட்ட பக்கங்களுடன் இவ்வகராதி அமைந்திருக்கிறது. 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/19/w600X390/tm4.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/jan/19/டிவி-சாம்பசிவம்-பிள்ளையின்-சித்த-மருத்துவ-அகராதிகள்-3334878.html
3334862 வார இதழ்கள் தமிழ்மணி சங்கத் தலைவியின் உணர்வு மேலாண்மை! -முனைவர் சு. சந்திரா DIN Sunday, January 19, 2020 04:38 AM +0530 "வினையே ஆடவர்க்கு உயிரே! என்ற பழந்தமிழரின் வீரநிலைப் பண்பாட்டின் அடிப்படையில் காதல் தலைவன் தனது அரசனுக்காகப் போர்க்களம் செல்கிறான். தலைவனும் தமது அரசனோடு தோளுக்குத் தோள் நின்று வீரப்போரிட்டு வெற்றி பெற்றுவிட்டான்.

அரசனோடு சென்ற படைகளில் இருந்த அவ்வூரினர் எல்லோரும் சாரை சாரையாக வெற்றிக் களிப்போடு மீள வருகிறார்கள். ஆனால், தலைவன் மட்டும் ஊர் வந்து சேரவில்லை. கலங்கிய கண்களோடு தலைவி தன் காதல் தலைவனைக் காணாமல் தவிக்கிறாள். அப்பொழுது அவ்வழியே வந்தோர், "பகை முடித்து வென்ற அரசன், ஊருக்குத் திரும்பாமல் மாற்றார் வரவினை எதிர்நோக்கிப் பாசறைக்கண் தங்கி இருக்கிறான்; உன் தலைவனும் அரசனோடு அருகிருக்கிறான்' என்று உரைக்கின்றனர்.

பகைவருக்குக் காத்திருக்கும் அரசனையும், உடனிருக்கும் தலைவனையும் ஐங்குறுநூறு (ஐங்.451) சுட்டுகிறது. ஊர் திரும்பிய வெற்றியாளர் சொன்ன செய்தியில் தலைவி கவலை கொள்கிறாள்; விநாடியில் அவள் மகிழ்கிறாள். மகிழ்ச்சிக்குக் காரணம், தலைவனின் வெற்றியும் அவனுக்கு ஊறு நேராவண்ணம் உள்ள தன் நிம்மதியுமே ஆகும். ஆனால், தலைவனின் பிரிவால் மீண்டும் கவலை அடைகின்றாள். இவ்வாறான உணர்வுப் போராட்டம் தலைவியை அலைக்கழிக்கிறது. பெண் ஒருத்தி என்னதான் துயரத்திலும் துன்பத்திலும் துடித்தாலும் தனது உணர்வுப் போராட்டத்தை வெளிப்படையாகக் காட்டுவது என்பது கூடாது. இவ்வாறான கட்டுப்பாடு சமுதாய நிலையாக மட்டுமல்ல, பெண்மையின் உணர்வுக்குமானது என்பது பழந்தமிழர் நிலைப்பாடு!

இந்த நிலைப்பாட்டுக்குப் பெண்கள் யாரும் விதிவிலக்கல்லர். மாற்றான் சிறையில் ஆற்றுதலுக்கு ஆளின்றி ராமனைப் பிரிந்திருந்த சீதை, பிரிவின் துயரத்தை, உணர்வின் போராட்டத்தை வெளிக்காட்டாமல், தன் தலைவனாம் காகுத்தன் அருள் உள்ளத்தை, நற்பண்பை எண்ணி மேலாண்மை ("ஆழ நீர்க் கங்கையம்பி கடாவிய) செய்கிறாள்.

நமது சங்கத்தமிழ் தலைவியின் நிலையும் சீதையின் துயரத்திற்குச் சற்றும் குறைந்ததல்ல. தனது துயரத்தைத் தன் தோழியிடம்கூட வெளிக்காட்டத் தயங்கும் நாணம் மிக்கவள் தலைவி. தனது உணர்வுப் போராட்டத்தையும் ஆற்றாமையையும் அடுத்தவருக்குத் தெரியாமல் மறைக்க எண்ணுகிறாள். ஆனால், முகம் பார்க்கும் தோழி முன் சில சொற்களையாவது கூற வேண்டியவளாகிறாள்.

கார்காலம் வந்துவிட்டது. நாம் காண முற்படும் ஐங்குறுநூற்றுத் தலைவி கொன்றை மலரைக் காண்கிறாள். கொத்தாக மலரும் அம்மலர் காயாகிப் பழுத்தும் விட்டது; மழையும் விடாமல் பெய்து கொண்டிருக்கிறது. அதனைக் கண்ட தலைவி, தலைவன் வருவதாகக் கூறிய குறித்த காலம் நீட்டித்தமையை உணர்ந்து, துடிக்கிறாள்.

கார்காலத்தில் பூக்கும் கொன்றைமலர் நன்றாக மலர்ந்து காய்த்துப் பழமாகிவிட்டது; பழுக்காமல் இருக்கும் கொன்றை மலர்களோ கார் பருவ மழையால் மகளிர் கூந்தல் உதிர்வது போல மரத்திலிருந்து உதிர்கின்றன எனத் தோழியிடம் உரைக்கின்றாள். அத்தோடு பேசி முடித்திருந்தால் அவள் இலக்கியத் தலைவியாக ஏற்றம் பெற்றிருக்க மாட்டாள்.

தன் தலைவனின் பெருமையை, நற்பண்பை, கொடை உள்ளத்தை எண்ணுகின்றாள். "பாணர் பெருமகன் எனத் தன் தலைவனைச் சுட்டுகின்றாள். இசைவாணர்களாகிய பாணர்களுக்கு வரையாது பொருளை வாரி வழங்குபவன் தலைவன்; அவனது வள்ளன்மையைத் தோழிக்குச் சொல்வதுபோலத் தான் நினைந்து இன்புறுகிறாள். அத்துடன், தனது கண்கள் ஒளியிழந்து பசலை தோய்ந்து இருப்பது போல உதிர்ந்த கொன்றை மலரின் இதழ்கள் உள்ளன என்றும் உரைக்கிறாள்.

"துணர்க்காய்க் கொன்றைக் குழற்பழ மூழ்த்தன
வதிர்பெயற் தெதிரியசிதர் கொடண்மலர்
மாணலமிழந்தவென் கண்போன் றவனே' (ஐங். 458)

புலவர் பேயனார் காட்டுவது தலைவனைப் பிரிந்த தலைவியின் உள்ள நிலைமட்டுமல்ல, உளவியல் தன்மைமிக்க உணர்வு மேலாண்மைச் செயல்பாடாகவும் உள்ளது எனலாம்.

மன பாதிப்பால் ஏற்படும் உணர்வுகளை நேரடியாக வெளிப்படுத்தாமலும், உடலை வேகமாகப் பாதிக்காமலும் துன்பச் சூழலை சமாளிக்கும் நடவடிக்கைகளை "உணர்வு மேலாண்மைச் செயற்பாடு' எனலாம்.

பேயனார் காட்டும் இந்தத் தலைவி, தலைவன் பிரிவால் ஏற்படும் உணர்வுப் போராட்டத்தை வெளிப்படையாகக் காட்டவில்லை; தன் இல்லத்தில் இருக்கும் கொன்றை மரத்தின் மீது ஏற்றிக் கூறுகிறாள். இவ்வாறு கூறுதலை, புறத்தேற்றம் (Projection) என்பர் உளவியலாளர். அதாவது, தன்னியக்கமாக நனவிலி மனத்தால் தன்னைச் சார்ந்து, ஆனால் கைவிடப்பட்ட மனப்போக்குகளையும், உந்துதல்களையும் புறமுகமாக்கி, வழக்கமாக வேறு ஒன்றின் மீது ஏற்றிக் கூறுதல் புறத்தேற்றம் எனும் உளநலத் தற்காப்பு இயங்கு முறையாகும்.

மேலும், முந்தைய காலத்தில் தன் காதல் தலைவன் இசைவாணர்களாகிய பாணர்களுக்கு வரையாது வழங்கிய வள்ளன்மையை எண்ணுகிறாள். மகிழ்ச்சியுடன் அதனை, "பாணர் பெருமகன்' என்று தோழியிடம் சுட்டுகிறாள்.

கடந்தகால இன்ப நிகழ்வு பற்றிப் பேசுதலைப் பின்னோக்கம் (Regression)) என்பர். ஐங்குறுநூற்றுத் தலைவி, தலைவனோடு உடனிருந்த காலத்தில் தலைவன் பாணர்களுக்குக் கொடுத்துச் சிவந்த கரத்தனாக இருந்தமையை எண்ணுகிறாள். அதாவது, தலைவனைப் பிரிந்திருந்த காலத்துப் பிரிவுத்துயரால் ஏற்பட்ட உணர்வுப் போராட்டத்தைப் புறத்தேற்றம் மற்றும் பின்னோக்கம்
முதலிய உளநலத் தற்காப்பு இயங்குமுறைகளால் மேலாண்மை செய்து கொள்கிறாள். ஆம்! சங்கத் தமிழ்த் தலைவி தனது உணர்வுப் போராட்டத்தை மேலாண்மை செய்துகொள்ளும் வல்லமை வாய்ந்தவளாக விளங்குகிறாள். நான்கு அடி ஐங்குறுநூற்றுச் செய்யுள் உணர்வு மேலாண்மை எனும் இந்த நூற்றாண்டுக் கோட்பாட்டின் இரண்டு கூறுகளை உள்ளடக்கி இருப்பதும், தமிழ் இலக்கியத்தின் பெருமைக்கும் சான்றல்லவா?

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/19/w600X390/tm3.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/jan/19/சங்கத்-தலைவியின்-உணர்வு-மேலாண்மை-3334862.html
3334852 வார இதழ்கள் தமிழ்மணி பழமொழி நானூறு: முன்றுறையரையனார் Sunday, January 19, 2020 04:34 AM +0530
பண்டின ரென்று தமரையும் தம்மையும்
கொண்ட வகையால் குறைதீர நோக்கியக்கால்
விண்டவரோ டொன்றிப் புறனுரைப்பின் அஃதாலவ்
வுண்டவில் தீயிடு மாறு. (பாடல் -133)


முன்பு இத்தன்மையுடையார் என்று தம் சுற்றத்தாரையும் தன்னையும் ஏற்றுக்கொண்ட சிறப்பு வகையாலேயே, குறை தீருமாறு நோக்கியவிடத்து, நோக்கப்பட்டார் வேறு பகைவரோடு சேர்ந்து புறங்கூறுதலுறின், இனிய உணவு ஏற்ற அவ்வீட்டிலேயே நெருப்பு இடுமாற்றை ஒப்பது அதுவேயாம்.  (க-து.) செய்ந்நன்றி கோறல் பழிக்குக் காரணமாம். "உண்டஇல் தீயிடு மாறு' என்பது பழமொழி.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/19/w600X390/tm2.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/jan/19/பழமொழி-நானூறு-முன்றுறையரையனார்-3334852.html
3334611 வார இதழ்கள் தமிழ்மணி இந்தவாரம் - கலாரசிகன் Sunday, January 19, 2020 01:35 AM +0530 தமிழ், தமிழின் தொன்மை, தமிழா்தம் பெருமை என்றெல்லாம் நாம் இதுநாள்வரை பேசிக்கொண்டிருந்த அனைத்துக்குமான ஆதாரங்கள் கீழடியில் காணப்படுவதை அகழ்வாய்வுகள் இப்போது வெளிப்படுத்தி இருக்கின்றன. தமிழ் நாட்டிலுள்ள ஏனைய தொல்லியல் அகழ்வாய்வுகளில் கிடைக்காத அளவிலான செங்கல் கட்டுமானங்கள் ‘கீழடி’ அகழ்வாய்வில் கிடைத்திருக்கின்றன. தமிழ் பிராமி எழுத்துகளைக் கொண்ட பானை ஓடுகள் கிடைத்திருக்கின்றன. ஊடகங்களின் மூலம் ‘கீழடி’ அகழ்வாய்வு குறித்து படித்துத் தெரிந்துகொள்ள முடிந்ததே தவிர, அதன் முழு பரிமாணத்தையும் நடைபெறும் சென்னைப் புத்தகக் கண்காட்சியிலுள்ள ‘கீழடி’ அரங்கில் நுழைந்தபோதுதான் தெரிந்துகொள்ள முடிந்தது.

வைகை நதிக்கரையில் சங்ககால நகர நாகரிகம் இருந்ததற்கான சான்றுகள் இப்போது கிடைத்திருக்கின்றன. அரிக்கமேடு, காவிரிப்பட்டினம், அழகன் குளம், கொற்கை, உறையூா், கரூா், கொடுமணல் முதலிய இடங்களிலும் இதேபோல சான்றுகள் கிடைத்திருக்கின்றன என்றாலும், கீழடி அகழ்வாய்வு புதிய பல தகவல்களையும் எடுத்தியம்புகிறது.

சிந்துவெளி நாகரிகம் கி.மு. 15-ஆம் நூற்றாண்டு வாக்கில் இறுதி நிலைக்கு வந்தது. கரிமக்காலக் கணிப்பு அடிப்படையில் ‘கீழடி’ பண்பாடு கி.மு.6-ஆம் நூற்றாண்டில் தொடங்கியிருக்கக்கூடும் என்று தெரிய வருகிறது. சிந்து சமவெளி நாகரிகத்திற்கும், கீழடி தொல் பொருள்களுக்கும் இடையேயுமான பண்பாட்டுத் தொடா்பு குறித்த ஆய்வுகள் மேலெடுக்கப்படுகின்றன. அகழ்வாய்வில் வெளிப்படும் தொல்பொருள்கள் அறிவியல் முறையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. உணா்வுக்கு முன்னுரிமை அளிக்காமல் ஆதாரங்களின் அடிப்படையில் ‘கீழடி’ அகழ்வாய்வை ஆதாரமாகக் கொண்டு தமிழக வரலாற்றை நிறுவும் சீரிய முயற்சியில் தமிழக அரசின் தொல்லியல் துறை முனைப்புடன் இறங்கியிருக்கிறது.

‘‘அகழாய்வுகளை மேற்கொள்வதற்குக் கண்டறிதல் முதல், பொருள் விளக்கம் அறிதல் வரை பல்வேறு தொழில்நுட்பத் திறன்கள் தேவைப்படுகின்றன. இப்பெரு முயற்சியில் மும்பையிலுள்ள இந்தியப் புவி காந்தவியல் நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலை உணா்வுத் துறைகள் இணைந்து தரை ஊடுருவல் தொலையுணா்வி மதிப்பாய்வு, காந்த அளவி மதிப்பாய்வு, ஆளில்லா வான்வழி வாகன மதிப்பாய்வு போன்ற பல்வகையான தொழில்நுட்பங்களைப் பின்பற்றி அவற்றின் மூலம் தொல்லியல் இடத்தை அடையாளம் காண்பது, முறையான தொல்லியல் தலங்கள் மற்றும் அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்வது என சீரிய நடவடிக்கைகளில் தொல்லியல் துறை ஈடுபட்டுள்ளது’’ என்று விளக்குகிறாா் தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை ஆணையா் த.உதயச்சந்திரன் இ.ஆ.ப.

‘கீழடி’ குறித்து தொல்லியல் துறை புத்தகம் ஒன்று வெளிக்கொணா்ந்திருக்கிறது. தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலம், ஹிந்தி, பிரெஞ்சு, ஜப்பானிய மொழி என்று பல்வேறு மொழிகளில் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம் கீழடி அகழ்வாய்வு குறித்த அத்தனை விவரங்களையும் சாமானியருக்கும் புரியும் விதத்தில் எடுத்தியம்புகிறது.

புத்தகக் காட்சியில் இருக்கும் ‘கீழடி’ அரங்கில் நேரிடையாக கீழடி அகழ்வாய்வுப் பகுதிக்கே சென்று பாா்வையிடுவது போன்ற உணா்வை ஏற்படுத்தும் தொழில்நுட்ப விந்தை உருவாக்கப்பட்டிருக்கிறது. சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குப் போகாவிட்டாலும் பரவாயில்லை, தயவுசெய்து அங்கே அமைந்திருக்கும் ‘கீழடி’ அரங்கை ஒவ்வொருவரும் கட்டாயம் பாா்த்தாக வேண்டும். சென்னைப் புத்தகக் கண்காட்சி இன்னும் மூன்று நாள்களில், செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைகிறது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

------------

எழுத்தாளா் சா.கந்தசாமி ஒரு வித்தியாசமான பொங்கல் வாழ்த்தை அனுப்பியிருக்கிறாா். அவா் எழுதிய சாகித்ய அகாதெமியின் ‘இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை’யில் அமைந்த ‘அசோகமித்திரன்’ குறித்த புத்தகத்தைப் பொங்கல் வாழ்த்தாக அனுப்பியிருப்பதற்கு அவருக்கு நன்றி.

அசோகமித்திரன் குறித்த புத்தகம் எழுதுவதற்கு சா.கந்தசாமியைவிடப் பொருத்தமான இன்னொருவா் இருக்க முடியாது. எழுத்தாளா் அசோகமித்திரனின் சமகால படைப்பிலக்கியவாதி என்பது மட்டுமல்லாமல், ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் அவருடன் நட்புப் பாராட்டி, தொடா்பில் இருந்தவா் என்கிற தகுதியும் எழுத்தாளா் சா.கந்தசாமிக்கு உண்டு.

ஜகதீசன் தியாகராஜன் என்கிற இயற்பெயரைக் கொண்ட எழுத்தாளா் அசோகமித்திரன் தமிழ் இலக்கியத்தில் தவிா்க்க முடியாத தனிப்பெரும் ஆளுமை. தமிழ், ஆங்கிலம் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, உருது என்று இவருக்கிருந்த பன்மொழி மேதைமை அவரது எழுத்திலும் பிரதிபலித்ததில் வியப்படைய ஒன்றுமில்லை. 23 ஆண்டுகள் ‘கணையாழி’ இலக்கிய இதழின் பொறுப்பாசிரியராக இருந்த, எழுத்தாளா் அசோகமித்திரனால் அடையாளம் காணப்பட்டு, தமிழுக்கு வளம் சோ்த்த கவிஞா்களும், படைப்பாளிகளும் ஏராளம்... ஏராளம்!

தற்போதைய தெலங்கானா மாநிலம் செகந்திராபாதில் கல்லூரியில் படித்தபோது தொடங்கியது அசோகமித்திரனின் இலக்கிய ஆா்வம். பொழுதுபோக்காக ஆங்கில நாவல்கள் படிக்கத் தொடங்கிய அசோகமித்திரனை அந்த வயதில் பாதித்த சிறுகதை, ‘கலைமகள்’ இதழில் வெளிவந்த புதுமைப்பித்தன் எழுதிய ‘சித்தி’.

அசோகமித்திரனின் முதல் சிறுகதை அதே கலைமகள் இதழில் 1957-ஆம் ஆண்டு வெளிவந்தது. அசோகமித்திரன் என்கிற ஆளுமை குறித்து தெரிந்துகொள்ள சா.கந்தசாமியின் இந்தப் பதிவு ஒன்று போதும்.

ஆரவாரம் இல்லாமல் அமைதியாகத் தமிழ் இலக்கியத்தின் எல்லாத் தடங்களிலும் தடம்பதித்த பெருமைக்குரிய எழுத்தாளா் அசோகமித்திரனை 117 பக்கங்களில் படம்பிடித்துக் காட்டும் செப்படிவித்தை சா.கந்தசாமிக்கு மட்டுமே கைவரப்பட்டிருக்கும் கலை.

-----------

விமா்சனத்துக்கு வந்திருந்தது அறந்தாங்கி வெங்கடேசனின் ‘தேநீா் இடைவேளை’ என்கிற கவிதைத் தொகுப்பு. அதிலிருந்து, ‘மாறாதது’ என்கிற தலைப்பிலான ஒரு கவிதை.

குப்பை மேடுகளில்

குவிந்து கிடக்கும்

மின்னணுக் கழிவுகளில்

மாற்றத்தின் அடையாளம்.

மாறாமல் தொடா்கிறது...

குப்பை பொறுக்கும் வாழ்க்கை!

 

]]>
https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/jan/19/இந்தவாரம்---கலாரசிகன்-3334611.html
3329432 வார இதழ்கள் தமிழ்மணி  தம்மைப் புகழ்தல் கூடாது!  முன்றுறையரையனார் Sunday, January 12, 2020 02:00 AM +0530 பழமொழி நானூறு
 செய்த கருமம் சிறிதானும் கைகூடா
 மெய்யா உணரவுந் தாம்படார் - எய்த
 நலத்தகத் தம்மைப் புகழ்தல் புலத்தகத்துப்
 புள்அரைக்கால் விற்பேம் எனல். (பாடல்-132)
 செய்த செயலின் பயன் சிறிதளவும் கைவருதல் இல்லை. செயலின் பயனை உறுதியாகப் பெறுவார் என்று பிறரால் எண்ணவும் படாதவர்கள், நிரம்ப நன்மையிலே பொருந்தத் தம்மைத் தாமே புகழ்தல், வயலின்கண் இருக்கும் புள்ளினை அரைக்கால் பொன்னுக்கு விற்பேம் என்று கூறுதலோ டொக்கும். (க-து.) முடிக்க முடியாத செயலை முடிப்பதாகக் கூறிப் புகழ்தல் கூடாது. "புலத்தகத்துப் புள் அரைக்கால் விற்பேம் எனல்' என்பது பழமொழி.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/28/w600X390/LOTUS.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/jan/12/தம்மைப்-புகழ்தல்-கூடாது-3329432.html
3329433 வார இதழ்கள் தமிழ்மணி தை நீராடல்! DIN DIN Sunday, January 12, 2020 02:00 AM +0530 அதிகாலையில் இளம் பெண்கள் துயிலெழுவது, எல்லோரும் சேர்ந்து குளிர்ந்த நீர்நிலைகளுக்குச் செல்வது, அதில் நீராடி நல்ல கணவனை அருளுமாறு நோன்பிருப்பது ஆகிய வழக்கங்கள் சங்ககாலம் முதற்கொண்டே நம் தமிழின மக்களிடையே நிலவி வந்திருக்கின்றன. ஆனால், மார்கழி மாதத்திற்கு மாறாக தைத் திங்களில் இந்த நோன்பினை இளம் பெண்கள் மேற்கொண்டனர் என்பதை சங்க இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது.
 தைத் திங்களில் நீர்நிலைகள்
 குளிர்ந்த நீரால் நிரம்பிக் கிடப்பது
 ஆவணி மாதம் முதல் பெய்த மழையால் ஆறு குளங்கள் எல்லாம் நிரம்பி அதன்பிறகு பெய்த பனியாலும் வாடைக் காற்றாலும் தைத் திங்களில் நீரெல்லாம் குளிர்ந்து கிடக்கும். இந்தச் செய்தி புறநானூறு, குறுந்தொகை முதலிய சங்க இலக்கியங்களில் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன.
 தை இத் திங்கள் தண்கயம் போலக்
 கொளக் கொளக் குறையா கூழுடை வியனகர் (புறம்-70)
 தைத் திங்களின் தண்மையான குளம்போல அள்ள அள்ளக் குறையாத அன்னம் நிறைந்த வீடுகளை உடைய பெரிய நகரங்களை உடையதாம் கிள்ளி வளவனின் நாடு!
 பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
 தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
 வெய்ய உவர்க்கும் என்றனிற் (குறுந் - 196)
 "முன்பு, வேம்பின் பசுங்காயைத் தந்தாலும் பூந்தேனின் இனிய கட்டி இது என்று போற்றிய நீங்கள் இப்போது, தை மாதத்தின் குளிர்ந்து கிடக்கும் பாரியின் பறம்பு மலையிலுள்ள இனிய சுனை நீரைக் கொடுத்தாலும் வெம்மையாக இருக்கிறது. உவர்ப்பாக இருக்கிறது என்கின்றீர்! உம்முடைய அன்பின் மாறுபாடே இதற்குக் காரணம்' என்று குறைபட்டுக் கொள்கிறாள் ஒருத்தி!
 தை நீராடும் இளம் பெண்கள்
 நற்றிணை பாடல் ஒன்று (80) நல்ல கணவனைப் பெறவேண்டி தைத் திங்களில் குளிர்ந்த குளத்து நீரில் நீராடும் ஓர் இளம் பெண்ணை நமக்குக் காட்டுகிறது.
 இழையணி ஆயமொடு தகுநாண் தடைஇ
 தைஇத் திங்கள் தண்கயம் படியும்
 பெருந்தோட் குறுமகள் அல்லது
 மருந்து பிறிது இல்லை யான்உற்ற நோய்க்கே (நற்.80)
 நாணம் மிக்க இளம் பெண்ணான அவள் தன் தோழிகளோடு கூடிச் சென்று தைத் திங்களில் குளிர்ந்த நீரால் நிரம்பிக் கிடக்கும் குளத்தில் நீராடி நோன்பிருக்கிறாள். "தான் உற்ற காதல் நோய்க்கு அவளே மருந்து' எனக் கூறுகிறான் இளைஞன் ஒருவன். நோன்பு என்பது தான் கொண்ட நோக்கத்திற்காக தனக்கு நேரும் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளும் மன உறுதியாகும்.
 நாணம் தடுத்ததால் அல்லவோ காதலனோடு புறப்பட்டுச் சென்றுவிடாமல் அவனைக் கணவனாக அடைய வேண்டி அவள் நோன்பிருக்கிறாள்!
 மகளிர் பலர் கூடி நீராடும் தைத் திங்களின் குளுமையான குளம் போலக் காட்சியளிக்கிறதாம் அவன் மார்பு! பரத்தையர் பலர் தழுவி மகிழ்ந்திட, அவர்களுடன் பழகிவிட்டு இல்லம் திரும்பும் தலைவனை நோக்கி இவ்வாறு இடித்துரைக்கிறாள் தோழி!
 "நீ அப்படிப்பட்ட ஒழுக்கமுடையவன் என்று யாரேனும் சொல்லக் கேட்டாலே வெகுளும் என் தலைவி இப்போது உன்னைக் காண நேர்ந்தால் என்னாகுவாளோ என்று சொல்லி வருந்துகிறாள்.
 செவியிற் கேட்பினும் சொல்லிறந்து வெகுள்வோள்
 கண்ணிற் காணின் என்னாகுவள் கொல்?
 நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
 தைஇத் தண்கயம் போலப்
 பலர் படிந்து உண்ணும்நின் பரத்தை மார்பே (ஐங்.84)
 அம்பா ஆடல்
 இத்தகைய மகளிர் ஆடல், "அம்பா ஆடல்' எனப் பரிபாடலில் குறிப்பிடப்படுகிறது. திருமணம் ஆகாத இளம் பெண்கள் தம் தாயர் அருகிருக்க நீராடுவதால், "அம்பா ஆடல்' என்று அழைக்கப்பட்டதாக தமிழறிஞர் பலர் விளக்கம் கூறுவர். "அம்பா' என்பதற்கு "அன்னை' என்று பொருள் சொல்லப்பட்டுள்ளது.
 சில்லென்று பனி பெய்கின்ற தை மாதத்து வைகறைப் பொழுதில் இளம் பெண்கள் வைகை ஆற்றில் நீராடி, அதன் கரையோர மணற் பரப்பில் அந்தணர்களால் எழுப்பப்பட்ட வேள்வித் தீயின் வெப்பத்தில் தம் ஈர ஆடைகளை உலர்த்திக் கொள்ளும் காட்சியைப் பரிபாடலில் காண்கிறோம். இளம் பெண்கள் பூமியின் வெம்மை தீர்ந்து, மழை வளத்தால் குளிர்ச்சியடைவதற்காக இவ்வாறு நீராடினார்களாம்!
 "வெம்பாதாக வியல்நில வரைப்பென
 அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்
 முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப்
 பனிப் புலர்பு ஆடிப் பருமண லருவியின்
 ஊதை யூர்தர உறைசிறை வேதியர்
 நெறிநிமிர் நுடங்கழல் பேணிய சிறப்பின்
 தையல் மகளிர் ஈரணி புலர்த்தர' (பரி.11-80-86)
 உள்ளத்தில் உள்ள நோக்கம் நிறைவேறும் பொருட்டு துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு சில ஒழுக்கம், கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது நோன்பு எனப்படுவது என்றாலும், சங்ககால மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வை மேற்கொண்டவர்கள் என்பதால், இந்தத் தை நீராடல் நோன்பைக் கடைப்பிடித்தனர் என அறிய முடிகிறது.
 அறிவியல் நோக்கிலும் மார்கழி - தை மாதங்களில் "ஓசோன்' என்ற உயிர் வாழ்க்கைக்கேற்ற உன்னதமான வாயு குளிர்ந்த நீர் நிலைகளின் மேற்பரப்பில் பரவி இருக்கும் என்ற அறிவியல் உண்மை அறிந்தே அவ்வாறு செய்திருக்கிறார்கள் நம் முன்னோர். மேலும், இதனால் இயற்கையாக நம் உடம்பில் ஏற்படும் நோய் எதிர்ப்புச் சக்தி ஆண்டு முழுவதும் நீடித்திருப்பதற்கு வழி கண்டிருக்கிறார்கள் என்பதும் நாம் அறிய வேண்டுவதாகும்.
 - மயிலாடுதுறை இரா. மலர்விழி
 
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/11/w600X390/THAI_NERADAL.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/jan/12/தை-நீராடல்-3329433.html
3329434 வார இதழ்கள் தமிழ்மணி பொதிகை தமிழ்ச் சங்கம் நடத்தும் தமிழ்க் கவிதை நூல் போட்டி! DIN DIN Sunday, January 12, 2020 02:00 AM +0530 (1) 2019-இல் முதல் படைப்பாக வெளியிட்டிருக்கும் கவிதை நூல்களுக்கான போட்டிக்கும்,
 (2) 2019-இல் கவிதை நூல் வெளியிட்டிருக்கும் (இதற்கு முன் ஏற்கெனவே வெளியிட்டிருந்தாலும்) மகளிருக்கான சிறப்புப் போட்டிக்கும் கவிதை நூல்களின் இரண்டு படிகளை 31.1.2020க்குள் அனுப்பி
 வைக்க வேண்டும். நூல்களுடன், "இதுதான் நான் வெளியிட்டிருக் கும் முதல் கவிதை நூல்' என்று கையொப்பத்துடன் கூடிய உறுதிமொழிக் கடிதமும், புகைப்படம், முகவரி, தொடர்பு எண்ணும் அனுப்பி வைக்க வேண்டும்.
 முதல் படைப்பாளிகளுக்கான போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் முதல் இரண்டு சிறந்த நூல்களை எழுதியவர்களுக்கு தலா ரூ.5,000 வீதம் மொத்தம் ரூ.10,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழும் பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பில் வழங்கப்படும்.
 மகளிருக்கான சிறப்புப் போட்டியில் சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்படும் கவிதை நூலை எழுதிய பெண் கவிஞர் ஒருவருக்கு "ழகரம்' வெளியீடு, சென்னை மற்றும் கோவை சார்பில் ரூ.10,000
 (பத்தாயிரம்) ரொக்கப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
 நூல்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
 கவிஞர் பே.ராஜேந்திரன் (பேரா)
 த.பெ.எண். 103,
 பாளையங்கோட்டை,
 திருநெல்வேலி - 627 002.
 தொடர்புக்கு: 8903926173.

]]>
https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/jan/12/பொதிகை-தமிழ்ச்-சங்கம்-நடத்தும்-தமிழ்க்-கவிதை-நூல்-போட்டி-3329434.html
3329435 வார இதழ்கள் தமிழ்மணி இந்த வாரம் கலாரசிகன் DIN DIN Sunday, January 12, 2020 02:00 AM +0530 "துக்ளக்' இதழ் பொன்விழா கொண்டாடுகிறது.
 துக்ளக்கின் முதல் இதழ் வெளிவந்தபோது நான் கல்லூரி மாணவன். அந்த முதல் இதழிலிருந்து இன்றுவரை "துக்ளக்'குடன் தொடர்ந்து பயணிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன். வாசகனாக மட்டுமல்லாமல், "துக்ளக்' இதழில் பங்களித்த எழுத்தாளனாகவும் இருந்திருப்பதால், அந்த இதழ் "பொன்விழா' கொண்டாடும் தருணத்தில் நானும் பெருமிதம் அடைகிறேன்.
 இந்தத் தருணத்தில் இரண்டு மனக் குறைகள். வாசகன் என்கிற நிலையில், "துக்ளக்'கின் பொன்விழாவைக் காண ஆசிரியர் "சோ' இல்லாமல் போனது மிகப்பெரிய வருத்தம். அவர் இருந்திருந்தால் ஒருவேளை இப்படி பொன்விழா என்கிற பெயரில் கொண்டாடுவதைத் தவிர்த்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சம்பிரதாயத்துக்காக நடத்தப்படும் விழாக்களில் அவருக்கு நம்பிக்கை இருந்ததில்லை. அவர் மறுத்திருந்தாலும் நாங்கள் வற்புறுத்தி பொன்விழா கொண்டாட அவரது ஒப்புதலைப் பெற்றிருப்போம் என்பது வேறு விஷயம்.
 "துக்ளக்' எழுத்தாளர் என்கிற முறையிலும் எனக்கு ஒரு வருத்தம் இருக்கிறது. அதற்கு நானேதான் காரணம். "துக்ளக்' பொன்விழா மலருக்குக் கட்டுரை ஒன்று எழுதித் தரும்படி கடந்த மூன்று மாதங்களாக "துக்ளக்' ரமேஷ் என்னை வற்புறுத்தி வந்தார். தற்போதைய ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி கடிதமும் அனுப்பியிருந்தார். அப்படி இருந்தும்கூட, குறித்த நேரத்தில் "துக்ளக்' இதழ் குறித்தும், "சோ' சார் குறித்தும் கட்டுரை ஒன்றை "துக்ளக்' பொன்விழா மலருக்கு எழுதாமல் இருந்தது என்னுடைய தவறுதான்.
 "துக்ளக்' பொன்விழா காணும் நேரத்தில் கடந்த அரை நூற்றாண்டுகால நிகழ்வுகளும், "துக்ளக்' இதழுடனும் "சோ'சாருடனுமான எனது தொடர்பு குறித்த சம்பவங்களை அசை போடுகிறேன். கும்பகோணத்தில் நடந்த "துக்ளக்'கின் பொன்விழா நிகழ்வு தொடர்பான கூட்டத்தில் பேசும்போது நான் கூறியதுபோல, தில்லியிலுள்ள அகில இந்தியத் தலைவர்கள் பலருடனும் எனக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டதற்கு "சோ' சார்தான் காரணம். ஆசிரியர் "சோ'வுக்கு நெருக்கமானவன் என்பதனாலேயே தலைவர்கள் பலருக்கு என் மீதான நம்பகத்தன்மை ஏற்பட்டது என்பதை பல நிகழ்வுகளில் நான் உணர்ந்திருக்கிறேன்.
 "சோ' சார் எழுதிய "ஒசாமாஅஸா' (ஒரு சாதாரண மனிதனின் அசாதாரணமான அனுபவங்கள்) என்கிற தொடரில் என்னைக் குறிப்பிட்டு அவர் எழுதியிருக்கும் பதிவும், "உண்மை தெரிந்தது சொல்வேன்' என்கிற எனது "தினமணி' தலையங்கங்களின் தொகுப்புக்கு அவர் தந்திருக்கும் அணிந்துரையும்தான் எனது எழுத்துலக வாழ்க்கையில் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் தலைசிறந்த அங்கீகாரங்கள்.
 மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த "விவேகா ஃபைன் ஆர்ட்ஸ்' குழுவினரின் நாடகங்களின்போது, ஒப்பனை அறையில் பள்ளிச் சிறுவனாக என் தந்தையாருடன் "சோ' சாரை முதன்முதலில் சந்தித்த தருணத்திலிருந்து அவரது மறைவு வரையில் அவருடனான அனுபவங்களை முழுமையாகப் பதிவு செய்வதென்றால், கட்டுரை போதாது. புத்தகம்தான் எழுத வேண்டும்.
 "துக்ளக்' இதழ் பொன்விழா காணும் வேளையில் அந்த இதழின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் வெளியில் தெரியாமல் அமைதியாக உழைத்த ஒரு நபரை நான் குறிப்பிட்டு அடையாளம் காட்டியாக வேண்டும். அவர் பெயர் மதலை. "விவேகா ஃபைன் ஆர்ட்ஸ்' நாடகக் குழுவிலிருந்து "துக்ளக்' இதழ் தொடங்கப்பட்டபோது, இதழியல் துறைக்கு "சோ' சாரால் அழைத்து வரப்பட்டவர். அவரது உழைப்பையும் அர்ப்பணிப்பு உணர்வையும் பார்த்துப் பலமுறை நான் வியந்திருக்கிறேன். நண்பர் மதலைக்கு ஓர் அன்பு வேண்டுகோள். "துக்ளக்'கின் வரலாறு குறித்து அவர் ஒரு புத்தகம் எழுதிப் பதிவு செய்ய வேண்டும்!
 
 வித்யாசங்கர் ஸ்தபதி தமிழகத்தின் மிக முக்கியமான கலை ஆளுமைகளில் ஒருவர். கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் பல்லாண்டுகளாக சிற்பக்கலை பேராசிரியராக இருந்து வருபவர். "வித்யாசங்கர் ஸ்தபதியின் நவீன சிற்பக்கலை' என்கிற புத்தகம் அந்த ஆளுமையின் பல்வேறு பரிமாணங்களை வெளிக்கொணர்கிறது.
 ஏனைய சிற்பக் கலைஞர்களிலிருந்து வித்யாசங்கர் ஸ்தபதி வித்தியாசப்படுகிறார். இந்தியக் கலாசாரத்தை மையப்படுத்தி புதுமையான வளர்கலை ஓவியங்களை அறிமுகப்படுத்திய பெருமை அவருக்கு உண்டு. அதனால்தான், மேற்கத்திய ஓவிய பாணிகளின் அடிப்படையில் இந்திய ஓவியங்களையும் சிற்பங்களையும் வடிப்பவர்களுக்கு மத்தியில், வித்யாசங்கர் வித்தியாசப்படுகிறார்.
 ""தஞ்சை, சிதம்பரம், தாராசுரம், ஆக்ரா, அஜந்தா, எல்லோரா, கொனார்க் என்று நம்மிடம் உள்ள கலைச்சின்னங்களைக் கண்டு வெளிநாட்டவர் பிரமிக்கும்போது, நாம் ஏன் அந்நிய மோகம் கொள்ள வேண்டும்?'' என்கிற வித்யாசங்கர் ஸ்தபதியின் அணுகுமுறை வித்தியாசமானது. இவரது வம்சாவளி உன்னதமானது. முப்பாட்டன் இராமசாமி ஸ்தபதி சென்னை சிற்பகலா சாலையில் வெள்ளைக்காரத் துரையிடம் பணியாற்றியவர். தாத்தா முத்துசாமி ஸ்தபதி வான சாஸ்திரம், சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கியவர்.
 அதனால்தான், தன் தாத்தாவைப்போல் சிற்பக் கலைத் தொழிலில் மேதாவியாக வேண்டும் என்கிற எண்ணம் சிறுவயதிலேயே சிற்பி வித்யா சங்கர் ஸ்தபதிக்கு உருவானது. ஸ்ரீரங்கம், மேல்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே, சென்னை சிற்பகலா சாலையில் சேருவது என்று முடிவெடுத்துவிட்டார். அதிலிருந்து தொடங்கிய அவரது கலைப்பயணம் இப்போது தமிழகத்தின் தலைசிறந்த சிற்பிகளில் ஒருவராக அவரை உருவாக்கியிருக்கிறது. அவர் மகன் ராஜா ரவிசங்கரும் தந்தை வழியில் சிற்பக்கலை விற்பன்னராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்.
 சிற்பக் கலை நுணுக்கங்களையும், சிற்பி வித்யாசங்கர் ஸ்தபதியின் ஆளுமையையும் பிரதிபலிக்கிறது அவரது "வித்யாசங்கர் ஸ்தபதியின் நவீன சிற்பக்கலை' என்கிற புத்தகம்.
 
 கவிஞர் அறிவுமதியை ஆசிரியராகக் கொண்டு, பொறுப்பாசிரியர் பழநிபாரதி வெளிக்கொணரும் "தை' கவிதை இதழில் வெளிவந்திருக்கும் கவிஞர் அருண்பாரதியின் கவிதை "மாட்டுத் தரகு' அதிலிருந்து சில வரிகள் இந்த வாரத் தேர்வு.
 பல்லப் பத்தி
 சுழியப் பத்தி
 நெறத்தப் பத்தி
 நெறைய பேசி
 கையில் துண்ட விரிச்சு
 தரகு பாத்து வித்தாலும்,
 பெத்தப் பொண்ணுக்கு
 முப்பத்தஞ்சி வயசாகியும்
 கட்டிக் கொடுக்க
 முடியலையேங்கிற
 குற்ற உணர்ச்சி மட்டும்
 அரிச்சுக்கிட்டே இருக்கு
 தரகு வேலை பாக்குற
 தங்கராசு மனசுல!

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/11/w600X390/tm1.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/jan/12/இந்த-வாரம்-கலாரசிகன்-3329435.html
3329436 வார இதழ்கள் தமிழ்மணி காதல் பயிருக்கு வீர வேலி! DIN DIN Sunday, January 12, 2020 02:00 AM +0530 பண்டைக் காலப் பண்பாடு அன்றைய இளைஞனை வீரனாகக் கண்டிருக்கிறது; காதலனாகப் பார்த்திருக்கிறது; கொடையாளியாக நோக்கியிருக்கிறது. அவன் வாழ்வின் இருபக்கங்களாகக் காதலும் வீரமும் விளங்கியிருக்கின்றன.
 பொலி காளையைத் திடலிலே புகவிட்டு அதனைத் தோள் கொண்டு தழுவி தன் வீரச்சிறப்பைக் காட்டுகிறான். அவனது புடைத்த தோளியக்கம் கண்டு கயல்விழியாள் அவனையே மணக்கும் முடிவெய்துகிறாள். இவ்வாறு சென்றிருக்கின்றது பண்டைத் தமிழ்ப் பண்பாடு.
 வினைசெய் கருவிகளும், பொறிகளும், இயக்காமலே இயங்கும் இயந்திரப் படைப்புகளும், எண்ணியது முடிக்கும் ரோபோட்டுகளும், விண்ணில் சுழலும் ஏவுகணைகளும், செயற்கைக்கோள்களும் மலிந்திருக்கும் இந்தக் காலத்திலும் ஏறுதழுவுதல் வேண்டுமா என்று கேட்கிறது.
 உடம்பென்பது வெறும் கூடா? உயிருறையும் கோயில். அதன் சுவரிடிந்து விழலாமா? உத்திரமாம் எலும்பு வற்றிப் போகலாமா? குருதியாம் ஈரம் காய்ந்து வற்றலாமா? என்ன செய்யலாம் என்று கேட்டால் ஏறு தழுவலாம்; அதற்கேற்ப உடம்பை இரும்பு செய்யலாம்; குருதி நாளங்களையும் நரம்புகளையும் தளராத எஃகுக் கம்பிகளாக்கலாம்.
 ""கொல்லேற்றுக் கோடஞ்சுவானை
 மறுமையும் புல்லாளே ஆயமகள்''
 என்று கலித்தொகை கூறுகின்றது. காளையைப் பற்ற அஞ்சும் விடலையை பெண்ணொருத்தி கனவிலும் கருத மாட்டாளாம். இன்றைக்கும் தமிழகத்தின் அடிமனத்தில் பேராண்மை நெருப்பு கனன்று கொண்டிருக்கிறது.
 அவிழ்த்து விடு காளையை; அதன் கொம்புகளோடு உறவாடிக் காட்டுகிறேன் என் உடல் வலியென்று களத்தில் குதிக்கும் இளைஞர்களை நாம் காணுகின்றோம். காளைகளைத் துன்புறுத்துவதன்று இவ்வீர விளையாட்டு; செருக்குற்ற காளையைக் கட்டி வைத்து அதன் கொம்பைப் பிடித்து முறுக்கும் திரைப்பட விளையாட்டன்று இப்போர்.
 இந்த வீர விளையாட்டில் உயிரிழப்பு அரிதே உண்டாகும் நிகழ்ச்சிகள் உண்டாவது உண்டு. இதனை எதிர்பார்த்தே வீர இளைஞர்கள் அன்று களமிறங்கினர். முல்லை நிலத்தில் காளையோடு பொருதவர்கள் போர்க்களத்தில் களிறெறிந்து புகழ்க்கொடி நாட்டுவர்.
 முல்லைக்கலி ஏறுதழுவுதலைச் சுவைபட எடுத்துரைக்கின்றது. அணி அணியாய் ஆடவர்கள் களமிறங்குகின்றனர். காளைகளை வளர்த்த கன்னியர்கள், மூங்கிலேணிப் பரப்பில் நின்று விழியகலப் பார்வை விரித்து "என் காதலன் காளையைப் புறங்கண்டு என்னை அகம் கொண்டு செல்வான்' என்று நினைக்கிறாளாம். என்ன நடக்குமோ என்று அவள் நெஞ்சம் துடிக்கிறது.
 எழுந்தது துகள் / ஏற்றனர் மார்பு /
 கவிழ்ந்தன மருப்புக் / கலங்கினர் பலர்
 இந்நிலையில், ஏந்திழையின் மனமும் விழிகளும் படபடக்கின்றன. அப்போது அவள் இடக்கண் துடிக்கிறது. அவள் உறுதி பூணுகிறாள். தன் காதலன் காளையைத் தழுவி, தன் கையைப் பற்றுவது நிகழும் என நினைக்கத் தூண்டுகிறது அந்நன்னிமித்தம்.
 வீரம் விளைக்கின்ற மண் வேற்றவர்க்குத் தன் எல்லைகளை விட்டுக் கொடுக்காது. வீரத்திற்கிருந்த பல அடையாளங்களில் ஏறுதழுவுதல் ஒன்று. கொல்லேறு தழுவும் காளைகளுக்குக் குறிக்கோள் இருந்தது. அதனால் அவர்கள் ஒழுக்கநெறியில் பிறழாதவர்களாக இருந்தனர். அவர்கள் நெஞ்சத்தில் சித்திரமாய்க் குடியேறியிருந்தனர் செந்தாமரை முகத்துச் சிற்றிடை ஆய்ச்சியர். இவர்களிடையே மணம் நிகழ்த்தி வைக்கும் பெற்றோர் எதனை எதிர்பார்த்தனர்? இருவருக்கும் சமுதாயத்தில் எதிர்நீச்சலிடும் துணிச்சல் வேண்டும். வைரம் பாய்ந்த மரம்போல் உள்ள உறுதியும் மாறாத ஆற்றின் போக்கைப் போல் ஒழுங்கும் வேண்டும். இதற்காகவே நிகழ்ந்தது ஏறுதழுவுதல்.
 கோழைகளால் நாட்டின் விலா எலும்புகள் தளர்ந்துவிடும். ஒரு குடும்பத்தின் காவலும், மகளிரின் கற்புக் காவலும், மாந்தரின் ஒழுக்கநெறிக் காவலும் சரியாக அமைய நாட்டில் வீரவுணர்வு வளர்க்கப்பட வேண்டும்.
 ஏறுதழுவும் காளை நாளை எல்லைப்படை வீரனாகலாம்; வானூர்தி இயக்கலாம்; ஆழ்கடலில் கலங்கள் செலுத்தலாம்; தன் உடல் வலியால் இச்சமுதாயப் பயிரைக் காக்கும் எஃகு வேலியாகலாம்.
 காளைகளைக் கட்டவிழ்த்து விடுவோம்; கன்னியர்தம் காதல் பயிர்க்கு வீரவேலி சமைப்போம். நாட்டில் வீரம் போற்றப்படும் பண்பாகச் சமுதாயத்தை உருவாக்குவோம்.
 - முனைவர் அரங்க.பாரி
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/11/w600X390/tm2.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/jan/12/காதல்-பயிருக்கு-வீர-வேலி-3329436.html
3323840 வார இதழ்கள் தமிழ்மணி நெடுமாலை அடைந்த ஞானியார் அடிகள்! DIN DIN Sunday, January 5, 2020 01:46 AM +0530 திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள், தம் பேச்சினூடாக அவ்வப்போது சிலேடையாகவும் பேசுவார். அந்தச் சிலேடைப் பேச்சில் செந்தமிழ்த்தேன் வழிந்தோடும். சிந்தனை அமுதம்திரண்டுவரும். ஞானியார் வீர சைவ மரபினர் என்றாலும் சமய வேறுபாடு பாராதவர். வைணவ இலக்கியங்களிலும் ஆழ்ந்த புலமை கொண்டவர்.
 ஒருமுறை திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசாமி திருக்கோயிலுக்குச் சென்றார். ஞானியாரைக் கண்ட வைணவர் பலரும் ஏதேனும் ஒரு சொற்பொழிவு ஆற்ற வேண்டும் எனக் கோரினர்.
 ஆண்டாள் அருளிய திருப்பாவையின் முதல் பாடலை மட்டும் எடுத்தாய்ந்து, அரியதொரு சொற்பொழிவு ஆற்றினார். வைணவப் பெருமிதங்களை மிக அழகாக விரித்துரைத்துப் பேசினார். அதைக் கேட்ட வைணவர்கள் பெரிதும் வியந்து மகிழ்ந்தனர். அந்த அளப்பரிய மகிழ்ச்சியின் வெளிப்பாடாக, தேவநாதப் பெருமாளுக்கு அணிவித்திருந்த நெடியதொரு மாலையை எடுத்துவந்து ஞானியாரின் திருமேனியில் அணிவித்தனர். அவர்களைப் பார்த்து ஞானியார் சிலேடையாக "இன்று நான் நெடுமாலை அடைந்தேன்' என்று கூறினார்.
 "இன்று நான் நீண்டதொரு மாலையை அணிந்தேன்' என்றும்; "இன்று நான் நெடிதுயர்ந்து விளங்கும் திருமாலை அடைந்தேன்' என்றும் இருபொருள்கள் அந்த ஒரு சொற்றொடரில் உள்ளன.
 ஞானியார் இளம்பருவத்தில் இருந்த காலத்தில் சிதம்பரம் மு. சுவாமிநாத ஐயரை திருமடத்திற்கு வரச்செய்து தமிழ் மொழி கற்றார். ஒவ்வொரு நாளும் சில பயிற்சிகளைச் செய்து வருமாறு குறிப்பேட்டில் எழுதுவது ஆசிரியரின் வழக்கம். அவர், யாப்பிலக்கணம் கற்பித்து வரும்போது ஒரு வெண்பாவைக் குறிப்பேட்டில் எழுதி, அதற்குச் சீர், தளை முதலியவற்றை எழுதி அடுத்த நாள் காட்ட வேண்டும் என்று சொல்லிச் சென்றார். அந்த வெண்பா இதுதான்:
 நற்பா டலிபுரத்து நாதனே நாயினேன்
 பொற்பாம் நினதடியைப் போற்றினேன் - தற்போது
 வேண்டும் செலவிற்கு வெண்பொற் காசுபத்து
 ஈண்டு தருக இசைந்து.
 அடுத்த நாள் வந்த ஆசிரியர், அந்தக் குறிப்பேட்டைப் பிரித்துப் பார்த்தார். அவர் எழுதி வைத்திருந்த வெண்பாவுக்கு உரிய சீர், தளை ஆகியவை எல்லாம் சரியாக எழுதி வைத்திருந்ததோடு, உடன் பத்து ரூபாயும் இருந்தது கண்டு திகைத்தார்.
 அப்போது இளம் வயதுடைய ஞானியாரைப் பார்த்து, ""நான் பாட்டுக்கு (மனம் போனவாறு) எழுதி வைத்தேனே தவிர, பணம்பெற வேண்டும் என்ற நோக்கம் சிறிதும் இல்லை'' என்றார் ஆசிரியர். அதற்கு ஞானியார், ""நான் பாட்டுக்குத்தான் கொடுத்தேனே அன்றி வேறொன்றுக்குமில்லை'' என்றார்.
 "நான் பாட்டுக்குத்தான்' என்பதில் "நானும் மனம்போனவாறுதான் கொடுத்தேன்' என்ற பொருளும்; "நான் பாட்டுக்காகத்தான் கொடுத்தேன்' என்ற இன்னொரு பொருளும் உள்ளன. ஞானியார் அடிகள் சொற்பொழிவாற்றும்போது கீழ்க்கண்ட வெண்பாவைச் சுவை ததும்பவும், மனம் உருகவும் பாடுவார். அந்த வெண்பா வருமாறு:
 இல்லறத்தான் அல்லேன் இயற்கைத் துறவியல்லேன்
 நல்லறத்து ஞானியல்லேன் நாயினேன் - சொல்லறத்துள்
 ஒன்றேனும் அல்லேன் உயர்திருப் போரூரா
 என்றேநான் ஈடேறு வேன்?
 இப்பாடலில் "என்றே நான் ஈடேறுவேன்?' என்பதை, "என்றுதான் நான் ஈடேறுவேனோ?' என்று வினவுவது போல் சொல்வார். அதே பாடலை மறுமுறையும் பாடுவார். அப்போது "உயர்ந்து விளங்கும் திருப்போரூரா என்றே நான் சொல்லியே ஈடேறுவேன்' என்ற பொருள் விளங்கவும் சொல்வார். ஞானியாரின் பேச்சில் சமயப் பெருமையும் தமிழின் இனிமையும் இரண்டறக் கலந்தே வரும்.
-கோ.மன்றவாணன்
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/5/w600X390/NEDUMALAI.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/jan/05/நெடுமாலை-அடைந்த-ஞானியார்-அடிகள்-3323840.html
3323839 வார இதழ்கள் தமிழ்மணி காணாமல்போன பாக்குவெட்டி! DIN DIN Sunday, January 5, 2020 01:44 AM +0530 தமிழ்க் கவிதை உலகில் கவிராயர் எனப் போற்றப்பட்டவருள் குறிப்பிடத்தக்கவர் இராமச்சந்திர கவிராயர். இவர் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றும், இராசுநல்லூரில் பிறந்தவர் என்றும் இவர் தொடர்பான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 சகுந்தலை விலாசம், தாருக விலாசம், இரணிய வாசகப்பா, இரங்கூன் சண்டை நாடகம், குரவச் சக்கரவர்த்தி நாடகம் முதலிய நூல்களை இவர் இயற்றியுள்ளார். இவைதவிர ஏராளமான தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளார்.
 இவரது வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி இது. ஒரு பெரிய பாக்குவெட்டியை இவர் வைத்திருந்தார். அதைக் கொண்டு விறகு வெட்டுவார், காய்கறிகளை நறுக்குவார், பெரியளவு பாக்கை நான்காகவும், ஆறாகவும் பிளப்பார்.
 இராமச்சந்திர கவிராயருக்கு வறுமை வந்த போதெல்லாம் தன்னிடம் இருந்த பெரிய பாக்கு வெட்டியை அடகு வைத்து உப்புப் பொருள்கள் வாங்குவது வழக்கம்.
 இப்படிக் கவிராயரின் பல தேவைகளைப் பூர்த்தி செய்து வந்த பெரியளவு பாக்கு வெட்டி திடீரென்று ஒரு நாள் காணாமல் போய்விட்டது. எல்லா இடங்களிலும் தேடினார், கிடைக்கவில்லை. வீட்டுக்கு வந்தவர்கள் அல்லது அருகிலுள்ளவர்கள் எடுத்திருக்க வேண்டும் என்று அவர்களிடம் எல்லாம் விசாரித்துப் பார்த்தார். புலவர் என்பதால் விசாரிப்பை அப்படியே பாடலாகப் பாடிக் கேட்டுவிட்டார் இப்படி...
 விறகு தறிக்கக் கறிநறுக்க
 வெண் சோற் றுப்புக்(கு) அடகுவைக்கப்
 பிறகு பிளவு கிடைத்ததென்றால்
 நாலா றாகப் பிளந்துகொள்ளப்
 பறகு பற(கு) என் றேசொறியப்
 பதமா யிருந்த பாக்குவெட்டி
 இறகு முளைத்துப் போவதுண்டோ?
 எடுத்தீ ராயிற் கொடுப்பீரோ?
 "பாக்கு வெட்டிக்கு இறகு முளைத்துப் பறந்ததாக நான் கேள்விப்பட்டதில்லை. என்னுடைய பாக்குவெட்டி இறகு முளைத்தும் பறந்திருக்காது. எனக்கு அது பலவகையில் உபயோகமான பாக்குவெட்டி என்பதால், எடுத்தவர்கள் தயவு செய்து கொடுத்துவிடுங்கள்' என்று பாக்குவெட்டியின் உபயோகம், அது காணாமல் போனது என அனைத்தையும் நகைச்சுவையாக ஒரு பாடல் வாயிலாகத் தெரிவித்து விட்டார் இராமச்சந்திர கவிராயர்.
 -ரா. சுந்தர்ராமன்
 
 
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/5/w600X390/tm4.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/jan/05/காணாமல்போன-பாக்குவெட்டி-3323839.html
3323838 வார இதழ்கள் தமிழ்மணி வழிகாட்டிய பாடல் DIN DIN Sunday, January 5, 2020 01:43 AM +0530 இளமையில் படித்த பாடலொன்று கிருபானந்த வாரியாருக்கு அவர் வாழ்வில் வழி காட்டியது. அப்பாடலை அவர் அடிக்கடி நினைத்துக் கொள்வாராம்.
 "வைததனை இன் சொல்லாக் கொள்வானும்
 நெய்பெய்த சோறென்று கூழை மதிப்பானும் -
 ஊறிய கைப்பதனைக் கட்டியென்று
 உண்பானும் இம்மூவர்
 மெய்ப்பதம் கண்டு வாழ்வார்'
 என்னும் திரிகடுகப் பாடலே அது. ஒருவன் திட்டினால் அதனை வாழ்த்தாக எண்ணுதல் வேண்டும்! கூழை நெய்விட்டுப் பிசைந்த பருப்புச் சாதமாக எண்ணுதல் வேண்டும்! வேப்பிலைக் கட்டியை சர்க்கரைக் கட்டியாக எண்ணுதல் வேண்டும்! என்பது அப்பாட்டின் பொருள்.
 "நம்மை வணங்கிப் புகழ்பவர்கள் நமது புண்ணியத்தில் ஒரு பங்கு எடுத்துக் கொள்கிறார்கள். நம்மை அகாரணமாக நிந்திப்பவர்கள் நமது பாவத்தில் ஒரு பங்கு எடுத்துக் கொள்கிறார்கள். அவ்வாறு எடுத்துக் கொள்வதன்றி அவர்கள் செய்த புண்ணியத்தில் ஒரு பங்கு நமக்குத் தருகிறார்கள்' - இக்கருத்தை பீஷ்மர் சரசயனத்தில் கிடந்து பாண்டவர்களுக்கு உபதேசம் செய்த பகுதியில் காணலாம்.
 வாரியார் சுவாமிகளின் இந்த விளக்கத்தைக் கேட்டவர்கள் வசையை வாழ்த்தாகக் கொள்வார்கள். பிறர் நம்மைத் திட்டினால் தேனாக எடுத்துக் கொள்வார்கள். ஏனென்றால், நமது பாவம் குறைந்து புண்ணியம் கூடும் அல்லவா!
 - "எதிரொலி' எஸ்.விசுவநாதன்
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/5/w600X390/tm3.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/jan/05/வழிகாட்டிய-பாடல்-3323838.html
3323837 வார இதழ்கள் தமிழ்மணி கம்பர் கண்ட "ரோபோ' DIN DIN Sunday, January 5, 2020 01:42 AM +0530 அறிவியல் வளர்ந்து வியக்கப்படத்தக்க அரிய பல கண்டுபிடிப்புகள் உலகில் உலாவந்த வண்ணம் உள்ளன. அத்தகைய வியக்கத்தக்க கண்டுபிடிப்புகளில் நவீன கால "ரோபோக்கள்' குறிப்பிடத்தக்கவை. வகை வகையான "ரோபோக்கள்' தங்களுக்கு இட்ட பணிகளை மனிதர்கள் செய்வது போலவே செய்து முடிக்கின்றன.
 இப்படிப்பட்ட "ரோபோவை' கம்பர் 12-ஆவது நூற்றாண்டிலேயே கண்டுபிடித்து, தன் காவியத்தில் குறிப்பிட்டுள்ளார் என்பது வியப்பானதல்லவா?
 சீதையை இலங்கை முழுவதும் தேடித் தேடிக் காணாமல் உயிரைவிட எண்ணிய அனுமன் இறுதியில் அசோக வனத்தில் கண்டார். கண்டு, "ராமன் உயிருடன் இருக்கிறார். அவருக்கு ஒன்றும் நேரவில்லை. அண்ணலின் உயிராக நீங்கள் இங்கே இருக்கும்போது, அங்கே ராமன் எப்படி உயிர்விட முடியும்'? என்று கேட்கிறான்.
 மேலும், "நெருங்க முடியாத காடுகளிலும், ஆறுகளிலும் மலைகளிலும் அன்னையே நின்னைத் தேடி உயிர் இல்லாமல் பொறியால் இயங்கும் "இயந்திரப் படிவம்' போன்று ஆனார் ராமர்' என்றும் சொல்கிறான். இங்கே, ராமரை உயிர் இன்றி இயங்கும் "இயந்திரப் படிவம்' போன்று ஆனான் என்கிறார் கம்பர். எனவே, கம்பர் கூறியதுபோல ரோபோக்களை "இயந்திரப் படிவங்கள்' என்றே அழைக்கலாமே இனி...
 "இயந்திரப் படிவம்' என்கிற இந்தச் சொல் பயன்படுத்தப்பட்ட பாடல் இதுதான்:
 "அந்நிலை ஆயஅண்ணல் ஆண்டு நின்று அன்னை நின்னை,
 துன்னிருங்கானும் யானும் மலைகளும் தொடர்ந்து நாடி,
 இன்னுயிர் இன்றி ஏகும் "இயந்திரப் படிவம்' ஒப்பான்
 தன்னுயிர் புகழ்க்குவிற்ற சடாயுவை வந்து சார்ந்தான் (சு.கா. பா-565)
 -சி.பொன்ராஜ்

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/5/w600X390/tm2.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/jan/05/கம்பர்-கண்ட-ரோபோ-3323837.html
3323836 வார இதழ்கள் தமிழ்மணி  இந்த வாரம் கலாரசிகன் DIN DIN Sunday, January 5, 2020 01:39 AM +0530 புதுக்கோட்டை ஸ்ரீபாரதி மகளிர் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றுவிட்டதால், மூத்த எழுத்தாளர் பரணீதரனுக்கு நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்த இயலவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரை நேரில் சென்று சந்தித்ததும், பேசிக்கொண்டிருந்ததும் நினைவில் நிழலாடி இம்சிக்கின்றன.
 ஸ்ரீதர் என்கிற கார்ட்டூனிஸ்டும், மெரீனா என்கிற நாடக ஆசிரியரும் எனக்கு அறிமுகமாவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே "பரணீதரன்' என்கின்ற எழுத்தாளர் அறிமுகமாகி இருந்தார் என்பது மட்டுமல்ல, என்னுள் மிகப் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தார். பரணீதரனின் "அருணாசல மகிமை' தொடர்தான் எனக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணம்.
 கல்லூரிப் பருவத்தில் ஸ்ரீதரின் கார்ட்டூன்களும், மெரீனாவின் நாடகங்களும் என்னை பரணீதரனின் அதி தீவிர ரசிகனாகவே மாற்றின. அன்றைய மவுண்ட் ரோடில் இருந்த "ஆனந்த விகடன்' அலுவலகத்தில் அவரை நான் சந்திக்கச் சென்றது, தெய்வத்தை தரிசிக்கச் சென்றதுபோன்ற பக்தியுடன் கூடிய ஈர்ப்பு.
 தமிழக இதழியல் வரலாற்றிலும் , ஆன்மிக உலகிலும் பரணீதரன் என்ற ஆளுமையின் சுவடுகள் காலத்தால் அழியாதவை. அவருடைய படைப்புகள் குறிப்பாக "அருணாசல மகிமை' சிரஞ்சீவித்துவம் பெற்றவை.
 
 மயிலாப்பூரில் இசைக் கச்சேரி கேட்பதற்குப் போயிருந்தபோது, அல்லயன்ஸ் நிறுவனத்திற்கும் சென்றிருந்தேன். "கதைக் கோவை' யின் ஐந்தாவது தொகுப்பை வெளிக்கொணரும் மும்முரத்தில் இருந்த ஸ்ரீநிவாசன், அதன் வரலாற்றை தெரிவித்தபோது பிரமிப்பை ஏற்படுத்தியது.
 1908 முதல் 1932 வரை அல்லயன்ஸ் பதிப்பக நிறுவனர் குப்புஸ்வாமி ஐயர் "விவேக போதினி' என்ற மாத இதழை நடத்தி வ ந்தார். அதில் ஏராளமான சிறுகதைகளை வெளியிட்டார். வ.வே.சு. ஐயர் எழுதிய "குளத்தங்கரை அரசமரம்' என்ற கதை 1924-இல் "விவேக போதினி' இதழில்தான் வெளிவந்தது. வ.வே.சு. ஐயர் எழுதிய "மங்கையர்கரசியின் காதல் முதலிய கதைகள்' என்ற புத்தகம்தான் தமிழில் வெளிவந்த முதல் சிறுகதைத் தொகுப்பு என்று கூறப்படுகிறது. மகாகவி பாரதியாரின் சிறுகதைத் தொகுப்புதான் முதல் நூல் என்கிற கருத்தும் நிலவுகிறது.
 தமிழ்ச் சிறுகதைகளின் ஆரம்ப காலம் அது. கு.ப.ரா., தி.ஜ.ர., புதுமைப்பித்தன், பி.எஸ்.ராமையா, அகிலன், பிச்சமூர்த்தி, த.நா.குமாரசாமி, மெளனி, கி.வா.ஜ., வ.ரா., க.ஸ்ரீ.ஸ்ரீ., வல்லிக்கண்ணன் உள்ளிட்ட ஏராளமான எழுத்தாளர்கள் உருவான காலகட்டம் அது.1942-இல் அன்றைய தலைசிறந்த எழுத்தாளர்களின் தலைசிறந்த சிறுகதைகளைத் தொகுத்து, "கதைக் கோவை' என்கிற பெயரில் அல்லயன்ஸ் கம்பெனியின் நிறுவனர் வி.குப்புஸ்வாமி ஐயர் வெளிக்கொணர்ந்தார்.
 1942-இல் இருந்து 1946 -வரை "கதைக் கோவை'யின் நான்கு தொகுதிகள் வெளிவந்தன. 1946-இல் சுமார் 500க்கும் மேற்பட்ட கதைகளிலிருந்து 117 சிறுகதைகளை த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி, கி.வா.ஜகந்நாதன், தி.ஜ.ரங்கநாதன், க.ஸ்ரீ.ஸ்ரீ. ஆகியோர் தேர்ந்தெடுத்துக் கொடுத்தனர். அல்லையன்ஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டான 1950-இல் கதைக் கோவை தொகுப்பின் 5-ஆவது தொகுதியை வெளியிட விரும்பினார் குப்புஸ்வாமி ஐயர். ஆனால், 1949-இல் அவர் இயற்கை எய்திவிட்டதால், அந்த முயற்சி தடைப்பட்டுவிட்டது.
 குப்புஸ்வாமி ஐயரின் பெயரனான அல்லயன்ஸ் ஸ்ரீநிவாசன் தனது பாட்டனாரின் கனவை நனவாக்கும் முயற்சியில் இப்போது ஈடுபட்டிருக்கிறார். கதைக் கோவையின் 5-ஆவது தொகுதியில் 117 பிரபல எழுத்தாளர்களின் 117 சிறந்த சிறுகதைகள் இடம்பெறுகின்றன. எழுத்தாளர்கள் பலரின் கையெழுத்துப் பிரதிகளை ஸ்ரீநிவாசன் காட்டியபோது, வியப்பாக இருந்தது. ஒரு பொக்கிஷம் உருவாகிக் கொண்டிருக்கிறது.
 இந்த வாரம் 9-ஆம் தேதி தொடங்க இருக்கும் சென்னைப் புத்தகத் திருவிழாவில், கதைக் கோவையை வெளிக்கொணர இருக்கும் ஸ்ரீநிவாசனின் முயற்சிக்கு வாழ்த்துகள்.
 
 நேற்று முன்தினம் புதுக்கோட்டைக்குப் பயணிக்கும்போது எடுத்துச் சென்ற புத்தகம் "கம்பனில் இசைத்தமிழ்'. புதுச்சேரியைச் சேர்ந்த இசைத்தமிழ், நாடகத் தமிழறிஞர் முனைவர் அரிமளம் சு. பத்மநாபனின் ஆய்வுதான் இந்த நூல். 9-ஆம் ஆண்டு காரைக்குடி மீனாட்சி-பழனியப்பா நினைவு அறக்கட்டளை சொற்பொழிவுக்காக முனைவர் அரிமளம் பத்மநாபனால் தொகுக்கப்பட்டிருக்கும் புத்தகம் இது. கம்பராமாயணத்தில் இசை பற்றிய முன்னோடி ஆய்வு நூலாகவும் "கம்பனில் இசைத்தமிழ்' அமைகிறது.
 கபிலர், இளங்கோவடிகள், திருத்தக்கதேவர் முதலானோருக்கு இணையாக இசைத்தமிழின் மாண்புகளையும், நுணுக்கங்களையும் கம்பரும் ஆங்காங்கே காட்சிகளின் தேவைகளுக்கேற்பப் பின்னிப் பிணைத்திருப்பதை ஏராளமான சான்றுகளுடன் அரிமளம் பத்மநாபன் பதிவு செய்திருக்கிறார். இசை நோக்கில் இளங்கோவடிகளுடன் கம்பரை ஒப்பு நோக்கி ஆய்வு செய்வதற்கான களங்கள் கம்ப காதையில் நிறையவே உள்ளன என்பதை அவரது ஆய்வு வெளிப்படுத்துகிறது.
 காப்பியப் படைப்பில் இளங்கோவடிகளுக்குப் பிறகு கம்பரைப் போல் இசைத்தமிழின் இலக்கணத்தையும், அழகியலையும், நுணுக்கங்களையும் கலைநயத்துடனும், கவிதை நயத்துடனும் பிணைத்திருப்பவர் கம்பர் என்கிறார் சு.பத்மநாபன். ""சங்க இலக்கியத்தில் அரிதாகக் காணப்படும் சில இசைக்கருவிகள் கம்பனின் படைப்பில் காணப்படுகின்றன. பல புதிய கருவிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன'' என்கிற கருத்தின் அடிப்படையில் கம்ப காதையில் இசைத் தமிழ் குறித்து இன்னும் ஆழமாக ஆய்வு செய்வதற்கான களத்தை உருவாக்கித் தருகிறது, "கம்பனில் இசைத்தமிழ்'.
 
 ரள மாநிலம் வடகரை கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றும் வீரான்குட்டியின் கவிதை இது. டாக்டர் டி.எம்.ரகுராம் மொழியாக்கம் செய்திருக்கும் "புலம்பெயர்ந்த பறவைகள்' என்கிற நவீன மலையாள மொழிக் கவிதைகள் தொகுப்பில் இடம்பெறுகிறது.
 "அரவணைப்பு'
 மண்ணுக்குக் கீழே
 வேர்களால்
 கட்டிப் பிடிக்கின்றன,
 இலைகள் ஒன்றையொன்று
 தொட்டுவிடுமோ எனப் பயந்து
 நாம்
 அகல நட்டுவைத்த மரங்கள்!

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/5/w600X390/tm1.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/jan/05/இந்த-வாரம்-கலாரசிகன்-3323836.html
3323833 வார இதழ்கள் தமிழ்மணி  தற்புகழ்ச்சி வேண்டா!  முன்றுறையரையனார் Sunday, January 5, 2020 01:36 AM +0530 பழமொழி நானூறு
 செம்மாந்து செல்லும் செறுநரை அட்டவர்
 தம்மேற் புகழ்பிறர் பாராட்டத் - தம்மேற்றாம்
 வீரஞ்சொல் லாமையே வீழ்க களிப்பினும்
 சோரப் பொதியாத வாறு. (பாடல் -131)
 தருக்குற்று ஒழுகும் பகைவரை வென்றவர்கள் தம்மீது, புகழ்ந்து பிறர் சிறப்பிக்கும் பொருட்டு களிப்புற்ற இடத்தும், தம்மிடத்து உளவாம் வீரஞ் சொல்லாதிருத்தலையே விரும்புக (அது). தன்னிடத்துள்ள குற்றங்களைத் தானே ஒன்று சேர்த்து மிகுத்துக் கூறாதவாறு ஆகும். (க-து.) வீரர்கள் பிறர் பாராட்டும் பொருட்டுத் தம்மைத் தாம் புகழ்தல், தம்முடைய குற்றங்களைத் தாமே கூறுதல் போலாம். "சோரம் பொதியாத வாறு' என்பது பழமொழி.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/28/w600X390/LOTUS.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/jan/05/தற்புகழ்ச்சி-வேண்டா-3323833.html
3318157 வார இதழ்கள் தமிழ்மணி  கொடை மடம்! DIN DIN Sunday, December 29, 2019 01:10 AM +0530 "கொடை மடம்' என்ற சொல்லுக்கு "வரையாது கொடுத்தல்' என்று பொருள் கூறுகிறது திவாகரம். கண்ணபிரானும் அருச்சுனனும் ஒரு சோலையில் தங்கி இருந்தபோது, அக்கினி பகவான் ஓர் அந்தணர் வேடத்தில் வந்து அவர்களிடம் தான் உண்பதற்கு ஏற்ற உணவளியுங்கள் என்று வேண்டினார். உடனே அவ்விருவரும் "உனக்கு உரிய உணவளிப்போம்' என்றனர். அதைக் குறிப்பிடும் வில்லிபுத்தூர் ஆழ்வார்,
 "அரியவாயினும், வழங்குதற்கு ஏற்றன
 அல்லவாயினும் தம்மிற் பெரியவாயினும்
 அதிதிகள் கேட்டன மறுப்பரோ பெரியோரே'
 என்று (காண்டவதகனச் சருக்கம்-3) கூறுகிறார். அதிதிகள் கேட்டன அரிய பொருளாயினும் வள்ளல்கள் வழங்குவர். அதுவும் ஒளவையார் கேட்காமலேயே நீண்ட ஆயுள் தரத்தக்க (அரிய) நெல்லிக்கனியை அதியமான் வழங்கினான்.
 தம்மிற் பெரியதை வழங்குதல்: கண்ணபிரான் தூது சென்று அத்தினபுரியில் இருக்கும்போது, இந்திரனை வரவழைத்து, ""இந்திரனே! நீ சென்று கர்ணனிடம் கவச குண்டலங்களை தானமாகப் பெற்றுவா'' என்று கூறும்போது,
 "வல்லார், வல்ல கலைஞருக்கும்
 மறை நாவலர்க்கும் கடவுளர்க்கும்
 இல்லாதவர்க்கும் உள்ளவர்க்கும்
 இரந்தோர்தமக்கும் துரந்தவர்க்கும்
 சொல்லாதவர்க்கும் சொல்பவர்க்கும்
 சூழும் சமயாதிபர்களுக்கும்
 அல்லாதவர்க்கும் இரவிமகன்
 அரிய தானம் அளிக்கின்றான்'
 (கிருட்டிணன் தூதுச் சருக்கம்-235)
 அவ்வாறே இந்திரன் சென்று பெற்று வந்தான். பின்னர் நடந்த பெரும் போரில் (17-ஆம் நாள் போர்) கர்ணன், விசயன் விட்ட அம்புகளால் உடல் தளர்ந்து, பலவகைத் துன்பத்தோடு இருக்கையில், அவன் செய்த புண்ணியம் அவன் உயிரைக் காத்து நிற்க, உடனே கண்ணபிரான் வேதியர் வேடத்தில் சென்று, "நின்புண்ணியம் அனைத்தையும் உதவுக' என்று கேட்க, உடனே அவன் மகிழ்ந்து, "யான் செய்த புண்ணியம் அனைத்தையும் பெறுக' என்று தாரை வார்த்துக் கொடுத்தான். ஒருவருக்குப் பெரியது அவர் செய்த புண்ணியமே. அதையும் வழங்கிய கர்ணன் "கொடை மடம்'பட வாழ்ந்து சுவர்க்கம் அடைந்தான்.
 -முனைவர் இரா.வ.கமலக்கண்ணன்

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/29/w600X390/tm2.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2019/dec/29/கொடை-மடம்-3318157.html
3318152 வார இதழ்கள் தமிழ்மணி  பண்பாடு காத்த பருவமகள்! DIN DIN Sunday, December 29, 2019 01:09 AM +0530 "தலைவரே! உடன்போக்குக்குத் தலைவி ஒத்துக் கொண்டாள்; ஆனால் அவள் உள்ளம் உடன்படவில்லை. உங்கள்பாலுள்ள காதலை அவளால் உதறித் தள்ளிவிட இயலவில்லை; பெற்றவரை, உற்றவரைப் பிரிந்து வந்துவிடவும் முடியவில்லை. வைகறை வந்தது. விளாம்பழவாசம் வீசும் நிறைமாதத்துக் கர்ப்பிணி வயிறு போன்ற பெரிய மண்பானை. அதில் ஏறி இறங்கும் கயிற்றால் தேய்ந்துபோன மத்தால் வெண்ணெய் பெறக் கடையும் தயிரோசை கேட்கும் நேரம். உங்கள் நினைவு தலைவியை உறங்கவிடவில்லை.
 பொய் கரைந்து போவதுபோல் போய்க்கொண்டிருந்தது இருள். பெரிய துணியால் பிறர் அறியாதவாறு இருளிலும் ஒளிவீசும் எழிலார் மேனியை மறைத்துக் கொண்டாள். காவல் செய்யும் தாயார் கண்டுகொள்ள நேருமன்றோ? பருக்கைக் கற்கள் ஓசையிடும் காற்சிலம்பைப் பையக் கழற்றினாள். ஆயத்தோடு விளையாடிய அழகிய பந்தையும் எடுத்தாள். வண்ண வரிகளால் வனைந்து புனையப்பட்ட அந்தப் பந்தையும், காலிலிருந்து கழற்றப் பெற்ற சிலம்பையும் மறைத்து வைக்க மங்கை சென்றாள். கூடி விளையாடிய ஆயம் குறுக்கே வந்து நின்றது. "காலையில் தன்னைக் காணவரும் தோழியர் கலங்கித் தவிப்பார்களே! கண்ணீர் விட்டுக் கலங்குவார்களே' என்னும் எண்ணம் எழுந்து வந்தது. கண்கள் இரண்டிலும் கால்வாய் எழுந்தன. அப்போதே உடன்போகும் எண்ணத்தை அவள் ஒதுக்கி விட்டாள்.
 மனத்தில் துயரைச் சுமந்துகொண்டு தங்களுக்கு மகிழ்ச்சிதர இயலுமா? மகிழ்ச்சிபெற முடியுமா? தாய்-தந்தையின் உறவென்ன? தள்ளிவிடும் உறவா? தலைவரே! இனி, தாங்கள் தலைவியைப் பெற வேண்டுமென்றால் மணம் முடித்தலே மார்க்கமாகும்''
 இவ்வாறு தோழி கூறியதற்குத் தலைவன் புன்னகையாலே சம்மதம் தெரிவித்துப் போய்விட்டான்.
 மண்ணால் செய்த தயிர்ப்பானை அக்காலத்தில் வழக்கத்திலிருந்தது. நாளும் பானையில் பால், தயிர், மோர், வெண்ணெய் ஆகியவற்றின் புழக்க மிகுதியினால் நெடிய நாற்றம் பானையில் உண்டாகும். அதனைப் போக்க பானையைத் தூய்மை செய்து வெயிலில் வைத்து பின்பு வாசமிகு விளாம்பழத்தைப் பானையுள் வைத்தால், "கவுல்' என்னும் நாற்றம் நீங்கிவிடும். பொதுவாக விளாந்தழையை நுகர்ந்தாலே "வமனம்' என்னும் வாந்திவரும் நிலை நீங்கிவிடும்.
 பானைக்கு உவமை சொல்லும் புலவர், நிறைமாத கர்ப்பிணி வயிற்றைக் கூறுகிறார். இந்த நற்றிணைப் பாடலை இயற்றிய புலவர் கயமனார். திணை: பாலைத்திணை;
 துறை: உடன்போக்குத் தவிர்த்தல்.
 பிரியமானவன் உறவைவிட, பெற்று வளர்த்தவர் உறவைப் பெரியதாக எண்ணிய பெண்குலத்துப் பொன்விளக்கான தலைவி பற்றிய தமிழ்பாடல் இது.
 விளாம்பழம் கமழும் கமம்சூல் குழிசிப்
 பாசம்தின்ற தேய்கால் மத்தம்
 நெய்தெரி இயக்கம் வெளிமுதல் முழங்கும்
 வைகுபுலர் விடியல் மெய்கரந்து தன்கால்
 அரியமை சிலம்பு கழீஇப் பன்மாண்
 வரிபுனை பந்தொடு வைஇய செல்வோள்
 இவை காண்தோறும் நோவர் மாதோ
 அளியரோ அளியர் என் ஆயத்தோர் என
 நும்மொடு வரவுதான் அயரவும்
 தன்வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே! (நற்.12)
 -மு. வெங்கடேசபாரதி

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/29/w600X390/PANPADU.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2019/dec/29/பண்பாடு-காத்த-பருவமகள்-3318152.html
3318150 வார இதழ்கள் தமிழ்மணி  இந்த வாரம் கலாரசிகன் DIN DIN Sunday, December 29, 2019 01:07 AM +0530 "தினமணி'க்கும் வாசகர்களுக்குமான உணர்வுபூர்வமான உறவைப் பார்த்து நான் நெகிழ்ந்து போகிறேன். கடந்த வாரம் ஒரு நிகழ்வு.
 சலுப்பை கி.பாஷ்யம் என்கிற ராமு பணி ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர். "தினமணி'யில் வாசகர் கடிதம், வாசகர் அரங்கத்தில் தொடர்ந்து பங்கு பெறுபவர். "தினமணி' கதிரிலும் இவரது பங்களிப்புகள் வெளிவந்ததுண்டு. தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றிருக்கும் சலுப்பை பாஷ்யம், இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.
 இரு வாரங்களுக்கு முன்பு (டிச.18) அதிகாலையில் எழுந்து "தினமணி' நாளிதழைப் படித்துவிட்டு, ஆசிரியர் கடிதம் பகுதிக்கு ஒரு கடிதம் எழுதிக் கொண்டிருந்தபோது, நெஞ்சுவலி வந்து உயிரிழந்து விட்டார். இந்தத் தகவலை அவருடைய புதல்வியார் தெரிவித்து, தான் நேசித்த தினமணியைத் தாங்கியபடி அவரது இன்னுயிர் பிரிந்தது என்கிற தகவலையும் தெரிவித்தார்.
 "தினமணி'யை நேசித்த சலுப்பை பாஷ்யத்தின் இரங்கல் செய்தியை வெளியிடாமல் விட்ட குறையை இந்தப் பதிவின் மூலம் சற்று தணித்துக் கொள்கிறேன்.
 
 குளித்தலையில்இருந்தபடி மிகப்பெரிய இலக்கியப் பணியைச் செய்து வருபவர் கவிஞர் கடவூர் மணிமாறன். மரபுக் கவிதைகள் புனைவதில் வல்லவரான கடவூர் மணிமாறனை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் இலக்கிய நிகழ்வுகளில்கூட சந்திக்க முடியும். சிறந்த சொற்பொழிவாளருமான கடவூர் மணிமாறன் ஆண்டுதோறும் ஒரு புத்தகம் வெளிக்கொணர்பவர் என்கிற தகவல் எனக்குப் புதிது. இந்த ஆண்டு கடவூர் மணிமாறன் வெளிக்கொணர்ந்திருக்கும் நூல் "இலக்கியச் சாரல்'.
 பல்வேறு கட்டுரைகள் (ஆய்வுகள்) அடங்கிய இந்தத் தொகுப்பில், சங்க காலம் தொட்டு நிகழ்காலம் வரையிலான படைப்புகளும், படைப்பாளிகளும் ஆய்வில் அடங்கும். தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு இது பயனுள்ள கையேடாக இருக்கும்.
 
 மன்னார்குடியிலிருந்து பேராசிரியர் இரா.காமராசின் கடிதம் வந்திருந்தது. கூடவே ஒரு புத்தகம். சாகித்ய அகாதெமியினால் "இந்திய இலக்கியச் சிற்பிகள்' வரிசையில் அவர் எழுதியிருக்கும் தி.க.சிவசங்கரன் பற்றிய புத்தகம்தான் அது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
 தி.க.சி. குறித்து இளவல் முத்துக்குமார் நான்கைந்து புத்தகங்கள் எழுதிவிட்டார் என்றாலும், சாகித்ய அகாதெமியில் "இந்திய இலக்கியச் சிற்பிகள்' வரிசையில் அவர் குறித்த புத்தகம் வெளிவருவது என்பது பெருமைக்குரியது.
 சுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் போல, நாங்கள் எல்லாம் 21 இ, சுடலைமாடன் தெரு, தி.க.சி.யின் நட்பு வட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் பெருமை கொள்பவர்கள். தி.க.சி.யின் பாராட்டு மழையால் வானுயர ஓங்கி வளர்ந்த இலக்கிய மரங்கள் ஏராளம், ஏராளம். தி.க.சி.யின் நட்பு வட்டம் எவ்வளவு பெரிதோ, அதைவிடப் பெரியது அவரது அன்பு வட்டம்.
 எல்லா பத்திரிகைகளையும் தி.க.சி. படித்து விடுவார். நல்ல படைப்புகளை எழுதிய எழுத்தாளரை நேரில் அழைத்து அல்லது கடிதம் எழுதிப் பாராட்டத் தவறமாட்டார். தி.க.சி.க்கும் "தினமணி'க்குமான தொடர்பு என்பது ஆழமானது. தமிழ் இதழ்களில் அவர் அதிகம் கடிதம் எழுதியது தினமணிக்குத்தான். இதைக் காமராசு பதிவு செய்திருக்கிறார்.
 கடந்த சனிக்கிழமை தமிழிசைச் சங்கத்தில் நடந்த விழாவில் நான் கலந்து கொண்டபோது, பெரியவர் தி.க.சி. நம்மிடையே இல்லையே என்ற குறை எனக்கு இருந்தது. நான் தமிழிசைச் சங்க இசை விழாவைத் தொடக்கி வைக்கிறேன் என்பதை அறிந்தால் புளகாங்கிதம் அடைந்திருப்பார். தமிழிசை இயக்கம் பலவீனப்படுவது குறித்து தினமணிக்கு அவர் எழுதிய கடிதத்தை இந்தப் புத்தகத்தில் இணைத்திருக்கிறார் இரா.காமராசு.
 "கல்கி, இராஜாஜி ஆகியோரின் துணையுடன் இராஜா அண்ணாமலைச் செட்டியார் ஆதரவுடன் "ரசிகமணி' டி.கே.சி. பேரார்வத்துடன் தோற்றுவித்த தமிழிசை இயக்கம் இன்று எப்படி இருக்கிறது? தாமிரபரணி நதி இப்போது வறண்டு கிடப்பதுபோல், சகதியும், சேறுமாகத் தேங்கி நிற்பது போல் தமிழிசை இயக்கம் குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடக்கிறது.
 தமிழிசையின் மூலவர் டி.கே.சி. மறைந்து விட்டார். தமிழிசைக்காக இரவும் பகலும் எழுதிவந்த "கல்கி'யும் காலமாகிவிட்டார். மூதறிஞர் இராஜாஜியும் இன்றில்லை. எனவே தமிழிசையும், தமிழ்ப் பாடகர்களும், பாடல் இயற்றுவோரும், ரசிகர்களும் அநாதையாகக் கையைப் பிசைந்துகொண்டு நிற்கின்றனர். இந்த அவல நிலை வெகு விரைவில் மாற்றப்பட வேண்டும். இதற்கான முயற்சிகள் ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்தால் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்'' என்று 1997-இல் தி.க.சி. தினமணியில் எழுதியிருக்கிறார். அவரது ஆதங்கத்தைத்தான், தமிழிசைச் சங்கத் தலைமையுரையில் நான் பிரதிபலித்தேன்.
 தி.க.சி.யின் கடிதங்கள் ஊக்குவிப்புகள் என்பதற்கு மேலாக, இதழ்கள், நூல்கள், படைப்பாளிகள், நிகழ்வுகள் என்பவை குறித்த அரிய பதிவுகளும்கூட. தபால் அட்டையில் அவர் எழுதும் விமர்சனம், பத்திரிகையைப் பயன்படுத்தும் புதிய படைப்பாளிகளை இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தும். அதனால்தான் சுருக்கமாக, வெளிப்படையாக, நறுக்குத் தெறித்தாற்போல இருக்கும் தி.க.சி.யின் கடிதங்கள் இலக்கியமாகக் கருதப்படுகின்றன.
 விமர்சனத் தமிழின் முன்னோடி தி.க.சி.தான். அவரது வாழ்க்கையை மட்டுமல்லாமல், அந்த இலக்கிய ஆளுமையின் பன்முகத் தன்மையையும், அனைத்துப் பரிமாணங்களையும் பதிவு செய்திருக்கும் பேராசிரியர் இரா.காமராசுக்கு ஒரு பாராட்டு விழாவே எடுத்தாலும் தகும். திருநெல்வேலி கணபதியப்பன் சிவசங்கரன் என்கிற தி.க.சி. இல்லையே, இந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்த்துப் பாராட்டவும், விமர்சிக்கவும் என்பது மட்டும்தான் குறை!
 
 நேற்று கவிதை டாட்.காம் வலை தளத்தில் வெளியிடப்பட்டிருந்த கவிதைகளைப் படித்துக் கொண்டிருந்தேன். "பிரபா' என்பவர் எழுதியிருந்த "ஆண்டின் இறுதி' என்கிற கவிதையைப் படித்ததும் வாய்விட்டே சிரித்துவிட்டேன். நீங்களும் சிரிப்பீர்கள்.
 நாளும் பொழுதும் சிரித்துக்கொண்டே இருக்க அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
 ஆண்டின் இறுதியில்
 என்னைப் பார்த்து
 காலண்டர் கேட்டது -
 என்னைத் தவிர
 வேறென்னத்தைக்
 கிழித்தாய்?

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/29/w600X390/tm1.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2019/dec/29/இந்த-வாரம்-கலாரசிகன்-3318150.html
3318145 வார இதழ்கள் தமிழ்மணி "நிலாச்சோறு' கும்மி! DIN DIN Sunday, December 29, 2019 01:05 AM +0530 கொங்கு மண்டலமாம் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட பசுமை சூழ்ந்த கிராமமாக "பார்த்தசாரதிபுரம்' விளங்குகிறது. கிராமமும் கிராமீயமும் சார்ந்த நாட்டுப்புறப் பகுதியான இக்கிராமத்தில் வாழும் மக்களின் உயிரிலும் உணர்விலும் பழைமை மாறாமல் இன்றும் சில செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வகையில், இறை வழிபாட்டுடனும் இயற்கையுடனும் தொடர்புடையதாக "நிலாச்சோறு மாற்றுதல்' செயல்பாடு கும்மிப் பாடல்களுடன் கும்மியடித்து கொண்டாடப்படும் நிகழ்வாக விளங்குகிறது.
 நாட்டுப்புறம் வாழ் மக்களின் வாழ்வியல் நெறிகள், காதல் நினைவுகள் எனப் பலவும் கும்மியில் இடம்பெறுகின்றன. கோயில் திருவிழா, பொங்கல் விழா, தைப்பூச விழா ஆகிய விழாக் காலங்களில் கும்மிப் பாடல்கள் பாடப்பட்டு வருகிறது. பெண்களுக்கே உரியதான கும்மியில் ஆண்களும் பங்கேற்பதைக் காண முடிகிறது.
 கும்மியடித்தல்
 கும்மியாட்டம் "கும்மியடித்தல்' என்னும் பெயரில் கொங்கு வட்டாரங்களில் வழங்கப்பட்டு வருகின்றது. இதைக் "குதித்துப் பாடுதல்' எனவும் கூறுவர். "பெண்கள் ஆடும் ஆட்டங்களில் மிக முக்கியமானது கும்மியாட்டம். "கொம்மாய்' என்ற சொல்லிலிருந்து கும்மி தோன்றியிருக்க வேண்டும்; இவ்வாட்டத்தைக் குஜராத் கர்பா நடனத்துடனும், இராஜஸ்தான் கும்மார் ஆடலுடனும், ஆந்திரநாட்டு கொப்பியுடனும், கேரள நாட்டுக் கைகொட்டிகளியுடனும் தொடர்புப்படுத்துவர்'' என டாக்டர் சு. சக்திவேல் (நாட்டுப்புற இயல் ஆய்வு) குறிப்பிட்டுள்ளார்.
 நிலாச்சோறு வழிபாடு
 ஒவ்வோர் ஆண்டும் பார்த்தசாரதிபுரம் கிராமத்தில் தைப்பூச விழா நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே இரவில் நிலாவுக்கு வழிபாடு செய்யும் நிகழ்வு மேற்கொள்ளப்படுகிறது. பத்து வயதிலிருந்து இருபது வயதிற்குட்பட்ட பெண் பிள்ளைகளும் ஆண் பிள்ளைகளும் தங்கள் வீடுகளில் சமைக்கப்பட்ட உணவை ஒரு சிறுபாத்திரத்தில் போட்டு வழிபாடு நடக்கின்ற இடத்திற்குக் கொண்டு வருவர். இவ்வுணவு எச்சில் படாததாக இருக்க வேண்டும். வழிபாடானது ஊர்க்கவுண்டர் என்னும் கோயில் பொறுப்பில் தலைமை வகிப்பவர் வீட்டின் வாசலில் நடைபெறும்.
 வழிபாடு நிகழ்வதற்கு முன்பாக பெண்கள் வாசலை சாணிநீர் கொண்டு தூய்மைப்படுத்தி, மிகப்பெரிய தேர்க்கோலம் போடுவர். அத்தேரின் உச்சிப் பகுதியில் நிலவானது வானில் அன்றைய தினம் இருக்கும் தோற்றத்திற்கேற்ப வரையப்படும். தேரின் நடுவில் முக்காலி வைக்கப்பட்டு, அதன்மீது சாணியால் பிடிக்கப்பட்ட பிள்ளையார் வைக்கப்பட்டு, அதன் தலையில் பூ அல்லது அறுகம்புல் செருகப்படும்; அருகில் விளக்கு ஏற்றப்பட்டு பூக்கள் தூவப்படும். பின்னர் முக்காலியைச் சுற்றிலும் வட்டவடிவில் அனைவரும் கொண்டுவந்த உணவுப் பாத்திரங்கள் வைக்கப்படும். பின்னர் கும்மியடித்தல் தொடங்கப்பட்டு வழிபாடு நிகழ்த்தப்படுகிறது. விழா தொடங்கப்படும் முதல் நாளில் அனைவரும் பொரி வாங்கி வந்து படைத்து வழிபடுவர். அடுத்த நாளிலிலிருந்து உணவு கொண்டு வரப்படும். தைப்பூச நாளன்று வீட்டில் உள்ள தாய்மார்கள் பச்சரிசியால் மாவுருண்டை செய்து மாவு மாற்றுதல் சடங்கு கும்மியடித்தலுடன் நடைபெறும். இந்நாள் வெகு சிறப்பாக இருக்கும்.
 இந்த ஒருநாள் மட்டுமே பெரியவர்கள் பங்கு பெறுவர். மாவு மாற்றப்பட்ட மறுநாள் நிலாவுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படும் என்பது மக்களின் நம்பிக்கை. மாவை அதிகமாக உண்டதால் இப்பாதிப்பு ஏற்பட்டதாகக் கருதி அடுத்தநாள் ரசம் சோறு வைத்து வழிபடுவர். இந்நிகழ்வு நிலாச்சோறு மாற்றுதலின் கடைசி நாள் வழிபாடாகும். நிலாச்சோறு மாற்றுதல் என்பதை நிலாப் பிள்ளைக்குச் சோறு மாற்றுதல் எனவும் கூறுவர். தைப்பூச தினத்தில் மாவு மாற்றப்படவில்லையெனில், குழந்தைகள் தேர்க்காலில் பட்டு மடியும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.
 நிலாவுக்குப் படைக்கப்பட்ட உணவை கும்மியடித்தல் நிறைவுறும் ஒவ்வொரு நாளன்றும் பிள்ளைகள் அனைவரும் தங்கள் உணவினைப் பிறருக்குக் கொடுத்துவிட்டு, பிறர் கொடுக்கும் உணவினைப் பெற்று உண்பர். உணவுப் பாத்திரங்கள் கைமாறிக்கொண்டே வரும். இவ்வாறான முறை பிள்ளைகளிடையே சமத்துவத்தையும், பங்கிட்டு உண்ண வேண்டும் என்னும் மனப்பாங்கையும் ஏற்படுத்தும். நிலாச்சோறு மாற்றப்பட்டு, உணவு உண்டபின் முக்காலியில் இருக்கும் விளக்கை எடுத்துவிட்டு, ஒரு பெண்பிள்ளையின் தலையில் சாணிப் பிள்ளையார், பூக்கள் இருக்கும் முக்காலி வைக்கப்பட்டு, பாடல்கள் பாடிக்கொண்டே வாய்க்கால் பகுதிக்குக் குழுவாகச் சென்று ஓடுகின்ற நீரில் பிள்ளையார், பூக்கள் போடப்படும்.
 நிலவுக்கான வழிபாடாக இருப்பினும் முதலில் விநாயகரையும் மாரியம்மனையும் பாடியே கும்மியைத் தொடங்குகின்றனர். இயற்கை வழிபாடு கிராம மக்களின் பாரம்பரியத்தில் தலைசிறந்ததாகப் போற்றப்படுகிறது. அவ்வகையில் நிலா வழிபாடு நிகழ்த்தப்படுகிறது.
 வட்ட வட்ட நிலாவுக்கு
 பொட்டும் அலங்காரம்
 வாசமுள்ள கொண்டைக்கு
 பூவும் அலங்காரம்
 ஊருக்கு மேவரமா
 தோப்பும் அலங்காரம்
 போடுங்கம்மா பொண்டுகை
 போலே சிறுபலகை
 ஏடுங்கம்மா பொண்டுகை
 எல்லோருக்கும் தங்கொலகை
 ஓலே ஓலே...
 நிலவோடு பாம்பிற்கும் தொடர்புண்டு என்ற நம்பிக்கை நாட்டுப்புறப் பகுதிகளில் காணப்படுகிறது. சந்திரகிரகணம் நிலவை சந்திரன் விழுங்குவதால் ஏற்படும் என்பர். அவ்வகையில் பாம்பு குறித்த பாடலும் நிலாச்சோறு மாற்றும்போது பாடப்படுகிறது.
 இயற்கையோடு இயைந்து வாழ்கின்ற மக்களின் பாடல்களில் இயற்கையைப் பற்றிய பாடல்களும், விவசாயம், காதல் சார்ந்த பாடல்களும் வெளிப்படுகின்றன. நாட்டுப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை நம்பியே அமைகின்றது. மேலும், நிலாச்சோறு வழிபாட்டில் மக்கள் இறை வழிபாட்டோடு சேர்த்து, தம் எண்ண ஓட்டங்களையும் பாடல்களில் பதிவு செய்துள்ளதை அறியமுடிகிறது. கும்மியடித்துப் பாடுவதால் உடலுக்கும் மனதுக்கும் மகிழ்ச்சி ஏற்படும் என்பதையும் அறிய முடிகிறது.
 - முனைவர் கி. இராம்கணேஷ்
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/29/w600X390/NILA_CHORU_KUMMI.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2019/dec/29/நிலாச்சோறு-கும்மி-3318145.html
3318138 வார இதழ்கள் தமிழ்மணி  முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்  முன்றுறையரையனார் Sunday, December 29, 2019 01:03 AM +0530 பழமொழி நானூறு
 நெடியாது காண்கிலாய் தீயெளியை; நெஞ்சே!
 கொடியது கூறினாய் மன்ற - அடியுளே
 முற்பகல் கண்டான் பிறன்கேடு தன்கேடு
 பிற்பகல் கண்டு விடும். (பாடல்-130)
 நெஞ்சே! தீய செயல்களைப் பிறர்க்குச் செய்யுமாறு கூறினாய். (ஆதலால்) நீ அறிவு இல்லாதாய் (பிறர்க்குத் தீங்கு செய்தலால் வரும் பயனை) நெடுங்காலத்திற்குப் பின் அறியாய். அந்த நிலையிலேபிறன் ஒருவனுக்குத் தீங்கினைப் பகலின் முதற் பகுதிக்கண் செய்தால், தனக்கு வரும் தீங்கினைப் பகலின் பிற்பகுதிக்கண் தப்பாமல் அடைவான். (க-து.) முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும். "முற்பகல் கண்டான் பிறன்கேடுதன்கேடு பின்பகல் கண்டு விடும்' என்பது இச்செய்யுளில் வந்த பழமொழி.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/21/w600X390/LOTUS.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2019/dec/29/முற்பகல்-செய்யின்-பிற்பகல்-விளையும்-3318138.html
3312511 வார இதழ்கள் தமிழ்மணி திருப்புகழ்ப் பெருவழி! DIN DIN Sunday, December 22, 2019 01:45 AM +0530 தமது வீட்டில் தாமே வளர்ந்த செடியில் இருந்து பூப்பறித்து, மாலை கட்டி அதை இறைவனுக்குச் சூட்டி வழிபட எல்லோராலும் இயலாது. ஆனால், பூக்கடையில் கிடைக்கும் ஆயத்த மாலையை வாங்கி வந்து இறைவனுக்குச் சூட்டி வழிபட எல்லோராலும் இயலும். அதுபோல, தாமே இறைவன் மீது பாடல் புனைந்து பாடி வழிபட எல்லோராலும் இயலாது. ஆனால், அருளாளர்கள் பாடி வைத்துள்ள பாடல்களைப் பாடி வழிபட எல்லோராலும் இயலும்.
அருளாளர்கள் பாடி வைத்துள்ள பாடல்களைப் பாடி வழிபட விரும்புகிறவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அப்பாடல்களை அன்போடு, பிழையின்றிக் கற்று, பாடவேண்டும். இதை அருணகிரிநாதர், 
"அழித்துப் பிறக்க ஒட்டா 
அயில்வேலன் கவியை அன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றிலீர், 
எரி மூண்டது என்ன
விழித்துப் புகை எழப் பொங்கு 
வெங்கூற்றம் விடும் கயிற்றால்
கழுத்திற் சுருக்கிட்டு இழுக்கும்
அன்றோ கவி கற்கின்றதே?'' (கந்தரலங்-2)
என்று குறிப்பிட்டுள்ளார். மனிதர்களே! பிறவிப்பிணியை நீக்குபவன் வேலாயுதப் பெருமான். அவனைப் பற்றிய பாடல்கள் நிறைய இருக்கின்றன. இருந்தும் அவற்றைக் கற்றுக் கொள்ளாமல் இருக்கின்றீர்களே! எமன் பாசக் கயிற்றால் கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் நாளிலா கற்பீர்கள்? அப்போது பொறிபுலன்கள் நெறி மயங்கி நிற்குமே... எப்படிக் கற்பீர்கள்? எனவே, எமன் வரும் முன்பே முருகப் பெருமானைப் பற்றிய பாடல்களை அன்போடு எழுத்துப் பிழையின்றி கற்றுப் பாருங்கள். அப்படிப் பாடினீர்களானால், பிறவிப் பிணியிலிருந்து விடுபடுவீர்கள். இதுதான் பாடலின் பொருள்.
அப்படிக் கூறிய அருணகிரிநாதரின் திருப்புகழையே ஒருவர் பிழையாகப் பாடி முருகப்பெருமானின் அருளைப் பெற்றார், காட்சி பெற்றார் என்பது வியப்பான செய்தியல்லவா? 
சுவாமிமலையில் வயிற்றுவலிக்காரர் ஒருவர் இருந்தார். அவர் அருணகிரிநாதரின் திருப்புகழைப் பாடி முருகப்பெருமானை வழிபட்டால் வயிற்றுவலி தீரும் என்று எப்படியோ தெரிந்து கொண்டார். அதனால், திருப்புகழைப் பாடி அவர் முருகப் பெருமானை வழிபட்டார். எப்படிப் பாடினார் என்றால், நகையையும் சொல்லையும் சிதைத்துப் பாடினார். அதைக் கேட்ட முருகப்பெருமான் அவர் முன் தோன்றி "உன் வயிற்றுவலி இன்றுடன் தீர்ந்துவிட்டது, என் தொண்டனுடைய பாடலைச் சீரழிக்காதே'' என்று கூறி அவருடைய வயிற்றுவலியை உடனே நீக்கி அருளினான். இந்த வியப்பான நிகழ்வை வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், 
"ஏரகத்தில் ஒரு வயிற்று வலிக்காரன்
திருப்புகழால் எழுத்தோடு ஓசைச் 
சோரமுறத் துதி செய்தான் அவன் நனவில்
குகன் திகழ்ந்து "என் தொண்டன் பாடல்
சீரழியேல் இன்றுடன் உன்நோய் தீர்ந்தது' 
எனப் பகர்ந்து திருத்தி செய்தான்' (பு.பு.1142)
என்று பதிவு செய்துள்ளார். 
இந்த நிகழ்வு எதை உணர்த்துகிறது? திருப்புகழைப் பிழையாகப் பாடியவனுக்கே அருளிய முருகப் பெருமான், பிழையின்றிப் பாடுபவர்க்கு என்னென்ன செய்யமாட்டான்? எல்லாம் செய்வான் என்பதைத்தான் உணர்த்துகிறது. இதைச் சொல்லும்போது, 
"சாரம் உறத் துதிப்பார்க்கு 
என்பயன் தருவானோ
உன்மின் சகத்து உள்ளோரே'
என்று சொன்னார் வண்ணச்சரபர். திருப்புகழைப் பிழையின்றி அன்போடு பாடுவது மூச்சை அடக்கித் தவம் செய்வது போலவோ; வேள்வி செய்வது போலவோ கடினமானதன்று; எளிமையானது. மனிதரெல்லாம் கடினமான வழிகளில் சென்று சிரமப்படாமல் எளிதாக முருகப் பெருமானின் அருளைப்பெற வேண்டும் என்று கருதியது அருணகிரிநாதரின் கருணைஉள்ளம். அதனால்தான் பாட்டுப் பாடும் அந்த எளிய வழியை அவர் காட்டியருளினார். பின்னர் வந்த அருளாளரான வண்ணச்சரபரும் அதே கருணையினால், அதே வழியை,
". . . . . முருகோன் அருள்வேட்டு உள்ளீர்
என்ன பாட்டானாலும் அவற்று ஒன்றேனும் 
பிழை அறச் சொற்று இறைஞ்சுவீரே' 
(புலவர் புராணம்-1145)
என்று காட்டியருளினார். ஆனால் இவ்வழி, இவ்விருவருக்கும் முன்பே திருஞானசம்பந்தரால் காட்டப்பட்ட வழியாகும். சிவபெருமானின் அருளைப் பெறுவதற்கு,
"தடமலி பொய்கைச் சண்பைமன் ஞானசம்பந்தன்
படமலி நாகம் அரைக்கு அசைத்தான் தன் பரங்குன்றைத் 
தொடைமலி பாடல் பத்தும் வல்லார் தம் துயர் போகி
விடமலி கண்டன் அருள் பெறும் தன்மை மிக்கோரே' 
(தி.மு: 1-1090)
என்று தமது பதிகங்களைப் பாடும்படி வழிகாட்டினார் திருஞானசம்பந்தர். அவர் காட்டிய அந்த வழியைப் "பதிகப் பெருவழி' (ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி-2) என்று போற்றினார் நம்பியாண்டார் நம்பி.
சந்து பொந்துகளிலோ, குறுகிய சாலைகளிலோ வாகனத்தை ஒட்டிச் செல்வதைவிடப் பெருவழியில் (HIGH WAYS) வாகனத்தை ஓட்டிச் செல்வது எளிது. அதுபோல யோகம், யாகம் போன்ற மற்ற வழிகளைவிடப் பதிகம் பாடுவது எளிது. பெருவழியில் செல்லும்போது, சென்றடைய வேண்டிய இடத்தை விரைவாகச் சென்றடைய முடியும். அதுபோல, பதிகம் பாடுவதன் மூலம் சிவனருளை விரைவாகப் பெற முடியும். இந்தப் பொருத்தத்தைக் கருத்திற் கொண்டுதான் பதிகம் பாடி சிவனருள் பெறும் வழியைப் "பதிகப் பெருவழி' என்றார் நம்பியாண்டார் நம்பி.
அதுபோல, முருகப்பெருமானின் அரு ளைப்பெற அப்பெருமானைப் பற்றிய பாடல்களையோ, தமது திருப்புகழையோ பிழையின்றிப் பாடும்படி அருணகிரிநாதர் காட்டிய வழியையே வண்ணச்சரபரும் காட்டி அருளியமையால் அவ்வழியை, "திருப்புகழ்ப் பெருவழி' என்று போற்றலாம்.
- பே.சா. கர்ணசேகரன்


 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/22/w600X390/MURUGA.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2019/dec/22/திருப்புகழ்ப்-பெருவழி-3312511.html
3312510 வார இதழ்கள் தமிழ்மணி இந்த வாரம் கலாரசிகன் DIN DIN Sunday, December 22, 2019 01:43 AM +0530 எழுத்தாளர் சோ.தர்மனுக்கு அவர் எழுதிய "சூல்' நாவலுக்காக இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது கிடைத்திருப்பதில் எனக்குப் பெருமகிழ்ச்சி. ஆண்டுதோறும் எட்டயபுரம் மகாகவி பாரதி விழாவில் கலந்துகொள்பவர் எழுத்தாளர் சோ.தர்மன். இந்த ஆண்டு அவரை சந்திக்க இயலவில்லை.
தலைநகர் சென்னையில் இருந்தால் மட்டும்தான் இலக்கிய அங்கீகாரம் கிடைக்கும் என்கிற நிலை மாறி, எழுத்தாளர்கள் வசிக்கும் ஊர்களைத் தேடிச்சென்று அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் மாற்றம் வரவேற்புக்குரியது.
கரிசல் மண்ணுக்கும் எழுத்துக்கும் எப்போதுமே தொடர்புண்டு. கி.ராஜநாராயணனில் தொடங்கி, தமிழ் இலக்கிய உலகுக்கு கரிசல் மண் வழங்கியிருக்கும் இலக்கியக் கொடைகள் ஏராளம். அதில் மிக முக்கியமான இலக்கிய ஆளுமை சோ.தர்மன்.
கோவில்பட்டியை அடுத்த உருளைக்குடி கிராமத்தைச் சேர்ந்த சோ.தர்மராஜ் என்கிற சோ.தர்மனுடைய எழுத்தின் தனிச் சிறப்பு அதன் மண் வாசனை. அந்த மண் வாசத்துடன் சமுதாயத்தில் காணப்படும் குற்றம் குறைகளைக் கண்டு கொதித்தெழும் அவரது அறச்சீற்றமும் கலந்து எழுத்தாகப் பிரவாகம் எடுக்கிறது.
சோ.தர்மனுக்கு சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றுத் தந்திருக்கும் "சூல்' நாவலேகூட அறச்சீற்றத்தின் வெளிப்பாடுதான். தண்ணீர்ப் பிரச்னையை மையமாகக் கொண்டு கண்மாய்களின் இன்றைய நிலையை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட படைப்புதான் "சூல்'.
சமகால எழுத்தாளர்களின் படைப்புகளை எல்லாம் தொடர்ந்து வாசிப்பவர் சோ.தர்மன். எந்தவொரு எழுத்தாளரைக் குறித்தும், அவருடைய படைப்புகள் குறித்தும் நூல் திறனாய்வு உரை நிகழ்த்த அவரால் முடியும். பல்வேறு படைப்பாளிகளின் எழுத்துகளை வாசித்தாலும்கூட, அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டுத் தனக்கென்று ஓர் எழுத்துப் பாணியை உருவாக்கிக் கொண்டிருப்பவர் சோ.தர்மன்.
நண்பர் ஒருவருக்குக் கிடைத்திருக்கும் சாகித்ய அகாதெமி விருதை எனக்கே கிடைத்த விருதாகக் கருதி மகிழ்கிறேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புத்தக விமர்சனத்துக்கு வந்திருந்தது அதிஷா எழுதிய "சொல் அல்ல செயல்' என்கிற கட்டுரைகளின் தொகுப்பு. இந்தத் தொகுப்புக்கு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அணிந்துரை வழங்கியிருந்தார் என்பதால், எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. அதைப் படிப்பதற்குத் தனியாக எடுத்து வைத்துக் கொண்டேன். இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்தப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கியபோது, "இத்தனை வெப்பமான எழுத்தை எப்படி இத்தனை நாள் ஆறப்போட்டேன்' என்று என்னை நானே கடிந்து கொண்டேன். எஸ்.ராமகிருஷ்ணன் கூறுவதுபோல "சொல் அல்ல செயல்' உண்மையிலேயே அறத்தின் வெளிச்சம்.
"சொல் அல்ல செயல்' புத்தகத்திலுள்ள கட்டுரை ஒவ்வொன்றும் அறம் பற்றிய கேள்விகளை எழுப்புகின்றது. மனசாட்சியின் குரலாக ஒலிக்கின்றது. அந்தக் கட்டுரைகள் நமது அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கின்ற தவறுகளைச் சுட்டிக் காட்டுவதுடன் நிற்கவில்லை. அவை எதிர்கொள்ளப்படாமலும், திருத்தப்படாமலும், முணுமுணுப்புகளோடு தவிர்க்கப்படுவதை உரக்கச் சொல்கிறார் அதிஷா. இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையும் நம் ஒவ்வொருவரின் இதயத்திலும் எழுகின்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு.
"தனது வாசிப்பு அனுபவத்தின் மூலம் வாழ்க்கை அனுபவங்களை விஸ்தாரணம் செய்துகொள்ள வேண்டியது எழுத்தாளனின் கடமை. அதை அதிஷா சரியாக உணர்ந்திருக்கிறார். உலகம் கெட்டுப் போய்விட்டது எனக் கூக்குரல் இடும்போது, நாமும் அதற்குப் பொறுப்பாளர் என்பதை ஏன் மறந்து விடுகிறோம் என்பதுதான் அவரது கேள்வி. இந்தக் கட்டுரைகளின் மையமாக உரைப்பது இளைஞனை நோக்கிய அனுபவக் குரலே'' என்கிற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அணிந்துரைப் பதிவைவிட மேலாக "சொல் அல்ல செயல்' புத்தகம் குறித்து எழுதிவிட முடியாது.

காரிருள் மின்னலைப் போல, சிற்றிதழ்களில் வெளியாகும் சில கவிதைகள் நிலைகுலைய வைத்துவிடுகின்றன. புதிய எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் அறிமுகப்படுத்தி, அவர்களது எழுத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் சிற்றிதழ்கள் ஆற்றும் பெரும் பணிக்குத் தமிழுலகம் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறது.
கரூர் மாவட்டம் சேமங்கி என்கிற ஊரிலிருந்து பழ.அன்புநேசனால் வெளிக்கொணரப்படுகிறது "சிகரம்' காலாண்டிதழ். சந்திரா மனோகரன்தான் அதன் சிறப்பாசிரியர். தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் ரூ.1000 அனுப்பி இந்தச் சிற்றிதழ் தொடர்ந்து வெளிவருவதற்கு உதவும் புரவலர்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. சின்னமனூர் சோமுவும், பரமத்தி வேலூரைச் சேர்ந்த பணி ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் கே.முத்துரங்கனும்தான் இந்த இதழின் புரவலர்கள்.
அக்டோபர் - டிசம்பர் காலாண்டிதழில் வெளிவந்திருக்கும் கவிதை இது. கவிஞர் இரா.ஜவகர் எழுதியிருக்கும் "சித்தாள்' என்கிற கவிதையிலிருந்து சில வரிகள்:
குடிக்கும் கணவனுக்கு
கொடுப்பதற்குப் பணம் வேண்டும்!
படிக்கும் மகளுக்கு
புத்தகம் வாங்க வேண்டும்!
மாத்திக் கட்டுவதற்கு
மறுசேலை வாங்க வேண்டும்!
கல்சுமந்து மண்சுமந்து
புதுமனையாய் ஆவதற்கு
பொழுதெல்லாம் உழைத்தாலும்
குடிபுகுந்து விழா எடுத்து
விருந்துண்டு மகிழ்ந்திருக்கும்
வீட்டுக்காரர் திட்டிடுவார்
ஏன் அங்கே நிற்கின்றாய்
இலை எடுத்துப் போடென்று!
கடைசிப் பந்தி சாப்பாடு
காத்திருக்கும் உனக்காக!

 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/22/w600X390/tm2.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2019/dec/22/இந்த-வாரம்-கலாரசிகன்-3312510.html
3312509 வார இதழ்கள் தமிழ்மணி பொன் விழா! DIN DIN Sunday, December 22, 2019 01:40 AM +0530 வெள்ளிவிழா (25 ஆண்டு), பொன்விழா (50 ஆண்டு), பவளவிழா (75 ஆண்டு) என்று நிறுவனங்கள் கொண்டாட, மனிதர்கள் மணிவிழா (60ஆண்டு), முத்துவிழா (80 ஆண்டு) என்று கொண்டாடி மகிழ்கிறார்கள். அவற்றுள் ஒன்றான "பொன்விழா' என்பது பற்றிய மொழி அறிவும் அதாவது, அதில் அடங்கியுள்ள வரலாற்றை அறிவதும் மகிழ்ச்சிக்குரியதே!
 "பொன்' என்ற சொல் திருக்குறளில் (நான்கு முறை) "தங்கம்' ("ஒறுத்தாரை ஒன்றாக வைப்பாரே வைப்பர் / பொறுத்தாரை பொன்போல் பொதிந்து' 155, (267) என்ற பொருளிலும்; இரும்பு ("அரம்பொருத பொன் போலத் தேயும் உரம்பொருது / உட்பகை உற்ற குடி' 888, (931) என்ற பொருளிலும் கையாளப்பட்டுள்ளன.
 அவ்வாறே சங்க இலக்கியத்திலும் வந்துள்ளது. தங்கம் - "பொன் புனை உழிஞை வெல்போர் குட்டுவ" (பதிற்று. 22.27). இரும்பு-"கள்வர்தம் பொன்புனை பகழி" (குறுந்.16.2).
 இரும்பு என்பது கரிய உலோகம் என்ற பொருளுடைய "இரும்பொன்' என்ற வடிவத்திலிருந்து தோன்றியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. செம்பொன் (செம்பு), பைம்பொன் / பசும்பொன் (தங்கம்) என்ற வழக்குகளும் தமிழில் உள்ளன.
 தொல்காப்பியம் (புள்ளி மயங்கியல்.61) பொன்னின் மாற்று வடிவமாக "பொலம்' என்ற ஒரு சொல்லைக் குறிப்பிட்டுள்ளது. ஆனால், வரலாற்று நோக்கில் "பொலம்' என்பதிலிருந்தே "பொன்' என வந்திருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். "போலும்' என்ற சொல் "போன்ம்' என மாறும் என்று தொல்காப்பியம் (மொழி மரபு.18) விளக்கியுள்ளது. போலும் }போல்ம்-போன்ம். அந்த முறையில் பொலம் என்பது "பொல்ம்' என்றும், "பொன்ம்' என்றும் மாறி "பொன்' என்ற வடிவத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
 விழா
 "விழா' என்ற வடிவம் இரண்டு முறையும், அதன் மூல வடிவமான விழவு என்பது 87 முறையும் சங்க இலக்கியத்தில் வந்துள்ளன. "பெரு விழா விளக்கம் போல' (அகநா-185.11). விழவுக்களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப (நற்றி-19.5). அது விரும்புதல் என்ற பொருள் உடைய "வீழ்' (விரும்பு) என்ற வினை அடிச் சொல்லிலிருந்து உண்டான ஆக்கத் தொழில் பெயர்.
 "வீழ்காய்' - விரும்பும் காய் என்பது நற்றிணை (271.6). விழா, விழவு என்ற இரண்டு வடிவங்களும் திருக்குறளில் பதிவாகவில்லை. ஆனால், அதன் அடிச் சொல்லான "வீழ்' என்பதிலிருந்து உண்டான விழு ("விழுப்பேறு'-162), விழுப்பம் ("ஒழுக்கம் விழுப்பம் தரலான்'-131) என்ற சொற்கள் "சிறந்தது' என்ற பொருளில் வந்துள்ளன.
 விழா- விழவு வடிவ மாற்றம், நிலா-நிலவு, இரா- இரவு என்று பிற சொற்களிலும் சங்க இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், அவற்றைக் கிளைமொழி வழக்குகள் என்று மொழியியலும்; திசைச்சொல் (எச்சவியல்-1) என்று தொல்காப்பியமும் குறிப்பிடும்.
 பொன்விழா
 "பொன்விழா' என்ற தொகையை, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி (தொகுதி ஐந்து) தற்கால வழக்கு என்று பதிவு செய்துள்ளது. எனவே, அது சென்ற நூற்றாண்டில் ஆக்கப்பட்ட புதிய தொடர்.
 -முனைவர் செ.வை.சண்முகம்

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/22/w600X390/tm1.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2019/dec/22/பொன்-விழா-3312509.html
3312508 வார இதழ்கள் தமிழ்மணி மூதறிஞர் ராஜாஜியின் இலக்கிய ஆளுமை! DIN DIN Sunday, December 22, 2019 01:38 AM +0530 எவ்வளவு பெரிய கருத்தையும் குட்டிக் குட்டிக் கதைகளாக விளக்குவதில் மூதறிஞர் ராஜாஜி மிகவும் வல்லமை பெற்றவர். மகாபாரதக் கதையை "வியாசர் விருந்து' என்ற பெயரிலும், இராமாயணக் கதையை "சக்கரவர்த்தித் திருமகன்' என்ற பெயரிலும் இனிய தமிழில் எழுதினார். "வியாசர் விருந்து' நூலுக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் சாகித்ய அகாதெமி அவருக்கு விருது தந்து சிறப்பித்தது. திருமூலர் தவமொழி, முதல் மூவர் கைவிளக்கு ஆகிய நூல்களும் அவரது ஆன்மிகச் சிந்தனையின் அரிய படைப்புகளாக முகிழ்ந்தன.
 "எல்லாப் பொருளும் இதன்பால் உள/ இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால்'- என்ற பெருமைக்குரிய திருக்குறளை, ஆங்கிலத்தில் அவர் மொழிபெயர்த்து வழங்கினார். அதன் மூலம் அவரது ஆங்கிலப் புலமையையும், மொழிபெயர்ப்புத் திறனையும் அறிஞர்கள் உணர்ந்து போற்றினர். குறிப்பாக, ஜி.யு.போப் அந்நூலைப் படித்துப் பாராட்டியது, ராஜாஜியின் மொழியாக்கத் திறனுக்குக் கிடைத்த நற்சான்று. சிந்தனையைத் தூண்டும் சிறுகதைகளை எழுதுவதிலும் ராஜாஜி தமக்கென்று தனி பாணியைப் பின்பற்றினார். பொழுது போக்குக்காகவோ, உணர்ச்சிகளைக் கிளறிவிடுவதற்காகவோ எழுதாமல், சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை உள்ளடக்கி அருமையாக எழுதினார்.
 படைப்புகள்
 "குடி குடியைக் கெடுக்கும்' என்னும் கருத்தை மையமாக வைத்து அவரால் புனையப்பட்டதே "திக்கற்ற பார்வதி' எனும் படைப்பாகும். பின்னாளில் அது வெண் திரையில் காட்சிக் காவியமாகத் திரைப்படமாயிற்று.
 கல்வி அறிவும், கலை பயில் தெளிவும் கொண்ட ராஜாஜி அவ்வப்போது கட்டுரை ஓவியங்களும் தீட்டினார். கல்கி, இளம் இந்தியா, சுயராஜ்யா ஆகிய ஏடுகளில் அவர் எழுதிய கட்டுரைகள் பலரால் பாராட்டப்பட்டவை.
 அவரது இலக்கிய ஈடுபாடு ஓர் எல்லைக்கு உட்பட்டதல்ல. பஜ கோவிந்தம், உபநிஷதப் பலகணி, வேதாந்த தீபம், ஆத்ம சிந்தனை, úஸாக்ரதம், துறவி லாதென்சு ஆகியவை ஒப்புவமை இல்லாதவை. சிசுபாலனம், அபேத வாதம், கண்ணன் காட்டிய வழி, அரேபியர் உபதேச மொழிகள், குடி கெடுக்கும் கள், தாவரங்களின் இல்லறம், தமிழில் வருமா? என இப்படி அவர் எழுதிய நூல்கள் அனைத்தும் இலக்கிய வளர்ச்சிக்கு உரம் சேர்ப்பதாக அமைந்தன.
 எழுத்து அனுபவம்
 ஓர் எழுத்தாளர் எவ்வளவு நூல்கள் எழுதியிருந்தாலும் மன நிறைவைத் தந்த நூல் சிலவாகவே இருக்க முடியும். அந்த வகையில் இராமாயணத்தை "சக்கரவர்த்தித் திருமக'னாக அவர் எழுதிய அனுபவத்தை இப்படிக் கூறுகிறார்:
 "என்னுடைய அரசியல் பணிகளைக் காட்டிலும், இலக்கியப் பணியையே நான் விலைமதிக்க இயலாதது என்று கருதுகிறேன். இராமாயணம் எழுதும் பணி எனக்கு முடிந்துவிட்டது. நான் மகிழ்ச்சியான ஒரு கனவிலிருந்து விழித்துக் கொண்டவனைப் போல் இருக்கிறேன். இராமன் அயோத்தியை விட்டுச் சென்றபோது, அவன் வருந்தவில்லை. ஆனால், சீதையை இழந்தபோதுதான் அவன் வருத்தம் என்றால் என்ன என்பதை அறிந்து கொண்டான். அதே நிலையில்தான் நானும் இருக்கிறேன்.
 உயர்ந்த பதவியிலிருந்து விலக நேர்ந்தபொழுது நான் வருந்தவில்லை. அடுத்தாற்போல் என்ன செய்வது என்று திகைக்கவில்லை. ஆனால், அயோத்தி இராமனின் வரலாற்றை எழுதி முடித்த நிலையில் நான் ஒரு வெறுமையை, சூன்யத்தை உணர்கிறேன். ஆலயம் ஒன்றிலிருந்து ஆண்டவன் அகன்றுவிட்டதைப் போல் ஆகிவிட்டது என் மனம்!'' என்கிறார். இதன் மூலம் தொய்வின்றி எழுத வேண்டும் என்னும் அவரது ஆர்வம் வெளிப்பட்டது.
 பொன்மொழிகள்
 தீர்க்கமான சிந்தனையும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட ராஜாஜியின் பொன்மொழிகளையும் அவரது வாழ்வியல் இலக்கியம் சிறப்பாகப் பதிவு செய்துள்ளது. எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் கூறலாம்.
 "மாநாடுகள் ஒரே ஒரு முறைதான் பேசும்; இலக்கியமோ பலமுறை பேசும்.'' என்று கூறிய ராஜாஜிதான், "கடமையும் உரிமையும் கொழுக்கொம்பு போல. கடமையின்றி உரிமையில்லை. உரிமையோடு ஒட்டியிருப்பதுதான் கடமை. கடமை அஸ்திவாரம்; உரிமை அதன்மீது எழுப்பப்படுகின்ற கட்டடம்'' எனக் கடமைக்கும் உரிமைக்கும் அருமையான விளக்கம் கொடுத்தார்.
 ஹிந்தியும் ராஜாஜியும்
 நாடெங்கும் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுவாக இருந்த சமயத்தில், ராஜாஜி ஒரு கருத்தைத் தெரிவித்தார். "இந்தியை வெறுக்கலாம்; ஆனால் அதைக் கற்பதால் கேடு ஒன்றுமில்லை!'' என்றார். அப்போது தமிழறிஞர் ஒருவர், "இந்தியைப் பற்றித் தாங்கள் கொண்டிருக்கும் கருத்து தவறானது!' என்றார்.
 அதற்கு ராஜாஜி "நண்பரே... வெளியில் சென்றுவர நமக்குக் காலணி தேவைப்படுகிறது. அதற்காக அதை நாம் வீட்டுக்குள் போட்டுக்கொண்டு நடப்பதில்லை. அதுபோலத்தான் நாம் இந்தியை வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது, வெளிமாநிலத் தேவைகளுக்கு இந்தியைப் பயன்படுத்திக் கொள்வோம். நமது மாநிலத் தேவைகளைத் தமிழிலேயே செய்து கொள்வோம்! '' என்றார்.
 எதையும் நுட்பமாக ஆராய்ந்து தேர்வதில், திறமை பெற்றவராக இருந்தார் ராஜாஜி. இவை போல் பல நிகழ்வுகள் அவரது வாழ்வில் நடைபெற்றுள்ளன. இவற்றிலிருந்து, மூதறிஞர் ராஜாஜி ஓர் உன்னதமான இலக்கிய ஆளுமை என்பதை அறியமுடிகிறது.
-குடந்தை பாலு
 
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/22/w600X390/rajaji.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2019/dec/22/மூதறிஞர்-ராஜாஜியின்-இலக்கிய-ஆளுமை-3312508.html
3312505 வார இதழ்கள் தமிழ்மணி  காய்த்த மரமே கல்லடிபடும்!  முன்றுறையரையனார் Sunday, December 22, 2019 01:36 AM +0530 பழமொழி நானூறு
 தொன்மையின் மாண்ட துணிவொன்றும் இல்லாதார்
 நன்மையின் மாண்ட பொருள்பெறுதல் - இன்னொலிநீர்
 கல்மேல் இலங்கு மலைநாட! மாக்காய்த்துத்
 தன்மேல் குணில்கொள்ளு மாறு. (பாடல்-129)
 இனிய ஒலியினையுடைய அருவிநீர் கற்பாறைமேல் இழியா நின்று விளங்கும் மலைநாடனே! பழைய நூல்களில் மாட்சிமைப்பட்ட துணிவு ஒரு சிறிதும் இல்லாதவர்கள் நலங்களில் மாட்சிமைப்பட்ட பொருளினை முயன்று உடையராதல், மாமரமானது காய்ப்புற்று அதனால் தன்மேல் பிறரெறியும் கல்லை ஏற்றுக்கொள்ளுதல் போலும். (க-து.) அறிவிலார் பெற்ற செல்வம் அவர்க்கே துன்பத்தினை விளைக்கும். "மாக் காய்த்துத் தன்மேல் குணில் கொள்ளுமாறு' என்பது பழமொழி.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/28/w600X390/LOTUS.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2019/dec/22/காய்த்த-மரமே-கல்லடிபடும்-3312505.html
3306341 வார இதழ்கள் தமிழ்மணி ஐங்குறுநூறு "வேட்கைப்பத்தில்' மங்கலச் சொற்கள்! DIN DIN Sunday, December 15, 2019 01:17 AM +0530 சங்க இலக்கியங்களுள் எட்டுத்தொகை வரிசையில் இடம்பெறும் ஐங்குறுநூறு சற்று மாறுபட்ட இலக்கியம். ஏனெனில், சங்க இலக்கியங்களில் இடம்பெறும் ஐந்திணைகள், தொல்காப்பியர் வகுத்த இலக்கிய முறைப்படி குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசையில்தான் இருக்கும். சங்க இலக்கியம் அல்லது சங்க கால மக்கள் வாழ்வு இயற்கையோடு தொடர்புடையது ஆதலால், மலை தொடங்கி, கடல் முடிய நிரவியுள்ள நில அமைப்பின்படி அவை குறிஞ்சி முதலாக முறைப்படுத்தப்பட்டன. ஆனால், ஐங்குறுநூற்றில் மருதம் முதலாகக் கொண்டு தொடங்குகிறது. அவ்வகையில், மருதத் திணையில் அமைந்த நூறு பாடல்களில் முதல் பத்தான வேட்கைப்பத்து காட்டும் நற்சொற்களை (மங்கலச் சொற்கள்) காண்போம்.
 "வேட்கை' என்றால் விருப்பம், விழைவு என்றும்; "வேட்டேம்' என்றால் விரும்பினோம் என்றும் தோழி கூற்றாக இப்பத்துப் பாடல்களும் வருவதால், புற ஒழுக்கத்தில் நீண்ட நாள் ஈடுபட்ட தலைவனோடு இன்பம் துய்க்கவியலாத தலைவியின், தோழியின் மனவேட்கையும்
 (மனவிருப்பத்தையும்) விளக்குமாறு வேட்கைப்பத்து அமைகிறது.
 அன்பின் ஐந்திணைக்குரிய களவு, கற்பு என்னும் இருவகை ஒழுக்கங்களிலும் தலைவனின் பிரிவுக் காலத்தில் தலைவியும் அவள் தோழியரும் எதன் பொருட்டு விருப்பமாக இருந்தார்கள் என்பதனைத் தலைமகளிடம் தோழி கூறுவதாக அமையும் பாடல்களின் சிறப்பை
 ஆராயுங்கால்,
 "வாழி ஆதன் வாழி அவினி
 நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
 ... .... யாணர் ஊரன் வாழ்க (ஐங்-1)
 என்கிற முதல் பாடலில், "நான் பரத்தமை ஒழுக்கம் மேற்கொண்ட வேளையில் என்னைப் பற்றி என்ன நினைத்தீர்கள் என்று தலைவன் வினவியபோது பதில் கூறுமுகமாக இப்பாடல் இருப்பினும், வாழி, பொலிக, சிறக்க, வாழ்க என்கிற சொல்லாட்சி ஒரு மனிதனின் குற்றத்தை சுட்டிக்காட்டாமல் வாழ்த்தியே கூறும் கூற்று சிந்திக்கத்தக்கது.
 வாழி ஆதன் என்பதனை வாழியாதன் என ஏற்றுக்கொண்டால்,
 சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குறிப்பதும் ஆகலாம்.
 அப்போது அவனுக்கு உட்பட்ட குறுநிலத் தலைவனாக அவினியைக் கொள்ளலாம். கொங்கு நாட்டு அவினாசி என்னும் ஊர்ப்பெயர் அவினியை நினைவுபடுத்தும். ஆதன் என்றால் சேர மன்னர்களுள் சிலருடைய குடிப்பெயர். அவினி - சேரக்குடியில் பிறந்த மன்னன் என்றும், அவினியென்போன் ஓரம்போகியார் காலத்தில் ஆண்டவன் என்றும் அவனை வாழ்த்த விழைந்த புலவர் அவன் குடி முதல்வனாக செல்வக்கடுங்கோ வாழியாதனையும் வாழ்த்துமுகமாகத் தோழி வாயிலாக வாழ்த்தினார் என்றும் கருதுவர். இவர் அரசவாழ்த்தே முதற்பத்தாக அமைந்திருப்பது இந்நூலுக்குச் சிறப்பென உரையாசிரியர்களும் குறிப்பிட்டிருப்பதை அறிய முடிகிறது. ஒவ்வொரு பாடலிலும் இடம்பெற்றுள்ள மங்கலச் சொற்கள் வருமாறு:
 1. நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
 யாணர் ஊரன் வாழ்க
 பாணனும் வாழ்க
 "காடு வெளஞ்சா கஞ்சி குடிக்கலாம்' (வட்டார வழக்கு)
 "நீடு வாழ்க!' என்பாக்கு அறிந்து' (குறள் - 1312)
 "நடந்தாய் வாழி காவேரி' (சிலம்பு, கானல் 7-39)
 "வளனே வாழி காவேரி' (சிலம்பு, கானல் 7-43)
 2. விளைக வயலே வருக இரவலர்
 "வழிவழிச் சிறக்க
 மண்ணு விளைய வேணும்
 மக்கள் பஞ்சம் தீர வேணும்' (வ.வ.)
 "பற்றல் இலியரோ! நின் திறம் சிறக்க!' (புறம் 6-10)
 "சென்மோ, இரவல! சிறக்க நின் உள்ளம்!'
 (பெரும்பாண் 45)
 3. பால்பல ஊறுக பகடுபல சிறக்க
 பூக்கஞல் ஊரன் தன்மனை
 வாழ்க்கை பொலிக!
 "பட்டி நிறைய வேணும்
 பால்பாக்கியம் செழிக்க வேணும்' (வ.வ.)
 "வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல்
 பெரும்பசுக்கள்' (திருப்பாவை.3)
 4. பகைவர் புல் ஆர்க பார்ப்பார் ஓதுக
 கழனி யூரன் மார்பு
 பழன் மாகற்க
 "ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்' (ஒளவை)
 5. பசியில் ஆகுக பிணிசேன் நீங்குக
 தண்துறை யூரன் தேர் எம்
 முன்கடை நிற்க
 "மழை வேண்டு புலத்து மாரி நிற்ப,
 நோயொடு பசி இகந்து ஒரீஇ' (பதிற்று 13-27)
 "உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்'
 (குறள், 734;)
 6. வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக
 தண்துறை யூரண் வரைக
 எந்தையும் கொடுக்க
 "ஊருடன் பகை வேருடன் கெடும்' (ஒளவை)
 "பகை நட்பாக் கொண்டு ஒழுகும்' (குறள் - 874)
 7. அறநனி சிறக்க அல்லது கெடுக
 தண்துறை யூரன் தன்னூர்க்
 கொண்டனன் செல்க
 "அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
 நாடி இனிய சொலின்' (குறள்-96)
 8. அரசுமுறை செய்க களவில் லாகுக
 பூக்கஞல் ஊரன் சூள்இவண்
 வாய்ப்ப தாக !
 "முறை செய்து காப்பாற்றும் மன்னவன்' (குறள்-388)
 9. நன்றுபெரிது சிறக்க தீதில் ஆகுக
 தண்துறை யூரன் கேண்மை அம்பல் ஆகற்க
 நல்லவன் நல்லது செய்தால்
 "பொல்லாதது போற வழி போகும்' (வ.வ.)
 "நல்லது செய்த லாற்றீ ராயினும்
 அல்லது செய்த லோம்புமி னதுதான்' (புறம் 195)
 10. மாரி வாய்க்க வளநனி சிறக்க
 தண்துறை யூரன் தன்னோடு
 கொண்டனன் செல்க
 "காலம் நமக்குத் தோழன்
 காற்றும் மழையும் நண்பன்' (வ.வ.)
 "மாமழை போற்றுதும்' ( சிலம்பு)
 சங்க இலக்கியங்களிலும் பிற இலக்கியங்களிலும் பல்வேறு இடங்களில் மங்கலச் சொற்கள் குறித்துப் புலவர் பெருமக்கள் பரக்கப் பேசினாலும்கூட குறிப்பாக ஐங்குறுநூறு "வேட்கைப்பத்து' பாடல்களில் இடம்பெறும் மங்கலச் சொற்கள் சிந்திக்கத்தக்கனவாக அமைந்துள்ளன.
 பொலிக, சிறக்க, வாழ்க, விளைக, வருக, ஊறுக, பகடு சிறக்க, புல்லார்க, பசியில்லாகுக, பிணி நீங்குக, நிற்க, தணிக, நந்துக, கொடுக்க, செல்க, செய்க, இல்லாகுக, வாய்ப்பதாக, நன்று, தீது இல்லாகுக, அம்பல் ஆகற்க, மாரிவாய்க்க.
 மேற்கண்ட சொற்களில் பெரும்பான்மை மங்கலச் சொற்களே! ஓரம்போகியாரின் பாடல்கள் "மனிதம்' என்ற சொல்லுக்கு விடை கூறுகிறது. சமூகப் பார்வையில் ஒரு பெரும் புலவனாக, முற்போக்குச் சிந்தனையாளராக தன் உள்ளக் கருத்துகளையும், ஆக்கப்பூர்வமான எண்ணங்களையும் பரக்கப் பதிவு செய்திருக்கும் பாங்கும் எண்ணத்தக்கது.
 நாடு வாழ அரசன் வாழ வேண்டும்; அரசன் வாழ குடிமக்கள் வாழ வேண்டும்; குடிமக்கள் வாழ நெல் விளைய வேண்டும்; நெல் விளைய மழை பொழிய வேண்டும்; மழை பொழிய இயற்கை வளம் காக்கப்பட வேண்டும் என விரும்பிய புலவர் வேட்கைப்பத்து பாடியது தலைவன்- தலைவி- தோழிக்கானதாகப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், ஆராய்ச்சிக் கண்கொண்டு பார்க்கும் வேளையில், தலைவனை விரும்பும் தலைவியாகக் காட்டினாலும் இந்தச் சமூகத்தை வளத்தோடு பார்க்கும் தொலைநோக்குச் சிந்தனையாளர் ஓரம்போகியார் என்றால் அது மிகையன்று.
 -முனைவர் ப.முருகன்

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/15/w600X390/INGURU_VETTAI-MURUGAN.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2019/dec/15/ஐங்குறுநூறு-வேட்கைப்பத்தில்-மங்கலச்-சொற்கள்-3306341.html
3306339 வார இதழ்கள் தமிழ்மணி  நெடுந்தூண் சிற்பம் காட்டும் நெடுநல்வாடைக் காட்சி DIN DIN Sunday, December 15, 2019 01:15 AM +0530 "கோல நெடுநல்வாடை' என்று தமிழ்கூறு நல்லுலகம் புகழும் இந்நூலை இயற்றியவர் புலவர் நக்கீரர். 188 அடிகள் கொண்ட அகவற்பாக்களால் அமைந்த நூல். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை நக்கீரர் பாடியது. "வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகம்' எனப் பாண்டியனது அடையாள மாலையைக் குறிப்பிடுவதால் இந்நூல் புறப்பாடல் நூலானது.
 வாடைக்காலத்தில் மனித உடலானது வெப்பத்தை நாடுகிறது. தலைவன் - தலைவியர் மெய்யுறுபுணர்ச்சியை நாடுகின்றனர். நெடுநல்வாடைத் தலைவன் (பாண்டியன்) போர்ப் பாசறையில் இருக்கிறான். அவனுடைய தலைவி (பாண்டியன் தேவி) பிரிவால் ஓவியப்பாவை போல அரண்மனையில் காமம் மேலிடத் தலையணையில் கண்துஞ்சாது, தலைவனையே நினைந்து வாடைக்கு ஆற்றாது வாடுகின்றாள். குழந்தைகள் முதல் முதியவர்கள் ஈறாக யாவரும் தீக்காய்வார்கள். இதை திருவள்ளுவர்,
 அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
 இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்! (குறள்:691)
 என்கிறார். வாடைக்குக் "கூதிர்' என்றொரு பெயரும் உண்டு. "கூ' என்பது "மிக்க குளிர்ச்சி' என்பதாகும். காமத்தைத் தூண்டும் நீண்ட வாடை - நெடுநல்வாடை ஆயிற்று.
 "வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்
 பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
 வார்கலி முனைஇய கொடுங்கோற் கோவல
 ரேறுடை யினநிரை வேறுபுலம் பரப்பிப்
 புலம் பெயர் புலம்பொடு கலங்கிக் கோட,
 னீடிதழ்க் கண்ணி நீரலைக் கலாவ
 மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன்
 கைக்கொள் கொள்ளியர் கவுள் புடையூஉநடுங்க
 மாமேயல் மறப்ப மந்தி கூரப்
 பறவை படிவன வீழக் கறவை
 கன்று கோ ளழியக் கடியவீசிக்
 குன்று குளிர்ப் பன்ன குளிரக் கூதிர்ப் பானாள்,
 (நெடுநல்-1:12)
 ஞாயிறு வடதிசை நோக்கிக் செல்ல இந்நிலம் குளிரப் பனி உண்டாகிறது. மழை பொழியாது சும்மாக் கிடந்த வானம், புதிதாக மழையைப் பொழிந்தது. கோவலர்கள் (இடையர்கள்) ஆடு, மாடுகளை மேட்டு நிலத்தில் கொண்டுபோய் அடைய வைத்தார்கள். கைகால்கள் நடுங்க, கண்களில் நிரம்பிய பீளையைக்கூடக் கழுவாது உடலை வருத்தும் வாடையைத் தணிக்கக் குடலை மாட்டிக்கொண்டு கூதற்காய்ந்தார்கள்?
 வாடைக்கு ஆற்றாது ஆடு, மாடுகள் மேய்வதை மறந்து நின்றன; பறவைகள் கிளைகளில் படியாமல் கால்கள் விரைத்துத் தடுமாறி வீழ்ந்தன; கன்றுகள் தன் தாயிடம் பாலுண்ண மறந்தன; குன்றுகள் குளிரும்படியாகக் கூதிர் (வாடை) நெடுநாள் நீடித்தது என்பது பாடலின் பொருள்.
 மேற்காணும் நெடுந்தூண் சிற்பக்காட்சி (படம்) இந்நெடுநல்வாடைக் காட்சியை நினைவூட்டுகின்றது. இக்காட்சி ஆவுடையார்கோவில் (திருப்பெருந்துறை) அருள்மிகு ஆளுடைய பரமசாமி திருக்கோயில் தூணில் உள்ளது. பழந்தமிழ்ப் பண்பாடுகளைப் போற்றிப் பாதுகாத்தல் நங்கடனே!
 - முனைவர் கா.காளிதாஸ்

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/15/w600X390/tm2.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2019/dec/15/நெடுந்தூண்-சிற்பம்-காட்டும்-நெடுநல்வாடைக்-காட்சி-3306339.html
3306337 வார இதழ்கள் தமிழ்மணி வள்ளலாரிடம் "உறுதிச்சான்று' கேட்டவர்! DIN DIN Sunday, December 15, 2019 01:13 AM +0530 ஔவையிடம் நாவற்பழங்களை உலுக்கி, "சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?' என சோதித்த முருகப்பெருமான் வள்ளலாரின் மன உறுதியையும் சோதித்ததாக திருஅருட்பாவில் சான்றுகள் உண்டு. இராமலிங்க அடிகளார் முருகப் பெருமான் மீது பெரும்பற்று கொண்டதையும், அப்பற்றுக்கு சோதனை வந்தபோது தன்னைக் காப்பாற்ற வேண்டி,
 "நான் கொண்ட விரதம் நின் அடியலால் பிறர்தமை நாடாமையாகும் இந்த
 நல்விரத மாங்கனியை இன்மை எனும்ஒரு துட்ட நாய்வந்து கவ்வி அந்தோ
 தான்கொண்டு போவதினி யென்செய்வேன் யென்செய்வேன் தளராமை என்னுமொரு
 வகைக் கைத்தடி கொண்டு அடிக்கவோ வலியிலேன்' என்று இறைஞ்சுவார். முருகப் பெருமானோ, "உன் மன உறுதியை உரை' எனக் கேட்க, கள்ளத்தை அறுத்து உள்ளத்தை உருக வைக்கும் பெருமானை நோக்கி,
 "வள்ளலுனை உள்ளபடி வாழ்த்துகின்றோர் தமை மதித்திடுவதன்றி மற்றை
 வானவரை மதியென்னில் நானவரை ஒருகனவின் மாட்டினும் மறந்தும் மதியேன்
 கள்ளமறும் உள்ளமுறும் நின்பதமலால் வேறு கடவுளர் பதத்தை யவரென்
 கண்ணெதிர் அடுத்து, ஐய, நண் என அளிப்பினும் கடுவென வெறுத்து நிற்பேன்'
 என பதிலுரைத்தார் வள்ளலார். இதனால்தானோ என்னவோ, முருகப்பெருமான் இராமலிங்க அடிகளாருக்கு நேரே வந்து கண்ணாடியில் காட்சி தந்ததாக அவர்தம் வரலாறு பேசுகின்றது.
 -இரா.வெ.அரங்கநாதன்
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/15/w600X390/VALLALAR.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2019/dec/15/வள்ளலாரிடம்-உறுதிச்சான்று-கேட்டவர்-3306337.html
3306334 வார இதழ்கள் தமிழ்மணி  இந்த வாரம் கலாரசிகன் DIN DIN Sunday, December 15, 2019 01:11 AM +0530 எட்டயபுரம் மகாகவி பாரதி விழா கடந்த ஆண்டைப் போலவே சிறப்பாக இந்த ஆண்டும் நடந்ததில் பெருமகிழ்ச்சி. தமிழகமெங்கும் இருந்து தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர் என்பதும், கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் அதிக அளவில் வந்திருந்தார்கள் என்பதும், வருங்காலம் குறித்த நம்பிக்கையைத் தருகிறது.
 மகாகவி பாரதியார் இல்லத்தில் காப்பாளராக இருக்கும் மகாதேவி சொன்ன செய்திகள் ஆச்சரியப்படுத்தின. நெடுஞ்சாலையில் இல்லாமல், ஊருக்குள் உள்ள சிறியதொரு தெருவில் அமைந்திருக்கும் மகாகவி பாரதியாரின் நினைவில்லத்தில் தினந்தோறும் குறைந்தது 200க்கும் அதிகமானவர்கள் குடும்பத்தினருடன் வந்து தரிசிப்பதாகக் கூறினார். வருகிறவர்கள் தங்கள் குழந்தைகளை பாரதியார் சிலைக்கு முன்னால் நிறுத்திப் புகைப்படம் எடுத்துக் கொள்வதும், அவர்களை பாரதியாரின் பாடலைப் பாடச்சொல்லி வணங்கி ஆசிபெறச் செய்வதும் வழக்கம் என்றபோது மனமெல்லாம் மகிழ்ச்சி மாரி பொழிந்தது.
 மகாகவி பாரதியார் இல்லத்தில் இரண்டு மூன்று அறைகள் காலியாகக் காட்சியளிக்கின்றன. அங்கே பாரதி குறித்த ஆய்வுகள் நடத்த வசதியாக நல்லதொரு நூலகத்தை ஏன் அமைக்கக்கூடாது? கனவு மெய்ப்பட வேண்டும்; கைவசமாவது விரைவில் வேண்டும்!
 
 தமிழகத்திற்கு செளராஷ்டிரர் சமுதாயம் அளித்திருக்கும் பங்களிப்பு அளப்பரியது. பாரதியாரின் கவிதையை முதன்முதலில் அச்சு வாகனம் ஏற்றிய பெருமை செளராஷ்டிர சமுதாயத்துக்குத்தான் உண்டு. மு.ரா.கந்தசாமிக் கவிராயர் என்பவர் நடத்திவந்த மதுரையிலிருந்து வெளியான "விவேகபாநு' என்கிற இதழில்தான் பாரதியாரின் "தனிமையிரக்கம்' என்கிற கவிதை முதன்முதலில் வெளிவந்தது.
 ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பாரதியாரின் பாடல்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது. அன்றைய சென்னை ராஜதானியின் சட்டப் பேரவையில் துணிந்து பாரதியாரின் "செந்தமிழ் நாடெனும் போதினிலே' பாடலை ராகத்துடன் பாடித் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தவர் செளராஷ்டிர இனத்தவர்களின் தனிப்பெரும் தலைவராகத் திகழ்ந்த எல்.கே.துளசிராம். காமராஜரின் மதிய உணவுத் திட்டத்துக்கும், எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டத்துக்கும், முன்னோடியாக அமைந்தது மதுரை செளராஷ்டிரப் பள்ளியில் எல்.கே.துளசிராம் நடைமுறைப்படுத்திய மாணவர்களுக்கான உணவுத் திட்டம்தான் என்பது வரலாற்று உண்மை.
 தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட வரலாற்றை தியாகி என்.எம். ஆர். சுப்புராமனின் பங்களிப்பைக் குறிப்பிடாமல் எழுதிவிட முடியாது. செளராஷ்டிர சமுதாயத்தில் பிறந்த ஆளுமைகள் "யார் எவர்' என்கிற புத்தகம் தொகுக்கப்பட வேண்டும். அவர்களது பங்களிப்பு குறித்துத் தமிழகம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கான முயற்சியில் ஒன்றுதான் வி.என். சாமி வெளிக்கொணர்ந்திருக்கும் "சுதந்திரப் போராட்டத்தில் செளராஷ்டிரர்' என்கிற புத்தகம்.
 அகவை 90 கடந்த வி.என்.சாமி "தினமணி' நாளிதழின் மதுரைப் பதிப்பில் தலைமை நிருபராகப் பணியாற்றியவர். இந்த வயதிலும்கூட சற்றும் தளராமல் எழுத்துப் பணியைத் தொடர்பவர். விடுதலை வேள்வியில் பங்குபெற்ற செளராஷ்டிர சமுதாயத்தினர் குறித்து மட்டும்தான் இந்தப் புத்தகத்தில் அவர் பதிவு செய்திருக்கிறார். கடந்த 700 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மண்ணில் குடியேறி, தமிழகத்துடன் ஒன்றிவிட்ட தமிழக செளராஷ்டிர இனத்தவர் குறித்த விரிவான வரலாற்றுப் பதிவையும் விரைவிலேயே வி.என்.சாமி வெளிக்கொணர வேண்டும்.
 
 எட்டயபுரம் பாரதி விழாவுக்குச் செல்வதற்கு முன்னால், நாகர்கோவில் மணிக்கட்டிப் பொட்டலுக்குச் சென்று எழுத்தாளர் பொன்னீலனை சந்திக்க விரும்பினேன். அவரது அகவை 80 விழாவில் கலந்து கொள்ள முடியாததால், நேரில் சென்று வாழ்த்த விழைந்தேன்.
 அண்ணாச்சியின் வீட்டில் ஒரு பெரிய இலக்கிய அன்பர்களின் கூட்டமே இருந்தது. உமா கண்ணன், பெரியவர் தங்கக்கண், கண்ணன் என்கிற கங்கா, எழுத்தாளர் பொன்னீலனின் உதவியாளர் திவ்யா என்று கலகலப்பாக சிலமணி நேரங்கள் பறந்தன. கவிதைகள் குறித்து, இதழியல் குறித்து, நாட்டு நடப்பு குறித்து நாங்கள் பகிர்ந்துகொண்ட செய்திகள் ஏராளம்.
 பொன்னீலன் அண்ணாச்சியின் பிறந்தநாளை முன்னின்று நடத்தியவர் அவரது நிழலாகத் தொடரும் ராம் தங்கம்.
 எழுத்தாளர் பொன்னீலன் குறித்த 14 பேரின் பதிவுகளை சேகரித்துத் தொகுத்திருக்கிறார் அவர். "பொன்னீலன் 80' என்கிற அந்தத் தொகுப்பை அவர் என்னிடம் தந்தார். அந்தத் தொகுப்பின் கடைசியில் "என் நண்பர்கள்', "என் வீடு', "என் படைப்புகளும், எனக்குப் பிடித்த படைப்புகளும்' என்று பொன்னீலனின் பதிவை என்.சுவாமிநாதன் தொகுத்திருக்கிறார்.
 பொன்னீலன் குறித்துத் தெரிந்து கொள்ள இதைவிடச் சிறந்த தரவு வேறு எதுவும் இருக்க முடியாது. இளவல் ராம் தங்கத்துக்கு நன்றி.
 ராம் தங்கத்தால் விழா முன்பே எடுக்கப்பட்டுவிட்டாலும் இன்றுதான் (15.12.2019) பொன்னீலன் அண்ணாச்சி யின் பிறந்தநாள். "தினமணி'யின் சார்பில் அவர் நூறாண்டு காண வாழ்த்துகள்!
 
 ஆண்டுதோறும் எட்டயபுரம் பாரதி விழாவுக்குத் தவறாமல் வருபவர்களில் சிங்கப்பூர் தமிழ் நேசன் முஸ்தபாவும் ஒருவர். எட்டயபுரம் செல்வதற்கு முன்னால் நாகர்கோவிலில் எழுத்தாளர் பொன்னீலனை சந்திக்கப் போகிறோம் என்று கூறியதும், தானும் வருவதாகச் சொன்னார் அவர்.
 நானும், நண்பர் அய்யாறுவும் சென்னையிலிருந்து சென்ற அதே கன்னியாகுமரி விரைவு தொடர் வண்டியில் திருச்சியில் இணைந்து கொண்டார் முஸ்தபா. அதிகாலையில் கன்னியாகுமரியில் போய் இறங்கியதும், சூரியோதயம் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் எழுந்தது. தொடர் வண்டி நிலையத்திலிருந்து முக்கடல் கூடுமிடத்துக்கு நாங்கள் விரைந்தோம். நிருபர்கள் மீனாட்சிசுந்தரமும், ராமகிருஷ்ணனும் உடன் வந்தனர். நீள்கடலைப் பார்த்தபடி நின்றபோது, குகை. மா.புகழேந்தியின் கவிதை ஒன்றின் வரிகளை (முழு கவிதையும் தலைப்பும் நினைவில் இல்லை) எனது மனது அசைபோட்டது.
 கடலைப் பருகிவிட முடியாமல்
 தோற்றுக் கொண்டே இருக்கிறது
 சூரியன்!
 
 கடலின் வயிற்றுக்கு
 சிறு கவளம்
 பூமி
 கடல் வரை வானம்
 கடல் வரை பூமி
 கடல் வரை யாவும்!
 அடுத்த வாரம் சந்திப்போம்...

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/15/w600X390/tm1.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2019/dec/15/இந்த-வாரம்-கலாரசிகன்-3306334.html
3306333 வார இதழ்கள் தமிழ்மணி பழமொழி நானூறு  முன்றுறையரையனார் Sunday, December 15, 2019 01:07 AM +0530  கீழ்மக்களிடம் செயலை ஒப்படைக்க வேண்டா!
 காட்டிக் கருமம் கயவர்மேல் வைத்தவர்
 ஆக்குவர் ஆற்றஎமக் கென்றே அமர்ந்திருத்தல்
 மாப்புரை நோக்கின் மயிலன்னாய்! பூசையைக்
 காப்பிடுதல் புன்மீன் தலை. (பாடல்-128)
 மாவடுவை ஒத்த கண்ணையும் மயிலையொத்த சாயலையுமுடையாய்! செயலினைக் காட்டிக் கொடுத்து கீழ்மக்கள் மேல் காரியத்தைச் செய்து முடிக்கும் பொறுப்பினை வைத்தவர் எமக்கு மிகவும் செவ்வையாகக் காரியத்தைச் செய்து தருவர் என்று உறுதிசெய்து வாளா இருத்தல், புல்லிய மீன்கள் (உலர்கின்ற) இடத்தில் பூனையைக் காவலாக வைப்பதனோ டொக்கும். (க-து.) தம்முடைய காரியத்தைக் கீழ்மக்களிடம் ஒப்பித்திருப்பவர் ஒரு நன்மையும் அடையார். "பூசையைக் காப்பிடுதல் புன்மீன் தலை' என்பது பழமொழி.
 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/28/w600X390/LOTUS.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2019/dec/15/பழமொழி-நானூறு-3306333.html
3300672 வார இதழ்கள் தமிழ்மணி கார்த்திகையின் சிறப்பெழுதிய கவிக்கனல் பாரதி -கிருங்கை சேதுபதி DIN Sunday, December 8, 2019 05:48 AM +0530  

வறிதே கழியும் பொழுதின்மீது, வரலாறாகும் செயல் எழுதிக் களித்தவர் மகாகவி பாரதி. பதர்ச் செய்திகள் அனைத்தையும் பயன்நிறை அனுபவமாக்கி,
"வருடம் பலவினும்

ஓர் நாட்போல மற்றோர் நாள் தோன்றாது,
பலவித வண்ணம் வீட்டிடைப் பரவ
நடத்திடும் சக்தி நிலையமாக'

கவிதைத் தலைவியைப் போற்றியவர். செயலற்ற நாளை, முடம்படு தினம் என்று தூற்றியவர். ஒவ்வொரு நாளையும் இன்று புதிதாய்ப் பிறந்த நாளாகக் கருதிச் செயல்படும் அவர், கார்த்திகை மாதத்துக் கார்த்திகைத் திருநாள் குறித்துக் கவித்துவம் மிகுந்த சொற்சித்திரம் ஒன்றைச் சரியாக ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் தந்திருக்கிறார்.

கொடுங்கோன்மைக்கு எதிரான செய்திகளை எந்த வகையில் எல்லாம் தந்துவிட முடியுமோ, அந்த வகையில் தந்து இந்தியர்களின் ஊக்கத்திற்கு ஆக்கம் தேட, காலத்தைக் கருவியாகக் கைக்கொண்டவர் பாரதி. அதற்குக் கார்த்திகை மாதக் கார்த்திகைத் திருநாள் ஒரு கருவியாகிவிடுகிறது. கண்ணனை முன்னிறுத்தி, கடமைபுரியும் தேசபக்தர்களுக்கு ஊக்கம் அளிக்கிறது இச்செய்தி.

""கார்த்திகையில் கார்த்திகை நாள். கார்மேனிக் கமலக்கண்ணன் கொடியவரைக் கடிந்தடக்கிய நாள். உலகினில் கொடுங்கோலர்கள் கொட்டத்தைக் கருணாநிதியான கடவுள் அடக்கிய நாள். 

மாதவ முனிவரையும் மூவாவுலகத்தவரையும் மிகுவலியால் மாவலி யரக்கன் இழைத்த தீச் செயல்களைத் தீர்த்துக் காத்து திருவிக்ரமனான திருமால் ஈரடியால் மூவுலகளந்து மிச்சத்திற்கவனை மஹாதலத்தில் மறைய மலரடி கொண்டழுத்திய மாண்புறு நாள். பல்லாயிரம் கைகளுடன் பாரினில் பல்லிடர்ப்படுத்தி வந்த கல்லனைய நெஞ்சத்துக் கொடுங்கோலன் மறமன்னன் கார்த்தவீரியார்ச்சுனன் கரசிரங்களைக் கோடாலி கொண்டு பரசுராமன் கொய்ததாற் குவலயம் மகிழ்ந்திடும் குணமுள நாள்.

வானுலகத்தவர்க்கு வாதைகள் பல வலிய விழைத்து வந்த வாணன் ஆயிரந்தோளும் பொழிகுருதி பாயத் திருவாழி கொண்டு தூய திருமால் துணித்த நாள். பாரதர்கள் வெந்துயர்களையும் பரந்தாமன் விரட்டிய நாள். ஆரியர்களின் ஆண்மை அவனில் பொலிந்திடு நாள். வானவரும் தானவரும் வருத்தம் நீங்கி வாழ்க்கை நிலையில் வனப்பை எய்திய நாள். மறமிடர்ப்படுக்கப்பட்ட மஹிமைப் பெருநாள். அறம் தழைத்தோங்க ஆரம்பித்த ஆனந்தத் திருநாள். தீபச் சோதியால் தேவாலயத்தை நிரப்பிடு நிகரில் திருநாள்.வாண வேடிக்கையும், மாவலியாட்டும் மலிந்திடு நாள்.

பாரத மக்கள் ஸ்ரீபகவானருள் பெற்ற நாள். கிருபாநிதிக் கடவுள் கருணை பொலிந்திடு நாள். பார் உவந்த உத்தமத் திருநாள். கார்த்திகையில் கார்த்திகை நாளே.''

ஒளிமயமாக மாலைப்பொழுதை மாற்றும் அருள்மயமான இந்நன்னாளை நினைந்து மகாகவி பாரதி கவிமயமாய்த் தந்ததை, இந்தியா இதழில் (4.12.1909 அன்று) வந்ததாய்த் தந்தவர் சீனி.விசுவநாதன். இந்தக் கட்டுரையை மீளவும் எடுத்துப் படிக்கிறபோது, அவர் எதைத்தான் விட்டுவைத்தார் என்றே எண்ணத் தோன்றுகிறது. சிந்தனையில் பாரதி ஒளி பரவத் தொடங்குகிறது.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/8/w600X390/tm2a.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2019/dec/08/கார்த்திகையின்-சிறப்பெழுதிய-கவிக்கனல்-பாரதி-3300672.html
3300657 வார இதழ்கள் தமிழ்மணி பாரதியின் நகைச்சுவை! பெ. தூரன் Sunday, December 8, 2019 05:45 AM +0530 பாரதியாருடைய முறுக்கு மீசையும், வெறித்த பார்வையையும், விரைப்பான உருவத் தோற்றத்தையும் நேரிலோ அல்லது உருவப் படத்திலோ பார்த்தவர்கள் அவரிடம் நகைச்சுவையை எதிர்பார்க்க மாட்டார்கள். இந்த ஆசாமிக்கும் நகைச்சுவைக்கும் வெகுதூரம் என்று சொல்லத்தான் அவர்களுக்குத் தோன்றும். அனற் பொறியைக் கக்கும் அவருடைய தேசீயப் பாடல்களைப் படிக்கின்றபோது இந்த எண்ணம் முற்றிலும் வலுப்பட்டு விடுகின்றது. 

பயமெனும் பேய்தனை அடித்தோம் பொய்மைப்
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்
என்ற மாதிரி இடிப் பாடல்களையும்,
வலிமையற்ற தோளினாய் போ போ போ
மார்பிலே ஒடுங்கினாய் போ போ போ

என்பது போன்ற கர்ஜிக்கும் வரிகளையும் எழுதிய கைக்கும் மென்மை வாய்ந்த நகைச்சுவைக்கும் என்ன தொடர்பு இருக்கப் போகிறது என்று நினைப்பது இயற்கைதானே? ஆனால், அவரது நாட்டுப் பாடல்களை விட்டு, கண்ணன் பாட்டு, குயிற் பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய நூல்களுக்கு வரும் போதே அவருடைய நகைச்சுவை ஆங்காங்கு மின்னுவதை நாம் பார்க்கலாம்.

அங்காந்திருக்கும் வாய் தனிலே - கண்ணன்
ஆறேழு கட்டெறும்பைப் போட்டு விடுவான்
என்ற கண்ணன் பாட்டிலும்,
மேனி அழகினிலும் விண்டுரைக்கும் வார்த்தையிலும்
கூனி இருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே
வானரர் தம் சாதிக்கு மாந்தர் நிகராவாரோ 

என்று குயிற் பாட்டு வரிகளிலும் நகைக்சுவை கொப்பளிக்கின்றது. பாரதியாருடைய நகைச்சுவையை உணர்ந்து மகிழ அவருடைய வசன நூல்களுக்குத்தான் முக்கியமாகச் செல்ல வேண்டும்; அங்குதான் அது சிறப்பாக வெளிப்படுகின்றது.

நகைச்சுவையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று என்றும் சிரிப்பை உண்டாக்கி இன்பம் பயப்பது; மற்றொன்று முதல் தடவை படிக்கும்போதோ அல்லது கேட்கும்போதோ மட்டும் இன்பங் கொடுப்பது, முன்னது உயர்ந்தது; பின்னது தகுதியில் குறைந்தது. முன்னது இடையறாது பெருகும் தேன் ஒழுக்கு; பின்னது துளிக்கும் கொம்புத் தேனில் ஒரு சொட்டு. பாரதியாரின் கட்டுரைகளில் இடையறாத இன்ப ஊற்றான உயர்ந்த நகைச்சுவையை நாம் ஆங்காங்கு காண்கின்றோம்.

"பெண்' என்ற கட்டுரையிலே பிரமராய வாத்தியாரைப் பற்றி அவர் சொல்லுவதைப் பாருங்கள்:

""இவர் இந்தத் தெருவில் வார்த்தை சொன்னால் மூன்றாவது தெருவுக்குக் கேட்கும். பகலில் பள்ளிக்கூட வேலை முடிந்தவுடனே வீட்டுக்கு வந்து சாயங்காலம் ஆறு மணி முதல் எட்டு வரை தன் வீட்டுத் திண்ணையில் சிநேகிதர்களுடன் பேசிக்கொண்டு, அதாவது கர்ஜனை செய்து கொண்டிருப்பார். பிறகு சாப்பிடப் போவார். சாப்பிட்டுக் கையலம்பி, கை ஈரம் உலர்வதற்கு முன்பு, மறுபடி திண்ணைக்கு வந்து சப்தம் போடத் தொடங்கி விடுவார். இவருடைய வீட்டுத் திண்ணைக்கு அக்கம் பக்கத்தார் "இடிப் பள்ளிக்கூடம்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த இடிப் பள்ளிக்கூடத்துக்கு வந்து மாலைதோறும் நாலைந்து பேருக்குக் குறையாமல் இவருடைய பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். அந்த நாலைந்து பேருக்கும் இன்னும் காது செவிடாகாமலிருக்கும் விஷயம் அநேகருக்கு ஆச்சரியத்தை உண்டாக்குகிறது.''

அந்த வாத்தியாருடைய பேச்சிலே சில வார்த்தைகளையும் கேளுங்கள்:

""துருக்கி தேசம் தெரியுமா? அங்கே நேற்று வரை ஸ்திரீகளை மூடி வைத்திருப்பது வழக்கம். கஸ்தூரி மாத்திரைகளை டப்பியில் போட்டு வைத்திருக்கிறார்களோ இல்லையோ? அந்த மாதிரி; திறந்தால் வாசனை போய்விடும்.''

எத்தனை தடவை படித்தாலும் சிரிப்புண்டாகிறது. அதே சமயத்தில் நம்மை அறியாமல் அது நமக்குள்ளே மாறுதலைச் செய்கிறது. நல்ல நகைச்சுவை உள்ளத்தில் சுருக்கென்று தைக்காது, நோவில்லாமலே குணம் கொடுக்க வேண்டும். மேல் நாட்டில் பல நகைச்சுவை எழுத்தாளர்களின் வார்த்தைகளே சமூகத்தில் பல சீர்திருத்தங்களை யாருக்கும் மனக் கசப்பில்லாமல் செய்திருக்கின்றன. அம்மாதிரியே பாரதியாரும் நகைச்சுவையைக் கையாண்டிருக்கிறார். ஹார்மோனியத்தைப் பற்றி அவர் எழுதியிருப்பதைப் பாருங்கள்:

""அந்தப் பெட்டி (ஹார்மோனியம்) போடுகிற பெருங்கூச்சல்தான் என் காதுக்குப் பெரிய கஷ்டமாகத் தோன்றுகிறது. மேலும், சங்கீதத்திலே கொஞ்சமேனும் பழக்கமில்லாதவர்களுக்கெல்லாம் இந்தக் கருவியைக் கண்டவுடனே ஷோக் பிறந்து விடுகிறது.

சத்தமுண்டாக்குவதற்கு நல்ல துருத்தி கைக்கு ஒத்ததாகப் பின்னே வைத்திருக்கிறது. ஒரு கட்டையை உள்ளே அழுத்தி முன் பக்கத்துச் சாவிகளை இழுத்துவிட்டு, துருத்தியை அசைத்தால், "ஹோ' என்ற சத்தமுண்டாகிறது. உடனே பாமரனுக்கு மிகுந்த சந்தோஷ முண்டாகிறது. நாம் அல்லவா இந்த இசையை உண்டாக்கினோம்?' என்று நினைத்துக் கொள்கிறான். உடனே வெள்ளைக் கட்டைகளையும் கறுப்புக் கட்டைகளையும் இரண்டு தட்டுத் தட்டுகிறான். பேஷான தொனிகள்! மேலான தொனிகள்! பாமரன் பூரித்துப் போகிறான். ஒரு வீட்டில் ஹார்மோனியம் வாசித்தால் பக்கத்திலே ஐம்பது வீட்டுக்குக் கேட்கிறது. அறியாதவன் தனது அறியாமையை வீட்டில் இருந்தபடியே இரண்டு மூன்று வீதிகளுக்குப் பிரசுரம் பண்ண வேண்டுமானால், அதற்கு இந்தக் கருவியைப் போலே உதவி வேறொன்றுமில்லை.''

இதைப் படித்த பிறகும் அந்த வாத்தியத்தைத் தொட ஆசை உண்டாகுமா? 

சில சமயங்களில் பாரதியாருடைய நகைச்சுவை இந்த மென்மையை விட்டுச் சற்று உறுத்தவும் தொடங்குகிறது. கொஞ்சம் இடித்துக் காண்பிக்க வேண்டும் என்பது அவர் கருத்து:

""கும்பகர்ணன் தூங்கினானாம். இலங்கையில் சண்டை நடக்கிறது. மூன்று லோகமும் நடுங்குகிறது. அப்படிப்பட்ட சண்டையின் அதிர்ச்சியிலே கூட, கும்பகர்ணனுடைய தூக்கம் கலையவில்லை. ஆயிரக்கணக்கான ஆடு, மாடு, குதிரைகளின் காலில் கூர்மையான கத்திகளைக் கட்டி இவன் மேலே நடக்கச் சொன்னார்கள்; தூக்கம் கலையவில்லை. ஏழெட்டு மேகங்களை அவன் காதுக்குள்ளே போய் இடிக்கச் சொல்லி ராவணன் கட்டளை இட்டானாம். மேகங்கள் போய் இடித்தனவாம், கும்பகர்ணன் குறட்டை நிற்கவே இல்லை.
""மேற்படி கும்பகர்ணனை போல சில தேசங்களுண்டு. அண்டங்களத்தனையும் இடிந்து விழுந்தாலும் காது கேட்காத செவிடர் வாழும் தேசங்கள் சில உண்டு. ஆனால் ஹிந்து தேசம் அப்படி இல்லை!....  தமிழ்நாடு மேற்படி மஹா பாதக ஜாப்தாவைச் சேர்ந்ததன்று, அன்று!''

தமிழனுக்கு இந்தச் சூடு தேவையோ இல்லையோ? தேவையென்றால் இதுவே போதும், போதும். இப்படிச் சுருக்கென்று படும் நகைச்சுவையும் அவர் வாக்கில் பிறந்திருக்கின்றது. 

நடிப்புத் தேசபக்தர்களைப் பற்றியும் பாரதியார் இவ்வாறான காரமான நகைச்சுவையைக் கொட்டி எழுதியிருக்கிறார்.

""நான் சோம்பருக்குத் தொண்டன், எனது நண்பர்களெல்லாம் புளியஞ் சோற்றுக்குத் தொண்டர்கள். சிலர் மட்டிலும் பணத்தொண்டர்; "காலணா'வின் அடியார்க்கும் அடியார். ஆனால், எங்களிலே ஒவ்வொருவரும் பேசுவதைக் கேட்டால் கைகால் நடுங்கும்படியாக இருக்கும். பணத் தொண்டரடிப் பொடியாழ்வார். எங்கள் எல்லோரைக் காட்டிலும் வாய்ப் பேச்சில் வீரர். ஒருவன் வானத்தை வில்லாக வளைக்கலாமென்பான். ஒருவன் மணலைக் கயிறாகத் திரிக்கலாமென்பான். ஒருவன், "நாம் இந்த ரேட்டில் வேலை செய்து கொண்டு வந்தால் ஆங்கிலேயரின் வர்த்தகப் பெருமை ஆறு மாதத்தில் காற்றாய்ப் போய்விடும்' என்பான். மற்றொருவன், "சியாம்ஜி கிருஷ்ணவர்மா ஸ்வராஜ்யம் கிடைக்கப் பத்து வருஷமாகுமென்று கணக்குப் போட்டிருக்கிறார். ஆறு வருஷத்தில் கிடைத்து விடுமென்று எனக்குத் தோன்றுகிறது' என்பான். தவளையுருவங் கொண்ட மூன்றாமொருவன். "ஆறு மாதமென்று சொல்லடா' என்று திருத்திக் கொடுப்பான்.''
பாரதியாருக்கும் அவர் மனைவிக்கும் நடந்ததாக "ஞானரதம்' என்ற நூலில் வரும் பேச்சு இது:
""தலைநோவு பொறுக்க முடியவில்லை. கொஞ்சம் மிளகு அரைத்துக் கொண்டு வா' என்றேன்.
"ஆமாம்; இரண்டு நாளைக் கொருமுறை இதொரு பொய்த் தலைவலி வந்துவிடும். என்னை வேலை ஏவுகிறதற்காக, பால்காரி வந்து மத்தியானம் பணம் கேட்டுவிட்டுப் போனாள். ராயர் வீட்டு அம்மா குடிக்கூலிக்கு ஞாபகப்படுத்தச் சொன்னாள்... தெருவிலே போகிற நாய்களுக்கெல்லாம் பணத்தை வாரி இறைக்கிறது. வீட்டுச் செலவைப் பற்றிக் கேட்டால் முகத்தைச் சுளிக்கிறது. இப்படிச் செய்து கொண்டே வந்தால், அப்புறம் என்ன கிடைக்கும்? மண்தான் கிடைக்கும்'' என்று ஆசீர்வாதம் பண்ணிப் பிரசங்கத்தை முடித்தாள்.
""தலை நோவு தீர்ந்து விட்டது. நீ 
தயவு செய்து கீழே போகலாம்' என்று வணக்கத்துடன் தெரியப்படுத்திக் கொண்டேன்.''
அவருடைய வணக்கத்திலே நகைச்சுவை பொங்கி எழுகின்றது.
"ஹாஸ்ய விலாசம்' என்ற தலைப்பிட்டே பாரதியார் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதிகாரிகள் செய்யும் காரியங்கள் பல சமயங்களிலே மிக வேடிக்கையாக இருக்கும் என்று அதிலே அவர் ஒரு சம்பவத்தை எடுத்துக்காட்டிச் சிரிக்கிறார். அவரே எழுதுகிறார்: ""கணக்குப் பதிவாளரின் அதிகாரத்தில் ஏற்படும் விசித்திரங்கள் கணக்கில்லாதன.  யுத்தத்தில் ஒரு மனிதன் செத்து விட்டதாகக் கணக்குப் பண்ணி விட்டார்கள். பிறகு அவனே அந்தக் கணக்குக் கூடத்துக்கு வந்து, தான் உயிரோடிருப்பதாகவும், தன்னை இறந்ததாகக் கணக்கிட்டது தவறென்றும் தெரிவித்தான். அதற்கு அதிகாரி, "போ, போ, இங்கு நில்லாதே! நீ செத்துப் போனதாக நாங்கள் பதிவு செய்தாய் விட்டது. இனி நீ வந்து அதனை மறுப்பதில் பயனில்லை. ஓடிப்போ ' என்று துரத்தினார். இது உண்மையாக நடந்த செய்தி. மஹாயுத்த காலத்தில் நடந்தது. அதிகாரிகள் இத்தகைய காரியங்கள் செய்வதில் சமர்த்தர். 
இம்மாதிரி பாரதியாருடைய உரைநடை நூல்களிலே நகைச்சுவை பல இடங்களிலே வெளிப்படுகின்றன. அவற்றைச் சந்தர்ப்பத்தோடு சேர்த்துப் படிக்கும் போது மிகவும் இன்பம் பெறுகின்றோம்.
வாழ்க்கை இன்பத்தைப் பெருக்குவதில் நகைச்சுவைக்குச் சிறந்ததோர் இடமுண்டு. நாம் அதைப் போற்ற வேண்டும். அதை உயர்ந்த இலக்கிய 
வழியிலே நமக்குக் கொடுத்தவர்களில் பாரதியாரும் ஒருவராவார். 

("தூரன் கட்டுரைகள்' என்ற நூலிலிருந்து....)

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2012/9/20/15/w600X390/15barathi.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2019/dec/08/பாரதியின்-நகைச்சுவை-3300657.html
3300656 வார இதழ்கள் தமிழ்மணி பழமொழி நானூறு: முன்றுறையரையனார் Sunday, December 8, 2019 05:41 AM +0530  

ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம்
போகும் பொறியார் புரிவும் பயனின்றே
ஏகல் மலைநாட! என்செய்தாங் கென்பெறினும்
ஆகாதார்க்கு ஆகுவது இல். (பாடல்-127)


மலை நாடனே! செல்வம் ஆக்கும் ஆகூழ் வந்தெய்துங் காலம் நெருங்கியவர்களுக்கு செய்வதொரு முயற்சியும் வேண்டுவதில்லை. செல்வம் போக்கும் போகூழ் வந்தெய்துங்காலம் நெருங்கியவர்களுக்கு, அவர்கள் நிலைநிறுத்தச் செய்யும் முயற்சியும் பயனில்லை. எத்தகைய முயற்சியைச் செய்து, எத்தகைய துணையைப் பெற்றாராயினும் செல்வம் ஆக்கும் ஆகூழ் நெருங்காதவர்க்கு ஆவதொன்றில்லை. "ஆகாதார்க்கு ஆகுவது இல்' என்பது பழமொழி.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/17/w600X390/tm1.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2019/dec/08/பழமொழி-நானூறு-முன்றுறையரையனார்-3300656.html
3300391 வார இதழ்கள் தமிழ்மணி இந்த வாரம் கலாரசிகன் Sunday, December 8, 2019 01:57 AM +0530 மகாகவி பாரதியாா் பிறந்த நாள் விழாவுக்கு ‘எட்டயபுரம்’ தயாராகிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இலக்கிய அமைப்புகளும் இலக்கிய ஆா்வலா்களும் தொடா்பு கொண்டு ஊா்வலத்தில் கலந்துகொள்ள காலை எட்டு மணிக்கு மகாகவி பாரதியாரின் இல்லத்துக்கு வந்துவிடுவதாகத் தெரிவித்த வண்ணம் இருக்கிறாா்கள்.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மணிமண்டபத்தில் ‘தினமணி’யின் மகாகவி பாரதியாா் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேதகு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் இந்த ஆண்டுக்கான விருதையும், ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியையும் மூத்த பாரதி ஆய்வாளரான இளசை மணியனுக்கு வழங்க இருக்கிறாா். இளசை மணியன் குறித்து எழுத்தாளா் பொன்னீலன் உரையாற்றுகிறாா்.

விருது வழங்கும் விழாவுக்கு முன்னால் தொழிலதிபா் நல்லி குப்புசாமி செட்டியாா் தலைமையில் நடக்கும் ‘பாரதி தரிசனம் - ஒரு பன்முகப் பாா்வை’ என்கிற கருத்தரங்கில் ‘ஞானாலயா’ கிருஷ்ணமூா்த்தி, எழுத்தாளா் எஸ்.இராமகிருஷ்ணன், திருக்கோவிலூா் பண்பாட்டுக் கழகத் தலைவா் டி.எஸ். தியாகராஜன், பட்டிமன்றப் பேச்சாளா் அனுக்கிரஹா ஆதிபகவன் ஆகியோா் கலந்து கொள்கின்றனா்.

பாரதி அன்பா்களையும், தமிழ் ஆா்வலா்களையும், ‘தினமணி’ வாசகா்களையும் எதிா்நோக்கி எட்டயபுரத்தில் நான் காத்திருப்பேன்.

-------------

எட்டயபுரம் மண்ணின் மைந்தரான இளசை மணியன் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக சிரமேற்கொண்டு செய்துவரும் மகத்தான பாரதி தொண்டுக்கு ஈடு இணையே கிடையாது. பாரதியாா் மணிமண்டபத்துக்கு அடிக்கல் நாட்டியபோதும், மணிமண்டபம் திறக்கப்பட்ட போதும், எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபோதும் பங்குகொண்ட அதிா்ஷ்டசாலிகளில் அவரும் ஒருவா். மகாகவி பாரதியாா் குறித்து 25க்கும் மேற்பட்ட ஆய்வுகள் நடத்தியிருக்கும் இளசை மணியனின் மிகப்பெரிய பங்களிப்பு அவா் வெளிக்கொணா்ந்திருக்கும் ‘பாரதி தரிசனம்’ என்கிற கட்டுரைகளின் தொகுப்பு.

கொல்கத்தா தேசிய நூலகத்துக்குச் சென்று பாரதியாரின் ‘சுதேசமித்திரன்’ கட்டுரைகள் அனைத்தையும் தேடிப் பிடித்துத் தொகுத்துத் தந்த பெருமை அவருடையது. தொடா்ந்து எட்டயபுரத்தில் ஆண்டுதோறும் பாரதி விழா நடத்தி, அறிஞா்களையும், ஆய்வாளா்களையும் அழைத்து வந்து கருத்தரங்கங்கள் நடத்தி வருபவா் அவா்.

இந்த ஆண்டுக்கான ‘தினமணி’யின் மகாகவி பாரதியாா் விருது அவருக்கு வழங்கப்படும் தகவலை நேரில் தெரிவிப்பதற்காக நான் வெள்ளிக்கிழமை எட்டயபுரம் சென்றிருந்தேன். அவா் பாரதியாா் இல்லத்தில் இருப்பதாகச் சொன்னாா்கள். அவருக்கு பாரதியாா் பெயரிலான விருதை வழங்கும் செய்திதியை பாரதியாா் பிறந்த வீட்டில் தெரிவித்தபோது, எனக்கு மெய்சிலிா்த்தது. அது பாரதிப் பித்தனின் உத்தரவு என்று சிந்தை மகிழ்ந்தேன்.

-----------

பாரதி விழாவுக்கான ஏற்பாடுகள் செய்வதற்கு எட்டயபுரம் புறப்பட்டபோது, நான் கையோடு எடுத்துச்சென்ற புத்தகம், விமா்சனத்துக்கு வந்திருந்த நா.பிரேம சாயி எழுதிய ‘பாரதி வழிப்பயணம்’. திருவையாறு நகரில் ‘பாரதி இயக்கம்’ என்றோா் அமைப்பு நடைபெறுகிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர, அந்த இயக்கம் எண்ணிலடங்காத பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது என்பதை அந்தப் புத்தகத்தைப் படித்தபோதுதான் தெரிந்து கொண்டேன்.

1978-ஆம் ஆண்டில் தொடங்கி, கடந்த 40 ஆண்டுகளாக ‘பாரதி இயக்கம்’ தொடா்ந்து செய்துவரும் கலை, இலக்கியப் பணிகள் என்னை வியப்பில் ஆழ்த்துகின்றன. ஆண்டுதோறும் எட்டயபுரத்தில் பாரதியின் பிறந்த நாளன்று கூடுகின்ற அமைப்புகளில் ‘பாரதி இயக்கமும்’ ஒன்று. அந்த இயக்கம் நடத்திய ‘அறிவோம் பாரதியை’ என்கிற கருத்துப் பிரசாரப் பயணம் குறித்துப் படித்தபோது, ‘அடடா... அதில் கலந்து கொள்ளாமல் போனோமே’ என்கிற விசனம் என்னில் எழுந்தது.

பாரதி இயக்கத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிவரும் வழக்குரைஞா் நா.பிரேமசாயி தொகுத்திருக்கும் ‘பாரதி வழிப்பயணம்’ புத்தகத்தில் ‘பாரதி இயக்கம் சாதித்தது என்ன?’ என்பதற்கு விளக்கமளிக்கிறாா்.

‘‘பாரதி இயக்கத்தில் இருப்பதே இளைஞா்களுக்கு ஒரு தகுதியாக அமைய வேண்டும். அவா்கள் திருமணத்திற்குப் பெண் கொடுப்பவா்கள்கூட அதனை ஒரு தகுதியாகக் கருதும் நிலை வரவேண்டும். சமூக அக்கறை மிகுந்த, ஒழுக்கம் நிறைந்த ஓா் இளைஞா் சமுதாயத்தை உருவாக்குவது’’ என்பது பாரதி இயக்கத்தின் இலக்கு என்றும், உலகம் முழுவதும் உள்ள பாரதி நேசா்கள் அந்த இயக்கத்தை பாரதி கருவூலமாகப் பாா்க்கும் அளவுக்கு அது பாரதிக்காகப் பணியாற்ற வேண்டும் என்றும் விளக்குகிறாா். ‘ஊருக்கு உழைத்திடல் யோகம்’ என்பாா் பாரதி. அதை செயல்படுத்தி வருகிறது பாரதி இயக்கம். அந்த இயக்கத்தின் வரலாற்றைப் பதிவு செய்கிறது நா.பிரேமசாயி எழுதியிருக்கும் பாரதி வழிப்பயணம்.

---------

புத்தக விமா்சனத்திற்கு வந்திருந்த புத்தகங்களைப் பாா்த்துக் கொண்டிருந்தேன். அதில், கவிஞா் எதிரொலி மணியனின் ‘மண்ணும் மழையும்’ கவிதைத் தொகுப்பை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். அதிலிருந்த ‘கன்றுக்குட்டியின் கதறல்’ கவிதை, இன்றைய பட்டணத்து இளைய தலைமுறைக்குப் புரியுமா? தெரியவில்லை!

கிராமத்தில் வயல் வரப்புகளுடனும், ஏரி குளங்களுடனும், தோட்டம் தொறவுடனும், மாடு கன்றுகளுடன் வளா்ந்த எனது இதயத்தின் மூலையில் வலித்தது. யாரோ சம்மட்டியால் மண்டையில் அடித்தாற்போல இருந்தது. விழியில் நீா் கோத்தது. அந்தக் கவிதை கன்றுக்குட்டியின் கதறலல்ல, நிஜத்தின் ஓலம்...

ஆண் சந்ததியையே அழித்துவிட்டு

ஆண்டுதோறும் கா்ப்பமாகும்

அதிசயம் நடப்பது இங்கு மட்டுமே

ஆம்...

ஊசியில் உருப்பெறும் உயிா்

நாங்கள் மட்டுமே...!

நாங்கள் மட்டுமே...!

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2012/10/12/15/w600X390/barathi.JPG https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2019/dec/08/இந்த-வாரம்-கலாரசிகன்-3300391.html
3294702 வார இதழ்கள் தமிழ்மணி தமிழர் நீதி -முனைவர் அரங்க.பாரி DIN Sunday, December 1, 2019 04:48 AM +0530 அரசனுடைய செங்கோல் வளையாமல் இருந்ததனால் காவிரி சோணாட்டில் நடந்தது என்பதை,

மருங்குவண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
கருங்கயற்கண்  விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி
கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தவெல்லாம் நின் கணவன்
திருந்து செங்கோல் வளையாமை என்றறிந்தேன் வாழி காவேரி

என்கிறாள் மாதவி (சிலப்.கானல்வரி). நீதி குனியாது இருக்கும் நாட்டிலேயே இயற்கை ஒழுங்கு சிதையாது. நீதி செலுத்திய அரசன் சான்றோர் அவையத்தில் தக்கோரை வைத்து வழக்குகளை ஆராய்ந்து தீர்ப்பு நல்கினன். நெடுநுகத்துப் பலகாணி போல வேந்தனும் சான்றோரும் நடுவுநிலைமை பிறழாமல் நீதி வழங்கினர்.

நீதிகாத்த நெடும்புகழினர்

சேர, சோழ, பாண்டிய நாடு மூன்றும் நீதி வழங்குவதில் தலை நிமிர்ந்து நின்றன. சோழ வேந்தர்களின் முன்னோனான சிபிச்சோழன் புறா ஒன்றின் உயிர்காக்கத் தன் தசை அரிந்து கொடுத்து, அது ஈடாகாது கண்டு தானே துலையில் (துலாக்கோலில்) ஏறி அமர்ந்தான். இதில் மிகைத்தன்மை இருப்பினும் சோழர் அறம் வழங்குவதில் தன்னலமற்றுத் திகழ்ந்த கருத்துப் புலனாகும்.
சேர அரசர்கள் மான மாண்பு மிக்கவர்கள். தமக்கொரு நீதி, பிறர்க்கொரு நீதி என வாழாதவர். பெருஞ்சேரலாதன் கரிகாலனோடு பொருதபோது கரிகாலன் வேல் சேரனின் மார்பை ஊடுருவிப்  புறம் போயிற்று. அவன் முதுகு காட்டவில்லை. ஆயினும் என்ன? எப்படியோ முதுகு புண்பட்டுவிட்டது. போர்க்கள நீதிக்கு இது புறம்பாகும். எனவே, அவன் வாட்படை பரப்பிப் போர்க்களத்திலேயே உயிர் நீத்தான்.
கணைக்கால் இரும்பொறை என்னும் சேர அரசன் மான மாண்பு கருதிச் சிறையில் உயிர்விட்டான். இவையெல்லாம் அரச நீதியுள் அடங்கும். புறமுதுகிட்டாரை, புண்பட்டாரை, உறுப்பறை உற்றாரை, அடைக்கலமானவரைக் கொல்லக்கூடாது என்பது தமிழர் போர்க்களத்தில் கடைப்பிடித்த நீதியாகும்.
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி போர்க்கு வருங்கால் பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர், நோயுற்றோர், புதல்வரைப் பெறாதோர் ஆகியோரை பாதுகாப்பான இடத்திற்குச் செல்க என அறிவித்தான். 
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் "யான் என் பகைவர் எழுவரையும் வெல்லேனாயின் திறனற்ற ஒருவனை என் அவையில் நீதி வழங்குவோனாகக் கொண்டு மெலிகோல் செய்தவன் ஆகுக' என்று சூளுரைக்கின்றான். இத்தகு தமிழ்வேந்தர் தலைமையில் செங்கோல் நிமிர்ந்து  நின்றது.

அனைத்திலும் நீதி 

இல்லறம், துறவறம், போரறம் என அறத்தைக் கண்ட தமிழர் சொல்லிலும் அறம் பின்பற்றினர். வழுக்கியும் வாயால் தீய சொலல் என்றார் திருவள்ளுவர். இல்லறத்தில் தலைவனும் தலைவியும் ஊழால் ஒன்றுபட்டனர் என்றும் அவர் என்றும் பிரிவிலர் என்றும், எல்லாப் பிறப்பிலும் அவர்தாமே கணவன் மனைவியராய்த் தோன்றுவர் என்றும் குறுந்தொகை கூறக்காணலாம். துறவிலும் அறத்தைப் பேணினர் தமிழர். அவர்தம் துறவு அருளாட்சி உடையது. சிந்தனை, சொல், செயல் மூன்றும் வேறுபடாத ஒருமைப்பாடுடையது. 

கழுவாய் சொல்லாத நீதி 

வைதிக நெறியினர் எத்தீவினைக்கும் கழுவாய் செய்தால் அது நீங்கவிடும் என்னும் கருத்தினர். கங்கையிலே மூழ்கி எழுந்தால் கரிசெல்லாம் நீங்கும், புண்ணியத் தலங்களுக்குச் சென்று வழிபடப் பொல்லாத துயர் நீங்கும், பார்ப்பார்க்கு தானம் கொடுப்பின் பெரும் பேறு வாய்க்கும் என்கிற பிராயச்சித்தம் (கழுவாய்) எதனையும் தமிழர் நீதி ஏற்கவில்லை. நீதி வளைந்தால் அதனை நிமிர்த்துவது உயிர்தான் என்ற கோட்பாட்டைப் பாண்டியன் நெடுஞ்செழியன் வாழ்க்கை காட்டுகிறது.

அனைவர்க்கும் ஒத்த நீதி

பொருள் உரிமை பற்றிய வழக்காயினும் குற்ற வழக்காயினும் வழக்குகள் எத்தகையன என்று நோக்கியே அக்காலத் தீர்ப்பு அமைந்தது. வைதிக சமயம் வருண அடிப்படையில் நீதி வழங்கியதைத் தமிழர் ஏற்கவில்லை. மனுதர்ம நூல் குலத்துக்கொரு நீதி கூறியதைத் தமிழர் ஏற்கவில்லை.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற நீதி
எல்லா உயிர்க்கும்  பிறப்பு ஒத்த தன்மை உடையது என்பது திருவள்ளுவர் கூற்றாகும். குடிப்பிறப்பும், தோலின் நிறமும், குலச்சார்பும் ஒரு மனிதனின் உயர்வுக்கோ தாழ்வுக்கோ உரிய அளவுகோல்கள் அல்ல என்று உணர்த்தியது தமிழ்மறை. திருக்குறள் நீதியே தமிழர்தம் நீதி கோட்பாடாகும். மனு ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்றதனைப் புறக்கணித்த தமிழ்க்குலம், 
வள்ளுவர்செய் திருக்குறளை
மறுவற நன்குணர்ந்தோர்
உள்ளுவரோ மனுவாதி
ஒரு குலத்துக்கு ஒரு நீதி
என்று கருதியமையினை மனோன்மணியம் 
சுந்தரனார் காட்டுகிறார்.
செல்வத்துப்பயனே ஈதல்
பொருள் ஈட்டுவதும், அதனை நல்வினையால் ஈட்டுவதும், அதனை அறங்கருதிப் பிறர்க்கீதலும், ஒப்புரவு நெறியில் ஒழுகலும், மனம் - மொழி மெய்த்தூய்மைகளும் தமிழரால் போற்றி ஒழுகப்பெற்ற நீதி நெறிகளாகும்.
தமிழர் நீதி புகழை அவாவுவது; பழியை விலக்கி வாழ்வது. உலகுடன் பெறினும் பழியை ஏலாதது. தமிழர் பிறர்க்கென முயலுநர். உடைமைகளைத் துய்ப்பதிலும் அவர்தம் நீதியில் சமத்துவம் ஒளிர்வதை,
தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி  
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவர்க்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே
அதனால் செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்போம் எனினே தப்புந பலவே 
(புறநா.189)
என்னும் பாட்டில் காணலாம். இதையே வலியக்கூறின் மார்க்சியம், மென்மையாகக் கூறின் காந்தியம். அதுவே பண்டையத் தமிழியம்.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/1/w600X390/tm2.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2019/dec/01/தமிழர்-நீதி-3294702.html
3294700 வார இதழ்கள் தமிழ்மணி கீழடியும் நெடுநல்வாடையும் -முனைவர் க. மோகன்காந்தி DIN Sunday, December 1, 2019 04:47 AM +0530 தமிழரின் பண்பாட்டுத் தளம் 2,600 ஆண்டுகள் பழைமையுடையது என்பதைக் கீழடி அகழாய்வுகள் சான்று பகர்ந்து கொண்டிருக்கின்றன. ஓர் இனத்தின் வரலாற்றைச் சான்றுகளோடு நிறுவ வேண்டுமெனில் கல்வெட்டுகள், பானை ஓட்டு எழுத்துகள், அகழாய்வுகளில் கிடைக்கும் தானியங்கள், எலும்புத் துண்டுகள், உலோகங்கள் ஆகியவை முதன்மை பெறுகின்றன. இப்பொருள்களைக் காட்டிலும் இலக்கியங்கள் தொடர்ச்சியான ஒரு வரலாற்றை நம் முன் வழங்கியுள்ளன. 

சங்க இலக்கியமான "பத்துப்பாட்டில்' ஒன்றாகப் போற்றப்படும் நெடுநல்வாடை 188 அடிகளால் நக்கீரர் என்னும் நல்லிசைப் புலவரால் பாடப்பெற்ற நூல். இந்நூலின் பாட்டுடைத் தலைவன் பாண்டிய மன்னன் ஒருவன். அம்மன்னன் பாண்டிய நெடுஞ்செழியன் என்பது சான்றோர் கூற்று. இந்நூல் பாண்டிய மன்னர்களின் வரலாற்றுப் பின்புலத்தில் எழுந்ததே என்பதற்கு, பாண்டியர்கள் மாலையாகச் சூடும் வேப்பந்தாரைப் பதிவு செய்துள்ளதால் (நெடுநல்-176) தெளியலாம். நக்கீரரால் பாடப் பெற்றிருக்கும் நெடுநல்வாடைப் பாண்டியனின் தலைநகரமான மதுரையை மையப்படுத்திப் பாடப்பட்டுள்ளது. 

இன்றைக்கு அகழாய்வு நடந்து கொண்டிருக்கும் கீழடி மதுரையிலிருந்து 15 கி. மீ. தொலைவில் உள்ளது. ஏறத்தாழ இரண்டும் ஒரே பண்பாட்டுத்தளம். நெடுநல்வாடை மற்றும் கீழடியின் காலமும் ஏறத்தாழ ஒரே காலம். இவ்விரண்டு பகுதிகளும் அக்காலத்தில் வழக்கில் இருந்த யானையின் தந்தத்தால் செய்த பொருள்களைப் பற்றி பேசுவது இங்கு மிகவும் நோக்கத்தக்கது. 

கீழடியில் கிடைத்த அகழாய்வுப் பொருள்களில் குறிப்பிடத்தக்க ஒன்று யானை தந்தத்தால் செய்யப்பெற்ற சீப்பு.  தலை வாறுவதற்காகத் தமிழர் பயன்படுத்திய பொருள். சீப்பு என்னும் இந்த எளிய பொருளை உயர்ந்த யானை தந்தத்தால் தமிழர் தயாரித்துப் பயன்படுத்தியுள்ளனர் என்பது கீழடி தமிழரின் செல்வ வளத்தைக் காட்டுகிறது. யானை தந்தத்தை நுட்பமாகக் குடைந்து சீப்பாக்கி உள்ளனர் 

தமிழர். தமிழரின் நுண்ணிய தொழில்நுட்பத்திற்கு இந்த சீப்பு மாபெரும் சான்றாகும். 
நெடுநல்வாடை என்னும் நூல் பாண்டிய நெடுஞ்செழியனின் மனைவியாகிய பாண்டிமா தேவிக்காக உருவாக்கப்பட்ட கட்டிலானது நாற்பது ஆண்டுகள் நிரம்பியதும், போர்த்தொழிலில் சிறப்புடையதும், முரசம் போன்ற கால்களை உடையதும், போரிலே விழுப்புண் பட்டு இறந்த யானையின் (தானாக விழுந்த) தந்தத்தைக் கொண்டு அரசிக்காக செய்யப்பட்ட கட்டிலின் கால்கள் உருவாக்கப்பட்டதாக நெடுநல்வாடை நவில்கிறது. இங்கு 40 ஆண்டுகள் என்பது ஆண் யானையின் சிறந்த வயதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. போரில் இறந்த யானையின் தந்தம் என்பது வீரத்தின் அடையாளமாகவும், யானை இறந்த பின்னரே தந்தத்தைக் கைப்பற்றுதல் என்னும் உயர் நேயத்தையும் விளக்குகிறது. இதனை,
தசநான் கெய்திய பணைமருள் நோன்றாள்
இகன்மீக் கூறும் ஏந்தெழில் வரிநுதல்
பொருதொழி நாக மொழியெயி நருகெறிந்து
சீரும் செம்மையும் ஒப்ப வல்லோன்
கூருளிக் குயின்ற ஈரிலை யிடையிடுபு
தூங்கியல் மகளிர் வீங்குமுலை கடுப்பப் 
புடைதிரண் டிருந்த குடத்த லிடைதிரண்டு
உள்ளி நோன்முதல் பொருந்தி அடியமைத்துப் 
பேரள வெய்திய பெரும்பெயர்ப் பாண்டில் 
(நெடுநல் : 115 - 123)

இப்பாடலடிகள் பண்டைத் தமிழரின் ஏராளமான வரலாற்றுக் குறிப்புகளைத் தாங்கி நிற்கின்றன. தச நான்கு என்பது 10பு4=40 என்ற பெருக்கல் கணக்கினை முன்வைக்கிறது. 

தசம் என்பது வடமொழியில் 10 என்னும் எண்ணைக் குறிக்கும். நாற்பது ஆண்டுகள் என்பது ஆண் யானையின் சிறந்த இளமைப் பருவம் என்னும் உயிரியல் அறிவை வெளிப்படுத்துகிறது. சிறிய உளியைக் கொண்டு தச்சர்கள் யானைத் தந்தத்தைச் செதுக்கினர் என்பது பண்டைத் தமிழகத்தில் சிறந்திருந்த தச்சுத் தொழிலையும் வெளிப்படுத்துகிறது. பாண்டில் என்ற சொல்லாட்சி கட்டிலைக் குறித்து நிற்கிறது.
கீழடியில் கிடைத்த பொருள்கள் கார்பன் சோதனைக்கு அனுப்பப்பட்டு அதன் காலத்தைக் கணித்திருப்பது சிறப்பு. யானை தந்தத்தில் செய்யப்பட்ட சீப்பு, அந்த யானையின் எத்தனை வயதில் அதன் தந்தத்தைப் பறித்து செய்யப்பட்டது என்ற ஆய்வும் மேற்கொள்ளப்பட்டால், நெடுநல்வாடை கூறும் 40 வயதுடைய யானை என்னும் குறிப்பு பொருந்துகிறதா 
என்பதை ஆராய உதவும். மேலும், இந்த ஆய்வு தமிழரின் நுண்ணிய வாழ்வியலை வெளிப்படுத்துவது திண்ணம். 
நெடுநல்வாடைப் பாடலடிகளில் இடம்பெறும் யானையின் தந்தத்தாலான கட்டிலின் கால்களும், கீழடியில் கிடைக்கப் பெற்றுள்ள யானை தந்தத்தாலான நுட்பமான சீப்பு இரண்டும் ஒரே புள்ளியில் இணைகின்றன. இவை இரண்டும் பாண்டிய நாட்டில் மதுரைக்கு அருகில் பாடப்பெற்ற, கிடைத்த பொருள்களாகும். இவை இரண்டும் சங்ககாலம் எனப்படும் சமகாலத்தவை. இங்கு நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய செய்தி, சங்க காலத்தில் அரச குடியைச் சேர்ந்தோர் மட்டும் செல்வ வளத்தோடு வாழ்ந்து உயர்ந்த பொருள்களை (யானையின் தந்தத்தாலான கட்டிலின் கால்கள்) பயன்படுத்தவில்லை. பாண்டிய நாட்டில் வாழ்ந்த மக்களும் செல்வச் செழிப்போடு வாழ்ந்து, உயர்ந்த பொருள்களைப் 

(தந்தத்தால் ஆன சீப்பு) பயன்படுத்தியுள்ளனர் என்பது  ஐயத்திற்கு இடமின்றி வெளிப்படுகிறது. 

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/1/w600X390/tm1.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2019/dec/01/கீழடியும்-நெடுநல்வாடையும்-3294700.html
3294696 வார இதழ்கள் தமிழ்மணி பழமொழி நானூறு: முன்றுறையரையனார் Sunday, December 1, 2019 04:44 AM +0530 ஆற்றப் பெரியார் பகைவேண்டிக் கொள்ளற்க
போற்றாது கொண்டரக்கன் போரில் அகப்பட்டான்
நோற்ற பெருமை யுடையாரும் கூற்றம்
புறங்கொம்மை கொட்டினா ரில். (பாடல்-126)


தவம் ஆற்றியதால் உண்டாகும் பெருமையினை உடையவர்களும்,  கூற்றத்தை அதன் பின்னே நின்று கைகளைக் குவித்துக் கொட்டி வலிய அழைத்தாரிலர். இராவணன் ஆராய்தலின்றி இராமனோடு பகை கொண்டு போரிடைப்பட்டு இறந்தொழிந்தான் (ஆதலால்),  மிகவும் பெரியவர்களுடைய பகையினை விரும்பி மேற்கொள்ளா தொழிக. (க-து.) அரசன் தன்னின் வலியாரிடத்துப் போர்செய்தல் ஒழிக என்பதாம். "கூற்றம் புறங்கொம்மை கொட்டினா ரில்' என்பது பழமொழி.

]]>
https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/7/21/w600X390/tm1.jpg https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2019/dec/01/பழமொழி-நானூறு-முன்றுறையரையனார்-3294696.html